(‘அடையாளம்’ பதிப்பக வெளியீடாக அடுத்த சில நாட்களில் வெளிவர உள்ள பொது சிவில் சட்டம் பற்றிய நூலின் முகப்புக் கட்டுரை. மேலே உள்ள படம்: ‘பாரதீய முஸ்லிம் மகிள அந்தோளன்’ ஒருங்கிணைப்பாளர் நூர்ஜஹான் சஃபியா நியாஸ்)
1.விருப்ப அடிப்படையில் எந்த மதத்தினர் வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளக் கூடிய ‘பொது சிவில் சட்டம்’ ஒன்று இப்போதும் நடைமுறையில் உள்ளதுதான். 1954ம் ஆண்டு சிறப்புத் திருமணச் சட்டம் (Special Marriages Act, 1954) இத்தகையதுதான். குறிப்பான மதச் சட்டங்கள் வேண்டாம் எனக் கருதும் யார் வேண்டுமானாலும் இதைத் தேர்வு செய்து கொள்ளலாம். இச்சட்டத்தை 1925 ம் ஆண்டு ‘இந்திய வாரிசுரிமை சட்டம்’ (Indian Succession Act) முதலானவற்றுடன் இணைத்து வாசித்தால், திருமணம், விவாக ரத்து, ஜீவனாம்சம், வாரிசுரிமை முதலான அம்சங்களில் மதம் சாராத சட்டங்களுக்கு யாரொருவரும் தம்மை உட்படுத்திக் கொள்ள முடியும். எனவே இப்போது பொது சிவில் சட்டமே இல்லை எனச் சொல்வது தவறு.
2.தலாக்” என ஒரே நேரத்தில் மும்முறை சொல்லி ஒரு ஆண் தன் மனைவியை விவாக ரத்து செய்வதற்கு திருக்குர் ஆனிலோ, ஹதீஸ்களிலோ இடமில்லை. ஆண்கள் இருவர் அவ்வாறு தாம் உடனே ரத்து செய்துவிட்டதாக வந்தபோது நபிகள் அதை ஏற்காததோடு அவர்களை, “நான் உயிரோடு இருக்கும்போதே திருக்குர் ஆன் சட்டத்தை நகைப்புக்கு இடமாக்குகிறீர்களா?” எனக் கடிந்து அவர்களின் உடனடி முத்தலாக்கை ரத்து செய்தார் என்பதற்கு ஆறு ஹதீஸ்கள் உள்ளன.
3.ஒரு முறை தலாக் சொல்லி மூன்று மாதத்திற்குள் அப்படிச் சொன்னதை கணவன் ரத்து செய்யலாம். இரண்டாம் முறை சொன்ன பிறகும் கூட அப்படி ரத்து செய்யலாம். அப்படி மூன்று மாதத்திற்குள் சொன்ன தலாக்கை ரத்து செய்யாமலும், மூன்று தலாக்குகளைப் போதுமான இடைவெளியில் சொல்லாமலும் இருந்தால் எந்த நிபந்தனையும் இல்லாமல் அவர்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்டு வாழத் தடையில்லை. அதாவது அந்த மனைவி இடையில் வேறொருவருடன் இன்னொரு திருமணம் செய்யாமல் (ஹலாலா) அவரையே திருமணம் செய்துகொண்டு தொடர்ந்து அவருடன் வாழ்க்கை நடத்தலாம். சொன்ன தலாக்கை மூன்று மாதத்திற்குள் ரத்து செய்ய வாய்மொழியாக ரத்து செய்து அறிவிக்கக் கூடத் தேவையில்லை. அவர்கள் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தாலே போதுமானது.
