பாகிஸ்தான் மியான்மரும் அல்ல, இந்தியா அமெரிக்காவும் அல்ல

(2014 ல் இதழ் ஒன்றில் வெளிவந்த கட்டுரை)

மியான்மர் நாட்டு எல்லைக்குள் நுழைந்து நாகாலந்து தீவிரவாத அமைப்புகளின் இரு முகாம்களைத் தாக்கி தீவிரவாதக் குழுக்களில் ஒன்றான கப்லாங் குழுவைச் சேர்ந்தவர்களை வெற்றிகரமாகக் கொன்று திரும்பிய பெருமிதத்தை மோடி அரசும், பா.ஜ.கவும் இதர இந்துத்துவ அமைப்புகளும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.

பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் இந்தியாவின் “மனநிலையில் ஒரு மாற்றம்” (change in mindset) ஏற்பட்டுள்ளதை இந்தச் “சூடான தாக்குதல்” (hot pursuit) காட்டுவதாகவும், இந்தியாவின் இந்தப் புதிய தோற்றத்தை (new posture) கண்டு கலங்கிப் போயிருப்பவர்கள் எதிர்வினை ஆற்றத் தொடங்கிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இதர பா.ஜ.க மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் தலைவர்களின் பேச்சுக்களையும், மீசை முறுக்கல்களையும், தொடை தட்டல்களையும் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

இந்தியா இனி “சகித்துக் கொண்டிருக்கப் போவதில்லை” (zero tolerance) என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என பா.ஜ.கவின் தலைமைப் பேச்சாளரும், முன்னாள் இதழாளருமான எம்.ஜே.அக்பர் கூறியுள்ளார். முன்னெல்லாம் இந்தியாவிற்கு எதிராக அண்டை நாடுகளைத் திரட்டி நிறுத்த பாகிஸ்தானால் முடிந்தது எனவும், இன்றைய மோடி அரசின் அணுகல் முறை அதைத் தகர்த்து விட்டது எனவும் கூறியுள்ளார்.

முன்னாள் இதழாளர் ஒருவரே இப்படிச் சொல்லும்போது விசுவ இந்து பரிஷத்தின் தொகாடியா போன்றோரைக் கேட்கவா வேண்டும். அவர்கள் பங்கிற்கு இன்னும் நிறையச் சடவடால்களை அடித்துள்ளனர்.

எல்லாவற்றையும் விட இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது அரசுத் தரப்புப் பிரகடனங்கள்தான். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர், இனி பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவிற்கு வெளியே இருந்து இப்படித் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்க இயலாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் எனச் சொல்லியுள்ளார். இனி யார் வீட்டுக்குள் வேண்டுமானாலும் நுழைவோம் என்பது இதன் சுருக்கம்.

இன்னொரு துணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ராதோர் இதை இன்னும் வெளிப்படையாகச் சொல்லியுள்ளார். இந்தியப் படைவீரகள் 18 பேர்களைச் சென்ற 4ம் தேதி கொன்றதற்குப் பழி வாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை “பிற” நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை என்றுள்ளார்.

இந்த “வீரப் பேச்சுக்களை” காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி முதலானவை சரியாகவே கண்டித்துள்ளன. இடதுசாரிக் கட்சிகளும் நிச்சயமாகக் கண்டிக்கும் என நம்பலாம். தங்களின் அமைச்சர்களுக்கு என்ன பேசுவது என்பது குறித்து ‘கவுன்சிலிங்’ கொடுப்பது நல்லது என முன்னாள் அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.

இப்படி அண்டை நாடுகளுக்குள் அவற்றின் ஒப்புதலின்றி நுழைந்து தாக்குதல் நடத்த பன்னாட்டுச் சட்டங்களில் அனுமதியில்லை. எந்தக் காரணங்களுக்காகவும் நாடுகளின் இறையாண்மையை மீற  பன்னாட்டுச் சட்டங்கள் ஒப்புதல் அளிப்பதில்லை. இந்த விதியை முதன் முதலாக எந்தப் பெரிய கண்டனங்களும் இல்லாமல் மீறியது அமெரிக்காதான். பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதல் என்கிற பெயரில் அது பாகிஸ்தானுக்குள் அதன் ஒப்புதலின்றி நுழைந்து ‘ட்ரோன்’ தாக்குதல்களை நடத்தி ஏராளமான அப்பாவி மக்களைக் கொன்றது, இன்று ISS பயங்கரவாதத்திற்கு எதிராகவும் இப்படித் தாக்குதலை நடத்துகிறது, “முன்கூட்டிய தாக்குதல்” (pre emptive strike) என்றெல்லாம் இதற்கு ஒரு தத்துவத்தையும் சொன்னது.

சரி, இப்படி இன்னொரு நாட்டுக்குள் ஒளிந்து கொண்டு தாக்கும் பயங்கரவாதிகளை என்னதான் செய்வது? சர்வதேச அழுத்தங்கள், புத்திசாலித்தனமான அரசியல் முதலியவற்றின் ஊடாகத் தான் இதை எதிர் கொண்டாக வேண்டும். 2003ல்  சிக்கிமில் இருந்து கொண்டு தாக்கத் திட்டமிட்ட பயங்கரவாதிகளை சிக்கிம் அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து அந்த அரசின் மூலமாகவே அவர்களை இந்திய அரசு அழித்தது நினைவிற்குரியது. இன்னொரு பக்கம் பயங்கரவாதம் வேர் கொள்வதற்கான அடிப்படைப் பிரச்சினைகளில் உரிய அரசியல் தீர்வுகளையும் மேற்கொள்வதும் அவசியம்

1990 கள் தொடங்கி மியான்மருடன் நெருக்கத்தைப் பேணி வருகிறது இந்திய அரசு. ஏராளமான ஒத்துழைப்புகளையும், வளர்ச்சித் திட்டங்களையும் இந்தியா மியான்மரில்  மேற்கொண்டு வருகிறது. இன்று ரோகிங்யா முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டு வெளியேற்றப் படுவதற்காக மியான்மரை உலகமே கண்டிக்கும்போது இந்தியா இதுவரை வாய்திறக்காமல் மௌனம் காத்து மியான்மர் அரசுக்கு ஆதரவளித்து வருகிறது. இந்நிலையில் மியான்மர் அரசைக் கொண்டே அந்தத் தீவீரவாத முகாம்களை இந்தியா அழித்திருக்க முடியும்.

இன்றைய தாக்குதல் குறித்து மோடி அரசு இதுவரை முழு விவரங்களையும் வெளியிடவில்லை. இந்த ‘வெற்றிகரமான’ தாக்குதலில் எவ்வளவு பேர்கள் கொல்லப்படார்கள் என்பதிலும் கூட உண்மை தெரியவில்லை. 38 பேர்கள் என ஒரு செய்தி சொல்லுகிறது. இன்னொன்று 70 பேர்கள் என்கிறது, மற்றொன்று நூறு பேர்கள் என்கிறது. தாக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் கப்லாங் குழுவோ தங்கள் பக்கம் யாரும் சாகவில்லை என்கிறது.

மியான்மர் அரசின் ஒப்புதலுடன்தான் அவர்களின் நாட்டிற்குள் புகுந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளோம் என இந்தியா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, தங்கள் எல்லைக்குள் இந்தியா புகவே இல்லை எனவும், தனது எல்லைக்குள்தான் இந்தியா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது எனவும் மியான்மர் அரசு கூறுகிறது. ‘அவர்கள் அப்படித்தானே சொல்லியாக வேண்டும்” என இந்தியத் தரப்பு சமத்காரம் பேசுகிறது.

அடுத்த தாக்குதல் பாகிஸ்தான்தான் என்கிற பொருளில் இந்திய அமைச்சர்கள் பேசியதை பாகிஸ்தான் கடுமையாகக் கண்டித்துள்ளது. பாக் உள்துறை அமைச்சர் நிசார் அலி கான். “பாகிஸ்தான் மியான்மரல்ல” என இந்தியாவை எச்சரித்துள்ளார். முன்னாள் அதிபர் முஷாரஃப், “பாகிஸ்தான் அணு குண்டுகளை வைத்திருப்பது வைத்துக் கும்பிடுவதற்காக அல்ல” என எச்சரித்துள்ளார். “எங்களைத் தாக்க நினைக்காதீர்கள். எங்களது இறையாண்மையை அத்து மீற முற்சிக்காதீர்கள். நாங்கள் சின்ன நாடு அல்ல. அணுகுண்டுகளை வைத்திருக்கும் மிகப் பெரிய வல்லரசு” என்று அவர் பக்கத்திற்கு சவால்களை இறக்கியுள்ளார்.

இரண்டு விடயங்களை இந்தியா மறந்துவிடலாகாது. 1. இந்தியா மரபுவழிப்பட்ட ஆயுதங்கள் மற்றும் படை வீரர்களின் எண்ணிக்கையில் பாகிஸ்தானை மிஞ்சியுள்ளது உண்மை.. ஆனால் என்றைக்கு அதுவும் அணு குண்டுகளைத் தயாரிக்கத் தொடங்கியதோ அதற்குப்பின் இரு நாடுகளும் சம பலம் உள்ளவையாகிவிட்டன. 2. பாக் இந்தியாவைப் போல ஒரு ஜனநாயக நாடு அல்ல, நாடாளுமன்றத்துக்குக் கட்டுப்படாத ஒரு இராணுவம், வலிமையான ஆயுதக் குழுக்கள் என அங்கு அதிகாரம் பிரிந்து கிடக்கிறது. அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது என்பதை இவர்களில் யாரும் தன்னிச்சையாக்கக் கூடச் செய்துவிட இயலும்.

இந்தியாவின் இந்தப் “புதிய வெளிப்பாடு” குறித்துப் பெருமிதம் கொள்ளுபவர்கள் அப்படியான ஒரு போர் வரும் எனில் அதை இந்தத் துணைக் கண்டம் தாங்காது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். பாகிஸ்தான் மட்டுமல்ல இந்தியாவும் ஒரு போரைத் தாங்கும் நிலையில் இல்லை.

அமெரிக்கா இப்படி நாடு புகுந்து தாக்குதலை நடத்தியதைப் பார்த்து மோடியும் இப்படியான வேலையில் இறங்கினால் சரியான பாடங் கற்றுக் கொள்ளத்தான் நேரிடும். ஒபாமவைப்போல கோட் போட்டுக் கொண்டதால் மட்டுமே மோடி ஒபாமா ஆகிவிட முடியாது.

“பாகிஸ்தான் மியான்மரல்ல” என்பது மட்டுமல்ல, “இந்தியா அமெரிக்காவும் அல்ல”

 

இந்திய பாக் போர் வெறிப் பேச்சுக்கள்

(ஜனவரி 23, 2013 ல் எழுதியது)

டெல்லி பாலியல் வன்முறைக்கு அடுத்தபடியாக இன்று இந்திய ஊடகங்களை நிரப்புகிற செய்தி காஷ்மீருக்குள் உள்ள போர் நிறுத்தக் கோட்டில் (LoC) ஏற்பட்டுள்ள முறுகலும் அதை ஒட்டிய ஆவேசப் பேச்சுக்களுந்தான். “கொல்லப்பட்ட ஒவ்வொரு இந்திய வீரரின் தலைக்கும் பத்து பாகிஸ்தானியர்களின்  தலை உருள வேண்டும்”, “பாகிஸ்தான் மீது இந்தியா ‘உண்மையான நடவடிக்கை’ எடுக்க வேண்டும்”, “சமாதானத்திற்கு இது நேரமில்லை”, “வேறு வகைச் சாத்தியங்கள் உண்டு என எச்சரிக்கிறோம்” என்பது போன்ற முழக்கங்களை இன்று அமைச்சர்கள், எதிர்க் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி இந்திய இராணுவத் தலைமைகளும் உதிர்க்கின்றன.

