ஒரேநாடு ஒரே ரேஷன் கார்டு

அதிகாரங்களை மையப்படுத்தும் முயற்சிகள் இங்கு நடக்காது

மோடி அரசு தனது “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டத்தை நிறைவேற்ற ஓராண்டு காலகெடு நிர்ணயித்துள்ளது. . இதன் மூலம் இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள எந்த ஒரு ரேஷன் கடையிலும் நமது ரேஷன் அட்டையைக் காட்டிப் பொருள்களை வாங்கிக் கொள்ள முடியுமாம். மாநிலங்களின் கருத்துக்கள் எதையும் கேட்காமல் கட்டாயமாக நிறைவேற்ற ஆணையிடப் பட்டுள்ளது.. அது மட்டுமல்ல ‘பி.ஓ.எஸ்’ கருவியின் மூலம் ரேஷன் வாங்க வருபவரின் விரல் ரேகையை ஆதார் அட்டையுடன் ஒப்பிட்டுச் சரிபார்த்துத்தான் பொருட்களை அளிக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக ஆக்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் தண்ணீர் இல்லை. பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே போகிறது, வேலை வாய்ப்பு அருகிக் கொண்டே போகிறது. அது குறித்தெல்லாம் கவலை கொள்ளாத அரசு இப்படி நாட்டை “ஹை-டெக்” ஆக்குவதில் மும்முரம் காட்டுகிறது. இவற்றால் ஏழை எளிய எழுதப் படிக்கத் தெரியாத மக்கள் படும் அவதிகள் ஏராளம். உழைப்பாளிகளாக உள்ள இம்மக்களின் விரல் ரேகைகள் தேய்ந்ததின் விளைவாக 2018ல் மட்டும் டெல்லியில் 31,199 பேர்கள் இச்சோதனையில் வெற்றிபெற முடியவில்லை. இவர்களுக்கு ரேஷன் மறுக்கப்பட்டுள்ளது. குடும்பத்தவர்களின் மொத்த எண்ணிக்கையையும் சேர்த்தால் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் 1,20,000 பேர்கள். அது மட்டுமல்ல. குடும்ப அட்டையில் பெயருள்ளவர்கள் நேரடியாகச் சென்றுதான் இம்முறையில் பொருட்களைப்[ பெறமுடியும். தனியாக வாழும் வயதானவர்களுக்கு இது பெரும் பிரச்சினை.

“ஒரேநாடு, ஒரே ரேஷன் அட்டை” திட்டத்திற்கு மோடி அரசு சொல்லும் ஒரே நியாயம் இதன்மூலம் மாநிலம் விட்டு இடம் பெயர்ந்து பணியில் இருப்பவர்கள் பயனடைவார்கள் என்பதுதான். நாடு முழுவதும் மாநில வேறுபாடுகள் இல்லாமல் ஒரே கார்டுதான் என்பதால் எங்கும் யாரும் தங்கள் பங்கைப் பெற்றுவிட முடியும்.

“வெளி மாநிலத்தவர்கள் இங்கே வேலை செய்கிறார்கள் என்றால் அவர்களுக்கு ஏன் ரேஷன் கொடுக்க வேண்டும்? எனவே இதை ஏற்க முடியாது” என்கிறார்கள் நம்மில் சிலர். நான் இதை ஏற்கவில்லை. இப்போது நடைமுறையில் உள்ள முறையிலேயே பிற மாநிலத்தவர்களும்  தங்களின் மாநில அட்டைகளைக் காட்டி இங்கேயே மத்திய அரசு மாநியத்தில் கொடுக்கும் பொருட்களை மட்டும் பெறலாம் என்பது என் கருத்து. மாநில அரசு அளிப்பதை வேண்டுமானால் அவர்களுக்குக் கொடுக்காமல் நிறுத்திக் கொள்ளலாம். ஏனெனில் இங்கு வந்து வேலை செய்யும் வெளிமாநிலத்தவர் எல்லோருமே பெரிய அதிகாரிகள் இல்லை. மிகக் குறைந்த கூலியில் உழைப்புச் சுரண்டலுக்கு ஆட்படுகிற வெளிமாநிலத் தொழிலாளிகள்தான் ஏராளம். அவர்கள் வயிற்றில் நாம் அடிக்க வேண்டியதில்லை.

இந்தத் திட்டம் மோசமான ஒன்று, இதை ஏற்கக் கூடாது எனச் சொல்வதற்கு என்னிடம் வேறு பல நியாயங்கள் உண்டு. இந்தத் திட்டத்தை நாம் தனித்துப் பார்க்கக் கூடாது இத்துடன் மோடி அரசு திணிக்கும் “ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு”, “ஒரே நாடு ஒரே பயண அட்டை”, “ஒரே நாடு ஒரே ஆதார் அட்டை” என்கிற வரிசையில் இன்று இதை நடைமுறைப்படுத்துவதில் தீவிரம் காட்டும் மோடி அரசின் உள்நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவற்றின் ஊடாக மாநில அரசு அதிகாரங்களுள் அத்து மீறல் நடைபெறுகின்றது. பொது வினியோக முறை அதிகாரம் மாநில அரசுகளிடமிருந்து வன்முறையாகப் பறிக்கப்படுகிறது. அது மட்டுமல்ல. ஒரே மாதிரியான உணவுப் பொருட்கள்தான் எல்லா மாநிலங்களிலும் அளிக்கப்படும் என்கிற நிலையை இதன்மூலம் எளிதாக ஏற்படுத்தலாம். நமது தனிப்பட்ட உணவு முதலான வழமைகளுக்குள்ளும் இப்படி மத்திய அரசு மூக்கை நுழைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்..

மோடி அரசு இத்துடன் இன்னொரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இனிமேல் மாநிலங்களில் உள்ள கீழமை நீதிமன்றங்களின் நீதிபதிகளை மத்திய அரசே அகில இந்தியத் தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யுமாம். நீதித்துறையைக் கையகப்படுத்துவதற்கு பா.ஜ.க அரசு வெறியோடு நிற்பதை நாம் அறிவோம். ‘கலேஜியம்’ முறையை ஒழித்து உச்சநீதிமன்ற நீதிபதிகளைத் தாமே தேர்வு செய்யும் முறையைக் கொண்டுவர முயற்சிப்பவர்கள் இவர்கள். அது இப்போதைக்கு முடியவில்லை என்பதால் மாநில நீதித் துறையைக் கைவசமாக்கிக் கொள்ள நிற்கின்றனர்.

ஏற்கனவே ஆளுநர்கள் மாநில அரசின் அதிகாரங்களில் தலையிடும் போக்கு அதிகரித்துக் கொண்டே போகும் நிலையில் இப்படி அதிகாரங்களை  எல்லாம் தன் கையில் சுருட்டிக் கொண்டு மாநில அரசை டம்மி பீசாக மாற்றும் செயல்பாடுகளில் இதுவும் ஒன்று.

மோடி அரசு இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்த கையோடு இந்த வேலைகள்.  படு தீவிரமாக நடக்கின்றன. “ஒரே நாடு, ஒரே தேர்தல்” எனும் முழக்கத்தைப் பதவி ஏற்ற அடுத்த நாள்முதல் தொடங்கிவிட்டார் நரேந்திர மோடி. எந்நாளும் தாங்கள் கால் ஊன்ற முடியாத தமிழகம், கேரளம் முதலான மாநிலங்களில் வேர் பதிக்க ஒரே வழியாக அவர்கள் இதைப் பார்க்கிறார்கள்  ஒரே நாளில் தேர்தல் நடத்தும்போது மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி வெற்றிபெறும்  வாய்ப்பு அதிகம் என்பதால் அதில் தீவிரனாக உள்ளனர்.

மோடி அரசு ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். “ஒரு தேசத்திற்கு அதிகாரங்கள் மையப்படுத்தப்பட்ட ஒரே அரசு” (Nation State) என்பது ஒரு ஐரோப்பியக் கருத்தாக்கம். வரலாறு முழுவதிலும் இந்தியா உள்ளிட்ட ஆசியநாடுகள் இப்படி அதிகாரங்கள் மையத்தில் குவிக்கப்பட்ட ‘தேச அரசுகளாக’ இருந்ததில்லை. வரலாறு முழுவதும் பல கூறுகளுக்கிடையில்  அதிகாரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்ட  அமைப்புகளாகவே (segmentary state) அவை இருந்துள்ளன. அந்த வகையில் இன்றைய இந்திய அரசமைப்பை “அரசுகளின் தேசம்” (State Nations) என்பார்கள் லாயிட் ருடால்ஃபும், சூசேன் ருடால்ஃபும்.

இந்தியத் துணைக்கண்ட மக்கள் “பகிர்ந்து கொள்ளப்பட்ட இறையாண்மை” (shared sovereignty) என்பதற்கே பழக்கப்பட்டவர்கள். அதிகாரங்களை மத்தியில் குவிக்கும் முயற்சிகள் பாம்புப் புற்றுக்குள் கையை விடும் முட்டாள்தனமாகவே அமையும்.

மணிமேகலை : வினைப்பயனை அனுபவித்தே ஆக வேண்டும்

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் – 28                       

தனது பௌத்த அடையாளத்தை ஒவ்வொரு கணமும் வெளிப்படுத்திக் கொண்டவாறே நடைபோடும் மணிமேகலைக் காவியம் அவ்வப்போது தான் எவ்வாறு இளங்கோ அடிகளின் சமணப் பின்புலத்தில் ஆக்கப்பட்ட சிலம்பிலிருந்து வேறுபட்டுள்ளது என்பதைச் சுட்டிக் காட்டாமல் இருப்பதில்லை என்பதைக் கண்டு வருகிறோம். கண்ணகி மதுரையை எரித்ததைக் கற்புக் கனலின் பெருமைக்குரிய ஒரு அடையாளமாகவோ, இல்லை அரச அநீதிக்கு எதிரான ஒரு வீரச் செயலாகவோ சாத்தனார் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

பேத்தியை இவ்வாறு சந்திக்க நேர்ந்ததைத் தன் நல்வினைப் பயனாகச் சொல்லி மகிழும் மாசாத்துவன் அக்கணமே மதுரை மாநகர் எரித்தழிக்கப் பட்டதை கண்ணகியும் கோவலனும் செய்த தீவினையின் விளைவுதானே ஒழிய அதொன்றும் பெருமைக்குரிய ஒன்றல்ல என்பதைச் சுட்டிக் காட்டுகிறான். அதுமட்டுமல்ல அதற்கோர் பிராயச்சித்தம் என்பதே போல புத்த தேவனின் அன்பு கொள்ளும் அறத்திற்கு அருகதை உடையவானானேன் எனத் தான் துறவு மேற்கொண்டு பௌத்தம் தழுவியதைச் சொன்னான். வணிகத்தின் ஊடாக வாழ்நாளெல்லாம் பொருளீட்டி வாழ்ந்த அவன், அப்படி ஈட்டிய பொருளும், அந்த வாழ்வும் வெறும் மாயமே என்பதை உணர்ந்து பௌத்த அறத்தை ஏற்று தவ வாழ்வைத் தொடங்கியதையும் சுட்டிக் காட்டினான். தொடர்ந்து அவன் இன்னொரு வரலாற்றையும் சொல்லலானான். அது:

முன்னாளில் மலை உச்சியில் உள்ள சரிவில் தன் வில் இலச்சினைப் பொறித்த குடக்கோச் சேரலாதன் எனும் குட்டுவ வம்சத்தில் பிறந்த மன்னன் ஒருவன் இருந்தான். மலை உச்சியில் உள்ள சரிவில் இவ்வாறு தம் வெற்றிச் சின்னத்தைப் பொறிப்பது என்பது அக்கால வழமைகளில் ஒன்று. பல்லவ மன்னர்கள் நவிரமலைச் சரிவில் தம் வெற்றிச்சின்னத்தை இவ்வாறு பொறித்ததை பல்லவர்களின் திருவண்ணாமலைக் கல்வெட்டு குறிப்பதை உரையாசிரியர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

the-first-10-steps-adams-peak-sri-lanka

அவ்வாறு இலச்சினைப் பொறித்த குடக்கோச் சேரலாதன் ஒருநாள் தனது உரிமைச் சுற்றத்துடன் வந்து இந்தச் சோலையில் இன்பமாய் இருந்த வேளையில் இலங்கைத் தீவில் உள்ள “சமனொளி” மலையை வலஞ்செய்து வணங்கி வந்த தரும சாரணர்களும் மேக மண்டலத்திடையே பறந்து திரியும் வல்லமை பெற்றோருமாகிய சிலர் அவ் அரசனுக்கு நல்வினைக்குரிய “ஏது” நிகழ்வதை அறிந்து அவ்விடத்தே வந்திறங்கினர்.

