மோடி – அமித்ஷா தலைமையிலான பா.ஜ.க அரசு அதன் “செல்லத் திட்டங்களில்” ஒன்றான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. அவர்கள் வெற்றி அடைந்துள்ளார்கள் என்றால் யார் தோற்றுள்ளது?
வேறு யாரும் இல்லை. நமது அரசியல் சட்டம்தான் தன் முகத்தில் ரத்தம் ஒழுக ஒழுக அடித்து வீழ்த்தப்படும் நிலையை எட்டியுள்ளது. 1950 ஜனவரி 26ல் நிறைவேற்றப்பட்ட நமது அரசியல் சட்டம் உலகின் பல ஜனநாயக நாடுகளில் உள்ள அரசியல் சட்டங்களைக் காட்டிலும் பல மடங்கு சிறப்பானது என்பதை அரசியல் சட்ட வல்லுனர்கள் குறிப்பிடுவர். இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐ.நா அவை உருவாக்கப்பட்டு போர்க்கால மனித உரிமை மீறல்களை எல்லாம் கணக்கில் கொண்டு மனித உரிமைப் பிரகடனம் உருவான பின்னணியில் அமைக்கப்பட்டதுதான் நம் அரசியல் சட்ட அவை. சிவில் உரிமைகள், மதம், இனம் தொடர்பான உரிமைகள் என எல்லாம் வரையறுக்கப்பட்டுக் கொண்டிருந்த அந்தக் கால கட்டத்தில் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட நம் அரசியல் சட்டம் இந்த உலகளாவிய பிரகடனங்களில் உள்ள நல்ல கூறுகளை எல்லாம் உள்வாங்கி இயற்றப்பட்ட ஒன்று.
ஆனால் பா.ஜ.கவும் அதைப் பின்னின்று இயக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இந்த அரசியல் சட்டத்தை எந்நாளும் ஏற்றுக் கொண்டதில்லை. 1999ல் முதன் முதலாக வாஜ்பேயீ தலைமையில் பா.ஜ.க கூட்டணி அரசு உருவானபோது அவர்கள் மேற்கொண்ட முதல் நடவடிக்கைகளில் ஒன்று நீதிபதி வெங்கடாசலையா தலைமையில் நமது அரசியல் சட்டம் பற்றி ஆய்வு செய்ய ஒரு குழு அமைத்ததுதான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அப்போது அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் செயல்பட்டுக் கொண்டிருந்த சங்கப் பரிவார அமைப்புகளில் ஒன்று ஸ்லேட்டன் தீவில் வாஜ்பேயிக்கு வரவேற்பு அளித்தது. அந்த நிகழ்வில் அவர், “இன்று நமக்கு நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை கிடையாது. ஆனால் ஒரு காலத்தில் நாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவோம். அப்போது நாம் நமது கனவு இந்தியாவை உருவாக்குவோம்” என முழங்கியதை யாரும் மறந்துவிட முடியாது.
2014 தேர்தலில் பா.ஜ.க மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறாவிடாலும் பெரும்பான்மைத் தொகுதிகளில் வென்றது, அப்போதைய தேர்தல் அறிக்கையிலேயே இந்துக்களுக்கு மட்டும் இங்கு குடியுரிமை வழங்குவது பற்றிக் கூறப்பட்டது. இந்தியா பல மதத்தினரும் வசிக்கும் மதச்சார்பற்ற நாடு.. இங்கு இப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டும் குடியுரிமை வழங்குவது சாத்தியமில்லை. ஆனாலும் அவர்கள் அறிக்கையில் இதைக் குறிப்பிட்டார்கள்.
இப்படி ஒரு மதத்தினருக்கு மட்டும் குடியுரிமை அளிப்பது என்கிற கருத்தை அவர்கள் யூத இனவாத அரசான இஸ்ரேலின் ‘அலியாஹ்’ கொள்கையிலிருந்து எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.., உலகின் எந்த நாடுகளில் இருந்தும் வருகிற யூதர்களுக்கு குடியுரிமை அளிக்கப்படும் என்பதுதான் இஸ்ரேலின் ‘அலியாஹ்’ சட்டம். அதுபோல உலகின் எந்த நாடுகளிலிருந்தும் வரும் இந்துக்களுக்கு மட்டும் இங்கு குடியுரிமை அளிக்கப்படும் என பா.ஜ.க தன் தேர்தல் அறிக்கையில் அறிவித்தது.
