சீரழிக்கப்படும் உயர் கல்வி

குங்குமம், ஜூலை 20, 2018

முதல்முறையாக மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைத்தபோது புதுச்சேரி மாநில துணை ஆளுநராக அமர்த்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அறிவுஜீவி கே.ஆர். மல்கானி கல்வி என்பது ஒரு மேலைக் கருத்தாக்கம் எனவும் இந்தியர்களுக்கு அது முக்கியமில்லை எனவும் கூறியது அன்று பெரிய சர்ச்சையானது. வேதம் வழங்கப்பட்டவர்களாகக் கருத்தப்படும் ‘செமிடிக்’ மதத்தினருக்கே கல்வி முக்கியம், அப்படியான ஒரு அருளப்பட்ட நூல் என எதுவும் இல்லாத எமக்கு கல்வி அடிப்படையான ஒன்று அல்ல என்பது இதன் பொருள்.

ஆனால் இன்று இப்படி வெளிப்படையாகப் பேச முடியாது என்பதை விளக்க வேண்டியதில்லை. ஆனாலும் அதை அவர்கள் நடைமுறையில் தொடங்கிவிட்டனர்.  உலகத் தரமான பல்கலைக்கழகங்கள், “மாண்புமிகு கல்வி நிறுவனங்கள்” (Institute of Eminence-IoE) என ஒருபக்கம் வாயளவில் முழங்கினாலும் உயர்கல்வியை பா.ஜ.க அரசு குறி வைத்துத் தாக்குவதை நாம் கூர்ந்து கவனித்தால் விளங்கிக் கொள்ள முடியும்.

உயர்கல்வி, பல்கலைக் கழகங்கள் முதலான கருத்தாக்கங்களை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேலை நாடுகளில் பல்கலைக் கழகங்கள் உருவானபோது அதற்கான வரைவைத் தயாரிக்கும் பொறுப்பு அக்கால அரசதிகாரிகளிடமோ மத பீடங்களிடமோ கொடுக்கப்படவில்லை. ஷ்லெர்மேயர். ஃபிச்டே, வில்லியம் வான் ஹம்போல்ட் முதலான தத்துவ ஞாநிகளிடமே அது கொடுக்கப்பட்டது. இன்றளவும் முனைவர் பட்டம் பெறுவோருக்கு Doctor of Philosophy ((Ph.D), Master of Philosophy (M.Phil) என்றுதான் சான்றிதழ் வழங்கப்படுகின்றன. ‘தத்துவம்’ என்கிற கருத்துடன் உயர்கல்வி இணைக்கப்படுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்றளவும் அறிவியல் படிப்பவர்களாயினும் ஷேக்ஸ்பியரையும், சங்க இலக்கியங்களையும் தெரிந்திருக்க வேண்டும் என்பது நியதி.

வெறும் பொறியாளர்களையோ, ‘ரொபாட்’ களையோ தயாரிக்கும் நிறுவனங்கள் அல்ல பல்கலைக்கழகங்கள். இன்றளவும் உலகத் தரமான கல்வி நிறுவனங்கள் என்றால், அவை பல்கலைக்கழகங்கள் தானே ஒழிய எவ்வளவுதான் சிறந்த தொழில்நுட்ப நிறுவனமாயினும் அவற்றிற்கு அந்தப் பெருமையில்லை.

ஆனால் இன்று மோடி அரசு அறிவித்துள்ள ‘மாண்புமிகு கல்வி நிறுவனங்களில்” (Institutions of Eminence- IoE) இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக் கழகங்களான டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU), ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடமில்லை. முதற்கட்டத் தேர்விலேயே அவை தள்ளப்பட்டன. விண்ணப்பித்திருந்த 74 பொதுப் பல்கலைக்கழகங்களில் மூன்று மட்டுமே இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளன. தனியார் பல்கலைக் கழகங்களுக்குச் சம வாய்ப்பு அளிக்கப்படுவதாகச் சொல்லி ரிலையன்சின் ‘ஜியோ’, மணிப்பாய் அகாடெமி முதலானவற்றிற்கு மாண்பு மிகு பல்கலைக்கழகத் தகுதி அளிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கல்விக்கு முக்கியத்துவம் எனப் பார்த்தாலும்கூட சென்னை ஐ.ஐ.டி, அண்ணா பல்கலைக் கழகம் ஆகியவை புறக்கணிக்கப்பட்டதில் பொருள் இல்லை. அதிலும் தனியாருக்கே இங்கு முக்கியத்துவம்.

பல்கலைக் கழகங்கள் என்கிற கருத்தாக்கம் இன்று பல்வேறு வகைகளில் அழிக்கப்படுகிறது. டெல்லி ஜே.என்.யூவில் இனி ஐ.ஐ.டி போலத் தொழில்நுட்பக் கல்விகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலைப் பாடங்களை (humanities) ஒழித்துக் கட்டும் முயற்சிகள் தொடங்கிவிட்டன. மூன்றாண்டுகளுக்கு முன் சென்னை ஐ.ஐ.டி யில் அம்பேத்கர்- பெரியார் மாணவர் அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது நினைவிருக்கலாம். அப்போது ஆர்.எஸ்,எஸ் அமைப்பின் கருத்தியலாளரான ராதா ராஜன் என்பவர் ஐ.ஐ.டி யில் ஐந்தாண்டு ஒருங்கிணைக்கப்பட்ட எம்.ஏ கலைப்பாட வகுப்பு தொடங்கப்பட்டதும், பாடத்திட்டத்தில் ‘பன்மை ஒழுங்கு அணுகல்முறை’ (Interdisciplinary Approaches) கடைபிடிக்கப்பட்டதும்தான் “இப்படியான சீரழிவுக்குக் காரணம்” எனப் பிரச்சாரம் செய்தது குறிப்பிடத் தக்கது.

மோடி அரசு பதவி ஏற்றவுடனேயே பல்கலைக் கழக ஆய்வு மாணவர்களுக்கு இனி ஆய்வு உதவித் தொகை கிடையாது என அறிவிக்கப்பட்டது. போராட்டங்கள் வெடித்தபின் இப்போது அந்த முயற்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஜே.என்.யூ வில் ஆண்டுக்கு 1408 மாணவர்கள் ஆய்வுப் படிப்பிற்கு சேர்த்துக்கொள்ளப்படுவர். சென்ற கல்வி ஆண்டில் இது 242 ஆகக் குறைக்கப்பட்டது. ஐதராபாத் மத்தியப் பல்கலைக் கழகத்திலும் அவ்வாறே ஆய்வுப் படிப்பிற்கான சேர்க்கைகள் பெரிய அளவில் குறைக்கப்பட்டன.

அறுபது ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிக் கொண்டிருந்த “பல்கலைக் கழக நிதி நல்கைக் குழு” (UGC) இப்போது ஒழிக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. மோடி அரசு பதவிக்கு வந்த உடனேயே அதற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டது. அதன் விளைவாக இன்று பொதுப் பல்கலைக் கழகக் கல்விக் கட்டணங்களும் கூட ஆயிரம் மடங்கு அளவுவரை உயர்ந்துள்ளன.

விடுதலை அடைந்த இந்தியாவில் உயர்கல்வியை வளர்க்க வேண்டும் என்பதற்கென உருவாக்கப்பட்ட அமைப்புதான் யு.ஜி.சி. பல்கலைக் கழகங்களுக்கு நிதி வழங்குவது, 80,000 மாணவர்களுக்கு மேல் உதவித் தொகை வழங்குவது ஆகியவற்றோடு பல்கலைக் கழகங்களுக்கு ஏற்பு வழங்குவது, அவை விதிமுறைகளின்படிச் செயல்படுகின்றனவா எனக் கண்காணிப்பது ஆகியனவும் அதன் பணிதான்.

