[நான் இட்ட பதிவொன்றில் ஒரு நண்பர் கேள்வி ஒன்றை முன்வைத்திருந்தார்.அந்தக் கேள்வியும் அதற்கு நான் அளித்திருந்த பதிலும். பதில் இங்கே சற்று விரிவாக்கப்பட்டுள்ளது.]
Siva Kumar ஐயா, தமிழ், தமிழ் தேசியம், 100 ஆண்டுகளாக வேர் ஊன்றியுள்ள தமிழகத்தில் சமீபஆண்டுகளில் தான் இவ்வெறுப்பு அரசியல் துளிர்விடுகிறது, அதற்கு என்ன காரணம் இருக்கலாம்?
Marx Anthonisamy 1. ஒரு நூற்றாண்டாக வேரோடியுள்ள தமிழ்த் தேசியத்தில் சில நியாயங்கள் இருந்தன. சொல்லப்போனால் ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாறு உடையது இது. வட மொழி ஆதிக்கம், பார்ப்பன மயமாக்கல் ஆகியவற்றிற்கு எதிராகக் கிளர்ந்தது அது. அது கூறிய வடவர் ஆதிக்கம் என்பது இன வெறுப்பின் அடிப்படையிலானதல்ல. மாறாக வட நாட்டு பண முதலைகள் மற்றும் முதலாளிகளின் ஆதிக்கத்தை எதிர்த்தது அது. அது என்னாளும் வடநாட்டிலிருந்து இங்கு வந்து எளிய தொழில்களைச் செய்து பிழைப்பு நடத்திவந்த தொழிலாளிகளையோ இல்லை 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து தம் மூதாதையர் மண்ணில் வேரிழந்த மக்களையோ எதிரியாகக் கட்டமைத்ததில்லை. அது என்றைக்கும் இங்குள்ள அருந்ததிய மக்களை, அவர்கள் தெலுங்கு பேசுகின்றனர் என்பதற்காக இட ஒதுக்கீடு கொடுக்கலாகாது எனச் சொன்னதில்லை. பெரியாரை தமிழின விரோதி எனச் சொல்லத் துணிந்ததில்லை. இன வெறுப்பு அரசியலைச் சுய முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தில் கொண்டதில்லை. மதிப்பிற்குரிய பெருஞ்சித்திரனார் இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. (பார்க்க: நான் எழுதிய ‘பெரியாரைத் துணைக் கொண்டவர்’ எனும் கட்டுரை).
2. தமிழ்த் தேசியத்தில் இரு போக்குகள் உண்டு என்பதை நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். இந்த இரண்டாவது போக்கை உருவாக்கி முன்னெடுத்ததில் ம.பொ.சி, பெங்களூரு குணா போன்றோருக்கு முக்கிய பங்குண்டு. அவர்கள் பார்ப்பன எதிர்ப்பைத் தணித்தனர். மாறாக தமிழகத்தில் 300 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருபவர்களை எதிரியாக்கினர். இவர்களுக்கு இன்றளவும் பார்ப்பன ஆதரவு உண்டு, எல்லா மட்டங்களிலும் உண்டு. ஆனாலும் இவர்களுங்கூட எந்நாளும் பாசிச அரசியல் யுத்திகளைக் கையில் எடுத்ததில்லை.
சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் குறிப்பாக 1940 – 80 காலகட்டம் உலகெங்கிலும் பாசிசம் பின்னடைந்த காலம். சோவியத் வீழ்ச்சிக்குப் பின் மீண்டும் பாசிசம் புத்துயிர்ப்புக் கொண்ட சூழலில் தற்போது உருவாகியுள்ள தமிழ்த் தேசிய அமைப்புகள் (இதனைத் தமிழ்த் தேசியத்தின் மூன்றாவது கட்டம் எனலாம்), உலகளாவிய இந்தப் பாசிசச் சூழலின் ‘மாடலி’ல் இங்கு இன்று தம்மைக் கட்டமைத்துக் கொண்டுள்ளன. இவர்கள் நேரடியாக சிவசேனா முதலான பாசிச அமைப்புகளுடன் தொடர்பு கொண்டுள்ளனர். இவர்கள் மார்க்சீய வெறுப்பு மட்டுமல்ல அது முன்னெடுத்த வரலாற்று ஆய்வுகளில் குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்கின்றனர். சிவசேனா கட்சிக்கும் மோடிக்கும் பிராச்சாரத்திற்கு அம்மாநிலங்களுக்குச் செல்கின்றனர்.
