மணிமேகலை 7 -பவுத்தம் முன்வைக்கும் பிறவி அறுத்தல் கோட்பாடு

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 10   

(தீராநதி, நவம்பர் 2017)              

புத்தர் தோன்றியதும் புத்தம் அரும்பியதும் இந்தியத் துணைக் கண்டத்தின் வடக்குப் பகுதியில்தான். புத்தர் அவதரித்த லும்பினி இன்று நேபாளத்தில் உள்ள கபிலவஸ்து மாவட்டத்தில் உள்ளது. புத்தர் நிர்வாணம் அடைந்த புத்த கயா நேபாளத்திற்குக் கீழ் அமைந்துள்ள பீஹார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டத்தில் உள்ளது. அவர் பரிநிர்வாணம் அடைந்த குஷிநாரா உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூரிலிருந்து சுமார் ஐம்பது கி.மீ தொலைவில் நேபாள எல்லையில் உள்ளது.

எனினும் அடுத்த சுமார் மூன்று நூற்றாண்டுகளில் மாமன்னர் அசோகரது காலத்தில் பவுத்தம் இலங்கை முதலான தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் தடம் பதிக்கத் தொடங்கி இருந்தது. மணிமேகலைக் காப்பியம் புத்தருக்குச் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றியது. புகார், வஞ்சி, காஞ்சி எனும் தமிழகத்தின் அன்றைய மூன்று முக்கிய நகரங்கள் தவிர மணிபல்லவம், சாவகம் முதலான இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியேயும்  பௌத்தம் செழித்திருந்த பல நிலப்பரப்புகளையும் மணிமேகலை நம் முன் விரிக்கிறது. மணிமேகலையில் காட்சிப்படுத்தப்படும் மணிபல்லவத் தீவு இன்றைய இலங்கையின் நயினாத்தீவுதான் என்றொரு கருத்துண்டு. சாவகம் என்பது இன்றைய ஜாவா என்பதில் ஐயமில்லை. தென்னிந்தியா, இலங்கை, தாய்லந்த், கம்போடியா, லாவோஸ், ஜாவா, சுமத்ரா (இந்தோனேஷியா) என ஒரு தென்கிழக்காசிய பவுத்த வெளி ஒன்று அன்று உருவாகியிருந்தது என ஆனே மோனியஸ் போன்ற இன்றைய ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். மணிமேகலையில் முக்கிய நகரங்களில் ஒன்றாக வெளிப்படும் காஞ்சிபுரத்திற்கும் சாவகத்திற்கும் இடையில் அடுத்த பல நூற்றாண்டுகள் வரை நெருக்கமான தொடர்பும் இருந்துள்ளது. பதினான்காம் நூற்றாண்டு ஜாவா காவியமான ‘நாகரக்ருதாகம’ எனும் நூலில் ஆறு பவுத்த விகாரைகள் அமைந்த “காஞ்சிபுரி” யிலிருந்து வந்த ஸ்ரீபுத்தாதித்யா எனும் பிக்கு எழுதிய கவிதைகள் பற்றிய குறிப்புகள் உள்ளதாக மோனியஸ் கூறுகிறார்.

இப்படியான ஒரு அகன்ற தெனிந்திய – தென் கிழக்காசிய இலக்கிய – பண்பாட்டு வெளி ஒன்று குறித்து தனக்கும் முன்பாக சில்வேய்ன் லெவி பதிவு செய்துள்ளதையும் அவர் குறிப்பிடுகிறார். இந்த நிலப்பகுதிகள் அனைத்தையும் இப்படி இணைக்கும் பண்பாட்டுக் குறியீடாக பவுத்த கடவுளர்களில் ஒன்றான மணிமேகலா தெய்வத்தை லெவி சுட்டிக் காட்டுகிறார். “தமிழ்நாடு, சிலோன், பர்மா, சயாம், கம்போடியா முதலான நாடுகளில் மணிமேகலா தெய்வம் அறியப்பட்டிருந்ததற்கு நிறைய சான்றுகள் உள்ளன” எனக் கூறும் லெவி “இந்த நில, நீர் பரப்புகளுக்கு அப்பால் அதற்கான சான்றுகள் ஏதும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை” என்றும் கூறுகிறார்.

