அப்பாவும் ஒரு கிறிஸ்தவப் பாதிரியாரும்

பாப்பாநாட்டில் ’சர்ச்’ கிடையாது. பத்து கி.மீ. தொலைவில் உள்ள ஒரத்தநாட்டுக்குத்தான் போக வேண்டும். அப்பா சர்ச்சுக்குப் போவது கிடையாது, அம்மா போவதைத் தடுப்பதும் கிடையாது.

மன்னார்குடிக்கு அருகில் உள்ள ஆதிச்சபுரம்தான் அம்மாவின் ஊர். அம்மா வீட்டில் நான் பிறந்தபோது (1949) மன்னார்குடி பங்கு கோவிலுக்கு என்னைப் பெயர் சூட்டத் தூக்கிச் சென்றுள்ளனர். திரு முழுக்கு அளிக்கும் நேரத்தில் மார்க்ஸ் எனும் பெயரை அப்பா சொல்ல அந்தப் பங்குசாமியார் (பெயர் தெரியவில்லை) அந்தப் பெயரை எல்லாம் சூட்ட முடியாது எனச் சொல்லி விட்டார். அப்படியானால் நான் இவனை எந்த மத அடையாளமும் இல்லாமலேயே வளர்த்துவிட்டுப் போகிறேன் எனஅப்பா என்னைத் தூக்கி வந்துள்ளார்.

என் அம்மா வழி தாத்தா குடும்பம் ரொம்பவும் பக்தி நிறைந்தது. ஊர்க்காரர்கள் போய்ப் பேசி பிறகு ஏதோ சமாதனம் ஆகி இந்தப் பெயரைச் சூட்டியுள்ளனர்.

#######

மார்க்ஸ் எனப் பெயர் வைப்பதில் சிக்கல் எழுந்தது நான் விவரம் அறியாதபோது நடந்தது. விவரம் அறிந்தபின்னும் இப்படி ஒரு நிகழ்ச்சி. சுமாரான மதிப்பெண்களுடன் 11ம் வகுப்பு (அன்றைய SSLC) பாஸ் பண்ணி இருந்தேன் (1963). பி.யூ.சி இல் சேர மூன்று கல்லூரிகளுக்கு விண்ணப்பித்திருந்தேன். முதலில் திருச்சி செய்ன்ட் ஜோசப் கல்லூரியிலிருந்து சேர்க்கைக் கடிதம் வந்திருந்தது.

கல்வித்துறையில் அனுமதிபெற்று குறை வயதில் (under age) தேர்வு எழுதியவன் நான். வகுப்பிலேயே நான்தான் சின்னப் பையனாக இருப்பேன். ஜோசப் கல்லூரி முதல்வர் ஒரு பாதிரியார். புன்னகைத்தவாறே என் சான்றிதழ்களைப் புரட்டியவர் திடீரெனக் கடு கடு ஆனார். “நீ ரோமன் கத்தோலிக்கன்தானே?” எனச் சீறினார். ஆம் என்று தலை அசைத்தேன். “இது என்ன பெயர்? மார்க்ஸ்,லெனின் என்றெல்லாம் எந்தச் சாமியார் உனக்குப் பெயர் வைத்தார்?” என்றெல்லாம் கடு கடு தொடர்ந்தது. அப்பா எரிச்சலானார். அவருக்கு ஒன்றும் செயின்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ப்பதில் பெரிய ஆர்வமில்லை. அம்மாவின் பிடிவாதத்தில்தான் வந்திருந்தார்.

நான் இடம் கிடைக்காமல் போய்விடுமோ எனப் பயந்து போனேன். என் கண்கள் கெஞ்சின. அப்பா அமைதியாக நின்றிருந்தார். “போ, ரெக்டாரைப் பார்த்து அனுமதிக் கடிதம் வாங்கி வா. அப்புறம் பணம் கட்டலாம்,”

ரெக்டார் அலுவலகத்திற்குப் போனோம். மாலை 4 மணிக்குத்தான் பார்க்கலாம் என்றார்கள். அப்பா என்கையைப் பற்றிக் கொண்டார். “போகலாம் வா” என்றார். நான் தயங்கினேன்.”அட வாடா” என்று இழுத்துச் சென்றார்.