4.கலீபா உமரின் காலத்தில் ஒரே நேரத்தில் முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்வது ஏற்றுக்கொள்ளப்பட்டது என ‘முத்தலாக்கை’ ஆதரிப்பவர்கள் சொல்வது சரியல்ல. வரலாற்றைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டு மூன்று பேர் அப்படிச் சொல்லிக் கொண்டு உமரிடம் வந்தது உண்மைதான். ஆனால் அவர்கள் அப்படிச் செய்ததை அவர் ஏற்கவில்லை. அவர்களைக் கடுமையாகக் கண்டித்ததோடு சாட்டை அடி கொடுத்து தண்டிக்கவும் செய்தார். பின் அந்த மனைவியரிடம் தம் கணவர்களுடன் சேர்ந்து வாழ விரும்புகின்றனரா என விசாரித்தபோது அவர்கள் ‘இல்லை’ எனச் சொன்னார்கள். அதன் பின்னரே அந்தத் திருமணங்களை ரத்தானவையாக உமர் அறிவித்தார். ஒரு வேளை அந்த மனைவியர் விவாகரத்தை ஏற்கவில்லை எனக் கூறி இருந்தால் அந்தத் திருமணம் ரத்தாகவில்லை என்பதே பொருள். கோபத்தில் கணவர்கள் முத்தலாக் சொல்லிவிட்டுப் பின் வருத்தம் தெரிவித்தால் கூட மீண்டும் அவர்கள் சேர்ந்து வாழ அந்தப் பெண் ‘ஹலாலா’ செய்ய வேண்டும் எனச் சில முல்லாக்கள் சொல்வதை அது முஸ்லிம் சட்டத்திற்கு எதிரானது என தாகிர் முகம்மது போன்ற சட்டவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
5.ஒரே நேரத்தில் சொல்லப்படும் முத்தலாக் செல்லாது என்பதை இந்திய நீதிமன்றங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன. ஷமீம் ஆரா வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இப்படியான தீர்ப்பு குறித்து நான் வேறு கட்டுரை ஒன்றில் விரிவாகச் சொல்லியுள்ளேன். மசூத் அகமத் வழக்கில் (டெல்லி உயர்நீதி மன்றம், 2008) நீதிபதி பாதர் துரேஸ் அகமத் அவர்களும் இதை உறுதி செய்துள்ளார். இவர் குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அகமத் அவர்களின் மகன். எனவே இதையெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிராக வேண்டுமென்றே சொல்லப்படுவதாக நாம் நினைக்கத் தேவை இல்லை.
6.ஈராக், ஜோர்டான், எகிப்து, சிரியா உட்பட பத்துக்கும் மேற்பட்ட அரபு முஸ்லிம் நாடுகளில் ஏதோ ஒரு வகையில் ஒரே தடவையில் முத்தலாக் சொல்வது செல்லாது என சட்டம் உள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம் முதலான நமது துணைக் கண்ட முஸ்லிம் நாடுகளிலும் கூட விவாகரத்து நடமுறைக்கு வர மூன்றுமாத கால அவகாசம் கட்டாயமாக்கப் பட்டுள்ளதால் ஒரே நேர முத்தலாக்கிற்கு அங்கும் இடமில்லை எனக் கருதலாம்.
7.இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்காக ஒருவர் முஸ்லிமாக மதம் மாறுவதை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது (Sushmita Ghosh Writ Petition No. 509 of 1992). அப்படிச் செய்பவர் மீது இ.த.ச 494 மற்றும் 495 வது பிரிவுகளின்படி சட்ட நடவடிக்கையும் எடுக்கலாம். இதே போல வேறு சில தீர்ப்புகளும் உண்டு. முஸ்லிமாக மாறி இரண்டாவது திருமணம் செய்து கொள்பவர் தான் முஸ்லிமாக மாறுவதை உண்மையிலேயே அம்மதத்தின் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலேயே செய்ததாகவும், மாற்றத்துக்குப் பின் தான் முஸ்லிமாகவே வாழ்வதாகவும் நிறுவ வேண்டும். இப்படி ஏமாற்று மதமாற்றங்களால் பாதிக்கப்படுபவர்கள் இத்தகைய தீர்ப்புகளைக் காட்டி ஏமாற்றுபவர்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வசதி உள்ளது. இந்தத் தீர்ப்புகளின் அடிப்படையில் இப்படியான ஏமாற்று மதமாற்றங்களைத் தடை செய்ய தனிச் சட்டம் இயற்ற வேண்டுமென ‘இந்தியச் சட்ட ஆணையம்’ அறிக்கை ஒன்றையும் அளித்துள்ளது (எண்:227, ஆண்டு 2009). பலதாரத் திருமணம் தொடர்பான இஸ்லாமியச் சட்டத்திற்கும் இது எதிரானது என்கிறது சட்ட வாரியம். ஷரியத் சட்டத்தின்படி எல்லா மனைவியருக்கும் நீதியாக நடந்துகொள்ள வேண்டும் என்பது பலதார மணத்திற்கான நிபந்தனை. முதல் மனைவி ஒரு மதத்திலும் அடுத்த மனைவி இன்னொரு மதத்திலும் நம்பிக்கை கொண்டுள்ளபோது கணவன் இருவருக்கும் சம நீதியுடன் நடந்துகொள்வது சாத்தியமில்லை என்கிறது சட்ட வாரியம்.
