(இதழொன்றுக்காக பிப்ரவரி 2018ல் எழுதப்பட்டது)
21ம் நூற்றாண்டில் உலக அரசியல் பற்றிப் பேச முனையும்போது நாம் 20ம் நூற்றாண்டை ஒரு கணம் சிந்திக்காமல் இருக்க இயலாது. இரண்டு உலகப் போர்கள், இந்தியா உட்படக் காலனி நாடுகள் சுதந்திரம் அடைதல், ஐ.நா அவையின் தோற்றம், உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம், உலக வங்கி, ஐ.எம்.எஃப், ருஷ்யப் புரட்சி, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சோவியத் வளையத்திற்குள் வருதல், “நேடோ’ (NATO) மற்றும் வார்சா ஒப்பந்தம் ஆகியவற்றின் ஊடாக உலகம் இரு கூறுகளாக்த் தொகுக்கப் படுதல், ‘அணிசேரா நாடுகள்’ (NAM) எனும் கோட்பட்டை நேரு, நாசர், டிட்டோ முதலானோர் உருவாக்குதல், வியட்நாம் யுத்தம், பனிப்போர், லத்தின் அமெரிக்க நாடுகளில் புரட்சிகர இயக்கங்களின் உருவாக்கம், சோவியத்தின் வீழ்ச்சி, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சோவியத் பிடியிலிருந்து விலகுதல், சோஷலிசம் மற்றும் கம்யூனிசச் சித்தாந்தங்களுக்கு உலக அளவில் ஏற்பட்ட பின்னடைவு, ருஷ்யா வெகு வேகமாக முதலாளிய முறைக்குத் திரும்பியதோடு ‘மாஃபியா’ பொருளாதாரம் ஒன்றும் அங்கு தலைகாட்டல், வார்சா ஒப்பந்தக் கூட்டணி இல்லாமற் போதல், வார்சா ஒப்பந்தக் கூட்டணியிலிருந்து பிரிந்த முன்னாள் சிவப்பு நாடுகள் ஒவ்வொன்றாக ‘நேடோ’ வில் அடைக்கலமாதல், கிழக்கு, மேற்கு ஜெர்மனிகளைப் பிரித்திருந்த சுவர் தகர்ந்து நொறுங்குதல், பனிப்போர்க் காலம் முடிந்துவிட்டது எனவும் இனி ஒரு துருவ
உலகம்தான் எனவும், இனி கலாச்சாரங்களுக்கிடையே நடக்கும் மோதல்கள்தான் சாத்தியம் எனவும் அமெரிக்காவும் உலக முதலாளியமும் தன்னை உலகின் முன் நிறுத்திக் கொள்ளல் – என்பதாக நாம் ஒரு பருந்துப் பார்வையில் சென்ற நூற்றாண்டு உலக அரசியலின் முக்கிய கணங்களைப் பட்டியலிடலாம்.
இந்தப் பின்னணியிலிருந்து நோக்கும்போது 21ம் நூற்றாண்டின் உலக அரசியல் 1990 களிலிருந்தே தொடங்கிவிட்டது எனலாம்.
இனி “ஒரு துருவ உலகம்” என்கிற முன்வைப்பின் அடிப்படையில் நம் கண்முன் அரங்கேறிய, அர்ங்கேறிக் கொண்டுள்ள சில நிகழ்வுகளையும், காட்சிகளையும் ஒரு கணம் மனத்திரையில் ஓடவிட்டுப் பார்க்கலாம்.
முதலில் நம் நினைவில் நிழலாடுவது WTO, GATT, GATS முதலான உலக வர்த்தக ஒப்பந்தங்களுக்குள் உலக நாடுகள் ஒருங்கிணைக்கப்படுதல், உலகமயம் என்கிற கருத்தாக்கத்தின் ஊடாக சந்தையின் ஆட்சிக்கு உலகப் பொருளாதாரம் எந்தத் தடைகளும் இன்றி திறந்துவிடப் படுதல், ஐரோப்பிய ஒன்றியம் உருவாதல், சீனா ஒரு முக்கிய பொருளாதார சக்தியாக மேலெழுதல், சோவியத் யூனியன் சிதைந்து ருஷ்யா முற்றிலுமாக முதலாளியத்திற்குத் திரும்பிய பின்னும் அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ நாடுகளால் அது குறி வைத்துத் தாக்கப்படுதல். போஸ்னியா இன அழிப்பு, யுகோஸ்லாவியா முதலான நாடுகளின் சிதறல், ஸ்காட்லந்த், கேடலான் முதலான புவிப் பகுதிகள் தனியாகப் பிரிந்து சுயாட்சி கோரும் நிலை, ஒரு மிக முக்கியமான மாற்று உலக அரசியல் கோட்பாடாக உருப்பெற்றிருந்த அணிசேரா நாடுகளின் அமைப்பு (NAM), ஷங்காய் கார்பொரேஷன் எல்லாம் பெரிய அளவில் பலவீனப்பட்டு கிட்டதட்ட ஒன்றும் இல்லாமல் போன நிலை, World Economic Forum முதலான முதலாளிய உலக அமைப்புகளில் இந்தியா போன்ற நாடுகள் அதி உற்சாகத்துடன் பங்கு பெறுதல், சூடான், ஏமன் முதலான நாடுகளில் பட்டினிச் சாவுகள், சந்தை எனும் அடிப்படையில் நாட்டு எல்லைகள் அர்த்தமற்றுப் போனாலும் மக்களின் இயக்கம், குடிப்பெயர்வு முதலானவை கடும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுதல், குடிமக்களின் ஒவ்வொரு அசைவும் இயக்கமும் நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு கண்காணிப்பிற்கு உள்ளாதால், இதனூடாகச் சேகரிக்கப்படும் தரவுகளின் ஊடாக குடிமக்களின் ஒவ்வொரு அசைவும் கட்டுப்படுத்தப்படுதல் (data control) என்பன ஒரு பக்கம்.
இன்னொரு பக்கம் ஆப்கானிஸ்தான், ஈராக் மீதான அமெரிக்க மற்றும் நேட்டோ நாடுகளின் படைஎடுப்பு, ஈராக் மீது விதிக்கப்பட்ட கொடும் பொருளாதாரத் தடை, 9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதல், இரண்டாம் ஈராக் போர், சதாம் உசேன் தூக்கிலிடப்படுதல், லிபியா முதலான நாடுகளில் வெளியிலிருந்து திணிக்கப்பட்ட இரத்தக் களறிகள், ஆட்சிக் கவிழ்ப்புகள், உலகளவில் உருவாக்கப்படும் “இஸ்லாமிய வெறுப்பு” (Islamophobia), ஐ.எஸ் பயங்கரவாதம் உருப்பெறல், பலஸ்தீன மக்களின் மிக அடிப்படையான உரிமைகள், உயிர், உடைமைகள் எல்லாம் உலக அளவில் எந்தப் பெரிய எதிர்ப்பும் இல்லாமல் பறி போதல், அரபு வசந்தம், நீண்ட கால மத்திய கிழக்குச் சர்வாதிகாரிகள் தூக்கிஎறியப்படுதல், வால்ஸ்ட்ரீட் முதலாக உலகெங்கிலும் நடைபெற்ற அமர்வுப் போராட்டங்கள், அமெரிக்கா, ஐ.எஸ், சவூதி ஆகியவற்றின் கூட்டுத் தாக்குதலின் விளைவாக வரலாறு காணாத அளவில் சிரியா நாட்டைச் சேர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்படுதல், ஈரான், ருஷ்யா முதலான நாடுகளைத் தனிமைப்படுத்தும் முயற்சிகள்….
