சுதந்திர இந்திய வரலாற்றின் இருண்ட காலமாகக் கருதப்படும் நெருக்கடி நிலை அறிவிப்பின் 25ம் நினைவு தினத்தைப் போலவே இந்த 40ம் நினைவு தினமும் மத்தியில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடக்கும்போது அமைகிறது. நெருக்கடி நிலையின்போது ஒடுக்குமுறைக்கு ஆளான கட்சிகளுள் இன்றைய பா.ஜ.கவின் முந்தைய வடிவமான பாரதீய ஜனசங் கட்சியும் அதன் வழிகாட்டு அமைப்பான ஆர்.எஸ்.எஸ்சும் முக்கியமானவை. அப்போது கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட 1,40,000 பேர்களில் வாஜ்பேயி, அத்வானி முதலான பா.ஜ.க தலைவர்களும் அடக்கம். ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் பலர் அன்று தலைமறைவாயினர்.
பா.ஜ.கவின் முக்கிய எதிரியான காங்கிரசைத் தோலுரிப்பதற்கு இது அவர்களுக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம். தவிரவும் நெருக்கடி நிலை அறிவிப்பிற்கு ஒரு காரணத்தை அளித்த ஜெயப்பிரகாசரின் நவ நிர்மாண் இயக்கத்தின் மூலம் மேலுக்கு வந்தவர்தான் நரேந்திர மோடி. இதுபோன்ற சந்தர்ப்பங்களை வலிமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் பா.ஜ.க 25ம் ஆண்டு நினைவைப் போலவே இப்போதும் பெரிய அளவில் இதைக் கையில் எடுக்கவில்லை.
இரண்டு காரணங்கள் இதன் பின்னணியில் உள்ளன. நெருக்கடி நிலை அறிவிப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்களுக்கு அப்பால் இந்த அறிவிப்பின் மூலம் இந்திரா இந்த நாட்டிற்குச் சொன்ன சேதி ‘அரசியல் சட்டம் அப்படி ஒன்றும் புனிதமானதல்ல; அரசியல் சட்டத்தைக் காட்டிலும் அரசு புனிதமானது’ என்பதுதான். இந்த அம்சத்தில் பா.ஜ.க பெரிய அளவில் காங்கிரசுடன் கருத்து மாறுபடுவதற்கில்லை. இரண்டாவது அவர்களுக்கு இந்திராவைக் காட்டிலும் காந்தி, நேரு அப்புறம் சோனியா ஆகியோர்தான் முக்கிய எதிரிகள்.
இந்த நாட்டையும், இந்த அரசையும் எல்லாவிதமான குழப்பங்களிலிருந்தும் காக்கவல்ல ஒரே சாத்தியமாகத் தன்னை எப்படி இந்திரா முன்நிறுத்திக் கொண்டாரோ, அவ்வாறே இப்போது மோடியும் தன்னை நிறுத்திக்கொள்கிறார்.
25ம் நினைவு ஆண்டிலும் அதற்கு முந்தைய ஆண்டிலும் அத்துமீறல்களில் இந்திராவுக்கு நெருக்கமாக இருந்து துணை புரிந்த பி.டி.பாண்டே, பி.கே.நேரு என்னும் இரு உயர் அதிகாரிகளை அன்றைய பா.ஜ.க அரசு இந்தியாவின் இரண்டாவது உயர் விருதான பத்ம விபூஷன் அளித்துக் கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.
தவிரவும் இன்று குடியரசுத் தலைவராக உள்ளவர் அப்போது அரசு அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அத்துமீறல்களை நேரடியாகக் கையாண்ட சஞ்சை காந்தியின் கையாள் என விமர்சிக்கப்பட்டவர். ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஏழை எளிய மக்களுக்குக் குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையைக் கட்டாயமாகச் செய்தது, டெல்லியை அழகு படுத்துவது என்கிற பெயரில் குடிசைப் பகுதிகளை அழிதொழித்து மக்களை விரட்டியது,. குடிமக்களுக்கு உயிர் வாழ்தல் உட்பட அடிப்படை உரிமைகளை மறுத்தது, கடுமையான செய்தித் தணிக்கை முதலான வடிவங்களில் மட்டும் அன்றைய அத்துமீறல்கள் வெளிப்படவில்லை
பெரிய அளவில் அமைச்சரவைக்கிருந்த அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. அமைச்சரவையைக் கூட்டாமலேயே அமைச்சரவைக்கு அப்பாலிருந்த ஒரு சிறு குழுதான் 1975 ஜூன் 25 இரவு நெருக்கடி நிலையை அறிவிப்பதென முடிவு செய்தது. முடிவெடுக்கப்பட்ட பின்னர்தான் உள்துறை அமைச்சர் பிரும்மானந்த ரெட்டி அழைக்கபட்டு உரிய பரிந்துரையில் கையொப்பம் பெறப்பட்டது. அரசின் நிதி ஆதாரங்கள் சஞ்சையை சுற்றியிருந்த கும்பலின் விருப்பத்திற்குச் செலவிடப்பட்டன. சற்றே இடையூறாக இருந்த ஓரளவு நேர்மையான நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியத்திடமிருந்து முக்கிய அதிகாரங்கள் பறிக்கப்பட்டு எந்தப் பெரிய அனுபவமும் இல்லாத ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்படி மேலுயர்ந்தவர்தான் இன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.
