இந்தத் தேர்தலில் நமது நிலைபாடு என்னவாக இருக்க முடியும்?
யோசித்துப் பார்த்தால் ஒரு எதிர்மறையான பதிலைத்தான் நாம் சொல்ல வேண்டியதாக இருக்கும். ஆம். யாருக்கு ஓட்டுப் போடக் கூடாது என்பதைத்தான் நாம் அழுத்திச் சொல்ல முடியும். அதிலிருந்துதான் யாருக்கு வாக்களிக்கலாம் என்பதை நாம் தருவித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
உறுதியாக பா.ஜ.கவையோ, அதை ஓர் அங்கமாக்கிக் கூட்டணி அமைத்திருக்கும் எந்த ஒரு கட்சியையுமோ நாம் ஆதரிக்கவே முடியாது. அந்த வகையில் இந்த முறை நாம் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியைத்தான் ஆதரிக்க முடியும். இப்படியான ஒரு எதிர்மறை அணுகல் முறையின் ஊடாகத்தான் நாம் நம் ஆதரவு குறித்து முடிவெடுக்க வேண்டியதாக நம் சூழல் உள்ளது. இப்படியான ஒரு நிலை இன்று ஏற்பட்டுள்ளது என்பது ஏதோ இந்த மாநிலத் தேர்தல் குறித்த ஒன்று மட்டுமல்ல. அகில இந்திய அளவிலான தேர்தல்களிலும் இப்படித்தானே நடக்கிறது. காங்கிரஸ் கூட்டணியை நாம் ஆதரிக்க நேர்வதும் இப்படித்தானே. ஒருவேளை பா.ஜ.க எனும் கட்சியே இல்லை என வைத்துக் கொள்வோம். அப்போது நாம் காங்கிரசை ஆதரிப்போமா என்பது ஒரு கேள்விக் குறிதான். அப்படியான சூழலில் காங்கிரசை நிராகரிப்பதற்கு நமக்குக் காரணங்கள் உண்டு. குறிப்பாகப் பொருளாதாரக் கொள்கையில் காங்கிரசுக்கும் இப்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ள பா.ஜ.கவுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. ஒன்றை நாம் உறுதியாகச் சொல்ல முடியும். பொருளாதாரக் கொள்கைகளைப் பொருத்த மட்டில் காங்கிரசுக்கும் பா.ஜ.கவிற்கும் உள்ள வேறுபாடுகள் என்பன அளவு ரீதியானவைதான். பண்பு ரீதியானவை அல்ல. தனியார் மயம், கார்பொரேட் மயம், அமெரிக்க ஆதரவு என்பவற்றிலெல்லாம் கொள்கை அளவில் காங்கிரசுக்கும் பா.ஜ.கவுக்கும் என்ன வேறுபாடு? பெரிய அளவில் ஏதும் இல்லை. ஒபாமாவுடன் மன்மோகன் சிங் அணுக் கொள்கை தொடர்பாகச் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் இந்தியா எதைஎல்லாம் விட்டுக் கொடுத்தது என்பதை ஒபாமா தன் நாட்டிற்குச் சென்று அவர்களின் செனட் முதலான அவைகளில் சொன்ன பிறகுதானே நம்மூர் மக்களுக்குத் தெரிய வந்தது. அப்படி நம் மக்களுக்கே சொல்லாமல், நமது உயிர் காக்கும் உரிமைகளை விட்டுக் கொடுத்து நடந்த ஒரு ஒப்பந்தம்தானே அது.
