(தோழர் நா.சண்முகதாசன் 20ம் நினைவுநாள் பேருரை)
இலங்கைப் புரட்சிகர இயக்கத்தின் முன்னோடித் தலைவரான தோழர் நா.சண்முகதாசன் அவர்களின் 20ம் நினைவு நாள் பேருரையை அளிக்கும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டதை மிகப் பெரிய பெருமையாகக் கருதுகிறே.ன். மார்க்சியக் கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையத் தொழர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தோழர் சண்முகதாசனின் வாழ்க்கை (1919 – 93) உலகக் கம்யூனிச இயக்கத்தின் மிக முக்கியமான ஒரு காலகட்டத்துடன் இணையாக அமைந்த ஒன்று. உலக அளவில் மட்டுமின்றி இலங்கைப் பொதுவுடமை இயக்கத்தின் வரலாற்றிலும் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த அவர் இடதுசாரி இயக்கத்திற்கும், அரசியலுக்கும், சிந்தனைகளுக்கும் ஆற்றிய பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கன. ஒரே நேரத்தில் பொதுவுடமை இயக்கத்தை வழி நடத்துபவராகவும், தொழிற்சங்க முன்னோடியாகவும் மட்டுமின்றி மார்க்சீயக் கருத்தியல் தளத்தில் நின்று இலங்கையின் வரலாற்றையும் பண்பாட்டையும் விளக்கிய மிகச் சிறந்த ஒரு இடதுசாரி அறிஞராகவும் விளங்கியவர் அவர். அந்த வகையில் சென்ற நூற்றாண்டில் கட்சித் தலைவராக மட்டுமின்றி கருத்தியல் தளத்திலும் ஆழத் துறை போகி அரசியல் மற்றும் பண்பாட்டுச் சிக்கல்களை விளக்கி வழிகாட்டிய தோழர்கள் டோக்ளியாட்டி (இத்தாலி), ஹோ சி மின் (வியட்நாம்), மாரிஸ் தோரெஸ் (ஃப்ரான்சு), மாஓ (சீனம்), பி.சி.ஜோஷி (இந்தியா) ஆகியோரைப்போல ஒரே நேரத்தில் இயக்கத்திற்குத் தலைமையை அளிக்கத் தக்கவராகவும், அரசியல் சிக்கல்களுக்கு விளக்கம் அளித்து வழிநடத்தும் தகைமையைப் பெற்றவராகவும் தோழர் சண் அவர்கள் விளங்கினார்கள்.
தொண்ணூறுகளில் சோஷலிச நாடுகளில் ஏற்பட்ட சரிவுகளுக்குப் பின் இதுகாறும் கூடுதலாகக் கவனம் அளிப்பதற்குத் தவறிய பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்தப்பட வெண்டியதன் அவசியங்கள் பற்றிய பேச்சு இன்று உருவாகியுள்ளது. இறுக்கமான வர்க்க அடிப்படையிலிருந்து மட்டுமே சமூக முரண்களை அணுகுவதைத் தாண்டி, பொருளாதாரத்திற்கு அப்பாற்பட்டும் ஏற்றத் தாழ்வுகளும், சுரண்டல்களும், சமத்துவமின்மைகளும் சாத்தியம் என்பதில் கவனம் செலுத்த வேண்டிய நிலை இன்று உலகப் பொதுவுடமை இயக்கங்களுக்கு ஏற்பட்டுள்ளதை அறிவோம். அந்த வகையில் தமிழ்ச் சமூகங்களுக்கே உரித்தான சாதிய முரணையும், தீண்டாமைக் கொடுமையையும் கணக்கில் எடுத்துக்கொண்ட வகையில் இந்தியப் பொதுவுடமை இயக்கங்களுக்கு தோழர் சண் ஒரு முன்னோடியாக விளங்கினார் என்பது மிகையாகாது.
ஒரே நேரத்தில் இலங்கை வரலாற்றையும், சீனப் பாதையில் ஏற்பட்ட வழி விலகல்களையும், சுற்றுச் சூழல் முக்கியம் குறித்தும், முக்கிய அண்டை நாடான இந்தியாவில் உருவான முஸ்லிம் தனிநபர் சட்டம் குறித்த விவாதம் பற்றியும், இலங்கையில் இந்திய வம்சாவழியினருக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதி குறித்தும், இலங்கைச் சிறுபான்மையோரின் உரிமைகள் குறித்து லெனாட் வூல்ஃபின் கருத்துகள் குறித்தும் மார்க்சிய அறிவுடையோர் மட்டுமின்றி, பரந்துபட்ட வாசகர்களும் படித்துப் பயனடையும் வண்ணம் உடனுக்குடன் கருத்துச் சொல்லத் தக்கவராக அவர் இருந்தார்.
1983 யூலைக் கலவரத்தை ஒட்டி அவர் தமிழகம் வந்திருந்ததும் அப்போது அவர் தங்கியிருந்த விடுதியிலேயே ஒரு அறைக் கூட்டம் ஒன்றை நாங்கள் ஏற்பாடு செய்து, அதில் அவர் உரையாற்றியதும் எனக்கு நினைவுக்கு வருகிறது, தலித் இலக்கிய முன்னோடி கே.டானியல் அவர்களின் மூலம் எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசாகத் தோழர் சண் அவர்களின் அறிமுகம் அமைந்ததை இச் சந்தர்ப்பத்தில் மகிழ்ச்சியோடு நினைவு கூர்கிறேன்.
### ### ### ### ### ###
இடதுசாரி இயக்கங்கள் எதிர்கொள்ளும் சமகாலச் சவால்கள்
பின்னணி
பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவாகித் திரட்சி பெற்ற மார்க்க்சீயக் கோட்பாடுகளின் அடியாக, இருபதாம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை முயற்சிகளான சோவியத், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோஷலிசக் கட்டுமான முயற்சிகள் சென்ற நுற்றாண்டின் இறுதியில் கடும் பின்னடைவுக்கு உள்ளாயின. முதலாளிய நாடுகளில் இருந்த அளவிற்குப் பெரிய ஏற்றத் தாழ்வுகள் இல்லாமலும் ஓரளவு அடிப்படை வசதிகள் அனைவருக்கும் பூர்த்தி செய்யப்பட்ட சமூகங்களாகவும் அவை அமைந்தபோதும் சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய ‘சோஷலிச’ அரசுகள் பொலபொலவென உதிர்ந்தன.
