ஜெயகாந்தன் : சில நினைவுகள்

“மதவாத மற்றும் சாதீய சக்திகளுக்கு வாக்களிக்காதீர்” என்கிற எழுத்தாளர்களின் வேண்டுகோள் அறிக்கையில் கையொப்பம் பெற ஒவ்வொரு நண்பர்களாகப் பேசிக்கொண்டிருந்தேன். நான் மிகவும் மதிக்கும் மூத்த இதழாளர் துரைராஜ் அவர்கள் ஃப்ரன்ட்லைன் இதழிலிருந்து ஓய்வு பெற்று திருச்சியில் உள்ளார். அவருடன் உரையாடுவது எப்போதும் மனநிறைவைத் தரும் ஒரு அனுபவம். ஜெயகாந்தன் அவர்களின் நல்ல நண்பர்களில் ஒருவர் அவர்.

எந்தத் தயக்கமும் இன்றி அறிக்கையில் பங்கு பெற ஒப்புதல் அளித்த துரைராஜ் அவர்களுடனான உரையாடல் வழக்கம்போல ஜெயகாந்தன் அவர்களது உடல் நல விசாரிப்பை நோக்கி நகர்ந்தது. திடீரென எனக்கு ஒரு யோசனை. இந்த அறிக்கையில் முதல் கையொப்பதாரியாக ஜெயகாந்தன் இடம் பெற்றால் எப்படி இருக்கும்? எளிய மக்கள் எல்லோரையும் எழுதிய, நேசித்த அவருக்கு இதில் கையொப்பமிட என்ன தயக்கம் இருக்க இயலும்?

“செய்யலாமே”, உடனே போய்ப் பார்க்க உற்சாகம் அளித்தார் துரைராஜ். ஆனால் ஜெயகாந்தனைத் தனியாகப் போய்ப் பார்க்கும் தைரியம் எனக்கிருந்ததில்லை. இதுவரையிலும் மேடைகளில் மட்டுமே அவரைக் கண்டவன் நான். நான் தயங்கியதைக் கண்ட அவர் சொன்னார்: “உங்களை அவருக்கு நல்லா தெரியும். தினமணியில் வந்த உங்களின் காந்தி பற்றிய கட்டுரையைப் படிச்சிட்டு, மார்க்ஸ் காந்தி பற்றி எழுதினதை எல்லாம் தொகுத்து புத்தகமாப் போடணும்னு சொல்வாரே..” என்றார்.

துரைராஜ் இதைச் சொல்வது இரண்டாம் முறை. முதல்முறையைப் போலவே இப்போதும் நெகிழ்ந்து நீரானேன். எனது எழுத்துப் பணிக்கு இதைத்தவிர வேறென்ன பெரிய விருது எனக்குக் கிடைத்து விட இயலும்? அப்படி அவர் சொன்னதற்குப் பின் காந்தி பற்றி ஒரு முழு நூல் நான் எழுதியுள்ளது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை,

######

எங்கள் ஊருக்கு (பாப்பாநாடு) அப்போதெல்லாம் ‘குமுதம்’, ‘ஆனந்த விகடன்’, ‘தினமணி கதிர்’ எல்லாம் தபால் பார்சல்களாகத்தான் வரும். பஞ்சநாதம் என்பவர் ஏஜன்ட். நாளிதழ்கள் பஸ்களில் பார்சாலாக வரும். குமுதம், விகடன், கதிர் தவிர தமிழ்வாணனின் ‘கல்கண்டு’ ஆகிய வார இதழ்களையும் ‘தினமணி’, ‘எக்ஸ்பிரஸ்’ நாளிதழ்களையும் வீட்டுக்கு வரவழைப்பார் அப்பா. கருத்துக்கள் பிடிக்காத போதும் அன்றைய தினமணி ஆசிரியர் ஏ.என்.சிவராமனின் ‘கணக்கன்’ கட்டுரைகளை தினம் அவர் படிக்கத் தவற மாட்டார். அப்புறம் ‘சோவியத் நாடு’, ‘தாமரை’ ஆகியனவும் வரும். ராமசாமி அவர்களின் ‘நாத்திகம்’ இதழும் வரும். ‘எக்ஸ்பிரசை’ எனக்கெனவே அவர் வாங்கியபோதும் நாளிதழ் படிப்பதில் அப்போது எனக்கு ஆர்வமில்லை.

‘குமுதம்’, ‘விகடன்’ ஆகியவைதான் நான் விரும்பிப் படிப்பவை. அழகிய படங்களுக்காக ‘சோவியத் நாடு’ இதழைப் படித்துவிட்டுக் கடையில் போடாமல் பாதுகாத்து வைத்திருப்பேன். வியாழன், சனி என நினைவு. இந்த நாட்களில்தான் அப்போது குமுதம், விகடன் வரும். போஸ்ட் ஆபீசில் காத்திருப்பேன். பஞ்சு சற்றுத் தாமதமாகத்தான் வருவார். பார்சலைப் பிரித்தவுடன் தரவும் மாட்டார். அவர் ஒரு ‘சீல்’ வைத்திருப்பார். “பஞ்சநாதம்/குமுதம், விகடன் ஏஜன்ட்/திருமங்கலக் கோட்டை காலனி” என ஒவ்வொன்றிலும் முத்திரை பதித்த பின்தான் சிரித்துக் கொண்டே இதழை என்னிடம் நீட்டுவார்.

உடனே வீட்டுக்குப் போய்விட மாட்டேன். ஒரு மரத்தடியில் நின்று தொடர்கதைகளை எல்லாம் படித்துவிட்டுத்தான் போவேன். வீட்டில் அம்மாவும், பெரிய தங்கையும் காத்திருப்பார்கள். சாண்டில்யன் (யவன ராணி), சேவற்கொடியோன், மணியன், ரா.கி.ரங்கராஜன் (இது சத்தியம்), தமிழ்வாணனின் துப்பறியும் கதைகள் (பத்து பேர்கள் தேடிய பத்துக் கோடி), சி.சுப்பிரமணியத்தின் பயணக் கட்டுரைகள் (நான் சென்ற சில நாடுகள்), இவற்றோடு பின்னாளில் தி.ஜானகிராமனின் ‘செம்பருத்தி’யையும் கூட நான் இந்த இதழ்களில் (தினமணி கதிர்) தொடர்கதையாகத்தான் படித்தேன். கோபுலுவின் சித்திரங்களுடன் கதிரில் ‘செம்பருத்தி’யை வாசித்தது கண்முன் நிற்கிறது.

அப்போது விகடனில் ஒவ்வொரு வாரமும் ஒரு முத்திரைக் கதை வரும். அந்த வயதில் அந்தக் கதைகள் எனக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. அப்பா என்.சி,பி,எச் சிலிருந்து வாங்கிவரும் ருஷ்ய நாவல்களையும் அவ்வளவாகப் படிக்க ஆர்வம் இருப்பதில்லை. அனாலும் தயாரிப்பு நேர்த்தியில் மயங்கி அவற்றைப் பத்திரமாக வைத்திருப்பேன். விகடன், குமுதம் ஆகியவற்றில் வரும் தொடர்கதைகள் ஏற்படுத்திய ஆர்வம் என்னை துப்பறியும் நாவல்கள் படிப்பதற்கு இட்டுச் சென்றது. எங்கள் ஊர் நூலகத்திலிருந்து ஒன்றிரண்டை எடுத்து வந்து நான் படிப்பது அப்பாவுக்குப் பிடிக்காது. அம்மாவிடம் சத்தம் போடுவார். “வடுவூர் துரைசாமி அய்யங்கார் நாவல்களையாவது படிக்கச் சொல்லு. கண்ட துப்பறியும் நாவலையும் படிக்க வேணாம்னு சொல்லு” எனச் சத்தமும் போடுவார். கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ (மணியத்தின் படங்களுடன்), அரு.இராமநாதனின் ‘வீரபாண்டியன் மனைவி’, இவற்றை எல்லாம் கொண்டு வந்து தந்து, “இதையாவது படி, கொஞ்சம் வரலாறாவது தெரிஞ்சுக்கலாம்’ என்பார். அதையெல்லாம் நான் வேகமாகப் படித்து விடுவேன்.

மின் விசிறி, மேசை, நாற்காலி இந்த வசதிகள் எதுவும் இல்லாத அந்த வீட்டில் இவற்றை எல்லாம் வெறி கொண்டு படித்துத் தீர்த்த காலம் அது, அப்படி ஏதோ ஒன்றைப் படித்துக் கொண்டிருந்த போதுதான் பட்டென்று என் முன் விழுந்தது ஒரு விகடன். எதிரே நின்றிருந்த அப்பா கோபமாக. “இதைப் படிச்சியா நீ? படிச்சிருக்க மாட்டே ! இந்த மாதிரி நல்ல கதைகளைப் படிடா. கண்டதைப் படிக்காதேடா” என்று கத்தி விட்டு நகர்ந்தார். அவர் அகன்றவுடன் அதை எடுத்துப் பார்த்தேன். ஜெயகாந்தனின் “யாருக்காக அழுதான்”.

அது ஒரு குறு நாவல். அப்போதெல்லாம் ஆனந்த விகடனில் இப்படி நிறைய குறுநாவல்கள் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு இது போலச் சிறப்பிதழ்களில் வரும். சற்றுப் பெரிதாக இருப்பதாலோ என்னவோ அவற்றையும் நான் ஆர்வமாகப் படிப்பதில்லை. சரி இதைப் படித்துத்தான் பார்ப்போமே எனப் புரட்டத் தொடங்கினேன்.

அது எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது. அப்படியான அநுபவங்கள் மீண்டும் மீண்டும் எனக்குத் தேவையாகவும் இருந்தன. ஜெயகாந்தனின் நூல்களை எல்லாம் தேடித் தேடிப் படித்தேன். அப்பாவின் சேகரங்களில் இருந்த சரத்சந்திரர், காண்டேகர், அப்புறம் அப்பா வாங்கித் தந்திருந்த ருஷ்ய நாவல்கள்… எனக்கு ஒரு புதிய உலகம் திறந்தது,

அந்தச் சின்ன வயதில் ஜெயகாந்தன் மீது எனக்கு ஒரு பித்து ஏற்பட்டிருந்தது, அவர் இந்தக் காலகட்டத்தில் தொடர்கதைகள் எழுதத் தொடங்கினார், தினமணி கதிரில் நிறைய எழுதினார். ‘ரிஷிமூலம்’, ‘சமூகம் என்பது நாலு பேர்’ எல்லாம் கோபுலுவின் படங்களுடன் கதிரில்தான் வந்தன. ஆனந்த விகடனில் அப்போது வந்த அவரது ‘அக்கினிப் பிரவேசம்’ (படம்: மாயா) என்கிற சிறு கதை மிகப் பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது, அதற்கு எதிராக மாற்றுக் கதை ஒன்றையும் யாரோ எழுதினார்கள். பின் ஜெயகாந்தன் அதன் தொடர்ச்சியாகச் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலைத் தொடர்கதையாக எழுதினார். அந்தக் கால்கட்டத்தில் அவர் எழுதிய ‘அந்தரங்கம் புனிதமானது’ வும் .’சமூகம் என்பது நாலு பேர்’ உம் என் மன விசாலத்திற்குப் பெரிதும் காரணமாயின, ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’, ‘பாரீசுக்குப் போ’ முதலியன வெறுப்பற்ற ஒரு உலகம் குறித்த கனவுகளை என்னில் விதைத்தன.

