கார்ல் மார்க்ஸ் 11
சோஷலிச எதார்த்தவாதம் என்கிற பெயரில் மார்க்சுக்குப் பிந்திய மார்க்சீயக் கட்சிகளால் முன்வைக்கப்பட்டிருந்த அணுகல்முறை தொடக்கம் முதலே கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியது. 1980 களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் என்.சி.பி.எச் நிறுவனம் சோஷலிச எதார்த்தவாதம் குறித்து ஒரு கலந்தாய்வை நடத்தியது. மூத்த எழுத்தாளர்கள் பலர் கலந்து கொண்ட அந்த நிகழ்வில் அக்கோட்பாட்டை தீவிரமாக முன்னெடுத்தவர்களில் ஒருவரான தொ.மு.சி ரகுநாதன் மிக வெளிப்படையாக அது குறித்துத் தன்னை சுய விமர்சனம் செய்துகொண்டார். தமிழகத்தில் செயல்படும் இரு முக்கிய கம்யூனிஸ்ட் கட்சிகளும் அவை சார்ந்த இலக்கிய அமைப்புகளும் வெளிப்படையாகத் தாம் அந்தக் கோட்பாட்டைக் கை விட்டதாக அறிவிக்கவில்லை ஆயினும் கடந்த கால் நூற்றாண்டில் இடதுசாரிகள் யாரும் சோஷலிச எதார்த்தவாதம் என்றெல்லாம் பேசியதில்லை.
சோஷலிச எதார்த்தவாதத்தைத் தூக்கிப் பிடித்த பேரா நா. வானமாமலை அவர்கள் எழுதிய தமிழ்ப் புதுக்கவிதை பற்றிய ஆய்வு நூலும், இறுதிவரை அக்கோட்பாட்டைக் கைவிடாதவராகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட பேரா.கோ.கேசவன் எழுதிய மார்க்சிய இலக்கியக் கோட்பாடு குறித்த நூலும் இன்று ஆய்வுலகால் புறக்கணிக்கப்பட்ட நூல்களாகிவிட்டன.
இது இங்கு மட்டும் நிகழ்ந்த ஒன்றல்ல. உலகெங்கிலும் இதுதான் நிலை. எனினும் இது குறித்து இரண்டு அம்சங்கள் நினைவிற்குரியன.
1.சோஷலிசக் கட்டுமானங்களாக உருவான சோவியத் யூனியன், மக்கள் சீனம் முதலானவற்றில்தான் ‘அடித்தளம் – மேற்கட்டுமானம்’ – என்கிற கலை இலக்கிய அணுகல் முறை சோஷலிச எதார்த்தவாதம் என்கிற பெயரில் முன்வைக்கப்பட்டது. அதே நேரத்தில் உலகெங்கிலும் இருந்த மார்க்சியக் கோட்பாட்டாளர்களும், சிந்தனையாளர்களும் இந்த ‘சோஷலிச எதார்த்தவாதம் என்கிற கோட்பாட்டை நிராகரித்து, பதிலாக மார்க்சிய நோக்கில் இலக்கியத்தை அணுகுவது குறித்த மிகவும் நுணுக்கமான கோட்பாடுகளையும் செயற்பாடுகளையும் முன்வைத்தனர். ருஷ்யாவுக்குள்ளேயே விக்டர் ஷ்க்லொவ்ஸ்கி, போரிஸ் எய்ஷன்பாம் முதலானோர் முன்வைத்த வடிவவியல் (Russian Formalism), மிஷேல் பாக்தின் முன்வைத்த ‘டயலாஜிசம்’ ரோமன் ஜாகப்சன் ரெனி வெல்லாக் முதலானோருடன் இணைந்து உருவாக்கிய