பிரிட்டோவின் கதை…

(சென்ற மார்ச் 25, 2017 அன்று சென்னையில் மரணித்த அன்பு நண்பரும் இலக்கியவாதியுமான பிரிட்டோ குறித்த ஒரு குறிப்பு)

ஒன்று

இரண்டு நாட்களுக்கு முன் தஞ்சையில் ஒரு நிகழ்ச்சியில் இருந்தேன். ஒரு போன் கால். எண் மட்டும் வந்தது, பெயரில்லை. “நான் சுதா பேசுறேன்.. மார்க்ஸ்”.. குரல் சற்று கம்மி இருந்தது. நான் அந்தக் குரலை கேட்டு நீண்ட நாட்களும் ஆகிவிட்டன.

“சொல்லுங்க சுதா, எப்டி இருக்கீங்க. பிரிட்டோ எப்டி இருக்கார்?”

“அதான்.. அவருக்கு ரொம்ப உடம்பு சரி இல்லாமப் போயி பத்து நாளா ஆஸ்பிடல்லதான் வச்சிருந்தோம். லிவர் ஃபெய்லியர். போயிட்டார்..”

“எங்கே போயிட்டார் சுதா..?”

அவர் அப்படி எல்லாம் போகக் கூடியவர். அதனால்தான் அப்படிக் கேட்டேன். ஒரு கண நேர மௌனத்துக்குப் பின் சுதா பதிலளித்தபோது அந்தக் குரலில் கண்ணீர் கலந்திருந்தது…

“செத்துப் போயிட்டாரு மார்க்ஸ்..” அவர் லேசாக விம்மத் தொடங்கினார்.

# # #

கால் நூற்றாண்டுக்கு முன் அவர்களின் திருமணத்தை நடத்தி வைத்தவன் நான்.

“திருமணம்” என்றா சொன்னேன். அது திருமணம் இல்லை. அவர்கள் இணையாராக வாழத் தொடங்கிய நாளில் திருத்துறைப்பூண்டி நண்பர்களோடு அதைக் கொண்டாடியபோது அதில் முக்கிய விருந்தினராக இருந்தவன் நான்.

பிரிட்டோ இந்து வன்னியத் தந்தைக்கும் கிறிஸ்தவ நாடார் அம்மைக்கும் பிறந்தவர். பெற்றோர் இருவரும் ஒரே பள்ளியில் பணி செய்த ஆசிரியர்கள். காதலித்து இணைந்தவர்கள். பிரிட்டோவின் தந்தைக்கு அது இரண்டாவது திருமணம். முதல் மனைவியும் குடும்பமும் இருந்தது.

இப்படியான திருமணங்களில் அந்த மனைவிக்குத்தான் பொறுப்புகள் அதிகம். கிட்டத்தட்ட ஒற்றை ஊதியத்தில் மகன் பிரிட்டோவையும் மகள்களையும் பிரிட்டோவின் அம்மாதான் பொருளாதார ரீதியாகச் சுமந்தார், படிக்க வைத்தார். இப்படியான குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு ஒரு identity crisis உண்டு. பிரிட்டோவை நான் சந்தித்த காலத்தில் அவர் கிறிஸ்தவரா இல்லை இந்து வன்னியரா… அப்போது அவருக்கு அது குறித்த தெளிவு இல்லை என்றே உணர்கிறேன்.

பிரிட்டோவை நான் முதன் முதலில் சந்தித்தது எனது தஞ்சை ‘அம்மாலயம் சந்து’ வீட்டில் ஒரு பத்து இளைஞர்கள் சூழ அவர் என் மாடி அறைக்கு வந்தார். கூட வந்தவர்களில் ஒருவரை உங்களுக்கு நிச்சயம் தெரியும். அவர் கவிஞர் மாலதி மைத்ரி. திருச்சியில் நடந்த ஒரு சினிமா தொடர்பான பயிற்சி முகாமில் கலந்து விட்டு இங்கு வந்திருந்தனர்.

