நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 24 அ.மார்க்ஸ்
கலங்கி நின்ற புண்ணியராசனிடம், “கலக்கம் கொள்ளாதே ! உன் நாட்டு மக்கள் உன் வருகையை எதிர்பார்த்து நிற்கின்றனர். அங்கு செல். நான் வஞ்சி செல்கிறேன்” எனக் கூறியவாறு தன் கணவன் மீது தணியாத காதல் கொண்ட கண்ணகியும் தன்னைப் பெற்றவனும் கொடைப் பண்பு மிக்கவனுமான கோவலனும் தெய்வமாக எழுதப்பட்டிருந்த படிமத்தைக் காணும் ஆர்வத்தோடு வானில் எழுந்த மணிமேகலை வஞ்சி நோக்கிப் பறந்தாள்.
சேர மன்னன் எழுப்பிய அந்தக் கோவிலில் நுழைந்து அவர்களை வணங்கி நின்றாள். அவர்களின் பெருமைக்குரிய குணங்களை எல்லாம் சொல்லிப் போற்றி அன்னையை நோக்கி, “அன்பின் அடிப்படையிலான கடமையிலும் நில்லாமல், நற்தவ நெறியையும் மேற்கொள்ளாமல். கற்புக்கடன் நின்று உம் கடமையை முடித்தீர்கள். அது ஏன் என விளக்கி அருளல் வேண்டும்” எனக்கூறிக் கண்கலங்கினாள்.
இந்தத் தொடரில் முன்னொரு இடத்தில் சமணம் போலப் பத்தினி வழிபாட்டிற்கு பவுத்தத்தில் முக்கியத்துவம் இல்லை என்றாலும் மணிமேகலைக் காப்பியம் பத்தினி வழிபாட்டையும் ஏற்பது ஒரு சிறு முரண் என்பதுபோலக் குறிப்பிட்டிருப்பேன். அதற்கு இந்தக் கேள்வியிலேயே விடை அமைகிறது. கணவன் அநீதியாகக் கொல்லப்பட்டதை அறிந்த கண்ணகி ஆத்திரம் கொண்டு மாதுரை மாநகரை அழித்ததை, அவள் தன் கற்பிற்கு உண்மையாக இருந்து செய்த கடன் எனக் கூறும் மணிமேகலை, கணவன் மீது கொண்ட அன்பைப் பெரிதாகக் கொண்டிருந்தால் அவர் கொல்லப்பட்ட கணமே தானும் உயிர் விட்டிருக்க வேண்டும். நற் தவநெறியின்பால் நின்றிருந்தால் கைம்மை நோன்பு மேற்கொண்டு தன்னை வருத்திக் கொண்டோ இல்லை தன் அன்னை மாதவி போலத் துறவற வாழ்வைத் தேர்ந்தோ இருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் வெஞ்சினம் கொண்டு மதுரை நகரையும் மக்களையும் தீக்கிறையாக்கியது, இவ்விரண்டையும் காட்டிலும் தன் கற்புக் கடனையே கண்னகி முன்னிறுத்தினாள் என்பதுதானே. இது ஏன் என்பது மணிமேகலையின் கேள்வி. இது இங்கு ஒரு தெளிவு பெறும் நோக்கில் மட்டும் முன்வைக்கப்பட்ட கேள்வி அல்ல. மாறாக முன்னிரண்டு செயல்களைக் காட்டிலும் இது ஏற்புடையது அல்ல என கண்ணகிக்குச் சுட்டிக்காட்டும் முகமாக இக் கேள்வி இங்கே முன் வைக்கப்படுகிறது. இதன் ஊடாக கற்பின் வலிமையைக் கொண்டு கண்ணகி மதுரையை எரித்த செயல் ஒரு வகையில் கண்டிக்கப் படுவது இங்கே கவனிக்கத் தக்கது. அதோடு அச்செயலைக் கொண்டாடும் பத்தினி வழிபாட்டிற்கும் மணிமேகலை ஒப்புதல் அளிக்காததும் வெளிப்படுகிறது.
இப்படியான ஒரு கேள்வியை முன்வைத்து கண்ணீர் மல்க நிற்கும் மகளைச் சமாதானம் செய்ய வேண்டிய நிலை பத்தினிக் கடவுளாய் வடிக்கப்பட்டு நிற்கும் கண்ணகிக்கு ஏற்படுகிறது.
