நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 5 -‘தீராநதி’, மே 2017
(அசோகப் பேரரசின் உருவாக்கத்தில் பவுத்த தம்மத்தின் இடம் என்ன? இது ஒரு முக்கியமான கேள்வி. அரசுருவாக்கம் குறித்து ஆய்வோர் மட்டுமின்றி பவுத்தவியலில் ஆர்வமுடையோருக்கும் சவாலான ஒரு கேள்வி. அசோகரின் அணுகல்முறை உண்மையிலேயே பவுத்த வரையறைக்குள் அடங்குமா? அவரை ‘பவுத்த வகுப்புக்குள் அடங்கிய ஹிந்து’ என உ.வே.சாமிநாத அய்யர் போன்றோர் சொல்வதை எங்ஙனம் எடுத்துக கொள்வது?- அசோகர் குறித்த கட்டுரைத் தொடரின் இறுதி அத்தியாயம் )
அசோகர் பவுத்tதத்தை ஏற்றவர். பவுத்தம் பரப்புவதற்கெனத் தன் பிள்ளைகளை அர்ப்பணித்தவர். மூன்றாம் பவுத்தப் பேரவையைக் கூட்டி பவுத்தத்தை இறுக்கமான தேரவாத அடையாளத்துடன் வரையறுத்தவர். தனது சாசனங்களின் ஊடாக பவுத்த சங்கங்களில் உள்ள பிக்குகளுக்கு இன்னின்ன பௌத்த அடிப்படை நூல்களைக் கற்க வேண்டும் என அறிவுரைக்கும் தகுதியை வரித்துக் கொண்டவர், சங்கங்களில் பிளவுகளைச் செய்வோர் வெளியேற்றப்படுவர் என எச்சரித்தவர். பவுத்த புனிதத் தலங்களுக்குச் சென்று சேவித்து வந்தவர். அந்தத் தலங்களுக்கு வரிச் சலுகைகளை அளித்தவர் என்பதையெல்லாம் கண்டோம்.
இவை அனைத்தும் அசோகர் என்கிற மனிதரின் தம்மக் கடப்பாடுகளைப் புரிந்து கொள்ள நமக்குப் போதுமானவையாக இருக்கலாம். ஆனால் இவை எந்த வகையில் அவரது ஆளுகைக்கும், அவரது பேரரசு உருவாக்க முயற்சிகளுக்கும் அடிப்படையாகவும் துணையாகவும் இருந்தன என்பதைப் புரிந்து கொள்ள நாம் இன்னும் கொஞ்சம் ஆழமாகவும் நுணுக்கமாகவும் அவரது சாசனங்களைக் கற்கவும் ஆய்வு செய்யவும் வேண்டி உள்ளது. மேலோட்டமாகத் தெரியும் சில முரண்பாடுகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டி உள்ளது.
எடுத்துக்காட்டாகச் சில முரண்கள் அல்லது இயல்பாக நமக்கு உருவாகும் அய்யங்களைக் காண்போம். மரணதண்டனைக் கைதிகள் பால் அசோக ஆளுகை காட்டிய கருணைப் பார்வை வரலாற்றில் ஓர் அதிசயம் எனப் பார்த்தோம். மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மேல் முறையீடு செய்யும் வாய்ப்பை அளித்தல், சாத்தியமில்லாதபோது அவர்கள் தம் இறுதிக் கடப்பாடுகளையும் அறக் கடமைகளையும் நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளை அளித்தல் முதலியன அவர் நடைமுறைப்படுத்திய சீர்திருத்தங்கள். எனினும் நமக்கொரு கேள்வி எழுகிறது. ஏன் அவர் மரண தணடனையையே ரத்து செய்திருக்கக் கூடாது?
மரண தண்டனை ஒழிப்பு என்பதெல்லாம் மிக நவீனமான சிந்தனை. இதனை கிறித்து அப்தத்திற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னதாகக் கொண்டு சென்று இத்தகைய கேள்வியை எழுப்புவது எவ்வகையில் பொருத்தம் என்பது ஒரு நியாயமான கேள்வியாக இருக்கலாம். ஆனால் பவுத்த தம்மத்தில் அப்படியான ஒரு கருத்தாக்கமோ நடவடிக்கையோ அப்படி ஒன்றும் காலவழு எனப் புறக்கணிக்கக் கூடியதல்ல. பவுத்தம் என்றைக்கும் மரண தண்டனை முதலானவற்றை ஏற்றுக்கொண்டதல்ல. அதே போல புத்த பகவன் கரு உயிர்த்த திருத்தலத்திற்குப் புனித யாத்திரை சென்ற அசோகர் அந்தத் தலம் அமைந்திருந்த ஊருக்கு வரிச்சலுகை அளித்தார் எனப் பார்த்தோம். பலி எனும் தல வரியைக் குறைத்தார். பாகத்தை எட்டில் ஒரு பாகமாக ஆக்கினார். எனினும் முழுமையாக அதை ரத்து செய்யத் துணியவில்லை.