கடல் கடந்து வணிகம் செய்வோரின் கடற்பயணங்களில் அவர்களைக் காப்பவராக வணிகர்களால் வணங்கப்பட்டதுதான் மணிமேகலா தெய்வம். பவுத்த புனிதத் தொகுப்புகளான மகாஜனக மற்றும் சங்க ஜாதகங்களிலும் எதிர்கால புத்தர் ஒருவர் கப்பல் கவிழ்ந்து கடலில் தத்தளித்தபோது அவரைக் காப்பாற்றிக் கரை சேர்த்தது என மணிமேகலா தெய்வம் குறிப்பிடப் படுகிறது. தமிழின் இரட்டைக் காப்பியங்களான சிலம்பு, மணி இரண்டிலும் அப்படிக் காப்பாறப்பட்ட எதிர்கால புத்தர் ஒருவர் கோவலனின் மூதாதையர்களில் ஒருவராக அடையாளப்படுத்தப்படுவார். மாதவிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்ததை அறிந்த கோவலன், “எம் குலதெய்வப் பெயர் ஈங்கு இடுக” எனக் கூற, மணிமேகலைக்கு அத் தெய்வத்தின் பெயர் இடப்பட்டது என்பது இளங்கோவடிகள் கூற்று (அடைக்கலக் காதை). “பரப்பு நீர்ப் பவ்வம் பலர் தொழக் காப்போள்’ என்றும் ‘திரை இரும் பௌவத்துத் தெய்வம் ஒன்று உண்டு’ எனவும் மணிமேகலாவை ஒரு கடற் தெய்வமாக சாத்தனாரும் குறிப்பார். பாலி இலக்கியங்களில் இந்தக் கதையாடல் சற்று வேறுபட்டு இருக்கும். மணிமேகலா தெய்வம் தனது காவற் பொறுப்பைச் சற்று மறந்திருந்ததால் கப்பல் கவிழ்ந்து ஏழு நாள் கழித்தே எதிர்காலப் புனிதரைக் காப்பாற்ற நேர்ந்தது என்று அவற்றில் கூறப்படும். ‘புத்சாரணா’ ‘சதர்மாலங்காரா’ முதலான சிங்கள நூல்களிலும் மணிமேகலா தெய்வம் போற்றப்படும். ஜாவாவின் (அதாவது சாவகத்தின்) தென்மேற்கு முனையில் உள்ள ‘பெலாபுஹான் ராட்டு’ எனும் கடற்கரைச் சிற்றூர் மணிமேகலா தெய்வம் தங்கி இளைப்பாறும் இடமாக இன்றும் கருதப்படுகிறது.

அந்த மணிமேகலா தெய்வம்தான் நம் காப்பிய நாயகி மணிமேகலையை உரிய ஏது நிகழ்ச்சிகளுடன் துறவு நோக்கி ஆற்றுப்படுத்துபவராக இங்கு வெளிப்படுகிறார். அந்தத் தெய்வம் உதயகுமாரனிடமிருந்து மணிமேகலையைக் காப்பாற்றி அவளறியாமல் அவளைத் தூக்கிக்கொண்டு வான்வழி பறந்து சென்று, புகாருக்கு தெற்காக முப்பது யோசனைத் தூரத்தில் வைத்துத் திரும்பும். அத்தோடு நில்லாமல், “விடியட்டும் அவளை என் கையில் கொணர்வேன்” என உறக்கம் வராமல் கிடந்த உதயகுமாரன் முன் தோன்றி அரசனின் கடமையை நினைவூட்டி,”தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த அவத்திறம் ஒழிக” என எச்சரித்து அகலும்.

அடுத்து உவவனம் செல்லும் அத் தெய்வம் அங்கு களைத்து உறங்கும் சுதமதியை எழுப்பி இந்திரவிழா காணப் புகாருக்கு வந்த தான் வேறு பொறுப்புக்களை மெற்கொள்ள வேண்டிய தேவை வந்ததை விளக்கும். “மணிமேகலையை புத்த தேவனின் அற வழியில் ஆற்றுப்படுவதற்கான ‘ஏது’ முதிர்ந்துளது. அதனால் அவளை மணிபல்லவத் தீவில் கொண்டு வைத்துள்ளேன். அங்கவள் முற்பிறப்புணர்ந்து இன்றிலிருந்து ஏழாம் நாள் திரும்புவாள். அன்று இங்கு நிகழ இருக்கும் ‘ஏதுக்கள்’ பல உள்ளன” என்றுரைத்து நீங்கும்.

