ஆட்சிமன்றங்கள், நீதித்துறை, நிர்வாகத் துறைகள் ஆகியவற்றில் இந்திய முஸ்லிம் பெண்களின் நிலை:
சட்ட, பாராளுமன்றங்கள், நீதிமன்றங்கள், நிர்வாகத் துறைகள் ஆகியவற்றில் முஸ்லிம் பெண்களின் பங்கு குறித்த தரவுகள் இதுவரை முறையாகத் தொகுக்கப்படவில்லை. முதன் முதலாக இந்திய முஸ்லிம்கள் குறித்த தரவுகள் ஓரளவு முழுமையாகத் தொகுக்கப்பட்டது சச்சார் குழு அறிக்கையில்தான். முஸ்லிம்கள் குறித்துப் புனையப்பட்டிருந்த பல பொய்கள் அதன் மூலம் தகர்ந்தன. எனினும் சச்சார் அறிக்கை மீது வைக்கப்படும் மிக முக்கியமான விமர்சனங்களில் ஒன்று அது முஸ்லிம் பெண்கள் குறித்து உரிய கவனம் செலுத்தவில்லை என்பது. பேராசிரியைகள் ஸீனத் சவுகத் அலி, ஃபரிதா லம்பே முதலானோர் இதனை அப்போதே கண்டித்தனர்.சச்சார் குழுவில் இருந்த ஏழு உறுப்பினர்களில் ஒருவர் கூட பெண் இல்லை என்பதை புகழ் பெற்ற பத்திரிக்கையாளர் சீமா முஸ்தபா சுட்டிக் காட்டினார். இந்திய முஸ்லிம் பெண்களின் நிலையை முஸ்லிம் ஆண்களுடனும், பிற பெண்களுடனும் ஒப்பீட்டுத் தரவுகளை சேகரிக்க சச்சார் குழு தவறியது.
ஆனால் ஒரு மேலோட்டமான பார்வையிலேயே நாம் சிலவற்றைச் சொல்ல முடியும். முஸ்லிம் பெண்கள் 1) முஸ்லிம் ஆண்களைக் காட்டிலும் 2) பிற மதப் பெண்களைக் காட்டிலும் கல்வி மற்றும் ஆற்றல் படுத்தப் படுவதில் பின் தங்கி உள்ளனர் எனச் சொல்வதற்கு விரிவான ஆய்வுகள் தேவை இல்லை. எடுத்துக் காட்டாக ஒன்றிரண்டைச் சொல்லலாம். 1990 தொடங்கி அடுத்த 20 ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ் தேர்வுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை வெறும் 47 தான். மொத்தம் தேர்வு செய்யப்பட்டவர்களில் வெறும் 2.92 சதந்தான் முஸ்லிம்கள். 1992, 2004 ஆகிய ஆண்டுகளில் ஒரு முஸ்லிம் கூடத் தேர்வு செய்யப்படவில்லை. இது மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கை. முஸ்லிம் பெண்கள் எனப் பார்த்தால் இந்த 20 ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வெறும் 9 பேர்கள்தான்.
ஜம்மு காஷ்மீருக்கு அடுத்து முஸ்லிம்கள் மிக அதிகமாக உள்ள அசாமில் 2013ல் தான் உம்மே பர்தினா அடில் என்கிற ஒரு முஸ்லிம் பெண் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற முடிந்தது. தமிழ் நாட்டில் 1974ல் தான் யாஸ்மின் அகமது என்கிற பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக முடிந்தது. 60 சதத்திற்கும் மேல் முஸ்லிம்கள் உள்ள ஜம்மு காஷ்மீரில் 2012ல் தான் முதன் முதலில் ஷெஹ்ரி டி அஸ்கர் என்பவர் ஐ.ஏ.எஸ் அதிகாரியானார், அதே ஆண்டில்தான் அம்மாநிலத்தில் ருவேதா சலம் என்கிற பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஆனார். குஜராத்தில் 2012ல்தான் சாரா ரிஸ்வி என்பவர் முதல் முஸ்லிம் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என்கிற பெயரைப் பெற்றார். தமிழ்நாட்டில் 2014ல் தான் முதல் ஐ.பி.எஸ் ஆனார்.
