பீமா கொரெகான் எழுச்சியைக் கண்டு மோடி அரசு அஞ்சுவது ஏன்?

கடந்த நான்கு நாட்களில் வெளியான இரண்டு செய்திகள் நம்மை அதிர்ச்சி அடைய வைத்தன. ஒன்று சென்ற ஜனவரியில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பீமா கொரேகானில் நடைபெற்ற கலவரத்திற்கு மாஓயிஸ்டுகள்தான் காரணம் என சமூகப் போராளிகள் ஐவர் கொடும் UAPA சட்டத்தில் கைது செய்யப்பட்ட செய்தி. அந்த ஐவரில் ஒருவர் பிரதமர் மோடியைக் கொலை செய்யும் முயற்சி ஒன்றுடன் தொடர்புடையவர் என்றும் சொல்லப்பட்டது. மற்றொன்று குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி கூறிய ஒரு குற்றச்சாட்டு ஆதாரமற்றது என அரசே ஒத்துக் கொண்டுள்ள செய்தி. மோடி முன்வைத்த குற்றச்சாட்டு மிகக் கடுமையானது. குஜராத் தேர்தலில் பா.ஜ.கவைத் தோற்கடிக்க பிரதமர் மன்மோகன்சிங்கும் காங்கிரஸ்காரர்களும் பாகிஸ்தானுடன் சேர்ந்து சதி செய்கிறார்கள் என்பதுதான் அது. தேர்தல் பிரச்சாரத்திற்காக இப்படியெல்லாம் பொய் சொல்வது எங்கு கொண்டுபோய் விடும்?.

மாஓயிஸ்டுகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு ஐவர் கைதாகி இருப்பது குறித்த செய்தியும் இப்படித் தேர்தலுக்காக அவிழ்த்து விடப்பட்ட பொய்தானா இல்லை அதில் ஏதும் உண்மை உள்ளதா என்பதைச் சற்று விரிவாக அலசுவோம். பீமா கொரேகான் வன்முறைக்குக் காரணம் இந்த ஐவர் என்கிறார்கள். அதென்ன பீமா கொரெகான்?
1818 ஜனவரி 1 அன்று மகாராஷ்டிரத்தில் உள்ள ‘கொரேகான் பீமா’ என்னுமிடத்தில் 824 வீரர்களைக் கொண்ட மகர் தலித் படையின் உதவியுடன் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி பேஷ்வா இரண்டாம் பாஜிராவின் படைகளை வென்றது. பாஜிராவின் படையில் அப்போது 28,000 மராத்தா வீரர்கள் இருந்தனர். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நிறுவப்பட்ட வரலாற்றில் இது ஒரு முக்கிய புள்ளி என்பது மட்டுமல்ல தலித் வீரத்தின் ஒரு அழியாத சான்றாகவும் இது அமைந்தது.. உயர் சாதி பேஷ்வா ஆட்சி என்பது பெரிய அளவில் வருணாசிரமம், தீண்டாமை ஆகியவற்றைப் பேணும் ஒன்றாக இருந்து வந்தது. தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் இடுப்பில் விளக்குமாறைக் கட்டிக் கொண்டுதான் நடந்து செல்ல வேண்டும் என்கிற அளவிற்கு நிலைமை இருந்தது. தலித்கள் இந்தக் கொடுமைகளிலிருந்து விடுபடுவதற்கும் அந்த வெற்றி ஒரு தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

இந்த வரலாறு இன்றைய ஆட்சியாளர்களுக்குப் .பிடிக்காத ஒன்று என்பதை விளக்க வேண்டியதில்லை. எனினும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இப்படியான தலித் மக்களின் வீரம் செறிந்த வரலாற்றை மீளுருவாக்கம் செய்ய வேண்டும் என்கிற நோக்கில் 1927 முதல் ஒவ்வொரு ஜனவரி முதல் தேதி அன்றும் தலித் உணர்வாளர்கள் கொரேகான் பீமாவில் கூடி உறுதி மேற்கொள்வது என்பதைத் தொடங்கி வைத்தார்.

இந்த வரலாற்று நிகழ்வின் இருநூறாண்டு நிறைவு சென்ற ஜன 1, 2018 அன்று அமைந்ததை ஒட்டி பல்வேறு தலித் அமைப்புகளும் இணைந்து அதைக் கொண்டாடுவதென முடிவெடுத்தன. முதல் நாள் (டிசம்பர் 31, 2017) அன்று அம்பேத்கர் அமைப்புகள் பலவும் புனேயில் உள்ள ஷானிவர்வதா எனும் இடத்தில் கூடி, “நவீன பேஷ்வாவிய ஒழிப்புப் பிரகடனம்” எனும் ஒரு ஒன்றுகூடலைச் செய்தனர். அதற்குப் ‘பிரகடனக் கூடல்’ (எல்கார் பரிஷத்) எனப் பெயரும் இட்டனர்.

