இன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு 

(கவிஞர் இன்குலாப் குறித்து இன்றைய ‘உயிர்மை’ மாத இதழில் வெளிவந்துள்ள கட்டுரை)

சில நேரங்களில் அப்படித்தான் நடந்துவிடுகிறது. சுமார் இரண்டு மாதங்கள் இருக்கும், ஒரு தொலைபேசி அழைப்பு காலையில் என்னை எழுப்பியது. “தோழர், நேத்து இன்குலாபைப் பார்த்தேன். உடம்பு சரியில்லைன்னு கேள்விப்பட்டுப் போயிருந்தேன். ரொம்ப முடியாம இருக்கார். போன உடனே அவர் முதலில் கேட்டது, மார்க்ஸ் எப்படி இருக்கார்னுதான்…”

இனி என்ன செய்தாலும் ஆற்றிக் கொள்ள இயலாத துயராக அடுத்த சில வாரங்களில் அந்தச் செய்தி. கடைசியாக அவரைச் சந்தித்தது கவிக்கோ அப்துல் ரஹ்மான அவர்களின் பவழ விழா நிகழ்ச்சியில். ஊரப்பாக்கத்திற்குக் குடிபெயர்ந்த பின் இன்குலாபைச் சந்திக்கும் வாய்ப்புகள் குறைந்தன. உடனடியாகச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தக் கூட இயலாத தொலைவில் இருந்தேன். என் துயரத்தை நண்பர்களோடு முகநூலில் இப்படிப் பகிர்ந்து கொள்ளத்தான் முடிந்தது.

“இன்குலாப் என் இளமைக்கால அரசியல் ஈடுபாட்டின் ஆதர்சங்களில் ஒருவர். என்னுடைய முதல் நூல் ‘எதுகவிதை’ யை நான் அவருக்குத்தான் அர்ப்பணித்திருந்தேன். அந்த நூலுக்கு அவர்தான் முன்னுரையும் எழுதியிருந்தார். அந்த நூலில் நான் அன்றைக்கு இருந்த இளமைத் துடிப்புடனும் உணர்ச்சிப் பெருக்குடனும் பாரதிக்குப் பிந்திய மகாகவி என அவரைக் குறிப்பிட்டிருந்தேன். என்னைப் போன்ற அன்றைய இளைஞர்கள்,  பாரதிக்குப் பின் சம கால அரசியலில் அச்சமின்றி நேர்மையாய்த் தன் குரலை ஒலித்த ஒரு பெருங் கவியாய் அவரைத்தான் கண்டோம். பாரதி காலத்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலின் வடிவம் பிரிட்டிஷ் எதிர்ப்பு என்றால் இன்குலாப் காலத்தி்ய ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலை நக்சல்பாரிகள்தான் முன்னெடுத்திருந்த சூழலில் அவர் எள்ளளவும் தயக்கமின்றி அவர்களுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

அன்று அப்படி நக்சல்பாரிகளுடன் அடையாளப்படுத்திக் கொள்வது என்பது அத்தனை எளிதானதல்ல. கடும் அடக்குமுறைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பது குறித்த எந்த அச்சமும் இன்றி அவர் தன் கவிதைகளையே ஆயுதமாக்கிக் களத்தில் நின்றார்.

சோழர்கால நிலவுடமைக் கொடுமையைத் தோலுரித்த இன்குலாப்பின் ‘ராஜராஜேச்வரீயம்’ எனும் கவிதை அன்றைய அரசால் பாடநூலிலிருந்து நீக்கப்பட்டபோது கல்லூரி ஆசிரியர் அமைப்புகளின் ஊடாக நாங்கள் எல்லாம் எதிர்த்துக் குரல் கொடுத்தோம்.

தஞ்சையில் ஏகப் பெரிய விளம்பரங்களுடன் ராஜராஜ சோழன் சிலையை கருணாநிதி அரசு திறந்தபோது இன்குலாப்பின் அந்தக் கவிதையை சில ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு நானும் மன்னை உ.இராசேந்திரனும் தஞ்சை வீதிகளில் வினியோகித்துத் திரிந்தபோது காவல்துறை எங்களை வலைவீசித் தேடியது.

எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் இன்குலாப். அப்போது நான் தஞ்சையில் வசித்து வந்தேன். சென்னை வரும்போதெல்லாம் தவறாது ஜாம்பசார் ஜானிஜான் தெருவில் இருந்த அவரது வீட்டிற்குச் செல்வேன். முதல் முறை நான் அவரைச் சந்திக்கச் சென்ற போது சென்னையில் கடும் தண்ணீர்ப் பஞ்சம். என்னை உட்காரச் சொல்லிவிட்டு அவர் கீழே ஓடி ஓடிச் சென்று குழாயில் நீர் பிடித்துச் சுமந்து வந்த காட்சி இன்னும் நிழலாய் என் மனதில்……

சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த இன்குலாப் எந்த மத அடையாளங்களையும் தரித்துக் கொண்டதில்லை. சாகுல் ஹமீது எனும் தன் இயற் பெயரைக்கூட அவர் எந்நாளும் முன்னிலைப்படுத்திக் கொண்டதில்லை.

ஈழப் போராட்டம் மேலெழுந்தபோது அவர் முழுமையாக எந்த விமர்சனங்களும் இன்றி அதை ஆதரித்தார்.

கடந்த சுமார் 20 ஆண்டுகளாகவே அவர் நோய்வாய்ப்பட்டு , இறுதிப் பத்தாண்டுகள் அதிக இயக்கமின்றி முடங்க நேரிட்டது. மென்மையும், அன்பும், கனிவும் மிக்க அவரது குரலையும், புன்னகை தவழும் அவரது முகத்தையும் அடிக்கடி பார்க்கும் வாய்ப்பை எல்லோரும் இழக்க நேரிட்டது.

இனி அவரை என்றென்றும் பார்க்க இயலாது என எண்ணும்போது கண்கள் பனிக்கின்றன. நெஞ்சம் நெகிழ்கிறது.

“இன்குலாப் ஜிந்தாபாத்” எனும் எழுச்சி முழக்கம் இன்று
புதிய பொருள் பெறுகின்றது.

என் காலத்துப் புரட்சிக் கவிஞனுக்கு என் மனமார்ந்த அஞ்சலிகள் !”

