ஆருஷி வழக்குத் தீர்ப்பின் ஆபத்தான கூறுகள்

டெல்லிக்கு அருகில் உள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நோய்டாவில் வசித்து வந்த பல் மருத்துவத் தம்பதியரான ராஜேஷ் தல்வார் மற்றும் அவரது மனைவி நூபுர் தல்வார் இருவரும் சொந்த மகளையும் அவளது காதலனையும் கொன்று குற்றத்தை மறைத்த வழக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்திய அளவில் ஊடகங்களால் பரபரப்புச் செய்தியாக்கப்பட்டு வந்தது.

பதினான்கு வயது மகள் ஆருஷியும் அவளது ஆண் நண்பனும் வீட்டு வேலையாளுமான ஹேம்ராஜும் நெருக்கமாக இருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்து அவர்களைக் கொலை செய்ததோடு குற்றத்தை மறைத்ததற்காகவும் இந்த டாக்டர் தம்பதியருக்கு சென்ற வாரம் காசியாபாத் விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது..

2008 மே 16 அன்று இருவரையும் கொன்ற டாக்டர் தம்பதியர் ஹேம்ராஜே தம் மகளைக் கொன்றதாக ஐயத்தை உருவாக்கினர். எனினும் அடுத்த நாள் பூட்டப்பட்டிருந்த மாடியில் ஹேம்ராஜின் அழுகிய பிணம் கண்டெடுக்கப்பட்டபோது அதை டாக்டர் தம்பதியரால் மட்டுமல்ல யாராலும் விளக்க இயலவில்லை. ராஜெஷ் தல்வார் கைது செய்யப்பட்டார். எனினும் இக்குற்றத்தை நிரூபிப்பதற்கான போதிய தடயங்கள் மற்றும் சாட்சியங்கள் இல்லை என்பதற்காக இவழக்கைத் தொடராமல் முடித்துக் கொள்வதாக. இவ் வழக்கைப் புலனாய்வு செய்த மத்திய புலனாய்வுத் சென்ற டிசம்பர் 29, 2010ல் அறிவித்தது.

இவ்வாறு வழக்கு முடிக்கபடுவதை ஏற்றுக் கொல்ளாத உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை மறு விசாரணைக்கு ஆட்படுத்தியது. இன்று டாக்டர் தம்பதியர் தண்டிக்கப்பட்டதில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் பங்கு குறிப்பிடத் தக்கது.. குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் தப்பிப்பது என்பதை யாரும் ஏற்க இயலாது என்கிற வகையில் உச்ச நீதிமன்றம் பாராட்டுக்குரியதாகிறது.. .

எனினும் இதை வரவேற்று முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் ஆர்.கே. இராகவன் போன்றோர் கவனப்படுத்தும் (The Hindu, Nov 29, 2013) இத் தீர்ப்பின் அடிப்படை மனித உரிமை நோக்கிலிருந்து பார்ப்போருக்குக் கவலை அளிக்கிறது. 2002 குஜராத் படுகொலைகளின்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஷான் ஜாஃப்ரி உட்பட 68 பேர் கோடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நரேந்திர மோடி மற்றும் 58 பேர்களுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என நற்சான்றிதழ் வழங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்குத் தலைமை ஏற்றவர் இந்த இராகவன் என்பது குறிப்பிடத் தக்கது.

குற்றத்தை நிறுவத்தக்க “முடிவான சான்றுகள்” (conclusive evidences) இல்லாதபோதும், “நியாயமான அய்யங்களுக்கு அப்பால்” (beyond reasonable doubt) குற்றம் உறுதியாக நிறுவப்படாத போதும் கூட, வெறும் “சந்தர்ப்ப சூழல் சாட்சியங்களின்” (circumstantial evidences) அடிப்படையிலேயே குற்றம் உறுதி செய்யப்பட்டு தண்டிக்கப்படாலாம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இத்தீர்ப்பை இம் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் முன்வைக்கின்றனர்.

உலகெங்கிலும் குற்றவியல் நீதிமுறை கீழ்க்கண்ட கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது. அவை:

குற்றம் அய்யத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படும்வரை குற்றம் சுமத்தப்பட்டவர் அப்பாவியாகவே கருதப்படுவார்.

குற்றம் சுமத்தப்பட்டவர் சில கேள்விகளுக்கு மவுனமாக இருக்க உரிமை உண்டு.
குற்றத்தை நிரூபிக்கும் கடமை குற்றத்தைச் சுமத்துகிற கவல்துறையுடையதே தவிர அது நீதிமன்றத்துடையது அல்ல; அதேபோல குற்றத்தைத் தான் செய்யவில்லை என நிறுவும் பொறுப்பும் குற்றம் சுமத்தபட்டவருக்குக் கிடையாது: அய்யத்திற்கிடமின்றி அதை நிறுவுவது காவல்துறையின் பொறுப்பு.

இதில் இரண்டாவது அம்சத்தைக் கொஞ்சம் விளக்க வேண்டும். “தன்னைத்தானே குற்றவாளியாக்கிக் கொள்ளும் நிலைக்கு எதிரான காப்புறுதி” (guaranteed protection against self incrimination) என இது அழைக்கப்படுகிறது. தன்னை நோக்கி விசாரணையின்போது வைக்கப்படும் கேள்வி ஒன்றிற்குத் தான் அளிக்கும் பதில் தன்னைக் குற்றச் செயலுடன் தொடர்புபடுத்தும் என ஒருவர் கருதினால் அவர் அந்தக் கேள்விக்குப் பதிலளிக்காமல் மௌனமாக இருக்க நமது அரசியல் சட்டமும் {A 20 (3)}, குற்ற நடைமுறைச் சட்டமும் {Cr PC 161 (2)}. இடமளிக்கின்றன.

ஆனால், தேங்கிக் இடக்கும் ஏராளமான கிரிமினல் வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வருவது மற்றும் கிரிமினல் வழக்குகளில் குற்றவாளிகள் தப்பிவிடாமல் அவர்கள் தண்டிக்கப்படும் வீதத்தை அதிகப்படுத்துவது என்கிற பெயர்களில் மேற்கண்ட மூன்று அடிப்படை நீதி வழங்கும் நெறிமுறைகளையும் ஒழித்துக் கட்டும் முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.

குற்ற நீதி வழங்குமுறையில் சீர்திருத்தங்கள் செய்வதற்கென இந்திய அரசால் அமைக்கப்பட்ட ‘மாலிமத் குழு’ மற்றும் ‘மாதவ மேனன்’ குழு முதலியன இதை நோக்கிப் பரிந்துரைகளை அளித்துள்ளன. இன்றைய நீதிவழங்கு முறை “நீதி வழங்கப்படுவதற்கு எதிராக உள்ளது” எனக் குற்றம் சாட்டும் மாலிமத் குழு அதற்கு மாற்றாகச் சொல்லும் வழிமுறை மிக ஆபத்தாக உள்ளது.

இன்றைய நீதிமுறையில் நீதிபதி என்பவர் ஒரு நடுநிலையாளர் (umpire). இரு தரப்பு வாதங்களையும் கேட்டு, உறுதியான சாட்சியங்களின் அடிப்படையில் குற்றம் ஐயத்திற்கிடமின்றி நிறுவப்பட்டதா என நிறுத்து முடிவெடுக்க வேண்டியது அவர் பொறுப்பு. இந்நிலையை ஒழித்து, நீதிபதி ஒரு நடு நிலையாளராக மட்டும் அமையாமல், அவரே குற்றத்தை நிறுவும் பாத்திரத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்கிறது இவ் அறிக்கை. அதாவது நீதிமன்றம் என்பது, “விசாரணையின் ஊடாக நீதிவழங்கும் அமைப்பு” என்கிற நிலையிலிருந்து விலகி, “குற்றத்தை நிறுவி தண்டனை வழங்கும் அமைப்பாக” (inquisitorial system) மாற வேண்டுமாம்.

அதாவது முடிவான சாட்சியங்கள் இல்லாதபோதும், குற்றத்தைக் காவல்துறை முழுமையாக நிறுவாதபோதும், வெறும் சந்தர்ப்ப சாட்சியங்களைக் கொண்டே நீதிபதி குற்றத்தை உறுதி செய்து தண்டனையை வழங்கலாம். ஏதூனும் ஒரு கேள்விக்குக் குற்றம் சுமத்தபட்டவர் பதிலளிக்க மறுத்தால் அவர் அந்தக் குற்றத்தை ஏற்றுக் கொண்டதாகப் பொருள் கொண்டு தண்டனை வழங்கலாம்.

அரசுக்கும், காவல்துறைக்கும் வேண்டாத யார் மீதும் கடுங் குற்றங்களைச் சுமத்திப் போதிய ஆதாரங்களின்றி அவர்களைப் பழிவாங்கவும், சிறையிலடைக்கவும் இது வழிவகுக்கும். இதன் மூலம் அடித்தள மக்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர் முதலானோருக்காகப் போராடுகிற இயக்கத்தவர், அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் டாக்டர் பினாயக் சென் போன்றோர் எந்தக் குற்றமும் செய்யாமலேயே குற்றவாளிகள் ஆக்கப்படுவதற்கும் கடும் தண்டனைக்குள்ளாவதற்கும் இது வழி வகுக்கும்.

பயங்கரவாதம், தீவிரவாதம் ஆகியன தலைதூக்கியுள்ள ஒரு காலகட்டத்தில், “ஆயிரம் குற்றவாளிகள் தப்பியபோதும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது” என்கிற நீதி வழங்கு நெறியை ஏற்க இயலாது என்கிற சொல்லாடல்கள் இன்று மிதக்கவிடப்படுகின்றன. மாறாக, “ஆயிரம் நிரபராதிகள் தண்டிக்கப்பட்டபோதும் ஒரு குற்றவாளி தப்பிவிடக் கூடாது” என்கிற கருத்து முன்வைக்கப்படுகிறது.

இது மிகவும் ஆபத்தான ஒரு போக்கு. தேசப் பாதுகாப்பு, குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வீதத்தை அதிகரித்தல் என்கிற பெயர்களில் அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளைக் குடிமக்களுக்கு மறுத்துவிட இயலாது. இப்படியான சந்தர்ப்பங்களில் தேசப்பாதுகாப்பு முதலியவற்றிற்கும் அடிப்படை உரிமைகள் மற்றும் நெறிமுறைகளுக்கும் இடையில் மிகவும் நுணுக்கமான ஒரு சமச் சீர்மையைக் (balance) கையாள்வது நீதிமன்றத்தின் பொறுப்பாகிறது. எக்காரணம் கொண்டும் அரசு, காவல்துறை மற்றும் இதர நிறுவனங்கள் மக்களுக்கும், அடிப்படை நெறிமுறைகளுக்கும் பொறுப்பாக இருக்க வேண்டிய தன்மையைப் (accountability) பலி கொடுத்துவிட இயலாது.