இன்று உருவாகியுள்ள உலக அளவிலான அரசியலின் பொதுப்போக்கை மிகச் சுருக்கமாகத் தொகுத்துக் கொள்ள நம் கண்முன் நடந்து கொண்டுள்ள இம்மாற்றங்கள் குறித்த இந்தக் கணக்கெடுப்பு (survey) உதவும் என நம்புகிறேன். இவற்றில் ஓரிரண்டு பிரச்சினைகளை மட்டும் சிறிது விளக்கமாகக் காணலாம்.
ஐ.எஸ் பயங்கரவாதம்
முதலில் இன்று உலகைப் பெரிய அளவில் அச்சுற்றுத்திக் கொண்டுள்ள ஐ.எஸ் பயங்கரவாதத்தை எடுத்துக் கொள்வோம். 21ம் நூற்றாண்டு இரட்டைக் கோபுரத் தாக்குதலோடு விடிந்ததை மறக்க இயலாது. ‘அல்குவேதா’ எனும் பயங்கரவாத அமைப்பு மேற்கொண்ட அந்தத் தாக்குதலில் 2996 பேர் கொல்லப்பட்டனர். 6000 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவிற்கு 10 பில்லியன் டாலர் சொத்திழப்பு ஏற்பட்டது. இந்த இழப்புக்ளைக் காட்டிலும் இதைத் தன் உலக மேலாண்மை முயற்சிகளுக்கு ஏற்பட்ட ஒரு தாக்குதல் 21ம் நூற்றாண்டை ‘அமெரிக்க நூற்றாண்டாக’ அறிவித்த தம் முயற்சிக்கு ஏற்பட்ட ஒரு அவமானம் என்றே அமெரிக்கா எடுத்துக் கொண்டு களத்தில் இறங்கியது. அதற்குப் பத்தாண்டுகளுக்கு முன் 1990 ல் சதாம் உசேனின் படைகள் குவைத்தை ஆக்ரமித்ததை ஒட்டி, தனது கூட்டாளிகளான குவைத் மற்றும் சவூதியைக் காப்பாற்றுவது எனும் பெயரில் அமெரிக்கா 35 நாடுகள் கூட்டணி ஒன்றை உருவாக்கி Operation Desert Storm (17 ஜன1991 – 28 பிப்1991) எனும் படைஎடுப்பை நடத்தி ஈராக் மீது மிகக் கடுமையான தடைகளை (sanctions) அமுல் செய்திருந்தது. ஈராக் தனிமைப் படுத்தப்பட்டது மட்டுமல்ல அத்தியாவசிய மருந்துகள், குழந்தை உணவு உட்பட தடை செய்யப்பட்டதால் ஈராக் மக்கள் அடைந்த துன்பங்கள் அந்தப் பத்தாண்டுகளில் ஏராளம். அதற்கும் முன் ஆப்கானிஸ்தான் மீது மேற்கொண்ட அமெரிக்கப் போர், இப்போதைய ஈராக் மீதான தடைகள் ஆகியவற்றின் பின்னணியில் உருவானதுதான் அல்குவேதா அமைப்பு. இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்காக உடனடியாக அல்குவேதாவையும், ஒசாமா பின் லேடனையும் ஒழித்துக் கட்ட இயலாத புஷ் நிர்வாகம் 2003ல் ஈராக் மீது இரண்டாம் முறையாகப் படை எடுத்தது. இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு சதாமும் உடந்தை என்பதாகவும் சதாமிடம் “பேரழிவு ஆயுதங்கள்” (WMD) உள்ளதெனவும் கூறிப் போரில் இறங்கியபோது டோனி ப்ளேயரின் பிரிட்டன் அந்த நடவடிக்கையை முழுமையாக ஏற்றுக் கொண்டு துணைநின்றது. மிக எளிதாக ஈராக்கை வென்றதோடு சதாமையும் தூக்கிலிட்டு (2006), 2011 வரை அங்கு படைகளை நிறுத்தி முழுக்க முழுக்க அமெரிக்க இராணுவம் மற்றும் கூலிப் படைகளின் கட்டுப்பாட்டில் அம்மக்கள், குறிப்பாக சன்னி முஸ்லிம்கள் பெரிய அளவில் கொல்லப்பட்டனர், துன்புறுத்தலுக்கும் ஆளாயினர்.
படைஎடுப்பிற்குக் காரணமாகச் சொல்லப்பட்ட பேரழிவு ஆயுதங்கள் எதுவும் சதாமிடம் இல்லை என்பது நிரூபணமாகியது. இந்த ஆக்ரமிப்புப் போர் குறித்த சர் ஜான் சில்காட்டின் அறிக்கை வெளியிடப்பட்டபோது (ஜூலை, 2016) அமெரிக்கா, பிரிட்டன் இரண்டும் தலைகுனிய நேரிட்டது. தேவையற்ற ஆக்ரமிப்புப் போர் அது என்பதை அது வெளிப்படுத்தியபோது, “வருந்துகிறேன், வேதனைப்படுகிறேன், மன்னிப்புக் கோருகிறேன்” என பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார் டோனி ப்ளேயர். அவரது ‘லேபர்’ கட்சி சார்பாக அதன் தலைவர் ஜெரமி கோர்பின் மன்னிப்புக் கோரினார். நான் அப்போதே இந்தப் படைஎடுப்பு தவறு எனச் சொன்னேனே என்றார் பாரக் ஒபாமா. புஷ் மட்டும், “சாதாமுக்குப் பின் உலகம் நன்றாகத்தான் உள்ளது” என்றார்.