இப்படி அரசுத் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக இயங்கும் யு.ஜி.சியை மட்டுமின்றி, அதே போன்று பிற கல்வித் துறைகளில் செயல்படும் “தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கழகம்” (AICTE / NCTE), “மருத்துவக் கல்விக் கழகம்” (MCI), தேசிய கல்வி ஆராய்ய்ச்சி நிறுவனம் (NCERT) முதலான உயர்கல்விக்கான ஒழுங்காற்று நிறுவனங்கள் எல்லாவற்றையும் கலைத்துவிட்டு, பதிகலாக  அதிகாரப்படுட்தப்பட்ட ஒரே மைய  நிறுவனமாக்குதல் என்கிற முயற்சியை ஆட்சிக்கு வந்ததிலிருந்தே மோடி அரசு தொடங்கியது. கல்விக் கொள்கை அறிக்கையில் அது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. இப்போது அதை நடைமுறைப் படுத்தும் முயற்சி தொடங்கிவிட்டது. யு.ஜி.சி ஒழிக்கப்பட்டு அந்த இடத்தில் “இந்திய உயர் கல்வி ஆணையம்” (HECI) அமைக்கப்படும் என அறிவித்தாயிற்று. நாடாளுமன்றச் சட்டம் ஒன்றின் மூலம் அமைக்கப்பட்ட இந்நிறுவனம் இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலேயே கலைக்கப் படுகிறது..

காங்கிரஸ் ஆட்சியில் உயர்கல்வி தனியார் மயமாக்கப்பட்டது. பாஜக ஆட்சியில் அது ஜின்டால், ஜியோ, ஷிவ் நாடார் எனக் கார்பொரேட் மயமாக்கப்படுகிறது. உலகப் பல்கலைக் கழகங்களும் இங்கே கால்  பதிக்கப் போகின்றன.

உயர்கல்வி ஒரு பக்கம் கல்வி நீக்கம் செய்யப்பட்டு வெறும் தொழில்நுட்ப மயமாக்கப்படுகிறது. இன்னொரு பக்கம் அது எளிய மக்களுக்கு எட்டாக் கனி ஆகிறது. அந்த இடத்தில் “திறன் பயிற்சி” (skill training) என்பது அவர்கள் மீது திணிக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பில் வெறும் திறன் பயிற்சிக்கு மட்டுமே தகுதியானவர்கள் என எளிய மாணவர்களை ஒதுக்கப் போவதும் இன்று புதிய கல்விக் கொள்கையில் அறிவிக்கப்பட்டு விட்டது.

“மேக் இன் இந்தியா” வுக்கு இது போதாதா?

 

செல்லாத நோட்டுக்களும் பொல்லாத அரசும்  

{மோடி அரசின் பணமதிப்பு நீக்கம் தொடர்பான எனது இரண்டாவது கட்டுரை இது}

நரேந்திர மோடி அரசு  எந்தவிதமான அற மதிப்பீடுகளும் இல்லாத ஒரு மதவாத அரசு என அறிந்த பலரும் கூட அது ஒரு திறமையற்ற அரசு என்பதைப் புரிந்திருப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் நமது மத்தியதர வர்க்கம் இந்த அரசைத்தான் ரொம்பவும் திறமையான அரசு எனவும் இதன் மூலமே இந்தியா உலக வல்லரசுகளில் ஒன்றாக ஆகப் போகிறது எனவும் நம்பிக் கொண்டுள்ளது. இந்த நம்பிக்கைகள் எத்தனை அபத்தம் என்பதைப் புரிந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பாகத்தான் இன்று இந்தப் பண மதிப்பீட்டு நீக்க நடவடிக்கை அமைந்துள்ளது. மக்களுக்கு, குறிப்பாக அடித்தள மக்களுக்கு இதன் மூலம் ஏற்பட்டுள்ள இத்தனை சோதனைகளுக்கும் மத்தியில் ஏற்பட்டுள்ள ஒரே நல்ல விளைவு இதுதான்.

யோசித்துப் பார்த்தால் எல்லா எதேச்சிகார அரசுகளுமே இன்னொரு பக்கம் முட்டாள்தனமான அரசாக இருப்பது விளங்கும். ஒரு ஜனநாயக அரசின் சிறப்பே எந்தப் பிரச்சினையிலும் கூட்டு முடிவு எடுப்பது என்பதுதான். ஆனால் இந்த விஷயத்தில் என்ன நடந்தது? நிதி அமைச்சருக்கும், ரிசர்வ் வங்கி கவர்னருக்கும் கூடத் தெரியாமல் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இது குறித்த குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டபோது நிதி அமைச்சர் அருண் ஜேட்லி எழுந்து அதை மறுக்கவில்லை அசடு வழிய அமர்ந்திருந்தார். ஒரு ஜனநாயக முறையில் முடிவெடுக்கப்பட்டிருந்தால் நிச்சயம் இப்படியான ஒரு முட்டாள்தனமான முடிவு அப்போது உருப்பெற்றிருக்காது. நரேந்திரமோடி, அமித் ஷா முதலான ஒரு சில நபர்கள் எடுத்த இந்த எதேச்சதிகார முடிவு இன்று 130 கோடி மக்களையும் பாதித்துள்லது.

நிதி அமைச்சருக்கும் ரிசர்வ் வங்கி கவர்னருக்கும்தான் தெரியவில்லையே ஒழிய யாருக்கெல்லாம் தெரிய வேண்டுமோ அவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. அறிவிப்பு வருவதற்கு முதல்நாள் மே.வங்க பா.ஜக அலுவலகத்திலிருந்து 1 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த உயர்மதிப்பு நோட்டுக்கள் வங்கியில் செலுத்தப்பட்ட கதை ஊரறியும். தவிரவும் இந்த ஏப்ரலில் அதிக அளவில் 500 மற்றும் 1000 தவிர்த்த சிறிய அளவிலான நோட்டுகள் தங்கள் வங்கியிலிருந்து பெறப்பட்டுள்ளன என SBI வங்கி தெரிவித்துள்ளது. இப்படியான நடவடிக்கை எடுக்கப்போவது குறித்த செய்திகள் பல இதழ்களிலும் கூட வெளியாகியிருந்தன.

இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். மோடி அரசு ஆட்சிக்கு வந்தது முதல் அரசின் இருப்பை ஒரு பெருஞ்சுமையாக மக்கள் மீது சுமத்தி வருவதுதான் அது. அரசு சர்வ வல்லமையுடையது; அதன் முன் மக்கள் எந்த அதிகாரமும் அற்ற தூசிகள் என்கிற கருத்தை மக்கள் மனதில் பதிய வைப்பதில் அது குறியாய் உள்ளது. ஆதார் அட்டை இப்போது  அனைத்துத் துறைகளிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. சமையல் எரிவாயுக் கலன்களுக்குக் கொடுத்து வந்த சொற்ப மானியத் தொகையை ஆதார அட்டையுடன் இணைத்த அரசு இப்போது எளிய மக்களிடம் உள்ள அந்த ஒரு சில 500 / 1000 ரூ நோட்டுக்களையும் செல்ல வைக்க வேண்டுமானால் ஆதார அட்டை  அல்லது ‘பேன் கார்டு’ வேண்டும் என்றெல்லாம் சொல்லத் துணிகிறது. மாணவர்களைத் தரம் பிரிப்பது, உயர் கல்வி நிறுவனங்களில் கார்பொரேட் ஊடுருவலுக்கு வித்திடுவது, பொது சிவில் சட்டம் என்கிற பெயரில் தனி நபர் அடையாளங்களைக் கேள்விக்குள்ளாக்குவது, போர்ச் சூழலை உருவாக்கி அரசின்  மீதான மக்களின் விமர்சன உரிமைகளை மறுப்பது…. எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அரசு எந்த அளவு வலிமை குறைந்ததாக உள்ளதோ அந்த அளவு மக்கள் வலிமை மிக்ககவர்களாகிறார்கள். ஆனால் அரசுகள் என்றைக்கும் தங்களின் வலிமையையும் அதிகாரக் குவியலையும் இழக்கத் தயாராக இருப்பதில்லை. அதன் உச்ச வடிவத்தைத்தான் பாசிசம் என்கிறோம்.