எல்ல மத நம்பிக்கைகளையும் கருத்து வேறுபாடுகளையும் மதிக்க வேண்டும் எனத் தன் மக்களை நோக்கி வேண்டிக் கொண்ட அசோகர் அந்த உரிமையைத் தன் சங்கத்தவர்க்கு அளிக்கத் தயாராக இல்லை. மத அடிப்படைகளில் கருத்து வேறுபாடுகளை உருவாக்கிப் பிளவுறுத்த நினைப்பவர்களுக்குச் சங்கத்தில் இடமில்லை என்றது இன்னொரு முரண். இப்படி நாம் வேறு சிலவற்றையும் குறிப்பிட முடியும்.
அசோகச் சாசனங்களின் ஊடாக சம கால அரசியல் மற்றும் சமூகச் சூழல்களின் சில நுணுக்கங்களையும் நம்மால் ஊகிக்க இயலும். இந்தச் சாசனங்கள் மூன்று வகைப்பட்டவையாக உள்ளன. விரிவான பாறைச் சாசனங்கள் (Major Rock Edicts), சிறு பாறைச் சாசனங்கள் (Minor Rock Edicts), தூண் சாசனங்கள் (Pillar Edicts) என ஆய்வாளர்கள் இவற்றைப் பிரிகின்றனர். இச்சாசனங்கள் இந்தியத் துணைக் கண்டத்திற்குத் வட மேற்கில் அமைந்துள்ள தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தகாரில் தொடங்கி கங்கைச் சமவெளியிலும் தீபகற்ப இந்தியாவெங்கிலும் விரவிக் கிடக்கின்றன. கந்தகாரில் வாழ்ந்தது ஹெல்லெனியக் குடியிருப்பினர். இப்பகுதியில் உள்ள சாசனங்கள் அராமிக் மற்றும் கிரேக்க மொழியில் அமைந்துள்ளன. இதைச் செதுக்கிய கற்தச்சர் கபாடா எனத் தன் பெயரை கரோஷ்தி எழுத்துருவில் (script) வடித்துள்ளார்.
தீபகற்ப இந்தியாவில் அமைந்துள்ள சிறு பாறைச் சாசனங்கள் பிராகிருத மொழியில் பிராமி எழுத்துருவில் வடிக்கப்பட்டுள்ளன. பின்னாளில் இவ்வாறு அறிமுகமான பிராமி எழுத்துரு தமிழ் பிராமி எனத் தென்னிந்தியக் கல்வெட்டுகள் உருவாக்கத்தில் இடம் பெற்ற வரலாற்றை நாம் அறிவோம்.
தீபகற்ப இந்தியாவில் (இந்தியத் துணைக் கண்டத்தின் தென்பாதி) இருந்த சாசனங்கள் பலவும் ‘பெரும்கற்கால மையங்களிலேயே’ (Megalithic Cites) அமைந்துள்ளன. பெரும்கற்காலம் என்பதை அரசுருவாக்கத்திற்கு முந்தைய அல்லது முழுமையான அரசுருவாக்கம் உருப்பெற்றிராத காலகட்டம் என்பர். இவை எதுவும் அச் சாசனங்கள் வடிக்கப்பட்ட காலத்தில் பவுத்தம் செழித்திருந்த பகுதிகளாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமராவதி போன்றவையும் கூட பிற்காலத்தில்தான் முக்கிய பவுத்த மையங்கள் ஆயினவே ஒழிய அசோகச் சாசனங்கள். வடிக்கப்பட்ட காலத்தில் அவை பவுத்த மையங்களாக உருப்பெறவில்லை. அப்படியான ஒரு மையமாக உருப்பெறும் சாத்தியமுள்ள பகுதிகளாக வேண்டுமானால் அவை அப்போது இருந்திருக்கலாம். இன்னொன்றும் இங்கே கருதத்தக்கது. தற்போதைய ஆந்திரம், தெலங்கானா, கர்நாடக மாநிலங்களில் உள்ள இப்பகுதிகள் அன்றைய அசோகப் பேரரசின் கவனத்துக்குரிய பகுதிகளாக இருந்ததற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. ஒரு பேரரசுக்குரிய வளத்திற்கும், வருமானத்திற்கும் மிக அடிப்படையாக இருக்கும் நீர்வளம் மிக்க விவாசாய நிலங்களும், தங்கச் சுரங்கங்களும் நிறைந்த பகுதிகளாகவும் அவை இருந்தன. அரசுருவாக்கம் முழுமை அடைந்திராத இப்பகுதிகளில் அப்போது அதிகாரம் என்பது அவ்வப்பகுதி சார்ந்த குறுநிலத் தலைவர்களிடமே (chieftains) இருந்தது.
