வரலாறு : நெ.து. சுந்தரவடிவேலுவின் தன்வரலாற்றிலிருந்து ஒரு குறிப்பு
அது 1930 களின் தொடக்க ஆண்டுகள். சுமார் 85 ஆண்டுகளுக்கு முன். நெதுசு அவர்கள் மாநிலக் கல்லூரியில் படிக்கிறார். புகழ் பெற்ற விக்டோரியா மாணவர் விடுதியில் தங்கியுள்ளார்.
அடுத்த 40 ஆண்டுகளுக்குப் பின் (1968 -70) நானும் எனது பட்டமேற்படிப்பை மாநிலக் கல்லூரியில்தான் படித்தேன். அப்போது எனக்கு உதவித் தொகை எல்லாம் இல்லாததால் நான் வெளியில் மேன்ஷன்களில் தங்கித்தான் படித்தேன். எனினும் விக்டோரியா ஹாஸ்டலில் எனது நண்பர்கள் இருந்தனர். குறிப்பாக அறந்தாங்கி பெரியசாமி, திட்டை பிச்சையன் முதலானோர். (இருவரும் இப்போது இல்லை). அடிக்கடி அந்த விடுதிக்குச் செல்வது உண்டு. அபோதெல்லாம் அது பெரும்பாலும் அடித்தளச் சமூக மாணவர்கள் தங்கிப் படிக்கும்விடுதி. இப்போதும் அப்படித்தான்.
ஆனால் சுந்தரவடிவேலு அங்கிருந்தபோது நிலைமை அப்படியில்லை. இரண்டு மெஸ்கள் அங்கு இயங்கியிருக்கின்றன. சைவம் ஒன்று. அசைவம் ஒன்று. சைவ மெஸ் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பார்ப்பன மாணவர்கள் மட்டும் அமர்ந்து சாப்பிடுவதற்கு ஒன்று. பார்ப்பனர் அல்லாதார் அமர்ந்து சாப்பிட ஒன்று. பார்ப்பன மாணவர்கள் பார்ப்பனரல்லாதாருடன் சேர்ந்து அமர்ந்து சாப்பிடுவதில்லை.
ஏதோ வ.வே.சு அய்யர் அவர்களின் சேரன்மாதேவி குருகுலம் பற்றி மட்டும் பேசுகிறோமே. அதே காலத்தில் தலைநகர் சென்னையிலும், Princes of Presidency எனச் சொல்லத்தக்க ஒரு ‘எலைட்’ (அப்போது) கல்லூரியில், (வெள்ளை) அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்கிய ஒரு கல்லூரியிலும் கூட அப்படித்தான் இருந்திருக்கிறது.
இதைப் பலரும் யோசிப்பதில்லை. நான் உட்பட.
இந்தக் காலகட்டத்தில் விக்டோரியா மாணவர் விடுதி சைவப் பகுதி மாணவர்களுக்கு சுந்தரவடிவேலுதான் தலைவர். சுயமரியாதைப் பின்னணி உள்ளவராக இருந்தபோதிலும் அவரும் இதை எதிர்த்தெல்லாம் போராடவில்லை. போராடும் சூழல் இல்லை. அப்போது சில பார்ப்பன மாணவர்கள் அவரை ஒரு மனுவுடன் அணுகுகின்றனர். அந்த மனுவில் இப்படி பார்ப்பன மாணவர்களும் பார்ப்பனரல்லாத மாணவர்களும் தனித்தனியே அமர்ந்து உண்ணும் வழமை முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் எனக் கையொப்பமிட்டிருந்தனர். உண்மையில் நெதுசு அதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். அந்தப் பக்கலிலிருந்து இப்படி ஒரு initiative தொடங்கப்பட்டுள்ளதைக் கண்டு மட்டுமல்ல; சைவப் பகுதி மாணவர் தலைவன் என்கிற வகையில் தான்தான் இதற்குக் காரணம் என விடுதி நிர்வாகம் தன் மீது நடவடிக்கை எடுத்து விடுமோ என்கிற அச்சந்தான் பிரதான காரணம்.
