சென்னை, நவ 01, 2019
தேவை ஒரு நீதி விசாரணை
சென்ற அக்டோபர் 28 (2019) காலை கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் அட்டபாடி கிராமத்தை ஒட்டிய அகாலி காட்டுப் பகுதியில் உள்ள மஞ்சகண்டி (மஞ்சிக்காடி) என்னுமிடத்தில் கேரள அரசின் நக்சலைட் ஒழிப்பு கமாண்டோ படையான ‘தண்டர்போல்ட்’ ரேமா எனும் பெண் உட்பட மணிவாசகம், கார்த்தி, அரவிந்த் என நான்கு மாஓயிஸ்டுகளைச் சுட்டுக் கொன்றுள்ளது. இது இன்று கேரளத்தின் மனித உரிமை அமைப்புகளால் மட்டுமின்றி, மாநில மனித உரிமை ஆணையத்தாலும், கேரள அரசின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) ஆகியவற்றாலும் கண்டிக்கப்பட்டுள்ளது. அரசும் காவல்துறையும் சொல்பவற்றை ஏற்க முடியாது என இவர்கள் ஆணித்தரமாகக் கூறுகின்றனர். வழக்கம்போல ஆளும் கட்சியும் காவல்துறையும், “அவர்கள் சுட்டார்கள், நாங்கள் திருப்பிச் சுட்டோம், இதில் அவர்கள் மட்டும் நான்குபேர்கள் கொல்லப்பட்டார்கள். எங்கள் தரப்பில் பெரிய இழப்புகள் ஏதுமில்லை” என கூறுகின்றன. கேரள முதல்வர் பினரயி விஜயனும் பாலக்காடு காவல்துறை கண்காணிப்பாளர் (SP) சிவவிக்ரம் ஆகியோரும் இதே பல்லவியைத் திருப்பிப் பாடினாலும் யாரும் அதை ஏற்காத சூழல் இன்று கேரளத்தில் ஏற்பட்டுள்ளது.
இப்போது கொல்லப்பட்ட நால்வரில் மணிவாசகம் மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகி உள்ளது. கார்த்திக்கின் தாய் மீனம்மா, மணிவாசகத்தின் தங்கை லட்சுமி மற்றும் அவரது கணவர் ஆகியோர் மணிவாசகத்தின் உடலைப் பார்க்கக் கூடத் தொடக்கத்தில் அனுமதிக்க்கப்படவில்லை. மதுரை உயர்நீதிமன்றக் கிளையை அணுகி சாதகமான ஆணை ஒன்றைப் பெற்றபின்பே அனுமதிக்கப் பட்டுள்ளனர். அவர்களும் உடல்களைப் பார்த்து அடையாளம் காட்டியுள்ளனர். யாரையும் பார்க்கக் கூட அனுமதிக்காத கேரள காவல்துறை இப்படி நீதிமன்ற ஆணையை ஒட்டியும், ‘இன்குவஸ்ட்’டிற்கு உறவினர்கள் அடையாளம் காட்டுவது கட்டாயம் என்பதாலும் இறுதியில் அவர்க்ளை உடல்களைப் பார்க்க அனுமதித்துள்ளது என உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. மணிவாசகத்தின் இன்னொரு சகோதரி சந்திராவும் மனைவி கலாவும் தற்போது மாஓஇஸ்டுகள் தொடர்பான வழக்குகளில் சிறையில் உள்ளனர். மணிவாசகம், கார்த்தி இருவரையும் பிற உறவினர்கள் அடையாளம் காட்டியபோதும் உறவினர்கள் அவர்களது உடல்களை வாங்க மறுத்துள்ளனர். முறையான இன்னொரு பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும் என இவர்கள் கோருகின்றனர்.
தற்போதைய என்கவுன்டரில் கொல்லப்பட்ட மற்ற இருவரான அரவிந்த் மற்றும் ரேமா ஆகியோரை அடையாளம் காட்ட உறவினர்கள் யாரும் நேற்றுவரை வரவில்லை. அவர்கள் குறித்த பெயர் மற்றும் மாநிலம் ஆகியவற்றை கேரளக் காவல்துறை மாறி மாறி சொல்லிக் கொண்டுள்ளது. அரவிந்தின் பெயர் முதலில் சுரேஷ் எனவும் பிறகு தீபக் எனவும் கூறப்பட்டது. முதலில் அவர்களும் தமிழர்கள்தான் என்றார்கள், பிறகு அதை மறுத்தார்கள். அதில் ஒருவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்றார்கள். பிறகு மீண்டும் அவர்கள் தமிழர்கள்தான் என்றார்கள். ஆனால் அதையும் இப்போது அவர்களால் உறுதிப்படுத்த இயலவில்லை. அவர்களது உடல்களை இதுவரை யாரும் உரிமை கோரவில்லை.