சதாம் கொல்லப்பட்டபின் எடுபிடி நூருல் மாலிகி அரசின் கீழ் ஆக்ரமிப்புப் படைகளின் அத்துமீறல்களைத் தாங்க இயலாத மக்கள், குறிப்பாக அதிகம் பாதிக்கப்பட்ட சன்னி முஸ்லிம்கள் தங்கள் எதிர்ப்பைத் தொடங்கினர். முதலில் அமைதி வழியில்தான் எதிர்ப்புகள் இருந்தன. இராணுவ அடக்குமுறையைக் கைவிடல், அடக்குமுறைச் சட்டத்தைத் திரும்பப் பெறுதல், யாரையும் கொல்லும் அதிகாரத்தை நீக்குதல் முதலியன மட்டுமே அவர்களின் கோரிக்கைகள். பலூஜா மற்றும் ரமாடியை மையமாகக் கொண்டு இனக்குழு மக்கள் தம் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கியபோது கூட அது பயங்கரவாதத் தாக்குதலாக வெளிப்படவில்லை. ஆனால் எல்லாம் பயங்கரவாதத் தாக்குதலாகவே அறிவிக்கப்பட்டு அடக்குமுறை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பின்னணியில்தான் ஐ.எஸ் பயங்கரவாதம் உருக் கொண்டது. முன்னாள் ஈராக் இராணுவத்தினர், அதிகாரம் இழந்து ஒடுக்கப்பட்ட சன்னி முஸ்லிம்கள், சிறையில் அடைக்கப்பட்டுக் கொடுமைகளுக்கு ஆளானோர் இவர்கள் எல்லோரும் திரள் திரளாக ISIS பக்கம் சென்றனர். தற்போதைய ISIS தலைவர் அபு பக்ர் அல் பாக்தாதி அப்படி ஈராக் சிறையில் அடைப்பட்டுக் கிடந்தவர்தான்
ISIS அல்லது ISIL அல்லது IS என்பது ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதில் சந்தேகமில்லை. தேசங்களைக் கடந்த ஒரு இஸ்லாமிய ஆட்சி என்கிற பெயரில் ஒரு புதிய கலீபா ஆட்சியை (caliphate) உருவாக்குவதாகப் பீற்றிக் கொண்டு அது மேற்கொள்ளும் வன்முறைகளை யாரும் ஏற்க இயலாது. எனினும் இப்படியான பயங்கரவாத அமைப்பு தானாகவே அங்கு உருவாகிவிடவில்லை என்பதைப் புரிந்து கொள்வது அவசியம்.. வெறும் சன்னி முஸ்லிம்களின் பயங்கரவாதமாகவும் இதைச் சுருக்கிப் பார்க்க இயலாது. அது முஸ்லிம் சமூகம் மட்டுமல்ல. அது ஒரு இனக்குழுச் சமூகமும் கூட. அவற்றின் பண்புகளோடும் அவற்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
உலகளவில் உருவாக்கப்படும் இஸ்லாமிய வெறுப்பு
கம்யூனிசத்தின் வீழ்ச்சிக்குப் பின் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தும் தன் ஆசையை வெளிப்படையாக அறிவித்துச் செயல்படுத்தும் அமெரிக்கா பதிலாக வேறொரு எதிரியைத் தேடியபோது அது கண்டுபிடித்ததுதான் ‘இஸ்லாமிய பயங்கரவாதம்’. இப்போது இஸ்லாமிய பயங்கரவாதம் என்பதையும் தாண்டி, ‘இஸ்லாம்’, “முஸ்லிம்கள்” என்ற இரண்டு சொற்களுமே பயங்கரவாதத்தின் குறியீடுகளாக நிறுத்தப்படுகின்றன.
இந்தத் தாக்குதல்களில் ஈராக்கில் மட்டும் மொத்தத்தில் ஐந்து இலட்சம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். சிரியாவில் ஏப்ரல் 30, 2016 வரை கொல்லப்பட்டோர் 151,888. செரெபெர்னிகாவில் 1995 ல் கொல்லப்பட்ட போஸ்னிய முஸ்லிம்களிகளின் எண்ணிக்கை 8332. அப்போது அகதிகளானோர் 30,000 பேர்.
உலகெங்கிலும் இவ்வாறான இஸ்லாமிய வெறுப்புக்கு ஆளாகும் முஸ்லிம்கள் ஆங்காங்கு ஐ.எஸ் அமைப்பிற்கு ஆதரவு அளிக்கும் நிலையும் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஐ.எஸ் பிரிட்டிஷ் அரசளவு பரப்புள்ள புவிப்பரப்பின் மீது அதிகாரம் செலுத்தக் கூடியதாகவும், நாளொன்றுக்கு சுமார் 9,000 பீப்பாய் எண்ணை ஏற்றுமதி செய்யும் அளவிற்குப் பொருளாதாரப் பலம் உள்ளதாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.
அது மட்டுமல்ல, எந்த அமெரிக்க ஆக்ரமிப்புக்கு எதிராக ஐ.எஸ் உருவானதோ அதே அமெரிக்காவிற்கே அது கையாளாகச் செயல்படும் நிலையும் இன்று சிரியாவில் ஏற்பட்டுள்ளது.
சிரியா
சிரியாவில் தற்போதைய குடியரசுத் தலைவராக உள்ள பஷார் அல் அசாத்தின் ஊழல், அடக்குமுறை ஆட்சிக்கெதிரான உளாட்டுப்போர் அரபு வசந்தத்தின் தொடர்ச்சியாக 2011ல் தொடங்கியதுதான் எனினும் துனிசியா, எகிப்து முதலான நாடுகளில் முளைத்த அரபு வசந்த எழுச்சிகளைப்போல அமைதி வழியில் மக்கள் ஆதரவுடன் நடக்கும் போராட்டமாக அது அமையவில்லை. இங்கு அப்படியான பெரிய மக்கள் ஆதரவு இல்லாத அந்த எதிர்ப்பு ஒரு உள்நாட்டுப் போராக வடிவெடுத்தது. அசாத் ஆட்சி அதை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியதன் விளைவுதான் இன்றைய சிரிய அகதிகள் பிரச்சினை.
அசாத் ஆட்சிக்கு எதிரான இன்றைய இந்த உள்நாட்டுப் போருக்கு சவூதி, கடார், துருக்கி முதலான நாடுகள் வெளிப்படையாக ஆதரவாக உள்ளன. வளைகுடா நாடுகளில் உள்ள இஸ்லாமிய முடியரசுகள் அசாத்துக்கு எதிரான இந்த அமைப்புகளுக்கு பெரிய அளவில் நிதி உதவி அளிக்கின்றன. இவை தவிர அமெரிக்காவும் அசாத்துக்கு எதிரான இந்தப் போருக்கு ஆதரவளிக்கின்றது. “ஒரளவு மென்மையான” (moderate) இந்த அமைப்புகளுக்குத் தாங்கள் உதவுவதாக அமெரிக்கா வெளிப்படையாகவே கூறுகிறது.
யார் அந்த மென்மையான அமைப்புகள்?
ஒருபக்கம் தலைகளை வெட்டி வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் ஐ.எஸ் அமைப்பு, இன்னொரு பக்கம் சிரியாவின் அல் கொய்தாவான அல் நுஸ்ரா முன்னணி, அப்புறம் சலாஃபிஸ்டுகளான சில அல்ஷாம்ஸ் இயக்கங்கள் ஆகியவைதான் அமெரிக்கா உதவி செய்கிற இந்த “மென்மையான பயங்கரவாத” அமைப்புகள். இவை கைப்பற்றும் பகுதிகளில் உடனடியாக ஷரியா சட்டத்திண் ஆட்சி என்கிற பெயரில் கடும் அடக்குமுறைகள், சிறுபான்மையினர் மற்றும் அல்லாவைட் முஸ்லிம்கள் கொல்லப்படுதல், அகதிகளாக்கப்படுதல் நிகழ்கின்றன.
அமெரிக்கா சவூதி முதலியன இப்படி ஐ.எஸ் உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு உதவுவதன் பின்னணி என்ன?
உண்மையில் இன்று சிரியாவுக்குள் மூன்று போர்கள் நடந்து கொண்டுள்ளன. 1. அசாத் அரசிற்கும் உள் நாட்டு ஆயுதக் குழுக்களுக்குமான போர். 2. ஈரான் மீது சவூதி நடத்தும் மறைமுக யுத்தம். 3.உக்ரேன் போருக்கு அடுத்து அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் நடக்கும் போர்.