ப்ரேக் மொழியியல் வட்டம், ஜெர்மனியில் வால்டர் பெஞ்சமின், தியோடர் அடர்னோ, ஹெர்பர்ட் மார்ல்யூஸ் முதலானோர் உருவாக்கிய ஃப்ராங்ஃபர்ட் பள்ளி மார்க்சியம், ஃப்ரான்சில் அல்துஸ்ஸர் முன்னெடுத்த அமைப்பியல் மார்க்சியத்தின் ஊடாக முன்வைக்கப்பட்ட மேல்நிர்ணயம் (overdetermination) எனும் அணுகல்முறை, இத்தாலியில் அந்தோனியோ கிரம்ஸ்கி முன்வைத்த சமூக மேலாண்மை (hegemony) மற்றும் அடித்தள மக்கள் (subaltern) முதலான கோட்பாடுகள். ரேமன்ட் வில்லியம்சின் பண்பாட்டுப் பொருள்முதலியம் (cultural materialism). அமெரிக்க மார்க்சியரான ஃப்ரெடெரிக் ஜேம்சனின் critical theory, டெர்ரி ஈகில்டனின் மிகவிரிவான இலக்கிய வாசிப்புகள் முதலான கலை இலக்கிய முயற்சிகள், கோட்பாடுகள் இயக்கங்கள் எல்லாமும் மார்க்சீய அடித்தளத்தின் மீது நின்று, சோஷலிச எதார்த்தவாதத்திற்க மாற்றான புதிய சிந்தனைகளை முன்வைத்தன. இலக்கியத்தை அணுகுதல் குறித்த மிக முக்கியமான பங்களிப்புகளை மார்க்சிய அடிப்படையினூடாக இவை உலகிற்கு அளித்தன. வெறும் இலக்கியம் என்பவற்றோடும் இவர்கள் முடங்கிவிடவில்லை. பெர்டோல்ட் ப்ரெக்ட் அரங்கவியலிலும், செர்கே ஐசன்ஸ்டைன் திரைத்துறையிலும் மார்க்சீயக் கோட்பாட்டை அவற்றுக்குரிய வகையில் பயன்படுத்தினர்.
2.சோஷலிச எதார்த்தவாதம் இன்று உலகளவில், எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டுள்ள போதிலும் அதை இறுக்கமாக முன்வைத்தவர்கள்தான் இன்னொரு பக்கம் தொழிலாளி வர்க்கம் என்பதோடு பிற சுரண்டப்படும் வர்க்கத்தினரின் கலைகள் மற்றும் இலக்கிய வெளிப்பாடுகள் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளித்தனர் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சோஷலிச எதார்த்தவாதத்தை மிகவும் வரட்டுத் தனமாக முன் வைத்தவர் என இன்று ஒதுக்கப்படும் பேரா.நா.வானமாமலை அவர்கள்தான் நாட்டுப்புறவியல், கதைப்பாடல்கள் ஆகியவற்றின் ஆய்வுகளுக்கும், அவற்றைப் பதிப்பதற்கும் உரிய முக்கியத்துவம் அளித்துச் செயல்பட்டவர். பவுத்தம் குறித்த ஆய்வுகளில் நாட்டம் செலுத்தியவரும் கூட. கோ.கேசவன் அவர்கள்தான் பள்ளு இலக்கியம் குறித்தும் தாழ்த்தப்பட்டவர்களின் ஆலய நுழைவுப் போராட்டங்கள் குறித்தும் முன்னோடி ஆய்வுகளைச் செய்தவர்.
மார்க்சிய இலக்கியக் கோட்பாடு தோற்றுவிட்டது என அவதூறு செய்வோர் இந்த இரண்டு அம்சங்களையும் கணக்கில் கொள்வது இல்லை.