சொன்னால் நம்பமாட்டீர்கள், சொல்வதற்கு வெட்கமாகவும் உள்ளது. பத்திரிக்கைகளில் வரும் ஜெயகாந்தனின் படங்களை மெழுகு வைத்துத் தேய்த்துப் புத்தகங்களில் பிரதி செய்து கொள்வேன். அப்படி ஒரு நூல் என்னிடம் இன்றும் உள்ளது. ‘மார்க்ஸ் ஏங்கல்ஸ் நினைவுக் குறிப்புகள்’ என்கிற ருஷ்ய மொழிபெயர்ப்பு நூல் அது. மார்க்ஸ் இறந்தவுடன் அவரது அக்காலத்திய நண்பர்கள் எழுதியவை உள்ளிட்ட பல கட்டுரைகளும் மார்க்ஸ் ஏங்கல்சின் மிக அழகான படங்களும் நிரம்பிய நூல், வில்லியம் லீப்னெக்ட் போன்றோரின் கட்டுரைகளை முதன் முதலில் அதில்தான் பார்த்தேன். அந்தப் புத்தகத்தில் நான் மெழுகுப் பிரதி செய்த ஜெயகாந்தனின் படம் இன்னும் உண்டு.

தஞ்சாவூர் பேருந்து நிலையத்தின் (இப்போது பழைய பஸ் ஸ்டான்ட்) வெளிப்புறத்தில்  அரை வட்ட வடிவில் அன்று (1965, 66) ஒரு என்.சி.பி.எச் புத்தகக் கடை உண்டு. நான் அப்போது சரபோஜி கல்லூரி மாணவன். ஊருக்குப் போகும்போதும் வரும்போதும் அங்கு சென்று காசிருந்தால் ரசியப் புத்தகங்கள் வாங்குவேன். ஒரு பெரியவர் அங்கிருப்பார், ஜெயகாந்தன் புத்தகங்கள் அங்கிருக்காது. அப்போது மதுரை மீனாட்சி புத்தகாலயம்தான் ஜெயகாந்தன் நூல்களை வெளியிட்டு வந்தது, அந்தப் பெரியவரிடம் ஜெயகாந்தன் புத்தகங்கள் பற்றி விசாரித்தபோது அவர் ரொம்ப எதிர் மறையாக ஏதோ சொன்னார். “அவன் கம்யூனிஸ்ட் கட்சியில இருந்தவரை ஒழுங்கா எழுதிட்டு இருந்தான்; இப்ப கண்ட அசிங்கங்களையும் எழுத ஆரம்பிச்சுட்டான்..” என்றார். இது ஜெயகாந்தன் பற்றி எனக்குக் கிடைத்த முதல் எதிர்மறை விமர்சனம், ஆனால் இது ஜெயகாந்தன் பற்றிய எதிர்மறைக் கருத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக கம்யூனிஸ்டுகளின் பார்வை மீதுதான் ஒரு எதிர்மறைப் பார்வையைத்தான் என்னிடம் ஏற்படுத்தியது. இங்குதான் நான் தஞ்சை பிரகாஷையும் முதலில் சந்தித்தது. அவரைச் சந்திக்கும் யாரும் யாரும் எளிதில் அவருக்குச் சீடராகிவிடுவார்கள். அவருக்கும் அவரது பேச்சுக்கும், அவரது ஆழமான இலக்கியப் பரிச்சயத்திற்கும் யாரையும் வசீகரிக்கும் ஆற்றல் உண்டு, ஆனால் முதல் உரையாடலிலேயே அவர் ஜெயகாந்தனை எடுத்தெறிந்து பேசியது என்னை அவரிடமிருந்து இறுதி வரை விலக்கி வைத்தது.

1967. காங்கிரஸ் வீழ்த்தப்பட்டு தி.மு.க ஆட்சி உருவானது. ஜெயகாந்தனும் கவிஞர் கண்ணதாசனும் அப்போது தீவிரமாகக் காங்கிரசை ஆதரித்துப் பிரச்சாரம் செய்து வந்தனர். காங்கிரசை எனக்குப் பிடிக்காவிட்டாலும் இந்த இருவரையும் எனக்குப் பிடிக்கும். காமாராசரின் காலம் அது. ஜெயகாந்தனை ஆசிரியராகக் கொண்டு அடுத்தடுத்து இரண்டு நாளிதழ்கள் வந்தன; முதலில் ‘ஜெயபேரிகை’, அப்புறம் ‘ஜெயக்கொடி’. நான் அப்போது சரபோஜி கல்லூரி விடுதியில் இருந்தேன். தினந்தோறும் இரவில் விடுதி மேலாளர் நகரத்திற்குச் சென்று காய்கறிகள் வாங்கி வருவார். அவரிடம் காசு கொடுத்து ஜெயபேரிகை வாங்கி வரச் சொல்வதுண்டு. அதில் வரும் ஜெயகாந்தன் கட்டுரைகளைப் படித்து நறுக்கி வைத்துக் கொள்வேன்.

அப்படித்தான் ஒருமுறை, அடுத்த நாள் காலை எனது பட்ட வகுப்பு தமிழ்த் தேர்வு. நான் தஞ்சையில் மேல வீதியும் கிழக்கு வீதியும் சந்திக்கும் முனையில் நடைபெற்றுக் கொண்டிருந்த காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டமொன்றில் ஜெயகாந்தனின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

1968ல் நான் சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.எஸ்சி படித்துக் கொண்டிருந்தபோது அன்றைய முதல்வர் அண்ணா இறந்து போனார், பெருந்திரளான மக்கள் கூட்டம். எங்கும் அண்ணா புகழ். அண்ணாவை ஒரு மக்கள் தலைவர் என்கிற நிலையிலிருந்து விமர்சனகளுக்கு அப்பாற்பட்ட ஒரு திரு உருவாகக் கட்டமைத்து அதன் மூலம் ஒரு நிரந்தர அரசியல் பலனைப் பெறும் முயற்சியைக் கருணாநிதி செவ்வனே செய்தார், அப்போது தமிழகம் முழுவதும் இதைக் கடுமையாக விமர்சித்துப் பேசி வந்தார் ஜெயகாந்தன். “நான் அண்ணாத்துரையை விமர்சிக்கிறேன்” என்கிற தலைப்பில் ஒரு குறு நூலாகவும் அந்தப் பேச்சு அப்போது வெளி வந்தது. அப்படிச் சென்னையில் நடைபெற்ற அத்தனை கூட்டங்களிலும் நான் கலந்து கொண்டேன்.

ஜெயகாந்தனை ஆசிரியராகக் கொண்டு வந்த நாளிதழ்கள் மிகக் குறுகிய காலத்தில் நின்று போயின, அவரது மேடைப் பிரச்சாரங்களும் குறைந்தன. ‘கண்ணதாசன்’ என்கிற பெயரில் ஒரு இலக்கிய இதழை அப்போது கண்ணதாசன் நடத்திக் கொண்டிருந்தார். கண்ணதாசனை மதிப்பிடுகிறவர்கள் அவரது திரை இசைப் பாடல்களை விதந்து பேசுவதே வழக்கம். இந்த இதழ் மூலம் வெளிப்பட்ட அவரது பங்களிப்பை யாரும் பேசுவதில்லை. அரசியல் இல்லாத அந்த முழு இலக்கிய இதழில்தான் ஜெயகாந்தனின் இன்னொரு விவாதத்திற்குரிய முக்கிய படைப்பான ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’ நாவல் தொடர்கதையாக வந்தது. அதன் பின் ஜெயகாந்தனை ஆசிரியராகக் கொண்டு ‘ஞானரதம்’ வெளி வந்தது.

ஜெயகாந்தனின் வளர்ச்சியில் இது மூன்றாவது நிலையின் தொடக்கம். ஒரு கம்யூனிஸ்டாகத் தன் எழுத்துப் பணியைத் தொடங்கிய அவர் ஆனந்த விகடன், தினமணி கதிர் முதலான ஜனரஞ்சக இதழ்களில் பெரும் பிரபலம் பெற்றபோது, அவர் மார்க்சீயத்திலிருந்து விலகுகிறார், மார்க்சீயத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களில் கவனம் கொள்கிறார் என்கிற விமர்சனங்கள் மட்டுமே இருந்தன. இப்போதோ அவர் மார்க்சீய விரோதியாகி விட்டார் என்கிற அளவிற்கு அவரது இந்தக் காலகட்ட எழுத்துக்கள் விமர்சனங்களை எதிர் கொண்டன. ‘ஜெய ஜெய சங்கர’, ‘ஊருக்கு நூறு பேர்’, ‘ஹரஹர சங்கர’ முதலியன அவரது இக்காலகட்டப் படைப்புகளில் சில.

ஜெயகாந்தனின் எழுத்துக்களை நானும் விமர்சித்துள்ளேன். இன்றும் விமர்சனகள் உண்டு. ஆனால் ஒன்றை என்னால் உறுதியாகச் சொல்ல இயலும். அவரது பிற்காலத்து இந்த எழுத்துக்களும் கூட அவற்றை வாசிக்கும் யாரிடமும் மார்க்சீயம் முன்வைக்கும் பொதுமைச் சிந்தனைகளின்பால் இம்மியும் வெறுப்பை ஏற்படுத்தி விடா. மாறாக உலகை, மக்களை, எல்லாத் தரப்பு மக்களையும் வெறுப்பின்றி நேசிக்கும் மனநிலையைத்தான் அவை விதைக்கும். வெளிப்படையாகவும், மிக நுணுக்கமாகவும் மனிதர்கள் மீது வெறுப்பைக் கட்டமைக்கும் ஜெயமோகன் போன்றோரிடமிருந்து எட்ட இயலாத உயரத்தில் ஜெயகாந்தன் நிற்கும் புள்ளி இதுதான்.

######

ஜெயகாந்தனின் எழுத்துக்களைப் போலவே அவரது பேச்சுக்களாலும் வசீகரிக்கப்பட்டவன் நான். கடைசியாக நான் அவரது உரையைக் கேட்ட நிகழ்வு எண்பதுகளின் பிற்பகுதியில் அமைந்தது. அப்போது அன்ணா சாலை என்.சி.பி.எச் விற்பனை நிலையம் இப்போதுள்ள இடத்திற்கு நேரெதிராக இருந்தது. அதன் மாடியில் இருந்த ஒரு சிறு அறையில் அக்கூட்டம் நடை பெற்றது. சோவியத் யூனியனின் இறுதி அதிபர் கோர்பசேவ் ‘ப்ரெஸ்டோரிகா’, “க்ளாஸ்நாஸ்ட்” என சோவியத் யூனியனின் இரும்புத் திரையை மட்டுமல்ல அதன் சோஷலிச அடித்தளைத்தையும் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்த காலம் அது. உலகெங்கிலும் அதுவே அன்றைய முக்கிய விவாதம். ‘ரசியாவில் நடப்பதென்ன?’, ‘மார்க்சீயத்தின் பெயரால்’ என்கிற எனது இரு முக்கிய நூல்கள் அக்காலகட்ட விவாதங்களினூடாக வெளிப்போந்தவைதான். நான் அப்போது நக்சலைட் (இப்போதைய மாஓயிஸ்ட்) கட்சியிலிருந்து தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தேன், மாஓயிஸ்ட் கட்சி மிகக் கடுமையாக கோர்பசேவின் “சீர்திருத்தங்களை” எதிர்த்து வந்தது. என்.சி.பி.எச் நிறுவனத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள சி.பி.ஐ கட்சியோ இதுபற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல் வழக்கம்போல சோவியத் யூனியனையும் கோர்பசேவையும் ஆதரித்து வந்தது.

அந்தக் காலகட்டம் மிக முக்கியமான ஒன்று.. உலகெங்கிலும் கோர்பசேவின் நடவடிக்கைகள் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி இருந்தன. கம்யூனிஸ்டுகள் மத்தியிலும் ஏகப்பட்ட குழப்பங்கள். இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவெனில் கம்யூனிஸ்டுகள் மத்தியில் இன்னும் அந்தக் குழப்பம் தீர்ந்தபாடில்லை என்பதுதான்.

