கொடிது கொடிது குண்டர் சட்டம்

தமிழக அரசு “குண்டர் சட்டத்தில்” இப்போது (2014 ஆகஸ்ட்) கொண்டுவந்துள்ள மாற்றங்கள் மிகவும் மோசமானவை. தடுப்புக் காவல் சட்டங்கள் எல்லாமே அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளை இல்லாமல் செய்வதுதான். ஆனாலும் அரசுகள் எப்போதுமே தன் மக்களுக்கு முழுமையான அடிப்படை உரிமைகளை வழங்கியது இல்லை. பண்டைய கிரேக்கக் குடியரசிலேயே ‘நெருக்கடிநிலையை’ அறிவிக்கும் உரிமையை (Iuitium) அரசு தன்கையில் வைத்திருந்தது என்கிறார் வாழும் ஃப்ரெஞ்ச் சிந்தனையாளர் Georgio Agamban. ‘அரசின் காரணங்களுக்காக’ (raison de etat) அடிப்படை உரிமைகளை  ரத்து செய்தால் பின் அதைக் கேட்கும் உரிமை மக்களுக்கு இல்லை. 1947 தொடங்கி இந்திய அரசு எந்நாளும் இப்படியான சட்டங்கள் இல்லாமல் வாழ்ந்தது இல்லை.

பிரிட்டிஷ் காலத்து தேசத்துரோகச் சட்டம் முதல், Defence of India Rules, MISA, TADA, POTA, NSA, ESMA, AFPSA, UAPA, மாநிலங்கள் தோறும் இயற்றப்பட்டுள்ள ஏகப்பட்ட COCA சட்டங்கள்… இப்படி எத்தனை எத்தனை. நீதிமன்றங்கள் எந்தக் காலத்திலும் இச்சட்டங்களை ‘அரசியல் சட்ட ஆளுகைக்கு எதிரானவை’ எனச் சொல்லி ரத்து செய்ததில்லை. வழமையான சட்டங்களைக் கொண்டு ஆட்சி நடத்தும் சூழல் உண்மையிலேயே அரசுக்கு இல்லையா என்கிற கேள்வியை அவை எழுப்பியதில்லை. மாறாக இப்படியான சட்டங்களை இயற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளதா இல்லையா எனக் கேள்வியைத் திருப்பிப்போட்டு இச்சட்டங்களுக்கு அவை ஏற்பு வழங்கிவிடுகின்றன.  தடுப்புக் காவல் சட்டங்களில் கைது செய்யப்படுபவர்கள் பிணையில் வெளிவர இயலாது.

குண்டர் சட்டம் போன்றவைகளைப் பயன்படுத்த அரசு சொல்லும் காரணத்தை மக்களின் பொதுப்புத்தியும் அப்படியே ஏற்றுக்கொள்கிறது. தொடர்ந்து குற்றங்களை இழைப்பவர்கள் (habitual offenders) மீது சாதாரணச் சட்டங்களைப் பயன்படுத்தினால் அவர்கள் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி வெளியே வந்துவிடுகின்றனர் என்பதுதான் அரசின்வாதம். இப்போது 1600 க்கும் மேற்பட்டவர்கள் குண்டர் சட்டத்தில் தமிழகச் சிறைகளில் உள்ளனர். (2009ல் இது 1690 ஆகவும், 2010ல் 1781 ஆகவும், 2011ல் 1364 ஆகவும் இருந்தது. இவர்கள் எல்லோரும் habitual offenders அல்ல .ஒரு சிலர் அப்படி இருக்கலாம். பலரை முதன் முறையாகக் கைது செய்து விட்டுப் பின் அவர்கள் சிறையில் உள்ளபோதே வேறு சில வழக்குகளை அவர்கள் மீது திணித்துப் பின் குண்டர் சட்டத்தையும் பிரயோகிக்கின்றனர். நான் அப்படிச் சிலருக்காக board முன்சென்றுவாதிட்டுள்ளேன். குண்டர் சட்டத்தை ஒருவர் மீது பிரயோகிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த ஐஏஎஸ்-கள் யாரும் தங்கள் மூளையையோ, மனத்தையோ பயன்படுத்தி இந்த ஆணையை இடுவதில்லை. காவல்துறை நீட்டுகிறதாளில் கையொப்பம் இடுவார்கள். அதற்குப் பின் பாதிக்கப்பட்டவரின் நெருங்கிய உறவினர்கள் 12 நாட்களுக்குள். இது தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என அரசிடம் விண்ணப்பிக்கலாம்.

இதெல்லாம் எத்தனை குரூர நகைச்சுவை பாருங்கள். அரசுதான் இப்படி அநியாயமாக அவர்களைக் கைது செய்கிறது. பிறகு அரசிடமே விண்ணப்பிப்பதால் என்ன பயன். யாருக்கும் அதன் மூலம் விடிவு கிடைதந்தாக வரலாறு இல்லை. பல நேரங்களில் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் கிடைக்கவில்லை எனக் கூறி உறவினர்களின் மனுக்களைத் தள்ளிவிடுவதும் உண்டு. பிறகு ஏழு வாரத்திற்குள் (50 நாட்கள்) இதற்கான ‘போர்ட்’முன் அவரைக் கொண்டுவந்துநிறுத்துவார்கள். அந்த போர்டில் ஓய்வுபெற்ற ஆம் “ஓய்வுபெற்ற”  ஒரு நீதிபதி உட்பட ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி, ஒரு அமர்வு நீதிபதி என மூவர் இருப்பர். ஒது ஒரு நிர்வாக விசாரணைக் குழுதான். அவர்கள் முன்பாதிக்கப்பட்டவர் அல்லது அவரது நெருங்கிய உறவினர், நண்பர்யாராவது போய்ப்பேசலாம்.