மோடி அரசின் இந்த நடவடிக்கை அரசியல் சுதநெதிரத்திற்கு அப்பால் இன்று பொருளாதாரச் சுதந்திரத்தையும் இன்று கேலிக் கூத்தாக்கியுள்ளது. நான் என்ன வாங்குகிறேன், எப்படி வாங்குகிறேன், எதைச் சாப்பிடுகிறேன், எப்படி என் பணத்தைச் செலவழிக்கிறேன் என்பதெல்லாம் என் சொந்தப் பிரச்சினை. இதில் தலையிட அரசுக்கு அருகதையும் இல்லை; அனுமதியும் இல்லை. இன்று மோடி அரசு நம் மீது திணிக்கும் இந்த எலெக்ரானிக் பணப் பரிவர்த்தனை என்பது நமது இந்தப் பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தையும் அரசின் கண்காணிப்பிற்குள் கொண்டு வருகிறது. இப்படிச் செய்ய அரசுக்கு உரிமையில்லை. அது மாத்திரமல்ல, இப்படியான எலெக்ட்ரானிக் பரிவர்த்தனையின் ஊடாக ஒவ்வொரு முறையும் நாம் அதற்கெனப் பணம் செலுத்த வேண்டியுள்ளது. அதன்மூலம் நமக்குச் சொந்தமான பணத்தின் மதிப்புக் குறைந்து கொண்டே போகிறது.

இன்று இந்த 500 / 1000 ரூ நோட்டுகளின் மதிப்பு இழப்பு நடவடிக்கையின் நோக்கமும் மக்களின் முன் அரசின் வலிமையை இன்னொரு முறை நிகழ்த்திக் காட்டுவதுதான். மற்றபடி கருப்புப் பணம், எல்லை தாண்டிய கள்ள நோட்டு உற்பத்தி என்று அவர்கள் கதைப்பதெல்லாம் இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வழிமுறைகளில் ஒன்றுதான்.  அறிவிக்கப்பட்ட இந்த நோக்கங்களுக்கும்  இந்த நடவடிக்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் பார்ப்போம்.

1.500 மற்றும் 1000 ரூ நோட்டுக்களைச் செல்லாததாக்குவதன் மூலம் கருப்புப் பணத்தை ஒழிக்க இயலாது. ஏனெனில் இன்று மொத்தமுள்ள கருப்புப் பண்த்தில் பணமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது வெறும் 5 முதல் 6 சதம்தான். கடந்த ஐந்தாண்டுகளில் நடத்தப்பட்ட வருமானவரிச் சோதனைகள் மூலம் வெளி வந்துள்ள உணமை இது. மற்றவை தங்கமாகவும், நகர்ப்புற நிலங்களாகவும், அந்நிய நாடுகளில் வாங்கப்படும் சொத்துக்களாகவும் அந்நியச் செலாவணியாகவும்தான் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை மூலம் அவற்றையெல்லாம் வெளிக் கொணர முடியாது.

2.இந்த நடவடிக்கை மூலம் கள்ள நோட்டுக்கள் ஒழிக்கப்படும் என்கிற பிரச்சாரத்திலும் பொருளில்லை. கொல்கத்தாவில் உள்ள ‘இந்தியப் புள்ளியியல் நிறுவன’ ஆய்வு ஒன்றின்படி இன்று புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளின் மதிப்பு 400 கோடி ரூபாய்தான். அதாவது இன்று செல்லாதவை என ஆக்கப்பட்டுள்ள நோட்டுகளில் வெறும் 0.028 சதம்தான் கள்ள நோட்டுகள். இதற்காக 14 லட்சம் கோடி மதிப்புள்ள நோட்டுக்களைச் செல்லாததாக்கி மக்களைத் தெருவில் அல்லாட வைப்பது மாதிரி அநீதி, குரூரம், அபத்தம் ஏதும் இருக்க முடியுமா? இது ஏதோ மூட்டைப்பூச்சியை ஒழிக்க வீட்டைக் கொளுத்திய கதையை நினைவூட்டவில்லையா? தவிரவும் இந்த நோட்டுக்களைச் செல்லாததாக்கிவிட்டுப் புதிய நோட்டுக்களை அச்சிட ஆகும் செலவு 12,000 கோடி முதல் 15,000 கோடி ஆகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

3.தொடக்கத்தில் குறிப்பிட்டபடி இந்த நடவடிக்கை குறித்த செய்தி அப்படி ஒன்றும் இரகசியமாக வைக்கப்படவில்லை.

4.இருந்த கொஞ்ச நஞ்சக் கருப்புப் பணத்தையும் வெள்ளையாக்கப் பல வழிமுறைகள் இருந்தன. பழைய தேதியிட்டு தங்கம் வாங்குவது அதில் ஒன்று. கருப்புப் பணத்தை  மாற்றுவதற்கான கருப்புச் சந்தைகளும் உருவாகிச் சுறு சுறுப்பாக வேலைகள் நடந்தன.

5.கருப்புப் பணம் உற்பத்தியாகும் வழிகளைத் தடுக்கும் முயற்சி இணையாக மேற்கொள்ளப்படவில்லை. மொத்த தேசிய உற்பத்தியில் (GDP) கருப்புப் பணத்தின் மதிப்பு 20 சதம். எனவே ஆண்டுதோறும் உற்பத்தி ஆகும் கருப்புப் பணம் 30 லட்சம் கோடி. மொத்தமாகப் புழக்கத்தில் உள்ள பணத்தின் மதிப்பு வெறும் 17.77 லட்சம் கோடிதான். இதில் 86 சதம் 500 / 1000 ரூ நோட்டுகளாக உள்ளன. அவைதான் இன்று செல்லாததாக்கப்பட்டன. ஆக இவ்வாறு செல்லாததாக்கப்பட்ட அத்தனை பணமுமே கருப்புப் பணம்தான் என்றாலும் கூட இது ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தியாகும் கருப்புப் பணத்தில் பாதி மட்டுமே. இந்தக் கருப்புப் பண உருவாக்கத்தைத் தடுக்க எந்தத் திட்டமும் இல்லை.

