“யார் பிராமணன்? யார் தீண்டத் தகாதவன்?” – எனக் கேட்ட புத்தன்

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 12   – தீராநதி, ஜனவரி, 2018              

காப்பிய இலக்கணங்களுக்குச் சற்றும் குறையாமலும், தமிழ் மரபுத் தொடர்ச்சி அறுபடாமலும், தமிழ் மற்றும் தமிழக வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நடைபெற்ற தத்துவ விசாராங்களுக்கு ஒரு முக்கியமான ஆதாரமாகவும் விளங்குகிற பெருங்காப்பியமான மணிமேகலையை இறுக்கமான தமிழ்ச் சைவ மரபில் வந்த சுவாமிநாத தேசிகர், சிவஞான சுவாமிகள், மீனாட்சி சுந்தரம் பிள்ளை முதலானோர் புறக்கணித்ததை இன்று புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் சென்ற நூற்றாண்டிலும், அதற்குச் சற்று முந்திய கால கட்டத்திலும் இங்கு உருவான தமிழ்ப் பற்றும் தமிழகம், தமிழ்நாடு என்கிற அடிப்படையில் உருவான அரசியல் எழுச்சியும் கூட அதைக் கண்டு கொள்ளாதது ஏன்? சிலப்பதிகாரத்தைக் கொண்டாடிய சிலம்புச் செல்வர்களின் கண்களில் மணிமேகலை ஒரு பொருட்டாகாதது ஏன்?

இவர்கள் அனைவரின் அரசியற் செயற்பாடுகளின் ஊடாக இங்கு உருவான தமிழ் உணர்வெழுச்சியும் அது கட்டமைத்த தமிழ் மரபும் மிக இறுக்கமாகச் சைவ மரபுடன் பிணைக்கப்பட்டிருந்தது என்பது முதற் காரணம். சைவ மரபுக்கும் வைதிக மரபுக்கும் பெரும் வேறுபாடு இல்லை என்பதையும் நாம் இந்தத் தருணத்தில் மனங்கொள்ள வேண்டும்.

இங்கு மீண்டும் ஒரு கேள்வி எழுகிறது. வைதிக மரபுக்குள் எளிதில் அடக்க இயலாத திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியவற்றை ஏற்றுக் கொண்டவர்களும், உயர்த்திப் பிடித்தவர்களுங்கூட மணிமேகலையை ஒதுக்கியதேன்?

மணிமேகலை அவர்களால் செரித்துக் கொள்ள இயலாத பல அம்சங்களைக் கொண்டிருந்ததுதான் இதன் அடிப்படை. ஒரு பெண்ணுக்கு காப்பிய மரபில் அளிக்கப்படும் பாத்திர இலக்கணங்களை முற்றிலும் மீறியவள் மணிமேகலை. காதல், பிரிவு, கணவனைத் தொழுதெழும் கற்பு, இல்வாழ்க்கை, தாய்மை என்கிற வழமையான பாத்திர மரபு மணிமேகலையில் தலைகீழாகக் கவிழ்க்கப்படுகிறது. காப்பிய நாயகியின் இலட்சியம் இல்லறம் அல்ல. இங்கு காப்பியத்தின் பெயரே “மணிமேகலை துறவு”.

எனினும் மணிமெகலைக் காப்பியம் ஒரு இளம் பெண் துறவை நோக்கிப் பயணித்து அதன் இலக்கை எட்டுவதைச் சொல்வது மட்டுமல்ல. அதற்கும் மேலாக அது தன் கொள்கையை ஒவ்வொரு கணமும் பறை சாற்றிக் கொண்டுள்ளது. வாசிப்போர்களைத் தன் கொள்கையை நோக்கி ஈர்க்கிறது. அவ்வகையில் காப்பியம் என்பதற்கும் அப்பால் அது அறநூல்களைப் போல அது ஒரு “போதனைப் பாத்திரத்தையும்” (didactic role) எடுத்துக் கொள்கிறது. காப்பியத்துக்குள் பதிக்கப்பட்டுள்ள பதினாறு உட்கதைகளும் பவுத்தத்தின் அடிப்படை அறங்கள் ஒவ்வொன்றையும் விளக்கும் முகமாக அமைந்துள்ளன என்பது இத்தொடரில் முன்பே வலியுறுத்தப்பட்டது. இந்தக் கதைகள் வெறும் நீதிக் கதைகளாக முற்றுப் பெறுவதில்லை. அவை வெளிப்படையாகத் தம் நிலைபாட்டின் அறத்தை வலியுறுத்தும், நேரடியான தர்க்கங்களாகவும் அமைகின்றன. இறுதியில் காப்பியம் அந்த தர்க்கங்களின் ஊடாகத் தன் கொள்கையை நிறுவி அமைகிறது.