இவர்களின் ஆளுகையில்தான் இன்று நாம் நெருக்கடி நிலை காலத்தை மதிப்பிடுகிறோம். எத்தனை குறைபாடுகள் இருந்த போதிலும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்கிற பெருமை இந்தியாவுக்குண்டு. மேலை நாடுகள் பலவும் எதிர்பார்த்தது போலவும், அண்டை நாடுகளில் நிகழ்ந்தது போலவும் ஒரு தேச அரசுக்கு இருக்க வேண்டிய இனம், மதம், மொழி என்கிற பொதுப் பண்புகள் இல்லாதபோதும் அறுபதாண்டுகளுக்கும் மேலாக அது சிதையாமல் உள்ளது. இப்போது நாம் பேசிக் கொண்டிருக்கும் அந்த 21 மாதங்களைத் தவிர பிற காலங்களில் தேர்தல்களும், ஆட்சி மாற்றங்களும் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன. இராணுவம் அதற்குரிய இடத்தில் எல்லை மீற வழியில்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில்தான் இந்திரா காந்தி அரசியல் சட்டத்தை முடக்கினார். மக்களுக்கு அது வழங்கியுள்ள உரிமைகள் தேச நலனுக்கு இடையூறாக இருப்பதைச் சகிக்க முடியாது என்றார். நாட்டு நலனுக்காக இந்தக் கசப்பு மருந்தை நான் புகட்ட வேண்டி உள்ளது என்றார். 42வது திருத்தத்தை இயற்றி (1976) நீதிமன்றத்தின் பரிசீலனையிலிருந்து பாராளுமன்றத்தை நீக்கினார். அரசியல் சட்டத்தை எப்படி வேண்டுமானாலும் திருத்தலாம், நீதிமன்றம் அதில் தலையிட முடியாது என்று ஆக்கினார். பிரதமர் அலுவலகத்தில் அதிகாரங்கள் குவிந்தன.. மத்திய மாநிலத் தேர்தல்களைச் சட்டத் திருத்தங்களின் ஊடாகத் தள்ளி வைத்து ஆட்சிக் காலத்தை 5 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துக் கொண்டார். அந்த 21 மாதங்களிலும் பெரிய அளவில் இதற்கெல்லாம் குறிப்பிட்டுச் சொல்லும்படியான எதிர்ப்புக்கள் இல்லை. பின் ஏன் அவர் 1977 ஜனவரி 18 அன்று நாடாளுமன்றத் தேர்தல்களை அறிவித்தார்? கடும் ஒடுக்குமுறைகளின் போதெல்லாம் அமைதி காத்த இந்திய மக்கள் அடுத்த இரண்டு மாதத்தில் எப்படி இந்திராவின் அதிகாரத்தை முடிவுக்குக் கொணர்ந்தனர்?
21 மாதங்களுக்கு முன் ஒரு நீதிமன்ற ஆணையால் பதவி பறிக்கப்பட்ட போது மகன் சஞ்சையிடம் அதிகாரத்தைத் தற்காலிகமாகக் கொடுத்துவிட்டு, இன்றைய ஜெயாவைப்போல பதவி விலகி வழக்கை எதிர் கொள்ளாமல் அதிரடியாக நெருக்கடி நிலையை அறிவித்த இந்திரா, 1977 மார்ச் 25 அன்று எப்படி அத்தனை அமைதியாக அதிகாரத்தைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மொரார்ஜி தேசாயிடம் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார்.
நெருக்கடி நிலை அறிவிப்பு, அத்து மீறல்கள், ஜனதா ஆட்சியின் வீழ்ச்சி முதலியன குறித்தெல்லாம் இன்று விரிவான ஆய்வுகளும் சுவையான தகவல்களும் ஏராளமாக வெளி வந்துள்ளன. ஜூன் 25, 1975 அன்று காலை முதல் இந்திரா தரப்பிலும், ஜெயப்பிரகாசர் தரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், பேசிய பேச்சுக்கள் இரவு 10 மணிக்கு மேல் துரித கதியில் இந்திரா தரப்பு மேற்கொண்ட நகர்வுகள் எல்லாம் ஒரு திரைப் படத்தின் சுவையுடன் கூமி க்பூர் போன்ற பத்திரிகையாளர்களாலும், ராமச்சந்திர குஹா போன்ற வரலாற்றாசிரியர்களாலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் ஊடாக மேலே உள்ள கேள்விகளுக்கு விடை காண முயற்சிப்பதுதான் ஜனநாயகத்தில் அக்கறையுள்ளோரின் இன்றைய பணியாக இருக்க முடியும்.
சுதந்திரத்திற்குப் பின் அடிப்படை உரிமைகள் விரிவாக வரையறுக்கப்பட்ட ஒரு அரசியல் சட்டம் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட முடியாட்சிப் பகுதிகள் குடியரசுடன் இணைக்கப்பட்டன. உலகின் மிகப் பெரிய ஜனநாயக ஆளுமைகளில் ஒருவரான ஜவஹர்லால் நேருவின் தலைமையில் இங்கே மொழி வாரி மாநிலங்கள் வடிவமைக்கப்பட்டன. தடைகளை உடைத்து இந்து திருமணச் சட்டம். 5 கூறுகளாக நிறைவேற்றப்பட்டது. எத்தனையோ குறைபாடுகள், பின்னடைவுகள், அடக்குமுறைகள் ஆகியவற்றிற்கு மத்தியில் இந்திய ஜனநாயகம் இப்படித்தான் கிளை பரப்பியது.
