ஜனநாயகத்தில் சிறுபான்மையினர் : ஒரு குறிப்பு

  (இரண்டாண்டுகளுக்கு முன் உலகக் குடியரசு தினத்தை ஒட்டி இலங்கை ‘தினக்குரல்’ இதழுக்கு எழுதிய கட்டுரை. அரசியல் சிறுபான்மை என்பது மாறக்கூடியது. ஆனால் மதம், மொழி,இனம் அடிப்படையிலான சிறுபான்மைகள் பெரும்பான்மைகளாக மாறுவதற்கு வாய்ப்பில்லை. இச்சூழலில் ஜனநாயக அரசமைவில் சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றி பன்னாட்டுச் சட்டங்கள் என்ன சொல்கின்றன, தத்துவ சிந்தனையாளர்கள் என்ன சொல்கின்றனர் என ஆராய்கிறது இக்கட்டுரை)        

இன்று உலக குடியாட்சி தினம் (International Democracy Day). மனித குலம்   அரசு ஒன்றை உர்வாக்கி அதற்குள் வாழ நேர்ந்த இந்தச் சில ஆயிரம் ஆண்டுகளில் எத்தனையோ வகையான ஆட்சிகளைக் கண்டுள்ளதாயினும் இவற்றுள் ஒப்பீட்டளவில் சிறந்த ஆட்சி முறையாக ஜனநாயகம்தான் உள்ளது. இதிலும் இன்னும் தீர்க்கபடாத பல பிரச்சினைகள் இருக்கின்றன என்கிற போதிலும் இதைக் காட்டிலும் சிறந்த மாற்று நமக்கு ஏதும் தெரியவில்லை.

புரட்சிகரமான நோக்கங்களுடனும் உள்ளடக்கங்களுடனும் உருவான சோஷலிச நாடுகள் இறுதியில் மக்களாலேயே தூக்கி எறியப்பட்டன என்றால் அவை பெயரளவிலும் கூட ஜனநாயகத்தை ஏற்காமல் தம்மைப் ‘பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம்’ என அழைத்துக் கொண்டு ஒரு கட்சி ஆட்சி முறையைக் கொண்டு வந்ததுதான் அதற்கு முக்கிய காரணமாக இருந்தது. சர்வாதிகாரம் என்றால் அது பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமாக் இருந்தால் என்ன, முதளாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமாக இருந்தால் என்ன. சர்வாதிகாரம் சர்வாதிகாரம் தானே. மக்கள் அரசிலிருந்து அந்நியப்படுவது அதில் தவிர்க்க இயலாததுதானே. இன்று லத்தீன் அமெரிக்க சோஷலிச நாடுகள் பலவும் ‘பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம்’ எனும் கருத்தைத் தூக்கி எரிந்து விட்டு ஒரு கட்சி ஆட்சி முறைக்கும் முடிவு கட்டியுள்ளன.

ஜனநாயகம் என்பது வெறும் ஒரு அரசியல் சார்ந்த விடயம் அல்ல. அது முதன்மையாக ஒரு தத்துவார்த்தச் சிந்தனை. பிளேட்டொ, தூசிடைடிஸ் தொடங்கி, கார்ல் மார்க்ஸ், ஹென்ரி டேவிட் தோரோ, ஜான் ஸ்டூவர்ட் மில், தாமஸ் ஜெஃபர்சன், சோரென் கீர்கேகார்ட், தொமஸ் ஹாப்ஸ், எட்மன்ட் பர்க் எனப் பலரும் ஜனநாயகம் குறித்து ஆழமாகப்  பேசியுள்ளனர். வால்ட் விட்மன், எட்கார் ஆலன் போ போன்ற படைப்பளிகளும் இதில் அடக்கம்.

பெரும்பான்மையின் ஆட்சி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கையில் ஆட்சி அதிகாரம் கையளிக்கப்படுவது, கருத்தொருமிப்பின் அடிப்படையில் உருவான அரசியல் சட்டத்தின் ஆளுகை (constitutional governance) முதலியவற்றை நாம் ஜனநாயகத்தின் முக்கிய கூறுகள் என்கிறோம்.

இவை ஒவ்வொன்றுமே ஆழமான பல தத்துவார்த்தப் பிரச்சினைகளை உள்ளடக்கியுள்ளன. “பெரும்பான்மை” எனும்போது அதன் மறுதலையாகச் (counterpart) “:சிறுபான்மை” ஒன்று இருந்தாக வேண்டும். ஜனநாயகத்தில் அந்தச் சிறுபான்மையின் பங்கு என்ன? பெரும்பான்மையின் ஆட்சி என்கிறபோது “பெரும்பான்மை எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வது” (Majority Takes All) என்கிற பொருள் வந்து விடுகிறது. அப்படி ஆகும்போது அது ஜனநாயகம் என்பதாகவன்றி ஜெஃபர்சன் சொல்வது போல “கும்பல் ஆட்சி” (mob rule) ஆகி விடுகிறது. பெரும்பான்மையின் ஆட்சி என்றால் 51 பேர் 49 பேர்களை ஒடுக்குவதுதானே என்றார் அவர்.