பஷார் அசாத் அரசுக்கு இன்று பக்க பலமாக இருப்பது லெபனானின் ஹிஸ்புல்லா, மற்றும் குர்திஷ் இயக்கங்கள், ஈரான் மற்றும்ருஷ்ய நாடுகள் ஆகியன. ஈரானைத் தன் ஜென்மப் பகையாக நினைக்கும் அமெரிக்க ஆதரவு அரசான சவூதி, அசாத்தை வீழ்த்தி சிரியாவில் தனக்கும் அமெரிக்காவுக்கும் ஆதரவான ஒரு பொம்மை அரசை அமைத்துவிட்டால் ஈரானை புவி இயல் ரீதியாகத் துண்டித்து விடலாம் என நினைக்கிறது. அதோடு லெபனானிலிருந்து இயங்கும் பலஸ்தீன ஆதரவு ஹிஸ்புல்லாவையும் ஒடுக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போரை முகாந்திரமாக வைத்து ருஷ்யாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையில் தற்போது எண்ணை ஏற்றுமதி மூலம் உருவாகியுள்ள நட்பை அழிப்பதும் அமெரிக்காவின் குறிக்கோள்.
தொடரும் அமெரிக்க ருஷ்ய முரண்பாடு
சோவியத் யூனியனின் இறுதிக் கட்டத்தில் கையெழுத்திடப்பட்ட கிழக்கு, மேற்கு ஜெர்மனிகளை இணைப்பதற்கான ஒப்பந்தத்தின் போது (பிப் 9,1990) சோவியத் யூனியனிலிருந்து பிரியும் கிழக்கு அய்ரோப்பிய நாடுகள் எதையும் ‘நேட்டோ’ அமைப்பில் இணைக்கக் கூடாது என்பதை ரசியா நிபந்தனையாக விதித்தது. அன்று அது ஏற்றுக் கொள்ளப்பட்ட போதிலும் எழுத்து மூலமாக அந்த வாக்குறுதி பதியப்படவில்லை. தவிரவும் ஒன்றாக இணைக்கப்பட்ட ஜெர்மனியை நேட்டோவில் இணைத்த போது கோர்பசேவ் அதை எதிர்க்கவும் இல்லை. விளைவு? இன்று சோவியத் அணியில் இருந்த 12 நாடுகள் நேட்டோவில் அடுத்தடுத்து இணைக்கப்பட்டன.
டிமிட்ரி மெத்வதேவ் ரசிய அதிபராக இருந்தபோது இப்படி அன்று வாக்களிக்கப்பட்டதையும், தற்போது அது மீறப்படுவதையும் சுட்டிக் காட்டினார். “அவ்வாறு எந்த ஒப்பந்தமும் அப்போது செய்யப்படவில்லை” என அமெரிக்கா பதிலளித்தது. சோவியத் யூனியனைச் சிதைத்த சாதனையாளர் கோர்பசேவிடம் இது குறித்துக் கேட்டபோது, “இந்த அமெரிக்க அரசியல்வாதிகளை நம்பவே இயலாது” என்றார். காலந் தாழ்ந்த ஞானோதயம்.
1991ல் சோவியத் யூனியன் சிதைந்தபோது பிரிந்து வந்த எந்த நாடும் நேட்டோவில் சேர விருப்பம் தெரிவிக்கவில்லை. அப்படிச் சேர்ப்பது நிதிப் பிரச்சினைகளை உருவாக்கும் என்பதால் நேட்டோவும் அவற்றை இணைக்க முயற்சிக்கவில்லை. தொடர்ந்து போஸ்னியப் போர், பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டது, பில் கிளின்டன் அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்ற கையோடு (1993) நேட்டோவை விரிவாக்க முனைந்தது ஆகிய நிகழ்வுகளின் பின்னணியில் முன்னதாக சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து வந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பலவும் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்தன. 1990ல் ஜெர்மனி இணைந்ததைக் குறிப்பிட்டேன். 1999ல் நேட்டோ மத்திய ஐரோப்பாவில் கால் பதித்தது. போலந்து, செக் குடியரசு, ஹங்கேரி மூன்றும் இணைந்தன,
அடுத்த அலையில் யூரேசியவைச் சுற்றி வளைப்பது போல லிதுவேனியா, லாட்வியா, எஸ்தோனியா ஆகிய முன்னாள் சோவியத் அணி நாடுகள் நேட்டோவிற்குள் கொண்டு வரப்பட்டன. அப்புறம் இன்னொரு மத்திய ஐரோப்பிய நாடு (ஸ்லோவோகியா), இரு பால்கன் நாடுகள் (பல்கேரியா, ருமேனியா) நேட்டோ வசமாயின. சென்ற ஆண்டு (2017) மான்டிநீக்ரோவும் இணைக்கப்பட்டது. நேட்டோவின் ஆதிக்கம் இப்போது கருங்கடலையும் தொட்டது. ஆக பால்டிக் முதல் கருங்கடல் வரை இப்போது நேட்டோவின் அதிகாரம் விரிந்துள்ளது. 2009ல் அல்பேனியாவும் குரோஷியாவும் இணைந்தன. அட்யாட்ரிக் கடற்கரை வரை இன்று நேட்டோவின் அதிகாரம் கொடி கட்டிப் பறக்கிறது.
மிச்சம் இருப்பது உக்ரேன் உள்ளிட்ட இரண்டொரு வார்சா ஒப்பந்த நாடுகள்தான். ஜார்ஜியா, போஸ்னியா, ஹெர்சகோவினா, முதலியன நேட்டோவில் சேர விண்ணப்பித்துக் காத்திருக்கின்றன. ஆனால் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் குறி இப்போது ரசியாவின் எல்லையில் உள்ளதும், போர்நிலை முக்கியத்துவம் வாய்ந்ததுமான உக்ரேன்தான்
உக்ரேன் ரசியாவைப் பொருத்தமட்டில் பல வகைகளில் மிக முக்கியமானது. எல்லை ஓரத்தில் உள்ளது என்பது மட்டுமல்ல நேட்டோவின் வீச்சிலிருந்து தற்போது அதை விலக்கி நிறுத்தியுள்ள நாடும் அதுதான்.. அதுவும் நேட்டோவின் கையில் சிக்கினால் கிட்டத் தட்ட ரசியா ஒரு நிரந்தர முற்றுகை இடப்பட்ட நாடாக மாறிவிடும். நேட்டோவின் ஏவுகணைகள் ரசியாவின் கொல்லைப் புறத்தில் குறிபார்த்து நிறுத்தி வைக்கப்படும். தவிரவும் உக்ரேனின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் வசிப்பவர்களில் பெரும்பான்மையினர் ரசிய மொழி பேசுவோர். இவர்கள் உக்ரேனின் மொத்த மக்கள் தொகையில் 40 சதத்திற்கும் அதிகம். எல்லாவற்றிற்கும் மேலாக ரசியாவின் இன்றைய பொருளாதார உயிர்நிலையாக அமைந்துள்ள எரிவாயுக் குழாய்களும் உக்ரேன் வழியாகத்தான் செல்கின்றன.
இந்த நிலையில்தான் 2014 ல் உக்ரேனில் ஒரு ஆட்சி கவிழ்ப்பை நிகழ்த்தி அதையும் தன் பக்கம் இழுக்க அமெரிக்கா முனைந்தபோது ரசியர்கள் குறிப்பிட்ட அளவில் வாழக்கூடிய கிரிமியாவை ரஷ்யா தன்னோடு இணைத்துக் கொண்டது. ஒப்பந்தத்தை மீறிய ஆக்ரமிப்பு என அமெரிக்கா அரற்றியபோதும் ருஷ்யா கண்டு கொள்ளவில்லை.