8.முஸ்லிம் ஆணைப் போலவே முஸ்லிம் பெண்ணும் சுய விருப்பின் அடிப்படையில் தன் கணவரை விவாக ரத்து செய்யலாம். இதை ‘குலா’ என்பர். பெண் தன் கணவரை ‘குலா’ செய்வதற்கு கணவரின் சம்மதம் வேண்டும் எனச் சில மவுலவிகள் சொல்வது தவறு. நம்பிக்கை உள்ளவர்களால் மிகவும் மதிக்கப்படும் மவுலானா மவுதூதி போன்ற இஸ்லாமிய அறிஞர்களும் கூட ஆண்களைப் போலவே பெண்களுக்கும் தம் திருமணத்தை ரத்து செய்யும் உரிமையை ஏற்றுக் கொண்டுள்ளனர். இதைத் தீர்மானிப்பது அந்த மனைவி மட்டுமே. அவள் கணவனோ இல்லை காஸியோ இதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அந்த மனைவியின் விருப்பை சட்ட பூர்வமாக அங்கீகரிப்பது மட்டுமே காஸியின் பணி. விவாகரத்து செய்யப்படும் கணவன் மனைவிக்கு அளித்திருந்த ‘மெஹ்ர்’ தொகையைத் திரும்பக் கோரினால் அவர் அதைத் திருப்பித் தர வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை. திருமணத்தின்போது மெஹ்ர் தொகை கொடுக்கப்படாதிருந்தால் ரத்தின் போது மனைவி எதையும் தர வேண்டியதில்லை. தவிரவும் ‘குலா’ வைப் பொருத்தமட்டில் அது சொல்லப்படும் கணத்திலேயே நிகழ்ந்துவிடுகிறது. ‘தலாக்’ போல காத்திருப்புக் காலம் கிடையாது. இது குறித்து தாரிக் மெஹ்மூத் அளிக்கும் விளக்கம்: ஆண் வலிமையானவன்; பெண் பலவீனமானவள். அவன் அளை வற்புறுத்தில் பணிய வைக்க முடியும். அந்த வாய்ப்பை அவனுக்கு அளிக்கலாகாது என்பதே இதன் பொருள். ஒருமுறை நபிகளிடம் ஒரு பெண் கணவரை விவாகரத்து செய்வதாகக் கூறுகிறார். நபிகள் அவளது கருத்தை மறு பரிசீலனை செய்யச் சொல்கிறார். அந்தப் பெண் அவரிடம், “இது கட்டளையா, ஆலோசனையா?” என்கிறாள். “ஆலோசனை மட்டுமே” என நபிகள் பதிலுறுக்கிறார். அப்படியானால் அதை நான் ஏற்கவில்லை என அப்பெண் பதிலளிக்க நபிகள் அவ்வாறே அதை ஏற்றுக் கொண்டு அந்தப் பெண் சொல்லிய குலாவை அங்கீகரித்ததாக வரலாறு.
