எச்சரிக்கை சாமியார்கள்!

தங்களைக் கடவுளின் அவதாரமாக முன் நிறுத்தி யோகம், ஆன்மீகம், ஏன் வாழ்க்கைக் கலையைக் கற்றுத் தரும் சாமியார்களின் ஊழல்களையும், ஏமாற்றுக்களையும், பாலியல் குற்றங்களையும், எதிர்ப்பாளர்களைக் கொன்றொழித்த சதிகளையும் விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. இவை தொடர்பாக எல்லோருக்கும் தெரியாத எதை நான் புதிதாகச் சொல்லிவிடப் போகிறேன்.

ஏராளமான சொத்துக்கள், நிறுவனங்கள் ஆக்யவற்றோடு ஏராளமான, பக்த கோடிகளையும் விட்டுச் சென்ற புட்டபர்த்தி சாயிபாபாவைப் பற்றி “குரோட்டன்ஸ் தலையன்’” என நாத்திகம் இராமசாமி தனது வார இதழில் தொடர்ந்து எழுதி வந்ததை மாணவனாக இருந்த காலத்திலேயே நான் படித்து அதிர்ச்சி அடைந்திருக்கிறேன். சற்று வயது வந்த போது சாய்பாபாவின் ஏமாற்றுக்களைத் தோலுரித்து ஆப்ரகாம் கோவூர் எழுதிய Begone Godmen நூலைப் படித்து வியந்துள்ளேன். ஃபுல்ப்ரைட் ஸ்காலர் அணு விஞ்ஞானி, காந்தியவாதி, அறிவித்துச் செயல்பட்ட நாத்திகவாதி, பத்மபூஷன் டாக்டர் எச்.நரசிம்மையா அவர்கள் பெங்களூர் பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருந்தபோது (1973 -77) விஞ்ஞானிகள் மற்றும் பேராசிரியர்கள் அடங்கிய “அற்புதங்கள் மற்றும் மூட நம்பிக்கைகள் குறித்த உண்மைகளை அறியும் குழு” ஒன்றை அமைத்து சாயிபாபா நிகழ்த்தும் அற்புதங்களை ஆய்வு செய்ய முனைதது, அதற்கு அந்த அவதார மனிதர் ஒத்துழைக்க மறுத்தது, பின் அது சர்ச்சையானது எல்லாவற்றையும் அபோது பதிரிகைகளில் படித்திருக்கிறேன். சாயிபாபாவின் அருளால் பாண்டவபுரம் சாய் கிருஷ்ணா எனும் பாலகனின் உடம்பிலிருந்து விபூதி உதிர்ந்த அற்புதம் கண்டு ஆயிரமாயிரம் பக்தர்கள் திரண்டபோது இந்த உண்மை அறியும் குழுவில் இருந்த விஞ்ஞானிகள் அந்தப் பாலகனிடம் நெருங்கிச் சென்று அவன் அசந்த நேரத்தில் சட்டையை உருவ, அவன் உடலில் கட்டிவைக்கப்பட்ட விபூதிப் பொட்டலங்கள் அம்பலமான செய்தியை நான் மட்டுமா படித்தேன். ஆயிரமாயிரம் வாசகர்களும் படித்தனர். சாயிபாபாவின் படுக்கை அறையில் மூன்று கொலைகள் நடந்து அந்தப் புனிதரின் அறைகளில் இரத்தக் கறை படிந்ததே. அது அவரது அடியார்களுக்குத் தெரியாதா?
இது தொலைக்காட்சி ஊடகங்களின் காலம். நித்தியானந்தாவின் பாலியல் வக்கிரங்களை ஒரு தொலைக்காட்சி அம்பலப்படுத்தியதையும் ஒரு புலனாய்வு இதழ் அவரது ஆஸ்ரம நடவடிக்கைகளைத் தொடர்ந்து தோலுரித்ததையும் இலட்சக் கணக்கான மக்கள் காணவில்லையா?

அஸ்ராம் பாபு அப்பாவி விவசாயிகளின் நிலத்தை அபகரித்து வழக்குகளை எதிர் கொண்டிருப்பதும். ஒரு 15 வயதுப் பெண்ணை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியதையும், பின் அது தடையவியல் சோதனைகளில் உறுதி செய்யப்பட்டதையும் இன்று அவர் அந்தக் குர்றச்சாட்டில் கம்பி எண்ணிக் கொண்டிருப்பதையும் நாடெங்கிலுமுள்ள அவரது 400 ஆஸ்ரமங்களில் உள்ள அடியவர்களும் “20 மி0ல்லியன்” பக்தர்களும் அறியார்களா?
எல்லோருக்கும் எல்லாமும் தெரியும். ஆனால் நித்யானந்தாவுக்கு இன்னும் பக்தர்கள் திரண்டு கொண்டுதான் உள்ளனர். அஸ்ராம் பாபுவுக்கு ஆதரவாக அவரைக் கைது செய்யக்கூடாது என டெல்லியில் திரண்ட அவரது பக்தர்களிடம் பத்திரிகையாளர்கள் பேசியபோது, “இந்த உலகத்தில் உள்ள அத்தனை பேரையும் பாபுதான் கொன்றார் என்று சொன்னாலும் நாங்கள் நம்0பமாட்டோம்” என்றல்லவா சொன்னர்கள். சென்ற இரு வாரங்களுக்கு முன் ஹரியானாவில் உள்ள சத்லோக் ஆசிரமத்தில் இறை மனிதர், கபீரின் மறுபிறப்பு ராம்பாலைக் கைது செய்ய காவல்படைகள் குவிக்கப்பட்டபோது அவரைக் காக்க உயிரைக் கொடுத்தல்லவா அ0வரது பக்தர்கள் போராடினார்கள். ஆறு உயிர்கள் பலியாயினவே. அவரோடு அன்று 865 பேர்கள் கைதானார்களே.

