தொழிலாளர் இயக்கங்களின் எதிர்காலம்

கார்ல் மார்க்ஸ் 10                                          

இந்தக் கட்டுரைத் தொடரை வாசித்துக் கொண்டிருப்பவர்களை இரு வகைப்பட்டவர்களாகப் பிரிக்கலாம். ஒன்று: என்னைப் போன்ற சென்ற நூற்றாண்டின் மத்தியில் பிறந்து இந்த நூற்றாண்டை வியப்புடனும் சற்றே அச்சத்துடனும் பார்த்துக் கொண்டிருப்பவர்கள். இரண்டு :இந்தப் புதிய நூற்றாண்டில் பிறந்து இந்தப் புதிய மாற்றங்களினூடாக வாழ்ந்து வருகிறவர்கள்.

இங்கு சென்ற நூற்றாண்டையும் இந்த நூற்றாண்டையும் பற்றி இரண்டு மார்க்சிய அறிஞர்களின் கூற்றைச் சுருக்கமாகக் காண்பது அவசியம். ஒருவர் மறைந்த மார்சிய வரலாற்றறிஞர் எரிக் ஹாப்ஸ்வாம் (1917- 2012). முதலாளிய உலகின் வரலாற்றை நூற்றாண்டு வாரியாக எழுதினவரை “வரலாற்றாசிரியர்களின் வரலாறாசிரியர்” எனக் கூறுவர். மார்க்சியத்தின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் நேரில் கண்ட அவர் தன்னைப்பற்றி, “ஒரு மார்க்சியராக இருந்ததற்காக சற்றும் வருத்தமோ மறு பரிசீலனையோ செய்து கொள்ளாதவன் (Unrepentant Marxist)” எனத் குறிப்பிட்டுக் கொண்டவர். நூற்றாண்டு வாரியாக வரலாற்றை எழுதிய அவர் சென்ற (20ம்) நூற்றாண்டை 1914 ல் தொடங்கி 1989 – 91ல் முடிந்து விட்ட ‘ஆகச் சிறிய நூற்றாண்டு’ என்பார். அதாவது 20ம் நூற்றாண்டை அடையாளப்படுத்தும் கூறுகள் முதல் உலகப் போரில் தொடங்கி சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சியோடு முடிந்து விடுகிறது என்பது பொருள்.

பாசிசத்தின் தொடக்கம், வீழ்ச்சி, ருஷ்ய சீனப் புரட்சிகள், உலக நாடுகள் அவை, மனித உரிமைப் பிரகடனம், நிரந்தர வேலை, ஓய்வூதியம், சமூகப் பாதுகாப்பு, கல்வி, மருத்துவம் முதலானவை பேரளவு அரசின் பொறுப்பாதல், தொழிற்சங்க இயக்கங்களின் எழுச்சி, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் வார்சா ஒப்பந்தத்தின் கீழ் இணைதல், லத்தீன் அமெரிக்கா உலகளாவிய முதலாளியக் கட்டமைப்பிலிருந்து சற்றே விலகி வளர்தல், நேருவின் அணிசேரா நாடுகள் எனும் கோட்பாடு உலகின் கவனத்தைப் பெறுதல், திட்டமிட்ட பொருளாதாரம் என்பதனூடாக குறிப்பிட்ட அளவு சந்தையின் மீது அரசுக் கட்டுப்பாடு எனும் கருத்தாக்கம் உலகளவில் கவனம் பெறுதல், பனிப்போர்,  சோவியத் யூனியனின் வீழ்ச்சி, வார்சா ஒப்பந்தம் அழிக்கப்பட்டு அதன் அங்கங்கள் முதலாளிய நாடுகளின் கூட்டணியான ‘நேட்டோ’ (NATO) வில் இணைதல், கம்யூனிச மற்றும் சோஷலிச முயற்சிகள் கைவிடப் பட்டு முதலாளியப் பாதையை நோக்கி உலகம் முழுமையாகத் திரும்புதல்… என்பதாகச் சென்ற நூற்றாண்டை நாம் அடையாளப்படுத்தலாம்.

