மலம் அள்ளும் துப்புறவுப் பணி குறித்து காந்தியடிகள்

“காந்தி தினத்திற்கும் ஏதாவது அதிர்ச்சி கொடுக்கிறார்” எனச் சொல்லி நண்பர் ராட்டை இன்று அனுப்பியுள்ள ஒரு தகவல்:

டிசம்பர் 3 1932 அன்று புனே  பகுதி காவல்துறை ஐ.ஜி கர்னல் ஈ.ஈ.டோயலுக்கு காந்தி எழுதிய கடிதங்கள்தான் அவை.

பிரச்சினை இதுதான்: ஒத்துழையாமைப் போராட்டத்தில் கலந்து கொண்டு ரத்னகிரி சிறையில் இருந்த அப்பாசாகேப் பட்டவர்தன் சிறையில் தனக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதியை எதிர்த்து உண்ணா நோன்பிருக்கத் தொடங்கியுள்ளார். பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு அவரது கோரிக்கையை நிறைவேற்ற வற்புறுத்திக் காந்தி இந்தக் கடிதங்களை எழுதுகிறார்.

அப்படி என்ன அப்பாசாகேப் அவர்களுக்கு சிறையில் அநீதி இழைக்கப்பட்டுவிட்டது? உங்களுக்கும் எனக்கும் அது அபத்தமாகத் தோன்றலாம்.ஆனால் காந்திக்கும் அவரைப் பின்பற்றியவர்களுக்கும் அது தாள முடியாத அநீதி.

வேறொன்றுமில்லை அப்பாசாகேப் பட்டவர்தன் ஒரு ‘மேல்’ சாதிக்காரர். அந்தக் காலத்தில் எம்.ஏ முடித்தவர். காந்தியின் அழைப்பை ஏற்றுச் சிறை ஏகியவர். அவர் சிறையில் விரும்பி ஏற்றுச் செய்த ஒரு பணியைச் சிறை அதிகாரம் தடை செய்து விட்டது.

அதென்ன அவர் விரும்பிய பணி

சக கைதிகளின் மலத்தை அள்ளும் தூய்மைப் பணி, துப்புரவுப் பணி.

#    #    #

உங்களுக்கு இது பைத்தியக்காரத் தனம் எனத் தோன்றலாம்; அபத்தம் எனலாம். ஆத்திரம் கூட வரலாம்.

‘பங்கி’கள் மட்டுமல்ல யாருமே மலம் அள்ளக் கூடாது என்றல்லவோ ஒரு தலைவர் போராடியிருக்க வேண்டும்? இதையெல்லாம் நவீன கழிப்பறைகள் மூலம் அன்றோ ஒழித்திருக்க வேண்டும்? – என நீங்கள் கொதிப்பதை என்னால் காண இயலுகிறது.

காந்தி ஒன்றும் இந்த மாதிரிப் பிரசினைகளில் நவீனமாதல், எந்திரமயமாதல் ஆகியவற்றை எதிர்த்தவரல்ல. இராட்டை சுற்றிய அவர்தான், உலகின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு சிங்கர் தையல் மெசின் எனச் சொன்னவரும் கூட. ரயில், ஒலிபெருக்கி (மைக்) ஆகியவற்றைப் பெரிய அளவில் பயன்படுத்தியவர் அவர். அவரைப் பொருத்த மட்டில் எந்திரங்கள் என்பன மனிதனைக் கடும் உழைப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும். அது ஒரு சொகுசாக (luxury) ஆவதைத்தான் அவர் வெறுத்தார், எதிர்த்தார்.

அது 1930 கள். இன்று 2030 ஐ நெருங்கிக் கொண்டிருந்தும் கூட நம்மால் இன்னும் மலம் அள்ளுவதை ஒழிக்க இயலவில்லை என்பதை மனதில் நிறுத்திக் கொண்டு நாம் இந்தப் பிரச்சினையை யோசிக்க வேண்டும்.

எல்லோரும் மலம் அள்ள வேண்டும் என அவர் சொன்னதை எல்லோரும் பின்பற்றினார்கள் என நான் சொல்ல வரவில்லை. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே மலம் அள்ளுதல் என்கிற நிலையை அவர் ஒழித்துவிட்டார் எனவும் நான் சொல்ல வரவில்லை.

காந்தியை அறியாமலேயே அவர் மீது ஒரு வெறுப்பைச் சுமந்து திரியும் நாம் மட்டும் என்ன ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே மலம் அள்ளுதல் என்கிற நிலையை ஒழித்துவிட்டோமா என்ன?

 

இப்படியானது குறித்த ஒரு குற்ற உணர்வை மேல்தட்டினர் மத்தியில் ஏற்படுத்த காந்தி முனைந்தார். குறைந்தபட்சம் அவரவர் மலத்தை அவரவரே அள்ளித் தூய்மை செய்யும் மனநிலையையாவது உருவாக்க  முனைந்தார்.

தவிரவும் தொழிலில் உயர்வில்லை தாழ்வில்லை என்கிற நிலை பெறும் ஆன்மீகப் பயிற்சியாகவும் அவர் இதை மேற்கொண்டார். ஆம் இராட்டை சுழற்றுவதாயினும், மலம் அள்ளுவதாயினும் இவை அவரது அரசியல் மட்டுமல்ல. அவரது அரசியலோடு பின்னிப் பிணைந்திருந்த ஆன்மீகப் பயிற்சியும் கூட.

இங்கொன்றை மிகவும் அழுத்தமாகப் பதிய விரும்புகிறேன். இந்தச் சம்பவம் பூனா ஒப்பந்த காலத்தில் நடந்தது. இரட்டை வாக்குரிமையை முறியடிக்கும் காந்தி இன்னொருபக்கம் தன்னை முற்போக்காகக் காட்டிக்கொள்ளும் தந்திரமாக இதைச் செய்தார் என நினைத்துவிடக் கூடாது, அப்படியாக இந் நிகழ்வை வாசிக்க நம் மீது திணிக்கப்பட்டுள்ள காந்தி வெறுப்பு நம்மை ஆட்படுத்திவிடக் கூடாது.

இந்தச் சம்பவத்திற்குச் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே, தென் ஆப்ரிகாவிலேயே காந்தி இதைத் தொடங்கிவிட்டார். அவரது கொம்யூனில் அனைவரும் மலம் அள்ளும் தொழிலைச் செய்தாக வேண்டும். கொம்யூனில் இருந்த ஒரு கிறிஸ்தவ தலித் தோழரின் மலத்தை அள்ளித் தலையில் சுமந்தவாறு மரப்படிகளில் அன்னை கஸ்தூரி பா இறங்கி வந்தபோது அது தளும்பி அவர் மீது வழிய, கஸ்தூரி பா காந்தியிடம் “இதெல்லாம் நியாயமா” என்கிற ரீதியில் கேட்க, காந்தி அவரிடம் மூர்க்கமாக நடந்து கொண்ட வரலாறுகளை நாம் மறந்து விடக் கூடாது.

குறிப்புகள் 1:  முக்கிய தமிழறிஞரும், காந்தியவாதியும் ஆன மு.அருணாசலம் அவர்கள் தான் சந்தித்த பெரியவர்கள் பற்றி எழுதியுள்ள ’காசியும் குமரியும்’ எனும் நூல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதில் அவர் சந்தித்த பெரியவர்களில் ஒருவர் வினோபா பாவே. பாவே அவர்கள் பிறப்பால் ஒரு பார்ப்பனர் என்பது குறிப்பிடத் தக்கது. கீதைக்கு உரை எழுதியவர்களில் அவரும் ஒருவர். அருணாசலம் அவர்கள் சில நாட்கள் பாவேயின் ஆசிரமத்தில் தங்கி இருக்கிறார். பாவேக்குத் தமிழில் ஒரு ஈடுபாடு இருந்ததையும் அவர் அதில் குறிப்பிடுவார். தினம் விடியும் முன் பாவே வெளியே புறப்படுவார். அவர் கையில் ஒரு கூடையும், ஒரு நீண்ட துரட்டியும் இருக்கும். அருணாசலம் அவர்களும் பேசிக் கொண்டே கூடச் செல்வார் இருவரும் ஆசிரமத்திற்கு அருகில் உள்ள கிராமத்து மக்கள் மலம் கழிக்கும் பாதை ஓரங்களுக்குச் செல்வார்கள். பேசிக் கொண்டே துரட்டியால் மலத்தை அள்ளிக் கூடையில் போட்டு வந்து பெரிய கழிவுத் தொட்டியில் போட்டு மூடுவதை பாவே அவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்ததை அருணாசலம் அவர்கள் பதிவதைத் தயவு செய்து ஒருமுறை படித்துப் பாருங்கள்.  நமக்குத் தோன்றலாம். இதன் மூலம் எல்லாம் இந்தப் பழக்கத்தை வேரறுத்துவிட இயலுமா? நான்தான் சொன்னேனே இது சமூகத்தைச் சீர்மைப்படுத்தும் முயற்சி மட்டுமல்ல. அது அவர்களின் ஆன்மீகச் சீர்மையை மேம்படுத்துவதை நோக்கிய பணியும் கூட.

  1. காந்தி டோயலுக்கு எழுதியுள்ள கடிதங்களை அவரது தொகுப்புகளில் காண்லாம்… நறுக்குத் தெரித்தாற் போன்ற காந்தியின் ஆங்கிலம், அதிகாரிகளுக்கு எழுதும் போதும் சற்றும் வளைந்து கொடுக்காதது. அதே நேரத்தில் அதில் மிளிரும் பண்பு யாரையும் தலை வணங்கச் செய்வது.  இந்தக் கடிதம் எழுதப்படும்போது காந்தியும் ஒரு சிறைவாசி என்பது கவனத்துக்குரியது பட்டவர்தன் அவர்கள் உண்ணா விரதம் இருப்பது காந்தி கேள்விப்பட்ட செய்தி மட்டுமே. ஒரு வேளை அது தவறாக இருக்கக்கூட வாய்ப்புண்டு என்பதையும் குறிப்பிட்டு காந்தி எழுதும் வாசகங்கள் இவை..

“If I am misinformed about the present position you will let me know what it really is. If I am correctly informed I would ask you in view of the circumstances brought to your notice please to telegraph instructions that my friend and his associates may be allowed to resume Bhangi work under whatever written guarantee as to its voluntary nature you may deem fit to take from them. Though I am a prisoner, you will not expect me to see a comrade dying by inches, not for any crime, not for any indulgence he desires, but for deprivation of humanitarian service for the prosecution of which Government have recognized the necessity of giving me special facilities…  I am sure that you will treat this as a matter of urgency involving as it does the possibility of great damage being done to a fellow-being under your custody.”

  1. சுதந்திரத்திற்குச் சற்று முன்னதாக காந்தி அளித்த மிக முக்கியமான நேர்காணல்களில் ஒன்றில் “முதல் குடியரசுத் தலைவராக ஒரு பங்கி இனத்துப் பெண் அமைந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்” எனக் கூறியுள்ளதை எனது பழைய கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளேன்
  2. காந்தி டோயலுக்கு எழுதிய கடிதங்களை Years of Fasts of Mahatma Gandhi என்னும் தலைப்பில் இந்த இணையப் பக்கத்தில் காணலாம்: http://www.mkgandhi.org/fastofmahatma.htm