ஆக, ஜனநாயகம் என்பது வெறும் பெரும்பான்மையின் ஆட்சி மட்டுமல்ல. சிறுபான்மையினரும் சேர்ந்ததுதான் ஜனநாயகம். சிறுபான்மையினருக்கு முழுச் சுதந்திரமும் அவர்களின் கருத்துக்களைப் பேசுவதற்கும், பரப்புவதற்கும், அதைப் பெரும்பான்மையாக ஆக்குவதற்குமான முழு வாட்ப்பும் அளிக்கப்பட்டதுதான் ஜனநாயகம்.

இங்கொன்றை விளக்குவது முக்கியம். இப்போது நாம் பேசிக் கொண்டிருப்பது அரசியல் சிறுபான்மை குறித்து. இதில் பெரும்பான்மையும் சிறுபான்மையும் மாறி மாறி வருவது சாத்தியம், இலங்கையில் சுதந்திராக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்பது போலவும் தமிழகத்தில் தி.மு.க, அ.திமு.க போலவும் அரசியல்  ரீதியான பெரும்பான்மை அல்லது சிறுபான்மை என்கிற நிலை தேர்தலுக்குத் தேர்தல் மாறலாம். ஆனால் மொழி, மதம், இனம் ஆகியவற்றின் அடிப்படையிலான பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை என்பன அப்படி மாறக் கூடியவை அல்ல. இந்தியாவில் முஸ்லிம்களும், இலங்கையில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் இரு இனத்தவரும் இப்படி என்றென்றைக்குமே சிறுபான்மையாக இருக்கக் கூடியவர்கள். இவர்கள் குறித்து மீண்டும் இறுதியில் பேசுவோம்.

அதே போலத்தான் கருத்தொருமிப்பின் அடிப்படையில் முடிவுகளை எடுத்தல் என்பதையும் நாம் நுணுக்கமாகப் பகுத்துப் பார்க்க வேண்டியுள்ளது. கருத்தொருமிப்பை எப்போதுமே புனிதமாகக் கருத வேண்டியதில்லை. ஜனநாயகத்தில் கருத்தொருமிப்பைப் போலவே கருத்து வேறுபாடுகளும் முக்கியம். வால்ட் விட்மன் சொல்வது போல ஜனநாயகத்தின் அடிப்படையே ஒவ்வொன்றுக்கும் ஒரு மறுதலை உள்ளது என்பதை ஏற்பதுதான். ஏற்பது என்பதன் பொருள் ஜனநாயகத்தில் அதற்கும் ஒரு இடமுண்டு என்பதுதான். பெரும்பான்மையின் அடிப்படையில் தோற்கடிக்கப்பட்ட கருத்துக்களை எள்ளி நகையாடுவது என்பதோ அதற்கு இடமே இல்லை என மறுப்பதற்கோ ஜனநாயகத்தில் இடமில்லை.

பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்பதிலும் பல ஆழமான பிரச்சினைகள் உள்ளன. ஜனநாயகத்தில் குடிமக்கள் எல்லோருமே ஆட்சி பீடத்தில் அமர இயலாது. மக்கள் தமது பிரதிநிதிகள் மூலமாகவே ஆட்சி செய்ய முடியும். பிரதிநிதிகளால் அமைக்கப்படும் இந்த அரசு எப்போதும் ஒன்றை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். அரசின் அதிகாரம் மக்களிடமிருந்தே வருகிறது என்பதுதான் அது.. அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் தனி நபர்கள் எல்லாவற்றிலும் உயர்ந்த நிலையில் இருக்கின்றனர். இதை அரசு அங்கீகரிக்கும்போதே அது ஒரு சிறந்த ஜனநாயகமாக இருக்கும்.

அரசுக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்கும் இந்தத் தனி நபர்களை அதாவது குடிமக்களை அந்த அதிகாரத்தைத் கையளித்தவர்களாக ஏற்று அணுகுவதற்கான ஒரே பொறியமைவாக உள்ளது அரசியல் சட்டம்தான். அது குடிமக்களுக்கு அனைத்து ஜனநாயக உரிமைகளையும் வழங்குகிறது. அதை நடைமுறைப்படுத்தும் கருவியாக நிர்வாகமும் (Executive), அந்நிலை கெடும்போது அதை வெளிக்கொணர்பவையாக ஊடகங்களும் (media), தட்டிக் கேட்கும் நிறுவனமாக நீதிமன்றமும் (Judiciary) ஜனநாயகத்தில் பாத்திரங்கள் வகிக்கின்றன என்பது கோட்பாடு. ஆனால் நடைமுறை அப்படியாக இருந்ததே இல்லை. ஜனநாயக அரசுகள் “அரசின் காரணங்களுக்காக” (raison de etat) எனச் சொல்லி எந்தக் கணத்திலும் “நெருக்கடி நிலை” (state of exception)  அறிவித்து குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை ரத்து செய்யும் அதிகாரத்தைத் தம் கைவசம் எப்போதும் வைத்துள்ளன. ரோமப் பேரரசிலேயே “இயூஷியம்” என்கிற பெயரில் நெருக்கடி நிலை அறிவிக்கும் அதிகாரத்தை அரசு தன் கையில் வைத்திருந்தது என்பார் ஜியார்ஜியோ அகம்பன்.