அவர்கள் வழக்குரைஞர்களாக இருக்கலாகாது என்பது நிபந்தனை.ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு இந்தப் பதவியே பெரியவரப்பிரசாதம். பிறகென்ன…. அந்த அறையில் அந்த மூன்று நீதிபதிகளுக்கும்முன் இரண்டுவட்டங்கள் போட்டிருப்பார்கள். இடப்புர வட்டத்தில் குற்றம் சுமத்தப்பட்டவர். வலப்புற வட்டத்தில் அவருக்காகப் போகிறவர்கள் நின்றுகொண்டு தங்கள் பக்க நியாயங்களைச் சொல்லலாம். நான் அப்படிப் போய் பேசிய சிலரில் கூடங்குளத்திலிருந்து வந்த பையன் ஒருவன். பெயர் சிந்துபாரத். எஸ்.பி. உதயகுமார் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அந்த பையனின் கேஸ்கட்டுகளை எல்லாம் படித்துவிட்டு ஒரு மனுவையும் தயாரித்துக் கொண்டு போயிருந்தேன். அந்த இளைஞன் இதற்குமுன் எந்த வழக்கிலும் தொடர்பில்லாதவன். போராட்டத்திலும் அவனுக்குப் பங்கில்லை. ‘ஃப்லெக்ஸ்போர்ட்’ எழுதுவது அவன் தொழில். போராட்டக்காரர்களுக்கு ‘ஃப்லெக்ஸ்போர்ட்’ தயாரித்துக் கொடுக்கக்கூடாது எனப் போலீஸ் எச்சரித்துள்ளது. அவன் என்ன செய்வான். அந்த ஊரில் கடை வைத்திருப்பவன். அந்த மக்கள் போராடுகின்றனர். எப்படி அவனால் மறுக்க முடியும்? அவனுக்குத் திருமணமான பன்னிரண்டாம் நாள் அவனைக் கைது செய்து குண்டர் சட்டத்தில் போடுகிறது நமது இரக்கமுள்ள காவல்துறை. அது காதல் திருமணம் வேறு. பெற்றோர்விருப்பம் இல்லாமல் செய்யப்பட்ட கலப்புத் திருமணம். அவன் மீது இதற்கு முன் எந்த வழக்கும் கிடையாது என்றேன். ஆனால் குண்டர் சட்டம் போடுவதற்கு முன்னதாக அவன் சிறையில் இருக்கும்போதே வேண்டும் என்றே வேறு சில வழக்குகளையும் அவன் மீது போட்டார்கள்.

கூடங்குளத்தில் அவ்வாறு கைதுசெய்யப்பட்ட இன்னொருவருக்கு பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் சென்றுவாதாடினார். அடுத்த சிலமாதங்களில் அவரையே குண்டர் சட்டத்தில் போட்டது ஜெயலலிதா அரசு. சென்றமுறை வலப்புறவட்டத்தில் நின்று பேசிய மணி அவர்கள் இம்முறை இடப்புறவட்டத்தில் நிற்க வேண்டியதாயிற்று. அவருக்காக யார் பேசினார்கள் எனத் தெரியவில்லை. அவரே பேசியிருப்பார் என நினைக்கிறேன். நான் எப்போது இடப்புறவட்டத்தில் நிற்கப்போகிறேனோ தெரியவில்லை. புதிய சட்டத்திருத்தத்தின்படி . முகநூலில் ஸ்டேடஸ் போட்டாலும்கூடக் குண்டர் சட்டமாமே.. நண்பர்களே எச்சரிக்கை.

பாலியல் குற்றங்களுக்கும் இனிகுண்டர் சட்டமாம். பாலியல் குற்றங்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவைதான். ஆனால் அதற்கு உரிய, இப்போது திருத்தப்பட்டுள்ள சட்டங்களே போதுமானவை. சாதி மீறியகாதல்களிள், மனமொத்து காதலர் இருவரும் தலைமறைவானாலும்கூட, இந்த உறவைப் பிடிக்காத பெற்றோர் தம் பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதாகத் தான் புகார்கொடுப்பர். அதுபோதாதா நம் காவல்துறைக்கு?

பெரிய அளவில்(122 பேர்) பா.ம.கவினர் மீது குண்டர் சட்டம் பயன்படுத்தப்பட்ட போதும் அதை நாங்கள் கண்டிக்கவே செய்தோம். சாதிவெறிப் பேச்சுகளுக்கு இதுவேண்டும் தானே எனச் சிலர் நினைக்கலாம். அப்படியான பேச்சுக்களுக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டமே போதுமானது. அதை ஒழுங்காகப் பயன்படுத்தினாலே போதும். பெரிய அளவில் இன்று குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ளவர்கள் தலித் மக்கள் உள்ளிட்ட மிகவும் அடிநிலையில் உள்ளவர்கள் தான் என்பதை நாம் மறந்துவிடலாகாது.

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை ஒரே நேரத்தில் கொத்துக் கொத்தாக நீதிமன்றங்கள் விடுதலை செய்ததுண்டு. கொளத்தூர் மணி மற்றும் அவரது கட்சிக்காரர்களும் அப்படித் தான் விடுதலை ஆனார்கள். அரசுக்கும் தெரியும். இது வம்புக்காகப் போடப்பட்ட வழக்கு. மிகவும் பலவீனமான ஒன்று. நிச்சயம் நீதிமன்றத்தில் அடிபட்டுப்போகும் என்று. ஆனாலும் அவர்கள் ஏன் இதைப் பயன்படுத்துகின்றனர்? நீதிமன்றத்தில் கேஸ் உடைவதற்குள் ஆறேழு மாதங்கள் ஓடிவிடுமே…. இப்போதைய சட்டத்திருத்ததில் ஒருவரை குண்டர் சட்டத்தில் போட அவர் habitual offender ஆக இருக்க வேண்டியதில்லையாம்.

