நேபாளத்திற்கு அரசியல் சட்டம் ஒன்றை இயற்றுவதற்கான இரண்டாம் அவைக்கான (Constituent Asembly II) தேர்தலில் மாஓயிஸ்டுகள் படு தோல்வி அடைந்துள்ளனர். ஐந்தாண்டுகளுக்கு முன் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்ட அவர்கள் அரசியல் சட்ட அவைக்கான முதல் தேர்தலில் (2008) முதலிடத்தைக் கைப்பற்றி வெற்றியடைந்தது நினைவிருக்கும். மாறியுள்ள உலகச் சூழலைக் கணக்கில் கொண்டு அவர்கள் தங்கள் அணுகல்முறையை மாற்றிக் கொண்டதை உலகம் வரவேற்றது. ஊழலும், எதேச்சதிகாரமும் நிரம்பிய பன்னூறாண்டு கால முடியாட்சியை வீழ்த்திய சாதனைக்குரியவர்கள் என்கிற வகையில் மக்கள் நம்பிக்கையோடு அவர்களைத் தேர்வு செய்தனர். இன்று மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதோடு பல தொகுதிகளில் வைப்புத் தொகைகளையே இழந்துள்ளனர். முக்கிய தலைவர்கள் பிரசாண்டா. பாபுராம் பட்டாராய் இருவரும் தாம் போட்டியிட்ட இரு தொகுதிகளில் ஒன்றில் தோற்றுள்ளனர். பிரசாண்டாவின் மகள், பட்டாராயின் மனைவி ஆகியோரும் தோல்வியுற்றுள்ளனர்.
இந்தத் தோல்வியை நாம் ஆய்வு செய்வதற்கு முன் நேபாளத் தேர்தல் முறையை விளங்கிக் கொள்ள வேண்டும். அவையின் மொத்த உறுப்பினர்கள் 601. இவர்களில் 240 பேர்கள் (40%) நேரடியாகத் தொகுதிகளில் போட்டியிட்டு, அதிக வாக்கு பெற்றவர்கள் (First Past The Post) தேர்வு செய்யப்படுவர். 355 உறுப்பினர்கள் (56%) கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குகளின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப அவ்வக் கட்சிகளால் தேர்வு செய்யப்படுவர். (Proportional Representation). மீதமுள்ள 26 பேர்கள் (4%) நியமன உறுப்பினர்கள் (Reserved for Distinguished Persons).
2013 தேர்தல் முடிவுகள்:
கட்சி நேரடி தேர்வு விகிதாசார தேர்வு மொத்தம்
நேபாள காங். (NP) 105 (29.8%) 91 (25.55%) 196
நேபாள கம்யூ. (UML) 91 (27.55%) 84 (26.66%) 175
மாவோயிஸ்ட் (UCPN-M) 26 (17.79%) 54 (15.21%) 80
ராஷ்ட்ரீய பிரஜாதந்திரி-N (RPP-N) 0 (2.79%) 24 (6.66%) 24
மாதேசி ஜனாதிகார்-L (MJF-L) 4 (3.13%) 10 (2.91%) 14
ராஷ்ட்ரீய பிரஜாதந்திரி (RPP) 3 (2.63) 10 (2.75%) 13
மாதேசி ஜனாதிகார் (MJF) 2 (2.28%) 8 (2.26%) 10
தராய் மாதேஷ்-L (TMLP) 4 (1.9%) 7 (1.91%) 11
பிற 5 – 47 – 52
குறிப்பு : நேபாள கம்யூனிஸ்ட் என்பது தேர்தல் அரசியலை ஏற்றுக் கொண்ட ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (UML) கட்சி. மாதவ் குமார் நேபால், ஜாலாநாத் கானல் ஆகியோர் இதன் முக்கிய தலைவர்கள். மாஓயிஸ்ட் கட்சி என்பது ‘நேபாள ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி – மாஓயிஸ்ட்” எனப்படும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த அமைப்பு. புஷ்ப கமல் தகல் (பிரசாண்டா). பாபு ராம் பட்டாராய் முதலானோர் இதன் முக்கிய தலைவர்கள். மேலும் விவரங்களுக்குப் பார்க்க: அ.மார்க்ஸ், ‘நேபாளம்: வரலாறு, மக்கள், மாஓயிஸ்டுகள்’ பயணி வெளியீடு, சென்னை, 2008)
2008 தேர்தலில் 220 (120+100) இடகளை வென்ற மாஓயிஸ்டுகள் இம்முறை வெறும் 80 இடங்களைத்தான் பெற்றுள்ளனர். அதே நேரத்தில் சென்ற முறை 110 (37+73) இடங்களை மட்டுமே வெல்ல முடிந்த நேபாள காங்கிரஸ் இம்முறை 175 இடங்களைப் பெற்றுள்ளது. சென்ற முறை 103 (33+70) இடங்களை வென்ற நேபாள கம்யூனிஸ்ட் கட்சியோ இம்முறை 175 இடங்களைப் பெற்றுள்ளது. சென்ற முறை மாதேசி கட்சிகள் இரண்டும் 72 இடங்களைப் பெற்றிருந்தன. இம்முறை அட்டவணையில் இடம்பெற்றுள்ள மூன்று மாதேசிக் கட்சிகளும் சேர்ந்து 35 இடங்களைத்தான் பெற முடிந்துள்ளது.