கேரளத்தில் தொடர்ந்து நடக்கும் என்கவுன்டர் படுகொலைகள்
“நக்சலைட்” என்ற காரணத்திற்காகக் கேரளத்தில் நடந்த முதல் என்கவுன்டர் படுகொலை அம்பலமாகி இந்திய அளவில் கண்டிக்கப்பட்ட ஒன்று, வயநாடு பழங்குடி மக்கள் மத்தியில் அரசியல் பணியாற்றிக் கொண்டிருந்த அரிக்காடு வர்கிஸ் எனும் 31 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுக் கொண்டு சென்று சுட்டுக் கொல்லப்பட்டார் 1971 பிப்ரவரி 18 அன்று நடந்த இக்கொலை பெரிய அளவில் கேரளத்தில் பேசப்பட்ட ஒன்று. லக்ஷ்மணா எனும் காவல்துறை உயர் அதிகாரியின் (DSP) ஆணையை ஏற்று வர்கிசைத் தான் என்கவுன்டர் பண்ணிச் சுட்டுக் கொன்றதாகப் பல ஆண்டுகளுக்குப் பின் காவலர் ராமச்சந்திர நாயர் என்பவர் மனச்சாட்சி உறுத்தலில் அடிப்படையில் உண்மையை வெளிப்படுத்தியபோது அது உலகின் கவனத்தை ஈர்த்தது. ‘என்கவுன்டர்’ கொலைகள் எல்லாமே கிட்டத்தட்ட இப்படித்தான் என்பதும் உலகின் முன் உறுதி ஆனது. அந்த என்கவுன்டர் கொலைக்காக நாற்பது ஆண்டுகளுக்குப்பின் லக்ஷ்மணா தண்டிக்கப்பட்டார்.
தற்போது பினரயி விஜயன் தலைமையில் இடது முன்னணி ஆட்சி ஏற்பட்ட பின் தொடர்ந்து இப்படி என்கவுன்டர் கொலைகள் நடந்து கொண்டுள்ளன. 2016 நவம்பர் 25 அன்று மலப்புரம் மாவட்டம் நீலாம்பூர் காட்டில் குப்புராஜ், அஜிதா என்கிற தமிழகத்தைச் சேர்ந்த இரு மாஓயிஸ்டுகள் இப்படித்தான் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போதும் நெருங்கிய உறவினர்கள் தவிர யாரையும் உடல்களைப் பார்க்கக் கூட கேரள காவல்துறை எளிதில் அனுமதிக்கவில்லை. கேரளத்திலேயே அவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.
மூன்று மாதங்களுக்கு முன் வயநாட்டில் உள்ள வாதிரி என்னுமிடத்தில் ஓட்டல் ஒன்றில் உணவு வாங்கச் சென்ற மாஓயிஸ்ட் சி.பி. ஜலீல் மார்ச் 06 (2019) அன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.
இப்போது இந்த நால்வரும் இப்படிச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களும் சந்திக்கும் இந்தப் பகுதியை மையமாகக் கொண்டு மாஓயிஸ்டுகள் செயல்பட்டு வருகிறார்கள் எனவும் அவர்களை “நியூட்றலைஸ்” பண்ணுவதற்காக என “தண்டர்போல்ட்” எனும் அதிரடிப் படை அங்கு உருவாக்கப்பட்டுள்ளது. . இந்த “நியூட்றலைஸ்’ எனும் சொல் கொலை என்பதற்குப் பதிலாகக் காவல்துறை ‘கண்ணியமாக’ பயன்படுத்தும் ஒன்று. இந்த ‘தண்டர்போல்ட்’ என்பது இந்திய ரிசர்வ் படையின் (IRB) கீழ் அமைக்கப்பட்ட ஒரு கமாண்டோ படை. ஊமன் சாண்டி முதல்வராகவும், சென்னிதாலா உள்துறை அமைச்சராகவும் இருந்த UDF ஆட்சியின்போது உருவாக்கப்பட்டது இது. “நியூட்றலைஸ்” செய்வது என்பதைத் தவிர வேறு எதுவும் இவர்களுக்குத் தெரியாது.
