காந்தியடிகளும் மதசார்பின்மையும்

(மதவெறிக்குப் பலியான மருத்துவர் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் பிலிப், டிமோதி என்கிற அவரது இரு குழந்தைகளின் நினைவாக நடைபெற்ற அறக்கட்டளைச் சொற்பொழிவில் ஆற்றிய உரை)

இங்கே ஆற்றுவதற்கு வாய்ப்பளித்தமைக்கு கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்களும், அறக்கட்டளை நிறுவனர்களுக்கும் நன்றி.

இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு. இங்கு இந்த நாட்டின் பொதுச் சட்டங்களுக்குக் கட்டுப்படும் யாரும் அவரவர் விருப்பப்படி, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்காத வகையில் எந்த ஒரு மதத்தையும் கடைபிடிப்பதற்கும் பரப்புவதற்கும் உரிமை உண்டு என்கிற நிலை இருந்தபோதும், மதத்தைப் பரப்புகிறார்கள் என்கிற காரணத்தைச் சொல்லி, ஒடிஷா மாநிலத்தில் அடித்தள மக்கள் மத்தியில் தொழுநோய்க்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த தியாக மனப்பான்மை உடைய ஒரு மருத்துவரும், அவரது சிறு குழந்தைகள் இருவரும் எரித்துக் கொல்லப்பட்டது சுதந்திர இந்திய வரலாற்றில் ஏற்பட்ட ஒரு களங்கம். தாங்கள் மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபடவில்லை, மருத்துவ சேவைதான் ஆற்றி வந்தோம் என, கொல்லபட்ட மருத்துவர் ஸ்டெய்ன்சின் மனைவி கிளாடிஸ் அவர்கள் கூறியபோதும், இது குறித்து அமைக்கப்பட்ட விசாரணை ஆணையமும், உச்ச நீதிமன்றமும் இந்தக் கொலைகளுக்கு மதமாற்றமும் ஒரு காரணமாக இருந்தது என்கிற மதவெறிப் பிரச்சாரத்தை ஏற்றுக் கொண்டது வேதனைக்குரியது.

உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்துள்ள நிலையில் கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு மதச் சார்பர்ற ஜனநாயகக் குடியரசாக நமது நாடு ஓரளவு வெற்றிகரமாக இயங்கி வருவதற்கு நமது அரசியல் சட்டம் அடிப்படையாக உள்ளது. நமது அரசியல் சட்டத்தின் 25,26,27 வது பிரிவுகள் இந்த நாட்டின் குடிமக்கள் தாங்கள் விரும்பும் மதத்தை பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்காத வகையில் கடைபிடிப்பது, வெளிப்படுத்துவது, பரப்புவது ஆகியவற்றை அடிப்படை உரிமைகளாக்கியுள்ளது.

பல்வேறுபட்ட மதத்தினரும் வாழ்கிற ஒரு நாடு என்கிற வகையில் இத்தகைய ஒரு அரசியல் அமைப்பை உருவாக்கியதில் மகாத்மா காந்திக்கு முக்கிய பங்குண்டு. அவரது கருத்துக்களும், அரசியலும் மட்டுமின்றி அவரது வாழ்வும் மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

மதச்சார்பின்மை என்பது எல்லா மதங்களையும் மறுப்பது அல்ல. அதற்கு பெயர் நாத்திகம் அல்லது இறை மறுப்புக் கோட்பாடு, மாறாக மதச்சார்பின்மை என்பதில் எதேனும் ஒரு மதத்தைத் தீவிரமாகக் கடைபிடிப்பதற்குத் தடை இல்லை. அதேபோலப் பிற மதங்களைத் தீவிரமாகக் கடைபிடிக்க மற்றவர்களுக்கும் உரிமை உண்டு என்பதையும், இந்த மத விஷயங்களில் அரசு எவ்விதத்திலும் தலையிடக் கூடாது என்பதையும் நாம் ஏற்பதுதான் மதச்சார்பின்மை.