தமிழ்நாட்டில் இது வரை இரண்டே இரண்டு முஸ்லிம் பெண்களுக்குத்தான் சட்டமன்றத்தில் நுழைய வாய்ப்புக் கிடைத்துள்ளது. 1991 – 96 ல் அரவாக்குறிச்சி தொகுதியிலிருந்து மரியமுல் ஆசியா சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 2006 – 11 ல் பதர் சயீத் திருவல்லிக்கேணி தொகுதியிலிருந்து சட்ட மன்ற உறுப்பினராக இருந்தார். பதர் சயீத் பின்னர் வக்ஃப் வாரியத் தலைவராகவும் ஆக்கப்பட்டார். எந்த முஸ்லிம் பெண்ணும் தமிழகத்தில் அமைச்சராகும் வாய்ப்புப் பெறவில்லை.
நாடாளுமன்றத்திற்கு இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம் பெண்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். இன்றைய 16வது நாடாளுமன்றத்தில் 543 உறுப்பினர்களில் 23 உறுப்பினர்கள் மட்டும்தான் முஸ்லிம்கள். அவர்களில் ஆனந்த் நாக் (காஷ்மீர்) தொகுதியிலிருந்து வெற்றி பெற்ற மெஹ்பூபா மஃப்டி மற்றும் பர்தமன் – துர்காபூர் (மே.வ) தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மம்தாஸ் சங்கமித்தா ஆகிய இருவர் மட்டும்தான் முஸ்லிம் பெண் எம்.பிக்கள். முஸ்லிம் அல்லாத பெண் எம்பிக்களின் எண்ணிக்கையும் குறைவுதானே எனக் கேட்கலாம். உண்மைதான். மக்கள் தொகையில் பாதி பெண்கள் எனக் கொண்டாலும் சுமார் 270 பெண் உறுப்பினர்களாவது இருக்க வேண்டும் ஆனால் 61 பெண்கள்தான் உள்ளனர். ஆனால் இந்த வீதத்தில் பார்த்தாலும் கூட எட்டு முஸ்லிம் பெண்களாவது இன்று தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒருவர் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்ற 15 வது நாடாளுமன்றதிலும் கூட மூன்று முஸ்லிம் பெண்கள் மட்டும் தான் இருந்தனர்.
நீதித் துறையில் நிலைமை இதை விட மோசம். இதுவரை உச்ச நீதிமன்றத்தில் ஒரே ஒரு முஸ்லிம் பெண் நீதிபதிதான் இருந்துள்ளார். அவர்தான் முதல் பெண் உச்சநீதிமன்றப் நீதிபதியுங்கூட. பின்னாளில் தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவிதான் அவர். மேற்கு வங்கத்தில் முஸ்லிம் மக்கள் வீதம் 25.2 சதம். ஆனால் நீதித்துறையில் அவர்களின் பங்கு வெறும் 5 சதம். அசாமில் மக்கள்தொகை 30.9 சதம் நீதித் துறையில் பணியாற்றுவோர் 9.4 சதம். ஜம்மு காஷ்மீரில் மக்கள் வீதம் 66.97 சதம் நீதித் துறையில் அவர்கள் 48.3 சதம். இந்திய அளவில் சராசரியாக நீதித் துறையில் பணியாற்றும் முஸ்லிம்கள் 7.8 சதம்தான். இது முஸ்லிம் ஆண்களையும் சேர்த்த கணக்கு. இதில் முஸ்லிம் பெண்கள் என்று பார்த்தால் ஒரு சதத்திற்கும் குறைவாகத்தான் இருக்கும்.
