(மக்கள் உரிமை வார இதழில் வெளிவந்த கட்டுரை)
இரண்டு நாட்களுக்கு முன் ஹைதராபாத் மத்தியப் பல்கலைக் கழக ஆய்வு மாணவர் அருண் என்பவர் என்னச் சந்தித்து நீண்ட நேரம் அவரது ஆய்வு தொடர்பாகப் பேசிக் கொண்டிருந்தார். ‘தமிழகத்தில் மதக்கலவரங்கள் 1980 – 2014’ என்பது அவரது ஆய்வுத்தலைப்பு. அவர் கடைசியாக என்னிடம் கேட்ட கேள்வி :”தமிழகத்தில் சிறுபான்மை மதவாதம் குறித்து உங்கள் கருத்து என்ன?”
தமிழகத்தில் சிறுபான்மை மதவாதம், தீவிரவாதம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை என்றேன். இதன் பொருள் தமிழ்நாட்டில் மத அடிப்படையில் சில கொலைகள், தாக்குதல்கள் எதுவும் சிறுபான்மையினரால் மேற்கொள்ளப்படவில்லை என்பதல்ல. அப்படிச் சில நடந்துள்ளன. அதில் சில முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் இங்கே இந்துத்துவ அமைப்புகள் திட்டமிட்டு சமூகத்தைப் பிளவுபடுத்தி அரசியல் லாபம் தேடும் நோக்கில் அமைப்பு ரீதியாக வெறுப்புப் பிரச்சாரத்தைச் செய்து கலவரத்தை உருவாக்குவதுடன் இதை ஒப்பிட இயலாது. முஸ்லிம்கள் பங்குபெற்ற வன்முறைகள் என்பன அதன் மூலம் சமூகத்தைப் பிளவுபடுத்தி அரசியல் லாபம் பெறுவதற்காகச் செய்யப்படுபவை அல்ல. சமூகம் பிளவுபடுவதைக் காட்டிலும் சமூகம் ஒன்றாக இருப்பதுதான் தங்களுக்குப் பாதுகாப்பு என்பது அவர்களுக்குத் தெரியும். தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு உரிய நியாயம் கிடைக்காதபோதும், இந்த அமைப்பில் நியாயம் கிடைக்க வழியே இல்லை என அவர்கள் உணரும் நிலைக்குத் தள்ளப்படும் போதுதான் ஒரு சிலர் இத்தகைய செயலில் இறங்குகின்றனர்.
சிறுபான்மையினர் செய்த ஒரே பெரிய தீவிரவாதச் செயல் எனச் சொல்லத் தக்க கோவை தொடர் வெடிகுண்டு வெடிப்பு கூட முன்னதாக காவல்துறையும் இந்துத்துவ அமைப்புகளும் சேர்ந்து 14 அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டது மட்டுமல்லாமல் அதற்குக் காரணமான காவல்துறையினரும் இந்துத்துவத் தலைவர்களும் தண்டிக்கபடாத நிலையில் மேற்கொள்ளப்பட்டதுதான். அதற்கு அவர்கள் மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியதாகவும் இருந்தது
பெரும்பான்மைத் தீவிரவாதம், சிறுபான்மைத் தீவிரவாதம் இரண்டையும் ஒரு நேராகப் பார்த்துவிட இயலாது. இது குறித்து ஜவஹர்லால் நேரு சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. சிறுபான்மையினரின் வன்முறை பாசிசமாக உருப்பெற இயலாது. ஏனெனில் எங்கு கலவரங்கள் நடந்தபோதும் அவர்களே இழப்பைச் சந்திப்பவர்களாக இருக்கும். எல்லா வகைககளிலும் அந்த இழப்பு அமையும். ஆனால் பெரும்பான்மையின் வன்முறையும் கலவரங்களும் அரசியல் லாபம் தரக் கூடியதாகவும் அதனூடாக அது பாசிசமாகவும் மாறும் என்றார் நேரு. அது மட்டுமல்ல பெரும்பான்மை மதவாதம் தேசியம் என்பதாகவும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்..