6.விளம்பரத்துக்காக மோடி அரசு செய்த ஆரவாரங்கள் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் குழப்பங்களை ஏற்படுத்தின.  வாக்குறுதி அளிக்கப்பட்ட இந்த நோட்டுகளை செல்லாததாக்கியது மட்டுமின்றி அடுத்த சிலவாரங்களுக்குள் பணம் எடுப்பது, நோட்டுகளை மாற்றுவது அல்லது வைப்பில் செலுத்துவது தொடர்பாக சுமார் 59 ஆணைகளை அரசு இட்டுள்ளது. இவற்றில் பல சட்ட விரோத ஆணைகளாகவும் உள்ளன. ஆனால் நீதிமன்றத்திற்குச் சென்றால் இப்படித் தொடர்ச்சியான ஆணைகள், ஒன்றை ரத்து செய்து வெளியிடப்பட்ட இன்னொரு ஆணை என ஏகப்பட்டவை இருப்பதால், நீதிமன்றங்களுக்கும் சட்ட விரோத ஆணைகளைக் கண்டறிவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன

7.எந்தத் தயாரிப்பும், பிரச்சினைகள் குறித்த முன் ஊகங்களும் இல்லாமல் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் மூலம் பொது மக்கள் சந்தித்த துயரங்களை விளக்க வேண்டியதில்லை. ரிசர்வ் வங்கிக்கு அறிவிக்காமல் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் விளைவாக அது போதிய அளவு 100 / 50 ரூ நோட்டுகளை தயாராக வைத்திருக்கவில்லை. புதிய நோட்டுகளும் போதிய அளவு உடனடியாக அச்சிட முடியவில்லை. முன்னாள் திட்டக் குழு உறுப்பினர் சௌமித்ரா சவுத்ரி, “புதிய நோட்டுகள் அச்சடிக்க சுமார் ஆறு மாதங்கள், அதாவது. 2017 மே வரை ஆகும்” என்கிறார். புதிய நோட்டுகள் பழைய நோட்டுகளைவிட அளவில் சிறியதாக இருந்ததால் ATM கள் அனைத்தும் மறு சீரமைப்புச் செய்யப்பட வேண்டிய நிலைக்குள்ளாகின. இது பொருட்செலவு மட்டுமின்றி உடனடியாக ATM களும் வேலை செய்யாமல் போய் மக்கள் சந்தித்த அவதி சொல்லி மாளாது. அச்சிடப்பட்ட புதிய நோட்டுக்கள் தொழில்நுட்ப ரீதியாகபல நுணுக்கங்களுடன் தயாராவதாகவும் இனி யாரும் கணக்குக் காட்டாமல் அதிக அளவு இந்த நோட்டுகளைச் சேமித்து வைத்திருந்தால் தானாகவே அரசுக்கு அது தெரியும் எனவும் ‘ஜீபூம்பா’ கதைகளை எல்லாம் அரசு பரப்பி வந்தபோதும் வந்த நோட்டுக்கள் ஏற்கனவே இருந்தவற்றைக் காட்டிலும் தரம் குறைந்தவையாகவும், எந்தப் புதிய தொழில்நுட்பங்களும், பாதுகாப்புகளும் இல்லாதவையாகவுமே உள்ளன. எளிதாக இவற்றைக் கள்ள நோட்டுகளாக்க முடியும் என்பதோடு 2000 ரூ நோட்டுக்களை இப்படிக் கள்ள நோட்டுகள் ஆக்கினால் அப்படிச் செய்பவர்களுக்கு முன்னைக் காட்டிலும் கூடுதல் லாபமும் ஏற்படும்.

8.உயர் மதிப்பு நோட்டுக்கள் கருப்புப் பணத்தைச் சேமித்து வைக்க இலகுவாக உள்ளது எனச் சொல்லி 500 / 1000 ரூ நோட்டுக்களைச் செல்லாததாக அறிவித்துப் பதிலாக 2000 ரூ நோட்டுக்களை அச்சிடும் முட்டாள்தனத்திற்கு இன்றுவரை அரசிடமிருந்து எந்த சமாதானமும் சொல்லப்படவில்லை. பணப் பரிவர்த்தனை இல்லாப் பொருளாதாரம் என்றெல்லாம் ஆரவாரமாகப் பீற்றிக் கொண்டாலும் அதற்கான உள்கட்டுமானங்கள் ஏதும் இங்கு இல்லை. 30 கோடி மக்கள் இங்கே வங்கிக் கண்க்கு தொடங்குவதற்கான ஆதார ஆவணங்கள் இல்லாதோர். இன்டெர்நெட் தொடர்புகள், கம்ப்யூட்டர் வசதிகள் இல்லாத ஏராளமான மக்களைக் கொண்ட நாடு இது. ATM மற்றும் வங்கி வசதிகள் எல்லாம் பெருநகரங்களில்தான் போதிய அளவு இல்லை. இந்நிலையில் மீண்டும் உயர் மதிப்புள்ள நோட்டுகளைத்தான் அவர்கள் அச்சிட வேண்டி உள்ளது. இதையெல்லாம் முன்கூட்டிச் சிந்திக்கும் அறிவில்லாத ஒரு அரசு நமக்கு வாய்த்துள்ளது.

9.1000 ரூபாய்க்குப் பதிலாக 2000 ரூ நோட்டுகளை அச்சிட்டுவிட்டால் மட்டும் இங்கு எப்படிப் பணப் பரிவர்த்தனை இல்லாத பொருளாதாரத்தைக் கட்டமைக்க முடியும்? இங்குள்ள வங்கி வசதி வெறும் 40 சத அளவுதான். 22 சத மக்கள்தான் இன்டெர்னெட் வசதி உள்ளவர்கள். 19 சத மக்கள் மின்சார வசதிகூட இல்லாதவர்கள். 14 மில்லியன் வணிகர்களில் 1.2 மில்லியன் வணிகர்கள்தான் point of sale வசதி உடையவர்கள். இந்நிலையில் பணப்பரிவர்த்தனை இல்லாப் பொருளாதாரம் என்பது எளிய மக்களின் மீது சுமத்தப்படும் இன்னொரு அநீதி.

10.இந்த முட்டாள்தனமான அவசரக் குடுக்கை நடவடிக்கை மக்களுக்குப் பெரிய அளவில் துயரங்களை ஏற்படுத்தியுள்ளதோடன்றி தொழில் துறையையும் சகல மட்டங்களிலும் பாதித்துள்ளது. ஆட்டோமொபைல் மற்றும் சொகுசுப் பொருட்கள் விற்பனை 30 முதல் 60 சதம் வீழ்ச்சி. மொத்தத்தில் GDP சரிவு 1 முதல் 2 சதமாக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது. பண்டிகை நாட்களில் வணிகம் வீழ்ந்து சிறு வணிகர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உற்பத்தித் துறையும் பாதிக்கப்பட்டுள்ளது நிக்கேய் இந்தியா உற்பத்திக் கணக்கீட்டுப் புள்ளி (The Nikkei India Manufacturing PMI) அக்டோபரில் 54.4 ஆக இருந்தது நவம்பரில் 52.3 ஆகக் குறைந்துள்ளது.

“தொலை நோக்கில் நல்ல பலன்கள் கிடைக்கும்”  என்பதுதான் இதுவரை மோடி அரசின் ஒரே பதிலாக வெளிப்பட்டுள்ளது.  மன்மோகன் சிங் அன்று பொருளியல் வல்லுனர் கீன்சை மேற்கோள் காட்டி நாடாளுமன்றத்தில் சொன்னதைப் போல தொலை நோக்கில் நாம் எல்லோருமே செத்துப் போய் விடுவோம்.

.

பண மதிப்பு நீக்கம் பற்றி  இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

அமார்த்ய சென்:

“ரூபாய் நோட்டு என்கிற காகிதம் ஒரு ‘பிராமிசரி நோட்’, அதாவது அந்தக் காகிதத்தை ஒப்படைத்தால் அதில் வாக்களிக்கப்பட்ட மதிப்புள்ள தொகை எந்தக் கணமும் திருப்பித் தரப்படும் என்பதுதான். திடீரேன ஒரு அரசு தான் அளித்த அந்த வாக்குறுதியை மீறுவதாக அறிவித்தால் அது ஒரு கொடூரமான எதேச்சாதிகார அரசாகத்தான் இருக்க இயலும். யாரோ சில கோணல் பேர்வழிகள் கருப்புப் பணத்தை முடக்கி வைத்துள்ளார்கள் என்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அறிக்கை இன்று மக்கள் அனைவரையும் கோணல் பேர்வழிகள் என்பதாக எதிர்கொள்கிறது. அவர்கள் கஷ்டத்திற்கு மட்டுமல்ல அவமானத்துக்கும் உள்ளாக்கப் பட்டுள்ளனர். வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தைக் கொண்டுவந்து நம் மக்களின் வாழ்வை வளமையாக்கப் போகிறேன் என்கிற தேர்தல் நேரத்து வாக்குறுதியைப் போலவே இதுவும் ஒரு பம்மாத்துதான்.”