காந்தியடிகளுக்கு முன் SECULARISM (மதச்சார்பின்மை) என்பது தத்துவ வரலாற்றில் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு கருத்தாக்கம். தத்துவ வரலாற்றில் இடைக்காலம் அல்லது மத்திய காலத்தை “தத்துவம் மதத்திற்கு அடிமையான காலம்” என்பார்கள். அரசு, கல்வி, மருத்துவம், இலக்கியம், தத்துவம் எல்லாமே மதத்திற்குக் கட்டுபட்டிருந்த காலகட்டம் அது. 15ம் நூற்றாண்டு வாக்கில் நியூட்டன், கலீலியோ, தெகார்த்தே போன்ற அறிவியலாளர்கள் பகுத்தறிவின் அடிப்படையில் உலகை விளக்கத் தலைப்பட்டனர். மறுமலர்ச்சிக் காலம் எனச் சொல்லப்படும் இக்காலகட்டத்தில் அரசு, மருத்துவம், இலக்கியம், தத்துவம் என்பதெல்லாம் மதத்திலிருந்து பிரிக்கப்பட்டன. இவ்வாறு மதத்தையும் தத்துவத்தையும் தனித்தனியே பிரிப்பதைத்தான் Secular என்கிற சொல்லின் மூலம் குறிப்பிட்டு வந்தனர்.

இவ்வாறு தத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு கருத்தாக்கத்தை அரசியலுக்குப் பிரயோகித்தவர் காந்தி. பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெறக்கூடிய நிலை ஏற்பட்டபோது எதிர்கால இந்தியா எல்லா மதங்களுக்கும் பொதுவான ஒரு அரசாக இருக்க வேண்டும் என்கிற நிலையை காந்தி எடுத்தார். உருவாகும் புதிய குடியரசை மதத்திலிருந்து பிரித்துவிடவேண்டும் என்றார். ஆனால் இன்னொரு சாரர் இந்தியா, இங்குள்ள பெரும்பான்மை மதமாகிய இந்துமதத்தைச் சார்ந்த அரசாக அமைய வேண்டும் என்றனர். புதிய இந்தியா, ‘இந்து ராஷ்டிரமாக’ அமைய வேண்டும் என்றனர்.

ஆனாலும் மக்கள் மத்தியில் பெருஞ் செல்வாக்குடன் “தேசத் தந்தையாக” ஏற்றம் பெற்றிருந்த காந்தியின் கருத்தே வெற்றி பெற்றது. ஆனால் அதற்கு அவர் மிகப் பெரிய விலை கொடுக்க நேரந்தது. இந்து ராஷ்டிரம் வேண்டியவர்கள் அவரைக் கொன்றார்கள். பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்ததால்தான் காந்தியைக் கொன்றதாக கோட்சே வாக்குமூலம் அளித்தபோதும் உண்மை அதுவல்ல. பாகிஸ்தான் என்கிற பேச்சு இல்லாதபோதே 1930 தொடங்கி குறைந்த பட்சம் ஐந்து முறை அவர் மீது கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. காந்தி வரையறுத்த தேசியத்திற்கும், அவரைக் கொலை செய்தவர்கள் வரையறுத்த தேசியத்திற்கும் இருந்த வேறுபாடே இந்தக் கொலை முயற்சிகளின் பின்புலமாக இருந்தது.

காந்தி வரையறுத்த தேசியத்தில் இந்தியா என்பது இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், இன்னும் பல மொழியினர், சாதியினர் எல்லோரும் ஏற்றத்தாழ்வுகள் இன்றி சம உரிமைகளுடன் வாழ உரிமை பெற்றிருந்தனர். இப்படி எல்லோரையும் உள்ளடக்கி நின்றதால் அவரது தேசியம் “உள்ளடக்கும் தேசியம்” (inclusive nationalism) என வகைப்படுத்தப்படுகிறது. அதாவது இந்தியப் புவி இயல் எல்லைக்குள் வாழ்கிற எல்லோரும் சம உரிமை பெற்ற இதியர்கள். இதை “புவிசார் தேசியம்” (territorial nationalism) என்பார்கள்.ஆனால் காந்திக்கு எதிர்நிலையில் நின்றவர்கள் இந்துக்கள் அல்லாதவர்களை “விலக்கிய” ஒரு தேசியத்தை (exclusive nationalism) முன்வைத்தனர். இந்தியப் புவி இயல் எல்லைக்குள் வாழ்ந்த போதிலும் இந்துக்கள் அல்லாதவர்கள் இரண்டாம் நிலையினராக. சம உரிமைகள் இல்லாதவர்களாக வரையறுக்கப்பட்டனர். இதனை அவர்கள் “கலாச்சார தேசியம்” (cultural nationalism) என அழைத்துக் கொண்டனர்.