“எல்லோரும் கையெழுத்து இட்டுள்ளார்களா?” எனத் தயக்கத்துடன் கேட்கிறார் நெதுசு.
“இல்லை எட்டு (பார்ப்பன) மாணவர்கள் மட்டும் கையொப்பமிட மறுத்து விட்டார்கள். அவர்கள் மற்றவர்களோடு உட்கார்ந்து சாப்பிடமாட்டார்களாம்” என்று பதில் வருகிறது.
அப்போது விக்டோரியா விடுதியில் இருந்த பார்ப்பன மாணவர்களின் எண்ணிக்கை 88 என்கிறார் நெதுசு. மொத்த மாணவர்களின் எண்ணிக்கையை அவர் சொல்லவில்லை. எனவே பார்ப்பனர்களின் வீதத்தை கணக்கிட முடியவில்லை. எப்படியும் 88 என்பது மிக அதிக எண்ணிக்கைதான். இட ஒதுக்கீடு எல்லாம் இப்போது அளவிற்குச் செயற்படாத காலம். அப்போது அவர்கள்தானே படித்தார்கள்.
சரி, அது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்படிச் சிலர் சமபந்திக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் இந்தப் பிரச்சினைக்கும் பார்ப்பன மாணவர்களே தீர்வும் சொல்கின்றனர். அந்தத் தீர்வும் வ.வே.சு அய்யர் முந்திய பத்தாண்டுகளுக்கு முன்பு வைத்த வந்த தீர்வுதான்.
“எல்லோருடனும் உட்கார்ந்து உண்ண மறுக்கும் அந்த எட்டு பார்ப்பன மாணவர்களை மட்டும் அங்குள்ள சிறிய மெஸ்ஸில் உட்கார்ந்து சாப்பிடச் சொல்லலாம். மற்ற 80 பார்ப்பன மாணவர்களும் மற்றவர்களும் ஒன்றாக ஒரே பந்தியில் உட்கார்ந்து சாப்பிடலாம்”
என்பதுதான் அவர்கள் வைத்த தீர்வு.
வேறு வழியில்லை. தயக்கத்துடனும் அச்சத்துடனும் மாணவர் தலைவர் என்கிற முறையில் அவர்களை அழைத்துக் கொண்டு விடுதிக் காப்பாளர் (warden) பேரா. பிரங்கோ வைச் சந்திக்கின்றார் சுந்தரவடிவேலு.
அவர் கடுமையாகப் பேசி அந்தக் கோரிக்கையை மறுத்துவிடுகிறார். பார்ப்பனர்களும் பார்ப்பனரல்லாதோரும் தனித்தனியேதான் உட்கார்ந்து சாப்பிட வேண்டும் எனச் சொல்லி விடுகிறார். மாணவர்களின் சம பந்திக் கோரிக்கை முறியடிக்கப்படுகிறது.
அது மட்டுமல்ல, இதைத் தொடங்கி வைத்தது பார்ப்பன மானவர்களேயானாலும் சுந்தரவடிவேலு அச்சப்பட்டது போல பேரா.பிரங்கோ அவர்தான் இதற்குக் காரணம் என முடிவு கட்டுகிறார். சுந்தரவடிவேலு மிகவும் பயந்து போய விடுகிறார். ‘செய்யாத குற்றத்துக்குத் தண்டனையா?” என்று வேதனைப் படுகிறார். ஊருக்குச் சென்று பெற்றோரின் சம்மதத்தோடு அசைவ விடுதிக்குத் தன்னை மாற்றிக் கொள்கிறார். அதனூடாக சைவ மாணவ விடுதித் தலைமையைத் துறந்து தனக்கும் சமபந்தி உணவுப் போராட்டத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என நிறுவ முயல்கிறார். சுத்த சைவ தொண்டை மண்டல வேளாளரான அவருக்கு அசைவ உணவு விடுதியில் தொழிலாளிகளின் ஒத்துழைப்புடன் தனிக்கரண்டி, பாத்திரங்களில் அசைவம் அல்லாத உணவு வழங்கப்படுகிறது.