தொடரும் கொலைகளும் ஒரு காவல்துறை அதிகாரியின் கருத்தும்

இன்றைய முக்கிய பேச்சுப் பொருள் இந்தத் தொடரும் கொலைகள்தான். மருத்துவர் ராமதாஸ் வழக்கம்போல இதற்கும் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த நான்காண்டுகளில் 9,000 கொலைகள். 85,000 கொள்ளைகள் நடந்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் சுமார் 5000 கள்ளத் துப்பாக்கிகள் புழங்குவதாகவும் விவரங்கள் தருகிறார். ஸ்டாலின் சுவாதி வீட்டில் துக்கம் விசாரித்துவிட்டு அவரும் சமீபத்திய சென்னைக் கொலைகளைப் பற்றி விரிவாக விவரங்கள் சொல்லியுள்ளார். இரண்டாம் முறையாக ஜெயா தொடர்ந்து ஆட்சிக்கு வந்தபின் நடந்த கொலைகளைப் பட்டியலிட்டுள்ளார். ஜெயா வழக்கம்போல “அமைதிப் பூங்கா” கதை அளந்துள்ளார்.
முகநூலில் நண்பர்கள் பலப்பல கருத்துக்களைச் சொல்லிக் கொண்டுள்ளனர். காவல்துறையினர் காவல் நிலையங்களில் ஏராளமான காலியிடங்கள் நிரப்பப்படவில்லை. பல்வேறு மட்டங்களில் சுமார் 20,000 காலியிடங்கள், ஆறில் ஒன்று பணியிடங்கள், நிரப்பப்படவில்லை எனக் காரணம் சொல்கின்றனர்.
எனக்கு ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி சில ஆண்டுகளுக்கு முன் சொன்னது நினைவுக்கு வருகிறது ஏப்ரல் 15, 2008 டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் அது வந்துள்ளது. அவர் சி.கே. காந்திராஜன். சென்னை நகர கமிஷனராக இருந்தவர். ‘Organised Crime — A study of Criminal Gangs in Chennai’ என்பது அவரது Ph.D ஆய்வுத் தலைப்பு. டெல்லி ‘ஏ.பி.எச் பப்லிகேஷன்ஸ்’ இதை இப்போது நூலாக வெளியிட்டுள்ளது. Google Books ல் Organised Crime C.K.Gandhirajan எனத் தேடினீர்களானால் எளிதில் முழுமையாகப் படிக்கலாம். சென்னை நகரில் செயல்படும் சுமார் ஆறேழு கிரிமினல் குமபல்களை அவர் ஆய்வு செய்து அவை செயல்படும் முறை முதலியவற்றை விரிவாக விளக்கியுள்ளார். அவர் கூறிய ஒரு செய்தியைக் கவனப்படுத்துவதுதான் இங்கு என் நோக்கம்.
இன்று நடந்துள்ள பல கொலைகள் கூலிப் படைகளினால் நடத்தப் படுவதையும், பணப் பறிப்புக்காகவும், கொள்ளை முதலிய காரணங்களுக்காகவும் நடத்தப்படுவதை அறிவோம். இந்தக் ‘கிரிமினல் கேங்’ குகளைப் பொருத்தமட்டில் அவை காவல்துறையுடன் நெருக்கமாக உறவுகொண்டுள்ளன என்பதுதான் அவர் சொல்வது. பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற பல காவல்துறை அதிகாரிகள் இந்தக் கும்பல்களுக்கு ‘ராயல்டி’ பெற்றுக் கொண்டு ஆலோசனைகள் வழங்குகின்றனர் என்கிறார் அவர். சிலர் இப்படி மாதம் 50,000 முதல் பல இலட்சங்கள் வரை சம்பாதிப்பதாகவும் அவர் கூறுகிறார். “எந்த ஒரு அமைப்பு ரீதியான குற்றச் செயல்களும் அரசியல்வாதிகள், வழக்குரைஞர்கள், போலீஸ்காரர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் நடைபெறுவதில்லை” என்கிறார் காந்திராஜன். அப்பட்டமாக இந்தத் தொடர்புகள் வெளிப்பட்டவுடன் சில அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். சிலர் சஸ்பென்ட் செய்து கொஞ்ச நாள் கழித்துப் பணியமர்த்தப் படுகின்றனர். அவ்வளவுதான்.
மேலே குறிப்பிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வந்த இரண்டு விவரங்களைச் சொல்கிறேன். பாம்ப் பாலாஜி என்கிற இப்படியான ஒரு கும்பல் தலைவனுடன் தொடர்பு வைத்திருந்தார் என தஞ்சை மேற்கு காவல் நிலையத்திலிருந்த குமாரவேலு எனும் ஆய்வாளரை வேதாரண்யம் காவல் நிலையத்திற்கு மாற்றினார்கள். மோசடி மன்னன் ஆதிகேசவனுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என மகாகவி பாரதி நகர் காவல் நிலைய உதவி ஆணையர் முகமது காசிஃப் மற்றும் ஆய்வாளர் பீர் முகமது இருவரையும் சஸ்பென்ட் செய்து, பிறகு வேறொரு காவல் நிலையத்தில் பணி அமர்த்தினார்கள்.
சமீபத்தில் நடந்துள்ள சென்னைக் கொலைகளிலும் கூட வழக்குரைஞர் ஒருவரைக் கொல்ல வேலூர் சிறைக்குள் உள்ள ஒரு நபர் காரணமாக இருந்துள்ளது இரண்டு நாள் முன்னர் பத்திரிகைகளில் வெளி வந்தது. இன்டியன் எக்ஸ்பிரஸ் நிருபர் ஒருவர் தற்போது வளைகுடா நாடொன்றில் இருந்து கொண்டு செயல்படும் ஒரு தாதாவான ஸ்ரீதர் தனபாலன் என்பவருடன் தொலைபேசி ஒன்றில் பேசி அவர் சொன்ன பதிலும் இரண்டு நாள் முன் அந்த நாளிதழில் வந்தது. இவர்களை எல்லாம் போலீஸ் கைது செய்து சரியாக விசாரித்து முழுமையாக அந்தக் கும்பல்களையே ஒழித்திருக்க இயலாதா எனும் கேள்வி நமக்கு எழுகிறது. காவல்துறை அதெல்லாம் செய்வதில்லை.
காந்திராஜன் சொன்னது போல இது அரசியல்வாதிகள், வழக்குரைஞர்கள், காவல்துறை, கிரிமினல் கும்பல்கள் ஆகியோர் கூட்டணி அமைத்துச் செய்யும் குற்றம். இப்படி கொலை கொள்ளைகள் அதிகமாகி ஊடக கவனம் பெற்று பிரச்சினை பெரிதாக ஆகும்போது காவல்துறை இந்த மூல வேர்களை ஆராய்ந்து அவற்றை வேறறுக்கும் வேலையைச் செய்யாது. மாறாக யாராவது ஒரு பழைய குற்றவாளியைப் பிடித்துக் கொண்டு சென்று என்கவுன்டர் செய்து படம் வெளியிட்டு பதவி உயர்வும் பணப் பரிசும் பெறுவார்கள். மறுபடியும் குற்றச் செயல்கள் தொடரும்.
சென்ற ஆண்டில் திருநெல்வேலி நகரில் கொலை கொள்ளை பெருகிவிட்டன எனப் பத்திரிகைகள் எழுதப் போக கிட்டப்பா எனும் ஒரு பழைய குற்றவாளி, இப்போது திருந்தி மாமியார் வீட்டில் விவசாயம் செய்துகொண்டிருந்த நபரை அழைத்துச் சென்று சுட்டுக் கொன்றார்கள். நாங்கள் ஒரு உண்மை அறியும் குழு அமைத்து உண்மைகளைக் கொணர்ந்தோம். நாங்கள் விசாரித்தபோது அது உண்மையான என்கவுன்டர்தான் என அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்கள் உயர் அதிகாரிகள். இப்போது நீதிமன்றம் அது கொலைதான் எனச் சொல்லி சம்பந்தப்பட்ட காவலர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சுவாதி கொலை போன்றவை வேறு. இப்படித் தனி நபர்கள் வக்கிரமாகச் செய்யும் கொலைகளின் சமூகக் காரணங்கள் வேறு. ஆனால் நடக்கும் ஆணவக் கொலைகளிலும் கூடச் சில இப்படியான கும்பல்களை வாடகைக்கு அமர்த்தி செய்யப்படுகின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பேரழிவு ஆயுத வணிகம்

(‘இளைஞர் முழக்கம்’ இதழ் மார்ச் 2011 மற்றும் ஜூன் 2011 ஆகிய இதழ்களில் வெளிவந்த கட்டுரை)

உலக ஆயுத வணிகம்’ குறித்து ஒரு கட்டுரை எழுத வேண்டும் என இளம் தோழர்கள் என்னிடம் கேட்டபோது என் மனதில் சில கேள்விகள் எழுந்தன. ‘உலகம்’ ‘ஆயுதம்’, வணிகம் என்கிற மூன்று சொற்களில் முதல் சொல் மட்டுமே இன்றைய நிலையை விளக்க உதவும் என எனக்குத் தோன்றியது. இன்றைய உலகின் மூலை முடுக்குகள் வரை ஆயுத வணிகம் எட்டியுள்ளது. சிறிய கொலை ஆயுதங்கள் முதல் மிகப்பெரிய ஏவுகணைகள், விமானங்கள், விமானம் தாங்கிக் கப்பல்கள் வரை இன்று ஆயுதச் சந்தைகளில் கிடைக்கின்றன. நாடுகள் மட்டுமின்றி ஆயுதம் தாங்கிப் போர் செய்கிற குழுக்கள், இயக்கங்கள் யாரும் ஆயுதங்களை வாங்க இயலும். இணையத் தளங்களில் “ஆர்டர்’’ கொடுத்து ஏ.கே. 47 துப்பாக்கிகளை ஒருவர் வாங்கிவிட இயலும். இந்த வகையில் ‘உலகம்’ என்கிற சொல் அடுத்த கிரகங்களில் நாம் குடியேறாத வரையில் பொருத்தமானதுதான்.

ஆயுதம் என்றால் கத்தி, துப்பாக்கி, எறிகுண்டு என்கிற நிலை எல்லாம் தாண்டி இன்று மிகப்பெரிய பேரழிவுகளை கண நேரத்தில் உருவாக்கி கோடிக்கணக்கான மக்களைத் துல்லியமாகத் தாக்கக்கூடிய பேரழிவு ஆயுதங்கள் உருவாகிவிட்டன. இன்றைய குறிக்கோள் இத்தகைய பேரழிவு ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதாகத்தான் உள்ளது. எனவே வெறுமனே ஆயுதம் என்று சொல்லாமல் ‘பேரழிவு ஆயுதங்கள்’ என்று சொல்வதுதான் பொருத்தம்.

‘வணிகம்’ என்கிற சொல் கூடப் பொருத்தமாகத் தெரியவில்லை. ஏதோ ஒருவருக்கொருவர் பொருட்களை விற்று, வாங்கி பரிவர்த்தனை செய்துகொள்கிற விவகாரமல்ல இது. பல வணிகர்கள் மத்தியில் பொருட்களைப் பார்த்து யாரிடம் வாங்குவது எனத் தேர்வு செய்கிற சுதந்திரமும் இங்கில்லை. உலகம் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் இவ்வணிகத்தில் ஒரு சிலரே வியாபாரிகள். மற்ற எல்லோரும் வாங்குபவர்கள்தான். ஆக இது ஒரு ஏகபோக வணிகம். ஏகபோகத்திற்கான அத்தனை கொடூரப் பண்புகளும், விளைவுகளும் இதில் வெளிப்படுகிறது. ஆக இதனை ‘உலகப் பேரழிவு ஆயுத ஏகபோக வணிகம்’ (Global weapons monopoly) எனச் சொல்வதே பொருத்தம் எனத் தோன்றுகிறது.

இராணுவச் செலவுகளுக்கே உலகம் இன்று ஆண்டொன்றுக்கு 1.5 டிரில்லியன் டாலர்கள் செலவு செய்கிறது. உலக மொத்த உற்பத்தில் சுமார் மூன்று சதம் இப்படிச் செலவழிக்கப்படுகிறது. இந்திய அரசு ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்களை “பாதுகாப்பு ’’க்கென செலவழிப்பதை அறிவோம். 2006ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய நூறு அழிவாயுத உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தி மதிப்பு 315 பில்லியன் டாலர்கள். சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப்பின் பனிப்போர் முடிவடைந்ததை ஒட்டி கொஞ்ச காலத்திற்கு அழிவாயுத விற்பனை குறைந்திருந்தது. எனினும் விரைவில் சாவு வணிகங்கள் கொண்டாடக்கூடிய நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் என்கிற சொல்லாடலையும் அதையட்டி உலகம் மாறிப்போன கதையையும் நாம் அறிவோம். எனவே மறுபடியும் 2003 தொடங்கி அழிவாயுத விற்பனை அதிகரிக்கத் தொடங்கியது.

அமெரிக்காவின் காங்கிரசுக்கான ஆய்வுச் சேவை (Congressional Research Service) அவ்வப்போது அழிவாயுத வணிகம் குறித்து ஆய்வறிக்கைகளை அளித்து வருகிறது. இணையத் தளங்களில் இவற்றைக் காணலாம். 2008ஆம் ஆண்டு அறிக்கையின்படி அந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அழிவாயுத விற்பனை ஒப்பந்தங்களின் மதிப்பு 55.2 பில்லியன் டாலர். இதில் அமெரிக்காவின் பங்கு 37.8 டிரில்லியன் டாலர். அதாவது மொத்தச் சாவு வணிகத்தில் அமெரிக்காவின் பங்கு 68.7 சதமாகும்.

சோவியத் யூனியனின் இறுதிக் கட்டத்தில் (1990) மொத்த அழிவாயுத விற்பனை 32.7 பில்லியன் டாலராகவும், இதில் அமெரிக்காவின் பங்கு 10.7 பில்லியனாகவும் இருந்தது. எவ்வளவு வேகமாக அமெரிக்கா இந்த அழிவாயுத விற்பனையில் வளர்ந்துள்ளது என்பதைப் பாருங்கள்.

அழிவாயுத விற்பனையில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக நிற்கிற நாடுகளாக உள்ளவை ரஷ்யா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின், சீனா, இஸ்ரேல், நெதர்லான்ட், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, உக்ரேன், கனடா ஆகியன. இந்த நாடுகள் எல்லாம் சேர்ந்து செய்கிற அழிவாயுத வணிகம் மொத்தத்தில் 32 சதம். சாவு வணிகத்தில் அமெரிக்கா எந்த அளவிற்கு ஏகபோகம் கொண்டுள்ளது என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

இந்த அழிவாயுதங்களை யார் அதிகம் வாங்குகின்றனர்? எந்தெந்த நாடுகள் இத்தகைய அழிவாயுத இறக்குமதிக்கு அதிகம் செலவிடுகின்றன? இந்த விஷயத்தில் பிற எல்லா நாடுகளையும் ‘பீட்’ பண்ணி நம்பர் ஒன்னாக நின்று அமெரிக்க விசுவாசம் காட்டிக் குழைகிற நாடு இந்தியா.