இதில் இன்னொன்றும் நமக்குப் புரியவில்லை. பிரச்சினைகளிலிருந்தும், வாழ்வில் எதிர் கொள்ளும் விடை தெரியாக் கேள்விகளிலிருந்தும் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள எந்த மகான்களிடம் இம் மக்கள் சரணடைந்தனரோ, அந்த மகான்களையே அவர்கள் காப்பாற்றப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்படியும் காப்பாற்ற இயலாமல் அவர்கள் கம்பி எண்ணிக் கொண்டும், ‘பெயில்’ கிடைக்குமா என வேண்டிக் கொண்டும் இருக்க நேர்ந்த போதும் கூட எப்படி இந்த ஊரு இன்னும் இவர்களை நம்பிக் கொண்டிருக்கிறது?
எப்படி இன்னும் இத்தகைய அவதார சாமிகளின் எண்ணிக்கை இங்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது?
பாலியல் ரீதி0யான அத்துமீறல்களில் வெளி வந்தவை மிகச் சொற்பம். எப்படி இவர்கள் வசீகரிக்கப்பட்டு சாமியார்களால் பாலியல் சுரண்டல்களுக்கு ஆட்படுத்தப் படுவதோடு, கூட்டுப் புணர்ச்சி முதலான காரியங்களும் ஆசிரமங்களில் இடம்பெறுகின்றன. அப்படியும் பெண்கள், தம்பதியர் ஆசிரமங்களில் அடைக்கலம் ஆகிக் கொண்டுதானே உள்ளனர்?

######

இவை எளிதில் விடை சொல்ல முடியாத கேள்விகள். வெளி நாடுகளிலும் கூட கடவுள் நம்பிக்கைகள், வழிபாடுகள் அதிகமாகியுள்ளன.. ரஜ்னீஷ் போன்றவர்களுக்கு வெளி நாடுகளிலும் ஏகப்பட்ட ஆதரவு இருப்பதை அறிவோம். இந்துமதததில் பிற மதங்களைப் போலக் கூடித் தொழுதல் (communion) எனும் கருத்தாக்கமும், அந்தக் கூடித் தொழுதலை நிறைவேற்றி வைக்கும் பாதிரிகள் அல்லது இமாம்கள் என்றொரு பிரிவும் இல்லாததால் அந்த இடத்தை இந்த அவதார மனிதர்கள் நிரப்புகின்றனர் என்றும் ஒரு கருத்தைப் பார்த்தேன். அப்படியான கூடித் தொழும் வழமை இங்கு இல்லாதபோதும் மடங்கள், மற்றும் மடாதிபதிகளை வணங்குதல் என்கிற மரபு இங்கு நீண்ட நாட்களாக இருக்கத்தான் செய்கிறது. அதன் தொடர்ச்சியாக இதைக் காணவும் செய்ய வாய்ப்புள்ளது. தவிரவும் பிற மதங்களிலும் இதேபோல இல்லாவிட்டாலும் சில மாற்றங்கள் நடந்து கொண்டுதான் உள்ளன. எத்தனை தவ்ஹீத் ஜமாத்கள் வந்தபோது0ம் தர்ஹா வணக்கம் குறையவில்லை.. கிறிஸ்தவ மதத்தில் நற்செய்திக் கூட்டங்களின் எண்ணிக்கைகள் பெருகுகின்றன. தினகரன் போன்றோர் நாடெங்கிலும் தங்கள் வழிபாட்டு நிலையங்களை அமைத்துக் கொண்டுதான் உள்ளனர்.
ஆக வழமையான இறை நம்பிக்கை (beleif) என்பதைத் .தாண்டி அற்புதங்களை (miracles) நாடும் வேட்கை அதிகரித்து வருவது மட்டும் நமக்குப் புரிகிறது.
########