9.வழிகாட்டு நெறிமுறைகளில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதால் பொது சிவில் சட்டம் தேவை என்கிற கருத்தை நம் அரசியல் சட்டம் வற்புறுத்துவதாகக் கொள்ள முடியாது. பொது சிவில் சட்டம் என்பது நம் அரசியல் சட்டத்தின் மூன்றாவது பட்டியலில் (List III) வைக்கப்பட்டுள்ளது. அதாவது மத்திய -மாநிலப் பொதுப்பட்டியலில் வைக்கப்பட்டுள்லது. அதாவது மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசும் இதன் மீது சட்டம் இயற்றலாம். இதன் பொருள் தனிநபர் சட்டங்களைப் பொருத்த மட்டில் அந்தந்த தேச வழமைகளுக்கு மதிக்களிக்க வேண்டும் என்பதே. அந்த வகையில் இன்று கேரள அரசு இயற்றியுள்ள ‘கூட்டுக் குடும்ப ஒழிப்புச் சட்டம் (1975) ன் ஊடாக மத்திய அரசின் ‘இந்து வாரிசுரிமைச் சட்டம் (1956) ன் பல பிரிவுகள் பெரிய மாற்றத்திற்குள்ளாக்கப் பட்டுள்ளன. அதேபோல நாடாளுமன்றம் இயற்றியுள்ள இந்து திருமணச் சட்டத்தில் (1955) தமிழ்நாடு, உத்திரப் பிரதேசம் முதலான மாநிலங்கள் பல மாற்றங்களைச் செய்துள்ளன. காஷ்மீரில் உள்ள முஸ்லிம் குடும்பச் சட்டப் பிரிவுகளுக்கும் உ.பி யிலுள்ள முஸ்லிம் சட்டப் பிரிவுகளுக்கும் இடையில் வேறுபாடு உண்டு. புதுச்சேரி மற்றும் கோவா போன்று 1947 க்குப் பின் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட மாநிலங்களில் வாழும் இந்துக்களுக்கு இந்திய நாடாளுமன்றம் இயற்றியுள்ள இந்துச் சட்டங்களிலிருந்து விலக்குகள் உண்டு. புதுச்சேரியிலுள்ள ஒரு இந்து விருப்பப்பட்டால் ஃப்ரெஞ்ச் காலச் சிவில் சட்டத்தைத் தொடரலாம்; தன் மனைவி குழந்தை பெறவில்லை அல்லது ஆண் குழந்தை பெறவில்லை எனக் காரணம் காட்டி கோவாவில் உள்ள ஒரு இந்து ஆண் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளலாம். நாகாலந்த், மிசோராம் மக்களுக்குப் பழங்குடி வழமைகளைச் சட்டமாகக் கொள்வதற்கு இந்துச் விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. அரசியல் சட்டத்தின் 13ம் திருத்தம் (1962) நாகாலந்துக்கு இந்த உரிமையை அளிக்கிறது. நாகாலந்து உயர் நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பை உச்ச நீதிமன்றமோ இல்லை நாடாளுமன்றமோ மாற்ற முடியாது. மிசோராம், நாகாலந்து, மணிபூர், கேரளா, கோவா முதலான மாநிலங்களில் வசிக்கும் கிறிஸ்தவ மக்களிடையே உள்ள வேறுபட்ட வழமைகள் இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மத்திய மற்றும் மாநில அரசு இயற்றியுள்ள சட்டங்களோடு இவையும் நடைமுறையில் உள்ளன என்கிறார் Uniform Civil Code: Fictions and Facts எனும் நூலாசிரியர் பேரா. தாஹிர் முகம்மது. பார்சி திருமணம் தொடர்பான வழக்குகளைத் தீர்க்க சிறப்பு பார்சி திருமண நீதிமன்றங்களை உருவாக்க சட்டத்தில் இடம் உள்ளது. திருமணங்கள், விவாக ரத்து, மகளுக்குச் சொத்து வழங்கல் முதலியவற்றில் பார்சி சட்டங்கள் முஸ்லிம் சட்டங்களுக்கு நெருக்கமாக உள்ளன. இப்படியான வேறுபாடுகள் இன்று அனைத்து மதத்தினருக்கும் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப் பட்டிருந்தாலும் இன்று முஸ்லிம்கள் மட்டுமே எதோ சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளதுபோல இலக்காக்கப்படுகின்றனர்.