ஆக இந்தத் தேர்தல் முடிவுகள் தெளிவாக மாஓயிஸ்ட் மற்றும் மாதேசிக் கட்சிகளுக்கு எதிராகவும் நேபாள காங்கிரஸ் மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆதரவாகவும் அமைந்துள்ளது என்பதை யாரும் மறக்க இயலாது. இன்னொரு கவலைக்குரிய அம்சம் சென்ற முறை வெறும் 4 இடங்களை மட்டுமே பெற முடிந்த ராஷ்ட்ரீய பிரஜா தந்திரக் கட்சி (N) இம்முறை 24 இடங்களைப் பெற்றுள்ளது. இது இந்து மத அடையாளத்துடன் கூடிய முடியாட்சியை வேண்டுகிற ஒரு வலதுசாரிக் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்தலில் மோசடி நடந்துள்ளது எனவும் இந்த இரண்டாம் அரசியல் சட்ட அவையில் தாங்கள் பங்கு பெற முடியாது எனவும் மாஓயிஸ்டுகள் முரண்டு பிடித்துப் பார்த்தனர். விகிதாசாரப் பிரதிநிதித்துவ இடங்களுக்கு தங்கள் கட்சியின் சார்பாக யாரையும் நியமிக்க இயலாது எனவும் கூறினர். தங்களுக்கு எதிரான இம்மோசடிக்குக் காரணமாக அவர்கள் நேபாள இராணுவம், குடியரசுத் தலைவர் ராம் பரண் சர்மா உள்ளிட்ட தேர்தல் நடத்துவதற்கான தற்காலிக அரசு, அந்நிய சக்திகள் குறிப்பாக இந்திய அரசு ஆகியவற்றைக் குறிப்பிட்டனர். இவை மூன்றுமே எப்படியும் மாஓயிஸ்டுகள் ஆட்சியில் அமர்வதைச் சகித்துக் கொல்ளாதவை என்பது ஊரறிந்த இரகசியம். வாக்குப் பெட்டிகள் பல மணி நேரம் கட்சிப் பிரதிநிதிகளின் கண்காணிப்பின்றி இராணுவத்தின் வசம் இருந்த்தையும், நேரடித் தேர்தல் முடிவுகளுக்கும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முடிவுகளுக்கும் வித்தியாசம் உள்ளதையும் சுட்டிக் காட்டினர்.
எனினும் மாஓயிஸ்டுகளின் இக்குற்றச்சாட்டிற்குப் பெரிய ஆதரவில்லை. தேர்தல் முடிந்த அன்று (நவம்பர் 19) தேர்தல் நியாயமாக நடந்தது எனப் பிரசாண்டாவே கூறியுள்ளார் மாஓயிஸ்டுகள் நேரடித் தேர்தலில் குறைவாகவும், கட்சிக்கு அளிக்கப்பட்ட விகிதாசார வாக்குகளினூடாக அதிக இடங்களையும் பெற்றுள்ளதற்கு தனிப்பட்ட முறையில் மாஓயிஸ்டுக் கட்சி வேட்பாளர்களின் மீது மக்கள் கொண்ட வெறுப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். கடந்த ஐந்தாண்டு அனுபவத்தில் மாஓயிஸ்ட் தலைவர்களின் வாழ்நிலையில் ஏற்பட்ட மாற்றம், தொகுதி முன்னேற்றத்தில் அவர்களின் கவனமின்மை, மக்களை அணுகுவதில் அவர்கள் காட்டிய முரட்டுத்தனம் ஆகியன மக்கள் மத்தியில் வெறுப்பு ஏற்படுத்தி இருந்தமையைப் பலரும் குறிப்பிடுகின்றனர்,
ஜிம்மி கார்டரின் தலைமையில் இயங்கிய பன்னாட்டுத் தேர்தல் பார்வையாளர் குழுமமும் தேர்தல் முறைகேடுகள் குறித்த மாஓயிஸ்டுகளின் கூற்றை மறுத்துள்ளது. ஆக, தேர்தல் முடிவுகளை அமைதியாக ஏற்றுக் கொள்வதற்குப் பன்னாட்டழுத்தமும் செலுத்தப்படுகிறது. வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ள மாட்டோம் என்றெல்லாம் மாஓயிஸ்டுகள் சொன்ன போதும் அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை.
மக்களின் தீர்ப்பை மதித்து ஏற்றுக் கொள்வதுதான் எதிர்கால அரசியலுக்கு நல்லது என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாகவும் இருந்தது.
தேர்தல் நடக்காது என்றும், அப்படியே நடத்தப்பட்டாலும் மக்கள் பங்கேற்பு அதிகம் இருக்காது எனவும் கூறப்பட்ட ஆரூடங்களுக்கு எதிராக, ஒரு சில வன்முறைச் சம்பவங்கள் தவிர்த்து, தேர்தல் அமைதியாகவே நடந்தது மட்டுமின்றி 78 சதத்திற்கும் மேலாக வாக்குப் பதிவு நடந்துள்ளது. குறிப்பாக முதல் தலைமுறை வாக்காளர்கள் அதிக அளவில் உற்சாகமாகப் பங்கேற்றுள்ளனர்.
எல்லாவற்றையும் தொகுத்துப் பார்க்கும்போது கடந்த ஐந்தாண்டு காலம் அரசியல் சட்டத்தை உருவாக்காமல் வெறும் பதவிச் சண்டையில் கழிந்ததாகவே மக்கள் கருதுகின்றனர் என்பதும், அப்படியானதற்கு அனைத்துக் கட்சிகளுக்கும் பங்கிருந்த போதும், தோல்விக்கான முழுப் பொறுப்பையும், முந்திய தேர்தலில் தாங்கள் யாரை நம்பி முதன்மை வாக்களித்தார்களோ அவர்கள் மீதே ஏற்றிப் பார்க்கின்றனர் என்பதும் தெளிவாகிறது. அப்படியான ஒரு கருத்தைச் சர்வதேசச் சமூகமும், குறிப்பாக இந்தியாவும், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட அதிகார வர்க்கமும் மாஓயிஸ்டுகளின் பரம எதிரியான இராணுவமும் பிரச்சாரம் செய்து, அதில் வெற்றியும் அடைந்துள்ளது.
