இந்துத்துவவாதிகளின் அறிவியல் பாடம்: சோதனைக் குழாய்க் குழந்தைகளுக்கு இந்துத்துவ விளக்கம்

இந்துத்துவவாதிகள் வரலாற்றை எப்படிச் சொல்லித் தருவார்கள் என்கிற கதை நமக்குத் தெரிந்தத்தான். (பார்க்க: எனது ‘பாடநூல்களில் பாசிசம்’ என்கிற நூல். இதன் சில பகுதிகளை என் இணையப் பக்கத்திலும் காணலாம்) இந்துத்துவவாதிகளின் கையில் விஞ்ஞானப்பாடம் சிக்கினால் என்ன ஆகும் என்பதற்கு ஒரு சூப்பர் எடுத்துக்காட்டு இதோ.

கர்னாடக அரசு வெளியிட்டுள்ள 9ம் வகுப்பு விஞ்ஞானப் பாட நூலில் “பண்டைய இந்தியாவில் சோதனைக் குழாய்க் குழந்தைகள்” என்றொரு பாடம். 7500 ஆண்டுகளுக்கு முன்பே மகாபாரதத்தில் சோதனைக் குழாய்க் குழந்தைகள் பற்றிச் சொல்லியுள்ளதாம். துரோணர் அப்படிப் பிறந்தவர்தானாம், பக்கம் 209 ல் இது விலாவாரியாக விளக்கப்படுகிறது. தமிழில் : “…ஒருநாள் பரத்வாஜர் கங்கைக்குக் குளிக்கச் சென்றார். அங்கே கிரிதாச்சி என்ற அப்சரஸ் ஒருத்தியைக் கண்டார். காம வெறி மேலிட அவருக்கு விந்து பீறிட்டது. பரத்வாஜர் தன் விந்தை ஒரு மண் பானையில் ஏந்திக் கொண்டார். அதிலிருந்து பிறந்தவரே துரோணர்” (‘துரோண்’ என்றால் மண் பானை). இதற்கான விஞ்ஞான ஆதாரம் என்ன தெரியுமா, அவர் பெயர்தான்.

இது எப்டி இருக்கு..?

பதினான்கு வயதுப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் பாடம் இது. இந்த முண்டங்கள்தான் பள்ளிகளில் ‘செக்ஸ்’ பாடம் கூடாது, காதலர் தினம் கொண்டாடக் கூடாது என்றெல்லாம் முழக்குபவர்கள்.

அறிவியல் பாடத்திலேயே இத்தனை என்றால் மற்ற பாடங்களில் கேட்கவா வேண்டும். ஆறாம் வகுப்பு சமூகவியல் பாடத்தில் பக்கம் 54 முதல் 80 வரை சிறுபான்மையினருக்கும் தலித்களுக்கும் எச்சரிக்கை வழங்குவதாகவும், பிற்போக்குக் கருத்துக்களுக்கு வலு சேர்ப்பதாகவும் ‘பாடங்கள்’ உள்ளன. 11 வயதுப் பிள்ளைகள் படிக்கும் இப்பாட நூலில் “பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) தேவைதானா?’ என்றொரு குழு உரையாடல் வேறு (பக்.64).

ஆறாம் வகுப்பு சமூகவியல் பாடநூலில் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களை அறிமுகப்படுத்தும் பாடத்தின் தலைப்பு : “இந்தியாவும் புற உலகும்”. இவ்வாறு தலைப்பே இவ்விரு மதத்தினரையும் இந்தியாவிற்கு வெளியே உள்ளவர்களாகச் சித்திரிக்கின்றது எனக் கண்டித்துள்ளனர் இந்திய அளவில் மதிக்கத்தக்க குடிமக்களும் கல்வியாளர்களும். டெல்லியில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் 24 அறிஞர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ரொமிலா தப்பார், சோயா ஹஸன், கிருஷ்ணகுமார், சோம்னாத் சட்டர்ஜி (முன்னாள் சபாநாயகர்), கோபால கிருஷ்ண காந்தி, யு.ஆர். அனந்தமூர்த்தி, கிரிஷ் கர்னாட், நரேஷ் சந்திரா, ஜயதி கோஷ், நிவேதிதா மேனன், ரிது மேனன் முதலானோர் கையெழுத்திட்டவர்களில் சிலர்.

