இந்தியாவைப் பற்றி கார்ல் மார்க்ஸ்

(கார்ல் மார்க்ஸ் 13  –  ஜூலை, 2018 மக்கள் களம் இதழில்   வெளிவந்துள்ள கட்டுரை)                                

மார்க்ஸ் – எங்கல்சின் மிக நுணுக்கமான பங்களிப்பான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் இன்றைய பொருத்தப்பாட்டைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். அறிவியல், தொழில்நுட்பம், உற்பத்தி, சமூகம் என எல்லாத் துறைகளிலும் மிகப் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துவிட்ட இந்த 21ம் நூற்றாண்டில் இருந்து கொண்டு 19ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த அறிக்கையை வாசிக்கும் நமக்கு இன்றும் அது பொருத்தமுடையதுதானா என்கிற கேள்வி ஒருவருக்கு வரக்கூடும்.

உறுதியாக இன்றும் அது பொருத்தமுடையதுதான். வரிக்கு வரி அப்படியே எடுத்துக் கொள்வது, அல்லது முதலாளித்துவம் வீழ்ந்தே தீரும் என்பது போன்ற முழக்கங்களுக்குப் பின் ஒளிந்து கொள்வது என்பதாக இல்லாமல் அறிக்கையின் அடிப்படைகளை இன்றைய சூழலின் எதார்த்தங்களுக்குத் தக நாம் பொருள் கோள வேண்டும். மார்க்ஸ் அவர் காலத்தில் மிக நவீனமாக இருந்த தத்துவங்கள் சிந்தனைகள் ஆய்வுகள் எல்லாவற்றையும் தனது கண்ணோட்டத்தில் எவ்வாறு பயன்படுத்திக் கொண்டாரோ அதேபோல நாமும் இந்த இருநூறு ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள தத்துவ சிந்தனை வளர்ச்சிகளை எல்லாம் உள்ளடக்கி அறிக்கையை மறு வாசிப்பு செய்தாக வேண்டும்.

“ஒவ்வொரு மனிதனுக்கும் சுதந்திரமான வளர்ச்சி என்பதுதான் எல்லா மனிதர்களுக்குமான சுதந்திரமான வளர்ச்சிக்கான நிபந்தனை” என்கிற அறிக்கையின் அடிப்படை இன்றைய அச்சந்தரும் குழப்பங்களின் ஊடாக மீண்டும் உறுதியாகி உள்ளதே ஒழிய அது பொய்யாகவில்லை என்கிற நோக்கிலிருந்து நாம் இனி மேற் சென்றாக வேண்டும்.

பழைய வர்க்கங்களின் தன்மைகள் இன்று மாறி இருக்கலாம். புதிய வர்க்கங்கள் உருப்பெற்று இருக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் உரிமை கொண்டுள்ள வர்க்கம் என ஒரு பிரிவும், எதுவுமே இல்லாத வர்க்கம் என்றொரு பிரிவுமாக மானுடம் பிரிந்து கிடப்பதில் பெரிய மாற்றங்கள் இல்லை. அப்படியான சூழல் தொடரும் வரை வர்க்கப் பகை என்பது மறையப் போவதும் இல்லை. இதை நான் எழுதிக் கொண்டுள்ளபோது தமிழகம் எங்கும் ஒரு கொதிநிலை உருவாகியுள்ளது. பான்னாட்டு வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடந்து 14 பேர்கள் கொல்லப்பட்டு, ஆலை இன்று மூட நேர்ந்துள்ளது. கார்போரேட்களின் எண்வழிச் சாலை விரிவாக்க முயற்சிகள் பெரிய அளவில் மக்களின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கார்பொரேட்களுக்கான எதிர்ப்புகள் என்பது தொழிலாளி வர்க்கத்தின் எதிர்ப்பு என்பதைத் தாண்டி ஒட்டு மொத்த மக்களின் எதிர்ப்பாக மாறியுள்ளது. இதைச் சமாளிக்க இயலாமல் அரசுகளும் கார்பொரேட்களும் விழி பிதுங்கி நிற்கும் நிலையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்றைய நவீன தொழில் நுட்பங்கள் தானியங்கி ரொபாட்களின் உலகில் தொழிலாளி வர்க்கம் பலமிழந்து போயிருக்கலாம். ஆனால் வளர்ச்சி என்பது எல்லோருக்குமான வளர்ச்சியாக இல்லாத வரை ஆதிக்க சக்திகள் அமைதியாகத் தம் சுரண்டலைத் தொடர இயலாது என்பதும் இன்றைய எதிர்ப்புகளின் ஊடாக உறுதியாகி இருக்கிறது.