இதேபோல கார்பொரேட் மயம் ஆவது என்பதை எடுத்துக் கொண்டாலும் காங்கிரசுக்கும் பா.ஜ.கவுக்கும் உள்ள வேறுபாடு என்பது ஒரு அளவு மாற்றம்தான். இரண்டுக்கும் உள்ள வேறுபாடு கொஞ்சம் கூடுதல் குறைச்சல் என்பதுதான். மற்றபடி தொழில்களைக் கார்பொரேட் மயப்படுத்துவது என்பதில் பெரிய வேறுபாடுகள் இரண்டு கட்சிகளுக்கும் இடையே கிடையாது. வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். மன்மோகன்சிங் தலைமையில் இந்தியா இருந்தபோது இப்படி ஒரு கொரோனா தாக்குதல் ஏற்பட்டிருந்தால் மோடி ஆட்சியில் புலம் பெயர் தொழிலாளிகள் இவ்வாறு வீதிகளில் செத்துத் தொலைந்தது போல அப்போது நடந்திருக்காது. கொஞ்சம் ‘cash transfer’ (பண விநியோகம்) நடந்து இப்படியான நிலை தவிர்க்கப் பட்டிருக்கலாம். பிள்ளைகள் புல்லைப் பிடுங்கி அவித்தும் தின்றிருக்கும் அவல நிலையைப் பத்திரிகைகள் படங்களுடன் பிரசுரிக்கும் நிலை ஏற்படாமல் போயிருக்கலாம். அந்த அளவுக்குத்தான் பொருளாதாரத் துறை, உலக மயம் முதலானவற்றில் காங்கிரசுக்கும் பா.ஜ.கவுக்கும் உள்ள வேறுபாடுகள். மற்றபடி நவதாறாளவாதப் பொருளாதாரம் என்பதை நடைமுறைப் படுத்துவதில் இரண்டுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை.
பண்பு மாற்றம் என இங்கு சொல்வது அரசியலைப் பொருத்தமட்டில் முழுமையான கொள்கை மாற்றத்தைத்தான். காங்கிரசுக்கு இந்த நாட்டை ஒரு இந்து நாடாக ஆக்கும் வெளிப்படையான திட்டமோ இல்லை இரகசியத் திட்டமோ உறுதியாகக் கிடையாது எனலாம். எனினும் அவர்களும் கூட இன்று வெளிப்படையாகவும் நேர்மையாகவும் மகாத்மா காந்தியைப்போல உறுதியாக நின்று மத அடையாள அரசியலை எதிர்காமல் அனுசரித்துப் போகிற அளவிற்கு இந்துத்துவம் வலுவாகி உள்ளது. ராகுல் காந்தி சட்டையைக் கழற்றி விட்டு ஆலயம் ஒன்றுக்குள் சென்று நெற்றியில் பட்டை போட்டுக் கொண்டு ”நானும் இந்துதான்”.. ”நானும் இந்துதான்” என்று முரசறைய நேர்ந்ததைப் பார்த்தோமே.
தி.மு.க பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. தாங்கள் ஒன்றும் பெரியார் வழியில் வந்தவர்கள் இல்லை. நாத்திகம் எங்கள் கொள்கை அல்ல. பெரும்பான்மை மதவாதம் பற்றிப் பேசுவது எங்கள் வேலையில்லை என்பதாகத்தான் அவர்கள் தம் நிலைபாட்டை இப்போது முன்வைக்கின்றனர். இந்தக் கட்டுரையை நான் தட்டச்சு செய்துகொண்டுள்ள அதே நேரத்தில் இன்றைய தி.மு.க தேர்தல் அறிக்கை குறித்து தீவிர சங்கியான ரங்கராஜ் பாண்டேயின் கருத்தொன்று வெளி வந்துள்ளது. தி.மு.க தேர்தல் அறிக்கையில் அட்டையைக் கிழித்துவிட்டுப் பார்த்தால் அது பா.ஜ.க தேர்தல் அறிக்கை என்பது போலத்தான் உள்ளது” – என அவர் கூறி அதைப் பாராட்டியுள்ள செய்திதான் அது.