#   #    #

சிறுபான்மைச் சமூகத்திற்குள்ளும் பின் தங்கிய ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த  இன்குலாப் மொழி மற்றும் இனப் பற்றுகளின் ஊடாக அரசியலுக்கு வந்தவர். அக்டோபர் 1, 2000 த்த்தில் அவர் இலங்கை தமிழ் இதழ் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில், “சமூகத்தை மாற்றி அமைக்கக் கூடிய புரட்சிகர அரசியலில்தான் என் இளமைக் காலத்தில் எனக்கு ஈடுபாடு இருந்தது” எனக் கூறிய அவர், அதை அன்றைய தி.மு.க சாதிக்கும் எனத்தான் நம்பியதையும் பதிவு ன்செய்கிறார். “கருப்பு சிவப்புக் கொடி முழு சிவப்பாக மாறும்” என அண்ணா சொன்னதையும் நம்பினார். “1967 தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் திராவிடநாடு வரும்” என எதிர்பார்த்தார், ஆனால் அவர் நம்பிக்கைகள் பொய்த்தன. 1968ல் நடந்த கீழ்வெண்மணிக் கொடுமை, அதற்குக் காரணமானவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித் தண்டனை பெற்றுத் தருவதில் அன்றைய ஆட்சியாளர்கள் காட்டிய மெத்தனம், அண்ணாவின் மறைவு, சிம்சன் தொழிலாளர் போராட்டத்தை தி.மு.க அரசு கொடுமையாக அடக்கியது ஆகியன தன்னைத் திராவிட இயக்க அரசியலிலிருந்து விலக்கி நக்சல்பாரி இயக்கத்தை நோக்கிக் கொண்டு சென்றதாக அந்த நேர்காணலில் கூறுகிறார்.

தனக்கு எக்காலத்திலும் தேர்தல் அரசியலில் ஈடுபாடு இருந்ததில்லை எனக் கூறும் அவர் அதனாலேயே “புரட்சியை நிகழ்ச்சி நிரலில் கொண்டு வந்திருந்த”தாக அன்று அவர் நம்பிய நக்சல்பாரி இயக்கத்தில் இணைந்தார்.

அப்போது நக்சல்பாரி இயக்கம் இந்தியாவெங்கிலும் அது கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாகியது. இன்குலாபும் அதற்கு விதிவிலக்கல்ல. அவர் கடுமையாகக் கண்காணிக்கப்பட்டதோடு நள்ளிரவில், குழந்தைகள் தூக்கம் கலைந்து பதற, உறுமிய ஜீப்பில் வந்து வந்து அழைத்துச் சென்று விசாரிக்கப்பட்ட அனுபவங்களையும் எதிர் கொள்ள நேரிட்டது.

“என் வாழ்க்கை எப்போதும் பணி அச்சுறுத்தலுக்கும், எதிர்கால அச்சுறுத்தலுக்கும் இடையேதான் கழிந்திருக்கிறது. ‘சில நேரங்களில் உயிர்தரிப்பது வாழ்க்கையாக இருக்கிறது. சிலநேரங்களில் உயிர் கொடுப்பது வாழ்க்கையாக இருக்கிறது’ என மகாகவி இக்பால் எழுதியதைத்தான் நினைத்துக் கொள்கிறேன்” என வாழ்வின் இறுதிக் கட்டத்தில் (2015) அவர் ‘குங்குமம்’  இதழுக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிடுவதை அத்தகைய வாழ்வை வாழ்ந்தவர்கள்தான் எளிதில் உணர்ந்து கொள்ள இயலும்.

இருந்தபோதும் அவர் எந்நாளும் அத்தகைய ஒடுக்குமுறைகளையும் போராட்டங்களையும் தன் கவிதைகளிலும் ‘தராசு’, ‘உங்கள் விசிட்டர்’ முதலான செய்தி இதழ்களில் எழுதிய பத்திகளின் ஊடாகவும் கண்டிக்கத் தவறவில்லை.

நெருக்கடி நிலை காலத்திற்குப் பின் அரசியலுக்கு வந்த எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு அவரது எழுத்துக்கள் ஆதர்சமாக இருந்தன. அந்தக் காலகட்டத்தில் அவரது அரசியல் தொடர்புகள் நக்சல்பாரி இயக்கங்களுக்குள் ‘வினோத் மிஸ்ரா குழு’ எனப்பட்ட சி.பி.ஐ (எம்.எல்) எனும் அமைப்புடன் இருந்தன. அது நக்சல்பாரி அரசியலில் இரண்டாவது கட்டம் எனலாம். இந்திய அளவில் கடுமையாக ஒடுக்கப்பட்ட அந்த இயக்கம் சிதறிக் கொண்டிருந்த காலம் அது. நக்சல்பாரி இயக்கத்தை அடையாளப்படுத்திய அம்சங்களில் ஒன்றான ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு தேர்தல் பாதையை நோக்கித் திரும்பியிருந்த குழு அது. அன்றைய காலகட்டத்தில் வெளிநாட்டு நிதி உதவிகளுடன் செயல்படும் தொண்டு நிறுவனங்களையும் புரட்சிகரச் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற கருத்தைக் கொண்டிருந்த வகையிலும் அது பிற குழுக்களிடமிருந்து வேறுபட்டு இருந்தது. எங்களைப் போன்றவர்கள் இந்த அணுகல்முறைகளை ஏற்காததால் நாங்கள் வேறு குழுக்களில் இருந்தோம். இருந்தபோதிலும் இன்குலாபின் எழுத்துக்களும் கவிதைகளும் நக்சல்பாரி அரசியலை ஏற்றுக் கொண்ட அனைவராலும் ஏற்கப்பட்டன. கொண்டாடப்பட்டன.

1980 களுக்குப் பின், குறிப்பாக 1983 க்குப் பின் தமிழக அரசியலில் ஈழப் போராட்டம் மிகப் பெரிய தாக்கத்தை விளைவித்ததை அறிவோம். அடிப்படையில் தமிழ்த் தேசியப் பற்று மிக்க இன்குலாப் முழுமையாகத் தன்னை ஈழ ஆதரவுக்கு அர்ப்பணித்துச் செயல்பட்டார். இறுதிவரை அவரது அர்ப்பணிப்பு தொடர்ந்தது.

#   #   #

எனினும் இன்குலாப்பின் அரசியல் தமிழ்த் தேசியத்திலிருந்து பல அம்சங்களில் வேறுப்பட்டிருந்தது. இங்குள்ள தமிழ்த் தேசியர்கள் உருவாக்கியிருந்த, உருவாக்கி வருகிற ‘தமிழக வரலாற்றுப் பொற்கால’ பிம்பத்தை அவரளவு கட்டுடைத்தவர்கள் யாருமில்லை.