2000 த்தில் மட்டும் 911 பில்லியன் டாலர் மதிப்புள்ள அழிவாயுதங்களை அது இறக்குமதி செய்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது. இது படிப்படியாக அதிகரித்து 2003இல், 2802 பில்லியன் டாலராகவும், பின்பு சற்றுக் குறைந்து, மீண்டும் 2007இல், 2179 பில்லியன் டாலராகவும், 2009இல், 2116 பில்லியன் டாலராகவும் இருந்தது. பாகிஸ்தான் தனது ஆயுத இறக்குமதிச் செலவை 158 பில்லியன் டாலரிலிருந்து 2000 த்தில் படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது. 2009ல் இது 1146 பில்லியன் டாலராக இருந்தது. பிற முக்கியமான ஆயுத இறக்குமதி நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, கிரீஸ், தென்கொரியா, அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, துருக்கி, சவூதி அரேபியா, ஐக்கிய அரேபிய எமிரேட், சீனா, நார்வே ஆகியன. சீனாவைப் பொருத்தமட்டில் படிப்படியாக தனது அழிவாயுத இறக்குமதிச் செலவை 2015 பில்லியன் டாலரிலிருந்து (2009)ல் 595 பில்லியன் டாலராக 2009 ல் குறைத்துள்ளது. அதுவே ஒரு ஆயுத ஏற்றுமதி நாடாகக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவது இதற்கொரு காரணமாக இருக்கலாம்.

பஞ்சைப் பராரி நாடுகளெல்லாம் இத்தகைய அழிவு ஆயுதங்களுக்காகச் செலவிடும் தொகைகளைப் பார்க்கும்போது நமக்குப் பகீரென்கிறது. அமெரிக்க இராணுவ மையமான பென்டகனின் தரவுகளின்படி கம்போடியா (3.04 லட்சம் டாலர்), கொலம்பியா (256 மில்லியன் டாலர்), பெரு (16.4 மில்லியன் டாலர்), போலந்து (79.8 மில்லியன் டாலர்) ஆகியன அமெரிக்காவிலிருந்து ஆயுதங்களை வாங்கிக்குவிக்கின்றன. பென்டகனின் இன்னொரு அறிக்கையின்படி 2008இல் அமெரிக்காவுடன் அழிவாயுத இறக்குமதி ஒப்பந்தம் செய்து கொண்ட நாடுகளான, சவூதி அரேபியா (6.06 பில்லியன் டாலர்), ஈராக் (2.5 பில்லியன்), மொராக்கோ (2.41 பில்லியன்), எகிப்து (2.31 பில்லியன்), இஸ்ரேல் (1.32 பில்லியன்), ஆஸ்திரேலியா (1.13 பில்லியன்), தென்கொரியா (1.12 பில்லியன்), பிரிட்டன் (1.1 பில்லியன்), இந்தியா (1 பில்லியன்), ஜப்பான் (840 மில்லியன்).

1987ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்றவரும் கோஸ்டாரிகாவின் குடியரசுத் தலைவருமான ஆஸ்கார் ஏரியஸ் சான்செஸ் கூறினார். “கல்வி, வீட்டு வசதி, மருத்துவம் ஆகியவற்றை ஒதுக்கிவிட்டு அழிவாயுதங்களில் முதலீடு செய்வதென ஒரு நாடு முடிவு செய்யுமானால் ஒரு தலைமுறையினரின் வாய்ப்புகளையும், நல்வாழ்வையும் அது புறந்தள்ளுகிறது என்றே பொருள். இந்தப் புவியில் வாழ்கிற ஒவ்வொரு பத்து மனிதருக்கும் ஒரு கொலை ஆயுதத்தை நாம் உற்பத்தி செய்துள்ளோம். ஆனால் நம்மால் சாத்தியம்தான் என்றாலும் பசியை ஒழிப்பது பற்றி நாம் சிந்திப்பதில்லை. மொத்த அழிவாயுத வணிகத்தில் முக்கால் வாசியை பின் தங்கிய நாடுகளில் கொண்டு குவிப்பதற்கு நமது சர்வதேச நெறிமுறைகள் வழிவகுக்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தும் நெறிமுறைகள் ஏதுமில்லை. இந்த ஆயுதங்கள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து பொறுப்புகள் எதையும் சர்வதேச நெறிமுறைகள் ஆயுத விற்பனை நாடுகள் மீது சுமத்துவதுமில்லை.’’

ஏகபோக மரண வியாபாரத்தில் அமெரிக்கா

 

அமெரிக்காவின் ஆயுத வணிகம் ரொம்பச் சிக்கலானது. பிற உற்பத்திப் பொருட்களின் வணிகத்தை ஒத்ததல்ல இது. முன்னால் குடியரசுத் தலைவர் ஐசனோவர் இதனை Military Industrial Congressional Complex என்றார். அதாவது இராணுவம், தொழிற்துறை மற்றும் பாராளுமன்றம் (அரசியல்) ஆகியவற்றின் சிக்கலான ஒருங்கிணைவு. எனவே இதில் அமெரிக்காவின் ஏகாதிபத்திய அரசியல் நலன்கள் ஆயுத உற்பத்தி கார்ப்பரேட்களின் வணிக நலன்கள், இராணுவ நலன்கள் எல்லாம் ஒன்றிணைகின்றன.

அமெரிக்க ஆயுத உற்பத்தியாளர்கள் இரண்டு வழிகளில் ஆயுத விற்பனை செய்கின்றனர். முதலாவது அயல் இராணுவ விற்பனைகள் அமெரிக்க இராணுவ கேந்திரமான பென்டகன் ஊடாக இரு அரசுகளுக்கிடையே நேரடியாக பேரம்பேசி விற்கப்படுவது இது. மற்றது நேரடி வர்த்தக விற்பனைகள். இதில் ஆயுத கார்ப்பரேட்டுகள் நேரடியாக நாடுகளுடன் பேரம்பேசி அரசியல் உரிமம் பெற்று விற்பது. இந்த பேரத்தில் ஏராளமான ஊழல்களுக்கு இடமுண்டு.

இது தவிர அமெரிக்க அரசு தனது இராணுவ ஆயுதக் கிடங்குகளிலிருந்து மிகக் குறைந்த விலையிலும். சமயங்களில் இலவசமாகவும் தனக்கு வேண்டிய நாடுகளுக்கு கொடுப்பதும் உண்டு. தேவைக்கு அதிகமான பாதுகாப்புப் பொருட்களாக ஒதுக்கப்பட்டவை என இதற்கு பெயர். இது தவிர பிறநாட்டு இராணுவங்களுக்கு பயிற்சிகள் அளிப்பது பிற நாடுகளுடன் சேர்ந்து கூட்டுப் பயிற்சி எடுப்பது என்பதெல்லாம் இன்று அதிகமாகியுள்ளதை நாம் அறிவோம். செப்டம்பர் 11, 2011க்கு பிறகு இவை இன்னும் அதிகமாகியுள்ளன.

உலகளவில் மிகப் பெரிய ஆயுத விற்பனை கார்ப்பரேட்டுகள் என லாக்ஹீட் மார்டின், பி,ஏ,ஈ சிஸ்டம்ஸ், போயிங், ரேய்தியான், நார்த்ராப் க்ரும்மன், ஜெனரல் டைனமிக்ஸ், தாம்சன் சி.எஸ்.எஃப் ஆகிய ஏழு நிறுவனங்களைச் சொல்லுகிறார்கள். இவற்றில் முதல் ஆறும் அமெரிக்க நிறுவனங்கள். ஏழாவது மட்டுமே பிரான்சுடையது.

“சிறு ஆயுத விற்பனை” பற்றியும் நாம் கொஞ்சம் அறிந்து கொள்ள வேண்டும். காவல்துறையினர், துணை இராணுவத்தினர் மற்றும் இராணுவத்தினரும் கூட அதிகம் பயன்படுத்தும் ஆயுதங்களான கைத்துப்பாக்கிகள் (பிஸ்டல்கள்) ஃரைபில்கள், எந்திரத் துப்பாக்கிகள், தாக்குதல் ரைப்பில்கள், எறிகுண்டு வீசிகள் எடுத்துச்செல்லக்கூடிய டாங்கி மற்றும் விமானங்களைச் சுடும் பீரங்கிகள் முதலியவை பெரிய அளவில் சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் உற்பத்தி செய்து விற்கப்படுகின்றன. இவற்றை ரொம்பவும் விலை மலிவாகவும், எளிதாகவும் யாரும் வாங்கக்கூடிய நிலை இன்று உள்ளது. அரசுகள் மட்டுமின்றி போராளிக் குழுக்கள், மாஃபியா கும்பல்கள், கடற் கொள்ளையர்கள், கடத்தல்காரர்கள், போதை மருந்து விற்பனையாளர்கள் எல்லோரும் இத்தகைய ஆயுதங்களை வாங்கிக் குவிக்கின்றனர். கார்ப்பரேட்டுகள் இந்த விற்பனையைச் செய்கின்றனர். அரசுகள் இதனை கண்டு கொள்வதில்லை.

உலகம் என்பது இன்று மிகப்பெரிய போர்களின் களமாக உள்ளது. 36 நாடுகளில் நடைபெறும் 40 ஆயுதப் போராட்டங்களுடன் 21ம் நூற்றாண்டு விடிந்தது 2000யில் வெளியிட்ட கணக்கு) சிவில் யுத்தம் (உள்நாட்டுப் போர்) நடைபெறும் பல நாடுகளில் போரே வாழ்வாக மாறியுள்ளது. கண்முன் ஈழத் தமிழர்கள் பட்ட துயரங்களைப் பார்த்தவர்கள் நாம். உள்நாட்டுப் போர் என்பது உன்னத அரசியல் இலட்சியங்களுக்காக மட்டுமின்றி, நிதி சேகரிப்பதற்காக, போரால் கல்வி இழந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிப்பதற்காக என்றெல்லாம் போருக்குப் பன்முகப் பரிமாணங்கள் உள்ளதைப் புரிந்து கொள்ள வேண்டும். காஷ்மீர் முதலிய பகுதிகளில் குழந்தைகள் முதலில் அறிந்து கொள்ளும் பொருட்களில், தெரிந்துகொள்ளும் மொழிகளில் பல வகைத் துப்பாக்கிகள், கண்ணி வெடிகள் ஆகியன அடங்கும். இத்தகைய சூழலில் திருட்டு ஆயுத வணிகம் பல்கிப் பெருகியுள்ளதை விளக்க வேண்டியதில்லை. உலகில் மிகப் பெரிய அளவில் இன்று கள்ள ஆயுத வணிகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பயங்கரவாதம் பற்றி இன்று வாய் கிழியும் அமெரிக்கா ஏகப்பட்ட பயங்கரவாதக் குழுக்களுக்குப் பயிற்சி அளித்து ஆயுதம் வழங்கிய கதைகளை நாம் அறியலாம். கடந்த மாதம் அமெரிக்கப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடன் கூட இப்படி வளர்க்கப்பட்டவர்தான். சோவியத் யூனியனை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றுவதற்காக ஒசாமா உள்ளிட்ட முஜாஹிதீன்களை உருவாக்கியது அமெரிக்கா. நாடுகளுக்கிடையே சோதனை இல்லாமல் பெரிய அளவில் இவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டன. பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. 1985ல் இத்தகைய ஆப்கன் முஜாஹிதீன்களை வெள்ளை மாளிகையில் வைத்துப் பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்திய அன்றைய அமெரிக்க குடியரசுத் தலைவர் ரொனால்டு ரீசன், அமெரிக்காவை உருவாக்கிய நமது தந்தையர்களுக்கு ஒப்பானவர்கள் இவர்கள் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

இன்று இன்னொரு நாட்டு எல்லைக்குள், அந்நாட்டின் அனுமதியின்றி நுழைந்து ஒசாமாவையும், கூட இருந்தவர்களில் சிலரையும் சுட்டுக் கொன்று ஒசாமாவின் உடலைக் கடலில் தூக்கி வீசி எறிந்திருக்கிறது அமெரிக்கா இந்தக் கட்டுரையை நான் எழுதிக்கொண்டிருக்கும் பொழுது ஒசாமாவை உயிருடன் பிடித்தப்பின் சுட்டதாகச் செய்தி ஒன்று தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்கிறது. பிரபாகரன், நடேசன், புலித்தேவன் முதலியோரை நாங்கள் இப்படிக் கொன்றதை மட்டும் பெரிது படுத்துகிறீர்களே என்கிற ரீதியில் இலங்கையில் மூத்த அமைச்சர் ஒருவர் பேசியும் உள்ளார். ஒருவரை ஒருவர் உதாரணம் காட்டித் தத்தம் கொடுமைகளையும் சிவிலியன்களுக்கு (பொதுமக்களுக்கு) எதிரான தாக்குதல்களையும் நியாயப்படுத்தி கொள்வதற்கு இன்னொரு பெயர் தான் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்.

1989முதல் 1998க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் ஆப்பிரிக்க இராணுவத்திற்கு ஆயுதம் மற்றும் பயிற்சிகள் அளித்த வகையில் மட்டும் அமெரிக்கா 227 மில்லியன் டாலர்களைச் செலவிட்டுள்ளது. பயனடைந்த நாடுகளில் பல உள்நாட்டு மக்களைக் கொன்று குவித்தவை. அவற்றில் சில காங்கோ, அங்கோலா, புருண்டி, ருவாண்டா, சூடான், உகாண்டா மற்றும் ஸிம்பாப்வே.