காந்தி தனது மதச்சார்பின்மை என்கிற கோட்பாட்டை மக்கள் மத்தியில் பரவலாக்கி மக்களின் ஒப்புதலை அதற்குப் பெற்றார். தங்கள் விருப்பம் சாத்தியமில்லமற் போனதைக் கண்டவர்கள் அவரைக் கொன்றார்கள். அவர்கள் பிற மதத்தாரைப் பொறாதவர்கள். சிறுபான்மை மக்களின் உறிமைகளை மதிக்காதவர்கள்.காந்தி பிற மதங்களை மதித்த போதிலும் தன்னை ஒரு இந்து என அழைத்துக் கொள்வதில் பெருமை கொண்டிருந்தார். சுட்டு வீழ்த்தப்படும்போதும் “ஹேராம்” என்று கூறித்தான் மண்ணில் வீழ்ந்தார், அந்த வகையில் மதச் சார்பின்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தன அவரது வாழ்வும் அரசியலும்.

நமது முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயி இங்குள்ள பிற மதத்தினரை உள்வாங்கி உட்செரிக்க வேண்டும் (aasimilate) என்பார். அதாவது மற்றவர்கள் தங்கள் வித்தியாசங்களை, அடையாளங்களைத் துறந்து பெரும்பான்மையினருடன் அய்க்கியமானால்தான் அவர்களைக் குடிமக்களாக ஏற்க முடியும் என்கிறார். ஆனால் காந்தியோ.

“சமய உறவுகளில் ‘சகிப்புத்தன்மை’ (tolerance) என்கிற சொல் எனக்குப் பிடித்ததல்ல. “சமரசம்’ (compromise) என்கிற சொல்லிலும் ஒருவரின் மதத்தைவிட மற்றவரின் மதம் தாழ்வானது என்கிற பொருள் வந்துவிடுகிறது. மாறாக நமது சமயத்தின்பால் நமக்குள்ள நன்மதிப்பை மற்ற மதங்களின்மீதும் காட்ட வேண்டும் என்று என் அஹிம்சைக் கோட்பாடு வற்புறுத்துகிறது. இந்த நோக்கில் நம் சமயத்திலுல்ள குறைபாடுகளையும் நாம் ஏற்க வேண்டும். எல்லா மதங்களும் சமமானவை என ஏற்பது சமயங்களுக்கிடையே வித்தியாசங்களை நீக்குவது அல்ல.” என்பார். மற்றவர்களுடைய வித்தியாசங்களையும், கலாச்சாரங்களையும், நம்பிக்கைகளையும் ஏற்று அவர்களோடு சமமாக வாழ்வதும் இப்படிக் குடிமக்களின் சம உரிமையை ஏற்உ, மத விஷயங்களிலிருந்து அரசு ஒதுங்கிக் கொள்வதுந்தான் காந்தி அடிகள் முன்வைத்த மதச்சார்பின்மை.

மதச்சார்பின்மை குறித்த காந்தியின் கருத்துக்கள்– தமிழில்: அ.மார்க்ஸ்

1933 தொடங்கி காந்தியடிகள் தன் எழுத்துக்கள், உரைகள் மற்றும் உரையாடல்களில் மதச்சார்பின்மை குறித்தும் மதசார்பற்ற அரசு குறித்தும் அதிகம் பேசத் தொடங்கினார். காந்தியியல் ஆய்வாளரான அனில் நவ்ர்யா இவற்றைத் தொகுத்துள்ளார்.

1. தீண்டாமை ஒழிப்பு தொடர்பாக 1933ல் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியின் மத்திய சட்டமன்றம் ஒரு சட்ட வரைவை முன்வைத்தது. “மனித குலத்தின் அற உணர்வுக்கு ஒவ்வாத ஒரு வழமைக்கான (அதாவது தீண்டாமைக்கான)” ஒப்புதலை, “மதச்சார்பற்ற சட்ட” அணுகல்முறை ரத்து செய்வதைத் தான் வரவேற்பதாகக் காந்தி கூறினார். 1933 மே 6 அன்று, “ஒரு மதச்சார்பற்ற அரசின் சட்டம் (தீண்டாமைக்கு) ஒப்புதல் அளிக்க முடியாது என்பது மட்டுமல்ல, அளிக்கக் கூடவும் கூடாது” என்றார். தேவை இல்லாமல் அரசு இது போல மத விஷயங்களில் தலையிடக் கூடாது என இதற்கு தீண்டாமையை ஆதரிப்போரிடமிருந்து எதிர்ப்புகள் வந்தபோது, “(இது போன்ற) பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசு மதத்திலும் கூடத் தலையீடு செய்ய வேண்டி உள்ளது. தேவை இல்லாத தலையீட்டை மட்டுமே அரசு தவிர்க்க வேண்டும்” என்றார்.