ஆனால் இந்த மாற்றங்களைப் புரிந்து கொள்ள உலகெங்கிலும் உள்ள கம்யுனிஸ்ட் கட்சிகள் திராணியற்றுப் போனதே இன்றைய பிரச்சினை. புதிய மாற்றங்கள், சமகாலத் தத்துவ மற்றும் சிந்தனை வளர்ச்சிகள் ஆகியவற்றை இணைத்து மார்க்சீய நோக்கில் சிந்திப்பதற்குத் திராணியற்றவைகளாக இடதுசாரிகள் உள்ளனர். போராடும் மக்களுக்குத் தலைமை தாங்கும் தகுதியை இன்றைய கம்யூனிஸ்ட் கட்சிகள் இழந்து நிற்பதில் அவர்கள் மார்க்சியத்தைச் சிந்தனைக்குரிய கருவியாகக் கையாளாமல் வணக்கத்துக்குரிய வேதமாக்கியது முக்கிய காரணம். உலகெங்கிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அதிகாரங்கள் தூக்கி எறியப்பட்டு முப்பதாண்டுகள் ஆகியும், என்ன நடந்தது, எங்கே பிழைகள் விட்டோம் என்பதை உலகெங்கிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்றுவரை வெளிப்படையாகச் சிந்திக்கவில்லையே.

முதலாளித்துவத்தின் சிக்கல் என்பது அது அளவுக்கதிகமான தொழில்நுட்பங்களை உருவாக்குவதாகவே இன்று சில இயக்கத்தவரால் புரிந்து கொள்ளப்படுகின்றன. அந்த அடிப்படையில் தொழில்நுட்ப வளர்ச்சிகளையே மூர்க்கமாக எதிர்ப்பதும் எளிய வாழ்க்கைக்குத் திரும்புதல், சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆகியனவே இன்றைய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் போதுமானவை என்கிற கருத்தும் இன்று உருவாகிறது. ஆனால் இத்தகைய சிந்தனைகள் இன்றைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வாகாது. இன்றைய உலக மக்களின் பசியை இத்தகைய அணுகல்முறைகள் மட்டும் போக்கிவிட முடியாது. அதோடு மனிதர்களின் தேவைகள் வெறும் பசியாறுதலோடு முடிந்து விடுவதல்ல. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இன்றைய பிரச்சினைகளுக்கு அதீதமான தொழில்நுட்ப வளர்ச்சியின் மீது பழிபோட்டுவிட்டு ஓயவில்லை. அல்லது தொழிலாளி வர்க்கத்தின் மீதான சுரண்டல் அநீதியானது எனச் சொல்லியும் முடித்துக் கொள்ளவில்லை. மாறாக பிரச்சினை என்பது முதலாளியம் தர்க்கபூர்வமானது (rational) அல்ல என்பதில் அடங்கியுள்ளது. அதன் தத்துவம் அறிவுக்குப் புறம்பானது (irrational). வாங்கும் திறனற்றவர்களாகத் தொழிலாளிகளை ஆக்கிவிட்டு ‘ரோபோ’ க்களையும், தானியங்கி எந்திரங்களையும் வைத்துக் கொண்டு வெறும் உற்பத்தியைப் பெருக்கிக் கொண்டே போவது சாத்தியமில்லை எனச் சொன்னதுதான் மார்க்சியத்தின் பங்களிப்பு. புத்திசாலித்தனமான கண்டுபிடிப்புகளை எல்லாம் அறிவு பூர்வமாகப் பயன்படுதுவதற்கு முதலாளியத்தால் சாத்தியமே இல்லை. மேலும் மேலும் மூலதனத்தைக் குவித்துக் கொண்டே போவதனால் என்ன பயன்? எந்திரங்கள் பெருகிக் கொண்டே போகின்றன. ஆனால் மனிதர்களின் ஓய்வு நேரம் குறைந்து கொண்டே போகிறது என்பதை எத்தகைய தர்க்கம் அல்லது தர்மத்தின் ஊடாக முதலாளித்துவத்தால் விளக்கிவிட இயலும்? மேலும் மேலும் தொழிலாளிகளை ஏதுமற்றவர்களாக (precariats) ஆக்கிக் கொண்டு எவ்வளவு காலம் முதலாளி வர்க்கம் நிம்மதியாக இருந்துவிட முடியும்? இதை இன்று அவர்களும் உணர்கிறார்கள்.  நினைவிருக்கட்டும். அவர்களும் இன்று நிம்மதியாக இல்லை.

நமக்கு இன்னும் எந்திரங்கள் வேண்டும். இன்னும் தகவல் தொழில்நுட்பம் வளர வேண்டும். கல்வி, மருத்துவம் என்பன மேலும் வளர்ச்சியடைய வேண்டும். ஆனால் கூடவே மக்களுக்கு அவை பரவலாகவும், நீதியாகவும் சென்றடைய வேண்டும். அதிகாரமற்றவர்களும் எளியவர்களும் அதற்குரிய வகையில் அதிகாரப்படுத்தப்பட வேண்டும். அதற்கு அவர்களுக்கு அமைப்பாகும், போராடும் சுதந்திரம் முழுமையாக வேண்டும். வரலாற்றைப் பின்னோக்கிச் செலுத்திவிட முடியாது. வளர்ச்சி, சுகம், மகிழ்ச்சி என்பன எல்லோருக்குமானதாக வேண்டும். புத்தர் சொன்னது போல “பகுஜன் ஹிதய, பகுஜன் சுகய” – எந்த வளர்ச்சியும், எந்தத் தொழில்நுட்பமும் எல்லோருக்கும் இதமளிப்பதாகவும் சுகமளிப்பதாகவும் அமைய வேண்டும்.