பெருஞ்சித்திரனார் அவர்கள் இப்போது உயிருடன் இருந்திருந்தால் அவர் மோடியை ஆதரிப்பார் எனக் கற்பனை கூடச் செய்ய இயலாது. ராஜராஜ சோழன் போன்றோரின் நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையை ப் பொற்காலம் என நாக்கூசாமல் இன்று இவர்கள் சொல்வது போல அவர் சொல்லியிருக்க மாட்டார். பார்ப்பனமயமாக்கல் மட்டுமல்ல சமஸ்கிருத மயமாக்கலிலும் பிற்காலச் சோழ மன்னர்களுக்கு முக்கிய பங்குண்டு. கட்டாயமாகப் பெண்கள் கொண்டுவரப்பட்டு இங்கே கோவில்களில் தேவரடியார்கள் ஆக்கப்பட்டதை எல்லாம் தமிழ்ப் பெண்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு எனச் சொல்கிற அளவிற்கு இன்றைய தமிழ்த் தேசியம் செல்கிறதே, தஞ்சைப் பிருகதீஸ்வரப் பெருவுடையார் கோவிலின் ‘கும்பாபிஷேக’ ஆயிரமாண்டுக் கொண்டாட்டத்திற்குச் சிறப்பு மலர் வெளியிடுகிறதே இந்தக் கொடுமைகளை எல்லாம் பெருஞ்சித்திரனார் போன்றோர் செய்திருக்க மாட்டார்கள். தமிழ்ச் சாதிகளின் கூட்டமைப்பு என்றெல்லாம் தமிழின் பெயரால் சாதிகளை அங்கீகரிக்கும் இழி நிலைக்கும் சென்றிருக்க மாட்டார்கள். தோழர் தமிழரசன் போன்றோரையும் நாம் இவ்வரிசையில்தான் வைத்துக் காண இயலும்.
ஒருவேளை இன்று ம.பொ.சி இருந்திருந்தால் அதைச் செய்திருக்கக்கூடும். சங்கராச்சாரிகளைப் போற்றத் தயங்காதவர் அவர். இந்து மாநாடொன்றில் கலந்து கொண்டு தமிழ் அடையாளத்தைக் காட்டிலும் இந்து அடையாளம் இன்னும் விசாலமானது எனப் பேசியவர் அவர். பெங்களூரு குணாவும் அதைச் செய்திருக்கக் கூடும். தமிழர்களின் காணியாட்சி என சோழர் கால நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையைக் கொண்டாடியவர்களில் ஒருவர் அவர். மராட்டியராம் அம்பேத்கரை இங்குள்ள தாழ்த்தப்பட்டவர்கள் கொண்டாடுகின்றனரே என நொந்தவர் அவர். அருந்ததிய மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்றவர் அவர்.
குறைந்த ஊதியத்தில் உழைத்துப் பிழைக்க வந்து, எந்த விதப் பணியிடப் பாதுகாப்பும் இல்லாமல் இங்குள்ள ஒப்பந்தக்காரர்களாலும், முதலாளிகளாலும் கடும் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் இந்தப் பிழைக்க வந்த அப்பாவிகளை அடித்துத் துரத்த வேண்டும் எனச் சொல்கிற பாசிச அரசியலுக்கு இன்றைய தமிழ்த் தேசியம் செல்வதை நீங்கள் இந்தப் பின்னணியிலிருந்து பார்க்க வேண்டும்.
சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். தமிழ்த் தேசியத்தை ஒற்றைப் போக்குடையதாகக் கருத வேண்டியதில்லை.அதில் பலபோக்குகள் உண்டு. சாதி, இந்துத்துவம், சமஸ்கிருத மயம் ஆகியவற்றை எதிர்த்த போக்கை முன்னெடுத்துத் தமிழ்த் தேசியம் பேசியவர்கள் ஒரு பக்கம். இவற்றை முன்னிலையாக்காமல் இந்துத்துவத்துடன் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் சமரசம் கொண்டு தமிழ்த் தேசியம் பேசியவர்கள் இன்னொரு போக்கினர். இந்த இரண்டாவது போக்கினரும் கூட இங்கு செழித்திருந்த உள்ளடக்கும் பண்பாடு (inclusive political culture), உலகளாவிய பாசிச எதிர்ப்பு ஆகிய பின்னணியில் தங்கள் செயல்பாடுகளில் சிவசேனாவையும் இந்துத்துவ அமைப்புகளையும், மோடி போன்றோரையும் வெளிப்படையாக ஆதரிக்க இயலாது இருந்தமைக்கு அன்றைய இந்தப் புறச் சூழல்களே காரணமாயிருந்தன. இன்று காலம் மாறியுள்ளது. இந்த மாறியுள்ள சூழலைத்தான் “மோடி அலை வீசுகிறது” என்கிறார்கள். இந்த அலை வீச்சில் இவர்களின் சுய உருவம் வெளுத்து அம்பலமாகிறது.