புதிய தலித் எழுச்சியின் சின்னமாக இன்று உருப்பெற்றுள்ள ஜிக்னேஷ் மேவானி, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகப் (JNU) போராட்டத்தில் கைது செய்யப்பட்டுச் சிறை ஏகியவர்களில் ஒருவரான உமர் காலித், ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் போராடி உயிர் நீத்த ரோஹித் வெமுலாவின் அன்னை ராதிகா வெமுலா எனப் பலரும் அதில் பங்கு பெற்றனர். தலித்கள், சிறுபான்மையினர், இதர பிற்பத்தப்பட்டோர், இடதுசாரிகள் ஆகியோரின் ஒன்றிணைவாக அது அமைந்தது. இந்த ஒற்றுமையை ஆதிக்கத்தில் உள்ளோர் ஆத்திரத்துடன் நோக்கினர்.

அடுத்த நாள் (ஜன 1, 2018) பேஷ்வாக்கள் ஒழிக்கப்பட்ட 200ம் ஆண்டு வெற்றிக் கொண்டாட்டத்திற்காகப் பெருந்திரளாக பீமா கொரேகானில் மக்கள் கூடியிருந்தபோது ஒரு கும்பல் திரண்டு வந்து அதைத் தாக்கியது. ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான .மனோகர் பிதே என்பவரின் ‘சிரீ சிவ பிரதிஸ்தான் இந்துஸ்தான்’ எனும் அமைப்பினரும், பா.ஜ.க வின் முன்னாள் மாநகராட்சி உறுப்பினர் மிலிந்த் ஏக்போட் என்பவரின் ‘சமஸ்த் இந்து ஆகாடி’ எனும் அமைப்பினரும்தான் அந்தத் தாக்குதலைச் செய்தனர் என எல்கார் பரிசத் அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். இரு தரப்புக்கும் இடையேயான கல்லெறி வீச்சில் அவ்வழியே சென்ற 28 வயது இளைஞர் ஒருவர் இறந்தார்.

2014 தேர்தலின்போது நரேந்திர மோடி மனோகர் பிதேயைச் சந்தித்து “குருஜி” என விளித்ததை இன்று ஊடகங்கள் நினைவூட்டுகின்றன. இந்தக் கலவரத்திற்குக் காரணமானவர் என இன்று தலித் மக்களால் குற்றம் சாட்டப்படுகிற மனோகர் பிதேயின் மீது இப்போது எந்த நடவடிக்கையும் இல்லை. முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அவரைக் குற்றமற்றவர் என அறிவித்தார். கலவரத்திற்குக் காரணமான இன்னொருவரான மிலிந்த் ஏக்போடே கைது செய்யப்பட்டாலும் விரைவில் அவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

பீமா கரேகான் வன்முறைகளுக்கு ஆர்.எஸ்.எஸ் காரணம் இல்லை எனவும் குறிப்பாக மனோகர் பிதேக்கும் கலவரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் பா.ஜ.க தரப்பில் சொல்லப்படுகிறது. தலித்கள்தான் காரணம் எனச் சொல்ல இயலாதாகையால் தலித்கள் மத்தியில் மாஓயிஸ்டுகள் ஊடுருவி விட்டனர் என இன்று பா.ஜ.க அரசு சொல்கிறது.. ஆனால் பா.ஜ.கவின் கூட்டணியில் உள்ளவரும் தேவேந்திர பட்நாவிஸ் அமைச்சரவையில் முத்த அமைச்சராக உள்ளவருமான தலித் தலைவர் ராம்தாஸ் அதாவலே இதை மறுக்கிறார். மனோகர் பிதேதான் கலவரங்களுக்குக் காரணம் எனவும் எல்கார் பரிஷத்தில் மாஓயிஸ்டுகள் ஊடுருவிவிட்டதாகச் சொல்வது பொய் எனவும் அதாவலே கூறுகிறார். இதைச் சுட்டிக் காட்டி, “அமைச்சரவைக்குள் ஏன் இந்த முரண், எது உண்மை?” என இன்று காங்கிரஸ் கேட்கிறது. பா.ஜ.க மௌனம் காக்கிறது.