உற்பத்தி செய்யும் மக்களுக்கும் உற்பத்தி சாதனங்களைச் சொந்தமாகக் கொண்ட முதலாளிகளுக்கும் இடையிலான ஏற்றத் தாழ்வுகள் அழியாத வரைக்கும் இது சாத்தியமில்லை என மார்க்சும் எங்கல்சும் சொன்னது இன்றுவரை எவ்வகையிலும் பொய்க்கவில்லை.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வாசிக்கும்போது நம் மனதில் நிறைவது இதுதான்.

 

இனி கார்ல் மார்க்ஸ் இந்தியா குறித்துச் சொன்னவை எந்த அளவிற்கு ஆழமானவையாகவும், இன்று சுமார் இருநூறு ஆண்டுகளுக்குப் பின் வாசிக்கும்போது எத்தனை பொருத்தம் உடையதாகவும் உள்ளன என்பதைச் சுருக்கமாகக் காண்போம்.

கார்ல் மார்க்ஸ் 1847 முதல் 1862 வரை சுமார் 15 ஆண்டுகள் New York Daily Tribune இதழில் இந்தியா பற்றி எழுதிய கட்டுரைகளும் வேறு சில சந்தர்ப்பங்களில் மூலதன வளர்ச்சி, காலனியம் முதலானவை குறித்துச் சொல்லும்போது குறிப்பிட்டுள்ளவையும் இன்று வாசிக்கும்போது நமக்கு எல்லையற்ற வியப்பை அளிக்கின்றன. இன்றுள்ளது போலத் தகவல் தொழில்நுட்பங்கள் ஏதும் இல்லாத ஒரு காலகட்டத்தில் இந்தியாவில் இருந்த கிழக்கிந்தியக் கம்பெனி மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியின் செயல்பாடுகளை, அவை இந்தியச் சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றங்களை, எதிர்கால இந்தியா எப்படி அமையும் என்பது குறித்த ஊகங்களை, இந்தியச் சாதி அமைப்பு எப்படி அதை வளர்ச்சியற்ற தேக்கமுற்ற சமூகமாக வைத்திருந்தது என்பதை அந்த இளம் வயதில் (27 – 42) அவர் நுட்பமாகச் சொல்லி உள்ள பாங்கு யாரும் அதிசயிக்கத் தக்கது.

இந்தியா பற்றி மார்க்ஸ் சிலவற்றைத் தவறாகச் சொல்லிவிட்டார் என்றொரு கருத்து உண்டு. அது முற்றிலும் தவறு. அந்தப் பதினைந்து ஆண்டுகளில் அவர் ட்ரிப்யூன் இதழில் எழுதியவற்றை நாம் மிகக் கவனமாகவும் ஒட்டு மொத்தமாகவும் வாசிக்க வேண்டும். அன்றைய காலகட்டத்தில் அவருக்குக் கிடைத்த தகவல்கள் குறைவு என நாம் சலுகை கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் அதே நேரத்தில் அவர் கூறியவற்றுள் ஏதொன்றையும் தனித்தும், முற்றுண்மையாகவும் பார்க்காமல் அந்தப் பதினைந்து ஆண்டுகளில் அவற்றில் ஏற்பட்ட மாற்றங்களைக் கணக்கில் கொண்டு இந்தியா குறித்த மார்க்சின் சிந்தனைகளை மொத்தமாகப் பார்ப்பது அவசியம்.

மார்க்சின் இந்தியா குறித்த கருத்துக்களின் செம்பதிப்பு ஒன்றிற்கு (Karl Marx on India, Iqbal Husain (ed), Tulika Books, Page 307 + Ixviii, Price Rs 250) பேரா. இர்ஃபான் ஹபீப் எழுதியுள்ள ஒரு விரிவான Marx on Indiaமுன்னுரையில் கூறியுள்ளது போல இந்தியா பற்ரிய மார்க்சின் கருத்துக்களை மூன்றாகப் பிரிக்கலாம். 1. காலனியத்திற்கு முந்திய இந்தியச் சமூகம் மற்றும் பண்பாடு குறித்தவை, 2. பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவின் மீது ஏற்படுத்திய தாக்கங்கள் 3. இந்திய வளர்ச்சி மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை ஆகியவை குறித்த அவரது எதிர்பார்ப்புகள். இந்த வகையில் அவர் மேற்குறித்த ட்ரிப்யூன் இதழில் 1853ம் ஆண்டு ஜூன் 23 மற்றும் ஆக 8 தேதிகளில் எழுதிய, “இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி” மற்றும் “இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி எதிர்காலத்தில் ஏற்படுத்தப் போகும் பாதிப்புகள்” ஆகிய இரு கட்டுரைகள் முக்கியமானவை. தோழர்கள் இயன்றால் அவற்றைப் படிக்க வேண்டும். தொடர்ந்து அவர் எழுதியுள்ள பிற கட்டுரைகளின் வெளிச்சத்தில் அவற்றைப் படிப்பது இன்னும் நல்லது.