வீட்டிற்குவந்தால் தஞ்சாவூர் சரபோஜி கல்லூரியிலிருந்து சேர்க்கைக் கடிதம் வந்திருந்தது. இன்றுநினைத்தாலும் இனிக்கும் ஒரு நான்காண்டு கால கல்லூரி வாழ்க்கை எனக்கு வாய்த்தது.

இதுநடந்து அரை நூற்றாண்டு ஆகி விட்டது. இப்போதெல்லாம் கிறிஸ்தவப் பாதிரிமார்கள் அப்படி இருப்பதில்லை. 1970 களில் உருவான கிறிஸ்தவ விடுதலை இறையியல் அவர்களில் பெரிய மாற்றங்களை இன்று ஏற்படுத்தியுள்ளதும் அதற்கொரு முக்கிய காரணமாக இருக்கலாம்..

##########

அப்பாவைச் சந்திக்கப் பலரும் வருவார்கள். பெரும்பாலும் கம்யூனிஸ்டுகள், அவர்களில் பலர் மலேசியாவில் அப்பாவுடன் இயக்கத்தில் இருந்தவர்கள்; ஓரிருவர் அப்பாவைப் போலவே நாடு கடத்தப்பட்டவர்கள். இன்னும்சிலர் உள்ளூர் கம்யூனிஸ்டுகள். அப்புறம் நிறைய திராவிட இயக்கத்தவரும் அப்பாவுக்கு நண்பர்கள்.

வீட்டில் பெரிதாக சாமி படங்கள் , ஜெபம் சொல்லுதல் எல்லாம் கிடையாது. அம்மா கிறிஸ்துமஸ் முதலான தினங்களில் ஒரத்தநாடு சர்ச்சுக்குப் போவாங்க. அருகில் உள்ள வீரக் குறிச்சி அந்தோனியார் கோவிலுக்கும் அவ்வப்போது போய் வருவதுண்டு. நானும் தம்பி தங்கைகளும் கிறிஸ்துமஸ் போன்றநாட்களில் அம்மாவுடன் போய் வருவோம்.

பாப்பாநாடு எங்களின் பூர்வீகக் கிராமம் கிடையாது. அங்கு கிறிஸ்தவக் குடும்பங்களும் அதிகமில்லை.எனது பழக்கங்கள் யாவும் இந்து மற்றும் முஸ்லிம் நண்பர்களுடன்தான். கடவுள் பக்தி எனக்கு இருந்ததில்லை. கடவுள் வெறுப்பும் இருந்தது கிடையாது. கடவுள் இருந்தா நல்லது; இல்லாவிட்டால் அதைவிட நல்லது என்கிற ரீதியில் வளர்ந்தேன்.

#############

அப்பா மலேசியாவிலிருந்து தப்பி வந்தபின் அவரை நாடு கடத்தியதாக அன்றைய மலேசிய பிரிட்டிஷ் அரசு அறிவித்ததை நான் பலமுறை குறிப்பிட்டுள்ளேன். அப்பா இங்கு வந்தபின்தான் திருமணமாகி நான் பிறந்தது.

அப்பா வந்த சில மாதங்களுக்குப் பின் அப்பாவுடன் இயக்கத்தில் இருந்த சுப்பையாவை நாடு கடத்தினார்கள். அந்தக் கதையை நான் ஒரு மலேசிய இதழில் விரிவாக எழுதியுள்ளேன். இரண்டு தலைமுறைகளுக்கு முன் திண்டுக்கல் மணப்பாரைப் பகுதியிலிருந்து கூலியாய்ச் சென்ற தலித் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் சுப்பையா. அவர் தம்பி முத்துச்சாமி. சின்ன வயதில் தாயை இழந்தவர்கள். அவர்களின் அப்பா பழனியாண்டி நோய்வாய்ப்பட்டு இறந்த பின், அப்போது மலேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் மிகவும் செல்வாக்குடன் இருந்த அப்பாவின் வளர்ப்புப் பிள்ளைகள் ஆயினர். பிள்ளைகள் எனச் சொல்கிறேனே ஒழிய அப்பவுக்கும் சுப்பையா அண்ணனுக்கும் வயது வித்தியாசம் ஒரு பத்துஅல்லது பன்னிரண்டு இருக்கலாம். அவ்வளவுதான்.