இந்தப் பின்னணியில்தான் இன்று டெல்லி, மும்பை, நாக்பூர் முதலான இடங்களில் ஐந்து பேர்களை மாஓயிஸ்டுகள் எனவும் அவர்களே பீமா கரேகான் கலவரங்களுக்குக் காரணம் எனவும் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவரான ரோனா வில்சன் டெல்லியில் தங்கியுள்ள வீட்டைச் சோதனை இட்டபோது அவரது லேப்டாப்பில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்லும் ஒரு சதித் திட்டம் தொடர்பான கடிதம் ஒன்று சிக்கியுள்ளதாகவும் ஒரு பரபரப்புச் செய்தியும் கூடவே வெளியிடப்பட்டுள்ளது., ராஜீவ் காந்தியைக் கொன்றது போல மோடியையும் கொல்வது என்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளதாம்.

இன்று நாடெங்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்செய்தியை நம்புவதில் பல பிரச்சினைகள் உள்ளன. ஏனெனில் இன்று பீமா கரேகான் கலவரங்களுக்குக் காரணமானவர்கள் எனச் சுட்டிக்காட்டப்படும் ஐவரும் மிக வெளிப்படையாக இயங்கியவர்கள். கேரளத்தைச் சேர்ந்த ரொனா வில்சன் டெல்லி JNUவில் ஆய்வை முடித்துவிட்டு வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றிற்கு விண்ணப்பித்துக் காத்திருப்பவர். இவர் பீமா கொரேகானுக்குப் போனதுகூட இல்லை. ‘அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான இயக்கம்’ என்கிற அமைப்பில் இயங்கிக் கொண்டிருந்தவர். நான் அவரை அறிவேன். மிகவும் மென்மையான மனிதர். இவ்வளவு படித்த ஒருவர் ஒரு பிரதமரைக் கொல்வது தொடர்பான சதித் திட்டத்தில் உண்மையிலேயே தொடர்புடையவராக இருக்கும் பட்சத்தில், அக்கடிதத்தை இப்படி அலட்சியமாகத் தன் லேப் டாப்பில் வைத்திருப்பார? இன்று எவ்வளவோ நவீனத் தொடர்பு வசதிகள் இருந்தும் ஒரு இயக்கம் இவ்வளவு முட்டாள்தனமாகவா ஒரு கடிதத்தை அனுப்பும் என்கிற கேள்விக்கெல்லாம் பதில் இல்லை.

மாஓயிஸ்ட் எனக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ள இன்னொருவர் மஹேஷ் ராவ்த் : மும்பையில் உள்ள ‘சமூக அறிவியல்களுக்கான டாடா நிறுவனத்தில் (TISS) பயின்றவர். ‘பிரதமரின் கிராமப்புற வளர்ச்சிக்கான ஆய்வாளராக’ (PMRD) கட்சிரோலி பகுதியில் இருந்து செயல்பட்டவர். அரசு அல்லது கார்பொரேட் நடவடிக்கைகளால் இடப்பெயர்வுகளுக்கு ஆளான பரிதாபத்திற்குரிய மக்களுக்காகப் போராடும் அமைப்பின் பொறுப்பாளர்களில் ஒருவர். இவருக்கும் பீமாகொரேகான் நிகழ்வுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

கைது செய்யப்பட்ட இன்னொருவரான ஷோமா சென், நாக்பூர் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியை. பல்வேறு பெண்கள் அமைப்புகளில் இருந்து செயல்படுபவர். ‘ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு’ (CPDR) எனும் முக்கிய மனித உரிமை அமைப்பில் இருந்து செயல்படுபவர். ஒரு மார்க்சியச் சிந்தனையாளர் என்ற போதிலும் ஒரு ஆய்வாளர் என்கிற வகையில் மாஒயிஸ்டுகள் குறித்த விமர்சனங்களும் அவருக்கு உண்டு என்கிறார் அவரது மகள் கோயல். கைதாகியுள்ள வழக்குரைஞர் சுரேந்திர காட்லிங் ‘இந்திய மக்கள் வழக்குரைஞர் சங்கம்’ ( IAPL) எனும் அமைப்பில் உள்ளவர். மாஓயிஸ்ட் என இப்போது தண்டிக்கப்பட்டுள்ள பேராசிரியர் சாய்பாபாவின் வழக்கை நடத்திக் கொண்டுள்ளதுதான் இவர் செய்த குற்றம்.