இப்படியான ஒரு விவாத, தர்க்க மரபு என்பது பகவன் புத்தரின் காலத்திலிருந்தே தொடங்குகிறது. புத்தர் அவதரித்த அக்கால கட்டம் கங்கைச் சமவெளியில் மிகப் பெரிய விவாதங்கள் நடந்து கொண்டிருந்த ஒன்று. புத்தர் எங்கோ ஓரிடத்தில் ஆசிரமம் அமைத்து தர்க்க சாத்திரம் அல்லது தத்துவ விளக்கம் எதையும் எழுதிக் கொண்டிருக்கவில்லை. மாறாக அப்படியான ஒரு மயிர் பிளக்கும் தத்துவ விசாரங்களுக்குள் அவர் தன்னை எந்நாளும் சிறைப்படுத்திக் கொண்டதில்லை. அவருக்கு நிரந்தரக் குடில் ஏதும் இருந்ததுமில்லை. அவர் ததாகதர். இவ்வழியே வந்தவர், இப்படியே போனவர். தன் வழிகளில் சந்தித்தவர்களிடத்தும், தானே தேடிச் சென்றும் அவர் மற்றவர்களுடன் தன் கருத்துக்களை முன்னிறுத்தி வாதிட்டார். வலியச் சென்று வாதிட்டார். அந்த வாதங்களின் இறுதியில் அவருடன் வாதிட்டவர்கள் அவர் வசப்பட்டனர்.

அவருடைய அந்த விவாதங்கள் அவருக்குப் பல ஆண்டுகளுக்குப் பின் அவர் வழி வந்தோரால் கூடை கூடைகளாகத் தொகுக்கப்பட்டன. இப்படியான தொகுப்புதான் ‘திரி பிடகம்’. “மூன்று கூடைகள்” என இதை மொழியாக்கலாம். அன்று கங்கைச் சமவெளியில் இத்தகைய வாதங்களுக்கு வாய்ப்பிருந்தது. புத்தருக்குப் பிந்திய அறுநூறு ஆண்டுகளுக்குப் பின் தான் பிக்குகளின் தலைக்கு விலை அறிவிக்கப்பட்டு அவர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். புத்தர் வாழ்ந்த காலத்தில் மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பிருந்தது. பழங்குடி மரபுகளின் ஊடாக உருவாகிக் கொண்டிருந்த அதிகாரங்களும் அவற்றை மதித்தன.

புத்தரின் காலத்தில் முக்கிய விவாதப் பொருளாக இருந்தவை ஆன்மா, பிரும்மம், கர்ம வினை, வருணம், வேள்விகள் முதலானவற்றின் இருப்பு மற்றும் நியாயப்பாடுகள்தான். புத்தர் இவை அனைத்திலும் அன்றைய வேத விற்பனர்களின் கருத்துக்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு நின்றார். அவருடைய அணுகல் முறை நேரடியாகச் சென்று வாதுக்கு அழைத்து அவர்களை வெல்வது என்பதாக இருந்தது. எடுத்துக்காட்டாக திரிபிடகத் தொகுப்பு நூல்களில் ஒன்றான ‘சுத்த நிபாதத்தில்’ உள்ள ‘வசல சுத்தம்’, ‘வாசேட்ட சுத்தம்’ ஆகிய சுத்தங்களைச் (சூத்திரம் என்கிற சஸ்கிருதச் சொல்லுக்கு இணையான பாலி மொழிச் சொல் ‘சுத்தம்’) சொல்லலாம்.

வசல சுத்தம் என்பது புத்தருக்கும் அக்கிக பரத்வாஜன் என்கிற ஒரு வேத விற்பனனுக்கும் நடக்கும் விவாதத்தைச் சொல்வது. மிகப் பெரிய வேள்வி ஒன்றுக்கு பரத்வாஜனும் அவனது சீடர்களும் தயார் நிலையில் இருப்பர். புத்தர் அவனை நோக்கிச் செல்வார். திடுக்கிட்ட பரத்வாஜன் அவரை நோக்கி. “வசலா நில்!” என்பான். வசலன் எனில் ‘தீண்டத் தகாதவன்’ எனப் பொருள்.  புத்தர் நில்லாமல் அவனை நோக்கி நடப்பார். “தீண்டத் தகாதவன் எனவும் பிராமணன் எனவும் எப்படி மனிதர்களை வேறுபடுத்த இயலும்? இருவரும் ஒரே மாதிரி பிறக்கிறார்கள், சாகிறார்கள். பின் எப்படி இருவரையும் அடையாளப் படுத்துகிறாய்?” – எனக் கேட்டு பிறப்பினால் யாரும் தீண்டத் தகாதவர்களாகவோ இல்லை உயர்ந்தவர்களாகவோ ஆவதில்லை என முடிப்பார். புத்தர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்க இயலாத பரத்வாஜன் தன் சீடர்களுடன் பவுத்தம் தழுவுவான். அந்த வேள்வியும் நிறுத்தப்படும். வேள்வியில் பலி ஆகவிருந்த எண்ணற்ற பசுக்கள், குதிரைகள் முதலான உயிர்களும் மரணத்திலிருந்து விடுவிக்கப்படும்.