இன்னொரு பக்கம் மாநில அளவில் கட்சிகள் உருவாயின. தலைவர்கள் உருவாயினர். கூட்டணி ஆட்சி என்கிற கருத்தாக்கம் மலர்ந்தது. இதுகாறும் அதிகாரம் மறுக்கப்பட்டவர்கள் தம்மை அரசியல் களத்தில் நிறுவிக் கொண்டனர். இது ஜனநாயகப்பாட்டின் அடுத்த கட்டமாக விரிந்தது. இந்த நிலையில்தான் நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டது. பி.என் தர் போன்ற இந்திராவின் நெருக்கத்துக்குரிய அன்றைய அதிகாரிகள் இன்று அதை நியாயப் படுத்தி நூல் எழுதியுள்ளனர், “இந்த அரசியல் சட்டம் இந்திய மண்ணின் மீது வேயப்பட்ட கூரைதான். ஆனால் அதன் ஜனநாயகமற்ற சாரம் அப்படியேதான் உள்ளது” என அரசியல் சட்ட அவையில் அம்பேத்கர் கூறியதைச் சுட்டிக் காட்டி அவர்கள் தமது நடவைக்கைகளை நியாயப்படுத்துகின்றனர். அதாவது இந்தியா ஜனநாயகத்திற்குத் தகுதியற்ற நாடு. எனவே நாங்கள் ஜனநாயக உரிமைகளைப் பறித்தோம் என்கின்றனர்.
அது உண்மையாயின் ஜனநாயகத்துக்குத் தகுதியற்ற இந்த மக்கள் அடுத்த 21 மாதங்களில் இந்திராவின் ஜனநாயக மறுப்பை எப்படித் தகர்த்தனர்! ஜனநாயகத்துக்கு இந்திய மக்கள் தகுதியானவர்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது என ராமச்சந்திர குஹா போன்ற வரலாற்றாசிரியர்களும், ப்ரான் சோப்ரா போன்ற இதழாளர்களும் முன் சொன்னதற்கு நேர் எதிரான இன்னொரு பதிலைச் சொல்கின்றனர். சோதனைகளை மீறி இந்திய ஜனநாயகம் தழைத்து நிற்கிறது. அதற்கு அடித்தளமிட்டவர்கள் அத்தனை ஆழமாக அதைச் செய்துள்ளனர். இந்த மண்ணில் சர்வாதிகாரமோ பாசிசமோ சாத்தியமில்லை. என்பதுதான் அவர்கள் சொல்வது.
அப்படியாயின் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிரந்தரமாக அரசியல் சட்ட உரிமைகள் பறிக்கப்பட்டு இராணுவத்தின் கரங்களில் சகல உரிமைகளும் கொடுக்கப்பட்டுள்ள நிலையும் இதற்கு ஆளும் கட்சி மட்டுமின்றி எதிர்க்கட்சியும், மாநிலக் கட்சிகளும், ஏன் பெரிய அளவில் எதிர்ப்புக் காட்டாத வகையில் இடதுசாரிக் கட்சிகளும் ஒத்துழைப்பதை என்னென்பது? பாசிசம் என முழுமையாகச் சொல்ல இயலாவிட்டாலும் அதன் கூறுகள் எனச் சொல்லத்தக்க நடவடிக்கைகள் பல்வேறு மட்டங்களில் தலைகாட்டுவதை எப்படிப் பார்ப்பது. எனக்கென்னவோ இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்த பதில் மேலே சொன்ன இந்த இரு எதிர் எதிர் நிலைபாடுகளுக்கும் இடையில்தான் உள்ளது எனத் தோன்றுகிறது.
இதைப் புரிந்துகொள்ள நெருக்கடிநிலைக்கால அரசியலை மட்டுமல்லாது அதற்கு முந்திய அரசியல் சூழலையும், மீண்டும் இந்திரா ஆட்சிக்கு வந்தபின் அவர் சென்ற திசையையும் உற்று நோக்குவது அவசியம்.
2. ஜெயப்பிரகாசரின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை
நெருக்கடி நிலையை அன்று ஆதரித்ததன் விளைவாகத் தீராப் பழி சுமக்க நேர்ந்துள்ள சித்தார்த்த சங்கர் ரே, குஷ்வந்த் சிங் முதலானோர் இப்போது தம்மை நியாயப்படுத்திக் கொள்ளச் சொல்வது இதுதான்: “நெருக்க்கடி நிலை அறிவித்தது சரிதான். அன்றைய சூழலில் அது தவிர்க்க இயலாதிருந்தது. ஆனால் நடந்த அத்துமீறல்கள் ஏற்கமுடியாதவை.. அவை தவிர்த்திருக்கப்பட வேண்டியவை. ஒரு சில தனி நபர்கள்தான் இந்த அத்துமீறல்களுக்குக் காரணம்”.