மாமன்னர் அசோகர் பௌத்த தர்மத்தைப் பரப்புதற்பொருட்டு அனுப்பி வைத்த அறவோரைத் தரும சாரணர் என்பர். அவ்வாறான தரும சாரணர்கள் தங்குவதற்கு ஆங்காங்கு கல்லாலாகிய இருப்பிடங்கள் அமைப்பதும் அன்று வழக்கமாக இருந்தது. அப்படியான ஒரு கற்றலத்தில் அவர்கள் தங்கினர்.

இங்கு குறிப்பிடப்படும் குடக்கோச் சேரலாதன் செங்குட்டுவனின் தந்தையான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் அல்ல என்பது குறிப்பிடத் தக்கது. இவன் வெற்றிச் சின்னம் பொறித்ததும் இமயத்தில் அல்ல. இவன் பல தலைமுறைகளுக்கு முந்திய ஒரு சேர மன்னன். இது குறித்து “உனது புகழ்பெற்ற தந்தைக்கு ஒன்பது தலைமுறைக்கு முன்னோன் ஆகிய ஒரு கோவலன் என்பான் அப்போதைய சேரமன்னனை எந்நேரமும் விட்டுப் பிரியாத காதற்பாங்கனாக இருந்தான்” என மாசாத்துவன் கூறுவதை அடுத்துக் குறிப்பார் சாத்தனார்.

இலங்கைத் தீவிலுள்ள இந்தச் சமனொளி மலை என்பது ரத்தினபுரி மற்றும் நுவரேலியா மாவட்டங்களில் உள்ள ஒரு மலை உச்சி. ஒரே நேரத்தில் சிங்கள பௌத்தர்கள், தமிழ் இந்துக்கள், ஆதாம் – ஏவாளை இறைவனால் படைக்கப்பட்ட முதல் மானுடர்களாக ஏற்கும் கிறிஸ்தவ – இஸ்லாமிய செமிடிக் மதத்தினர் என அனைத்து மதத்தினராலும் புனிதமாகக் கருதப்படும் ஒரு புண்ணிய மலைத்தலம் அது. கால் தட வடிவில் அமைந்த இம்மலை உச்சி பௌத்தர்களால் புத்தரின் “ஸ்ரீ பாதம்” எனவும், இந்துக்களால் “சிவனொளி பாதம்” (சிவ பாத மலை) எனவும், கிறிஸ்தவ – முஸ்லிம் மக்களால் இறைவனால் படைக்கப்பட்ட முதல் மானுடனான ஆதமின் பாதமாகவும் (Adam’s Peak) ஏற்று வணங்கப்படும் ஒரு புனிதத் தலம். சுற்றிலும் மலைவனம் சூழ்ந்த ஒரு அழகிய சுற்றுலாத்தலமும் கூட.

பௌத்தர்களின் பாலி நூலாகிய தீபவம்சத்தில் (4ம் நூ) ‘சமந்த கூடம்’ (சமணகூட பர்வதம்) என இது குறிப்பிடப்படுகிறது. சிங்கள பௌத்ததின் இன்னொரு புனித நூலான மகாவம்சத்தில் (5ம் நூ) புத்தர் இங்கு வந்து சென்றதாகக் கூறப்படுகிறது. கி.பி 411 -12 காலத்தில் இலங்கையில் தங்கியிருந்த சீனப் பயணி ஃபாகியானும் ஸ்ரீபாத மலை குறித்துப் பதிவு செய்துள்ளார். இத்தாலிய வணிகனான மார்கோபோலோவும் (1298) இதை ஒரு முக்கிய புனிதத் தலமாகக் குறிப்பிடுகிறார். எனினும் அங்கே புத்தரின் திருப்பாதங்கள் இருந்ததாக அவர் குறிப்பிடவில்லை. 1344ல் இம் மலையில் ஏறிய அரேபியப் பயணியான இப்ன் பதூதா இதனை “சரண் தீபம்”  (Sarandeep) எனக் குறிப்பிடுவதோடு உச்சியில் ஏறுவதற்கு இரு புறங்களிலும் இரும்புச் சங்கிலி பொருத்தப்பட மலைப்பதை ஒன்று இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

பௌத்தர்கள் இப்புனித மலை உச்சியை புத்தரின் இடதுகால் பதிவு எனவும், சிங்கள பவுத்தர்களால் வணங்கப்படும் “சமன்” எனும் பௌத்தக் கடவுளின் அழைப்பிற்கிணங்க அங்கே சென்ற புத்த பகவன் நினைவாக இட்டுச் சென்ற பதிவு அது எனவும் நம்புகின்றனர். இதன்பொருட்டே இம்மலை உச்சிக்குச் ‘சமனொளி’ எனும் பெயரும் ஏற்பட்டது.

இராவணனின் தலைநகராகிய திரிகூடம் இதுவே என இந்துக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை உண்டு. ஈழத்துச் சைவ நூல்களான ‘தட்சிண கைலாச மான்மியம்’ மற்றும் “திருக்கரைசைப் புராணம்’ ஆகியன இச்சமனொளி மலையை சைவ அடையாளங்களுடன் குறிப்பிடுகின்றன.

விஜயபாகு மன்னன் (1065 -1119) சமந்தகூட மலையின் வழிபாட்டிற்காக ‘கிளிமலை’ எனும் கிராமத்தை ஒதுக்கியதற்கான கல்வெட்டுச் சான்றும் உண்டு.

இப்படி இலங்கையில் உள்ள மூன்று முக்கிய மதத்தினராலும் புனிதமாகக் கருதப்படுவது இந்தச் சமனொளி மலை.. தற்போதுள்ள இன முரண்பாட்டின் பின்னணியில் பவுத்த அடையாளமான ஸ்ரீபாதம் என்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் போக்கு இன்று உருவாகியுள்ளது.

முன்னதாக பாத்திரம் பெற்ற காதையில் மணிபல்லவத்தீவில் உள்ள மாணிக்கப் பீடிகையைக் காவல் காக்கும் தெய்வமாகிய தீவதிலகை, “இந்த மணிபல்லவத் தீவிற்கு அப்பால் இரத்தினத் தீவகம் உள்ளது. அங்கு ஓங்கி உயர்ந்த சமந்த மலையின் உச்சியில் அறத்தின் அடையாளமான புத்ததேவனின் பாதபீடிகை உள்ளது. அது தன்னை அடைந்தாரைப் பிறவிக் கடலிலிருந்து கரை சேர்க்கும் மரக்கலத்தைப் போன்றது” (11: 21-25) எனக் கூறுவதும் இங்கு நினைவுகூரத் தக்கது.

ஒன்பது தலைமுறைக்கு முந்திய இச் சேரமன்னன் சமனொளி மலையை வலஞ்செய்து வணங்கி வந்த அச் சாரணர்களைத் தொழுத்து போற்றினான். முன் செய்த தவம் அவனுக்கு அந்தப் பணிவையும் பண்பையும் அளித்தது. அவர்களின் தாமரைப் பாதங்களை நீரினாற் கழுவி, அறுசுவை உணவையும் அளித்து தன் அவையோருடன் கூடி அவர்களைப் போற்றிச் சிறப்புகள் செய்து வணங்கினான். அச் சாரணர்களும் பிறப்பினால் வரும் துன்பம், பிறவாமையினால் வரும் இன்பம், அறமுதல்வனாகிய புத்தன் அருளிய வாய்மை ஆகிய அரிய இன்பம் பயக்கும் அமிழ்தம் ஒத்த அறவுரைகளை, அரசனது பிறவித் துயர் நீங்குமாறு அவன் செவியிற் சொரிந்தனர்.

தொடர்ந்து பேத்தியிடம் மாசாத்துவன் கூறியது: “உன் தந்தை கோவலனுக்கு ஒன்பது தலைமுறைக்கு முன்னோனாகிய ஒரு கோவலன் இருந்தான். மன்னவன் குடக்கோச் சேரலாதனை விட்டு என்றும் பிரியாத அன்புடை நண்பனாக அவன் இருந்து வந்தான். மன்னனுக்கு தருமசாரணர் கூறிய நல்லுரைகளை எல்லாம் தானும் கேட்டு, தன் முன்னோர் முறையாக ஈட்டி வைத்தப் பெருஞ் செல்வத்தோடு தான் முயன்று சேர்த்த செல்வத்தையும் ஏழே நாட்களில் இரவலர்க்கு உவந்து அளித்தான். அதன்பின் வணக்கத்திற்குரிய தவ வாழ்வினை அவன் தேர்ந்து கொண்டான். அவன் புத்ததேவருக்கு எழுப்பிய வானளாவ ஓங்கிய வெண்ணொளியுடன் திகழ்ந்த சைத்தியம் இவ்வுலகில் உள்ளோருக்கெல்லாம் துன்பம் நீக்குவதாக அமைந்தது. அதனைக் கண்டு, தொழுது ஏத்தும் தீராக் காதலுடன் இங்கு வந்தேன். இந்நகரத்தே உள்ள நல்லறிவினரான தவத்தோர்கள் காவிரிப்பூம்பட்டினத்தைக் கடல் கொள்ளும் எனக்கூறியதைக் கேட்டு அங்கு போக வேண்டாம் எனக் கருதி இன்கேயே இருக்கிறேன்.” – எனத் தான்  கச்சிமாநகரில் தங்கி இருப்பதற்கான பின்னணியைக் கூறினான்.

மர்கொ பொலொ

தொடர்ந்து அவன், “நன்னெறியில் சென்று கொண்டுள்ள மணிமேகலையே இன்னும் நான் சொல்வதைக் கேள்! தீவினையின் விளைவாய் கொலையுண்டு இறந்த உன் தந்தை, அவன் முன் செய்த தவப்பயனால் தேவருலக வாழ்வைப் பெறுவான். ஆங்கவன் வினைப்பயனை இன்னும் அனுபவித்துக் கழிந்தபின், புத்தர் போதிமரத்தடியில் அருளறத்தைப் போதிக்கும் நாளிலே தவம் பூண்டு மனைவி கண்ணகியோடு தானும் கயிலையம்பதியில் புத்தனின் அருளுரை கேட்டு நிர்வாணம் அடைவான் எனப் பின் நிகழ உள்ள அற்புதங்களை அறிந்தோர் கூற நானும் உணர்ந்தேன். மயிலே! அந்நாளில் நானும் சென்றிருந்து புத்ததேவனின் அவ் அறவுரையைக் கேட்பேன்”- என்றான் மாசாத்துவன்.