பொருள்முதல்வாதத் தத்துவங்கள், மூட நம்பிக்கை எதிர்ப்புப் பிரச்சாரங்கள், அறிவியல் உண்மைகள் எல்லாம் தோற்றுக் கொண்டு இருக்கின்றனவா? பூமி உருண்டை எனவும், இரவு பகல், பருவச் சுழற்சி முதலியன எப்படி ஏற்படுகின்றன எனவும் விளக்குதல் மட்டும் போதாதா? மழை எப்படிப் பெய்கிறது, நீர் எப்படி ஆவி ஆகிறது, பனிக்கட்டியாய் உருவம் எடுக்கிறது என்கிற கேள்விகளுக்கு விடை கிடைத்தால் மட்டும் மனித மனம் திருப்தி அடைவதில்லை. அதற்கும் மேலாகச் சில வாழ்வியல் கேள்விகளுக்கு அதற்கு விடை தேவைப்படுகிறது. நான் எத்தனை நல்லவனாக இருந்த போதிலும் ஏன் எனக்கு இந்தச் சோதனைகள்? இத்தனை அநீதிகளையும் செய்பவன் எப்படி எந்தச் சறுக்கலும் இல்லாமல் மேலேறிக் கொண்டு0ள்ளான்? இப்படியான கேள்விகளுக்கு விஞ்ஞானத்தால் பதில் சொல்ல இயலவில்லையே? பிணி, மூப்பு, சாக்காட்டிலிருந்து தப்புவதற்கு புத்தர் சொன்ன வழி திருப்தி அளிக்கவில்லையே. பணம் உள்ளவர்களின் சராசரி ஆயுளும் நோய் எதிர்ப்பு சக்தியும் ஏழை எளியவர்களுக்கு இல்லையே.

மார்க்சீயம் முதலிய புரட்சிகரத் தத்துவங்கள் அளித்த பதில்களும் நடைமுறையில் நிறுவப்பட்டு மக்களின் கைகளில் பலன்களாக விடியவில்லை. முதலாளியத்திற்குப் பின் அப்படி ஒன்றும் சோசலிசம் உருப்பெற்று விடவில்லை. உருப் பெற்றவையும் வெற்றி பெறவில்லை. என்ன நடந்தது எனக் கம்யூனிஸ்டுகள் விளங்கிக் கொள்ளவும் இல்லை; விளக்கவும் இல்லை; தங்களை மாற்றிக் கொள்ளவும் தயாராக இல்லை.
மாற்றாக உருவான அடித்தள மக்கள் இயக்கங்களும் பேசியவை எல்லாம் வெறும் வாய் வீச்சுக்களா0கவே முடிந்தன. கட்டப் பஞ்சாயத்துகளுக்கும், சாதி அடையாளத்தைக் காட்டி வாரிசு அரசியல் செய்வதற்குந்தான் இட்டுச் சென்றன. சாதிஅமைப்பில் இடையிலும் கீழும் உள்ளவர்கள் தங்கள் இழி நிலைகளை மேம்படுத்திக் கொள்ளும் முயற்சிகள் வெறும் புனைவு அளைவிலேயே நின்றன. சாதிப் பெருமை பற்றிய புனைவு வரலாறுகளை உருவாக்குதல், ஆண்ட பரம்பரை எனச் சொல்லிக் கொள்ளுதல், சாதித் திரு உருக்களை உருவாக்குதல் என்பதாக அமைந்தன. அறிவுஜீவிகள் இவ்வாறு உருவாகும் நிலையை விளக்குவதோடு நில்லாமல் இதைக் கொண்டாடி இதுவே போதும் என அவர்களுக்கு ஆறுதல் சொல்லித் தங்களை வளப்படுத்திக் கொண்டனர்.
இன்றைய சாமியார் விவகாரங்களில் சமீபத்தில் நடந்த ராம்பால் கைது மட்டும் சற்று வித்தியாசமானது. இந்தச் சாமியார் விவகாரங்கள் எல்லாவற்றையும் நாம் ஒன்றாகப் பார்த்துவிடவும் முடியாது. ராம்பால் தன்னைக் கபீரின் மறு பிறவி என அழைத்துக் கொண்டார். கபீர் சாதி மத வித்தியாசங்கள் இல்லாத ஒரு சமூகத்தைக் கனவு கண்டவர். ‘கபீர் பந்த்’ என்பது இன்று வடநாட்டில் சாதி, தீண்டாமை வேறுபாடுகளுக்கு எதிராக நிற்கும் ஒரு வழிபாட்டுப் பிரிவு. பெரும்பாலும் அடித்தளச் சாதியினர்.