ஆருஷி கொலை வழக்குத் தீர்ப்பை “கவுரவக் கொலைகளுக்கு” எதிரான தீர்ப்பு என்றும் சிலர் கொண்டாடுவதையும் ஏற்க இயலாது. கவுரவக் கொலைகளிலிருந்து குற்றவாளிகள் தப்பித்துச் செல்லாமல் இடுப்பதற்கு உரிய வகையில் சட்டத் திருத்தங்கள் செய்வது என்பதும் அடிப்படை நீதி வழங்கு நெறிகளை அப்படியே தூக்கிக் கடாசி எறிவதும் ஒன்றல்ல. அதேபோல டெல்லி பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்களில் ஒருவன் மட்டும் சிறுவனாக இருந்ததால் அவனுக்கு மட்டும் மூன்றாண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டபோது அது குறைந்த தண்டனை என எழுந்த கண்டனங்களும் இத்தகையதே. சாதிப் பெருமையைக் காரணம் காட்டிக் காதலர்கள் கொலை செய்யப்படுவதும், அதே போலப் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்களும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க இயலாது. ஆனால் கவுரவக் கொலை, அல்லது பாலியல் வன்முறை, தேசப் பாதுகாப்பு என எதன் பெயராலும் அடிப்படை நீதி வழங்கு நெறிமுறைகளை மீறுவது அரசு மற்றும் காவல்துறையின் அத்துமீறல்களுக்கே வழிவகுக்கும். ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கும். அரசியல் சட்ட ஆளுகையில் எந்நாளும் இவற்றுக்கு இடமில்லை.

“சந்தேகத்தின் பலன்களை” மட்டுமின்றி “சந்தர்ப்ப சூழல்களின் பலன்களையும் கூட ”குற்றம் சுமத்தபட்டவர்களுக்கு“ மட்டுமின்றி, “குற்றம் நிறுவப்பட்டவர்களுக்கும்” கூட வழங்க வேண்டும் என்பதே நீதி வழங்கு நெறிமுறையின் அடிப்படை. இந்த வகையிலேயே சட்ட நூல்களில் வரையறுக்கப்பட்டு இருக்காவிட்டாலும் கூட, நீதி வழங்கு நெறியினூடாகவே, “அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்படவேண்டும்” என்பது போன்ற எழுதப்படாத சட்டங்கள் (judicially evolved principles) உருவாகியுள்ளன. நாளை ஆருஷி வழக்குத் தீர்ப்பும் கூட இப்படி ஒரு வழிகாட்டு நெறிமுறையாக மாறினால், அது உறுதியாக அது ஒரு ஜனநாயக ஆளுகையின் அடையாளமாக இருக்காது.

தேசிய அளவிலான ஒரு ஏதிலியர் சட்டத்தின் தேவை

கண்ணதாசனின் ‘சிவகங்கைச் சீமை’ திரைப்படத்தில் ஒரு காட்சி. கட்டபொம்மனைத் தூக்கிலிட்டபின் அவரது தம்பி ஊமைத்துரை வெள்ளையர்களுக்கு எதிராகப் பாளையக்காரர்களை திரட்டிப் போராடியபோது அவருக்கு யாரும் அடைக்கலம் கொடுக்கக் கூடாது என வெள்ளையர்கள் அறிவித்திருப்பார்கள். ஊமைத்துரை அடைக்கலம் தேடி சிவகங்கைக்கு வருவார். அப்போது சிவகங்கையை மருது சகோதரர்கள் ஆண்டுகொண்டிருந்தனர். சின்ன மருது ஊமைத் துரையை மறைந்திருக்கச் சொல்லிவிட்டு அண்ணனிடம் வந்து அவருக்கு அடைக்கலம் அளிக்க வேண்டும் என்பார். தற்போதுள்ள சூழலில் ஆங்கிலேயரைப் பகைத்துக் கொண்டு வாழ இயலாது என்று மறுப்பார் பெரிய மருது.

அப்போது அருகிலுள்ள அறையிலிருந்து ஊமைத்துரை உள்ளே வருவார். என்ன காரியம் செய்துவிட்டாய் எனப் பெரியவர் தம்பியைக் கண்டித்துக் கொண்டிருக்கும்போதே அங்கு வரும் ஆங்கிலத் தளபதி ஊமைத் துரையின் மடியைப் பிடித்துக் கைது செய்ய முயல்வான். அப்போது பெரிய மருது, “என்ன துணிச்சல் இருந்தால் என்னிடம் அடைக்கலம் வந்த ஒருவரை என் கண்முன்னே கைது செய்வாய்?” எனச் சீறி அவனை வெளியே அனுப்புவார். அவனும் இதன் விளைவுகளை நீ அனுபவிப்பாய் என எச்சரித்து அகல்வான். பின்னர் வெள்ளையரின் படை இதைச் சாக்காகக் கொண்டு சிவகங்கை மீது படை எடுத்து மருது சகோதரர்களை அழிப்பதாகக் கதை செல்லும்.

முன்னதாக ஆற்காட்டு நவாப் மற்றும் ஆங்கிலப் படைகளால் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டபின் மைசூர் மன்னர் ஹைதர் அலியிடம்தான் இந்த மருது சகோதரர்களும் ராணி வேலுநாச்சியாரும் அடைக்கலம் கோரிச் சென்றனர், ஹைதரும் அவரது மகன் திப்புவும் தங்கள் திண்டுக்கல் கோட்டையில் இவர்களுக்கு ஏழாண்டுகாலம் அடைக்கலமளித்துக் காத்ததோடு, இறுதியில் அவர்கள் மீண்டும் இழந்த ஆட்சியைப் பிடிக்க படைகளும் பொருளும் உதவினர் என்பது வரலாறு.

இப்படி உயிரைக் கொடுத்தேனும் அடைக்கலம் வந்தோரைக் காப்பது என்றொரு மரபு நமக்குண்டு. புத்த ஜாதகக் கதைகள் ஒன்றில் சிபிச் சக்கரவர்த்தி தன்னிடம் அடைக்கலம் வந்த ஒரு புறாவைக் காப்பாற்ற வேண்டி, அதை வேட்டையாட வந்த பருந்துக்கு புறாவின் எடைக்குச் சமமான சதையைத் தன் தொடையிலிருந்து வெட்டித் தருவான். இப்படி நிறையச் சொல்லலாம்.

இப்படியான மரபு நமக்கு உண்டெனினும் இன்றும் நமது நாடு அகதிகளுக்கு உரிய பாதுகாப்புகளும் உரிமைகளும் அளிப்பது தொடர்பான ஐ.நா அவையின் 1951ம் ஆண்டு உடன்பாட்டிலும் (UN Convention on the Status of the Refugees), 1967ம் ஆண்டு விருப்ப ஒப்பந்தத்திலும் (optional protocol) கையொப்பமிடவில்லை. ஆனாலும் சுதந்திரத்திற்குப் பிந்திய பிரிவினைக் கலவரம் தொடங்கி இன்றுவரை சுமார் இரண்டரை கோடிப் பேர் அகதிகளாக இந்தியாவிற்குள் வந்துள்ளதாக ஒரு கணக்கு உள்ளது. 53,000 சக்மாக்கள் உட்பட 150,000 பர்மியர்கள், 90,000 திபெத்தியர்கள், 70,500 ஈழத் தமிழர்கள், 19,000 ஆஃப்கானியர்கள் என இப்போது 4,50,000 ஏதிலியர் இந்தியாவில் உள்ளனர். இவர்களில் ரோகினியா மற்றும் வங்கதேச முஸ்லிம்களில் இருந்து, ஆஃப்கன் மற்றும் பாக்கிலிருந்து வந்துள்ள சீக்கியர்கள், இந்துக்கள் எனப் பல மதத்தினரும், இனத்தினரும் உள்ளனர். இதில் பலர் இனி சொந்த நாடு திரும்புவதற்கான வாய்ப்புக்கள் குறைவு.

அப்படி இருந்தும் இந்திய அரசு இது தொடர்பான ஐ.நா ஒப்பந்தங்களில் கையெழுத்திடவோ, தேசிய அளவிலான ஒரு ஏதிலியர் கொள்கையை உருவாக்கவோ தயாராக இல்லை. பின் எந்த அடிப்படையில் ஏதிலியர் இந்திய அரசுகளால் கையாளப்படுகின்றனர்? அவ்வப்போதைக்குத் தற்காலிகமாக உருவாக்கப்படுகிற அணுகல்முறைகளே (ad hocism) கடைபிடிக்கப்படுகின்றன. இதன்விளைவாக வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு விதமான வகையில் வெவ்வேறு நாட்டு அகதிகள் நடத்தப்படும் நிலை உருவாகியுல்ளது.

எடுத்துக்காட்டாக, திபெத்திய அகதிகளுக்கு இமாசலப் பிரதேசத்தில் விவசாய நிலங்கள் கூடத் தரப்பட்டுள்ளன. பிள்ளைகள் படிக்கத் தனிப் பள்ளிக்கூடங்களும் உள்ளன. தமிழ்நாட்டில் சுமார் 113 அகதி முகாம்கள் அமைக்கப்பட்டு (designated refugee camps) வரும் ஏதிலியர் அங்கு பிரித்தனுப்பப் படுகின்றனர். பூடான் மற்றும் நேபாளத்திலிருந்து வந்துள்ளோர் இரு நாட்டு நட்புறவு ஒப்பந்தங்களின் அடிப்படையில் நடத்தப்படுகின்றனர். சிலருக்கு வேலை அனுமதியும் கூட (work permit) அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பர்மா, ஆஃப்கன் முதலான பிற நாடுகளிலிருந்து வரும் அகதிகளின் நிலை படு மோசம்.

இந்தியாவுக்குள் பெரிய அளவில் ஒரு நாட்டிலிருந்து அகதிகள் வந்து குவியும்போது அவர்களுக்கு முகாம்கள் அமைக்கப்பட்டு குறிப்பிட்ட அளவு சமூகப் பொருளாதாரப் பாதுகாப்புகளுடன் குடியமர்த்தப்படுகின்றனர். தென் ஆசிய நாடுகள் அல்லது அவ்வளவு சுமுகமான உறவுகளில்லாத பிற நாடுகளிலிருந்து வருவோர் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பிக்கின்றனர். அவர்கள், ஆய்வுகளுக்குப் பின் ‘அடைக்கலம் தேடுவோர்’ (asylum seekers) என்பதாக ஏற்கப்படுகின்றனர். அவர்களுக்கு விரிவான ‘அகதிகள் நிலை’ (refugee status) அளிக்கப்படுவதில்லை. பிற நாடுகளிலிருந்து வரும் சிலர் ஐ.நா அவையின் அகதிகளுக்கான உயர் ஆணையர் அலுவலகத்திற்கு அதன் விதிகளுக்குட்பட்டுத் தங்களுக்குத் தனிநபர் அடிப்படையில் அகதி நிலை அளிக்குமாறு விண்ணப்பிக்கின்றனர். இந்த அலுவலகம் டெல்லியில் மட்டும் உள்ளது. மற்றபடி தமிழகத்திலும் அது சிறிய அளவில் உதவிகள் அளிக்கின்றது.