அப்படித் தொடங்கியது எங்கள் அறிமுகம். அடுத்த சில ஆண்டுகளில் நான் பழி வாங்கல் இடமாற்றத்தில் மன்னார்குடி கல்லூரிக்குச் சென்றேன். அங்கிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில்தான் திருத்துறைப்பூண்டி. பிரிட்டோவும் நானும் சந்திக்கும் வாய்ப்புகள் அதிகமாயின. அவர் அப்போது அருகில் உள்ள ஏதோ ஒரு ஊரில் பள்ளி ஆசிரியராக இருந்தார்.

இரண்டு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன. அப்போது நாங்கள் பேரா. கல்யாணியுடன் இணைந்து தமிழ் வழிக் கல்விக்காக இயக்கங்கள் நடத்திக் கொண்டிருந்தோம். மன்னார்குடியில் நானும் என் அன்பு நெடுவாக்கோட்டை ராஜேந்திரனும் என் மாணவர்கள் தை.கந்தசாமி, தகட்டூர் ரவி, வழக்குரைஞர் சிவ.இராஜேந்திரன் எல்லோரும் சேர்ந்து ஒரு மிகப் பெரிய மாநாட்டை நடத்தினோம்.

திருத்துறைப்பூண்டியில் தமிழ் வழிக் கல்வி மாநாட்டை முன்னின்று நடத்தியது பிரிட்டோ.

கல்யாணியையும் அழைத்துகொண்டு பிரிட்டோவின் வீட்டுக்குச் சென்றது நினைவில் படிந்துள்ளது. திருத்துறைப்பூண்டி ECR சாலைக்குச் செல்லும் வழியில் கடைத்தெருவுக்குள் ஒரு சிறு ஆற்றின் மீதுள்ள மரத்தாலான குறும் பாலத்தைத் தாண்டி அக்கரையில் இருந்தது பிரிட்டோவின் வீடு. அன்று பார்த்ததுதான் பிரிட்டோவின் அப்பாவையும் அம்மாவையும்.

அதற்குப் பின் எத்தனையோ நிகழ்வுகள். அவற்றில் ஒன்று நிச்சயம் நண்பர் ராஜன் குறைக்கும் நினைவிருக்கும். ஆனந்த் பட்டவர்தன் முதலானோரின் புகழ்பெற்ற ஆவணப் படங்களை. தமிழகம் முழுவதும் திரையிட ராஜன் அப்போது ஏற்பாடு செய்திருந்தார். மன்னார்குடியில் என் மாணவர்களின் துணையோடு இப்போது இரு சிறு நீரகங்களையும் இழந்து வாழும் ராஜேந்திரனும் நானும் நடதினோம். மன்னை போன்ற சிறு நகரங்களில் அது ஒரு வித்தியாசமான அனுபவம்.

திருத்துறைப்பூண்டியில் அதைச் செய்தது பிரிட்டோ. 

பிரிட்டோ_0002

இரண்டு

அது தலித் எழுச்சி மேலுக்கு வந்து கொண்டிருந்த நேரம். முன் குறிப்பிட்ட மாணவர்கள் தவிர அருகிலுள்ள மதுக்கூரில் ஆசிரியர்களாக இருந்த உஞ்சை ராசன், காளிமுத்து இன்னும் விடுதிப் போராட்டத்தில் கலந்து கொண்ட தலித் மாணவர்கள் எல்லோரும் இணைந்துஅந்த எழுச்சியில் பல்வேறு வகைகளில் பங்கு பெற்றோம். குறிப்பான சாதி,மத அடையாளங்கள் இல்லாத பிரிட்டோ அதில் மிக எளிதாகப் பொருந்திப் போனார்.