இது அந்த ஆய்வு மாணவரிடம் நான் சொன்னது. இன்றைய (மார்ச் 10, 2016) ஆங்கில இந்து நாளிதழில் கனடாவில் உள்ள டல்ஹௌசி பல்கலைக்கழகப் பேராசிரியர் நிஸிம் மன்னத்துக்காரன் எழுதியுள்ள “இரண்டு வகுப்புவாதங்களின் கதை” எனும் கட்டுரை இந்த வேறுபாடுகளை இன்னும் துல்லியமாக விளக்குகிறது. சமீபத்தில் (ஜன 3, 2016) மே.வங்கம் மால்டா மாவட்டத்தில் முஸ்லிம் ஊர்வலம் ஒன்றில் ஒரு காவல்நிலையம் கொளுத்தப்பட்டு பொதுச் சொத்துக்களும் அழிக்கப்பட்டன. யாரும் கொல்லப்படவில்லை ஆயினும் கலவரம் இரண்டு நாட்கள் நீடித்தது.
மால்டா மாவட்டம் மேற்கு வங்கத்தில் உள்ள முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மூன்று மாவட்டங்களில் ஒன்று. வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள இந்த மாவட்டம் கடத்தல், கஞ்சா மாஃபியா ஆகியவற்றிற்குப் பெயர்போன ஒன்று. உ.பி யில் சமாஜ்வாதிக் கட்சி அமைச்சர் ஆசம் கான் ஆர்.எஸ்.எஸ்சைப் பற்றி இழிவாக ஏதோ சொல்லப்போக, அதற்கு எதிர்வினையாக இந்துத்துவ அமைப்பு ஒன்றைச் சேர்ந்த கமலேஷ் திரிபாதி என்பவர் இறைத்தூதர் நபிகளை இழிவு செய்ததைக் கண்டித்து ‘அஞ்சுமன் சுன்னத்துல் ஜமாத்’ எனும் அமைப்பு ஒரு ஊர்வலம் நடத்தியது. அப்போது நடந்த கலவரத்தில் கலியாசக் எனும் இடத்தில் இருந்த காவல் நிலையம் எரியூட்டப்பட்டது. பொதுச் சொத்துக்களும் சேதமாக்கப்பட்டன.
தேர்தல் நேரமல்லவா? உடனடியாக இந்துத்துவ அமைப்புகள் களத்தில் இறங்கின. சிறுபான்மை பயங்கரவாதம் எனவும், இதை யாரும் கண்டிப்பதில்லை எனவும், ஊடகங்கள் இதை அடக்கி வாசிக்கின்றன எனவும், இந்த ‘முஸ்லிம் பயங்கரவாதத்தை’ கண்டிக்காமல் விருதுகளைத் திருப்பிக் கொடுத்து ஆர்பாட்டம் செய்கிறவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் எனவும் அவர்கள் குதியாட்டம் போட்டனர். தாத்ரியில் மாட்டுக்கறி வைத்திருந்தார் என ஒரு முஸ்லிம் கொல்லப்பட்டதற்கு ஆர்பாட்டம் செய்தவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள் என்றனர். இதைத்தான் ‘போலி மதசார்பின்மை’ (psuedo seclarism) என்கிறோம் என்றார்கள்.
The Frustrated Indian என்கிற இணையதளத்தைப் பார்த்தீர்களானால் எப்படியெல்லாம் இந்த மால்டா கலவரத்தை முஸ்லிம் பயங்கரவாதமாகச் சித்திரிக்கிறார்கள் என்பது விளங்கும். மத்திய அரசு உடனே மம்தா அரசிடம் விளக்கம் கேட்டது. ராஜ்நாத் சிங் மால்டாவுக்கு வருவதாகவும் செய்திகள் வெளியாயின. ஆனால் இது குறித்து ஆய்வு செய்த APDR முதலான மனித உரிமை அமைப்புகள் இது கஞ்சா மாஃபியாக்கள், கடத்தல்காரர்கள் பங்கு பெற்ற கலவரம் 1500 ஏக்கர் கஞ்சாப் பயிர்களை காவல்துறையினர் அழித்த ஆத்திரம் அவர்களுக்கு இருந்தது என அறிக்கை அளித்தனர். APDR தலைவர் ஜிஷ்னு ராய், “இது ஒரு மதக் கலவரமே இல்லை” எனத் தெளிவாகச் சொன்னார்.