பாகிஸ்தானையும் முஸ்லிம்களையும் முதல் எதிரிகளாகக் கற்பித்து ஒரு அரசியலைக் கட்டமைக்கும் இந்தியாவின் பிரதான எதிர்க் கட்சியான பா.ஜ.கவுக்கும் காங்கிரசிற்கும் இந்த விஷயத்தில் பெரிய வித்தியாசமில்லை என்பதுபோல இன்று இந்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் அமைகின்றன. பாகிஸ்தானிலிருந்து இங்கு வந்துள்ள இசைக் கலைஞர்களையும் ஹாக்கி வீரர்களையும் திருப்பி அனுப்புவதும் பாகிஸ்தானியர்களுக்கு இந்திய விசா அளிப்பதை நிறுத்துவதும், “இனி பாகிஸ்தானுடன் சுமுக உறவு கிடையாது” என்று பிரதமர் அறிவிப்பதுபும் கவலை அளிக்கிறது.

பாகிஸ்தானுடனான உறவைப் பொருத்தவரை பேச்சு வார்த்தை, போர் நிறுத்தம், பாகிஸ்தான் மண் பயங்கரவாதத்தின் நாற்றங்காலாக இருப்பதைத் தடுக்கும் நோக்கில் அழுத்தத்தை அளித்துக்கொண்டே சுமுகமான போக்கு வரத்து, வணிக உறவு ஆகியவற்றைப் பேணுவது ஆகிய அணுகல்முறைகளுக்கு முன்னுரிமை அளிப்பவர் என்கிற பெயர் பிரதமர் மன்மோகனுக்கு உண்டு. நான்கு ஆண்டுகளுக்கு முன் (ஜூலை 16, 2009) ஷர்ம் –எல்- ஷேக்கில் (எகிப்து) நடைபெற்ற சார்க் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகனும் பாகிஸ்தானின் அன்றைய பிரதமர் கீலானியும் இணைந்து வெளியிட்ட அறிக்கை இங்கே கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியது. பா.ஜ.க மற்றும் அதற்கு ஆதரவான ஊடகங்கள் மன்மோகன், இந்திய நலனை விட்டுக் கொடுத்துவிட்டதாகக் குற்றம் சாட்டின.

பயங்கரவாதத்தைத் தடுப்பதில் இரு நாடுகளும் ஒத்துழைப்பது, இது தொடர்பான உளவுகளைப் பகிர்ந்துகொள்வது என்பது தொடர்பாகப் பேச வரும்போது ‘பலூசிஸ்தான்’ என்கிற சொல்லைக் கூட்டறிக்கையில் சேர்த்ததற்காகவே அத்தனை கண்டனங்களும் முன்மொழியப்பட்டன. இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதச் செயல்கள் பலவற்றின் விளை நிலமாக பாகிஸ்தான் உள்ளது என்பது ஊரறிந்த உண்மை. பதிலுக்கு பாகிஸ்தான், தனது நாட்டில் பலூசிஸ்தான், வாசிரிஸ்தான் ஆகிய பகுதிகளில் உருவாகும் உள்நாட்டுப் பயங்கரவாதத்தின் பின்புலமாக இந்தியா உள்ளது எனக் குற்றம் சாட்டுகிறது. இந்தியா இதை ஏற்பதில்லை. இந்நிலையில் இரு தரப்புக் கூட்டறிக்கையில் பலூசிஸ்தான் பெயரும் இடம் பெற்றதற்குத்தான் அத்தனை எதிர்ப்பு. கூட்டறிக்கை என்பது இரு தரப்பினரும் சற்றே தம் இறுக்கங்களை விட்டுக் கொடுத்து இறங்கி வருவதுதான். நமது நிலைபாடு மட்டுமே அதில் இடம் பெறவேண்டும் எனச் சொல்வது என்ன நியாயம் என மன்மோகன் தரப்பினர் பதிலளித்தது எடுபடவில்லை.

பாக் மண்ணில் திட்டமிடப்பட்டு இந்திய மண்ணில் நிகழ்த்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள் மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளதன் பின்னணியில் இத்தகைய நியாயமான கோபம் இந்தியாவில் உருவாவது வியப்பில்லை. சமீபத்தில் (ஜனவரி 8) காஷ்மீரில் ஊரி பகுதியில் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு (LoC) அருகில் ஹேம்ராஜ், சுதாகர் சிங் என்கிற இரு இந்திய இராணுவ வீரர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு உடல் சிதைக்கப்பட்ட நிகழ்வு இன்று மிகப் பெரிய கொந்தளிப்பிற்கும், ஏதாவது எதிர்வினை ஆற்றியாக வேண்டும் என்கிற மனநிலை உருவாக்கத்திற்கும் காரணமாகியுள்ளது.

பாகிஸ்தான் இன்று கிட்டத்தட்ட ஒரு ‘தோல்வியடைந்த அரசு’ (Failed State) என்கிற நிலைய நோக்கிச் சென்றுகொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானை ஆக்ரமித்திருந்த சோவியத் படைகளுக்கு எதிராக அமெரிக்க ஆதரவுடன் பாகிஸ்தானில் உருவாக்கப்பட்ட முஜாகிதீன்கள் (1979 – 87), ஆப்கனிலிருந்து சோவியத் படைகள் வெளியேற்றப்பட்டபின் ஆயுத நீக்கம் செய்யப்படவில்லை. அமைதி வாழ்க்கைக்கு அவர்கள் திருப்படப்படவில்லை. மாறாக பாக் இராணுவத்தின் ஐ.எஸ்.ஐ இயக்ககம் அவர்களில் ஒரு பகுதியை காஷ்மீர்ப் பிரச்சினையை முன்வைத்து இந்தியாவிற்கு எதிராகத் திருப்பியது. இன்னொரு பகுதி அடுத்ததாக ஆப்கனைக ஆக்ரமித்த அமெரிக்கப் படைகளுக்கு எதிராகத் திரும்பியது. பலூசிஸ்தான், கில்ஜித், சிந்து பகுதிகளில் இன்று ஆயுதம் தாங்கிய பிரிவினை இயக்கங்கள் செயல்படுகின்றன. கராச்சியில் முட்டாஹிடா குவாமி இயக்கதினர், தெற்கு பஞ்சாபில் செராய்கிகள் ஆகியோரும் இன உணர்வு அடிப்படையில் இயங்குகின்றனர்.

மொத்ததில் பாகிஸ்தான் இன்று இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக மட்டுமல்ல, பாகிஸ்தானுக்கு உள்ளேயான பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணாகவும் மாறியுள்ளது. இந்தப் பயங்கரவாதம் இன்று இந்தியாவில் ஏற்படுத்தியுள்ள அழிவுகளைக்காட்டிலும் பாகிஸ்தானிற்குள் அதிக அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. இது போதாதென்று எல்லையோரப் பகுதிகளில் அமெரிக்கா நடத்தும் ஆளில்லா விமானத் (ட்ரோன்)தாக்குதல்களால் உயிரிழப்பவர்களும் உள்நாட்டிலேயே அகதிகளாயிருப்போரும் பல இலட்சம் பேர்.

பாக் இன்று தன் நிதிநிலை அறிக்கையில் 25 சதத்தை இராணுவத்திற்கு ஒதுக்குகிறது. அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமையால் உருவாகியுள்ள வறுமை பெரிய அளவில் அந்நாட்டு இளைஞர்களை பயங்கரவாதத்தை நோக்கித் தள்ளுகிறது.  பாக் அரசே இன்று  இந்நிலையை ஏற்றுக்கொண்டு தன் அணுகல்முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. சென்ற சுதந்திர நாளின்போது (ஆக 14, 2012) பாக் இராணுவக் கழகத்தில் (National Military Academy) பேசிய ஜெனரல் கயானி உள்நாட்டில் வளர்ந்து வரும் பயங்கரவாதம் குறித்துக் கவலை தெரிவித்ததோடு, தேசிய உணர்வுச் சக்திகளைத் திரட்டிப் பல்வேறு ஆயுதக் குழுக்களையும், இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகள், லஷ்கர்கள் ஆகியவற்றையும் எதிர்க்க வேண்டிய முக்கியத்துவத்தை வற்புறுத்தியது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தேசிய இராணுவப் பல்கலைக் கழகத்தில் (National Defence University) பேசும்போது பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப், உள்நாட்டுப் பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் நோக்கில் பாக்கின் இராணுவ மற்றும் பாதுகாப்புக் கொள்கைகள் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் எனவும் பேச நேர்ந்துள்ளது.  இந்த அடிப்படையில் சமீபமாக பாக் இராணுவம் தனது கொள்கையை ‘மறு அளவை’ (Re-calibration) செய்து தனது ‘முதல் எதிரி’ நிலையிலிருந்து இந்தியாவை நீக்கி, உள்நாட்டு பயங்கரவாதத்தை அந்த இடத்தில் வைத்துள்ளதாகவும் செய்தியொன்று வந்தது.

இந்த அணுகல் முறை மாற்றம் பாக்கில் செயல்படும் பலமுனை அதிகார மையங்களின் கருத்தொருமிப்பு எனச் சொல்லிவிட இயலாது என்பது உண்மைதான். எனினும் இத்தகைய ஒரு பின்புலத்தில் இன்று காஷ்மீர் எல்லையோரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை எவ்வாறு கையாள்வது என்பதுதான் கேள்வி.

அந்த வகையில் இந்தியத் தரப்பும், இந்திய ஊடகங்களும் இந்தப் பிரச்சினையை அணுகுவது ஒரு புத்திசாலித்தனமான அயலுறவுக் கொள்கை சார்ந்த அணுகல்முறைதானா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது. பாக் ஊடகங்களைப் பொருத்தமட்டில் எல்லையில் உருவாகியுள்ள இந்த முறுகலுக்கு அத்தனை முக்கியம் அளிக்கவில்லை. அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கத்தக்க வேறு உள்நாட்டு அதிரடிப் பிரச்சினைகள் உள்ளன என்பது மட்டும் இதற்குக் காரணமில்லை. பொதுவாக இந்திய பாக் உறவுகளிலுள்ள நெரிசல்களைப் பொருத்த மட்டில் பாக் ஊடகங்கள் தத்தம் பார்வைகளைச் சுயேச்சையாக வெளிப்பத்தும் எனவும், அதே நேரத்தில் இந்திய ஊடகங்கள் அனைத்தும் ஒருமித்த குரலில் அரசின் அணுகல்முறையை அப்படியே வலியுறுத்தும் எனவும் ஒரு கருத்து உண்டு. தற்போதும் அப்படித்தான் நிகழ்வுகள் உள்ளன.