ருஷ்யா இன்று ஒரு சோஷலிச நாடோ உலக அரசியலில் அது ஒரு அறம் சார்ந்த நிலைபாட்டை மேற்கொள்ளும் நாடோ அல்ல. ஆனால் அதே நேரத்தில் உலகில் அமெரிக்கா தன் மேலாண்மையை நிலை நாட்டும் முயற்சியின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையில் நேரும் மோதல்களில் ருஷ்யாவின் பக்கமே நியாயம் உள்ளது.
ஸ்காட்லந்த் முதலான நாடுகளின் பிரிவினைக் கோரிக்கைகள்
சோவியத் யூனியனின் வீழ்ச்சியை ஒட்டி உலக நாடுகளின் எண்ணிக்கை பெருகியது. சோவியத் யூனியனில் இருந்த நாடுகள் பலவும் தனித்தனி நாடுகளாயின. கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் அத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டன. யுகோஸ்லாவியா பெரும் இரத்தக் களறியுடன் தனித் தனி நாடுகளாகப் பிரிந்தது. அதே நேரத்தில் 28 ஐரோப்பிய நாடுகள் ஒன்றாக இணைந்து ஒரே ‘கரன்சி’ .முதலான வடிவங்களுடன் ஐரோப்பிய யூனியனாகவும் உருவெடுத்தது. ஆனால் இந்த இணைவு என்பது எவ்வகையிலும் இந்தியா போன்ற நாடுகளில் உள்ள கூட்டாட்சி நடைமுறையுடன் ஒப்பிடத் தக்கதல்ல. ஐரோப்பிய யூனியனில் ‘மத்திய அரசு’ என ஒன்று கிடையாது.
ஸ்காட்லந்தின் நீண்ட நாள் விருப்பமான பிரிட்டனை விட்டுப்பிரிதல் என்கிற கோரிக்கை இந்த நூற்றாண்டில் அதிக வீச்சுடன் மேலுக்கு வந்தது. 2014ல் பிரிவினைக் கோரிக்கை தொடர்பான வாக்கெடுப்பு ஸ்காட்லந்த் மக்களிடம் நடத்தப்பட்டது.
உலக அளவில் பரபரப்பாகப் பேசவும் கவனிக்கவும் பட்ட இந்த வாக்கெடுப்பு முடிவு பிரிவினைக்கு எதிராக முடிந்தபோதும் உலகளவில், குறிப்பாக ஐரோப்பாவிற்குள் வெளிப்பட்ட பிரிவினைக் கோரிக்கைகளுக்கு அது வலுவூட்டியது. ஸ்பெயினில் காடலோனியா மற்றும் பாஸ்க் பகுதிகள், இத்தாலியில் வெனிடோ மற்றும் தெற்கு டைரோல், ஃப்ரான்சில் கார்சியா, பிரிட்டனி, அல்சேய்ஸ் மற்றும் சவோய், பெல்ஜியத்தில் ஃப்லான்டெர்ஸ், ஜெர்மனியில் பவேரியா மற்றும் ஃப்ரீசியா, டென்மார்கில் ஃபெரோ தீவுகள், போலந்தில் சைலீசியா, ஃபின்லாந்தில் ஆலந்த் என்பன இவ்வாறு இறையாண்மை மற்றும் சுதந்திரம் (sovereignity / independance) கோரும் சில பகுதிகள். இத்தோடு நீண்டகாலமாகக் கனடாவிலிருந்து பிரிவினை கோரிக் கொண்டுள்ள கியூபெக்கில் இந்த வாக்கெடுப்பை ஒட்டி எழுந்துள்ள உற்சாகத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.
தோன்றும்போதே முதலாளியம் ஒருவகை உலகளாவிய தன்மையுடன்தான் தோன்றியது என்பார் கார்ல் மார்க்ஸ். அரசெல்லைகள், புவியியல் வரம்புகள் எல்லாவற்றையும் தாண்டி மூலப் பொருட்களைத் தேடுவது, உற்பத்தி செய்த பொருட்களை விற்பது என்கிற நிலையில் சிறிய சமூகங்களும் அரசுகளும் தம்மைத் தக்கவைத்துக் கொள்ள இயலாத நிலை அப்போது ஏற்பட்டது. பெரிய அரசுகளிடம் தம்மை ஒப்புவித்துப் பாதுகாப்பு பெறும் நிலை உருவானது.
இப்படித்தான் பிரிட்டனியும் கோர்சிகாவும்ஃப்ரான்சுடனும், ஸ்காட்லந்த் பிரிட்டிஷ் பேரரசுடனும் தன்னை இணைத்துக் கொள்ள நேரிட்டது.
இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. உலகமயம், ஐரோப்பிய யூனியன் முதலான பேரமைப்புகள், ‘நேடோ’ போன்ற இராணுவக் கூட்டமைப்புகள் உருவாகியுள்ள சூழலில் சிறிய நாடுகளும் கூட எவ்விதப் பெரிய சுமைகளும் இன்றி தனித்தியங்கும் சூழல் இங்கெல்லாம் உருவாகியுள்ளது,
பெரிய இராணுவம் தேவையில்லை. தனிக் கரன்சி தேவையில்லை. வணிகத் தடைகள் நீக்கப்பட்டு நெறிமுறைகளும் ஒப்பந்தங்களும் உருவாக்கப்பட்டு விட்டன, தனி விமானப் போக்குவரத்து, தபால் துறை என்பதெல்லாம் காலம் கடந்தவையாகிவிட்டன. எனில் ஏன் இனி பிரிட்டனியும் ஸ்காட்லந்தும் ஃப்ரான்சுடனும் பிரிட்டனுடனும் இணைந்திருக்க வேண்டும்?
தவிரவும் உலகமயத்திற்குப் பின் உருவாகியுள்ள வருமானக் குறைவு, வேலை வாய்ப்பின்மை, வேலை நிரந்தரமின்மை, வீடு மற்றும் மருத்துவம் தொடர்பான அரசு நலத் திட்டங்கள் சுருங்குதல் முதலியன இன்று ஸ்காட்லந்த் போன்ற பகுதிகளில் உள்ள சற்றே பின்தங்கிய மக்கள் மத்தியில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. ஒட்டு மொத்தமாக இந்தப் பிரச்சினை எல்லோருக்கும் இருந்தபோதும் ஒரு சில பகுதிகள் கூடுதலாக பாதிக்கப்படுகின்றன. ஏழ்மை, சராசரி ஆயுள் முதலியனவும் கூட மொத்தச் சராசரியைக் காட்டிலும் இப்படியான பகுதிகளில் குறைவு. மத்தியில் ஆட்சிகள் மாறிய போதும் அணுகல் முறைகளில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. எல்லாப் பலன்களும் லண்டன் என்கிற நகர அரசை மையப் படுத்தியே உருவாகின்றன என்கிற கருத்து ஸ்காட்லந்த் மட்டுமின்றி வேல்ஸ், அயர்லாந்த் போன்ற பகுதிகளிலும் இத்தகைய எண்ணங்கள் வலுவாக வேர்கொண்டுள்ள நிலை இன்றைய பிரிவினைக் கோரிக்கைகளுக்கு ஆதாரமாக உள்ளன.