இவை தவிர இலங்கை, இந்தோனேசியா, இஸ்ரேல், சைனா, தய்வான், இந்தியா, பாகிஸ்தான் முதலான நாடுகளுக்கும் அமெரிக்கா, ப்ரான்சு, பிரிட்டன், ருஷ்யா, இத்தாலி முதலிய நாடுகள் ஆயுதங்களை விற்றுள்ளன. இந்த நாடுகள் அனைத்தும் உள்நாட்டு பயங்கரவாத எதிர்ப்பு என்கிற பெயரில் உள்நாட்டுப் போராளிகள், சிறுபான்மை மொழி மற்றும் இனத்தினர், மதத்தினர், பழங்குடியினர் ஆகியோரின் மீது ஆயுதத்தாக்குதலை நடத்திய, நடத்துகிற நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது,ஆயுத விற்பனை செழிப்பதற்கு போர்கள் அவசியம். போர்களற்ற அமைதியான உலகை ஆயுத விற்பனையாளர்களால் சகித்துக்கொள்ள இயலாது. பல நாட்டு இராணுவங்களுக்கும் ஆயுதப் போராட்டக் குழுக்களுக்கும் இத்தகைய பயிற்சி அளிப்பதில் இந்தப் பின்னணியும் சேர்ந்து கொள்கிறது. ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் அரசு படைகளுக்கும், ருவாண்டா மற்றும் உகாண்டாவில் ஆயுதப் போராட்டக் குழுக்களுக்கும் அமெரிக்க அரசு பயிற்சி அளித்தது. சட்டபூர்வமான ஆயுத விற்பனை தவிர சட்டபூர்வமற்ற இந்த ஆயுத உதவி மற்றும் விற்பனை சென்ற இதழில் நான் முன்வைத்த புள்ளி விவரங்களில் அடங்காது. ஜனநாயக நடைமுறைகளைப் பின்பற்றாத நாடுகள் மனித உரிமை மீறல்கள் புரிகிற நாடுகள் ஆகியவற்றிற்கு ஆயுத உதவிகளை செய்யக்கூடாது என அமெரிக்க வெளிநாட்டு உதவிச் சட்டம் மற்றும் (1999ம் ஆண்டு அமெரிக்க சர்வதேச ஆயுத விற்பனை நடத்தை விதி ஆகியன வரைமுறைகளை விதித்துள்ளதாம்) இவை அனைத்தும் ஏட்டோடு சரி, துருக்கி, இந்தோனேசியா, சவூதி, இலங்கை உட்பட மனித உரிமை மீறல்கள் புரிந்த பல நாடுகளுக்கு அமெரிக்கா மட்டுமின்றி இந்தியாவும் இது குறித்து எந்தக் கவலையுமின்றி உதவிகளை செய்துவந்துள்ளன.

இன்னொன்றும் நம் கவனத்திற்குரியது மிகப்பெரிய அளவு ஊழல்கள் நடைபெறும் துறையாகவும் ஆயுத விற்பனை உள்ளது. இத்துடன் இணைந்த தேசப் பாதுகாப்பு மற்றும் இராணுவ இரகசியம் முதலான சொல்லாடல்கள் ஊழலை ஊற்றி வளர்க்கின்றன. மிகப்பெரிய அளவில் குவட்ரோஷி போன்ற இடைத்தரகர்கள் (போபர்ஸ் ஊழல்) இதில் இலாபம் குவிக்கின்றனர். கார்ப்பரேட்கள் நேரடியாகக் களத்தில் இறங்கி யுத்த பீதியை ஏற்படுத்திப் பரப்புவது முடிவெடுக்கும் இடத்தில் உள்ள அரசியல் வாதிகள் மற்றும் இராணுவ சிவில் உயரதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது, எதிரி நாட்டு இராணுவ முன்னேற்பாடுகள் குறித்துப் பொய்யான தகவல்களை பரப்பி போட்டியை ஊக்குவிப்பது, உள்நாட்டு ஊடகங்களுக்கு லஞ்சம் கொடுத்து போருக்கு ஆதரவான கருத்துகளை உருவாக்குவது, கார்ப்பரேட்டுகளுக்கிடையே இரகசிய கூட்டுகளை உருவாக்கி ஆயுதங்களின் விலையை அபரிமிதமாக உயர்த்துவது முதலியன ஆயுத விற்பனையை அதிகரிக்க கார்ப்பரேட்டுகள் மேற்கொள்ளும் உத்திகள்.

இது ஏகாதிபத்திய விரிவாக்க அரசியலுடன் தொடர்புடைய விஷயமாக இருப்பதால் கார்ப்பரேட்டுகளுக்கு மிகப்பெரிய அளவில் மானியங்களை அரசுகள் வழங்குகின்றன. ஆயுத விற்பனை தொடர்பான பன்னாட்டு ஒப்பந்தங்கள் எல்லாவற்றிலும் விதிக்கப்படுகிற நிபந்தனைகள் தேசியப் பாதுகாப்பு என வருகிற போது பொருந்தாது என்கிற பிரிவு சேர்க்கப்படுவது வழக்கமாக உள்ளது. போலந்து அரசிற்கு விமானங்கள் வழங்கியதற்கு லாக்கதீடு நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு பெரிய அளவில் மானியம் வழங்கியது சமீபத்திய எடுத்துக்காட்டு. பல நாடுகளில் உள்ள அமெரிக்க தூதர்களின் முக்கிய பணியே தமது நாட்டிலுள்ள ஆயுத விற்பனை கார்ப்பரேட்டுகளின் முகவர்களாக செயல்படுவதுதான். இந்தியாவில் தற்போதைய அமெரிக்க தூதர் இன்று பதவி விலகியுள்ளார். ஒரு முக்கிய ஆயுத பேரம் ஒன்றில் அமெரிக்க கார்ப்பரேட்டுகளில் ஒன்று பயனடையாமல் போனதே இதற்கு காரணம் எனப் பத்திரிகைகள் எழுதுகின்றன.

2011 செப்டம்பர் 11க்குப் பிறகு அமெரிக்கா பிறநாடுகளுக்கு ஆயுத விற்பனை செய்வது மற்றும் ஆயுத உதவிகளைச் செய்வது வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாக வாஷிங்டனில் உள்ள பாதுகாப்பு தகவல் மையம் கூறுகிறது. மிகப்பெரிய பட்டியல் ஒன்றை இதற்கு ஆதாரமாக வெளியிட்டுள்ள இந்நிறுவனம் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் அமெரிக்காவுக்கு உதவுவதாக வாக்களித்துள்ள நாடுகளுக்கு வேறெப்போதையும் விட அதிக அளவில் ஆயுத விற்பனை செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது எனக் கூறுகிறது. மனித உரிமை மீறல்கள் முதலான அடிப்படையில் ஆயுத விற்பனைக்கு தடை செய்யப்பட்ட நாடுகளின் பட்டியலையும் அமெரிக்கா பெரிதும் திருத்தி அமைத்துள்ளதாகவும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. 2002 பிப்ரவரி 4 தேதி இதற்கான திருத்தங்கள் செய்யப்பட்டன. பயங்கரவாதத்திற்கெதிரான போரில் உதவி செய்த நாடுகளுக்கு இவை இது தொடர்பாக செய்த செலவுகளை ஈடுகட்ட 390 மில்லியன் டாலர்களையும் வேறுசில குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்காக 120 மில்லியன் டாலர்களையும் பிற சட்ட விதிகளின் தடையை மீறி அளிக்க பாதுகாப்பு துறைக்கு ஒப்புதலையும் அமெரிக்கப் பிரதிநிதிகள் அவை அளித்துள்ளது.

திருட்டுத்தனமாக ஆயுதங்களை உள்நாட்டு பயங்கரவாதக் குழுக்களுக்கு அளித்து அதன் மூலம் மூன்றாம் உலக நாட்டு இடதுசாரி அரசுகளைக் கவிழ்க்கும் முயற்சிகளிலும் இந்நாடுகள் ஈடுபடுவதற்கு புரூலியா விவகாரம் தற்போதைய நடைமுறைச் சாட்சியாக உள்ளது. மேற்குவங்க இடதுசாரி அரசை கவிழ்ப்பதற்கு நரசிம்மராவ் அரசு துணைபோகியுள்ளதும் இன்று அம்பலத்திற்கு வந்துள்ளது. ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் ஆக்ஸ்டாம் இன்டர்நேஷனல் சிறு ஆயுதவிற்பனை தொடர்பான சர்வதேச வலைப்பின்னல் முதலான அமைப்புகள் ஆயுத விற்பனைக் கட்டுபாடுகளை ஏற்படுத்துவதற்கான பன்னாட்டு ஆயுத விற்பனை ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் உள்ளன. இதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது அமெரிக்கா. புஷ் அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்தவரை இது தொடர்பான பேச்சு வார்த்தைகளிலே கலந்து கொள்ள மறுத்துவிட்டார். ஒபாமா ஆட்சிக்கு வந்த பின் மாறியுள்ள சூழல்களின் விளைவாக வேறு வழியின்றி சென்ற 2009 அக்டோபர் 15 ல் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளில் அமெரிக்கா கலந்து கொண்டது.

எனினும் அமெரிக்கா சார்பாக கலந்து கொண்ட ஹில்லாரி கிளின்டன் இது தொடர்பான எந்த முடிவும் அனைத்து நாடுகளின் ஒப்புதலுடனேயே நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என்கிற பிரிவை மேற்குறித்த ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும் எனப் பேசினார். அதாவது எந்த ஒரு நாடாவது மறுப்பு தெரித்தால் அந்த முடிவு நடைமுறைக்கு வராது. இது உள்ளிருந்து கெடுக்கும் வேலை என பல நாடுகள் பேசியதன் விளைவாக இறுதியாக ஹில்லாரி இதை வற்புறுத்தவில்லை. 2012க்குள் இத்தகைய ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கும் முயற்சி இன்று உள்ளது. இதற்கென 2010 ஜூலையில் ஒரு தயாரிப்புக் கூட்டமும் நடத்தப்பட்டது. அமெரிக்க ஆயுத விற்பனை கார்ப்பரேட்டுகள் இதற்கெதிராக பெரிய பிரச்சார இயக்கம் ஒன்றையும் நடத்தினர். ஆயுதங்கள் குற்றசம்பவங்களுக்கு பயன்படுத்துமானால் அந்த நாடுகளுக்கு ஆயுதங்களை விற்கக்கூடாது என நிபந்தனை விதித்தால் அது அமெரிக்காவின் இரண்டாம் அரசியல் சட்டத்திற்கு எதிராக இருக்கும். யாராவது ஒருவர் ஒரு துப்பாக்கியை குற்றச் செயலுக்கு பயன்படுத்தினால் அந்த நாடே அதற்கு பொறுப்பு. இது தற்காப்புக்காக ஆயுதம் வைத்திருக்கும் உரிமையை பறிக்கும் எனவும் ஆயுதப் பயன்பாட்டை ஊக்குவிக்கும். தொலைகாட்சி தொடர்கள் தடைசெய்யப்படுதல் என்பது பேச்சுரிமை மற்றும் கருத்துரிமைக்கு எதிராக இருக்கும் எனவும்! கூறி இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திடக்கூடாது என இவர்கள் இயக்கம் நடத்தி வருகின்றனர்.

ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உலக அளவில் பல மூன்றாம் உலக நாடுகள் ஏழ்மையிலும், பஞ்சத்திலும், கடனிலும் அமிழ்த்தப்படுவதற்கு ஆயுத விற்பனையே காரணம். ஆயுத விற்பனைச் சந்தையாக இன்று மூன்றாம் உலக நாடுகளே உள்ளன. இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தனது வரவு செலவு திட்டத்தில் 19 சதவீதத்தை பாதுகாப்புக்காகச் செலவிடுகிறது. பொது நலத்திற்கு வெறும் ஒரு சதம், கல்விக்கு 5 சதத்திற்கும் குறைவே என்பதோடு ஒப்பிட்டுப் பார்த்தபோது தான் இதன் அபத்தம் புரியும். ஆனால் இதை யாரும், எதிர்கட்சிகளும் கூட வலுவாக எதிர்க்கவில்லை. தேச பாதுகாப்பில் அக்கறையில்லை என்கிற கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது என்கிற அச்சமே காரணம்.

தேசபாதுகாப்பு என்பது இராணுவத்தை வலுப்படுத்துவதால் மட்டுமே சாத்தியமாகிவிடுவதில்லை. பகைக்கான அரசியல் தீர்வு ஒன்றின் மூலமே தேசபாதுகாப்பை உறுதி செய்யமுடியும். தேவையற்ற தேசிய வெறி, பேச்சுவார்த்தைகளை நம்பியிராத வல்லரசு வெறி ஆகியவையே போர்களுக்கும், பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்களுக்கும் காரணமாகின்றன. அரசியல் தீர்வு அண்டை நாடுகளுடன் சமாதானம் ,ஆக்கிரமிப்பு படைகளை திரும்பப்பெறுதல் ஆகிய முழக்கங்கள் ஆயுத விற்பனைக்கு கட்டுப்பாட்டுடன் இணைக்கப்படும் போதே அது வெற்றி பெறும். ஆயுத விற்பனையிலும் உலக மேலாதிக்கத்திலும் முன்னிற்கும் அமெரிக்காவை நம்பி பிழைக்கும் அரசுகளை அதிகாரத்திலிருந்து அகற்றுவதொன்றே நமது இன்றைய உடனடிப்பணியாக இருக்க முடியும்.