வாசெட்ட சுத்தம் இரு பிராணர்களுக்கிடையே ஏற்படும் விவாதத்தில் தொடங்குகிறது. பிராமணன் என்கிற தகுதி ஒருவருக்கு எவ்வாறு ஏற்படுகிறது என்பது கேள்வி. பிறப்பினால் என்கிறார் ஒருவர். இல்லை ஒஇறப்பு எவ்வாறாயினும் செய்யும் நற்செயல்களாலேயே ஒருவன் பிராமணன் எனும் தகுதியைப் பெறுகிறான் என்கிறார் மற்றவர். சாக்கிய முனி இது குறித்து என்ன சொல்கிறார் என அறிய அவரிடம் இருவரும் வருவார்கள். பிறப்பால் யாரும் உயர்வோ தாழ்வோ அடைவதில்லை என்பதைப் புத்தர் அவர்களுக்குப் புரிய வைப்பார்.

பிறவியினால் வருணங்களும் தீண்டாமை முதலானவையும் தீர்மானிக்கப்படுதல், வேள்விகள் மூலம் உயிர்க் கொலைகள் புரிந்து ஒருவர் விடுதலை அடைதல் என்கிற, அன்று ஓங்கியிருந்த, இரண்டு அடிப்படையான வைதிக நெறிகளை எதிர்த்து நின்ற வகையில் பௌத்தம், சமணம், ஆஜீவகம் முதலான அவைதிக நெறிகள் வைதிகத்திலிருந்து வேறுபட்டு நின்றன. அதை ஒட்டி பௌத்தம் ஆன்மா, கர்ம வினை முதலான அனைத்து வைதிக நம்பிக்கைகளுக்கும் முற்றிலும் எதிரான மாற்றுச் சிந்தனைகளை முன்வைத்தது. வைதிகத்தின் ‘ஆத்மன்’ என்கிற கருத்தாக்கத்திற்கு மாற்றாக பௌத்தம் ‘ஆத்மா அல்லாதது’ என்கிற பொருள்படும் ‘அனாத்மன்’ என்கிற கருத்தாக்கத்தை முன்வைத்தது. பிறவிப் பெருங்கடலைக் கடக்க வேள்விகள் இயற்றல், இறைவனுக்கு அடிமையாதல் (பக்தி நெறி) முதலான வைதிகம் முன்வைத்த வழிமுறைகளையும் பௌத்தம் முற்றிலுமாக நிராகரித்தது. அறவாழ்வு ஒன்றே இறுதி விடுதலையை நோக்கி ஒருவரை நகர்த்த வல்லது என்று அது வலியுறுத்தியது. ஆந்த அடிப்படையிலெயே ‘பஞ்ச சீலம்’, ‘தச சீலம்’, ‘எண்வழிப் பாதை’ முதலான அறக்கோட்பாடுகள் பௌத்தத்தால் முன்வைக்கப்பட்டன. ‘ஆன்மா அழியாதது’ என்கிற வைதிகக் கருத்தை ‘அனைத்தும் மாறிக் கொண்டுள்ளது; எதுவும் நிரந்தரமில்லை’ என எதிர் கொண்டது பவுத்தம்.

அன்று கங்கைச் சமவெளியெங்கும் வேள்விகளின் ஊடாக ஏராளமான பசுக்கள், குதிரைகள், உயிரினங்கள், உணவு தானியங்கள் எல்லாம் பாழாக்கப்பட்டுக் கொண்டிருந்ததை எதிர்த்த மாபெரும் இயக்கமாக அவைதிக மதங்கள் உருப்பெற்று நின்றன. மக்களின் மிகவும் அடிப்படையான இச் செல்வங்கள் இவ்வாறு வீணடிக்கப்பட்டு, அதன் விளைவாகப் பசிப்பிணியால் மக்கள் செத்து மடிவதை பௌத்தம், சமணம் முதலான சிரமண மதங்கள் . முழுமையாக எதிர்த்து நின்றன .