ஆக இந்தியாவில் உள்ள ஏதிலியரை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: (அ) இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் (எ.கா: ஈழ மற்றும் திபெத் அகதிகள்). (ஆ) ஐ.நா அகதிகளுக்கான உயர் ஆணையர் அலுவலகத்தால் திருப்பி அனுப்பப்படாத உரிமையுடன் முழு அகதி நிலை வழங்கப்பட்டோர் (பர்மிய மற்றும் ஆஃப்கன் அகதிகள்) (இ) இந்திய அரசாலோ, ஐ.நா ஆணையத்தாலோ அங்கீகரிக்கப்படாதவர்கள் (மிசோராமில் வாழும் பர்மிய சின் அகதிகள்).

இந்திய அரசுக்கு அகதிகளுக்கான ஏதாவது ஒரு கொள்கை உள்ளது என்றால் அது திபெத்திய அகதிகள் குறித்து நேரு அப்போது சொன்னதுதான். இந்தியா தன் நாட்டுக்கு வரும் அகதிகளைப் பொருத்தமட்டில் மூன்று அடிப்படைக் காரணிகளின் அடிப்படையில் நடத்தப்படுவர் என்றார். அவை:

எந்த நாட்டிலிருந்து வருகிறார்களோ அந்த நாட்டுடன் உள்ள நட்புறவு.,
தேச மற்றும் எல்லைப் பாதுகாப்பு..
அகதிகளின் மீதான அனுதாபம்.
ஆக, இருநாட்டு அரசியலே இங்கு முதன்மை ஆகிறது. பன்னாட்டு ஒப்பந்தங்கள், அவற்றுக்கான கடப்பாடுகள் இங்கு ஒரு பொருட்டல்ல. இதன் விளைவுதான் மேற்குறிப்பிட்ட அகதிகளுக்கான அணுகல்முறைகளில் உள்ள சீரற்ற தன்மைகள்.

இந்தியா அகதிகளுக்கான பன்னாட்டு ஒப்பந்தங்களில் கையொப்பமிடாதபோதும் எல்லா நாடுகளாலும் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட, “வரும் அகதிகளை அவர்களின் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பாமை” என்கிற Non-refoulement கொள்கையைப் புறக்கணிக்க இயலாது. தவிரவும் இந்திய அரசு 1966ம் ஆண்டின் ஐ.நா அவையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான உடன்பாட்டையும், பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளுக்கான உடன்பாட்டையும் ஏற்றுக்கொண்டுள்ளது. ஐ.நா அவையின் குழந்தைகள் உரிமைக்கான உடன்பாட்டிலும் கையெழுத்திட்டுள்ளது இவை அகதிகளின் உரிமைகளையும் உள்ளடக்குவது குறிப்பிடத்தக்கது. அதோடு குடிமக்களுக்கிடையே சமத்துவம், அவர்களின் வாழ்வுரிமை. மத உரிமை ஆகியவற்றை ஏற்கும் இந்திய அரசியல் சட்டத்தின் 14, 21, 25 ஆகிய பிரிவுகள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு இங்கு வரும் அகதிகளுக்கும் பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த அடிப்படைகளிலேயே நமது நீதிமன்றங்கள் பன்னாட்டு உடன்பாடுகளில் உள்ள உரிமைகள், அந்த உடன்பாடுகளில் இந்தியா கையொப்பமிடாதபோதும், இங்கு வாழும் அகதிகளுக்கும் உண்டு என்கிற நெறிமுறையை (judicially evolved principle) உருவாக்கியுள்ளன. சக்மா அகதிகள் வழக்கில் (National Human Rights Commission v State of Arunachal Pradesh, AIR 1996 SC 1234). உச்ச நீதிமன்றம் மேற்குறித்த அரசியல் சட்ட உரிமைகள் இங்கு வாழநேர்ந்த அகதிகளுக்கும் உண்டு என்பதைத் தெளிவாக்கியுள்ளது. அதேபோல இந்திய அரசு அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள பர்மிய அகதிகளை வெளியேற்ற முயற்சித்தபோது தொடுக்கப்பட்ட மற்றொரு வழக்கில் (Malvika Karlekar v Union of India-Criminal Writ Petition No 243 of 1988), அவர்களின் அகதி விண்ணப்பங்கள் ஐ.நா. அகதிகள் உயர் ஆணையரின் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி, அதை நிறுத்துமாறு ஆணையிட்டது.

இந்தியா இவ்வாறு அகதிகளுக்கான பன்னாட்டு உடன்பாடுகளை ஏற்காவிட்டாலும் பொதுவில் ‘அகதிகளைத் திருப்பி அனுப்பாமை’ முதலான நடைமுறைகளைக் கடைபிடிப்பதாகக் கூறுவது வழக்கம். ஆது ஓரளவு உன்மைதான் எனினும் பன்னாட்டு உடன்பாடுகளை ஏற்காததன் விளைவாக மேற்குறித்தவாறு அகதிகளைக் கையாளுவதில் சீரற்ற தன்மை இருப்பது முதலிய குறைபாடுகள் ஏற்படுகின்றன. தவிரவும் அரசியல் காரணங்களை முன்னிட்டு அகதிகளைத் திருப்பி அனுப்பாமை என்கிற கொளகையையும் கூட இந்திய அரசு விட்டு விடக்கூடியதுதான் என்பதற்கு ராஜீவ் கொலையை ஒட்டிப் பெரிய அளவில் ஈழஅகதிகள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டது ஒரு எடுத்துக்காட்டு.

இப்படியான நிலையை இந்தியா எடுப்பதற்கு அடிப்படையாக இருப்பது இன்று அகதிகளைக் கையாள்வதற்கு அது பயன்படுத்தக் கூடிய 1939ம் ஆண்டு வெளிநாட்டார் பதிவுச் சட்டம், 1946ம் ஆண்டு வெளிநாட்டார் சட்டம் மற்றும் இங்குள்ள பல கடவுச் சீட்டுச் சட்டங்கள் முதலியவைதான். இச்சட்டங்கள், குறிப்பாக வெளிநாட்டார் சட்டம் அகதிகளுக்கானதல்ல. இச்சட்டம் (அ) தங்களது நாடுகளில் வாழ இயலாமல் துன்புறுத்தப்பட்டு வெளியேறி வரும் அகதிகளையும், (ஆ) இங்குள்ள வேலை வாய்ப்புக்கள் அல்லது தொழில் வாய்ப்புகள் மூலம் தம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதற்காக சட்டபூர்வமாகவும் சட்டபூர்வமற்றும் வருகிற புலம் பெயர்ந்தவர்களையும் (legal and illegal migrants) (இ) உரிய பயண ஆவணங்களுடன் இங்கு வருபவர்களையும் வேறுபடுத்தி அணுகுவதில்லை. இந்தச் சட்டமும், இந்தச் சட்டத்தின் அடிப்படையில் 1971ல் வெளியிடப்பட்ட ஆணையும், 2004ல் வாஜ்பாயி அரசாங்கத்தால் இச்சட்டத்திற்குக் கொண்டுவரப்பட்ட திருத்தமும் குடிமக்கள் அல்லாதவர்கள் மீது அபரிமிதமான அதிகாரங்களை இந்திய அரசுக்கு அளிக்கிறது. உரிய ஆவணங்கள் இல்லாத யாரையும் கைது செய்யவும், தடுத்து நிறுத்தவும், சிறையிலடைக்கவும், தேவையானால் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பவும் இச்சட்டம் வழிவகுக்கிறது. 2003ம் ஆண்டில் திருத்தப்பட்ட குடிமக்கள் சட்டமும் வெளிநாட்டாருக்கு எதிரான அரசின் அதிகாரங்களை வலுவாக்குகிறது.

இந்தச் சட்டங்களின் அடிப்படையில்தான் இந்திய, தமிழக அரசுகள் ஈழ அகதிகளுக்கென செங்கல்பட்டு, பூந்தமல்லி முதலான இடங்களில் ‘சிறப்பு அகதிகள் முகாம்கள்’ எனப்படும் நிழற் சிறைகளையும் (shadow prisons) செயல்படுத்துகின்றன. இவற்றில் அடைக்கப்பட்டுள்ள அகதிகள், தாங்கள் விடுவிக்கப்பட வேண்டுமெனத் தொடர்ந்து போராடி வருவது அறிந்த ஒன்று.

தங்கள் நாட்டில் வாழவே இயலாது துன்புறுத்தலுக்கு ஆளாகிறவர்கள் பிற நாடுகளில் தஞ்சம் புகுவதையும் அங்கு கண்ணியமாக அவர்கள் நடத்தப்படுவதையும் ஒரு உரிமையாக ஏற்கும் கடப்பாடு, பன்னாட்டுச் சட்டங்களில் கையெழுத்திடாதபோதும் இந்தியாவிற்கு உண்டு என்பதைச் சற்று முன் பார்த்தோம். அப்படி வருகிறவர்களிடம் உரிய பயண ஆவணங்களை எதிர்பார்ப்பது என்ன நியாயம்? அப்படி இல்லை என்பதற்காக வெளிநாட்டார் சட்டம் அல்லது உகாண்டா நாட்டினருக்கான 1972ம் ஆண்டு ஆணை முதலியவற்றின் அடிப்படையில் அவர்களைத் திருப்பி அனுப்புவது அல்லது சிறையிடுவாது எப்படிச் சரியாகும்?

ஐ.நா உடன்பாடு மற்றும் விருப்ப ஒப்பந்தம் ஆகியவற்றில் கையொப்பமிடாததற்கு இந்தியா மூன்று காரணங்களைச் சொல்கிறது. அவை:

1. 1951ம் ஆண்டு உடன்பாடு ஐரோப்பிய நலன்களை முதன்மைப்படுத்துவதாக உள்ளது. பனிப்போர் காலத்திய பின்னணியில் உருவாக்கப்பட்டது அது.

2. தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியன தலைதூக்கியுள்ள சூழலில் இவ்வாறு அகதிகளை எளிதாக அனுமதித்துவிட இயலாது.

3. அகதிகளுக்கு இத்தனை உரிமைகளைக் கொடுத்தால் அருகிலுள்ள நாடுகளிலிருந்தூ ஏராளமானோர் இங்கு வரக்கூடும்.