அவ்வாறு எங்களுடன் கலந்தவர்களில் இரண்டு ஆசிரியைகளும் அடக்கம். ஒருவர் கவிஞர் இளம்பிறை; மற்றவர் சுதா. மணலி அப்துல் காதர், சிவகுருநாதன், பூங்குன்ற பாண்டியன், திருத்துறைப்பூண்டி பாண்டியன்… என்பதாக அந்த வட்டம் அகன்று கொண்டே சென்றது.

சுதா பிராமண குடும்பத்தில் பிறந்தவர். அத்தனை வசதியற்ற குடும்பம். எங்கள் கும்பலில் அவர் முழுமையாகப் பொருந்திப் போயிருந்தார். ஒரு முறை காக்காய்க் கறி சாப்பிடுபவர்கள் பற்றி ஒரு பேச்சு வந்தது. ஏன் சாப்பிட்டால் என்ன என்றார் ஒருவர். அதில் முழுமையாகப் பங்கேற்று அக் கருத்தை ஆதரித்தவர் சுதா.

பிரிட்டோவும் சுதாவும் இணைந்து வாழ்வது என முடிவு செய்தனர். இரண்டு குடும்பங்களிலும் சிறிது எதிர்ப்புகள் இருந்த போதிலும் அது பெரிய தடையாக அமையவில்லை. நான் ஒருமுறை பிரிடோவின் அம்மாவைச் சந்தித்து இது தொடர்பாகப் பேசியதாக நினைவு. வெகு விரைவில் அவர்களின் இணைவை இரண்டு குடும்பங்களுமே அங்கீகரித்தன.

திருமணத்தைப் பதிவு கூடச் செய்யக் கூடாது என இருவரும் கருத்துக் கொண்டிருந்தனர். புரட்சிகர உணர்வு அந்த அளவிற்குக் கரை புரண்டு ஓடிய காலம் அது. பின்னாளில் அவர்களுக்கிடையில் பிரச்சினைகள் உருவான போது இத்தகைய பதிவு இல்லாதது சில சிக்கல்களையும் ஏற்படுத்தின. வரட்டுக் கொளகைப் பற்று இப்படியான சிக்கல்களுக்குக் காரணம் என அவர்கள் மட்டுமல்ல நாங்கள் யாரும் அப்போது உணரவில்லை.

ஒரு எளிய முறையில் விருந்தளித்து சிறிய கொண்டாட்டங்களுடன் அந்த வாழ்க்கை இணைவு நிகழ்ச்சி நிறைவேறியது. நான்தான் பிரதம விருந்தினன்.

பிரிட்டோ-சுதா தம்பதியர் எளிதாக மாற்றல் பெற்று சென்னைக்கு வந்தனர். இடையில் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்திருந்தான். அவனுக்கு ‘எதார்த்’ எனப் பெயரிட்டனர்.

பிரிட்டோ ஒரு நல்ல படிப்பாளி. தீவிர சிறு பத்திரிகைகளின் வாசகர்.தமிழில் வந்துள்ள அனைத்து நாவல்கள், சிறுகதைகள், மொழி பெயர்ப்புகள், நடந்துள்ள விவாதங்கள் எல்லாம் அத்துபடி. திடீரென போன் செய்வார். “மார்க்ஸ், நீங்க அந்தக் கட்டுரையில் இப்படி எழுதி இருந்தீங்களே..” என நானே மறந்துபோன எதையாவது சொல்லுவார்.

எழுத்து தவிர சினிமாவிலும் பிரிட்டோவுக்கு ஈடுபாடு உண்டு. சினிமா தொடர்பான ஒரு நல்ல புத்தக சேகரமும் அவரிடம் உண்டு. திருச்சியில் பேரா.ஆல்பர்ட் நடத்திய சினிமா தொடர்பான கருத்தரங்குகள் அனைத்திலும் பங்குபெற்றவர். சினிமாவில் எதையாவது செய்ய வேண்டும் என்றுதான் சென்னைக்கு இடம் பெயர்ந்தார். ‘ஊட்டி’ என்றொரு படத்தில் உதவி இயக்குனராகப் பங்கு பெற்றதோடு அவரது அந்த முயற்சிகள் நின்று போயின.