மாஓயிஸ்டுகளைப் பொருத்தமட்டில், 2008ல், அரசியல் சட்ட அவையில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்கிற வகையில், அறுதிப் பெரும்பான்மை இல்லாமலேயே ஆட்சியில் அமர்ந்தனர். அரசியல் சட்டத்தை உருவாக்குவது தவிர மாஓயிஸ்டுகளுக்கென வேறு சில அவசரமான, முக்கியப் பணிகளும் இருந்தன. தமது புரட்சிகர இராணுவம் வசம் இருந்த ஆயுதங்களை அவர்கள் ஐ.நா.அவைப் பார்வையாளர்களின் பொறுப்பில் ஒப்படைத்திருந்தனர். மாஓயிஸ்டுகளின் இராணுவத்தை நேபாள இராணுவத்துடன் இணைப்பது என்பது ஒப்பந்தத்தில் இருந்தபோதும், நேபாள இராணுவம் அதற்கு ஒத்துழைக்கவில்லை என்பதோடு முட்டுக்கட்டையும் போட்டு வந்தது. குடியரசுத் தலைவர் தேர்தலிலும் மாஓயிஸ்டுகள் விரும்பிய தலைமையைக் கொண்டு வர இயலவில்லை, தேர்ந்தெடுக்க்ப்பட்ட ராம் பரண் யாதவ் மாஓயிஸ்டுகளுக்கு எதிரானவர்.
இந்தியத் தலையீடு:
அடுத்த இரு பெருங்கட்சிகளான நேபாள காங்கிரசும், நேபாளக் கம்யூனிஸ்ட் கட்சியும் தேர்தல் அரசியலில் நீண்ட நாள் அனுபவம் வாய்ந்தவை. கருத்து மாறுபாடுகளை மீறி மாஓயிஸ்டுகளை ஓரங் கட்டுவதில் இவ்விரு கட்சிகளும் ஒன்றுபட்டன. சர்வதேசச் சமூகத்தின் பிரதிநிதியாக விளங்கிய இந்தியாவுக்கு நேபாளத்தைத் தன் முழுக்கடுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வது அவசியமாக உள்ளது. அருகாமை நாடுகள் அனைத்துடனும் பகையுறவையே கொண்டுள்ள இந்தியா போர் நிலை முக்கியத்துவமுள்ள நேபாளத்தை முழுமையாகத் தன் கட்டுக்குள் வைப்பதற்கு மாஓயிஸ்டுகள் தடையாக இருப்பதைச் சரியாகவே கணித்தது..
ஏப்ரல் 2010ல் பிரதமர் மன்மோகனின் சிறப்புத் தூதுவராக நேபாளத்திற்கு வந்த இந்திய அயலுறவுச் செயலர் ஷியாம் சரண் வெளிப்படையாக மாஓயிஸ்டுகளை முழுமையாக ஜனநாயகப் பாதைக்குத் திரும்புவதுதான் நல்லது என எச்சரித்தார், நேபாள மாஓயிஸ்டுகளும் பான்னாட்டு மற்றும் உள்நாட்டுச் சூழல்களைக் கணக்கில் கொண்டு இறங்கி வந்தனர். இந்த ஆண்டு பிப்ரவரியில் ஹெடாவ்டா நகரில் நடந்த கட்சிப் ப்ளீனம் ஒன்றிற்குப் பின் நடந்த கூட்டத்தில் தங்கள் பாதையில் மூன்று அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகப் பிரசாண்டா அறிவித்தார். அவை :
1) முழுமையான பல கட்சி ஜனநாயக ஆளுகைக்குத் திரும்புதல். 2) பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்தல். இந்த வளர்ச்சியில் இந்தியாவை முக்கிய பங்காளியாக ஏற்பது. இந்திய முதலீடுகளுக்கு வாய்ப்பளிப்பது. இந்த வளர்ச்சியின் மூலமாக உருவாகும் அரசியல் நிலைத் தன்மை அருகிலுள்ள நாடுகளின் (அதாவது இந்தியாவின்) பாதுகாப்பு தொடர்பான கவலைகளையும் போக்கும். 3) ‘குறுகிய தேசியத்தை’க் கைவிட்டுவிட்டு இனி முற்போக்கு தேசியத்தை முன்னெடுத்தல்.
நேபாள அரசியலில் இந்தக் ‘குறுகிய தேசியம்’ என்பது இந்திய மேலாதிக்கம் பற்றிய கவலையைக் குறிக்கும். இந்திய மேலாண்மை குறித்த அச்சம் நேபாளிகளுக்கு எப்போதுமே உண்டு. இந்தியா பெரிய அளவில் நேபாளத்தில் முதலீடுகளைச் செய்துள்ளதோடு அதன் அபரிமிதமான கனிம வளங்கள் மீதும் இந்தியாவிற்கு எப்போதுமே ஒரு கண்ணுண்டு. தவிரவும் திபெத்திலிருந்து வரும் அகதிகளை இந்தியா நேபாளத்திற்குத் திருப்பி விடுவதை ஒரு தந்திரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் சீனாவின் கோபத்திலிருந்து தான் தப்பி, சீனாவுக்கும் நேபாளத்திற்கும் இடையில் விரிசலை ஏற்படுத்துவது நோக்கம். இது தவிர எல்லையோரத்தில் இந்திய ஆக்ரமிப்பு நிகழ்வதாகவும் நேபாளத்திற்கு ஐயங்கள் உண்டு.