“திராவிட இயக்கங்கள் முன்னின்று நிகழ்த்திய மறுமலர்ச்சி இயக்கம் கூட புராணத்திற்கு மாற்றாகத் தமிழ்த் தொன்மங்களைத்தான் முன்வைத்தது. எல்லாம் மூவேந்தர் காலப் பெருமிதங்கள். பத்தினித் தனத்தின் உன்னதங்கள். பகுத்தறிவையும் மக்கள்நாயகத்தையும் நாத்தளராது சொற்பொழிந்தாலும் வரலாறு எனக் காட்டியவை மன்னர் காலக் கற்பிதங்கள். வீரத்துக்கு ஒரு கரிகாலன், விரிவாக்கத்துக்கு ஒரு ராஜராஜன் என்று பீத்தல் ராஜ உடைகளைப் போட்டுக் கொண்டு மக்களின் சிந்தனைகளை முடக்கினார்கள்”

என்பது அவரது கூற்று.

இது ஏதோ திராவிட இயக்கத்தை நோக்கிச் சொன்னவை என இன்றைய தமிழ்த் தேசியர்கள் மவுனம் காக்க இயலாது. இன்குலாப்பால் இழிவு செய்யப்பட்ட இந்த நிலவுடமைக் கொடுமைகளைத்தான் இன்றைய தமிழ்த் தேசியர்கள் தமிழர்களின் “காணியாட்சி முறை” எனப் பெருமிதம் கொள்கின்றனர். இன்குலாப்பால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட ராஜராஜன் அறிமுகப்படுத்திய தேவதாசி முறையை இன்று அவர்கள் கொண்டாடுவதை யாரும் மறந்துவிட இயலாது. இன்குலாபின் ‘ராஜ மகேந்திர சதுர்வேதி மங்கலம்’, ‘ஶ்ரீராஜராஜேச்சுவரியம்’, ‘பொட்டல் தோண்டிகள்’ எனும் மூன்று நெடுங்கவிதைகள் இந்த வகையில் முக்கியமானவை. தமிழ்த் தேசிய அரசியல் அபத்தங்களைக் கட்டுடைத்தவை.

இன்குலாப் இந்தக் கவிதைகளை எழுதிய காலத்தில் பேரா.நா.வானமாமலை மற்றும் மே.து.ராசுகுமார் போன்ற அவரது குழுவினர் ஒரு பக்கமும் நொபோரு கரோஷிமா, கத்லீன் கவ், ஒய்.சுப்பராயலு போன்றோர் இன்னொரு பக்கமும் சோழர்காலம் குறித்த பல முக்கியமான ஆய்வுகளை முன்வைத்துக் கொண்டிருந்தனர். முன்னதாக கல்கி கிருஷ்ணமூர்த்தி முதலானோர் கட்டமைத்திருந்த பொற்காலக் கட்டமைப்பு கலகலத்திருந்த காலம் அது. அவற்றை உள்வாங்கி எழுதப்பட்டவை இக்கவிதைகள்.

இன்னொரு பக்கம் தமிழ்ப் பேராசிரியரான இன்குலாப் ஆக்கிய இரு முக்கிய நாடக ஆக்கங்களான “ஔவை” மற்றும் “மணிமேகலை” ஆகிய இரண்டும்கூட இந்தத் தமிழ்த் தேசியப் பாரம்பரியத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. தமிழ்த் தேசியம் என்றைக்குப் பெண்ணியம், தலித்தியம் குறித்தெல்லாம் பேசியது? என்றைக்கு அவற்றை அது கொண்டாடியது?

இன்குலாப்பின் ஔவை குறித்து நான் விரிவாக எழுதியுள்ளேன். அது நம் தமிழ்ப் பாரம்பரியம் மட்டுமல்ல ஏ.பி.நாகராஜன், எஸ்.எஸ்.வாசன் முதலானோர் முன்வைத்த ஔவையிலிருந்தும் வேறுபட்ட ஒன்று. பட்டையும், கொட்டையுமாய் முருகனைப் பாடிய ஒரு வயதான மூதாட்டியாக ஆத்திச்சூடி பாடிய ஔவையையும், விநாயகரகவல் மற்றும் ஞானக்கோவை பாடிய ஔவையையும் ‘தமிழ் மூதாட்டியாக’ அடையாளப்படுத்திக் கொண்டிருந்த தமிழ் மரபில் பாட்டும் கூத்துமாய்ப் பாடிவந்த சங்கத்து ஔவையை  மேடை ஏற்றினார் இன்குலாப். அவள் துள்ளும் இளமையள். அதியனுடன் கள்ளருந்தி மகிழ்பவள். அதேபோல அவர் தன் இறுதிக்காலத்தில் இன்னொரு நாடக நாயகியாக வரித்துக் கொண்டது சாத்தனாரின் மணிமேகலை. சமகால ஆண் தத்துவவியலாளர்கள் பலரையும் வாதில் வென்றவர் அவர். ஒரு பெண்ணைக் காவியத் தலைவியாகக் கொண்ட ஒரே பெருங்காவியம் அது.

இன்குலாபின் தலித் வெளிப்பாடுகள் குறித்து இங்கு விரிவாகச் சொல்லத் தேவையில்லை. அந்த வகையில் அவர் வெண்மணி ஈன்ற புத்திரன். அவர் காலத்தில் நடந்த தலித்கள் மீதான அனைத்து வன்முறைகளும் அவர் மூலம் கவிதைகளாய்ப் பதிவு கண்டன. அவரது ‘மனுசங்கடா’ பாடலை நண்பர் கே.ஏ.குணசேகரனுடன் பட்டி தொட்டிகளெல்லாம் முழங்கியவர்களில் என் இரு மகள்களும் உண்டு என்பதை கண்களில் நீர்பனிக்க நினைவுகூர்கிறேன்.

இவை மாத்திரமல்ல. ஈழத் தமிழ் இதழுக்கு அளித்த அந்த நேர்காணலில் அவர் இன்னொன்றையும் சொல்வார். தான் வெறும் தமிழ் உணர்வால் ஈழப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை எனக் கூறும் இன்குலாப், ஒருவேளை இலங்கையில் தமிழர் பெரும்பான்மையாக இருந்து அவர்களால் சிங்களச் சிறுபான்மையினர் ஒடுக்கப்பட்டார்கள் எனின் நான் அந்தச் சிங்களச் சிறுபான்மையோருடன்தான் நிற்பேனென்றார். அவரது உணர்வுகள் அறச்சீற்றத்தின் அடிப்படையிலானவை. வெறும் கேவலமான அர்சியல் லாபம் கருதியவை அல்ல.