அவர், பிரிட்டோ, மணலி அப்துல்காதர்,பாண்டியன் எல்லோரும் சேர்ந்து “கிழக்கு” என்றொரு சிற்றிதழ் தொடங்கினர். எல்லாச் சிற்றிதழ்களையும் போல சில இதழ்களோடு அது நின்றுபோனது. இது தவிர ‘தகழி’. ‘கவிதைக்காக’ என்று இரு இதழ்களையும் கூடத் தொடங்கிச் சில இதழ்கள் வந்தன.

அசோகமித்திரன் மேல் அவருக்குக் கூடுதலான பிரியம் உண்டு. அசோக மித்திரன் பற்றிய இரங்கல் குறிப்பில் திருத்துறைப்பூண்டி நண்பர்கள் ஒரு படைப்பு கேட்டு அசோகமித்திரனை அணுகியபோது அவர், “எதுக்குய்யா நீங்கள் எல்லாம் பத்திரிகை நடத்துறீங்க? பாப்பான்னு திட்டத்தானே…. போ போ..” என விரட்டி அடித்தார் எனக் குறிப்பிட்டிருந்தேனே. அது வேறு யாருமல்ல. பிரிட்டோதான் அப்படி விரட்டி அடிக்கப்பட்டவர்.

மூன்று

நான் 2000 த்தில் சென்னைக்கு இடம் பெயர்ந்தேன். பிரிட்டோ குடும்பத்தை அடிக்கடி சந்திப்புது குறைந்தது.

அடுத்த சில ஆண்டுகளில் நான் கேள்விப்பட்ட செய்திகள் கவலை அளித்தன. பிரிட்டோ அதிகம் குடிக்கத் துவங்கியுள்ளார் என்பது ஒன்று. மற்றது அவர் அதிகம் கடனாளியாகியுள்ளார் என்பது. மூன்றாவது அவருக்கும் சுதாவுக்கும் இடையில் பிரச்சினைகள் உருவாகியுள்ளன என்பது.

சுதா ஒரு கடின உழைப்பாளி. பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் வீடுகளுக்குச் சென்று இந்தி டியூஷன் எடுப்பார். அவரது முயற்சியில் சென்னையில் ஒரு வீடும் அவர்களுக்கு உரிமையாயிற்று.

என்னுடைய தலையீடுகள் அங்கு உருவாகியிருந்த பிரச்சினைகளைத் தணிப்பதில் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில் அடுத்து நான் அறிந்த இன்னொரு செய்தி என்னை இன்னும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

பிரிட்டோ தன்னுடன் பணி செய்யும் இன்னொரு ஆசிரியையுடன் தொடர்பில் இருப்பதும், அதனால் குடும்பத்தில் உருவான பிரச்சினையில் அவர் பிரிந்து சென்று தனியே தான் பணியாற்றும் பள்ளிக்கு அருகில் வசிக்கிறார் என்பதும்தான் அந்தச் செய்தி. பிரச்சினை முற்றி பணியாற்று ம் பள்ளியில் விசாரணை என்கிற அளவிற்கு வளர்ந்தது என்கிற நிலையில் நான் செய்வதற்கு ஒன்றும் இல்லாமற் போயிற்று. சுதாவும் நீங்கள் ஒன்றும் செய்வதற்கில்லை என்றார். பிரிட்டோ போனை எடுப்பதில்லை.

இடையில் திருத்துறைப் பூண்டியில் பிரிட்டோவின் தந்தை இறந்தபோது அவர் அதற்கும் போகவில்லை என அறிந்தேன்.