இன்று இந்த என்கவுன்டர் கொலைகளை எதிர்க்கட்சித் தலைவர் சென்னிதாலா முதலானோரும், மனித உரிமை அமைப்பினரும் கண்டித்துள்ளனர். அது தவிர ஆளும் இடது ஜனநாயக முன்னணியில் உள்ள இரண்டாவது பெரிய கட்சியான சி.பி.,ஐ கட்சியின் தலைவர் கனம் ராஜேந்திரன் கண்டித்துள்ளது குறிப்பிடத் தக்கது. அதுவும் சென்ற அக் 30 அன்று திருவனந்தபுரத்தில் நடந்த அவர்கள் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் முடிந்தபின் அவர் பத்திரிகையாளர்களுக்குக் கொடுத்த நேர்காணலில் அவர் இதைக் கண்டித்தது என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டணிக் கட்சியின் மாநிலக் குழுவின் முடிவு இது என்றே பத்திரிகைகள் இதைக் குறிப்பிடுகின்றன. ராஜேந்திரன் நேர்காணலின்போது சொன்னவற்றில் சில மட்டும் இங்கே:
“இது காவல்துறை நடத்திய ஒரு அப்பட்டமான போலி என்கவுன்டர் என அட்டப்பாடியில் உள்ள எங்கள் கட்சிக்காரர்கள் கூறுகின்றனர்… கொல்லப்பட்ட மாஓயிஸ்டுகளில் ஒருவரான மாணிக்கவாசகம் துணையில்லாமல் நடக்கக் கூட இயலாத அளவிற்கு நோய்வாய்ப்பட்டிருந்தார், கடும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் காவல்துறையிடம் சரணடையத் தயாராக இருந்தார். அவரைக் கொன்றிருக்கிறார்கள். மாஓயிஸ்டுகளைப் போலீஸ் சுட்டுக் கொன்றபோது அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டை அது நடந்த இடத்திற்கு அருகாமையில் வசிக்கும் பழங்குடி மக்கள் நேரில் பார்த்துள்ளனர். மிக அருகிலிருந்து அவர்கள் சுடப்பட்டதாக அவர்கள் கூறுகிறார்கள். கொல்லப்பட்டவர்கள் உடலில் பல குண்டுக் காயங்கள் உள்ளன. மார்பு, தலை ஆகியவற்றில் குண்டுக் காயங்கள் உள்ளன. ஆனால் ‘இந்தச் சண்டையில்’ காவல்துறையினர் யாரும் காயம்படவில்லை! … “(பிடிக்காத) ஒரு கருத்தைச் சுமந்துள்ளவர்கள் என்பதற்காக யாரையும் கொல்வது காட்டுமிராண்டித் தனம்.. நான்கூட மாஓயிஸ்ட் கருத்துக்களை ஏற்பதில்லை. ஆனால் துப்பாக்கிக் குண்டுகளால் அதை எதிர்கொள்ள இயலாது ” -என கனம் ராஜேந்திரன் கூறுவது மிக முக்கியமான ஒன்று. மார்க்சிஸ்ட் கட்சியில் பலரும் இந்நிலை குறித்து உள்ளுக்குள் வருந்துகின்றனர், சம்பவம் நடந்துள்ள அட்டபாடி பகுதி DYFI வட்டச் செயலாளர் அமல்தேவ் என்பவர் இதைக் கண்டித்துப் பதவி விலகியுள்ளார்.
கேரள மனித உரிமை ஆணையம் கேரள காவல்துறையிடம் இந்த என்கவுன்டர் கொலைகள் குறித்து விளக்கம் கேட்டுள்ளது. மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் பி. மோகன்தாஸ்,
“கடவுளின் சொந்த தேசம் என அழைக்கப்படும் கேரளத்தில் இந்தக் கொலைகள் நடந்துள்ளன. பார்த்த கணத்திலேயே ஒரு பெண் உட்பட நான்கு பேர்களைச் சுட்டுக் கொல்லத் தூண்டும் அளவிற்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்பதைக் காவல் துறை அதிகாரிகள் இன்னும் விளக்கவில்லை. மாஓயிஸ்டுகள் என்கிற ஐயம் ஒன்றின் அடிப்படையிலேயே ஒரு உயிரைப் பறிக்கும் அதிகாரம் காவல்துறைக்குக் கிடையாது.” – எனக் கூறியுள்ளதும் இத்துடன் இணைத்துப் பார்க்கப்பட வேண்டிய ஒன்று.