இப்படியானதில் உலக ஏகாதிபத்தியங்களுக்குப் பெரும் பங்கு உண்டென்றபோதிலும், அவ்வவ் நாட்டு மக்களால் வெறுக்கப்படும் அரசுகளாகவும் இவை அமைந்திருந்தன என்பதை யாரும் மறுக்க இயலாது. ருமேனியா முதலான கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கொதித்தெழுந்த மக்களே அவ்வாட்சிகளைத் தூக்கி எறிந்தனர். ரசியா போன்ற நாடுகள் இத்தகைய எதிர்ப்புகளை முன்னூகித்துத் தம்மை முதலாளிய சனநாயகப் பாதைக்குத் திரும்பிய நாடுகளாக அறிவித்துக் கொண்டன. நமக்கெல்லாம் பெரும் நம்பிக்கையை அளித்துக் கொண்டிருந்த சீனமோ கடும் அடக்குமுறைகளினூடாக எதிர்ப்பைச் சமாளித்தது. அந்நிய முதலீடுகளை அநுமதித்தல். ஏற்றுமதிப் பொருளாதாரம், உலக முதலாளிய அமைப்புகளில் அங்கமாதால் என்கிற வகைகளில் ‘தேசியச் சுய மைய வளர்ச்சி’ (National Auto centric Development) என்கிற நிலையிலிருந்து விலகி உலக முதலாளிய வலைப் பின்னலில் இன்று அது ஒரு குறிப்பிட்ட அளவு தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. நிகிதா குருஷ்சேவ் இன்று இல்லையாயினும் அவரது உலக முதலாளியத்துடன் ‘சமாதானச் சகவாழ்வு’ எனும் கொள்கையை நடைமுறைப்படுத்தும் நாடாக இன்று அது உள்ளது. அரசால் வழிநடத்தப்படும் முதலாளிய அரசு என்கிற அளவிற்கே இன்று நம்மால் அதை மதிப்பிடமுடிகிறது.
எஞ்சியுள்ள லத்தீன் அமெரிக்கச் சோஷலிச முயற்சிகள் சென்ற நூற்றாண்டுச் சோஷலிச முயற்சிகளிலிருந்துப் பெரிதும் விலகி நிற்கின்றன. இது குறித்துச் சற்றுப் பின் விரிவாகக் காண்போம்.
சென்ற நூற்றாண்டுச் சோஷலிச முயற்சிகளின் வீழ்ச்சி உலகெங்கிலுமுள்ள மார்க்சீயர்கள் மத்தியில் ஏற்படுத்திய அதிர்ச்சியைச் சொல்லத் தேவையில்லை. ஓரளவு இதை எதிர்பர்த்தவர்களுக்கும் கூட இது பெரிய அதிர்ச்சியாகத்தான் இருந்தது. சென்ற ஒன்றரை நூற்றாண்டு காலமாகவே ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொண்டு மார்க்சியத்திற்குக் கல்லறை வாசகங்களை அவ்வப்போது எழுத முயற்சித்துக் கொண்டிருந்த உலக முதலளியம் இதைப் பெரிய அளவில் பயன்படுத்திக் கொண்டது. மார்க்சியம் காலாவதி ஆகிவிட்டது எனவும், சோஷலிச முயற்சிகள் சாத்தியமில்லாதவை எனவும், சோஷலிசமும் ஜானநாயகமும் ஒன்றாகவே இருக்க இயலாது எனவும், சந்தைப் பொருளாதாரமே எல்லாப் பிரசினைகளுக்கும் தீர்வு எனவும் சொல்லாடல்கள் உலகமெங்கும் விரிக்கப்பட்டன. ஓரளவு திட்டமிட்டப் பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்த இந்தியா முதலான நாடுகள் விரைந்து தம் பொருளாதாரத்தையும் சந்தையையும் திறந்துவிட்டன, சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சி பொருளாதாரத்தில் மட்டுமின்றி உலக அரசியலிலும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியது.
பல நாடுகளில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதை ஒட்டி மார்க்சீய நெறிமுறைகளாக அறியப்பட்ட பல்வேறு அம்சங்களைக் கைவிட்டதாக வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் காட்டிகொண்டன. எடுத்துக்காட்டாகப் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்கிற கோட்பாட்டைத் தம் திட்டங்களிலிருந்து இத்தாலி உட்படச் சில நாட்டுக் கட்சிகள் நீக்கிக் கொண்டதாகச் அறிவித்ததைச் சொல்லலாம். அதைத் தொடர்ந்து,
முதலாளியக் கட்டுமானம் = சந்தைப் பொருளாதாரம் = ஜனநாயகம் எனவும்,
சோஷலிசக் கட்டுமானம் = மையப்படுத்தப்பட்ட திட்டமிடுதல் = அதிகார வர்க்க மயமாதல் = ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டுதல் என்பதாகவும்
புரிந்து கொள்ளக் கூடிய நிலை இன்று உலகமெங்கிலும் ஏற்பட்டுள்ளது. மார்க்சீயர்களாகிய நாம் சந்தித்துக் கொண்டுள்ள மிகப் பெரிய நெருக்கடி இது.
சோஷலிசக் கட்டுமான முயற்சிகள் தோல்வியுற்றன எனக் குரல் எழுப்புகிற யாரும் அதைத் தர்க்கபூர்வமாக நிறுவிவிடவில்லை என்பது குறீப்பிடத்தக்கது. முதலளியத்தின் தவிர்க்க இயலாத நெருக்கடிகள் குறித்து மார்க்சியம் இதுவரை முன்வைத்துள்ள கோட்பாடுகள் எதற்கும் இவர்கள் யாரும் பதிலளிக்கவில்லை. மார்க்சீயம் முன் ஊகித்த இந்த நெருக்கடிகளை முதலாளியம் இன்று சந்தித்துக் கொண்டிருப்பதைக் கண்முன் நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். சென்ற நூற்றாண்டுப் பொருளாதாரச் சரிவுகளை அது சமாளித்ததைப்போலச் சமீபத்திய நெருக்கடிகளை அது சமாளிக்க இயலாமல் திணறுவதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அந்த வகையில் இன்று மேலைச் சமூகங்களில் மார்க்சீயக் கோட்பாடுகளின்பால் மீண்டும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதையும் பார்க்கிறோம்.