அப்போது நான் ஒரு ‘பனிஷ்மென்ட் ட்ரான்ஸ்ஃபரில்’ குடியாத்தம் அரசு கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன், கல்லூரி ஆசிரியர் கழகத்தில் நான் மாநிலத் துணைத் தலைவருங் கூட. ஒரு மிகப் பெரிய போராட்டத்தை அகில இந்திய பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் (AIFUCTO) நடத்திக் கொண்டிருந்தது. சங்கத்தின் பிற தலைவர்கள் எல்லோரும் டெல்லி சென்று விட்டனர். திருவல்லிக்கேணியில் ஒரு வாடகைக் கட்டிடத்தில் இருந்த எங்கள் சங்க அலுவலகத்திற்கு நாந்தான் பொறுப்பு. போராட்ட நேரம். எந்த நேரமும் ஏதாவது வேலை இருக்கும். அந்தச் சூழலில்தான் யாரிடமோ பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு நான் ஜெயகாந்தனைக் கேட்கப் புறப்பட்டு விட்டேன்.

அண்ணாசாலை என்.சி.பி.எச் அலுவலகத்தின் சிறிய மாடியில் நடந்த கூட்டத்தில்தான் நான் ஜெயகாந்தனைக் கடைசியாகவும் நெருக்கமாகவும் பார்த்தது. சோவியத் யூனியனின் கம்யூனிச “இரும்புத்திரையைக் கிழித்து வெளிப்படைத் தன்மையை நிலைநாட்டிய” கோர்பசேவின் GLASNOST குறித்து நானும் நிறைய எழுதியுள்ளேன் ஜெயகாந்தன் அன்று அதை வேறு விதமாகச் சொன்னார்.

” இரகசியம் என்பது போல மானுடத்திற்கு எதிரான பண்பு எதுவும் இருக்க இயலாது; நான்கு பேர் இருக்கும் ஒரு அறையில் யாரேனும் இருவர் எல்லோருக்கும் தெரியும் மொழியிலன்றி அவர்களுக்கு மட்டுமே புரிந்த மொழியில் பேசிக் கொள்வதைக் காட்டிலும் அநாகரிகமான செயல் உலகில் வேறெதுவும் இருக்க இயலாது. இரகசியம் அந்நியம்; இதை இன்று கோர்பசேவ் உடைத்துள்ளார். இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.”

#######

ஜெயகாந்தனைத் தனியே சென்று சந்திப்பதில் நான் காட்டிய தயக்கத்தைக் கண்டு துரைராஜ் அதற்கொரு வழியையும் சொன்னார். “இந்தியா டுடே இதழில் வேலை செய்கிறாரே மணி அவரிடம் சொல்றேன், நீங்க அவரோடு போய்ப்பாருங்க. மணி ஜே.கேயின் உறவினரும் கூட”

மணியை எனக்கும் தெரியும். ஒரு பத்திரிக்கையாளர் என்பதைத் தாண்டி அவர் ஒரு முறை சரத் சந்திரர் குறித்து என்னிடம் உரையாடியதிலிருந்து அவர் ஒரு இலக்கிய மனம் உடையவர் என்பதையும் நான் அறிவேன்.

அவரைத் தொடர்பு கொண்டு நான் ஜெயகாந்தனை இந்த அறிக்கை தொடர்பாகச் சந்திக்க வேண்டும் என்பதைச் சற்றுத் தயக்கத்துடனேயே கூறினேன். ஜெயகாந்தன் படுத்த படுக்கையாக இருப்பதையும், இந்த நேரத்தில் அவர் நம் கோரிக்கை குறித்துப் பேசி அறிக்கையில் கையொப்பம் இடுவதெல்லாம் சாத்தியமில்லை எனவும் மணி சொன்னபோது இந்தக் கோரிக்கையை அவரிடம் வைத்ததற்காக நான் வெட்கம் கொள்ள நேர்ந்தது.

சமாளித்துக் கொண்டு சொன்னேன், “பரவாயில்ல சார். நீங்க சமீபத்தில எப்பவாவது அவரைப் பார்க்கப் போனா சொல்லுங்க. ஒரு தடவை நான் அவரைப் பாக்கணும்” என்றேன்.

வரும் 24 அன்று ஜெயகாந்தனின் பிறந்த நாள். அன்று போகலாம் எனச் சொல்லியுள்ளார்.

ஆவலாகக் காத்திருக்கிறேன். அன்றைக்கு “மார்க்ஸ் ஏங்கல்ஸ் நினைவுக் குறிப்புகள்” நூலை எடுத்துச் செல்ல வேண்டும். அதில் நாற்பது ஆண்டுகளுக்கு முன் நான் பதித்திருந்த அவரது சிறு புகைப்படத்தின் மெழுகுகுப் பதிவைக் காட்டி, ஒரு பூங்கொத்தையும் தந்து வணங்கி வர வேண்டும்.

போலீஸ் பக்ருதீன்: மூன்று குறிப்புகள்

தேடப்பட்டு வந்த போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் முதலார் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அடுத்த கணத்திலிருந்தே ஏராளமான செய்திகளை அவர்களிடமிருந்து கறந்து விட்டதாகவும் எல்லாக் குற்றங்களையும் அவர்கள் ஒப்புக் கொண்டு விட்டதாகவும் கவல்துறை தரப்பில் ஏராளமான செய்திகள்., நான்கு நாட்களாக நாளிதழ்களில் இவைதான் தலைப்புச் செய்திகள்.

பக்ருதீன், மாலிக் போன்றோரின் படங்களைத் தெளிவாக ஒரு பக்கம் வெளியிட்டுக் கொண்டே இன்னொரு பக்கம் அவர்களுக்கு முகமூடிகளை அணிவித்துப் படம் காட்டப்படுகின்றன. முழுக்க முழுக்க அடையாளம் வெளிப்பட்ட பின் இப்படியான அச்சுறுத்தல் எதற்கென யாரும் கேட்பதில்லை, இப்படியான அச்சுறுத்தல்கள் ஏதோ அவர்கள் மீது மட்டும் கோபத்தையும், அச்சத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிற செயல் அல்ல, இன்றைய அரசியல் சூழலில் அது ஒரு சமூகத்தின் மீதே அச்சம், வெறுப்பு, ஆத்திரம் ஆகியவற்றை விதைக்க வல்லது என்பது குறித்து அரசுக்கோ, காவல்துறைக்கோ. ஊடகங்களுக்கோ கவலை இல்லை.

போலீஸ் பக்ருதீன் கைதுடன் தொடர்புடைய மூன்று கூற்றுகள் இங்கே…

முதலாவது இரு மாதங்களுக்கு முன் இப்பக்கத்தில் நான், “மேலப்பாளையம் மற்றும் நெல்பேட்டை அடித்தள முஸ்லிம்கள்’ என்கிற தலைப்பில் இட்ட பதிலிருந்து.. எவ்வாறு இப்பகுதிகளில் சிலர் குற்றமிழைக்காதபோதும் காவல்துறையால் தொடர்ந்து துன்புறுத்தப் படுவதும், பொய் வழக்குப் போடப்படுவதும், உளவு சொல்லக் கட்டாயப்படுத்தப் படுவதும் நடக்கிறது என்பதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி இருந்தேன், அந்தக் கட்டுரையின் இறுதிப் பத்திகள் முதலில்..

அடுத்து நேற்றைய ‘தி இந்து’ நாளிதழில் கே.கே.மகேஷ், பக்ருதீனின் சகோதரரை நேர்கண்டு எழுதியதில் ஒரு பகுதி, மகேஷுக்கு நம் நன்றிகள்,

இறுதியில் பக்ருதீன் மீதான வழக்குகளை நடத்திய வழக்குரைஞர் ரஜினியிடம் தொலைபேசி மூலம் அறிந்து கொண்டது.

இவர்கள் யாரும் பக்ருதீனையோ மற்றவர்களியோ குற்றமற்றவர்கள் எனக் கூறவில்லை, நீதிமன்றம் அதை முடிவு செய்து அவர்களுக்குத் தண்டனை வழங்கட்டும், ஆனால் இத்தகையோரும் மனித்ர்கள்தான், எனினும் இவர்கள் எவ்வாறு குற்றவாளிகள் ஆக்கப்படுகின்றனர் என்பது குறித்த ஒரு சிறிய சிந்தனை உசுப்பல்தான் இது.

1. எனது கட்டுரையிலிருந்து…

மேலப்பாளையம், நெல்பேட்டை முதலியன கிட்டத்தட்ட slum ஏரியாக்கள் என்கிற அளவில்தான் உள்ளன. கல்வி வீதம், நிரந்தர வேலை, சுய தொழில் வாய்ப்பு முதலியன மிகக் குறைவாக உள்ளன. இவற்றின் விளைவான வறுமை, கடன் தொல்லை, வட்டிக் கொடுமைகளும் உள்ளன. இப்படியான பகுதிகளில் சிறு குற்றங்கள், ரவுடியிசம் முதலியன உருவாவதற்கான வாய்ப்புகள் பொதுவில் இருக்கும். எனினும் இது விரல்விட்டு எண்ணக் கூடிய சிறிய அளவில்தான் இருக்கும். பெரும்பாலான மக்கள் அப்பாவிகளாகத்தான் இருப்பார்கள். இங்கும் அப்படியான குற்றச் செயல்கள் இருக்கத்தான் செய்கின்றன. முஸ்லிம்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் இங்கு இவை மத நிலைப்பட்டதாகவும் எளிதில் மதச் சாயம் பூசப்படக் கூடியதாகவும் ஆகிவிடுகின்றன. இதை இந்தக் கோணத்தில் அணுகாமல் ‘முஸ்லிம் தீவிரவாதம்’ என்கிற கோணத்திலேயே காவல்துறை அணுகுகிறது. காவல்துறையிடம் பொதிந்துள்ள சிறுபான்மை எதிர்ப்பு மன நிலை இத்துடன் இணந்து கொள்கிறது. சிறிய அளவிலோ பெரிய அளவிலோ முதல் குற்றம் செய்யும் ஒருவரைத் தொடர்ந்து பொய் வழக்குகள், விசாரணைகள், பணப் பறிப்புகள் என்கிற வகைகளில் தொல்லை செய்து வருவதால் அவர்கள் மேலும் குற்றச் செயல்களுக்குத் தள்ளப்படுகின்றனர். இதை ஒட்டி மேலப்பாளையம் போன்ற பகுதிகளை ஏதோ பாயங்கரவாதிகளின் நகரமாகவும், முஸ்லிம் சமுதாயத்தையே “சந்தேகத்திற்குரியதாகக்” கட்டமைப்பதும் நடக்கிறது. ஆக, ஒரு விஷச் சுழல் இவ்வாறு முழுமை அடைகிறது. இன்று விலை கூறித் தேடப்படும் இப்பகுதி “முஸ்லிம் தீவிரவாதிகள்” எல்லோரும் இப்படியாக உருவாக்கப்பட்டவர்கள்தான் என்பது குறிப்பிடத் தக்கது. ஆமாம் அவர்கள் உருவாக்கப்பட்டவர்கள்தான், உருவானவர்கள் அல்ல. இவர்கள் அப்படியானதில் நாம் வாழும் இந்தச் சமூகத்திற்குப் பெரிய பொறுப்பு உள்ளது. நம்மையும் சேர்த்துத்தான்.

மேலப்பாளையம், நெல்பேட்டை போன்ற பகுதிகளுக்கு நகரின் பிற பகுதிகளுக்குச் சமமாக அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். இப்பகுதிகளில் உரிய அளவில் நர்சரி தொடங்கி உயர்நிலைப் பள்ளிகள் வரை கட்டித்தரப்பட வேண்டும். சுய தொழில் வாய்ப்புக்கள், அதற்கான பயிற்சி முதலியன அளிக்கப்பட வேண்டும்.இப்பகுதிகளை ஒட்டி தொழில் வளர்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பிரச்சினையை முழுமையாக அணுகி அதன் சிக்கல்களை ஏற்றுப் புரிய முயற்சித்தல் அவசியம். நமது ஊடகங்கள், அரசு மற்றும் காவல்துறை ஆகியவற்றின் அணுகல்முறைகள் நிச்சயமாக இந்தத் திசையில் இல்லை.