அத்து மீறல்கள் அவர்கள் சொல்வது போல தவிர்க்கப்பட்டிருக்கக் கூடியவை அல்ல. அவை. அவசர நிலை அதிகாரத்தின் தர்க்கபூர்வமான வெளிப்பாடு என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். நெருக்கடி நிலை அறிவிப்பிற்கான நியாயங்களாக அவர்கள் எதைச் சொல்கின்றனர்? “ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடந்த தேர்தல்கள், நிறைவேற்றப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்கள் ஆகியன இதுகாறும் அடங்கியிருந்த பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்கள், ஆதிவாசிகள் ஆகியோரை அரசியல் படுத்தின. ஒற்றைக் கட்சி ஆதிக்கம் சிதைந்து, இதுகாறும் காங்கிரசுக்குள் இருந்த பல்வேறு குறுகிய பிராந்திய நலன்கள் மேலெழுந்தன. இதனால் அரசியலின் செயற்படு களன் அகன்றது” என்கிறார் பி.என்.தர். அவர் நிறையப் படித்தவர் . அரசியல் அனுபவம் மிக்கவர். அவர் சொல்வது சரிதான். ஆனால் எவையெல்லாம் ஜனநாயக விகசிப்பின் அடையாளங்களாகக் காணப்பட வேண்டியவையோ, அவற்றையே, அவர்கள் ஜனநாயகத்தை முடக்கியதற்கான நியாயமாகச் சொல்வதுதான் கொடுமை.
இந்திராவும் சரி, இந்திராவைச் சுற்றியிருந்தவர்களும் சரி, அடிப்படையில் ஜனநாயக நெறிமுறைகளை வெறுத்தவர்கள். இந்திராவுக்கு அவரது 13ம் வயதிலிருந்து ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அவரது புகழ்பெற்ற தந்தை எழுதிய கடிதங்களின் தொகுப்பு இன்று உலகின் மிகச் சிறந்த நூல்களில் ஒன்றெனப் போற்றப்படுகிறது. அந்தக் கடிதங்களை எழுதிய காலத்தில் ஐரோப்பவில் உருவான பாசிசத்தைக் கண்டு நேரு மனம் பதறியிருப்பதை அதை வாசிக்கும் நாம் உணர்கிறோம். ஆனால் அவை எந்தத் தாக்கத்தையும் அவரது மகளுக்கு ஏற்படுத்தவில்லை என்பதற்கு அவரது உரையாடல்கள், கடிதங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக அவரது நெருக்கடி நிலை அறிவிப்பும் ஆளுகையும் நிரூபணங்களாக உள்ளன. அவற்றை விரிக்கப் புகின் கட்டுரை நீளும். முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இ.எம்.எஸ் தலைமையில் அமைந்திருந்த கேரள அரசைக் கலைத்தது (1959) ஒன்று போதும் இந்திராவிடம் ஊறியிருந்த ஜனநாயக வெறுப்பிற்குச் சான்று சொல்ல.
ஒன்றை நாம் நினைவிற் கொள்ள வேண்டும். லைரண்டாம் உலகப் போரின் முடிவை ஒட்டி, பாசிசம் வீழ்த்தப்பட்டது மட்டும் அலாமல், 1950க்குள் இந்தியா உட்படப் பல நாடுகள் சுதந்திரம் அடைந்தன. சீனம் மற்றும் கிழக்கு ஐரோபிய நாடுகள் சிவப்பாயின. இது உலகெங்கிலும் மக்கள் மத்தியில் மிகப் பெரிய நம்பிக்கைகளை விதைத்தன. தங்கள் துன்பங்கள் அனைத்தும் தீரும் என்கிற நம்பிக்கையோடு அவர்கள் தேச நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால் அடுத்து இருபதாண்டுகள் காத்திருந்தும் அவர்கள் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை. அதே நேரத்தில் இந்த மாற்றங்களின் விளைவாக விகசித்த ஜனநாயக நிறுவனங்களின் ஊடாக அடித்தள மக்கள் அரசியல் களத்திற்கு வந்தனர். 1960களின் இறுதியில் உலகெங்கிலும் இந்த எதிர்ப்புகள் வெடித்ததை நாம் காணலாம். அதன் ஓர் அங்கமாகத்தான் இங்கும் மாநிலக் கட்சிகள் தோன்றின. போராட்டங்கள் வெடித்தன. 1972ல் மக்களுக்குப் பொறுப்பான அரசு, தேர்தல் சீர்திருத்தம் முதலான கோரிக்கைகளோடு ஜெயப்பிரகாஷ் நாராயணனின் தலைமையில் ஒரு பெரும் எழுச்சி உருவானது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் “மொத்தப் புரட்சி” எனும் முழக்கத்தோடு அது விசுவரூபம் எடுத்தது.