இப்புவியில் பிறந்தோர் யாவரும் அவர்களின் வினைப்பயனைத் துய்த்து முடித்தல் வேண்டும். முன்வினைப் பயனால் அவர்கள் இடையில் இறக்க நேரிடினும் அவர்கள் தீர்க்காது விட்ட எஞ்சிய தீவினைப் பயன்களை அடுத்த பிறவிகளில் அனுபவித்தே ஆக வேண்டும். முந்திய பிறவியில் செய்த நல்வினைப் பயன்களைத் தொடர்ந்து அப்பிறவியில் கழிக்காமல் விட்ட தீவினைப் பயன்களையும் அனுபவித்தே ஆகவேண்டும். வினைப் பயனால் கொலையுண்ட கோவலன் அப்பிறவியிற் செய்த நல்லறங்களின் விளைவாய் தேவரிற் தோன்றியபோதும் அங்கும் வினைப்பயனை அனுபவித்தே ஆகவேண்டும் என்பது கருத்து. கோவலனாய்ப் பிறந்து வெட்டுண்டு மாண்ட இப்பிறவியில் அவன் நல்வினையே செய்தான் எனக் கொள்வதற்கு சிலப்பதிகாரத்திலிருந்து உரையாசிரியர்கள், “இம்மைச் செய்தன யானறி நல்வினை” (சிலம்பு 15:61) என்கிற கூற்றை மேற்கோள் காட்டுவர். இப்பிறவியில் நானறிந்தவரை நல்வினைகளையே ஆற்றியுள்ளேன் என்பது பொருள். “மேற்செய் நல்வினையின் விண்ணவர்ச் சென்றேம். அவ்வினை இறுதியின் அடுசினப் பாவம் எவ்வகையாயினும் எய்துதல் ஒழியாது” (சிலம்பு 26 35-37) என்கிற சிலப்பதிகார மேற்கோளும் மணிமேகலையின் இக்கருத்துடன் உடன்படுதலைக் காண முடிகிறது. பௌத்தமும் சமணமும் ஒன்றுபடும் புள்ளிகளில் ஒன்றாக இவற்றைக் கருதலாம்.

தொடர்ந்து, “அதற்குப் பின் நடக்க இருப்பதை எல்லாம் தூணிலே அமைந்திருக்கும் துவதிகன் எனும் அக் கந்திற்பாவையின் சொற்களால் நீ முன்னமே அறிந்தவைதானே. தவநெறியினரான அறவணர் மூலம் நானும் அதை அறிந்தேன். நின் அறத்திற்குரிய ஏது நிகழ்ச்சிகள் வாய்க்கப்பெறும் இடம் காஞ்சிமாநகர் என்பதால் அந்த மாதவரும் அங்கே சென்றுள்ளார். உன் அன்னையரும் அவருடன் அக் கச்சிமாநகருக்கே சென்றுள்ளனர். இது மட்டுமன்று. இன்னொன்றையும் கேள். பொன்வண்ணக் கோட்டையை உடைய காஞ்சி நாடு இன்று தன் அழகனைத்தையும் இழந்து நிற்கிறது. உயிர்கள் செத்தழிகின்றன. மழைவளம் பொய்த்துள்ளது. தவசிகளுக்கு உணவளிப்போர் இன்மையால் அவர்கள் இந்த நகரை வந்தடைந்துள்ளதை நீயும் காண்கிறாய். அரிய உயிரைக் காக்கும் மருந்து போன்றவளே!  இப்போது உன் கடமை அந்நகரத்தின் கண் மழை தரும் முகிலெனத் தோன்றி உயிர்களைக் காப்பாற்றுவதே”- என முடித்துக் கொண்டான் அருந்தவம் ஏற்ற மாசாத்துவன்.

(அடுத்து தவத்திறம் பூண்டு அறவணரிடம் மணிமேகலை தருமம் கேட்ட வரலாறு)

முதலீட்டாளர் மாநாடும் எட்டுவழிச் சாலையும்

இந்த ஆண்டு (2018) முதலீட்டாளர் மாநாட்டை எடப்பாடி அரசு கோலாகலமாக நடத்தி முடித்துள்ளது.

எண்ணூர் துறைமுகத் திட்டத்திலும் எரிவாயு வினியோகத்திலும் 12,000 கோடி ரூ முதலீடு செய்வததாக அதானி நிறுவனத்தின் சார்பாகக் கலந்து கொண்ட கரன் அத்வானி அறிவித்ததை எடப்பாடி அரசு முதலீட்டாளர்கள் மாநாட்டின் பெரிய வெற்றியாக சொல்லிக் கொள்கிறது.. இந்த இரு திட்டங்களையும் கூர்ந்து கவனித்தால்தான் அதானி செய்யும் இம்முதலீடுகள் பெருமைக்குரியவை அல்ல என்பதும், அவை கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியவை என்பதும் விளங்கும்..

இந்த இரண்டையுமே அப்பகுதி மக்கள் கடுமையாக வெறுக்கின்றனர். எதிர்க்கின்றனர். ஏற்கனவே காவேரி டெல்டா பகுதியில் ONGC யின் எரிவாயு மற்றும் எண்ணை தோண்டி எடுக்கும் செயல்பாடுகளை அப்பகுதி மக்கள் எதிர்த்துக் கொண்டுள்ளனர். சென்ற ஆண்டு மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள கதிராமங்கலம் கிராம மக்கள் நடத்திய போராட்டங்களை அறிவோம். அதை எல்லாம் விட மிக மிகப் பெரிய மெகா திட்டம் ஒன்றை இப்போது அதானி குழுமம் தமிழகத்தில் செயல்படுத்த உள்ளது. இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் அவர்களின் எண்ணூர் துறைமுகத் திட்டம் இன்னும் பெரிய சுற்றுச் சூழல் அழிவை உள்ளடக்கிய ஒன்று..

இரண்டு வாரங்களுக்கு முன் ஆஸ்திரேலிய நாளிதழ்களில் வெளியாகியுள்ள ஒரு செய்தி இங்கே குறிப்பிடத் தக்கது. “மண்ணின் மைந்தர்களுக்கு எதிரான இன ஒதுக்கலை ஒழிப்பதற்கான ஐ.நா அவைக் குழு” (UN Committee on the Elimination of Racial Discrimination against Indigenous People) எனும் உலக அவையின் அமைப்பு ஆஸ்திரேலிய அரசுக்கு ஒரு பரிந்துரை அளித்துள்ளது.  ஆஸ்திரேலியாவில் செயல்பட்டுக் கொண்டுள்ள அதானி நிறுவனத்தின் நிலக்கரிச் சுரங்கச் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்பதுதான் அது. அப்பகுதி மண்ணின் மைந்தர்களின் கருத்தைக் கேட்டு அதன் அடிப்படையில் அதை நிரந்தரமாக மூடுமாறும்  பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில்தான் அவ்வாறு இன்று ஆஸ்திரேலியாவில் தடுக்கப்பஉள்ள அதே அதானி நிறுவனம் தமிழ்நாட்டுக்குள் தன் செயல்பாடுகளை விரிவாக்குகிறது.,

ஐ.நா அமைப்பு ஒன்று இவ்வாறு கண்டித்துள்ள ஒரு நிறுவனம் இங்கே தன்  வேலைகளை விரிவாக்குவது அப்படி ஒன்றும் கொண்டாடத் தக்கதல்ல என்பதை நாம் எடப்பாடி பழனிச்சாமிக்குச் சொல்லியாக வேண்டும்.

முதலீட்டாளர் மாநாட்டில் அதானி நிறுவனம் சார்பாகக் கலந்து கொண்ட கரன் அதானி பேசும்போது தாங்கள் செய்யப்போகிற 12,000 கோடி ரூ முதலீட்டில் 10.000 கோடி ரூ எண்ணூர் – காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம், தொழில் பூங்காக்கள் அமைத்தல், பாதுகாப்புத்துறை முதலீடுகள் ஆகியவற்றுக்குச் செலவிடப்படும் எனவும் மீதி 2000 கோடி நகரத்தில் எரிவாயு வினியோகம் செய்வதற்குச் செலவிடப்படும் எனவும்  எனவும் அறிவித்துள்ளார்.

“இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதியில் இந்தியாவிலேயே முதன் முதலாக சூரிய ஒளியிலிருந்து 640 மெகாவாட் உற்பத்தி செய்யக் கூடிய மின் நிலையம் ஒன்றை 4550 கோடி ரூ செலவில் ஆறே மாதத்தில் கட்டினோம்.  இந்தியாவிலேயே சமச்சீரான பொருளாதாரம் நிலவும் மாநிலமாக தமிழ்நாடுதான் உள்ளது. அதன் மொத்த GDP வருமானத்தில் 45 சதம் பணித்துறை (service sector) மூலம் கிடைக்கிறது என்பது ஒன்றே போதும் தமிழகப் பொருளாதாரத்தின் சிறப்பை உணர. உற்பத்தித்துறையின் (manufacture) பங்கு வெறும் 34 சதம்தான். விவசாய உற்பத்தியின் மூலம் கிடைப்பது 21 சதம்தான்.  இந்த வகையில் இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடியாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவில் வலுவாகக் காலூன்ற நினைக்கும் எந்தத் தொழில் துறையும் தமிழ்நாட்டில் தங்களை நிறுவியே ஆக வேண்டும். நாங்கள் மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்?..”

எனச் சொல்லி கரன் அதானி முதலமைச்சரைத் திரும்பிப் பார்த்தபோது அவர்  அப்படியே பூரித்துப் போனதைக் கண்டோம்.

தமிழ்நாட்டில் அதானி குழுமம் கால் பத்தித்து ஏழாண்டுகள் ஆகிவிட்டன. 2018ல் காட்டுப்பள்ளி துறைமுகத்தை அது L & T நிறுவனத்திடமிருந்து வெறும் 1950 கோடிக்கு வாங்கியது. தற்போது அதன் திறன் 26.5 மில்லியன் டன் சரக்கைக் (cargo) கையாள்வதாகத்தான் இருந்தது. அதை 320 மில்லியன் டன்  அளவு சரக்கைக் கையாளக்கூடியதாக உயர்த்துவதுதான் அவர்களின் நோக்கமாம், மொத்தமாக இதற்கெனச் செலவிடப்போகும் முதலீடு 52,400 கோடி அளவு இருக்குமாம். 6000 பேருக்கு இதன் மூலம் வேலை வாய்ப்பும் கிடைக்குமாம்.

GIM-37

இந்த வேலை வாய்ப்பு பற்றிய கதையாடல் மிகப் பெரிய ஏமாற்று. உற்பத்தித் துறையும், விவசாயமும், மீன்பிடித் தொழிலும் அழிந்து கொண்டிருப்பதன் ஊடாக ஏற்படும் வேலை இழப்புகளோடு ஒப்பிடும் போது இந்த ஆறாயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்கிற கதையெல்லாம் அபத்தம்.

இன்னொரு பக்கம் ஏற்கனவே டெல்டா பகுதி மக்களிடம் ரொம்பவும் “நல்ல” பெயர் சம்பாதித்துள்ள பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பொரேஷனும் மேலும் 16,641 கோடி ரூபாயை தமிழகத்தில் முதலீடு செய்யப் போகிறார்களாம்.. பெட்ரோல் பங்குகளை அமைத்து சில்லறைப் பெட்ரோல் வினியோகத்திலும் அவர்கள்  இறங்கப் போகிறார்களாம். ஏற்கனவே உள்ள தங்களின் எண்ணை உறிஞ்சும் திறனை மேம்படுத்துவதோடு இரண்டு எரிவாயு நிரப்பும் நிலையங்களையும் அமைக்கப் போகிறார்களாம். ஒரு 20,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் இதன் மூலம் உருவாக்கப்படும் எனவும் சொல்லி வைக்கிறார்கள்,

இந்த வேலை வாய்ப்புகள் எல்லாம் என்னமாதிரி இருக்கும்? தங்கள் நிலத்தையும், நிலத்தின் வளத்தையும் இழந்த மக்களுக்கும், பாரம்பரியமாக மீன்பிடித் தொழில் செய்து வாழ்ந்து வந்த கடல் தொழிலாளிகளுக்கும் இவர்களின் பெட்ரோல் பங்குகளுக்கு வரும் வாகனங்களுக்குப் பெட்ரோல் நிரப்பும் வேலை தரப் போகிறார்களா? தெரியவில்லை.