2. நேற்றைய (அக் 7, 2013) ‘தி இந்து’ நாளிதழில் கே.கே.மகேஷ் எழுதியுள்ள, “ஆறுதல் சொல்ல எங்களுக்கு யாருமில்லை” என்கிற கட்டுரையின் முக்கிய சில பகுதிகள்:

எங்களை இஸ்லாமிய தீவிரவாதி என்று சொல்பவர்களுக்கு, எங்களை இஸ்லாமியர்களே ஒதுக்கித் தான் வைத்திருக்கிறார்கள் என்ற உண்மை தெரியுமா? இன்று எங்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தி வீதியில் வீராவேசமாகப் பேசுபவர்கள், என் குடும்பத்தினர் சித்ரவதை செய்யப்பட்ட போது எங்கே போனார்கள்?

போலீஸ் பக்ருதீன் கைது செய்யப்பட்டு இருப்பது ஒரு வகையில் எங்களுக்குச் சந்தோஷம் தான். 3 நாட்களுக்கு முன்பு வரை போலீஸாரால் நாங்கள் கடும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறோம். இனிமேலும், எங்கள் குடும்பத்தினரை அவர்கள் துன்பப்படுத்த மாட்டார்கள்.

போலீஸ் பக்ருதீன் விவகாரத்தில் போலீஸார் சொல்வதில் கொஞ்சம் உண்மையும், நிறைய பொய்யும் இருக்கிறது. எங்கள் வாப்பா சிக்கந்தர் பாட்சா, உதவிக் காவல் ஆய்வாளராக இருந்து பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு 1989ல் இறந்துபோனார். நாங்கள் 3 மகன்கள். மூத்தவன் முகமது மைதீன், அடுத்து நான் (தர்வேஸ் மைதீன்), 3வது மகன் தான் போலீஸ் பக்ருதீன் என்று போலீஸாரால் அழைக்கப்படும் பக்ருதீன் அலி அகமது. எங்களைக் காப்பாற்றுவதற்காக அம்மா செய்யது மீரா, வெளிநாட்டுக்கு ஹவுஸ் கீப்பிங் வேலைக்குப் போய்விட்டார். பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்தோம்.

நானும் 1993ல் சவுதி அரேபியாவுக்கு வேலைக்குப் போய்விட்டேன். இதனால் சேர்க்கை சரியில்லாமல் வம்பு, தும்பில் சிக்கி அவனை அடிக்கடி போலீஸார் பிடித்தனர். 18 வயதுக்குள் 5 வழக்குகள் பதிவாகிவிட்டது.

1995ம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வெடிகுண்டு வைத்த வழக்கில் அவனை சம்பந்தமே இல்லாமல் கைது செய்தனர். அன்று முதல் அவனைத் தீவிரவாதி என போலீஸார் கூற தொடங்கினர். இதில் உண்மைக் குற்றவாளி வெங்கடேசன் என்ற முஸ்தபாதான் என்று தெரியவந்தது. இந்த வழக்கில் பக்ருதீன் உள்ளிட்டவர்களை பொய்யாக கைது செய்ததற்காக வெடிமருந்து வாங்கிய உதவி ஆய்வாளரை சி.பி.ஐ. கைது செய்தது. அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டார்.

கடந்த 1998ல், மதுரை மதிச்சியத்தில் பரமசிவம் என்பவர் கொலை வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றான். அங்குதான் தப்பான வழிக்கு போக காரணமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். 2001ல் ஜாமீனில் வந்தவன், திருமங்கலம் கோர்ட்டில் போலீஸாருடன் துப்பாக்கிச் சண்டையிட்டு, இமாம் அலியை மீட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்டு, எங்கள் நிம்மதிக்கு உலை வைத்தான். அந்த வழக்கில் 7 ஆண்டு சிறையில் இருந்தான்.

அவனுக்கு ‘நிக்காஹ்’ செய்து வைத்தால் சரியாகிவிடுவான் என்பதால் அதற்கான முயற்சியில் இறங்கினோம். அப்போது ஏ.சி. (உதவி ஆய்வாளர்) வெள்ளத்துரை பொது இடத்தில் என் தம்பியை தாக்கினார். இதில் தள்ளிவிட்டதில் அவர் கீழே விழுந்தது, அவருக்கு அவமானமாகிவிட்டது. உடனே, 3 எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துவிட்டார்.

என் தம்பியின் திருமண முயற்சி தடைபட்டுப் போய்விட்டது. போலீஸ் மீது அவனுக்குப் கோபம் அதிகமாகிவிட்டது. நான் நல்லவனாகவே இருந்தாலும் கூட அவர்கள் என்னை நிம்மதியாக இருக்கவிட மாட்டார்கள் என்று கூறி ஊரைவிட்டே போய்விட்டான்.

28.10.11ல் சேலம் விரைவு நீதிமன்றத்தில் வாய்தாவுக்காக போனவன்தான், அதன் பிறகு அவனுடன் எந்தத் தொடர்பும் இல்லை. மறுநாள் அத்வானியை கொல்வதற்காக பாலம் அடியில் வெடிகுண்டு சிக்கியதாக செய்திகள் வந்தன. அன்று முதல் விசாரணை என்ற பெயரில் என்னையும், என் குடும்பத்தினரையும் போலீசார் துன்புறுத்தினர். அடித்தார்கள், தனி அறையில் அடைத்து வைத்தார்கள், அர்த்த ராத்திரியில் கதவைத் தட்டினார்கள், ரெய்டு என்று வீட்டைச் சூறையாடினார்கள், பெண்களைத் தரக்குறைவாகப் பேசினார்கள். அத்தனையையும் பொறுத்துக் கொண்டோம். ஊரைவிட்டு ஓடிப்போகவில்லை. போலீஸார் அழைக்கும்போதெல்லாம் போனேன்.

அத்வானிக்கு குண்டு வைத்த வழக்கில் என்னை கைது செய்தனர். இந்த வழக்கை ஜாமீன் கிடைக்க தன் தாலியை விற்று என் மனைவி வழக்கு நடத்தினாள். ஒருநாள் நீதிபதியிடம் அவள் கண்ணீர் விட்டுக் கதறிய பிறகே எனக்கு ஜாமீன் கிடைத்தது.

பக்ருதீனை கைது செய்துவிட்ட பிறகாவது, அப்பாவியான என்னையும், செய்யது சகாபுதீனையும் இந்த வழக்கில் இருந்து போலீஸார் விடுதலை செய்ய வேண்டும். என் 4 வயது பையனுக்கு முழு விவரம் தெரிவதற்குள், எனக்குப் போலீஸார் வைத்த தீவிரவாதி என்ற பெயரைத் துடைக்க வேண்டும்” என்றார்.

3. வழக்குரைஞர் ரஜினி, மதுரை :

(தொலைபேசியில் கூறியது)

“எனக்கு சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக பருதீனைத் தெரியும். அவன் அம்மாவை ரொம்ப நன்றாகவே தெரியும். ஏதோ பிறக்கும்போதே தீவிரவாதியாகப் பிறந்தவன் என்பதுபோல இன்று அவனை ஊடகங்கள் சித்திரிக்கின்றன. போலீசும் அப்படித்தான் சொல்கிறது. பரமசிவம் கொலை வழக்கில் எல்லாக் குற்றவாளிகளுக்கும் நான்தான் வழக்காடினேன். ஜாமீனில் கூட பக்ருதீனை விடவில்லை. கடைசியில் பல ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் அவ்வளவு பேரும் விடுதலை செய்யப்பட்டாங்க. அவன் திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ விரும்பினான். நெல்பேட்டையை சேர்ந்த விவாகரத்தாகி ஒரு குழந்தையுடன் வசித்துக் கொண்டிருந்த ******* என்கிற பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள ஆவலாக இருந்தான். அவளின் குழந்தையைத் தன் குழந்தை என்றே சொல்லிக் கொஞ்சுவான். அந்தப் பெண்ணின் தம்பியும் வழக்கில் இருந்தவன். அவள் இவனைத் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டாள். அவனைப் பிடிக்காததல்ல காரணம். “என் தம்பி வழக்குக்காக கோர்ட் கோர்ட்டா அலைஞ்சுட்டிருக்கேன். இவரையும் கட்டிகிட்டு இவருக்காகவும் கோர்ட் கோர்டா அலையணுமா அக்கா?” என்பாள் அவள். அப்புறம் வேறொரு பெண்ணுடன் அவனுக்குத் திருமணம் நடந்த்தது.

இன்னொரு சந்தர்ப்பத்தில் அவன் வேறொரு வழக்கில் மதுரைச் சிறையில் இருந்தான். ஒரு நாள் அவன் அம்மா வீட்டுக்கு ஓடி வந்தாங்க.”எம் மவன ஜெயில்ல போட்டு வார்டருங்க அடிசுட்டாங்கம்மா. கோர்ட்டுக்குக் கொண்டு வாராங்களாம். ஏதாவது செய்யுங்கம்மா..” ன்னு அழுதாங்க. நான் ஒரு ஹேபியாஸ் கார்பஸ் பெடிஷன் போட்டேன். மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஒருவர் சிறைக்குச் சென்று விசாரணை செய்ய வேணும்னு ஆர்டர் வாங்கினேன்.

பரமசிவம் கொலை வழக்கில் விடுதலை ஆன பிறகு அவன் ரொம்ப அமைதியாதான் இருந்தான் எல்லோரையும்போல திருமணம் செஞ்சுட்டுக் குடும்பம் நடத்தத்தான் விரும்பினான். அத்வானி வந்தபோது குண்டு வைத்த வழக்கில் அவன் குடும்பத்தையே தொந்தரவு செய்தாங்க. அவன் அண்ணன் மீது பொய் வழக்கு போட்டாங்க. அவன் அம்மா ப்ரெஸ் மீட் வச்சு பக்ருதீனுக்கும் அவங்களுக்கும் சம்பந்தமில்லன்னு அறிவிச்சாங்க.

பிலால், பக்ருதீன் மனைவி எல்லோரையும் போலீஸ் புத்தூரிலிருந்து இங்கே கொண்டு வந்து வச்சிருக்காங்களாம். நாளைக்குப் போய்ப் பாக்கணும்”

பக்ருதீனை ‘அவன்’ ‘இவன்’ என ரஜினி அழைத்தது ஊடகங்கள் கூறும் பொருளில் அல்ல.. வயதுக் குறைவு, நீண்ட நாள் பழக்கம், அவ்வளவுதான்.

சுந்தரம் டாக்டர்…

சுந்தரம் டாக்டர் வந்தார் என்றால் எங்கள் சோடா கம்பெனி கலகலப்பாகி விடும். அத்தனை நகைச்சுவையாகப் பேசுவார்.”லேடுபாடு”, “ஆட்டை தூக்கு மாட்ல போட்டு.. மாட்டைத் தூக்கி ஆட்ல போட்டு..”என்பதெல்லாம் அவர் அடிக்கடி பயன்படுத்தும் சில சொலவடைகள்.

ஆம்பலாப்பட்டிலிருந்து ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட தினங்களில் சைக்கிளில் பாப்பாநாடு வருவார். வேட்டி, மேலே புஷ் கோட் மாதிரி ஒரு சட்டை போட்டிருப்பார். பழைய தமிழ் சினிமாப் படங்களில் டாக்டர்கள் சிவப்பாக ஒரு தோல் பை வைத்திருப்பார்களே அதே போல ஒரு பை சைக்கிளில் தொங்கும். அந்தப் பையில் ஒரு சிரிஞ்ச், சில ஊசிகள், கொஞ்சம் பென்சிலின் ஊசி மருந்து, பென்டிட் சல்ஃபா மாத்திரைகள்,சில காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கு மருந்துகள், இன்னும் அவருக்குத் தெரியும்,அந்தப் பகுதியில் என்னென்ன மருந்துகள் அதிகம் தேவைப்படும் என. அவற்றில் கொஞ்சம் இருக்கும். அப்போது எங்கள் ஊரில் ஃபா ர்மசி கிடையாது. முக்கிய மருந்துகள் வாங்க வேண்டுமானால் பட்டுக்கோட்டை அல்லது ஒரத்தநாடு போக வேண்டும்.