மார்க்சின் கருத்துக்களைத் தொடர்ந்து பார்ப்பதற்கு முன் ஒன்றைச் சொல்வது முக்கியம். இணையத் தளங்களில் கிடைக்கக் கூடிய இந்துத்துவப் பார்ப்பன அறிவுஜீவிகள் இந்தியச் சாதிமுறை, மதங்கள் ஆகியன குறித்த மார்க்சின் கருத்துக்கள் பற்றி எத்தகைய காழ்ப்புணர்ச்சியுடன் உள்ளார்கள் என ஒரு முறை மேலோட்டமாகப் பார்த்தீர்களானால் அது நல்ல நகைச்சுவையாக இருக்கும் என்பதோடு மார்க்ஸ் ஒரு முறை கூட இந்தியா வராமலேயே இந்துச் சமூகம் குறித்து எத்தகைய கருத்துக்களைக் கொண்டிருந்தார் என்பது விளங்கும்.

மேற்குறித்த ‘நியூயார்க் டெய்லி ட்ரிப்யூன்’ எனும் அமெரிக்க இதழ் ஹொரேஸ் க்ரீலே (1811-1872) என்கிற அமெரிக்க அரசியல்வாதியால் தொடங்கி நடத்தப்பட்டது. அந்நியப் பொருட்களுக்கு வரி விதித்து உள்நாட்டு உற்பத்திப் பொருட்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்கிற (Protectionism) கொள்கையை உடையவர் கிரீலே. அதோடு அமைப்பாகத் திரள்வதற்கான தொழிலாளர்களின் உரிமை, பெண்ணுரிமை ஆகியவற்றையும் ஆதரித்தவர். இதழாசிரியராக இருந்த சார்ல்ஸ் ஏ டானா என்பவர் ஃப்ரென்ச் கற்பனாவாத சோஷலிஸ்ட்டான ஃபூரியரின் கொள்கைகளை ஆதரிப்பவர்.

இப்படித் தன் கருத்துக்களுக்கு இயைபான இதழ் என்கிற வகையிலும், அன்று அவர் எதிர் கொண்டிருந்த பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிக்க இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை ஒட்டியும் மார்க்ஸ் இந்த இதழில் தொடர்ந்து எழுதினார். வெவ்வேறு தலைப்புகளில் அவர் எழுதிய அனுப்பிய கட்டுரைகள் (dispatches) விரும்பிப் படிக்கப்பட்டன. 1860 களில் அந்த இதழ் அமெரிக்காவில் இரண்டு லட்சம் பிரதிகள் விற்பனை ஆயின.

ட்ரிப்யூனில் மார்க்ஸ் எழுதிய கட்டுரைகள் மார்க்ஸ் இறந்தபின்னரே, 1896 வாக்கில் அவரது மகள் எலீனார், அவரது கணவர் ஏவ்லிங் முதலானோரால் தொகுக்கப்பட்டு வெளியாயின. இப்படித் தாமதமாக வெளிவந்ததன் விளைவாகவும் அப்போது அவற்றின் முக்கியத்துவம் உணரப் படாததாலும் மூலதனம் ஏகாதிபத்தியமாக வடிவெடுப்பது குறித்த மார்க்சீய ஆய்வுகளை மார்க்சுக்குப் பின், முதல் உலகப் போர்க் காலகட்டத்தில் முன்னெடுத்த ரோசா லக்சம்பர்கின் Accumulation of Capital (1913) மற்றும் லெனினின் Imperialism- The Highest Stage of Capitalism (1917) ஆகிய இரு முக்கிய நூல்களிலும் மார்க்சின் ட்ரிப்யூன் இதழ்க் கட்டுரைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. மூலதனம் ஏகாதிபத்தியமாகப் பரிமாணம் கொள்வதில் காலனியக் கொள்ளை எப்படி இங்கிலாந்துக்குப் பயன்பட்டது என்பதை மார்க்சின் ட்ரிப்யூன் கட்டுரைகளை அவர்கள் வாசித்திருந்தார்களானால் இன்னும் பயனுடையதாக இருந்திருக்கும்.

மார்க்சின் ட்ரிப்யூன் கட்டுரைகளைத் தொகுப்பதில் சில பிரச்சினைகளும் உள்ளன. சில குறிப்பான தலைப்புகளில் எழுதுமாறு மார்க்சால் கேட்டுக் கொள்ளப்பட்டு எங்கல்சால் எழுதப்பட்ட கட்டுரைகள் சிலவும் மார்க்சின் பெயராலேயே ட்ரிப்யூனில் வெளியாகியுள்ளன. தவிரவும் மார்க்சின் பல முக்கியமான கட்டுரைகள் மார்க்சின் பெயர் இல்லாமல் ட்ரிப்யூனில் வெளியிடப்பட்டன. இது குறித்து மார்க்ஸ் ஆசிரியருக்குத் தெரிவித்தபோது அவரது பெரை மற்ற சற்றே சாதாரணமான கட்டுரைகளில் வெளியிடுவதஈயும் அவர்கள் நிறுத்திக் கொண்டார்கள். மார்க்சின் அக்கால வறுமை அவற்றை எல்லாம் சகித்துக் கொள்ள வேண்டியாயிற்று.

