நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் எவ்வித நியாயங்களும் இன்றி, கையில் எந்த ஆயுதமும் இல்லாத ஒரு தொழிலாளியை மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையைச் (சி.ஐ.எஸ்.எஃப் )சேர்ந்த ஒரு படை வீரன் சுட்டுக் கொன்றதும், இதைக் கண்டிக்கத் திரண்ட தொழிலாளிகள் மீது தடியடி நடத்தப்பட்டதும் இன்று இன்னொரு மத்திய மாநில உறவுப் பிரச்சினை வடிவெடுக்கக் காரணமாகியுள்ளது.
சுட்டுக் கொன்ற சி.ஐ.எஸ்.எஃப் படை வீரனை இன்று தமிழகக் காவல் துறை, கொலைக் குற்றத்திற்காகக் கைது செய்து சிறையிலடைத்துள்ளது. ‘இராணுவ” அந்தஸ்துள்ள ஒருவரைத் தாங்களே விசாரித்துக் கொள்ள இயலும், எனவே தமிழக அரசு அந்தப் படை வீரனைத் தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என சி.ஐ.எஸ்.எஃப் கோரும் என இப்போது எதிர்பார்க்கப் படுகிறது. இன்னொரு பக்கம் சி.ஐ.எஸ்.எஃப்பை நெய்வேலியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் இன்று பரவலாக எழுந்துள்ளது.
தொழிற்சாலைகளைப் பாதுகாக்கும் அமைப்பாக உருப்பெற்ற ஒன்று இப்படியான ஒரு பிரச்சினைக்கு இன்று காரணமாகியுள்ள வரலாறு,, இந்திய அரசதிகாரத்தின் ஆக்டோபஸ் கரங்கள் எவ்வாறு படிப்படியாக விரிந்து பரவி வந்துள்ளது என்பதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.
நாடாளுமன்றச் சட்டம் ஒன்றின் மூலம் 1969 மார்ச் 10 அன்று வெறும் 2800 காவலர்களுடன் உருவாக்கப்பட்டது இந்த சி.ஐ.எஸ்.எஃப். முன்னதாக மத்திய அர்சுகுச் சொந்தமான தொழில் நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கென இப்படியான சிறப்புப் படைகள் எதுவும் கிடையாது, 1969ல் இச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் அன்றைய மத்திய உள்துறைத் துணை அமைச்சர் வி.சி.சுக்லா முன்மொழிந்தபோது, மாநிலப் போலீசின் சில அதிகாரங்களைப் பறித்துக் கொள்ளக் கூடிய இத்தகைய படை தேவை இல்லை என அம்முயற்சி எதிர்க் கட்சிகளால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது, எனினும் அரசு பிடிவாதமாக அதை நிறைவேற்றியது.
“தொழிற்சாலைகளின் சொத்துக்களைப் பாதுகாப்பது மற்றும் எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து தொழிற்சாலைகளைப் பாதுகாப்பது” (protection and security) என்பது இச்சட்டத்தின் குறிக்கோளாக அறிவிக்கப்பட்டது. பாதுகாப்பதுதான் நோக்கமென்றால் .ஏன் இப்படி போலீஸ் அதிகாரம் உள்ள ஒரு படையை தொழிலகங்களுக்கு என ஏற்படுத்துகிறீர்கள் என்கிற கேள்விக்கு அரசு திருப்திகரமான பதில் எதையும் அளிக்கவில்லை.