உவவனத்திலிருந்து சுதமதி மாதவியின் இல்லம் நோக்கிச் செல்லும் வழியில் புகார் நகரின் அந்த இரவு நேரத்தை ஒரு பெருங் காப்பியத்திற்குரிய அழகுடன் சாத்தனார் விரித்துரைப்பார் (‘துயிலெழுப்பிய காதை).

அந்த இரவிலும் அந் நகரில் ஆடல் மங்கையர் தம் நடன அரங்குகளில் நாட்டியம் பயின்று கொண்டிருப்பர்; பல்வேறு இசைக்கருவிகள் முழங்கிக் கொண்டிருக்கும்; பரத்தை வீடு சென்று திரும்பிய கணவனிடம் ஊடி அகன்று படுத்திருந்த மனையாள் காமம் மீதூற கோபம் மறைந்து அவனைக் கட்டி அணைவாள்; சிறு தேர் இழுத்து தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறார்களை அவர்தம் செவிலித் தாய்மார்கள் படுக்கைக்கு அழைத்துச் சென்று வாசனைப் புகை காட்டி உறங்க வைப்பர். அடுத்து அந்தப் பெரு நகரில் நடுச்சாமத்திலும் ஒலிக்கும் பல்வேறு ஒலிகள் குறித்தும் சுமார் இருபத்திரண்டு வரிகளில் மிக விரிவாக காப்பியச் சுவையோடு எடுத்துரைக்கப்படும். அதன் பின் சுதமதி சக்கரவாளக் கோட்டம் தாண்டி ஊரம்பலத்தே சற்று இளைப்பாறுவாள். அவள்முன் தோன்றிய கந்திற்பாவை மாதவி, சுதமதி, மணிமேகலை ஆகிய மூவரும் சகோதரிகளாக  முறையே தாரை, வீரை, இலக்குமி என்கிற பெயர்களில் ரவிவர்மன் என்பானின் மகள்களாகப் பிறந்த முற்பிறப்பு வரலாற்றை உரைக்கும்.  அடுத்து சுமார் பதினாறு வரிகளில் புகார் நகரில் இரவு அடங்கி வைகறை விடியும் காட்சி அமையும். இறுதியாக மணிமேகலை இன்னும் வராததால் கவலையுற்றுக் கிடக்கும் மாதவியை அடைந்து நடந்த கதைகளை விளக்குவாள் சுதமதி.

இவற்றை இங்கு இத்தனை விரிவாகச் சொன்னதற்குக் காரணமுண்டு. இங்கே புகார் நகரம் கண்விழிக்கும் அதே நேரத்தில் அங்கே முப்பது காத தூரத்தில் அந்தச் சிறுபெண் மணிமேகலையும் கண் விழிப்பாள். அது இதனின்றும் முற்றிலும் வேறுபட்ட பின்புலம். புகாரில் அது ஒரு விழாக் காலம்; அது ஒரு பெருநகர், தலை நகர், அங்கு காண்பவை ஆடல், பாடல், கொண்டாட்டங்கள், படுக்கையில் முயங்கிக் கிடக்கும் காதலர்கள், சிறு தேர் உருட்டி விளையாடும் சிறார்கள்.. மணிபல்லவத்திலோ நாம் காண்பது முற்றிலும் வேறுபட்ட காட்சிகள். நில அமைப்பு மட்டுமல்ல அனைத்தும் வேறுபட்ட ஒரு சூழலில் கண் விழிக்கிறாள் மணிமேகலை. இந்தப் புதிய சூழல் உணர்த்துவதும், அது காட்டும் வழித்தடமும்தான் இனி அவள் வாழ்வாகப் போகிறது. அவளுக்குக் காட்டப்படும் இந்தப் புதியவாழ்வின் பொறுப்புகளை, அதன் கடமைகளை, இவற்றின் பின்புலமாக இருக்கும் உன்னதங்களை அவள் இனிதான் உணரப் போகிறாள். இந்த முரண்பட்ட இரு சூழல்களை அருகருகே அமைப்பதன் மூலம் (juxtapose) வாசிக்கும் நம்முள்ளும் எல்லாமும் வெறும் தகவல்களாகவன்றி ஒரு அனுபவமாக மலர்ந்து விகசிக்கின்றன.