இதில் சில உண்மைகள் இருந்தபோதிலும், இந்தக் காரணங்களின் அடிப்படையில் இந்தியா ஐ.நா உடன்பாடுகளில் கையெழுத்திடாமலும், அகதிகளுக்கான பொதுச் அட்டம் ஒன்றை உருவாக்காமலும் உள்ளதை ஏற்க இயலாது. இந்திய அரசியல் சட்டத்தின் 51(c) பிரிவின்படி இந்தியா பன்னாட்டு ஒப்பந்தங்களை ஏற்க வேண்டிய கடப்பாடுடையதாக உள்ளது. தவிரவும் தென் ஆசியாவில் ஒரு முக்கியமான வல்லரசாகத் தன்னைக் காட்டிக் கொள்ள விரும்புகிற, ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகத் துடிக்கிற, பன்னாட்டு அரசியலில் முக்கிய பங்காற்ற விழைகிற ஒரு நாடு இத்தகைய அடிப்படைப் பன்னாட்டுக் கடப்பாடுகளை மறுப்பதை எப்படி ஏற்க இயலும்? பனிப்போர்க் காலத்திய உடன்பாடு என்றால் இன்று பனிப்போர் முடிவுக்கு வந்துள்ள சூழலில் அதன் பொருளென்ன? தேவையான திருத்தங்களுடன் புதிய உடன்பாடுகளை உருவாக்க இயலாதா? 1951ம் ஆண்டு உடன்பாட்டின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள ஐ.நா அகதிகள் உயர் ஆணையத்தின் செயற்குழுவில் அங்கம் வகிக்கும் இந்திய அரசு இன்னும் அந்த அடிப்படை உடன்பாட்டிலேயே கையொப்பமிடாதிருப்பது பெருங் கேலிக் கூத்து.

அகதிகள் என வருகிற யாரும் அப்படியே உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. உரிய பரிசீலனைகள், விசாரணைகளுக்குப் பின்தான் அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தவிரவும் ‘சார்க்’ நாடுகளின் 2004ம் ஆண்டு பயங்கரவாத எதிர்ப்பு ஒபந்தம் ‘பயங்கரவாதிகள் என சந்தேகப்படக் கூடியவர்களுக்கு அகதிகள் நிலை அளிக்கக் கூடாது எனக் கூறுகிறது. அதை விதியை இங்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். தேவையானால் இன்னும் விளக்கமாக பாதுகாப்பு அடிப்படையில் இன்னும் இதுபோன்ற முன்னெச்சரிக்கைகளை இணைத்துக் கொள்ளலாம்.

பெரிய அளவில் அண்டை நாட்டார் இதைப் பயன்படுத்திக் கொண்டு இங்கே வரக்கூடும் என்கிற அச்சமும் ஏற்புடையதல்ல. பா.ஜ.க வின் முஸ்லிம் எதிர்ப்பு அரசியலின் விளைபொருளாகவே இந்தக் கருத்து முன்வைக்கப்படுகிறது. வங்கதேச முஸ்லிம்கள் இவ்வாறு அதிக அளவில் ஊடுருவி விட்டனர் என்று பிரச்சாரம் செய்வது அவர்களின் வழமையான அரசியல்களில் ஒன்று. இன்று வங்கதேச எல்லையில் இரட்டை முள்வேலிகள் இடப்பட்டும் இராணுவம் நிறுத்தி வைக்கப்பட்டும் தொலைதூரத்திற்கு வெளிச்சத்தைப் பீய்ச்சி அடிக்கும் விளக்குகள் அமைக்கப்பட்டும் அத்தகைய நுழைவு முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது. பிற இத்தகைய பகுதிகளிலும் இந்த நடைமுறைகளைப் பயன்படுத்தலாம்.

இந்திய அரசு அகதிகள் தொடர்பான பன்னாட்டு உடன்பாடுகளை ஏற்க இயலாது எனச் சொல்வதற்கான காரணங்கள் எதுவும் ஏற்புடையதல்ல. தென் ஆசிய நாடுகளில் சீனாவும், ஆப்கானிஸ்தானும் ஏற்கனவே 1951ம் ஆண்டு ஒப்பந்தத்தை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

2004ல் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபது பி.என். பகவதி அவர்கள் இந்தப் பன்னாட்டு ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்தியாவுக்கென அகதிகள் நிலைக்கான ஒரு மாதிரி சட்ட வடிவை உருவாக்கினார். பின் 2006ல் அந்த அடிப்படையில் அகதிகள் நிலைக்கான ஒரு சட்ட வரைவையும் இந்திய அரசு உருவாக்கியது. எனினும் இன்றுவரை அதைப் பாராளுமன்றத்தில் வைத்து விவாதிக்கவில்லை. அப்போதைய தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் நீதியரசர் ஏ.எஸ்.ஆனந்த் இந்தச் சட்ட வரைவை ஆய்வு செய்ய ஒரு குழுவையும் நியமித்தார். வேறு பலரும் இவ்வரைவு குறித்துக் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

இவ்வரைவைப் பொது விவாதத்திற்கு உட்படுத்தித் தேவையான திருத்தங்களுடன் சட்டமாக்க வேண்டும். பிற நாடுகளில் வாழ இயலாமல் துன்புறுத்தப்பட்டு வெளியேறுபவர்கள் உரிய விசாரணைகளுக்குப் பின் அனுமதிக்கப்படுவது, அவர்கள் எவ்வகையிலும் திருப்பி அனுப்பப்படாமல் கண்ணியமான வாழ்வொன்றை அமைத்துக்கொள்ள அனைத்து வாய்ப்புக்களையும் அளிப்பது என்கிற வகையில் இச் சட்டம் அமைய வேண்டும்..

இப்படிப் புலம் பெயர நேர்ந்தவர்களுக்கு உரிய முறையான, முறைசாராத மற்றும் தொழிற் கல்விகளை அளிப்பது, அவர்களது (உடல்) நலத் தேவைகளைப் பூர்த்தி செய்வது, வேலை வாய்ப்புக்களுக்கு வழி செய்வது, அவர்கள் அவர்களது சொந்தப் பண்பாடு, நம்பிக்கைகள், மதக் கடமைகள் ஆகியவற்றைத் தொடர்வதற்கு வாய்ப்பளிப்பது, கொடும் பாதிப்பிற்குரிய வகையில் உளவியல் ரீதியில் தாக்கப்பட்டுள்ள அவர்களுக்கு உரிய வகையில் ஆதுகாப்பு அளிப்பது என்கிற வகையில் அது அமைய வேண்டும். அவர்களுக்கும் பிற குடிமக்களைப் போலவே இந்த நாட்டிற்குள் சுதந்திரமாக நடமாடுவது, எங்கு வேண்டுமானாலும் நிரந்தரத் தங்குமிடத்தை அமைத்துக் கொள்வது, பிற குடிமக்களைப் போலவே எந்தத் தொழிலையும் செய்வது, தம் நலனுக்கான அமைப்புக்களை உருவாக்குவது, பத்திரிகைகள் உள்ளிட்ட கலாச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வது முதலான உரிமைகள் வழங்கபட வேண்டும்.

1946ம் ஆண்டு வெளிநாட்டார் சட்டம் முதலியன இதற்குரிய முறையில் திருத்தப்பட வவேண்டும். சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் நிழற் சிறைகளை அமைக்கும் விதிமுறைகளை நீக்க வேண்டும்.

கடந்த பத்தாண்டுகளாக நான் பலமுறை தமிழகத்திலுள்ள ஈழ அகதிகள் முகாம்களுக்குச் சென்றுள்ளேன். எங்கள் அறிக்கைகள் இணையத் தளங்களில் உள்ளன. சமீபகாலமாக எல்லா முகாம்களிலும் மேலெழுந்துள்ள ஒரு பிரச்சினை இளைஞர்கள் இந்தியாவிலிருந்து பிற மேலை நாடுகளுக்குச் செல்லும் முயற்சியில் இருப்பதுதான். ஈழ அகதி முகாம்களில் இருப்போர் நிறையப் பணம் கொடுத்து, உயிரைப் பணயம் வைத்து இதற்கான முகமைகளின் மூலம் வெளி நாடுகளுக்குச் செல்ல முயற்சிப்பதும் அம்முயற்சியில் பலர் உயிரிழப்பதும், கைதாவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முப்பதாண்டுகளுக்கும் மேலாக இங்கே ஈழ அகதிகள் வாழ்ந்து கொண்டுள்ளனர். சொந்த மண்ணின் வாசத்தை நுகராத ஒரு தலைமுறை இந்த மண்ணில் பிறந்து வளர்ந்துள்ளது. குடிமக்களுக்குரிய அடிப்படை உரிமைகளும், அகதிகளுக்குரிய சட்டப் பாதுக்காப்புகளுமின்றி ஆனாலும் ‘அகதி’ப் பட்டத்தைச் சுமந்து கொண்டு எந்நாளும் ‘அந்நியராக’ வாழ்வதை இவர்கள் வெறுக்கின்றனர். இதே நேரத்திலும், ஏன் அதற்குப் பின்னும் ஐரோப்பிய யூனியன், கனடா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த ஈழத்தவர்களுக்கெல்லாம் அந்த நாடுகள் குடியுரிமை வழங்கியுள்ளபோது தொப்பூள் கொடி உறவு குறித்து முழங்கும் அரசியல்வாதிகள் மலிந்த நமது நாட்டில் இவர்களுக்குக் குடியுரிமை வழங்காதிருப்பது வருந்தத் தக்கது.

எனவே உருவாகும் சட்டத்தில் இபடி நீண்ட ஆண்டுகளாக இங்கே அகதிகளாக வாழ்வோருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கும் வழிமுறைகளையும் உள்ளடக்க வேண்டும்.

1951ம் ஆண்டு அகதிகள் உடன்பாட்டில் கையெழுத்திடவேண்டும் என்பதற்கும், உரிய வகையில் தேசிய அளவிலான ஏதிலியர் கொள்கை ஒன்றையும் சட்டமொன்றையும் உருவாக்குவதற்கும் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இங்கு வாழும் ஏதிலியர்களுக்கும் நம் மக்களுக்கும் இடையிலான இடைவெளிகளை நீக்கி இம்மக்கள் நம்மவர்களுடன், காந்தியடிகள் சொன்னதுபோல, “பாலில் சக்கரை கலப்பதுபோல” இரண்டறக் கலப்பதற்கு ஏதிலியர் பிரச்சினையில் அக்கறையுள்ளோர் உதவ வேண்டும். காந்தியடிகளின் இந்த உதாரணம் கூட இங்கு முழுமையாகப் பொருந்தாது. பாலில் சர்க்கரை போலத் தம் அடையாளங்களை ஏதிலியர் இழக்க வேண்டியதில்லை. தத்தம் அடையாளங்களுடன் அவர்கள் நம்மவர்களாக ஆகவேண்டும்.

போலி மோதல் படுகொலைகள் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வாகுமா? இவை தொடர்பான சட்டத்தின் பார்வை என்ன?

(நேர்கண்டது: சிவ. காளிதாசன்)

போலி மோதல் எதிர்ப்புக் கூட்டியக்கம் ஒன்றை அமைத்துள்ளீர்கள். மோதல்(என்கவுன்டர்) என்ற பெயரால் திட்டமிட்ட படுகொலைகளே நிகழ்கின்றன என்று கூறியுள்ளீர்கள். எப்படி என்று விளக்க முடியுமா….?