எனினும் பிற்காலத்தில் சோவியத் ருஷ்யாவில் நிறுவப்பட்ட Marx- Engels – Lenin Institute (லெனினுக்குப் பின் அதன் பெயர் Institute of Marxism Leninism) ஆகியவற்றாலும் பிற்காலப் பதிப்பாளர்களாலும் ஆய்வுகள் மேற்கொண்டு இப்போது மார்க்ஸ் எழுதியவை, எங்கல்ஸ் எழுதியவை, ஐயத்துக்குரியவை எல்லாம் பிரித்துப் பதிப்பிக்கப்பட்ட நல்ல தொகுப்புகள் உருவாக்கப்பட்டன. முன் குறிப்பிட்ட இக்பால் ஹுசேனின் தொகுப்பு அப்படியான ஒன்று.

(அடுத்த இதழில் இந்தியச் சமூக அமைப்பின் வளர்ச்சியற்ற தேக்கத்தில் சாதிமுறையின் பங்கு குறித்த கார்ல் மார்க்சின் கருத்துக்கள்)

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை : அன்று சொன்னவை இன்றும் பொருந்தும்

கார்ல் மார்க்ஸ் -12 , மக்கள் களம், மே, 2018                                

இன்று (மே 5, 2018) கார்ல் மார்க்சின் 200 ஆவது பிறந்த நாளில் முன்னாள் மேற்கு ஜெர்மனியின் ட்ரையர் நகரத்தில் உள்ள கார்ல் மார்க்சின் இல்லத்தை நோக்கி பெருந்திரளாகப் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வருகின்றனர் என்றும், ஆனால் சுமார் நாற்பதாண்டுகாலம் ‘கம்யூனிஸ்ட்’ ஆட்சியின் கீழிருந்த கிழக்கு ஜெர்மனியில் இறுக்கமான மௌனம் தொடர்கிறது எனவும் இன்றைய ‘கார்டியன்’ இதழ் எழுதுகிறது.m2

1994ல் நான் ஜெர்மனி சென்றபோது ட்ரையர் நகரில் உள்ள மார்க்சின் வீட்டிற்குப் போனது நினைவுக்கு வருகிறது. தென் மேற்கு ஜெர்மனியில் உள்ள அந்த நகரத்திற்கு ரைன் நதி ஓரமாகச் சென்ற அந்த நீண்ட பயணம் மறக்க முடியாதது. இன்றைய கம்யூனிஸ்ட் கட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் அந்த இல்லம் எங்கிருக்கிறது என ஊருக்குள் பலரிடம் விசாரித்தும் யாராலும் சரியாகப் பதிலளிக்க இயலவில்லை. ஒரு வயதான மூதாட்டி சற்று நேரம் நின்று நெற்றியில் விரலைத் தட்டி யோசித்துவிட்டு, “இங்கே எங்கேயோ அப்படி இரு வீட்டைப் பார்த்துள்ளேன்” – எனச் சொல்லி அகன்றார். எப்படியோ அந்த வீட்டைக் கண்டு பிடித்து அங்கு சென்ற போது அங்கு எங்களைத் தவிர யாருமில்லை.

இன்று நிலைமை முற்றாக மாறியுள்ளது. ஐரோப்பிய ஆணையத் தலைவர் ழீன் க்ளாட் ஜுங்கர், ஜெர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சித் தலைவர் ஆன்ட்ரி நேல்ஸ் உட்பட ஐரோப்பிய அரசியல்வாதிகள் பலரும் இன்று அங்கு சீன அரசால் அன்புடன் அளிக்கப்பட்ட 5.5 மீ உயரமுள்ள கார்ல் மார்க்சின் சிலையடியில் நின்று உரையாற்றிக் கொண்டுள்ளனர். வலதுசாரி கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் தலைவரான ஆங்கெலா மெர்கல் உட்பட சீன அரசு உவந்தளித்த இந்தச் சிலையை வரவேற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.

ட்ரையர் நகரத்தின் சமூக ஜனநாயகக் கட்சி மேயர் லெய்ப் ட்ரையர், “முப்பதாண்டுகளுக்கு முன் இது சாத்தியமே இல்லை…. எனினும் ஜெர்மன் ஜனநாயகக் குடியரசிற்கும் சோஷலிசத்திற்குமான இடைவெளி அதிகமாக உள்ள சூழலில் மார்க்சுடன் உரையாட இது சரியான  தருணம்” எனக் கூறியுள்ளார்.

இன்று மிக அதிகமாக விற்பனையாகும் நூற்களில் ஒன்று மார்க்சின் டாஸ் கேபிடல் என ‘கார்டியன்’ இதழ் எழுதுகிறது. மார்ஸ் குறித்த பல வாழ்க்கை வரலாற்று நூல்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என மார்க்சின் கருத்துக்கள் கொண்டாடப் படுகின்றன.  சென்ற ஞாயிறன்று வலதுசாரி பூர்ஷ்வா இதழான Frankfurter Allgemeine Zeitung முதற் பக்கத்தில்  மார்க்ஸின் படத்தோடு அவரது முக்கிய மேற்கோள்களையும் வெளியிட்டு இருந்தது. Süddeutsche Zeitung எனும் இதழின் முன்னாள் ஆசிரியரும் மார்க்சின் தத்துவப் பார்வை குறித்த ஒரு சமீபத்திய நூலை எழுதியவருமான தாமஸ் ஸ்டெய்ன்ஃபீல்ட், “2008 பொருளாதார நெருக்கடிக்குப் பின் மார்க்சிய அணுகல்முறைக்கு மிகப்  பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய பொருளாதார அமைப்பு பிரச்சினை இல்லாமல் செயல்படும் போது மட்டுமே நம்முடைய பொருளாதார நிபுணர்களால் அதை விளக்க முடிகிறது. ஆனால் பிரச்சினைகள் ஏற்படும்போது அவற்றை அவர்களால் எதிர்கொள்ள இயலவில்லை” என்கிறார். அதோடு, “எல்லாவற்றையும் மதப் பின்புலத்திலும் புனித ஒழுங்குகளின் (divine order) அடிப்படையிலும் விளங்கிக் கொள்வதற்கு இது மத்திய காலம் (middle age) அல்ல. முதலாளித்துவ உறவுகள் மத்தியிலேயே நாம் இன்று வாழ்கிறோம். முதலாளிய இயக்கம் பற்றிய அறிவின் ஊடாகவே நாம் இன்று நம்மை விளங்கிக் கொள்ள முடியும். அந்த வகையில் மார்க்சை நோக்கித் திரும்புவது இன்று தவிர்க்க இயலாததது” – எனவும் அவர் கூறுவது கவனத்துக்குரியது.