ஆக இனி நீதிமன்றத்திற்குப் போயும் அப்பாவிகள் விடுதலை ஆவது குதிரைக் கொம்புதான். அம்மா கொண்டுவந்துள்ள இச்சட்டத்திருத்தம் வியப்புக்குரிய ஒன்றல்ல. எல்லாம் எதிர்பார்த்ததுதான். எந்த விமர்சனத்தையும் பொறுத்துக் கொள்ளாத மனம் படைத்த ‘அம்மா’ வுக்கு இப்போது கோபம் எல்லாம் முகநூல் முதலான சமூக ஊடகங்கள் மீதுதான் இதை ஒடுக்கும் முயற்சியாகத்தான் .இப்போது ‘சைபர்’ குற்றங்களும் குண்டர் சட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது கருத்துரிமையைப் பறிக்கும் முயற்சி. நமது அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமை (Article 19) மற்றும் சட்ட விரோதமாகச் சிறையில் அடைப்பதற்கு எதிரான உரிமை (Article 22 (2) ஆகியவற்றிற்கு எதிரானது. ஆனால் இதில் வேதனை என்னவெனில் இதற்கு எந்தப் பெரிய எதிர்ப்பும் தமிழகத்தில் இல்லை என்பதுதான்.

ஏழு பேர் விடுதலைக்கு இடைக்காலத் தடையும் அரசியல் கட்சிகளும்

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 23 ஆண்டுகளாகச் சிறையிலுள்ள ஏழு பேர்களையும் விடுதலை செய்வது குறித்த தமிழக அரசு ஆணைக்கு மத்திய அரசு இடைக்காலத் தடை வாங்கியுள்ளது. அது மட்டுமின்றி காங்கிரஸ் கட்சி, இன்று வெளிப்படையாகக் களத்தில் இறங்கி பிரதமரைக் கொன்றவர்களுக்கு இத்தகைய மன்னிப்பு வழங்குவது பயங்கரவாத நடவடிக்கைகள் பெருக வழி வகுக்கும் எனப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளது. ராஜீவுடன் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களைத் தூண்டி பத்திரிகையாளர் சந்திப்பு, வழக்கில் தாங்களும் இணைவோம் என அறிவிப்பு ஆகியவற்றையும் செய்ய வைத்துள்ளனர். பிரச்சினைகளில் வாய் திறவாமல் அமைதி காப்பவர் எனக் கருதப்படும் பிரதமரே, தமிழக அரசின் நடவடிக்கை சட்ட விரோதமானது என்றுள்ளார். கருணாநிதியின் பார்வையில் இது தமிழக அரசின் திறமைக் குறைவு. பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.கவின் அருண் ஜேட்லியும் தன் மௌனத்தைக் கலைத்து, “இத்தகைய கொடுங் குற்றங்களைச் செய்தவர்களை அடையாள அரசியலுக்குப் பயன்படுத்தக் கூடாது” என்றுள்ளார் ( வைகோ இது குறித்து என்ன சொல்லப் போகிறார் எனத் தெரியவில்லை). ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவாலும் இதைத் தவறு என்று சொல்லியுள்ளார்.

இது குறித்துச் சிந்திக்கச் சில விடயங்கள்.

1. உச்ச நீதிமன்றம் தமிழக அரசு ஆணைக்கு இடைக்காலத் தடைதான் விதித்துள்ளதே ஒழிய, தமிழக அரசுக்கு இப்படியான ஒரு ஆணையிட அதிகாரம் இல்லை என இதன் மூலம் தான் கூறவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. எனினும் சில நடைமுறைக் குறைபாடுகள் (procedural lapses) உள்ளதாக அது கருதுவதும், அவை குறித்து விசாரிக்கப்படுவதற்கு ஏதுவாகத் தொடர்புடையவர்கள் இரு வாரங்களுக்குள் மனுக்களை அளிக்க வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளது.

2. தமிழக அரசு முடிவில் அப்படி என்ன “நடைமுறைக் குறைபாடுகள் (procedural lapses)” உள்ளன? நமது சட்டத்தில் உள்ள ஒரு மோசமான கூறு ஆயுள் தண்டனை என்பதற்கு முறையான வரையறை இல்லை. பிரிட்டிஷ் கால ‘தீவாந்தர தண்டனை’ என்பது சுதந்திர இந்தியாவில் ஆயுள் தண்டனை ஆக்கப்பட்டது. “ஆயுள் என்றால் அது ஆயுள் (முழுக்க) என்றுதான் பொருள்” என கிருஷ்ண அய்யரே கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது. எனினும் 14 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ள ஆயுள் கைதிகளையும், சில நேரங்களில் சிறப்புச் சலுகையாக அதை விடக் குறைந்த காலம் சிறையில் இருந்த ஆயுள் கைதிகளையும் மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகளுக்கு அதிகாரமுண்டு. அப்படி விடுதலை அளிக்கு முன் ஆலோசனைக் குழு (advisory committee) ஒன்றை அமைத்து அதன் கருத்தைக் கேட்பது வழக்கம். (2010ல் இவ்வாறு கடைசியாக அமைக்கப்பட்ட குழு நளினியின் விடுதலை குறித்து எதிரான ஆலோசனை வழங்கியது. அவர் விடுதலை செய்யப்படவில்லை.) இன்று, தமிழக அரசு அவசரம் காட்டாமல் இந்தக் குறைபாட்டுக்கு வழி இல்லாமல் தனது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம். இப்போதும் கூட அதைச் செய்ய இயலும் என்றே கருதுகிறேன்.