இந்த கூட்டியக்கம் சென்ற ஆண்டு நடுவில் உருவாக்கப்பட்டது. தமிழக அளவில் உருவாக்கப்பட்டது என்ற போதிலும் இதற்கு முன்னதாக 2007 ஜுன் 26 ஆம் நாள் மும்பையில், இந்திய அளவில் மனித உரிமை அமைப்புகள் இணைந்து ஒரு மாநாடு நடத்தின. போலி மோதல்களுக்கு எதிரான பரப்புரைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. குசாரத்தில் வன்சாரா, இராஜ்குமார் பாண்டியன் முதலிய IPS அதிகாரிகள் முன்னின்று நடத்திய சொராபுதீன் மோதல் ஒரு திட்டமிட்ட படுகொலை என்பது அம்பலப்பட்டுத் துணைக்கண்ட அளவில் விவாதப் பொருளான நிலையில் அந்த மாநாடு கூட்டப்பட்டது. இந்தியாவெங்கிலும் பல்வேறு மாநிலங்களிலும் இது போன்ற போலி மோதல் கொலைகள் மேற்கொள்ளப்படுவது கவனத்திற்கு வந்தது. “அவுட்லுக்” வார இதழ் (மே 27,2007) என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் சிறப்பிதழ் ஓன்றை வெளியிட்டது. 100 என்கவுண்டர் செய்தவன் 80 செய்தவன் என்றெல்லாம் புகைப்படங்களுடன் ஆல்பம் ஒன்றையும் வெளியிட்டது.

மோதல் என்ற பெயரில் படுகொலைகளை நடத்துவது தமிழகத்திலும் கடந்த 30 ஆண்டுகளாக நடந்துவருவம் கதைதான். 80களில் வால்டர் தேவாரம் தலைமையில் சுமார் இருபது நக்சலைட்டுகள் கொல்லப்பட்டார்கள். பின்னர் ராசாராம்,சரவணன் போன்ற தமிழ்த்தேச விடுதலைக் கோரிக்கையைக் முன்வைத்து இயங்கிய ஆயுதக் குழுவினரும் இம்முறையில் கொல்லப்பட்டார்கள். ராசாராமும்,சரவணனும் சிறையில் இருக்கும்போதே காவல்துறையினரால் கொல்லப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கருணாநிதி இம்முறை ஆட்சிக்கு வந்த கையோடு மூன்று நான்கு ரவுடிகள்,மோதல் என்ற பெயரில் கொலை செய்யப்பட்டார்கள். முந்தைய ஜெயலலிதாவின் ஆட்சியைக்காட்டிலும் தாங்கள் ஓன்றும் சட்டம்,ஒழுங்கை நிலைநாட்டுவதில் குறைந்தவர்களல்ல எனக் காட்டிக் கொள்வதற்காகவே இக்கொலைகள் நிகழ்த்தப்பட்டன எனப் பத்திரிக்கைகள் எழுதின.

இந்நிலையில் தான்,இத்தகைய போலி மோதல்களை எதிர்க்கக் கூடிய பல்வேறு சிறிய மனித உரிமை அமைப்புகள் ஓன்றாக இணைந்து போலி மோதல் கொலை எதிர்ப்புக் கூட்டியக்கத்தை உருவாக்கினோம். சென்ற ஜுலை மாதத்தில் சென்னையில் எழுச்சிமிக்க கருத்தரங்கம் ஒன்றையும் நடத்தினோம்.போலி மோதலுக்கு எதிரான ஓரு விரிவான துண்டறிக்கையை ஆயிரக்கணக்கில் அச்சிட்டுத் தமிழகமெங்கும் விநியோகித்தோம். இந்தியாவிலும் சரி, தமிழகத்திலும் சரி 99சத மோதல்கள் போலி மோதல்கள்தான். முன்னரே பிடித்துச்சென்று நிராயுதபாணியான நிலையில் கொன்றுவிடும் படுகொலைகள்தான்,இந்த மோதல்கள். எதிலும் காவல்துறையினர் கொல்லப்படுவதில்லை. பெரிய காயங்கள் அடைவதும் கிடையாது. ஆனால் காவல் துறையினரால் குறிவைக்கப் படுபவர்கள் அவ்வளவு பேரும் கொல்லப் படுகின்றனர். தப்பிச் சென்றதாகவோ காயங்களுடன் பிடி பட்டதாகவோ வரலாறு கிடையாது. இது ஒன்றே எல்லா மோதல்களும் போலி மோதல்களே என்பதற்குப் போதிய சான்று.

தமிழகத்திலும் இந்தியாவின் பல பகுதிகளிலும் போலி மோதல் கொலைகள் நிகழ்வதாக அடிக்கடி செய்திகள் வருகின்றன. இந்தக் காவல்துறை உத்தி, எப்போது,எப்படி தொடங்கியது….? மோதல் கொலைக்குப் பலியாகிறவர்கள் யார்….?

நெருக்கடி நிலைக் காலத்தில் ஆந்திராவில் மட்டும் 300க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் இவ்வாறு கொல்லப்பட்டனர். நெருக்கடி நிலை நீக்கப்பட்டவுடன் அப்போது நடைபெற்ற அத்துமீறல்கள் குறித்த விவாதங்கள் பெரிய அளவில் நடைபெற்றதையொட்டி இத்தகைய மோதல் கொலைகள் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. எனினும், 80களில் காலிஸ்தான் போராட்டம் தீவிரமாகச் செயல்பட்ட பின்னணியில் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். அதையொட்டி மீண்டும் மோதல் கொலைகள் தொடர்ந்தன. 96ல் மத்தியப் புலனாய்வுக் குழு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை ஒன்றின்படி 1984-95 காலகட்டத்தில் அமிர்தசரசில் மட்டும் 2,097 உடல்கள் சட்ட விரோதமாக எரிக்கப்பட்டது தெரிய வந்தது. பிற பஞ்சாப் நகரங்களிலும் இதே நிலைதான். காணாமல் போனதாகச் சொல்லப்பட்டவர்களில் 60 விழுக்காட்டினர் கொல்லப்பட்டார்கள் என்பது இப்போது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் (85-96) ஆந்திர மாநிலத்தில் 1,049 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். தர்மபுரியில்,தேவாரம் தலைமையில் நடைபெற்ற கொலைகளை முன்னரே குறிப்பிட்டேன். 90களுக்குப்பின் மோதல் படுகொலைகள் முஸ்லீம் தீவிரவாதிகள் மீதும் ரவுடிகள் மற்றும் குண்டர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்டன. பாபர் மசூதி இடிப்பிற்குப் பின் வடமாநிலங்களில் முஸ்லீம்கள் இவ்வாறு பெருமளவில் கொல்லப்பட்டனர். நரேந்திர மோடியைக் கொல்ல வந்ததாகச் சொல்லி இர்ஷத் ஜெகான் என்கிற 19 வயதுக் கல்லூரி மாணவி கொல்லப்பட்டது ஊரறிந்த உண்மை.

ரவடிகள், தாதாக்கள் கொல்லப்படுவது, உலகமயம், ரியல்எஸ்டேட் பெருக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒன்று. தாதாக்களையும் ரவுடிகளையும் அரசியல்வாதிகளும், காவல் துறையுமே உருவாக்குகின்றனர். பிறகு ஒரு கட்டத்தில் அவர்களால் தங்களுக்கே ஆபத்து எனும்போது அவர்களைக் கொன்று விடுகின்றனர். ஆக, இன்று இந்தியத் துணைக்கண்டத்தில் நடத்தப்படும் மோதல் படுகொலைகள் மூன்று தரப்பினரைக் குறிவைத்து நடத்தப்படுகின்றன. ஒன்று, பயங்கரவாதத்தை எதிர்ப்பதன் பெயரால் பெரிய அளவில் முஸ்லீம்கள் கொல்லப் படுகிறார்கள். இரண்டாவதாக வட மாநிலங்களில், குறிப்பாக தண்டகாரண்யப் பகுதியிலும் காஷ்மீரத்திலும், வட கிழக்கு மாநிலங்களிலும் உள்நாட்டுப் பாதுகாப்பு என்ற பெயரால் மாவோயிஸ்டுகளும்,தேசிய இனப் போராளிகளும் கொல்லப்படுகினற்னர். மூன்றாவதாக தாதாக்கள், ரவுடிகள் முதலிய கிரிமினல் குற்றவாளிகள் கொல்லப்படுகிறார்கள்.

இந்தியாவில் ஒருபுறம் மோசமான ரவடிகளுக்கும் மறுபுறம் தீவிரவாதிகள் எனப்படுவோருக்கும் எதிராக இந்தப் போலி மோதல் படுகொலை உத்தி கையாளப்பட்டு வருகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் போலி மோதல் தொடர்பான நிலவரம் என்ன?

சி.கே.காந்திராசன் என்கிற IPS அதிகாரி சென்னையைச் சேர்ந்த 19 ரவுடிக் கும்பல்களை ஆய்வு செய்து அண்மையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அவரது ஆய்வேட்டுச் சுருக்கம் சென்ற ஏப்ரல் 15 “டைம்ஸ் ஆப் இந்தியா” இதழில் வெளிவந்தது. அமைப்பு ரீதியாக மேற் கொள்ளப்படும் எந்தக் குற்றமும் அரசியல்வாதிகள், காவல்துறையினர், வழக்கறிஞர்கள் ஆகியோரின் கூட்டுறவின்றிச் சாத்தியம் இல்லை என்பது அவரது ஆய்வின் முடிவு. சுமார் 12 போலீஸ் அதிகாரிகள் கிரிமினல்களுக்குப் பல்வேறு வகைகளில் ஆலோசனை சொல்பவர்களாய் இருப்பதாகவும் இத்தகைய ஆலோசனைகளுக்கு 50 ஆயிரம் முதல் பல இலட்சம் வரை ஊதியம்(royalty) பெறுவதாகவும் அந்த இதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. சில எடுத்துக் காட்டுகளும் கொடுக்கப் பட்டிருந்தன.

சென்ற மாதம் திருச்சியில் நடந்த மோதலில் கொல்லப்பட்ட “பாம்” பாலாஜிக்கும், தஞ்சை மேற்குக் காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர் குமாரவேலுவுக்கும் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர் வேதாரண்யத்துக்கு மாற்றப்பட்டார். “பாம்” பாலாஜி மோதலில் கொல்லப்பட்டார். ஜுனியர் விகடனில் டாக் ரவி, வரிச்சலூர் செல்வம் என்கிற இரு ரவுடிகள் தாங்கள் மோதலில் கொல்லப்படலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். ரவியின் வழக்கறிஞர் காரல் மார்க்ஸ் என்பவர், ரவியைக் கொல்வதற்காக அவருக்கு எதிரான கும்பல் ஒன்று மிகப் பெரியஅளவில் பணம் செலவழிப்பதாகக் கூறியுள்ளார்.

