நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் – 2,
தீராநதி, பிப்ரவரி 2017
சென்ற வாரம் கடலூரில் மனித உரிமை அமைப்புகள் சார்பாக ஒரு கண்டனக் கூட்டம் நடைபெற்றது. கடலூர் மத்திய சிறையில் கடந்த எட்டு மாதங்களில் நான்கு கைதிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இன்னும் மூவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் உயிர் பிழைத்துள்ளனர். இது குறித்த விசாரணை வேண்டும். மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் சிறைக்குச் சென்று கைதிகளிடம் பேசி உண்மை நிலையைக் கண்டறிய அனுமதி வேண்டும் என்பன முக்கிய கோரிக்கைளாக அந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.
இந்தியச் சிறைகளில் தற்கொலைகள், கொலைகள், உரிய சிகிச்சை இல்லாமல் நிகழும் மரணங்கள் ஏராளம். 2001 – 2010 காலகட்டத்தில் மட்டும் போலீஸ் மற்றும் சிறைக் காவல்களில் 14,231 பேர் செத்துள்ளனர் என்கின்றன தேசிய மனித உரிமை ஆணையம் (NHRC) வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள். அதாவது தினம் நான்கு சாவுகள். தேசிய குற்ற ஆவண நிறுவனம் (National Crime Records Bureau) வெளியிட்டுள்ள அறிக்கை 2011 ல் மட்டும் 1,332 கைதிகள் இந்தியச் சிறைகளில் செத்துள்ளனர் எனவும் இதில் 93.4 சத மரணங்கள் “இயற்கையானவை” எனவும் கூறுகின்றது. 68 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எட்டு பேர் பிற கைதிகளால் கொலை செய்யப்பட்டுள்ளனர். மொத்ததில் 12 மரணங்கள் இயற்கை மரணங்கள் இல்லாதவையாம். இயற்கை மரணங்கள் என அரசு சொல்பவையே ஆய்வுக்குரியவை. தமிழகச் சிறைகளில் உரிய வைத்திய வசதி இல்லாமல் பல ஆண்டுகள் இருந்து இறந்த கைதிகளை அறிவேன். தவிரவும் இந்தப் புள்ளி விவரங்கள் பலவும் பிரச்சினைக்குரியவை. ஒரே ஆண்டு குறித்த மனித உரிமை ஆணையத்தின் புள்ளி விவரமும் தேசிய குற்ற ஆவண நிறுவனப் புள்ளிவிவரமும் வேறுபடுவது இதை உறுதியாக்கும். தவிரவும் இந்த மரணங்களில் பலவும் சிறையில் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகளின் விளைவு என்கிறது ஆசிய மனித உரிமை மையம் (Asian Centre for Human Rights) அதே 2011 ல் வெளியிட்டுள்ள அறிக்கை.
இந்த மரணங்களுக்கு இன்னும் பலவிதக் காரணங்கள் உள்ளன. டெல்லி திகார் சிறையில் நிர்பயா கொலை வழக்கில் கைதாகியிருந்த ராம்சிங் (33) சில ஆண்டுகள் முன் தற்கொலை செய்துகொண்ட போது அவரது பெற்றோர்கள் இது கொலை எனக் குற்றம் சாட்டினர். ஓரினப் புணர்ச்சி தொல்லையும் அவருக்கு இருந்ததாகக் கூறினர். பெங்களூரு பரப்பன அக்ரகாரச் சிறையில் பெண் கைதிகள் அங்குள்ள பணக்கார ஆண்கைதிகளுக்கு கட்டாயமாக விபச்சாரத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்கிற குற்றச்சாட்டு சில ஆண்டுகள் முன் விசாரணைக்கு வந்தது. மும்பை சிறைச்சாலை ஒன்றில் பெண் கைதிகளைக் கண்காணிக்க வைக்கப்பட்டுள்ள CCTV க்களை நீக்க வேண்டும் என அவர்கள் போராடினர். அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் சிறைக் காவலர்களால் பாலியல் வக்கிரத்துடன் கண்காணிக்கப்படுகின்றன என்பது குற்றச்சாட்டு. சட்டிஸ்கரில் மாஓயிஸ்ட் ஆதரவாளர் எனக் கைது செய்யப்பட்ட ஹிட்மே கவாசி எனும் பழங்குடிப் பெண் சிறையில் செய்யப்பட்ட சித்திரவதைக் கொடுமைகளை இன்று சக கைதியாக இருந்த சோனி சோரி வெளிப்படுத்தியுள்ளார். கர்ப்பமாக இருந்தபோது கைது செய்யப்பட்ட அவர் பிரசவ நேரத்திலும் கூட விலங்கிடப்பட்டிருந்தாராம்.