#   #   #

“அகிம்சையின் முறையீடுகளை எந்த ஆதிக்கக்காரனும் செவி மடுப்பதில்லை” எனக் கூறும் இன்குலாப்,

“எனக்கு இசை தெரியாது. எனக்குக் கவிதை வசப்பட்டு வரும் முன்னே பாட்டு வசப்பட்டு இருந்தேன். என்னால் பாடமுடியாது. ஆனால் எனக்குள் எப்போதும் பாடியபடியே இருக்கிறேன். என் இசை எழுத்தாகிறது. அதிலும் போராட்டங்களின் கருக்களே என் இசை…”

“புரட்சிகர மரபு என்பது வெறும் கோட்பாடு சார்ந்ததல்ல. போராட்டத்திலிருந்துதான் கோட்பாடுகளும் மரபுகளும் உருவாகின்றன..”

என வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் போராட்டங்களின் புகழைப் பாடியவர் அவர்.. ஒரு மதவாதி கடவுளை வைக்கும் இடத்தில் அவர் போராட்டத்தை வைத்தார். எப்படி ஒரு மதவாதி அவனது கடவுள் விமர்சிக்கப்படுவதையோ, ஆய்வு செய்யப்படுவதையோ ஏற்றுக் கொள்ளமாட்டானோ அதே போல இன்குலாபுக்கும் போராட்டங்கள் ஆய்வுக்கு அப்பாற்பட்டவை.

2012 என நினைக்கிறேன். தோழர் வைகறை அவர்கள் இன்குலாப்பின் நேர்காணலுடன் என்னைப் போன்றவர்களின் கருத்துக்களையும் பெற்று ஒரு சிறு மலரொன்றை வெளியிட்டார். அதில் “இன்குலாப் : வற்றாத கவிதை ஊற்றின் இரகசியம்” எனும் தலைப்பில் நான் எழுதிய சிறு கட்டுரையின் இறுதிப் பகுதி இப்படி அமைந்திருந்தது;

“இந்தக் குறிப்பை எழுதுவதற்காக அவரது ‘ஒவ்வொரு புல்லையும்..’ என்கிற பெருந்தொகுப்பைப் புரட்டுகிறபோது இந்தக் கவிதைகள் அனைத்தையும் அவர் ஒரே நாளில் எழுதி முடித்தாரோ என்கிற பிரமிப்புத்தான் நம்மை அசத்துகிறது. கருத்து, உணர்ச்சி, மொழி, சொற் தேர்வு, இன்குலாப்பிற்கே உரித்தான அந்த இசை லயம்… இவற்றில் எந்தச் சிறு மாற்றமும் இல்லை. அவர் எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்த கவிதா மனோநிலை, உணர்ச்சிப் பெருக்கு ஆகியவற்றைச் சிறிதும் வற்றவிடாமல் அவர் எப்படிப் பாதுகாத்து வருகிறார்? 39 வயதில் செத்துப் போன பாரதி இன்னும் 30 ஆண்டு காலம் உயிருடன் இருந்திருந்தால் இப்படித் தன் கவித்துவத்தையும் சிந்தனைப் போக்கையும் மாற்றமின்றித் தக்கவைத்துக் கொண்டிருக்க மாட்டார் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் மிகப் பெரிய மாற்றங்கள் இன்குலாப் வாழ்ந்த காலத்தில் ஏற்பட்டுவிட்டன. சோவியத் யூனியனின் வீழ்ச்சி ஒன்று போதாதா மார்க்சீயத்தால் உந்துதல் பெற்ற ஒரு கவிஞன் நிலைகுலைய? நம் கண்முன் ஒரு ஒற்றைத்துருவ உலகம் உருவானது. மார்க்சீயத்திற்கு அடுத்தபடியாக இன்குலாப்பிற்கு உந்துதல் அளித்த ஈழப் போராட்டம் நசிந்தது. நசுக்கப்பட்டது.  இவை இன்குலாப்பிற்கு நிச்சயம் துயரத்தை விளைவித்துருக்கும்தான். ஆனால் எந்த மாற்றத்தையும் கலக்கத்தையும் அவரிடம் இவை ஏற்படுத்திவிடவில்லை. அவர் போராட்டங்கள் ஈன்ற சிசு. ‘எல்லாம் போராடும். நீயும் போராடு’ என்பதே அவரது தாரக மந்திரம். அவரைப் பொருத்தமட்டில் போராட்டங்கள் ஆய்வுக்குரியவை அல்ல. ஆய்வுசெய்பவர்களை அவர் சகித்துக் கொள்வதுமில்லை. உலகின் எந்த மூலையில் போராட்டங்கள் நிகழ்ந்தாலும் அவை அவரது கவிதைகளின் உயிர் மூச்சைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும். வற்றாத ஊற்றாய் அதே உற்சாகத்துடன் அவரிடம் கவிதைகள் ஊறிக் கொண்டிருப்பதன் இரகசியம் அதுதான்.”

#    #    #

இன்குலாப்பின் கவிதை ஆக்கங்கள் குறித்து இங்கு கவிதைகளே இல்லை எனச் சிலர் கூறுவது உண்டு. அந்த மேட்டிமை விமர்சனங்களுக்குத் தான் பதிலளிப்பதே தனக்கு இழுக்கு எனக் குறைந்தபட்சம் இருமுறை பதிவு செய்துள்ள இன்குலாப் அதற்காக விமர்சனங்களை முகம் கொள்ளத் தயங்கியதில்லை. சுய விமர்சனங்களுக்கும் அஞ்சியதில்லை. அப்படியாகவும், தன் நிறைவேறாத இலக்குகளாகவும் அவர் கூறிய சிலவற்றையும் தொகுத்துக் கொள்வது அவரைப் பற்றிய மதிப்பீடுகளுக்கு உதவும்.

சொல்வார்:

“இவ்வளவு காலத்திற்குப் பிறகு இப்போதுதான் எனக்கு எழுத்து பிடிபடுவதுபோலத் தோன்றுகிறது..”

“போராட்டங்களைப் பதிவு செய்துள்ள போதிலும் வெகுமக்களைக் கருவாகக் கொண்ட நெடுங்கவிதை ஒன்றைப் படைக்க வேண்டும் என்பது என் கனவு. இந்தக் கனவு நாடகங்களாக வடிவம் கொண்டு வருகிறது..”