 

 

முஸ்லிம் கைதிகள் விடுதலை ஒரு குறிப்பு..

நேற்று முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பாக நடந்த ம.ம.கவின் ஆர்பாட்டத்திலும், சி.பி.ஐ கட்சியின் ஆதரவில் உருவாகியுள்ள ‘இன்சாஃப்’ அமைப்பின் அறைக்கூட்டத்திலும் பேசினேன்.

பல்லாயிரம் பேர் திரண்டிருந்த மமக ஆர்பாட்டத்தில் நிறையப் பேர்கள் பேச இருந்ததால மிகச் சுருக்கமாகவும், இன்சாஃப் கூட்டத்தில் நானே சிறப்புரை என்பதால் மிக விரிவாகப் பேசவும் வாய்ப்புக் கிடைத்தது.

நான் பேசியதன் சுருக்கம்:

1. கோவை தொடர்குண்டு வெடிப்பை ஒட்டி ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு , சுமார் ஒன்பதரை ஆண்டுகள் கழித்து அப்துல் நாசர் மதானி உட்பட ஏராளமான பலர் குற்றமர்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டனர். எனினும் அப்போதும் இன்னும் 171 பேர்கள் சிறைகளில் இருந்தனர். அவர்களில் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் மிகச் சிலரே. மற்ற பலரும் அப்பாவிகள். ஆனால் யாருமமிந்த அப்பாவிகள் குறித்துப் பேச இயலாத நிலை. அப்படி பேசினாலும் மெல்லிய குரலில் அப்பாவிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனச் சொல்லத்தான் முடிந்தது. அதுவும் முஸ்லிம்களின் உதடுகளிலிருந்து மட்டுமே அந்தக் கோரிக்கை ஒலித்துக் கொண்டிருந்தது. அந்நிலையில் மூன்று இளைஞர்கள், அப்துல் கய்யூம், நாகூர் இமானி, இப்றாஹீம் எனும் மூன்று இளைஞர்கள், அவர்களும் சிறையிலிருந்து விடுதலை ஆகி இருந்தவர்கள், சிறையில் இருக்கும் முஸ்லிம்கள் படும் துயரங்கள், சக கைதிகளுக்கு அளிக்கப்படும் உரிமைகளும் மறுக்கப்படும் அவலம் ஆகியவற்றை எல்லாம் தொகுத்துக் கொண்டு ஒவ்வொரு தலைவர்களாக அணுகிக் கொண்டிருந்தனர். அவர்களது நியாயமான கோரிக்கையை ஆதரிக்கக் கூடிய என்னைப் போன்றவர்களையும் பார்த்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகூர் நிஜாமுதீன் அவர்கள் அந்த இளைஞர்களுக்குத் துணையாக இருந்தார்.

2. நான் அப்போது அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான இந்திய அளவிலான அமைப்பில் துணைத் தலைவராக இருந்தேன். இது தொடர்பாக ஒரு மாநாடு போடுவதென முடிவு செய்தோம். காவல்துறையின் கடும் எதிர்ப்புகளையும் மீறி, சென்னை ருஷியன் கல்சுரல் சென்டரில் அம்மாநாடு ஜூலை 5, 2008ல் நடந்தது. டெல்லியிலிருந்து எஸ்.ஏ.ஆர்.கிலானி, கல்கத்தாவிலிருந்து அமி்த் பட்டாசார்யா, தமிழகத்தின் மூத்த அரசியல் கைதி தோழர் ஆர்.நல்லகண்ணு, இன்னொரு முக்கிய அரசியல் கைதி, தோழர் தியாகு, இன்னொரு முன்னாள் அரசியல் கைதி தோழர் சுகுமாரன், பார்த்திமா முசாஃபர் எனப் பலரும் அந்தக் கூட்டத்தில் பேசினர். த.மு.முகவின் அப்போதைய பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி கூட்டத்தில் அமர்ந்திருந்ததைப் பார்த்து அவரை வற்புறுத்தி அழைத்துப் பேசச் சொன்னேன். அவரும் மேடையேறி அன்றைய த.மு.மு.க பொதுக் குழுவில் முஸ்லிம் சிறைக்கைதிகள் தொடர்பாகத் தீர்மானம் இயற்றியதைப் பகிர்ந்து கொண்டார்.

3. தொடர்ந்து அப்பாவி முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பாக அனைத்து முஸ்லிம் இயக்கங்குளும் களத்தில் இறங்கின. நூற்றுக்கணக்கான ஆர்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள்… எனினும் பிற கைதிகளுக்கு கிடைத்த மன்னிப்பு, விடுதலை, பிணையில் வெளி வரும் வாய்ப்பு… எதுவும் முஸ்லிம் கைதிகளுக்குக் கிட்டவில்லை. திமுக ஆட்சியில் அண்ணா பிறந்த நாட்களில் சுமார் 1500 பேர்கள் விடுதலை செய்யப்பட்டபோதும் முஸ்லிம் கைதிகள் யாரும் விடுதலை செய்யப்படவில்லை. அதிமுக ஆட்சி பற்றி சொல்லவே வேண்டியதில்லை. இன்றைய தேதியில் இன்னும் 49 முஸ்லிம் கைதிகள் இன்னும் சிறைகளில் வாடுகின்றனர். உயிருக்குப் போராடும் அபுதாஹிர் உட்பட. ஏற்கனவே ஒருவர் சிறையிலேயே இறந்துள்ளார்.

4. இன்னும் கூட முஸ்லிம் கைதிகள் விடுதலை என்பது பொதுக் கோரிக்கையாக உருப்பெறவில்லை. ஏழு தமிழர்கள் விடுதலை எனும் நியாயமான கோரிக்கைகளை எழுப்புகிறவர்கள் கூட இந்த 49 முஸ்லிம் கைதிகளையும் சேர்த்து 56 தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனச் சொல்வதில்லை. ஆனால் முஸ்லிம்கள், இன்று நடந்து கொண்டிருக்கும் ஆர்பாட்டத்திலும் கூட “பேரறிவாளன் உள்ளிட்ட..” என்றுதான் முழங்குகின்றனர். சட்டமன்றத்திலும் ஜவாஹிருல்லாஹ் போன்றவர்கள் எல்லோருடைய விடுதலைக்காகவும் சேர்த்துத்தான் பேசுகின்றனர்.

5. சென்ற இரண்டு ஆண்டுகளுக்கு முன் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் பிரகாஷ் காரட் தலைமையில் ஒரு குழு சென்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் 22 பேர்களின் வரலாற்றைக் காட்டி நாடெங்கிலும் சிஒறையில் அடைப்பட்டுக் கொண்டிருக்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கோரினர். இன்று சிபிஐ சார்பான இன்சாஃப் அமைப்பு இந்தக் கோரிக்கையை எழுப்புகிறது. இப்படி இந்தக் கோரிக்கை பரவலாவது மகிழ்ச்சி.

4.அரசியல் சட்டத்தின் 161 வது பிரிவின்படி சிறை கைதிகளை மன்னித்து விடுதலை செய்வதற்கு மாநிலங்களுக்கு முழு உரிமை உள்ளது. இந்தப் பிரிவின் கீழ் 56 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்றுதான் இன்று கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆனால் அரசுகளும், ஏன் உச்ச நீதி மன்றமும் CrPC 435 வது பிரிவைக் காட்டித்தான் அதை மறுக்கிறது. இந்தப் பிரிவு, வெடி மருந்துச் சட்டம் முதலான மத்திய சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்பட்டோரையும், மத்திய புலனாய்வு நிறுவனகளால் விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப் பட்டவர்களையும் தன்னிச்சையாக விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்குக் கிடையாது என்கிறது. மத்திய அரசுடன் கலந்தாலோசித்தே அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
(435. State Government to act after consultation with Central Government in certain cases.
(1) The powers conferred by sections 432 and 433 upon the State Government to remit or commute a sentence, in any case where the sentence Is for an offence-
(a) which was investigated by the Delhi Special Police Establishment constituted under the Delhi Special Police Establishment Act, 1946 (25 of 1946 ), or by any other agency empowered to make investigation into an offence under any Central Act other than this Code, or
(b) which involved the misappropriation or destruction of, or damage to, any property belonging to the Central Govern- ment, or
1. Ins. by Act 45 of 1978, s. 32 (w. e. f. 18- 12- 1978 ).
(c) which was committed by a person in the service of the Central Government while acting or purporting to act in the discharge of his official duty, shall not be exercised by the State Government except after consultation with the Central Government.)

5. கூட்டாட்சித் தத்துவத்திற்கு முரணான இந்தச் சட்டப் பிரிவு உடன் நீக்கப்பட வேண்டும். மன்னிப்பு என்பதற்கும் செய்த குற்றத்திற்கும் தொடர்பில்லை. செய்த குற்றத்தின் தன்மையைக் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் தண்டனை வழங்கப்படுகிறது. அந்தத் தண்டனை அனுபவித்து முடிந்த பிறகு மன்னிப்பது என்பது அந்த நபரின் வயது, சூழல், இன்று அவர் குடும்பம் உள்ள நிலை, இடைப்பட்ட ஆண்டுகளில் குற்றம் செய்தவர் திருந்தியுள்ள நிலை ஆகியவை கணக்கில் கொள்ளப்பட்டு செய்யப்பட வேண்டிய முடிவு அது. அதனால்தான் ஜனநாயக நாடுகளில் இந்த அதிகாரம் நீதிமன்றங்களுக்கு இல்லாமல் குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோருக்குத் தரப்பட்டுள்ளது. இந்தக் காரணிகளை ஆராய்ந்து மன்னிப்பு அளிக்கும் தகுதி அருகில் உள்ள மாநில அரசுக்குத்தான் உண்டே ஒழிய தொலைவில் உள்ள மத்திய அரசுக்குக் கிடையாது.

சிறைக் கைதிகள் விடுதலைக்காகப் போராடும் நாம் எல்லோரும் இணையாக இன்னொரு பக்கம் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக உள்ள CrPC 435ம் பிரிவை நீக்கவும் போராட வேண்டும். அரசியல் சட்டமே அனைத்து இதரச் சட்டங்களுக்கும் தாய். அதற்கு முரணான இதர சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும்.

 

 

 

பிப் 08, 2016

 

இந்தத் தேர்தலில் (2016) முஸ்லிம்கள்…

வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழka முஸ்லிம்களின் மத்தியில் செயல்படும் முக்கிய அரசியல் இயக்கங்களான முஸ்லிம் லீக், த.மு.முக (ம.ம.க), SDPI ஆகிய மூன்றும் திமுக கூட்டணியில் உள்ளன. தேர்தலில் பங்கேற்காத இன்னொரு முக்கிய அமைப்பான தவ்ஹீத் ஜமாத் தன் ஆதரவாளர்களை தங்களின் விருப்பம்போல வாக்களிக்கலாம் எனச் சொல்லியுள்ளது.

ஆக இம்முறை தமிழக முஸ்லிம்களின் வாக்குகள் பெரும்பான்மையும் சிந்தாமல் சிதறாமல் திமுக கூட்டணிக்குச் செல்கிறது.

இதை நான் மனதார வரவேற்கிறேன்.

முஸ்லிம்கள் போன்ற இன்றைய மதவாத பாசிசத்தால் இலக்காக்கப்படுகிற மக்கட் பிரிவினரிடம் இத்தகைய ஒற்றுமை அவசியம். எப்படியாவது ஆளுக்கொரு பிரிவை வளைத்துப் போட்டு முஸ்லிம் வாக்குகளைப் பிரித்துவிடலாம் என்கிற எண்ணம் பெரிய கட்சிகளுக்கு வந்துவிடக் கூடாது. ஆனால் அப்படித்தான் இதுவரை நடந்து வந்துள்ளது. ஆனால் இம்முறை அப்படி நாங்கள் பிருந்துபோய்விட மாட்டோம் என்பதை முஸ்லிம் அம்மைப்புகள் வெளிப்படுத்திவிட்டன. ஆணவத்தின் உருவமான ஜெயலலிதா உண்மையில் அதிர்ச்சி அடைந்திருக்கக் கூடும். அவருக்கு ஒரு நல்ல பாடம் இதன் மூலம் கற்பிக்கப்பட்டுவிட்டது.

மதமாற்றத் தடைச் சட்டம் இயற்ற முயன்றது, மோடியுடன் தனிப்பட்ட முறையில் நெருக்கமான உறவைப் பேணுவது. தங்களின் இயற்கைக் கூட்டாளி என ஒரு முறை அத்வானியால் பாராட்டப்பட்டது என முஸ்லிம்கள் அதிமுகவிடம் இருந்து விலகி நிற்கப் பல நியாயங்கள் உண்டு.