இரு உலகப் போர்களுக்குப் பின்னான ஒரு அழகான தொடக்கமும் அதன் சோகமான வீழ்ச்சியும் நடந்து முடிந்த நூற்றாண்டு அது. வாழும் மார்க்சியச் சிந்தனையாளரான பேரா. கோரான் தெர்பார்ன் சென்ற நூற்றாண்டை ‘தொழிலாளிவர்க்கத்தின் நூற்றாண்டு’ (Age of the Working Class) என்பார். முதலாளி வர்க்கத்தின் செல்வக் கொழிப்பு ஒரு புறம், பெருந்திரள் மக்களின் அவல வாழ்க்கை இன்னொரு புறம் என்றாலும், தொழிலாளிவர்க்கத்தின் மத்தியில் இறுக்கமான ஒருங்கிணைவும் தன்னம்பிக்கையும் செழித்திருந்த காலம் அது.

புரட்சிக்குப் பிந்திய சமுதாயங்கள் இன்று வீழ்ந்துவிட்டன. சீனா, லத்தின் அமெரிக்க நாடுகள் உடபட எல்லாம் ஏதோ ஒருவகையில் சந்தைப் பொருளாதாரத்தை ஏற்றுக் கொண்டன. வர்க்கப் போராட்டம், சோஷலிசம் முதலான கோட்பாடுகள் தோற்றுவிட்டதாகவும், இனி  ‘நாகரிகங்களுக்கு இடையேயான மோதல்கள்’ (clash of civilizations) மட்டுமே சாத்தியம் எனவும் சாமுவேல் ஹட்டிங்டன் முதலான முதலாளியக் கருத்தியலாளர்கள் கூவுகிற காலம் இது. இந்தப் பின்னணியில் தொழிலாளி வர்க்கமும், பொது மக்களும் சென்ற நூற்றாண்டில் பெற்றெடுத்த அனைத்துச் சமூகப் பாதுகாப்புகளும் அழிந்து வருகின்றன. நிரந்தர வேலை, ஓய்வூதியம், தொழிற்சங்க உரிமைகள், சமூகப் பாதுகாப்பு, கல்வி, மருத்துவ உரிமைகள் என்பனவெல்லாம் இன்று உலகளாவிய சோஷலிச முயற்சிகளின் வீழ்ச்சி, கம்யூனிசக் கோட்பாடு வீழ்ந்துவிட்டதாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தின் பின்னணியில் காலாவதியாகி விட்டன.

மார்க்சீயம் தோற்றுவிட்டதாகக் குதூகலிப்போர் இரண்டு அம்சங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று: இந்த வீழ்ச்சி வெறும் தொழிலாளி வர்க்கக் கோட்பாட்டுகளின் வீழ்ச்சி அல்ல; மாறாக எல்லாச் சமூக அறங்கள் மற்றும் சமூக நீதிகளின் வீழ்ச்சி. இரண்டு: மார்க்சியம் வீழ்ந்து விட்டதாகக் கூவுவோர் மார்க்ஸ் முன்வைத்த முதலாளிய விதிகள் எவ்வாறு பொய்யாகிவிட்டன என நிறுவியது இல்லை. அவரது உபரி மதிப்புக் கோட்பாடோ இல்லை முதலாளிய நெருக்கடியின் தவிர்க்க இயலாத் தன்மை பற்றிய முன்வைப்போ இதுவரை எந்த முதலாளியக் கோட்பாட்டாளர்களாலும் முன்வைக்கப்படவே இல்லை. மாறாக மார்க்ஸ் சொல்லியதுபோல முதலாளியம் தொடர்ந்து நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டுதான் உள்ளது. 2008ல் உலகைக் குலுக்கிய பொருளாதார நெருக்கடியை நேரில் அனுபவித்தவர்கள்தானே நாம். மார்க்சியம் தோற்றதாகச் சொல்கிறவர்கள் அதற்குச் சொல்லும் ஒரே ஆதாரம் சோஷலிசக் கட்டுமானங்களின் வீழ்ச்சிதான். ஆனால் மார்க்சியம் என்றைக்கும் சோஷலிசக் கட்டுமானம் எப்படி இருக்கும் என்கிற blueprint எதையும் தந்ததில்லை. பல்வேறு ஒன்றுக்கொன்று வேறுபட்ட புரட்சிக்குப் பிந்திய நாடுகள் பல்வேறு வகைகளில் சோஷலிசக் கட்டுமான முயற்சிகளை மேற்கொண்டன. சுற்றிலும் முதலாளியக் காட்டுமானங்களுக்கு மத்தியில் அவை தம்மைப் போராடி நிலை நிறுத்திக் கொள்ள வேண்டியவைகளாக இருந்தன. அவற்றை வழி நடத்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் பல தவறுகளைச் செய்தன. பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரம் எனச் சொல்லி மக்களின் ஜனநாயக உரிமைகளை முடக்கின. அவற்றின் விளைவுகளே இந்தத் தோல்விகள்.