ஆனால் இந்திய அரசியல் சட்டத்தில் அதற்கு இடமில்லை. அதோடு உச்சநீதிமன்றம் புகழ்பெற்ற கேசவானந்த பாரதி வழக்கில் அரசியல் சட்ட அடிப்படைகளைப் பெரும்பான்மையின் அடிப்படையில் மாற்றிவிட இயலாது என்பதை உறுதி செய்துள்ளது. அதனால் இன்று கூட்டணிக் கட்சிகளின் உதவியோடு பா.ஜ.க அறுதிப் பெரும்பானமையைப் பெற்றிருந்தபோதும் இந்தியாவை பெரும்பான்மை மத அடிப்படையில் இந்து நாடாக அறிவிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் இப்படித் தம் அரசியல் கொள்கைகளை நசுக்கி நசுக்கிக் கொஞ்சம் கொஞ்சமாகச் செயல்படுத்தி வருகின்றனர்.
2014ல் பா.ஜ.க ஆட்சி அமைக்கப்பட்டபோது அசாம் மாநிலத்தில் “குடியுரிமைப் பதிவேடு” தயாரிக்கும் திட்டத்தைத் தொடங்கினார்கள். “தேசிய அளவிலான குடியுரிமைப் பதிவேடு” (National Register of Citizens) உருவாக்கப்படும் என்பதையும் அறிவித்தார்கள். 1971 மார்ச் 24 என்பதை இறுதித் தேதியாக அறிவித்து அதற்கு முன்னதாக அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து இங்கு வந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்படும் என அறிவித்து ஆயிரம் கோடி ரூ செலவில் இன்று அது நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் அஸ்சாமில் வசிக்கும் 40 லட்சம் மக்கள் குடியுரிமையை இழந்தார்கள். அதிகம் கல்வி அறிவு இல்லாத ஏழை எளிய மக்கள் உரிய சான்றிதழ்களைக் கொடுக்க இயலாமல் பட்ட துன்பம் சொல்லி மாளாது. அதில் வங்கதேச முஸ்லிம்கள் மட்டுமின்றி ஏராளமான இந்துக்களும் இருந்தது பா.ஜ.க அரசுக்குப் பிரச்சினை ஆகியது. மேலும் கால நீடிப்புச் செய்து பாதிக்கப்படவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டபோது இன்று அஸ்சாமில் குடி உரிமை அற்றவர்களாக 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதிலும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்துக்களாக உள்ளது பா.ஜ.க அரசின் நோக்கத்திற்கு இடையூறாக உள்ளது. எனினும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பெருந்தலைவர் மோகன் பகவத் எந்த வகையிலும் இந்துக்கள் குடியுரிமை அற்றவர்களாக ஆக்கப்பட மாட்டார்கள் என்பதை வெளிப்படையாகவே அறிவித்தார். பா.ஜ.க அமைச்சர்களும் அப்படியான வாக்குறுதிகளை அளித்தனர். அப்படி மத அடிப்படையில் சலுகைகள் காட்டுவது நமது அரசியல் சட்டத்தின் 14, 15, 21 முதலான பிரிவுகளுக்கு எதிரானது என்பது பற்றியெல்லாம் அவர்கள் எள்ளளவும் கவலைப்படவில்லை.
அஸ்சாமில் இப்படிக் குடியுரிமை அற்றவர்களாக ஆக்கப்பட்டவர்களை என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. ஹிட்லரின் கொடுமைகளின் ஊடாகக் குடியுரிமை அற்றுப் பெருந் துன்பங்களுக்கு ஆளானவர்களில் ஒருவரான அறிஞர் ஹன்னா ஆரென்ட் சொன்னது போல இன்றைய அரசமைப்புகளில் குடியுரிமை என்பது “உரிமைகளைப் பெறுவதற்கான உரிமை”. குடியுரிமை அற்றவர்களுக்கு வேலை பெறுவதற்கு, படிப்பதற்கு, வணிகம் செய்வதற்கு.. என எதற்கும் உரிமை இல்லை. அப்படிக் குடியுரிமை அற்ற இலட்சக் கணகானோரை என்ன செய்யப் போகிறார்கள்? அரசிடம் திட்டமில்லை. வங்க தேசத்திலிருந்து வந்தவர்கள் ஆனாலும் இன்று அங்கே அவர்களை இந்திய அரசு திருப்பி அனுப்ப முடியாது. அப்படி அனுப்புவதற்கான ஒப்பந்தம் (deportation agreement) எதையும் இந்திய அரசு வங்க அரசுடன் செய்து கொள்ளவில்லை. மிகப்பெரிய தடுப்புக்காவல் முகாம்களை (detention centers) அமைத்து அடைத்து வைக்கப் போகிறார்களா? அப்படியான முகாம்கள் அமைக்கப்படுவதாகபும் செய்திகள் வரத்தான் செய்கின்றன.