பல்வேறு சமரசங்களோடுதான் தன் வாழ்க்கையும் அமைந்துள்ளது என ஓரிடத்தில் கூறும் இன்குலாப் எனினும் சமரசங்கள் சாசுவதமில்லை, அவற்றிற்கு அப்பாற்பட்ட போராட்டங்கள்தான் சாசுவதம் என்கிறார்.

“சமரசங்களால் கிடைக்கும் பலன்களைக் காட்டிலும் போராடுவதால் கிடைக்கும் நஷ்டங்களை நான் மதிக்கிறேன்..”

என்று கூறுபவர் தான் வந்த அரசியல் பாதை குறித்த சுயவிமர்சனமாகச் சொல்வது:

“இன்னும் நான் போராட்டத்திற்கான அமைப்பை முழுமையாக ஏற்றிருக்க வேண்டும். போராட்டத்தில் பங்கு பெறுவது என்றில்லாமல் பலபோராட்டங்களை நான் கட்டமைத்திருக்க வேண்டும்.சில போராட்ட வாய்ப்புகளை நான் தவறவிட்டுவிட்டேன். எழுத்துபூர்வமாக நான் எளிய மக்களின் கோரிக்கைகளைப் பதிவு செய்திருக்கிறேன். ஆனால் களப் போராளியாக நான் இன்னும் முனைப்புடன் செயல்பட்டிருக்க வேண்டும்…”

மொத்தத் தொகுப்பை உருவாக்கியபோது அவற்றில் கவித்துவம் குறைந்த சிலவற்றை நீக்கிவிடலாம் என எண்ணியதாகவும், அப்போது உரையாடிய பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் ‘இல்லை அப்படியே வரட்டும்’ எனச் சொல்லியதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டதாகவும் சொல்லும் இன்குலாப்,

“ஒரு கவிதை அதற்குரிய கலை நியாயங்களுடன் இயங்கவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. என் கவிதைகள் பல அரசியல் நிகழ்வுகளின் உடனடிப் பதிவுகளாக இருந்தன. எனது அரசியல் பங்கேற்பின் முக்கியமான மையமாக என் கவிதை இருந்தது. அதனால் கவித்துவத்தில் பின்னப்படாத வெறும் வரிகளாகவும் வெளிப்பட நேர்ந்தது. அக்காலத்திய அரசியல் நிகழ்வுகளின் பதிவு என்பதால் கவித்துவம் குறைந்த சில வரிகளையும் தெரிந்தே இணைத்துள்ளேன்..”

“என் முதற்கவிதை எதிர்ப்பின் குரலாக இருந்தது. இன்றுவரை அப்படியே தொடர்கிறது. தாலாட்டாகவும், பாடல்களாகவும், பழமொழியாகவும் சின்ன வயதிலிருந்தே முகம் காட்டிய கவிதையை நான் எதிர்ப்பின் குரலாக அடையாளம் கண்டேன். ஒரு காதலின் பூங்கொத்தாக அது எனக்கு முதலில் அடையாளம் காட்டவில்லை. இன்று அது எனக்கு எல்லாமுமாக இருக்கிறது. இந்த வயதில் அது தனது முழு அழகையும் ஒளிவு மறைவில்லாமல் காட்டுகிறது. இந்தக் காட்சிக்கு இவ்வளவு காலம் ஆனதற்கு நான் காரணமா? கவிதை காரணமா? இன்று இந்த அழகின் உள்ளடக்கத்தை நான் வரித்துக் கொண்டாக வேண்டும்…”

இன்குலாப் போராட்டங்கள் ஈன்ற சிசு. தன்னலம் குடும்பநலம் என எதையும் அவர் தனது லட்சியங்களுக்கு இடையூறாவதை அனுமதிக்காது வாழ்ந்து மறைந்தவர்.

அவரது கவிதை ஆக்கங்களைப் பொறுத்த மட்டில் அவரே ஒரு கணம் யோசித்தது போல ‘கவிதைக்குரிய கலை நியாயங்கள் அற்ற கவிதைகளை” நீக்கி ஒரு தொகுப்பை உருவாக்க வேண்டும் எனில் இப்போதுள்ள அவரது பெருந்தொகுப்பில் கிட்டத்தட்ட பாதிக் கவிதைகளை நீக்கிவிட்டு ஒரு செந்தொகுப்பை உருவாக்கலாம். அப்படி உருவாக்கினால் அது தமிழ்ப் பாரம்பரியத்தின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக அமையும் என்பது உறுதி.

 

 

மகாவித்வான் ரா.இராகவையங்காரின் ஆத்திசூடி உரை – ஒரு சிறு குறிப்பு

மீனா தன்னுடைய புதிய கட்டுரைத் தொகுப்பை அனுப்பியிருந்தார். ‘சித்திரம் பேசேல்’ என்கிற தலைப்பு குறித்து முன்பே கூறியிருந்தார். வித்தியாசமான தலைப்பாக உள்ளதே எனக் கேட்டபோது ‘ஆத்திசூடி’யில் உள்ள ஒரு நீதிமொழி என்று பதில் வந்தது. ஆத்திச்சூடியை நாம் எங்கே முழுவதாய்ப் படித்துள்ளோம், முதல் பத்து அல்லது இருபது நீதி மொழிகளைத்தான் பாடநூற்களில் படித்துள்ளோம். இன்று மீனாவின் நூலில் அத்தலைப்பைப் பார்த்தவுடன், சரி என்ன பின்னணியில் ஔவையார் ‘சித்திரம் பேசேல்’ எனச் சொல்லியிருப்பார் எனப் பார்த்துவிடலாமென ஆத்திசூடியைத் தேடினேன். பேராசிரியர் மு.சண்முகம் பிள்ளை பதிப்பித்த மகாவித்வான் இராகவையங்காரின் உரை கையில் அகப்பட்டது.