இந்த அதானி நிறுவனம் இவ்வாறு இந்தியாவிலேயே பெரிய துறைமுகங்களில் ஒன்றாக எண்ணூரில் ஒன்றை அமைக்கும் திட்டத்துடன் ஒரு வகையில்மிக நெருக்கமாக இணைந்த ஒன்றுதான் இப்போது எடப்பாடி அரசு மிகத் தீவிரமாகச் செயல்படுத்த முனைந்துள்ள சேலம் – சென்னை எட்டுவழிச்சாலைத் திட்டமும் கூட. இதில் நடக்கும் தில்லுமுல்லுகளும் மிகவும் ஆபத்தானவை.

ஆறே நாட்களில் எல்லா விதிகளையும் மீறி  இந்த சேலம் – சென்னை எட்டுவழிச்சாலை திட்டம் மோடி அரசின் ‘பாரத் மாலா’ திட்டத்தில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட வரலாறு ஒரு துப்பறியும் கதையைக் காட்டிலும் சுவாரசியமான ஒன்று. அந்த பாரத்மாலா 2016 முதல் மோடி அரசால் முன்வைக்கப்பட்டு அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டாலும் அந்த அறிவிப்பில் சேலம் – சென்னை எட்டுவழிச் சாலை இருக்க வில்லை. இந்தியா முழுவதையும் பிரும்மாண்டமான நவீன வடிவிலான சாலைகளை அமைத்துச் சுற்றி வளைக்கும்  பாரத்மாலா திட்டத்தில் உள்ள வேறு சில மெகா சாலைகளில் செய்ய வேண்டிய திருத்தங்கள் பற்றி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எழுதிய  எந்தக் கடிதத்திலும் அவர் சேலம் – சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டத்தைப் பற்றிப் பேசவில்லை. எடுத்துக்காட்டாக  நவ 23, 2017ல் எழுதப்பட்ட கடிதத்தைச் சொல்லலாம்.பெங்களூர் – மதுரை சாலை பற்றித்தான் அதில் இருந்தது, அக்டோபர் 2017ல் வெளியிடப்பட்ட திட்டப் பட்டியலிலும் அது இடம்பெறவில்லை. நவ 23, 2017ல் எடப்பாடி அரசு திட்டத்தில் சில திருத்தங்கள் வேண்டி மத்திய அரசுக்கு எழுதிக கடிதத்திலும் சேலம் – சென்னை எட்டுவழிச் சாலை இடம்பெறவில்லை

பிப் 08,2018 அன்று ஆறே நாட்களில் எல்லா விதிகளையும் மீறி எவ்வாறு இந்த சேலம் – சென்னை எட்டுவழிச்சாலை திட்டம் மோடி அரசின் ‘பாரத் மாலா’ திட்டத்தில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது என்பதைப் பார்க்கலாம். பிரமிக்கத் தக்கவகையில் ஆறே நாட்களில் நடந்து முடிந்த அந்த மின்னல்வேக நடவடிக்கைகள் வருமாறு..

பிப் 19, 2018 அன்று  திடீரென Feed Back Infra Pvt Ltd (FBIL) எனும் அமைப்பு தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு (NHAI) சேலம் – சென்னை எட்டுவழிச்சாலை தொடர்பாக சாலைப் போக்குவரத்தை சர்வே செய்ய அனுமதி கோரி ஒரு கடிதம் அளிக்கிறது. அதன் அதிகாரிகள் தமிழக அதிகாரிகளையும் சந்தித்துப் பேசுகின்றனர். உடன் அதற்கான அனுமதி அளிக்கப்படுகிறது. தமிழக அரசும் உடன் இசைவளிக்கிறது.

பிப் 22, 2018ல் FBIL உம் NHAI உம் ‘விரிவான திட்ட அறிக்கை’யை ( Detailed Project Report- (DPR) ஒன்றை உருவாக்கி ஒப்பந்தம் செய்துகொள்கின்றன.

பிப் 25,2018 அன்று இந்த சேலம் – சென்னை எட்டு வழிச்சாலை பற்றிய அறிவிப்பை மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரியும் தமிழக முதல்வர் எடப்பாடியும் கூட்டாக பிரஸ் மீட் ஒன்று வைத்து அறிவிக்கின்றனர்.

ஒரு 10,000 கோடி ரூபாய்த்திட்டம் இப்படி எல்லா விதிகளையும் மீறி ஆறே நாட்களில் முடிவு செய்யப்பட்டது எப்படி? திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு முன் செய்ய வேண்டிய அனைத்து ஆய்வுகளும் (Standard Procedures for Appraisal and Approvals of Projects) செய்யப்படாமல் இது எவ்வாறு வெளியிடப்பட்டது?

இதில் இன்னொரு சுவாரசியமான செய்தியும் உண்டு.  FBIL நிறுவனம் நிதிக் கையாளுகையில் தவறாக நடந்து கொண்டதை ஒட்டி முன்னதாக உலகவங்கியால் ஓராண்டுகாலம்  தடை செய்யப்பட்ட (black listed) ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது.

இதையெல்லாம் கேட்டால் யாரிடமும் பதிலில்லை. யாராவது கேட்க முயன்றால் அவர்கள் கடுமையாக ஒடுக்கப்படுகின்றனர். இந்த எட்டு வழிச்சாலையால் நிலத்தை இழக்கும் விவசாயிகளின் குரல்வளை நெறிக்கப்படுவதை நாம் எல்லோரும் அறிவோம்.

இந்தச் சாலை விடயத்தில் ஏன் இந்த அவசரம்?

இதற்கும் அதானியின் எண்ணூர் துறைமுகத் திட்டத்திற்கும் ஏதும் தொடர்புண்டா? நிச்சயமாக உண்டு. சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூர், ஓரகடம் முதலான பகுதிகளில் இன்று மிகப்பெரிய தொழிற்சாலைகள் உருவாகியுள்ளன. ஹூண்டாய், டயோட்டா, நிசான், ஃபோர்டு, ரெனால்ட், மகிந்த்ரா என முக்கியமான பெரும் கார் தொழிற்சாலைகள் எல்லாம் இங்கு உள்ளன. ஆண்டொன்றுக்கு 1,50,000 கார்கள் இங்கிருருந்து இந்தியாவெங்கும் கொண்டு செல்லப்பட வேண்டிய தேவை உள்ளது. அதிக வேகத் திறன் சாத்தியமுள்ள சாலைகளும், அவற்றோடு இணைக்கப்பட்ட  பெரும் சரக்குக் கப்பல்கள் நிற்கக் கூடிய துறைமுகமும் இன்று அதற்குத் தேவை.

ஏன் இந்தத் தொழிற்சாலைகள் எல்லாம் தமிழ்நாட்டில் குவிகின்றன?

இங்கு குறைந்த கூலிக்குத் தொழிலாளிகள் தம் உழைப்பை விற்கத் தயாராக உள்ளனர். முதலாளிகளுக்குச் சாதகமான தொழிற் சட்டங்கள் உள்ளன. பாதுகாப்பு தொடர்பான உற்பத்திகளில் 100 சத வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கு இன்று மோடி அரசு அனுமதி அளித்துள்ளது. பாதுகாப்பு தொடர்பான இராணுவ ஆயுத உற்பத்திசாலைகளும் (Defence Industrial Corridor) இங்கு வர உள்ளதாக சென்ற பிப்ரவரி 2018ல் அறிவிக்கப்பட்டதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இது தவிர திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கவுதி மலை, வேடியப்பன் மலை மற்றும் சேலத்திலுள்ள கஞ்சமலை ஆகியவற்றில் மிகவும் தரமான இரும்புத் தாதுக்கள் கிடைக்கின்றன. இவ்ற்றைக் குறிவைத்துள்ள ஜின்டால் போன்ற எஃகு உற்பத்தி நிறுவனங்களுக்கு அவற்றைக் கொண்டு செல்ல வேகப் பாதைகளும், பெருந்துறைமுகங்களும் இன்று தேவைப்படுகின்றன.

இந்தப் பின்னணியில்தான் இன்று தமிழ்நாட்டைத் தங்களின் சொர்க்க பூமி என கரன் அதானி நாக்கில் நீர் வடியச் சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

எண்ணூரில் கட்டப்படும் இந்தப் பெருந் துறைமுகத்தால் ஏற்பட உள்ள சுற்றுச் சூழல் பாதிப்புகள் மற்று மீன்பிடித் தொழிலின் அழிவு ஆகியவற்றை இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

குறிப்பு

எட்டுவழிச்சாலையால் பாதிக்கப்பட்டுள்ள 5 மாவட்டத்திலும் உள்ள போராடும் மக்களைச் சந்திக்கும் திட்டத்துடன் சென்ற ஜனவரி 30,31, பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் எங்கள் குழு முதற்கட்டமாக  கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்குச் சென்றோம். கிருஷ்ணகிரி மாவட்டச் சந்திப்பை நண்பர்கள் ஊத்தங்கரையில் ஏற்பாடு செய்திருந்தனர். பேருந்தை விட்டு இறங்கியபோதே அதிர்ச்சி காத்திருந்தது. சந்திப்புக்கும் தங்குவதற்கும்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசுப் பயணிகள் விடுதியில். எங்களுக்குத் தங்க அறையோ, மக்களைச் சந்திக்க வசதியோ அளிக்கக் கூடாது எனக் காவல்துறை தடுத்திருந்தது. அங்குள்ள ஒரு எளிய லாட்ஜில் தங்கினோம். உளவுத் துறையினர் அங்கும் வட்டம் இட்டுக் கொண்டிருந்தனர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் காவல்துறையின் எச்சரிக்கையுடன் கூடிய வேண்டுகோளையும் மீறி தனது வீட்டு மாடியில் எங்களை அங்கு வந்த மக்களைச் சந்திக்க அனுமதித்தார். அவரது வீட்டைச் சுற்றிலும் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.

அடுத்தநாள் சேலத்திலும் அவ்வாறே சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆசிரியர் கூட்டணி அரங்கு காவல்துறை கெடுபிடியால் ரத்து செய்யப்பட்டது. நெடுநாள் தோழரும் போராளியுமான வழக்குரைஞர் அரிபாபு அவர்களின் இல்லத்தில் அன்றைய சந்திப்பு நடந்தது. அவருடைய வீட்டைச் சுற்றியும் உளவுத் துறையினர் நின்றிருந்தனர்.

மூன்றாம் நாள் தருமபுரி மாவட்டச் சந்திப்பை அரூரில் ஏற்பாடு செய்திருந்தோம்.அன்றும் அப்படித்தான் நடக்கும் என்பதை எதிர்பார்த்து நாங்களே தோழர் வேடியப்பன் வீட்டில் சந்திப்பை மாற்றிக் கொண்டோம். அரசியல் கட்சியினர் தவிர முப்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகளூம் வந்திருந்தனர்.

எட்டுவழிச் சாலையை எதிர்த்துப் போராடும் மக்கள் எத்தகைய போலீஸ் கெடுபிடிகளுக்கு ஆளாகியுள்ளனர் என்பதை நேரடியாக உணரும் வாய்ப்பாக இந்த அனுபவங்கள் எங்களுக்கு அமைந்தன..