3. மத்திய அரசுச் சட்டங்களின் கீழ் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசு சுதந்திரமாகத் தீர்மானிக்க இயலாது. மத்திய அரசின் ஒப்புதலைப் பெறவேண்டும் எனச் சில மூத்த வழக்குரைஞர்கள் நேற்று கருத்துத் தெரிவித்திருந்தனர். மாநில அரசின் முடிவை மத்திய அரசு ஒத்துக் கொள்ளாவிட்டால் என்ன செய்வது? நான் புரிந்துகொண்டுள்ள வரை மாநில அரசுக்கு தன்னிச்சையாக விடுதலை செய்ய உரிமையுண்டு.

3. பிரதமரைக் கொன்றவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதா? – என்கிற கேள்வியில் சத்து இல்லை. ஏனெனில் அரசனுக்கு ஒரு சட்டம், குடிமக்களுக்கு ஒரு சட்டம், உயர் சாதியினருக்கு ஒருசட்டம், தாழ்ந்த சாதியினருக்கு ஒரு சட்டம் என்கிற காலம் மலை ஏறிவிட்டது. இந்தியத் தண்டனைச் சட்டத்தில் அத்தகைய வேறுபாடுகள் கிடையாது. தவிரவும் ‘மன்னிப்பு’ என்பதில் எத்தகைய குற்றத்திற்காக ஒருவர் தண்டிக்கப்பட்டார், அதில் யார் பாதிக்கப்பட்டர்கள், எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டார்கள் என்பது கணக்கில் கொள்ளப்படுவதில்லை. மாறாகத் தண்டிக்கப்பட்டவர்களின் இன்றைய நிலை, அவர்கள் அனுபவித்த தண்டனை, தண்டனைக் காலத்தில் அவர்களின் நடத்தை, தண்டிக்கப்பட்டவர்களின் குடும்பச் சூழல் ஆகியனவே அங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். வெறும் சட்ட விதிகளுக்குள் மட்டும் நின்று மன்னிப்பைத் தீர்மானிக்கக் கூடாது என்பதற்காகவும், மன்னிப்பில் பழிவாங்கும் மனநிலை செயல்பட்டு விடக் கூடாது என்பதற்காகவும்தான் இந்தியச் சட்டங்களில் காருணையைத் தீர்மானிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திடமிருந்தும், குற்றச் செயலால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்தும் நீக்கப்பட்டு அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. (அரசு இந்த உன்னத அதிகாரத்தை அரசியலாக்காமல் இருக்க வேண்டும் என்பது வேறு பிரச்சினை).

4. தவிரவும் ராஜீவ் கொலையில்குற்றச் செயலில் நேரடியாகப் பங்குபெற்றவர்கள், சதி செய்தவர்கள் எல்லோரும் இன்று உயிருடன் இல்லை. ஒரு வேளை அவர்க்ள் யாரும் உயிருடன் பிடிபட்டிருந்தால் இன்று தூக்கையும் ஆயுளையும் எதிர் கொண்டு நிற்பவர்கள் விடுதலை கூட செய்யப்பட்டிருக்கலாம். எனவே நேரடிக் குற்றவாளிகள் அகப்படவில்லை என்பதற்காக இத்தகைய கொடுந் தண்டனைக்குரிய குர்றங்களைச் செய்யாதவர்களை அத்தகைய ஆக்கினைக்குள்ளாக்குவது வெறும் பழிவாங்குவதாகவே அமையும் (இது அப்சல் குருவுக்கும் பொருந்தும்). நீதி வழங்கலிலும், அதை நிரைவேற்றலிலும் பழி வாங்கலுக்கு இடமில்லை.

4.இது ஒரு பயங்கரவாத நடவடிக்கை, இன்றைய புவி அரசியற் சூழலில், இத்தகைய குற்றங்களில் மன்னிப்புக்கு இடமில்லை என்பது காங்கிரஸ்காரர்களால் முன்வைக்கப்படும் இன்னொரு வாதம். மன்னிப்பு வழங்குவதில் இதற்கெல்லாம் இடமில்லை என்பது மேலே விளக்கப்பட்டுள்ளது. தவிரவும் ராஜீவ் கொலையைப் பொருத்தமட்டில், அது ஒரு பயங்கரவாதச் செயல் அல்ல எனவும், அமைதிப் படையின் அட்டூழியங்களுக்கு எதிரான ஒரு பழி வாங்கும் செயல்தான் எனவும் நீதி மன்றமே ஒத்துக் கொண்டுள்ளது.

5. இத்தகைய பெருங் குற்றங்கள் மரண தண்டனை. ஆயுள்முழுக்கச் சிறை என்பவற்றால் தண்டிக்கப்ப்படாவிட்டல் இத்தகைய குற்றச் செயல்கள் பெருகும் என்கிற குற்றச்சாட்டுக்கு உலக அளவில் நடைமுறை ஆதாரங்கள் இல்லை என்பது பலமுறை விவாதித்து நிறுவப்பட்டுள்ளது. சில வழக்குகளில் ஆயுள் தண்டனை எனக் கூறி 50 ஆண்டுகள் அல்லது ஏதோ ஒரு கால கெடு குறித்து அதுவரை விடுதலையோ, தண்டனைக் குறைப்போ கூடாது எனத் தீர்ப்பிலேயே குறிப்பிடுவது சில நாடுகளில் வழக்கம். அப்படியான நிபந்தனைகள் ஏதும் இந்தத் தீர்ப்பில் குறிப்பிடபடவில்லை. தவிரவும் இந்த மூவரைப் பொருத்த மட்டில் மாநில அரசே முடிவெடுத்து விடுதலை செய்யலாம் எனவும் உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது.