பொதுவுடமைத் திட்டமும் மார்க்சீயமும் காலாவதியாகிவிட்டன எனச் சொல்பவர்கள் திரும்பத் திரும்பச் சுட்டிக் காட்டுகிற ஒரே ஆதாரம் புரட்சிக்குப் பிந்திய சமுதாயங்களில் சென்ற நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட நெருக்கடிகள் மட்டுமே. இவை சோஷலிசக் கட்டுமானம் குறித்த சில அடிப்படைப் பிரச்சினைகளை எழுப்பியுள்ளன என்பதை நாமும் மறுக்கவில்லை. ஆனால் இந்த அடிப்படையில் பொதுவுடமை என்கிற கோட்பாடும் மார்க்சியம் என்கிற தத்துவமும் காலாவதியாகிவிட்டன என்பதில் எந்தப் பொருளும் இல்லை. மார்க்சியம் என்பது புரட்சிக்குப் பிந்திய சமுதாயங்கள் குறித்த ஒரு அறிவியல் அல்ல. அதன் பல்வேறு பரிமாணங்களில் இது ஒன்று என வேண்டுமானால் சொல்லலாம். முதலாளியச் சமூகத்தின் இயக்க விதிகளைக் கண்டறிவதெ மார்க்சின் பிரதான பணியாக இருந்தது. எதிர்காலச் சமூகம் குறித்த துல்லியமான வரையறை எதையும் உருவாக்குவதில் அவர் ஆர்வம் காட்டவுமில்லை. “வர்க்க சமூகத்தில் மனிதனிடமிருந்து பறிக்கப்பட்ட முழுமையான மனிதாயம் மீண்டும் அவனுக்குக் கையளிக்கப்படும்” என்பது போன்ற தத்துவச் செறிவுள்ள வாசகங்களையே மார்க்ஸ் இது குறித்து உதிர்த்துள்ளார்.
தவிரவும் பு.பி சமுதாயங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாகக் கட்டமைக்கப்பட்டதில்லை. நாட்டுக்கு நாடு முயற்சிகள் வேறுபட்டன. எந்த அளவிற்கு இவை எல்லாமும் மார்க்சியப் பாதையில் சென்றன என்பதும் கேள்விக்குறிதான். தோழர் சண் உட்பட மாஓயிஸ்டுகள் யாரும் ரசியாவைச் சோஷலிசச் சமுதாயமாக ஏற்றுக் கொண்டதில்லை. இத்தகைய சமூகங்களில் எற்பட்ட நெருக்கடிகளை மார்க்சீயம் மற்றும் சோஷலிச நிர்மாண முயற்சிகளின் தோல்வியாகச் சொல்வது நியாயமான வாதமல்ல.
தவிரவும் இவர்களின் இந்த வாதத்தின் இன்னொரு பக்கமான முதலாளியக் கட்டுமானங்கள் வெற்றி பெற்றுவிட்டன என்பதிலும் எந்தப் பொருளும் இல்லை. முதலாளியம் என்றால் அது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் மட்டுமல்ல. அங்கெல்லாமும் கூட இன்று முதலாளியப் பொருளாதாரமும் சமூகமும் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன. இந்தியா, இலங்கை, வங்கதேசம், கானா… எல்லாமும் கூட முதலாளிய நாடுகள்தான். கடும் ஏற்றத்தாழ்வுகளும், வறுமையும், ஒடுக்குமுறையும் உள்ள நாடுகள்தான். சோஷலிச முயற்சிகளில் ஊழல், அதிகாரத்துவம், அடிப்படை உரிமைகள் மறுப்பு என்பன பரவலாக இருந்தது உண்மைதான். ஆனால் இந்த அம்சங்களில் முதளாளிய நாடுகள் பலவற்றில் நிலைமை இன்னும் மோசம் என்பதை யார் மறுக்க முடியும்? முதலாளிய ஜனநாயகம் என்பது வெறும் “முதலாளிய” ஜனநாயகம் மட்டுமே. அது உண்மையான ஜனநாயகம் ஆகாது என்பதை மார்க்சியம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளது. சோஷலிச முயற்சிகளில் பட்டினிச் சாவுகள் இருந்ததில்லையே. சோஷலிச முயற்சிகளின் அடிப்படையான மையப்படுத்தப்பட்ட திட்டமிடுதலைத் தவிர்த்தலும், முதலாளியப் பொருளாதாரத்திற்குரிய சந்தைப் பொருளாதாரத்தையும் தனிச்சொத்துரிமையையும் அடிப்படையாகக் கொள்வதும் எந்த விதத்திலும் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட வாழ்விற்கு உத்தரவாதமாகிவிடாது என்பதற்கு தென் ஆப்ரிக்கா, சிலி, ஈரான், மார்கோசின் பிலிப்பைன்ஸ், மியான்மர் முதலான ஏராளமான நாடுகள் எடுத்துக் காட்டுகள் இல்லையா? சோஷலிச முயற்சிகள் சந்தித்த அனைத்து நெருக்கடிகளையும் இதனினும் அதிக அளவில் முதலாளிய நாடுகள் சந்தித்துக் கொண்டுள்ளன என்பதே உண்மை.
ஏகாதிபத்தியங்களின் கொள்ளைக் காடாக மாறுகிற சாத்தியத்தை மறுத்த ஒரு வளர்ச்சிப்பாதையை இந்தியா, இலங்கை முதலான விளிம்பு நாடுகளுக்குத் தந்துவிட இயலும் என எந்த ஒரு முதாலாளியப் பொருளாதார வல்லுனராவது முதலாளியத்தைப் பரிந்துரைப்பாரா? இத்தகைய வளர்ச்சிப் பாதை ஏகாதிபத்தியங்களுக்கும் அதன் உள்ளூர்த் தரகர்களுக்கும் மட்டுமே உகந்ததாக இருக்கும் என்பதை வரலாறும் நிரூபித்துள்ளதே. அதே நேரத்தில் கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் அனைவருக்கும் வழங்கப்படுதல், ஒப்பீட்டளவில் பெண்கள் விடுதலை பெற்றிருத்தல் போன்ற அம்சங்களில் புரட்சிக்குப் பிந்திய (பு.பி).சமூகங்கள் ஒப்பீட்டளவில் முன்னேறி இருந்ததை யரும் மறுக்க இயலாது.
இதை எல்லாம் சொல்லுவது சோஷலிச முயற்சிகளில் பிரச்சினைகளே இல்லை எனச் சொல்ல வருவதற்கல்ல. இருந்த பிரச்சினைகளை ஏற்றுக் கொள்வது இத்தகைய தவறுகளிலிருந்து மீள்வதற்கான முதல் நிபந்தனை என்கிற வகையில் அது குறித்துச் சிரிது காண்போம். சோஷலிசக் கட்டுமான முயற்சிகளின் பொதுப்படையான அம்சங்களாகச் சொல்லப்படுபவற்றைக் கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கொள்ளலாம்.
உற்பத்திச் சாதனங்களில் தனியுடைமையை ஒழிப்பது,
மையப்படுத்தப்பட்டத் திட்டமிடுதலின் கீழ் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி,
உலகமுதலாளிய அமைப்பிலிருந்து துண்டித்துக் கொள்ளுதல்,
இவற்றை நடைமுறைப்படுத்த கீழ்க்கண்ட வடிவங்கள் பு.பி.சமுதாயங்களில் மேற்கொள்ளப்பட்டன.
பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரம் என்கிற பொதுவுடைமைக் கட்சியின் மேலாண்மையிலான ஒரு கட்சி ஆட்சி முறை.. கருத்து வேறுபடுகளுக்கு இடமின்மை.
வர்க்க சர்வாதிகாரம் என்கிற வகையில் எல்லோருக்கும் சமமான அடிப்படை உரிமைகள் என்கிற கருத்தை மறுத்தல்.
முதலில் குறிப்பிடப்பட்ட மூன்றும் சோஷலிசச் சமுதாயத்தைக் கட்டமைப்பதற்கான அவசிய நிபந்தனைகள் (Necessary Conditions). ஆனால் அவை போதுமான நிபந்தனைகள் (Sufficient Conditions) ஆகா. ஏனெனில் சோஷலிசக் கட்டுமானத்தின் நோக்கம் (அ) நகரம்/கிராமம், தொழிலாளி/விவசாயி, மூளையுழைப்பு/ உடலுழைப்பு முதலானவற்றில் வேறுபாடுகளை ஒழித்து சுரண்டல்களை முடிவுக்குக் கொண்டு வருதல். (ஆ) உண்மையான அரசியல் மற்றும் சமூக ஜனநாயகத்தை நிறுவி சோஷலிசப் பண்பாட்டையும் அதனடிப்படையிலான புதிய மனிதரையும் உருவாக்குதல் என்பன.
உற்பத்திப் புள்ளியில் உற்பத்தியின் மீதும், சகலவிதமான கருத்துருவாக்க மற்றும் நிர்வாக நடைமுறைகளிலும் பாட்டாளி வர்க்கத்தின் ஆளுமையை நிறுவி அதை உண்மையான பொருளில் ஆளும் வர்க்கமாக வளர்த்தெடுத்தல் மூலமே இதை நிறைவேற்ற முடியும். அதற்குரிய வகையில் முதலாளிய நிறுவன வடிவங்களையும் மாற்றியமைக்க வேண்டும். அப்போதுதான் சோஷலிசத்திற்கான போதுமான நிபந்தனையை நாம் பூர்த்தி செய்ததாக ஆகும். பு.பி.சமுதாயங்கள் எதிலும் இந்த நிபந்தனை, அதாவது உற்பத்திப் புள்ளியில் உற்பத்தி சாதனங்களின் மீது பாட்டாளி வர்க்கத்தின் ஆளுமை நிறுவப்படவே இல்லை என்பதே பு.பி சமுதாயங்களின் தோல்விக்குக் கரணமாக அமைகிறது.
அப்படியானதற்கு நடைமுறைச் சோஷலிச முயற்சிகளின் தோல்விக்கு நாம் மேலே கண்ட 4 மற்றும் 5வது அம்சங்களே காரணமாகியுள்ளன என்பது இன்று பல கம்யூனிஸ்ட் கட்சிகளும் மார்க்சிய அறிஞர்களும் முன்வைக்கும் கருத்து. அந்த அடிப்படையில் சில பொதுவுடைமைக் கட்சிகள் இன்று பா.வ.சர்வாதிகாரம் என்கிற கோட்பாட்டைக் கைவிட்டுள்ளதை முன்பே குறிப்பிட்டேன். அப்படி வெளிப்படையாகக் கூறாத கட்சிகளும் கூட பா.வ சர்வாதிகாரத்தை ஆதரித்துப் பேசுவதில்லை. லந்தின் அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சிகள் பலவும் பல கட்சி ஆட்சி முறையையும், தேர்தல் அரசியலையும் ஏற்றுக் கொண்டுள்ளன.
சோஷலிச ஜனநாயகமானது முதலாளியச் ஜனநயகத்தைக் காட்டிலும் ஆழமானது என நாம் வாயளவில் சொல்லி வந்த போதிலும் நடைமுறை அப்படியாக இல்லை. கருத்து வேறுபடுகளுக்கு இடமில்லாமற் போனதும், கட்சியை எல்லாவற்றிற்கும் மேலாக வைத்ததும், உள்ளடக்கத்தை மாற்றினால் போதும் என அனைத்து அம்சங்களிலும் முதலாளிய வடிவங்களை அப்படியே ஏற்றுக் கொண்டதும் உற்பத்திப் புள்ளியில் உற்பத்தி சாதனங்களிலிருந்து .பாட்டாளி வர்க்கம் அந்நியப் பட்டிருக்கும் நிலை தொடர்வதற்கு மட்டுமல்ல, அதிகமாவதற்கும் காரணமாகியது. கிட்டத்தட்ட எல்லா சோஷலிச முயற்சிகளிலுமே அதிகாரத்துவம், ஊழல், அடக்குமுறை ஆகியன மலிந்திருந்தன. வடகொரியா போன்ற நாடுகளில் வாரிசு அரசியலும்கூடத் தலையெடுத்தது.
பு.பி சமுதாயங்களின் அனுபவங்களை ஒட்டி இன்றைய இடதுசாரி இயக்கங்கள் எதிர்கொண்டுள்ள முதல் சவால் இது, பா.வ. சர்வாதிகாரம் என்பதை நாம் முற்றாக மறுக்கப் போகிறோமா? இல்லை, கருத்து மாறுபாடுகள், உலகளாவிய அடிப்படை உரிமைகள் ஆகியவற்றிற்கு இடமளிக்கும் வகையில் நமது அணுகல் முறைகளை எவ்வாறு மாற்றி அமைக்கப் போகிறோம்?
எதார்த்தம்
உலகெங்கிலுமுள்ள பொதுவுடைமைக் கட்சிகள் சோவியத் அல்லது சீன வடிவங்களையே முன்மாதிரியாகக் கொண்டன. இன்று முன்மாதிரியாய்ச் சொல்ல சோவியத் யூனியன் இல்லை. சீனத்தை எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்வது என்பதில் எல்லாக் கட்சிகளுக்கும் குழப்பங்கள் உள்ளன, இந்திய மார்க்சிஸ்ட் கட்சி முதலானவை சீனத்தை விமர்சிக்காதபோதும் வெளிப்படையாக அதை சோஷலிச அரசாவும் ஏற்பதில்லை.