 

 

 

 

 

 

Top of Form

எட்டு வழிச் சாலையும் எடப்பாடி அரசும் : அறிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்

1

சேலம் – சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டத்தை எப்படியும் நிறைவேற்றியே தீர்வது என்பதை ஒரு மூர்க்க வெறியுடன் செயல்படுத்திக் கொண்டுள்ளது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு. ‘மூர்க்க வெறி’ என நான் இங்கு சொல்வது கோபம் அல்லது வெறுப்பின் விளைவல்ல. எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்குத் தம் விவசாய நிலங்களைப் பறிகொடுக்கத் தயங்கும் விவசாயிகளை இந்த அரசு எதிர்கொள்ளும் விதத்தைச் சொல்ல தமிழில் வேறு சொற்கள் இல்லை.

பத்ததாயிரம் கோடி ரூபாய் செலவாகும் ஒரு திட்டத்தை, ஐந்து மாவட்டங்களின் வழியே சென்று ஏராளமான விவசாய நிலங்களைப் பாழடிக்கும் ஒரு ‘மெகா’ நடவடிக்கையை அரசு உரிய விதி முறைகளைப் புறந்தள்ளிமேற்கொள்ளும்போது தம் நிலங்களைக் கொடுக்கத் தவறும் விவசாயிகள் எழுப்பும் நியாயமான கேள்விகளுக்கு உரிய பதில்களைச் சொல்லாமல், அவர்களின் குரலை மிகக் கொடூரமாக ஒடுக்க முனைவதை ‘மூர்க்க வெறி’ எனச் சொல்லாமல் வேறென்னசொல்வது..

உலகின் ‘மிகப் பெரிய ஜனநாயக நாடு இது’ எனப் பீற்றிக்கொள்ள்ளும் இவர்கள் இந்தத் திட்டம் குறித்து பாதிக்கப்படும் விவசாயிகள் எழுப்பும் எந்தக் கேள்விக்காவது ஒழுங்கான பதிலைச் சொன்னார்களா? மாறாக தங்கள் எதிர்ப்பை  ஜனநாயக முறையில் வெளிப்படுத்த முயலும் அவர்களை எத்தனை கொடூரமாக இவர்கள் ஒடுக்குகின்றனர். தங்களின் கோரிக்கைகளை ஊர்வலமாக வந்து பொறுப்புள்ள அதிகாரிகளிடம் அளிக்கவும் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.எழுப்பும் ஐயங்களுக்கு மெத்தப் படித்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொல்கின்றனர். கைப்பற்றப்படும் நிலம், வெட்டப்படும் மரங்கள் ஆகியவற்றுக்கு அளிக்கப்போகிற இழப்பீட்டுத் தொகை குறித்து இந்த ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொல்லி அசடு வழிவதை இந்த நூலாசிரியர் குணா தர்மராஜா ஆதாரங்களுடன் இந்நூலில் அம்பலப்படுத்துகிறார்.

ஏன் இப்போதுள்ள சேலம் – சென்னை நால்வழிச் சாலையையேமேம்படுத்தக் கூடாது?எட்டு வருடமாகச் சொல்லிக் கொண்டுள்ள திண்டிவனம் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சல்லைத் திட்டம் என்னாச்சு?‘பாரத்மாலா’ திட்டத்தின் ஓரங்கம் என்கிறீர்களே.அந்தத் திட்டத்தில் இதுவும் ஒன்று என்றால், அதிலுள்ள பிற திட்டங்களை அறிவித்தபோதே அறிவிக்காமல் இப்போது திடீரெனத் திணிக்கிறீர்கள்? இந்தத் திட்டத்தால் விளையும் சுற்றுச் சூழல் பாதிப்புகள் குறித்த விரிவான விவாதங்கள் ஏன் நடத்தப்படவில்லை?, ‘விரிவான திட்ட அறிக்கை’ யை(Detailed Project Report – DPR) எப்போது வெளியிடப் போகிறீர்கள்? தம் நிலத்தைப் பறிகொடுக்க மறுக்கும் விவசாயிகளை அதிகாரிகள் விசாரிக்கும்போது ஏன் ஊடகங்களை அனுமதிக்க மறுக்கிறீர்கள்?தம் நிலத்தைத் தாரை வார்க்க 91 சதம் விவசாயிகள் சம்மதித்து விட்டார்கள் எனக் கூசாமல் பொய்யுரைக்கும் முதல்வர் பழனிச்சாமியால் அதை நிறுவ இயலுமா?

கேள்விகள்.. கேள்விகள்..கேள்விகள்.அரசிடம் எந்தப் பதிலும் இல்லை.விளக்கம் சொல்வதற்குப் பதிலாக இப்படியான கேள்வியை எழுப்புகிறவர்கள் தாக்கப்படுகிறார்கள்.கண்காணிக்கப்படுகிறார்கள்.பின் தொடரப்படுகிறார்கள்.அறைக் கூட்டங்கள் தடுக்கப்படுகின்றன.மக்களுக்கு ஆதரவாகப் பேசியதற்காக வளர்மதி முதல் மன்சூர் அலிகான் வரை கைது செய்யப்படுகின்றனர்.போராட்டத்தை ஆதரிப்போரின் செல்போன் உரையாடல்கள் பதிவு செய்யப்படுகின்றன.அவர்களின் ஒவ்வொரு அசைவும் வீடியோப் பதிவுகள் ஆக்கப்படுகின்றன.போராடும் மக்களைச் சந்திக்க வந்த நாடறிந்த தலைவரும், பேராசிரியருமான யோகேந்திர யாதவைத் தடுத்து இழுத்துச் சென்று அடைத்து வைத்து மாலையில் விடுவித்தார்களே அதை எப்படி மறக்க முடியும்?

எதற்கும் அவர்களால் பதில் சொல்ல இயலாது.ஏனெனில் அவர்களிடம் பதில்கள் இல்லை.இப்படியான மெகா திட்டங்களில் நிலம் கையகப்படுத்துதல் முதலான வேலைகளைத் தொடங்குவதற்கு வெறும்திட்டச் சாத்திய அறிக்கை (Project Feasibility Report) ஒன்றை வெளியிடுவது மட்டும் போதாது.நிலம் கையகப்படுத்தப்படும் திட்டம் வெளியிடப்பட்டு மக்கள் கருத்துக் கணிப்பு முதலியவற்றை எல்லாம் நடத்திய பின்னரே கையகப்படுத்தும் வேலைகளைத் தொடங்க வேண்டும். அதிகாரிகள் இப்போது பாதிக்கப்பட்டவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாமல் விழிப்பது  இப்படியான அடிப்படை நிபந்தனைகள்எல்லாம் முறையாகக் கடைபிடிக்கப் படாதததன் விளைவுதான்,.

2

ஆறேநாட்களில்எல்லாவிதிகளையும்மீறிஇந்தசேலம் – சென்னை எட்டு வழிச்சாலை திட்டம்மோடிஅரசின்’பாரத்மாலா’ திட்டத்தில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட வரலாறு ஒரு துப்பறியும் கதையைக் காட்டிலும் சுவாரசியமான ஒன்று.இது குறித்த விவரங்களை சுற்றுச் சூழல் பாதிப்புகள் குறித்து விரிவான ஆய்வுகளைச் செய்து வரும்நித்தியானந்த் ஜெயராமன் அவர்கள் விரிவாக எழுதியும் பேசியும் வருகிறார். சிலவற்றை இங்கே தொகுத்துக் கொள்வோம்:

இந்தபாரத்மாலா திட்டம் 2016 முதல் மோடி அரசால் முன்வைக்கப்பட்டு அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டாலும்அந்தஅறிவிப்பில்சேலம் – சென்னைஎட்டுவழிச் சாலைஇருக்கவில்லை.இந்தியா முழுவதையும் பிரும்மாண்டமான நவீன வடிவிலான சாலைகளை அமைத்துச் சுற்றி வளைக்கும்  பாரத்மாலா திட்டத்தில் உள்ள வேறு சில மெகா சாலைகளில் செய்ய வேண்டிய திருத்தங்கள் பற்றி மத்திய அரசுக்கு தமிழகமுதல்வர்எடப்பாடிபழனிச்சாமிஎழுதியஎந்தக் கடிதத்திலும் அவர்சேலம் – சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டத்தைப்பற்றிப் பேசவில்லை. எடுத்துக்காட்டாக நவ 23, 2017ல்எழுதப்பட்டகடிதத்தைச் சொல்லலாம்.பெங்களூர் – மதுரை சாலை பற்றித்தான்அதில்இருந்தது, அக்டோபர் 2017ல்வெளியிடப்பட்டதிட்டப்பட்டியலிலும்அதுஇடம்பெறவில்லை. நவ 23, 2017ல்திட்டத்தில்சிலதிருத்தங்கள்வேண்டிமத்தியஅரசுக்குஎடப்பாடிஅரசுஎழுதியகடிதத்திலும்சேலம் – சென்னைஎட்டுவழிச்சாலைஇடம்பெறவில்லை.

5THCREEK2

ஆனால் எப்படிபிப் 08,2018 அன்று ஆறே நாட்களில் எல்லாவிதிகளையும் மீறி எவ்வாறு இந்த சேலம் – சென்னை எட்டுவழிச்சாலை திட்டம் மோடி அரசின்பாரத்மாலாதிட்டத்தில்ஒன்றாகஅறிவிக்கப்பட்டது என்பதைப் பார்க்கலாம். பிரமிக்கத் தக்க அந்த மின்னல்வேக நடவடிக்கைகள் வருமாறு:

பிப் 19, 2018 அன்றுதிடீரென Feed Back Infra Pvt Ltd (FBIL) எனும்அமைப்பு சேலம் – சென்னைஎட்டுவழிச்சாலைதொடர்பாகசாலைப்போக்குவரத்தைசர்வேசெய்யஅனுமதிகோரிதேசியநெடுஞ்சாலைத்துறைக்கு (National Highways Authority of India – NHAI) ஒருகடிதம்அளிக்கிறது. அதன் பிரதிநிதிகள் தமிழக அதிகாரிகளையும்சந்தித்துப்பேசுகின்றனர். உடன்அதற்கான அனுமதியை NHAIஅளிக்கிறது. தமிழகஅரசும்உடன்இசைவளிக்கிறது.

பிப் 22, 2018ல் FBIL உம் NHAI உம் ‘விரிவான திட்ட அறிக்கை'( Detailed Project Report- (DPR) எதையும் வெளியிடாமல்ஒப்பந்தம்செய்துகொள்கின்றன.அந்த அறிக்கை இதுவரை மக்கள் முன் வைக்கப்படவில்லை.

பிப் 25,2018அன்றுஇந்தசேலம் – சென்னை எட்டுவழிச்சாலை பற்றிய அறிவிப்பைமத்தியபோக்குவரத்துஅமைச்சர்நிதின்கட்காரியும்தமிழகமுதல்வர்எடப்பாடியும்கூட்டாக நடத்தியபிரஸ்மீட்ஒன்றில்அறிவிக்கின்றனர்.

ஒரு 10,000 கோடிரூபாய்த்திட்டம் இப்படி எல்லாவிதிகளையும் மீறி ஆறேநாட்களில்முடிவுசெய்யப்பட்டதுஎப்படி?திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு முன் செய்ய வேண்டிய அனைத்து ஆய்வுகளும் (Standard Procedures for Appraisal and Approvals of Projects) செய்யப்படாமல் இது எவ்வாறு உருவாக்கப்பட்டது?

இதில் இன்னொரு சுவாரசியமான செய்தியும் உண்டு. FBIL நிறுவனம் நிதிக்கையாளுகையில் தவறாக நடந்துகொண்டதை ஒட்டிமுன்னதாக உலகவங்கியால்ஓராண்டுகாலம் தடைசெய்து தண்டிக்கப்பட்ட (black listed)ஒன்றுஎன்பதுகுறிப்பிடத்தக்கது.