பின் 1983 ஜூன் 15 அன்று மத்திய அரசு இச்சட்டத்தைத் திருத்தி சி.ஐ.எஸ்.எஃப்பை தனது “ஆயுதப் படைகளில்” ஒன்றாக (armed force of the union) அறிவித்துக் கொண்டது. வட கிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டு வரும் போராட்டங்களின் விளைவாக ‘சென்சிடிவ்’ ஆன நிறுவனங்களான அணு உலை, விண்வெளி ஆய்வகம் முதலானவற்றையும் இதர முக்கிய தொழிலகங்களையும் காக்க இத்தகைய சிறப்புப் படைப் பிரிவு தேவைப்படுகிறது என அப்போதைய உள் துறைத் துணை அமைச்சர் என்.ஆர்.லஸ்கர் இதற்குக் காரணம் சொன்னார். மாநில அரசு விரும்பினால் அதுவும் இந்த சி.ஐ.எஸ்.எஃப் பாதுகாப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
தற்போது 2,00,000 துருப்புக்கள் உள்ள உலகிலேயே பெரிய தொழிற் பாதுகாப்புப் படையாக இது உள்ளது. சுமார் 300 தொழில் நிறுவனங்களில் அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளின் பாதுகாப்பிற்காகத்தான் இது உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு சொல்லிக் கொண்டாலும், தொழிற்சாலைச் சொத்துக்கள் களவாடப்படுவதையோ, நிர்வாகத் திருட்டுகளால் நிறுவனங்களுக்குப் பெரிய இழப்புகள் ஏற்படுவதையோ சி.எஸ்.எஃப்.ஐ தடுத்து நிறுத்தியதாக வரலாறு இல்லை. பொதுக்கணக்கு ஆயம் (PAC) பல்வேறு சந்தர்ப்பங்களில் பொதுத்துறை நிறுவனங்களில் ஊழல் மற்றும் திருட்டு ஆகியவற்றின் மூலம் இழப்புகள் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ளது. துர்காபூர் எஃகு ஆலையின் ஆடிட் அறிக்கை ஒன்று,. டன் கணக்கான எஃகுத் தண்டுகள் கரையான் அரித்துக் காணாமற் போய்விட்டதாகக் கணக்கு எழுதப்பட்டிருந்ததை அது அம்பலப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையெல்லாம் கண்டுபிடித்துத் தடுக்க வக்கற்ற சி.ஐ.எ ஸ்.எஃப் படை வாய்ப்பு வந்தபோதெல்லாம் தொழிலாளர்கள் மீது வன்முறையை ஏவத் தயங்கியதில்லை. நிர்வாகத்திற்குத் துணையாக நின்று போராட்டங்களை அது ஒடுக்கி வந்துள்ளது. பொதுத்துறை நிறுவனகளில் வலுவாக உருவாகி வந்த தொழிற்சங்கங்களின் உரிமைப் போராட்டங்களைப் பாதுகாப்பு என்கிற பெயரில் ஒடுக்குவதே சி.ஐ.எஸ்.எஃப் உருவாக்கத்தின் உண்மையான பின்னணி என்பது போகப் போகத் தெளிவாகியது.
1981ல் ‘அத்தியாவசியப் பணிகள் பாதுகாப்புச் சட்டத்திற்கு’ (ESMA) ஒரு நாள் வேலை நிறுத்தம் ஒன்று அகில இந்திய அளவில் நடைபெற்றபோது, அதற்கு ஆதரவு தெரிவித்த அகமதாபாத் “இயல் அறிவியல் ஆய்வுக் கூட’ப் பணியாளர்களை சி.ஐ.எஸ்.எஃப் படையினர் தாக்கியதோடு, அவர்களை லாக் அப்பிலும் அடைத்து வைத்திருந்தது அப்போது சர்ச்சைக்குள்ளாகியது. 1980ல் டல்லி ராஜ்ஹாரா பகுதியில் ஒரு பழங்குடிப் பெண்ணை இப்படையினர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்க முயற்சித்ததை அறிந்த சுரங்கத் தொழிலாளிகள் இவர்களைக் கெரோ செய்தனர். சி.ஐ.எஸ்.எஃப் சுட்டதில் ஒரு தொழிலாளி மரணமடைந்தார். 38 பேர்கள காயமடைந்தனர். இப்படி நிறையச் சொல்லலாம்,
