‘தீராநதி’ இலக்கிய இதழில் ஜனவரி 2017 முதல் ‘நெஞ்சில் கனல் மனக்கும் பூக்கள்’ எனும் தலைப்பில் தொடர் கட்டுரை தொடங்கியுள்ளேன். முன்னதாக 2007 ஜனவரி முதல் 2012 டிசம்பர் வரை ‘பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்’ எனும் தலைப்பில் எழுதிய 60 கட்டுரைகள் தற்போது ‘உயிர்மை’ வெளியீடாக அதே பெயரில் வெளிவந்துள்ளது. இந்த இதழில் வெளிவந்துள்ள தொடக்கக் கட்டுரை.
‘தீராநதி’ யின் ஊடாக உங்களோடு மீண்டும் உரையாட ஒரு வாய்ப்புக் கிடைத்தமையில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய எழுத்துப் பணிகளில் மூன்று கட்டங்கள் முக்கியமானவையாக இருந்துள்ளன. ஒன்று கோமல் சுவாமிநாதன் அவர்களின் ‘சுபமங்களா’ இதழில் வெளிவந்த என் கட்டுரைகளும் நேர்காணலும். அடுத்து ‘நிறப்பிரிகை’ என்றொரு இலக்கிய – அரசியல் முயற்சியும் என் எழுத்துக்களும், அடுத்து ‘தீராநதி’ யில் நான் எழுதி வந்த ‘பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்’ கட்டுரைத் தொடர்.
வெகுமக்கள் இதழ்க் குழுமம் ஒன்றின் இலக்கிய இதழில் எழுதுவது குறித்து சற்றே தயக்கத்துடன்தான் என் தீராநதி நுழைவு அமைந்தது. ஆனால் அந்தத் தொடர் இடைவிடாது வெளிவந்த அந்த ஐந்து ஆண்டுகளில் (ஜனவரி 2007 – டிசம்பர் 2011) என் எழுத்துச் சுதந்திரத்தில் எந்தத் தலையீடும் இன்றி அது அமைந்ததை நான் வாய்ப்புக் கிடைத்த இடங்களில் எல்லாம் நன்றியோடு பதிவு செய்து வந்துள்ளேன்.
ஐந்தாண்டுகள், அறுபது கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஐந்து அல்லது ஆறு பக்கங்கள்… இன்று நினைத்துப் பார்த்தால் மலைப்பாக உள்ளது. வாசக இடையீடுகள், மறுப்புகள், பாராட்டுகள் என அந்த ஐந்தாண்டுகளும் என் எழுத்து வாழ்வில் மறக்க முடியாதவை.
2011 முதல் 2016 வரையிலான இடைப்பட்ட இந்த நான்காண்டுகளிலும் நான் அவ்வப்போது ஈழம் மற்றும் மலேசிய இதழ்கள் உட்படப் பல்வேறு இதழ்களிலும் எழுதிவந்த போதும், அவ்வப்போதைய நிகழ்வுகளின் மீதான என் கருத்துக்களை உடனுக்குடன் வெளிப்படுத்தும் சாதனமாகப் பெரிய அளவில் நான் பயன்படுத்தியது சமூக ஊடகங்களைத்தான், குறிப்பாக முகநூல். உடனுக்குடன் கருத்துக்களை எழுதுவதற்கும், எழுதிய சில கணங்களில் எதிர்வினைகளைப் பெறுவதற்குமான இந்தப் புதிய ஊடகங்கள் இன்று சக்தி வாய்ந்த கருத்து வெளிப்பாட்டுச் சாதனங்களாக வெளிப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் பெரிய அளவில் இன்று கருத்து வெளிப்பாட்டில் ஒரு ஜனநாயகப்பாடும் நிகழ்ந்துள்ளது. கூடவே ஜனநாயகப்பாட்டின் மூலம் உருவாகும் பிரச்சினைகளையும் அது தன்னகத்தே கொண்டுள்ளது. குறிப்பாக எது குறித்தும் பொறுப்பற்ற முறையில் எதையும் சொல்லிவிடுவது என்பதற்கு இது ஒரு வாய்ப்பாக உள்ளது. எனினும் உடனுக்குடன் தவறுகள் சுட்டிக்காட்டப்படுவது, மாற்றுக் கருத்துக்களை வெளிப்படுத்துவது என்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன என்பது இந்தப் பிரச்சினையை ஓரளவு ஈடு செய்யக் கூடியதாகவும் அமைகிறது.
தகவல் பெருக்கம் என்பது இந்த நூற்றாண்டின் ஒரு அற்புதம். யாரும் எந்த ஒரு நிகழ்வு குறித்தும் உலகெங்கிலும் என்ன கருத்து வெளிப்பாடுகள் நிகழ்ந்துள்ளன என்பதை அறியும் இந்த வாய்ப்பு நம் முந்திய தலைமுறையினருக்குக் கிட்டியதில்லை. அந்த வகையில் நாம் பாக்கியசாலிகள். எனினும் இந்தச் சூழல் இணையப் பயன்பாடு மிக்கவர்களின் மத்தியில் ஒரு குறிப்பிட்ட அளவு நூல் வாசிப்பைக் குறைத்துள்ளது என்பதையும் கவனிக்க வேண்டி உள்ளது.. எல்லாவற்றையும் இணையத் தளங்களிலேயே வாசித்து எழுதும் பல கட்டுரைகள் ஆழமற்று அமைந்து விடுகின்றன. அதுவும் தினம் ஒரு கட்டுரை எழுத வேண்டிய கட்டாயப் பொறுப்பில் உள்ளவர்கள் எழுதுபவை பல நேரங்களில் ஆழமற்றவையாக மட்டுமின்றி பிரச்சினைக்குரியவையாகவும் ஆகிவிடுகின்றன.