இதற்கெல்லாம் பதில் இல்லாமலேயே இப்போது இந்திய அளவில் குடியுரிமைப் பதிவேடு உருவாக்கப்படும் என அறிவித்திருப்பதோடு அதன் முதற் கட்டமாக இன்று “குடியுரிமை திருத்த மசோதா” (Ccitizenship Amendment Bill) அறிவிக்கப்பட்டு நாடாளுமன்றத்திலும் மாநிலங்களின் அவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அ.இ.அ.தி.முக உள்ளிட்ட பா.ஜ.க ஆதரவுக் கட்சிகளின் துணையோடு இது நடந்துள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் மற்றும் தி.மு.க முதலான கட்சிகள் எதிர்த்துள்ளன.
இச் சட்டம் குடியுரிமை அற்றவர்கள் விண்ணப்பிப்பதற்கான இறுதித் தேதி டிசம்பர் 31, 2014 என்கிறது. அதற்கு முன்னதாக வந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க மூடியும். குடியுரிமை பெறுவதற்கு ஒருவர் குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் இங்கே வாழ்ந்திருக்க வேண்டும் எனும் நிபந்தனை இதன் மூலம் 5 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க அரசின் இந்தப் புதிய குடியுரிமைச் சட்டம் வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எனும் மூன்று முஸ்லிம் நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு மட்டுமே இந்த உரிமையை அளிக்கிறது. அதோடு இந்த உரிமை இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜெயின்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நுழைவதற்கான 1920ம் ஆண்டு ‘கடவுச் சீட்டுச் சட்டம்’ (Passport Act) மற்றும் 1946ம் ஆண்டு ‘வெளிநாட்டர் சட்டம்’ (Foreigners Act) ஆகியவற்றின் தடைகளிலிருந்து இந்த ஆறு மதத்தவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை. வேறு சொற்களில் சொல்வதானால் இந்த நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம்களுக்கு மட்டும் இப்படி மற்றவர்களுக்கு அளிக்கப்படும் இந்த உரிமை மறுக்கப்படுகிறது. இது அப்பட்டமாக நமது அரசியல் சட்ட அடிப்படையை மீறுகிறது. மத அடிப்படையில் இவ்வாறு தரம் பிரித்துச் சலுகைகள் அளிப்பதை நமது அரசியல் சட்டப் பிரிவுகள் ஏற்பதில்லை என்பதைப் பார்த்தோம்.
ஆனால் இந்த அரசியல் சட்ட மீறலை நியாயப்படுத்த அமித்ஷா சொல்லும் ‘நியாயம்’ ஒன்றுதான். அதாவது இந்த மூன்றும் முஸ்லிம் நாடுகளாம். எனவே அங்கிருந்து முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டு வருவதற்கு வாய்ப்பில்லையாம். அண்டை நாடுகளிலிருந்து துன்புறுத்தப்பட்டு வருபவர்களுக்காகத்தான் இந்தச் சலுகைகள் என்றால் அண்டை நாடுகளான மியான்மரிலிருந்து வரும் ரோஹிங்யா முஸ்லிம்கள், இலங்கையிலிருந்து வரும் நம் தமிழகள் ஆகியோரை இச்சட்டம் ஏன் உள்ளடக்கவில்லை என்கிற கேள்விக்கு பதிலில்லை. நேபாளத்திற்கும் நம் நாட்டிற்கும் ஒரே எல்லைக் கோடுதான். இதுநாள்வரை எளிதில் அங்கும் இங்கும் போய்வரக் கூடிய நிலைதான் உள்ளது. பெரிய அளவில் அங்கிருந்து கூர்காக்கள் இங்கு வந்து வேலை செய்கின்றனர். பின் ஏன் இன்றைய சட்டத்தில் நேபாளம் உள்ளடக்கப்படவில்லை?
அடுத்து இந்த மூன்று நாடுகளும் முஸ்லிம் நாடுகளானாலும் அவற்றில் ஷியா முஸ்லிம்கள், நாத்திகர்கள் ஆகியோர் துன்புறுத்தப்படுகின்றனர் என்கிற குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனாலும் அவர்களுக்கும் இன்றைய சட்டம் இடம் கொடுக்கவில்லை. ஆக மத அடிப்படையில் வேறுபாடுகாட்டும் வகையில் நமது அரசியல் சட்ட அடிப்படைக்கு எதிராக இன்றைய இந்தச் சட்டம் அமைகிறது. மதச்சார்பின்மையைப் புறக்கணிக்கிறது.