இறுதியாக ஒன்று:

இன்று நீதிமன்றத்தின் இடைகாலத் தடைக்குச் சாத்தியமளித்திருக்கும் இந்த procedural lapses ஏன் ஏற்பட்டன? கருணாநிதி கூறியுள்ளது போல ஜெயலலிதா அரசின் திறமைக் குறைவு மட்டும் இதற்குக் காரணமல்ல. கருணை அல்லது மன்னிப்பு அல்லது மரண தண்டனை மற்றும் நீண்டகாலச் சிறைவாசம் அல்லது இவர்கள் எழுவரும் நேரடியாகக் குற்றச் செயலில் தொடர்புடையவர்கள் அல்ல என்கிற அடிப்படைகளில் ஜெயலலிதா இம்முடிவை எடுக்கவில்லை. அப்படியான உயரிய நோக்கங்கள் அவருக்குக் கிஞ்சித்தும் கிடையாது என்பதற்கு இது தொடர்பாக அவர் கடந்த காலங்களில் பேசி வந்தவை ஒன்றே சான்று.

தடலடியாகச் செய்வோம். மூன்று நாள் அவகாசம் என்றெல்லாம் கூறி மத்திய அரசைச் சீண்டுவோம். இதனால் காரியம் கெட்டாலும் பரவாயில்லை. எப்படியானாலும் நமக்குத்தான் லாபம் என்கிற நோக்கில் அவர் செய்துள்ள அப்பட்டமான அரசியல்தான் இந்த lapses க்குக் காரணம்.

கருணையின்பால் இதை அவர் செய்திருந்தாராயின், உச்ச நீதிமன்றம் இந்த மூவருக்கும் விடுவிக்க அவருக்கு அளிக்க்கப்பட்ட வாய்ப்பச் சற்றே விரித்து ராஜீவ் கொலைக்காகத் தண்டிக்கப்பட்ட மேலும் நால்வரை விடுவிக்க அறிவிப்பு செய்த அவர், இதுபோல தமிழகச் சிறைகளில் நீண்ட ஆண்டுகளாகச் சிறைலிருப்போர் அனைவரும் அடுத்தடுத்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருக்க மாட்டாரா?

நேற்றைய எனது பதிவொன்றில் நண்பர் சுகுணா திவாகர், தமிழகத்தில் தோன்றிய இந்த மரணதண்டனை எதிர்ப்பு இயக்கமும், அதனால் உருவான மரண தண்டனை எதிர்ப்புணர்வும் இந்த மூவரது மரண தண்டனை எதிர்ப்பு என்பதோடு நின்று போனதே ஒழிய அது ஒட்டு மொத்தமான மரண தண்டனை எதிர்ப்பாக மாறவில்லையே என வருந்தியிருந்தார். ஏன் அப்படி ஆனது? ஜெயலலிதா மட்டுமல்ல, இங்கு 22 ஆண்டுகளாக மரண தண்டனை எதிர்ப்பு இயக்கம் நடத்தியவர்கள் எல்லோருமே இதைத் தங்கள் அரசியல் லாபத்திற்காகத்தான் செய்தார்களே ஒழிய யாரும் மரண தண்டனையை அறம் சார்ந்த காரணங்களுக்காக எதிர்க்கவில்லை என்பதுதான்.

எப்படியோ காங்கிரசின் அரக்கத்தனமான பிடிவாதம், அ.தி.மு.க அரசின் கேவலமான அரசியல் ஆகியவற்றுக்கிடையே ஊஞ்சலாடுகிறது இந்த எழுவரின் வாழ்வு.

போலீஸ் பக்ருதீன்: மூன்று குறிப்புகள்

தேடப்பட்டு வந்த போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் முதலார் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அடுத்த கணத்திலிருந்தே ஏராளமான செய்திகளை அவர்களிடமிருந்து கறந்து விட்டதாகவும் எல்லாக் குற்றங்களையும் அவர்கள் ஒப்புக் கொண்டு விட்டதாகவும் கவல்துறை தரப்பில் ஏராளமான செய்திகள்., நான்கு நாட்களாக நாளிதழ்களில் இவைதான் தலைப்புச் செய்திகள்.

பக்ருதீன், மாலிக் போன்றோரின் படங்களைத் தெளிவாக ஒரு பக்கம் வெளியிட்டுக் கொண்டே இன்னொரு பக்கம் அவர்களுக்கு முகமூடிகளை அணிவித்துப் படம் காட்டப்படுகின்றன. முழுக்க முழுக்க அடையாளம் வெளிப்பட்ட பின் இப்படியான அச்சுறுத்தல் எதற்கென யாரும் கேட்பதில்லை, இப்படியான அச்சுறுத்தல்கள் ஏதோ அவர்கள் மீது மட்டும் கோபத்தையும், அச்சத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிற செயல் அல்ல, இன்றைய அரசியல் சூழலில் அது ஒரு சமூகத்தின் மீதே அச்சம், வெறுப்பு, ஆத்திரம் ஆகியவற்றை விதைக்க வல்லது என்பது குறித்து அரசுக்கோ, காவல்துறைக்கோ. ஊடகங்களுக்கோ கவலை இல்லை.