ராம் பாலின் ஆசிரமத்தில் சேர்வதற்குச் சில நிபந்தனைகள் உண்டு. அவர்கள் சாதி மற்றும் தீண்டாமை வேறுபாடுகளைக் கடைபிடிக்கக் கூடாது. சடங்கு, ஆசாரங்கள், சிரார்த்தம் கொடுப்பது முதலியவற்றை விட்டுவிட வேண்டும். புண்ணியத் தலங்களுக்கு யாத்திரைகள் சென்று வழிபடவும்கூடாது. சென்ற நூற்றாண்டுகளில் இந்துத்துவ உருவாக்கத்திலும், மதமார்ற எதிர்ப்பு, பசு வதை எதிர்ப்பு ஆகியவற்றிலும்முன் நின்ற ஆரிய சமாஜத்தையும், அதன் மூலவர் தயானந்த சரஸ்வதியையும் ராம்பால் கடுமையாக விமர்சித்து வந்தார்.

பாபா ராம் தேவ், அசாராம் பாபு முதலிய சாமியார்களை வெகுவாக ஆதரித்து வந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினருக்கு ராம் பால் எப்போதும் ஆகாதவராகவே இரு0ந்தார்.
இந்தப் பின்னணியில்தான் ஆர்ய சமாஜிகளுக்கும் ராம்பால் ஆதரவாளர்களுக்கும் இடையில் நடந்த ஒரு மோதலில் ஒரு ஆரிய சமாஜி கொல்லப்பட்டர். அந்த வழக்கில் ராம் பாலையும் சேர்த்திருந்தனர். அது தொடர்பான சம்மன் வந்தபோது இவர் நீதிமன்றம் சென்றிருந்தால் பிரச்சினை இப்படி ஆறு பேர் சாவது என்பதுவரை போயிருக்காது. இந்தச் சாமியார்கள் எல்லோரையும் நித்தியானந்தா மாதிரி இது போன்ற விஷயங்களில் விவரமானவர்கள் எனச் சொல்ல இயலாது. ராம் பால் ஆசிரமம் மிகவும் ஆடம்பரமாக இருந்தது, அங்கிருந்து நிறைய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்பது தவிர அவர் மீது பாலியல் குற்றச் சாட்டுகள் அல்லது நிலப்பறிப்பு அல்லது சந்திராசாமி போன்று ஆயுத வியாபாரத் தொடர்பு என்றெல்லால் இதுவரை புகார் ஏதுமில்லை.

இயக்கங்கள், போராட்டங்கள் அல்லது நமது அரசியல் சட்டம், ஜனநாயக ஆளுகை ஆகியவற்றின் மூலம் விடுதலை கிடைக்காத நிலையில் இந்த அடித்தள மக்கள் சாதி ஒழிப்பையும், சமத்துவத்தையும் ராம்பால் அளித்த இந்தக் கற்பனையான விடுதலையின் மூலம் சுகித்தார்களோ? மதம் குறித்துப் பேராசான் கார்ல் மார்க்ஸ் சொன்னவைதான் நினைவுக்கு வருகின்றன. எல்லோரும் கைவிட்டார்கள் என்கிறபோது இந்த “எல்லோரிலும்” என்பதில் அரசியல் இயக்கங்கள் தவிர கடவுளரும் அடக்கமாகிறார்கள் போலும். இல்லாவிட்டால் ஆலய வழிபாடுகளுக்கு அப்பால் எப்படி இந்த அவதார மனிதர்களின் வழிபாடுகள் இடம்பெற்றன?
கடவுளர் கைவிட்ட இடங்களை பொருள்முதல்வாதிகளோ இல்லை பகுத்தறிவாளர்களோ இல்லை அடையாள அரசியலாரோ யாராலும் நிரப்ப இயலவில்லை.

####

அரசியல்வாதிகளும் இந்த அவதார மனிதர்களும் ஒருவரால் மற்றவர் பலன் பெற்றனர் என்பதுதான். சத்திய சாயிபாபாவின் படுக்கை அறையில் மூவர் கொலை செய்யப்பட்ட மர்மம் அமுக்கப்பட்டதில் பிரதமர் நரசிம்மாவின் பங்கை யாரும் மறுத்துவிட இயலாது.

இந்துத்துவ அமைப்புகளைப் பொருத்தமட்டில் அவை எப்போதும் இந்த அவதார மனிதர்களை அணுக்கமாகவே பார்த்து வந்துள்ளன.. இப்படி உருவாகும் சாமியார்கள்மற்றும் சாமியாரிணிகளிடமிருந்தும் அவர்கள் தம் இயக்கங்களுக்கு ஆளெடுத்தார்கள். உமா பாரதி, சாத்வி பிரக்ஞா, மகத் சந்தானந்த், மத்தியத் துணை அமைச்சராக உள்ள நிரஞ்சனா ஜோஷி.. இப்படி நிறையச் சொல்லலாம்.
அசாரம் பாபுவின் வளர்ந்து வந்த செல்வாக்கை கண்டு அவரைக் கையகப்படுத்துவதில் இந்துத்துவ அமைப்புகள் குறியாக இருந்தன. கடந்த ஆறு ஆண்டுகளில் அசாரமின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் ஆர்.எஸ்.எஸ் சின் ‘ஆர்கனைசர்’ இதழ் பாராட்டிக் கொண்டிருந்தது. விசுவ இந்து பரிஷத்தின் சுவாமி சத்யமித்ரானந்தர் அசாரமை மகாத்மா காந்தியுடனும் விவேகாநந்தருடனும் ஒப்பிட்டுப் பேசினார். 2005ல் நடைபெற்ற ஆர்.எஸ் எஸ்சின் பெண்கள் அமைப்பான ராஷ்ட்ரீய சேவிகா சங்கத்தின் 15ம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக அவர் அழைக்கப்பட்டார். 2007ல் நடைபெற்ற ஸ்வதேசி ஜாக்ரான் மன்ச் அமைப்பின் மாநாட்டில் திறப்புரை வழங்கும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