1966ல் பிரதமராக்கப்பட்ட இந்திர, அவரைப் பிரதமராக்கிய பெரியதலைகளின் நம்பிக்கைக்கு மாறாக மிக விரைவில் அவர்களை ஓரங்கட்டத் தொடங்கினார். மாநில அளவிலான ஆளுமைகள் உருவாவதையும் அவர்கள் செல்வாக்கு வகிப்பதையும் அவர் விரும்பவில்லை. 1969ல் காங்கிரஸ் பிளந்தது. காமராசர், நிஜலிங்கப்பா முதலான மாநில அளவிலான பழைய தலைவர்கள் ‘பழைய காங்கிரஸ்’ ஆகவும், இந்திராவைப் பின்பற்றிய பெரும்பான்மையோர் ‘புதிய காங்கிரஸ்’ ஆகவும் பிரிந்தனர். தன்னை நிலை நிறுத்திக்கொள்ள இந்திரா வங்கிகளை தேச உடமையாக்குவது, மன்னர் மாநியங்களை ஒழிப்பது முதலான கவர்ச்சிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டார். “‘வறுமையை ஒழிப்போம்” என்கிற முழக்கததை மிதக்கவிட்டார். எந்த வகையிலும் சோஷலிசச் சிந்தனை இல்லாதவரான இந்திரா மூத்த தலைவர்களை வீழ்த்தி தன்னிடம் மட்டுமே அதிகாரத்தைக் குவித்துக் கொள்ளவே இவற்றைச் செய்தார். ஏழை மக்களுக்கு உரிய வருமானம் கிடைக்கும் வகையில் திட்டங்களை உருவாக்குவது, வரிச் சீர்திருத்தங்களை அமுலாக்குவது முதலான இதர சோஷலிச நடவடிக்கைகள் ஏதுமில்லாமல் இவர் மேற்கொண்ட “வறுமை ஒழிப்பு” முயற்சிகள் பற்றாக்குறை பட்ஜெட்டிற்கும், பணவீக்கத்திற்குமே காரணமாயின.
1971ல் பாகிஸ்தானுடன் நடந்த போரில் இந்தியா வெற்றி கண்டது அவரது செல்வாக்கை உயர்த்தினாலும் போர் ஏற்படுத்திய நிதிச் சுமை நிலைமையை மேலும் மோசமாக்கியது.1969 -70ல் 0.12 சதமாக இருந்த பட்ஜெட் பற்றாக்குறை 1972 -73ல் 1.83 சதமாகியது. 1972ல் பருவ மழை பொய்த்ததும், 1973ல் ஏற்பட்ட உலகளாவிய எண்ணை விலை ஏற்றமும் நிலைமைய மோசமாக்கின. வறுமை ஒழிப்புத் திட்டச் செலவுகள் குறைக்கப்பட்டது, விலைவாசி ஏற்றம், உணவுப் பொருள் பற்றாக்குறை முதலியன நிலைமையை மோசமாக்கின.
இந்தப் பின்புலத்தில் குஜராத்திலிருந்த ஒரு ஊழல் மிகு முதல்வரான சிமன்பாய் படேலுக்கு எதிராக உருவான இயக்கம் ஜெயப்பிரகாசர் தலைமையில் பிஹார் முதலான வட மாநிலங்கள் .பலவற்றிலும் பரவியது.
30 ஆண்டு காலம் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் திடீரென மீண்டும் இப்படித் தீவிர அரசியலில் இறங்கியதும் ஒரு வியப்புக்குரிய நிகழ்வுதான். நேரு குடும்பத்தின் மீது அவருக்குப் பெரிய மரியாதை கிடையாது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஜெயப்பிரகசர், ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் முதலான சோஷலிஸ்டுகள் குறித்து ஒன்றைச் சொல்ல வேண்டும். காங்கிரஸ் மேலிருந்த வெறுப்பில் அவர்கள் மதவாத சக்திகள் உள்ளிட்ட யாருடனும் கைகோர்த்துக் கொள்வர், ஆர்.எஸ்.எஸ், பாரதீய ஜனசங் மட்டுமின்றி சுப்பிரமணிய சாமி உட்பட ஜெயப்பிரகாசருக்கு நெருக்கமாக இருந்ததை நாம் மறந்துவிட இயலாது. ஆர்.எஸ்.எஸ்சைப் ‘பாசிஸ்ட்” எனச் சொன்னவர்களைப் பார்த்து “அப்படியானால் நானும் பாசிஸ்ட்தான்” எனச் சீறும் அளவிற்கு ஜெயப்பிரகாசர் அதனுடன் நெருக்கம் காட்டினார். பதவி ஆசை இல்லாதவர், அப்பழுக்கற்ற நேர்மையாளர், காந்தியவாதி என்கிற அளவில் எல்லோராலும் மதிக்கப்பட்டவராயினும் ஜெயப்பிரகாசரைப் பொருத்த மட்டில் காந்தியைப் போல அரசியல் கூர்மை உடையவரோ, பெருந்திரளான மக்களை அரசை எதிர்த்த போராட்டத்தில் ஈடுபடுத்தும்போது கடைபிடிக்க வேண்டிய அரசியல் நிதானமுடையவரோ அல்ல.
அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் இந்திராகாந்திமீது தேர்தலில் ஊழல் செய்ததாக ராஜ்நாராயணன் தொடுத்த வழக்கில் நீதியரசர் ஜக்மோகன் லால் சின்ஹா, இந்திராவின் வெற்றியைச் செல்லாததாக்கியது (ஜூன் 12, 1975) ஜெயப்பிரகாசரின் போராட்டத்திற்குப் புத்தெழுச்சியை அளித்தது. தேர்தல் பிரச்சாரர மேடை அமைக்கக் காவல்துறையைப் பயன்படுத்தியது, அரசதிகாரி ஒருவர் பதவி விலகல் கடிதத்தைக் கொடுப்பதற்குச் சில நாட்கள் முன்பிருந்தே இந்திராவுக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் ஈடுபட்டது ஆகிய ஒப்பீடளவில் சாதாரணக் குற்றங்களுக்குத் தேர்தலையே செல்லாததாக்குவது என்பதான சட்டம் இருப்பதும், அதை நீதிமன்றங்கள் அப்படியே பயன்படுத்துவதும் எந்த வகையில் நியாயம் என்கிற விமர்சனம் இன்றளவும் உண்டு. இந்திராவின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதியரசர் கிருஷ்ணய்யர் கீழ் நீதி மன்றத் தீர்ப்பை உறுதிப் படுத்தினார். இந்திரா மேலும் ஆறு மாத காலம் பதவியைத் தொடரலாம் ஆனால் நாடாளுமன்றத்தில் அவர் வாக்களிக்க இயலாது என்றார்.
இந்த இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்ட நாள் ஜூன் 24. அடுத்த நாள் மாலை டெல்லி ராம் லீலா மைதானத்தில் “இந்திரா பதவி விலக வேண்டும்” என்கிற கோரிக்கையின் அடிப்படையில் நாடெங்கிலுமான போராட்டத்தை அறிவிக்க மிகப் பெரிய கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. ஜெயப்பிரகாசரைக் கூட்டதிற்கு அழைத்துவரச் சென்றவர் அப்போதுதான் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திலிருந்து இந்தியாவுக்குத் திரும்பி வந்து ஜானசங் கட்சியில் ராஜ்ய சபா உறுப்பினர் ஆக்கப்பட்டிருந்த சுப்பிரமண்ய சாமி. வரும் வழியில், “இந்திரா இராணுவ ஆட்சியைப் பிரகடனப் படுத்தினால் என்ன செய்வது?” என சாமி கேட்டபோது சிரித்துவிட்டு ஜெயப்பிரகாசர் சொன்னார்: “நீ ரொம்ப அமெரிக்கமயமாகிவிட்டாய். இந்தியாவில் அப்படி நடக்காது. மக்கள் புரட்சி செய்வார்கள்”.
அன்று ஜெயப்பிரகாசரின் பேச்சு கடுமையாக இருந்தது. “காவல்துறை, இராணுவம் எல்லாவற்றையும் உத்தரவுகளுக்குப் பணிய வேண்டாம்” எனச் சொல்லி அரசைக் கவிழ்த்துப் பெருங் குழப்பம் ஒன்றை ஏற்படுத்தும் நிலையில் நாங்கள் வேறென்ன செய்ய இயலும் என இந்திரா திரும்பத் திருமபச் சொல்லித் தனது நெருக்கடி நிலை அறிவிப்பை நியாயப்படுத்துவதற்கு ஜெயப்பிரகாசரின் பேச்சு அன்று வழிகோலியது.
அடுத்த சில மணி நேரத்தில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. தலைவர்கள் கைது செய்யப்படுவது தொடங்கியது. கடும் பத்திரிக்கைத் தணிக்கை அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஜெயப்பிரகாசர் எதிர்பார்த்ததுபோல இந்தியாவில் புரட்சி ஏதும் ஏற்படவில்லை.
3. இந்திராவின் மூன்றாவது முகம்
உண்மையில் அவசர நிலை அறிவிப்புச் செய்யும் அளவிற்கு அன்று நிலைமை இல்லை. ஜெயப்பிரகாசரின் ஆணையை ஏற்று மிகப் பெரிய கொந்தளிப்பு ஏற்படும் நிலை ஏதும் அன்று இல்லை. உளவுத் துறை அப்படியெல்லாம் கலவரச் சூழல் உள்ளது என அரசுக்குதகவல் ஏதும் தராத நிலையிலேயே இந்திரா நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தினார். நாடாளுமன்றத்தில் வாக்களிக்க இயலாமல் சிறகுகள் முறிக்கப்பட்ட ஒரு பிரதமராகத் தொடர அவர் விரும்பவில்லை என்பதுதான் உண்மை.
தொடர்ந்த அத்துமீறல்கள் உள்நாட்டில் பெரிய அளவில் கண்டிக்கபடாவிட்டாலும் ரோசென்தால், ஈ.பி.தாம்சன், பெர்னார்ட் லெவின், ஜான் க்ரிக் முதலான மத்திக்கத்தக்க வெளிநாட்டு இதழாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ‘டைம்ஸ்’, ‘கார்டியன்’ முதலான பத்திரிக்கைகளின் விமர்சனங்களுக்கும் உள்ளாயின. வெளிநாட்டுக் கட்டுரையாளர்கள் நேருவுடன் அவரது மகளை ஒப்பிட்டுக் கண்டித்தது குறிப்பிடத் தக்கது. இந்த விமர்சனங்களும், மக்களிடமிருந்து பெரிய எதிர்ப்புகள் ஏதும் வராமையும், சுற்றி இருந்த ஒத்தூதிகள் அளித்த தைரியமும் 18 மாதங்களுக்குப் பின் (ஜனவரி 1977) இந்திரா நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பைச் செய்யக் காரணமாயின.