ஆனால் எதேனும் ஒரு கட்சியை முன்மாதிரியாகக் கொண்டு பழக்கப்பட்டுவிட்ட பொதுவுடமைக் கட்சிகளுக்கு இன்று நம்பிக்கை அளிக்கக் கூடியனவாக காஸ்ட்ரோவின் கியூபாவும் சாவேஸின் வெனிசுலாவும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பொலிவியா, ஈக்வடார் முதலிய லத்தீன் அமெரிக்க நாடுகளும் உள்ளன. ஆனால் இங்கும் பிரச்சினைகள் இல்லாமலில்லை. கியூபாவில் கடுமையான கருத்துச் சுதந்திர மறுப்பும் ஒடுக்குமுறைகளும் உள்ளன. சாவேசைச் சுற்றி உருவாகியுள்ள அதிகாரக் குழு பற்றிய விமர்சனங்கள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. கியூபாவில் கல்வி, மருத்துவம் போன்ற முக்கிய துறைகள் தன்னிறைவு பெற்றுள்ளபோதிலும் மிக அடிப்படையான வசதிகளும்கூட அங்கில்லை. சோவியத் உதவிகள் நின்றபின் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது. எனினும் நீண்ட கால அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளையும், கவிழ்ப்புச் சதிகளையும் எதிர்கொண்டு நிற்கிற வகையில் கியூபா மீது உள்ள மதிப்பும் வியப்பும் குறையவில்லை.
பிற லத்தீன் அமெரிக்க இடதுசாரிக் கட்சிகளைப் பொருத்தமட்டில் அவை அனைத்தும் மரபுவழிப்பட்ட இடதுசாரி முன்மாதிரிகளைக் கைவிட்டு பலகட்சி ஆட்சி முறையையும் தேர்தல் பாதையையும் ஏற்றுக் கொண்டுவிட்டன. எனினும் முழுமையான முதலாளியப் பொருளாதார வழிமுறைகளிலிருந்து அவை பல அம்சங்களில் விலகி நிற்கின்றன. லத்தீன் அமெரிக்க பிராந்திய ஒற்றுமையை வலுப்படுத்தி ஏகாதிபத்தியங்களை முற்றிலும் சார்ந்திராமலும், பொருளாதாரத்தை முற்றிலும் திறந்து விடாமலும் ஒரு இடது சாய்வு நிலையைத் தக்கவைத்துள்ளன. “நமது அமெரிக்க மக்களுக்கான பொலிவியக் கூட்டணி” (ALBA) இந்த வகையில் முக்கியமான ஒன்று.
இந்த நாடுகளில் குவிந்துள்ள நிலத்தடி எண்ணையும் கனிம வளமும் இவற்றின் முயற்சிக்குக் கைகொடுக்கின்றன, இந்த அடிப்படையில் இவை வெளிநாட்டுச் சொத்துக்களைத் தேசவுடைமை ஆக்குவது போன்ற முயற்சிகளை மேற்கொள்ளும்போது சொத்திழந்த நாடுகள் கடும் எதிர்ப்புகளைக் காட்ட முடிவதில்லை. பெரிய அளவிலான இலக்கு நோக்கிய சமூக நலத் திட்டங்கள் (targeted social welfare measures) குறிப்பிட்ட அளவிற்கு ஏற்றத் தாழ்வுகளைக் குறைத்துள்ளன. இதன் விளைவாக மீண்டும் மீண்டும் இந்த இடதுசாரிக் கட்சிகள் தேர்தல்களில் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. பணவீக்கம், Currency stability போன்ற பிரச்சினைகள் இருந்தபோதிலும் வறுமை எண் முதலியன குறைந்துள்ளன. சாவேஸ் அரசு தன் எண்ணை வளத்திற்கு மாற்றீடாக கியூப மருத்துவ நிபுணர்கள், தாதிகள் ஆகியோரின் சேவையைப் பெற்று மக்களுக்கு சிறந்த மருத்துவ வசதி கிடைக்க வழி வகுத்துள்ளது.
இந்த நாடுகள் முன்வைக்கும் “21ம் நூற்றாண்டுக்கான சோஷலிசம்” என்கிற கருத்தாக்கம் ஜெர்மானிய மார்க்சிஸ்டான ஹெய்ன்ஸ் டைய்ட்ரிச் ஸ்டெஃபானின் சிந்தனைகளை அடியொற்றியதாக அமைகிறது. முதலாளியத் தனிநபர்வாதம், முன்னுரிமைகள், சுயநலம் ஆகியவற்றிற்கு மாற்றாக இது அறம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கைகளை முன்வைக்கிறது. ஏசுதான் முதல் சோஷலிஸ்ட் என்கிறார் சாவேஸ். ‘பிரதிநிதித்துவ ஜனநாயகம்’ (representative democracy) என்பதற்குப் பதிலாக, ‘பங்கேற்கும் ஜனநாயகம்’ (participatory democracy) என்கிற கருத்தாக்கத்தை இவர்கள் முன்வைக்கின்றனர். ‘சமத்துவமும்’ ‘உரிமையும்’ பிரிக்க இயலாதவை என்பது இவர்களின் இன்னொரு முழக்கம். சோஷலிசம் என்றால் எல்லா அதிகாரங்களும் அரசுக்கே என்பதல்ல என்கிறார் சாவேஸ். இந்த வகையில் அவர்கள் தனிச் சொத்துரிமையையும் ஏற்கின்றனர். பொருளாதாரத்தில் கூட்டு முயற்சிகள் கூட்டுறவு ஆகியவற்றை இவர்கள் ஆதரிக்கின்றனர்.
ஆயுதப் போராட்டத்தின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது, கிராமங்களை விடுவித்து நகரங்களை முற்றுகை இடுவது, நீண்டகால ஆயுதப் போராட்டம் முதலிய வழிமுறைகளும் இன்று பின்னடைவுக்குள்ளகியுள்ளன. நேபாள மாவோயிஸ்ட் கசியினர் ஆயுதங்களை ஐ.நா பார்வையாளரிடம் ஒப்படைத்து விட்டு தேர்தல் பாதைக்குத் திரும்பியுள்ளனர். இந்திய மாவோயிஸ்டுகள் ஒரு வீரஞ் செறிந்த போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறபோதிலும் அவர்களின் செல்வாக்கு இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள வனப் பிரதேசங்களிலும் பழங்குடியினர் மத்தியிலுமே முடங்கியுள்ளது. நகர்ப்புறங்களிலோ தொழிலாளர் மத்தியிலோ ஆதரவில்லை. சமீபத்திய கடும் அரச அடக்குமுறைகளினூடாக உயர்மட்டத் தலைவர்கள் பலரும் ஒன்று கொல்லப்பட்டுள்ளனர் அல்லது கைது செய்யப்பட்டுள்ளனர்.. பெருவின் ‘ஒளிரும் பாதை’ (Shining Path), கொலம்பியாவின் ஃபார்க் (FARC) முதலியன இன்று கடும் அடக்குமுறைகளினூடாகப் பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளன. புரட்சியைச் சக லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்கிற கொள்கையை ஃபிடல் காஸ்ட்ரோ 1980 களிலேயே மாற்றிக் கொண்டார். சிலி நாட்டுப் புரட்சிகர அமைப்பான FPMR இடம், “ஆயுதப் போராட்டங்களின் காலம் முடிந்துவிட்டது” என அறிவித்தார். அதற்குப் பின் ஃபிடலும் அவர் சகோதரர் ராலும் ஆயுத இயக்கங்களுக்கும் அரசுகளுக்கும் இடையே உடன்படிக்கை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கே முன்னுரிமை அளிததனர்.