சோஷலிசக் கட்டுமான முயற்சிகளின் தோல்வி மார்க்சியத்தின் தோல்வியாகிவிடாது என்பதை மீண்டும் மீண்டும் இங்கே சொல்லத்தான் வேண்டி உள்ளது.

சரி. இன்றைய, அதாவது சோஷலிசக் கட்டுமானங்கள் தோற்றுப்போன உலகில் தொழிலாளர் இயக்கங்களின் கதி என்ன?

இந்தப் பின்னணியில் வெளிவந்துள்ள கய் ஸ்டான்டிங் எனும் பிரிட்டிஷ் பேராசிரியரின் The Precariat: The New Dangerous Class (2011); A Precariat Charter: from denizens to citizens (2014)  முதலான நூற்கள் இன்று பெரிய அளவில் உலக அளவில் வரவேற்பிற்கு உள்ளாகியுள்ளன. உலக அளவில் கவனத்தை ஈர்த்த வால்ஸ்ட்ரீட் அமர்வுப் போராட்டம், அரபு வசந்தப் போராட்டங்கள் ஆகியவற்றை ஒட்டி வெளிவந்துள்ள இவரது எழுத்துக்கள் முன்வைக்கும் அணுகல் முறையச் சுருக்கமாகப் பார்ப்போம்.

ஒரு பக்கம் தொழிலாளி வர்க்கம் என்பது எந்த நிரந்தரப் பாதுகாப்பும் இல்லாத வெறும் கூலித் தொழிலாளிகளாக மாறியுள்ளது. எந்த நிறுவனங்களுக்குச் சென்றாலும் அங்கு முக்கால்வாசித் தொழிலாளிகள் நிரந்தரமற்ற, ஓய்வூதியம் முதலான பாதுகாப்புகள் அற்ற ஒப்பந்தத் தொழிலாளிகளாகவே உள்ளனர். இப்படியான நிலையில் அமைப்பு ரீதியான தொழிலாளர் போராட்டங்கள் என்பது சாத்தியமில்லாமல் ஆகிறது. நிரந்தரத் தொழிலாளிகளையும் இப்படியான ஒப்பந்தத் தொழிலாளிகளையும் எதிர் எதிராக நிறுத்துப் போக்கு இன்று நிர்வாகங்களின் தந்திரமாக உள்ளது.

கல்லூரி ஆசிரியர் சங்கத்தில் சுமார் 37 ஆண்டுகள் கொண்ட அனுபவங்களின் ஊடாக என்னால் சிலவற்றைக் கூற முடியும். தொழிற்சங்க பலத்தைக் கொண்டு 1980, 90 களில் அரசு ஊழியர்களுக்கான 10(a)1விதியின் கீழ் நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களையும், பின்னர் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு எடுக்கப்பட்ட ஆசிரியர்களையும் சுமார் நான்கு முறை போராட்டங்களின் ஊடாக நிரந்தரமாக்கினோம். அதன் பின் அரசு எந்த ஒப்பந்தமும் இல்லாமல் வருகைப் பேராசிரியர்களை (guest lecturers) நியமித்தது. நிரந்தர ஆசிரியர்களுக்குச் சமமாகவும், சில நேரங்களில் அதிகமாகவும் வேலை செய்ய நேரும் இவர்கள் பெறும் ஊதியம் நிரந்தர ஆசிரியர்களில் நான்கில் ஒரு பங்குதான். ஆண்டுக்குப் பத்து மாதங்கள் மட்டுமே இவர்களுக்கு வேலை. அடுத்த கல்வி ஆண்டில் இவர்களுக்கு வேலை உத்தரவாதம் இல்லை. மருத்துவ விடுப்புகள் முதலான உரிமைகள் கிடையாது. கடந்த இருபதாண்டுகளாக இந்நிலை தொடர்கிறது. முக்கால் வாசி ஆசிரியர்கள் இந்த நிலையில் இருக்கும்போது இன்று அங்கு எந்தப் பெரிய போராட்டமும் சாத்தியமில்லாமல் ஆகிவிட்டது.  இந்நிலையில் இந்த வருகைப் பேராசிரியர்களை நிரந்தரமாக்கப் போராட்டம் செய்வோம் என்றால் நிரந்தர ஆசிரியர்கள் அதற்குத் தயாராக இல்லை. இவர்களின் பிரச்சினையை எடுப்பதன் விளைவாக தங்களின் பிரச்சினைகள் பின்னுக்குப் போகின்றன என்பது அவர்களின் வாதம்.