முன்னாள் ரிசர்வ் வங்கித் தலைவர் ரகுராம் ராஜன் :

ஒரு காலத்தில் பணமதிப்பீட்டு நீக்கம் என்பது கருப்புப் பணத்தை வெளிக் கொணரும் உத்தியாக இருந்திருக்கலாம். இப்போது கருப்புப் பணத்தை யாரும் மொத்தமாக பணமாக வைப்பதில்லை. அதைப் பலவாறாகப் பிரித்து வைக்கின்றனர். பெரிய அளவு தங்கமாகப் பதுக்கி வைக்கப்படுகிறது. இதை வெளிக் கொண்ர்வது கடினம். நமது நாட்டில் அதிகபட்சமான வரி என்பது மொத்த வருமானத்தில் 33 சதம்தான். தொழில் வளர்ச்சி அடைந்த பல நாடுகளில் வரி இதைவிட அதிகம். அமெரிக்காவில் இது 39 சதம். விற்பனை வரியையும் சேர்த்தால் இது 50 சதத்தை எட்டும்திப்போது உள்ளதைக் காட்டிலும் இன்னும் திறமையான வரி வசூல் முறைதான் கருப்புப் பணம் உற்பத்தியாவதைத் தடுக்க சரியான வழி. 

முன்னாள் அமெரிக்க நிதித்துறைச் செயலர் லாரன்ஸ் எச். சம்மெர்ஸ் (Lawrence H. Summers)

பல குற்றவாளிகள் தப்பித்தாலும் பரவாயில்லை. ஒரு அப்பாவி தண்டிக்கப்படக் கூடாது என்பது நீதி வழங்கல் தொடர்பான ஒரு அறம். இது பொருளாதார நடவடிக்கைகளுக்கும் பொருந்தும். (அதேபோல இன்று மோடி அரசு உருவாக்கியுள்ள) இந்தக் குழப்பத்தின் ஊடாக கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்ற பெயரில் அப்பாவிப் பொதுமக்கள் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டிருப்பது ஒரு அறக்கேடு.

The Guardian:

மோடி அரசு இந்தியப் பொருளாதாரத்தின் மீது பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த பண மதிப்பு நீக்கத்தின் விளைவாக 2 ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள இந்தியப் பொருளாதாரம் சுருங்கும். ஊழலில் சம்பாதித்த பணத்தை ஷேர்களாகவும், ரியல் எஸ்டேட்டிலும், தங்கமாகவும் பதுக்கி வைத்திருக்கும் பணக்காரர்கள் இதனால் பாதிக்கப்படப் போவதில்லை. ஆனால் வங்கிக் கணக்குகள் இல்லாத பெரும்பாலான ஏழை எளிய மக்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.

The New York Times :

இந்தியாவில் கோலோச்சுவது நேரடியான பணப் பரிவர்த்தனைதான். சுமார் 78 சதப் பரிவர்த்தனைகள் நேரடியான பணப் பரிவர்த்தனையின் ஊடாகத்தான் நடைபெறுகிறது… இப்போது மோடி அரசு புதிய 500, 2000 ரூ நோட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே பணப் பரிவர்த்தனையின் ஊடான பொருளாதார ஊழல்கள் இனி இந்தப் புதிய நோட்டுக்களின் ஊடாக தொடரப் போகிறது.

Al Jazeera : இந்த நடவடிக்கை ஏழை மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது. பணப் பரிவர்த்தனை மூலமாகவே தம் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டிருந்த (நடுத்தர) மக்களும் கூட இன்று வங்கிகள் முன்பும் ATM கள் முன்பும் குவிந்துள்ளனர். .

 

மோடி அரசு பாசிச அரசா இல்லையா?

மோடி அரசை ‘டெக்னிசல்’ ஆக ஃபாசிச அரசு எனச் சொல்ல முடியாது என மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சொல்லியுள்ளார். சிலநாட்கள் முன் பிரகாஷ் காரத் இதையே கூறியது நினைவிருக்கலாம். வெண்டுமெனில் ‘வலதுசாரி எதேச்சிகார அரசு’ எனக் கூறலாம் என்றும் அவர் கூறி இருந்தார்.

இன்று யெச்சூரியும் ஃபாசிஸ்ட் அரசு எனச் சொல்லக்கூடாது எனவும் ,ஆனால் பா.ஜ.க என்பது RSS ன் அரசியல் கிளை எனவும், RSS ஃபாசிச திட்டங்களுடன் செயல்படும் அமைப்பு என்றும் கூறியுள்ளார்.

காரட்டும் யெச்சூரியும் சொல்வது வேண்டுமானால் டெக்னிகல் ஆகச் சரியாக இருக்கலாம். அதாவது 1930 களில் ஐரோப்பாவில் உருவான Classical fascism த்தின் அத்தனை கூறுகளும் அப்படியே இன்றும் இங்கு நிலவாமல் இருக்கலாம். ஆனால் இதற்கிடையில் கிட்டத்தட்ட 90 ஆண்டுகள் ஓடிவிட்டன. பெரிய அளவில் உலகம் மாறிவிட்டது. இனி Classical fascism எங்கும் சாத்தியமில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

காலம், இடம் ஆகியவற்றைப் பொருத்து fascism ம் தன் வடிவத்தைத் தகவமைத்துக் கொள்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மார்க்ஸ் காலத்திய உலக முதலாளியம் லெனின் காலத்தில் ஏகாதிபத்தியம் ஆகவும், இன்று neo imperialism ஆகவும் வெளிப்படவில்லையா?

மோடி நேருவை வெறுப்பதில் என்ன வியப்பு?

சர்தார் படேலையும் நேருவையும் ஒப்பிட்டு மோடி பேசிய பேச்சில், இரண்டு அம்சங்கள் உள்ளன.

முதலாவது: “நேருவைப் பிரதமராக்கி இருக்கக் கூடாது. படேல் இன்னும் சிறந்த பிரதமராக இருந்திருக்க முடியும்” என்பது.

நேருவின் மீது இந்துத்துவவாதிகள் கடும் காழ்ப்பைக் கக்குவது புதிதல்ல.. ஜனவரி 29, 2004ல் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்சன், “காந்தி இரண்டு தவறுகளைச் செய்தார். ஒன்று பாகிஸ்தான் பிரிவினைக்குத் துணை போனது. மற்றது நேருவைப் பிரதமராக்கியது” என்றது நினைவுக்கு வருகிறது.

இந்தியாவை ஒரு இந்து ராஷ்டிரமாக ஆக்காமல், பலரும் சேர்ந்து வாழும் மதச் சார்பற்ற பன்மைச் சமூகமாகக் கட்டமைத்ததில் காந்தி நேரு இருவருக்கும் மிக முக்கியமான பங்கு இருந்ததுதான் அவர்கள் மீது இத்தனை வெறுப்பு. இது காந்தியின் கொலை வரைக்கும் சென்றது.