நூல் வெளியீட்டிலும் மிகப் பெரிய தொழில்நுட்ப வெடிப்பு இன்று நிகழ்ந்துள்ளது. மிகத் தரமாக, அழகாக, விரைவாக நூல்கள் வெளிவந்து விடுகின்றன. ஆனால் ஒரு பத்தாண்டுகளுக்கு முன் இருந்தது போல 1200 பிரதிகளை அச்சிடுவது, அதில் 200 பிரதிகள் விமர்சனம் முதலானவைகட்கு இலவசமாக அளிப்பது என்பவையெல்லாம் இன்று பழங்கதைகளாகி விட்டன. நூறு பிரதிகள், சில நேரங்களில் வெறும் 50 பிரதிகள் என்கிற அள்விற்கு இன்று நூல் வெளியீடுகள் அமைகின்றன. பல நேரங்களில் நூல் வெளியீட்டாளர்கள் அவை விற்றவுடன் தொடர்ந்து அவற்றை அச்சிடுவதில்லை.
இன்னொரு பக்கம் முன்னெல்லாம் ஒரு 300 பிரதிகளுக்குப் பெரும்பாலும் உறுதியாக நூலக ஆணை கிட்டும் எனும் நிலையும் இன்று இல்லை. நல்ல நூல் வாசிப்பாளரான கருணாநிதியின் ஆட்சியில் தொடங்கிய இந்நிலை இன்றும் தொடர்கிறது. இது குறித்து எந்தப் பெரிய எதிர்ப்பும், விவாதமும் தமிழகத்தில் இல்லை. சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகத்தில் சுமார் 300 பேர்கள் அமரக் கூடிய கருத்தரங்க வளாகம் குறைந்த வாடகையில் எழுத்தாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் கிடைத்து வந்ததும் இன்று எந்த நியாயங்களும் இன்றி நிறுத்தப்பட்டு விட்டது. இதற்கும் எந்தப் பெரிய எதிர்ப்பும் இல்லாதது வருத்தத்திற்குரியது. இன்று ஒரு நூல் வெளியீட்டைச் சென்னையில் நடத்த வேண்டுமானால் அறை வாடகைக்கே பத்தாயிரம் ரூபாய் குறைந்தபட்சம் தேவைப் படுகிறது. எனவே இத்தகைய கூட்டங்கள் இப்போது மிகச் சிறிய அளவில் புத்தகக் கடைகளில் நடத்தப்படக் கூடிய நிலைக்கு வந்துவிட்டன.
நல்ல ஆங்கில நூல்கள் விற்கக் கூடிய கடைகளும் இன்று குறைந்துவிட்டன. அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற ‘ஆன்லைன்’ விற்பனை அதிகரித்துள்ளதன் விளைவு இது. புத்தகக் கடைகளுக்குச் சென்று அங்கே கடலெனக் குவிந்து கிடக்கும் நூல்களை ஆசை தீரக் கண்களை விரித்துப் பார்த்து, பல மணி நேரங்கள் அங்கு செலவிட்டுச் சுமந்து வந்த நூல்களை, வீட்டுக்கு வந்தவுடன் பிரித்து அவற்றின் புதிய வாசனையை நுகர்ந்து புரட்டிப் பார்க்கும் அனுபவங்களும் குறைந்து விட்டன. பயணங்களிலும் கூடப் புத்தகங்கள் படிப்பது என்பது அழிந்து செல்போன்களில் மூழ்குவது என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது. நண்பர்கள் மத்தியிலும் கூட வாசித்த புதிய புத்தகங்கள் குறித்த உரையாடல்கள் குறைந்து விட்டன.
# # #
என் மீது நண்பர்கள் வைக்கும் விமர்சனங்களில் ஒன்று தொடக்க காலத்தில் நான் தமிழ் நூல்கள், எழுத்துக்கள், போஸ்ட்மார்டனிசம் முதலான கோட்பாடுகள் குறித்தெல்லாம் எழுதி வந்தது இப்போது குறைந்து விட்டது என்பதுதான். அது உண்மை களப்பணி மற்றும் உடனடி அரசியல் நிகழ்வுகள் குறித்து எழுதுவதில் என் நேரம் கழிந்து விடுவதால் நூல்கள் குறித்த உசாவல்கள் குறைந்துவிட்டன. சொல்லப்போனால் எல்லா மட்டங்களிலும் இது நிகழ்ந்துகொண்டுள்ளது. ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு பல கோட்பாடுகள் அறிமுகமாயின; பெரிதும் விவாதத்திற்குள்ளாயின; ஃபூக்கொ, தெரிதா, பாத்ரிலா லத்தீன் அமெரிக்க எழுத்துக்கள் என்றெல்லாம், நிறையப் பேசப்பட்டன. இன்று அதன் தொடர்ச்சியும் அறுந்துள்ளது.
தீராநதியில் எழுதக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பை இப்படியானவற்றிற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என உள்ளேன். வழக்கம்போல உங்களின் எதிர்வினைகள் இதில் பெரும்பங்கு வகிக்க வேண்டும்.
அடுத்த இதழில் சந்திப்போம்…
ஆனால் இந்தப் பெரு வாய்ப்பை நாம் பயன்படுத்தும்போது நமக்குக் கூடுதல் எச்சரிக்கைகள் தேவை. நாம் இதுவரை அறிந்திராத, பரிச்சயமற்ற எது குறித்தும் எழுதிவிடும் இந்த வாய்ப்பு ஆபத்தாகவும் உருமாற