அதே நேரத்தில் இன்னொரு பக்கம் அசோகப் பேரரசின் கங்கைச் சமவெளிப் பகுதிகள் வளர்ச்சியடைந்த அரசுருவாக்கத்துடன் சில நூற்றாண்டுகளாகவே நந்தர்கள், மவுரியர்கள் ஆகியோரின் ஆட்சியின் கீழ் இருந்தன. மிக முக்கியமான தத்துவ, இலக்கிய, இதிகாச உருவாக்கங்கள், நிலையான படைகள், படைஎடுப்புகள் எனப் பல்வேறு வகைகளில் வளர்ச்சியுற்ற பகுதிகளாகவும் இவை இருந்தன.
ஆக ஒன்றை நாம் மனங்கொள்ளல் வேண்டும். அசோகப் பேரரசு என்பது, பண்பாடு, அரசுருவாக்கம், சமூக அமைப்பு, மொழி ஆகியவற்றால் தமக்குள் பல்வேறு வகைகளில் வேறுபட்டிருந்த (diversity) பல புவிப் பகுதிகளின் தொகுப்பாக இருந்தது என்பது கவனத்துக்குரியது.
இந்தப் பின்னணியில் நாம் அசோகரின் சிறு பாறைச் சாசனங்களைச் சற்று உற்று நோக்குவோம். பெரும்பாறைச் சாசனகளிலிருந்து இவை ஓரம்சத்தில் வேறுபட்டுள்ளன. பெரும்பாறைச் சாசனங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான உள்ளடக்கத்துடன் அமைந்துள்ளன. ஆனால் சிறுபாறைச் சாசனங்கள் சற்றே வேறுபட்ட 17 வடிவங்களில் அமைந்துள்ளன. இன்னும் இதுபோல பல சாசனங்கள் கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இவற்றில் சில சுருக்கமாக உள்ளன. சில அதிகாரிகளை நோக்கிச் சொல்பவையாக உள்ளன. சில சாசனங்கள் சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. சிலவற்றில் மொழியும் வேறுபட்டுள்ளது.
முற்பாதி கிட்டத்தட்ட எல்லா சாசனங்களிலும் ஒரே மாதிரியாக உள்ளன. அடுத்த பகுதிகள் வேறுபட்டுள்ளன.. கர்னூல், பெல்லாரி, சித்திரதுர்கா போன்ற கர்நாடக மாநிலப் பகுதிகளில் உள்ள ஏழு சாசனங்களில் மட்டும் இரண்டாம் பகுதி கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. மூன்றாம் பகுதி சித்திரதுர்காவில் உள்ள சாசனத்தில் மட்டும் காணப்படுகிறது. இவை எதுவும் துங்கபத்திரா ஆற்றோரங்களில் காணப்படவில்லை. பிரம்மகிரியில் உள்ள ஒரே ஒரு சாசனத்தில் மட்டும் அதைச் செதுக்கிய கபாடா எனும் கற்தச்சர் கரோஷ்டி மொழியில் கையொப்பமிட்டுள்ளார்.