இடது, வலது கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து இருபதாண்டுகளுக்கும் மேல் மே.வங்கத்தில் ஆளும் கட்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் இன்று அவர்கள் எதிர்க் கட்சியாகக் கூட வரும் வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. அங்கே அவர்களும், அவர்களின் பிரதான எதிர்க் கட்சியாக இருந்த காங்கிரசும் இன்று கூட்டணி அமைத்தும் கூட வரும் தேர்தலில் மூன்றாவது அணியாக வரும் நிலைதான் ஏற்பட்டுள்ளது. கம்யூனிஸ்டுகள் அங்கு ஆண்ட அந்த இருபதாண்டுகள் அத்தனை அத்து மீறல்களுடன் இருந்ததை வரலாற்று ஆசிரியர்கள் இன்று சுட்டிக் காட்டுகின்றனர்.
எனினும் இன்று இந்திய அளவில் இப்படி காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் ஆகியோரைத்தான் நாம் ஆதரிக்க வேண்டி உள்ளதற்கு முக்கிய காரணமாக இந்துத்துவ ஆபத்து ஒரு பொது மக்கள் எதிரியாக நம் முன் உள்ளது. அது ஒன்றிற்காகவே நாம் இப்படியான ஆகக் கொடூரமான வாரிசு அரசியல், ஊழல்கள், காடையர்தனம் இன்ன பிற எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு நாம் இந்த “மதச் சார்பற்ற கூட்டணிகளுக்கு” வாக்களிக்க வேண்டியவர்களாக உள்ளோம். ஏனெனில் இந்துத்துவம் அரசாள நேர்வது எல்லாவற்றையும் விடப் பெரும் கொடுமை என்பதுதான் முக்கிய காரணம். அது மட்டுமல்ல இன்றைய இந்துத்துவ வெற்றியின் ஊடாக அவர்கள் கற்றுக் கொண்டுள்ள பாடம் அவர்களை ஒரு சுய பரிசோதனை செய்யும் வாய்ப்பிற்குத் தள்ளியுள்ளது என நாம் நம்பலாம்.
எதற்கு நான் இத்தனையையும் சொல்கிறேன் என்றால் இந்துத்துவத்தின் வளர்ச்சி வேகம் ஆக அச்சத்தை ஊட்டக் கூடிய நிலையில் உள்ளது. மதவாத சக்திகளை எதிர்ப்பதே இன்று நம் முக்கிய கடமையாக உள்ளது. எனவே வாக்குகளைப் பிரித்து நாமும் தோற்று, மதச் சார்பற்ற கட்சிகளையும் தோற்கடிக்கக் கூடாது என்கிற நிலையை நாம் ஏற்கிறோம். ஆனால் இந்த இக்கட்டான நிலையை மதச் சார்பற்ற பெரிய கட்சிகள் முற்றிலும் அறமின்றித் தங்களின் நலனுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் நிலை வேதனையாக உள்ளது. முஸ்லிம் கட்சிகள், கம்யூனிஸ்டுகள் ஆகியோர் இந்தத் தேர்தல் கூட்டணி உருவாக்கத்தின் போது எத்தனை கேவலமாக நடத்தப்பட்டனர்? முஸ்லிம்கள் மத்தியில் இந்திய அளவில் வளர்ந்து வரும் எஸ்.டி.பி.ஐ மற்றும் உவைசின் மஜ்லிஸ் கட்சி ஆகியன இந்தத் தேர்தல் கூட்டணியில் எப்படி விரட்டி அடிக்கப்பட்டன என்பதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருந்தோம். கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டிற்கும் சேர்த்து பன்னிரண்டே தொகுதிகள் என்பதெலாம் எந்த ஊர் நியாயம்? இரண்டுக்கும் சேர்த்து ஒரு 30 தொகுதிகள் ஒதுக்கக் கூட அவர்களுக்குத் தகுதி இல்லையா? தனியாக நின்றால் வெல்ல முடியாது எனும் நிலையைப் பெரிய கட்சிகள் எத்தனை மோசமாகப் பயன்படுத்திக் கொண்டன! பல்வேறு வகைகளில் தனித்துவமாகவும் கொள்கை வேறுபாடுகளுடனும் விளங்கும் கட்சிகளை எல்லாம் தங்கள் சின்னத்தில் போட்டியிடச் சம்மதித்தால்தான் கூட்டணியில் இடம் என மிரட்டும் கூட்டணிச் சர்வாதிகாரம் எத்தனை கொடிது?