சுப்பையா நாடு கடத்தப்பட்டு வந்த சிறிது காலத்தில் முத்துச்சாமியும் இங்கு வந்துவிட்டார். மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்தவர்கள். இந்த நாட்டில் அவர்களுக்கு யாரும் கிடையாது. அப்பாவே பெரும் வறுமையில் இருந்தபோதும் அவர்களையும் தன் குடும்பத்தோடு வைத்துக் கொண்டார்.

சுப்பையா அண்ணனுக்குத் திருமணம் செய்ய முயற்சித்தார் அப்பா. யாரும் பெண் கொடுக்கத் தயாராக இல்லை.எனக்கு அக்கா முறையுள்ள ஒருவர். பெயர் மேரி அந்தோணியம்மாள். யாரும் இல்லாதவர். ஒருஉறவினர் வீட்டுக்கு வந்திருந்தார், அப்பா சுப்பையாவை அழைத்துச் சென்று அவர் முன் நிறுத்தி, “பிடித்திருக்கிறதா?” என்று கேட்டார். அவர் சம்மதித்தவுடன் உள்ளூர் தி.மு.கதலைவர் துரைஅரசன் என்பவர் தலைமையில் அவர்களுக்குக் குத்தகைக்காடு எனும் கிராமத்தில்திருமணம் நடைபெற்றது. அப்போது எனக்கு வயது ஏழு அல்லது எட்டு இருக்கலாம். சுப்பைய்யாவை அண்ணன் என்றும் மேரியை அக்கா என்றும் அழைப்பேன். பின்னாளில் பள்ளிக்கூடம் சென்றபின் இந்த உறவு முறையைச் சுட்டிக்காட்டிக் கூடப் படிக்கும் பசங்கள் சிரிப்பார்கள்.

முத்தண்ணனுக்கு அவ்வளவு எளிதாகத் திருமணம் செய்துவிட இயலவில்லை. உறவுப் பெண் ஒருவர். பெயர் வியாகூல மேரி. ஏழைக் குடும்பம். எனினும் சாதி தெரியாத பையனுக்குப் பெண் கொடுக்க அவர்கள் தயாராக இல்லை. பல நாள் பேச்சு வார்த்தைகள் நடந்தன. முத்துச்சாமி பஞ்சாயத்து போர்டு கிளார்க். தபால் துறையில் ஈ.டி ஊழியர் வேறு. எல்லாவற்றையும் யோசித்து இறுதியில் பெண் வீட்டார் ஏற்றுக் கொண்டார்கள். கிறிஸ்தவராக மதம் மாற்றித் திருமணம்செய்ய வேண்டும் என்கிற நிபந்தனையை அப்பா ஏற்றுக் கொண்டார்.

லாரன்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு முத்தண்ணனுக்கு சர்ச்சில் முறைப்படி திருமணம் நடைபெற்றது.

அப்போது ஒரத்தநாடு பங்குத் தந்தையாக இருந்தவர் தான் ஃபாதர் சில்வேயிரா. கருணை கசியும் கண்கள், புன்னகை தவழும் முகம், மிக எளிமையான தோற்றம், தலையில் ஒரு சட்டித் தொப்பி ஆகியவற்றுடன் இன்னும் என் நினைவில் நிற்கிறார். நீண்ட வெள்ளை அங்கி தரிக்காமல் அவரை நான் பார்த்ததாக நினைவில்லை.