2. 1935, ஜன, 27 அன்று மத்தியச் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் மத்தியில் பேசும்போது, “ஒட்டுமொத்தமான இந்துச் சமுதாயமே தீண்டாமை ஒழிப்பிற்கு எதிராக இருந்தபோதும், ஒரு மதச் சார்பற்ற சட்டமன்றம் இத்தகைய கண்ணோட்டத்தைச் சகித்துக் கொள்ளக்கூடாது என்றே நான் அறிவுரைப்பேன்” என்றார்.

3. 1942, ஜன, 20 அன்று, பாகிஸ்தான் பிரிவினைத் திட்டம் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தபோது காந்தி கூறியது: “நிதி வருமானம், சுகாதாரம், காவல்துறை, நீதித்துறை, பொது நிலையங்களைப் பயன்படுத்துதல் முதலானவற்றில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் என்ன கருத்து முரண்பாடு இருக்க முடியும்? மதப் பயன்பாடுகள், நம்பிக்கைகள், அவற்றைக் கடைபிடித்தல் ஆகியவற்றில் மட்டுமே வேறுபாடுகள் இருக்க முடியும். ஒரு மதச் சார்பர்ற அரசுக்கு அது குறித்துக் கவலை இல்லை”.

4. 1946 செப்டம்பரில் ஒரு கிறிஸ்தவ மதபோதகரிடம் காந்தி இவ்வாறு கூறினார்: “நான் ஒரு சர்வாதிகாரியாக இருந்தால் மதத்தை அரசிடமிருந்து பிரித்து விடுவேன். நான் மதத்தின் பெயரால் ஆணையிடுவேன். மதத்திற்காக உயிரையும் கொடுப்பேன். ஆனால் அது என் சொந்த விஷயம். அதற்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இருக்கக் கூடாது. அரசு மக்களின் பொது நலம், ஆரோக்கியம், அயல் உறவுகள், நாணயம் அச்சிடல் முதலானவற்றை மட்டுமே பார்த்துக்கொள்ளுமே ஒழிய, எக்காரணம் கொண்டும் அவர்களின் மத நம்பிக்கைகளில் தலையிடாது. அது (மத நம்பிக்கை) தனிப்பட்டவர்களின் பிரச்சினையாகவே இருக்கும்”

5. சுதந்திர தினத்திற்கு அடுத்த நாள், கொல்கத்தாவில் உள்ள ஸ்காடிஷ் சர்ச் கல்லூரியைச் சேர்ந்த ரெவரென்ட் கெல்லாஸிடம் உரையாடும்போது, “அரசு மதச்சார்பற்றதாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் எந்த அய்யமும் இல்லை. பொது நிதியிலிருந்து மதக் கல்வி பயிற்றுவிப்பதை அது எந்நாளும் அனுமதிக்காது. எந்த ஒரு குடிமகன் அல்லது குடிமகளும் நாட்டின் பொதுச் சட்டத்திற்குப் பணிந்து நடக்கும் வரை, எந்த ஒரு மத நம்பிக்கையையும் கடைபிடிக்க அவருக்கு உரிமை உண்டு. மதப் பிரச்சாரப் பணியில் எந்த (அரசு) தலையீடும் இருக்கக் கூடாது. ஆனால் அந்நிய ஆட்சியில் இருந்ததுபோல எந்த மத அமைப்பும் அரசுச் சலுகைகளைப் பெற இயலாது” என்றார்.

6. ஆக 17, 1947 அன்று காந்தி, நார்கேல்டங்காவில் பொதுமக்கள் மத்தியில் ஆற்றிய உரை: “(எதிர்கால இந்தியாவில்) மத வேறுபாடுகளின்றி எல்லோரும் சமமாக நடத்தப்படவேண்டும். அரசு முற்றிலும் மதச்சார்பற்றதாக இருக்கும். மத நிறுவனம் எதற்கும் அரசு ஆதரவு இருக்காது. சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமமாகக் கருதப்படுவர்.”