ஆனாலும் இந்துத்துவவாதிகள் இதை சிறுபான்மை மதவாதம் என்றே கட்டமைத்தனர். முஸ்லிம்கள் அல்லாதவர்கள் செய்திருந்தால் இது வெறும் மாஃபியா கலவரமாகவே ஆகியிருக்கும். முஸ்லிம்கள் என்பதால் இது வகுப்புவாதமாகவும், தேசவிரோதமாகவும் கட்டமைக்கப்பட ஏதுவாகிரது. இப்படிச் செய்தேதான் அவர்கள் 1980 தொடங்கிக் கட்சியை வளர்த்தனர்.
சிறுபான்மை மதவாதத்தை பெரும்பான்மை மதவாதத்தோடு சரிசமமாக வைத்துப் பார்க்கவே முடியாது. சிறுபான்மை மதவாதம் என்பது மேலும் மேலும் அவர்களைத் தங்கள் மத அடையாளங்களுக்குள் ஒடுங்கச் செய்யும். முஸ்லிம்கள் தம் மத அடையாளங்களை வற்புறுத்துவது 1980 க்குப் பின் அதிகமாகியுள்ளது என்பர். ஆனால் அதன் இலக்கும் கோபமும் பிற மதத்தவரை நோக்கி அமையாது. மாறாகத் தம் சமூகத்திற்குள்ளேயே சற்றே இந்த அடையாளங்களில் இருந்து விலகி நிற்பவர்களை நோக்கித்தான் அது திரும்பும். மொத்தத்தில் அது மேலும் மேலும் அவர்கள் தனிமைப் படுவதற்குத்தான் இட்டுச் செல்லும். ஆனால் பெரும்பான்மை மதவாதமோ அதுவே ஒட்டு மொத்தமான சமூகத்தின் கருத்து என்பதாக வலுப் பெறும். இரண்டும் ஒன்றோ அல்லது சம அளவில் ஆபத்தானதோ அல்லவே அல்ல.
பெரும்பான்மை மதவாதம் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கும் வாய்ப்புள்ளது. அப்படிப் பிடிக்கும்போது அது இன்னும் ஆபத்தாக அமையும். ஆனால் சிறுபான்மை மதவாதமோ கனவிலும் ஆட்சியையோ அதிகாரத்தையோ கைப்பற்ற இயலாது.
சிறுபான்மை மதவாதமோ, பெரும்பான்மை மதவாதமோ எது ஒரு மதக் கலவரத்திற்குக் காரணமானாலும் இழப்பு சிறுபான்மைக்குத்தான் என்பது சிறுபான்மை மதவாதத்திற்குத் தெரியும். குஜராத்தோ. முசாபர்நகரோ, அஸ்ஸாமோ எங்கானபோதிலும் இழப்புகள் அனைத்தும் சிறுபான்மைக்குத்தானே. பின் எப்படி சிறுபான்மை மக்கள் மதக்கலவரத்திற்குக் காரணமாக இருப்பர்? மால்டா போல சிறுபான்மை மக்களின் நிகழ்வில் வன்முறை ஏற்படுகிறது என்றால் நிச்சயம் அதில் கிரிமினல், மாஃபியா மற்றும் அரசியல்வாதிகளின் கூட்டுச் சதி இருக்கும். மற்றபடி அது ஒரு அரசியல் நோக்கம் கருதிய திட்டமிட்டச் செயல்பாடாக இருக்கவே இயலாது.