படேல், நேரு ஆகிய இருவர் மீதும் காந்திக்கு அன்பு இருந்த போதிலும் அவர் நேருவையே பிரதமர் பதவிக்குத் தேர்வு செய்தது குறித்து ஜூடித் பிரவுன் போன்ற வரலாற்றாசிரியர்கள் இரு காரணங்களைச் சொல்வர். ஒன்று நேரு படேலைக் காட்டிலும் பன்னாட்டளவில் அறியப்பட்டவர் மட்டுமல்ல புகழ் பெற்றவருங் கூட. அடுத்து நேரு பலதரப்பட்ட அரசியல் சமூகங்களுடனும் உரையாடும் தகுதி பெற்றவர் என்பது. அதாவது பலதரப்பினரையும் கூடுதலாக உள்ளடக்கும் தன்மை பெற்றவர் நேரு. உலக அளவில் புகழ் பெற்ற, பெரிய குடும்பத்தில் பிறந்த நேரு, தன் திருமண அழைப்பிதழை ஆங்கிலத்திலோ, இந்தியிலோ அச்சிடாமல் சிறுபான்மையினரின் உருது மொழியில் மட்டுமே அச்சிட்டது அவரது இந்த உள்ளடக்கும் தன்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இந்தியா சுதந்திரமடைந்த ஆறு மாதத்திற்குள் காந்தி இறந்து போகிறார். பின்னாளில் ‘ஜனசங்” ஆக வடிவெடுத்த இன்றைய பா.ஜ.கவின் முக்கிய தலைவர்கள் பலரும் அன்று காங்கிரசிலும் அரசிலும் பங்கேற்றிருந்தனர். அன்றைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், லால் பகதூர் சாஸ்திரி, நந்தா, சியாமா பிரசாத் முகர்ஜி, வல்லப பந்த் முதலானோர் வலது சாரிச் சார்புடையவர்கள். ஜூடித் பிரவுனின் மொழியில் சொல்வதானால் பல தரப்பட்ட சமூகங்களையும் உள்ளடக்கி உரையாடலை நிகழ்த்துவதில் நேருவுக்கு இணையானவர்கள் அல்ல. சுருங்கச் சொல்வதானால் அமைச்சரவையிலும் கட்சியிலும் காந்தியின் மறைவுக்குப் பின் நேரு ஒரு சிறுபான்மையாக இருந்தார்.

அம்பேத்கருக்கு வாக்களித்தபடி இந்து திருமணச் சட்டம் உட்படப் பலவற்றை அவரால் நிறைவேற்ற இயலாமல் இருந்தது. பாபர் மசூதிக்குள் ராமர் சிலைகள் வைக்கப்பட்டபோது அது பின்னாளில் மிகப் பெரிய ஆபத்தாக உருப் பெறப் போவது குறித்து நண்பர் ஒருவருக்கு நேரு எழுதிய கடிதம் மனதை உருக்கும். “பந்த்ஜி (உ.பி.முதல்வர்) நினைத்தால் அந்தச் சிலைகளை அங்கிருந்து அகற்றிவிட இயலும். செய்ய மாட்டேன் என்கிறாரே…” என்கிற தொனியில் அக் கடிதம் எழுதப்பட்டிருக்கும்.

எனினும் எல்லோரையும் அனுசரித்து, தனது கொள்கையை விடாமல் இந்த நாட்டை மதச் சார்பற்ற திசையில் கொண்டு சென்றது நேருவின் முதல் மகத்தான சாதனை. இந்து திருமணச் சட்ட வரைவில் கையொப்பமிட இயலாது எனச் சொன்ன ராஜேந்திரப் பிரசாத்தின் கருத்தை மீறி அச்சட்டத்தைப் பிரித்துத் தனித் தனியாக தன் காலத்திலேயே நிறைவேற்றவும் செய்தார்.

நேரு உயிருடன் இருந்தவரை ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் ஒரு முறை ஒவ்வொரு மாநில முதலமைச்சரும் தத்தம் மாநிலத்தில் எவ்வளவு உயர் பதவிகளை நிரப்பியுள்ளனர், அதில் எவ்வளவு பேர் முஸ்லிம்கள் எனத் தெரிவிப்பதைக் கட்டாயமாக்கி இருந்தார். ம.பி முதல்வர் சுக்லா, முஸ்லிம்களில் சிலர் தவறான போக்கைக் கையாளுகின்றனர் என எழுதியபோது, அப்படி இருந்தால் அதற்குப் பெரும்பான்மைச் சமூகத்தவரான நமக்குத்தான் அதிகப் பொறுப்புள்ளது, சிறுபான்மைச் சமூகத்தின் நம்பிக்கையைப் பெரும்பான்மைச் சமூகம் பெற வேண்டும் எனப் பதில் எழுதினார்.

ஒரு திறந்த பன்மைச் சமூகம் என்பதற்கு அப்பால் இங்கு ஜனநாயக விழுமியங்கள் வேர் கொள்வதிலும் நேருவின் பங்கு முக்கியமானது. மொழி வாரி மாநிலம் அமைத்தது, இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை இங்கு ஆங்கிலம் நீடிக்கும் என உறுதி மொழி அளித்தது, இருநூறாண்டு கால காலனிய ஆட்சியில் சீரழிந்திருந்த தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவது முதலான அம்சங்களிலும் நேருவின் தொலை நோக்குப் பார்வைகள் குறிப்பிடத்தக்கதாக இருந்தன. அரசுத் திட்டமிடலின் கீழ் இயங்கும் தொழிற் துறையின் மூலமாகத்தான் அடித்தள மக்கள் பயன்பெறுவர் என்கிற வகையில் அவர் சோவியத் ரஷ்யாவின் திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கைகளை நமது சூழலுக்குத் தக வடிவமைத்தார்.

கார்பொரேட்களின் வேட்பாளரான மோடி போன்றோரால் திட்டமிட்ட பொருளாதாரத்தையும் மொழிவாரி மாநிலங்களையும் நடைமுறைப் படுத்திய நேருவை எப்படி ஏற்றுக் கொள்ள இயலும்?

“குறித்துக் கொள்ளுங்கள் இந்தியாவிற்கு ஆபத்து கம்யூனிஸ்டுளால் வரப் போவதில்லை. வலது சாரி இந்து வகுப்புவாதத்தால்தான் அது வரப் போகிறது….. பெரும்பான்மை மதவாதம் சிறுபான்மை மதவாதத்தைக் காட்டுலும் ஆபத்தானது..” என்றெல்லாம் சொன்ன நேருவை மோடிகள் எதிர்ப்பதில் என்ன வியப்பு?

மோடிபேச்சின் இரண்டாவது அம்சம் படேலை ஒரு இந்துத்துவவாதியாகச் சுவீகரித்துக் கொள்வது.

படேலை நேரு அளவிற்கு பன்மைத் தன்மையைப் போற்றுபவராக ஏற்க இயலாதபோதும் அவரை இந்துத்துவச் சிமிழுக்குள் அடைத்துவிட முடியாது.

ஆர்.எஸ்.எஸ் மீது படேலுக்கு ஒரு அனுதாபம் இருந்தபோதும், அவ்வமைப்பை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும் என்கிற நேருவின் கருத்தை அவர் ஏற்காத போதும், இந்துத்துவ சக்திகளின் வழிமுறைகளை அவர் கடுமையாகக் கண்டித்தார். குறிப்பாக காந்தி கொலையை அவரால் சகித்துக் கொள்ள இயலவில்லை. இது தொடர்பாக இந்துத்துவவாதிகள் படேலிடம் இரக்கத்தை எதிர்பார்த்தபோது அவரது பதில்கள் இப்படி அமைந்தன:

“(இந்துத்துவவாதிகளின்) பேச்சுக்கள் முழுமையும் வகுப்புவாத விஷம் தோய்ந்தவையாக உள்ளன. இந்துக்களை உற்சாகப் படுத்துவதற்காகவும் அமைப்பாக்குவதற்காகவும் இப்படி விஷத்தைப் பரப்ப வேண்டியதில்லை. இதன் இறுதி விளைவாக மகாத்மா காந்தியின் விலை மதிப்பற்ற உயிரை இந்த நாடு இழக்க வேண்டியதாயிற்று….. காந்திஜியின் மரணத்தை ஆர்.எஸ்.எஸ் காரர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடியுள்ளனர்….” – இவை படேல் ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வாக்கருக்கு எழுதிய கடித வாசகங்கள் (செப் 11, 1948).

“காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ், இந்து மகா சபை ஆகியவற்றின் பங்கு குறித்து………எங்களுக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி இந்த இரு அமைப்புகளின் குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்சின் செயல்பாடுகள் உருவாக்கியிருந்த சூழலே இந்த அதிர்ச்சியளிக்கும் கொலைக்குக் காரணமாக இருந்துள்ளது…” – இவை படேல் இந்து மகா சபைத் தலைவர்களில் ஒருவரானா ஷியாமா பிரசாத் முகர்ஜிக்கு எழுதிய கடித வாசகங்கள் (ஜூலை 18, 1948).

டெல்லி தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ள சர்தார் படேல் தொடர்பான நுண்படத் தொகுப்பின் மூன்றாம் சுருளில் ஆர்,எஸ்,எஸ் குறித்து அன்று காங்கிரஸ் கட்சி சுற்றுக்கு விட்ட அறிக்கை உள்ளது. அதில், ”பாசிசத்திற்குக் காரணமாகக் கூடிய இரகசிய வன்முறையை ஆர்.எஸ்.எஸ் கைக்கொண்டுள்ளது” என இவர்களைப் பாசிஸ்டுகளாக வரையறுத்திருப்பது குறிப்பிடத் தக்கது.

தன்னைச் சின்ன சர்தார் என அழைத்துக் கொள்ளும் மோடிக்கு, படேலின் இறுதிச் சடங்கில் நேரு கலந்துகொண்ட செய்தி தெரியாதது போலவே இவையும் தெரியாது போலும்.

குஜராத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்ட கதை அல்லது நரேந்திர மோடியின் இந்து ராஷ்டிரம்

அகமதாபாத்திலிருந்து செயல்படும் ‘நவ்சர்ஜன்’ எனும் தொண்டு நிறுவனம், ‘நீதிக்கும் மனித உரிமைகளுக்குமான ராபர்ட் எஃப் கென்னடி மையம்’ உடன் இணைந்து “தீண்டாமையைப் புரிந்துகொள்ளல்” என்றொரு ஆய்வை குஜராத்தில் மேற்கொண்டது. சுமார் 1600 கிராமங்களை முறைப்படி ஆய்வு செய்து அது அளித்த அறிக்கை ஏராளமான தரவுகள் மற்றும் பகுப்பாய்வுகளுடன் 2009ல் வெளி வந்தது.

இந்த அறிக்கை அளிக்கும் முடிவைச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம் : இன்னும் குஜராத் கிராமங்களில் 98 சதம் தலித்கள் தீண்டாமைக் கொடுமையை அநுபவிக்கின்றனர் என்பதுதான். ஆலய நுழைவு மறுக்கப்படுதல், பள்ளிகளில் தலித் குழந்தைகள் மீது தீண்டாமை கடைபிடிக்கப்படுதல், தேநீர்க் கடைகளில் இரட்டை கிளாஸ் முறை முதலியன நடைமுறையில் உள்ளதை விரிவான ஆதாரங்களுடன் நவ்சர்ஜன் வெளியிட்டிருந்தது.

இது குறித்து உள்ளூர் மற்றும் தேசிய நாளிதழ்கள் விரிவாக செய்திகள் வெளியிட்டிருந்தன. ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் தொடர்ந்து மூன்று நாட்கள் வந்த செய்தித் தலைப்புகள் வருமாறு:

1. “குஜராத்தில் தலித்கள் கோவில்களுக்குள் நுழைய முடியாது,” – டிசம்பர் 7, 2009
2. “அதிரும் குஜராத்?” (Vibrant Gujarat) : 98 சத தலித்கள் மத்தியில் இரட்டை கிளாஸ் முறை” – டிசம்பர் 8, 2009. 3. “தலித் குழந்தைகள் மதிய உணவுத் திட்டத்தில் படுகிறஅவமானங்கள்” -டிச 9, 2009. டைம்ஸ் ஆப் இந்தியா அப்படி ஒன்றும் பா.ஜ.க எதிர்ப்பு நாளிதழல்ல என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்தி மொழியிலும் இவ் அறிக்கை வெளியிடப்பட்டது. ‘அதிரும் குஜராத்’ தின் லட்சணம் இதுதானா என்கிற கேள்வியும் பரவலாக எழும்பியது.

ஒரு பொறுப்புள்ள அரசு என்ன செய்திருக்க வேண்டும்? இந்த அறிக்கையை அப்படியே ஏற்காவிட்டாலும் ஒரு குழுவை அமைத்து மேலும் ஆய்வு செய்து இந்தக் குறைபாடுகளை ஏற்றுத் தீர்க்க முயற்சித்திருக்க வேண்டும்.

ஆனால் மோடி என்ன செய்தார் தெரியுமா?

அப்படியான நிலை இல்லை என ஒரு முடிவைச் சொல்லுமாறு அவர் ஒரு குழுவை அமைத்தார். ‘சுற்றுச் சூழல் திட்டமிடல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக் கழக மையம்’ (CEPT) எனும் நிறுவனத்தின் பேரா. ஆர்.பார்த்தசாரதி என்பவரின் தலைமையில் அப்பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் குழுவை நியமித்து, “சம வாய்ப்புகளில் சாதி வேறுபாட்டின் தாக்கம் : குஜராத் குறித்த ஓர் ஆய்வு” என்கிற பெயரில் ஒரு அறிக்கையை அளிக்கச் செய்தது.

இந்த ஆய்வு எத்தனை அபத்தமானது என்பதை டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் மூத்த பத்திரிக்கையாளர் ராஜீவ் ஷா தனது ‘True lies’ எனும் ப்ளாக்கில் அம்பலப் படுத்தியுள்ளார்.

“குஜராத்தில் சாதி வேறுபாடு எதார்த்ததில் இல்லை. அது பார்க்கிறவர்களின் பார்வையில்தான் உள்ளது” -(caste discrimination is a matter of perceptions) என்பதுதான் இந்த அறிக்கை சுருக்கமாகச் சொல்லும் செய்தி.

1589 கிராமங்களை ஆய்வு செய்து நவ்சர்ஜன் அளித்த 300 பக்க அறிக்கையை “முறையாக அரிசீலனை செய்வதற்குப் பதிலாக. குஜராத்தில் நிலவும் கொடிய தீண்டாமையை நியாயப்படுத்தும் செயலையே” மோடியின் பார்த்தசாரதி அறிக்கை செய்துள்ளது என்கிறார் ராஜிவ் ஷா. வெறும் ஐந்து கிராமங்களுக்கு மட்டுமே சென்று, அங்கு மேற்கொள்ளும் அரசு நலத் திட்டங்களைக் கூறி தீண்டாமைக் கொடுமை எல்லாம் இங்கில்லை என அறிவித்தது இந்த அறிக்கை.

“தலித்கள் மட்டும் (கிராமத் திருவிழாக்களின்போது அவர்களே பாத்திரங்களைக் கொண்டு வந்து சோற்றை வாங்கிச் செல்லச் சொல்வதும், அவர்களைக் கடைசியாகச் சாப்பிடச் சொல்வதையும் ஏன் தீண்டாமை எனப் பார்க்க வேண்டும். சாதி இந்துக்களுடன் சண்டை வேண்டாம் என்பதற்காக தலித் பெரியவர்களே இளைஞர்களிடம் நவராத்திரி முதலான கிராமத் திருவிழாக்களுக்குப் போக வேண்டாம் எனச் சொல்கிறபோது அவர்கள் திருவிழாக்களில் பங்கேற்கக் கூடாது எனச் சொல்வதில் அர்த்தமென்ன? அதை இளைஞர்களும் கேட்டுக் கொள்கிறார்கள். அப்படியும் போகிற தலித் இளைஞர்கள் அந்தத் திருவிழாவில் பங்கேற்காதபோதும் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்களே” – என்கிற ரீதியில் தீண்டாமை ஒதுக்கல்களை நியாயப்படுத்தி குஜராத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டதாக அறிவித்து, “பார்க்கிற பார்வையில்தான் தீண்டாமை இருக்கிறது. தீண்டாமை என்று இதையெல்லாம் சொன்னால் அப்புறம் எல்லாம் தீண்டாமைதான்” என்கிற ரீதியில் முடித்துக் கொண்டது பார்த்தசாரதி அறிக்கை.