ஆறாம் வகுப்புக் கன்னடப் பாடநூலில், “….அரேபியர்கள் சிந்து மாகாணத்தை வென்றார்கள், இந்த மண்ணில் இஸ்லாமியத்தைப் பரப்பினார்கள். சுல்தான்களின் நீண்ட ஆட்சி இந்தியாவில் இஸ்லாம் வேகமாகப் பரவுவதற்குக் காரணமாக இருந்தது….” எனக் கூறப்பட்டுள்ளது (பக்.5). இஸ்லாம் அதற்கு முன்னதாகவே இங்கு பரவியது என்றும், வணிகம் அதில் முக்கிய பங்கு வகித்தது எனவும் கையெழுத்திட்டுள்ள அறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இந்தியாவில் முஸ்லிம்கள் அதிகம் செறிந்திருந்த பகுதி மேற்கு பஞ்சாபும் (இன்றைய பாக்), கிழக்கு வங்கமும்தான் (இன்றைய வங்க தேசம்). இந்த இரண்டு பகுதிகளிலும் வலிமையான முஸ்லிம் அரசுகள் கோலோச்சியதே இல்லை என்பதை நான் எனது கட்டுரைகளில் சுட்டிக் காட்டியுள்ளேன். திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பள்ளிவாயில் ஒன்று உள்ளது இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்களா அதைக் கட்டினார்கள்?

அதே பாடத்தில் தேவையில்லாது சிலுவைப் போர்கள் ஏக விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சீர்திருத்தக் கிறிஸ்தவம் குறித்த 9 ம் வகுப்புப் பாடம் ஒன்றில் கத்தோலிக்க மதத்தின் ‘ஒழுக்கக் கேடுகள்’ விரிவாக அலசப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 6 மற்றும் 9 ம் வகுப்புகளுக்கான “மத மற்றும் சமூக சீர்திருத்த இயக்கங்கள்” எனும் பாடங்களிலும், 5 மற்றும் 8 ம் வகுப்புப் பாட நூல்களில் உள்ள “பவுத்தம் மற்றும் சமண மதங்களின் பிறப்பு” என்னும் பாடங்களிலும் இங்குள்ள சாதிமுறை, தீண்டாமை, சாதி ஆதிக்கம், மூட நம்பிக்கைகள் குறித்துப் போகிற போக்கில் ஓரிரு சொற்களே உள்ளன.

“பாரதமும் புறவுலகும்” என்கிற பாடத்தில் செங்கிஸ் கான், தைமூர் ஆகியோரின் கொடுங்கோன்மைகள் விவரிக்கப்படுகின்றன. இந்தியாவுக்கு வெளியில் எல்லாமும் கொடூரமானதாகவும் தீயதாகவும் உள்ளன என்கிற எதிர்மறைப் பிம்பம் இதன்மூலம் பிஞ்சு உள்ளங்களில் விதைக்கப்படுகின்றன என்கின்றனர் கையெழுத்திட்டுள்ள அறிஞர்கள். மன்னர்களின் படை எடுப்புக்கள் அனைத்துமே இப்படித்தான் நடந்துள்ளன. கொள்ளை, பெண்கள் மீதான பாலியல் வன்முறை என்பதாகத்தானே இங்கு உள்நாட்டுப் போர்களும் நடந்துள்ளன. அவ்வளவு ஏன் நம்முடைய ராஜராஜன் இலங்கையின் மீது படை எடுத்து அநுராதபுரத்தையும் பொலனறுவையையும் தீக்கிரையாக்கி அவற்றிற்கு ‘ஜனநாதமங்கலம்’ எனத் தன் பெயரைச் சூட்டவில்லையா?