இங்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன், சில ஆண்டுகளுக்கு முன் நானா படேகர் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்டாக நடித்த இந்தித் திரைப்படம் வெளிவந்தது. “ஜதெக் 56″ அதாவது 56 என் கவுண்டர் செய்தவன் என்பது அதன் பெயர். நானா படேகருக்கு நடிப்புப் பயிற்சி அளித்தவர் பிரதிப்வர்மா என்கிற உண்மையான என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட். இவர் 80 மோதல் கொலைகள் செய்தவர். இவருடைய சீடர் தயா நாயக் 100 மோதல் கொலைகளைச் செய்தவர். இவர்கள் இருவரும் இப்போது பணிநீக்கம் செய்யப்பட்டு நீதிமன்றங்களுக்கு அலைந்து கொண்டுள்ளனர். ஒரு ரவுடிக்கும்பலிடம் பணம் பெற்றுக்கொண்டு மற்றொரு ரவுடிக் கும்பலைக் கொன்று அளவுக்கதிமாகச் சொத்து சேர்த்தனர் என்பது அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டு. ஒரு சாதாரண காவல்துறை அதிகாரியான பிரதீப் வர்மாவின் சொத்து 100 கோடி. தன்னுடைய சொந்த ஊரில் தன்னுடைய அம்மா பெயரில் பள்ளி ஒன்றை நிறுவி அமிதாப்பச்சனை அழைத்துத் திறந்து வைத்தவர் அவர். இப்படி நிறையச் சொல்லலாம். அவுட்லுக் வெளியிட்ட “என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்”ஆல்பம் பற்றி முன்பு குறிப்பிட்டேன். இதில் குறிப்பிடப்பட்ட பலரில் ரஜ்பீர்சிங் என்பவரும் ஒருவர். 100 என்கவுண்டர் செய்தவர், இவர் சென்ற மார்ச் இறுதியில் ரியல் எஸ்டேட் தகராறு ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட்டில் முடக்கும் போது ஏற்பட்ட தகராறு இது. தமிழகத்தில்கூட இத்தகைய குற்றச்சாட்டுகள் வந்து கொண்டுள்ளன. மோதலில் கொல்லப்பட்ட வெள்ளை ரவியின் மனைவி அவரைக் கொல்வதற்கு 60இலட்சம் ரூபாய் கைமாறியதாகப் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார். இவை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

போலி மோதல் தொடர்பான சட்டவிதிகள் என்ன? இவை மதிக்கப்படுவதும் மிதிக்கப்படுவதும் எந்த அளவில்?

தற்காப்புக்காக-தன்உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக- தேவையானால் எதிரியைக் கொல்வதற்கு, குற்றநடைமுறைச் சட்டவிதிகள் 154,170,173, 190 மற்றும் இந்தியத் தண்டனைச்சட்டம் 96,97,100,46 ஆகிய பிரிவுக்களில் இடம் உண்டு. பொதுவாக இவை தற்காப்பு உரிமையைக் குறிப்பவை. காவல் துறையினருக்கு மட்டுமின்றி எவருக்கும் பொருந்தக் கூடியவை. ஆனால், இத்தகைய நிகழ்வுகளில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதில் இந்தியச் சாட்சியக் சட்டம் 105வது பிரிவின்படி அக்கொலை தவிர்க்க இயலாதது எனவும், முற்றிலும் தற்காப்பிற்காகவே செய்யப்பட்டது எனவும் நிறுவப்படுதல் வேண்டும். இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 46ன் படி காவல்துறையினர் ஒருவரைக் கைது செய்யச் செல்லும் போது அவர் கைதாக மறுத்தால் அவரை வலுக்கட்டாயமாகக் கைது செய்யலாம். இந்த வலுக்கட்டாயத்தின் எல்லை அவரை கொல்வதாகக்கூட இருக்கலாம்.

ஆனால், கைது செய்யப்படுபவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றம் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனைக்குரிய குற்றமாக இருக்கும் நேர்வுகளில் மட்டுமே இந்த வலுக்கட்டாயம், கொல்லுதல் என்கிற எல்லைக்குச் செல்ல முடியும் என பிரிவு 46, உட்பிரிவு 3 வரையறுக்கிறது. குற்ற நடைமுறைச் சட்டம் 176வது பிரிவில் 1983ம் ஆண்டு சேர்க்கப்பட்ட திருத்தத்தின்படி ஒரு நிர்வாக நடுவர் இது குறித்து விசாரணை செய்ய வேண்டும். ஆனால் இது நடு நிலையுடன் மேற்கொள்ளப்படுவதில்லை என்பதே உண்மை.மோதல் நடக்கும்போது கொல்லப்பட்டவரின் மீது அவர் காவல்துறையினரைக் கொலை செய்ய முயன்றதாக இந்தியத் தண்டனைச் சட்டம் 370ம் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்கிறார்கள். பின்னர் குற்றவாளி உயிருடன் இல்லை என்பதைக் காரணம் காட்டி விசாரணை இன்றி வழக்கை முடித்து விடுகிறார்கள். பெயருக்கு வருவாய்க் கோட்ட அலுவலர் (RDO) விசாரணை ஒன்றை நடத்தி மூடிவிடுகிறார்கள்.

ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். இவ்வாறு மோதல் கொலைகளை ஊற்றி மூடுகிற நடைமுறையில் காவல்துறையினரும், சிவில் நிர்வாகமும், அரசியல்வாதிகளும் கூட்டுக் களவாணிகளாக உள்ளனர்,இணைந்து செயல்படுகின்றனர்,நீதிமன்றங்களும் கண்டுகொள்வதில்லை. இராசாராம், சரவணன் என்கிற இரு தமிழ்த் தீவிரவாதிகள் சென்னை மத்திய சிறையில் இருந்தபோது கொல்லப் பட்டனர். அவர்கள் கொல்லப்படுவது முன்னரே தெரியும். அவர்கள் அந்த அச்சத்தை வெளிப்படுத்தியும் இருந்தனர். காவல் நீடிப்பிற்காக அவர்கள் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். காலை நேரத்தில் அழைத்துச் செல்வதே வழக்கம். ஆனால், அன்று அவர்கள் மாலையில் அழைத்துச் செல்லப்பட்டனர். சென்டரல் ரயில்நிலையம் அருகே இருந்த மத்திய சிறைக்கு, சைதாப்பேட்டையிலிருநது அண்ணா சாலை வழியாக வருவதே வழக்கம். அன்று அவர்கள் கோட்டூர்புரம் வழியாகக் கொண்டு வரப்பட்டனர். சாலைப் போக்குவரத்து எல்லாம் நிறுத்தப்பட்டு அவர்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர். அவர்கள் தப்பிச் செல்ல முயன்றதாக போலீஸ் பொய்யுரைத்தது. காவல்துறை, போக்குவரத்துத் துறை ஆகிய துறைகள் இணைந்து செயல்பட்டன என்பது எண்ணிப் பார்க்க வேண்டிய செய்தி.

மோதல் சாவுகள் குறித்துத் தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்துள்ள நெறிமுறைகள் யாவை? தமிழக அரசு அவற்றைக் கடைப்பிடிக்கிறதா…?

ஆந்திரப் பிரதேசக் குடியுரிமைக் கழகம் (APCLC) 94 மார்ச்30ல் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் இது குறித்து விரிவான புகார் ஒன்றை அளித்திருந்தது. அதையொட்டி தேசிய மனித உரிமை ஆணையம் 1996 நவம்பர் 5ல் தனது பார்வைகளைப் பதிவு செய்தது.1997 மார்ச்சு 29ல் ஆந்திர முதல்வருக்கு விரிவான நெறி முறைகளை அனுப்பிய ஆணையம் இதன் நகல்களை எல்லா மாநில முதல்வர்களுக்கும் அனுப்பியது. சென்ற ஆண்டில் இது தொடர்பான விவாதங்கள் இந்திய அளவிலும் தமிழக அளவிலும் மேலுக்கு வந்த போது சென்ற 2007 ஆகஸ்டு 8ல் தமிழக அரசு இது குறித்து நெறிமுறை ஒன்றை உருவாக்கி மிக அவசரம் என்று தலைப்பிட்டு, தலைமைச் செயலாளரே ஒப்பமிட்டு, காவல்துறை இயக்குநருக்கு அனுப்பியது. இதன் நகல்கள் சிறைத்துறையின் துணைக்காவல் இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டன. தேசிய மனித உரிமை ஆணையத்தின் விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மோதல் கொலைகள் தொடர்பாக அறிக்கை அனுப்ப வேண்டும் என்பன இந்த ஆணையின் சாரம்.

மோதல் கொலைகள் நடை பெற்றவுடன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் உரிய பதிவேட்டில் அதைப் பதிவு செய்ய வேண்டும். RDO விசாரணைக்குப் பதிலாக நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும். இவ் விசாரணையில் கொல்லப்பட்டவரின் உடனடி உறவினர்கள் பங்கேற்பது அவசியம். அவர்களது குற்றச் சாட்டுகளைப் பரிசீலிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் மோதலில் பங்கேற்ற அதிகாரிகளுக்கு வீரப் பரிசுகளோ, பதவி உயர்வுகளோ வழங்கக் கூடாது. மோதலில் பங்கு பெற்ற அதிகாரி அதே காவல்நிலையத்தைச் சேர்ந்தவராக இருப்பின் வேறு சுதந்திரமான சிபிசிஐடி போன்ற புலன் விசாரணை அமைப்பைக் கொண்டு விசாரிக்க வேண்டும். இவை அந்நெறி முறைகளில் முக்கியமானவை.

மோதல் என்பது ஒரு கொலை. காவல்துறை செய்தாலும் சரி, சாதாரண ஆள் செய்தாலும் சரி, கொலை கொலைதான் என்கிற அடிப்படையில் கைது செய்து, குற்றநடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய கொலைக் குற்றமாகவே அதைக் கருத வேண்டும். தற்காப்புக்காகக் கொன்றேன் என மெய்ப்பிக்கும் வரை அந்த அதிகாரி கொலைக் குற்றவாளிதான். அதிகாரியின் மீது குற்றம் நிரூபிக்கப்படுமானால் கொல்லப்பட்டவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றெல்லாம் இந்த நெறிமுறைகளில் இருந்தது. இந்த நெறி முறைகளை அவற்றின் ‘வார்த்தை, தொனி’ ஆகிய இரண்டின் அடிப்படையிலும் அப்படியே பின்பற்றவேண்டும் எனவும். இல்லையேல் ‘ கடுமையாகக் கருதப்படும்’ எனவும், மாவட்ட அதிகாரிகள் இதற்கு பொறுப்பாக்கப் படுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

நமக்கெல்லாம் பெரிதும் ஆறுதல் அளித்த அந்த நெறிமுறைகளுக்காகப் போலி மோதல் எதிர்ப்புக் கூட்டியக்கம் சார்பாகத் தமிழக முதல்வருக்கு நன்றியும் தெரிவித்தோம். கூடவே இது நடைமுறைப் படுத்தப்படுமா,அல்லது வெறும் வார்த்தைகளோடு நின்றுவிடுமா என்கிற அய்யத்தையும் வெளியிட்டிருந்தோம். நமது அய்யம் இன்று உறுதியாகி விட்டது. ஆறு மாதம் அமைதிகாத்த நம் காவல்துறையினர் சென்ற மாதத்தில் மட்டும் ஐந்து பேரைக் கொன்றுள்ளனர். மேற்கண்ட நெறிமுறைகள் எதையும் பின் பற்றவில்லை. ஏப்ரல் 3 அன்று தஞ்சையில் மிதுன் சக்கரவர்த்தி என்பவரை மோதலில் கொன்ற காவல்துறையினருக்குக் கூடுதல் காவல்துறை இயக்குனர் விஜயகுமார் உடனடியாகப் பரிசுளை வழங்கியுள்ளார். நெறிமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்ட அவர் மீதும், நடவடிக்கையில்லை. அப்படியானால் இந்த நெறிமுறைகள் யாரை ஏமாற்றுவதற்கு?