முன்னதாக மோடி அரசு இந்தச் சட்டத்தை வெளியிட்டபோது அதில் இந்த மூன்று நாடுகளிலும் வாழும், இந்த ஆறு மதத்தினர்களில் உள்ள, “துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு” (persecuted minority) மட்டுமே இந்தச் சலுகைகள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அமித்ஷா முன்வைத்து நிறைவேற்றியுள்ள வடிவில் “துன்புறுத்தப்படும் சிறுபான்மையினர்” எனும் பதம் நீக்கப்பட்டுள்ளது. காரணங்கள் காட்டப்படவில்லை. இவ்வாறு துன்புறுத்தல் இல்லாதபோதும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டும் குடியுரிமை அளிக்கப்படும் என்பதுதான் இதன் மூலம் அமித்ஷா சொல்லும் சேதி. இஸ்ரேலின் அலியாஹ் சட்ட வடிவம் இங்கே அப்படியே ஏற்கப்பட்டுள்ளது.
ஆக மத அடிப்படையில் 15 கோடிக்கும் மேற்பட்ட இந்திய முஸ்லிம்கள் மட்டும் இன்று இந்திய மக்களிடையே தனியே பிரித்து நிறுத்தப்படுகின்றனர்.
அஸ்சாம், மேகாலயா, திரிபுரா, மிசோராம் முதலான மாநிலங்களின் ‘பழங்குடிப் பகுதிகள்’ (tribal areas) மற்றும் அருணாசலப் பிரதேசம், நாகாலந்து, மிசோராம் முதலான மாநிலங்களின் ‘உட்கோட்டு அனுமதி’ பகுதிகள் (inner-line permit areas) ஆகியவற்றிற்கு இச்சட்டத்திலிருந்து சில சிறப்பு விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்னொரு வடகிழக்கு மாநிலமான மணிப்பூருக்கு இந்த விலக்கு அளிக்கப்படாதது ஏன் எனத் தெரியவில்லை. அதற்கும் விலக்கு அளிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அண்டை நாடுகளிலிருந்து ஊடுருவல் நிகழ்கின்றன என்றால் அதைத் தடுப்பதை யாரும் எதிர்க்கவில்லை. வங்க தேசத்திலிருந்து அஸ்சாமுக்குள் ஊடுருவல் நடப்பதைத் தடுக்க இன்று இரட்டை முள்வேலிகள் வைத்து, இராணுவக் காவல் அமைத்து ஊடுருவல் தடுக்கப்படுகிறது. அதை எல்லாம் யாரும் எதிர்க்கவில்லை. ஊடுருவலைச் சாக்காக வைத்துக் கொண்டு இவ்வாறு முஸ்லிம்கள் மட்டும் அரசியல் சட்ட உரிமைகளிலிருந்து ஒதுக்கப்படுவதைத்தான் இன்று நம்மால் ஏற்க இயலவில்லை.
இன்று மோடி – அமித்ஷா அரசின் இந்த நடவடிக்கை உலக அளவில் கண்டிக்கப்பட்டுள்ளது. இந்தக் குடியுரிமைச் சட்ட நிறைவேற்றத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகம் அடையாளம் காணப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளதை ஒட்டி உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது தடை நடவடிக்கைகள் (sanctions) மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க அரசின் மத உரிமைகள் தொடர்பான கூட்டாட்சி முகமை ஒன்று பரிந்துரைத்துள்ளது.
இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என ரொமிலாதாபர், பிரபாத் பட்நாயக், அருணா ராய் முதலான “மனச்சாட்சியுள்ள” 600 முக்கிய அறிஞர்கள் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் இச்சட்டத்திற்கு எதிராக இயக்கம் நடந்து கொண்டுள்ளது. ஆனாலும் பா,ஜ,க அரசு நம் அரசியல் சட்டத்திற்கு விரோதமான இந்தச் சட்டத்தை இன்று நிறைவேற்றியுள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் இது இன்னும் சில நாட்களில் நடைமுறைக்கு வரும் என்பதில் ஐயமில்லை.
சுதந்திரத்திற்குப் பிந்திய இந்திய வரலாற்றில் இந்த நாட்கள் பெருங் களங்கமாகப் பதியும். இந்திராகாந்தியின் நெருக்கடி நிலை காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் அன்றைய அட்டர்னி ஜெனெரல் நிரேன் டே, “அவசர நிலை அறிவிக்கப்பட்டால் அதன்பின் குடிமக்களுக்குத் தங்களின் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை கிடையாது” என கரகரத்த குரலில் சொல்லிய அந்தக் காட்சிதான் இன்றைய சூழலில் நினைவுக்கு வருகிறது.
இன்றைய அரசமைப்பில் குடியுரிமை என்பது உயிரினும் மேலானது அது இன்று ஆபத்துக்குள்ளாகி உள்ளது. :