கைது செய்யப்பட்டுள்ள சுதிர் தவாலே புனேயைச் சேர்ந்த கவிஞர். ‘விக்ரோதி’ என்கிற மராத்திய இதழ் ஒன்றின் ஆசிரியர். இவர் சில ஆண்டுகளுக்கு முன் மாஓஇஸ்ட் எனக் கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகாலம் சிறையில் இருந்தவர். இவர்கள் சார்ந்துள்ள இயக்கங்கள் எல்லாமே மாஓயிஸ்ட் இயக்கங்கள் என அரசு சொல்கிறது. மாஒயிசச் சார்பு அவற்றில் சிலவற்றிற்கு இருக்கிறது என வைத்துக் கொண்டாலும் இவர்கள் அனைவரும் வெளிப்படையாக இயங்கியவர்கள். வன்முறை நடவடிக்கைகளிலோ ஆயுதப் போராட்டங்களிலோ ஈடுபட்டவர்கள் அல்ல. பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்கள்.

இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை இன்று ஆனந்த் டெல்டும்டே, அம்பேத்கரின் பேரர் பிரகாஷ் அம்பேத்கர், ஜிக்னேஷ் மேவானி முதலான தலித் தலைவர்கள் கண்டித்துள்ளனர். உருவாகிவரும் தலித் + இதர பிற்படுத்தப்பட்டோர் + சிறுபான்மையினர் + இடதுசாரிகள் எனும் ஒற்றுமையை எப்படியாவது சிதைக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காகவும், பீமா கொரேகான் கலவரம் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள படேல் கமிஷனின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவுமே இந்தக் கைது நாடகம் நடத்தப்படுகிறது என இவர்கள் ஒருமித்த குரலில் கூறுகின்றனர். காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி முதலானவையும் இக் கைதுகளைக் கண்டித்துள்ளன. காங்கிரஸ் ஒரு படி மேலே சென்று மோடியைக் கொல்வது தொடர்பாகக் கண்டெடுக்கப்பட்ட கடிதமே போலியாக இருக்கலாம் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது.

இடைத் தேர்தல்களில் பா.ஜ.க தோற்றுக் கொண்டுள்ள நிலையில் இப்படி மோடியின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகக் கதை கட்டி அனுதாப அலையை உருவாக்கும் முயற்சி இது எனவும் காங்கிரஸ் சொல்லியுள்ளது. 2002 குஜராத் படுகொலைகளுக்குப் பின் மோடியின் பிம்பம் கொஞ்சம் குலைந்தபோது 2003 -2007 காலகட்டத்தில் இதேபோல மோடியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகப் பெரிய அளவில் செய்திகள் பரப்பியதையும், கொல்ல வந்தவர்கள் எனச் சொல்லிப் பல என்கவுன்டர் கொலைகள் செய்யப்பட்டதையும், பின்னர் அவை போலி என்கவுன்டர்கள் எனப் பல ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதையும் அவ்வளவு எளிதாக மறந்துவிட இயலாது. “மோடி வகுத்தளித்த கொள்கையின்படியே இந்த என்கவுன்டர்கள் நடத்தப்பட்டன” எனச் சிறையிலிருந்த ஐ.பி.எஸ் அதிகாரி டி..ஜி.வன்சாரா எழுதிய கடிதத்தையும் மறந்து விட இயலாது.

2014 நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி 2003 ஏப்ரல் தொடங்கி 2014 ஏப்ரலுக்குள் மோடியைக் கொல்வதற்கு ஐந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகச் செய்திகள் வெளியிடப்பட்டதையும் சமூக ஊடகங்கள் சுட்டிக் காட்டி உள்ளன.

பிரதமரின் உயிருக்கு ஆபத்து என்றால் பாதுகாப்பை இன்னும் மேம்படுத்தட்டும். இப்படி மக்கள் பணி செய்யும் பேராசிரியர்கள், கவிஞர்கள், மனித உரிமைப் போராளிகளை எல்லாம் அப்படிப் பொய்க் குற்றம்சாட்டிக் கைது செய்வதும், ஒருவரது வீட்டில் கார்ல் மார்க்ஸ் எழுதிய நூல் ஒன்று இருந்தாலே அவர் ஒரு மாஓயிஸ்ட் தீவிரவாதி எனச் சொல்லி UAPA முதலான கொடுஞ் சட்டத்தின் கீழ்ச் சிறையில் அடைப்பதையும் ஏற்க முடியாது.

நாடு ஒரு மிகப்பெரிய நெருக்கடியை நோக்கிச் செல்வதைத்தான் இவை அனைத்தும் காட்டுகின்றன.