இப்படி நிறையச் சொல்லலாம். ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். தமிழகச் சிறைகள் இந்தப் பிரச்சினையில் ரொம்ப மோசம். 2000 -2015 க்குள் மட்டும் 1155 பேர் இறந்துள்ளனர். அதாவது நான்கு நாட்களுக்கு ஒருவர் தமிழகச் சிறைகளில் செத்துப் போகிறார்.
நிறையச் சொல்லலால். சுருக்கம் கருதி இரண்டு விடயங்களோடு நிறுத்திக் கொள்கிறேன். நமது சிறையின் கொள்ளளவைவிட இரு மடங்கு மக்கள் உள்ளே அடைக்கப்படுகின்றனர். இதில் கிட்டத்தட்ட பாதிப்பேர் குற்றம் உறுதி செய்யப்படாத விசாரணைக் கைதிகள். பல நேரங்களில் இவர்களின் எண்ணிக்கை தண்டனைக் கைதிகளை விடவும் அதிகம். சிறைக் கைதிகளின் ‘இயற்கை மரணங்களில்’ இப்படியாக அதிக அளவில் கைதிகள் அடைக்கப்படுவதால் ஏற்படும் ஆக்சிஜன் பற்றாக்குறையும் கூட ஒரு காரணம்.
அதேபோல சிறைக்குள் கடைபிடிக்கப்படும் ஏற்றத் தாழ்வுகளும் கொடுமையானவை. சிறை மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் தலித்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்தான். இவர்களுக்கு சிறை விதிகளின்படி அளிக்கப்படும் ‘பரோல்’ முதலிய உரிமைகளுக் கூட முழுமையாக அளிக்கப்படுவதில்லை. சுருக்கம் கருதி விவரங்களைத் தவிர்க்கிறேன்.
# # #
ஐரோப்பாவை மையமாக வைத்து 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தண்டனை நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் நவீன சிறைச்சாலை உருவாக்கங்கள் குறித்து மிஷேல் ஃபூக்கோ முன்வைத்த ஆய்வுகள் நவீன சிந்தனை உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பவை. மத்திய காலத்திலும் அதற்கு முற்பட்ட காலங்களிலும் ‘நவீன சிறைச்சாலைகள்’ கிடையாது. அப்போதெல்லாம் பெருங் கூட்டமாகத் திரட்டப்பட்ட மக்கள் முன் கடுஞ்சித்திரவதைகளினூடாக குற்றவாளிகள் கொல்லப்படுவது ஒரு சடங்கு நிகழ்வாக அரங்கேற்றப்பட்டது. நிற்க மட்டுமே முடிந்த கூண்டுகளில் அடைத்து வைத்துக் கொல்லப்படுதல், உயிருடன் தோலை உரித்துத் தொங்கவிடப்படுதல், உறுப்புகள் துண்டிக்கப்படுதல் இப்படி எல்லாம் தண்டனைகள் அரங்க நிகழ்ச்சிகள் போலக் காட்சிப்படுத்தப்பட்ட நிலை 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மாற்றம் அடைந்தது. நவீன சிறைச்சாலைகள் உருவாயின.
இதனூடாக தண்டனை வடிவில் மாற்றங்கள் நடந்தனவே ஒழிய தண்டனைகளின் ஊடாக சமூகம் ஒழுங்கமைக்கப்படுதல் என்பது இன்னும் நுணுக்கமாகத் தொடர்ந்தது. தண்டிக்கப்பட்டவர்களின் உடல் மீதான வன்முறைகள் காட்சிப்படுத்தப்படுவது நின்றாலும் ஒழுங்கமைக்கப்பட்ட சமூகத்தின் நடுவே அதன் ஒரு பகுதியாக நிறுவப்பட்ட சிறைச்சாலைகளின் ஊடாக சமூகம் ஒழுங்கமைக்கப்படுவது நிற்பதில்லை. சிறைப்பட்டவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுவதன் மூலம் அவன் புழங்கு வெளியும், அவன் புழங்கு காலமும் மிகத் துல்லியமாக ஒழுங்கமைக்கப்படுகின்றன. சமகால நவீன நிறுவனங்களான தொழிற்சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள், இராணுவ தளங்கள் அனைத்தும் இவ்வாறே அமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் புதிய ஒழுங்கமைப்பு நிறுவனங்களின் மூலம் இன்னும் இறுக்கமாக சமூகம் கண்காணிக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்படுகிறது. சிறைச்சாலைகளின் நோக்கம் குற்றங்களைக் குறைப்பதோ, குற்றவாளிகளைத் திருத்துவதோ, குற்றச் சமூகம் ஒன்று உருவாவதைத் தடுப்பதோ அல்ல. மாறாக குற்றச் சமூகம் ஒன்று இருப்பது அரசுக்குத் தேவையாக இருக்கிறது. குற்றச் சமூகம் ஒன்று இருப்பதே அரசின் இந்தக் கண்காணிப்புகளையும், இராணுவம் மற்றும் போலீஸ் மூலம் சமூகம் கட்டுக்குள் வைக்கப்படுவதையும் நியாயப்படுத்துகிறது என்பவற்றையெல்லாம் ஃபூக்கோ நிறுவியது சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் ‘குற்றவியல்’ மற்றும் ‘கண்காணிக்கப்படும் சமூகம்’ தொடர்பான புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. ‘ஆதார் அட்டை’ நம் உடல் மற்றும் வாழ்வின் பிரிக்க இயலாத ஒரு அங்கம் ஆக்கப்படும் இன்றைய சூழலில் இந்தக் கண்காணிப்பு அதன் உச்சத்தைத் தொட்டுள்ளது.