10.”முஸ்லிம் தனிநபர்ச் சட்டங்கள் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் உள்ளன. ஒரு மதச் சார்பற்ற நாட்டில் இதை ஏற்க முடியாது’ என்றொரு கருத்து முன்வைக்கப்படுகிறது. மதசார்பற்ற நாடு என்பதன் பொருள் எந்த ஒரு மதநம்பிக்கையும் அதன் சடங்குகளும் பிற நம்பிக்கையாளர்கள் மீது திணிகப்படக் கூடாது என்பதே. மற்றபடி அவரவர் நம்பிக்கைகளை அவரவர் கடைபிடிப்பதை மதச்சார்பின்மை என்கிற பெயரில் தடை செய்வதோ இல்லை அவற்றில் தலையிடுவதோ முடியாது. அதோடு முஸ்லிம் தனிநபர் சட்டங்கள் மட்டுமே அவர்களின் மத நம்பிக்கைகளோடு தொடர்புடையதாக உள்ளன என்பதும் தவறு. இந்து திருமணச் சட்டம் ‘சப்தபதி’, ‘கன்யாதன்’ முதலான மதச் சடங்குகளை நிபந்தனைகளாக ஏற்றுக் கொள்வது பலராலும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
11.’பொதுசிவில் சட்டம் என்னும் கருத்தை முஸ்லிம்கள் மட்டுமே எதிர்க்கின்றனர். முற்போக்கான மாற்றங்களுக்கு அவர்கள் எதிராக உள்ளனர்’ என்கிற கூற்றிலும் பொருள் இல்லை. தனிநபர் சட்டங்களில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்கிற கருத்து 1950 களில் அம்பேத்கர் போன்றோரால் முன்மொழியப்பட்ட போது அதைக் கடுமையாக எதிர்த்தவர்கள் இந்துமகா சபையினர்தான். மற்ற மதங்களை விட்டு விட்டு ஏன் இந்து மதத்தில் கைவைக்கிறீர்கள் எனக் கடுமையாக எதிர்த்தனர். இந்து வாரிசுரிமைச் சட்டம், திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டங்கள் ஆகியவற்றில் மாற்றங்கள் கொண்டு வருவதை பாரதீய ஜனசங் கட்சியைத் தோற்றுவித்த சியாமா பிரசாத் முகர்ஜி கடுமையாக எதிர்த்தார். இந்துச் சட்டத்தின்படி பெண்கள் தம் குழந்தைகட்கு 5 வயதுவரை மட்டுமே காப்பாளராக இருக்க முடியும்; அதற்குப் பின் தந்தையே காப்பாளராக இருக்க முடியும். மூதாதையர் சொத்தில் பெண்களுக்குப் பங்கில்லை. ஆண்களுக்குப் பலதார உரிமை உண்டு. பெண்கள் விவாகரத்து செய்ய இயலாது. இன்றளவும் மனைவி பிரிய நேர்ந்தால் குடும்பச் சொத்தில் (marital property) மனைவிக்கு உரிய பங்கு கிடையாது என்பன போன்ற பல பிற்போக்கான கூறுகளைக் கொண்டிருந்த இந்துச் சட்டத்தில் எந்த மாற்றங்களும் கூடாது என அவர்கள் எதிர்ப்புக் காட்டினர். இன்றும் கோவா வில் இந்து ஆண்கள் இரண்டாம் தாரம் திருமணம் செய்ய உள்ள உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை அங்குள்ள இந்துத்துவ சக்திகள் எதிர்க்கின்றன.