ஆக வழக்கமான அரசியல் சட்டத்தின் மூலம் ஆளுகை சாத்தியமில்லை எனக் கூறி ஜனநாயக உரிமைகள் ரத்து செய்யப்படும்போது ஜனநாயகம் கேலிக் கூத்தாகிறது. இந்நிலையில் நீதிமன்றம் தலையிட்டு உண்மையிலேயே அரசியல் சட்ட ஆளுகை சாத்தியமில்லையா எனச் சொல்ல வேண்டும். அனால் நீதிமன்றங்கள் அப்படிச் சொல்வதில்லை. அரசுக்கு நெருக்கடி நிலை அறிவிக்கும் உரிமை உள்ளது எனக் கூறி அதை நியாப்படுத்துவதையே உலகெங்கிலுமுள்ள ஜனநாயக நாடுகளில் பார்க்கிறோம். இந்த நோக்கில் அரசியல் சட்டம் வழங்கும் ஜனநாயக உரிமைகளை ரத்து செய்யும் கருப்புச் சட்டங்களையும் அரசுகள் உருவாக்கி வைத்துக் கொள்கின்றன. அந்த வகையில் கிட்டத்தட்ட இன்றைய அரசுகள் எல்லாமே ஜனநாயகம் என்கிற நிலையைத் தாண்டி “நெருக்கடி நிலை அரசுகளாகவே” (State of Exceptions) உள்ளன என்பார் ப்ரெஞ்சுச் சிந்தனையாளர் அகம்பன்..

இரண்டு

யாரும் இன்னொருவரைப் பிரதிநிதித்துவம் செய்துவிட இயலாது என நவீன தத்துவச் சிந்தனையாளர்கள் கூறுவர். ஆனால் மக்களை அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பிரதிநிதித்துவம் செய்துவிட இயலும் என்கிற அடிப்படையில்தான் இயங்குகின்றன இன்றைய ஜனநாயக அரசுகள். இந்தியாவில் இதை ஒரு அரசியல் பிரச்சினை ஆக்கினார் டாக்டர் அம்பேத்கர். சட்டமியற்றும் மன்றங்களில் தலித் பிரிவினருக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப 18 சத ஒதுக்கீட்டை அரசு அளித்தபோது அது போதாது, அந்தப் 18 சத மக்களும் தலித்களால் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும் (Separate Electorate) என்றார் அவர். எந்தத் தொகுதியிலும் பெரும்பான்மையாக இருந்து தாம் விரும்பிய பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும் வாய்ப்பு இல்லாதவர்களாக இந்தியாவில் முஸ்லிம்களும் தலித்களும் உள்ளனர். இலங்கையிலும் கூட இப்போது மேற்கொள்ளப்படும் குடியேற்றங்களின் விளைவாக அந்த வாய்ப்பைச் சில பகுதிகளில் இனி முஸ்லிம்களும் தமிழர்களும் இழக்க நேரிடலாம்.

இந்தியாவில் தலித்களுக்கும் பழங்குடியினருக்கும் மட்டும் தொகுதி ஒதுக்கீடுகள் உள்ளன. முஸ்லிம்களுக்கு அதுவும் இல்லை. ஆனால் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அவர்களுக்குத் தனி வாக்காளர் தொகுதியே (Separate Electorate) இருந்தது. தாங்கள் மட்டுமே வாக்களித்துத் தேர்வு செய்யும் பிரதிநிதிகள் மட்டுமே தமக்கு உண்மையாக இருப்பர், தம்மை உண்மையாகப் பிரதிநிதித்துவம் செய்வர் என்றார் அம்பேத்கர். ஏதேனும் ஒரு பெரிய கட்சியில் நின்று எல்லோரும் வாக்களித்து ஒரு தலித்தோ, முஸ்லிமோ தேர்வு செய்யப்படும்போது அவர்கள் தமது மக்களின் உண்மையான் பிரதிநிதிகளாக் இருக்க மாட்டார்கள். அவர்கள் தம்மை வேட்பாளராக நிறுத்திய கட்சிக்கு மட்டுமே உண்மையாக இருப்பர். இன்றைய இந்தியா இதற்கொரு நல்ல எடுத்துக்காட்டு.

ஜனநாயக ஆளுகை எதிர் கொள்கிற இன்னொரு முக்கிய பிரச்சினை இந்தப் இந்தப் “பெரும்பான்மை’ குறித்தது. 50சதத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையை நாம் பெறும்பான்மை என்கிறோம். இது இரண்டு நிலைகளில் நிறுவப்பட வேண்டும். முதலில் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெறுபவர்கள் 50 சத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். அடுத்து ஆட்சி அமைக்கும் கட்சி 50 சத உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருந்தால் மட்டும் போதாது. அந்த 50 சத உறுப்பினர்களும் மொத்தத்தில் 50 சத வாக்குகளையும் பெற்றிருக்க வேண்டும்.