யோசித்துப் பார்த்தால் இன்று இந்திய அளவில் பெயர் தெரியக் கூடிய முக்கியமான முஸ்லிம் பெண்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஒரு மேலோட்டமான பார்வையில் எனக்கு உடனடியாக நினைவுக்கு வரும் சில முகங்கள்:
சானியா மிர்ஸா, டென்னிஸ் வீராங்கனை, இந்திய டென்னிஸ் விளையாட்டு வீரர்களின் சங்கத்தின் (ITPA) துணைத் தலைவர். புதிதாக உருவாகியுள்ள தெலங்கானா மாநிலத்தின் பண்பாட்டுத் தூதுவர் (Brand Ambassador),
நீதியரசர் எம். ஃபாதிமா பீவி, கேரள முஸ்லிம், முதல் உச்ச நீதி மன்ற பெண் நீதிபதி (1989), தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர், தமிழக ஆளுநர் (1997 – 2001),
மெஹ்பூபா மஃப்டி, நாடாளுமன்ற உறுப்பினர், ஜம்மு காஷ்மீரின் முக்கிய எதிர்க் கட்சித் தலைவர்,
டாக்டர் சீனத் சௌகத் அலி, பேராசிரியை, எழுத்தாளர், நூலாசிரியர், விஸ்டம் ஃபவுன்டேஷன் நிறுவனர்,
டாக்டர் ஃபரிதா லம்பே, கல்வியாளர், மும்பை நிர்மலா நிகேதன் கல்லூரி முதல்வர்,
நஜ்மா ஹெப்துல்லாஹ், பா.ஜ.க உறுப்பினர், மத்திய சிறுபான்மைத் துறை துணை அமைச்சர்,
ஆசீஃபா கான், பா.ஜ.கவின் சிறுபான்மை அணியின் தேசிய செயற்குழு உறுப்பின்ர்,
உஸ்மா நஹீத், அனைத்திந்திய முஸ்லிம் சட்ட வாரிய (AIMPLB) உறுப்பினர், இக்ரா பெண்கள் பன்னாட்டுக் கூட்டுறவு (IIWA) என்கிற தொண்டு நிறுவனம் மூலம் முஸ்லிம் பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்கள் அளித்து சுய தொழில் வாய்ப்பை ஏர்படுத்தி வருபவர்,
சீமா முஸ்தபா, புகழ் மிக்க பத்திரிக்கையாளர்.,
ஷபனா ஆஸ்மி, சமூக ஆர்வலர், நடிகை,
சமீபத்தில் நூறாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட இந்திய வம்சாவளி வீராங்கனை நூருன்னிசா இனாயத் கான்,. பிரிட்டனின் ஆகப் பெரிய போர் வீரர் விருதான ஜார்ஜ் க்ராஸ் விருது வழங்கப் பட்டவர். தாய் திப்பு சுல்தான் மரபினர். ரஷ்யாவில் குடி பெயர்ந்து வாழ்ந்த போது நாஜிப் படைகளுக்கு எதிராக பிரிட்டிஷ் விமானப் படையில் பெண்களுக்கான துணைப் பிரிவில் சேர்ந்து ஒயர்லெஸ் ஆப்ரேஷன் துறையில் பயிற்சி அளிக்கப்பட்டு Special Operation Executive ஆகச் செயல் பட்டவர். நாஸிகளில் பிடியில் இருந்த ஃப்ரான்சில் பணி செய்து கொண்டிருந்தபோது காட்டிக் கொடுக்கப்பட்டு விசாரணைக்குப் பின் 30 வது வயதில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன்.
இரண்டு
ஒன்று தெளிவாகிறது. இந்த மூன்று துறைகளிலும் முஸ்லிம்கள் பெரிய அளவில் பின் தங்கியுள்ளனர். இவர்களுள்ளும் முஸ்லிம் பெண்களின் நிலை மிக மோசம்.
இன்னொரு வகையில் பார்த்தோமானால் மொத்தத்தில் ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களின் நிலை மிகவும் பின் தங்கியுள்ளது. மொத்தப் பெண்களுக்குள்ளும் முஸ்லிம் பெண்களின் நிலை படு மோசம்.
தொகுத்துச் சொல்வதானால் முஸ்லிம் பெண்களின் நிலை இப்படி ஆனதற்கு இரண்டு காரணங்கள். 1. அவர்கள் பெண்களாக இருப்பது. 2, அவர்கள் முஸ்லிம்களாக இருப்பது.
முஸ்லிம் பெண்கள் திறமையில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. எனினும் அவர்களால் மற்றவர்களுக்குச் சமமாக மேலெழுவதற்குத் தடையாக உள்ள நெருக்கடிகளை மூன்றாக வகைப்படுத்தலாம்.அவை: 1. நிதி நெருக்கடிகள் 2. கலாச்சார நெருக்கடிகள் 3. சிறுபான்மையராக இருப்பதால் எதிர்கொள்ளும் நெருக்கடிகள். இவற்றைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
1. நிதி நெருக்கடி: முஸ்லிம் பெண்களைப் பொருத்த மட்டில் நிதி நெருக்கடி அவர்களை இரு வடிவங்களில் பாதிக்கிறது. இந்தியாவிலேயே அதிக வறுமை வயப்பட்ட சமூகமாக முஸ்லிம்கள் உள்ளனர். வட மாநிலங்கள் பலவற்றில் முஸ்லிம் பெண்கள் வீட்டிலிருந்து கொண்டே பின்னல் வேலை செய்வது, பீடி சுற்றுவது முதலான கடும் உடல் உழைப்பைக் கோருவதும் அதிகச் சுரண்டல் நிறைந்ததுமான பணிகளில் உள்ளனர். இவர்களுக்கு இளமையில் படிப்பு என்பது சாத்தியமில்லாமல் உள்ளது.