“அடங்காப்பிடாரியான தன் பக்கத்து நாட்டைக் கட்டுக்குள் வைக்க முடியும் என இந்தியா உலகத்திற்குக் காட்ட வேண்டும்” என்றொரு தேசிய ஆங்கில நாளிதழ் தலையங்கம் எழுதுகிறது. அதன் பிரதம ஆசிரியர் பெயரில் வெளிவந்துள்ள இன்னொரு கட்டுரையில் அவர், அமைதி, பேச்சுவார்த்தை, பதட்டத்தைக் குறைத்தல் ஆகியவற்றைப் பற்றி அதிகமாகப் பேசுகிற ‘பாகிஸ்தானின் நண்பர்களான’ சில திரைப்படக்காரர்கள், அறிவு ஜீவிகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றைக் கடுமையாகச் சாடுகிறார். அப்படியானவர்கள் பாக் அரசிடம் விலைபோனவர்கள் எனச் சொல்கிற அளவிற்கு அக்கட்டுரை அமைகிறது. பாக் மீது போர் தொடுத்து ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதே இத்தகைய பேச்சுக்களின் உள்ளுறையாக அமைகின்றது.

‘இந்து’ நாளிதழ் மட்டுமே இந்தப் போக்கிலிருந்து விடுபட்டு நடுநிலையாகத் தன் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளது. பாக்குடன் இனி சுமுக உறவு கிடையாது என்கிற மன்மோகனின் பேச்சைக் கண்டித்து அந்த நாளிதழ் நேற்று (ஜன 16) எழுதியுள்ள ஒரு தலையங்கத்தில், “இது அப்படி ஒன்றும் நல்ல முடிவு அல்ல. இந்திய  வீரர்களின் தலை துண்டிக்கப்பட்ட நிகழ்வு வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியதுதான். ஆனால் இது போன்ற செயல்களைப் பாகிஸ்தான் மட்டுமே ஏகபோகமாய்ச் செய்து வருகிறது  என்பதல்ல. இதை நாம் நேர்மையோடு ஒப்புக்கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டுக் கோட்டருகில் சில கட்டுமானங்களை பாக் செய்து வருவதாக சென்ற மார்ச்சில் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்டனி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் இதே வேலையை இந்தியாவும் செய்து வருகிறது என்பதை, வேறு யாருமல்ல, இந்திய இராணுவத் தளபதி விக்ரம்சிங்கே ‘இந்து’ நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார். முதல் கல்லை யார் எறிந்தது எனக் கேட்டுக் கொண்டிருப்பதில் பொருளில்லை. இப்போது வேண்டுவது நிதானத்தைக் கடைபிடிப்பதுதான்” எனக் கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது.

இந்திய பாக் எல்லையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு (செப் 26, 2003) சுமார் பத்தாண்டுகள் ஆகின்றன. போர் நிறுத்தத்தின் பலன்களை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவிக்கத் தொடங்கியுள்ள சூழலில் இன்றைய நிகழ்வுகள் அமைந்துள்ளன. பத்தாண்டுகளுக்கு முன் இப்குதிகளிலிருந்து பாதுகாப்புக் கருதி வெளியேற்றப்பட்டு முகாம்களில் குடியமர்த்தப்பட்டவர்கள் இரண்டாண்டுகளுக்கு முன் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். அதுவரை அவர்கள் தினம் காலை சுமர் இரண்டு மணிநேரம் பயணித்து தம் கிராமங்களிலுள்ள நிலங்களில் வேலை செய்யப் போவார்கள்.  மதியம் அவர்கள் வீட்டிலுள்ளோர் சமைத்து உணவு எடுத்து வருவார்கள். மாலை இருட்டுமுன் அவர்கள் வீடு திரும்பியாக வேண்டு,. பாக் இராவணுவ ஷெல்லடித் தாக்குதல் போர்வையில் தீவிரவாதிகள் இந்தியப் பகுதிகளுக்குள் ஊடுருவுவதைத் தடுப்பதற்கு இந்த ஏற்பாடு.

கட்டுப்பாட்டுக்கோடு என்பது அதுவரை ஒன்றாக இருந்த கிராமங்கள் மற்றும் வயற்காடுகளினூடாகப் போடப்பட்ட ஒன்று. ஒரு பக்கம் இந்தியாவுக்குச் சொந்தமான காஷ்மீர். மறுபக்கம் பாக்  அரசின் இராணுவம்…. இன்று முட்கம்பி வேலிகளாலும் கடும் இராணுவக் கண்காணிப்புகளாலும் பிரிக்கப்பட்டுக் கிடக்கின்றன அக்கிராமங்கள். கிராமங்கள் மட்டுமல்ல அந்தக் கிராமங்களில் வசித்த மக்களும்தான்.

இப்படியாக தேச எல்லையைக் காரணம்காட்டி கிராமங்களைப் பிரிப்பது எத்தனை அபத்தமானது என்பது மட்டுமல்ல, எத்தனை சோகமானது என்பதையும் உணர ஒருவர் சாதத் ஹஸன் மன்டோவின் ‘டோபா டேக் சிங்’ என்கிற சிறுகதையைப் படிக்க வேண்டும். (உருது மூலத்தின் ஆங்கில வடிவத்தை Sadat Hasan Manto, Toba Tek Singh என கூகிளில் தேடினால் அடையலாம்.) அந்தக் கதையில்,  இந்திய பாக் பிரிவினையின்போது பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் உள்ளவர்களையும்  அவரவர் மத, இன அடிப்படையில் அவரவர் நாட்டுக்கு அனுப்புவது என்கிற ஒரு பைத்தியக்கார முடிவை அரசு எடுத்து அவ்வாறே அவர்கள் பிரித்து அனுப்பபடுவர். அப்போது அந்தப் பைத்தியங்கள் எழுப்பும் கேள்விகளும், அவர்கள் காட்டும் எதிர்ப்புகளும் யார் பைத்தியக்காரர்கள் என்கிற கேள்வியை நம்முன் எழுப்பும்.

இதுபோல  சம்பத்தப்பட்ட மக்களின் கருத்தைக் கவனத்தில் கொள்ளாது நம் அரசியல்வாதிகள் தம் மேசை மீது விரிக்கப்பட்ட வரைபடத்தில் வரையும் கோடுகள் பாரதூரமான விளைவுகளை மக்களின்மீது ஏற்படுத்தும். ஒரே குடும்பத்தில் பிறந்த இருவர் ஒரே நாளில் வேவ்வேறு பகை நாடுகளுக்குரியவர்களாக மாற்றப்படுவர். இனி அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க இயலாது.

அப்படிப் பல பத்தாண்டுகளாகத் தன் மகன்களைப் பார்க்காமல் பிரிந்து வாழ்ந்தவர்தான் காஷ்மீரின் ஊரிப் பகுதியிலுள்ள சரோன்டா என்கிற கிராமத்தைச் சேர்ந்த ரேஷ்மா பீவி. இவர் தனது தள்ளாத முதுமையில் (70) மகன்களோடு வசிப்பது என்கிற முடிவில் சென்ற செப் 26, 2011 அன்று கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்தார். இப்படி ஒருவர் கண்காணினிப்பைக் கடந்துசென்றதை அறிந்த இந்திய இராணுவம் துணுக்குற்றது.கட்டுப்பாட்டுக் கோட்டருகில் கண்காணிப்பிற்கென பங்கர்களைக் கட்டத் தொடங்கியது.

போர் நிறுத்த ஒப்பந்தப்படி இவ்வாறு பங்கர்கள் கட்டுவதற்கு அனுமதியில்லை. நேரடித் தொலைபேசித் தொடர்பு வழியாக பாக் தரப்பிலிருந்து இதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. இந்திய இராணுவம் இதைக் கண்டு கொள்ளவில்லை. நாங்கள் சரோண்டா கிராமத்தை நோக்கித்தான் பங்கரை அமைக்கிறோமே தவிர பாக் இராணுவத்தை நோக்கி அல்ல என இந்திய இராணுவம் கூறியதை பாக் இராணுவம் ஏற்கவில்லை. ஒலி பெருக்கி மூலமாகப்  பாக் இராணுவம் எச்சரிக்கை செய்தது. பின் ஷெல்லடித் தாக்குதல்களைத்  தொடங்கியது. மூன்று இந்தியர்கள் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து இரு பக்கமும் போர் நிறுத்தத்தை மீறும் செயல்கள் அதிகரித்தன. சில ஆண்டுகளாகவே இவ்வாறு போர் நிறுத்தத்தை இரு தரப்பும் மீறுவது அதிகரித்து வந்தது 2008ம் ஆண்டில் மட்டும் இதுபோல 77 மீறல்கள் நடைபெற்றன என அப்போதைய வெளியுறவுச் செயலர் சிவசங்கர மேனன் குறிப்பிட்டார். சென்ற ஆண்டில் 117 மீறல்கள் நடந்துள்ளனமிந்த ஜனவரி 8ந்தேதி இரு இந்திய இராணுவ வீரர்கள் பாகிஸ்தன் இராணுவத்தால் கொடூரமாகக் கொல்லப்பட்ட செய்தி பெரிதான பின்பு, அதை பாக் இராணுவம் மறுத்ததோடு நிற்காமல், அதற்கு இரு நாட்கள் முன்னதாகத் தனது வீரர் ஒருவர் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டதாக அறிவித்தது. இந்திய இராணுவம் தான் எல்லை தாண்டிச் சென்று தாக்கவில்லை என்றுதான் சொல்கிறதே ஒழிய பாக் வீரர் கொல்லப்பட்டதை மறுக்கவில்லை.

இதில் யார் பொய் சொல்கிறார்கள் எனச் சொல்வது எளிதல்ல. இராணுவங்கள் எந்தக் காலத்தில் உண்மைகளைப் பேசின?

இன்றைய பிரச்சினைகளைப் பொருத்த மட்டில் பாக் அரசு ரொம்பவும் அடக்கி வாசிக்கிறது. அதன் அணுகல்முறை மாற்றம் தவிர அதன் உள் நாட்டு நெருக்கடிகளும் இதற்கொரு காரணமாக உள்ளன.  பேச்சு வார்த்தைக்குத் தயார் என அது சொல்கிறது.  தொடக்கத்தில் அது வழக்கம்போல ஐ.நா அவை தலையிட்டு இதை விசாரிக்கட்டும் என்று சொன்னது. இந்தியாவும் வழக்கம்போல மூன்றாவது நபருக்கு இதில் இடமில்லை என அக் கோரிக்கையை நிராகரித்தது.

பேச்சு வார்த்தைக்குத் தயார் என பாக் வெளியுறவு அமைச்சர் ஹீனா ரப்பானி சொல்வதையும், பாக் இராணுவம் கட்டுப்பாட்டுக் கோட்டை மீறக் கூடாது என ஆணையிட்டிருப்பதாகவும் இன்று செய்திகள் வந்துள்ளன. இதைக்கூட மன்மோகன் அரசின் நடவடிக்கைகளைக் கண்டு பாக் அரசும் இராணுவமும் பயந்து பின் வாங்குவதாக இன்றொரு ஆங்கில நாளிதழ் முதற் பக்கச் செய்தி வெளியிட்டுள்ளது.

கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டி வாழ்ந்து வரும் இலட்சக்கணக்கான மக்கள் கடந்த சில ஆண்டுகளாக எளிதில் அதனூடாகப் பயணம் செய்து கொண்டிருந்தனர். வணிக உறவுகள் புதுப்பிக்கப்பட்டன். இரவில் நிம்மதியாகத் தூங்கினர். இணையத் தளம் ஒன்றில் கண்டுள்ள தகவல் ஒன்றின்படி, போர் நிறுத்தத்திற்கு முன் 2000வது ஆண்டில் செப் 26 முதல் நவ 27 வரையிலான இரு மாதங்களில் மட்டும் கட்டுப்பாட்டுக் கோட்டருகில் 611 பேர் கொல்லப்பட்டனர். இதில் 159 பேர் இராணுவத்தினர். 151 பேர் சாதாரண மக்கள். பிறர் “தீவிரவாதிகள்”.

2009ல் பாதுகாப்பு அமைசர் அன்டனி நாடாளுமன்றத்தில் கூறியபடி, போர் நிறுத்தம் தொடங்கப்பட்ட 2003 முதல் 2006 வரை ஒருவர் கூடக் கொல்லப்படவில்லை. 2003 முதல் ஜூலை 2009 வரை நடைபெற்ற 110 சம்பவங்களில் கொல்லப்பட்ட இந்திய வீரர்கள் வெறும் நான்கு பேர். சிவிலியன்கள் வெறும் இரண்டு பேர். போர் நிறுத்தம் எத்தகைய அமைதியை அங்கு வாழும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தின என்பதை அறியாதவர்களும், அறிந்தும் இது குறித்துக் கவலைப்படாதவர்களும் இன்று எழுப்பும் போர் ஊளைகளை என்ன சொல்வது?

அரசியல்வாதிகளும் ஊடகங்களும் உமிழும் போர்வெறிப் பேச்சுக்கள் இந்த நிலையையை அழித்துவிடுமோ என்கிற அச்சம் அமைதியை விரும்புவோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் அணு வல்லமை பெற்ற நாடுகள். பாக்கைப் பொருத்தமட்டில் இந்திய அரசியல்வாதிகள் அடிக்கடி சொல்லி வருவதைப் போல பல அதிகார மையங்கள் செயல்படக்கூடிய ஒரு நாடு. போர் இரு நாடுகளுக்குமே இன்றைய சூழலில் உகந்தது அல்ல.

எத்தனை போர் வெறிக்கும் வெறுப்புக்கும் மத்தியில் இசைக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் ஆகியோர் இரு மக்களையும் இணைக்கும் பாலங்களாக விளங்கி வந்துள்ளனர். அதேபோல இரு நாடுகளிலும் உள்ள வணிகர்களும்கூட அமைதிச் சூழலையே விரும்புவர். பயங்கரவாதத்தின் விளை நிலமாகப் பாகிஸ்தான் இருந்தபோதும் பாகிஸ்தானிகள் எல்லோரும் பயங்கரவாதிகள் அல்லர். இரு நாடுகளுக்குமே பயங்கரவாதம் பெரிய பிரச்சினை என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. ஒரு புத்திசாலித்தனமான அயல் உறவு நிலைபாடு என்பது இன்றைய சூழலில் பாகிஸ்தானிற்குள் உள்ள பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்களையும் அடிப்படைவாதிகளையும் தனிமைப் படுத்துவதாகவே அமைய வேண்டும்.  மாறாக அவர்களின் நோக்கத்தை நிரைவேற்றுவதாக அமைந்துவிடக் கூடாது.

இந்திய அரசின் அணுகல்முறை அந்த வகையில் அமையவில்லை.

இடதுசாரிகள் மீதும் இஸ்லாமியர்கள் மீதும் காழ்ப்பைக் கக்கியுள்ள ஜெயமோகன்..

“முற்போக்கு என்ற பெயரில் இஸ்லாமியத் தீவிரவாதிகளை ஆதரிக்கும் நிலை வரை சென்ற இடதுசாரிகள், இனிமேலாவது தங்கள் நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், இங்கு இடதுசாரி அரசியலே இல்லாமல் ஆகிவிடும். அது இந்தியாவுக்கு மிகப் பெரிய இழப்பாகும்.”

– இது இன்றைய (மே 28, 2014) தமிழ் இந்துவில் ஜெயமோகன் கக்கியுள்ள விஷம்.

வழக்கம் போல எந்த ஆதாரமும் இன்றி அப்பட்டமான அவதூறு ஒன்றை இந்த நபர் இடதுசாரிகள் மீது உமிழ்ந்துள்ளார்.

தீவிரவாதிகள், அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் அவர்களுக்காகப் பரிந்து பேசிய வரலாறு இடதுசாரிக் கட்சிகளுக்குக் கிடையாது. தீவிரவாதத்தை நடைமுறையிலும் கொள்கை அடிப்படையிலும் அவர்கள் கடுமையாக எதிர்ப்பவர்கள். தீவிரவாதிகள் எனச் சந்தேகப்பட்டு முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவர்கள் எந்தப் பெரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டதும் இல்லை.

சென்ற ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தோழர் பிரகாஷ் காரட்டும் மூத்த சி.பி.எம் தலைவர்களும் குடியரசுத் தலைவரைச் சந்தித்து 26 முஸ்லிம் இளைஞர்களின் பட்டியல் ஒன்றைத் தந்தனர். அவர்கள் அவ்வளவு பேரும் தீவிரவாதிகள் எனக் கைது செய்யப்பட்டுக் கடும் சித்திரவதைகளுக்கு ஆளாகி, இறுதியில் பல ஆண்டுச் சிறை வாசங்களின் ஊடாகத் தம் இளமையையும் எதிர்காலத்தையும் இழந்த பின் குற்றமற்றவர்கள் என நீதி மன்றங்களால் விடுதலை செய்யப்பட்டவர்கள், காராட் தலைமையில் சென்ற குழு வைத்த கோரிக்கை முற்றிலும் 100 சதம் சரியானது. 1. இது போன்ற அப்பாவி இளைஞர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். 2. இவ்வாறு தீவிரவாதிகள் எனச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் விரைவு நீதி மன்றங்களில் விசாரிக்கப்பட்டுக், குற்றவாளிகளாக இருந்தால் தண்டிக்கப்பட வேண்டும். இல்லையேல் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

இதே கோரிக்கையை நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜு போன்றோரும் முன்வைப்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேகத்தின் பேரில் யாரும் கைது செய்யப்படுவதையோ, விசாரிக்கப்படுவதையோ எந்நாளும் இடதுசாரிகள் எதிர்த்ததில்லை. சொல்லப்போனால் சில நியாயமான பிரச்சினைகளிலும் கூட இந்த மாதிரி விடயங்களில் முஸ்லிம்களுக்கு உரிய ஆதரவு அளித்ததில்லை என்கிற விமர்சனகள்தான் அவர்கள் மீது உண்டு. ஒரு எடுத்துக்காட்டு. சுமார் இரண்ன்டாண்டுகளுக்கு முன் திருச்சி விமான நிலையத்தில் தமிம் அன்சாரி என்கிற இளைஞனப் பாகிஸ்தானுக்கு உளவு கடத்தியதாகப் பொய் கூறிக் கைது செய்தனர். ஒரு உண்மை அறியும் குழு அமைத்து நாங்கள் விசாரித்த போது அது முழுப் பொய் எனத் தெரிந்தது. பின்னால் நீதிமன்றமும் அவர் மீது போடப்பட்ட தேசியப் பாதுகாப்புச் சட்டங்களை எல்லாம் ரத்து செய்துப் பிணையில் விடுதலை செய்தது, இன்றளவும் அது பொய் என்பதால் மேற்கொண்டு யாரும் கைது செய்யப்படாமல் அவ் வழக்கு தேங்கியுள்ளது. இந்த தமீம் அன்சாரி சி.பி.எம் கட்சியிலும் வெகு ஜன அமைப்புகளிலும் பல மட்டங்களில் நீண்ட காலம் பணியாற்றியவர். இது பொய் வழக்கு எனத் தெரிந்த பின்னும் கூட சி.பி.எம் கட்சி வெளிப்படையாக அவரது கைதைக் கண்டிக்கவோ, அவருக்குச் சட்டபூர்வமான் உதவிகள் எதையும் செய்யவோ முன்வரவில்லை என்பதை நடு நிநிலையாளர்கள் கண்டித்துள்ளனர்.

ஆக முற்றிலும் குற்றமற்றவர்கள் என நிரூபித்து நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட முஸ்லிம்கள் பிரச்சினையில்தான் இடதுசாரிக் கட்சிகள் தலையிட்டுள்ளன. ஆனால், தீவிரவாத முஸ்லிம்களை ஆதரித்ததாலேயே, முஸ்லிம் அல்லாதவர்களின் ஆதரவை இழந்து, இடதுசாரிகள் இன்று தேர்தலில் தோற்றுள்ளனர் என அப்பட்டமான பொய் ஒன்றை வீசுகிறார் இந்த நபர் ஜெயமோகன்.

உண்மை இதற்கு நேர் எதிரானது. 2004 தேர்தலில் 40க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த இடதுசாரிக் கட்சிகள் இன்று வெறும் பத்தாகச் சிறுத்துள்ளதற்கு அடிப்படைக் காரணம் அவர்களின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தில் இன்று அவர்கள் வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெறக்கூடிய நிலை ஏற்பட்டதுதான் காரணம்.

இந்நிலை ஏன் ஏற்பட்டது? ஜெயமோகன் சொல்வது சரி எனில் இடதுசாரிகள் முஸ்லிம்களை ஆதரித்ததால் மற்றவர்கள் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்றாகிறது. ஆனால் இடதுசாரிகள் இன்று மே.வங்கத்தில் பெருந் தோல்வி அடைந்ததற்கான முக்கிய காரணம் அங்கு அவர்கள் முஸ்லிம்களின் ஆதரவை இழந்ததுதான்.

மே.வங்கம் இந்தியாவிலேயே அதிக முஸ்லிம்கள் வசிக்கும் (25%) மாநிலம். 30 ஆண்டுகள் இடது முன்னணி ஆண்டும் அங்கு முஸ்லிம்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை. இந்தியாவிலேயே முஸ்லிம்களின் நிலை மிக மோசமாக உள்ள மாநிலம் அது என்பதை சச்சார் குழு தன் அறிக்கையில் நிறுவியது. இடதுசாரிகள் தோற்றதற்கு இத்வும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. ஒரு இடதுசாரித் தலைவர், “அந்தக் குள்ள நீதிபதிதான் (சச்சார்) எல்லாத்துக்கும் காரணம்” என வெளிப்படையாகவே தன் ஆத்திரத்தை வெளிப்படுத்தியது இதழ்களில் வந்தது.

உண்மை இப்படி இருக்க ஜெயமோகனின் மேற்கண்ட கூற்று எதைக் காட்டுகிறது?

ஜெயமோகனின் மூன்று அடிப்படைப் பண்புகள், அடையாளங்கள் இதன் மூலம் வெளிப்படுகின்றன. அவை:

1.முஸ்லிம் வெறுப்பு

2.இடதுசாரி எதிர்ப்பு.

‘இடதுசாரிகளின் தேய்வு இந்தியாவுக்கு இழப்பு’ என ஜெயமோகன் நீலிக்கண்னீர் வடிப்பது இவரின் மூன்றாவது முக்கிய அடையாளத்தை வெளிப்படுத்துகிறது. அது:

3.இந்த நபரின் நரித்தனம்.