பாப்பாநாடு வந்தால்ஒரு இரண்டு அல்லது மூன்று இடங்களில் அவர் குறிப்பிட்ட நேரத்தில் நிச்சயமாக இருப்பார். அதில் எங்கள் சோடா கம்பெனியும் ஒன்று. என் அப்பா மலேசியாவில் இயக்கத்தில் இருந்த போது கூலியாக வேலைக்கு வந்தவர் சுந்தரம். பக்கத்து ஊர்க்காரர் என்கிற வகையில் நெருக்கமான பழக்கம். அப்பாவை விட ஒரு பத்து வயது குறைவு. அப்பா நாடு கடத்தப்பட்டு இங்கு தப்பித்தோடிவந்த பின், சுந்தரம் சுபாஷ் சந்திர போசின் ஐ.என்.ஏ படையில் சேர்ந்து, அவர்களின் போர்முயற்சி தோற்ற பின் இந்தியாவிற்கு ஓடி வந்தார். ஏதோ ஒரு சிறிய தொகை அந்த வகையில் ஐ.என்.ஏ பென்ஷனாக அவருக்கு வந்து கொண்டிருந்தது.

சுந்தரம் அண்ணன் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர், மருத்துவம், கூடை முடைதல் முதலியன அவர்களின் தொழில். குறவர்சமூகத்தை அரசு குற்றப் பரம்பரையாக வரையறுத்திருந்தது. இன்று அந்தச் சட்டம் ஒழிக்கப்பட்டாலும்அரசு அவர்களைக் குற்றப் பரம்பரையினராகத்தான் இன்றும் நடத்துகிறது. அது வேறு கதை.

ஆம்பலாப்பட்டுஒரு கள்ளர் சாதியினர் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமம். அதில் ஒரு மூலையில் இவர்களின் குடும்பம். ஆம்பலாப்பட்டு ஒரு கம்யூனிஸ்ட்கிராமமும் கூட. இப்போது சி.பி.ஐ கட்சியின் விவசாயிகள் அணியில் முக்கிய பொறுப்பில் உள்ளடாக்டர் துரைமாணிக்கம் அந்த ஊர்க்காரர்தான். ஒரு இறுக்கமான சாதி ஆதிக்கமுள்ள அந்த ஊரில் குறவர் சமூகத்தைச் சேர்ந்த சுந்தரம் ஓரளவு சாதி ஒதுக்கல்களிருந்து தப்பித்து வாழ்ந்தார் என்றால், அதன் அடிப்படை அவர் கையில் இருந்த இந்த தொழிற் திறமைதான். எந்த மருத்துவ வசதியும் இல்லாத அந்தக் கிராமத்தில் கூப்பிட்ட நேரத்திற்கு வந்து உயிரைக்காப்பாற்றிச் செல்பவர் என்பதால்.

அந்த வயதிலேயே நான் கவனித்துள்ளேன். “சுந்தரம் இன்னைக்கி வருவானா” என என்னிடம் கேட்பவர்கள் (அப்பாவிடம்அப்படிக் கேட்கமாட்டார்கள்), அவர் வந்தவுடன், “தம்பி, ரெண்டு நாளா காச்சலுப்பா, எதை சாப்பிட்டாலும் வாந்தி வருது…… ” என்பார்கள். தமிழில் ‘தம்பி’ என்பதுஆதிக்க சாதியினர், கீழ் சாதியினரை விளிக்கும் ஒரு சொல்லுங் கூட என்பது எனக்கு அப்போதே அரைகுறையாகப் புரிந்தது. சிரித்துக் கொண்டே ஏகக் கிண்டலுடன் சுந்தரம் அண்ணன் வைத்தியத்தைத் தொடங்குவார். அம்மா ஒரு அகன்ற பாத்திரத்தில்கொதிக்கக் கொதிக்க சுடு நீரும், ஒரு தம்ளரில் தேநீரும் கொண்டு வந்து வைப்பார். ஊசி ஒன்றை எடுத்து சிரிஞ்சில் செருகி, கொதிக்கும் நீரை உறிஞ்சிக் கழுவியவாறே பேசிக் கொண்டிருப்பார்.

ஊசி, மருந்து ஆகியவற்றுடன்சுந்தரம் அண்ணனுக்கு அளிக்கப்படும் ஃபீஸ் இரண்டு ரூபாய்கள். பல நேரங்களில் அதையும் கொடுக்காமல் கடன் சொல்லிச் செல்வார்கள். கடும் நோய், சாதாரண சிகிச்சை போதாது என்றால் அதை விளக்கமாகச் சொல்லி தஞ்சாவூர் பெரிய ஆஸ்பத்திருக்கு அனுப்புவார். சில நேரங்களில் அவரே அழைத்துச் செல்வதும் உண்டு.

####

ஒருமுறை இருமிக்கொண்டே ஒருவர் வந்தார். நான் அந்தப் பக்கம் பம்பரம் விளையாடிக் கொண்டிருந்தேன். “தம்பி மாக்ஸ்” என விளித்தார். ஓடி வந்தேன். “கணக்கு நோட்டில எழுதாத ஒரு நல்ல வெள்ள பேப்பர் ஒண்ணு கிழிச்சிட்டு வா” என்றார்.

அவ்வாறே செய்து விட்டு அருகில் நின்றேன். அந்தப் பேப்பரில்அவரை உமிழச் செய்து அதை மடித்து ஒதுக்குப் புறமாக கூறையில் செருகி விட்டு, “யாரும்இதைத் தொடாதீங்க” என்று சொல்லிக் கிளம்பினார். ஆவல் மேலிட நான் எதுக்குண்ணேன் என்றேன். “தம்பி இது முத்திய காச நோய்க் கேசு. இரண்டு நாள் கழிச்சு வந்து இந்தபேப்பரை விரிச்சு வெளிச்சத்துல பார்த்தா காச நோய்க் கிருமி இருந்தா இந்தக் காகிதத்தில ஓட்டை விழுந்திருக்கும்.”

சுந்தரம் அண்ணனின் “தவறான” வைத்தியத்தால் யாரும் செத்துப் போனதாக அங்கு வரலாறே இல்லை.

#############

அம்மாவுக்குக்கையில் ஒரு கட்டி. வலியால் துடித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு அழுகையாய் வந்தது.”சுந்தரம் இன்னைக்கி வர்ற நாள். வரலேன்னா பட்டுக்கோட்டைக்குப் போகலாம்” எனஅப்பா சொல்லிக் கொண்டிருந்தார்.

சுந்தரம் அண்ணன் சரியாகப் 11 மணிக்கு வந்தார். அப்பா எல்லாவற்றையும் சொன்னார். சுந்தரம் அண்ணன் அம்மாவைக் கூப்பிட்டுப் பார்க்கக் கூட இல்லை.. “தம்பி மார்க்ஸ்” என்றார். “போயி பனாமா பிளேடு ஒண்ணு வாங்கிட்டு வா” என்றார்.

அப்போது ‘பனாமா’.’பாரத்’ என இரண்டு பிளேடுகள் மட்டும் உண்டு.பனாமா கொஞ்சம் நல்ல பிளேடு பத்து பைசா விலை. பாரத் ஆறு பைசா. ஓடி வாங்கி வந்தேன்.

அம்மாவைக் கூப்பிட்டுபெஞ்சில் உட்காரச் சொன்னார். “அந்தப் பக்கம் திரும்பிக்கிங்க அக்கா” என்றார். “மார்க்ஸ் நீ அந்தப் பக்கம் ஓடு” என விரட்டினார்.

நான் பயந்து கொண்டேஓடி, ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மா ரொம்பவும் பயந்திருந்தார். பிளேடை எடுத்து, கொதிக்கும் சுடு நீரில் ஒரு முறை தோய்த்துவிட்டு கட்டி மீது வைத்து அழுத்தி இரக்கமில்லாமல் அவர் கீறிப் பிதுக்கியபோது அம்மா வாய்விட்டுக் கத்தினார். நானும்தான். அப்பாவின் சலவை செய்த வேட்டியிலிருந்துஒரு துண்டை நறுக்கி ஒரு பச்சிலைச் சாற்றில் அதைத் தோய்த்துக் காயத்தின் மீது வைத்துஇறுகக் கட்டினார். ஏதோ ஒரு ஆன்டி பயாடிக் ஊசியைப் போட்டு, ‘பெய்ன் கில்லர்’ மாத்திரைகள் இரண்டையும் கொடுத்துவிட்டுஅவர் அகன்ற காட்சி இன்னும் என் நினைவில் உள்ளது.

இரண்டு நாட்களுக்குப்பின் அவர் வந்து கட்டைப் பிரித்தபோது அம்மாவின் காயம் பெரிதும் ஆறி இருந்தது. மரபு வழி நாட்டு வைத்தியத்துடன் தற்போதைய சில அல்லோபதி மருந்து வகைகளையும் இணைத்து ஒரு வகையான holistic /  integrated மருத்துவமுறையை அவர் தன் அனுபவ அடிப்படையில் உருவாக்கி இருந்தார்.

#######

தம்பையா நாயுடு மாயூரத்திற்கு அருகில் உள்ள செம்பனார் கோவிலைச் சேர்ந்தவர். மலேசியாவில் அப்பாவின் தொழிற்சங்க அலுவலகத்தில் சமையற்காரராக இருந்தவர். அவரும் இரண்டொரு ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்து இரண்டொரு நாட்கள் தங்கிச் செல்வார். அவருக்குக் கடும் மூல வியாதி. குறவர் சமூகத்தினர் முல பவுத்திர சிகிச்சையில் தேர்ந்தவர்கள். சுந்தரம் அண்ணனும்தான். ஆசன வாய் சார்ந்த வைத்தியத்தை அக்காலத்தில் “கீழ்” சாதியினருக்கு ஒதுக்கி இருந்திருப்பார்கள் போலும்.

அப்பா கடிதம் எழுதி இங்கே அவரை வரச் சொன்னார். இம்முறை அவரோடு அத்தையையும் அழைத்து வந்திருந்தார்.

சுந்தரம் அண்ணன் வந்தவுடன் சிகிச்சை ஆரம்பமாகியது. அப்பா சலவை செய்த பழைய எட்டு முழ வேட்டி ஒன்றை எடுத்துத் தந்தார். அம்மா கொதிக்கக் கொதிக்கச் சுடு நீர் கொண்டு வந்தார்.

சுந்தரம் அண்ணனும் அப்பாவும் இரண்டு ஒதியம் பெஞ்சுகளையும் ஒரு மூலையில் கொண்டு போய்ப் போட்டார்கள். சாக்குப்படுதாவை எடுத்து மறைவு கட்டினார்கள். தம்பையா மாமாவை அழைத்துக் கொண்டு மறைவிற்குள்சென்றார் சுந்தரம் அண்ணன். சற்று நேரம் கழித்து நான் மெதுவாகச் சென்று படுதாவை விலக்கிப்பார்த்தேன். தம்பையா மாமா ஆடைகளின்றிக் குப்புறப் படுத்திருந்தார். “ஏய், தம்பி,மாக்ஸ், ஓடு, ஓடு.. இங்கெல்லாம் வரக் கூடாது” என விரட்டினார் அண்ணன்.

கச்சிதமாக ஆபரேஷன்முடிந்தது. அடுத்த சில நாட்களில் தம்பையா மாமாவும் அத்தையும் ஊருக்குத் திரும்பினர்.

#######

சுமார் 18 ஆண்டுகள் இருக்கலாம். தமிழக அரசு பெரிய அளவில் ‘போலி டாக்டர்கள்’ மீது நடவடிக்கை எடுத்தது. தினசரி நாளிதழ்களைத் திறந்தால் அந்த ஊரில் போலி டாக்டர் கைது. இந்த ஊரில் இருவர் கைது எனச் செய்திகள் வரும். பட்டதாரி மருத்துவர்கள் அமைப்புகள் கொடுத்த அழுத்தத்தின் விளைவு இது. பட்டமில்லா இந்த கிராமத்து வைத்தியர்கள் தலைமறைவாயினர்.