மார்க்சோ எங்கல்சோ சோஷலிச எத்ர்ர்த்தவாதம் என்றெல்லாம் எதையும் சொல்லவில்லை. மனித வாழ்வுக்கும் அதனூடாக உருவாகும் மனிதப் பிரக்ஞைக்கும் உள்ள உறவைத்தான் அவர்கள் சுட்டிக் காட்டினர். “மனிதர்களின் பிரக்ஞை என்பது பிரக்ஞைபூர்வமான மனித இருப்பின் ஊடாகவே உருவாகிறது. (எல்லோரும் நினைப்பதுபோல) பிரக்ஞை வாழ்வை நிர்ணயிக்கவில்லை. வாழ்க்கைதான் பிரக்ஞைக்குக் காரணமாகிறது” என்பதுதான் மார்க்ஸ் சொன்னது. மார்க்சியம் என்பது அடிப்படையில் ஒரு பொருள்முதல்வாதம். அது பொருண்மையான வாழ்வை முதன்மைப் படுத்துவது. உலக வாழ்வு அதனூடாக அமையும் மனித உறவுகள் ஆகியவற்றின் ஊடாகத்தான் எண்ணங்கள் உருவாகின்றனவே ஒழிய எண்ணமும் உணர்வும்தான் உலக வாழ்வை ஆட்டுவிகின்றன என்கிற கருத்தியல் சார்ந்த உலகப்பார்வையை மார்க்சியம் ஏற்பதில்லை. இந்தக் கருத்திலிருந்தான் அடித்தளம் (Base), மேற்கட்டுமானம் (Superstructure) என்கிற கருத்தாக்கம் மார்க்சியர்களால் முன்வைக்கப்படுகிறது. மனிதர்களுக்கு இடையேயான உறவுகள் சமத்துவ அடிப்படையில் உள்ளதா, ஏற்றத்தாழ்வான, சுரண்டல் அல்லது தீண்டாமை முதலான ஒதுக்கல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளதா என்பதைப் பொறுத்துத்தான் அச்சமூகத்தின் பண்பாடு, கருத்துக்கள், ஒழுக்க வரையறைகள், மதம் மற்றும் கலை வடிவங்கள், எல்லாம் உருவாகின்றன. பின்னால் சொன்ன இந்த பண்பாடு, ஒழுக்கம், நீதி, சட்டம் எல்லாமே மார்க்சின் கருத்துப்படி “மனித மூளையில் உருவான மாயத்தோற்றங்கள் (“phantoms formed in the brains of men” – Marx) தான்.
இந்தக் கருத்தினடியாக உருவானதுதான் அடித்தளம் – மேற்கட்டுமானம் என்கிற உருவக வகைப்பட்ட கருத்தாக்கம். இலக்கியம், தத்துவம் உள்ளிட்ட எல்லாச் சிந்தனை வெளிப்பாடுகளும் அன்றைய சமூகத்தின் பொருளாயத உறவுகளால் தீர்மானிக்கப்படுபவைதான். இந்த உறவுகளை அடித்தளமாகக் கொண்டு கட்டப்படும் மேல்கட்டுமானம்தான் இலக்கியம், மதம், ஒழுக்கம் எல்லாம். மார்க்ஸ் – எங்கல்ஸ் இருவரும் மிகவும் பொருட் செறிவுடனும் ஆழமாகவும் முன்வைத்த இக்கருத்து அடுத்த தலைமுறையில் அத்தகைய ஆழமான பொருட் செறிவு கைவிடப்பட்டு மிகவும் இறுக்கமாக்கப்பட்டது. மேற்கட்டுமானத்திற்கு முற்றிலும் இரண்டாம் நிலையிலான, செயலூக்கமற்ற ஒரு பங்கே இந்தக் கருத்தக்கத்தின் மூலம் முன்வைக்கப்பட்டது.
இப்படியான ஒரு இறுக்கமான சிந்தனையின் பின்னணியில்தான் முதற்கட்ட சோஷலிச நாடுகளில் சோஷலிச எதார்த்தவாதம் எனும் கோட்பாடு முன்வைக்கப்பட்டது. இதன் மூன்று அடிப்படைகளாக ரேமன்ட் வில்லியஸ் கீழ்க்கண்டவற்றைச் சொல்வார். 1.Partinost : தொழிலாளி வர்க்கக் கட்சிக்கு விசுவாசமாக கலை இலக்கியப் படைப்பு அமைய வேண்டும். 2.Narodnost : கலைப்படைப்பு என்பது எளிமையானதாகவும் எல்லோரையும் ஈர்க்கும்படியாகவும் இருக்க வேண்டும். 3. Klassovost : வர்க்க நலன்களுக்கு எழுத்தாளன் / கலைஞன் விசுவாசமாக இருக்க வெண்டும்.