போலி மோதல் கொலைகள் குறித்த பொது மக்களின் பார்வை பொதுவாக எப்படியுள்ளது?

பொதுவாக நடுத்தர வர்க்கத்தினரின் பார்வை மோதல் கொலைகளுக்கு ஆதரவாக உள்ளது என்பது வேதனையான உண்மை. காவல்துறையின் பலம் இதுதான். கிரிமினல்களை வெளியே விட்டால் அவர்கள் மேலும் மேலும் கொலைகளைத் தானே செய்வார்கள்? சட்டத்தின் மூலம் அவர்களைச் சிக்க வைக்க முடியுமா? என்கிற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. கிரிமினல் குற்றங்களை ஒழிப்பதற்கு மோதல் கொலைகள் தான் வழி என்ற கருத்தைக் காவல்துறையே பரப்பி வருகிறது.

கிரிமினல்கள் மட்டுமே கொல்லப் படுவதில்லை. அரசியல் காரணங்களுக்காகவும் கொலைகள் நடக்கின்றன என்பதெல்லாம் மக்களுக்குச் சொல்லப்பட வேண்டும். மோதல்கொலைகளுக்கும் கிரிமினல் குற்றங்களுக்கும் தொடர்பே இல்லை. சென்னை நகரத்தில் மட்டும் கடந்த 12 ஆண்டுகளில்,18 மோதல் கொலைகள் நடை பெற்றுள்ளன. ஆனால் கிரிமினல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டேதான் போகின்றன. கிரிமினல்கள் எப்படி உருவாகின்றனர் என்பதை மக்களிடம் விளக்கியாக வேண்டும். காசு வாங்கிக் கொண்டு மோதல் கொலைகள் நிகழ்த்துவது, உன் மகனைக் கொலை செய்து விடுவேன் என மிரட்டி வீட்டாரிடம் பணம் பறிப்பது, இவையெல்லாம் மக்களுக்குத் தெரியாது. இவற்றையும் நாம் விளக்கியாக வேண்டும். பஸ்ஸை எரித்து மாணவிகளைக் கொன்றவர்கள். பத்திரிகை அலுவலகத்தைத் தாக்கி ஊழியர்களைக் கொன்றவர்கள் இவர்களுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதி என்று பாகுபடுத்தித் தேர்வு செய்கிற உரிமையை காவல் துறையினருக்கு யார் அளித்தது?

கொலைக்குற்றம் உறுதி செய்யப்பட்டவர்களுக்குக்கூட மரணதண்டனை கூடாது என 135 நாடுகள் முடிவெடுத்துள்ள நிலையில், குற்றம் நிரூபிக்கவே படாத நிலையில் மரணத்தீர்ப்பை வழங்கும் அதிகாரத்தைக் காவல்துறைக்கு யார் கொடுத்தது? அரசுச் சட்டத்தின் 21வது பிரிவின்படி இந்தியக் குடிமக்கள் எல்லோருக்கும் உயிர் வாழும் உரிமை இருக்கிறது. அரசியல் சட்டம் 14வது பிரிவின்படி எல்லோரும் சமமாக நடத்தப்பட வேண்டும். இந்த மிக அடிப்படையான உரிமைகளை யெல்லாம் குழிதோண்டிப் புதைப்பவையாக மோதல் கொலைகள் உள்ளன என்பதை மக்களிடம் விளக்கிச் சொல்வது அவசியம்.

போலி மோதலை நியாயப்படுத்தும் ஊடகங்கள் அப்படிச் செய்வது ஏன்?

ஊடகங்கள், குறிப்பபாக திரைப்படங்கள் என்கவுண்டரை நியாயப்படுத்தவே செய்கின்றன. இது மிகவும் வேதனைக்குரிய நடைமுறை. சமீபத்தில் திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒரு சிலருடன் உரையாடக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. நவீன் பிரசாத் என்கிற மாவோயிஸ்டு கொல்லப்பட்டது குறித்து அவர்களிடம் பேசும்போது, மோதல் கொலைகள் குறித்த அப்பட்டமான நடுத்தரவர்க்க மனநிலையே அவர்களிடம் இருந்தது அதிர்ச்சி அளித்தது. இதில் திரைப்படத் துறையை மட்டும் சொல்லிப் பயனில்லை. நம் எழுத்தாளர்கள் சிந்தனையாளர்கள் ஆகியோரும் இதைக் கண்டு கொள்வது இல்லை, இத்தகைய திரைப்படங்களை கண்டிப்பதில்லை. பத்திரிகைகளைப் பொறுத்தமட்டில் புலனாய்வு இதழ்கள் ஒரளவு பாதிக்கப் பட்டவர்கள் தரப்புச் செய்திகளை வெளியிடுவது, சில உண்மைகளை வெளிப்படுத்த வாய்ப்பாக உள்ளது. கூடவே காவல்துறை அளிக்கிற அப்பட்டமான பொய்ச் செய்திகளையும், கொல்லப்பட்டவர் குறித்த அவதூறுகளையும் வெளியிடுவதன் மூலம் ஒட்டுமொத்தமாகக் காவல்துறையின் கருத்துகளுக்கு ஆதரவு ஏற்படும் நிலையே உள்ளது.

டில்லி, மும்பை, குஜராத்தில் போலி மோதல் வல்லுநர்கள் என்றே சில காவல்துறை அதிகாரிகள் பெயர் பெற்றனர். இங்கும் சிலருக்கு அந்தப் பெயர் உள்ளது. சட்டவிரோதமாகச் செய்வதை இப்படிப் பெருமைப்படுத்தலாமா? நான் முன்பே சொன்னேன், தமிழ்நாட்டிலும்கூட இத்தகைய மோதல் கதாநாயகர்கள் இருக்கவே செய்கின்றனர். இவர்களை வீரர்களாகப் பாராட்டுகிற நடைமுறையை அரசுகள் பின்பற்றுகின்றன. கோடிக்கணக்கில் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படுகின்றன. வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் 50க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பெண்கள் பலர் வன்புணர்ச்சி செய்யப்பட்டனர். தேவாரத்துக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டா மட்டும் அன்றைய மதிப்பின்படியே ஒரு கோடி ரூபாய் பெறும் என ஒரு பத்திரிகை எழுதியிருந்தது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் நெறிமுறைகள் கறாராக நடைமுறைப்படுத்தப் பட்டால் இந்தக் கதாநாயகர்களின் சாயம் வெளுக்கும். கொடூர முகங்கள் அம்பலமாகும்.

அண்மைக்காலத்தில் தமிழகத்தில் போலி மோதல் கொலைகள் திடீரென அதிகரித்திருப்பது ஏன்?

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 68 மோதல் கொலைகள் நடைபெற்றுள்ளன. இதில் திமுக,அதிமுக, இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. அதிமுக ஆட்சி என்றாலே அது போலீஸ் ஆட்சிதான். தேவாரம் செய்த கொலைகள் எல்லாம் எம்.ஜி.ஆர்.ஆட்சிக் காலத்தில்தான் நடந்தன. நான் முன்பே சொன்னபடி அதிமுக ஆட்சியைக் காட்டிலும் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றுவதில் நான் ஒன்றும் குறைந்தவன் இல்லை எனக் காட்டிக் கொள்ளும் நிர்ப்பந்தம் கருணாநிதிக்கு உள்ளது. கடந்த இரண்டாண்டுகளில் 15 மோதல் கொலைகள் நடைபெற்றுள்ளன. இன்னொன்றையும் நாம் இங்கு நினைத்துப் பார்ப்பது அவசியம். செப்டெம்பர் 11க்குப் பிறகு உலக அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் மனித உரிமை மீறல்கள் அதிகமாகியுள்ளன. இந்தியாவில் மன்மோகன்சிங் தலைமையில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் உலகமயம், தாராளமயம், ஊடாகப் பெரிய அளவில் கனிமவளமும், நீர்வளமும் உள்ள நிலங்கள் உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்படுகின்றன. அப்பாவிப் பழங்குடி மக்களின் நிலங்கள் இவ்வாறு பெரிய அளவில் பறிக்கப்படுகின்றன.

மாவோயிஸ்டுகளின் நடைமுறை குறித்து நமக்கு விமர்சனம் இருந்த போதும், அவர்கள்தாம் இந்தப் பிரச்சனைகயைக் கையில் எடுக்கின்றனர். எனவே உள்நாட்டுப் பாதுகாப்பு என்கிற ஒலத்தை மைய அரசு தொடர்ந்து எழுப்பிக் கொண்டே இருக்கிறது. இராணுவத்திற்கும் காவல்துறைக்கும் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை உள்துறை அமைச்சர்களை எல்லாம் கூட்டிக் கடும் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இப்படியெல்லாம் மோதல் கொலை அதிகரிப்பின் பின்னணியை நாம் பார்க்க வேண்டியுள்ளது. இதில் ஆளும் கட்சியை மட்டும் சொல்லிப் பயனில்லை. பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசைத் தவிர மற்றத் தலைவர்கள் யாரும் மோதல் கொலைகளைக் கண்டிக்கவில்லையே…!

போலி மோதல் கொலைகளை நீதிமன்றங்கள் எவ்வாறு பார்க்கின்றன?