இன்று உருவாகியுள்ள தனி நாட்டுக் கோரிக்கைகள் என்பன சென்ற நூற்றாண்டின் தேசிய இனப் போராட்டங்களைப் போலன்றி இன வெறுப்பு இனப் பகை என்கிற அடிப்படையில் கட்டமைக்கப் படாமைக்கு இதுவே அடிப்படை. பிரிவினைக் கோரிக்கையை முன்வைத்துப் பிரச்சாரம் மேற்கொண்ட ஸ்காட்லந்தியர்களின் இயக்கம் “ஸ்காட்லந்த் தேசியவாதம்” என அடையாளப்படுத்திவிட இயலாத அளவிற்கு ஒரு தீவிரமான சமூக ஜனநாயகத் திட்டத்தை முன்நிறுத்திய செயல்பாடாகவே இருந்தது. தலைமை ஏற்ற ஸ்காட்லந்தின் முதன்மை அமைச்சரும் ஸ்காட்லந்த் தேசியக் கட்சியின் தலைவருமான அலெக்ஸ் சால்மோன் ஒரு இடதுசாரியாக இல்லாதபோதும், தனிநாடு கோரிக்கையில் பெரிய அளவில் இடதுசாரிகள் மற்றும் சோஷலிஸ்டுகள் பங்குபெற்றதை முன்னிட்டு சோஷலிசச் சாய்வுடன் கூடிய ஒரு திட்டத்தை அவர் முன்வைத்து இயங்க வேண்டியதாயிற்று. எல்லோருக்குமான இலவசக் குழந்தைகள் காப்புத் திட்டம், பல்கலைக்கழகம் வரை இலவசப் படிப்பு, ஓய்வூதியத் திட்டங்கள், எல்லோராலும் வெறுக்கப்பட்ட “படுக்கையறை வரி” யை நீக்குதல், தேசிய மருத்துவ நலத் திட்டத்தைப் பொதுத் துறையின் கீழ் கொண்டு வருதல் முதலான வாக்குறுதிகளை சல்மோன் முன்வைத்து இயங்கினார். பேரழிவு ஆயுதங்களை உற்பத்தி செய்வதை நிறுத்துவது, நேடோவின் அநீதியான தாக்குதல்களுக்கு ஒப்புதல் அளிக்காமை முதலான கொள்கை அறிவிப்புகளையும் அவர் செய்தார்.
ஆங்கில இனத்தின் ஆதிக்கம் என்பதாக அல்லாமல் தனியார் சொத்துக்களில் பாதிக்கு மேல் குவித்துக் கொண்டுள்ள 432 குடும்பங்களின் ஆதிக்கத்தைச் சுட்டிக் காட்டித் தங்கள் தனி நாட்டுக் கோரிக்கையை அவர்கள் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது. “சுதந்திரத்திற்கான தொழிலாளர்கள்” அமைப்பின் அலெக்ஸ் மொசோன், முன்னாள் துறைமுக ஊழியரும் 1999 முதல் 2003 வரை கிளாக்சோ நகரத்தின் மேயர் பதவிக்குச் சமமான நிலையில் இருந்தவருமான லார்ட் புரோவோஸ்ட் முதலானோர் “சோஷலிசத்தை நோக்கிய ஸ்காட்டிஷ் பாதை” ஒன்றுக்கான சாத்தியமாக இந்தத் தனிநாடு கோரிக்கையை முன்வைத்தனர்.
இன்னொன்றையும் இங்கு கவனத்தில் கொள்ளல் தகும். இஸ்லாத்தில் ‘தேச அரசு’ என்பதைக் காட்டிலும் ‘உம்மா’ – முஸ்லிம் சமூகம் என்கிற கருத்தாக்கத்திற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். இது குறித்த போதிய புரிதல் இல்லாமலும் இஸ்லாமியர்கள் மத்தியில் உள்ள இனக்குழு வேறுபாடுகளை எல்லாம் பற்றிக் கவலை கொள்ளாமலும் பிரிட்டிஷ் அதிகாரிகள் ஆட்டோமன் பேரரசு முதலானவை சிதைந்தபோது தன்னிச்சையாகச் செயல் படுத்திய நாட்டுப் பிரிவினைகள் இன்று இஸ்லாமிய நாடுகள் மத்தியில் பல சிக்கல்களுக்கும் மோதல்களுக்கும் காரணமாகியுள்ளன. “தேச எல்லைகளைக் கடந்த இஸ்லாமிய நாடு” என்கிற பொருளில் இன்று ஐ.எஸ் (Islamic State) என்கிற கருத்தாக்கம் முன்வைக்கப்படுவதையும் நாம் இந்தக் கோணத்திலிருந்து பார்க்க வேண்டியுள்ளது.
அரபு வசந்தம் மற்றும் வால்ஸ்ட்ரீட் முதலான அமர்வுப் போராட்டங்கள்
இன்று உலக அளவில் அரசியலில் ஏற்பட்டுள்ள பொதுப் போக்குகளைப் பற்றியே நாம் இங்கு பேசிக் கொண்டுள்ளோம். பெரிய அளவில் உலகமயச் சூழலை ஒட்டிப் பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவை பெரிய அளவில் மக்களைப் பாதித்துள்ளன புதிய சூழலில் இந்தப் பாதிப்புகளுக்கான எதிர்ப்பிலும் உலக அளவில் சில பொதுப் போக்குகளைக் காண முடியும் வால்ஸ்ட்ரீட் அமர்வு, அரபு வசந்தம் முதலியன சில எடுத்துக்காட்டுகள்.
ஈராக். ஆப்கானிஸ்தான் முதலான நாடுகளில் அமெரிக்கா பேரழிவுகளை ஏற்படுத்திய போதிலும் அது எதிர்பார்த்தபடி எல்லா இடங்களிலும் அதன் முயற்சிகள் பலிக்கவில்லை. ஈரான், சிரியா, உக்ரேன் ஆகிய பிரச்சினைகளில் விரும்பியபடி ஆட்சி மாற்றங்களை (regime changes) அதனால் அரங்கேற்ற இயலவில்லை. அல்குவேதா, ஐ.எஸ் முதலான பயங்கரவாத இயக்கங்களையோ அவற்றின் தாக்குதல்களையோ அதனால் கட்டுப்படுத்த இயலவில்லை. ‘இஸ்லாமிய அரசு’ ஒன்று பிரகடனப்படுத்தக் கூடிய அளவுக்கு இன்று அங்கு நிலைமை உள்ளது. ஈரானை நெருக்குவது என்பதற்குப் பதிலாக அதனுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. உக்ரேனில் கூட ருஷ்யாவை அதிரடி நடவடிக்கைகள் மூலம் எதிர்கொள்ள அமெரிக்காவுக்கும் அதன் கூட்டணிக்கும் திராணி இல்லை.