இதையெல்லாம்கேட்டால்யாரிடமும்பதிலில்லை.கேட்க முயல்[பவர்கள் கடுமையாக ஒடுக்கப்படுகின்றனர்..

ஏன் இந்த அவசரம்?

Ennore creek

இதற்கும் மத்திய – மாநில அரசுகளுக்கு மிகவும் நெருக்கமான அதானி நிறுவனம் தொடங்கியுள்ள எண்ணூர் துறைமுகத் திட்டத்திற்கும் ஏதும் தொடர்புண்டா?

நிச்சயமாக உண்டு.சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூர், ஓரகடம் முதலான பகுதிகளில் இன்று மிகப்பெரிய தொழிற்சாலைகள் உருவாகியுள்ளன.ஹூண்டாய், டயோட்டா, நிசான், ஃபோர்டு, ரெனால்ட், மகிந்த்ரா என முக்கியமான பெரும் கார் தொழிற்சாலைகள் எல்லாம் இங்குதான் உள்ளன. ஆண்டொன்றுக்கு 1,50,000 கார்கள் இங்கிருந்து இந்தியாவெங்கும் விரைவாகக் கொண்டு செல்லப்பட வேண்டிய தேவை அவர்களுக்கு உள்ளது. அதிக வேகத் திறன் சாத்தியமுள்ள சாலைகளும், அவற்றோடு இணைக்கப்பட்ட  பெரும் சரக்குக் கப்பல்கள் நிற்கக் கூடிய துறைமுகமும் இன்று அதற்குத் தேவை.

ஏன் இந்தத் தொழிற்சாலைகள் எல்லாம் தமிழ்நாட்டில் குவிகின்றன?

BL2401GIMADANI

இங்கு குறைந்த கூலிக்குத் தொழிலாளிகள் தம் உழைப்பை விற்கத் தயாராக உள்ளனர்.முதலாளிகளுக்குச் சாதகமான தொழிற் சட்டங்கள் உள்ளன.பாதுகாப்பு தொடர்பான உற்பத்திகளில் 100 சத வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கு இன்று மோடி அரசு அனுமதி அளித்துள்ளது.பாதுகாப்பு தொடர்பான இராணுவ ஆயுத உற்பத்திசாலைகளும் (Defence Industrial Corridor) இங்கு வர உள்ளதாக சென்ற பிப்ரவரி 2018ல் அறிவிக்கப்பட்டதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இது தவிர திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கவுதி மலை, வேடியப்பன் மலை மற்றும் சேலத்திலுள்ள கஞ்சமலை ஆகியவற்றில் மிகவும் தரமான இரும்புத் தாதுக்கள் கிடைக்கின்றன. இவ்ற்றைக் குறிவைத்துள்ள ஜின்டால் போன்ற எஃகு உற்பத்தி நிறுவனங்களுக்கு அவற்றைக் கொண்டு செல்ல வேகப் பாதைகளும், பெருந்துறைமுகங்களும் இன்று தேவைப்படுகின்றன.

தமிழ்நாட்டைத் தங்களின் சொர்க்க பூமி எனச் சமீபத்தில் (ஜன 2019)சென்னையில் நடைபெற்ற ‘உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்’ கரன் அதானி நாக்கில் நீர் வடியச் சொன்னதை இந்தப் பின்னணியில்தான் நாம் காணவேண்டும்..

3

சர்ச்சைக்குரிய இந்த எட்டுவழிச் சாலையை உள்ளடக்குகிற இவர்களின் ‘பாரத்மாலா’ திட்டம் 2017 ஆக 25 அன்று இறுதி செய்யப்பட்டது.50,000 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு (National Highways Development project-NHDP) அடுத்த நிலையில் உள்ள ஒரு மிகப்பெரிய திட்டம் இது.

nirmala

பாரத்மாலா திட்டத்தின் பிரதான நோக்கம் துணைக்கண்டம் முழுவதும் உள்ள பெரு நிறுவனங்களின் சிறப்புப் பொருளாதார மணடலங்கள் (economic corridors) எல்லாவற்றையும் தொலை தூர எல்லைப் புறங்களுடன் இணைப்பதுதான்.இது இரகசியமல்ல. வெளிப்படையாகவே இதை அவர்கள் சொல்கின்றனர். எடுத்துக்காட்டாக சேலம் – மதுரை நால்வழிச்சாலையை பாரத்மாலா திட்டத்தின் கீழ் விரிவாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு எடப்பாடி எழுதிய கடிதத்தில் அதன் மூலம் இவ்வழியில் உள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட இத்தகைய பொருளாதார மண்டலங்கள் இணைக்கப்படும் என்பதைத்தான் தன் கோரிக்கைக்குச் சாதகமாக முன்வைக்கிறார். பொருளாதார மண்டலங்களில் கடை விரித்திருக்கும் கார்பொரேட்களுக்கு வேகச் சாலை வசதிகளைச் செய்து தருவது மட்டுமல்ல இந்தச் சாலிகளின் ஊடாக இந்தியத் துணைக் கண்டத்தின் எந்த மூலைக்கும் எளிதாக இராணுவ நகர்வுகளும் சாத்தியப்பயடும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறு 9000 கி.மீ தொலைவுகளில் ஆங்காங்கு அமைந்துள்ள பொருளாதார மண்டலங்களை இணைப்பதோடு முடிவடையும் விஷயம் அல்லது. இத்துடன் இச்சாலைகளிலிருந்து  வெளியே எடுத்துச் செல்ல 6000 கி.மீ நீளத்திற்குச் சாலைகள் (Inter corridors), இந்தச் சாலையை அடைவதற்காக இன்னொரு 5000 கி.மீநீளத்திற்குச் சாலைகள் (feeder corridors) ஆகியனவும் அமைக்கப்படும்.

இவை மட்டுமல்ல. நீண்ட கடற்கரையுள்ள இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள ஏராளமான துறைமுகங்களுடனும் இந்த பாரத்மாலா சாலைகள் இணைக்கப்படும்.தொடர்வண்டித் தொடர்புகளும் ஏற்படுத்தப்படும்.அந்த வகையில் பாரத்மாலாவும் சாகர்மாலாவும் ஒன்றோடொன்று இணைக்கப்படும்.வாஜ்பேயீ ஆட்சிக் காலம் தொட்டே இத்திட்டங்கள் தீட்டப்பட்டதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

4

இப்படியான நெடுஞ்சாலைகளை அமைப்பதென்பதன் மூலம் சாலைகள் அமையும் விவசாய நிலங்கள் அழிவது மட்டுமல்ல வேறு பல ஆபத்துகளும் அதனால் உண்டு.மழைக் காலங்களில் பெய்யும் மழை நீர் காலங் காலமாக ஒரு திசையிலிருந்து இன்னொரு திசையை நோக்கி ஓடி, அதன் மூலம் உருவாகியுள்ள ஒரு நீரோட்டச் சமநிலையும்  அந்த நீர்ப்பா பாதைகளுக்குக் குறுக்கே போடப்படும் இச்சாலைகளால் அழியும், இது ஒரு பக்கம் வரட்சிக்கும், இன்னொரு பக்கம் வெள்ள ஆபத்துகளுக்கும் காரணமாகும்.

சென்ற மாதம் சென்னையில் ஏகப்பட்ட விளம்பரங்களுடன் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாட்டில் அதானி நிறுவனம் சார்பாகக் கலந்து கொண்ட கரன் அதானி பேசும்போது தாங்கள்செய்யப்போகிற 12,000 கோடிரூமுதலீட்டில் 10.000 கோடிரூஎண்ணூர் – காட்டுப்பள்ளிதுறைமுகவிரிவாக்கம்மற்றும் தொழில்பூங்காக்கள்அமைத்தல், பாதுகாப்புத்துறைமுதலீடுகள்ஆகியவற்றுக்கும் செலவிடப்படும்எனவும்மீதி 2000 கோடிநகரத்தில்எரிவாயுவினியோகம்செய்வதற்குச்செலவிடப்படும்எனவும்எனவும் அறிவித்துள்ளதும் கவனத்துக்குரியது..

தமிழ்நாட்டில்அதானிகுழுமம்கால்பத்தித்துஏழாண்டுகள்ஆகிவிட்டன.2018ல்காட்டுப்பள்ளிதுறைமுகத்தைஅது L & T நிறுவனத்திடமிருந்துவெறும் 1950 கோடிக்குவாங்கியது.தற்போதுஅதன்திறன் 26.5 மில்லியன்டன் சரக்கைக் (cargo) கையாள்வதாகத்தான் உள்ளது.அதை 320 மில்லியன்டன்அளவு சரக்கைக் கையாளக்கூடியதாகஉயர்த்துவதுதான்அவர்களின்நோக்கமாம், மொத்தமாகஇதற்கெனச்செலவிடப்போகும்முதலீடு 52,400 கோடிஅளவுஇருக்குமாம். கப்பல் கட்டுவது, பழுதுபார்ப்பது முதலான வேலைகளும் அங்கு மேற்கொள்ளப்படுமாம்.

6f1cf011abee274315261eee46408747

Marine Infrastructure Developer Pvt Ltd (MIDPL) எனும் பெயரில் இயங்கும் அதானியின் இந்தத் துறைமுகத்திட்டம் மிகப் பெரிய அளவில் எண்ணூர் பகுதியில் உள்ள நீர்நிலைகள், நீரோட்டம் ஆகியவற்றைப் பாதிக்க உள்ளதை சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். மேற்குறித்த இந்த காட்டுப்பள்ளி துறைமுகத் திட்டத்திற்கு 2120 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது..இதில் 440 ஹெக்டேர் நிலத்தைப் புதிதாக உருவாக்க உள்ளனர்.இதற்காக அந்த அளவு கடல் மணல் தோண்டி எடுக்கப்பட்டு எண்ணூர் கடற்கழியில் (Ennore Creek) கொட்டப்படும் என்கின்றனர்.இப்படிக் கொசத்தலையார் – எண்ணூர் கடற்கழி (Ennore Creek) பகுதிகளின் இயல்புச் சமநிலை குலையும் அளவிற்குப் புவியியல் மாற்றங்கள் அங்கு மேற்கொள்ளப்பட உள்ளன.பழவேற்காடு ஏரிக்கும் கொசத்தலையாறு – எண்ணூர் கடடற்கழிக்கும் இடைப்பட்ட அழகிய இயற்கை அமைவு பெரிய அளவு பாதிக்கப்படும் எனச் சுற்றுச் சூழல் அறிஞர்கள் எச்சரிக்கின்றனர்.2020 வாக்கில் பெரிய அளவு சென்னை நkaரம் முழுவதும் குடிநீர்ப் பற்றாகுறைக்கு ஆளாகும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட 1996ம் ஆண்டு ‘கடற்கரைப் பகுதி நிர்வாகத் திட்டம்’ (Coastal Zone Management) இப்பகுதி முழுவதையும் எந்த வளர்ச்சித் திட்டமும் செயல்படுத்தப்படக் கூடாத பகுதியாக (No Development Zone) அறிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது. ஆனால் இதுபற்றி எல்லாம் எந்தக் கவலையும் இன்றி இன்று அங்கே இரு துறைமுகங்கள் (அதானி மற்றும் காமராஜர் துறைமுகம்), ஒரு நிலக்கரி மின் ஆலை, ஒரு கடல் நீரைக் குடி நீராக மாற்றும் ஆலை எல்லாம் வரப் போகின்றன.