வேள்விகளில் உயிர்கொலை செய்வோர் பிராமணர்கள் இல்லை என்றால் பின் யார்தான் பிராமணர்களாக இருக்க இயலும் என்கிற கேள்வி புத்தர் முன் வைக்கப்பட்டபோது, அப்படியானவர்கள் குறித்து புத்தர் சொன்னது:

 

“…வேள்விச் சடங்கிலே அவர்கள் என்றும்

ஆடு மாடுகளை உயிர்ப் பலியாய்க் கொடுத்ததில்லை.

 

தாய், தந்தை, சகோதரர் மற்றும்

இதர எல்லா சொந்தங்களையும் போலவே

ஆடு மாடுகளும் நமது தலை சிறந்த சொந்தங்களாகும்

என்றே அவர்கள் கருதினர்.

ஏனெனில் பசிப்பிணியை நீக்கும் பல அரிய பொருள்களை

அவை நமக்கு வழங்குகின்றன.

 

நல்ல வாழ்க்கையையும் உடல் வலிமையையும்

நல்ல உடல் வண்ணத்தையும், ஆரோக்கியத்தையும்

மகிழ்ச்சியையும் அவை நமக்கு வழங்குகின்றன.

இந்த உண்மைகளை உணர்ந்தவர்களாய்

அவர்கள் என்றும் ஆடு மாடுகளைக் கொன்றதில்லை.

 

எது செய்யப்பட வேண்டியது

எது செய்யத் தகாதது என்று உணர்ந்தவர்களாய்

அந்த பிராம்மணர்கள் தம்மம் காட்டிய வழியில்

செயல்பட்டார்கள்.

(சுத்த நிபாதம், பிராமண தம்மிக சுத்தம் – மொழியாக்கம்: ஓ.ர.ந. கிருஷ்ணன் etal.).

buddha 2

பிறவியினால் யாரும் பிராமணரும் ஆவதில்லை: தீண்டத்தகாதவரும் ஆவதில்லை. இடைப்பட்ட நிலைகள் என்றும் ஏதுமில்லை. பிராமணர் என்பதை ஒரு உயர் நிலை எனக் கொண்டோமானால் உயிர்க் கொலை புரியாது, அற வாழ்வை மேற்கொள்கிற யாரும், ஆம் யாரும் பிராமணர் ஆகலாம்.

அவ்வளவுதான்.

பவுத்தத்தின் இந்த தர்க்க மரபு, அதாவது தர்க்கத்தின் ஊடாக மாற்றுக் கருத்துக்களை முறியடித்து அவற்றினிடத்தில் அறம் சார்ந்த அணுகலை முன்வைக்கும் மரபு மணிமேகலைக் காப்பியம் முழுமையும் விரவிக் கிடக்கிறது. எதிர்க் கருத்துக்களை வாதுக்கு அழைத்து முறியடிப்பது என்கிற அடிப்படையில் மணிமேகலை மட்டுமின்றி நீலகேசி, குண்டலகேசி முதலான அழிந்து பட்ட, அல்லது அழிக்கப்பட்ட அவைதிகக் காப்பியங்களும் பிற தமிழ் இலக்கியங்களிலிருந்து வேறுபட்டு நிற்பது குறிப்பிடத் தக்கது. எடுத்துக் காட்டாக நம் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் அப்படித் தன்னை உறுதியாக அடையாளம் காட்டி மாற்றுக் கருத்துக்களை முறியடிக்க முனைந்ததில்லை. ‘முத்தமிழ்க் காப்பியம்’ எனச் சொல்லி யாரும் அதனைத் தங்களின் கருத்துக்கு ஏற்றதாக முன்வைத்துவிடும் வாய்ப்பு உண்டு. ஆனால் மணிமேகலையை அப்படி யாரும் உரிமை கோரி விட இயலாது. நமது சிலம்புச் செல்வர்களுக்கும் குறள் பித்தர்களுக்கும் மணிமேகலை பிடிக்காமற் போனது வியப்பல்ல. நீலகேசிக்கும் குண்டலகேசிக்கும் நேர்ந்த அழிவு மணிமேகலைக்கு நிகழாமற்போனதுதான் உண்மையில் வியப்பு.