அசாரமின் நிலப் பறிப்பு ஊழல் முதலியன வெளிப்பட்டபோது பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் அவர் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்தன. உமாபாரதி, மத்திய பிரதேச தொழில்துறை அமைச்சர் கைலாஷ் விஜய வர்கியா, பிரபாத் ஜா முதலிய பா.ஜ.க தலைவர்கள் கேடயங்களாக இருந்து அவரைப் பாதுகாத்தனர். 2012 டெல்லி பாலியல் வன்முறைக்கு எதிராக இந்தியாவே கொந்தளித்துக் கொண்டிருந்தபோது அசாரம், “இரண்டு கைகளும் சேர்ந்து தட்டாமல் ஓசை வராது. அந்தப் பெண் தன்னை வன்புணர்ச்சி செய்ய வந்தவர்களைக் கும்பிட்டு, ‘அண்ணா, என்னை உங்கள்: சகோதரியாக நினைத்துக் கொள்ளுங்கள்’ எனக் கேட்டிருந்தால் இப்படி நடந்திருக்காது” என உளறியதை அனைவரும் கண்டித்தபோது உமாபாரதி அந்தக் கூற்றுக்குச் சப்பைக்கட்டு கட்டினார். இந்துத்துவ பயங்கரவாதி சாத்வி ப்ரக்ஞாவை அசாரம் குற்றமற்றவர் எனச் சொன்னதை ‘ஆர்கனைசர்’ இதழ், “அது, அது.. அப்படித்தான் சொல்லணும்” என வாயாரப் பாராட்டியது. தேர்தல்களில் பா.ஜ.கவுக்கு ஆதரவாக அசாரம் யோகாசனப் பட்டறைகளை நடத்திப் பிரச்சாரம் செய்து வந்ததைக் கண்காணிப்பதும், கட்டுப்படுத்துவதும் தேர்தல் ஆணையத்தின் முக்கிய பணிகளாக இருந்தன.

பாபா ராம்தேவ் தான் ஒன்றும் பா.ஜ.க ஆதரவாளன் இல்லை எனச் சொல்லி வந்தாலும் அவருக்கு எதிராகக் காங்கிரஸ் அரசு நடவடிக்கைகள் எடுத்தபோது அதை இந்துத்துவவாதிகள் கண்டித்தனர், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவையும் மோடியையும் ராம் தேவ் ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார். யோகா, ஆயுர்வேதம், சுதேசிப் பொருட்களுக்கு ஆதரவு, உலகமய எதிர்ப்புச் சொல்லாடல், வெளிப்படையான பெரும்பான்மைவாதம் ஆகியவற்றுடன் இயங்கும் இவர்களைத் தங்களின் முதன்மை ஆதரவு சக்தியாக இந்துத்துவ அமைப்புகள் கருதுவதில் வியப்பில்லை. ஓரினப் புணர்ச்சி எதிர்ப்பு, ‘காதலர் தினத்தைப் பெற்றோர்களை வழிபடும் தினமாகக் கொண்டாடவேண்டும்’, ‘பள்ளிகளில் பாலியல் கல்விக்குப் பதிலாக யோகா சொல்லிக் கொடுக்கவேண்டும்’ என்று இவர்கள் உளறுவதெல்லாம் ஆர்.எஸ்.எஸ்சுக்கு உவப்பளிக்கும் செயல்கள்தானே. பாரம்பரியமான மத பீடங்களைக் கைக்குள் வைத்துக் கொள்வது என்பதைக் காட்டிலும் பெரும் மக்கள் திரள் ஆதரவுடன் கூடிய இந்த அவதாரங்களைக் கையடக்கமாக வைத்துக் கொள்வதையே அது விரும்புகிறது.
இந்தச் சாமியார்கள் அவ்வப்போது அரசியலில் தலையிட்டுக் கவனம் பெறுவதையும் ஒரு உத்தியாகக் கொண்டுள்ளனர். ராம்தேவ் கருப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக டெல்லியில் பெரும் போராட்டம் ஒன்று நடத்தியதும், ரவிசங்கர் மகராஜ் ஈழப் பிரச்சினையில் தலையிட்டதும், பாலியல் வன்முறை, கொலை முதலிய குற்றச்சாட்டுகளைச் சந்தித்த காஞ்சி சங்கராச்சாரி பாபர் மசூதிப் பிரச்சினையில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தலையிட முயற்சித்ததும் சில எடுத்துக் காட்டுகள்.