“என் தலைவனுக்கு நேர்ந்த துன்பத்தைப் பொறாது எழுந்த வெஞ்சினத்தால் மதுரை அழல் பட்டு அழிய நேர்ந்த அந்நாளில் அந்நகரைக் காக்கும் பெருந் தெய்வமாகிய மதுராபதி என் முன் தோன்றியது. கோவலன் இவ்வாறு கொல்லப்பட்டது நீங்கள் முற்பிறவியில் செய்த (தீ)வினையின் பயனாய் விளைந்தது என அத் தெய்வம் அந்த வரலாற்றைக் கூறியது.
“அழகொளிரும் மலர்வனங்கள் நிறைந்த கலிங்க நாட்டில் சிங்கபுரத்தை மையமாகக் கொண்டு ஆண்டு வந்த வசுவும், கபிலபுரத்திலிருந்து ஆண்டு கொண்டிருந்த குமரனும் பகைகொண்டு கடும் போரிட்டுக் கொண்டிருந்த காலத்தில் இடைப்பட்ட ஆறு காத தூரத்திற்குள் யாரும் நுழைய இயலாத ஒரு நிலை இருந்தது.
“அப்போது ஏராளமான விலை உயர்ந்த ஆபரணங்களை அள்ளிக் கொண்டு யாரும் அறியாமல், ஒளிவீசும் வளையணிந்த தன் மனைவியோடு சுங்கபுரத்தை வந்தடைந்தான் சங்கமன் என்பவன். ஆபரணங்களை விற்றுப் பொருள் சேர்ப்பது அவன் நோக்கம். அந்தச் செய்தி அரசுப் பணியில் இருந்த பரதனுக்கு வந்து சேர்கிறது. அந்தத் தீயவன் வேறு யாருமல்ல. கோவலனின் முற்பிறவி அவன். ஓடிச் சென்று தன் அரச்னிடம் சங்கமனைப் பற்றி அவனமொரு ஒற்றன் எனச் சொல்லி அவனைக் கொலைத் தண்டனைக்கு ஆளாக்கினான்.
“அவன் மனைவி அழுது அரற்றிய வண்ணம் ஒரு மலைமேல் ஏறித் தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் நேரத்தில் இட்ட சாபத்தின் விளைவுதான் இப்பிறவியில் கோவலன் இப்படிச்சாக நேரிட்டது. முற்பிறவி வினை வந்து உருத்தாது ஒழியாது” – என மதுராபதித் தெய்வம் உரைத்த வரலாற்றை விரிவாக மகளுக்கு உரைத்த கண்ணகி, தொடர்ந்து,
“உன் தந்தை அநீதியாய்க் கொல்லப்பட்ட ஆத்திரத்தில் சீற்றம் கொண்டேன். செழுநகர் சிதைத்தேன். முற்காலத்தில் செய்த நல்வினையின் பயனாய் இன்று நாங்கள் வானவர் உலகத்தில் இடம் பெற்றோம். இந்த நல்வினைப் பயன் முடியும்போது எந்த வகையிலேனும் (மதுரையை எரித்த) இந்த ஆத்திரத்தால் விளைந்த பாவம் எம்மை அடையாமல் போகாது. மேலுலகில் இல்லாது போனாலும் இவ்வுலகிலேயே பல பிறவிகள் எடுத்து, எல்லாப் பிறவிகளிலும் வினைப் பயன்களை அனுபவித்து, உங்களைப் போலவே அகல்வதற்கு அரிதான இப்பிறவிப் பெருங் கடல் நீந்திப் பிறந்தும், இறந்தும் நாங்களும் உழல்வோம்.”- என்றனள் கண்ணகி. இக் கூற்று கூர்ந்து ஆராயத் தக்கது.
கணவனின் இறப்புக்காக மதுரை எரிக்கப்பட்டது எவ்வகையிலும் பெருமைக்குரிய ஒன்றல்ல. அது ஒரு பாவச் செயல். அதற்கான வினைப்பயனைக் கண்ணகி அனுபவித்துத்தான் ஆக வேண்டும். வினைப்பயனிலிருந்து யாரும் தப்ப இயலாது.. கண்ணகிக்குக் கோவில் எடுத்துவிடுவதால் மட்டும் அவள் தெய்வமாகிவிட முடியாது எனப் பல விடயங்களைக் இக்காதை மூலம் ஆணி அடித்தது போலச் சொல்லி விடுகிறார் சாத்தனார்.