இடதுசாரிக் கட்சிகளில் ஒன்றான ‘டை லின்க்’ கட்சியைச் சேர்ந்த டயட்டர் கோவாலிக் சொல்லுகையில், “மார்க்ஸை வாசிப்பதைப் பொருத்தமட்டில் மேற்கு ஜெர்மனி கிழக்கு ஜெர்மனியைக் காட்டிலும் முற்போக்காக உள்ளது” என்கிறார்.

மேற்கு ஜெர்மனி இது வரையிலும் முதலாளியப் பொருளாதாரம் மற்றும் முதலாளிய ஜனநாயகம் ஆகியவற்றை முன்னிறுத்திய ஆட்சிகளின் கீழ் இருந்தது. கிழக்கு ஜெர்மனி சோவியத்தின் வீழ்ச்சி வரை சோவியத் பாணி “சோஷலிச ஆட்சி”யின் கீழ் இருந்தது. மேற்கு ஜெர்மனி மார்க்சைக் கற்றுக் கொள்ள தயாராக இருப்பதையும், கிழக்கு ஜெர்மனி அதற்குத் தயாராக இல்லாத நிலையையும் நாம் இந்தப் பின்னணியில் கவனம் கொள்ள வேண்டும்.

m 1இது கிழக்கு ஜெர்மனிக்கு மட்டும் பொருந்துவதல்ல. உல்கெங்கிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளால் கட்டமைக்கப்பட்ட சோஷலிசக் கட்டுமானங்களின் கீழ் வாழ நேர்ந்த மக்கள் எல்லோரது நிலையும் இன்று இதுதான். அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆளுகைகளை மறு பரிசீலனை செய்யத் தயாராக இல்லை. இது எப்படி நேர்ந்தது?

சோஷலிசமாக ரஷ்ய – சீன பாணிகளில் கட்டமைக்கப்பட்ட அரசியலும் பொருளாதாரமும் மார்க்சின் ஆழமான தத்துவப் பார்வைகளைச் சரியாகப் புரிந்து கொண்டு அதன்படி செயல்படுத்தப்பட்டவை அல்ல. மார்க்சின் பெயரைச் சொல்லிக் கொண்டு அவர்கள் மேற்கொண்ட பல மார்க்சிய விரோதப் போக்குகள்தான் இன்று மார்க்ஸ் மீதும், மார்க்சீயத் தத்துவத்தின் மீதுமான வெறுப்பாக மக்கள் மத்தியில் வேர் கொண்டுள்ளது..  பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரம் எனும் ஒரு அபத்தப் பெயரின் கீழ் அவை முற்றிலும் ஜனநாயகமற்ற ஆட்சிகளாக (totalitarian regimes) ஆயின. ஸ்டாலின் அல்லது போல்பாட் போன்ற ஆட்சியாளர்கள் மட்டுமல்ல. ப்ளெகானோவ், லெனின், மாஓ… யாரும் மார்க்ஸை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் எல்லோரும் மார்க்சின் பெயராலும், மார்க்சீயத்தின் பெயராலுமே எல்லாவற்றையும், எல்லாத் தவறுகளையும் செய்தார்கள்.

தீவிர மார்க்சியராகத் தம்மைச் சொல்லிக் கொள்ளும் பலரும் மார்க்சின் பிரதிகளை நேருக்கு நேர் வாசித்துப் புரிந்துகொள்ளும் திராணி அற்றவர்களாகவே இருந்தனர், இருக்கின்றனர். அதற்குக் காரணங்கள் இர்ண்டு, மார்க்ஸ் காலத்திய அரசியல் மற்றும் தத்துவ விவாதங்கள் குறித்த வாசிப்பவர்களின் புரிதலின்மை என்பது ஒன்று. ‘பதினெட்டாவது புருமேர்’ என்பதை ஒரு மன்னரின் பெயராகப் புரிந்து கொண்டு எழுதியவர்கள் இங்குண்டு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மற்றது கார்ல் மார்க்சை எளிமையான சில வாய்ப்பாடுகளை நமக்குச் சொன்னவராகப் புரிந்து கொண்டு அவரது சிந்தனைகளை விதிகளாகச் சுருக்கிப் பட்டியலிட்டுப் புரிந்து கொண்டது. நமது எல்லா தினசரிப் பிரச்சினைகளுக்கும் மார்க்ஸ் விடை சொல்வார் என நம்பியது. இல்லாவிட்டால் இயங்கியல் முறையில் மீன் பிடிப்பது பற்றியெல்லாம் மாஓவின் பெயரால் இங்கு சொல்லாடல்கள் உருப்பெற்றிருக்க முடியுமா?