# # #

சில ஆண்டுகளுக்கு முன் பெரியார் திடலில் எனக்கு ஒரு விருது அளித்தார்கள். அந்தக் கூட்டத் திரளில் ஒரு தெரிந்த முகம். அது பிரிட்டோ. நிகழ்ச்சி முடிய இரவு மணி பத்தாகிவிட்டது. அவர் காத்திருந்தார். அவரோடு தினத்தந்தி குழுமத்தில் வேலை செய்த ஒரு பத்திரிகையாளரும் இருந்தார். என்னோடு வீட்டுக்கு வருகிறேன் என்றார். அவர்களை ஒரு ஆட்டோவில் ஏற்றிவிட்டு நான் என் பைக்கில் சென்றேன். பிரிட்டோவும் நண்பரும் வீட்டுக்கு வரும்போது அவரின் கையில் ஒரு பெரிய பை இருந்தது. பழங்கள், பிஸ்கட்கள் தவிர ஒரு முழு பாட்டில் பகார்டி ரம்மும். நிறையாப் பேசிக் கொண்டிருந்தோம். அரசியல் மற்றும் இலக்கியப் போக்குகள் குறித்து அவர் இப்போதும் ‘அப் டு டேட்’ ஆக இருந்தது விளங்கியது.

அன்று அவர் நிறையக் குடித்தார். ஜெயாவை அக்கா என்றுதான் அழைப்பார். போய் அக்காவுடன் உட்கார்ந்து கொண்டு அங்கும் நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

அன்று நள்ளிரவுக்குப் பின் அவர்களை ஒரு ஆட்டோவில் அனுப்பி வைத்தேன். அவர் போன பின் ஜெயா அவர் தன்னிடம் சொன்ன விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். பிரிட்டோ இப்போது மிகவும் ஆன்மீகவாதியாக மாறி விட்டதாகவும் ஒரு நல்ல கிறிஸ்தவனாக ஆகிவிட்டதாகவும் கூறினாராம். ஞாயிற்றுக் கிழமை தோறும் தான் சர்ச்சுக்குப் போகத் தவறுவதில்லை எனவும், கிறிஸ்துவில் தான் முழு நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் கூறினாராம்.

தொடர்ந்து முன்னைப் போல அவர் என்னிடம் இலக்கியம் அரசியல் முதலியவற்றை போனில் பேசத் தொடங்கினார். இரண்டு மூன்று ஆண்டுகளாக அவர் பள்ளி செல்வதில்லை எனவும், புதிதாகத் தொடர்பில் இருந்த ஆசிரியையிடமிருந்தும் பிரிந்து விட்டதாகவும், பள்ளி நிர்வாகத்தை எதிர்த்துத் தான் வழக்கு தொடுத்திருப்பதாகவும், சங்கரசுப்பு அவர்கள்தான் தன் வழக்குரைஞர் எனவும் சொன்னார். நான் ஒன்றும் சொல்ல வில்லை.

பின் ஒரு நாள் அவர் போன் செய்து விட்டு வீட்டுக்கு வந்தார். ஒரு பழைய கைலி, அழுக்குச் சட்டையுடன் முதலில் அவரை யாரோ என நினைத்து என்ன வேண்டும் எனக் கேட்டேன். தெரிந்தவுடன், “என்ன பிரிட்டோ இது இப்படி..” என்றேன். இதுதான் வசதியாக இருக்கிறது என்றார். அன்றும் அவரது பையில் ஒரு பாட்டில் பகார்டி இருந்தது. அவரது மெலிந்த உடலைப் பார்த்துவிட்டு மருத்துவ செக் அப் எல்லாம் செய்கிறீர்களா எனக் கேட்டபோது எல்லாம் செய்வதாகவும், நன்றாக இருப்பதாகவும் சொன்னார்.

அவர் அன்று சொன்ன செய்தி சற்று ஆறுதலாக இருந்தது. ஆறேழு ஆண்டுகளுக்குப் பின் இப்போது சுதாவின் வீட்டிற்கே சென்று விட்டாராம். மகன் யதார்த்தும் ஹைதராபாத்திலிருந்து இங்கு மாற்றலாகி வந்துவிட்டானாம்.