போலி டாக்டர்கள்கைது என்பதைப் பார்க்கும் போதெல்லாம் என்க்கு சுந்தரம் அண்ணன் ஞாபகம்தான் வரும்.மனம்நொந்து போவேன். ‘போலி’ டாக்டர்கள் ஏன் உருவா கின்றனர்? போதிய அளவில் அரசு மருத்துவ மனைகளும், மக்கல் தொகை வீதத்திற்கு ஏற்ப மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லாத ஒரு நாட்டில்  ‘போலி’ டாக்டர்களும் இல்லாது போனால் கிராமப் புற மக்களின் கதி என்ன? என்பதை விளக்கி நான் எழுதிய கட்டுரை தினமணி நாளிதழில் முழுமையாகப் பிரசுரமானது. தலைமறைவாய்த் திரிந்த இந்தப் பட்டதாரி மருத்துவர்களுக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது. அவர்கள் நீதி மன்றத்தை அணுகினர். அவர்கள் ஆதாரமாய்க் காட்டியஆவணங்களில் என் கட்டுரையும் ஒன்று.

பின் அவர்கள் நாமக்கல்லில் ஒரு மாநாடு கூட்டியபோது நான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டேன். ‘போலி’ டாக்டர்கள் மீது எனக்கு உண்டான பரிவின் பின்னணியில் சுந்தரம் அண்ணனின் நினைவுகள் இருந்தன.

##############

பாப்பாநாட்டுக்கும்எனக்கும் எல்லாத் தொடர்பும் அறுந்து விட்டது. பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கல்லறைத் திருநாளன்று சென்று அப்பா, அம்மா கல்லறைகளுக்கு மாலை போட்டு வருவது வழக்கம். இப்போதுஅதுவும் நின்று விட்டது. கடைசி முறை சென்ற போது சின்னக் குமுளை கலியமூர்த்தியை விசாரித்தேன்.”சுந்தரமா, அவர் இப்ப பாப்பாநாட்டுக்கே வந்துட்டாரே. முன்ன மாதிரி வைத்தியமெல்லாம்செய்றதில்ல. வயசாயிட்டு” என்றார். இப்போது அங்கே ஒரு ஆரம்ப சுகாதார மருத்துவ மனை, இரண்டு மூன்று பட்டதாரி டாக்டர்கள், சில பார்மசிகள் எல்லாம் உள்ளன.

அவர் வீட்டை விசாரித்துச் சென்றபோது, கண்களை இடுக்கிக் கூர்ந்து பார்த்துவிட்டு, “யாரு, தம்பி மாக்சா?”எனக் கேட்டுக் கைகளைப் பற்றிக் கொண்டார். கண்கள் நீரைச் சொறிந்தன.

என் கண்களுந்தான்.

இணைப்பு:

சொல்ல மறந்து போனேன், சுந்தரம் டாக்டரின் மூத்த அண்ணன் டாக்டர் தியாகராஜன். சின்ன வயதிலேயே ஊரை விட்டு ஓடிச்சென்றவர். விழுப்புரத்தில் பாரம்பரிய மருத்துவம் செய்து பின் காந்தி சிலைக்கருகில் “ஆரோக்கிய மெடிகல் ஹால்” என ஒரு மருத்துவமனையையே நிறுவினார். அவரது மருத்துவ மனையில்இரண்டு பட்டதாரி மருத்துவர்கள் வேலை செய்தனர்.

1960 களில் அவர்விழுப்புரம் முனிசிபல் சேர்மனாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தார். தந்தை பெரியார், நடிகர்திலகம் சிவாஜி, புதுச்சேரி சுப்பையா ஆகியோருக்கு நெருக்கமாக இருந்தவர். வாசவி ஓட்டலுக்குஎதிர்ப்புறச் சாலையில் இருந்தது அவர் வீடு.

விழுப்புரத்தைக்கடக்கும்போதெல்லாம் நினைத்துக் கொள்வேன். 50 ஆண்டுகளுக்கு முன்பு அது சாத்தியமாய் இருந்தது.

அசலூர்க்கார ஒரு குறவர் சமூக மனிதர் விழுப்புரம் போன்ற ஒரு ஊரில் முனிசிபல் சேர்மனாவது இன்று சாத்தியமா?

(இந்த நினைவஞ்சலி டாக்டர் தியாகராஜன் அவர்களின் இளம்வயதில் மறைந்துபோன புதல்வியும் என் பால்ய சினேகிதியுமான மல்லிகாவின் நினைவுகளுக்குச் சமர்ப்பணம்.)

இந்திய – பாகிஸ்தான் போர் இன்றைய சூழலில் தேவையா?

(ஆகஸ்ட் 2013 ல் எல்லையில் ஐந்து இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டபோது எழுதியது)

ஒரு போர் தேவை என்கிற குரல்தான் இப்போது உரத்து ஒலிக்கிறது. அப்படியான ஒரு கருத்தை உருவாக்குவதற்குத்தான் நமது ஊடகங்களும் துணை நிற்கின்றன. தொலைக்காட்சி விவாதகங்களிலும் இத்தகைய குரல்களுக்குத்தான் அதிக இடம் அளிக்கப்படுகின்றன. இது தேர்தல் நேரம் வேறு. பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.கவைப் பொருத்தமட்டில் பாகிஸ்தானையும் சீனாவையும் உடனடி எதிரிகளாகக் கட்டமைப்பது என்பது அதன் அரசியல் நிகழ்ச்சி நிரலில் ஒன்று. அதிலும் முஸ்லிம் நாடான பாகிஸ்தானுடன் ஒரு யுத்தத்தை நடத்திப் பணிய வைப்பதென்பது அதன் உள்நாட்டு அரசியல் நோக்கத்திற்கு உகந்த ஒன்று என்பதை விளக்க வேண்டியதில்லை.

ஆளும் கட்சியான காங்கிரசைப் பொருத்தமட்டில், அதற்கு ஊழல், பொருளாதார நெருக்கடி, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி என ஏகப்பட்ட பிரச்சினைகள். இந்தச் சூழ்நிலையில், இத்தகைய போர் வெறிப் பேச்சுக்கள் அதற்கும்  கூட இவற்றிலிருந்து கவனத்தைத் திருப்ப உதவியாக இருக்கிறது. இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி பாகிஸ்தானைக் கடுமையாக எச்சரித்துள்ளார். எங்களின் பொறுமையைத் தவறாக எடை போட்டுவிடாதீர்கள் எனக் கூவியுள்ளவர், எல்லையோர அத்துமீறல்களுக்கு உடனடியாக எதிர்வினைகள் புரிய இராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்திய இராணுவத் தளபதி விக்ரம் சிங், பிரதமரைச் சந்தித்து எல்லைப் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அமெரிக்காவில் நடக்க உள்ள ஐ.நா பொது அவைக் கூட்டத்தின்போது மன்மோகனும் நவாஸ் ஷெரீஃபும் சந்தித்துப் பேச உள்ள ‘சம்மிட்’ நடைபெறுமா என்பது இப்போது கேள்விக் குறியாக இருக்கிறது.

ஆகஸ்ட் 6 அன்று  இந்திய வீரர்கள் ஐவர் கொல்லப்பட்டதற்குப் பின் இந்த எல்லையோர மோதல்களில் பாகிஸ்தான் வீரர்கள், ஒரு கேப்டன் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளனர். இதை ஒட்டி நேற்று பாகிஸ்தானிலுள்ள இந்தியத் தூதுவரை அழைத்து, அதன் அயலுறவுச் செயலர் இந்தக் கொலைகளைக் கண்டித்துள்ளார். பாக் தேசிய அசெம்பிளியில் கண்டனத் தீர்மானமும் இயற்றப்பட்டுள்ளது. எனினும் ஆக்கபூர்வமான முறையில் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை என்பதும் தீர்மானத்தில் ஓரங்கமாக உள்ளது.

மன்மோகன் அரசின் நிலைபாடு என்பதுங்கூட பாக் அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது என்பதாகவே இதுவரை இருந்தபோதிலும் இன்றுள்ள அரசியல் சூழலில் இதை அவர்கள் வெளிப்படையாகப் பேச இயலாதுள்ளது. இந்திய வீரர்கள் ஐவர் எல்லையில் கொல்லப்பட்ட அன்று பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி, “பாக் ‘இராணுவ உடையில்’ வந்த சுமார் 20 பேர்கள் சுட்டதில் 5 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டார்கள்” என்று அறிவித்தது பா.ஜ.கவினால் மட்டுமின்றி இந்திய ஊடகங்கள் பலவற்றாலும் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தாக்கிக் கொன்றவர்கள் பாக் இராணுவ வீரர்கள்தான் என அடுத்த நாள் அழுத்தம் திருத்தமாக அவர் அவசர அவசரமாக அறிவிக்க வேண்டியதாயிற்று.

உண்மையில் அவர் முதலில் வெளியிட்ட அறிக்கைதான் எதார்த்தமானது மட்டுமல்ல, ராஜதந்திர ரீதியில் சரியானதுங்கூட. பாக் அரசியலைப் புரிந்தவர்களுக்குத் தெரியும், பாக் இராணுவம், இந்திய இராணுவத்தைப் போல அமைச்சரவைக்கு  முழுமையாகக் கட்டுப்பட்ட ஒன்று அல்ல. இந்தத் தாக்குதல் பாக் இராணுவ வீரர்களாலேயே நடத்தப்பட்டிருந்தாலுங் கூட அது நவாஸ் ஷெரீஃப் அரசின் ஒப்புதலுடன் நடந்ததாகக் கொள்ள இயலாது. பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அண்டை நாடுகளுடன் நல்லுறவை விரும்புகிற செய்தி எல்லோரும் அறிந்த உண்மை. ஆனால் பாக் இராணுவத்திற்கு அந்த எண்ணம் கிடையாது. எனவே ஷெரீஃபின்  திட்டத்தை முறியடிக்க இராணுவம் தன்னிச்சையாகச் செய்திருக்கலாம் என்கிற வாய்ப்பும் உண்டு. பாக் அரசியலில் இதெல்லாம் சகஜம். ஆனால் பாக் இராணுவமே கூட இன்று இந்தியாவுடன் ஒரு தீவிரமான போரை விரும்புகிறதா என உறுதியாகச் சொல்லிவிட இயலாது. ஏனெனில் பாக் மண்ணை வேராகக் கொண்டு உருவாகியுள்ள பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவிற்கு மட்டுமல்ல, பாக்கின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்குமே பெரிய சவாலாக உள்ளது. பழங்குடிப் பகுதியில் ‘டெஹ்ரீக்-ஏ-தாலிபான் –ஏ- பாகிஸ்தான்’ அமைப்புடன்  பாக் நடத்தும் போரில் அது மிகப் பெரிய இழப்புகளைச் சந்தித்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாக் இராணுவத்திற்கு தோல்விதான்.

பாக் இராணுவத்திற்குள்ளேயே தீவிரவாதிகளுக்கு ஆதரவும் உள்ளது. தீவிர இயக்கங்களின் நோக்கங்களின் மீது ஒரு பகுதியினருக்கு மரியாதையும் உள்ளது. எனவே இராணுவத் தலைமையின் ஒப்புதல் இல்லாமல் இராணுவத்தின் அப்பகுதியினரின் சாகசங்களில் ஒன்றாகவும் இது நடந்திருக்கலாம், அல்லது பாக் இராணுவத்தின் மறைமுகமான ஆதரவுடன் தீவிரவாதிகளும் இதைச் செய்திருக்கலாம்.