தேர்தலில் இந்திரா காங்கிரஸ் வெறும் 153 இடங்களை மட்டுமே பெற்றது. ஜனதா கட்சி 298 இடங்களையும் அதன் ஆதரவுக் கட்சிகள் 47 இடங்களையும் பெற்றன. ஜெயப்பிரகாசர் எதிர்பார்த்ததுபோலப் பெரிய அளவில் புரட்சியில் இறங்காத இந்திய மக்கள் ஜனநாயக நெறிமுறைகளின் ஊடாகச் சரியான தீர்ப்பை வழங்கினர்.
21 மாத காலம் எல்லா அநீதிகளையும் மக்கள் பொறுத்திருந்ததை இந்திரா தவறாகப் புரிந்து கொண்டார். சுதந்திரப் போராட்ட காலத்திலும் கூட இதை விட மக்கள் செல்வாக்குப் பெற்றிருந்த காந்தி, நேரு போன்றோர் பல்லாயிரம் சத்தியாக்கிரகிகளோடு சிறையிடப்பட்டபோதும் கூட மக்கள் அப்படித்தான் இருந்தனர். ஆனால் அன்றைய தலைமை போராட்டங்களின்போது மக்கள் காட்டிய உற்சாகத்தையும், பின்னர் கடைபிடித்த அமைதியையும் ஜெயப்பிரகாசரையோ, இல்லை இந்திராவையோ போலத் தவறாக மதிப்பிட்டுவிடவில்லை.
ஜனதா கட்சி ஒரு கலப்படமான கோமாளிகளின் கூடாரம் என்பது அடுத்த இரண்டு ஆண்டுகளில் உறுதியாகியது. இரண்டு நிகழ்வுகள் இதனூடாக நடந்தன. ஒன்று, நெருக்கடி காலத்தில் இந்திரா 42வது அரசியல் சட்டத் திருத்தம் (1976) ஒன்றை உருவாக்கி நெருக்கடி நிலை அறிவிப்பு செய்வதையும், அதைத் தொடர்வதையும் எளிதாக்கி இருந்தார். ஜனதா ஆட்சி நிறைவேற்றிய 44வது திருத்தத்தின் (1978) ஊடாக முன்னதாக இந்திரா செய்திருந்த ஜனநாயக விரோதத் திருத்தங்கள் சரி செய்யப்பட்டன. நெருக்கடி நிலை அறிவிப்பு மேலும் கடுமையாக்கப்பட்டது. நாடாளுமன்ற ஒப்புதல், நீதிமன்றத் தலையீடு ஆகியவற்றிற்கு வழிவகுக்கப்பட்டன.
மற்றது காந்தி கொலைக்குப் பின் சற்றே ஓரங் கட்டப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜனசங் கட்சிகள் மேலுக்கு வந்து மையநீரோட்டத்தில் இடம் பெற்றன, ஜனதாகட்சியை உடைத்து வெளியே வந்த பழைய பாரதீய ஜனசங் இப்போது பாரதீய ஜனதா கட்சியாக வடிவெடுத்தது. இந்த இரண்டாண்டு கோமாளித் தனங்களின் விளிவாக விரைவில் மொரார்ஜி தேசாய் தலைமையில் இருந்த ஜனதா ஆட்சி கவிழ்ந்தது. 1980ல் நடந்த தேர்தலில் மீண்டும் இந்திரா காங்கிரஸ் வெற்றி பெற்று இந்திரா பிரதமர் ஆனார்.
இந்திராவின் ஆட்சிக் காலத்தில் அவரது அணுகு முறைகள் முன்று விதமாக இருந்தன. 1966- 75 காலகட்டத்தில் சோஷலிச முழக்கங்களின் ஊடாக அவர் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். 1975 -77 காலகட்டத்தில் நெருக்கடி நிலை அதிகாரம் அவருக்குக் கைகொடுத்தது. நெருக்கடிநிலை மற்றும் ஜனதா ஆட்சிக்குப் பிந்திய மூன்றாவது கட்டத்தில் (1980 – 84) அவரது ‘பாப்புலிச’ அரசியல் இன்னொரு ஆபத்தான திசையை நோக்கி நகர்ந்தது. இனி அரசியல் களத்தில் முக்கிய எதிரியாக அமையப்போகிற பா.ஜ.கவின் அரசியலைத் தான் வரித்துகொண்டு ஒருவகைப் பெரும்பான்மை வாத அரசியலை முன்வைத்து மதம் மற்றும் இதர ஆதிக்க சக்திகளின் துணையோடு தன்னை நிலை நிறுத்திக் கொள்ள அவர் மேற்கொண்ட அரசியல் கிட்டத்தட்ட ஒரு அறிவிக்கப்படாத நெருக்கடி காலமாக இர்ந்தது என சுகுமார் முரளீதரன் போன்ற அரசியல் கட்டுரையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஒருபக்கம் முளைவிடத் தொடங்கியிருந்த உலகமயச் சூழலுடன் இயைந்து (1981) உலக நிதி நிறுவனங்களின் உதவியைப் பெற்றுப் பற்றாக்குறைகளை ஈடுகட்டுவது இன்னொரு பக்கம் வெளிப்படையாக பெரும்பான்மை மதவாதத்துடன் அடையாளம் காண்பது என்பதாக அவரது இந்த மூன்றாவது அணுகுமுறை அமைந்தது. இக்காலகட்டத்தில் மதக் கலவரங்கள் பெருகின. மொரதாபாத் (1980), மும்பை (1984), மீருட் (1982), நெல்லி (1983) முதலான இடங்களில் பெரிய கலவரங்கள் ஏற்பட்டன. மொத்தத்தில் 1980ல் 427, 81ல் 319, 82ல் 474, 83ல் 500 மதக் கலவரங்கள் நடந்தன. 1981ல் 196 பேர்களும், 92ல் 238 பேர்களும், 83ல் 1143 பேர்களும் இக்கலவரங்களில் கொல்லப்பட்டனர். ஏராளமான சொத்துக்கள் அழிக்கப்பட்டன.