இதில் கவனத்திற்குரிய இன்னொரு அம்சம் என்னவெனில் 1983ம் ஆண்டுச் சட்டத் திருத்தம் என்பது தொழிலாளர்களை மட்டுமின்றி, சி.ஐ.எஸ்.எஃப் ஐயும் ஒடுக்கும் நோக்கத்துடன்தான் உருவாக்கப்பட்டது, பொதுத் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டங்களை நடத்தித் தங்களது உரிமைகளையும், ஊதியங்களையும் ஓரளவு பாதுகாத்துக் கொள்வதை அருகிருந்து பார்த்து வந்த சி.ஐ.எஸ்.எஃப் படையினர், தாங்களும் அமைப்பாகித் தங்கள் கோரிக்கைகளை வைக்க முனைந்தனர். மேலதிகாரிகளின் அதிகாரத்துவப் போக்கையும் அவர்கள் எதிர்த்தனர். 1979 பிப்ரவரியில் அவர்கள் மத்தியில் தங்கள் பிரச்சினைகளை மையப்படுத்திய துண்டறிக்கைகள் சுற்றுக்கு விடப்பட்டன. ராஞ்சியில் சி.ஐ.எஸ்.எஃப் கமாண்ட்டர் ஒருவருக்குப் பிடிக்காத ஒரு ஆய்வாளர் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார் என்கிற செய்தி படையினர் மத்தியில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சி.ஐ.எஸ்.எஃப்பின் அகில இந்தியப் பிரதிநிதிகள் டெல்லிக்குப் பேச்சுவார்த்தைக்கு வந்தபோது அவர்களை அரசு கைது செய்தது. இது நாடெங்கிலும் போராட்டங்களுக்கு வழி வகுத்தது,
ஜூன் 25 அன்று பொகாரோவில் போராட்டத்தில் இருந்த சி.ஐ.எஸ்.எஃப் படையினரை இராணுவம் சுற்றி வளைத்தது. இரு தரப்பினரும் மோதிக் கொண்டதில் இராணுவத்தினர் நால்வரும், சி.ஐ.எஸ்.எஃப்பினர் 19 பேர்களும் கொல்லப்பட்டனர், உண்மையில் 65 சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், சரணடைந்தவர்களெல்லாம் கூட பைனட்டால் குத்திக் கொல்லப்பட்டதாகவும் அன்று பேசப்பட்டது.
சி.ஐ.எஸ்.எஃப் மீதான இந்த இராணுவத் தாக்குதலின்போது பொகாரோவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மத்திய ரிசர்வ் படையும் (CRPF), பீகார் மிலிடரி போலீசும் இராணுவத்துடன் ஒத்துழைக்க மறுத்தன, போராடிக் கொண்டிருந்த சி.ஐ.எஸ்.எஃப் படையினர் ஐ.என்.டி.யூ.சி போன்ற தொழிலாளர் அமைப்புகளின் மாநாடுகளுக்குச் சென்று தமது கோரிக்கைகளுக்கு ஆதரவு தேடினர், தம்மைத் தொழில் நிறுவனங்களின் ஊழியர்களாக நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையையும் கூட அவர்கள் வைத்தனர்,
போராட்டம் தொடர்ந்தது. 1980ல் ராஞ்சியிலிருந்த சி.ஐ.எஸ்.எஃப் பிரிவிடமிருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சுமார் 500 வீரர்கள் கைது செய்யப்பட்டனர். 200 பேர்மீது வன்முறை மற்றும் தேசத்துரோக வழக்குகள் தொடரப்பட்டன.
இந்தப் பின்னணியில்தான் 1983ம் ஆண்டுத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 1968ம் ஆண்டுச் சட்டத்தின்படி கடமை தவறும் அல்லது குற்றம் இழைக்கும் சி.ஐ.எஸ்.எஃப் காவலர்கள் 1922 ம் ஆண்டு போலீஸ் சட்டத்தின் கீழ் தண்டிக்கப் படுவார்கள். தவிரவும் அவர்களுக்கு கூலி அளிப்புச் சட்டம் (1936), தொழில் தகராறுச் சட்டம் (1947), தொழில் நிறுவனங்கள் சட்டம் (1948) ஆகியவற்றின் பலன்கள் மறுக்கப்பட்டிருந்தது. 1983ம் ஆண்டுத் திருத்தம், இத்துடன்ன் கூடுதலாகப் பல தடைகளை அறிவித்தது. எக்காரணம் கொண்டும் சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் எந்தத் தொழிற்சங்க அமைப்புகளிலும் அனுமதியின்றி சேரக் கூடாது என்பது மட்டுமல்ல, வேறு எந்த சாட்தாரணத் தொடர்புகளையும் கூட வைத்துக் கொள்ளக்கூடாது; அரசியல் மட்டும் மத அமைப்புகள் மட்டுமின்றி தொழிற்சங்கங்கள், நல அமைப்புக்கள் எல்லாவற்றிற்கும் இது பொருந்தும்; தவிரவும் ஏதும் கூட்டங்கள், ஆர்பாட்டங்கள் எதிலும் கலந்து கொள்ளவோ பேசவோ கூடாது; பத்திரிகைகளுக்குப் பேட்டி அளிப்பதோ, கட்டுரைகள் எழுதுவதோ எதுவும் கூடாது என்பன புதிய திருத்தத்தின் முக்கிய அம்சங்கள். அவர்கள் போராடுவதை மட்டுமின்றி, கோரிக்கைகள் வைப்பதும் கூட இவ்வாறு குற்றங்கள் ஆக்கப்பட்டன..