இத்தனை சாத்தியக் கூறுகளும் உள்ள நிலையில் அந்தோணியின் தொடக்க அறிவிப்பு எத்தனை எதார்த்தமான ஒன்று என்பதை யாரும் புரிந்து கொள்ள இயலும். நவாஸ் ஷெரீஃப் அரசின் முழுமையான ஒப்புதலுடன் பாக் இராணுவம் இந்தத் தாக்குதலை நடத்தி இருந்தால் பேச்சுவார்த்தையை முறித்துக் கொள்வது உட்பட பாக் அரசுடன்  நேரடி மோதல் என்கிற ஒரு அணுகல் முறையை மேற்கொள்வது ஒருவேளை சரியாக இருந்திருக்கலாம். ஆனால் அத்தகைய சாத்தியம் இல்லை என்பதுதான் பாக் அரசியலை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுள்ள  எல்லோருடைய கருத்தும். ஐந்து இந்திய வீரர்கள் கொல்லப்பட்டது வெளியானவுடன் ஷெரீஃப் அதிர்ச்சியும் வருத்தமும் தெரிவித்த செய்தி பத்திரிக்கைகளை வந்தது.  பிரதமரான பிறகு நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சியில் அவர் விடுத்த செய்தியிலுங் கூட இந்தப் பிரச்சினையின் அடிப்படையில் இந்தியாவுடனான உறவுகளை முறித்துக்கொள்ளும் அளவிற்கான பேச்சுக்களைத் தவிர்க்குமாறு அவர் கூறியதும் கவனிக்கத் தக்கது.

இந்தியாவுடன் ஷெரீஃப் முயற்சிக்கும் சுமுகமான உறவை முறிக்கும் நோக்குடன்தான்  பாக் இராணுவம் இந்தத் தாக்குதலை மேற்கொண்டது என்றால், இதை ஒட்டி நாம் பேச்சு வார்த்தையை முறித்துக் கொள்வது என முடிவெடுப்பது பாக் இராணுவத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதாகிவிடும் என்பதை நாம் மறந்துவிடலாகாது. பதிலாக எல்லை ஓரத்தில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் அதே நேரத்தில் பாக் அரசுடன் பேச்சு வார்த்தையைத் தொடர்வதுமே பாக் இராணுவத்தின் நோக்கத்தை முறியடித்து அதைத் தனிமைப் படுத்த உதவும். இந்தியாவுடன் சுமுக உறவைப் பேண வேண்டும் என எண்ணுகிறவர்களே பாகிஸ்தானில் அதிகம் உள்ளனர் என்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

பாக் இராணுவத்தின் ஒரு பிரிவு தன்னிச்சையாகவோ, இல்லை பாக் இராணுவத்தின் உதவியுடன் தீவிரவாதிகளோ இந்தத் தாக்குதலை நடத்தி இருந்தாலும் கூட உடனடி மோதல் என்பது நிச்சயம் இந்தியாவிற்குச் சாதகமாக இருக்காது. எல்லையில் நடைபெறும் போர் தீவிரவாதிகள் எளிதில் இந்திய எல்லைக்குள் ஊடுருவுவதற்கே உதவும்.

தவிரவும், இராணுவ ரீதியில் எல்லா அம்சங்களிலும் நாம் பாக்கை விட வலிமையாக உள்ளோம் என்கிற நிலை பாக் அணு குண்டு வெடித்த அன்றோடு முடிவுற்று விட்டது. இன்று இரண்டுமே அணு வல்லமை உள்ள நாடுகள். 2001- 02 காலகட்டத்தில் இந்தியப் பாராளுமன்றத்தின் மீதான தாக்குதலை ஒட்டி ‘ஆப்ரேஷன் பராக்கிரம்’ என்ற பெயரில் இந்தியா தாக்குதலை நடத்தியபோது இந்தியத் தரப்பில் 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் அதே நேரத்தில் இந்தியா மீதான பயங்கரவாதத் தாக்குதல்கள் குறையவும் இல்லை. கிஷ்ட்வார் (2001), ரகுநாத் ஆலயம் (2002), நந்திமார்க் (2003) முதலான தாக்குதல்களை எல்லாம் நாம் முறியடித்துவிட இயலவில்லை. வாஜ்பேயி – முஷாரஃப் பேச்சுவார்த்தையை ஒட்டி 2003க்குப் பின் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்தத்திற்குப் பின்புதான் எல்லையில் இவ்வாறு அவ்வப்போது தாக்குதலில் இரு தரப்பிலும் வீரர்கள் கொல்லப்படுவது குறைந்தது.

2000த்தில் இது போன்ற எல்லையோரத் தாக்குதல்களில் இந்தியத் தரப்பில் 114 வீரர்களும் 36 சிவிலியன்களும் கொல்லப்பட்டனர். 2001ல் இது 37 வீரர்கள் 17 சிவிலியன்களாக இருந்தது. 2002ல் கொல்லப்பட்ட இந்திய வீரர்கள் 81, சிவிலியன்கள் 74. 2003ல் இது 29 வீரர்கள் 38 சிவிலியன்கள். போர் நிறுத்தத்திகுப் பின் இந்த எண்ணிக்கை சுழியாகியது.

எல்லைப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகள் ஏற்படாதவரை இதுபோன்று எல்லையில் படைகள் ஒன்றையொன்று சுட்டுக் கொள்வது என்பது நடந்து கொண்டுதான் இருக்கும். உண்மையில் “எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை” ஒடுக்குவதற்காக எல்லை ஓரங்களில் சுடுவது என்பதை இந்தியாவே தொடங்கியது என்பதையும் நாம் கவனிக்கத் தவறலாகாது,

இன்று பாகிஸ்தானுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் எனப் படு தீவிரமாகப் பா.ஜ.க பேசி வந்தபோதும் அது ஆட்சியில் இருந்தபோது இந்த விஷயத்தில் ஓரளவு பொறுப்பாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். 2001 பாராளுமன்றத் தாக்குதலை ஒட்டி பாக் மீது போர் தொடுக்க வேண்டும் என்கிற கருத்துக்களை முறியடிக்கத் தான் எத்தகைய முயற்சிகளெல்லாம் செய்ய வேண்டி இருந்தது என்பது குறித்து அன்றைய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் தனது நூலில் குறிப்பிடுகிறார். அதேபோல இந்திய பாக் உறவில் வாஜ்பேயி – முஷாரஃப் பேச்சுவார்த்தையும், அதன் விளைவான போர்நிறுத்தமும் இந்திய பாக் உறவில் ஒரு மைல் கல் எனலாம்.

சென்ற ஆகஸ்ட் 4 அன்று பாக் உடனான பேசுவார்த்தையை உடனே நிறுத்த வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு மற்றும் அயலுறவுத் துறை சார்ந்த சுமார் நாற்பது உயரதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். தேர்தலுக்குப் பின் ஒருவேளை பா.ஜ.க தலைமையில் கூட்டணி அரசு அமைந்தால் அதில் தமக்கு ஒரு பதவி என்பதைக் காட்டிலும் வேறு எந்த நல்ல நோக்கத்தையும் இந்த அறிக்கை கொண்டிருக்கவில்லை.

அதே நேரத்தில் ஆகஸ்ட் 12 அன்று “அமைதிக்கான இந்திய பாகிஸ்தான் படைவீரர்களின் முன்முயற்சி” (Indo Pak Soldiers Peace Initiative) என்கிற அமைப்பின் இந்தியக் கிளை வெளியிட்ட அறிக்கை இதற்கு முற்றிலும் மாறாக இருந்தது. ஐந்து இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதை வன்மையாகக் கண்டித்த இவர்கள், மோதல் என்பது பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது, பேச்சுவார்த்தைகள் ஒன்றே இன்றைய தேவை எனக் குரல் எழுப்பினர். “இரு நாடுகளிலும் உள்ள மக்கள் அதிகாரம் பெறுவதற்கும், வளம் பெறுவதற்கும் அமைதி ஒன்றே வழி” என அந்த அறிக்கையில் முன்னாள் படை வீரர்கள் முழங்கினர்,

மக்கள் நலனை  முன்நிறுத்துபவர்கள் பேச்சு வார்த்தைக்கு முன்னுரிமை அளிப்பதும், சொந்த மற்றும் அரசியல் நலன் சார்ந்து பேசுவோர் பேச்சு வார்த்தைகள் கூடது எனச் சொல்வதும் புரிந்து கொள்ளக் கூடியதுதான்.

தேவதாசிமுறையும் சொர்ணமாலாவும் ஒரு குறிப்பு 

சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியின் நாட்டியத் துறை சார்பாக நடத்தப்பட்ட பரத நாட்டியம் தொடர்பான ஒரு சர்ச்சையை பத்திரிக்கையாளர் கவின்மலரின் பக்கத்தில் பார்த்தேன். Devadasi System  and Bharatha Natyam என்கிற தலைப்பில் அக் கல்லூரியின் நாட்டியத் துறையில் ஒரு உரை நிகழ இருப்பதாக வந்த அறிவிப்பைப் பார்த்துவிட்டு முதலில் பேரா. சரஸ்வதி தொலை பேசியிலும் பின்னர் சரஸ்வதி,  பெண்ணியச் சிந்தனையாளர் ஓவியா, வழக்குரைஞர் அஜிதா, கவின்மலர் ஆகியோர் நேரிலும் சென்று கல்லூரி முதல்வரிடம் பேசியுள்ளனர். “தேவதாசி முறை ஒழிக்கப்பட்டுவிட்டது. இந்நிகழ்வு அதை மீண்டும் மாணவர்களிடையே நியாயப்படுத்துவதாக அமைந்துவிடுமோ என்கிற அச்சத்தை” அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அவ் உரை ரத்து செய்யப்பட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.

தொலைபேசியில் கூறியதை ஒட்டி ‘Evolution of Bharathanatiyam’ என்பதாக உரைத் தலைப்பு மாற்றப்பட்டுவிட்டதாகவும், ‘’இது கலை சார்ந்த நிகழ்வாக இருக்கும். சொர்ணமால்யாதான் பேசுகிறார்’’ என்றும் கல்லூரி தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

நிகழ்வின்போது இவர்களும் சென்று உரையைக் கேட்டுள்ளனர்.  உரைத் தலைப்பு அதுவாக இருந்தபோதிலும்  சொர்ணமாலாவின் பவர் பாயின்ட் ஸ்லைட் தலைப்பு  ‘Devadasis – Wives of God’ என்பதாகாக இருந்துள்ளது. மாலா என்ன பேசினார் என்பது முழுமையாகத் தெரியவில்லை. கவின்மலரின் பதிவிலிருந்து அவர் தேவதாசி முறையைப் போற்றிப் பேசினார் என்றும் தேவதாசியரால் வளர்க்கப்பட்ட ‘சதிரில்’ இருந்தே பரதம் தோன்றியதாகவும் அவர் பேசியதாகத் தெரிகிறது. தேவதாசி சாதி உருவானது, முத்து லட்சுமி ரெட்டி போன்றோர் அதை ஒழித்தது முதலியன குறித்தும் அவர் சில தவறான கருத்துக்களை முன் வைத்ததாகவும் அதற்கு ஓவியா முதலானோர் அங்கேயே எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் அறிகிறேன்.

தேவதாசிமுறை ஒழிப்பு, அதில் முதுலட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிர்தம் ஆகியோரின் பங்கு, சத்தியமூர்த்தியின் சட்டமன்றப் பேச்சுக்கள் ஆகியவை குறித்துத் தமிழில் அதிகம் எழுதியுள்ளவர்களில் நானும் ஒருவன்.தே 2

தேவதாசி முறை குறித்து நாம் சிலவற்றை நுணுக்கமாகப் புரிந்து கொள்வது அவசியம்:

1.பரத்தமை, பொதுமகளிர், வரைவின் மகளிர், பிற்காலத்திய தேவதாசியர் ஆகியோருக்கிடையே உள்ள நுணுக்கமான வேறுபாடுகள் முக்கியம். சோழர் காலத்தில் கோவில்கள் என்கிற நிறுவனம் அரசதிகாரத்தின் பிரிக்க இயலாத ஓரங்கமாக மாறியபோது தேவதாசிமுறை கோவில் நிர்வாகத்தின் பகுதியாக நிறுவனமயப்படுத்தபட்டது. தளிச்சேரிப் பெண்டுகள் முதலான பெயர்களில் தேவதாசியர் அழைக்கப்பட்டனர். ராஜராஜ சோழன் தஞ்சையில் கட்டிய பெருவுடையார் கோவிலுக்கென நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஓலை அனுப்பிக் கட்டாயமாக 400  பெண்களைக் கொணர்ந்து அவர்களைத் தேவதாசியராக்கிய வரலாற்றை நாம் அறிவோம்.