பார்த்தசாரதி அறிக்கை தவிர அப்போதைய சமூகநீதித் துறை அமைச்சர் ஃபகிர்பாய் வகேலா தலைமையில் ஒரு அரசியல் சட்டக் ககுழுவையும் அமைத்து மோடி அரசு தனக்குத் தானே க்ளீன் சிட்’டும் கொடுத்துக் கொண்டது. தங்கள் கிராமத்தில் தீண்டாமை இல்லை என தலித்களிடம் வாக்குமூலம் அளிக்கச் சொல்லி எழுதி வாங்குமாறு அரசு அதிகாரிகள் பணிக்கப்பட்டனர். அந்தக் காகிதங்களை விரித்துக் காட்டி, “பாருங்கள் குஜராத் அதிருது… தீண்டாமையை நாங்க ஒழிச்சிட்டோம்” எனப் புன்னகைக்கிறார் நர மோடி.

குஜராத் அரசின் இந்த அணுகல்முறையை புகழ் பெற்ற சமூகவியல் அறிஞர் கன்ஷியாம் ஷா கண்டித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

குஜராத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்ட புராணம் இதுதான்.

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இதுதான் நிலைமை என்ற போதிலும் குஜராத் குறித்த இந்தச் செய்திகளில் நாம் சிலவற்றைக் கவனம் கொள்ள வேண்டியுள்ளது. அவை:

1. 98 சத தலித்கள் தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்பது மிக அதிகம். இங்குள்ள சில அமைப்புகள் ஏதோ திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்தான் இந்த நிலை என்பதாகப் பேசி வருவது எத்தனை அபத்தம் என்பதற்கு இது ஒரு சான்று

2. தலித்களின் நிலை இவ்வாறு இருப்பதற்கு ஏதோ குஜராத் அரசின் செயல்பாட்டுக்.குறைவு அல்லது திறமையின்மை மட்டும் காரணமல்ல. குஜராத் அரசின், குறிப்பாக நரேந்திர மோடியின் சாதி மற்றும் தீண்டாமை குறித்த வருணாசிரம அணுகல் முறையும் இதன் அடிப்படையாக உள்ளது என்பதற்கு ஒரு சான்று வருமாறு:

குஜராத் மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மத்தியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நரேந்திர மோடி ஆற்றிய உரைகளைத் தொகுத்து 2007ல் ஒரு நூலாக வெளியிடப்பட்டது குஜராத் அரசு.. நூற் தலைப்பு : ‘கர்ம் யோக்’, அதாவது கர்ம யோகம். ‘குஜராத் மாநில பெட்ரோலிய கார்ப்பொரேஷன்’ எனும் பொதுத்துறை நிறுவனம் இந்நூலின் 5000 பிரதிகளை அச்சிடும் செலவை ஏற்றுக் கொண்டது.

அந்த நூலில் கண்டுள்ள அவரது பேச்சுக்களில் ‘சாம்பிளுக்கு’ ஒன்று :

தலையில் மலம் சுமந்து அகற்றும் சஃபாய் கர்ம்தார் (துப்புரவுத் தொழிலாளர்) குறித்து மோடி இப்படிச் சொல்கிறார்:

“அவர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக இந்தத் தொழிலைச் செய்கிறார்கள் என நான் நினைக்கவில்லை. அப்படி இருந்தால் தலைமுறை தலைமுறையாக அவர்கள் இந்த மாதிரித் தொழிலைச் செய்து வருவார்களா? ஏதோ ஒரு காலகட்டத்தில், அவர்களின் இந்தப் பணி (1) ஒட்டு மொத்தச் சமூகம் மற்றும் இறைவனின் மகிழ்ச்சிக்காகாகச் செய்யப்படுகிறது என்பதையும் (2) கடவுளால் அவர்களுக்கு அருளப்பட்ட இந்தப் பணியை அவர்கள் செய்தே ஆக வேண்டும் என்பதையும் (3) இந்தத் துப்புரவுப் பணி ஒரு ஆன்மீக அனுபவமாகக் காலம் காலமாகத் தொடரப்பட வேண்டும் என்பதையும் ஒரு புத்தொளி அனுபவமாக அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். தலைமுறை தலைமுறையாக அவர்கள் இந்த அனுபவத்தை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். இவர்களின் முன்னோர்கள் வேறு வேலைகளுக்கு வாய்ப்பில்லாமல் இந்தப் பணியைத் தேர்வு செய்தார்கள் என நம்ப இயலவில்லை” (கர்ம்யோக், பக். 48,49).

தமிழகம் உட்பட நாடெங்கிலும் இதற்குக் கடுமையாக எதிர்ப்புகள் எழுந்தவுடன் சுதாரித்துக் கொண்ட நரேந்திர மோட, அந்த 5000 நூற்பிரதிகளையும் வெளியில் விடாமல் அமுக்கிக் கொண்டார்.

ஆனால் மோடி தன் இந்தக் கொடூரமான ஆபாசக் கருத்துக்களை எந்நாளும் அமுக்கிக் கொண்டதில்லை என்பது இரண்டாண்டுகளுக்குப் பின் அவர் 9000 சஃபாய் கரம்சாரிகள் கூடியிருந்த ஒரு மாநாட்டில் பேசும்போது வெளிப்பட்டது. “மலம் அள்ளும் இந்தத் தொழில் பூசை செய்யும் தொழிலுக்குச் சமம்” என அம்மாநாட்டில் நர மோடி பேசினார்.

“பூஜை புனஸ்காரங்களுக்கு முன் கோவில் குருக்கள்கள் ஆலயத்தைத் தூய்மை செய்கின்றனர். நீங்களும் ஆலயப் பூசாரிப் பார்ப்பனர்களும் ஒரே தொழிலைத்தான் செய்கின்றீர்கள்..”

எப்படி இருக்கிறது கதை?

குஜராத் முழுவதும் இந்துத்துவ அமைப்புகள் “நீங்கள் இந்து ராஷ்டிரத்தின் (இந்தப்) பகுதிக்குள் நுழைகிறீர்கள்” என ஆயிரக் கணக்கில் சட்ட விரோதமான பலகைகளை நட்டுள்ளனர். இந்த இந்து ராஷ்டிரத்தின் இன்றைய நிலையைப் பார்க்கும்போது அன்று அண்ணல் அம்பேத்கர் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது, அண்னல் சொன்னார்:

“இந்து ராஷ்டிரம் என்பது நடைமுறைக்கு வந்தால் அது இந்த நாட்டுக்குப் பெருங் கொடுமையாக (greatest menace) அமையும். இந்துக்கள் என்ன சொன்ன போதிலும், இந்துயிசம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றிற்குக் கேடாக அமையும் (Hinduism is a danger to independence, equality and brotherhood) என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அது இவ்வாறு ஜனநாயகத்தின் எதிரியாக உள்ளது. இந்து ராஷ்டிரம் எதார்த்தமாவதைத் தடுக்க நாம் எல்லா முயற்சிகளிலும் இறங்க வேண்டும்” (பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை, பக்.358).