ஆக எழுத்தாளன் என்பவன் கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதுதான் இதான் மூலம் சொல்ல வருவது. 1934 ம் ஆண்டில் கூட்டப்பட்ட சோவியத் யூனியனின் எழுத்தாளர் மாநாடு இந்த சோஷலிச எதார்த்தவாதக் கோட்பாட்டைத் தன் கொள்கையாக ஏற்றுக் கொண்டது. கிறிஸ்டோஃப் காட்வெல், ஜார்ஜ் லூகாக்ஸ் முதலானோர் பெரிய விமர்சனங்கள் ஏதும் இல்லாமல் இதனை ஏற்றுக் கொண்டு தம் எழுத்துக்களை முன்வைத்தனர். கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களே சரியான படைப்புகளைப் படைக்க்முடியும் அல்லது கட்சிக்கு விசுவாசமாக உள்ளவர்கள் படைப்பதெல்லாம் சரியான இலக்கியம் என்கிற இந்த அணுகல்முறையே இறுதியாக அதன் வீழ்ச்சிக்கும் காரணமாகியது. பூர்போன் ஆளும் வம்சத்தைச் சேர்ந்த பால்சாக்கும், பெரும் பண்காரரும் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக் கொண்டவருமான டால்ஸ்டாயும் உன்னதமான இலக்கியங்களை எப்படிப் படைக்க முடிந்தது என்கிற கேள்வியை யாரும் வெளிப்படையாக முன்வைக்க இயலாத சூழல் 1930 களில் நிலவியது.
இன்றைய மார்க்சியர்கள் இந்த வகையிலான அடித்தள – மேற்கட்டுமான உறவையும், கட்சி விசுவாசத்தை மட்டுமே இலக்கணமாக கொண்டு எழுதப்படும் எழுத்துக்களையும் ஏற்பதில்லை. டெர்ரி ஈகிள்டன் இத்தகைய அணுகல் முறையைக் கொச்சை மார்க்சியம் (vulgar Marxism) என்பார். “கலை, அரசியல், சட்டம், மதம் என எந்த ஒரு சமூக மேற்கட்டுமானக் கூறும் தனக்கே உரித்தான உள் வளர்ச்சியையும், பரிணாமத்தைம் கொண்டிருக்கும். அவற்றை வெறும் வர்க்கப் போராட்டம், பொருளாதார நிலை ஆகியவற்றால் மதிப்பிட முடியாது. மேற்கட்டுமானத்தில் இருப்பவை எல்லாம் முற்றிலும் அடித்தளத்தால் நிர்ணயிக்கப்படுகிற, செயலூக்கமற்ற அம்சங்கள் மட்டுமே அல்ல. அவை மனிதப் பிரக்ஞையில் தாக்கம் செலுத்தும் சில கூறுகளையும் கொண்டிருக்கும். “கருத்தியல்” (ideology) என்பது அப்படியான ஒன்று” என்பார் அவர்.
ஒப்பீட்டளவில் தன்னிச்சையாகச் செயல்படக் கூடிய இந்தக் கருத்தியல் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட அரசியல், மதம், அறவியல், அழகியல் போன்ற சமூகப் பிரக்ஞையை ஊக்குவிப்பதாக இருக்கலாம். ஒரு சோஷலிசக் கட்சி ஆளும் நாட்டிலும் ஊட ஆளும் வர்க்கத்தின் அதிகாரத்தை நியாயப்படுத்தும் கருத்தியல் மேற்கட்டுமானத்தில் அமையக்கூடும்.. எனவே அடித்தள வர்க்கத்தில் பிறந்ததனாலேயோ அல்லது அடித்தள வர்க்கக் கட்சிக்கு விசுவாசமாக இருபதாலேயோ ஒருவரது படைப்பு முற்போக்கானதாக மட்டுமே இருக்கும் எனச் சொல்ல இயலாது. அதேபோல அடித்தள வர்க்கத்தில் பிறக்காதவராக இருந்தபோதும் ஒருவரது படைப்பு விடுதலைக் கூறுகளைக் கொண்டதாக இருக்க முடியும்.