முத்துச்சாமி பற்றி அவர் விசாரித்தபொழுது அவருக்கு ஒரு அண்ணன் இருப்பது, அவருக்கு ஒரு கிறிஸ்தவப்பெண்ணை அப்பா திருமணம் செய்து வைத்திருப்பது எல்லாவற்றையும் விசாரித்துத் தெரிந்துகொண்டார்.

#########

ஒருநாள் ஃபாதர் சில்வேயிரா என் வீட்டிற்கு வந்தார். அப்பா அவருக்குத் தேநீர் கொடுத்து உபசரித்தார். அம்மாவுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். அவர் முன் முழந்தாள் இட்டுச் சிலுவை வாங்கிக்கொண்டார். என்னை அழைத்த பாதிரியார் முதுகில் தட்டிக் கொடுத்து வாழ்த்தினார், பின் மெதுவாகத்தான் வந்த நோக்கத்தை அவிழ்க்கத் தொடங்கினார்.

இப்படிஒரு கிறிஸ்தவப் பெண்ணை ஒரு இந்துப் பையனுக்குத் திருணம் செய்வித்து அவள் மீது கிறிஸ்துவின்மீது நம்பிக்கையற்ற ஒரு வாழ்க்கையைச் சுமத்தி இருப்பது நியாயமில்லை என்றார்.

“ஃபாதர், உங்களுக்குத் தெரியும். நானே சர்ச்சுக்கெல்லாம் போகாதவன். இந்த நம்பிக்கை எல்லாம் எனக்கே கிடையாது” – என அப்பா தொடங்கியவுடன்,

“எனக்கு அதெல்லாம் தெரியும். உங்கள் நம்பிக்கையைப் பற்றி நான் பேச வரவில்லை. நம்பிக்கை உள்ளஒரு பெண்ணை, அவளுக்கு யாருமில்லை என்பதற்காக இப்படிச் செய்திருப்பதைத்தான் கேட்க வந்தேன்.”

“அவர்களுடைய நம்பிக்கையில் நான் தலையிட விரும்பவில்லை. இப்ப என்ன செய்வது? அவங்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கு. அடுத்த குழந்தையும் பிறக்கப் போகுது. என்ன செய்ய முடியும்?”

“அதை நான் பாத்துக்கறேன். அவங்க ரண்டு பேர்கிட்டையும் நான் பேசுறேன். உங்க முன்னாடியே கேட்கிறேன்.அவங்க சம்மதிச்சா அவங்களுக்கு ஞானஸ்நானம் பண்னி மறுபடியும் சர்ச்சில் திருமணம் செஞ்சு வைக்கிறேன்” என்றார் ஃபாதர்.

எல்லாவற்றையும்கேட்டுக் கொண்டு உள்ளே சோடா சுற்றிக் கொண்டிருந்த அண்ணனை அப்பா அழைத்தார். தம்பி முத்துச்சாமி, லாரன்ஸ் முத்துச்சாமி ஆகி, கிறிஸ்தவ நாடார் சமூகத்தில் ஓர் அங்கமாகி உறவு முறைகளைப்பேணி வருவதைக் கவனித்து வந்த அண்ணன் சுப்பையா அருட் தந்தை சில்வேயிராவின் கருத்தை ஏற்றுக்கொண்டார்.

மலேசியக் காடொன்றில் ஒரு சீனப் பெண் போராளியுடன் மறைந்திருந்தபோது பிரிட்டிஷ் படைகளால் சுற்றிவளைக்கப்பட்டுப் பிடிபட்டவர் அண்ணன் சுப்பையா. அந்தப் பெண் துப்பாக்கிக் குண்டடி பட்டுவீழ்ந்தவுடன், “இந்தோ தொங்சி (இந்தியத் தோழனே), நீ ஓடிப்போ. பிழைத்துக் கொள். ஓடும்போது உன் துப்பாக்கியை சேற்றில் புதைத்துவிட்டு ஓட மறவாதே…” என அவள் சொல்லியதையும், அன்ணன் திரும்பித் திரும்பிச் சொல்வார். ஓடிப் பிடிபட்டதையும், பல மாதச் சித்திரவதைகளுக்குப் பின், பிடிபட்ட தருணத்தில் கையில் ஆயுதங்கள் ஏதும் இல்லை என்பதால் உயிர்ப் பிச்சை அளிக்கப்பட்டுத் தான் நாடுகடத்தப்பட்டதையும் அண்ணன் நிலவொளியில் மணல் மேட்டில் அமர்ந்து சொன்னதைப் பலமுறை கேட்டவன் நான்.