மொத்தத்தில் சிக்கிமை வளைத்துப்போட்டது போல நேபாளத்தையும் தன்னுடன் இந்தியா இணைத்துக் கொண்டு விடுமோ என்கிற (sikkimisation) அச்சம் நேபாளத்திற்கு உண்டு. இந்தியாவும் ஏதோ தன்னுடைய மாநிலங்களில் ஒன்றைப் போலவே நேபாள அரசியலில் தலையிட்டு வருகிறது. நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதர் நேபாள அயலுறவு அமைச்சகத்தின் அனுமதி இல்லாமலேயே எப்போது வேண்டுமானாலும் நேபாள பிரதமர் உட்பட யாருடைய அலுவலகத்திற்கும் சென்றுவரக் கூடிய நிலை உள்ளது.
இந்தப் பின்னணியில் இந்திய மேலாண்மை குறித்து அதிகம் கவனப்படுத்தி வந்தவர்கள் மாஓயிஸ்டுகள்தான். இந்திய மேலாண்மைக்கு எதிராக உருவாகியுள்ள இந்த நேபாள தேசிரய உணர்வைத்தைத்தான் இப்போது குறுகிய தேசியம் என அவர்களே அழைத்துக் கொள்ள வேண்டிய நிலை நேபாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது. சென்ற மார்ச்சில் இந்தியா வந்த நேபாளக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் மாதவ் குமார் நேபால் இந்து இதழுக்கு அளித்த பேட்டியில் தம் கட்சி உட்பட நேபாளிக் கட்சிகள் பலவற்றிலும் இந்திய வெறுப்பு எனப்படும் குறுகிய தேசியம் செயல்படுவதாகக் கூறினார்.
மாஓயிஸ்டுகள் வேறு பல அம்சங்களிலும் விட்டுக் கொடுக்கவே செய்தனர். 2006 புரட்சியைக் கொடுங்கரம் கொண்டு ஒடுக்க முனைந்தவரும் முடியாட்சிக்கு மிக நெருக்கமாக இருந்தவருமான லோக்மான்சிங் கார்கியை ஒரு உயர்ந்த அதிகாரமிக்க பதவியில் அமர்த்த ஒப்புதல் அளித்தது, தலைமை நீதிபதி கில் ராஜ் ரெக்மியை தேர்தலுக்கான தற்காலிக அரசுக்குத் தலைமை ஏற்க முன்மொழிந்தது ஆகியவற்றைச் சில எடுத்துக்காட்டுகளாகச் சொல்லலாம்.
அரசியல் சட்டம் எழுதுவதில் என்ன பிரச்சினை?
எனினும் இந்தியா கடைசி வரை மாஓயிஸ்டுகளை நம்பாமைக்கு இன்னொரு காரணமும் உண்டு. இன்று படு தோல்வி அடைந்துள்ள மாஓயிஸ்டுகள், மாதேசிக் கட்சிகள் ஆகிய இரு தரப்பினருமே ‘வெஸ்ட்மினிஸ்டர்’ மாதிரி, அதாவது இந்தியாவில் உள்ளது மாதிரி ஜனநாயகத்திற்குப் பதிலாக அடையாள அடிப்படையிலான பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை (identity based federalism) முன் மொழிந்தனர். இதை நேபாள காங்கிரசும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்த்தனர். இந்தியாவின் கருத்தும் அதுவே.
இந்த அடையாள அடிப்படையிலான ஜனநாயகக் கூட்டாட்சி என்பதென்ன? இந்தியாவைப் போலவே பல்வேறுபட்ட சாதிகள், இனங்கள், ஆதி குடிகள் அந்தச் சின்ன நாட்டிலும் உண்டு. ‘பாகுன்’, ‘சேத்ரி’ முதலான சாதிகள் இந்தியாவிலுள்ள பார்ப்பன, சத்திரிய சாதிகளைப்போல ஆதிக்க சாதியினர். காத்மாண்டை மையமாகக் கொண்ட இவர்களின் அதிகாரமே நேபாளத்தில் கோலோச்சி வந்தது. சட்டமன்றங்களிலும் 37 சதம் வரை இவர்களே ஆக்ரமித்திருந்தனர். ஆரம்பம் முதலாகவே தலித்கள், உள் நாட்டு இனத்தினரான ஜனஜாதிகள், இந்திய வம்சாவளியினரான மாதேசிகள், இவர்கள் ஒவ்வொரு பிரிவினரிலும் பெண்கள் முதலான அனைத்துப் பிரிவினருக்கும் ஆளுகையில் பங்கு வேண்டும் என்பதை மாஓயிஸ்டுகள் வற்புறுத்தி வந்தனர், நீண்ட விவாதங்களுக்குப் பின் 2008 தேர்தலில் இது நடைமுறைக்கும் கொண்டு வரப்பட்டது. போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும், இந்த ஒவ்வொரு பிரிவினருக்கும் உரிய வீதங்களில் வாய்ப்பளிக்க வேண்டும், அதிலும் ஒவ்வொரு பிரிவினரிலும் பாதி வேட்பாளர்கள் பெண்களாக இருக்க வேண்டும் என்கிற கருத்தொருமிப்பு ஏற்பட்டது.
இது குறிப்பிடத்தக்க நல்ல விளைவையும் தந்தது. 2008 அரசியல் சட்ட அவையில் பாகுன் மற்றும் சேத்ரி பிரிவினரின் பங்கு 4 சதமாகக் குறைந்தது. ஒரு சதப் பிரதிநிதித்துவம் கூட இதுவரை கிடைக்காதிருந்த தலித்களுக்கு முதன் முதலாக 8.17 சதம் கிடைத்தது.மொத்த உறுப்பினர்களில் 32.22 சதம் பெண்கள்; மாதேசிகள் 34.09 சதம்; ஜனஜாதிகள் 33.39 சதம் இருந்தனர்.