அதே போல ஒப்பீட்டளவில் அதிமுகவைக் காட்டிலும் திமுகவுடன் நெருங்கி நிற்பதற்கும் பாரம்பரியமாகப் பல நியாயங்கள் உண்டு. உ்ண்மையில் கருணாநிதியின் நம்பிக்கைத் துரோகம்தான் முஸ்லிம்கள் முழுமையாகத் தம் ஆதரவை முந்திய தேர்தல்களில் திமுகவுக்கு அளிக்க இயலாமற் போனதற்கான அடிப்படையாக இருந்தது. கோவைக் கலவரங்களின் போது அதிகாரத்தில் இருந்த அவர் நடந்து கொண்ட முறை, சிறைக் கைதிகள் விடுதலை விஷயத்தில் நடந்து கொண்டது முதலியன சில எடுத்துக்காட்டுகள். பாபர் மசூதி இடிப்பிலும் கூட மிகவும் வன்மையான எதிர்ப்பை திமுக செய்யவில்லை. “ஏன் சிந்தாதிரிப் பேட்டையில் ஒரு கண்டனக் கூட்டம் போட்டோமே..” என ஒருமுறை கருணாநிதி அதை ஒரு சாதனையாகச் சொன்னது நினைவுக்கு வருகிறது.

ஆனால் இதை எல்லாம் மறந்து இன்று முஸ்லி ம்கள் முழுமையாக திமுகவுடன் நிற்கத் துணிந்தது இன்றைய கால நிலையில் சரியான முடிவுதான்,அகில இந்திய அளவில் மதச்சார்பின்மையை முன்நிறு்த்தி இயங்கும் காங்கிரசும் இக்கூட்டணியில் இருக்கும் நிலையில் முஸ்லிகள் இங்கு நிற்பதே சரியானது.

திமுக இதை உணர்ந்து எதிர்காலத்தில் முஸ்லிம்கள் விஷயத்தில் நேர்மையாகவும், உண்மையாகவும் நடந்து கொள்ளூம் என எதிர்பார்ப்போம்.

இந்துத்துவ எதிர்ப்பில் மற்றவர்களைக் காட்டிலும் கம்யூனிஸ்டுகள் உண்மையாக இருந்த போதிலும் ஏன் இன்று முஸ்லிம்கள் அவர்களோடு இல்லை? இதற்கும் பாரம்பரியமாகப் பல காரணங்கள் உண்டு.

கம்யூனிஸ்டுகள் வலுவாக உள்ள கேரளம், மே.வங்கம் ஆகிய இரு மாநிலங்களிலும் முஸ்லிம்கள் அதிக அளவில் உள்ளனர். ஆனால் முப்புது ஆண்டுகளுக்கும் மேல் இடதுசாரிகள் ஆண்டும் மே.வங்கத்தில் உள்ள முஸ்லிம்களின் நிலை படு மோசமாக உள்ளதை சச்சார் அறிகை சுட்டிக் காட்டியுள்ளது. இன்று முஸ்லிம்கள் அங்கு மம்தாவுடன் நிற்கின்றனர். கேரளத்திலும் SDPI யும் இடதுசாரிகளும் எதிர் எதிராக உள்ளனர். பாபர் மசூதி இடிப்பு போன்ற நிகழ்விலும் கூட கம்யூனிஸ்டுகள் இன்னும் வலிமையாகவும் உண்மையாகவும் முஸ்லிம்களோடு நின்றிருக்க வேண்டும். போராட்டங்கள் நடத்தி இருக்க வேண்டும். பாபர் மசூதி இருக்கும் ஃபைசாபாத் நாடாளுமன்றத் தொகுதி பாரம்பரியமாக சிபிஐ வெற்றி பெற்ற தொகுதி என்பது நினைவிற்குரியது. இன்று அங்கும் அது தோல்வியைத் தழுவியுள்ளது.

எப்படி இன்று கம்யூனிஸ்டுகள் விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோருக்குச் சங்கம் அமைத்தால் மட்டும் போதாது, தீன்டாமை ஒழிப்பிற்கும் சங்கம் வைத்து தலித் மக்களுக்காகவும் நிற்க வேண்டும் என முடிவெடுத்துச் செயல்படுகிறார்களோ அதே போல சிறுபான்மை மக்களுக்காகவும் இயக்கங்கள், வெகு ஜன அமைப்புகள் ஆகியவற்றை உருவாக்கி போராடி அவர்களின் நம்பிக்கையைக் கம்யூனிஸ்டுகள் பெற்றாக வேண்டும்.

விவசாயிகள் + தொழிலாளிகள்+ தலித்கள்+ சிறுபான்மையினர் என்பதாக இந்த இணைவு எதிர்காலத்தில் உருவாக்கப்பட வேண்டும்.

சரி, தொடங்கிய இடத்திற்கு வருகிறேன்.

தமிழக முஸ்லிம்கள் தங்களுக்குள் பிளவுகள் ஏதும் இன்றி முழுமையாக இந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரே கூட்டணியில் இணைந்து நி்ற்பதை வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன்

மார்ச் 24, 2016

 