போலீஸ் பக்ருதீன் கைதுடன் தொடர்புடைய மூன்று கூற்றுகள் இங்கே…

முதலாவது இரு மாதங்களுக்கு முன் இப்பக்கத்தில் நான், “மேலப்பாளையம் மற்றும் நெல்பேட்டை அடித்தள முஸ்லிம்கள்’ என்கிற தலைப்பில் இட்ட பதிலிருந்து.. எவ்வாறு இப்பகுதிகளில் சிலர் குற்றமிழைக்காதபோதும் காவல்துறையால் தொடர்ந்து துன்புறுத்தப் படுவதும், பொய் வழக்குப் போடப்படுவதும், உளவு சொல்லக் கட்டாயப்படுத்தப் படுவதும் நடக்கிறது என்பதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி இருந்தேன், அந்தக் கட்டுரையின் இறுதிப் பத்திகள் முதலில்..

அடுத்து நேற்றைய ‘தி இந்து’ நாளிதழில் கே.கே.மகேஷ், பக்ருதீனின் சகோதரரை நேர்கண்டு எழுதியதில் ஒரு பகுதி, மகேஷுக்கு நம் நன்றிகள்,

இறுதியில் பக்ருதீன் மீதான வழக்குகளை நடத்திய வழக்குரைஞர் ரஜினியிடம் தொலைபேசி மூலம் அறிந்து கொண்டது.

இவர்கள் யாரும் பக்ருதீனையோ மற்றவர்களியோ குற்றமற்றவர்கள் எனக் கூறவில்லை, நீதிமன்றம் அதை முடிவு செய்து அவர்களுக்குத் தண்டனை வழங்கட்டும், ஆனால் இத்தகையோரும் மனித்ர்கள்தான், எனினும் இவர்கள் எவ்வாறு குற்றவாளிகள் ஆக்கப்படுகின்றனர் என்பது குறித்த ஒரு சிறிய சிந்தனை உசுப்பல்தான் இது.

1. எனது கட்டுரையிலிருந்து…

மேலப்பாளையம், நெல்பேட்டை முதலியன கிட்டத்தட்ட slum ஏரியாக்கள் என்கிற அளவில்தான் உள்ளன. கல்வி வீதம், நிரந்தர வேலை, சுய தொழில் வாய்ப்பு முதலியன மிகக் குறைவாக உள்ளன. இவற்றின் விளைவான வறுமை, கடன் தொல்லை, வட்டிக் கொடுமைகளும் உள்ளன. இப்படியான பகுதிகளில் சிறு குற்றங்கள், ரவுடியிசம் முதலியன உருவாவதற்கான வாய்ப்புகள் பொதுவில் இருக்கும். எனினும் இது விரல்விட்டு எண்ணக் கூடிய சிறிய அளவில்தான் இருக்கும். பெரும்பாலான மக்கள் அப்பாவிகளாகத்தான் இருப்பார்கள். இங்கும் அப்படியான குற்றச் செயல்கள் இருக்கத்தான் செய்கின்றன. முஸ்லிம்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் இங்கு இவை மத நிலைப்பட்டதாகவும் எளிதில் மதச் சாயம் பூசப்படக் கூடியதாகவும் ஆகிவிடுகின்றன. இதை இந்தக் கோணத்தில் அணுகாமல் ‘முஸ்லிம் தீவிரவாதம்’ என்கிற கோணத்திலேயே காவல்துறை அணுகுகிறது. காவல்துறையிடம் பொதிந்துள்ள சிறுபான்மை எதிர்ப்பு மன நிலை இத்துடன் இணந்து கொள்கிறது. சிறிய அளவிலோ பெரிய அளவிலோ முதல் குற்றம் செய்யும் ஒருவரைத் தொடர்ந்து பொய் வழக்குகள், விசாரணைகள், பணப் பறிப்புகள் என்கிற வகைகளில் தொல்லை செய்து வருவதால் அவர்கள் மேலும் குற்றச் செயல்களுக்குத் தள்ளப்படுகின்றனர். இதை ஒட்டி மேலப்பாளையம் போன்ற பகுதிகளை ஏதோ பாயங்கரவாதிகளின் நகரமாகவும், முஸ்லிம் சமுதாயத்தையே “சந்தேகத்திற்குரியதாகக்” கட்டமைப்பதும் நடக்கிறது. ஆக, ஒரு விஷச் சுழல் இவ்வாறு முழுமை அடைகிறது. இன்று விலை கூறித் தேடப்படும் இப்பகுதி “முஸ்லிம் தீவிரவாதிகள்” எல்லோரும் இப்படியாக உருவாக்கப்பட்டவர்கள்தான் என்பது குறிப்பிடத் தக்கது. ஆமாம் அவர்கள் உருவாக்கப்பட்டவர்கள்தான், உருவானவர்கள் அல்ல. இவர்கள் அப்படியானதில் நாம் வாழும் இந்தச் சமூகத்திற்குப் பெரிய பொறுப்பு உள்ளது. நம்மையும் சேர்த்துத்தான்.