மணிமேகலைக் காப்பியத்தில் விரிவாக இடம்பெறும்ஆபுத்திரன் வரலாறு பல்வேறு கோணங்களில் அவைதிக மரபில் வைத்துப் பார்க்கத் தக்கதாக உள்ளது. பிறவி அடிப்படையில் பெருமை அல்லது சிறுமை என்பதை அது தகர்த்துத் தூளாக்குகிறது சாத்தனாரால் தீட்டப்படும் ஆபுத்திரன் வரலாறு. மணிமேகலைக் காப்பியத்தின் அடி நாதமாக அமையும் ‘பசிப்பிணி அகற்றல்’ என்பதைச் சாத்தியப்படுத்தும் அள்ள அள்ளக் குறையாது அமுதைப் படைக்கும் அந்த அமுதசுரபி இந்த ஆபுத்திரன் மூலமாகத்தான் மணிமேகல்லையை வந்தடைகிறது. பசித்தோர் துயர் அறிக்கும் இந்த தெய்வீகப் பாத்திரம் யார்மூலம் காப்பிய நாயகிக்குக் கிடைக்கிறதோ அந்த ஆபுத்திரன் ஒரு அப்பன் பெயர் தெரியாத பிள்ளை.  கடைசிவரை சாத்தனார் ஆபுத்திரனின் தாய் ஒரு கற்பு நெறி பிறழ்ந்த பார்ப்பனி என்று மட்டுமே சொல்கிறாரே ஒழிய தப்பித் தவறிக் கூட அவனது தந்தையின் பெயரையோ இல்லை வருணத்தையோ குறிப்பிடுவதில்லை. பவுத்தத்தைப் பொருத்தமட்டில் அது அனாவசியம்; தேவையற்ற தரவு. ஆனால் வைதீகர்களைப் பொருத்த மட்டில் அதுதான் முக்கியமாகிறது அதைக் கொண்டே அவனை வீழ்த்த முனைந்து அவர்கள் பரிதாபமாகத் தோற்கின்றனர்.

அவர்கள் மட்டுமா? அவனைச் சரிகட்ட வந்த தேவர் கோமான் இந்திரனும் அவனிடம் தோற்றோடிப் போகிறான். ஆம். வைதிக நெறிப்படி இவ்வுலகில் மானுடர் யாரொருவராலும் அறமும் தவமும் செழிக்குமாயின் அதற்கு ஒரு முடிவு கட்டும் பொறுப்பு இந்திரனுடையது. அப்படியான நிலையில் அவனைத் தாங்கி இருக்கும் பாண்டு கம்பளம் நடுக்குறுமாம். உடனடியாக இந்திரன் இவ் உலகிற்கு வந்து அந்த அறவாணனுக்கு வேண்டியது என்ன எனக் கேட்டு அருள் புரிவான். அதன் மூலம் பயன் கருதாத சேவை என்பது பயனுக்குரிய ஒரு சேவை என்பதாக ஆக்கப்படும். அதன் மூலம் அந்த அறச் செயல் அதனுடைய அறத் தன்மையை இழக்கும்.

இறையருள் மூலம் அறச்செயல் என்பது இப்படி அற நீக்கம் செய்யப்படுவது என்பதன் பொருளென்னஆபுத்திரன், இந்திரன்? மக்களை எப்போதும் அறமற்றவர்களாக வைத்திருப்பதுதான் இறை ஆட்சிக்கான உத்தரவாதமா?

பவுத்தம் இதை எள்ளி நகையாடுகிறது.

ஆபுத்திரனுக்கு அமுதசுரபி கைவந்த வரலாற்றைச் சற்றுப் பின் காண்போம். அதற்கு முன் ஆபுத்திரனின் ஊடாக வைதிக நம்பிக்கை ஒன்று எள்ளி நகையாடப்படும் வரலாற்றைக் காண்போம்.

அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி கொண்டு இப்பூவுலகில் ஒருவன் மக்கள் மத்தியில் பசித் துயர் இல்லாமல் செய்துவருவதைத் தன் பாண்டு கம்பளத்தில் ஏற்பட்ட நடுக்கத்தின் ஊடாக அறியும் இந்திரன் ஒரு முதிய பார்ப்பனனைப்போல வேடமிட்டு அவன் முன் வந்திறங்கி, “இந்திரன் வந்தேன். யாது நின் கருத்து? உன் பெரும் தானத்திற்கு உற்ற பயனைப் பெற்றுக் கொள்வாயாக” என்றவுடன் ஆபுத்திரன் சிரித்தானே ஒரு சிரிப்பு.

வெள்ளை உள்ளத்துப் பிள்ளை ஒன்றைப்போலத் தன் விலா எலும்பு வெடித்துச் சிதறுமாறு சிரித்தான் ஆபுத்திரன் என்பார் சாத்தனார்.

 

(அடுத்த இதழில் வேள்வியில் உயிர்கள் கொல்லப்படுவது குறித்து ஆபுத்திரன் வேதியர்களுடன் மேற்கொள்ளும் விவாதம்)