சாலைக்கடை பாப்பாநாடு ஆன கதை

{‘சாதி மோதல்களும் இலக்கியப் பதிவுகளும்’ எனும் தலைப்பில் தம்பி மதியரசன் மெற்கொண்ட முனைவர் ஆய்வு இப்போது நூலாக (காவ்யா வெளியீடு) வந்துள்ளது. அதற்கு எழுதிய முன்னுரை இது. வெறும் முன்னுரையாக இல்லாமல் கடந்த 75 ஆண்டுகளில் சாதி ஓர்மை கிராமங்களில் எவ்வாறு உருக்கொண்டுள்ளது, அதன் பௌதிக வெளிப்பாடுகள் எவ்வாறுஉள்ளன என்பது குறித்த ஒரு case study ஆக நினைவிலிருந்து தொகுக்கப்பட்ட எனது கிராமத்தின் கதை இது. அவசியம் வாசியுங்கள்}
ஒன்று
மதியரசனும் நானும் ஒரே ஊர்க்காரர்கள். தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை சாலையில் பட்டுக்கோட்டைக்கு முன்னதாக ஒரு 12 கி.மீ தொலைவில் உள்ள சாலை ஓரத்தில் அமைந்துள்ள ‘பாப்பாநாடு’ தான் எங்கள் ஊர். எனது பால்ய காலம், 9 வயதிலிருந்து 27 வயது வரை, கிட்டத்தட்ட 18 ஆண்டுஅள் இங்குதான் கழிந்தன. எனினும் இதைச் சொந்த ஊர் எனச் சொல்லிக் கொள்ள எனக்கு உரிமை உண்டா என்பது ஐயத்திற்குரிய ஒன்றுதான். சொந்த ஊர் என்பது சாதி, நிலம் ஆகியவற்றுடன் பிரிக்க இயலாது பிணைந்த ஒன்று. எனக்கு அப்படியான ஒரு உறவு இங்கு இல்லை. என் தந்தை மலேயாவில் தலைக்கு விலை கூறப்பட்டுப் பின் நாடு கடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னணியில் இங்கு வந்தவர். ஒரத்தநாடு தாலுக்காவில் உள்ள ‘வெள்ளூர் – மேலப்பத்தை’ என்னும் கிராமத்தில் வசித்து வந்த தன் வயது முதிர்ந்த பெற்றோருக்குச் சொந்தமான பத்து மா நிலத்தை விற்றுவிட்டு பாப்பாநாட்டில் ஒரு சோடா கம்பெனியைத் தொடங்கியபோது எனக்கு வயது ஒன்பது. இப்போது இந்த ஊருடன் என்னைப் பிணைத்திருப்பது என் பெற்றோர்கள் மற்றும் தாத்தா, அப்பாயி ஆகியோரின் கல்லறைகளும் இங்கு உள்ளன என்கிற ஒன்றுதான். அதுவும் பத்தாண்டுகளாகக் கல்லறைத் திருவிழாவுக்கும் அங்கு நான் போவதில்லை.
ஐந்தாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பாப்பாநாட்டுக் கடைத்தெருவில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில்தான் படித்தேன். அப்போது எட்டாம் வகுப்பில் ESLC என்றொரு அரசுத் தேர்வு சில பள்ளிகளில் உண்டு. அதை முடித்துப் பின் ஒரத்தநாடு அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்தேன். பாப்பாநாட்டில் அப்போது எட்டாம் வகுப்பு வரைதான் படிக்கலாம்.
பாப்பாநாடு என்பது அந்த ஊரின் பூர்வ பெயர் அல்ல. ‘சாலைக்கடை’ என்பதுதான் அதன் பெயர். என் அப்பாயி (அப்பாவின் அம்மா) சாகும் வரை “சாலக்கடை” என்றுதான் சொல்வார். வருவாய்த்துறை ஆவணங்களில் அதன் பெயர் ‘ஆவிட நல்ல விஜயபுரம்’. ‘பாப்பாநாடு’ என்பது மத்திய கால நிர்வாக முறையான ‘நாடு’, ‘பெரிய நாடு’ என்பன போன்ற அமைப்பொன்றின் எச்ச சொச்சமாக இருக்கலாம். “பாப்பாநாடு பதினெட்டு கிராமம்’ என்கிற சொலவடை அங்கு உண்டு. இந்தப் பதெனெட்டு கிராமங்களும் ‘கள்ளர்’ சாதியினர் பெரும்பான்மையாக வசிப்பவை. இந்தக் கிராமங்களின் பொதுக் கோவிலாக பாப்பாநாட்டுக்கு மேற்கே சுமார் இரண்டு கி.மீ தொலைவில் உள்ள திருமேனி அம்மன் கோவில் உள்ளது. இந்தப் பதினெட்டு கிராமத்தினரும் இணைந்து ஆண்டுதோறும் திருமேனி அம்மனுக்கு திருவிழா எடுப்பர். பத்து நாட்களுக்கு மேல் மண்டகப்படிகள், இரவில் புகழ் பெற்ற நாடக ‘செட்’ களின் நாடகங்கள், வாண வேடிக்கை எல்லாம் நடக்கும். இறுதி நாள் பல்லக்குத் திருவிழா அன்று திருமேனி அம்மன் பாப்பாநாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு, கணக்கன் குளத்தருகில் உள்ள ஊர்ச் சாவடியில் வைக்கப்படுவார். நாள் முழுவதும் வழிபாடுகள் மேற்கொண்டு இரவில் மீண்டும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எடுத்துச் செல்லப்படுவார். இந்தத் திருவிழாவைத் திட்டமிட்டு நடத்தும் உரிமை, பாரம்பரியமாக அக்கிராமங்களின் கள்ளர் சாதியினருக்கே உண்டு.
இந்தக் கிராமங்கள் அனைத்தும் பழைய தஞ்சை மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் அமைந்தவை. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் ஆட்சியில் கல்லணைக் கால்வாய் வெட்டப்படும் வரை ஆற்றுப் பாசனம் இல்லாத வரண்ட பூமிகள். தஞ்சைக்குக் கிழக்கே உள்ள உளூர் (கீழ் வேங்கை நாடு), ஒரத்த நாடு, பட்டுக்கோட்டை, மதுக்கூர், அறந்தாங்கி முதலான பகுதிகளில் ரயத்துவாரி முறை அமுலாக்கப்படவில்லை. இனாம்தாரி மற்றும் ஜமீந்தாரி முறைகளே நடைமுறையிலிருந்தன. பாப்பாநாடு, மதுக்கூர் முதலியன அப்படியான ஜமீன்தாரி பகுதிகள். கள்ளர் சாதியினரே இங்கு ஜமீன்தார்கள். அப்போதைய பாப்பாநாடு ஜமீன்தார் பூண்டி வாண்டையாரின் மருமகன். பாப்பாநாட்டுக்குக் கிழக்கே சுமார் 2 கிமீ தொலைவில் உள்ள வெளுவாடி கிராமத்தில் இந்த ஜமீந்தாருக்கு ஒரு ‘அரண்மனை’ உண்டு. இப்போதும் இருக்கும் என நினைக்கிறேன்.
பாப்பாநாடு அதன் பூர்வீகத்தில் ஒரு கள்ளர் கிராமம் கிடையாது. அங்கு பூர்வீகமாக வாழ்ந்தவர்கள் முத்தரையர்கள், சேர்வைகள், வலையர்கள் என்றெல்லாம் அழைக்கப்படும் சாதியினரும் தலித்களும்தான். பெரும்பான்மையாக உள்ள முத்தரையர் சாதியினர் அங்கு அந்தப் பெயரில் அடையாளம் காணப்பட்டதில்லை. ‘அம்பலகாரர்கள்’ என்றே அவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களின் பூர்வ தொழில் உள்ளக மீன்பிடிப்பு, வேட்டை (inland fishing முதலியன). தலித்கள் அங்கு இரண்டாவது பெரிய சாதியினர். ஊருக்குத் தெற்காக, சாலைக்கு மேற்புறம் உள்ளது அவர்களின் சங்கரன்தெரு.
தஞ்சாவூர் பட்டுகோட்டை சாலை என்பது மராட்டிய மன்னர் காலத்திலேயே ஒரு முக்கிய போக்குவரத்துப் பாதையாக இருந்திருக்க வேண்டும். இந்தப் பாதையில்தான் அன்னா சத்திரம், முத்தம்பாள் சத்திரம், ராஜாமடம் சத்திரம் முதலானவை மராட்டிய மன்னர் காலத்தில் செயல்பட்டிருந்தன. திருவையாறு, ஒரத்தநாடு, ராஜாமடம் முதலான ஊர்களில் இருந்த இந்த மராட்டிய காலச் சத்திரங்கள் பின்னர் அரசு பள்ளிகள், கல்லூரி, மற்றும் மாணவர் விடுதிகளாக ஆக்கப்பட்டன. என் தந்தை ராஜாமடம் சத்திரம் விடுதியில்தான் படித்திருகிறார். நான் ஒரத்தநாடு சத்திரத்தில் இயங்கிய அரசுப் பள்ளியில்தான் படித்தேன்.
எனினும் பஸ் போக்குவரத்து தொடங்கியபோது சுற்றியுள்ள கள்ளர் கிராமங்களில் இருப்போர் வந்து பஸ் ஏறும் முக்கிய சந்தியாக பாப்பாநாடு ஆகியது. எனினும் ‘பாப்பாநாடு’ என்கிற பெயரில் ஊர் ஏதும் இல்லாததால் அது அப்போது சாலைக்கடை என்றே அழைக்கப்பட்டது. முக்கிய பஸ் நிறுத்தம் என்பதால் அங்கு சாலையோரத்தில் கடைகள் முளைத்ததால் அந்தப் பெயர். எனினும் பின்னாளில் அந்தப் பெயர் மறக்கப்பட்டு அது பாப்பாநாடு ஆகியபோது ‘பாப்பாநாடு’ என்கிற ‘நாடு’ அடையாளத்துடன் கூடிய சாதி அடையாளமும் அதனுடன் சேர்ந்தது.
சாலையோரத்தில் கடைகள் உருவான போது பாரம்பரிய வணிகச் சாதியினரான கோமுட்டிச் செட்டியார், நாட்டுக்கோட்டைச் செட்டியார், முஸ்லிம்கள் ஆகியோர் அங்கு இடம் பெயர்ந்து கடைகள் அமைத்தனர். அங்கு. நெல் வணிகம், உணவு விடுதிகள், இறைச்சிக்கடைகள், துணிக்கடைகள், பலசரக்குக் கடைகள் முதலியன இவர்கள் வசமே இருந்தன. இதுவரை சொல்லப்பட்டவர்கள் தவிர பாரம்பரியமாக இருந்தவர்களுள் ஒரு வண்ணார், ஒரு முடி திருத்துவோர், ஒரு பண்டாரம், ஒரு குருக்கள், ஓரு கருணீகர் வகுப்பைச் சேர்ந்த கணக்கர், ஒரு பார்ப்பன மணியக்காரர், தூய்மைப் பணிக்கான ஒரு அருந்ததியர் ஆகியோரது குடும்பங்களும் இருந்தன. இரண்டு கிறிஸ்தவ நாடார் குடும்பங்களும் அங்கிருந்தன. அவர்கள் எப்போது வந்தார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் அங்குள்ள இந்து ஆலய வழிபாட்டிற்கு பூ கொண்டு சென்று கொடுக்கும் கடமை அவர்களுக்கு இருந்ததாகச் சொல்லப்பட்டது. மலையாளத்தார் ஒருவரது தேநீர்க்கடையும் அங்கிருந்தது. பாரம்பரியமான கள்ளர் குடும்பங்கள் அங்கு மிக மிகக் குறைவு. குறவர் சமூகத்தைச் சேர்ந்த சுந்தரம் டாக்டர்தான் அங்கு முக்கிய வைத்தியர். அருகிலுள்ள ஆம்பலாப்பட்டு அவரது சொந்த ஊர்.
எனக்கு விவரம் தெரிந்த காலத்தில் பாப்பாநாட்டுப் பஞ்சாயத்துத் தலைவராக குறைந்த பட்சம் இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் கோவிந்தச் செட்டியார். இவர் மிக மிகச் சிறுபான்மையான கோமுட்டிச் செட்டியார் என்கிற பிரிவினர். பலசரக்குக்கடை முதலாளி. அதன் பின் தொடர்ந்து பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அந்த ஊரின் பெரும்பான்மைச் சாதியினரான அம்பலக்காரர் வகுப்பைச் சேர்ந்த வீராசாமி அம்பலம் அவர்கள். அதன் பின் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சாதியை சேர்ந்த நண்பர் நாடிமுத்து அவர்களும் அவர் சகோதரர் கதிரேசன் செட்டியாரும் சிலமுறை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த ஐந்தாண்டுகளாக அங்கு தலைவராக உள்ளவர் எனது இளமைக்கால நண்பர்களில் ஒருவரும் , ஓய்வு பெற்ற ஆசிரியருமான காளிமுத்து அவர்கள். இவர் பாப்பாநாட்டை ஒட்டியுள்ள கள்ளர் கிராமமான சின்னக்குமுளையைச் சேர்ந்த கள்ளர் சாதியினர்.
இந்த இடைக்காலத்தில் முன்னாள் சாலைக் கடையான இந்நாள் பாப்பாநாட்டில் ஏற்பட்ட சில மாற்றங்கள் குறிப்பிடத் தக்கன சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கள்ளர்கள் சாலையோர மையமான பாப்பாநாட்டில் குடியேறத் தொடங்கினர். அவர்களில் வசதி மிக்கோர் தமது எல்லாவிதமான செல்வாக்குகளையும் அதிகாரங்களையும் பயன்படுத்தி அங்கு குடியேறினர். நகர்ப்புற முதலீடுகளிலும் கவனம் செலுத்தினர். அவர்களே இப்போது அங்கு ஆதிக்கம் வகிக்கும் முக்கிய பிரிவினராக ஆயினர். ‘தங்களது’ கிராமத்தில் தங்களது சாதியினரே தலைவராக வேண்டும் என இம்முறை அவர்களது சாதியினர் ஒருவர் பஞ்சாயத்துத் தலைவர் ஆக்கப்பட்டுள்ளார். இனி அது தொடரும் என நம்புகிறேன்.
இந்த நிலை இன்று அரசியல் உள்ளிட்ட எல்லா அம்சங்களிலும் அங்கு எதிரொளிப்பதையும் காணலாம். திமுக பெரு வீச்சுடன் வளர்ந்த காலத்தில் எனக்குத் தெரிந்து பாப்பாநாட்டில் திமுக என்றால் சாலையோரத்தில் தேநீர்க்கடை வைத்திருந்த அழகரசன், மடத்திவாசலைச் சேர்ந்த பண்டாரம் சாதியினரான துரைஅரசன், சங்கரன் தெருவைச் சேர்ந்த பொன்னுசாமி எனும் தலித் பெரியவர் ஆகியோர் தான். ஆனால் 1967 தேர்தலில் அந்தத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றவர் பெரியவர் எல்.கணேசன் அவர்கள். இவர் கண்ணந்தங்குடியைச் சேர்ந்த கள்ளர் சாதியர். அழகரசனின் பிள்ளைகள் இப்போதும் தேநீர்க்கடைதான் வைத்திருப்பதாக அறிகிறேன். துரைஅரசனின் குடும்பத்தார் இப்போது என்ன ஆனார்கள் எனத் தெரியவில்லை.
இரண்டு
மதியரசனின் நூலுக்கு முன்னுரை எனச் சொல்லி ஏதோ கதை அளக்கிறேன் என உங்களுக்குத் தோன்றலாம். அப்படியல்ல. சாதி ஓர்மையில் ஒரு மிகப் பெரிய அளவு மாற்றமும் பண்பு மாற்றமும் ஏற்பட்ட ஒரு காலகட்டத்தைப் (1948 -2004) பின்னணியாக வைத்து இந்த ஆய்வைச் செய்துள்ளார் மதியரசன். இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டுக் கிராமங்களின் சாதிய ஓர்மையிலும் பங்கேற்புகளிலும் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த ஆய்விற்கு பாப்பாநாடு கிராமம் ஒரு அற்புதமான களமாக இருக்கும் என நம்புகிறேன். பாப்பாநாடு கிராமத்தை முன்வைத்து நவீன ஆய்வு முறைகளின் அடியாக விரிவான தரவுகளைச் சேகரித்து சமூகவியல் ஆய்வொன்றை ஆர்வமுள்ள தனி நபர்களோ, நிறுவனங்களோ செய்தால் மிக மிகப் பயனுடையதாக இருக்கும். அந்த வகையில் நினைவிலிருந்தவற்றிலிருந்து இவற்றை இங்கே பதிவு செய்துள்ளேன். இந்த ஆய்வு நூல் கவனம் குவிக்கும் புள்ளிகளைப் புரிந்து கொள்வதற்கும் இது உதவக் கூடும்.
பெற்றோர் மறைவுக்குப் பின் நான் குடும்பத்தோடு எல்லாத் தொடர்புகளையும் அறுத்துக்கொண்டு பாப்பாநாட்டை விட்டு நான் வெளியேறிய பின் அங்கு பிறந்து வளர்ந்தவர் மதியரசன். அவர் மாநிலக் கல்லூரியில் ஆய்வு மாணவராக இருந்தபோது நான் அங்கு ஆசிரியனாகப் பணியாற்றியபோதும் அவர் வேறு துறை என்பதால் பழக்கமில்லை.