மேலப்பாளையம், நெல்பேட்டை போன்ற பகுதிகளுக்கு நகரின் பிற பகுதிகளுக்குச் சமமாக அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். இப்பகுதிகளில் உரிய அளவில் நர்சரி தொடங்கி உயர்நிலைப் பள்ளிகள் வரை கட்டித்தரப்பட வேண்டும். சுய தொழில் வாய்ப்புக்கள், அதற்கான பயிற்சி முதலியன அளிக்கப்பட வேண்டும்.இப்பகுதிகளை ஒட்டி தொழில் வளர்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பிரச்சினையை முழுமையாக அணுகி அதன் சிக்கல்களை ஏற்றுப் புரிய முயற்சித்தல் அவசியம். நமது ஊடகங்கள், அரசு மற்றும் காவல்துறை ஆகியவற்றின் அணுகல்முறைகள் நிச்சயமாக இந்தத் திசையில் இல்லை.

2. நேற்றைய (அக் 7, 2013) ‘தி இந்து’ நாளிதழில் கே.கே.மகேஷ் எழுதியுள்ள, “ஆறுதல் சொல்ல எங்களுக்கு யாருமில்லை” என்கிற கட்டுரையின் முக்கிய சில பகுதிகள்:

எங்களை இஸ்லாமிய தீவிரவாதி என்று சொல்பவர்களுக்கு, எங்களை இஸ்லாமியர்களே ஒதுக்கித் தான் வைத்திருக்கிறார்கள் என்ற உண்மை தெரியுமா? இன்று எங்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தி வீதியில் வீராவேசமாகப் பேசுபவர்கள், என் குடும்பத்தினர் சித்ரவதை செய்யப்பட்ட போது எங்கே போனார்கள்?

போலீஸ் பக்ருதீன் கைது செய்யப்பட்டு இருப்பது ஒரு வகையில் எங்களுக்குச் சந்தோஷம் தான். 3 நாட்களுக்கு முன்பு வரை போலீஸாரால் நாங்கள் கடும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறோம். இனிமேலும், எங்கள் குடும்பத்தினரை அவர்கள் துன்பப்படுத்த மாட்டார்கள்.

போலீஸ் பக்ருதீன் விவகாரத்தில் போலீஸார் சொல்வதில் கொஞ்சம் உண்மையும், நிறைய பொய்யும் இருக்கிறது. எங்கள் வாப்பா சிக்கந்தர் பாட்சா, உதவிக் காவல் ஆய்வாளராக இருந்து பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு 1989ல் இறந்துபோனார். நாங்கள் 3 மகன்கள். மூத்தவன் முகமது மைதீன், அடுத்து நான் (தர்வேஸ் மைதீன்), 3வது மகன் தான் போலீஸ் பக்ருதீன் என்று போலீஸாரால் அழைக்கப்படும் பக்ருதீன் அலி அகமது. எங்களைக் காப்பாற்றுவதற்காக அம்மா செய்யது மீரா, வெளிநாட்டுக்கு ஹவுஸ் கீப்பிங் வேலைக்குப் போய்விட்டார். பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்தோம்.

நானும் 1993ல் சவுதி அரேபியாவுக்கு வேலைக்குப் போய்விட்டேன். இதனால் சேர்க்கை சரியில்லாமல் வம்பு, தும்பில் சிக்கி அவனை அடிக்கடி போலீஸார் பிடித்தனர். 18 வயதுக்குள் 5 வழக்குகள் பதிவாகிவிட்டது.

1995ம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வெடிகுண்டு வைத்த வழக்கில் அவனை சம்பந்தமே இல்லாமல் கைது செய்தனர். அன்று முதல் அவனைத் தீவிரவாதி என போலீஸார் கூற தொடங்கினர். இதில் உண்மைக் குற்றவாளி வெங்கடேசன் என்ற முஸ்தபாதான் என்று தெரியவந்தது. இந்த வழக்கில் பக்ருதீன் உள்ளிட்டவர்களை பொய்யாக கைது செய்ததற்காக வெடிமருந்து வாங்கிய உதவி ஆய்வாளரை சி.பி.ஐ. கைது செய்தது. அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டார்.

கடந்த 1998ல், மதுரை மதிச்சியத்தில் பரமசிவம் என்பவர் கொலை வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றான். அங்குதான் தப்பான வழிக்கு போக காரணமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். 2001ல் ஜாமீனில் வந்தவன், திருமங்கலம் கோர்ட்டில் போலீஸாருடன் துப்பாக்கிச் சண்டையிட்டு, இமாம் அலியை மீட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்டு, எங்கள் நிம்மதிக்கு உலை வைத்தான். அந்த வழக்கில் 7 ஆண்டு சிறையில் இருந்தான்.

அவனுக்கு ‘நிக்காஹ்’ செய்து வைத்தால் சரியாகிவிடுவான் என்பதால் அதற்கான முயற்சியில் இறங்கினோம். அப்போது ஏ.சி. (உதவி ஆய்வாளர்) வெள்ளத்துரை பொது இடத்தில் என் தம்பியை தாக்கினார். இதில் தள்ளிவிட்டதில் அவர் கீழே விழுந்தது, அவருக்கு அவமானமாகிவிட்டது. உடனே, 3 எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துவிட்டார்.

என் தம்பியின் திருமண முயற்சி தடைபட்டுப் போய்விட்டது. போலீஸ் மீது அவனுக்குப் கோபம் அதிகமாகிவிட்டது. நான் நல்லவனாகவே இருந்தாலும் கூட அவர்கள் என்னை நிம்மதியாக இருக்கவிட மாட்டார்கள் என்று கூறி ஊரைவிட்டே போய்விட்டான்.