இவ்வாறு அனைத்துப் பிரிவினருக்கும் ஆளுகையில் உரிய பங்கை அளிப்பதற்கு அரசியல் சட்டத்திலேடே வழி வகுப்பதைத்தான் அடையாள அடிப்படையிலான ஜனநாயகக் கூட்டாட்சி என்பதாக மாஓயிஸ்டுகளும் மாதேசிகளும் முன்வைத்தனர். இதைக் கடுமையாக நேபாள காங்கிரசும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்த்தன. இந்தியாவின் கருத்தும் இதுவாகவே இருந்தது.
சட்டசபைக் கலைப்பும் பின் நடந்த அரசியலும்:
இதில் ஒரு ஒப்புதல் ஏற்படாதது அரசியல் சட்ட உருவாக்கத்திற்குத் தடையாக இருந்தது. இரண்டாண்டுகளுக்குள் இந்தப் பணி முடியாததால் அவையின் காலகெடு இரு முறை நீடிக்கப்பட்டது. இறுதி வரை இது சாத்தியமில்லாமல் போகவே 2012 மே 27 அன்று முதலாம் அரசியல் சட்ட அவை அதன் நோக்கம் நிறைவேறாமலேயே கலைக்கப்பட்டது. மார்ச் 13, 2013 அன்று இரண்டாம் அரசியல் சட்ட அவைக்கான தேர்தல் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டு, பின் அந்தத் தேதி மீண்டும் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு, இறுதியில் நவம்பர் 19, 2013 என்பதாக முன்வைக்கப்பட்டது. தேர்தலை நடத்த, தலைமை நீதிபதி ரெக்மி தலைமையில் இடைக்காலத் தேர்தல் அரசு ஒன்று அமைப்பது எனவும் கருத்து உருவானது. ஒவ்வொரு முறையும் இப்படியான முடிவுகளுக்குத் தக இடைக்கால அரசியல் சட்டமும் திருத்தப்பட்டது.
இத்தகைய முக்கிய முடிவுகள் எடுக்க மாஓயிஸ்ட் கட்சி, நேபாள காங்கிரஸ், நேபாள கம்யூனிஸ்ட், மாதேசி முன்னணி ஆகிய நான்கு கட்சிகளின் எட்டுப் பிரதிநிதிகள் அடங்கிய ’உயர் மட்ட அரசியல் குழு’வும் (HLPC) உருவாக்கப்பட்டது.
2013 செப்டம்பர் 14 அன்று இந்த உயர் மட்ட அரசியல் குழு கூடியபோது அதில், தேர்தலை 2014 மார்ச் மாதத்திற்கு ஒத்தி வைப்பது, இடைக்கால அரசுக்குத் தலைமை ஏற்கும் ரெக்மி தனது தலைமை நீதிபதிப் பொறுப்பிலிருந்து விலகுவது முதலான கோரிக்கைகளை மாஓயிஸ்டுகள் முன்வைத்தனர். ஒரு வட்ட மேசை மாநாடு கூட்டிப் பொதுப் பிரச்சினைகளில் முடிவெடுப்பது, பெரும்பான்மை அடிப்படைலான ஆளுகை என்பதாக இல்லாமல் கருத்தொருமிப்பு அடிப்படையிலான அரசியல் சட்ட அவைக்கான அரசு (consensus government) முதலியன மாஓயிஸ்டுகளின் பிற கோரிக்கைகளாக இருந்தன. தேர்தலை ஒத்தி வைப்பது, தலைமை நீதிபதிப் பொறுப்பொலிருந்து ரெக்மி விலகுவது முதலான மாஓயிஸ்டுகளின் கோரிக்கைகளில் ஒரு கருத்தொருமிப்பு எட்டும் தருவாயில் இந்திய அயலுறவுத் துறைச் செயலர் ஷ்யாம் சரணின் வருகை அறிவிக்கப்பட்டது. அன்று மாலை இந்தியத் தூதரகத்தில் விருந்தொன்றுக்கு அவர் அழைப்பு விட்டிருந்தார். விருந்தின்போது, தேர்தலை ஒத்தி வைக்கக் கூடாது என்பதே இந்தியாவின் கருத்து என அறிவிக்கப்பட்டது.
மீண்டும் செப்டம்பர் 16 அன்று குடியரசுத் தலைவர் ராம் பரண் சர்மா தலைமையில் உயர்மட்டக் குழு கூடியபோது இரண்டு நாட்கள் முந்திய கருத்தொருமிப்புகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. மாஓயிஸ்டுகளின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு, முன் தீர்மானித்தபடி நவம்பர் 19, 2013 அன்றே தேர்தலை நடத்துவது என்பதும் ஒரே நேரத்தில் ரெக்மி தலைமை நீதிபதியாகவும் இடைக்கால அரசின் தலைவராகவும் நீடிப்பது என்பதும் உறுதியானது.
மாஓயிஸ்டுகள் விட்ட பிழைகள்:
நடந்து முடிந்த தேர்தலின் மிகச் சுருக்கமான பின்னணி இதுவே. இந்தியா பிரதிநித்தித்துவப் படுத்திய சர்வதேச அழுத்தம் மற்றும் உள்நாட்டு அரசியல் சக்திகள் ஆகியவற்றால் மாஓயிஸ்டுகள் ஓரங்கட்டப்பட்டு முறியடிக்கப்பட்ட வரலாறும் இதுவே. மாஓயிஸ்டுகளின் தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்யும் பலரும் இப்போது இந்த வரலாற்றைப் புறக்கணித்துவிட்டு தோல்விக்கு முழுக்க முழுக்க மாஓயிஸ்டுகளே காரணம் என்பதாக முன்வைக்கின்றனர்.