வசதிகள் இருந்தபோதும் முஸ்லிம் குடும்பங்களில் பெண்களுக்கு நிதிச் சுதந்திரம் இருப்பதில்லை. ஒரு சுதந்திரமான தொழில் முனைவராக அவர்கள் செயல்பட வாய்ப்பு அளிக்கப் படுவதில்லை. ஆண்கள்தான் எல்லாவற்றையும் முடிவு செய்பவர்களாகவும், செயல்படுத்துபவர்களாகவும் உள்ளனர்.
2. கலாச்சார நெருக்கடிகள்: முஸ்லிம் பெண்கள் பிற பெண்களைக் காட்டிலும் மிகவும் பின் தங்கி இருப்பதற்கு இவைதான் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. முஸ்லிம் பெண்கள் வீட்டுக்குரியவர்கள். ஆண்களோடு சேர்ந்து படிப்பது, பணி செய்வது. அரசியலில் ஈடுபடுவது ஆகியவற்றிற்கு ஷரியாவில் இடமில்லை என்கிற கருத்து முஸ்லிம் சமூகத்தில் வேரூன்றி இருப்பது முஸ்லிம் பெண்கள் பின் தங்கி இருப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த நோக்கில் அமைந்த ஹதீஸ்கள் அவை மிக்க பலவீனமானவையாக இருந்தாலும் அவற்றுக்கு முதன்மை அளிப்பது, திருக்குரானின் புனித வசனங்களை அவற்றுக்குரிய சூழல்களிலிருந்து பிரித்து விளக்கமளிப்பது ஆகியவற்றின் ஊடாக இந்தக் கருத்துக்கள் முஸ்லிம் சமூகத்தில் ஆழப் பதிக்கப்பட்டுள்ளன. இதற்கு மாறாக இன்னும் பலம் மிக்க ஹதீஸ்களின் துணையோடும், இறைமறை வசனங்களை உரிய சூழலுடனுன் பொருத்தியும் இன்று பல மார்க்க அறிஞர்கள் மாற்று விளக்கம் அளிப்பதை கவனத்தில் எடுப்பது முஸ்லிம் சமூகம் தடைகளை மீறி மேம்பாடடையத் துணை புரியும்.
2010ல் தேவ்பந்த் தாருல் இஸ்லாம் பல்கலைக் கழகம் அளித்த ஃபட்வாவை இப்படி முஸ்லிம் சமூகத்தைப் பின்னுக்கு இழுப்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். “பெண்களின் சம்பாத்தியத்தில் குடும்பம் பிழைப்பது ஹராம்” என்பதுதான் அந்த ஃபத்வா. மூன்று மதத் தலைவர்கள் பங்கு பெற்ற ஒரு அமர்வில் விதிக்கப்பட்ட இந்த ஃபத்வா, “பெண்கள் இப்படிப் பணி செய்வதற்கு ஷரியாவில் இடமில்லை. தனியார் துறை ஆனாலும், அரசுத் துறை ஆனாலும் ஹிஜாப் இல்லாமல் பெண்களும் ஆண்களும் உரையாடக் கூடிய நிலைக்கு அனுமதி இல்லை” என உறுதி படக் கூறுகிறது.. ஷியா பிரிவைச் சேர்ந்த மௌலானா கல்பே ஜவ்வாத்தும் இந்த ஃபத்வாவை ஆதரிக்கிறார், பெண்கள் வெளியே சென்று சம்பாதிக்க ஷரியாவில் இடமில்லை என்கிறார்.
ஆனால் இதற்கு எதிரான கருத்துக்களும் முஸ்லிம்கள் மத்தியிலிருந்து வந்தன. “ஆண்களுக்கும் ஷரியா விதிகள் உள்ளன. ஆண்கள் ஷரியா விதிகளைச் சரியாகப் பின்பற்றினால் பெண்கள் அவர்களோடு பணி செய்வதில் என்ன பிரச்சினை/” என்கிறார் லக்னோ இட்கா மசூதியின் நய்பி இமாம் ரஷீத். தாருல் இஃப்தா ஃபிடங்கி மெஹலின் மஃப்டி மௌலானா காலித் ரஷீதும் தேவ்பந்த் ஃபத்வாவைக் கண்டித்துள்ளார்.