28.10.11ல் சேலம் விரைவு நீதிமன்றத்தில் வாய்தாவுக்காக போனவன்தான், அதன் பிறகு அவனுடன் எந்தத் தொடர்பும் இல்லை. மறுநாள் அத்வானியை கொல்வதற்காக பாலம் அடியில் வெடிகுண்டு சிக்கியதாக செய்திகள் வந்தன. அன்று முதல் விசாரணை என்ற பெயரில் என்னையும், என் குடும்பத்தினரையும் போலீசார் துன்புறுத்தினர். அடித்தார்கள், தனி அறையில் அடைத்து வைத்தார்கள், அர்த்த ராத்திரியில் கதவைத் தட்டினார்கள், ரெய்டு என்று வீட்டைச் சூறையாடினார்கள், பெண்களைத் தரக்குறைவாகப் பேசினார்கள். அத்தனையையும் பொறுத்துக் கொண்டோம். ஊரைவிட்டு ஓடிப்போகவில்லை. போலீஸார் அழைக்கும்போதெல்லாம் போனேன்.

அத்வானிக்கு குண்டு வைத்த வழக்கில் என்னை கைது செய்தனர். இந்த வழக்கை ஜாமீன் கிடைக்க தன் தாலியை விற்று என் மனைவி வழக்கு நடத்தினாள். ஒருநாள் நீதிபதியிடம் அவள் கண்ணீர் விட்டுக் கதறிய பிறகே எனக்கு ஜாமீன் கிடைத்தது.

பக்ருதீனை கைது செய்துவிட்ட பிறகாவது, அப்பாவியான என்னையும், செய்யது சகாபுதீனையும் இந்த வழக்கில் இருந்து போலீஸார் விடுதலை செய்ய வேண்டும். என் 4 வயது பையனுக்கு முழு விவரம் தெரிவதற்குள், எனக்குப் போலீஸார் வைத்த தீவிரவாதி என்ற பெயரைத் துடைக்க வேண்டும்” என்றார்.

3. வழக்குரைஞர் ரஜினி, மதுரை :

(தொலைபேசியில் கூறியது)

“எனக்கு சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக பருதீனைத் தெரியும். அவன் அம்மாவை ரொம்ப நன்றாகவே தெரியும். ஏதோ பிறக்கும்போதே தீவிரவாதியாகப் பிறந்தவன் என்பதுபோல இன்று அவனை ஊடகங்கள் சித்திரிக்கின்றன. போலீசும் அப்படித்தான் சொல்கிறது. பரமசிவம் கொலை வழக்கில் எல்லாக் குற்றவாளிகளுக்கும் நான்தான் வழக்காடினேன். ஜாமீனில் கூட பக்ருதீனை விடவில்லை. கடைசியில் பல ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் அவ்வளவு பேரும் விடுதலை செய்யப்பட்டாங்க. அவன் திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ விரும்பினான். நெல்பேட்டையை சேர்ந்த விவாகரத்தாகி ஒரு குழந்தையுடன் வசித்துக் கொண்டிருந்த ******* என்கிற பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள ஆவலாக இருந்தான். அவளின் குழந்தையைத் தன் குழந்தை என்றே சொல்லிக் கொஞ்சுவான். அந்தப் பெண்ணின் தம்பியும் வழக்கில் இருந்தவன். அவள் இவனைத் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டாள். அவனைப் பிடிக்காததல்ல காரணம். “என் தம்பி வழக்குக்காக கோர்ட் கோர்ட்டா அலைஞ்சுட்டிருக்கேன். இவரையும் கட்டிகிட்டு இவருக்காகவும் கோர்ட் கோர்டா அலையணுமா அக்கா?” என்பாள் அவள். அப்புறம் வேறொரு பெண்ணுடன் அவனுக்குத் திருமணம் நடந்த்தது.

இன்னொரு சந்தர்ப்பத்தில் அவன் வேறொரு வழக்கில் மதுரைச் சிறையில் இருந்தான். ஒரு நாள் அவன் அம்மா வீட்டுக்கு ஓடி வந்தாங்க.”எம் மவன ஜெயில்ல போட்டு வார்டருங்க அடிசுட்டாங்கம்மா. கோர்ட்டுக்குக் கொண்டு வாராங்களாம். ஏதாவது செய்யுங்கம்மா..” ன்னு அழுதாங்க. நான் ஒரு ஹேபியாஸ் கார்பஸ் பெடிஷன் போட்டேன். மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஒருவர் சிறைக்குச் சென்று விசாரணை செய்ய வேணும்னு ஆர்டர் வாங்கினேன்.

பரமசிவம் கொலை வழக்கில் விடுதலை ஆன பிறகு அவன் ரொம்ப அமைதியாதான் இருந்தான் எல்லோரையும்போல திருமணம் செஞ்சுட்டுக் குடும்பம் நடத்தத்தான் விரும்பினான். அத்வானி வந்தபோது குண்டு வைத்த வழக்கில் அவன் குடும்பத்தையே தொந்தரவு செய்தாங்க. அவன் அண்ணன் மீது பொய் வழக்கு போட்டாங்க. அவன் அம்மா ப்ரெஸ் மீட் வச்சு பக்ருதீனுக்கும் அவங்களுக்கும் சம்பந்தமில்லன்னு அறிவிச்சாங்க.

பிலால், பக்ருதீன் மனைவி எல்லோரையும் போலீஸ் புத்தூரிலிருந்து இங்கே கொண்டு வந்து வச்சிருக்காங்களாம். நாளைக்குப் போய்ப் பாக்கணும்”

பக்ருதீனை ‘அவன்’ ‘இவன்’ என ரஜினி அழைத்தது ஊடகங்கள் கூறும் பொருளில் அல்ல.. வயதுக் குறைவு, நீண்ட நாள் பழக்கம், அவ்வளவுதான்.