ஆயுதப் போராட்டங்களை நடத்திய, பெரும் தொழிற்சங்க இயக்கப் பின்புலமுள்ள மலேசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இடத்தில் இன்று செயல்படுகிற ‘மலேசிய சோஷலிஸ்ட் கட்சி’ (PSM) மற்றும் ‘ஜனநாயக நடவடிக்கைக் கட்சி’ (DAP) முதலியன தேர்தல் சார்ந்த கட்சிகளாக இயங்குவதோடு தொழிற்சங்கங்களை முற்றாக இழந்துள்ளன.
மிகத் தீவிரமாக நவ தாராளவாதத்தை நடைமுறைப் படுத்திவரும் இந்திய அரசின் கீழ் தேர்தல் மூலம் மாநில அளவில் ஆட்சியைக் கைப்பற்றி ஆண்டு வந்த இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் இருந்த இடது சாரிக் கூட்டணி இன்று கடும் தோல்வியைச் சந்தித்துள்ளது. 34 ஆண்டு கால ஆட்சிக்குப் பின் இன்று மேற்கு வங்கத்தில் அது தோல்வியுற்றுள்ளது. இந்தத் தோல்வி குறித்து இந்திய இடதுசாரிச் சிந்தனையாளர்கள் மத்தியில் மிகப் பெரிய விவாதம் நடக்கிறது.
தேர்தல் மூலம் கிடைத்த தமது ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தொழில் வளர்ச்சி, கார்பொரேட் முதலீடு முதலிய சொல்லாடல்களில் அமிழ்ந்து, மார்க்சீய அரசியல் நடைமுறையின் மூன்று அடிப்படை அம்சங்களான,
முதலாளியத்தைக் கடந்து செல்லல்
எகாதிபத்திய விரிவாக்கத்தை எதிர்த்தல்
அடிப்படை வர்க்க நலன்களைப் பிரதானப் படுத்துதல்
என்பவற்றைக் கைவிட்டதன் விளைவே இன்றைய தோல்விக்கும் கட்சியின் சீரழிவுகளுக்கும் காரணம் எனத் தொடர்ந்து இக்கட்சிகளை ஆதரித்துவந்த மார்க்சீய அறிஞர்களான பிரபாத் பட்நாயக், ஹிரேன் கோஹெய்ன் போன்றோர் குறிப்பிடுகின்றனர்.
சவால்கள்
ஒரு துருவ உலகம், உலக மயம், திறந்த பொருளாதாரம் ஆகியவற்றினூடாக இன்று உலகம் உலகளாவிய முதலாளிய வலைப் பின்னலில் சிக்குண்டு கிடக்கிறது. இலக்கு நோக்கிய சமூக நலத் திட்டங்கள் என்பதும் நாளுக்கு நாள் பலவீனபடுத்தப்படுகிற disciplinary neo liberal சகாப்ததில் இன்று நாம் வாழ்கிறோம். சோஷலிசம் இனி சாத்தியமில்லை, சந்தையே எல்லாவற்றையும் சரிப்படுத்தும் என்கிற கருத்துக்கள் மேலுக்கு வந்துள்ள நிலையில் இவற்றிற்கு எதிர்ப்புகள் என்பதும் இன்னொரு பக்கம் வெளிப்பட்டுக் கொண்டுதான் உள்ளன. வால் ஸ்ட்ரீட் போராட்டம், அரபுலக எழுச்சி, தங்களின் பாரம்பரிய உடைமைகளைப் பாதுகாப்பதற்கான பழங்குடியினர் மற்றும் விவசாயிகளின் போராட்டம் எனப் பல வடிவங்களில் இவை வெளிப்படுகின்றன.
புதிய பொருளாதார மாற்றங்களினூடாக இன்று தொழிலாளி வர்க்கம் பலவீனப்பட்டும் பிளவுபட்டும் கிடக்கிறது. பெரிய அளவில் மூலதனத்தை இறக்குமதி செய்து விளிம்பு நாடுகளில் தொழில்களை நிறுவும் அந்நிய மூலதனம் முதலில் குறி வைப்பது தொழிற்சங்க உரிமைகளையே. ஏகாதிபத்திய ஆணையின் கீழ் மாற்றி அமைக்கப்படுகிற தொழிற் தகராறுச் சட்டங்கள் போராடிப் பெற்ற தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கின்றன. இந்தியப் பெருந்தொழில்கள் பலவற்றிலும் இன்று மூன்றில் இரு பங்கினர் ஒப்பந்தத் தொழிலாளிகளாக உள்ளனர். இதன் விளைவாக இன்று இங்கெல்லாம் வேலை நிறுத்தப் போராட்டங்கள் சாத்தியமற்றுள்ளன.
தொழிற்சங்க அமைப்புகள் இன்று இடதுசாரிகளிடமிருந்து கைநழுவிப் போயுள்ளன. முதலாளிய அரசியல் கட்சிகளிடமும், சாதி, இனம் சார்ந்த பிரிவினைகளின் அடிப்படையிலும் பிளவுண்டு கிடக்கின்றன.
இத்தகைய பின்னணிகளில் இருபத்தியோராம் நூற்றாண்டின் இடதுசாரி இயக்கங்கள் பலவும் தமது குறிக்கோளை ‘மாற்றம்’ என்கிற நிலையிலிருந்து ‘எதிர்ப்பு’ என்கிற நிலைக்கு இறக்கியுள்ளன. அதாவது ஏகாதிபத்தியம். முதலாளியம் ஆகியவற்றை வீழ்த்துவதாக அல்லாமல் எதிர்ப்பது என்கிற அளவிற்குத் தம் நிலைபாட்டைச் சுருக்கியுள்ளன. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் ஒருவகைச் சீரமைப்புச் சக்திகளாக (cvilizing forces) மாறியுள்ளன.