இதை நாம் சரியாகப் புரிந்து கொண்டோமானால் சிறைச்சாலைகள் தொடர்பாக இப்போது எழுகின்ற இரு கேள்விகள் பொருளற்றதாகி விடுவதை உணரலாம். அவை: 1. தண்டனை வழங்குதல் மூலம் குற்றங்கள் குறையும் என்பது ஏன் நிகழவில்லை? 2. தண்டனை வழங்குதல் மூலம் குற்றவாளிகள் திருந்துவார்கள் என்பதும் ஏன் உண்மையாகவில்லை? இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதில்தான். தண்டனை வழங்குதல் மற்றும் சிறைச்சாலைகளின் நோக்கம் குற்றங்களைக் குறைப்பதோ இல்லை குற்றவாளிகளைத் திருத்துவதோ அல்ல என்பதுதான். ஒரு வகையில் அரசுகள் மற்றும் அதிகாரத்தின் இருப்பிற்குக் குற்றங்களும் தேவைப்படுகின்றன. குற்றவாளிகளும் தேவைப்படுகின்றனர். எனவேதான் சிறைச்சாலைச் சீர்திருத்தங்கள் குறித்த மனிதாபிமானிகள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் இன்று அரசுகளால் மூர்க்கமாக மறுக்கப்படுகின்றன. அப்படி அரசுகள் மறுப்பதற்கு மக்களின் முழு ஆதரவு இருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நிர்பயாவின் கொலையில் கைதான ராம்சிங்கிற்குச் சிறையில் கொடுமைகள் நிகழ்ந்தன என நாம் சொல்லத் துணிவோமானால் பெரும்பான்மை மக்களின் கடும் எதிர்ப்பைத்தான் நாம் எதிர்கொள்ள நேரிடும். எத்தனை கொடூரமான கொலையைச் செய்தவன் அவன்? அவனுக்கா மனித உரிமை வேண்டும் என்கிறாய்?
# # #
எனினும் மனிதன் என்கிற வகையில் அவனுக்கும் உரிமைகள் வேண்டும் என்கின்றவர்கள் சிறைச்சாலைகளில் உடனடியாகச் செய்ய வேண்டியன எனச் சில சீர்திருத்தங்கள் குறித்துப் பேசிக் கொண்டுதான் உள்ளனர். இவர்களில் சில இரக்கமுள்ள அதிகாரிகளும் உண்டு.