ஒவ்வொரு ரத்த அணுவிலும் இடதுசாரி எதிர்ப்பை ஏந்தியுள்ள இந்த நபர் இப்படித் தந்திரமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கு என்னால் இன்னொரு எடுத்துக்காட்டைச் சொல்ல இயலும். அவரது ‘பின் தொடரும் நிழலில்’ எனும் அப்பட்டமான கம்யூனிச எதிர்ப்பு நாவலை மூத்த தொழிற்சங்கவாதியும் இடதுசாரிக் கட்சி ஒன்றின் உறுப்பினருமான மறைந்த தோழர் ஜெகனை வைத்து வெளியிட்டவர் இந்த ஜெயமோகன்.

எனினும் யாருக்கும் ஒரு அய்யம் வர இடமுண்டு. இடதுசாரிகள் முஸ்லிம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை ஆயின் பின் ஏன் ஜெயமோகனுக்கு இடதுசாரிகள் மீது இத்தனை ஆத்திரம்?

தீவிரவாதத்தை எதிர்ப்பதோ கண்டிப்பதோ அல்ல ஜெயமோகனின் நோக்கம். அவரே ஒரு ஆர்.எஸ்.எஸ் கருத்தியலாளன். அவருடைய பிரச்சினை முஸ்லிம்களின் நியாயங்களை ஆதரிப்பதுதான். முஸ்லிம்களின் இருப்பை ஏற்றுக் கொள்வதுதான். இந்தச் சமூகத்தின் பன்மைத் தன்மையை அங்கீகரிப்பதுதான். இந்த விடயங்களைப் பொருத்தமட்டில் முஸ்லிம்களின் உரிமைகளை எந்நாளும் இடதுசாரிகள் விட்டுக் கொடுத்ததில்லை. இந்த நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கைகளிலும் கூட மத வன்முறைத் தடுப்புச் சட்டம் ஒன்றை இயற்றுதல், முஸ்லிம் இட ஒதுக்கீடு, ரங்கநாத் மிஸ்ரா ஆணைய அறிக்கை நிறைவேற்றம் ஆகியவற்றிற்கு இடதுசாரிக் கட்சிகள் இரண்டும் முக்கியத்துவம் அளித்துள்ளன. இராமர் கோவில் கட்டுதல், அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவைத் தொடர்தல் ஆகியவற்றிலும் இடதுசாரிகள் எப்போதும் முஸ்லிம்களின் நிலைபாட்டை ஆதரித்தே வந்துள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக காங்கிரஸ் தவிர்த்த பிற இந்தியக் கட்சிகளில் அவர்கள் மட்டுமே எக்காரணம் கொண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி சேர்வதில்லை?

இடதுசாரிகள் மீது காழ்ப்பை உமிழ்வதற்கு இவை போதாதா ஜெயமோகன் போன்ற ஒரு பாசிஸ்டுக்கு?

தனது அரசியல் வாழ்வை இந்துத்துவ அமைப்புகளில் தொடங்கிய ஜெயமோகன் இந்துத்துவத்தின் இரு முக்கிய எதிரிகளின் மீது காழ்ப்பைக் கொட்டியுள்ளதன் பின்னணி இவையே.

ஒன்று உறுதி. இந்த அரசில் ஜெயமோகனுக்கு நல்லதொரு பரிசு காத்திருக்கிறது.

திருநங்கையரின் பாடுகள்

திருநங்கையருக்கு இன்று அரசு ஏற்பும், சமூகத்தில் ஒரு மரியாதையும் ஏற்படத் தொடங்கியுள்ளது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் கூவாகம் ‘அரவான் களபலி’ விழாவிற்கு நேரடியாகச் சென்று ஒரு அற்புதமான கட்டுரையை இனிய நண்பர் அருணன் ‘நிறப்பிரிகை’க்கு எழுதித் தந்தார். அநேகமாக சிற்றிதழ் ஒன்று திருநங்கையர் குறித்த கட்டுரை ஒன்றை வெளியிடுவது அதுதான் முதல்முறை என நினைக்கிறேன். ‘நிறப்பிரிகை’ சாதித்த பல முதற் காரியங்களில் இதுவும் ஒன்று.

ஆனால் திருநங்கையருக்கு ஏற்பட்டுள்ள சமூக ஏற்பு இன்னும் மிகவும் தொடக்க நிலையில்தான் உள்ளது. அவர்களுக்குள்ள பிரச்சினைகள் ஏராளம். இன்னும் அவை சரியாக எதிர்கொள்ளப்படவும் விவாதிக்கப் படவும் இல்லை எனத்தான் நினைக்கிறேன்.

#####
வழக்குரைஞர் மதுரை ரஜினி அவர்கள் ஒரு வாழ்நாளை பல்வேறு விளிம்பு நிலையினர், சிறுபான்மையினர், தலித்கள் குறிப்பாக ஆக ஒடுக்கப்பட்ட அருந்ததியர் ஆகியோர் மத்தியில்அர்ப்பணித்துச் செயல்ட்டு வருகிறார். தன்னலம் கருதாது உடல் உழைப்பை மட்டுமின்றி நிதி ஆதாரங்களையும் செலவிட்டு அவர் ஆற்றி வரும் பணிகள் அளப்பரியன. இதை மனதாரச் சொல்கிறேன்.

அவர் நெருக்கமாக உறவாடும் விளிம்பு நிலைப் பிரிவினரில் திருநங்கையர் முக்கியமானவர்கள். இரண்டாண்டுகள் முன் திருநங்கையர் குறித்து மதுரையில் அவர் ஏற்பாடு செய்த நிகழ்வொன்றிற்கு அவ்வளவு திருநங்கையர் திரண்டிருந்தனர். அவர்கள் எல்லோருக்கும் ரஜினி அன்பிற்குரிய “அக்கா”.

ரஜினி திருநங்கையருடனான தனது அனுபவங்கள் குறித்துச் சொல்பவற்றில் பல நமக்குக் கண்ணீர் வரவழைக்கக் கூடியவை. இப்படியுமா என நம்மை வியக்க வைப்பவை.

ஒரு திருநங்கை மதுரையில் ஓரளவு வசதிமிக்க வணிகக் குடும்பத்தில் பிறந்தவள். அவள் திருநங்கையாகத் தன்னை அறிவித்துக் கொண்டபின் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாள். அவளது பெற்றோருக்கும் அண்ணன்மார்களுக்கும், குறிப்பாக அவளது அண்ணியருக்கும் அவள் ஒரு அவமானம்.

ஒருநாள் அந்தத் திருநங்கை அவசரமாக ரஜினியைத் தேடி வந்துள்ளாள். கண்கள் கலங்க அவள், “அக்கா, அம்மா சாகக் கிடக்கிறாங்களாம். சேதி வந்திருக்கு. சாகுற முன்னாடி நான் ஒரே ஒரு தடவை பார்க்கணும். அவங்க என்னை விட மாட்டாங்க..நீங்கதான் அக்கா ஏதாவது செய்யணும்….”

ரஜினி அந்த வீட்டுப் பஞ்சாயத்தில் பலமுறை ஈடுபட்டவர். தயக்கத்தோடு, “அவங்க எங்கடி உன்னை விடப் போறாங்க..” எனச் சொன்ன போதும் அந்தத் திருநங்கையின் நிலையைக் கண்டு உடனடியாகத் தன் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு அவளை அழைத்துக் கொண்டுஅவர்கள் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

தூரத்தில் இவர்களைப் பார்த்த உடனேயே அந்தத் திருநங்கையின் தந்தை வெளியே ஓடி வந்து, “வக்கீலம்மா, ஒங்களுக்குப் பலதடவை சொல்லிட்டேன். அவனை அழைச்சிட்டு வந்து எங்க மானத்தை வாங்காதீங்கன்னு. அவனை முதல்ல இங்கேருந்து அழைச்சிட்டுப் போங்க. அவன் அண்ணங்காரங்க யாராவது கண்ணுல பட்ட கொன்னுடுவானுங்க..” என சத்தம் போட்டுள்ளார். ரஜினி பொறுமையாக அவரிடம், இப்படி சாகக் கிடக்கிற நேரத்துல எல்லாம் பேசாதீங்க, ஒரே ஒரு தடவை பாத்துட்டுப் போகட்டும் என விளக்கியுள்ளார். அவர் பிடிவாதமாக மறுக்க, பின் சற்றுக் கறாராக ரஜினி அவரிடம் இது அந்தத் திருநங்கையின் உரிமை நீங்க தடுக்கமுடியாது எனச் சொல்லியுள்ளார்.

“ஏம்மா இப்பிடி என் உயிரை வாங்குறீங்க. சரி, அவனை இங்கேயே விட்டுட்டு போயி அவன் அம்மாகிட்ட கேளுங்க. அவ சரின்னா அழைச்சிட்டுப் போங்க..” என அந்தப் பெரியவர் கூறியுள்ளார்.

உள்ளே அந்த அம்மை மரணப் படுக்கையில் இருந்துள்ளார். ரஜினி அருகே சென்றவுடன் உற்று நோக்கிவிட்டுக் தாரை தாரையாகக் கண்ணீர் விட்டுள்ளார். மரணப் படுக்கையிலும் ரஜினி விளக்கு முன்னே அவர் எல்லாவற்றையும் புரிந்து கொண்டுவிட்டார். “வேணாம், வேணாம்..” எனச் சைகை காட்டியுள்ளார். திருநங்கையின் அண்ணிமார்களைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

அவரது கட்டிலில் அமர்ந்து மெதுவாக அவரிடமும் அண்ணியரிடமும் பேசி அனுமதி பெற்றுப் பின் வெளியே சென்று அந்தத் திருநங்கையை அழைத்து வந்துள்ளார்.

தாயும் மகளும் சந்தித்த அந்தக் கணம்.. பெரும் ஓலமிட்டுத் தாயின் மேல் விழுந்து அந்தத் திரு நங்கை அழுது புலம்பிய அந்தக் காட்சி… தாயும் மகளும் தழுவிக் கிடந்த அந்தக் கோலம்…

நேற்று முன்தினம் அதை விவரித்தபோதும் ரஜினியின் கண்கள் கலங்கின.
#####

அதே திருநங்கையுடன் ரஜினிக்கு இன்னொரு அனுபவம். சுமார் பத்தாண்டுகளுக்கு முன் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனையில் அவளுக்குப் பால் மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

இப்போது ரஜினியிடம் அவள் ஒரு புகார் செய்துள்ளாள். தனக்கு சரியாக அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை எனவும் இழப்பீடு கோரி வழக்குத் தொடர வேண்டும் எனவும் கேட்டுள்ளாள்.

இது குறித்த technical விவரங்கள் தனக்குத் தெரியவில்லை எனவும், முதலில் நிர்வாகத்திடம் பேசிப் பார்ப்போம் எனவும் ரஜினி கூறியபோது, தனக்கு இழப்பீடு தராவிட்டாலும் பரவாயில்லை, பதிலாக தனக்கு ஒரு செயற்கை சிலிகான் மார்பு பொருத்தித் தந்தால் போதும் எனவும் கூறியுள்ளாள். தன்னை ஒருவன் திருமணம் செய்து கொள்வதாகச் சம்மதித்துள்ளான் எனவும், அதற்கு முன் இந்த மார்பு பொருத்தும் சிகிச்சையைச் செய்ய வேண்டும் எனவும் அந்தத் திருநங்கை கூறியுள்ளாள்.