சென்ற நூற்றாண்டின் முக்கிய தமிழறிஞர்களில் ஒருவரான இராகவையங்கார் (1870 – 1946) சேது சமஸ்தான வித்வானாகப் பெயர் பெற்றவர். சமஸ்தானத்திலிருந்து ஆயுட்கால பரியந்தம் ரூபாய் 635 சன்மானமாகப் பெற்று வந்தவர். பாண்டித்துரைத் தேவர் முதலானோரின் முன் முயற்சியால் நான்காம் தமிழ்ச் சங்கம் எனப் பெயர் பெற்ற மதுரைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டபோது (1901), அதன் பதிப்பு மற்றும் ஆய்வுத் துறைகளின் தலைவராக விளங்கியவர். சங்க நூல்கள் உட்படப் பல அரிய நூற்களைப் பதிப்பித்தவர். ‘தமிழ் வரலாறு’, ‘வஞ்சிமாநகர்’ உள்ளிட்ட பல முக்கிய உரைநடை நூல்களையும் செய்யுள் நூல்களையும் எழுதியவர். அபிஞான சாகுந்தலத்தைத் தமிழில் பெயர்த்தவர். தனது 65வது வயதில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சித் துறைக்குப் பொறுப்பேற்று ஆறாண்டுகள் பணிசெய்து ஓய்வு பெற்றவர். சேதுபதி மன்னரின் உதவியோடு விவேகானந்தர் மேனாடுகளுக்குச் சென்றபோது அவருடன் நேரடியாகப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர்.

இன்னும் அவரது குறைந்தபட்சம் ஆறு நூல்கள் அச்சேறவில்லை என்பது வியப்பை அளிக்கிறது. ஆத்திச் சூடி உரைகூட அவரது மறைவுக்குப் பலகாலத்திற்குப் பின் 1985ல் தான் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

ஆத்திச்சூடி உரையில் அவரது பரந்துபட்ட நூலறிவு வெளிப்படுகிறது. பரிமேலழகரின் திருக்குறள் உரைப் பாணியில் இதை அவர் ஆக்கியுள்ளார். ஒவ்வொரு நீதிமொழிக்கும் அதனளவில் பொருளுரைப்பதோடு நில்லாமல் ஒட்டுமொத்தமாய் ஔவை முன்வைக்கும் அறங்குறித்த ஒரு வாதத்தின் (argument) ஒரு இடைக்கண்ணி என்கிற வகையிலும் முன் பின் மொழிகளுடன் தொடர்புபடுத்திப் பொருளுரைக்கும் பாங்கு குறிப்பிடத்தக்கது. ஆத்திச்சூடியில் 108 நீதிமொழிகள்தான் உண்டு என நாம் அறிந்துள்ளோம். வழக்கிலுங்கூட ‘நூற்றெட்டு அறங்கள்’ என்றே சொல்வதுண்டு. தனது உரைப்பாயிரத்தில் இராகவையங்காரும் அதையே கூறியபோதும் அவரது உரை 109 மொழிகளைக் கொண்டுள்ளது நமக்கு வியப்பளிக்கிறது. ககர வர்க்க வரிசையில் 43ம் மொழியாக ‘கௌவை அகற்று’ எனும் மொழியைத் தன்னிச்சையாக இணைத்துக் கொண்டதற்கு இராகவையங்கார் ஏதும் விளக்கம் அளிக்கவில்லை. பதிப்பித்த சண்முகம் பிள்ளையவர்களுக்கும் காரணங் கூற இயலவில்லை. ‘பழி ஏற்படுத்தும் சொற்களைத் தவிர்க்க’ என்பது இதன் பொருள்.

சுமார் இரண்டு மணி நேரங்கள்தான் அந்நூலைப் புரட்டினேன். பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக மனதூன்றிப் படிக்க வேண்டும்.

‘தையற்சொற் கேளேல்’ என்கிற 63ம் மொழிக்கு இராகவர் அளித்துள்ள விளக்கம் கண்டு ஒருகணம் அதிர்ந்து போனேன். ‘பெண்டாட்டி சொல்லைக் கேளாதே’ என்பதுதான் இதற்கான பாரம்பரிய உரை. மற்ற இரு முக்கிய ஆத்திச்சூடி உரைகாரர்களான ஆறுமுக நாவலரும், ந.மு.வேங்கடசாமி நாட்டாருங்கூட இந்தப் பொருளையே வலியுறுத்தியுள்ளனர். தந்தைவழிச் சமூக ஆணாதிக்கக் கருத்துநிலையை உயர்த்திப் பிடித்து எழுதப்பட்ட இவ்வுரைக்கு ஒரு மாற்றாக எவ்வாறு அயோத்திதாச பண்டிதர் ஒரு மாற்று உரையை எழுதியுள்ளார் என்பதை வியந்து நான் மிக விரிவாக எழுதியுள்ளேன் (‘உடைபடும் மௌனங்களும் சிதறுண்ட புனிதங்களும்’ என்கிற எனது பெருந்தொகுப்பில் உள்ள ‘தமிழ் நவீனமான கதை’ கட்டுரையைக் காண்க). ‘தையற்சொல் கேளேல்’ என்பதற்கு ‘பிறர் மனத்தைக் குத்தித் தைக்கும் (அதாவது துன்புறுத்தும்) சொற்களுக்குச் செவிகொடேல் என்பது பண்டிதரின் உரை.

மகாவித்வான் இராகவையங்கார் பாரம்பரிய உரைக்கு ஒரு இடமளித்தபோதும் தனக்கே உரித்தான பார்வையுடன் முற்றிலும் வேறுபட்ட ஒரு மாற்று உரையை முன்வைத்துள்ளது என்னை ஒரு கணம் அசத்தியது.

“பெண்டாட்டி சொல்லைக் கேட்டு ஒழுகற்க என்றவாறு” என முதலில் மரபுவழி உரையைத் தந்துவிடுகிறார். பிறகு அதற்கோர் ஆறுதலாக “தையல்பால் (பெண்டாட்டியின் மீது) வைத்த அன்பின் மேலீட்டால் அவளுடைய சொல்லில் குற்றம் தோன்றாது ஒழுகுவான் என்பது கருதி அதனை விலக்கினார்” என்றொரு விளக்கம் சொல்வார். அதாவது பெண்கள் என்றாலே சரியாகக் கருத்துரைக்க மாட்டார்கள் என்பதல்ல, யாரும் தவறு செய்யக் கூடும், அது மனைவியாய் இருக்கும் பட்சத்தில் அன்பின் மிகுதியால் அந்தத் தவறு கண்ணில் படாது போய்விடும் ஆபத்திலிருந்து தப்பிக்கவே ஔவை அவ்வாறு கூறலாயிற்று என்கிற இராகவையங்காரின் விளக்கம் நிச்சயம் மரபுரைகளிலிருந்து ஒரு படி முன்னேற்றமான விளக்கந்தான். தவிரவும் பிந்தைய மொழிவொன்று “மேன்மக்கள் சொற்கேள்” (95) என்பதாக உள்ளதைச் சுட்டிகாட்டி, ‘மேன்மக்கள்’ என்பதில் பால் வேற்றுமை காட்டாமையால் ஒட்டுமொத்தமாய்ப் பெண்கள் சொல்லைக் கேளாதே எனத் தையல் சொல் கேளேலுக்குப் பொருள் கோடக் கூடாது என்று இன்னொரு ஆறுதல் விளக்கமும் அளிப்பார்.