12.”பொது சிவில் சட்டம் என்கிற கோரிக்கையை முஸ்லிம் பெண்கள் ஆதரிக்கின்றனர். முஸ்லிம் ஆண்களும், முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் போன்ற பிற்போக்கான மத அமைப்புகளும் மட்டுமே எதிர்க்கின்றனர்” எனச் சொல்வதும் தவறு. “பாரதீய முஸ்லிம் மகிள அந்தோலன்’ (BMMA) எனும் அமைப்பு இவ்வாறு குறிப்பாகக் குற்றம் சாட்டப் படுகிறது. ஒரு முஸ்லிம் தமிழ் வார இதழ் இந்த அமைப்பை பா.ஜ.க அமைப்பு என்று கூட எழுதியிருந்தது. இது தவறு. இது ஒரு சுதந்திரமான முஸ்லிம் பெண்கள் அமைப்பு. இது பா.ஜ.க அரசின் ‘பொது சிவில் சட்டம்’ எனும் கோரிக்கையை ஆதரிக்கவில்லை. முத்தலாக் சொல்லி பெண்களை உரிய பொருளாதாரப் பாதுகாப்புகள் அளிக்காது ஆண்கள் தன்னிச்சையாக விவாக ரத்து செய்வதைத்தான் அது எதிர்க்கிறது. 13 மாநிலங்களில் கிளைகளையும், ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்களையும் கொண்டுள்ள இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான நூர்ஜஹான் சஃபியா நியாஸ் ‘ஃப்ரன்ட்லைன்’ இதழுக்கு (அக்டோபர் 11, 2016) அளித்துள்ள நேர்காணலில் மிகத் தெளிவாகத் தாங்கள் பொதுச் சிவில் சட்டம் என்கிற பா.ஜ.கவின் முயற்சியை கடுமையாக எதிர்ப்பதாகவும், ஷரியத் மற்றும் அரசியல் சட்டம் ஆகியவற்றிற்கு உட்பட்டு பெண்கள் சம உரிமை பெறும் வண்ணம் முஸ்லிம் தனிநபர் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று மட்டுமே கோருவதாகவும் சொல்லியுள்ளார். முத்தலாக் மற்றும் ஹலாலா நிபந்தனை நீக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே தங்களின் கோரிக்கை எனவும், கிறிஸ்தவர்கள், பார்சிகள் ஆகியோருடனும் பேசி வேண்டுமானால் அவர்களின் தனிநபர் சட்டங்களிலும் திருத்தங்கள் செய்து கொள்ளட்டும் எனவும் கூறும் நூர்ஜெஹான், பொது சிவில் சட்டம் என்பது ஒரு அகன்ற விரிவான பிரச்சினை, அதில் அரசு ஆர்வமாக இருந்தால், வேண்டுமானால் அதை சிறப்புத் திருமணச் சட்டம் போலக் கட்டாயமாக்காமல், தனிநபர்களின் விருப்பத்திற்கு விட்டுவிடலாம் என்கிறார். எனினும் இவ்வமைப்பினர் அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியத்தின் நிலைபாட்டையும் அதன் “மத்திய கால மனநிலை” யையும் ஏற்பதில்லை. முத்தலாக் சொல்லி தன்னிச்சையாக விவாகரத்து செய்வதை ஏற்க இயலாதென முஸ்லிம் அமைப்புகளுக்கிடையே ஒரு கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது என சற்று கட்டுப்பெட்டித் தனமான அமைப்பாகிய ஜமாத் ஏ இஸ்லாமியின் தலைவர் சலீம் எஞ்சினீயர் கூட ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத் தக்கது. ‘பாரதீய முஸ்லிம் மகிள அந்தோளன்’ அமைப்பு தமிழகம் உட்பட சில மாநிலங்களில் ஷரியத் நீதி அமைப்புகளை அமைக்க உள்ளதற்கு அகில இந்திய மில்லி கவுன்சில் (AIMC) ஆதரவு அளித்துள்ளது. இடதுசாரிப் பெண்கள் அமைப்பும் இன்று இதே நிலையைத்தான் முன்வைக்கின்றன. “நாங்கள் பொது சிவில் சட்டத்தைக் கோரவில்லை. ஒவ்வொரு சமூகத்திற்குள்ளும் சமத்துவம், சமநீதி என்கிற அடிப்படையில் சீர்திருத்தங்களையே வேண்டுகிறோம்” என்கிறார் ‘அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க’த்தின் சட்டத்துறை ஒருங்கிணைப்பாளரும் வழக்குரைஞருமான கீர்த்தி சிங். ‘இந்தியப் பெண்களின் தேசியக் கூட்டமைப்பின்’ (NFIW) பொதுச் செயலர் ஆனி ராஜா, “நாங்களும் பொது சிவில் சட்டம் என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தோம். எனினும் இவர்கள் பொது சிவில் சட்டம் என்கிற பெயரில் இந்துச் சட்டத்தை எல்லோர் மீதும் திணிக்க முயற்சிக்கின்றனர் என்கிறபோது எங்கள் நிலைபாட்டை மாற்றிக் கொண்டுள்ளோம்” என்கிறார். இவர்களும் இப்போது தனிநபர்ச் சட்டங்கலீல் உரிய திருத்தங்கள் என்கிற கோரிக்கையோடு இப்போது நிறுத்திக் கொள்கின்றனர் (‘ஃப்ரன்ட்லைன்’ நவ 11, 2016).