ரஜினியை மதுரையிலுள்ள அனைவருக்கும் தெரியும். தன்னலம் கருதாது நூறு சதம் நேர்மையாக செயல்படுபவர் எனவும் அவர்மீது எல்லோருக்கும் மரியாதை உண்டு.

முதலில் அந்த அறுவை சிகிச்சை செய்த மருத்துவரைப் போய்ப் பார்த்துள்ளனர்.

அந்தத் திருநங்கையைப் பார்த்தவுடனேயே அந்த டாக்டர் டென்ஷன் ஆகியுள்ளார். “டேய்.. (திருநங்கையின் பூர்வப் பெயரைச் சொல்லி) மறுபடியும் வந்துட்டியாடா? ஒன்ன இங்க வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கன்ல.. மேடம், நீங்க எல்லாம் ஏன் மேடம் இவனைக் கூட்டிட்டு வர்றீங்க. இவன் பொய் சொல்றான் மேடம். எல்லாம் சரியாத்தான் செஞ்சிருக்கன் மேடம். டேய் ஏறி அந்தப் பெஞ்சில படு. நான் எக்ஸ்ப்ளெய்ன் பண்றேன்..” எனக் கத்தியுள்ளார்.

“அதெல்லாம் வேணாம் டாக்டர். இப்ப அது கூட பிரச்சினை இல்ல. அவளுக்கு இந்தச் செயற்கை மார்பு..” எனச் சொன்னவுடன் அவர், “அதுக்காகத்தான் இவன் பொய் சொல்றான். அதெல்லாம் வேற டிபார்மென்ட். எனக்கும் அதுக்கும் சம்மந்தமில்ல… போய் நீங்க டைரக்டரைப் பாருங்க….” என முடித்துக் கொண்டுள்ளார்.

மீனாட்சி மிசன் மருத்துவமனையின் தலைவரும் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான டாக்டர் சேதுராமனிடம் ரஜினி தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது வழக்கம்போல அவர் ரஜினியை அன்போடு விசாரித்துள்ளார். ரஜினி இந்தப் பேச்சைத் தொடங்கியவுடன், “ஒ ! அவனா?, ரஜினிம்மா, அவன் பொய் சொல்றாம்மா. பத்து வருஷத்துக்கு முன்னாடி ஆபரேஷன் செஞ்சது. இவ்வளவு நாள் கழிச்சு வந்து இப்பிடிச் சொன்னா அது சரியா இருக்குமா? நானும் பலதடவை சொல்லிட்டேன். ஆபரேஷன் பண்ண டாக்டரும் எல்லாம் சரியாத்தான் இருக்குங்கிறாரு.. இப்ப ஒண்ணும் பண்ண முடியாதும்மா.. ” எனக் கூறியுள்ளார்.

ரஜினி இந்த மார்பு பொருத்தும் கோரிக்கையை வைத்தபோது அவர், “என்னம்மா இது. ம்…. சரி. நீங்க ஒரு ஒரு அரை மணி நேரம் கழிச்சு போன் பண்ணுங்க..” என்றுள்ளார்.

அரைமணிக்குப் பின் தொடர்பு கொண்டபோது,

“ரஜினிம்மா, நான் இப்ப ஹாஸ்பிடல் நிர்வாகத்த மகன்ட்ட ஒப்படைச்சிட்டேன். எல்லாம் அவர்தான் பாக்குறார். நான் இப்பிடி ஏதாவது ஏழை பாழைங்களுக்கு உதவி செய்யனும்னு தலையிட்டா அவங்க எனக்கு அனுமதிச்சிருக்குற தொகை 25,000 ரூபாதான். இந்த ஆபரேஷனுக்கு செயற்கை மார்பு 25,000 த்திலேருந்து 1,25,000 ரூபா வரைக்கும் இருக்கு. என்னால ஒன்னுதான் செய்ய முடியும். அந்த 25,000 ரூபா மார்பைப் பொருத்தி ஃப்ரீயா ட்ரீட்மன்ட் குடுக்கச் சொல்றேன். ஆனா நீங்கதான் பொறுப்பெடுத்துக்கணும். அவன நம்ப முடியாது. சொன்ன பேச்சைக் கேக்கமாட்டான்.” எனக் கூறியுள்ளார்.

ரஜினி அந்தத் திருநங்கையிடம் விஷயத்தைச் சொன்னபோது அவள் பிடிவாதமாக மறுத்துள்ளாள். அந்த 25,000 ரூபாய் மார்பு நீண்ட காலத்திற்குப் பயன் தராது எனவும், ஏமாற்றமுற்றுத் தன் வருங்காலக் கணவன் தன்னைக் கைவிடுவதற்கு அது காரணமாகிவிடும் எனவும் 1,25,000 ரூபாய் செலவிலேயே தனக்குச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் எனவும் கறாராகச் சொல்லியுள்ளாள்.

ரஜினி பொறுமையாக அவளிடம், “அதுக்கு மேலே அவங்க செலவு பண்ணத் தயாரா இல்ல. நம்மளாலையும் இப்ப உடனே அவ்வளவு செலவு செய்ய முடியாது. உன்னக் கட்டிக்கப் போறவர அழைச்சிட்டு வா. அவருக்குக் கவுன்சிலிங் கொடுப்போம். இந்த விஷயத்தை எல்லாம் அவர் முழுசாப் புரிஞ்சுகிட்டுக் கல்யாணம் பண்ணிக்கிறதுதான் நல்லது” என விளக்கியுள்ளார்.

அதை அவசரமாக மறுத்த அந்தத் திருநங்கை, “அய்யோ அதெல்லாம் வேணாங்க்கா. அப்புறம் அந்த ஆளு கல்யாணமே வேணான்னு சொல்லிடுவாரு..” என அவசரமாகக் கூறி அகன்றுள்ளாள்.

சில மாதங்கள் கழித்து வந்த அந்தத் திருநங்கை, “அக்கா, எனக்கு அந்த 25,000 ரூபா வுலேயே அதை வச்சிடச் சொல்லுங்கக்கா..” என்றுள்ளாள்.

டாக்டர் சேதுராமனிடம் தொடர்பு கொண்டு பேசி, தான் பொறுப்பெடுத்துக் கொள்வதாக வாக்குறுதியும் அளித்து அந்தத் திருநங்கையை ரஜினி மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமத்தித்துள்ளார். ஆபரேஷன் தேதியும் குறித்தாயிற்று.

ஆபரேஷனுக்கு முதல்நாள் மருத்துவமனையிலிருந்து ரஜினிக்கு ஒரு அழைப்பு.

அந்தத் திருநங்கையைக் காணவில்லையாம்.

ரஜினி அலைந்து திரிந்து அவரைக் கண்டுபிடித்துக் கேட்டபோது, ” எனக்கு அந்த 25,000 ரூபா இது வேணாம்க்கா. அந்த 1,25,000 ரூபாதுதான் வேணும்..” எனக் கூறி அகன்றுள்ளார்.
#####

திருநங்கையருக்கு இப்போது பல நலத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் பால்மாற்று அறுவை சிகிச்சைகளும் இலவசமாகச் செய்யப்படுகின்றன. முழு விவரமும் தெரியவில்லை. விசாரிக்க வேண்டும். பால்மாற்று மருத்துவத்தின் ஓரங்கமாக மார்பு அமைக்கும் சிகிச்சையும் செய்யப்பட்டு நல்ல தரமான செயற்கை உறுப்புகள் பொருத்தப்பட வேண்டும்.

இது குறித்து பொதுநல வழக்கு ஒன்றையும் ரஜினி தொடுக்க உள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக இத்தகைய சிகிச்சைக்காக வருபவர்களின் உணர்வுகளையும், பாலியல் தேர்வையும் மத்தித்து அனைவரும் அவர்களை எதிர்கொள்ள வேண்டும்.

எனக்கும் அந்தத் திருநங்கையைத் தெரியும். இந்தக் குறிப்பு முழுவதிலும் உள்ள உரையாடல்களைக் கவனித்தால் ஒன்றை நீங்கள் உணர இயலும். அவளது பாலியல் தேர்வை ரஜினியும், சக திரு நங்கையரும் தவிர வேறு யாரும் மதிக்க வில்லை. அந்தத் திருநங்கையை “அவன்” எனவே அவர்கள் குறிப்பதையும் அவளது பூர்வாசிரமப் பெயராலேயே அவள் அழைக்கப்படுவதையும் கவனிக்க வேண்டும். (அதனாலேயே நான் இந்தக் குறிப்பு முழுவதும் அந்தத் திருநங்கையை ஒருமையில் “அவள்” எனக் குறிப்பிட்டுள்ளேன்).

திருநங்கையர் குறித்த சமூக மதிப்பீடுகளில் இன்னும் பெரிய அளவு மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.

கிறிஸ்தவத்தில் சாதீயம்

வரலாற்றில் இரு நிகழ்வுகள்

இந்தியாவிற்குள் தோன்றியதாயினும், இல்லை வெளியில் இருந்து வந்ததாயினும் முதலா:ளித்துவம் உட்பட எந்த நிறுவனமும், இந்தியாவில் சாதீயத்திற்குப் பலியாகிப் போன வரலாற்றை நாம் அறிவோம். கோட்பாட்டளவில் சாதிப் பிரிவினைகள், தீண்டாமை முதலானவற்றை ஏற்காத மதங்களும் இதற்கு விலக்கல்ல. கிறிஸ்தவம், அது கத்தோலிக்கமானாலும், சீர்திருத்தக் கிறிஸ்தவம் ஆனாலும் முழுமையாகச் சாதியை, தீண்டாமையை ஏற்றுக் கொண்டது, இஸ்லாம் ஒப்பீட்டளவில் இதற்கு விதிவிலக்காக இருந்ததால்தான் பெரியார் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இஸ்லாத்தைப் பரிந்துரைத்தார்.

கிறிஸ்தவம் சாதீயத்திற்கும் தீண்டாமைக்கும் பலியாகி இருந்த அவலத்திற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் வரலாற்றில் மட்டுமின்றி நடப்பிலும் உண்டு. நம் கவனத்தில் அதிகம் பட்டிராத இரு வரலாற்றுச் செய்திகள் இங்கே:

முதலில் சீர்திருத்தக் கிறிஸ்தவம் சார்ந்த ஒரு நிகழ்வு. திருக்குறளை ஆங்கிலத்தில் பெயர்த்த ஜி.யு போப் (ஜார்ஜ் யுக்ளோ போப்) (1820-1908) தனது 19ம் வயதில் இங்கிலாந்திலிருந்து தமிழகம் வந்து சமயப் பணிகளைத் தொடங்கினார். 1851 முதல் 1858 வரை சுமார் எட்டாண்டு காலம் தஞ்சை மாநம்புச் சாவடியில் உள்ள தூய பேதுரு ஆலய குருவாகப் பணியாற்றியதோடு, வடக்கு வீதியில் இன்றும் உள்ள தூய பேதுரு உயர்நிலைப் பள்ளியை மேம்படுத்தி அதன் முதல்வராகவும் பணியாற்றினார். சங்.சீ.யு.போப்பையர் என அவர் போற்றப்பட்டார். மகாவித்துவான் இராமாநுச கவிராயர் மற்றும் ஆரியங்காவுப் பிள்ளை ஆகியோரிடம் தமிழ் கற்றுத் தேர்ந்தவர் அவர்.