இராகவையங்கார் அத்தோடும் நிறுத்தவில்லை. இதனை அவ்வையின் தொடர் வாதில் ஓர் இடைக்கண்ணியாகப் பாவித்து முற்றிலும் ஒரு மாற்று உரையைத் தந்துவிடுகிறார், ஆத்திச்சூடியில் இதற்கு முந்தைய நீதி மொழி “தேயத்தோடு ஒத்து வாழ்” (62) என்பது. “பல்வேறு வகைப்பட்ட தேயத்தார் பலரோடும் மனமொத்து வாழ்க என்றவாறு” என்பது இதற்கான அவர் உரை. இதையும் கூட, “உன் நாட்டில் வாழும் பலதிறப்பட்ட மக்களுடன் பகையின்றி வாழ்” என்பதுபோல முடித்து விடாமல்,

“ஒத்துவாழ் என்றதனால் தேயத்தார் பல்வேறு வகைப்பட்டு ஒவ்வாதிருத்தல் புலனாயது. ஊழாற் பல்வேறு வகைப்படுதலாவது உயர்சாதி தாழ்சாதி, அறிவு அறிவின்மை, செல்வம் வறுமை, உயர்மதம் தாழ்மதம் இவற்றானும் பிறவாற்றானும் பலதிறப்படுதல்.” என விரித்துரைக்கிறார், சாதி, மதம் உள்ளிட்ட வேறுபாடுகள் ஊழ்வினைப் பயன் என்கிற அளவிலேயே அவர் நின்றுபோனபோதும், இப்படிப் பலதிறப்பட்ட மற்றமைகளோடும் (other) “ஒத்தொழுகாமைக்கண் வாழ்வில்லை” என்கிற அளவிற்கு அவரது பொருள் விளக்கம் விரிவது குறிப்பிடத்தக்கது.

இனி, இதற்கடுத்து அமைந்துள்ள மொழியான “தையற்சொற் கேளேலு”க்குத் திரும்புவோம். இதற்கு மரபுரைகளை மீறி இராகவர் அளிக்கும் விளக்கம் இப்படிச் செல்கிறது:

“மேல் (முந்தைய மொழிவில்) ‘ஒத்துவாழ்’ என்றார். அங்ஙனம் ஒத்துவாழ்தற்குரிய சொல்லையல்லது சேர்த்தலல்லாத சொல்லை யார் வாயினுங் கேளற்க என்றாரெனினும் அமையும். தைத்தல் – சேர்த்தல்; ‘தைஇ’ என்பதனானுணர்க. தையல் சொல் – சேர்த்தல் அல்லாத சொல்”

அதாவது ஒத்துவாழ்தல் குறித்து முன்மொழிவில் சொல்லும் ஔவை அடுத்த மொழிவில் அதற்கான வழியை மொழிகிறார் என்பது இராகவர் கருத்து. அதென்ன? “ஒத்துவாழ்தலுக்கு எதிரான சொல்லைக் கேளாதே” என்பதுதான் அவ்வழி. ‘தையல்’ என்கிற சொல்லுக்குப் பெண் என்கிற பொருள் தவிர (சேர்த்துத்) தைத்தல் என்றொரு பொருளுமுண்டு. எனவே (பலதிறத்தாரும்) சேர்ந்து வாழ்தற்கு எதிரான சொல்லைச் சொல்லாதே என்பதாக இராகவரின் பொருள் அகல்கிறது. இன்றைய அரசியல் மொழியில் இதனை “வெறுப்புப் பேச்சுக்களைத் தவிர்” (Avoid Hate Speeches) எனலாம்.

இப்படியான ஒரு மாற்று விளக்கத்தை ஆறுமுக நாவலர், வேங்கடசாமி நாட்டார் முதலானோர் முயலவில்லை என்பது கவனத்திகுரியது.

ஆத்திசூடியைப் புரட்டிக் கொண்டிருக்கும்போது இப்படிப் பல அம்சங்கள் கவனத்திற்பட்டன. 94ம் மொழி, “மெல்லினல்லாள் தோள்சேர்” என்பது. “மென்மையுடைய இற்கிழத்தியாகிய நல்லவள் தோள்களைப் புணர்க என்றவாறு” என இதற்கு இராகவர் உட்பட அனைவரும் பொருளுரைப்பர். 96ம் மொழி, “மைவிழியார் மனையகல்” என்பது. “மை தீட்டிய கண்ணினையடையார்குரிய மனைகளை நெருங்காமற் செல்க என்றவாறு” என்பது பொருள். அதாவது கணிகையர் மனைக்குச் செல்லாதே என இராகவரும் ஏனையோரும் இதற்கு விளக்கம் அளிப்பர்.

இவ்விரு கருத்துக்களையும் சுருங்கச் சொல்வதாயின் ‘மனைவியுடன் இன்பம் அநுபவி, கணிகையரிடமிருந்து விலகு’ என அமையும். ஆனால் இவ்விரு மொழிகளிலுமே ‘மனைவி’ என்றோ ‘கணிகை’ என்றோ வேறுபடுத்தி ஏதும் சொல்லவில்லை. வெறுமே ‘மெல்லினல்லாள்’, ‘மைவிழியார்’ என்றே சொல்லப்படுகிறது. எனில் எப்படி மனைவி என்றும் கணிகை என்றும் வேறுபடுத்திப் பொருள் கோடற்படுகிறது. “மென்மையான நல்லவள்” என மென்மையும் நன்மையும் மனைவிக்குரித்தாக்கப் படுகிறது. ‘மை தீட்டிய விழிகள்’ என்பது அலங்கரித்து நிற்றலைக் குறிக்கிறது. கணிகைக்குரிய பிற ஆடவரை ஈர்க்கும் பண்பு இதன்மீது ஏற்றப்படுகிறது. (“மாயப் பொய் கூட்டி மயக்கும் விலைக் கணிகை – பரிபாடல்). தவிரவும் இற் கிழத்திகள் (குடும்பப் பெண்கள்) இப்படி அலங்கரித்து நிற்றல் ஆகாது என்றும் பொருளாகிறது.