13.வேறு சில சிறிய முஸ்லிம் பெண்கள் அமைப்புகள் இன்னும் ஒரு படி மேலே சென்று முஸ்லிம் ஆண்கள் பலதார மணம் செய்வதையும் உடன் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் கோருகின்றன.
14.’அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்’ (AIMPLB) என்பது 1973 ல் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் முஸ்லிம் அடையாளம் நீக்கப்படுதல் முதலான முயற்சிகள் மேலெழுந்த ஒரு காலகட்டதில், பிரிவினைக்குப் பின் இந்திய அளவில் முஸ்லிம்களுக்கான ஒரு வலுவான அமைப்பு இல்லாத சூழலில் முஸ்லிம்களின் அடையாளங்களையும் உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. ஷா பானு, பாபர் மசூதி முதலான பிரச்சினைகளில் ஒரு முக்கிய பங்க்காற்றிய இந்த அமைப்பு கடந்த 43 ஆண்டுகளாக அகில இந்திய அளவில் முஸ்லிம்களின் மார்க்க உரிமைகளுக்காகத் தொடர்ந்து இயங்கிவருவது என்கிற வகையில் ஒரு அங்கீகாரம் பெற்ற அமைப்பு. பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மார்க்க அறிஞர்கள் நிரம்பிய அந்த அமைப்பில் தேவ்பந்தினரின் ஆதிக்கம் இருந்தது என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையில் பரேல்வி பிரிவினர் இதிலிருந்து விலக நேரிட்டது. ஷியா பிரிவினர் இப்போது தனியாக ஒரு சட்ட வாரியத்தை அமைத்துள்ளனர். அதே போல முஸ்லிம் பெண்களுக்கான சட்ட வாரியம் ஒன்றும் உருவாகியுள்ளது. மொத்தத்தில் இப்போது நான்கு முஸ்லிம் சட்ட வாரியங்கள் செயல்படுவதாகச் சொல்லப் படுகிறது. AIMPLB என அறியப்படும் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மிகவும் பிற்போக்கான ஆணாதிக்க மனப்பாங்குடையது என்று முஸ்லிம் அறிஞர்களான தாரிக் முகம்மது, ஏ.ஜி.நூரானி முதலானோராலும் ‘பாரதீய முஸ்லிம் மகிள அந்தோளன்’ போன்ற பெண்கள் அமைப்பாலும் கடுமையாக விமர்சிக்கப் படுகின்றனர். தற்போது நடைபெறும் பொது சிவில் சட்டம் குறித்த விவாதத்தில் சட்ட வாரியம் “பெண்கள் ஆண்களைக் காட்டிலும் முடிவெடுக்கும் திறன் குறைந்தவர்கள்” எனக் கூறியுள்ளதும் இன்று கடும் கண்டனத்துக்குள்ளாகி இருக்கிறது. 2009 ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எல்லோருக்கும் கட்டாயக் கல்விச் சட்டத்தைக் கொண்டு வந்தபோது இது மதரசா கல்விமுறையைப் பாதிக்கும் என இச்சட்ட வாரியம் எதிர்த்ததும் அப்போது விமர்சனத்துக்குள்ளாகியது.. எனினும் இன்று பொது சிவில் சட்டம் தொடர்பான வழக்கில் இவர்கள் தலையிட்டு அளித்துள்ள மனுவில் முத்தலாக்கை ஏற்க இயலாது எனவும், விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணுக்கு அவரது எஞ்சிய வாழ்நாளுக்குப் போதுமான ஜீவனாம்சம் அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றத் தலையீட்டால் உருவாகியுள்ள நீதி வழங்குக் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
15.முத்தலாக், ஜீவனாம்சம் முதலான அம்சங்களில் நீதிமன்றத் தலையீட்டால் இன்று முஸ்லிம் பெண்களுக்கு உருவாகியுள்ள பாதுகாப்பு, மற்றும் முஸ்லிம் சமூகத்தில் இப்படியான பின்னணியில் உருவாகியுள்ள கருத்து வளர்ச்சி முதலியன தனியே ஒரு கட்டுரையில் விவாதிக்கப்பட்டுள்ளது.