ஒரே வேலை. ஆனால் இரண்டு ஊதியங்கள், ஏற்றத்தாழ்வான வேலைச் சூழல்கள் ஆகியவற்றின் ஊடாக நிரந்தரத் தொழிலாளிகளாக உள்ளோர் அவர்களின் கோரிக்கைகளுக்கான அற நியாயங்களை இழந்துவிடுகின்றனர். இப்படி ஒரு அறக்கேடான சூழல் ஒவ்வொறு நிறுவனங்களுக்குள்ளும் இன்று நிலவுகிறது.

ஓய்வூதியப் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து 2011 ல் மிகப் பெரிய போராட்டம் நடைபெற்ற போது புகழ் பெற்ற தத்துவவியலாளர் ஸ்லாவோஜ் சிஸெக் அதை, “ஊதியம் பெறும் பூர்ஷ்வாக்களின் (salaried bourgeoisie) போராட்டம்” என்றார். “இப்போதெல்லாம் நீண்ட காலப் பணியில் இருந்து சுரண்டப்படும் வாய்ப்பு என்பது பெரிய பேறாகிவிட்டது” என்றும் கூறினார்.

ஆம். தொழிலாளிகளுக்கிடையே இப்படியான அறக்கேடான தர வேறுபாடு எழும்போது பெரும்பாலான தொழிலாளிகள் இன்று தங்களின் இயலாமையை எதிர்த்துப் போராடும் சக்தியற்றவர்களாக, எல்லோராலும் கைவிடப்பட்ட (precarious) நிலைக்கு ஆளாகின்றனர். மார்க்சின் காலத்தில் அப்படியில்லை. தொழிலாளர்கள் உற்பத்திச் சாதனங்களின் மீது எந்த உரிமையும் அற்றவர்களாக இருந்த போதும் எல்லோரும் ஒரே முதலாளியால் ஒரே மாதிரிச் சுரண்டப்படுவதால் சக தொழிலாளிகளுடன் ஒவ்வொருவரும் தம்மை அடையாளும் காணும் வர்ர்க்கப் பிரக்ஞை அவர்களுக்கு இருந்தது.

ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வெண்டும். இந்த வகையில் அவர்கள் எல்லோரும் தாம் சுரண்டப் பட்டவர்களாகத்தான் (exploited) உணர்ந்தார்களே ஒழிய தம்மை அவர்கள் ஒடுக்கப்பட்டவர்களாக (oppressed) உணர்ந்ததில்லை. எனவே பண்ணையடிமைகளைப் போல அல்லாமல் தொழிலாளிகள் உலகை மாற்றி அமைக்கும் வர்க்கப் பிரக்ஞை கொண்ட புரட்சிகர சக்திகளாக இருந்தனர். இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. தொழிற் கண்ணியம் (dignity of labor) என்பதெல்லாம் இன்று பொருளற்றதாகிவிட்டது. இன்று ஐ.டி துறை உட்பட எல்லாவற்றிலும் இந்நிலையைக் காண முடியும்.

இன்று நவீன நிறுவனங்கள் எல்லாவற்றிலும் நிரந்தர வேலை என்பது சாத்தியமில்லாமல் ஆனதால் இங்கு வேலை செய்பவர்கள் வேலைக்குச் செல்லும் நாட்களைக் காட்டிலும்  வேலையில் இல்லாத நாட்கள் அதிகமாகின்றன. இதன் விளைவாக கல்வித் தகுதிக்குக் குறைவான வேலைகளில் பலர் உள்ளதைக் காண முடியும். புதிய நிறுவனங்கள் உலகளாவிய வடிவில் செயல்படுகின்றன. எந்த நிறுவனத்தில் நாம் வேலை செய்கிறோம், எந்த நாட்டுக்கு வேலை செய்கிறோம், யார் நம்மைச் சுரண்டும் முதலாளி என்பதெல்லாம் இன்று தெளிவற்று மங்கலாகி விட்டன.

தொழிற்சங்கங்கள் பலவீனமாகியுள்ள நிலை ஒருபுறம் என்றால் இன்னொரு புறம் அந்தத் தொழிற்சங்கங்களும் கூட இந்தத் தற்காலிகத் தொழிலாளிகளைச் சங்கமாக்க முயற்சிப்பதில்லை. இன்னொரு பக்கம் தகுதியற்ற ஏழைகள் (undeserved poor) என அரசும் இவர்களை ஒதுக்கும்.