மாஓயிஸ்டுகளின் பக்கம் தவறுகளே இல்லை என்பதல்ல. ஆனால் இந்தச் சர்வதேச மற்ற்ம் உள்நாட்டுச் சதிகளைக் கணக்கில் கொள்ளாமல் பழி அனைத்தையும் மாஓயிஸ்டுகளின் பக்கம் திருப்பிவிடலாகாது என்பதுதான்.
மாஓயிஸ்டுகளும் மாதேசிகளும் இவ்வாறு 2008 தேர்தலைக் காட்டிலும் இப்போது பெரிய அளவில் தோல்வி அடைந்திருப்பதற்குக் காரணமாக சர்வதேச மற்றும் அவர்களுக்கு ஒத்துழைத்த உள் நாட்டு சக்திகள் கூறுவது, இவ்விரு கட்சிகளின் அடையாள அடிப்படையிலான ஜனநாயகக் கூட்டாட்சி என்பதை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள் என்பதுதான்.. இதை முழுமையாக ஏற்றுக் கொள்ள இயலாது இத்தகைய அணுகல் முறையின் பலனாக இதுகாறும் அதிகாரம் மறுக்கப்பட்ட தலித்கள் பெண்கள் ஜனஜாதிகள் முதலான பல்வேறு பிரிவினருக்கும் சென்ற தேர்தலில் உரிய பிரதிநிதித்துவம் கிடைத்ததைக் கண்முன் கண்ட மக்கள் இதை ஏற்கவில்லை என்பதாக இந்தத் தேர்தல் முடிவின் அடிப்படையிலிருந்து மட்டும் சொல்லிவிட இயலாது. இந்தத் தேர்தல் முடிவுகளில் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் பிரதிநிதித்துவம் எவ்வாறு அமைந்துள்ளது என்பது குறித்த விவரங்கள் எனக்கு இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் கட்சிகளால் களமிறக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலை வைத்துப் பார்க்கும்போதே முந்தைய தேர்தலைக் காட்டிலும் இபோது பிரதிநிதித்துவம் குறைந்துள்ளது விளங்குகிறது. தவிரவும் ஒப்புக்குப் பெண்கள் முதலான பிரிவினருக்கு வாய்ப்பளித்தபோதும் உறுதியாகத் தோல்வியைத் தழுவும் தொகுதிகளிலேயே கட்சிகள் அவர்களை வேட்பாளர்களாக்கியுள்ளன.
அடையாள அடிப்படையிலான ஜனநாயகம் குறித்த கருத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு மாஓயிஸ்டுகளும் மாதேசிகளும் தவறிவிட்டனர் என்கிற கருத்தை இது குறித்து ஆய்வு செய்துள்ளவர்கள் குறிப்பிடுகின்ரனர். தவிரவும் சென்ற அரசியல் சட்ட அவையில் இப்படிப் பல பிரிவினருக்கும் இடமிருந்தபோதும், இந்த ஐந்தாண்டு கால அரசியல் குழப்பங்களின் விளைவாக உண்மையான அரசியல் அதிகாரம் இந்தச் சக்திகளுக்கு மாற்றீடு செய்யப்படவில்லை. மீண்டும் அரசியலதிகாரம் காத்மாண்டுவை மையமாகக் கொண்ட மேட்டிமைச் சக்திகளிடமே குவிந்திருந்தன. விளைவாக அதிகாரப் பரவலின் பலன்களை மக்களால் ருசிக்க இயலாவில்லை.
தவிரவும் இந்த ஐந்தாண்டு இடைவெளியில் மாஓயிஸ்ட் கட்சி மட்டுமின்றி மாதேசிக் கட்சிகளும் பிளவுண்டன. மாஓயிஸ்டுகளைப் பொருத்தமட்டில் மோகன் வைத்யா மற்றும் சி.பி கஜுரெல் முதலானோர் தலைமையில் பிரிந்து ‘நேபாள கம்யூனிஸ்ட் கட்சி – மாஓயிஸ்டுகள்’ (CPN M) என்கிற பெயரில் இயங்கிய அமைப்பு மாஓயிஸ்டுகளைப் பெரிய அளவில் பலவீனப்படுத்தியது. ஐ.நா அமைப்பிடம் பதிந்த முன்னாள் மாஓயிஸ்டுகளின் புரட்சிகர இராணுவ வீரர்களின் எண்ணிக்கை 32,250. இதில் கிட்டத்தட்ட சரி பாதிப் பேர் இன்று மோகன் வைத்யா அமைப்பில் சேர்ந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பிளவே கூட வெளி நாட்டு சக்திகளால் முன்னெடுக்கப்பட்டது என்றொரு கருத்தும் உண்டு. எப்படியோ பொதுவுடைமைக் கட்சிகள் பிளவுறும்போது பிளவுண்ட கூறுகள் தமது வர்க்க எதிர்ப்பை எல்லாம் ஒத்தி வைத்டுவிட்டு பரஸ்பர எதிர்ப்பை முதன்மைப் படுத்துவது வழக்கம். அதுதான் இங்கும் நடந்தது. மோகன் வைத்யா குழுவினர் சில தொகுதிகளில் மாஓயிஸ்டுகளுக்கு எதிராக நேபாள காங்கிரஸ் மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்ததாகவும் சொல்லப்படுகிறது.