இதே காலகட்டத்தில்தான் தமிழ்ச் சீர்திருத்தக் கிறிஸ்தவத்தின் இன்னொரு முக்கிய பங்களிப்பாளரான வேதநாயக சாதிரியாரும் தஞ்சையில் வாழ்ந்தார். கிறிஸ்தவ இசை மரபிலும் முக்கிய பங்களிப்புச் செய்தவர் வேதநாயகர். “எல்லாம் ஏசுவே.. எனக்கு எல்லாம் ஏசுவே..” என்கிற புகழ் பெர்ற கீர்த்தனை அவருடையதே,

வேதநாயகர், போப் இருவருமே அப்போதைய தஞ்சை மன்னர் சிவாஜிக்கு நெருக்கமாக இருந்தனர். மன்னரின் உதவி பெற்று போப் மாநம்புச் சாவடிக் கிறிஸ்தவக் குடியிருப்பில் தூய பேதுரு ஆலய வடபுறம் குளம் ஒன்றையும் வெட்டுவித்தார். இப்போது குளம் தூர்க்கப்பட்டு பிளேக் மேநிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானமாக்கப்பட்ட போதும், குளத்தின் தென்கரைச் சுவற்றில் இது குறித்து வெட்டப்பட்ட கல்வெட்டு இன்னமும் உள்ளது (செ.இராசு, தஞ்சை மராட்டியர் கல்வெட்டுக்கள், தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு, 1987, பக்.98).

வேளாளச் சாதியரான வேதநாயகர் சாதி வேறுப்படுகளுக்கும் வேளாளப் பெருமைக்கும் ஆதரவாக இருந்தவர். கிறிஸ்தவராக மாறிய பின்னும் தம்மைக் ‘காராள மரபினர்’ ‘கங்கை குலத்தார்’. ‘வெள்ளாளர்’ என இச்சாதியினர் தம்மைக் குறிபிட்டுப் பெருமை பாராட்டி வந்தனர்.

வெள்ளைக்காரரான போப்போ சாதி வேறுபாடுகளுக்கு எதிரானவராக இருந்தார். தாழ்த்தப்பட்ட மக்கள் பலரும் இவர் பொருட்டுக் கிறிஸ்தவமாயினர்.. ஆனால் ‘சின்னக்கோட்டை பெரிய தேவாலயத்தின்’ வழி வந்த வேளாளக் கிறிஸ்தவர்கள் ‘போப்புடன் வந்த புது மிசியோனரிமாரை’ மதிக்காததோடு தீண்டாமை பாராட்டவும் செய்தனர். இரு தரப்பாருக்கும் பகை மூண்டு திருவையாறு நீதிமன்றத்தில் வழக்குகளும் நடந்தன.

போப் சாதி வேறுபாட்டை ஏற்காதிருந்ததோடு வெள்ளாளருக்குச் சமமாகப் பிறரையும் நடத்தியதை வேதநாயகரால் ஏற்க இயலவில்லை. போப்பிற்குக் கடுந் துன்பம் விளைவித்ததாகவும், அவருக்கறெதிராக ‘போப்பையர் உபத்திரா உபத்திரவம்’ என்றொரு நூலையே எழுதியதாகவும் செ,இராசு குறிப்பிடுகிறார். பெத்தலகேம் குறவஞ்சியை எழுதிய கைகள் இந்த அவதூறையும் எழுதின.

எதிர்ப்புகள் முற்றவே போப் அவர்கள் இரவோடிரவாகத் தன் குடும்பத்தாருடன் தஞ்சையை விட்டு உதகமண்டலம் நோக்கி அகன்றார் என அறிகிறோம்.

இனி கத்தோலிக்கக் கிறிஸ்தவம் சார்ந்த ஒரு நிகழ்வு: புதுச்சேரியில் ‘சாதி’இந்துக்களாகவிருந்து மதம் மாறியோர் தம்மைத் “தமிழ்க் கிறிஸ்தவராக” அடையாளப்படுத்திக் கொண்டனர். தாழ்த்தப்பட்டவர்களாக இருந்து மதம் மாறியவர்கள் ‘கிறிஸ்தவப் பறையர்’ களாக ஒதுக்கப்பட்டனர். ‘தமிழ்’ அடையாளம் என்கிற தாழ்த்தப்பட்டோரை விலக்கியதாக இருந்ததற்கு இது இன்னொரு எடுத்துக்காட்டு. ‘தமிழர் என்போர் பறையரல்லாத பிறர்’ என்பதாக வரையறுக்கப்பட்டதும், பின்னி மில் போராட்டத்தை எழுத வந்த ஒரு தமிழறிஞர், “பறையர்களை வைத்துத் தமிழர்களை அடிக்கிறார்களே” என ஆத்திரப்பட்டதும், “மாட்டுமாமிசம் தின்னாராயுள்ள தமிழர்கள்’ எனஎழுதிய பிறிதொரு தமிழறிஞர் ‘தமிழாள்’, ‘துலுக்காள்’ என்கிற வழக்கு வேறுபாட்டைச் சுட்டிக் காட்டியதும் பிற சில எடுத்துக்காட்டுகள்.

புதுச்சேரி செல்லும் யாரும் பார்க்கத் தவறாத ஒன்று சம்பா கோவில் என மக்களால் அழைக்கப்படும் அழகிய புனித தேவாலயம் (St Paul’s Church). சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு இந்துத்துவவாதிகள் பாபர் மசூதியை இடித்த திமிரோடு இதையும் ‘முன்னாள் இந்துக் மோவில்’ என்றொரு கதையைக் கிளப்பி இடித்தொழிக்க முயன்ற கதை சிலருக்கு நினைவிருக்கலாம் (பார்க்க: நானும் பிரபஞ்சனும் இணந்து எழுதிய ‘மசூதிக்குப் பின் மாதா கோவிலா?” எனும் குறு நூல்). பல்வேறு சமூகத்தவரும் இணைந்து வாழ்கிற பன்மைக் கலாச்சரத்திற்குரிய புதுச்சேரி மக்கள் மத்தியில் இந்துத்துவத்தின் பருப்பு வேகவில்லை. அவர்களின் முயற்சி தோற்றது.

இந்தக் கோவிலில் 18ம் நூற்றாண்டில் ‘தமிழ்க் கிறிஸ்தவர்களும்’, ‘பறைக் கிறிஸ்தவர்களும்’ (சொற் பயன்பாட்டிற்கு மன்னிக்க) தனித்தனியே அமர்ந்து பூசை காண குறுக்குச் சுவர் அமைக்கப்பட்டிருந்தது. வேதனை என்னவெனில் இப்படிக் குறுக்குச் சுவர் வைப்பதற்கு போப்பாண்டவர் 15ம் பெனுவா (Benoit XV) அனுமதி அளித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

1745ல் காரைக்காலில் இருந்து மாற்றலாகி இங்கு வந்து சேர்கிறார் ஒரு வெள்ளைப் பாதிரியார் (இவரும் வரலாற்றில் இடம் பெற்ற ஒரு முக்கிய பாதிரியார்தான். பெயர் மறந்து விட்டது. நினைவுக்கு வந்ததும் குற்றிப்பிடுகிறேன். யாருக்கேனும் நினைவிருந்தால் சுட்டிக்காட்டுங்கள்). அவருக்கு இந்தக் கொடுமை சகிக்கவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களைத் திரட்டிப் பேசுகிறார். அவர்கள் அனைவரும் 1745 அக்டோபர் 16 அன்று “கும்பலாகக் கூடி” “பெரிய சாமியாரை”ப் பார்த்து தமிழ்க் கிறிஸ்தவர்கள் தம்மை இவ்வாறு ஒதுக்கி வைப்பது குறித்து முறையிட்டதை ஆனந்தரங்கம் பிள்ளை தன் நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார். பெரிய சாமியார் இதைப் பொறுமையாகக் கேட்டதோடன்றி, அவர்களின் கருத்தை ஏற்று குறுக்குச் சுவற்றை இடித்தும் போட்டார்.

என்ன இருந்தாலும் கிறிஸ்தவ வேதத்தில் இப்படிப் பிரிவினை காட்டுவதற்கு இடமில்லை அல்லவா. பெரிய சுவாமியார் இப்படிச் சுவரை இடித்ததை சாதிக் கிறிஸ்தவர்களால் உடனடியாக எதிர்க்க இயலவில்லை. அவர்களின் ஆத்திரமெல்லாம் காரைக்காலிலிருந்து வந்த புதுச் சாமியாரை நொக்கித் திரும்பியது, சமயம் பார்த்துக் காத்திருந்த அவர்களுக்கு அத்தகைய சமயமொன்று வாய்த்தது.

புகழ்பெற்றிருந்த தரகர் கனகராய முதலியாரின் சகோதரர் மகனும் கிறிஸ்தவருமான ஆசாரப்பமுதலியாரின் மனைவி, ஏராளமான ஆபரணச் சுமைகளுடனும், வாசனைத் திரவியங்களுடனும், விலை உயர்ந்த மெல்லிய சல்லாப் புடவையுடனும் பூசை காண வந்திருந்தார். எரிச்சலுர்ற காரைக்கால் பாதிரியார் ஒரு பிரம்பால் அம்மையாரின் கொண்டையில் ஒரு தட்டுத் தட்டி, “இப்படிச் சல்லாப் புடவையுடன் கோவிலுக்கு வரக் கூடாது. எழுந்து போ” என விரட்டியதோடு, இனிமேல் இப்படிக் கிறிஸ்தவப் பெண்கள் சல்லாப் புடவை, வீண் ஆபரண ஆடம்பரங்கள் அணியக் கூடாது, கொண்டையை முடியக் கூடாது, வாசனைத் திரவியங்கள் பூசி வரக் கூடாது எனச் சரமாரியாக ஆணையிட்டார்.

தமிழ்க் கிறிஸ்தவர்கள் பொறுப்பார்களா? கனகராய முதலியாரியாரின் மைத்துனர் கெவுனிவாச முதலியார் தலைமையில் பாதிரியாரைச் சந்தித்து இந்த நூதன உத்தரவுக்கெல்லாம் நாங்கள் பணியமாட்டோம் எனச் சொன்னதோடு அவரது அங்கியைப் பிடித்திழுத்துத் தகராறும் செய்தனர். இனி கோவிலுக்கு வரமாட்டோம் எனவும் அறிவித்தனர். பிறகு கனகராயரும் தலையிட பாதிரியார் தன் நூதன உத்தரவைத் திரும்பப் பெற வேண்டியதாயிற்று.

எனினும் பாதிரியாரும் பிரச்சினையை விட்டுவிடுவதாக இல்லை. ஆளுநர் டூப்ளேயைச் சந்தித்து முறையிட்டார். தமிழ்க் கிறிஸ்தவர்கள் நான்கு பேருக்கு மேல் எங்காவது கூடிப் பேசுவதைக் கண்டால் அவர்களைக் கைது செய்து சிறையிலடைக்க டூப்ளே உத்தரவிட்டான்.

அடுத்த நாள் கோவிலுக்குச் சென்ற போது முன்னர் குறுக்குச் சுவர் இருந்த இடத்தில் நாற்காலிகளை ஒன்றன்பின் ஒன்றாகப் போட்டு தமிழ்க் கிறிஸ்தவர்களும் தாழ்த்தப்படட் கிறிஸ்தவர்களும் தனித்தனியே பூசை காணும்படிச் செய்யப்பட்டிருந்தது.