முதல் பகுதி அதிகாரிகளை நோக்கிச் சொல்லப்படுகிறது. அதிகாரிகள் அதில் காணப்படும் செய்திகளை மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. இதில் அசோகர் தன்னை ஒரு (அவுத்த) உபாசகராக முன்நிறுத்திக் கொள்கிறார். சரியாகப் பொருள் கொள்ள முடியாத ஒரு சொற்றொடர் இதில் காணப்படுகிறது. “இதுநாள் வரை ஜம்புதீபத்தில் (இந்தியாவில்) உள்ள கடவுளர்கள் மக்களோடு இணைந்திருக்கவில்லை. இப்போது அவர்கள் மக்களோடு கலந்துள்ளனர். என்னுடைய முயற்சியில் விளைந்தது இது.”- இதற்கு இப்படித்தான் பொருள் கொள்ள இயலும். “எனது தம்மப் பணிகளின் ஊடாக தம்மக் கருத்துக்கள் மக்கள் மத்தியில் பரவி, அதனூடாக கடவுளர்கள் அவர்களை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளனர்” என்பதே. அதற்கடுத்த வரிகளில் தம்மத்துக்குரிய நன்னடத்தைகள் யாவை எனச் சுருக்கமாகச் சொல்லப்படுகிறது.
இரண்டாவது பகுதி கிராமப்புரத்தில் பணியாற்றும் ராஜுகர் எனும் அதிகாரிகளை நோக்கிச் சொல்லப்படுகிறது. முரசறைந்து மக்களைக் கூட்டி இவற்றை மக்களுக்கு கூறவேண்டும் என அவர்களுக்கு ஆணையிடப் படுகிறது. வேறொன்றுமில்லை. பெற்றோர்க்குப் பணிதல், உயிர்களிடத்தில் அன்பு செய்தல், உண்மை பேசுதல் முதலான பொதுவான அறிவுரைகள்தான் இவை. எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தினரையும் நோக்கியதாக அல்லாமல் எல்லோருக்குமான பொது அறிவுரைகளாகவே இவை உள்ளன என்பது கவனத்துக்குரியது.
மூன்றாவது பகுதியும் கிட்டத்தட்ட இதே நற்பண்புகளை வற்புறுத்துபவைதான். ஆனால் இவை யானைப் பாகன்கள், வருங்காலம் உரைப்பவர்கள், எழுத்து வடிப்பவர்கள் (scribes) முதலான சில குறிப்பான தொழில் வல்லுனர்களை நோக்கிச் சொல்லப்படுகின்றன. இவர்கள் தம்மிடம் பயில்கிறவர்களுக்கு அவர்தம் தொழிலோடு வேறு எவற்றையெல்லாம் பயிற்றுவிக்க வேண்டும் என்பதற்கு இவற்றில் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. பெரியோர்க்கும், தன்னைப் பணியில் வைத்திருப்பவர்களுக்கும் பணிந்து நடத்தலை பயிற்சியாளர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும்; குடும்பங்களில் உறவினர்கள் ஒருவரை ஒருவர் மதிக்கச் சொல்லித்தர வேண்டும் முதலான கருத்துக்கள் இப்பகுதியில் வற்புறுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் தீபகற்ப இந்தியாவிலும், தீபகற்ப இந்தியாவை நோக்கிய பாதைகளிலும் காணப்படுகின்றன.
சில முக்கியமான நகர்ப்புற (metropolitans) உருவாக்கங்கள் நடந்துகொண்டிருந்த காலம் அது. அரசுருவாக்கம் முழுமை பெறாத சூழலில் தனது ஆரியபுத்ரர்கள், குமாரார்கள், மகாமாத்திரார்கள், ராஜூகர்கள் முதலான அதிகாரிகள் மற்றும் உள்ளூர் ஆட்சியாளர்கள் ஆகியோரின் ஊடாக அசோகப் பேரரசுக்குள் அப்பகுதிகள் இணைக்கப்பட்டுக் கொண்டிடிருந்த காலம் அது. உள்ளூர்த் தலைவர்களையும் பேரரசையும் இணைக்கும் பாலமாக அசோகப் பேரரசின் இந்த அதிகாரிகள் அமைந்திருந்தனர்.