நீதிமன்றங்கள் அவ்வப்போது சில வழக்குகளில் போலி மோதல்களைக் கண்டிக்காமல் இல்லை. மதுசூதனன் ராவ் போலி மோதலில் கொல்லப் பட்டபோது, புகழ்பெற்ற வழக்கறிஞர் கே.ஜி.கண்ணபிரான் ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். (ரிட் எண் 16868/1995). நீதி அரசர்கள் பி.எஸ். மிஸ்ரா, சி.வி.என். சாஸ்திரி ஆகியோர் அளித்த தீர்ப்பு முக்கியமானது. ஒரு குடிமகனின் உயிர் வாழ்வில் இடையீடு செய்வது சாதாரண நிகழ்வாக இருக்க முடியாது என்பதை வலியுறுத்திச் சொன்ன அவர்கள் காவல்துறைக் கொலைக்கும் சாதாரணக் கொலைக்கும் தனித்தனிச் சட்டங்கள் இருக்க முடியாது என்றனர். மோதலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளை அனைத்துக் கிரிமினல் குற்றவாளிகளைப் போலவுமே புலன் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கூறினர்.புகழ்பெற்ற டி.கே.பாசு-எதிர்-மேற்குவங்க அரசு வழக்கில் நீதியரசர்கள் குல்தீப்சிங், ஏ.எஸ்.ஆனந்த் ஆகியோர் வழங்கிய தீர்ப்பும, பியசிஎல்-எதிர்-இந்திய அரசு வழக்கில் நீதியரசர்கள் ஜீவன் ரெட்டி,சுகவ் சென் ஆகியோர் வழங்கிய தீர்ப்பும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை. மிகச்சமீபத்தில் ஏப்ரல் 22 அன்று உச்ச நீதிமன்றத்தில் நீதியரசர்கள் அல்டாப் ஆலம், பி.என்.அகர்வால், ஜி.எஸ்.சிங்வீ ஆகியோர் காஷ்மீர மாநிலத்தில் வீரப் பரிசுகளுக்காகவும் பதவி உயர்வுகளுக்காகவும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

ஆனால் எல்லா வழக்குகளிலும் நீதிமன்றங்கள் இவ்வாறு நடந்துள்ளன எனச் சொல்ல முடியாது. இது தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் தொடர்கின்ற வழக்குகளில் நீதிமன்றங்கள் விரைவாகத் தீர்ப்பளிப்பதும் இல்லை. காட்டாக, சமீபத்தில் கொல்லப்பட்ட மாவோயிஸ்டு நவீன் பிரசாரத்தின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமெனக் கோரி மேற்கொள்ளப்பட்ட வழக்கு தள்ளிக் கொண்டே போகிறது. மோதலில் கொல்வதற்கு முன்னரே நபர்கள் கைது செய்யப்படுவது குறித்து நம் எல்லோருக்கும் தெரியும். அது குறித்து ஆட்கொணர்வு மனு போட்டால் விரைவாகத் தீர்ப்பு வழங்குவதும் இல்லை. சமீபத்தில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்கள் தாங்கள் பொதுச் சேவர்கள் அல்ல,அரசமைப்புச் சட்டக் காப்பாளர்கள் எனவும் கூறியுள்ளார்.

அரசியல் சட்டக் காப்பாளர்கள் மட்டுமல்ல, குடிமக்களின் உயிரையும் காக்க முடியும் என்பதை உணர்ந்து அவர்கள் செயல்பட்டால் பல உயிர்களைக் காக்க முடியும். சிறையில் இருந்த மணல்மேடு சங்கரின் தாய், தன் மகன் என்கவுண்டர் செய்யப்படலாம் என நீதிமன்றத்தில் புகார் செய்தார். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை யென காவல்துறை சொல்லியது. ஆனால், அவர் அவ்வாறே கொல்லப்பட்ட போது இந்த நீதிமன்றம் என்ன செய்தது? இதுபோன்ற பல வழக்குகளையும் என்னால் சொல்ல முடியும்.

போலி மோதல் குறித்து நீதிமன்றம் உறுதியாக நடவடிக்கை எடுத்த வழக்கு ஏதும் உண்டா?

சில வழக்குகள் பற்றிச் சற்றுமுன் சொன்னேன். ஆனால் ஒன்று. இதுவரைக்கும் பெரிய அளவில் காவல்துறையினர் இத்தகைய வழக்குகளில் தண்டிக்கப்பட்டது இல்லை. சொராபுதின் வழக்கு இந்தியத் துணைக்கண்ட அளவில் ஒரு முக்கியப் பிரச்சனையாக மாறியதால் வன்சாரா,ராஜ்குமார் பாண்டியன் மற்றும் பல காவல் துறையினர் சுமார் இரண்டாண்டுகளாகப் பிணையில் வெளிவராத நிலையில் உள்ளனர். வன்சாராவைப் பெரிய தேசபக்தன் எனவும், தேசத்துரோகம் செய்ய வந்த முஸ்லிமைக் கொன்ற வீரன் எனவும் இந்துத்துவவாதிகள் முன்வைத்து ஆதரவு திரட்டுகின்றனர். வன்சாரா நீதிமன்றத்திற்கு வரும் போதெல்லாம் ‘பாரு பாரு யாரு வருது, குஜராத்தின் சிங்கம் வருது’ என்று அவரின் சாதிக்காரார்களையும் உறவினர்களையும் வைத்து முழக்கமிடச் செய்கின்றனர். இப்படியான அரசியலும் ஒரு பக்கம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

போலி மோதல் குறித்து அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

இந்திய அளவில் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாகச் சொல்ல முடியாது. 1949ல் ஜவஹர்லால் நேரு தேசப் பாதுகாப்பிற்கு ஆபத்தானவர்கள் என மூன்று பிரிவினரைச் சுட்டிக் காட்டினார். 1.வகுப்பு வாதிகள் 2.கம்னியூஸ்டுகளில் சிலர் 3.தேச ஒற்றுமைக்கு எதிரானவர்கள். இன்றைய அரசியல் மொழியில் இந்த மூன்று பிரிவினரையும் கீழ்க்கண்டவாறு சொல்லலாம்: 1.முஸ்லீம் தீவிரவாதிகள், 2.மாவோயிஸ்டுகள், 3.தேசிய விடுதலைக்காக ஆயுதம் தாங்கிப் போராடுபவர்கள். உலகமயச் சூழலில் தற்போது ரவுடிகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள் அவ்வளவுதான்.

பொதுவுடமையாளர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் மனித உரிமையைப் பற்றிப் பேசியதில்லை என்கிற குற்றச்சாட்டு உண்டு. சோவியத்து ருஷ்யாவில் மக்களுக்கு ஆட் கொணர்வு மனு உரிமைகூட அளிக்கப்பட்டது இல்லை. இபொக,மார்க்சிஸ்டுக் கட்சி இரண்டுமே பொதுவாக மனிதவுரிமைப் பிரச்சினைகளைப் பேசுவதில்லை. சொல்லப்போனால் அவர்கள் ஆளும் மாநிலங்களில் அவர்களே மனிதவுரிமை மீறல்களுக்குக் காரணமாகவும் இருக்கிறார்கள். பிற சிறிய அமைப்புகளும்கூட அவரவர் சார்ந்த மனிதவுரிமை மீறல்கள் நடைபெறும்போது மட்டுமே எதிர்வினை ஆற்றுகின்றன. முஸ்லீம்கள் பிரச்சனையில் பொதுவாக யாரும் அக்கறை காட்டுவதில்லை. முஸ்லீம்களும் அவர்கள் பிரச்சனைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஆனால், இன்று எல்லாத் தரப்பினர் மீதும் கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப் படுவதை முன்னிட்டுச் சிறிய அமைப்புகள் கைகோர்க்கத் தொடங்கியுள்ளன. இது வரவேற்கத்தக்க அம்சம். இந்நிலையில் சென்ற 22 ஆம் தேதி சட்டமன்றத்தில் முதலமைச்சர் கருணாநிதி இது குறித்துப் பேசும்போது, தீவிரவாதத்தை ஒடுக்குவதில் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட வேண்டும் எனக் குறிப்பிட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இயற்கைச் சீரழிவுகளின் போது எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பது போலத் தீவிரவாதத்தை ஒடுக்குவதிலும் ஒத்துழைக்க வேண்டுமாம். இது காவல்துறை அத்துமீறல்களை ஊக்குவிக்கும் பேச்சு. இதை முதல்வர் திரும்பப் பெற வேண்டும்.

போலி மோதல் கொலைகளை வெளிப்படுத்திக் குற்றவாளிகளைக் கூண்டிலேற்ற என்ன செய்ய வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?

முதலில் போலி மோதல் கொலை தொடர்பாக மக்கள் மத்தியில் உள்ள தவறான கருத்துகளை நீக்குவதற்குக் கருத்துப் பரப்புரை முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மனிதவுரிமைகளில் அக்கறையுள்ள அமைப்பினர் அனைவரும் ஒன்றாக இணைந்து போலி மோதல்களை எதிர்க்க வேண்டும். ஊடகத் துறையினர்,அரசியல் கட்சியினர் ஆகியோருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு போலி மோதலுக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்குமாறு அவர்களை வற்புறுத்த வேண்டும். போலி மோதல்கள் தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகளை உடனடியாகப் பின்பற்ற வேண்டும் என்கிற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்த வேண்டும். மருத்தவர் இராமதாசு அவர்கள் கூறியுள்ளது போல எல்லா மோதல் கொலைகள் குறித்தும் விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.

“ஆயுதம் தாங்கிய எதிர்ப்புகளை நாங்கள் ஆயுதம் கொண்டு எதிர்கொள்ளாமல் சாக வேண்டுமா?” எனக் காவல்துறையினர் கேட்பார்கள். அப்படியான சந்தர்பங்களில் அவர்கள் கேமரா(camera) பொருத்திய துப்பாக்கிகளைப் பயன்படுத்த வேண்டும். உண்மையிலேயே கொல்லப்பட்டவர்கள் தப்பியோட முயன்றார்களா,எதிர்த் தாக்குதல் மேற் கொண்டார்களா,தற்காப்புக்காகத்தான் சுட்டார்களா என்பது அப்போது வெட்ட வெளிச்சமாகும். தீவிரவாதப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வுகளே காண முடியும் என்ற கருத்தை வலியுறுத்த வேண்டும். 2006ம் ஆண்டில் இந்திய அரசின் திட்டக்குழு, பந்தோப்பாத்தியாயா என்கிற ஒய்வு பெற்ற IPS அதிகாரி ஒருவரின் தலைமையில் குழு ஒன்றை நியமித்தது. மேற்கு வங்கத்தில் நக்சல்களை எதிர்கொள்வதில் இவர் முக்கியப் பங்காற்றியவர். முன்னாள் உத்திரப்பிரதேசக் காவல்துறை இயக்குனர் பிரகாஷ் சிங், பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் சுக்தியோ தோரத், புகழ் பெற்ற மனித உரிமைப் போராளி பாலகோபால் மற்றும் பலர் இக்குழுவில் பணியாற்றினர். இவர்கள் அளித்துள்ள பரிந்துரைகளின் சுருக்கம் ஏப்பரல் 28 ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளிதழில் வெளிவந்துள்ளது. பழங்குடியினரின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது, குறிப்பாக அவர்கள் குடியிருக்கும் இடமே அவர்களுக்குச் சொந்தமில்லாத நிலை… இவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு உரிய வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படாமல் வெறும் சட்டம் – ஒழுங்குப் பிரச்சனையாகவே அணுகி நக்சல் பிரச்சனையைத் தீர்த்துவிட முடியாது என அக்குழு அறிவுறுத்தியுள்ளது. கருணாநிதியும் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.