நீண்ட முஸ்லிம் வரலாற்றில் இந்தக் கருத்திற்கு மாறாகப் பெண்கள் பல்வேறு பொறுப்புகளை மேற்கொண்டு செயல்பட்டதற்குப் பல எடுத்துக் காட்டுகளைச் சொல்ல இயலும். நபிகளின் முதல் மனைவி கதீஜா அம்மையார் ஒரு பணக்கார வணிகராக முழு நிதிச் சுதந்திரத்துடன் வாழ்ந்தார். நபிகளுக்குப் பின் இஸ்லாமிய அரசியலில் மிக்க தைரியமாகவும் அரசியல் நடவடிக்கைகளில் தேர்ந்தும் செயல்பட்டவர் நபிகளாரின் இன்னொரு மனைவி ஆயிஷா அவர்கள். இத்தகைய வாய்ப்பு அன்றைய இஸ்லாமியச் சமூகத்தில் இருந்தது கருதத்தக்கது. கலீபா உமர் தனது ஆட்சியில் சந்தையை மேற்பார்வை இடும் முக்கிய பொறுப்பை ஷாஃபா பின் அப்துல்லா என்கிற பெண்மணியிடம் அளித்திருந்தார். ஃபாதிமிட் கலீபாக்களின் காலத்தில் (6ம் நூ) யேமன் நகரத்தின் ஆளுநராக இருந்தது அர்வா பின்ட் அஹமத் என்கிற பெண். நம் காலத்தில் முஸ்லிம் நாடுகளில். பெனாசிர் பூட்டொ, கலீடா சியா, ஷேக் ஹசீனா ஆகியோர் நாடாண்டிருகின்றனர்.
பெண்கள் வாகனங்கள் ஓட்டுவது தடை செய்யப்பட்ட இறுக்கமான முஸ்லிம் நாடுகளிலும் கூட முஸ்லிம் பெண்கள் அலுவலகங்களில் பணி செய்யத் தடை இல்லை. தாலிபன் ஆட்சியிலும் கூட ஆண்கள் பெண்களுக்கும், பெண்கள் ஆண்களுக்கும் வைத்தியம் செய்யக் கூடாது என்று மட்டுமே தடுத்திருந்தனர். மலேசியாவில் டோல் கேட்கள் அனித்திலும் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்கள் பணியாற்றுவதைக் காணலாம். தற்போது சவூதி அரேபியாவின் கல்ஃப் ஒன் இன்டஸ்ட்ரியல் வங்கியின் தலைமைப் பொறுப்பில் உள்ள பாக்டர் நாஹிர் தாஹேர் ஒரு பெண்தான். உலக அளவில் நூறு ஆற்றல் மிக்க பெண்கள் என்கிற பட்டியலில் சுமார் 10 முஸ்லிம் பெண்கள் இடம் பெறுகின்றனர் (2007). எகிப்தின் கமர்ஷியல் இன்டஸ்ட்ரியல் வங்கியின் நிர்வாகப் பணியாளர்களில் 70 சதம் பெண்கள். தலைமை இடத்தில் இடரண்டாவதாக உள்ள சகரர் எல் சலாப் ஒரு பெண். ஷேய்கா லுப்னா அல் காசிமி என்கிற பெண்தான் ஐக்கிய அரபு எம்ரேட்களின் நிதி அமைச்சர். இப்படி நிறையச் சொல்லலாம். எகிப்திய நீதி மன்றங்களில் 31 பெண் நீதிபதிகள் உள்ளனர்.
3. சிறுபான்மையினராக இருப்பதால் உருவாகும் நெருக்கடிகள்: சச்சார் குழு அறிக்கையில் முன்வைக்கப்படும் கருத்துக்களில் ஒன்று முஸ்லிம் குடியிருப்புகளின் அருகில் பள்ளிக் கூடங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது. வகுப்புக் கலவர வாய்ப்புள்ள பகுதிகளில் முஸ்லிம் குடியிருப்புகளிலிருந்து பள்ளிகள் தொலைவில் அமையும் போது பிள்ளைகள், குறிப்பாகப் பெண் குழந்தைகள் அவ்வளவு தூரம் செல்வதற்கு அஞ்சிப் படிப்பை நிறுத்திவிடும் போக்கைச் சுட்டிக் காட்டி அந்தப் பரிந்துரை செய்யப்பட்டது. பாடத் திட்டங்களில் வரலாற்றுத் திரிபுகள், தினம் சரஸ்வதி துதி பாடச் சொல்லிக் கட்டாயப் படுத்துதல் முதலியன பள்ளிக் கூடங்களை முஸ்லிம் குழந்தைகளிடமிருந்து அந்நியப்படுத்தி விடுகின்றன. சமூகத்தில் வேகமாகவும் ஆழமாகவும் பரவும் வெறுப்பு அரசியல் ஆசிரியர்களிடம் ஆழமாக வேரூன்றும்போது அவர்கள் முஸ்லிம் குழந்தைகளை வேறுபடுத்திப் பார்க்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது.