மார்க்சின் எந்த ஒரு எழுத்தையும் நம்மால் ஏன் அவ்வளவு எளிதாகப் புரிந்து கொள்ள இயலவில்லை? ஏன் அவரது எழுத்துக்கள் மிகவும் சிக்கலாகத் தோன்றுகின்றன? தன்னிடம் எல்லாக் கேள்விகளுக்கும் எளிய விடைகள் இல்லை என்பதை அவர் உணர்ந்திருந்ததுதான் அவை சிக்கலாக வெளீப்பட்டதன் அடிப்படை. பிரச்சினைகள் மிகவும் சிக்கலானவை என்பதை அவர் ஏற்றுக் கொண்டிருந்தார்.

மனிதர்கள் சுதந்திரமாகச் சிந்திக்கக் கூடியவர்கள். சிந்திக்க வேண்டியவர்கள் என்பதை அவர் உணர்ந்திருந்ததன் விளைவே தொழிலாளிவர்க்கம் அதன் பிரச்சினைகளை அதுவே தீர்த்துக் கொள்ளத் தகுதியானது என அவர் சொன்னதன் பின்னணி.

“நான் மார்க்சிஸ்ட் அல்ல” என மார்க்ஸ் ஒருமுறை சொன்னதாகச் சொல்வார்கள். மார்க்சிஸ்ட் என்கிற சொல்லின் ஊடாக இங்கு கட்டமைக்கப்பட்டுள்ள மொத்தத்துவக் கருத்தியலைக் கண்டு அவர் கொண்ட அச்சமே இந்தக் கூற்றின் அடிப்படை. அவர் ஒரு தத்துவ ஞானி. அப்படிச் சொல்வது அவரை மக்களிடமிருந்தோ அல்லது. அரசியலிலிருந்தோ பிரித்து நிறுத்துவது அல்ல. அவர் மற்ற தத்துவ ஞானிகளிடமிருந்து வேறுபட்டவர் என்பது யாருக்கும் தெரியும். ஆனால் அடிப்படையில் ஒரு philosopher  என்பதை நாம் மனதிற் கொண்டே அவரை நாம் அணுக வேண்டும். அவரது ஆக எளிய அரசியல் பிரகடனமான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையையும் கூட நாம் ஒரு தத்துவ ஆசிரியன் எழுதிய அரசியற் கையேடு என்கிற அடிப்படையிலேயே அணுக வேண்டும்.

0f21fe8e-3faf-11e8-b6d9-57447a4b43e5-1280x720-161305ஒரு கட்சியின் அறிக்கை என்பது நிகழ் காலத்தைச் சுட்டிக் காட்டி, அதைக் கடந்து எதிர்காலத்தை முன் ஊகித்துச் சொல்வதாக இருக்க வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு மார்க்சும் எங்கல்சும் எழுதிய இந்த அறிக்கைதான். மார்க்ஸ் காலத்தில் (1840 கள்) முதலாளியம் அப்போதுதான் உருப்பெற்று, நிலை கொள்ள எத்தனித்து, அம்முயற்சியில் தடுமாறிக் கொண்டிருந்தது. ஆனால் அப்போதே அது எதிர்காலத்தில் எத்தகைய நிலையை எடுக்கும், எப்படியெல்லாம் வேர்பரப்பும் என்பதை விரிவாகவும் சரியாகவும் சுட்டிக்காட்டியது மார்க்ஸ் – எங்கல்சின் அந்த அறிக்கை. இன்று அது உலகமயமாகியிருக்கிறது, நிதிமூலதன மயமாகியுள்ளது. அது தொடாத இடமில்லை; கால் பாவாத பகுதியில்லை.

“nestle everywhere, settle everywhere, establish connexions everywhere” என அறிக்கை சொன்னதை 1970 களில் மார்க்சியர்களிலேயே சிலர் எதிர்த்தனர். மூன்றாம் உலக நாடுகளில் இது எப்படிச் சாத்தியம்? ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் என்கிற முதலாளிய நகர் மையங்களைத் (metropolis) தாண்டி இதெல்லாம் சாத்தியமா எனக் கேட்டனர். ஆனால் 1991 க்குப் பின் அது சாத்தியமாகியுள்ளதற்கு நாம் இன்று சாட்சிகளாக நிற்கிறோம்.

