இன்றைய தகவல் யுகமும் இளைஞர்களும் ஒரு குறிப்பு

பதினைந்து நாட்களுக்குப் பின் இன்று குடந்தையில் கொஞ்ச தூரம் வாக்கிங் போனேன். அங்கு ஒரு கடையில் சூடாக வடை சாப்பிடுவது வழக்கம். அந்தக் கடையில் நான்கைந்து பேர் தேநீர் குடித்துக் கொண்டிருந்தனர். மூன்று பையன்கள் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். மாணவர்கள் இல்லை. படிக்கிற வயதில் வேலைக்குப் போக நேர்ந்த விடலை இளைஞர்கள். அதில் ஒருவனை எனக்குத் தெரியும். அருகிலுள்ள முடி திருத்தும் கடையில் வேலை செய்துகொண்டிருக்கிறான். அவனிடம் இன்னொருவன் ஸ்பைக் வைத்துத் தலை சீவும் வித்தையைக் கேட்டான். அவன் எங்கே என்ன மாதிரி ஜெல் வாங்க வேண்டும், அதிலுள்ள ‘வெரைடி’கள் பற்றி எல்லாம் விவரமாகச் சொல்லிக் கொண்டிருந்தான். மூன்றாமவன் சொன்னான்: “ஏய், அப்டி ஸ்பைக் வச்சு ஒரு போடோ எடுத்து ஃபேஸ் புக்ல போடு.. போட்டியன்னா ஃபேஸ் புக் ஓனர் மாற்கு வே அசந்துடுவாரு..” என்றான். “ஃபேஸ் புக்ல போட்டு எல்லாரையும் ஒரு அசத்து அசத்தத்தாண்டா கேக்குறேன். சும்மா நூறு லைக்காவது விழுவும் பாரு..”

அங்கே டீ குடித்துக் கொண்டிருந்த இன்னொருவரையும் நான் அடிக்கடி பார்த்துள்ளேன். வயதானவர். எங்கள் வீட்டில் ஒரு குழாய் ரிப்பேர் செய்ய வந்த ப்ளம்பருக்கு உதவியாளராக ஒருமுறை வந்துள்ளார். சில நேரங்களில் வாடகை டயர் மாட்டு வண்டி ஒன்றையும் ஓட்டி வருவார் ஒரு கைலி, பனியனுடன் டீ உறிஞ்சிக் கொண்டிருந்தார். காலில் ஏதோ அடிபட்டிருந்தது. குச்சி ஊன்றி நின்று கொண்டிருந்தார்.

அந்தப் பையன்களைப் பார்த்து அவர் சொன்னார் : “டெக்கான் ஹைதராபாத்தை நம்ம சன் டிவி காரங்க வாங்கிட்டாங்க..”. திரும்பி என்னைப் பார்த்தும் ஒரு புன்னகையை வீசினார். எனக்கு கிரிக்கெட் விஷயங்கள் தெரியாது, ஐ.பி.எல் பற்றியும் அதிகம் தெரியாது என்பதை அவர் அறியார். நிச்சயம் தெரிந்திருக்கும் என்பது அவர் நம்பிக்கை. அந்த நம்பிக்கை கெடக்கூடாது என நானும் புன்னகைத்து வைத்தேன்.

முடி வெட்டுகிறவர்கள், மாட்டு வண்டி ஓட்டுபவர்கள் எல்லாம் ஃபேஸ்புக்கில் அக்கவுன்ட் வைத்துள்ளார்கள், ஐ.பி.எல் பற்றிப் பேசுகிறார்கள் எனச் சொல்வதல்ல என் நோக்கம். உலகிலேயே அதிகம் இன்டெர்நெட் பாவிப்பதில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது என்றாலும் அது இங்குள்ள மக்கள் தொகையால் வந்த எண்ணிக்கைப் பெருக்கம். இன்னும் கூட 10 சதம் மக்களே நம் நாட்டில் கணினி பாவிக்கின்றனர்.

ஆனாலும் இதுபோன்ற விடயங்களில் ஒரு ஜனநாயகப்பாடு இங்கே நடந்துள்ளது என்பதை யாரும் மறுத்துவிட இயலாது. தொழில் நுட்பம் இதில் பெரும்பங்கு வகித்துள்ளது. தொழில் நுட்பத்திற்கு இரண்டு பண்புகள் உண்டு. ஒன்று அது சமூகத்தை ஜனநாயகப்படுத்தும்; மற்றது அது தன்னைப் புறக்கணிப்போரைக் கடுமையாகப் பழி வாங்கிவிடும். கணினி அச்சுக் காலத்தில் ஒரு அச்சக உரிமையாளர் ஈய எழுத்துக்களைக் கோர்த்துக் கொண்டிருக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள், அவர் கதி என்னாகும்?

குக்கிராமங்களில் உள்ளோரும் கேபிள் டிவி, செல் போன் மூலம் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தகவல்கள் வந்து கொண்டே உள்ளன. ஒரு ஏழு, எட்டாயிரம் ரூபாயில் ஒரு ஆன்ட்ராய்ட் செல் வைத்திருந்தால் யாரையும் சார்ந்திராமல் ஒரு ஃபேஸ் புக் அக்கவுன்ட் தொடங்கி விடலாம். பேஸ்புக்கில் பலமாதிரி செய்திகள் வந்து கொண்டே உள்ளன. டி.வியில் 24 மணி நேரமும் ஏகப்பட்ட செய்திகள். ‘நீயா நானா’ போன்ற நிகழ்ச்சிகளில் பல்வேறு உலக விஷயங்கள் அலசப்படுகின்றன.

ஓரளவு தகவலறிந்த சமூகமாக நாம் உருப்பெற்றுக்கொண்டே உள்ளோம்.

ஆனால் ஒன்று.

ஏகப்பட்ட தகவல்கள் நம்மை இப்படி வந்தடைந்தபோதும் இவை பெரும்பாலும் எல்லாம் ஒரு contemporary தன்மையதாகவே உள்ளன. வரலாற்று ரீதியான தகவல்களாக அவை இருப்பதில்லை. ஆர்வமுள்ளவர்கள் வரலாற்று ரீதியாகவும் நவீன நுட்பங்களின் உதவியால் நிறையத் தெரிந்துகொள்ள முடியும் என்றாலும் வந்து சேர்பவை மிகவும் சமகால விஷயங்கள்தான். இந்த சமகாலத் தகவல்களால் கட்டப்பட்ட சமூகமாகவே நாம் உள்ளோம்.

ஒரு இருபதாண்டுகளுக்கு முந்திய வரலாறும் கூட தெரியாதவர்களாகவே நம் சராசரி இளைஞர்கள் இருக்கின்றனர்.

இன்று மோடி அலை வீசுவதன் பின்னணிகளில் இதுவும் ஒன்று.