படித்து முடித்த பின் வேலை தேடும்போதும் முஸ்லிம் அடையாளம் ஒரு பிரச்சினையாகி விடுகிறது, இராணுவம் முதலான துறைகள் முஸ்லிம்களுக்கு இடமில்லாமல் போவது ஒரு எழுதப்படாத விதியாகிறது. சச்சார் அறிக்கை இது குறித்து விரிவாகப் பேசுகிறது. ரங்கநாத் மிஸ்ரா குழு அறிக்கையை நடைமுறைப் படுத்தி முஸ்லிம்களுக்கு உரிய ஒதுக்கீடு வழங்குவது, பெருகி வரும் தனியார் துறைகளில் சமூக நீதியை நிலை நாட்ட சில மேலை நாடுகளில் உள்ளது போல சம வாய்ப்பு ஆணையம் முதலியவற்றை அமைப்பது முதலியன இன்று உடனடித் தேவை ஆகிறது. சமூகத்தில் விரைவாகப் பரவும் வெறுப்பு அரசியலும். காவல்துறையும் ஊடகங்களும் கட்டமைக்கும் பயங்கரவாதப் பிம்பமும் முஸ்லிம்கள் அதிகாரம் பெறுவதற்குப் பெருந்தடையாகி விடுகின்றன.
இவை ஒட்டு மொத்தமாய் முஸ்லிம் சமூகத்தைப் பாதிப்பவைதான் என்றாலும் பெண்களுக்கு இதனால் வரும் பாதிப்புகள் கூடுதல். இதற்கான தீர்வை நாம் அரசியல் களத்தில்தான் தேட வேண்டும்
மூன்று
“ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அறிவாற்றலில் குறைந்தவர்கள் (நகிசுல் அக்ல்). அவர்கள் வீட்டு வேலைக்கு மட்டுமே தகுதியானவர்கள் என இஸ்லாத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. ஆனால் முஸ்லிம் சமூகத்திற்குள் இந்தக் கருத்து வலுவாக இயங்குகிறது. முஸ்லிம் பெண்கள் மத்தியிலும் இது ஆழமாக வேரூன்றி உள்ளது. முஸ்லிம் பெண்கள் தங்களின் இரண்டாம் பட்சமான நிலையை ஏற்றுக் கொண்டு, தங்கள் உரிமைகளை ஆண்களிடம் கையளித்து விட்டதுதான் முஸ்லிம் பெண்களின் இந்தப் பின் தங்கிய நிலைக்குக் காரணம். பெண்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் ஒரு ஆலிமுடைய கருத்துக்கும் ஒரு ஆலிமாவின் கருத்துக்கும் எந்த வேறுபாடும் இருப்பதில்லை” என்கிறார் அனைத்திந்திய முஸ்லிம் சட்ட வாரிய உறுப்பினர் உஸ்மா நஹீத்.
“இந்திய முஸ்லிம்கள் மத்தியில் அடிப்படை வாதந்தான் மிகுந்துள்ளது என்கிற கருத்தோடுதான் பல ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று வந்து கொண்டிருந்தேன், நேரடியாகப் பார்க்கும் போதுதான் என்னுடைய கருத்து எத்தனை தவறு என்பது விளங்கியது. கடந்த பத்து ஆண்டுகளில் அவர்கள் மத்தியில் ஒரு மிகப் பெரிய முற்போக்கான சிந்தனை மாற்றம் வந்துள்ளது இன்றைய இந்திய முஸ்லிம் ஒரு புதிய முஸ்லிமாக உருப்பெற்றுள்ளதை என்னால் உணர முடிந்தது,. தனது குறுங்குழு மனப்பான்மையை ஒழித்த, முற்போக்குச் சிந்தனைகளால் தன்னை வளப்படுத்திக் கொண்ட, நாலும் தெரிந்த, கல்வியில் நட்டம் கொண்ட, தீவிர மதக் கருத்துக்களிலிருந்து விடுபட்ட ஒரு புதிய தலைமுறை உருவாகியுள்ளது” என்கிறார் லண்டன் வாசியும், முக்கிய பத்தி எழுத்தாளரும், நூலாசிரியரும், “இந்திய முஸ்லிம்களின் வசந்தம்” எனும் நூலைச் சமீபத்தில் எழுதியுள்ளவருமான ஹஸன் சரூர்.