ஒரு நாளைக்கு 30 மில்லியன் லிட்டர் திறன் உள்ள குடிநீர்ச் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றும் அமைக்கப்படுகிறது.அது நாளொன்றுக்கு 75 மில்லியன் லிட்டர் கடல் நீரை உறிஞ்சி, 45 மில்லியன் லிட்டர் கடும் உப்பு நீரைக் கடலுக்குள் மீண்டும் செலுத்தப் போகிறது.இதனூடாகப் பெரிய அளவில் இங்கு மீன்வளம் குறைந்து மீனவர்களின் வாழ்வு சீரழிய உள்ளது.

6000 பேருக்கு மேல் இந்தத் திட்டங்களின் ஊடாகவேலைவாய்ப்பு உருவாகும் என்கிறார்கள்.இந்த வேலை வாய்ப்புக் கதையாடல் மிகப் பெரிய ஏமாற்று. உற்பத்தித் துறையும், விவசாயமும், மீன்பிடித் தொழிலும் அழிந்து கொண்டிருப்பதன் ஊடாக ஏற்படும் வேலை இழப்புகளோடு ஒப்பிடும் போது இந்த ஆறாயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்கிற கதையெல்லாம் அபத்தம். தங்கள்நிலத்தையும், நிலத்தின்வளத்தையும் இழந்த மக்களுக்கும், பாரம்பரியமாக மீன்பிடித்தொழில் செய்து சுயேச்சையாக வாழ்ந்து வந்த கடல் தொழிலாளிகளுக்கும் இவர்கள் என்ன வேலை தரப்போகிறார்கள்?

5

 

இவர்களின் ‘இந்த’ வளர்ச்சித் திட்டங்கள் எல்லாம் எப்படி ஒன்றோடொன்று இணைந்துள்ளன என்பதைப் புரிந்துகொள்ளத்தான் நாம் இவ்வளவையும் சொல்ல வேண்டி உள்ளது.பாதிக்கப்படப் போவது விவசாயிகள் மட்டுமல்ல. எல்லோரும் பாதிக்கப்படப் போகிறோம்.உடனடியாகப் பாதிக்கப்படப் போகிறோம்.நகர்ப்புறங்களில் வாழும் மத்தியதர வர்க்கத்தினர் இதை உணர வேண்டும்.

 

பிப்ரவரி 16, 2019

 

 

மணிமேகலையின் ஊடாகப் பண்டைய தமிழ் நகரங்கள் குறித்து ஒரு குறிப்பு

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 27                    

அளவை வாதம் (பிரமாணங்கள்) தொடங்கி, சைவம், பிரமவாதம், வைணவம், வைதீகம், ஆசீவகம், நிகண்டவாதம், சாங்கியவாதம், வைசேடிகம், பூதவாதம் என அன்று தமிழ் மக்கள் மத்தியில் பேசப்பட்ட இந்தப் பத்து மதங்கள் குறித்தும் அடுத்தடுத்து உரையாடல்கள் மூலமாக மணிமேகலை அறிந்துகொண்டாள் ஆயினும் இறுதியில் ஐவகைச் சமயமும் அறிந்தனள் எனச் சாத்தனார் அவற்றை ஐந்து மதங்களாகச் சுருக்கி முடிப்பதற்கு வேறு சில விளக்கங்களையும் உரை ஆசிரியர்கள் கூறுகின்றனர். அளவைவாதம், சைவம், பிரமவாதம், வைணவம், வைதிகம் ஆகியவற்றை ஒன்றாகவும், ஆசீவகத்தையும் நிகண்டவாதத்தையும் ஒன்றாகவும், ஏனைய சாங்கியம், வைசேடிகம், பூதவாதம் ஆகிய மூன்றையும் தனித்தனியாகவும் கொண்டு ஐவகைச் சம்யங்கள் எனச் சாத்தானார் கூறியிருக்கலாம் என்பது ஒரு கருத்து. உலகாயதம், பௌத்தம், சாங்கியம், நையாயிகம், வைசேடிகம், மீமாம்சம் ஆகியவற்றை அறுவகைச் சமயங்கள் எனப் பொதுவில் குறிக்கப்படுவதை அறிவோம். இதில் பௌத்தம் தவிர்த்த மற்றவற்றை ஐவகைச் சமயங்கள் என சாத்தனார் குறித்தார் எனச் சொல்வதும் உண்டு. அப்படியாயின் இங்கு உரையாடல்களுக்கு உள்ளாகும் இந்தப் பத்தையும் எவ்வாறு ஐந்தாக வகைப்படுத்துவது? அளவை வாதம், சைவம், வைணவம் ஆகியன நையாயிகத்திற்குள்ளும், பிரமவாதம், வேதவாதாம் ஆகிய இரண்டையும் மீமாம்சகத்திற்குள்ளும், பூதவாதத்தை உலகாயதமாகவும் அடக்கி ஐவகைச் சமயம் என அன்றைய வழக்கு கருதி சாத்தனார் கூறினார் எனக் கொள்ளல் வேண்டும் என்பார்கள் இந்த விளக்கத்தை அளிப்பவர்கள். ஆனால்ஆசீவகமும், நிகண்ட வாதமும் இவ் விளக்கத்தில் அடங்காது.வஞி 1

“ஆற்றுளிக் கிளந்த அறுவகைச் சமயமும்” எனபெருங்கதை ஆசிரியர் கொங்குவேளிர் குறிப்பிடுவதும் (பெருங்கதை 1.36-242) இங்கே கருதத்தக்கது. எல்லாவற்றையும் இணைத்துப் பார்க்கும்போது இக் காப்பிய காலகட்டத்தில் இருந்த இந்த அறுவகைச் சமயங்கள் என்பனவற்றில் முந்தைய பாசுர காலச் சமயங்களிற் சிலவான பாசுபதம், கபாலிகம் முதாலானவை அருகிவிட்டன என்பது விளங்குகிறது. வைதிகம் என்பது சைவமாகவும், வைணவமாகவும் பிரிந்து நிற்பதும் புரிகிறது. அளவைவாதமும் பின் முற்றாக மறைந்துவிடுகிறது. மணிமேகலையில் காணப்படும் இந்தச் சமயங்களுள் பௌத்தம் இங்கு இன்று சொல்லத்தக்க அளவில் இல்லையென்ற போதிலும் சீனம், ஜப்பான், இலங்கை, தெற்காசிய நாடுகள் ஆகியவற்றில் அது செழித்துள்ளது. இந்தியத் துணைக் கண்டத்தில் சமணம் (நிகண்ட வாதம்) ஒரு சிறிதளவு தன் இருப்பைத் தக்கவைத்துள்ளது. தமிழகத்தில் ஏராளமான சமணக் கோவில்கள் இன்றும் உள்ளன. வந்தவாசி பகுதி இதில் குறிப்பிடத் தக்கது. சுமார் நாற்பதாயிரம் சமணர்கள் தமிழகத்தில் தர்போது உள்ளனர். வந்தவாசிக்கு அருகில் உள்ள பொன்னூர் மலையில் திருவள்ளுவரின் பாதகமலங்கள் வடிக்கப்பட்டு வணங்கப்படுகின்றன. வள்ளுவரை அவர்கள் ஆசார்யஸ்ரீ குந்தகுந்தர் என அழைக்கின்றனர்.

இனி மணிமேகலையைத் தொடர்வோம்.

சமயக்கணக்கர்களின் திறன்கேட்டறிந்த மணிமேகலைக்குத் “தாயரோடு அறவணர்” நினைவு வருகிறது. தாயர் எனப் பன்மையாய்க் குறிப்பிடுவதிலிருந்து அவள் சுதமதியையும் ஒரு தாயாகவே மதிப்பதை விளங்கிக் கொள்கிறோம். வஞ்சி மாநகரின் அரணைச் சுற்றியமைந்த ஆரவாரம் மிக்க புறஞ்சேரியை மணிமேகலை கடந்து சென்ற காட்சியைச் சாத்தனார் விரிவாகச் சொல்கிறார். காப்பியத்திற்குரிய மிகைக் கூறுகளுடன் கூடியதாயினும் அக்கால நகர்ப்புற வாழ்வைப் புரிந்துகொள்ள இப்பகுதி நமக்குப் பயன்படும்.

அரணைச் சுற்றியுள்ள அகழியில் விடப்பட்டுள்ள மீன்கள், முதலைகள் முதலான நீர் வாழ் இனங்கள் அவற்றுக்குரிய புலால் நாற்றமின்றி நறுமணத்துடன் திகழ்ந்தாகச் சாத்தானார் குறிப்பிடுவார். நகர்ப்புறத்திலுள்ள வீடுகள் மற்றும் தொழுகைத் தலங்களிலிருந்து நீர்த்தூம்புகளின் வழியே ஓடிவரும் வாசனைத் திரவியங்கள் செறிந்த நீரே அதற்குக் காரணம் என்பார் புலவர். நீர் தேங்காமல் ஓடுமாறு எந்திரங்கள் பொருத்தப்பட்ட நீர்வாவிகள், பகைவர் மீது ஆயுதங்களை  எறியும் பொறிகள் அமைக்கப்பட்ட கோட்டைக் கதவுகள், அழகிய மலர்கள் பூத்துக் கிடக்கும் அகழி நீர் எனக் கவித்துவ விவரணங்களுடன் கூடிய பகுதி இது. மன்னவனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள், ஆங்காங்கு நீர்ப்பந்தல்கள், பூசிக் குளித்த வாசனைத் திரவியங்கள் வழிந்தோடி வரும் வளம்மிக்க இல்லங்கள், கைகளிலிருந்து மணம் மிக்க நீர் சொட்டும் பௌத்த உபாசகர்கள் நிறைந்த அந்த நகர்ப்புறத்திலிருந்து ஓடிவரும் அந்த நீரெல்லாம் வடியும் அகழி சூழ்ந்த பிரும்மாண்டமான கோட்டைக் கதவின் வழியே நகரினுள் புகும் மணிமேகலை காணும் நகரக் காட்சி இங்கே குறிப்பிடத் தக்க ஒன்று. காவற்காடுகளைத் தாண்டித்தான் அந்தக் கோட்டையை அணுக முடியும்.

நகருக்குள் நுழைந்தவுடன் காணப்படுவது காவலர்களின் இருப்பிடங்கள் அமைந்த அகன்ற வீதி. தொடர்ந்து மீன் மற்றும் உப்பு வணிகர்கள், கள் விற்கும் பெண்கள்,, பிட்டு, அப்பம் முதலான உணவுப் பொருட்களை விற்போர், இறைச்சி, வெற்றிலை, வாசனைப் பொருட்கள் விற்போர் ஆகியோரது வீதிகள் அமைந்துள்ளன. இப்படியான காட்சி மதுரைக் காஞ்சி முதலான சங்க நூல்களிலும், சிலப்பதிகாரத்திலும் உண்டு. அடுத்து சாத்தனார் பல்வேறு தொழிலாளிகளின் வீதிகள் அமைந்துள்ளதைப் பதிகிறார். இருங்கோவேள்கள் எனப்பட்ட மண்கலங்கள் ஆக்கும் குயவர்கள், செப்புப் பாத்திரங்கள் செய்வோர், வெண்கலக் கன்னார்கள் (கஞ்சகாரர்), பொன்செய் கொல்லர் ஆகியோரது வீதிகள் உள்ளன. மரத் தச்சர், சுண்ணாம்பு (சுதை) முதலான மண் கொண்டு உருவங்கள் சமைப்போர், வரந்தரு கடவுள் உருவம் வடிக்கும் சித்திரக்காரர், தோலைப் பதனிட்டுப் பொருட்கள் செய்வோர், தையற் கலைஞர்கள், மாலை தொடுப்போர், காலத்தைக் கணித்துச் சோதிடம் சொல்வோர், பண்ணும் இசையும் அறிந்த பாணர்கள்- என இப்படி அடுத்தடுத்து அமைந்த பலரது வீதிகளையும் பட்டியலிடுவார் புலவர்.