தொழில் செய்வோர்களைப் பற்றிச் சொல்ல வரும்போது எழுத்துரு வடிப்பவர்களும் முக்கியமாகக் குறிப்பிடப்படுவது கவனிக்கத் தக்கது. பிராமி எழுத்துக்களில் கல்வெட்டுக்கள் உருவாகிக் கொண்டிருந்த காலம் அது. கந்தகாரில் அராமிக் மற்றும் கிரேக்க மொழியில் இந்தச் சிறுபாறைச் சாசனம் வடிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டேன். அருகிலுள்ள மக்களுக்கும் இவை தெரிவிக்கப்பட வேண்டும் என்கிற அடிப்படையில் இரு மொழிகளிலும் இது வடிக்கப்பட்டதாக ஊகிக்கலாம். அராமிக்கில் வடிக்கப்பட்ட சாசனத்தில் தனது நல்லொழுக்க போதனைகளால் கடவுளர் மக்களை நெருங்கி வந்ததைச் சொல்லும்போது நல்லொழுக்கமும் இறையச்சமும் உடையோர்க்கு இறுதித்தீர்ப்பு கிடையாது என்றொரு வாசகம் வருகிறது. அராமிக் மொழி பேசுகிற ஸரோஷ்ட்ரிய நம்பிக்கையாளர்கள் இறுதித்தீர்ப்பு எனும் கருத்தாக்கத்தை நம்புகிறவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
சுருங்கச் சொல்வதானால் இப்படி முன்வைக்கலாம். தனது பவுத்த நம்பிக்கைகளைப் பவுத்த நம்பிக்கை இல்லாதவர்களிடம் கொண்டு செல்வதில் அசோகச் சாசனங்கள் முனைப்புக் காட்டவில்லை. போரும் வன்முறைகளும் இல்லாமல் தான் ஒருங்கிணைக்க விரும்பும் பேரரசுக்கு இப்படியான முயற்சிகள் ஒவ்வாது என்பதை அசோகர் நன்றாகவே உணர்ந்திருந்தார். மூன்றாம் பாறைச் சாசனம், ஒன்பதாம் தூண்சாசனம் ஆகியவற்றில் இறுதி நோக்கம் பற்றிச் சொல்கையில் சொர்க்கம் அடைதல் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. ‘சொர்க்கம்’ எனக் குறிப்பிடத் தயங்காத அசோகச் சாசனங்கள், பவுத்தத்தின் இறுதிக் குறிக்கோளாகிய ‘நிர்வாணம்’ பற்றிக் குறிப்பிடச் சிரத்தை எடுத்துக் கொள்ளாதது கவனிக்கத் தக்கது.
மக்கள் மத்தியில் தம்ம உபதேசம் செய்வதற்கு அசோகர் ‘தம்ம மகாமாத்திரர்கள்’ எனப்படும் அரசு அதிகாரிகளைத்தான் பயன்படுத்தினாரே ஒழிய புத்த பிக்குகள் அப்பணிக்குப் பயன்படுத்தப்படவில்லை என்பதும் குரிப்பிடத்தக்கது.
இப்படி நிறையச் சொல்லலாம். பேரரசு உருவாக்கம் நிகழ்ந்து கொண்டிருந்த காலம் அது. இதுகாறும் முழுமையான அரசுருவாக்கங்கள் நிகழாதவையாகயும், மொழி, பண்பாடு, நம்பிக்கைகள் ஆகியவற்றால் பிரிந்தும் கிடந்த பிரும்மாண்டமான ஒரு புவிப் பகுதியை வன்முறையின்றி ஒரு குடையின் கீழ் ஒரு பேரராசாக உருவாக்குவது என்கிறபோது அது இரு பணிகளை ஒரு சேர நிகழ்த்த வேண்டியதாக இருந்தது. அரசு நிர்வாகத்தை விரிவாக்குவது என்பது ஒன்று. மற்றது மக்களிடம் நேரடியாகப் பேசி அவர்களை மனப்பூர்வமாக ஏற்க வைத்துப் பேரரசுக்குள் இணைக்க (persuasive assimilation) வேண்டியது என்பது. தனது பவுத்தக் கருத்துக்களை அவர்களின் ஒப்புதல் இல்லாமலேயே மக்கள் மீது திணித்து ஒரே மாதிரியான ஒற்றைக் கலாச்சாரச் சமூகம் ஒன்றை நிர்மாணிப்பது என்பது அவரது நோக்கமாகவோ, திட்டமாகவோ இல்லை.