சர் கோட்ஃப்ரே லூஷிங்டன் 1885 -1895 காலகட்டத்தில் இங்கிலாந்தின் நிரந்தர உள்துறைச் செயலராக இருந்தவர். தண்டனை அமைப்பு குறித்த அரசு குழு ஒன்றின் முன் சாட்சியமளித்தபோது அவர் சொன்னது:
“ஒரு கைதி திருந்துவதற்குச் சிறைச்சாலைகளில் உள்ள கீழ்க்கண்ட நிலைகள் பொருத்தமாக இல்லை என நான் கருதுகிறேன். அவன் சிறையில் கழிக்கும் காலம் முழுவதும் அவனது சுயமரியாதை நசுக்கி அழிக்கப்படுகிறது; அவனிடம் எஞ்சியுள்ள அற உள்ளுணர்வுகள் வாடிச் சோர்கின்றன; இரக்கத்தை வெளிப்படுத்தவோ, அனுபவிக்கவோ உள்ள எல்லா வாய்ப்புகளும் அடைக்கப்படுகின்றன; குற்றவாளிகள் தவிர வேறு யாருடனும் அவன் தொடர்பு கொள்ள வாய்ப்புகள் அறவே மறுக்கப்படுகின்றன…….. ஒரு மனிதனைத் திருத்துவது அல்லது சமூகத்திற்கு அவனை திருப்பிக் கையளிப்பது என்பது நான் இப்போது சொன்ன அனைத்திற்கும் எதிர்த் திசையில் அமைகின்றது என்றே நான் நம்புகிறேன்; ஆனால் உண்மையில், இவை வெறும் கருத்துக்கள்தான். ஒரு சிறைச்சாலையில் இதெல்லாம் சாத்தியமில்லை. திருந்துவதற்குச் சாத்தியமில்லாதவை என நான் மேலே குறிப்பிட்ட அனைத்து அம்சங்களும் சிறை வாழ்விலிருந்து பிரிக்க இயலாத எதார்த்தங்களாக உள்ளன…”
லூஷிங்டன் என்ன இருந்தாலும் ஒரு அதிகாரி. அவரது அறத் தன்னிலைக்கும் அதிகார இருப்பிற்கும் உள்ள முரணை அவரே உணர்ந்து கொள்வதுதான் அவரது மேன்மை எனலாம். சிறைக் கைதிகள் இன்றைய சிறைச்சாலைகளின் ஊடாகக் கழிக்கும் தண்டனை வாழ்வின் மூலம் திருந்துவதற்கான வாய்ப்பே இல்லை என்பதைச் சரியாகவே அடையாளம் காணும் அவர் இந்தச் சிறை அமைப்பில் அது சாத்தியம் இல்லை எனப் பெருமூச்சு விடுகிறார். அதிகாரி. அவரால் வேறென்ன செய்ய முடியும்?
ஆனால் நம் தமிழிலக்கியத்தில் வேறெங்கும் காணக் கிடைக்காத ஒரு அற்புதம் நிகழ்கிறது. முற்றிலும் நாயகனே இல்லாத, ஒரு நாயகியை மட்டுமே தலைவியாய்க் கொண்டு இயங்கும் மகா காவியமான மணிமேகலையில் காவிய நாயகியான அன்னை மணிமேகலை முற்றிலும் புதுமையாய் ஒரு தீர்வைச் சொல்லுகிறாள். அவள் அதிகாரி அல்லள். குடும்பச் சிறையில் அகப்பட்ட ஒரு சாதாரண மானுடப் பெண்ணும் அல்லள். அவள் புத்த நெறியை ஏற்ற ஒரு துறவி. எனவே அவளால் அதைச் சொல்ல முடிகிறது.
அவளுக்கு புத்தபிரான் அருளால் யாருக்கும் வாய்க்காத ஒரு பெரும்பெறு வாய்க்கிறது. அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி ஒன்று அவளுக்கு அளிக்கப்படுகிறது. அதன் மூலம் மானுடரின் மிகப் பெரிய பிணியாகிய பசிப்பிணையை அகற்றும் பெரும்பேறுக்கு உரியவளாகிறாள் அந்த இளம் பிராயத்தில் அன்னை மணிமேகலை. சிங்கள மொழியில் ‘பசி’க்கு இணையான சொல் ‘படகினி’. அதன் பொருள் “வயிற்றிலே தீ”. அந்தத் தீயை அணைப்பதைத் தவிர பெரும்பேறு வேறு என்னவாக இருக்க இயலும்?
அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியின் ஊடாக வீதிதோறும் அலைந்து பசித்தோர்க்கு அவள் உணவளித்து வரும் அந்தச் செய்தி சோழ மன்னருக்குத்ன் தெரிவிக்கப்படுகிறது. அழைத்து வரச் சொல்கிறார். மன்னனுக்கும் மாதவி மகளுக்கும் இப்படி அமைகிறது உரையாடல்:
“மிக்க தவமுடையாய் ! நீ யார்? கையிலேந்திய பாத்திரம் எங்கே கிடைத்தது?”
“அரசே ! நெடுங்காலம் வாழ்வாயாக; யான் விஞ்சை மகள். இந்நகரில் வேற்று வடிவங் கொண்டு திரிந்தேன்; இது பிச்சைப் பாத்திரம்; இதனை அம்பலத்தேயுள்ள தெய்வமொன்று எனக்கு அருளியது; இது தெய்வத் தனமையோடு கூடியது. யானைப் பசியென்னும் தீராப்பசியைத் தீர்த்தொழித்தது; பசியால் மெலிந்தவர்களுக்கு மிருதசஞ்சீவினியாக உள்ளது.”
“மிக்க தவமுடையாய் ! நான் செய்ய வேண்டியது என்ன?”
‘சிறைச்சாலையை அறச்சாலையாகச் செய்ய வேண்டும்”
அன்னையின் வாக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. சிறைச்சாலை அழிக்கப்பட்டது. அது அறவோர்கள் தங்கும், அறச் செயல்களுக்கான இல்லமாக ஆக்கப்பட்டது.
(தொடரும்)
.