மனித உரிமை ஆணைய உறுப்பினர் மோகன்தாஸ் மற்றும் ஆளும் கூட்டணிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான கனம் ராஜேந்திரன் ஆகியோரின் கூற்றுகளிலிருந்து நாம் இரண்டு விடயங்களைப் புரிந்துகொள்கிறோம்.
1.காவல்துறை தரப்பில் கூறுவதுபோல மாஓயிஸ்டுகள் சுட்ட பின்னர்தான் தற்காப்புக்காக தண்டர் போல்டுகள் இப்படிச் சுட்டுக் கொன்றனர் என முதல்வர் பினரயி விஜயன் சொல்வதை இக்கூற்றுகள் மறுக்கின்றன. சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே தண்டர்போல்டுகள் சுட்டுள்ளனர். எச்சரிக்கை ஏதும் அளிக்கப்படவில்லை.
2.மாஓயிஸ்டுகளில் குறைந்தபட்சம் சிலராவது காவல்துறையிடம் சரணடையத் தயாராக இருந்துள்ளனர். குறிப்பாகக் கடும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மணிவாசகம் அவ்வாறு சரணடையத் தயாராக இருந்துள்ளார் எனப்படுகிறது.
இத்துடன் வெளிவரும் வேறு செய்திகளும் இதை உறுதி செய்கின்றன. குறிப்பாக துப்பாக்கிச் சூடு நடந்த பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்கள் சொல்பவை இங்கே ஒப்பிட்டுப் பார்க்கப்பட வேண்டியவை.
அக்டோபர் 30 மாலை சுமார் 06 மணி அளவில் ‘ஆதிவாசிகள் தாய்க்குல சங்கம்’ எனும் அமைப்பின் துணைத் தலைவர் ஷிவானி மாத்ருபூமி தொலைக் காட்சிக்கு அளித்த ஒரு நேர்காணலில் குறிப்பிட்ட செய்தி ஒன்று கவனத்துக்குரியது. அது: “அட்டபாடியில் திங்கட்கிழமை கொல்லப்பட்ட நான்கு மாஓயிஸ்டுகளும் காவல்துறையிடம் சரணடைய வந்தவர்கள். அவர்கள் கேரள போலீசால் போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டுள்ளனர்” – என்பது. இவர்களின் ‘சரண்டருக்காக’ காவல் துறையிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் ஷிவானி அந்த நேர்காணலில் கூறியுள்ளார். இப்பகுதியின் முன்னாள் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் நவநீத் சர்மா என்பவரும் அப்படிச் சரண் அடைவது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருந்ததை உறுதிப் படுத்துகிறார். கடும் நோய்வாய்ப்பட்டு இருந்த மணிவாசகம் சரண் அடைய இருந்தார் என கனம் ராஜேந்திரன் கூறுயுள்ளதுடன் இந்தச் செய்திகள் ஒத்துப் போகின்றன.
இந்த என்கவுண்டர் கொலைகளில் வேறு பல பிரச்சினைகளும் உள்ளன. முதல் நாள் இந்த என்கவுண்டர் நடந்தபோது மூவர் கொல்லப்பட்டதாகவும், மணிவாசகம் என்பவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாயின. பின்னர் காயம் பட்ட மணிவாசகம் குறித்து பேச்சே இல்லை. மூவர் மட்டுமே கொல்லப்பட்டதாகவே செய்திகள் வந்தன. அடுத்த நாள் மறுபடியும் மணிவாசகம் பற்றிச் செய்தி வந்தது. அடுத்து நடந்த என்கவுன்டரில் அவர் கொல்லப்பட்டதாக அப்போது சொல்லப்பட்டது. இவை எல்லாம் பல ஐயங்களை ஏற்படுத்துகின்றன. முதல் நாள் காயம் பட்டவருக்கு ஏன் சிகிச்சை அளிக்கவில்லை. அவர் உயிருடன் இருந்தால் மூவர் கொலை பற்றிய உண்மைகளைச் சொல்லிவிடுவார் எனப் பின்னர் அவர் கொல்லப்பட்டாரா என்கிற கேள்விகள் எல்லாம் எழுகின்றன.