அசோகர் பவுத்தத்தை ஏற்றுக் கொண்ட தனி மனிதர் மட்டுமல்ல. ஒரு பேரரசை உருவாக்கியவரும் கூட. கலிங்கப் போர் என்பது அவரது எட்டாவது ஆட்சியாண்டில் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் இறுதிவரை அவர் இந்தப் பேரரசு இணைப்பிற்குப் போர் நடவடிக்கையை ஒரு கருவியாகப் பயன்படுத்தவில்லை. அவர் காலத்தில் ஓங்கியிருந்த மதங்களில் ஒன்றான பவுத்தத்தை அவர் ஏற்றுக் கொண்டார். பவுத்தத்தை ஏற்றுக் கொண்டதற்காக அவர் அகிம்சையைக் கடைபிடித்தாரா, இல்லை அகிம்சையைக் கடைபிடிப்பதற்காக அவர் பவுத்தத்தை ஏற்றுக் கொண்டாரா என்பதல்ல பிரச்சினை. ஏற்கனவே பவுத்தத்தில் பற்றிருந்த போதும் கலிக்கப் போருக்குப் பின் அவர் பவுத்தத்தில் தீவிர ஆர்வம் கொண்டவரானார். தனது அரசதிகாரத்தைக் கொண்டு அந்தக் கொள்கைகளைப் பரப்பவும் செய்தார். ஆனால் யார் மீதும் அதை அவர் திணிக்க வில்லை. அவரவர் நம்பிக்கைகள் அவரவர்க்கு எனும் கொள்கையுடனேயே அவரது விரிவாக்கம் அமைந்தது எனலாம்.
தனது நம்பிக்கைகளை மக்கள் மீது திணிப்பது அவர் நோக்கமாக இல்லை என்பது ஒரு பக்கம். பல்வேறு பண்பாடுகளும் உள்ள ஒரு பேரரசைக் கட்ட அதுவே அவருக்குத் தகுந்த நெறியாக மட்டுமின்றி உபாயமாகவும் அமைந்தது என்பது அவரது அணுகல்முறையின் இன்னொரு பக்கம். இதை நாம் மறக்கக் கூடாது. அசோகர் ஒரு உபாசகர் மட்டுமல்ல. அவர் ஒரு அரசர். ஒரு பேரரசர். இரண்டுக்கும் இடையில் ஒரு சமரசத்தை மேற்கொண்டவராகவே அவரைக் காண்கிறோம். அவர் தன்னை “தேவனாம்பிரியன்”, அதாவது இறைவனுக்குப் பிரியமானவன் என்றே அழைத்துக் கொண்டார். அரசை இறைமையுடன் இணைப்பது பவுத்த மரபு அல்ல. அது வைதீக மரபு. பவுத்த மரபில் அரசன் என்பவன் ‘மகா சம்மதன்’ – எல்லோருடைய சம்மதத்துடனும் தேர்ந்தெடுக்கப்பட்டவன். கலிங்கப் போரில் ஏற்பட்ட அழிவுகளைக் கண்ட குற்ற உணர்ச்சியாலேயே தான் மனம் மாறினேன் என்பதை வெளிப்படையாக அறிவித்த வகையில் ஒரு பவுத்த நெறியாளராக வெளிப்பட்டவர் அவர். எனினும் எந்தக் கலிங்க மண்ணில் அவர் நடத்திய போரழிவுகள் அவருக்கு இந்தப் பாடங்களைக் கற்பித்ததோ அந்த மண்ணில் அவரது இந்தக் கருத்துக்களைச் சாசனமாக்கி அம்மக்களிடம் மன்னிப்புக் கோர மனமில்லாத வகையில் அவர் ஒரு மன்னராகவும் இருந்தார்.
எனினும், உலக வரலாற்றில் காணக் கிடைக்காத ஒரு பேரரசராக அவர் வெளிப்படுகிறார் என்றால் அதற்கு அவரை இயக்கிய பவுத்த நெறியே அடிப்படையாக அமைந்தது என்பதை யாரும் மறுத்துவிட இயலாது.
“வரலாற்றின் பக்கங்களை நிறைக்கும் ஆயிரக் கணக்கான முடியரசர்கள், அவர்களின் கம்பீரம். கருணை, அரச பெருமிதங்கள். புனித பிம்பங்கள் ஆகியவற்றின் மத்தியில் அசோகன் என்னும் பெயர் ஒரு நட்சத்திரத்தைப் போல ஒளி வீசி நிற்கிறது” (H.G. Wells, The Outline of History). எச்.ஜி வெல்சின் இக்கூற்றை யாரும் மறுத்துவிட இயலாது.
(அடுத்த இதழில்: மணிமேகலையையும் வீர சோழியத்தையும் வாசிப்பது எப்படி?)