நான் பாப்பாநாட்டுப் பள்ளியில் மாணவனாக இருந்தபோது மதியரசனின் சங்கரன் தெருவில் நடந்த ஏதோ ஒரு விழா நினைவில் நிழலாடுகிறது. என்ன நிகழ்ச்சி என நினைவில்லை, அப்போது அம்பேத்கர் விழாக்கள் எல்லாம் பெரிதாகக் கொண்டாடப் படுவதில்லை. எனினும் ஏதோ தீண்டாமை ஒழிப்பு தொடர்பான அரசு நிகழ்ச்சி அது. அதனால்தான் அது சங்கரன் தெருவில் நடைபெற்றது. பாப்பாநாடு பள்ளியில் நான் படித்தபோது சங்கரன் தெருவைச் சேர்ந்த இரண்டு தலித் ஆசிரியர்கள் அங்கு பணியாற்றினர். ஒருவர் கைத்தொழில் ஆசிரியர் அப்பாவு வாத்தியார். பாய்முடைதல் அங்கு கற்பிக்கப்பட்ட கைத்தொழில். ஆனால் அது அங்கு அப்படி ஒன்றும் சீரியசாகச் சொல்லிக் கொடுக்கப்பட்டதில்லை. யாரேனும் ஆசிரியர்கள் வராதபோது அந்த வகுப்புக்கு அனுப்பப்படும் ஆசிரியராகத்தான் அப்பாவு வாத்தியார் இருந்தார். “கள்ளத் தோணி கதை சொல்லுங்க சார்..” என ‘கோரசாக’ எல்லோரும் ஒலிப்போம். அவரும் சலிக்காமல் தான் சின்ன வயதில் கள்ளத் தோணியில் இலங்கை சென்று வந்த கதையைச் சொல்வார். நாங்களும் அலுக்காமல் திரும்பத் திரும்பக் கேட்போம். இன்னொருவர் முனுசாமி வாத்தியார். சங்கரன்தெருவில் நடந்த அந்த நிகழ்ச்சியில் அவர் என்.எஸ்.கிருஷ்ணனின் ‘கிந்தனார்’ நாடகத்தை அரங்கேற்றினார். நான் அதில் சின்ன வயது கிந்தனாக நடித்தேன். பெரிய வயது கிந்தன் முனுசாமி சார்.
என் பள்ளியில் அப்போதிருந்த இன்னொரு தலித் ஆசிரியர் சுப்பிரமணியம் சார். அப்பாவின் நண்பர். அருந்ததியர் வகுப்பினர். பூதலூர்க்காரர். மிகச் சிறப்பாகக் கணக்குச் சொல்லிக் கொடுப்பார் என அவருக்குப் பெயர். தலைமை ஆசிரியர் ரத்தின வாண்டையார். அருகிலுள்ள கரம்பயம் கிராமத்தைச் சேர்ந்த நிலச்சுவான்தார். கண்டிப்பு மிகுந்த தலைமை ஆசிரியர் எனப் பெயர் பெற்றவர். உளூரைச் சேர்ந்த குப்புசாமி மாலையிட்டார் அவர் மனைவி மாணிக்கத்தம்மாள் டீச்சர் இருவரும் அங்கு பணியாற்றினர். அவர்கள் பிள்ளைகள் எல்லோரும் என் இளமைக் கால நண்பர்கள். இன்னொரு ஆசிரியர் இராமநாதன் பார்ப்பனர். ஸ்டெல்லா டீச்சரும் இன்னொருவரும் கிறிஸ்தவர்கள். எனது வகுப்பாசிரியர் யோகநாதராவ் ஒரத்தநாட்டிலிருந்து பஸ்சில் வருவார். எல்லோரும் அற்புதமான மனிதர்கள். சிறந்த ஆசிரியர்கள். இருந்த போதிலும் வாண்டையார் அவர்களுக்கும் மாலையிட்டார் அவர்களுக்கும் சிறப்பு மரியாதைகள அங்கிருந்தது. ஓய்வு பெற்ற பின்னரும் கூட மாலையிட்டார் அவர்கள் பள்ளி வகுப்பறை ஒன்றிலேயே தங்க அனுமதிக்கப்பட்டார்.
சாலக்கடை பாப்பாநாடு ஆன கதைச் சுருக்கம் இதுதான்.
சங்கரன்தெருவிலிருந்து இப்போது மதியரசனையும் சேர்த்து மூன்று முனைவர் பட்டதாரிகள் உருவாகியுள்ளனர்; அவர்கள் மூவரும் நல்ல பணிகளிலும் உள்ளனர் என்பதை அறியும்போது மனம் நெகிழ்கிறது.
மூன்று
‘தமிழகத்தில் ஒடுக்கப்பட்டோர் மீதான வன்முறைகளும் இலக்கியப் பதிவுகளும்’ என்பது மதியரசனின் ஆய்வுத் தலைப்பு. ‘ஒடுக்கப்பட்டோர் மீதான வன்முறைகள்’ என்பதைப் பொறுத்தமாட்டில் 1948 தொடங்கி 2004 வரை உள்ள சாதி மோதல்கள் பலவும் ஆய்வில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. ‘இலக்கியப் பதிவுகள்’ என்பதைப் பொறுத்தமட்டில் 1993 தொடங்கி 2004 வரையான பதிவுகள்தான் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. அதிலும் கூட 2000 க்குப் பிற்பட்ட பதிவுகள்தான் பெரும்பாலும் உள்ளன. இதை நான் ஆய்வாளரின் குறையாகச் சொல்லவில்லை.
அதுதான் எதார்த்தம். சாதிய ஒடுக்குமுறைகள், அவற்றுக்கெதிரான பதிவுகள் என்பன காலங் காலமாக இருந்து வந்த போதிலும் அவை குறித்த இலக்கியப் பதிவுகள் சொற்பமாகவே உள்ளன. முற்றிலும் இல்லை என்று கூடச் சொல்லலாம். 90 களுக்குப் பின்தான் அப்படியான பதிவுகள் இலக்கியப் படைப்புகளின் கருப்பொருட்களாயின. முன்னதாக அப்படி இல்லாமற் போனதற்குக் காரணம் இலக்கியத்தின் பாடுபொருளாக நம் இலக்கணங்கள் வகுத்தவற்றில் பாடப்படும் தகுதி உடையனவாக சாதிப் பிரச்சினைகள் அங்கீகரிக்கப்பட்டதில்லை என்பதுதான். “இழிசனர் வழக்குக்கெல்லாம் நூல் செய்யின் இலக்கணமெல்லாம் எல்லைப்படாது இறந்தோடும்” எனப் பேராசிரியர் “முனைவன் கண்டது முதனூலாகும்..” எனும் தொல்காப்பியச் சூத்திரத்திற்கு (649) உரை எழுதியதை நாம் மறந்துவிட இயலாது.
இந்த நிலை 1990 களில் மாற்றம் காணத் தொடங்குகிறது. தலித் இலக்கியம், தலித் அரசியல் ஆகியன குறித்து இங்கு உருவான பிரக்ஞையும், விவாதங்களும், வெளிவந்த மொழியாக்கங்களும், இலக்கிய அமைப்புகளும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலக அளவில் சோவியத் வீழ்ச்சிக்குப் பின் புதிய வீச்சுடன் மெலெழுந்த அடையாள அரசியல் இந்தியாவில் தலித் அரசியலாக வெளிப்போந்தது. இலக்கிய வெளியில் அது தலித் இலக்கியமாக வெளிப்பட்டது. அடையாள அரசியலின் பலங்களோடு மட்டுமின்றி பலவீனங்களோடும் இவை வெளிப்போந்தன என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. அந்த வகையில் 90களின் பிற்பகுதியில்தான் சாதி மோதல்கள் இலக்கியப் பதிவுகளில் இடம்பெறலாயின.
எனினும் இலக்கணக் கெடுபிடிகளையெல்லாம் மீறியும், தொகுப்பாசிரியர்களின் கவனத்தையெல்லாம் தாண்டியும் தமிழ்ப் பாரம்பரியத்தில் சாதி ஒதுக்கல்கள் குறித்த பதிவுகள் மிகச் சிலவேனும் அடையாளம் காணக் கூடியவையாக உள்ளன (பார்க்க: பொ.வேல்சாமி, அ.மார்க்ஸ், ‘தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் சாதி எதிர்ப்புக் குரல்’, நிறப்பிரிகை இலக்கிய இணைப்பு, 1994). ‘இழிபிறப்பாளன்’, ‘இழிசினர்’, ‘புலையன்’, ’புலைத்தி’, ‘துடியன்’ முதலான சொல்லாட்சிகள் இழிவு தொனிக்கும் விளிப்புடன் சங்கப் புறப்பாடல்களில் (புறம், 17:5-6; 289:8-1; 287:1-2; 82:3-4; 311:1-2; 259:5-6) மலிந்து கிடக்கின்றன.
பார்ப்பன – வேளாள மயமாதல், சடங்காச்சாரங்களைப் புகுத்துதல், பழங்குடியினரும் அவர்களின் வழமைகளும் ஓரங்கட்டப்படுதல், பழங்குடியினரின் உணவுமுறை உட்பட எல்லாம் கீழானவையாக ஆக்கப்படுதல் ஆகியவற்றுக்கு எதிரான ஒரு ஆதிக்க எதிர்ப்புக் குரலாக புறநானூறின் அந்தப் புகழ் பெற்ற 335 ம் பாடலை (அடலருந் துப்பின்….. துடியன், பாணன், பறையன், கடம்பன் என இந்நான் கல்லது குடியும் இல்லை….) வாசிக்க இயலும்.
ஆசாரம் மிகுந்த பார்ப்பனர்களைக் களிமகன்களினூடாகக் கேலி செய்வது என்பதை நாம் காப்பியங்களிலும் காண முடிகிறது (மணிமேகலை, காதை 3, வரிகள் 92-103: பெருங்கதை, உஞ்சைக் காண்டம், வரிகள் 92-98).
மு. அருணாசலம் அவர்களின் 15ம் நூ. தமிழ் இலக்கிய வரலாற்றில் காணப்படும் உத்திரநல்லூர் நங்கை எனும் பறையர் சாதியைச் சேர்ந்த மாடுமேய்க்கும் பெண்ணுக்கும் வேதம் ஓதும் பார்ப்பன இளைஞன் ஒருவனுக்கும் ஏற்பட்ட காதலைக் கண்டித்துச் சேரிக்குத் தீயூட்ட வந்த பாய்ச்சலூர் கிராமத்தாரை நோக்கி நங்கை பாடியதாகக் கூறப்படும் 9 விருத்தப் பாடல்கள் இடம்பெறுகின்றன. “ஓதிய நூலும் பொய்யே உடலுயிர்தானும் பொய்யே / சாதியும் ஒன்றேயல்லால் சகலமும் வேறதாமோ..” எனத் தொடங்கும் அந்தப் பாடல்கள் பிற்காலத்திய சித்தர்களின் சாதி எதிர்ப்புப் பாடல்களுக்குக் கட்டியங் கூறுபவையாக உள்ளன.
இதற்குச் சற்று முந்திய கபிலரகவல், சற்றுப் பிந்திய சித்தர் பாடல்கள் ஆகியவற்றிலும் கடும் சாதி எதிர்ப்புக் குரல்களைக் காண இயலும்.
நான்கு
மாதவய்யா போன்ற தொடக்க கால நாவலாசிரியர்கள். பாரதி, பாரதிதாசன் போன்ற பெருங் கவிஞர்கள் ஆகியோரின் படைப்புகளிலும் சாதி மற்றும் ஆசார எதிர்ப்புக் குரல்களைக் காண இயலும் எனினும் பிரக்ஞை பூர்வமான ஒரு சாதி எதிர்ப்பு அரசியலை முன்வத்த தமிழ் தலித் இலக்கியம் எனச் சொல்லும்போது ஈழத்துத் தலித் படைப்பாளிகளின் பங்களிப்பை நாம் கவனத்தில் கொள்ளாதிருக்க இயலாது.. ‘தமிழ் தலித் இலக்கியத்தின் முன்னோடி’ என்கிற விளிப்பிற்கு எல்லாவிதத்திலும் தகுதி பெற்ற கே.டானியல் அவர்களின் ‘பஞ்சமர்’ வரிசை நூற்கள் தமிழகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை விளைவித்தவை. இங்கு அவை பல பதிப்புகள் கண்டவை. விரிவான விமர்சனகளுக்கும் ஆய்வுகளுக்கும் உட்படுத்தப்பட்டவை. தமிழ் ஈழப் போராட்டத்திற்கு முன்னுரிமை கொடுக்க நினைக்கும் அரசியல்வாதிகள் தமிழ் ஈழத்திற்குள் நிலவிய, நிலவுகிற சாதிக் கொடுமைகளைப் பேசத் தயங்குவதால் டானியல் அவர்களுக்கு உரிய மரியாதையை அளிக்க தமிழக தலித்திய அரசியலார் தவறிவிட்டனர். எனினும் ஆய்வாளர்கள் அதைக் கவனத்தில் கொள்ளுதல் அவசியம்.
அதேபோல இங்கு கடந்த முப்பதாண்டுகளில் மேலெழுந்து தடம் பதித்துள்ள தலித் அரசியல் என்பது தலித் இலக்கிய உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது போலவே, தலித் இலக்கியவாதிகள், தலித் பண்பாட்டு அமைப்புகள், தலித் ஆதரவு அறிவுஜீவிகள், விடியல் பதிப்பகம் போன்ற புத்தக வெளியீட்டாளர்கள், கிறிஸ்தவ அமைப்பினர் ஆகியோர் படைப்புத் துறையிலும், பதிப்புத் துறையிலும் மேற்கொண்ட முயற்சிகள் தலித் அரசியல் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்துள்ளன. அம்பேத்கரின் நூற்களை மொழி பெயர்த்து வெளியிட்டதில் கருணா மனோகரன், விடியல் சிவா முதலானோரின் பங்களிப்புகளும், அயோத்திதாசரின் எழுத்துக்களைத் தொகுப்பாகக் கொண்டுவந்த அலோஷியஸ், தலித் இலக்கியச் சிறப்பிதழை வெளியிட்டதோடு, தலித் தலைவர்கள் பலரையும் கூட்டி விவாதம் ஒன்றை நடத்தி ‘தலித் அரசியல்’ ஆவணம் ஒனறை வெளியிட்ட ‘நிறப்பிரிகை’ ஆசிரியர் குழுவினர் ஆகியோரின் பங்களிப்புகள் இந்த வகையில் குறிப்பிடத் தக்கவை. பாமா அவர்களின் தலித் படைப்புகளை வெளியிட்ட மதுரை ‘ஐடியாஸ்’ நிறுவனம். ஆண்டுதோறும் தலித் கலை இலக்கிய விழாவை நடத்திய அரசரடி இறையியல் கல்லூரி ஆகிய கிறிஸ்தவ அமைப்புகளின் பங்களிப்புகளும் தலித் இலக்கிய உருவாக்கத்தில் மட்டுமின்றி தலித் அரசியல் உருவாக்கத்திலும் முக்கிய பங்கு வகித்துள்ளன. தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் குறித்து மனித உரிமை அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வுகளும் தலித் இலக்கிய உருவாக்கத்திற்கு ஆதாரங்களக இருந்துள்ளன. பல்கலைக் கழகங்களும் ஆர்வமுடைய தனியார்களும் நடத்திய எண்ணற்ற கருத்தரங்குகளும் இந்தத் திசையில் முக்கிய பங்காற்றியுள்ளன.
ஐந்து
மதியரசனின் இந்நூல் ஆய்வு முறைக்குரிய இலக்கணங்களுக்கு உட்பட்டு இறுக்கமாக எழுதப்பட்டுள்ளது. விரிவாகப் பல தரவுகளையும், தகவல்களையும் தொகுத்து அவர் இந்த ஆய்வைப் படைத்துள்ளார். தலித் மக்கள் மீதான வன்முறைகள் என்பன வெண்மணியையும், சங்கரலிங்கபுரத்தையும், தருமபுரியையும்போல கொடுந் தாக்குதல் என்கிற வடிவில் மட்டும் நிகழ்வதல்ல. அன்றாட வாழ்வில் அவர்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைகள், உயர் கல்வி நிறுவனங்களிலும் கூட நிலவும் நவீனமான ஒதுக்கல்கள் என்பனவெல்லாம் பெரிய அளவில் கவனத்தைப் பெறாமலேயே தினந்தோறும் நிகழ்ந்துகொண்டிருப்பவை. பாமாவின் ‘கருக்கு’ முதலிய படைப்புகள் இந்த வகையில் முக்கியமானவை. அதேபோல ராஜ்கவுதமன், கே.ஏ.குணசேகரன் முதலானோர் எழுதியுள்ள தன்வரலாற்று எழுத்துக்கள் ஆகியனவும் எதிர்கால ஆய்வாளர்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். தலித்களுக்கு எதிராக வெளிப்படையாக ஆதிக்க சாதி அரசியலலைப் பேசுவது, ஆதிக்க சாதிக் கூட்டமைப்புகளை உருவாக்குவது என்பதெல்லாம் எப்படி தலித் வாழ்வின் துயரச் சுமைகள் கூடக் காரணமாகின்றன என்பவற்றை எல்லாமும் வருங்கால ஆய்வாளர்கள் கவனத்தில் இருத்த வேண்டும்.
தீவிரமாக உழைத்து ஒரு சிறந்த ஆய்வு நூலைப் படைத்துள்ள மதியரசன் தொடர்ந்து நிறைய எழுத வேண்டும். இந்த ஆய்வு நூல் வெளிவருவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு நானே பொறுப்பு. பொறுமை காத்த மதியரசனுக்கு என் நன்றிகளும் அன்புகளும்.
வாழ்த்துக்களுடன்,
அ.மார்க்ஸ்,
ஏப்ரல் 17, 2016,
கும்பகோணம்.