அதற்காகவே இந்தக் காதை காப்பியத்தில் இடம் பிடிக்கிறது எனச் சொன்னாலும் அது தகும். ஆக பௌத்தக் காப்பியமான மணிமேகலை புத்த நெறிக்குப் பொருந்தாத பத்தினி வழிபாட்டிற்கு ஏற்பு வழங்குவதாகச் சொல்வதை நாம் அப்படியே ஏற்க இயலாது.
கண்ணகிக மகளிடம் உரைப்பன இத்தோடு முடிவதில்லை. அது மேலும் தொடர்கிறது:
“மறந்தும் மழை பொய்க்காத மகத நந்நாட்டின் நெற்றித் திலகம்போல விளங்கும் அழகிய கபிலவஸ்து நகரில், (பவுத்தம் கூறுகிற) பத்து வகையான ‘பாரமிதை’ ஒழுக்கங்களையும் அளவற்றதாகத் தன்னிடத்தே நிறைத்துக் கொண்டுள்ள புத்த ஞாயிறு எழும். அது போதி மரத்தடியில் எழுந்தருளி தீதற்ற ‘நால்வகை உண்மைகளையும்’ தெளிந்து, ‘பன்னிரு சார்புகளின்’ பகுதித் தோற்றத்தையும், அவை அழிவுறும் வகையையும் எடுத்து விளக்கி, பல்வேறு குற்றங்களிலிருந்தும் நீங்கி எண்ணற்ற அரிய உலகங்கள் எல்லாவற்றிலும் அறக் கதிர்களை அந்தப் புத்த ஞாயிறு விரிக்கும்.
“அப்போது, உன் தந்தையும் நானும் புத்தபகவனின் இந்திரவிகாரம் ஏழையும் வணங்கி, துன்பப் பிறவிகளிலிருந்து தப்பி, அன்புள்ளத்தோடு அவனது அறவுரைகளைக் கேட்டு, துறவு மனம் கூடி, இனிப் பிறவி எடுக்காத பேறு பெறுவோம். அவ்வாறு இறுதியில் பேறு பெறுவோம் என்றாலும் அநேக காலம் எல்லோருக்கும் ‘இருத்தியும்’ செய்து வருவோம்.
“மணம் கமழும் கூந்தல் உடைய நங்கையே! நீயும் இந்தப் பழம்பெரும் நகரினுள் (வஞ்சி) சென்று அவரவர் சமயக் கருத்துக்களை எல்லாம் கேட்கும்போது, அவை அனைத்தும் மெய்த்திறம் அற்றவையாய் உள்ளதை நீயே விளங்கியபின் பெரியவனின் திரிபிடக நெறியிலிருந்து பிறழாதவளாய் உருவாகுவை. இனி நிகழ்வன இவையே” என்றனள் அன்னை.
தொடர்ந்து மகளுக்கு எப்படிப் பிற சமயத்தவர்களை அணுகுவது என்றும் அறுவுரைத்தாள் கண்ணகி
“வயதிற் சிறியள். வளையணிந்த பெண் என எண்ணி யாருன் உனக்குத் தத்தம் மறை பொருளைக் கூறாமல் போவார்கள். எனவே வேற்றுருக் கொண்டு அவர்களை அணுகுவாய்” என்று முடித்தாள்.
முன்னர் தெய்வம் தனக்குச் சொல்லியிருந்த மந்திரத்தை ஓதி மணிமேகலை ஒரு பெரும் தவமுனிவரின் வடிவை அடைந்தாள். ஆலயங்கள், வேதிகைகள், பள்ளிகள், மலர்ப் பொழில்கள், பொய்கைகள் எனத் தவ முனிவர்களும், கற்றடங்கிய சான்றோரும், நூற்பயிற்சி மிக்க அறிஞர்களும் எங்கும் காணப்படும் நகரக் கோட்டை மதிலின் புறத்தே உள்ள இருக்கையை அடைந்தாள்.