முஸ்லிம் கட்சிகளின் நிலை இப்படி என்றால் தமிழ்க் கிறிஸ்தவ மக்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. தமிழகத்தில் முஸ்லிம்களைக் காட்டிலும் இவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் முஸ்லிம்கள் மத்தியில் உள்ள அரசியல் பிரக்ஞையையும் ஒற்றுமையையும் கிறிஸ்தவர்களிடம் காண முடியாது. கிறிஸ்தவத்திற்குள் ஊடுருவியுள்ள சாதி வேறுபாடுகள், தீண்டாமை முதலியன இப்படியான ஒரு அரசியல் ஒற்றுமை அவர்கள் மத்தியில் உருவாகாததில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அது மட்டுமல்லாமல் உலகளவில் மிகவும் செல்வாக்காக உள்ள தம் மத நிறுவனங்கள் தங்களுக்கு ஆதரவளிக்கும் என்கிற நம்பிக்கையும் அவர்கள் அரசியல் படுத்தப்படாமல் இருப்பதில் ஒரு பங்கு வகிக்கிறது. அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நான் ஒரு நிகழ்வை நினைவூட்டுவது வழக்கம். சுமார் எழுபதாண்டுகளுக்கு முன் கிறிஸ்தவர்கள் ஒருமுறை திரளாக வந்து அண்ணல் அம்பேத்கரைச் சந்தித்து அறிவுரை கேட்டார்கள். சற்றும் தயங்காமல் அம்பேத்கர் சொன்னதின் சாராம்சம் இதுதான்: “நீங்கள் முதலில் அரசியல்படுங்கள்… தலித்கள் உங்கLளைவிடக் கல்வி முதலியவற்றில் முன்னேற்றம் அடையாமல் இருந்தபோதும் இன்று ஓரளவு அவர்கள் படித்து மேலுக்கு வருவதற்கெல்லாம் காரணம் அவர்கள் அரசியல் பட்டிருப்பதுதான். நீங்களும் அரசியல் படுங்கள்..” – என்றார். மீண்டும் இந்தத் தேர்தல் நேரத்திலும் அதைத்தான் சொல்ல வேண்டி உள்ளது. கிறிஸ்தவர்களும் ஒரு அரசியல் உணர்வுமிக்க சமூகமாகப் பரிணமிக்க வேண்டும். இன்றைய சூழலில் பா.ஜ.க ஆட்சி என்பதன் ஆபத்தை உணர வேண்டும். அதற்கு யாருடன் இணைந்து நிற்பது எனும் தெளிவு வேண்டும்.
இந்தியா ஏராளமான மக்கள் தொகை உள்ள ஒரு நாடு. பல்வேறு மொழிகள், பல்வேறு மதங்கள், பல்வேறு சாதிகள் என உள்ள ஒரு நாடு. இங்கே அமெரிக்கா போலவெல்லாம் இரு கட்சி ஆட்சி முறை அமைய முடியாது. அமையவும் கூடாது. ஆனால் இன்றைய கூட்டணிச் சூழல் அப்படி ஒரு இரு கட்சி ஆட்சி முறையை உருவாக்கியுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும். இப்படிச் சாதி, மதம், பொருளாதார வேறுபாடுகள், இனம், மொழி என இத்தனை வேறுபாடுகள் மிக்க ஒரு மக்கள் திரளுக்கு இப்படிக் கூட்டணி வடிவத்தில் இரு கட்சி ஆட்சி பொருத்தமில்லை. ஆனால் இன்றைய கூட்டணிக்குள் நடந்த தொகுதிப் பகிர்வுகளில் சிறு கட்சிகள் அவற்றுக்குரிய மதிப்புகளுடன் நடத்தப்பட்டனவா எனும் கேள்வியை நாம் சற்றே எழுப்பிப் பார்க்க வேண்டி உள்ளது. கூட்டணிக் கட்சிகள் தம் தனித்துவத்தைக் காட்டும் வண்ணம் தனிச் சின்னங்களைப் பயன்படுத்துவது என்பது ஒரு அடிப்படை ஜனநாயகம் இல்லையா? அது மறுக்கப்படும்போது அது ஒருவகையில் அக்கட்சிகளின் அடையாளத்தை மறுப்பதுதானே.