இந்தியாவில் நடைமுறையில் உள்ள போட்டியிடுபவர்களில் “அதிக வாக்குகளைப் பெறுவோரை வெற்றி பெற்றவராக அறிவிக்கும் முறையில்” (First Past The Post System) பொதுவாக 30லிருந்து 35 சத வாக்குகளைப் பெற்றவர்கள் வெற்றி பெற்று விடுகின்றனர். எனவே 65 லிருந்து 70 சத வாக்காளர்களின் ஆதரவு அற்ற ஒருவர் வெற்றி பெற்றவராக ஆகிறார். அதே போல 30 சத வாக்குகளை மட்டுமே பெற்ற ஒரு கட்சி நாடாளுமன்றத்தில் 50 சதங்களுக்கு மேற்பட்ட உறுப்பினர்களைப் பெற்று ஆட்சி அமைக்கிறது. எடுத்துக்காட்டாகத் தற்போது இந்தியாவில் ஆட்சி அமைத்துள்ள பா.ஜ.க வாங்கிய வாக்கு வீதம் 31 சதம். ஆனால் அது 52 சத உறுப்பினர்களைப் பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

இது பெரும்பான்மையின் ஆட்சி என்கிற கருத்தாக்கத்தையே கேலிக்குள்ளாக்குகிறது. எனினும் ஜனநாய நாடுகளில் வேறு சில தேர்வு முறைகள் பயன்படுத்தப்பட்டு 50 சத வாக்குகள் பெற்றவர்களே வெற்றி பெற்றவராக அறிவிக்கும் நிலை உள்ளது. அவை ஒரளவு இந்தப் பிரச்சினையில் நியாயம் செய்கின்றன எனலாம். நேபாளம், இலங்கை முதலான நாடுகளில்  உள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை (proportional representation) இந்தியாவில் உள்ள அதிக வாக்குகளைப் பெற்றோரை வெற்றி பெற்றோராக அறிவிக்கும் முறையைக் காட்டிலும் சிறந்தது.

மூன்று

ஒரு ஜனநாயக அரசில் மொழி, இன, மதச் சிறுபான்மையினரின் உரிமைகள் எவ்வாறு காக்ககப்படும்? பெரும்பான்மையின் அடிப்படையில் அதிகரம் பெறுகிற அரசமைவில் எந்நாளும் பெரும்பான்மையாக ஆக இயலாதவர்களின் உரிமைகள் குறித்துச் சர்வதேசச் சட்டங்கள் என்ன சொல்கின்றன?

ஜனநாயகத்தில் பெரும்பான்மை என ஒன்றிருந்தால் சிறுபான்மையும் இருக்கும்; கருத்து ஒற்றுமை என்பதைப் போலவே கருத்து வேறுபாடும் முக்கியமானது என்றோம். சிறுபான்மையினர் நலனுக்கும், அவர்களின் உரிமைகளுக்கும் ஜனநாயகத்தில் எப்போதும் உத்தரவாதமும் பாதுகாப்பும் உண்டு. இது அரசியல் சிறுபான்மைக்கு மட்டுமின்றி மொழி, மத, இனச் சிறுபான்மைக்கும் முழுமையாகப் பொருந்தும். ஜனநாயக அறத்தின் அடிப்படையில் மட்டுமின்றி சர்வதேச நெறிமுறைகளின் அடிப்படையிலும் இதுவே உண்மை.

டாக்கியவெலி சொல்வது போல பெரும்பான்மை ஒன்றே “உச்ச அதிகாரத்தின் உத்தரவாதமாக இருக்க முடியாது. அது கொடுங்கோன்மைக்கே வழி வகுக்கும்.” மொழி, மத, இனச் சிறுபான்மையினரின் உரிமைகள் அவர்கள் சிறுபான்மையராக இருக்கிற காரணத்திற்காகவே மறுக்கப்படுவதற்கு ஜனநாயகத்தில் இடமில்லை.அப்படி நடக்கும்போது ஜனநாயகம் பாசிசத்தின் எல்லைக்குள் நுழைகிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் உருவான இனப்படுகொலைத் தடுப்பு மற்றும் தண்டனை குறித்த உடன்பாடு (The Convention on the Prevention and Punishment of the Crime of Genocide, in 1948), ஐ.நா. அவையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான பன்னாட்டு உடன்பாடு ( International Covenant on Civil and Political Rights, 1966)  ஆகியன சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமைகளை தேசிய அரசுகள் புறக்கணிக்கலாகாது என்பதை வற்புறுத்துகின்றன.  சிறுபான்மையினர் தம் மொழி, பண்பாடு, மதம் ஆகியவற்றைக்  கடைபிடிப்பது, பரப்புவது முதலியவற்றிற்கு முழுச் சுதந்திரமும் அளிக்கப்பட வேண்டும்  என்பவற்றை இவை வலியுறுத்துகின்றன.