########

தம்மிடம் வருபவர்களை இந்த அவதார மனிதர்கள் தக்க வைக்கும் உத்திகள் குறித்து உளவியலாளர்களின் கருத்துக்களைத் தொகுத்துப் பலரும் எழுதியுள்ளனர். வருகிறவர்களின் சுயசிந்தனையையும் சுயத்தையும் அழித்தல் இவர்களின் முதல் உத்தி, நித்தியானந்தா, “மனம் ஒரு குரங்கு. அதை அலைய விடாதீர்கள். உங்கள் மனதில் படிந்து கிடக்கும் அய்யங்களைத் துடைத்தெறிந்து குரு சொல்வதைக் கேளுங்கள்..” எனச் சொல்வதை அவரது பக்தை ஒருவர் பதிவு செய்துள்ளார்.

பாவங்களில் எல்லாம் பெரியது ‘குருத் துரோகம்தான்’ என இவர்கள் அறிவுறுத்துகின்றனர், தொடக்க நிலைப் பக்தர்களை ஒரு நாளில் சுமார் 20 மணிநேரம் ஏதேனும் பயிற்சிகளில் ஈடுபடுத்திப் படுத்தவுடன் எதையும் சிந்திக்காமல் உறங்க வைக்கும் உத்தியைச் சுட்டிக் காட்டுகிறார் இன்னொரு ஆய்வாளர். குருவை முழுமையாக நம்பி ஏற்றுக் கொண்டவர்களுக்குப் புதிய பெயர் ஒன்றைச் சூட்டுவது இன்னொரு உத்தி. இதன் மூலம் அவர்கள் தம் பழைய வாழ்வையும் அடையாளங்களையும் துறந்து குருவில் ஐக்கியமாகின்றனர். தங்களின் சுயத்தை இழந்து குருவிடம் ஐக்கியமானவர்கள் அவர் மீது குற்றாச்சாட்டுகள் வைக்கப்படும்போது அவற்றை நம்புவதில்லை. அவர் குற்றமிழைத்தார் அல்லது தோல்வியடந்தார் என ஏற்பது அவர்கள் தங்களையே இழப்பதற்கொப்பு. தாங்களே வீழ்ந்ததற்கொப்பு. அதன் விளைவுதான் அர்கள் இப்படிப் பைத்தியமாக அவர்களை நம்பி உயிரையும் கொடுக்கத் துணிவது. எப்படியோ இந்தத் தகவல் தொழில் நுட்ப உலகமய யுகத்தில் விஞ்ஞான உண்மைகளுக்கு ஒரு சவாலாக இந்தச் சாமியார்கள் தங்களுக்கும் ஒரு இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். இது ஆபத்தானது என உணர்பவர்களுக்கு இந்த ஆபத்தை எதிர்கொள்ளும் வழிதான் தெரியவில்லை.

பா.ம.க.வை அரசியல் கட்சிகள் புறக்கணிக்க வேண்டும்

“சாதி இருக்கும்வரை சாதி இயக்கம் இருந்துதான் ஆகும்” என்கிறார் ராமதாஸ். 45 சாதி இயக்கங்களின் தலைவர்களைத் திரட்டித் தொகுத்த மகிழ்ச்சியில், “என் உடம்பில் தெம்பு வந்துவிட்டது” என்கிறார். சாதி ரீதியாகப் பிரச்சினைகளைத் தொகுத்து மத்திய மாநில அரசுகளிடம் சமர்ப்பிப்போம் என்கிறார்.

ஆக, தமிழக மக்கள், மக்களின் ஒட்டு மொத்தமான பிரச்சினைகள் என்பதைக் காட்டிலும், தனித் தனிச் சாதிகளின் பிரச்சினை என்கிற அளவில்தான் இனிப் பேச முடியும் என்பது தான் அவரது ‘அனைத்து சமுதாயப் பேரியக்கம்’ முன் வைக்கும் செய்தி.

தலித்கள் மட்டும் தவிர்க்கப்பட்ட இந்த ‘அனைத்து சாதி’க் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தலித்களுக்கு எதிராகக் கடுஞ் சொற்களைப் பெய்துள்ளனர். வழக்கம்போல இரண்டு ‘பிரச்சினைகள்’ முன்வைக்கப்பட்டுள்ளன. ஒன்று ராமதாசின் மொழியில் சொல்வதானால் ‘நாடகக் காதல்’. மற்றது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் ‘தவறாகப்’ பயன்படுத்துவது.