எனவே ஒரு கலைப்படைப்பையோ இல்லை ஒரு கலைஞனையோ முற்றிலும் இப்படியான வாய்ப்பாடுகளைக் கொண்டு மதிப்பிடுவது இயலாது.
சோஷலிச எதார்த்தவாதம் உருப்பெற்றுக் கொண்டிருந்த அதே காலத்தில் (1914-1930) அதற்கு எதிர்ப்பும் 1920 தொடங்கி ருஷ்யாவில் தலை காட்டியது. ருஷ்ய வடிவவியல் வாதம் (Russian Formalism) இப்படியாக வெளிப்பட்ட ஒரு புதிய போக்கு. இது கட்சியின் கண்டனத்துக்கு ஆளாகியது. விக்டர் ஷ்க்லொவ்ஸ்கி, போரிஸ் டொமஷெவ்ஸ்கி, கிரிகோரிகு கோவ்ஸ்கி முதலானோர் இந்தப் போக்கை முன்னெடுத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். ‘வடிவவியல்’ என்பது அவர்கள் சூட்டிக் கொண்ட பெயர் அல்ல. மாறாக அந்தப் பெயர் அவர்களுக்கு அவர்களை விமர்சிப்பவர்களால் சூட்டப்பட்டது. பின்னாளில் ஜெர்மனி, பிரேக் முதலான பகுதிகளில் உருவான இலக்கியப் போக்குகள், ரஷ்யாவிலேயே உருவான பாக்தினின் ‘Diologism’ அறுபதுகளில் மேலுக்கு வந்த அமைப்பியல் முதலானவற்றில் வடிவவியலின் தாக்கம் குறிப்பிடத் தக்கதாக இருந்தது.
மற்றமையை உள்ளடக்குவது என்கிற கருத்தக்கத்திற்கு மிகையில் பாக்தின் முன்வைத்த டயலாஜிச அணுகல்முறை முதன்மை அளித்தது. ஒரு படைப்புக்குள் அல்லது ஒரு இலக்கியப் போக்குக்குள் மாற்றுக் குரல்களின் இருப்பு என்பதை அது முன் நிறுத்தியது. தமிழகத்திலும் கூட தொண்ணூறுகளில் தலித்தியம், பெண்ணியம் முதலியன மேலுக்கு வந்தபோது பாக்தின் பெரிதாகப் பேசப்பட்டது நினைவிருக்கலாம். கலையை ஒற்றைப் பண்புடையதாக்குவதற்கு ஒரு எதிர்க் குரலாக மேலுக்கு வந்த போக்கு இது. பல வர்க்கம், சாதி, மொழி என அமைந்த இந்தியா போன்ற நாடுகளில் இந்த பலகுரல் ஒலிப்பு என்பதுதான் சரியான கலை இலக்கியப் போக்காக இருக்க முடியும்.
1920 களில் வால்டர் பெஞ்சமின், தியோடர் அடர்னோ, ஹெர்பர்ட் மார்க்யூஸ் ஆகியோரால் ஜெர்மனியை மையமாகக் கொண்டு உருவான போக்குத்தான் ‘ஃப்ரான்க்ஃபர்ட் பள்ளி’ என்பது. மக்கள் திரள் பண்பாடு (mass culture), தகவல் தொடர்பு (communication), உளப்பகுப்பாய்வு, இருத்தலியல் கோட்பாடு, பண்பாட்டு விமர்சன ஆய்வுகள் (critical cultural studies) முதலானவற்றை எல்லாம் உள்ளே கொண்டுவந்து மார்க்சிய அழகியலை இது வளப்படுத்தியது.