சாத்தனார் இப்பகுதியில் கண்ணகியை ஒரு பௌத்தப் பிரச்சாரகராகவே மாற்றிவிடுவதைக் காண்கிறோம். சமணம் உட்பட அனைத்து வைதீக, அவைதீக மதச் சித்தாந்தங்கள் அனைத்திலும் பௌத்தமே உயர்ந்தது என்கிற கருத்தை ஆணித்தரமாக முன்வைப்பவளாக கண்ணகியை அவர் இங்கு முன்னிறுத்துகிறார்.
இப் பகுதியில் நாம் “பத்துவிதமான பாரமிதை”, “நால்வகை உண்மைகள்”, “பன்னிரு சார்புகள்”, “இருத்தி” முதலான கருத்தாக்கங்களைக் கண்டோம். இவை மிகவும் ஆழமான பௌத்த தத்துவ அடிப்படைகள். இவற்றைக் கூடியவரை எளிமையாகப் புரிந்து கொள்ள முயற்சிப்போம். இனி உள்ள நான்கு அத்தியாயங்களும்கூட இத்தகைய பௌத்த தத்துவ நெறிகளைச் சொல்பவையாகவும், அவை எவ்வாறு பிற சமயக் கருத்துக்களிலிருந்து வேறுபட்டு உயர்ந்துள்ளன என நிறுவும் வகையாகவும் அமையும். அவற்றையும் புரிந்துகொள்ள முயற்சிப்போம்.
பாரமிதை: புத்த ஞாயிறு “பத்து வகையான ‘பாரமிதை’ களையும் தன்னிடத்தே நிறைத்துக் கொண்டுள்ளது” எனும் கூற்றை எடுத்துக்கொள்வோம். இங்கே ‘பாரமிதை’ எனத் தமிழ் வழக்கு மரபில் முன்வைக்கப்படும் கருத்தாக்கம் சமஸ்கிருதத்தில் ‘பாரமிதா’ எனவும், பாலியில் ‘பாரமி’ எனவும் குறிப்பிடப்படும். ‘நிறைவான’, ‘குறைகளற்ற’ ‘முழுமையான’ எனப் பொருள்படும் (perfection / completeness) சொல் இது. முதன்மையான, ஆக உயர்ந்த, தலையாய என்றெல்லாம் பொருள்படும் “பரம” எனும் வேர்ச்சொல்லிலிருந்து இது உருவாகிறது.
பாலி பௌத்த நூல்கள் பத்து வகையான ‘பாரமி’களை (முழுமைகளை) பட்டியலிடுகின்றன. அவை முறையே சமஸ்கிருதத்தில் ”தானம், சீலம், நிஷ்காம்யம், பிரக்ஞை, வீரியம், சாந்தி, சத்யம், அதிர்ஷ்டானம், மைத்ரி, உபேட்சை’ எனக் கூறுவர்.
தமிழில் இவற்றை – ஈகை, ஒழுக்கம், ஈகம், மெய்யறிவு, முயற்சி, பொறை, வாய்மை, வலிமை, கருணை, சமநிலை – எனலாம்.
புத்த பகவன் தனது பல்வேறு பிறப்புகளில் எவ்வாறு இந்தப் பாரமிதைகளை நிறைவேற்றினார் என்பதைச் சொல்லும் முகமாகவே புத்த ஜாதகக் கதைகள் உருவாயின என்பர்.
நால்வகை வாய்மைகள்: துக்கம் (துயரம்), துக்கத்தின் தோற்றம், துக்க நீக்கம், துக்க நீக்க நெறி – ஆகியன. 1.எல்லா இருப்புகளின் நிபந்தனையாகவும் துக்கமே உள்ளது. 2.துக்கம் என்பது அதிருப்தி அல்லது திருப்தி அடையாமையின் விளைவு. 3. ஆசை அல்லது பற்று என்கிற தன்மயமான நோக்கு முயற்சியால் நீக்கப்படக் கூடியனவே. 4. மனம், வாக்கு, காயம் ஆகியவற்றின் அடிப்படையிலான ‘எண்வழிப் பாதை’யின் (அஷ்டாங்க மார்க்கம்) ஊடாக ஒருவர் துக்கத்திலிருந்து விடுபட முடியும்.