மணிமேகலை விழித்தெழும் இடம் ஒரு கடற்கரை. அலைகள் சூழ்ந்த அந்தத் தீவில் யாரும் இல்லை. முத்து விளையும் வயல்கள், சிதறிக் கிடக்கும் செம்பவளத் துண்டுகள், ஆங்காங்கு தென்படும் மணற் குன்றுகள், கடல் அலைகள் உருட்டி வந்து சேர்த்துள்ள மரத் துண்டுகள், தனித்து நிற்கும் ஒரு புலிநகக் கொன்றை மரம், ஒரு மலர் சூழ்ந்த பொய்கை என இவைதான் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிகின்றன. சுற்றிலும் அலைகளால் முற்றுகை இடப்பட்ட ஒரு பாடிவீட்டுக்குள் அடை பட்டிருப்பது போன்று அவள் உணர்கிறாள், இதுவரை கண்டறியாத, மனித வாடையே இல்லாத அந்தச் சூழலில் ஒரு மர நிழலில் கண்விழித்தெழும் ஒரு சிறு பெண்ணின் உணர்வு எப்படி இருக்கும். அவள் எழுந்த இடம் அவள் உறங்கத் தொடங்கிய உவவனம் இல்லை. உறங்குமுன் அருகிருந்த சுதமதி எங்கே? மலர் கொய்யச் சென்ற நான் இன்னமும் வாராததைக் கண்டு அன்னை மாதவி எத்தனை துயருறுவாள்?

இந்தச் சிந்தனைகள் அலைக்கழிக்க அவள் வாய்விட்டு “ஐயாவோ” எனக் கூவி அழத் தொடங்கினாள். அப்போது நிகழ்ந்தது அந்த அற்புதம். அவள்முன் எழுந்தது புத்த தேவனின் தர்மாசனம். மூன்று முழ அளவிற்கு நிலத்திற்கு மேலுயர்ந்து, நான்கு முழ அளவிற்கு அகன்று வெளிப்பட்டது ஒளி வீசும் அந்த தர்ம பீடிகை. தன்னை மறந்து கைதொழுதாள் மணிமேகலை. கண்களில் திரண்ட முத்துக்கள் அவளது முலைகள் மீது உதிர்ந்தன. இடம் வலமாக புத்த தேவன் அமர்ந்த அந்தத் தர்மாசனத்தைச் சுற்றி வந்து வணங்கினாள். மின்னலொன்று வானிலிருந்து நழுவி மண்ணில் சரிந்ததுபோல வீழ்ந்து வணங்கினாள்.

அப்படி வீழ்ந்து அவள் எழுந்தபோது அவள் தன் முற்பிறப்பு உணர்ந்தவளாய் வெளிப்பட்டாள். மாதவி, சுதமதி, மணிமேகலை மூவரும் முற்பிறவியில் சகோதரிகள் என அவளுக்கும் உணர்த்தப்பட்டது. இலக்குமி என முன்பிறவியில் அறியப்பட்ட மணிமேகலையின் கணவன் இராகுலன் திருமணம் ஆன எட்டாம் நாள் பார்வையாலேயே கொல்லும் திட்டிவிடப் பாம்பு தீண்டி இறந்தான். கணவனோடு அழற் பாய்ந்து உயிர்விட்டாள் இலக்குமி.

இலக்குமி (அதாவது முற்பிறவி மணிமேகலை), அப்பிறவியில் பிறவிப் பெருங்கடல் அறுக்கும் பேறு பெற்றிருக்கவில்லை. அதற்குரிய ‘ஏது நிகழ்ச்சி’ ஏதும் அப்போது முதிரவில்லை. “எனவே நீ அடுத்த பிறவி ஒன்றை எடுப்பாய். காவிரிப்பூம்பட்டினத்தில் பிறப்பாய். உனக்கொரு பெருந்துயர் வரும். மணிமேகலா தெய்வம் உன்னை எடுத்து வந்து இந்தத் தீவில் வைக்கும். அங்கு நீ பிறவிப்பிணியிலிருந்து விடுவிக்கும் மருத்துவனான புத்தன் அமர்ந்து அறம் உரைத்த ஆசனத்தின் காட்சி அருளப் பெறுவாய்..” என மணிமேகலைக்கு முற்பிறவி வரலாறு உணர்த்தப்பட்டது.