இந்த நவீன தொழிலாளிகள் நாடுவிட்டு நாடு சென்று உழைக்கும்போது அவர்கள் குடியுரிமையையும் (citizen) இழந்து denizen எனும் நிலைக்குத் தாழ்கின்றனர் என்கிறார் கய் ஸ்டான்டிங். அவரது கருத்துக்களை இப்படிச் சுருக்கலாம்:

1.ஏதுமற்ற பரிதாபிகளான இவர்கள் நிரந்தர வேலையின்றி, மிகக் குறைந்த ஊதியத்தில் பெரிய அளவில் சுரண்டப்படக் கூடியவர்களாகவும், தொழிற் பெருமைகள் அற்றவர்களாகவும் இருந்த போதிலும், ஒரே மாதிரியான தொழிலில் ஒரே முதலாளியின் கீழ், ஒரே தொழிலகத்தில் வேலை செய்பவர்களாக இல்லாத போதிலும் இவர்கள் ஒரு வர்க்கமாக அடையாளம் காண முடியாதவர்கள் அல்ல. நிரந்தரமின்மை என்கிற பொதுப் பண்பின் அடிப்படையிலேயே அவர்கள் ஒன்றிணையத் தக்கவர்கள். 2011ல் உலகெங்கிலும் நடந்த அமர்வுப் போராட்டங்கள் இவர்களின் ஒன்றிணைவுக்கு ஒரு சாட்சியம்.

2.”எல்லோருக்கும் ஒரு குறைந்த பட்ச அடிப்படை ஊதியம்” என்கிற கருத்தாக்கம் இன்று உருப்பெற வேண்டும். அது கண்ணியமான வாழ்க்கைக்குப் போதுமானதாகதாகக் கணக்கிடப்பட வேண்டும். இதன் மூலம் குடிமக்கள் அனைவருக்கும் அடிப்படைப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.

  1. தற்போது அரசு அறிவிக்கும் இலவசங்கள், மாநியங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

4.தரமான கல்வியும் மருத்துவமும் இலவசமாக அளிக்கப்பட வேண்டும்.

5.இவ்வுலகம்  என்பது பாரம்பரியமாகக் காலம் காலமாக மனித சமூக உழைப்பின் ஊடாக உருப்பெற்ற ஒன்று. அதன் பயன் சமூக அளவில் பங்கிடப் பட வேண்டும். இவ்வாறு கிடைக்கும் சமூகப் பங்குக்கு (social dividend) இந்த ஏதுமற்ற பரிதாபிகளும் உரியவர்கள் என்பதை நாம் வாழும் உலகம் மறக்கக் கூடாது.

6.இவர்களை ஒருங்கிணைத்துத் திரட்டுவதற்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த அணி திரட்டல் என்பது இப்போது உள்ளது போல் ஒவ்வொரு தொழிற்சாலை அல்லது ஒவ்வொரு தொழில் என்கிற அடிப்படையில் இல்லாமல் தொழிலகங்களுக்கு அப்பால் இவர்களை அணிதிரட்ட வேண்டும். நாம் திரட்ட வேண்டியது தொழிலாளர்களைத்தானே ஒழிய ‘தொழில்களை” (jobs) அல்ல. அதாவது குறிப்பிட்ட வேலை செய்பவர்களை குறிப்பிட்ட சங்கங்களில் அடக்குவது என்பதாக அல்லாமல் இந்த அணி திரளல்கள் அமைய வேண்டும்.

  1. நம் சகக் குடிமக்கள் நம்மைப் போலவே உரிமை உடையவர்கள் என்கிற புரிதல் நம் எல்லோரையும் மேலும் பண்பாளர்களாக ஆக்கும்

ஒன்று உறுதி. இனி நாம் மரபுவழிப்பட்ட வடிவில் ‘தொழிலாளி’, ‘விவசாயி’, வர்க்கம்’’ ஆகியவற்றை அணுகாமல், எல்லாவிதமான குறுகிய அளவுகோல்களையும் தாண்டி “தொழிலாளி வர்க்கம்’ என நாம் இணைய வேண்டும். ‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ எனும் மார்க்சின் அறைகூவல் வேறெப்போதைக் காட்டிலும் இன்று முக்கியத்துவம் பெறுகிறது.

(அடுத்த இதழில் மார்க்சிய இலக்கியக் கோட்பாடு குறித்து)