கலவரங்களுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கைகள் இல்லாததால் அதிருப்தியுற்ற முஸ்லிம் தலைவர்கள் தாங்கள் ஒத்துழையாமையைத் தொடங்குவோம் என அறிவித்தபோது, “அருகிலுள்ள பெரும்பான்மையை விரோதித்துக் கொண்டு எந்த ஒரு சிறுபான்மையும் பிழைத்துவிட முடியாது” என இந்திரா பதிலளித்ததை ஆர்.எஸ்.எஸ்சின் அதிகார பூர்வ இதழான ஆர்கனைசர் பாராட்டியது. 1983ல் மீனாட்சிபுரத்தில் மதமாற்றம் நடந்தபோது எந்த ஆதாரமும் இன்றி, “மதமாற்றம் செய்வதற்கு வெளி நாட்டிலிருந்து பணம் வருகிறது” என்றார். அரிதுவாரில் விஸ்வ இந்து பரிஷத் கட்டிய பாரத மாதா கோவிலைத் திரந்து வைத்தார். இப்படி நிறையச் சொல்லலாம்.
இந்த அணுகல்முறை வாழ்ந்த காலத்தில் அவருக்கு அரசியல் ஆதாயத்தைத் தந்தபோதும் அடுத்த சில ஆண்டுகளில் அது காங்கிரசின் பிரதான எதிரியாக பா.ஜ.க உருவாவதற்கே இட்டுச் சென்றது. ராம ஜென்ம பூமிக் கோரிக்கையோடு அது மேலுக்கு வர இந்திராவின் இந்திராவின் இக்கால அணுகல் முறை பாதை வகுத்துத் தந்தது. காங்கிரஸ் இன்று வரை நெருக்கடி நிலை அறிவிப்பிற்காகத் தன்னைச் சுய விமர்சனம் செய்து கொள்ளவில்லை. நெருக்கடி நிலை அறிவிப்பின் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகளை ரத்து செய்யும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதே இங்கே இந்த இரு கட்சிகள் மட்டுமின்றி, பல முக்கிய மாநிலக் கட்சிகளின் விருப்பாகவும் உள்ளது. நெருக்கடி நிலை அறிவிப்பில்லாமலேயே ‘கலவரப் பகுதி’ என்றெல்லாம் அறிவித்து அப்பகுதி மக்களின் உயிர் வாழும் உரிமை உட்பட அனைத்து உரிமைகளையும் ரத்து செய்து இராணுவம் மற்றும் துணை இராணுவங்களுக்கு வானளாவிய அதிகாரங்களைத் தரக்கூடிய ‘ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம்’ (AFPSA), ‘சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்’ (UAPA) முதலிய ஜனநாயக விரோதச் சட்டங்கள் இங்கு தொடர்கின்றன. இதன் விளைவாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அறிவிக்கபடாத ஒரு நெருக்கடி நிலை தொடரத்தான் செய்கிறது.
சுதந்திரத்திற்குப் பிந்திய ஆண்டுகளில் எல்லாக் காலத்திலுமே இப்படியான ஏதோ ஒரு சட்டம் நடைமுறையில் இருந்து வந்துள்:ளது என்பதும், இவற்றிற்கு எதிராக நீதிமன்றங்களை அணுகும் போதெல்லாம், அவை இத்தகைய சட்டங்களை இயற்றிச் செயல்படுத்தும் உரிமை அரசுக்கு உண்டு எனத் தீர்ப்பளித்து வருவதும் ஜனநாயக நெறிமுறைகளில் அக்கறை உள்ள அனைவரும் கவலைப்பட வேண்டிய ஒன்று.
இந்திராவின் நெருக்கடி நிலை அறிவிப்பை வெற்றிகரமாக எதிர்கொண்ட இந்திய ஜனநாயகம், வளர்ந்து வரும் இந்த மதவாதத்தையும், அதனால் மக்கள் பிளவுபடுத்தப்பட்டு எதிர் எதிராக நிறுத்தப்படுவதையும் அதேபோல வெர்றிகரமாக எதிர் கொள்ளுமா என்பதுதான் இன்றைய கேள்வி.
இந்தியா ஜனநாயகத்திற்குத் தகுதியானது அல்ல, அரசியல் சட்ட உரிமைகள் ரத்து செய்யப்பட்ட சர்வாதிகாரமே இங்கு நிலைக்கும் என்பதை நெருக்கடி கால அனுபவம் பொய்யாக்கியது. அதே நேரத்தில் இங்கே ஜனநாயகம் ஆழ வேர் கொண்டுள்ளது, எதுவும் இதை அசைக்க முடியாது என்கிற மமதையும் ஆபத்தானது என்பதை நெருக்கடி நிலைக்குப் பிந்திய காலம் நமக்கு உணர்த்துகிறது.