இது தவிர சி.ஐ.எஸ்.எஃப்பில் உள்ள அடிப்படை வீரர்களின் மீதான உயரதிகாரிகளின் அதிகாரங்களும் அதிகரிக்கப்பட்டன. ஒழுங்கீனம், கடமை தவறுதல், கோழைத்தனம் ஆகியவற்றுக்கான சிறைத் தண்டனை ஆறு மாதங்கள் என்பது இப்போது ஓராண்டாக அதிகரிக்கப்பட்டது. கைது செய்யப்படக்கூடிய குற்றங்களாக வரையறுக்கப்பட்டிருந்தவை, இப்போது பிணையில் வெளிவர இயலாத குற்றங்களாக்கப்பட்டன. வீரர்களின் குற்றங்களை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு நீதிபதியின் அதிகாரங்கள் அளிக்கப்பட்டன. இப்படியான மாற்றங்களைச் செய்வதற்கு ஏதுவாகவே சி.ஐ.எஸ்.எஃப் “இராணுவம்” என வரையறுக்கப்பட்டது, இராணுவம் என்கிறபோது நாடாளுமன்றச் சட்டம் ஒன்றின் மூலம் மேற்கண்டவாறு அவர்களின் அடிப்படை உரிமைகளை ரத்து செய்யும் அதிகாரம் அரசுக்கு வந்து விடுகிறது. இராணுவ ஒழுங்கைக் காப்பாற்றுவது என்கிற பெயரில் அரசியல் சட்டத்தின் 33ம் பிரிவு இந்த அதிகாரங்களை அரசுக்கு அளிக்கிறது.
இப்படி சி.ஐ.எஸ்.எஃப் படையினரின் போராட்ட உணர்வை முடிவுக்குக் கொண்டு வந்த மத்திய அரசு, அதற்கு ஈடாக அவர்களைத் திருப்திப்படுத்துவதற்கென, தொழிலாளர்களுக்கு எதிரான அவர்களின் அதிகாரங்களை அபரிமிதமாக்கியது.
ஏற்கனவே அவர்களுக்கு அளிகப்பட்டிருந்த தொழிலாளர்களைக் கைது செய்யும் உரிமை இப்போது மேலும் விசாலமாக்கப்பட்டது. தன்னைத் தாக்கியவரை மட்டுமின்றி, அத்தகைய சந்தேகத்டிற்குரியவரையும் , தனது பணியைச் செய்யத் தடையாக இருப்பவரையும் சி.ஐ.எஸ்.எஃப் கைது செய்யலாம். தன்னை மட்டுமல்ல, அந்த நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய யாரிடமும் இப்படி நடந்துகொள்வோரையும் அது இப்படிக் கைது செய்யலாம். இராணுவம் என்கிற வரையறையும், இந்தக் கைது செய்யும் அதிகாரமும் ஒன்றாக இணையும்போது சி.ஐ.எஸ்.எஃப்பின் அதிகாரம் எல்லையற்றதாகி விடுகிறது.
“முன்னதாக நாங்கள் புலித்தோல் போர்த்திய ஆடுகளாகத்தான் இருந்தோம். நாங்கள் இப்போது தடியடி நடத்தலாம்; கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசலாம்; வன்முறைக் கும்பல்களை இப்படிச் சிதறடிக்கலாம்” என அப்போது ஒரு சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி இறுமாப்புடன் கூறியது இதழொன்றில் வெளிவந்திருந்தது,
தொழில் நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு, சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் நிறுவனமாகி இன்று தொழிலாளிகளை ஒடுக்கிக் கொல்லுகிற அளவிற்குச் சென்றுள்ள கதை இதுதான்.