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட இன்னொரு முக்கிய மாற்றம் புதிய வகை அமைப்பு எதிர்ப்பு இயக்கங்கள் (Anti Systemic Movements) உருவானது. சுற்றுச் சூழல் இயக்கங்கள், பொருளாதாரத்திற்கு அப்பாற்பட்ட காரணிகளால் ஒடுக்குமுறைக்கும், சுரண்டல்களுக்கும் இதுகாறும் ஆட்பட்டு வந்த இன/மத/மொழிச் சிறுபன்மையினர், தலித்கள், பெண்கள், பாலியல் சிறுபான்மையினர் ஆகியோர் தத்தம் அடையாளங்களை முன்வைத்து இயங்கிய அரசியல் முதலியன இவ்வகைப்பட்டவை. மரபு வழிப்பட்ட தொழிலாளர் மற்றும் விவசாயிகள் இயக்கங்களிலிருந்து இவை பல அம்சங்களில் வேறுபட்டவை, சுருங்கச் சொல்வதானால் முதலாளியத்தைக் கடந்து செல்லல், ஏகாதிபத்தியத்தை வீழ்த்துதல் முதலான தொலை நோக்கான குறிக்கோள்களோ செயல்திட்டங்களோ அவற்றிற்குக் கிடையாது.
எனினும் அவையே இன்றைய காலகட்டத்தின் முக்கிய இயக்கங்களாக வெளிப்படுகின்றன. தொலை நோக்கான குறிக்கோள்களுடன் அவை இயங்காதபோதும், தன்னளவில் அவை நியாயமானவையாகவும், இதுகாறும் இடதுசாரி இயக்கங்கள் உள்ளிட்ட எல்லோராலும் புறக்கணிக்கப்பட்ட உரிமைகளுக்காகப் போராடுபவையாகவும் உள்ளன.
சோஷலிச முயற்சிகளின் பின்னடைவுக்குப் பிந்தைய இத்தகைய மாற்றங்களை இடதுசாரி இயக்கங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இன்று ஏற்பட்டுள்ளது. மார்க்சியம் இத்தகைய அம்சங்களின் முக்கியத்துவத்தை மறுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகிய முன்னோடிகளைப் பொருத்தமட்டில் அன்று அவர்களுடைய கவனமெல்லாம் முதலாளிய விரிவாக்கத்தின் விதிமுறைகளைக் கண்டறிவதிலேயே குவிந்திருந்தது, கொடூரமான ஆதி மூலதனத் திரட்டலின் இறுதிக்காலத்தில் வாழ்ந்தவர்கள் அவர்கள். இத்தனைக்கும் மத்தியில் பெண் விடுதலை, சுற்றுச் சூழல் ஆகியவற்றிலும் அவர்களின் கூர்மையான பார்வைகள் குவியவே செய்தன.
‘மூலதனம்’ 15ம் அத்தியாயத்தின் இறுதியில் மார்க்ஸ் தனக்கே உரித்தான கவித்துவத்துடன், “முதலாளித்துவ விவசாயத்தில் காணப்படும் எல்லா முன்னேற்றங்களும் (விவசாயத்) தொழிலாளிகளைச் சுரண்டிக் கொழுக்கும் கலையில் காணப்படும் முன்னேற்றம் மட்டுமல்ல; மண்ணின் வளத்தைக் கொள்ளையடிக்கும் கலையில் காணும் முன்னேற்றமும்கூட; குறிப்பிட்ட ஒரு சாகுபடியில் விளைவை அதிகரிப்பதில் காணும் முன்னேற்றமெல்லாம் அந்த மண்னின் வளத்தை என்றென்றைக்குமாய் அடியோடு அழிப்பதில் காணும் முன்னேற்றம்தான்” என்பார். இத்தனை இரத்தினச் சுருக்கமாக சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தையும் முதலாளியத்தின் கோரப்பசி அதை அழிக்கும் கொடூரத்தையும் யார் சொல்ல இயலும்?
ஜனநாயகம், தேசிய உரிமை, உலகளாவிய மனித உரிமைகள் முதலானவற்றை முதலாளியத்தின் மேற்கட்டுமானம் என்கிற வகையில் அணுகாமால் அவற்றை எல்லா வர்க்க அரசியலுடனும் ஒருங்கிணைக்கும் (articulate) சாத்தியத்தை இன்றைய மார்க்சிய அறிஞர்கள் ஏற்றுக் கொள்வதும் கவனத்திற்குரியது.
இதுகாறும் கூறியவற்றின் பின்னணியில், களத்திலுள்ள இன்றைய இடதுசாரி இயக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இவ்வாறு தொகுத்துக் கொள்ளலாம்:
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்கிற கருத்தைக் கைவிடல். மையப்படுத்தப்பட்ட அரசதிகாரம் என்பதைத் தவிர்த்து அதிகாரப் பரவலை ஏற்றுக்கொள்ளல்.
பாட்டாளி வர்க்கத்தின் உரிமைகள் என்பதை விரித்து இதுகாறும் புறக்கணிக்கப்பட்ட விளிம்பு மக்களின் உரிமைகளையும் உள்ளடக்கி பரந்துபட்ட குடிமக்களின் உரிமைகளை முன்னிறுத்தி இயங்குதல்.
இதுகாறும் புறக்கணிக்கப்பட்ட பரப்புகளான சுற்றுச் சூழல், நகர விரிவாக்கம் முதலானவற்றில் கவனம் குவித்தல்.
செயல்படும் எல்லா இடதுசாரி இயக்கங்களிலும் இம்மாற்றங்கள் உள்வாங்கப்பட்டுள்ளதைக் காணலாம். இந்தியாவில் இயங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2000க்குப் பிந்திய சூழலில் தீண்டாமை ஒழிப்பிற்கென இயக்கம் அமைத்துச் செயல்படுவதும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஈழத் தமிழர்களின் பிரச்சினையில் அதி தீவிரமாக இயங்கியதும் இந்திய மாவோயிஸ்டுகள் வன உரிமை மற்றும் அணு உலை எதிர்ப்புப் போராட்டங்களில் முன்னிற்பதும், நேபாள மாவோயிஸ்டுகள் தலித்கள், மாதேசிகள், ஜனஜாதிகள், பெண்கள் ஆகியோருக்கு உரிய இட ஒதுக்கீடு அளிப்பதும் சில எடுத்துக்காட்டுகள்.
எனினும் இந்த முயற்சிகளில் அனுபவபூர்வமாகக் காணும் சில பிரச்சினைகளை இறுதியாகத் தொகுத்துக் கொள்வோம்:
நடைமுறையில் இத்தகைய அம்சங்களும் போராட்டங்களும் உள்வாங்கப்பட்டபோதிலும் அவற்றைக் கோட்பாட்டுருவாக்கம் செய்யும் தைரியம் இன்னும் இடதுசாரி இயக்கங்களுக்கு வரவில்லை.