அதைத் திருப்பித் திருப்பிக் கேட்க எனக்கும் அலுக்காது. சொல்ல அவருக்கும் அலுக்காது.

பகுத்தறிவுச் சிந்தனைகள், மார்க்சீய நூல்கள் ஆகியவற்றில் எனக்கு ஈடுபாடுகளை ஏற்படுத்தியவர் அண்ணன் சுப்பையாதான், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களை உரத்த குரலில் பாடுவார். 12 கிமீ சைக்கிள் மிதித்து இரவு இரண்டாம் ஆட்டம் ‘இரும்புத்திரை’ திரைப்படத்திற்கு என்னை அவர் அழைத்துச் சென்றதும் திரும்பி வரும் வழி எல்லாம் “மனிதரை மனிதர் சரி நிகர் சமமாய் மதித்திடல் நம் கடமை…”, “கையில வாங்கினேன் பையில போடல, காசு போன இடம் தெரியல..” என உரத்த குரலில் அவர் பாடி வந்ததும் இன்னும் என் காதுகளில் ஒலிக்கின்றன. வீரக்குறிச்சிக்கும் கரம்பயத்திற்கும் இடையில் ஒரு சிறு காட்டாற்றுப் பாலம் இருக்கும். அதன் மீது அந்த நள்ளிரவில் அண்ணன் அனாயசமாகப் பாடிச் செல்ல, நான் சைக்கிள் கேரியரில்அண்ணனின் இடுப்பைப் பற்றிக் கொண்டு இதோ போய்க் கொண்டிருக்கிறேன்…..

##############

அண்ணனுக்கு அன்று மேல் எழுந்து கொண்டிருந்த தி.மு.க வையும் அண்ணா வையும் சுத்தமாகப் பிடிக்காது. எனக்கும் அவர் மூலமாக அந்த வெறுப்பு தொற்றிக் கொண்டது.

“இந்தத்திண்ணைத் தூங்கிப் பேர்வழிகளிடம் ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி….

கடவுள்இருப்பதும் இல்லை என்பதும் கவைக்கு உதவாத வெறும் பேச்சு….”

என்றெல்லாம் உரக்கப் பாடும் அண்ணன் சுப்பையா அன்று அந்த முடிவு எடுத்ததை நான் இப்போது புரிந்துகொள்கிறேன்.

############

ஒரத்தநாடு மாதா கோவிலில் எட்டுமாத கர்ப்பிணியான மேரி அந்தோணியம்மாளுக்கும், வின்சென்டாகப் பெயர் மாற்றித் திரு முழுக்கு அளிக்கப்பட்ட அண்ணன் சுப்பையாவுக்கும் மீண்டும் ஒருமுறை திருமணம்செய்வித்தார் ஃபாதர் சில்வேயிரா. ஸ்டெல்லா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுத் திருமுழுக்குஅளிக்கப்பட்ட அவர்களின் முதல் மகள் என் அம்மாவின் கைகளைப் பற்றிக்கொண்டு நின்றிருந்தாள். அம்மாவும் எனது தங்கைகளும் நானும் அருகில் நின்றிருந்தோம். வேறு யாருக்கும் அழைப்பில்லை.

“இறைவனால் இணைக்கப் பட்டவர்களை மனிதர்கள் பிரிக்காதிருப்பார்களாக..” என்று கூறி அருட் தந்தை சில்வேயிரா மணமக்கள் மீது புனித நீரைத் தெளித்தபோது தான் பிரியமுடன் நேசித்த தன் வளர்ப்பு மகனுக்கு ஆசி கூற அப்பா அங்கில்லை.