அடுத்து, “பார்த்த கணத்திலேயே தண்டர்போல்டுகள் மாஓயிஸ்டுகளைச் சுட்டுக் கொன்றுள்ளனர்” என மனித உரிமை ஆணைய உறுப்பினர் மோகன்தாஸ் கூறுவதிலிருந்து எந்த எச்சரிக்கையும் இல்லாமல் மாஓயிஸ்டுகள் சுடப்பட்டுள்ளனர் என்றாகிறது. அப்படியானால் மாஓயிஸ்டுகள் சுட்டதால்தான் எமது படையினர் திருப்பிச் சுடவேண்டியதாயிற்று என பினரவி விஜயன் சொல்வது பொய் என்றாகிறது.
முறையாக நடுநிலையுடன் செய்யப்படும் விசாரணை ஒன்றின் மூலமே உண்மைகள் வெளிவரும். பினரயி விஜயன் அரசு மேற்கொள்ளும் எந்த விசாரணையும் உண்மைகளைக் கொண்டுவரப் போவதில்லை.
எமது கோரிக்கைகள்
- நான்கு மாஓயிஸ்டுகள் கொல்லப்பட்ட இந்த அகாலி என்கவுன்டர் கொலைகளை விசாரிக்க சுதந்திரமான நீதித்துறை விசாரணை ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
- உச்சநீதிமன்றம் மற்றும் மனித உரிமை ஆணையம் முதலியன இதுபோன்ற என்கவுன்டர் கொலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை உறுதிபடக் கூறியுள்ளன. ஆனாலும் அவை இங்கு கடைபிடிக்கப்படுவதே இல்லை. நீதிமன்றங்களை அவமதிக்கும் இப்போக்கு வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. முதலமைச்சர் பினரயி விஜயனே ‘விஜிலன்ஸ்’ மற்றும் சட்டத்துறைகளுக்கும் பொறுப்பாக இருப்பதால் மாநில அரசிடம் இந்த விசாரணைப் பொறுப்பை அளிக்க இயலாது. சுதந்திரமான நீதித்துறை விசாரணையே தேவை. மாநில அளவில் செயல்படும் முக்கிய மனித உரிமை சட்ட வல்லுனர்களும் குழுவில் இணைக்கப்படுதல் அவசியம்.
- என்கவுன்டர் கொலைகள் தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றம், மனித உரிமை ஆணையம் ஆகியவை கூறியுள்ளபடி விசாரணை முடியும்வரை என்கவுன்டர் செய்தவர்களைக் குற்றவாளிகளாகவே காரணம் எனக் கருதி அவர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட வேண்டும். தங்களின் தற்காப்புக்காக மட்டுமே இந்தக் கொலைகலைச் செய்ய வேண்டி வந்தது என்பதை அவர்கள் நிறுவும் வரை அவர்கள் குற்றவாளிகளாகவே கருதப்பட வெண்டும். என்கவுன்டர் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு ஊக்கப் பரிசுகள், பதவி உயர்வு ஆகியன அளிக்கக் கூடாது.
- கொல்லப்பட்ட மாஓயிஸ்டுகளின் உடல்களை அவர்களது உறவினர்கள் கோரினால் எந்தத் தடையும் இன்றி அவர்களிடம் அளிக்க வேண்டும். அடையாளம் கண்ட இருவரின் உறவினர்களும் கோரியதுபோல குடும்பத்தாரின் நம்பிக்கைக்குரிய ஒரு பிரேத பரிசோதனை, அவர்களின் கண்முன் செய்யப்பட்ட பின்பே உடல்கள் ஒப்படைக்கப்பட வேண்டும்.
- என்கவுன்டரில் கொல்லப்பட்ட மணிவாசகத்தின் மனைவி, தங்கை ஆகிய இருவரும் சிறையில் உள்ளதால் அவர்கள் பரோலில் விடுவிக்கப்பட்டு தங்கள் கணவர் மற்றும் சகோதரரின் உடலை இறுதியாக ஒருறை பார்க்க அநுமதிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளை நேற்று ஆணையிட்டுள்ளது. அவர்களுக்கு குறைந்த பட்சம் அவர்கள் கோரியபடி ஒரு மாத பரோல் அளித்து அவர்கள் இறுதிச் சடங்கு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.
- இகழ்மிக்க இந்த தண்டர்போல்ட் படை உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும்.
- இது அப்பட்டமான படுகொலை என நிறுவப்படும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்..