20ம் நூற்றாண்டில், குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்குப் பின் ‘கூட்டணி நாடுகள்’ (allied powers) பல்வேறு சிறிய நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களில் சிறுபான்மையினர் உரிமைகள் விரிவாக பேசப்பட்டன. முதன் முதலில் போலந்துடன் போடப்பட்ட “வெர்சைல்ஸ் சிறிய ஒப்பந்தத்தில்” (Little Treaty of Versailles) இது தொடங்கி வைக்கப்பட்டது. அப்போதிருந்த உலக நாடுகள் அவை (League of Nations),  “பெரும்பான்மையிடமிருந்து வேறுபட்டமொழி, மதம் ,இனம் சார்ந்த மக்கள் சிறுபான்மையினராகக் கருதப்படுவர்” என வரையறுக்கப்பட்டது. அவர்களுக்குச் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதும், அவர்களின் உயிரும் உரிமைகளும் பாதுக்காக்கப்பட வேண்டும் என்பதும் போலந்து ஒப்பந்ததில் வலியுறுத்தப்பட்டன. இவை மீறப்படும்போது பாதிக்கப்பட்ட சிறுபான்மையர் உலக நாடுகளின் அவையிடம் புகாரளிக்கலாம். அது அவற்றை விசாரிக்கும் எனவும் கூறப்பட்டது.

பின் தொடர்ச்சியாகப் பல்வேறு ஒப்பந்தங்களிலும் சிறுபான்மையினர் குறித்த வரயறை விரிவாக்கப்பட்டதோடு அவர்களின் கலாச்சார, பண்பாட்டு, கல்வி உரிமைகள் வற்புறுத்தப்பட்டன. அவற்றைப் பாதுகாக்கும் கடமையும் அரசுக்குச் சுட்டிக்காட்டப்பட்டது. முன் குறிப்பிட்ட ஐ.நா ஒப்பந்தங்கள் இதில் முக்கிய பங்கு வகித்தன.

சிவில் மற்றும் அர்சியல் உரிமைகள் குறித்த ஒப்பந்தத்தின் 27ம் பிரிவுக்கு எஃப். கார்டோ போடியாகோ அளித்த விளக்கத்தில் சிறுபான்மையோர் பெரும்பான்மையோரைக் காட்டிலும் எண்ணிக்கையில் குறைந்து இருக்க வேண்டும் என்றொரு நிபந்தனை இருந்தது. அதுவும் கூடப் கூடப் பின்னர் கைவிடப்பட்டது. முந்தைய கிழக்கு பாகிஸ்தானில் இருந்த வங்காளியர் எண்ணிக்கையில் 54 சதமாக இருந்த போதிலும் அவர்கள் பிற வேறுபடுத்தல்களின் அடிப்படையில் சிறுபான்மையராகக் கருதப்படுவது சுட்டிக்காட்டப்பட்டு இந்த நிபந்தனை கைவிடப்பட்டது.

1995 ல் உருவாக்கப்பட்ட தேசியச் சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்கான உடன்பாடு  (Framework Convention for the Protection of National Minorities) சிறுபான்மையினர் தம் அடையாளங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு உள்ள உரிமைகள், இவற்றுக்குரிய அரசு கடப்படுகள், அந்தக் கடப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்குரிய சட்டங்கள் மற்றும் அதை நிறைவேற்றுவதற்கான கருவிகள் ஆகியன குறித்து மிகத் துல்லியமான வரையறைகளை உருவாக்கியது. சமூகங்களுக்கிடையே பரஸ்பர சகிப்புத் தன்மையை வளர்த்தல், கலாச்சார உரையாடல்களை உருவாக்குதல் ஆகியவற்றில் அரசு நிறுவனங்கள் முக்கிய பொறுப்பேற்க வேண்டும் என்பதும் இந்த உடன்பாட்டில் வற்புறுத்தப்பட்டது. சமூகங்களுக்கிடையே பரஸ்பர மரியாதை, புரிதல், கூட்டுச் செயல்பாடுகள் ஆகியவற்றை உருவாக்குவதிலும் அரசுக்குள்ள பொறுப்பை அது சுட்டிக்காட்டியது.

இதற்கான சட்டங்களை உருவாக்குதல் என்பதோடு அரசின் கடமைகள் முடிந்துவிடவில்லை, அதற்குரிய கொள்கைகளை உருவாக்குதல், மக்கள் மத்தியில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளுதல் ஆகியனவும் அரசின் கடமைகள் எனவும் அந்த உடன்பாடு வற்புறுத்தியது

ஆக, மொழி, மதம், இன அடிப்படையிலான சிறுபான்மையினரின் 1. உயிர், உடமை, உரிமைகள் பாதுகாக்கப்படுதல் 2. அவர்கள் தம் பண்பாடு, மொழி மற்றும் மத நம்பிக்கைகளைப் பேணுதல் மற்றும் பரப்புதல், 3. சமூகங்களுக்கிடையே பரஸ்பர நட்பு, மரியாதை ஆகியவை காக்கப்படுதல், 4. இவற்றை உறுதி செய்வதற்கான சட்டங்களை இயற்றுதல் 5. இச் சட்டங்களை நிறைவேற்றுவதற்கான கருவிகளை அமைத்தல் ஆகியவற்றை சர்வதேச ஒப்பந்தங்கள் இன்றைய அரசுகளின் கடப்பாடுகளாக்குகின்றன..