“உலகச் சந்தையின் மீதான சுரண்டல் ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறும் உற்பத்தி மற்றும் நுகர்வுக்கு ஒரு உலகளாவிய தன்மையை அளிக்கும்” (“exploitation of the world-market” would give “a cosmopolitan character to production and consumption in every country”).  என்று அறிக்கை சொன்னதை இடதுசாரிகளே ஐயத்துடன் நோக்கிய காலம் ஒன்றும் இருந்ததுதானே. ஒவ்வொரு நாட்டிலும் இன்று எல்லா உற்பத்தியும் நடக்கிறது; நுகர்வும் நடக்கிறது. ஆனால் அவை உண்மையில் அந்தந்த நாட்டு உற்பத்திகளா? எனினும் உற்பத்தி ஒரு உலகளாவிய நிலையை எடுத்ததாகத் தோற்றம் கொள்ளவில்லையா? இன்று சுமார் 20 இலட்சம் இந்திய / சீனத் தொழிலாளிகள் உலக உழைப்புச் சந்தையில் மிதந்து கொண்டிருக்க வில்லையா? மூலதனம் உலகமயமாவதற்கிருந்த ஒரே தடையான சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் தகர்க்கப்பட்டு இன்று உலகச் சந்தையில் அங்கமாக்கப்படவில்லையா? தகர்க்கப் படாமலேயே இன்று சீனம் உலகச் சந்தையில் அங்கமாக்கப்படவில்லையா?

அறிக்கை எழுதப்பட்ட காலத்தில் நிலப்பிரபுத்துவ வாழ்வின் அடிநாதமான வழமைகளைத் துடைத்தெறியும் ஆற்றல் மிக்க முகமையாக இருந்தது நீராவி எந்திரங்கள்தான். தொழில் முதலாளிகள், பெரு வணிகர்கள் என்கிற புதிய வர்க்கங்கள் நிலப்பிரபுக்களின் இருப்பையும் ஆதிக்கத்தையும் தகர்த்தெறிந்து சமூக ஆதிக்கத்தையும் தம் வயமாக்கிக் கொண்டன. இன்று செயற்கை நுண்ணறிவும் தானியங்கிகளும் (artificial intelligence and automation) அத்தகைய அச்சத்திற்குரிய முகமைகளாக ஆகவில்லையா? “எல்லா நிரந்தரமான, உறைந்த உறவுகளையும் துடைத்தெறிந்து தொடர்ந்து உற்பத்திசக்திகள் புரட்சிகரமயமாகும்” என அறிக்கை சொன்னதை நாம் இன்று கண்முன் காணவில்லையா?  – “உற்பத்தி தொடர்ந்து புரட்சிகரமாகும்; எல்லாச் சமூக எதார்த்தங்களும் தொடர்ந்து அலைக்கழிக்கப்படும்; தொடர்ந்த உறுதியின்மை, குழப்பங்கள் என்பனதான் இனி எதிர்காலமாக அமையும்” என அறிக்கை அன்று சொன்னதைத்தானே – “constant revolutionising of production, uninterrupted disturbance of all social conditions, everlasting uncertainty and agitation”-  இன்று நாம் அனுபவித்துக் கொண்டுள்ளோம்.

மார்க்ஸ் இவ்ற்றை எல்லாம் நல்ல ‘சகுனங்களாகவே’ கண்டார். இவை மிகப் பெரிய அதிருப்தியை உருவாக்கும்; அது இந்த அமைப்பைக் கவிழ்க்கும் என்றார். “கண்முன் உறுதியாக இருந்தவை எல்லாம் உருகிக் காற்றில் கரையும். புனிதமாகத் தோற்றம் காட்டியவை எல்லாம் அசிங்கமானவைகளாகத் தோற்றம் கலையும்” என்கிறது அறிக்கை. “மிகவும் மோசமான ஏழ்மை என்கிற நிலையிலிருந்து ஒப்பீட்டளவிலான ஏழ்மை என்கிற நிலைக்கு முன்னேறியுள்ளோமே” என அவர்கள் சமாளித்த போதிலும், தாங்கமுடியாத அசமத்துவம், கொடூரமான பேராசை, பருவநிலை மாற்றம். வங்கி மூலதனங்களும் பெரும் பண முதலைகளும் நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தை வசப்படுத்திக் கேலிக்கூறாக ஆக்கியுள்ளமை ஆகியவைதானே இன்று எதார்த்தமாக உள்ளன?

அறிக்கையைத் தெளிவாக வாசித்திருப்பவர்களுக்கு இந்த மாற்றங்கள் எல்லாம் அப்படி ஒன்றும் வியப்பளிக்கக் கூடியவை அல்ல. எல்லாம் எதிர்பார்த்தவைதான். “ஒட்டு மொத்தமான சமூகமும் எதிர் எதிரான இரு முகாம்களாகப் பிரிந்து ஒன்றை ஒன்று நேரடியாக எதிர்கொண்டு நிற்கும்” என்பதும் அறிக்கை நமக்குச் சொன்னதுதானே. உற்பத்தி என்பது மேலும் மேலும் எந்திரமயமாகிறது. சமகால நாகரீகத்தை இயக்கும் விசையாக மேலும் மேலும் லாபம் எனும் கார்பொரேட் வெறி பூதாகரமாக உருப்பெறுகிறது. சமூகம் நேர் எதிர் எதிரான சக்திகளாகப் பிளவுண்டு நிற்கிறது. இடையில் சிக்கிய மத்தியதர வர்க்கத்திற்கு அழிவே விதியாகப் போகிறது.
(தொடரும் – அடுத்த இதழில் இந்தியாவைப் பற்றி மார்க்ஸ்)