மணிமேகலைக் காப்பியத்தில் பதினாறு கிளைக் கதைகள் பதிக்கப்பட்டுள்ளன, அவை ஒவ்வொன்றும் ஒரு புத்த நெறியை விளக்குமாறு அமைந்துள்ளன என்றேன்.  இந்திய மதங்கள் எல்லாவற்றிலும் இந்த கர்ம வினைக் கோட்பாடு, அதாவது இறப்புக்குப் பின் மீண்டும் உயிர்கள் மறுபிறப்பு எடுப்பது என்பது ஒவ்வொரு மதத்திற்கும் உரிய தனித்துவங்களுடனும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இத்தொடரில் முதலாவதாக கோதமை அவள் மகன் சார்ங்கலன் ஆகியோரின் கதையைப் பார்த்தோம். பேயைக் கண்ட அதிர்ச்சியில் மரணமுற்ற மகனை உயிர்ப்பித்துத் தருமாறு சம்பாபதி என்னும் தெய்வத்திடம் வேண்டி அழுவாள் கோதமை. தன்னுயிரை எடுத்துக் கொண்டு அவனது உயிரைத் தருமாறு அவள் கோருவாள். ஒரு உயிர் போனது என்றால் போனதுதான். இப்பிறவியில் செய்த நல்வினை, தீவினை சார்ந்து அது இன்னொரு பிறவி எடுத்தே ஆக வேண்டும். இது விதி. எம்மைப் போன்ற தெய்வங்கள் நினைத்தாலும் அதை மாற்ற இயலாது என ஆற்றல் மிகு தெய்வமான சம்பாபதி சொல்லி அகலும்.

பிறவிப் பெருங்கடலைக் கடப்பதற்கான ஏதுக்கள் நிகழும் தகுதி பெற்று அதன் வழிச் செல்லும்வரை ஒருவர் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க வேண்டும் என்பது ஒரு பவுத்த நம்பிக்கை. மணிமேகலையின் முற்பிறவிக் கதையைச் சொல்லி வரும்போதும் சாத்தனார் அப்பிறவியில் பிறப்பறுத்தற்குரிய ஏதுக்கள் நிகழாததால் இப்போது மணிமேகலையாய் மறு பிறவி எடுக்க வேண்டியதாயிற்று என்பதை வற்புத்துவது கவனிக்கத் தக்கது.

தன் முற்பிறவி உணர்ந்த மணிமேகலை அப்பிறவியில் தன் கணவனாக அமைந்த இராகுலன் இப்பிறவியில் எங்குளன் எனக் கேட்கும்போது மணிமேகலா தெய்வம் தோன்றி  இப்பிறவியில் அவன்தான் உதயகுமாரன் எனத் தெளிவுறுத்தும். அது மட்டுமல்ல முற்பிறவியில்  மணிமேகலை விண்ணிலிருந்து இறங்கிய சாது சக்கரன் என்கிற முனிவனுக்கு அமுதூட்டிய நல்லறத்தின் பயனாகப் பிறவி அறுக்கும் பேறுடையதாக இப்பிறவி அவளுக்கு வாய்த்துள்ளது என்பதையும் விளக்கும். “இப்பிறவியில் உதயகுமாரன்பால் உன் மனம் சென்றால் உனக்கு வாய்த்த இந்த நற்பேற்றை நீ இழந்தவள் ஆவாய். மிக உயர்ந்த நெல் வித்தொன்று வெங்களர் நிலத்தில் வீழ்ந்து பாழாவதற்கொப்ப அது முடியும். நீ அறத்தின் வித்து. நீ அப்படிப் பாழாகக் கூடாது. நீ நல்வழியில் உறுதிப்பட வேண்டுமென்றுதான் இங்கு கொணர்ந்தேன்” என தெய்வம் அவளுக்கு விளக்கும்.

“முற்பிறவியில் உன் தமக்கையர் இருவரும் ஒரே ஆடவனை மணந்தனர். அவர்கள் அப்பிறவியில் புத்த தேவனின் பாதங்கள் படிந்த பாதபங்கய மலையத் தொழும் பாக்கியம் பெற்றதனால் இப்போது மாதவியாகவும், சுதமதியாகவும் பிறந்து உன்னோடும் வாழும் பேறு பெற்றனர்” என்பதையும் சொல்லி முடிக்கும்.

 

(அடுத்த இதழில் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே எனும் பவுத்த அறம் மணிமேகலையில் வெளிப்படுதல்)