இவை மீறப்படும்போது பாதிக்கப்படும் சிறுபான்மையினர் சர்வதேச அமைப்புகளில் புகாரளிக்கவும். சர்வதேச அமைப்புகள் தலையிட்டு நீதியை நிலை நாட்டுவதற்கும் இதன் மூலம் அனுமதி அளிக்கப்படுகிறது.

இவற்றை ஏற்று சாத்தியப் படுத்துபவைகளே உண்மையான பொருளில் ஜனநாயக அரசுகளாக இருக்க முடியும்.

 

 

 

ரூபாய் நோட்டுகள் செல்லாததாக்கப்பட்டதன் அரசியல்

ippodhu.com, Nov 10, 2016

“இது கருப்புப் பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பதைப்போல பெரிய நகைச்சுவை ஏதுமில்லை”

(டாக்டர் பிரபாத் பட்நாயக் அவர்கள் வாழும் மூத்த பொருளியல் அறிஞர்களில் ஒருவர். ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் “தகுதிமிகு உயர் பேராசிரியராக” (Professor Emeritus) ஆக ஏற்கப்பட்டுள்ளவர். மார்க்சீய நோக்கில் ‘பணமதிப்பு’ , “ஏகாதிபத்தியம்” முதலானவை குறித்து எழுதப்பட்ட சில மிக முக்கியமான நூல்களின் ஆசிரியர். “கருப்புப் பணத்தையும் கள்ள நோட்டையும் ஒழிப்பதற்காக” எனச் சொல்லி இன்று 1000 மற்றும் 500 ரூ நோட்டுகள் செல்லாது என அறிவித்து நரேந்திர மோடி அரசு எடுத்துள்ள  அதிரடி நடவடிக்கை எத்தனை போலித்தனமானது என்பதை விளக்கி அந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் thecitizen.com ல் எழுதிய கட்டுரை முக்கியமான ஒன்று. அதன் முக்கிய கருத்துக்களை இங்கே தொகுத்துள்ளேன். எனினும் இது அக்கட்டுரையின்  மொழிபெயர்ப்பு அல்ல)