இத்தகைய இயக்கங்களை மிகவும் உன்னதப்படுத்தி romanticise பண்ணிப் பார்க்கும் போக்கு இடது அணிகளிடம் காணப்படுகிறது. இது மிகவும் ஆபத்தானது. இத்தகைய இயக்கங்களின் குறுகிய வட்டம், தொலை நோக்கின்மை முதலானவை குறித்த பிரக்ஞை நமக்கு வேண்டும். அடையாள இயக்கங்கள் பிற அடையாளங்களின் மீது உச்சபட்சமான வெறுப்பைக் கக்கும் இயக்கங்களாக மாறும் சாத்தியத்தை மறந்துவிடலாகாது.
இத்தகைய இயக்கங்களில் பங்கெடுக்கும்போதும், இத்தகைய பிரச்சினைகளைக் கையிலெடுக்கும்போதும் இடதுசாரிகள் அதில் உண்மையான ஈடுபாடு காட்ட வேண்டும். அங்கிருந்து அணிகளை வென்றெடுப்பது, தலைமையைக் கைப்பற்றுவது முதலான நோக்கங்களுடன் செயல்படுவது அந்நியப்படுதலுக்கே வழிவகுக்கும். ஆனால் அத்தகைய நோக்குடனேயே இடதுசாரிக் கட்சிகள் அவற்றை அணுகுகின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக இத்தகைய போராட்டங்களை இடதுசாரி அரசியலின் அடிப்படை நோக்கங்களாகிய ‘முதலாளியத்தைக் கடந்து செல்லுதல், ஏகாதிபத்திய எதிர்ப்பு, அடிப்படை வர்க்கங்களின் நலனை முன்னிறுத்தல்’ ஆகிய குறிக்கோள்களுடன் ஒருங்கிணைப்பது அவசியம். இதற்குரிய கோட்பாட்டுருவாக்க்கத்திற்கான எந்த முயற்சிகளும் இல்லை.
முதலாளிய அரசுகளின் கீழ் பிராந்திய/மாநில அளவுகளில் தேர்தல் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றும்போது 1) முதலாளியக் கொள்கைகளுக்குத் தகவமைதல் 2) காவல்துறையின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நிற்றல், 3) அதிகாரவர்க்கத்துடன் சமரசமாதல், 4) கட்சி என்பது மக்கள் மீது அதிகரம் செலுத்தும் கருவியாதல் ஆகிய பிழைகளுக்கு இட்டுச் செல்லும் வாய்ப்பைக் கவனிக்கத் தவறலாகாது.. இதன் எதிர்மறைப் பலன்களை இன்று இந்தியக் கம்யூனிஸ்டுகள் அனுபவித்துக் கொண்டுள்ளனர். ஆட்சியையும் செல்வாக்கையும் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சி என்பது “முதலில் முதலாளித்துவ வளர்ச்சி பிறகு சோஷலிச ஜனநாயகம்” என்கிற கொள்கை விலகலுக்கு வழி வகுக்கும். இது அடிப்படை வர்க்கங்களிடமிருந்து அந்நியப்படுதலுக்கு இட்டுச் செல்லும். இந்தியாவில், மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு இதுதான் நிகழ்ந்தது.
கட்சியை முன்னணிப்படை என்று உன்னதப்படுத்தி அடிப்படை வர்க்கத்திற்கும் மேலானதாகக் கருதிய தவறு சோஷலிச முயற்சிகளில் பெரும் பின்னடைவுகளுக்குக் காரணமாகியது, கட்சி என்பது அணிகளை மையப்படுத்தியதாகவும், அரசியல் திட்டத்தை முதன்மைப் படுத்தியதாகவும், உறுப்பினர்களுக்குக் கருத்து மாறுபடுவது, மாறுபட்ட கருத்தைப் பிரச்சாரம் செய்வது, பிற உறுப்பினர்களுடன் கிடைமட்ட உறவுகளைப் பேணுவது ஆகிய உரிமைகளை அளிப்பதாகவும் இருக்க வேண்டும்.
21ம் நூற்றாண்டு, 20ம் நூற்றாண்டிலிருந்து மிகவும் வேறுபட்டுள்ள நிலையைப் புரிந்து அங்கீகரிப்பதுதான் இன்றைய பிரச்சினைகளையும் அவை முன்வைக்கும் சவால்களையும் புரிந்து அவற்றை எதிர் கொள்வதற்கான முதற்படி. “மார்க்சுக்குப் பிந்திய மாற்றங்களைப் புரிந்து எதிர்கொள்வதற்கு இன்னும் எழுபது மார்க்சுகள் வேண்டும்” என்று லெனின் ஒருமுறை கூறினார். இன்றைய மாற்றங்களை எதிர் கொள்ள இன்னும் எழுநூறு மார்க்ஸ்களேனும் தேவை என்பதை நாம் மறந்துவிடலாகாது. சிக்கல்களின் பன்முகத் தன்மையை அங்கீகரிப்போம். தேர்தல் பாதையா? ஆயுதப் புரட்சியா?, சீனம் நல்லதா? கெட்டதா? என்பது போன்ற எளிமைப்படுத்தப்பட்ட இதுவா இல்லை அதுவா என்பது போன்ற கேள்விகளிலிருந்து விடுபடுவோம்.
காலத்திற்கொவ்வாத வரட்டுக் கோட்பாடுகளையும் எதுவுமே நடக்கவில்லை என்கிற மமதையையும் கைவிடுவோம். புதிய உலகின், புதிய யுகத்தின் பிரச்சினைகளை அடையாளம் காண்போம். முதலாளியத்தைக் கடந்து செல்லல், ஏகாதிபத்திய விரிவாக்கத்தை எதிர்த்தல், அடிப்படை வர்க்கங்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்தல் என்கிற மார்க்சிய அடிப்படைகளுக்குள் நின்று, சென்ற நூற்றாண்டு அனுபவங்களின் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களின் துணையோடு நமது புரட்சிகர நடவடிக்கைகளை மேலும் மேலும் ஜனநாயகப் படுத்துவோம். சோஷலிச ஜனநாயகமே உண்மையான ஜனநாயகம் என்கிற வாய்ச்சொல்லோடு நிற்காமல், உண்மையான ஜனநாயகமே சோஷலிச ஜனநாயகம் என்கிற புரிதலோடு முன் நகர்வோம்.
நாள்: பிப்ரவரி 10, 2013
இடம்: மார்க்சியக் கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையம்.