அதற்குப்பின் என்ன நடந்தது என ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பிலிருந்து அறிய இயலவில்லை என்கிறார் இந்நிகழ்வுகளைத் தொகுத்துத் தந்துள்ள அ.செபஸ்தியான் (18ஆம் நூர்றாண்டில் புதுவையின் வாழ்க்கை நிலை, ஆனந்தரங்கப் பிள்ளை ஆய்வு மையம், புதுச்சேரி, 1991).

இன்னுங்கூட தமிழகத்தில் பல ஊர்களில் இத்தகைய நிலை இருக்கத்தான் செய்கிறது. எனினும் சம்பா கோவிலில் இன்று அந்நிலைமை இல்லை.

_______________________________________________________________________________________________________

கிறிஸ்தவத்தில் சாதீயம் 2 : குண்டர் சட்ட நடுவர் குழு முன் அளிக்கப்பாட ஒரு மனு

[கிறிஸ்தவப் பாதிரிமார்களின் சாதி மனநிலையையும் செயல்பாடுகளிடும் தட்டிக் கேட்ட ஒரு நண்பர், பாதிரியார் ஒருவர் கொடுத்த புகார் ஒன்றின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டமும் அவர் மீது பிரயோகிக்கப்பட்டது. குண்டர் சட்ட நடுவர் ஆயத்தின் முன் சமர்ப்பிக்கத் தயார் செய்த மனு]

அனுப்புனர்

எம்.அமல்ராஜ், த/பெ. மாசிலாமணி,

மேல அரும்பூர், திருவெற்றியூர்,

திருவாடனை வட்டம், இராமநாதபுரம் மாவட்டம்.

பெறுநர்

உயர்திரு தலைவர் அவர்கள்,

அறிவுரைக் குழுமம், 32, ராஜாஜி சாலை,

சிங்காரவேலர் மாளிகை, சென்னை மாவட்ட ஆட்சியரகம்,

சென்னை – 600 001

அய்யா,

நான் மேற்கண்ட முகவரியில் வசிக்கிறேன். என் அண்ணன் திரு.பெர்னர் தூஸ்பாஸ் மீது குண்டர் சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளது ( ஆணை எண்: 7/ குண்டர் / 2014). இது தொடர்பாக கீழ்க்கண்ட உண்மைகளை உங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவர அநுமதி அளிக்க வேண்டுகிறேன்.

எனது அண்ணன் பெர்னர் தூஸ்பால் மீது இதுவரை எந்தக் குற்றத்திற்காகவும் ஒரு வழக்கு கூட இல்லாதபோதும், பாதிரியாரைத் தாக்கிய சம்பவத்தில் அவர் பங்கு பெறவே இல்லாத போதும், அந்த இடத்திலேயே அவர் இல்லாத போதும், இப்படி அவர் மீது குண்டர் சட்டம் போட்டதற்கு தனிப்பட்ட பகைதான் காரணம். இந்தத் தனிப்பட்ட பகைக்கான காரணம் சில பொது நியாயங்களை அவர் கேட்டதுதான்.

கிறிஸ்தவமதத்தில், இந்து மதத்தைப்போலவே சாதி, தீண்டாமை எல்லாம் உண்டு என்பதை அய்யா அறிவீர்கள். எங்கள் மறை மாவட்டத்திலும் இந்தக் கொடுமை அதிகம். இப்பகுதியில் உள்ள ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களில் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்படும் “பள்ளர்” என அழைக்கப்படும் “தேவேந்திர குல வேளாளச் சாதியினர்” தான் அதிகம். நாங்கள் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால் மறை மாவட்ட பாதிரிமார்கள் மத்தியில் அப்பகுதியில் உள்ள ஒரு ஆதிக்க சாதியினரே அதிகாரத்தில் உள்ளனர்.

திருவிழாக்களில் எங்களைச் சமமாக உட்கார வைப்பது கிடையாது. எங்களைப் போன்ற தலித் கிறிஸ்தவர்களும், ஆதிக்க சாதிக் கிறிஸ்தவர்களும் ஒன்றாக வாழும் ஊரில் பொதுக் கல்லறைகளில் எங்கள் சாதிக்காரர்களைப் புதைக்கவும் அனுமதிப்பதில்லை.

இன்னும் பல வகைகளிலும் எங்கள்மீது தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு, எங்களுக்குக் கிடைக்கக் கூடிய நியாயமான உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. 2012 -13 கல்வி ஆண்டில் மட்டும் எங்கள் சாதியைச் சேர்ந்த 22 குழந்தைகளை “சரியாகப் படிப்பதில்லை” எனப் பொய்க் காரணம் சொல்லி மறை மாவட்ட நிர்வாகத்தின் கீழுள்ள பள்ளிகளிலிருந்து நீக்கிவிட்டனர்.

எங்கள் சாதியில் படித்து முடித்தவர்களுக்கு, உரிய தகுதி இருந்தும், அவர்களை மறை மாவட்ட நிறுவனங்களில், குறிப்பாகப் பள்ளிகளில் ஆசிரியராக நியமிப்பதில்லை.

எங்கள் சாதியினருக்குக் குருத்துவப் படிப்பு முடித்து பாதிரிமார்களாகப் பணியாற்றவும் அனுமதிப்பதில்லை. சமீபத்தில் எங்களின் சிவகங்கை மறை மாவட்டத்தைச் சேர்ந்த, எங்கள் சாதியைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் என்பவர் குருத்துவப் படிப்பு முடித்துப் பட்டம் பெறும் தறுவாயில் குருத்துவக் கல்லூரியிலிருந்து பணி நீக்கம் செய்யப்படுள்ளார். இதனால் அவர் உரிய தகுதி இருந்தும் பாதிரியாராக இயலாமல் போய்விட்டது. இதை எதிர்த்துக் கடந்த சில மாதங்களாகப் போராட்டங்கள் நடை பெறுகின்றன. இது நாளிதழ்களிலும் வந்துள்ளது. (தினத்தந்தி மதுரைப் பதிப்பு, பிப்ரவரி 21, 2014). இதுவரை பள்ளர் சாதியைச் சேர்ந்த 18 பேர்கள் இவ்வாறு பாதிரியாராகாமல் தடுக்கப்பட்டுள்ளனர்.

இப்படி எங்கள் சாதியினர் மீது தீண்டாமை கடைபிடிக்கப்படும் போது, எங்கள் மேல அரும்பூர் கிராம தலித், கிறிஸ்தவர் பிரதிநிதி என்கிற வகையில் இன்று குண்டர் சட்டம் போடப்பட்டுள்ள என் அண்ணன் பெர்னர் தூஸ்பால் பாதிரிமார்களிடம் சென்று எங்கள் தரப்புக் கோரிக்கைகளை முன்வைப்பார்.

என் அண்ணன் மீதுள்ள இந்த ஒரே வழக்கிற்குக் காரணமான பொய்ப் புகாரை அளித்துள்ள திருவெற்றியூர் பங்கு ஆலய குருவும், அப்பகுதி ஆதிக்க சாதியைச் சேர்ந்தவருமான திரு.ஆரோக்கியசாமி அடிகளார் இப்படி நியாயம் கேட்பதற்காகவே என் அண்ணன் மீது ஆத்திரம் கொண்டிருந்தார், பங்கு குரு ஆரோக்கியசாமி அடிகளார் மீது எங்கள் சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஆபாசமாகத் திட்டியதற்காக தொண்டி காவல் நிலையத்தில் வழக்கு (எண் 158 /13 , தேதி 01-11-2013, தொண்டி காவல் நிலையம்) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவும் நாளிதழ்களில் (தினத்தந்தி மதுரைப் பதிப்பு, பிப்ரவரி 21, 2014). வெளி வந்துள்ளது. அந்த வழக்கில் அவர் தற்போது பிணையில் வந்துள்ளார் என்பதையும் தங்களின் மேலான பார்வைக்குக் கொண்டு வருகிறேன்.

இந்தக் காரணங்களினால் என் அண்ணன் மீது தனிப்பட்ட முறையில் ஆத்திரம் கொண்டிருந்த பாதிரியார் ஆரோக்கியசாமி அவர்கள், குறிப்பிட்ட தாக்குதல் சம்பவத்தில் என் அண்ணனுக்குப் பங்கே இல்லாதபோதும்,அந்த இடத்திலேயே அவர் இல்லாத போதும் இவ் வழக்கில் பொய்யாக இணைத்துப் புகாரளித்துள்ளார். அவருடன் நெருக்கமாக உள்ள காவல்துறையினரும் அதை ஏற்று இன்று என் அண்ணன் குண்டர் சட்டத்தில் சிறைப்படக் காரணமாகி உள்ளனர்.

(1) இது வரை என் அண்ணன் மீது வேறு எந்த வழக்கும் கிடையாது. (2) இதுவும் ஒரு பொய் வழக்கு (3) என் அண்ணனுக்குப் பிணையில் விடுதலை உத்தரவான பின்னரே, பழி வாங்கும் நோக்குடன் அவர் மீது குண்டர் சட்டம் பிரயோகிக்கப் பட்டுள்ளது (இது குறித்த விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது) (4) என் அண்ணி மோட்சமேரி அவர்கள் தன் கணவர் மீது தடுப்புக் காவல் சட்டம் போடக்கூடாது என அளித்த மனுவை உத்தரவு இட்ட அதிகாரி பரிசீலிக்கவே இல்லை. (5) தடுப்புக் காவல் ஆணையில் ஆதார வழக்கின் குற்றப் பிரிவுகள் தவறாக உள்ளன (ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது) (6) கொடுக்கப்பட்டுள்ள ஆவணத்தில் ஆயுதங்கள் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் என் அண்ணனின் இரு சக்கர வாகன எண் என வேறொன்று எழுதப்பட்டுப் பின் அது அழித்துத் திருத்தப்பட்டுள்ளது (ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது). (7) ஆதார வழக்கில் 18 பேர் குற்றம் சாட்டப்பட்டிருந்தும், அதில் பலபேர்கள் மீது ஏற்கனவே வழக்குகள் இருந்தும், சம்பவ இடத்திலேயே இல்லாத என் அண்ணன் மீது மட்டும் குண்டர் சட்டம் பிரயோகித்திருப்பது உள் நோக்கம் கொண்டதாகவே உள்ளது.

அய்யா,

என் அண்ணன் உரிமம் பெற்று செங்கற் காளவாய்த் தொழிலைஅமைதியாக நடத்தி வந்தவர். இதுவரை எந்த வழக்கிலும் கைது செய்யப்படாதவர். அவருடைய சம்பாத்தியத்திலேயே என் அண்ணன் குடும்பம் வாழ்ந்து வந்தது. அவர்களுக்கு வேறு வருமானம் இல்லை. மகள்கள் இருவரும் மகன் ஒருவனும்படித்துக் கொண்டிருக்கின்றனர், அண்ணனின் பராமரிப்பில் உள்ள அம்மாவும் அண்னியும் நோயாளிகள்.

இவை எல்லாவற்றையும் அய்யா அவர்கள் கருத்தில் கொண்டு அநியாயமாக என் அண்ணன் மீது பிரயோகிக்கப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்து அவரது குடும்பத்தில் விளக்கேற்றுமாறு பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.

02 – 04- 2014

தங்கள் உண்மையுள்ள,

சென்னை

(எம்.அமல்ராஜ்}