அடுத்து அரம் கொண்டு சங்கை அறுத்து அணிகலன் செய்வோரும் முத்துக்களைக் கோர்த்து ஆபரணங்கள் வடிப்போரும் சேர்ந்து வாழும் தெரு குறிப்பிடப்படுவதைக் காணும்போது., இதுகாறும் சொல்லப்பட்ட பல்வேறு தொழிலாளி மற்றும் வியாபாரிகளின் வீதிகள் தனித்தனியே இருந்தன என்பது உறுதியாகிறது.. அரம் கொண்டு அறுத்து வளையல்கள் செய்யும் வேதம் ஓதாத பார்ப்பனர்கள் குறித்து சங்கப் பாடலொன்றில் உள்ள பதிவு ஒன்று இங்கு ஒப்பு நோக்கத் தக்கது (“வேளாப் பார்ப்பான் வாள் அரந் துமித்த வளை”- அகம். 24).

அடுத்து உயர்ந்தோர்க்கு ஆடும் கூத்து (வேத்தியல்), மற்றும் ஏனைய சாதாரண மக்களுக்கு ஆடும் கூத்து (பொதுவியல்) ஆகிய இரண்டின் தன்மையும் அறிந்த நாட்டிய மகளிர் மறுகும் வீதி குறிப்பிடப்படுகிறது. இப்படி கூத்து உயர்ந்தோர்க்கானது, சாதாரண மக்களுக்கானது என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலை அப்போது இருந்ததை மணிமேகலை பிறிதோரிடத்திலும் குறிப்பிடுகிறது (2.18).

எண்வகைத் தானியங்களும் தனித்தனியே குவிக்கப்பட்டுள்ள கூலக் கடைத்தெரு, சூதர் மற்றும் மாதகர் வசிக்கும் தெரு ஆகியன அடுத்து காணப்படுகின்றன. சூதர் எனப்படுவோர் ‘நின்றேத்துபவர்’ எனவும் அழைக்கப்படுவர். இவர்கள் அவ்வப்போது அரசனின் பெருமைக்குரிய செயல்களைப் புகழ்ந்து பாடுபவர்கள். அரசன் துயிலெழும்போது இசைப்போரும் இவர்களே. மாதகர் என்போர் ‘இருந்தேத்துபவர்’. இவர்கள் அரசனின் வீரச் செயல்களைப் புகழ்ந்து பாடுவோர். அடுத்து கூறப்படுவது போகத்தை வாரி வழங்கும் பொதுமகளிர் வசிக்கும் தெரு. நாட்டிய மகளிரையும் பொது மகளிரையும் இவ்வாறு தனித்தனியே பிரித்துரைப்பதும், அவர்கள் தனித்தனி வீதிகளில் வசிப்பதும் கவனிக்கத் தக்கன.

நூலால் நெய்யப்பட்டவை எனக் கண் பார்வையில் கண்டறிய இயலாத அளவிற்கு நுண்மையான வண்ண ஆடைகளை நெய்வோர், பொன்னை உறைத்து அது மாத்துக் குறையாததா எனக் காணும் பொற்திறன் காண்போரின் மனைகள் இருக்கும் வீதிகள், பல்வகை மணிகளை விற்போரின் வீதிகள் சொல்லப்படுகின்றன.4

அடுத்து மறையவர்களின் அருந்தொழில் குறையாது விளங்கும் தெரு, அரசாளுகை மற்றும் அமைச்சியல் ஆகிய பெருந்தொழில் செய்வோர்களின் வீதிகள் உள்ளன. வேதம் ஓதுதல் அருந்தொழிலாகவும், அரசாளுகை பெருந்தொழிலாகவும் போற்றப்பட்டு அவர்கள் வாழும் வீதிகள் அடுத்தடுத்து அமைந்துள்ளதையும் காண்கிறோம். தொடர்ந்து நகர்மன்றங்கள், அம்பலங்கள், சந்திகள், சதுக்கங்கள் ஆகியவை அமைந்துள்ளன.

இறுதியாகப் புதிதாகக் கொணரப்பட்ட யானைகளையும், பொன்மணிகள் சூடிய குதிரைகளையும் பயிற்றுவிக்கும் பயிற்சியாளர்களின் அழகிய வீதி ஆகியவற்றைக் கண்டவாறே சென்றாள் மணிமேகலை.

மிக்க உயரத்திலிருந்து அருவி ஒன்று தாழ வீழுமாறு வடிக்கப்பட்ட ஒரு செய்குன்று, மிக்க ஆர்வத்தை ஊட்டும் நறுமணச் சோலை, தேவர்களும் கூடத் தம் வானுலகை மறந்து வந்தடைய நினைக்கும் நன்னீர் இடங்கள், சாலை, கூடம், பொன்னம்பலம், கொள்கைகளை விளக்கி வரையப்பட்ட காட்சிகள் என எல்லாவற்றையும் கண்டு மகிழ்ந்தாள் மணிமேகலை என்று வஞ்சி நகர அமைப்பை விளக்கி முடிக்கிறார் சாத்தனார்.

ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டு வாக்கில் தமிழ்நாட்டில் ஒரு நகரம் எவ்வாறு அமைந்திருந்தது என்பதை அறிய நமக்கு இக்காட்சிகள் பெரிதும் உதவுகின்றன. சிலப்பதிகாரத்தின் ‘இந்திரவிழவூரெடுத்த காதை’ இத்துடன் ஒப்பு நோக்கத் தக்கது. அது புகார் நகர அமைப்பை விரிவாகச் சொல்கிறது. மணிமேகலையின் இக்காதையில் விளக்கப்படும் வஞ்சிமாநகருக்கும், சிலப்பதிகாரத்தின் இந்திரவிழவூரெடுத்த காதையில் விளக்கப்படும் நகர அமைப்பிற்கும் ஒற்றுமைகளும் உண்டு, வேறுபாடுகளும் உண்டு. அது இயற்கையே. ஒரு நகரைப் போலவே மற்றோர் நகரம் அமைய இயலாது. அதே நேரத்தில் ஒரு காலகட்டத்தில் அருகருகே உள்ள இரு நகரங்களுக்கும் இடையே பல பொதுமைகளும் இருக்கத்தான் செய்யும்.

சேர மன்னர்களின் தலைநகரமான வஞ்சி நகர் எங்கிருந்தது என்பது இன்னும் உறுதியாகசக் கண்டறியப்படவில்லை.. கொங்குநாட்டுக் கரூர், கொடுங்காளூர் முதலியனதான் வஞ்சியாக இருந்திருக்கலாம எனக் கூறப்படுகிறது. இன்றைய திருவனந்தபுரம் அருகில்தான் வஞ்சி இருந்ததெனச் சொல்வாரும் உண்டு. இளங்கோவடிகளின் காவிரிப்பூம்பட்டினத்தையும் (புகார்), சாத்தனாரின் வஞ்சியையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இரு நகரங்களிலும் செழித்திருந்த பல்வேறு தொழில்கள் குறித்து பல ஒற்றுமைகளைக் காண முடிகிறது. சில அதே சொற்களாலேயே குறிப்பிடப்படுகின்றன. பல்வேறு தொழில் செய்பவர்களும் அங்கிருந்தனர் என்றாலும் தொழில் ரீதியாக அவர்கள் ஒரே இடத்தில் குவிந்திருந்தனர் என்பது விளங்குகிறது. ஒரே தொழில் செய்தோர் ஒரே இடத்தில் குவிந்திருந்த நிலை என்பதும் தொழில் ரீதியாக மக்கள் குறிப்பான பெயர்களில் அடையாளம் காணப்பட்டதும் செய்தொழில் அடிப்படையில் சாதிகள் கட்டமைக்கப்பட்டதை உறுதி செய்கின்றன.

இரு காப்பியங்களிலும் காணக் கிடைக்கும் இரு நகரங்களையும் ஒப்பிடும்போது தெரியும் ஒரு வேறுபாடு இங்கே கருதத்தக்கது. இளங்கோவடிகளின் புகார் நகரில் வெளிநாட்டார் குடியிருப்பு, குறிப்பாக யவனக் குடியிருப்பு சுட்டப்படுகிறது. பல்வேறு தொழில் செய்வோர்கள் குறித்து நாம் இவ்விரண்டு நூல்களிலும் காணும் ஒற்றுமையை வெளிநாட்டார் குடியிருப்பில் காண இயலவில்லை. அப்படியான குடியிருப்புகள் எதுவும் சாத்தனாரின் வஞ்சியில் சுட்டப்படவில்லை. இதனூடாக சேரநாட்டின் தலைநகராகக் கருதப்படும் வஞ்சிமாநகர் ஒரு கடற்கரை நகரமல்ல எனும் முடிவுக்கு நாம் வர ஏது உண்டு.

இரண்டு காப்பியங்களிலும் காணப்படும் இந்த வேறுபாடு போல இன்னொரு ஒற்றுமையும் இங்கே குறிப்பிடத் தக்கது. இரண்டிலும் புத்த சேதியங்கள் இருந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரில் பௌத்த வணக்கத் தலங்களோடு சமண ஆலயங்களும் இருந்ததை இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். சங்க காலத்திற்குப் பிந்திய தமிழகத்தில் பௌத்த, சமண அவைதீக மதங்களின் இருப்பிற்கும், அவை பெரிய அளவில் மக்கள் ஆதரவு பெற்றிருந்தமைக்கும் இன்னொரு சான்றாக இது அமைகிறது.

சங்க காலத்திற்குப் பிந்திய அப்படியான மாற்றங்களில் ஒன்றுதான் புதிதாகக் காஞ்சிமாநகரம் மேலெழுவது. இது குறித்துச் சற்று விரிவாகப் பார்க்கும் முன்பாக வஞ்சியில் நின்று கொண்டுள்ள மணிமேகலையைத் தொடர்வோம்.

தான் கொண்டிருந்த தவமுனி வேடத்துடனேயே வான்வழி பறக்கும் அந்தரசாரிகள் விரும்பிச் சென்று இனிது உறையும் இந்திர விகாரம் போன்ற எழிலுடன் விளங்கும் பௌத்த பள்ளி ஒன்றுக்குச் சென்றாள் மணிமேகலை. குற்றங்களை அறுத்த புத்தனின் நன்னெறிகளை விளக்கி உரைப்போர் உறையும் அறச்சாலை அது.

அங்கே அவள் இப்போது தவநெறி ஏற்று வாழும் தன் தாத்தாவும், கோவலனைப் பெற்றவனுமான மாசாத்துவானைக் கண்டாள். அந்த மாதவனின் பாதம் பணிந்து தான் பாத்திரம் கொண்டு உலகோர் பசியறுத்து வருதலையும், அப்பணியைத் தன் முற்பிறவியிற் செய்த ஆபுத்திரன் இன்று உலகாளும் நிலை பெற்றிருப்பதையும்,  அவனைச் சந்தித்துத் தான் மணிபல்லவத் தீவிற்கு அழைத்துச் சென்று அவன் முற்பிறப்பு உணர்த்தியது, காவிரிப்பூம்பட்டினம் அழிந்ததை ஒட்டி அறவணர், மாதவி, சுதமதி ஆகியோர் வஞ்சிக்கு வந்துள்ளதைத் தான் அறிந்தது, வஞ்சியில் தான் சமயக் கணக்கர் திறம் கேட்டறிந்தது, எனினும் அவற்றில் தான் நம்பிக்கை கொள்ளாதது, இனி தான் புத்த நெறியை அறிந்துய்ய அறவண அடிகளைத் தேடி அங்கு வந்தது எல்லாவற்றையும் விளக்கினாள்.

(அடுத்த இதழில்  மணிமேகலை அறவணருடன் காஞ்சி சென்று தவத்திறம் பூண்டு புத்த தருமம் கேட்ட கதை)