  1. 1000 மற்றும் 500 ரூ நோட்டுக்களைச் செல்லாது என (demonetization) என மோடி அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. கருப்புப் பணச் சேமிப்பின் மீது ஒரு ஒரு ‘சர்ஜிகல் தாக்குதல்’ நடத்துவது, பயங்கரவாதிகள் பயன்படுத்தும் கள்ள நோட்டுக்களை ஒழித்துக் கட்டுவது – என இரு நோக்கங்களுக்காக இது செய்யப் படுவதாக மோடி முழங்கியுள்ளார்.
  2. இந்த நடவடிக்கை கருப்புப் பணப் பிரச்சினையை ஒழித்துவிடுமா என்பதை முதலில் எடுத்துக் கொள்வோம். புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூ நோட்டுக்களை செல்லாததாக்குவதன் மூலம் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியும் என நம்புவது கருப்புப் பணம் என்றால் என்ன என்பதையும், அதன் செயல்பாட்டையும் சாரியாகப் புரிந்து கொள்ளாததன் விளைவு. கருப்புப் பணம் என்றால் ஏதோ கணக்கில் காட்டாமல் தலையணைக்குள் மறைத்து வீட்டுக்குள் வைக்கப்பட்டுள்ள பணம் என்கிற சிறு பிள்ளைத் தனமான புரிதலின் விளைவு இது. அப்படி மறைத்து வைத்திருப்பவர்கள் இப்படி அந்த நோட்டுகள் செல்லாது என அறிந்தவுடன் அவற்றை மூட்டை கட்டித் தூக்கிக் கொண்டு வங்கிகளுக்கு வரும்போது அவர்களை ‘லபக்’ எனப் பிடித்துவிடலாம் என்று அவர்கள் சொல்கின்றனர். கொக்கு தலையில் வெண்ணை வைத்துப் பிடிக்க முனைந்த கோமாளிகள் நிச்சயம் இவர்களை விடப் புத்திசாலிகள். 1946 ல் பிரிட்டிஷ் ஆட்சியில், அப்புறம் 1978 ல் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோதெல்லாம்ம் இப்படி உயர் மதிப்பு நோட்டுக்கள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. அபோதெல்லாம் இப்படி ஏராளமாக்கக் கருப்புப் பணம் வைத்திருந்தவர்கள் என யாரும் அகப்பட்டதும் இல்லை அதன் மூலம் கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டதும் இல்லை.
  3. ‘கருப்புப் பணம்’ என்பதன் மூலம் நாம் என்ன பொருள் கொள்கிறோம்? கடத்தல், போதைப் பொருள் வணிகம், பயங்கரவாத அமைப்புகளுக்காக ஆயுதம் வாங்குதல் முதலான முழுமையாகச் சட்ட விரோதமாக அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள், அல்லது இதுபோன்றவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிக அளவில் மேற்கொள்ளபட்டடவை மற்றும் வரிகள் செலுத்தாமல் மறைக்கப்பட்ட அனைத்து வகை நடவடிக்கைகள் ஆகியவற்றைத்தான் நாம் கருப்புப் பணம் என்று பொருள் கொள்கிறோம். எடுத்துக்காட்டாக ஒரு நிறுவனம் 100 டன் கனிமத்தைத் தோண்ட அனுமதிக்கப்பட்ட நிலையில் அது வெறும் 80 டன்னைத்தான் தோண்டி எடுத்துள்ளதாக அறிவித்து விட்டு, ஆனால் அதற்கும் மேல் ஏராளமாகத் தோண்டி எடுத்து அவற்றிற்கு வரி கட்டாமல் ஏமாற்றினால், அதன் மூலம் சேர்ந்த கணக்கில் வராத பணத்தைக் கருப்புப் பணம் என்கிறோம். அல்லது 100 டாலர் மதிப்புள்ள பொருள்களை ஏற்றுமதி செய்துவிட்டு, வெறும் 80 டாலர் மதிப்புள்ள பொருள்களை மற்றுமே ஏற்றுமதி செய்துள்ளதாகக் கணக்குக் காட்டி, மீதமுள்ள 20 டாலரை ஸ்விஸ் வங்கியில் போட்டு வைத்தால் அதைக் கருப்புப் பணம் என்கிறோம். அல்லது ‘ஹவாலா’ முறையில் பணப் பரிவர்த்தனை செய்து, அதன் மூலம் அள்ளும் கொள்ளை லாபத்தை வெளிநாடுகளில் சேமித்தால் அதையும் கருப்புப் பணம் என்கிறோம். இப்படிக் கணக்கில் வராமல் பொருள் சேர்க்கும் நடவடிக்கைகளைத்தான் கருப்புப் பணம் என்கிறோம்.
  4. ஆக கருப்புப் பணம் என்றால் திருட்டுத்தனமாகத் தலையணைக்குள்ளேயும், டிரங்குப் பெட்டிகளில் திணித்து கட்டிலுக்கு அடியில் புதைத்தும் ‘பதுக்கி’ வைக்கப்பட்டவை என்கிற புரிதல் வெறும் பொதுப்புத்தி சார்ந்த ஒன்று. உண்மையில் அவை ‘பதுக்கி’ வைக்கப்பட்டவை அல்ல. அவை ‘இயங்கி’ க் கொண்டிருப்பவை (flowing). “கருப்பு நடவடிக்கைகள்” என்பன “வெள்ளை நடவடிக்கைகளை” போலவே அவற்றை மேற்கொள்பவர்களுக்கு லாபம் ஈட்டித் தருபவை. அதன் மூலம் அவை தன்னைத்தானே பெருக்கிக் கொள்பவை. ஆனால் பதுக்கி வைக்கும் பணம் இப்படி லாபம் ஈட்டித் தராது. தன்னைத்தானே பெருக்கிக் கொள்ளாது. சொல்லப் போனால் பண வீக்கம், ரூபாய் மதிப்புக் குறைவு ஆகியவற்றால் பதுக்கி வைக்கப்பட்ட பணம் தன்னைத்தானே குறைத்துக் கொள்ளும் வாய்ப்புடையது. கருப்புப் பனம் அப்படியல்ல. கார்ல் மார்க்ஸ் பொதுவான “வணிகச் செயல்பாடுகள்” (business activities) எனச் சொன்னவை “கருப்பு நடவடிக்கைகளுக்கும்” (black activities) பொருந்தும். அதாவது பணத்தைப் பதுக்கி வைப்பதால் லாபம் சேராது. அது சுழலும்போதே லாபத்தை அள்ளும். பதுக்கி வைப்பவர்களுக்குப் பெயர் ‘கஞ்சர்கள்’. லாபம் சம்பாதிப்பவர்களின் பெயர் ‘முதலாளிகள்’. அந்த வகையில் “கருப்பு நடவடிக்கைகளில்” ஈடுபடுவோர் முதலாளிகள்தானே ஒழிய கஞ்சர்கள் அல்ல.
  5. எந்தத் தொழிலிலும் பணம் என்பது குறைந்த காலத்திற்கோ இல்லை சமயத்தில் நீண்ட காலத்திற்கோ முடங்கி இருப்பது இயற்கை. அது தவிர்க்க இயலாது என்பது உண்மைதான். (‘பண்டம் – பணம் – பண்டம்” என இந்தச் சுழற்சியை கார்ல் மார்க்ஸ் தனது புகழ்பெற்ற படைப்பான ‘மூலதனம்’ நூலில் குறிப்பிடுவார்). இந்தச் சுழற்சியில் பணம் சற்றுத் தேங்குவது எல்லா பொருளாதார நடவடிக்கைகளிலும் நடப்பதுதான். வெள்ளை நடவடிக்கைகளில் நிகழ்வது போலத்தான் கருப்பு நடவடிக்கைகளிலும் இது நடைபெறுகிறது. எனவே கருப்புப் பணம் “தேங்கி” இருப்பதும், ‘வெள்ளைப் பணம்’ சுழற்சியில் இருப்பதும் தான் இரண்டுக்கும் இடையிலான மையமான வித்தியாசம் என நினைப்பது அபத்தம். கருப்பு நடவடிக்கைகளானாலும், வெள்ளை நடவடிக்கைகள் ஆனாலும் இரண்டிலும் பணம் சுழன்று கொண்டுதான் உள்ளது. சந்தர்ப்பங்களில் அவை தேங்கியிருப்பது இவ்வகைப்பட்ட சுழற்சியின் இயல்புகளில் ஒன்று.