ஆனால் மதக் கலவரங்களின் பயன்கள் அனைத்தும் பெரும்பான்மை மதவாதத்திற்குத்தான். மதக்கலவரம் தொடர்பான கிரிமினல் குற்றச்சாட்டுடன் இன்று நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களில்ம் குந்தியிருப்போர் எல்லோரும் சங்கப்பரிவாரத்தினர்தானே. யேல் பல்கலைக்கழக ஆய்வு முடிவொன்றை நிஸிம் மன்னத்துக்காரன் குறிப்பிடுகிறார். தேர்தலுக்கு முந்திய கலவரங்கள் ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் பா.ஜ.க வின் வாக்கு வீதம் 0.8 சதம் அதிகரிக்கிறது. இழப்பு காங்கிரசுக்குப் போகிறது.
பெரும்பான்மை மதவாதம் இன்னொன்றையும் செய்கிறது. வெளிநாட்டுப் பயங்கரவாதத்தையும் அது சிறுபான்மையின்மீது பழிபோடுவதற்கு பயன்படுத்துவதில் வெற்றியடையும், அண்டை நாடு பகை நாடாக இருப்பதும் அது முஸ்லிம் நாடாக இருப்பதும் அதற்கு மிகவும் சவுகரியமான விஷயம். எல்லை தாண்டிய பயங்கரவாதம் எனும் சொல்லாடல் இங்கு முஸ்லிம் பயங்கரவாதம் எனும் பொருளிலேயே பயன்படுத்தப்படும். எவ்வளவு எளிதாக இடதுசாரி அரசியலால் ஈர்க்கப்பட்ட ஒரு JNU மாணவன் அவன் பெயர் உமர்காலித் என்பதாலேயே அவனை ஐ.எஸ் தீவிரவாதி எனவும், பாஸ்போர்ட் கூட இல்லாத அவனை முஸ்லிம் நாடுகளுக்கு இரகசியமாகச் சென்று வந்தவனாகவும் இவர்களால் கட்டமைக்க முடிந்தது.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முஸ்லிம் பயங்கரவாதமாகவே கட்டமைத்தாலும் கூட அதன் மூலம் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இங்கு நடைபெற்ற வேறு பயங்கரவாத / தீவிரவாத இழப்புகளைக் காட்டிலும் பலமடங்கு குறைவுதான். காஷ்மீர் போன்ற இடங்களில் அரச பயங்கரவாதம் நிகழ்த்திய கொலைகளைக் காட்டிலும் குறைவுதான். இருந்த போதிலும் கூட மிக எளிதாக முஸ்லிம் பயங்கரவாதத்தைப் பூதாகரப்படுத்தி ஒவ்வொரு முஸ்லிமையும் எதிரியாக நிறுத்த முடியும்.
பெரும்பான்மை மதவாதம் நேரு சொன்னதுபோல ‘தேசியம்’ என்பதாக முன்வைக்கப்படுவதால் அது வெறும் கருத்து ரீதியான வன்முறையாலேயே பெரும் பாதிப்புகளைச் ஏற்படுத்த இயலும். ஆமிர் கானோ ஷாருக் கானோ இங்கு நிலவும் சகிப்பின்மை பற்றி மெலிதாகவேனும் ஒரு கண்டனக் குரலை எழுப்பினால் அது மிக எளிதாக தேசத்துரோகமாக முன்வைக்கப்படும். ஆனால் “நான் என்னை ஒரு இந்து என அடையாளப்படுத்திக் கொள்வதற்கே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது” என அனுபம் கெர் அப்பட்டமாக ஒரு பொய்யுரைத்தால் அது எந்தப் பெரிய கண்டனங்களுக்கும் ஆளாவதில்லை. பெரும்பான்மை மதவாதத்தையும் சிறுபான்மை மதவாதத்தையும் சமமாக வைத்துப் பார்ப்பதுபோல அபத்தமும் ஆபத்தும் எதுவும் இல்லை.