7. ஆக், 22, 1947, கொல்கத்தா தேசபந்து பூங்காவில் ஆற்றிய உரை: “மதம் என்பது தனிநபர் சார்ந்த விஷயம். அப்படி அது முறையாக நடைமுறைப்படுத்தபட்டால் அரசியலில் எந்தச் சிக்கலும் ஏற்படாது… அரசு அதிகாரிகளும், பொதுமக்களும் இந்தப் பொறுப்பை உணர்ந்து ஒரு மதச் சார்பற்ற அரசை உருவாக்க மனப்பூர்வமாகச் செயல்பட்டால், நாம் ஒரு புதிய இந்தியாவை உருவாக்க இயலும். அது உலகுக்கே வழிகாட்டியாக அமையும்.”

8. 1947 நவ 15 அன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, “எல்லாக் குடிமக்களும் சம உரிமை பெறும் மதச்சார்பற்ற ஜனநாயக அரசை”த் தன் குறிக்கோளாக அறிவித்துச் சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்த தீர்மானங்களை இயற்றியது. அன்றைய மாலைப் பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தி அதை வரவேற்று ஒவ்வொரு தீர்மானத்தையும் விளக்கி உரையாற்றினார்.

9. 1947 நவ 28: சோமநாதபுரம் கோவிலை அரசுச் செலவில் சீர்திருத்திக் குடமுழுக்குச் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தபோது அதைக் கடுமையாக எதிர்த்த காந்தி, குருநானக் பிறந்த நாள் உரையாற்றும்போது, “எல்லோருக்குமான அரசாக நாம் இதை உருவாக்கியுள்ளோம். இது ஒரு மதச்சார்பற்ற அரசு. அதாவது எந்த மதத்தையும் சாராத அரசு. அதாவது எந்த ஒரு குறிப்பிட்ட மத அரசும் அல்ல இது. எனவே மத அடிப்படையில் அது தன் நிதியைச் செலவிடாது” என்றார்.

10. கொல்லப்படுவதற்கு ஆறு நாட்கள் முன் (ஜன 24, 1948), “ஒரு மதச் சார்பற்ற அரசிற்கு ஆலோசனைகள் சொல்லி, வழிநடத்த சேவையும் அர்ப்பணிப்பும் மிக்க, ஆக்க பூர்வமான, நன்கு திரட்டப்பட்ட அமைப்பு ஒன்று தேவை. அமைச்சர்கள் அவர்களிடமிருந்து உற்சாகம் பெற்று வழிநடத்தப்பட வேண்டும்.” என்கிற பொருளில் எழுதினார்.

மேற்குறித்த காந்தியின் கருத்துக்கள் அனைத்தும், அவரது இறுதிக்காலத்தில், மதச்சார்பர்ற இந்தியா குறித்து அவர் முன்வைத்தவை. Secularism என்கிற ஒரு தத்துவ வகையினத்தை (philosophical category), ஒரு அரசியல் சொல்லாடலாக (political discourse) மாற்றியமைத்த காந்தியின் மதச்சார்பின்மை குறித்த கருத்துக்களை கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கொள்ளலாம்:

1. மதத்திலிருந்து அரசைப் பிரித்துவிட வேண்டும்.

2. மத நம்பிக்கை என்பது தனிநபர் சார்ந்த விஷயம். அதில் அரசுத் தலையீடு இருக்காது.

3. மதச்சார்பற்ற அரசியல் சட்டம் ஒன்றால் வழிநடத்தப்படும் மக்கள் பொதுச் சட்டத்தை மீறாத வகையில் தமது நம்பிக்கைகளைக் கடை பிடிக்கலாம். பிரச்சாரம் செய்யலாம்.

4. எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்கும் அரசின் ஆதரவோ, அரசு நிதியிலிருந்து உதவிகளோ இருக்காது.

5. மத விஷயங்களில் அரசு தலையிடாது என்ற போதிலும், தீண்டாமை முதலான அடிப்படை மானிட நெறிகளுக்குப் புறம்பான வழமைகளை ஒரு மதம் கடைபிடிக்கும்போது அதில் தலையிட்டு அதை முடிவுக்குக் கொண்டு வரும் உரிமை அரசுக்கு உண்டு.

6. ஒருவர் மதச் சார்பற்றதாக இருப்பது, அல்லது ஒரு மதச்சார்பற்ற அரசியல் சட்டத்தைக் கடைபிடிப்பது என்பது அவர் தனது மத நம்பிக்கையைத் தீவிரமாகக் கடைபிடிபதற்கு எதிரானதல்ல.