பிற பாடங்களும் ரஜபுத்திரர், ராஷ்டிரகூடர்கள், சாளுக்கியர், ஒய்சளர், சோழர் முதலான மைய நீரோட்ட மாபெரும் பரம்பரையினரின் புகழ்பாடலாகத்தான் உள்ளனவே தவிர, வரலாற்றுருவாக்கத்தில் அடித்தள மக்களின் பங்கு முற்றாகப் புறக்கணிக்கப் பட்டுள்ளதையும் அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்,

பக்தி இயக்கம் குறித்து 6 ம் வகுப்பில் ஒரு பாடம். உண்மைகள் பெரிய அளவில் இதில் திரிக்கப்பட்டுள்ளன. “பக்தி இயக்கத்தவர்களில் பலர் (எ.கா பாபா புதன்) தாத்தத்ரேயரை” வழிபட்டனராம். இது தவறு என்பதை அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளோர் சுட்டிக் காட்டியுள்ளனர். “யோகா, வேதாந்தம் ஆகியவற்றின் செல்வாகிற்கு ஆட்பட்டிருந்தது சுஃபி இயக்கம், புதன் – அல் – தின் கிருஷ்ணரைப் புகழ்ந்து பாடினார்… இத்தகைய நடைமுறைகள் முஸ்லிம்களால் தடுக்கப்பட்டவை…” என்பதாக சுஃபி இயக்கத்தை ஏதோ இந்துப் பாரம்பரியத்தின் கிளை போல இந்தப் பாடம் மாணவர் நெஞ்சில் உண்மைகளைத் திரிக்கிறது. இப்படியான திரிபுகளின் ஊடாக ஒரு மகத்தான இயக்கத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்கின்றனர் அறிஞர் பெருமக்கள்.

வரலாற்றறிஞர்கள், இடதுசாரிகள், காந்தியர்கள், மதச்சார்பற்றோர் இணைந்து வெளியிட்டுள்ள இவ் அறிக்கை வரவேற்கப்பட வேண்டிய ஒன்று,

2000 -ங்களின் தொடக்கத்தில், பா.ஜ.க தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இவ்வாறு வரலாற்றுப் பாட நூல்களில் திருத்தங்கள் மேற்கொண்டபோதும் இத்தகையோரே முன்னணியில் நின்று அதை முறியடித்தனர். தமிழகத்தில் அந்த இயக்கத்தில் திராவிட இயக்கத்தவரும் பங்குபெற்றனர். முன்னாள் துணைவேந்தர்கள் சாதிக், ஜெகதீசன், வசந்தி தேவி மற்றும் சி.பி.ஐ. சி.பி.எம், பெரியார் திராவிடர் கழகக் கட்சிப் பிரதிநிதிகள் அதில் பங்குபெற்றனர். தமிழகத்தின் பல பகுதிகளில் கூட்டங்கள் நடத்தினோம். அப்போது சென்னையில் வெளியிடபட்ட நூல்தான் இக் கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டது. தி.க தலைவர் வீரமணி, பேரா. ஜவாஹிருல்லாஹ், எஸ்ரா சற்குணம் அடிகளார், பீட்டர் அல்போன்ஸ், கல்லூரிப் பேராசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

டெல்லியிலிருந்து வந்திருந்த வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் அர்ஜுன் தேவ், “தமிழ்நாட்டில் வந்து பார்க்கும்போது இது குறித்து ஒரு பிரக்ஞையை ஏற்படுத்துவதிலும்,கருத்துருவாக்கும் முயற்சியிலும் செய்யபட்டுள்ள பணிகள் வியப்பை ஏற்படுத்துகின்றன.” என மனதாரப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது (இந்துத்துவத்தின் இருள்வெளிகள், பக். 106).

Tail Piece : ஓகோ..! துரோணர் இப்டிப் பொறந்தவர்தானா? அவர்தாங்க, நம்ம ஏகலைவன் கட்டை விரலைக் ‘கட்’ பண்ணவரு…