முதல் பிரச்சினைக்குத் தீர்வு வன்கொடுமைச் சட்டத்தைத் திருத்த வேண்டுமாம். இரண்டாவது பிரச்சினைக்குத் தீர்வு திருமணத்திற்குப் பெண்களது பெற்றோர்களின் சம்மதத்தைக் கட்டாயமாக்க வேண்டுமாம்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பொருத்த மட்டில், இச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக் கூடியவர்களின் வீதம் குறைவாக உள்ளது என்பதையும், அதிகார மட்டங்களில் நிலவும் தலித் விரோதப் போக்குகளின் விளைவாக இச்சட்டத்தின் ஓட்டைகள் தலித்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன எனவும் ஆய்வுகள் நிறுவியுள்ளன. இச்சட்டத்தில் காணப்படும் ஓட்டைகள் தொகுக்கப்பட்டு உரிய சட்டத் திருத்தங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்கிற குரல் இன்று தேசிய அளவில் உருவாகியுள்ளது.

திருமணத்திற்குப் பெண்களுக்கு மட்டும் பெற்றோர்களின் சம்மதத்தைக் கட்டாயப்படுத்த வேண்டும் என்பது அடிப்படைப் பாலியல் சமத்துவ அறங்களுக்கு மட்டுமின்றி நமது அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானது. தவிரவும் தலித்களுடனான சாதி மறுப்புத் திருமணங்கள் என்பன தமிழகத்தில்தான் அகில இந்திய அளவில் குறைவாக உள்ளது.

இத்தகைய பலவீனமான கோரிக்கைகளுடன் தன் பயணத்தைத் தொடங்கியுள்ளது ராமதாசின் அனைத்து சாதிக் கப்பல்.

‘சாதி’ என்கிற அடையாளத்தின் கீழ் ஒரு அரசியலைக் கட்டமைக்கும்போது தவிர்க்க இயலாமல் நமது தேர்தல் அரசியலில் ஒரு கூட்டணியை அமைத்து ஆதரவுத் தொகுதியைப் பெருக்கிக் கொள்ள வேண்டியதாகிறது. காலங்காலமாகத் தீண்டாமைக்கு ஆட்படுத்தப்பட்ட தலித்கள் சாதி அடையாளத்தில் தம்மைத் திரட்டிக் கொள்வதை யாரும் குறை சொல்ல இயலாது. அம்பேத்கர் அவர்கள் இவ்வாறு அரசியல் இயக்கங்களைக் கட்டியபோது இடதுசாரிகளுடனும், சோஷலிஸ்டுகளுடனுந்தான் கூட்டணி அமைத்தார். ‘சுதந்திரத் தொழிலாளர் கட்சி’, ‘குடியரசுக் கட்சி’ என்கிற பெயர்களைத்தான் தேர்வு செய்தார்.

கான்ஷிராம் புத்தரின் வழி நின்று ‘பகுஜன்’ என்கிற அடையாளத்தை முன்நிறுத்தினார். அவர் விலக்கியது பார்ப்பனர்களையும் சத்திரியர்களையும் மட்டுமே. குர்மி, சமர் முதலான தலித் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு, இதர பிற்படுத்தப்பட்ட சாதிகள், சிறுபான்மையோர் என்பதாக அக்கூட்டணி அமைந்தது.

வடமாநிலங்களுக்கும் தமிழகத்திற்கும் உள்ள ஒரு வேறுபாடு குறிப்பிடத் தக்கது.. அங்கே பார்ப்பனர்கள் கிட்டத்தட்ட பத்து சதம் வரை உள்ளனர். இங்கே மூன்று சதத்திற்கும் குறைவு. அங்கே சத்திரியர் எண்ணிக்கையில் மட்டுமல்ல அரசியலிலும் பலமான சக்திகள். இகே அப்படி ஒரு வருணமோ சாதியோ கிடையாது. தென்னகம் போல இட ஒதுக்கீடு என்கிற கருத்தாக்கம் எழுபதுகளுக்கு முன்பு வரை வடக்கில் வலுப்பெற்று இருந்ததில்லை. எனவே அரசுப் பணிகளில் தலித்களைக் காட்டிலும் கூட இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர் பின் தங்கி இருந்தனர்.

கான்ஷிராம் இந்த முற்படுத்தப்பட்ட சாதிகளை விலக்கி தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் ஒற்றுமையை உருவாக்கினார், அவரது அரசியல் முழக்கங்கள் பிற்படுத்தப்பட்டோரின் பிந்தங்கிய நிலையை முன்வைத்து அமைந்தன. அதே நேரத்தில் தலித்கள் மத்தியில் உட்சாதி ஒற்றுமையும் வலுவானது. இதெல்லாம் கூடப் போதாது என்றுதான் முற்படுத்தப்பட்ட சாதிகளையும் இணைத்து மாயாவதி ‘சர்வஜன்’ என்கிற கருத்தாக்கத்தை முன்வைத்தார்.