சச்சார் அறிக்கை முஸ்லிம் பெண்களின் பிரச்சினைகளைப் புறக்கணித்து விட்டது என விமர்சிக்கும் சீமா முஸ்தபா, “சாச்சார் அறிக்கையை வாசிக்கும்போது எல்லா இடங்களிலும் காணக் கிடப்பது முஸ்லிம்களின் பின் தங்கிய நிலை மட்டுமல்ல, அந்தப் பின் தங்கிய நிலையிலிருந்து விடுபடத் துடிக்கும் துடிப்பும் தான்” என்கிறார்.
இந்த ஆர்வத்தின் ஆரம்பப் புள்ளியாக நான் 1990 களின் தொடக்கத்தைக் காண்கிறேன். பாபர் மசூதி இடிப்பு, உலக மயத்தின் ஊடாக உருவான திறப்புகள் ஆகியவற்றின் ஊடாக சுய பரிசோதனையுடன் கூடிய, நவீன காலத்துக்குரிய முன்னேற்ற ஆர்வம் ஒன்று இந்திய முஸ்லிம்கள் மத்தியில் உருவாகியது. ஓட்டுக்குள் சுருங்கிய ஆமைகளாக இனியும் இருக்க இயலாது என அவர்கள் கிளம்பினர், முதன் முதலாக “முஸ்லிம்களை அதிகாரப் படுத்துதல்” (Muslim Empowerment) என்கிற குரல் எழுந்தது. மாநாடுகள் போடப்பட்டன. அரசியல் சட்ட அவையித் தொடரின் போது ஊத்தி மூடப்பட்ட இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை அறுபது ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மேலுக்கு வந்தது.
முஸ்லிம் ஆண்கள், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் உருவான இந்த எழுச்சி ஒரு குறிப்பிட அளவு பெண்கள் மத்தியிலும் வெளிப்பட்டது. பெண்கள் வீட்டுக்குள் முடங்கப்பட வேண்டியவர்கள் என்கிற பழைய நம்பிக்கைகளிலிருந்து இந்தப் புதிய முஸ்லிம்கள் விடுபட்டனர். முன்னைக் காட்டிலும் முஸ்லிம் மதக் கடமைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம், தாடி வளர்த்தல், ஹிஜாப் அணிதல் ஆகிய அடையாளங்களை உறுதிப் படுத்துதல் என்பன அதிகமாகிய அதே நேரத்தில், புதிய சூழலுக்கு உரிய வகையில் முற்போக்கான அணுகல் முறைகளை இத்துடன் இணைப்பது என்கிற நிலை இன்று ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் அடையாள உறுதியாக்கம் அவர்களை பிற சமூகங்களிலிருந்து அந்நியப் படுத்துவதற்கு மாறாக, ஒரு இருபதாண்டுகளுக்கு முன் இருந்ததைக் காட்டிலும் பிற சமூகங்களுடன் அவர்களின் உறவு நெருக்கமாவதையும் காண முடிகிறது. இந்தச் சூழல் எதிர்காலத்தில் முஸ்லிம் பெண்களின் நிலையில் பாரதூரமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.
இந்த மாற்றம் ஏதோ புதிய முஸ்லிம் ஆண்கள் பெண்களுக்கு அளிக்கும் கொடை அல்ல. முஸ்லிம் பெண்களும் இன்று புதிய முஸ்லிம் பெண்களாக உருப் பெறுகின்றனர். “இந்தக் கல்வி அமைப்பு முஸ்லிம் பெண்களைப் புறக்கணித்தாலும், முஸ்லிம் பெண்கள் கல்வியைப் புறக்கணிக்கவில்லை” என்கிறது சச்சார் குழு அறிக்கை. முஸ்லிம் பெண்கள் கல்விக் கூடங்களில் சேரும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்கிறார் முஸ்லிம் கல்வியாளர் ஃபரிதா லம்பே எழுதப் படிக்கத் தெரிந்த பெண்களின் வீதம் சில மாநிலங்களில் பிற மதத்தவரைக் காட்டிலும் அதிகமாகக் கூட உள்ளது” என்கிறார் அவர்.
இன்று முஸ்லிம் பெண்களின் நிலை நீதித் துறை ஆகட்டும், நிர்வாகத் துறை ஆகட்டும் எல்லாவற்றிலும் பிற பெண்களைக் காட்டிலும் மிகவும் பின் தங்கியுள்ளது என்பதில் அய்யமில்லை. ஆனால் இப்போது உருவாகியுள்ள இந்தப் புதிய பிரக்ஞை உரிய பலன்களை முஸ்லிம் பெண்கள் மத்தியில் விரைவில் ஏற்படுத்தும். இதற்குத் தடையாக உள்ளவற்றை நாம் மேலே அலசியுள்ளோம். அவற்றைத் தகர்ப்பதில் நாம் கவனம் குவிக்க வேண்டும்.