எப்படியோ பா.ஜ.க இல்லாத வலுவான கூட்டணி ஒன்றாவது நமக்குக் கிடைத்துள்ளதே என்பதுதான் நமக்கு உள்ள ஒரே ஆறுதல்.
இங்கே ”வலுவான” என நான் ஏன் சொல்கிறேன் என்றால் இந்த மதச்சார்பற்ற கூட்டணிக்கு எதிராகக் கிளம்பியுள்ள கமல ஹாசன், சீமான் முதலானோரின் கட்சிகள் மதச் சார்பற்ற வாக்குகளைப் பிரித்து மதவாத சக்திகளுக்குத் துணை புரியும் நிலையை எண்ணித்தான். தலித்கள், சிறுபான்மை மக்கள் ஆகியோர் இதில் ஏமாறக் கூடாது. கவனமாக இருத்தல் அவசியம்.
இத்தனையையும் கணக்கில் கொண்டுதான் நாம் வரும் தேர்தல் குறித்த முடிவை எடுத்தாக வேண்டும். ஒரு காலத்தில் காமராசர் “எல்லாம் ஒரு குட்டையில் ஊரிய மட்டைகள்’ என்றார். நாம் அப்படிச் சொல்லாவிட்டாலும் நாம் ஆதரிக்க நேர்பவர்கள் குறித்து அதிக நம்பிக்கை நமக்குத் தேவை இல்லை. கட்சிக்காரர்கள் வேண்டுமானால் அப்படி நம்பிக்கை ஊட்டலாம். மக்கள் அப்படி நம்ப வேண்டியதில்லை. ஆனாலும் இன்று நாட்டை எதிர்நோக்கியுள்ள ஆபத்தை மனதிற்கொண்டு நாம் பா.ஜ.கவையும் அதன் கொடியை ஏந்தி வலம் வரும் எடப்பாடி கும்பலையும் இந்தத் தேதலில் நிலைகுலைய வைப்பது அவசியம்.
முன்னாள் நக்சல்பாரி இயக்கங்களிலிருந்து பிரிந்து இன்று பல்வேறு குழுக்களாகச் செயல்படும் சுமார் 50 சிறு அமைப்புகள் சேர்ந்து இந்தத் தேர்தலை ஒட்டிச் சமீபத்தில் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டார்கள். அதில் அவர்கள் ஒற்றை வரியில் தங்கள் முடிவை அறிவித்தனர். அது, “பா.ஜ.க வை வீழ்த்துவோம்” என்பது. அடுத்த சில தினங்களில் அந்த அந்த ஒருமிப்பை ஏற்பாடு செய்ததில் முன்னணியாக நின்ற தோழர்கள் நால்வர் கொடும் UAPA சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இன்றும் அவர்கள் கோவைச் சிறையில் வாடுகின்றனர். ”பா.ஜ.கவை வீழ்த்துவோம்” எனும் குரலை பாசிஸ்டுகள் எத்தனை கொடூரமாய் எதிர்கொள்கின்றனர் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு இது.
பா.ஜ.கவை வீழ்த்துவோம்! பா.ஜ.க இல்லாத கூட்டணியை ஆதரிப்போம்!!.