அந்தவகையில் பார்ப்பனர்கள் போன்றோரும் கூட இந்த வலுவான கூட்டணியில் தம்மை இணைத்துக் கொண்டால் பலனுண்டு என்கிற அடிப்படையில் சர்வஜன் கூட்டணியில் இணைந்தனர். எனினும் இந்தப் புதிய இணைவு வலுவானதாக இல்லாததாலும், இதனாலேயே கான்ஷிராம் அமைத்த வலுவான கூட்டணியில் சில பிளவுகள் நேர்ந்ததாலும் மாயாவதி சென்ற தேர்தலில் ஆட்சியை இழக்க நேரிட்டது.

தவிரவும் இன்று மாநில அரசியலில் ‘வளர்ச்சி’, ‘ஊழலின்மை’ முதலான கருத்தாக்கங்கள் முதன்மை பெறுவதும் கவனத்திற்குரியது.

ராமதாசின் அனைத்து சாதி அரசியல் இந்த வேறுபாடுகளைக் கணக்கில் கொள்ளாமல் மாயாவதியின் ‘சமூகப் பொறியியல்’ என்னும் சொல்லாடலைத் தமிழகத்தில் பயன்படுத்தப் பார்க்கிறார்.

இட ஒதுக்கீட்டுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த தமிழகத்தில் வட மாநிலங்களைப்போல அரசுப் பணிகளிலோ மற்றவற்றிலோ பிற்படுத்தப்பட்டவர்கள் தலித்களைக் காட்டிலும் பின் தங்கி இல்லை. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் ஆகக் கீழாக இருந்த வன்னியர் முதலான சாதியினருக்கு மிகப் பிற்படுத்தப்பட்ட நிலையை ராமதாசின் அரசியல் ஈட்டித் தந்ததன் விளைவாக இன்று அவர்களுக்கும் அதிகாரங்களில் உரிய இடம் கிடைக்கிறது.

இந்நிலையில் பிற்படுத்தப்பட்ட சாதிகள் பின்தங்கியுள்ளதாகச் சொல்லி ஒரு அரசியலைக் கட்டமைக்கும் முயற்சி இங்கு எப்படி வெற்றி பெற இயலும்?

ராமதாஸ் கடந்த கால் நூற்றாண்டில் வன்னியர்களை வெறும் சாதி அமைப்பாக மட்டுமின்றி ஒரு அரசியல் இயக்கமாகவும் உருவாக்கியுள்ளார். ஆனால் இன்று ராமதாஸ் உருவாக்கியுல்ள கூட்டணியில் உள்ள பிற 44 சாதிகளும் வெறும் சாதி அமைப்புகளாக மட்டுமே உள்ளன. முக்குலத்தோர் மத்தியில் அத்தகைய முயற்சி முத்துராமலிங்கர் காலத்தில் ஓரளவு மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவருக்குப் பின் அவ்வமைப்புகள் வெறும் சாதி அமைப்புக்களாகவே குறுகின. இன்று அவர்கள் சாதி அமைப்புகளில் இருந்தபோதும் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் பிரிந்துள்ளனர். சாதி மாநாடுகளுக்கு வேண்டுமானால் இவர்கள் தலைமையின் குரலை ஏற்று வந்து குவிந்து வியப்பை ஏற்படுத்தலாம். ஆனால் வன்னியர்கள் தவிர்த்த பிற சாதியினர் தேர்தல் என வரும்போது சாதித் தலைமைகளின் அழைப்பை ஏற்கப் போவதில்லை.

அது மாத்திரமல்ல, முத்துராமலிங்கருக்குப் பின் அவரது ஃபார்வர்ட் ப்ளாக் கட்சி பெயரளவிற்கும் கூட இல்லாமல் சிதைந்ததற்குக் காரணம் அவர் முன்னிலைப்படுத்திய தலித் வெறுப்புத்தான். ராமதாசுக்குப் பின் அன்புமணியாரின் தலைமையில் பா.ம.கவுக்கும் அதுதான் நிகழப் போகிறது.

தனது சாதி அரசியலை மறைக்க அவ்வப்போது ராமதாஸ் முழங்கும் தமிழ்த் தேசிய வீர உரைகள் அவரது அனைத்து சாதிக் கப்பலைக் கரை சேர்க்க உதவாது. தமிழ்த் தேசியர்கள் வேண்டுமானால் ராமதாசின் சாதி வெறி அரசியலைக் கண்டு கொள்ளாமல் அவரை அணைத்துக் கொள்ளலாம்.

ஆனால் மக்கள் ராமதாசை ஒரு குறிப்பிட்ட சாதியின் தலைவராகவே காண்பர். இவர்களின் அரசியல் தேர்தலில் எடுபடாது. ஆனானப்பட்ட பால் தாக்கரேயின் சிவசேனா கட்சியே என்றைக்கும் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு ஆதரவு திரட்ட முடிந்ததில்லை.

சாதி அடிப்படையில் தமிழர்களைப் பிளவுபடுத்தும் பா.ம.கவுடன் கூட்டணி கிடையாது எனப் பிற கட்சிகள் அறிவிக்க வேண்டும்.