இன்னொரு பக்கம் அமெரிக்கா சென்ற பத்தாண்டுகளில் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகள் உலக அரங்கில் மட்டுமின்றி உள் நாட்டிலும் அதைப் பலவீனப் படுத்தியுள்ளது. 2008ல் அமெரிக்கா உட்பட உலக முதலாளியம் பெரிய பொருளாதாரப் பாதிப்பைச் சந்தித்தது. உலகமயத்தின் மூலம் உலகம் ஏதோ ஒரு கிராமமாக உருப்பெற்றுள்ளதாகச் சொன்னார்களே அந்தக் ‘கிராமம்’ முழுவதும் அந்த பாதிப்பிற்கு இலக்காகியது. கடன் சுமை, வேலை இன்மை, விலைவாசி ஏற்றம், நினைத்துப் பார்க்க இயலாத அளவிற்குப் பொருளாதார வேறுபாடுகள், இரக்கமற்ற கார்பொரேட் கொள்ளைகள், கார்பொரேட்களின் எடுபிடிகளாக அரசுகள் மாறி வரும் அவலம், எதிர்காலத்தில் இவை எல்லாம் மாறலாம் என்கிற நம்பிக்கை பொய்த்து, பதிலாக எதிர்காலமே சாத்தியமில்லாமல் போய்விடுமோ என்கிற அச்சத்தை உருவாக்கியுள்ள பருவ நிலை மாற்றங்கள் மற்றும் சூழல் அழிவுகள் முதலியன இன்றைய இளைஞர்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதன் விளைவாக உலகமெங்கும் மிகப் பெரிய கொந்தளிப்புகள் ஏற்பட்டன. 2010 டிசம்பரில் துனீசியாவிலும், 2011ல் எகிப்திலும் தொடர்ந்து உலகெங்கிலும் அது தீயாய்ப் பரவியது.
துனீசியாவின் பென் அலி ஜனவரி (2011) மத்தியிலும், தாஹ்ரீர் சதுக்கத்தில் போராட்டம் தொடங்கிய 18ம் நாள் எகிப்தின் முபாரக்கும் வீழ்ந்த பின் அந்தப் போராட்டங்கள் வட ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பரவியது. பஹ்ரெய்ன், ஏமன் பிறகு லிபியா, சிரியா என எல்லா நாடுகளிலும் எதிர்ப்புகள் கிளம்பின. சில நாடுகளில் அரசுகள் வீழ்ந்தன. சில நாடுகளில் அரசுகள் சலுகைகளை வழங்கின. எண்ணை வள நாடுகள் குடிமக்களின் வங்கிக் கணக்கில் காசைச் செலுத்தின..
அடுத்த முக்கிய எழுச்சி மே 15 (2011)ல் ஸ்பெயினில் வெளிப்பட்டது. தம்மைக் “கொதித்தெழுந்தவர்கள்” என அழைத்துக் கொண்ட மக்கள்திரள்கள் (multitudes) மாட்ரிடிலும் பார்சிலோனாவிலும் நகர் மையங்களில் உள்ள சதுக்கங்களைக் கைப்பற்றி அமர்ந்தன. ஊழல்கள், வேலையின்மை, வீடுகளின்மை, கட்டாய வெளியேற்றங்கள் ஆகியவற்றை எதிர்த்து மில்லியன் கணக்கில் மாட்ரிட் நகரின் ப்யூர்டா டி சோல் சதுக்கத்தில் குவிந்த ஸ்பானியர்களுக்கு இன்னும் ஏராளமானவர்கள் வெளியிலிருந்து ஆதரவளித்தனர். மக்கள் மன்றங்களில் (assemblies) விவாதங்களின் ஊடாகப் பொதுக் கருத்துக்கள் உருவாக்கப்பட்டன. ஜூனில் ஏதன்ஸ் நகரின் சின்டாக்மா சதுக்கத்தில் மக்கள் அமர்ந்தனர். கிரேக்க அரசின் சிக்கன நடவடிக்கைகளை அவர்கள் எதிர்த்தனர். அடுத்த சிலநாட்களில் டெல் அவிவின் ரோத்ஷீல்ட் பூலிவாரில் சமூகநீதி மற்றும் மக்கள் நல நடவடிக்கைகள் என்கிற முழக்கத்துடன் இஸ்ரேலியர்கள் திரண்டனர். ஆகஸ்ட் தொடக்கத்தில் ஆப்ரிக்க பித்தானியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதை ஒட்டி ரோட்டன்ஹாமில் தோன்றிய கலவரம் பின் இங்கிலாந்தின் வெறு சில பகுதிகளிலும் பரவியது.
இந்தப் பின்னணியிலும், இவற்றின் தொடர்ச்சியாகவும்தான் மே 17 அன்று வால்ஸ்ட்ரீடில் ஸுகோடி பூங்காவில் திரண்ட அமெரிக்கர்களில் அமர்வுப் போராட்டத்தைக் காண வேண்டும். போர்த்துக்கலின் ஜெரகா ஆ ரஸ்கா, மெக்சிகோவின் சோய் 32 இயக்கம், இஸ்தான்புல் தக்ஸீம் பூங்கா அமர்வு முதலானவற்ரைச் சுருக்கம் கருதி நான் இங்கே குறிப்பிடவில்லை. அக்டோபர் 15 வாக்கில் 82 நாடுகளில் கிட்டத்தட்ட 951 முக்கிய உலக நகரங்கள் இப்போராட்டங்களை எதிர்கொண்டன.
இந்தப் போராட்டங்களின் வடிவம், போராட்டக்காரர்களுக்கிடையே நிலவிய உறவின் தன்மை, போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்ட விதம், அவர்களின் மொழி, இலக்கு ஆகியவற்றில் உள்ள ஒற்றுமைகளைப் பேசுமுன் ஒன்றைத் தெளிவு படுத்திக் கொள்வது அவசியம். அவை ஒவ்வொன்றும் ஆங்காங்குள்ள உள்ளூர்த் தன்மைகளுக்குத் தம்மைத் தகவமைத்து வெளிப்பட்டன என்பதுதான் அது. அரபுலகைப் பொருத்தமட்டில் நீண்ட காலக் கொடுங்கோல் ஆட்சியாளர்களை வீழ்த்துவது அவர்களின் நோக்கம் என்று அவை வெளிப்பட்டபோதிலும் வால்ஸ்ட்ரீட் அமர்வு நிதி மூலதன அமைப்பின் கொடுங்கோன்மையை வீழ்த்துவது என வெளிப்பட்டபோதிலும் பொதுவில் அவை இன்று மக்களின் வாழ்வில் ஏற்படுத்திய எதிர்மறைத் தாக்கங்களிலிருந்து விடுபடுவது என்கிற பொது நோக்கைக் கொண்டிருந்தன. ஆக, போராட்டங்களின் தனித்தன்மைகள், உள்ளூர் பிரச்சினைகளைத் தாண்டி உலகளாவிய பொது நோக்கங்களை அவை கொண்டிருந்தன. உலகப் பொருளாதார அமைப்பு ஏற்படுத்தியுள்ள கடும் ஏற்றத்தாழ்வுகளையும் ஜனநாயக நிறுவனங்கள் இவற்றால் சிதைக்கப்படுவதையும் அவை எதிர்த்து நின்றன. “(எல்லாவற்றையும் சுருட்டிக் கொள்ளூம்) ஒரு சதத்தினருக்கு எதிராக (எல்லாவற்றையும் இழந்த) நாங்கள் 99 சதம்” என கூடி இருந்தவர்கள் முழங்கினர். “உண்மையான ஜனநாயகம்” கோரினர்.