இப்படிப் போகிறது வரலாறு.
_________________________________________________
குறிப்புகள்
1. இப்படியான ஒரு சம பந்தி உணவுக் கோரிக்கை பார்ப்பனரல்லாத மாணவர்களிடமிருந்து அல்லாது பார்ப்பன மாணவர்களிடமிருந்து எழுந்தது ஒரு முக்கியமான அம்சம். இது ஆய்வு செய்யப்படல் வேண்டும். சேரன்மாதேவி குருகுலப் பிரச்சினையை ஏதோ தமிழ்நாட்டில் இருந்த ஒரு தீவில் நடந்த போராட்டம் என்பதைப்போல மட்டும் பார்க்காமல் அந்தக் காலகட்டத்தில் தமிழக மாணவர் விடுதிகளில், அரசு விடுதிகள் உட்பட என்ன நிலை இருந்தது என்பதையும் பார்க்க வேண்டும். தனது வாழ்வின் இறுதிக் காலத்தில் சாவர்கரின் வழியிலிருந்து விலகி காந்தியின் வழியைத் தேர்வு செய்தவரும், தமிழ்ச் சிறுகதைகள் மற்றும் இலக்கிய விமர்சன முன்னோடியும், திருக்குரான் தமிழ் மொழியாக்கம் ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் இருக்க வேண்டும் என எழுதியவருமான வ,வே.சு அய்யரின் பங்கு வரலாற்றுப் பின்னணியில் வைத்து மறு பரிசீலனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
2.சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் 1924-25 காலகட்டத்தில் தந்தை பெரியார், வரதராஜுலு நாயுடு போன்றோரால் நடத்தப்பதால் ஏற்பட்ட விழிப்புணர்வு இதற்கும் பின்னணியாக இருந்துள்ள நிலை ஒரு பக்கம் என்றால் இத்தனைக்குப் பின்னும் அரசு விடுதிகளிலும் கூட இந்நிலைமை தொடர்ந்துள்ளதையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டி உள்ளது.
3. இந்தக் காலகட்டத்தில் பச்சையப்பன் அறக்கட்டளை நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் முஸ்லிம்கள் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை. 1927ல் தமிழ்நாடு சுற்றுப் பயணம் மேற்கொண்ட காந்தி இதைக் கண்டித்தார். அவர் பள்ளிகளுக்குப் போகும்போதெல்லாம் இது குறித்து விசாரித்தார். மன்னார்குடி நேஷனல் பள்ளியில் அவர் இது பற்றி நிர்வாகத்தை விசாரித்தது குறித்து நான் எனது ‘காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்” நூலில் குறிப்பிட்டுள்ளேன். இந்தக் காலகட்டங்களில் காந்தி அடிகள் தமிழகச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதெல்லாம் அவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். அவருக்கு எதிராகச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. ஆலயக் கதவுகள் சாத்தப்பட்டன. இது குறித்துக் கண்டித்து அக்காலகட்ட சுய மரியாதை இயக்க ஏடுகளில் குத்தூசி குருசாமி விரிவாக எழுதியுள்ளார். காந்தியின் மீது தமிழ்ச் சனாதனிகளுக்கு இருந்த கோபம் அவர் தீண்டாமைக்குக் காரணமான பிரிவினரையே அதற்கு எதிராகக் களத்தில் இறக்கியதுதான். மதுரை வைத்தியநாத அய்யர், திருப்பூர் சிவசாமி அய்யர் முதலானோர் இதற்குச் சில எடுத்துக்காட்டுகள்.