என்ன வழி?
1. முஸ்லிம்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படல் வேண்டும். வீட்டுக்குள் இருந்து கடினமான கை வேலைகளின் மூலம் உழைத்துச் சம்பாதிக்கும் நிலைகளிலிருந்து பெண்கள் மீட்கப்பட வேண்டும். அவர்களுக்கு சுய தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். அதற்குரிய நிதி அமைப்புகளையும் உருவாக்க வேண்டும். செசன்யா, வங்க தேசம் முதலான நாடுகளில் “நுண் நிதியம்” (micro finance) என்பது இவ்வகையில் முஸ்லிம் பெண்களின் நிலை மேம்படுவதில் பெரிய பங்காற்றியுள்ளது. பெண் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை அளிக்கும் வகையில் முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் தரம் உயர்த்தப்படுதல் மட்டுமின்றி நவீனப் படுத்தப்படவும் வேண்டும்.
2. பெண்களுக்கு நிதிச் சுதந்திரம் அளிக்கப்படல் வேண்டும். ஆண்களே வருமானம் மற்றும் செலவுகளைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது என்கிற நிலை போய் பெண்கள் சுயமாகத் திட்டமிட்டுச் செயல்படும் சூழல் குடும்பத்திற்குள் உருவாக்கப்பட வெண்டும். இதற்கு முஸ்லிம் ஆண்கள் மத்தியில் பெரும் மனமாற்றம் ஏற்படல் அவசியம்.
3. பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது என்பது போன்ற காலத்திற்குப் பொருந்தாத கட்டுப் பெட்டித் தனமான கருத்துக்களுக்கு நாம் விடை கொடுத்தாக வேண்டும். முஸ்லிம் சமூகத்திற்குள், ஆலிம்கள் மத்தியிலும். மார்க்க அறிஞர்களுக்கு இடையிலும் இது போன்ற நுண்மையான பிரச்சினைகளில் இரு எதிர் எதிர்க் கருத்துக்கள் நிலவுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பெண்களைப் பின்னுக்குத் தள்ளும், வீட்டுக்குள் முடக்கும் பழமைவாதிகளின் கருத்துக்கள் பல மிகவும் பலவீனமான ஹத்தீஸ்களின் அடிப்படையில் எழுகின்றன என மார்க்க அறிஞர்கள் சொல்வதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் தீர ஆய்வு செய்தும் நபிகள் மற்றும் கலீபாக்களின் வரலாற்றிலிருந்தும் இன்றைய சூழலுக்குத் தக எடுத்துக்காட்டுகளை நாம் தேர்வு செய்ய வேண்டும். நபிகளின் காலத்திலோ, இல்லை அதற்குச் சற்றுப் பின்னரோ பெண்களுக்கு நிதிச் சுதந்திரம் கிடையாது, அவர்களுக்கு அரசியலில் பங்கில்லை, அவர்கள் புறப் பணிகளில் ஈடுபடக் கூடாது என்கிற நிலை இல்லை என்பதற்குரிய வரலாற்றுச் சான்றுகளை நாம் மதிக்க வேண்டும். முஸ்லிம் இயக்கங்கள் பெண் கல்வி குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும்.
4.உலகம் கடந்த இருபதாண்டுகளில் பெரிய அளவில் மாறியுள்ளது. புதிய தொழில்கள், புதிய வாய்ப்புகள், புதிய கல்விகள் எல்லாம் உருவாகியுள்ளன. இவற்றில் நமக்கு உரிய பங்கைப் பெறுவதற்கு இங்கே வளர்க்கப்படும் வெறுப்பு அரசியல் தடையாகி விடக் கூடாது. முஸ்லிம் தீவிரவாதம் குறித்த ஊடகப் பிரச்சாரங்கள். அதற்குப் பின்னணியாக காவல்துறை அவிழ்க்கும் பொய்க் கதைகள் ஆகியவை குறித்த விழிப்புணர்வும் அத்தகைய நடவடிக்கைகளை உறுதியுடன் எதிர் கொள்வதற்கான அமைப்புகளும் வலுவாக்கப்பட வேண்டும். ரங்கநாத் ஆணையப் பரிதுரைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.