நகரத்தின் மையமான வெளி ஒன்றைக் கைப்பற்றி வெளியேறாமல் அமர்வது (occupation) என்பது உலகளாவிய இந்தப் போராட்டங்களின் பொதுத்தன்மைகளில் ஒன்று. பதினைந்தாண்டுகளுக்கு முன் உலகமயச் செயற்பாடுகளை எதித்த போராட்டங்கள் ஒரு வகையில் ஒரு ‘நாடோடித் தன்மையை’ப் பெற்றிருந்தது. உலக மய நிறுவனங்கள் கூடும் இடங்களுக்குச் சென்று அங்கு ஆர்பாட்டங்களை நிகழ்த்துவது என்பது இன்று மாறி, இத்தகைய நாடோடித் தன்மைக்குப் பதிலாக ஓரிடத்தில் இருந்து போராடும் ‘அமர்வுத் தன்மையை’ (sedentary) இன்றைய போராட்டங்கள் எடுத்தன. குறிப்பான தலைமை உருவாவதை இவை பிரக்ஞை பூர்வமாகத் தவிர்த்தன. மிஷேல் ஹார்ட், அந்தோனியோ நெக்ரி, ஸ்லாவோக் சிஸெக், காலே லாஸ்ன், மிகா வைட் முதலான இன்றைய சிந்தனையாளர்கள் போராட்டத்தை ஆதரித்து முழங்கினாலும், முன்னெடுத்துச் சென்றாலும் அவர்களும் கூட இங்கே தலைமை தாங்க அநுமதிக்கப்படவில்லை. ஒரு மையப்படுத்தப்பட்ட அதிகாரம் என்பதைச் சுட்டும் ஆணிவேர் என எதையும் அடையாளப் படுத்த இயலாத, ஆணி வேரே இல்லாத “புல் வடிவ” (rhizomatic movement) அமைப்பைக் கொண்டதாக இவை அமைந்தன.
பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்குப் பதிலாக, எல்லோரும் பங்கேற்று கருத்தொருமிப்பின் அடிப்படையில் முடிவு எடுக்கும் “மக்கள் திரள் அவை” (multitude form) என்கிற வடிவை அவை எடுத்தன.. நவ தாராளவாதப் பொருளாதார எதிர்ப்பு, உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்டல் என்பதைத் தாண்டிய எந்த மையமான கருத்தியலையுங் கூட இந்த அமர்வுப் போராட்டங்கள் கொண்டிருக்கவில்லை.
இத்தகைய நடைமுறைகள் ஒரு உண்மையான ஜனநாயகத்தையும், பன்மைத்துவத்தையும் இந்த அமர்வுப் போராட்டங்களுக்கு அளித்தன. சற்றே மாறு பட்ட கருத்துடைய பல்வேறு சிறு இயக்கங்கள் இணந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யவும் இவை வழி வகுத்தன.
எனினும் இத்தகைய அமர்வுப் போராட்டங்கள் எதைச் சாதித்தன என்கிற கேள்வி இருக்கத்தான் செய்கிறது. பல ஆயிரக் கணக்கான மக்கள் ஓரிடத்தில் கூடி மாதக் கணக்கில் போராடுவது, பொது முடிவுகளை எடுப்பது, மருத்துவம், உணவு முதலான பிரச்சினைகள் என்பன முக்கிய சிக்கல்களை. ஏற்படுத்தவே செய்தன. சென்னை மெரீனா போன்ற இடங்களில் அவை வன்முறையாகக் கலைக்கவும் பட்டன.
அமர்வுப் போராட்டங்கள் உடனடியான எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடவில்லை ஆயினும் ஆயுதப் போராட்டங்கள், சிறை நிரப்பும் போராட்டங்கள் முதலான மரபுவழிப் போராட்டங்களும் கூட எல்லாப் பிரச்சினைகளையும் எல்ல்லா நேரங்களிலும் தீர்த்துவிடவில்லை என்பதும் கவனத்துக்குரியது.
எனவே..
புதிய நூற்றாண்டில் உருவாகியுள்ள “புதிய உலகின்” அரசியலைப் புரிந்து கொள்ள ஏதுவாக ஒரு சில நிகழ்வுகளை மட்டும் இங்கே சுட்டிக்காட்டியுள்ளேன். அரசியல் என்பது பொருளாதாரத்துடன் பிரிக்க இயலாமல் பின்னிப் பிணைந்தது என்பது மார்க்சியம் முன்வைக்கும் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று. இந்த ஒரு துருவ உலகின் பொருளாதாரச் செயல்பாடுகள், திறந்துவிடப்பட்ட சந்தை, கல்வி, மருத்துவம் என அனைத்தும் பன்னாட்டுக் கொள்ளைக் களமாக்கப்பட்ட நிலை, குடிமக்கள் சமூகப் பாதுகாப்பை இழந்து நிற்றல், நிரந்தர வேலை, ஓய்வூதியம் என்பதெல்லாம் பொருளற்றுப் போனது ஆகியவற்றுடன் இன்றைய அரசியலை நாம் பொருத்திப் பார்க்க வேண்டும்.
சோவியத் யூனியன் காலத்திய பனிப்போர் முடிவுற்றதோடு உலகத்திற்கு நல்ல காலம் பிறந்துவிட்டது எனவும், இனி போர் நெருக்கடிகள் இருக்காது எனவும் சொல்லப்பட்டதெல்லாம் எத்துணை அபத்தம் என்பதற்கு கடந்த கால் நூற்றாண்டு உலக வரலாறு சாட்சியம் பகர்கிறது. ஒருவேளை சோவியத் யூனியன் வலுவாக இருந்திருக்குமானால் வளைகுடாப் போர்கள், ஐ.எஸ் பயங்கரவாதம் முதலியன சாத்தியமில்லாமல் ஆகியிருக்குமே என்கிற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை.
ஏதோ ஒரு காரணம் சொல்லி ஒரு இறையாண்மையுடைய நாட்டுக்குள் நுழைந்து அதை அழிப்பது, பின் நாங்கள் தவறு செய்துவிட்டோம், நாங்கள் வைத்த குற்றச்சாட்டு தவறு என உணர்ந்து கொண்டோம் எனப் புன்னகைப்பது என்கிற இன்றைய நிலை ஒரு துருவ உலகு எத்தனை ஆபத்தானது என்பதற்கு ஒரு சான்று. பட்டினிச் சாவுகள், ஏதுமற்ற அகதிகளாக மக்கள் உலகெங்கும் அலைதல், மேலும் மேலும் வேலையின்மை பெருகுதல், சுற்றுச் சூழல் பாழ்படுதல், அழிவாயுதங்களின் உற்பத்தி பெருகுதல்… எதைத்தான் சோவியத்துக்குப் பிந்திய புதிய உலகம் தடுத்து விட்டது? இறையாண்மை உடைய நாடுகளுக்குள் புகுந்து ட்ரோன் தாக்குதல்களை நடத்தி அம்மக்களைக் கொன்று குவிப்பது என்பதெல்லாம் இன்றைய மாற்றங்கள்தானே? இப்படிச் சொல்வது பனிப்போர்க் காலத்தையோ, சோவியத்தையோ கொண்டாடுவது அல்ல. தான் அழிவதற்கான காரணிகளை சோவியத் அதற்குள்ளேயே கொண்டிருந்தது. இன்னும் கூட ரஷ்யா, சீனா, லத்தீன் அமெரிக்க நாடுகளில் சிலா ஆகியனதான் அமெரிக்க மேலாண்மைக்கு ஒரு சவாலாக உள்ளன என்பதையும் நாம் கவனிக்கத் தவறக் கூடாது. சோவித்துக்குப் பிந்திய இன்றைய உலகம் அன்றைய பனிப்போர்க் காலத்தைக் காட்டிலும் இன்னும் கொடியது, அறக் கேடானது என்பதுதான்.