சோஷலிச எதார்த்தவாதத்தை ஏற்காத இன்னொரு முக்கிய மார்க்சியக் கலைஞர் உலகப் புகழ்பெற்ற நாடகாசிரியரான பெர்டோல்ட் ப்ரெக்ட். ஜெர்மனியில் பிறந்து நாஜி ஆட்சியில் நாட்டை விட்டோடித் தஞ்சம் புகுந்த அமெரிக்காவிலும் வாழ முடியாமல் இறுதியில் போருக்குப் பிந்திய கிழக்கு ஜெர்மனியில் இறுதிக் காலத்தைக் கழித்த அவருக்கும் எதார்த்தவாதத்தை உயர்த்திப் பிடித்த ஜார்ஜ் லூகாக்சுக்கும் இடையே நடந்த விவாதம் குறித்து நான் மிக விரிவாக எழுதியுள்ளேன். ஒரு கலைப்படைப்பின் வெற்றி என்பது பார்வையாளன் அல்லது வாசகனை கதாபாத்திரம் அழும்போது அழவைத்து, சிரிக்கும்போது சிரிக்க வைத்து, படைப்புடன் ஒன்ற வைப்பதில்தான் அடங்கியுள்ளது என்கிற கருத்தை ப்ரெக்ட் மறுத்தார். மாறாக அவனை படைப்பின் போக்கிலிருந்து அந்நியப்படுத்திச் (defemiliarisation) சிந்திக்கவைப்பதுதான் கலைப் படைப்பின் நோக்கம் என்றார் ப்ரெக்ட்.
மார்க்சிய அழகியல் மற்றும் கலை இலக்கியக் கோட்பாட்டிற்கு இன்னொரு பரிமாணம் சேர்த்த வால்டர் பெஞ்சமினும் ப்ரெக்டும், கலைப்படைப்புகளின் இன்னொரு முக்கிய பரிமாணமான சமூக உற்பத்தி என்பதற்கு முக்கியத்துவம் அளித்தனர். The Author as Producer எனும் புகழ்பெற்ற கட்டுரையில் வால்டர் பெஞ்சமின் ஒரு படைப்பாளி என்பவன் முதலில் அவன் ஒரு சமூக உறுப்பினன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்பார். சமூகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வர்க்கப் போரில் அவனது நிலைபாடு என்ன என்பதை அவன் தெளிவாக்க வெண்டும். கலை என்பது இப்போது விலைக்கு விற்கப்படும் பண்டம் என்றாகிவிட்ட நிலையில் அந்த லாபகரமான தொழிலில் படைப்பாளி என்பவன் ஒரு அங்கம். எனவே இனி படைப்பாளி என்பவனுக்கு எந்த ஒரு புனித இடமும் கிடையாது. நடக்கும் வர்க்கப் போராட்டத்திலிருந்து அவன் ஒதுங்கி நிற்க முடியாது. எந்தப் பக்கம் எனத் தீர்மானி. தொழிலாளி வர்க்கத்தின் பக்கம் நில் என்றார் பெஞ்சமின். கலைப் படைப்பின் உற்பத்தியில் சக உழைப்புச் சக்திகளை விமர்சனமின்றி ஏற்கக் கூடாது. அவர்களைப் புரட்சிகர சக்தியாக ஆக்க வேண்டிய கடமை அவனுக்கு உண்டு. கலிஞனுக்கும் அவனது பார்வையாளனுக்கும் இடையில் ஒரு புதிய புரட்சிகர உறவை அது ஏற்படுத்த வேண்டும்.
பெஞ்சமினின் கோட்பாட்டிற்கு ஒரு நடைமுறை எடுத்துக்காட்டாக ப்ரெக்டின் அரங்க இயக்கம் அமைந்தது.
(இன்னும் இரு கட்டுரைகளுடன் இந்தத் தொடர் நிறைவுறும். அடுத்த இதழில் இந்தியா குறித்து கார்ல் மார்க்ஸ் கூறியதென்ன?)