பிரிந்து சென்ற மோகன் வைத்யா குழுவினர் தேர்தல் புறக்கணிப்பிற்கு அறைகூவல் விடுத்தனர் ஒரு பொதுக் கூட்டத்தில் பங்கேற்பவர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்படும் என மறைமுகமாக கஜூரெல் எச்சரிக்கையும் விடுத்தார். எனினும் உற்சாகமான 78 சத வாக்களிப்பு என்பது அவர்களது கோரிக்கையையும் அரசியலையும் மக்கள் ஏற்கவில்லை என்பதை நிறுவியது.
எனினும் மாஓயிஸ்டுகள் ஓரம்சத்தில் கோட்டை விட்டுவிட்டார்கள் என்பதைச் சொல்லித்தான் ஆகவேண்டும். ஆயுதப் போராட்டத்தையே நடைமுறையாகக் கொண்டிருந்த அவர்களுக்கு இந்தப் புதிய அரசியலின் விதிகளுக்கும் இலக்கணங்களுக்கும் தக தங்களைத் தகவமைத்துக் கொள்ள இயலவில்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் மக்களிடம் அவர்களின் அணுகல் முறைகள் முரட்டுத் தன்மாக இருந்ததைப் பலரும் குறிப்பிடுகின்றனர். அகன்ற பெரிய கொள்கை மோதல்களுக்கு முதன்மை அளித்த இவர்கள் அதிகாரத்தில் அமர்ந்தபோது ஆளுகைக்கு (governance) முக்கியத்துவம் அளிக்கவில்லை. அதேபோல வென்ற மாஓயிஸ்ட் வேட்பாளர்கள் தொகுதிப் பிரச்சினைகளிலும் நாட்டம் செலுத்தவில்லை. பெரும் செல்வாக்குப் படைத்த தலைவரும் 2008 தேர்தலில் பெரு வெற்றி பெற்றவருமான பிரசாண்டா ‘காத்மாண்டு -10’ தொகுதியில் இம்முறை இரண்டாவதாகக் கூட வர இயலாமல் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுப் படு தோல்வி அடந்ததற்கு இது ஒரு காரணமாக்ச் சொல்லப்படுகிறது. இப்படி ஆளுகையில் உரிய கவனம் செலுத்தாததன் விளைவு முடியாட்சியைத் தூக்கி எறிந்த பின்னும் கூட மேட்டிமைச் சக்திகளின் அதிகார மையத்தைத் தகர்க்க இயலாமைக்கும் இட்டுச் சென்றது.
புரட்சிகர அரசியலை முன்வைப்பவர்கள் இன்றைய ஜனநாயக முறைக்குத் திரும்பும்போது இதற்குரிய விதிகளைப் புறக்கணித்துவிடலாகாது என்பது நேபாளம் கற்றுத் தரும் ஒரு பாடம். இதன் பொருள் தேர்தல் அரசியலின் ஊழல்களுக்கும் போலித் தனங்களுக்கும் தகவமைந்து போவது என்பதல்ல. அப்படி ஆகாமலேயே சாதாரண மக்களின் பிரச்சினைகளிலும் ஆளுகையிலும் கருத்தூன்றிச் செயல்பட்டு ஒரு வித்தியாசத்தை அவர்கள் நிலை நாட்ட வேண்டும்.
பிரசாண்டா, ஹிசிலா யாமி (பாபுராம் பட்டாராயின் மனைவி) ஆகியோரது மேட்டிமைதனமான வாழ்க்கை முறையையும் மக்கள் ரசிக்கவில்லை. இங்கு மக்களின் ஒரு மனப்பாங்கை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழில் ஒரு கதையுண்டு ஒரு பிச்சைக்காரருக்கு ஒரு பெண் தினசரி பிச்சையிடுவாள். பக்கத்து வீட்டுப் பெண் பிச்சையிட மறுத்துவிடுவாள். அவர் ஒன்றும் சொல்லாமல் போய்விடுவார். ஒரு நாள் எப்போதும் பிச்சையிடும் பெண் இல்லை என்பாள். உடனே அந்தப் பிச்சைக்காரர் அவளைத் திட்டுவார். அந்தப் பெண், “தினசரி பிச்சையிடாத பக்கத்து வீட்டுக்காரியைத் திட்ட மாட்டாய், ஒரு நாள் போடவில்லை என்பதற்காக் என்னைத் திட்டுகிறாயே” என்பாள். அதற்கு அவர், “என்னைக்கும் போடுற மகராசி இன்னைக்கும் போடல. தினசரி போடற கழுதை இன்னைக்கு ஏன் போடலை?” என்று கேட்டதாகக் கதை. இந்தக் கதையின் ஆபத்தான கூறுகள் ஒரு பக்கம் இருந்தபோதும், மக்களின் எதிர்பார்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்து ஒரு பாடத்தை நாம் இதிலிருந்து கற்றுக்கொள்ள இயலும். பூர்சுவா அரசியலாளரிடம் இந்தப் பண்புகள் இருப்பதைக் கண்டுகொள்ளாத மக்கள் அதே அணுகல்முறை இடதுசாரிகளிடமும் இருப்பதை அவ்வளவாக ஏற்பதில்லை. அவர்களிடம் ஒரு வித்தியாசமான அரசியலை மட்டுமல்ல அணுகல் முறைகளையும் எதிர்பார்க்கிறார்கள் என்பதுதான் அது. தவிரவும் பிரசாண்டா, யாமி முதலானவர்களிடம் காணப்பட்ட இந்த மேட்டிமைத் தனங்களை முதலாளிய இதழ்களும் பெரிதுபடுத்திக் காட்டின.