எனக்குச் சற்று மகிச்சியாக இருந்தது. அன்றும் ஜெயாவிடம் சென்று தான் சர்ச்சுக்குப் போவது குறித்தும், கிறிஸ்துவில் நம்பிக்கை வைப்பதில் உள்ள சுகம் குறித்தும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் புறப்பட்டார்.

அடுத்த நாள் நான் சுதாவிடம் என் மகிழ்ச்சியைப் பகிர்ந்த போது அவர் அத்தனை உற்சாகமாக இல்லை. பிரிட்டோவுக்கு ரொம்பவும் உடல்நிலை சரியில்லை எனவும் தான் மிகவும் முயற்சி செய்து, உயர் அதிகாரிகளை எல்லாம் சந்தித்து அவருக்கு மீண்டும் போஸ்டிங் வாங்கி இருப்பதாகவும், ஆனாலும் அவரால் பள்ளி சென்று வர இயலுமா எனத் தெரியவில்லை எனவும் கூறினார்.

கடைசியாக நான் பிரிட்டோவைச் சந்தித்தது இன்குலாப்பின் மரணத்தின் போது. நான் வரும் நேரம் கேட்டு காத்திருந்து இருவருமாக இன்குலாபுக்கு அஞ்சலி செலுத்தி மீண்டோம். அன்றும் அதே பழைய கைலி, சட்டை இவற்றோடுதான்….

கடந்த பத்து நாட்களாக அவர் பக்கலிலிருந்து செய்தி ஒன்றும் இல்லையே என நான் நினைத்துக் கொண்டிருக்கும்போதுதான் சுதாவிடமிருந்து அந்த மரணச் செய்தி.

# # #

சற்று முன் சுதா சொன்னது: இறுதி ஆண்டுகளில் அவர் தொடர்ந்து சர்ச்சுக்குப் போய் வந்தபோதும் எந்தப் பங்கிலும் அவர் பதிவு செய்யவில்லையாம். எனவே மாதா கோவில்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்லறைத் தோட்டங்களில் அவருக்கு இடம் கிடைக்கவில்லையாம். நல்ல வேளையாக அரசு இடு காட்டில் கிறிஸ்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒரு சிறு இடம் கிடைத்ததாம்.

போதாதா. அவரது இறுதி விருப்பப்படி சிலுவை அடையாளத்துடன் அவருக்கு ஒரு கல்லறை.

பிரிட்டோவின் கல்லறை மீது என்ன வாசகத்தைப் பொறிப்பது…

“ஒரு இலக்கியவாதி இங்கே உறங்குகிறான்” – என்றா? இல்லை ஒரு குடிகாரன் அல்லது பொறுப்பற்ற குடும்பத் தலைவன் அல்லது, ஒரு நல்ல நண்பன், இல்லை.. இயேசுவை இறுதியாக வந்தடைந்த ஒருவன்…..

இவற்றில் பிரிட்டோவை எப்படி அடையாளப்படுத்துவது?

மனிதர்களை அவ்வளவு எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறதா என்ன..

பிரிட்டோ அவரின் தந்தையை மிகவும் நேசித்தவர். என்னிடம் தன் தந்தையின் தொழில் நேர்மை குறித்துப் பலமுறை சொல்லியுள்ளார். பின் ஏன் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தப் போகவில்லை?

52 வயது… சாகிற வயதா?

ஒரு முறை குமுதம் இதழில் பிரிட்டோ- சுதா தம்பதி அட்டையில் இடம் பெற்றிருந்தனர். எந்த சட்டபூர்வமான பிணைப்பும் இல்லாமல் சேர்ந்து வாழும் தம்பதி என…

கண்பட்டுவிட்டதா?

என்ன நடந்தது?.