இவ்வாறு இருப்பின் நிபந்தனையாகத் துக்கம் உள்ளது எனச் சொல்வதோடு நிற்காமல் அதிலிருந்து விடுபடும் வழியையும் பௌத்தம் சொல்கிறது. அந்த வழி பக்தி மார்க்கமோ அல்லது புனிதத் தலங்களுக்குச் சென்று வணங்குவதோ, நீராடுவதோ அல்ல. மாறாக மனம், வாக்கு, காயத்தின் ஊடான அற வாழ்வு மற்றும் அறச் செயல்களின் ஊடாகவே அது சாத்தியம். ஆக பக்தியின் இடத்தில் அறத்தை நிறுத்துகிறது பௌத்தம் (விரிவுக்குப் பார்க்க : அ.மார்க்ஸ், புத்தம் சரணம், அடையாளம் வெளியீடு).
பன்னிரு சார்புகள்: பேதமை, செய்கை, உணர்வு, அரூரு, வாயில், ஊரு, நுகர்வு, வேட்கை, பற்று, பவம், தோற்றம், வினைப்பயன் – ஆகியன. இவற்றை ‘பன்னிரு நிதானங்கள்’ எனவும் கூறுவர். பவுத்தம் கடவுளை ஏற்பதில்லை. கடவுள்தான் உலகைத் தோற்றுவித்தார் என நம்புவதும் இல்லை. உலகம் இருந்தது என்பதோடு சரி. பிற மதங்களைப்போல இயற்கை அதீதக் கற்பனைகள் எதையும் அது ஏற்பதில்லை. எனவே பிற மதங்களைப் போல அது உலகின் தோற்றத்தை விளக்க இயற்கைக்கும் அறிவுக்கும் பொருந்தாக் கற்பனைக் கதைகள் எதையும் சார்ந்திருப்பதில்லை. விதையா இல்லை செடியா எது முந்தியது என்பது போன்ற பொருளற்ற வெட்டிக் கேள்விகளை அது ஒதுக்கும். எதையும் தன்னளவில் உண்டு அல்லது இல்லை என அது நம்புவதில்லை. மாறாக அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்தே உள்ளன. சார்பின் ஊடாகவே அவை இருக்கின்றன. இதை பௌத்தம் “பிரதித்ய சமுத்பாதம்” எனக் கூறுகிறது. Dependant Origination என ஆங்கிலத்திலும் “சார்புத் தோற்றக் கொள்கை” எனத் தமிழிலும் கூறப்படுகிறது.
ஒன்று தோன்ற இன்னொன்று காரணமாக உள்ளது என்கிறபோது அங்கு கடவுள் தேவையற்றவர் ஆகிறார். விளக்குச் சுடர் போலவும், ஓடும் நீர்போலவும் அனைத்தும் தொடர்ந்து கொண்டுள்ளன என பவுத்தம் கூறுகிறது. ஓடும் நீரில் எந்த ஒரு கணத்திலும் உள்ள நீர் அடுத்த கணத்தில் இருப்பதில்லை. ஆனாலும் தொடர்ந்து நீரோடிக் கொண்டுள்ளது.
இந்தச் சார்புகள் அல்லது நிதானங்களில் இருந்து விடுதலை பெறுவதையே பௌத்தம் ‘நிப்பானம்’ அல்லது ‘நிர்வாணம்’ என்கிறது.
இருத்தி பாதங்கள்: சிரத்தை, வீரியம், சித்தம், மீமாம்சம் – என்கிற இந்த நான்கு ஆற்றல்களையும் கைவரப் பெற்றவர்கள் விரும்பினால் உலகில் கல்ப காலம் வாழ முடியும் என்பர். இதில் சிரத்தை என்பது இலக்கை நோக்கிய தீவிர முனைப்பு; வீரியம் என்பது தொடர்ந்த இடையற்ற முயற்சி; சித்தம் என்பது தீயவைகளை நீக்கிய பரிசுத்த நினைப்பு அல்லது சிந்தை; மீமாம்சம் என்பது ஒருவர் தமது முனைப்பும் முடிவும் சரிதானா எனப் பகுத்தறிந்து ஆய்வுக்குட்படுத்துவது.
(அடுத்து வஞ்சி சென்று ஆங்குள்ள பல்சமய அறிஞர்களிடம் மணிமேகலை அளவளாவி அவர்தம் கருத்துக்களைத் தொகுத்துக் கொள்ளல்)