2008 தேர்தலில் அதிக எண்ணிக்கைகளைப் பெற்ற கட்சியாக இருந்தபோதும் மாஓயிஸ்டுகளுக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லை. எனினும் அவர்களே தொடர்ச்சியாகப் பதவியில் இருக்க முயன்றதான ஒரு கருத்தை மக்கள் மத்தியில் அவர்களின் செயல்பாடுகள் ஏற்படுத்தின. நேபாள காங்கிரஸ் அதிகாரத்திற்கு வந்துவிட இயலாது என்பதற்காகவே தலைமை நீதிபதி ரெக்மியை இடைக்கால அரசுக்குத் தலைமை ஏற்க மாஓயிஸ்டுகள் முன்மொழிந்தனர் என்றும் ஒரு கருத்துண்டு.
இந்தப் பதவிச் சண்டை மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு நெருக்கடிகளின் விளைவாகக் கட்சி அணிகளுக்கும் உரிய முக்கியத்துவத்தைதயும் தலைமை அளிக்கவில்லை என்றொரு குற்றச்சாட்டும் மாஓயிஸ்டுகள் மீது உண்டு. புரட்சிகர இராணுவத்தைச் சேர்ந்த 9 பேர்களைக் கட்சி அமைப்புக்கள் பரிந்துரைத்திருந்தபோதும் அவர்களில் ஒருவருக்கும் வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கப்படவில்லை. தலைமை கமான்டர் நந்த கிஷோர் புன்னுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டது. காத்மாண்டு 10 தொகுதியில் பிரசாண்டாவை எதிர்த்துப் போட்டியிட்டவர்களில் மாஓயிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும் ஒருவர்.
எப்படியோ இன்று மாஓயிஸ்டுகள் தோல்வியைத் தழுவியுள்ளனர். இதை அவர்கள் பெருந்தன்மையுடன் ஏற்றுச் செயல்படுவதே அவர்களது எதிர்கால அரசியலுக்கு ஏற்றது. தமது தோல்விக்கான முழுமையான சுய பரிசோதனை ஒன்றை அவர்கள் செய்து கொள்ள வேண்டும். நேபாள காங்கிரசும் நேபாள கம்யூனிஸ்டும் இரண்டும் சேர்ந்து செயல்படப்போவது உறுதி. எனினும் அப்படியும் கூட மூன்றில் இரு பெரும்பான்மைக்கு மேலும் 30 உறுப்பினர்களின் ஆதரவு அவர்களுக்குத் தேவை. தவிரவும் நேபாள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே மாஓயிஸ்ட் கட்சிக்கு எதிரான ஒரு ஒற்றுமை இருந்தபோதும் கருத்து மாறுபாடுகளும் உண்டு. எடுத்துக்காட்டாக நேபாள கம்யூனிச்ட் கட்சி வேறொரு குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனச் சொல்வது இத்தகைய வேறுபாடுகளில் ஒன்று.
மாஓயிஸ்டுகள் முன்வைத்த கருத்தொருமிப்பு அடிப்படையிலான அரசியல் சட்ட அவை என்கிற கருத்தை ஏற்கத் தயாராக இருப்பபதாகவும் இன்று அவர்கள் கூறியுள்ளனர். இப்படியான கருத்தொற்றுமை அடிப்படையிலான அரசியல் சட்டமே வலுவுடையதாக இருக்கும். எனினும் மாஓயிஸ்டுகளும் மாதேசிகளும் இன்று படுதோல்வி அடைந்துள்ளதை மனப்பூர்வமாக ஏற்று சில விட்டுக் கொடுத்தல்களுக்கு அவர்கள் தயாராக வேண்டும்.
இந்திய அனுபவம் ஒன்றையும் அவர்கள் கணக்கில் கொள்ளலாம். கருத்தொருமிப்பு உடனடியாகச் சாத்தியமில்லாததன் விளைவாக அரசியல் சட்ட அவை தன் பணியை முடிக்க இயலாத நிலை வந்துவிடலாகாது என்பதற்காக அம்பேத்கர் அவர்களின் கூர்த்த அறிவு முன் வைத்த ஒரு வழிமுறைதான் அரசியல் சட்டத்தை “அடிப்படை உரிமைகள்” எனவும் “வழிகாட்டு நெறிமுறைகள்” எனவும் இரண்டாகப் பிரிப்பது. அடிப்படை உரிமைகள் உஅடனடியாக வழங்கப்படுதல் வேண்டும் வழிகாட்டு நெறிமுரைகளில் கண்டுள்ள அம்சங்கள் காலப்போக்கில் கருத்தொற்றுமையின் அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும். மாஓயிஸ்டுகள் இந்த வடிவத்தைக் கவனமாகப் ப்ரிசீலிக்க வேண்டும்.
ஆசியாவிலேயே பொருளாதார வளர்ச்சியிலும், தனிநபர் வருமானத்திலும், வேலை வாய்ப்ப்பிலும் மிகவும் பின்தங்கிய நாடு நேபாளம் என்பதைக் கருத்திற்கொண்டு நேபாள அரசியல் கட்சிகள் ஆளுகைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இந்தியா தன் அரசியல் தந்திரத்தில் தற்காலிக வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் இப்படி நேபாளத்தைத் தன் மாநிலங்களில் ஒன்று போல நடத்தி மேலாண்மை செய்வதை அது தொடர்ந்தால் இந்திய வெறுப்பு அங்கு அதிகமாகும். சிக்கிம் உதாரணம் அவர்களை ஏற்கனவே அச்சுறுத்திக் கொண்டுள்ளதை இந்தியா கவனம் கொள்ள வேண்டும். நேபாளத்தையும் பகைத்துக் கொள்வது இந்தியாவிற்கு நல்லதல்ல.