மைவிழி என்பது கணிகையையே குறிக்கிறது என்பதற்கு இராகவர் வேறு இரு விளக்கங்களையும் சுட்டுகிறார். “கணிகையர்க்கு வைதவ்வியமே இல்லாமை பற்றி ‘மைவிழியார்’ என்றார்” என்பது ஒரு விளக்கம். மற்றது இங்கு மனை என்பது ‘கணிகைக் கிருகமாயிற்று; அல்லது மகளிர்க்குரியதாகாமையின்” என்பது. வேறொன்றுமில்லை. ஒரு மனையை அவ்வீட்டுக்குரிய ஆணை முன்வைத்தே அடையாளப்படுத்த இயலும். மனை மகளிர்க்குரியதன்று. ஒரு மனை, மகளிரால் அடையாளப்படுத்தப் படுகிறதெனில் அது கணிகையர் மனையாகத்தான் இருக்க இயலும்.

ஆகா, மொழி எப்படிக் கலச்சாரத்தால் கட்டமைக்கப் படுகிறது பாருங்கள். “’மெல்லினல்லாள் தோள்சேர்’ மற்றும் ‘மைவிழியார் மனையகல்’ ஆகிய இரு ஔவை மொழிகளையும் நேரடியாக ஆங்கிலத்தில் பெயர்த்து விளக்கங்களின்றிப் பதிப்பித்தால் அதை வாசிக்க நேரும் ஒரு மேற்குலக வாசகி இதை எப்படிப் பொருள்கொள்வாள். அவளால் இரண்டையும் இவ்வாறு வேறுபடுத்திப் பொருள் கொள்ள இயலுமா? மொழிபெயர்ப்பு சாத்தியமில்லை, மொழி அப்பாவித்தனமானதல்ல என்பவற்றிற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

‘சக்கர நெறிநில்’ (44) என்பது இன்னொரு ஆத்திசூடி மொழி. ‘ஆக்ஞா சக்கரம்’, அதாவது அரசாணையின்படி ஒழுகு என்பது இராகவர் உள்ளிட்டு அனைவரும் அளிக்கும் பொருள். ‘தெய்வ மிகழேல்’ (61) என்பது இன்னொரு மொழி. நாவலரும் நாட்டாரும் ‘தெய்வம்’ என்பதற்கு தெய்வம் என்றே பொருள் கொள்கின்றனர். இராகவர் இதற்கு ‘ஊழுண்மை’ எனப் பொருள் கொள்கிறார். இங்கும் முந்தைய மொழியுடன் தொடர்புபடுத்தி அவர், ‘நன்மை தீமைகளைச் சீர்தூக்கி நீ செய்கிற ஒரு வினை உனக்குத் துன்பந் தருவதாக அமையின் அதற்காக தெய்வத்தை இகழாதே, இது ஊழ்வினைப் பயன் என உணர்’ என்கிற ரீதியில் பொருள் சொல்கிறார். ‘சாஸ்திராப்ரவ்ருத்தி’ என்கிற வைதிக நெறி நின்றே இராகவையங்கார் இதைக் கூறினும், ஊழை வலியுறுத்தும் வகையில் சமண/ ஆசீவகச் சிந்தனை மரபில் வைத்தும் இதைக் காண இயலும். சக்கர நெறிநில், தெய்வம் இகழேல் முதலானவற்றை அடிகொண்டு ஆத்திசூடிக்கு ஒரு அவைதீக உரை எழுத இயலுமா?

‘சித்திரம் பேசேல்’ இல் தொடங்கி எங்கெங்கோ போயாயிற்று. ‘சித்திரம்’ என்பதற்கு ‘மெய்போலத் தோன்றும் பொய்மொழிகள்’ என்றே நாட்டாரும் நாவலரும் உரை பகர்கின்றனர். மீனாவும் தன் நூலுக்கு இந்தப் பொருளிலேயே தலைப்பிட்டுள்ளதாகக் கூறுகிறார். மகாவித்வான் இராகவையங்கார் வழக்கம்போல முந்தைய மொழிகளுடன் தொடர்புபடுத்தி, சித்திரம் என்பதற்குக் ‘கைவன்மையால் எழுதிக்காட்ட வேண்டிய ஒன்று’ எனச் சற்றே வேறுபட்ட பொருள் கொள்கிறார். ‘சித்திரம் பேசேல்’ என்பதற்கு அவரளிக்கும் பொருள் வருமாறு:

“அச் சான்றோர் முன்னே கைவன்மையால் எழுதிக்காட்ட வேண்டிய சித்திரம் போன்ற தொன்றை வாய்வன்மையாற் பேசற்க என்றவாறு”

இதற்கு முந்தைய மொழி சான்றோரைத் துணைக்கொள்வது குறித்தது. அதற்கான ஒழுக்கங்களில் ஒன்றாகவே சித்திரம் பேசேல் என்கிற அடுத்த மொழி கூறப்படுகிறது என்கிறார் இராகவர். ‘சித்திரம்’. என்பதற்கு இங்கவர் மிகவும் மேன்மையான ஒரு பொருளைக் கொள்கிறார். “சித்திரம் போலச் செயற்கரியதைச் செய்க என்பது நோக்கு. இதனால் இவ்வாசிரியர் (அதாவது ஔவை) சித்திர வினையைப் பெரிதும் மதித்தனர் என்பது உய்த்துணரலாகும்” என்பது இராகவர் கூற்று. செய்து காட்ட வேண்டிய ஒன்றைச் செய்து காட்டுவதே அருமை. செய்து காட்டாமல் வெறுமே சான்றோர் முன்னே வாய்ச் சவடால் காட்டற்க என்பதாகச் சித்திரம் பேசேலுக்கு இராகவையங்கார் பொருள் கொள்கிறார்.

இந்தப் பொருளும் மீனாவின் நூலுக்கு இன்னும் பொருத்தமானதே.

(கவிஞர் இன்குலாப் எழுதி மங்கை குழுவினரால் அரங்கேற்றப்பட்ட ‘ஔவை’ நாடகத்திற்கு நான் எழுதிய விமர்சனத்தில் (பாட்டும் கூத்துமாய் மேடை ஏறிய பாட்டினி ஔவை) ஆத்திசூடி குறித்து வேறு சில பார்வைகளை முன்வைத்துள்ளேன். ‘பின் நவீனத்துவம் இலக்கியம் விமர்சனம்” நூற்தொகுப்பில் அதைக் காணலாம்.