2.இவர்கள் பல்வேறு சாதிகளிலிருந்து வந்தபோதும் பின்னாளில் இவர்களே ஒரு சாதியாயினர். தமிழகச் சாதிகள் பலவும் காலப்போக்கில் இப்படியெல்லாம் உருவானவைதானே. பிற மொழிக் கலப்பு உட்பட எல்லாச் சாதிகளிலும் ஏற்பட்ட மாற்றங்கள் இதிலும் நிகழ்ந்தன. ‘சின்னமேளம்’, ‘பெரியமேளம்’ முதலான பிரிவுகளும் உருவாயின. முதலியார், பிள்ளை முதலான பட்டப் பெயர்களையும் இவர்களும் பயன்படுத்திக் கொண்டனர். பின்னாளில் இவர்கள் அனைவரும் நவீன அரசுப் பதிவுகளில் இசை வேளாளராகக் குறிக்கப்பட்டனர்.

3.மத்திய காலத்தில் ஏற்பட்ட வேலைப் பிரிவினைகளின் ஊடாக சிலப்பதிகாரக் காலம் தொடங்கி வளர்ந்து வந்த தமிழின் வளமான இசை மற்றும் நாட்டியப் பாரம்பரியத்திற்கு உரியவர்களாக இவர்கள் ஆயினர். காலங்காலமாக இவற்றைக் கையளித்துக் காப்பாற்றிய பெருமை இவர்களுக்குண்டு. தஞ்சை நால்வர், பாலசரஸ்வதி தேவி, வீணை தனம்மாள், எம்.எஸ்.சுப்புலட்சுமி எ னப் பலரையும் சொல்லலாம்.

4.பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட நமது சமூகத்தில், கல்வி கற்கும் வாய்ப்புப் பெற்றவர்களாகவும் தேவரடியார்களே இருந்தனர். அச்சுக் கோர்ப்பு முறையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய சீகன்பால்கு அக்காலக் கல்வி முறையின் பாடத்திட்டங்கள் குறித்துச் சேகரித்துள்ள தகவல்கள் இதற்குச் சான்று (சீகன்பால்கு குறித்த எனது நூலில் இதைக்  காணலாம்). முத்துப்பழனி, புட்டலக்‌ஷ்மி நாகரத்தினம்மாள் முதலியோர் சில எடுத்துக்காட்டுகள்.

5.இத்தனைக்கும் மத்தியில் தேவதாசிப் பெண்களின் வாழ்க்கை மிக அவலமான ஒன்று.

கட்டாயமாகப் பொட்டுக்கட்டப்பட்டு கோவில் சேவகத்திற்கு விடப்படும் இவர்களுக்குக் குடும்ப வாழ்க்கை மறுக்கப்பட்டது. குடும்ப வாழ்க்கை மறுக்கப்பட்டால் என்ன வந்துவிடப் போகிறது என இதை ஒதுக்க இயலாது. ஏனெனில் இது அவர்களின் சுதந்திரமான தேர்வு அல்ல. கட்டயமாகத் திணிக்கப்பட்ட ஒன்று. இவர்கள் கோவிற் பூசகர்கள், நிர்வாகிகள், ஊர்ப் பெரியமனிதர்கள் ஆகியோரின இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான பண்டங்களாகப் பயன்படுத்தப்பட்டதோடன்றி, இவர்களின் முதுமைக் காலம் ம்கவும் அவலத்துக்குரிய ஒன்றாக அமைந்தது.

காலங்காலமாக இப்படிப் பாலியல் சுரண்டல்களுக்க்கு ஆட்பட்டு வந்த இச் சமூகம் சென்ற நூற்றாண்டில் இப் பொட்டுக்கட்டும் அவலத்திலிருந்து விடுபட்ட வரலாற்றையும், அதில் முத்துலட்சுமி, ராமாமிர்தம் ஆகியோரின் பங்கையும், திராவிட இயக்கம் இதில் முன் நின்றதையும், சத்தியமூர்த்தி முதலானோர் இந்தியப் பாரம்பரியம் என்கிற வகையில் தெவதாசி முறையை ஆதரித்துப் பேசிய வரலாற்றையும், காக்க முயன்று தோற்ற கதையையும் நாம் அறிவோம். என் கட்டுரைகள் பலவற்றில் இதை விரிவாகப் பேசியுள்ளேன்.  ஆங்கிலத்தில் ஆனந்தி முதலானோர் இதை விரிவாக எழுதியுள்ளனர். திராவிட இயக்கம் தவிர காந்தியடிகளும் முத்துலட்சுமி ரெட்டிக்கு ஆதரவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகச் சுற்றுப்பயணம் ஒன்றில் அவர் அத்தனை கூட்டங்களிலும் தேவதாசிமுறை ஒழிப்பை ஆதரித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது (பார்க்க: எனது ‘காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்’ நூல்).

இங்கொன்றைக் குறிப்பிடுவது முக்கியம். சென்ற நூற்றாண்டில் நம் தமிழ் இசையும், தேவதாசியரால் காபாற்றப்பட்டு வந்த தமிழ்நாட்டிய மரபும் (‘சதிர்’) இங்கே ‘கர்நாடக சங்கீதமாகவும்’, ‘பரத நாட்டியமாகவும்’ உருமாற்றப்பட்டது. இதில் பார்ப்பனர்களின் கைவரிசையை விளக்க வேண்டியதில்லை. பத்மா சுப்பிரமணியம் போன்றோர் இதில் பெரும் பங்கு வகித்தனர். தேவதாசி மரபில் வந்த கலை என்கிற உண்மை இவர்களுக்கு இழுக்காக இருக்கும் என்பதால், தேவதாசியரின் பங்கு இவர்களால் மூடி மறைக்கப்பட்டது. சதிர் பரதமாகியது.

எனவே இந்தக் கலையின் தமிழ் வேர்களையும், இதக் காப்பாற்றி வந்ததில் தேவதாசியரின் மரபையும் நாம் அழுத்திச் சொல்ல வேண்டியுள்ளது. அப்படிச் சொல்வது யாராக இருந்தபோதிலும் அதை நாம் வரவேற்க வேண்டியவர்களாகவே இருக்கிறோம்.

அதே நேரத்தில் தேவதாசிமுறையை உன்னதப்படுத்தி, அதை ஒழித்துக் கட்டிய திராவிட இயக்கத்தின் பங்கைக் கொச்சைப்படுத்திப் பேசும் யாரையும் நாம் கண்டிக்கத் தவறவும் கூடாது. அந்த வகையில் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி நாட்டியத் துறையில் நடைபெற்ற சொர்ணமாலாவின் கருத்துக்களை நேரில் சென்று கவனித்து மறுத்துரைத்த ஒவியா முதலானோரின் பங்கு பாராட்டுக்குரியது.

தே 3அதே நேரத்தில் இதற்கான கல்வித் துறையில் ‘Devadasi system and Bharathanatiyam’ ,  ‘Evolution of Bharathanatiyam’, ‘Devadasis – Wives of God’ போன்ற தலைப்புகளில் கருத்தரங்குகளே நடத்தக் கூடாது எனக் கூற இயலுமா? தேவதாசி முறை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதால் அது குறித்து ஆய்வுகளே கூடாது எனச் சொல்ல இயலுமா? ‘தமிழகத்தில் தேவரடியார் மரபு’ என்கிற நூலை முனைவர் நர்மதா எழுதியுள்ளார். அது அவரது முனைவர் பட்ட ஆய்வு. அந்நூல் குறித்த விமர்சனத்தை நான் ‘தீராநதி’ யில் எழுதியுள்ளேன். இன்றைய ‘பரத நாட்டியத்தில்’ தேவரடியார் மரபு குறித்த அடுத்த நூற் தயாரிப்பில் அவர் இப்போது உள்ளார். டி.எம்.சுந்தரம் என்பவர் ஒரு நூல் எழுதியுள்ளார். லக்‌ஷ்மி விஸ்வநாதன் Women of Pride: The Devadasi Heritage என்றொரு நூலை எழுதியுள்ளார். இன்னும் பல ஆய்வுகள் இருக்கக் கூடும். சத்யஜித்ரே, பாலசரஸ்வதி குறித்து  ஒரு அற்புதமான ஆவணப் படம் (‘பாலா’) எடுத்தார்.

இது குறித்து நான் ஓவியா அவர்களிடம் பேசியபோது அவர் இரு நியாயங்களை முன்வைத்தார். 1.இப்படியான ஒரு தலைப்புக்குள் ஒளிந்து கொண்டு தேவதாசி முறையை நியாயப்படுத்திவிடக் கூடாது. 2.ஒரு தனியார் அரங்கில் இப்படிப் பேசினால் கூட அதை அனுமதிக்கலாம். ஒரு கல்வி நிலையத்தில் இப்படிப் பேசுவதை எப்படி அனுமதிப்பது.

உண்மைதான். எனினும் கல்வி நிறுவனங்களில் கல்விச் சுதந்திரம் (academic freedom)  என்பது முக்கியம். அவர்கள் என்ன பேசப் போகிறார்கள், ஆய்வில் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதை நாம் முன் கூட்டி ஊகித்து அந்த அடிப்படையில் எதிர்ப்புக் காட்ட இயலாது. எழுதப்பட்ட ஒரு பாடத்தில் உள்ள தவறுகளை நாம் சுட்டிக் காட்ட இயலும். ஆனால் எழுதப்பட இருக்கும் ஒரு ஆய்வில் ஆலது பேசப்பட உள்ள ஒரு உரையில் நீ தவறாகத்தான் பேசுவாய் என்கிற முன் அனுமானத்தில் நாம் அதில் தலையிடுவது கல்விச் சுதந்திரத்தில் தலையிடுவதாகவே அமையும். அப்படி எழுதப்படும், பேசப்படும் பட்சத்தில் அத்ற்கான எதிர்வினைகளை ஆற்ற நமக்கு இப்போது எத்தனையோ வழிமுறைகள் உண்டு.

இறுதியாக ஒன்றைச் சொல்லி ஆக வேண்டியுள்ளது. இன்று தேவதாசி முறையைச் சொர்ணமாலா போன்ற பார்ப்பனர் மட்டும் போற்றவில்லை. மணியரசனின் ‘தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி’ போன்ற தமிழ்த் தேசிய அமைப்புகளும் போற்றிப் புகழ்கின்றன. அவர்கள் ராஜராஜ சோழன் போன்றோரை தமிழ் வீரத் திரு உருக்களாகப் பார்க்கின்றனர். பெருமிதத்திற்குரிய சோழர் காலத்தை கம்யூனிஸ்டுகள் நில உடைமை என்றும், பெரியாரியர்கள் பார்ப்பனீயம் என்றும் இதுகாறும் கீழ்மைப்படுத்தி விட்டனரே என வெளிப்படையாக ஓலமிடுகின்றனர். ராஜராஜன் பட்டமேறிய ஆயிரமாண்டு நாளை கருணாநிதி பெரு விமரிசையாகக் கொண்டாடியபோது தமிழகத்தில் மிகப் பெரிய எதிர்ப்புகள் நிகழ்ந்தன. ஆனால் சமீபத்தில் தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் ஆயிரமாவது குடமுழுக்கை கருணாநிதி அரசு கொண்டாடியபோது, ‘தமிழர் கண்னோட்டம்’ இதழ் சிறப்பு மலர் வெளியிட்டது. அதில் ராஜராஜ சோழன் அறிமுகப்படுத்திய தேவரடியார் முறை பெருமைக்குரிய ஒன்று எனவும், அது பெண்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு எனவும் பொருள்பட்ட கட்டுரை வெளியிடப்பட்டது. அப்போது ஏன் எந்த எதிர்ப்பையும் யாரும் காட்டவில்லை?