    6. எனவே கருப்புப் பணத்தை வெளிக் கொணர்வது அல்லது ஒழித்துக் கட்டுவது என்பது உண்மையில் இந்தக் கருப்பு நடவடிக்கைகளை வெளிக் கொணர்ந்து அழிப்பதுதானே ஒழிய கருப்புப் பணச் சேமிப்புகளின் மீது வீர தீரம் காட்டுவதாகப் பம்மாத்து செய்வதன் மூலமாக அதைச் செய்துவிட முடியாது. இப்படி கருப்பு நடவடிக்கைகளை அடையாளப்படுத்தி உண்மையிலேயே அழிக்க வேண்டுமானால் முதலில் அதற்கு நேர்மை வேண்டும். அப்புறம் இப்படியான திடீர்ச் சாகசங்களாக இல்லாமல் திட்டமிட்ட, முறையான, தொடர்ச்சியான நடவடிக்கைகளாக அது அமைய வேண்டும்.

    7. கணினிகள் எல்லாம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பாகவே தீவிரமான புலனாய்வு மற்றும் விசாரனைகள் மூலமாக வரி ஏய்ய்ப்புகளைத் துல்லியமாகக் கண்டுபிடித்துவிடும் ஒரு அமைப்பு என்கிற பெயரை British Internal Revenue Service பெற்றிருந்தது. பிரிட்டன் நம்முடைய நாட்டைக் காட்டிலும் மிகச் சிறியது, எனவே அங்கு இது சற்று எளிது என்பது உண்மைதான். ஆனால் நம்முடைய நாட்டிலும் இது சாத்தியமாகாத ஒன்றல்ல. அதற்குத் தகுந்த அளவில் வரி ஏய்ப்புகளைக் கண்டுபிடிக்கும் புலனாய்வு முகமைகளை விரிவாக அமைத்து. முறையான தொடர்ச்சியான வரி நிர்வாகத்தை மேற்கொள்வதன் மூலம் இதைச் செய்யலாம். குறைந்த பட்சம் உள்நாட்டு வரி ஏப்புகளையாவது கட்டுப் படுத்த முடியும். அதையெல்லாம் விட்டுவிட்டு இப்படி 500 / 1000 ரூ நோட்டுகளைச் செல்லாது என அறிவித்து பட்டை கிளப்புவதன் மூலம் ஒரு முடியும் உதிரப் போவதில்லை.

  6. எனினும் இந்தக் கருப்பு நடவடிக்கைகளில் ஒரு பகுதி ஸ்விஸ் போன்ற வெளிநாட்டு வங்கிகளின் உதவியோடு நடைபெறுகிறது என்பது உண்மைதான். தேர்தலுக்கு முன் நரேந்திர மோடியும் இப்படி வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் ‘கருப்புப் பணத்தை’ வெளிக்கொணர்வது பற்றி ஆவேச வாக்குறுதிகளை அள்ளி வீசியதை அறிவோம். கருப்புப் பணம் மற்றும் அத்தகைய நடவடிக்கைகள் பற்றி சற்று முன் குறிப்பிட்ட மிகை எளிமைப்படுத்த புரிதலுடன் பேசப்பட்ட பேச்சு இது என்பது ஒருபக்கம் இருக்கட்டும். அவர் சொன்னதை அப்படியே சரி என வைத்துக் கொண்டாலும் இப்படி 500 ரூ நோட்டையும் 1000 ரூ நோட்டையும் செல்லாது என அறிவிப்பதன் மூலம் அதை எப்படி ஒழிக்க முடியும் அல்லது வெளிக் கொண்ர முடியும்?
  7. 1946 மற்றும் 1978 ல் இப்படி 1,000, 5,000, 10,000 ரூ நோட்டுகள் செல்லாததென அறிவிக்கப்பட்ட போது, இன்று போல சாதாரண மக்கள் பாதிக்கப்படவில்லை. அந்தக் கால்லகட்டத்தில் சாதாரண மக்கள் இந்த நோட்டுகளைப் பார்த்தது கூடக் கிடையாது. அப்போது இந்த நடவடிக்கைகள் சாதாரண மக்களைப் பாதிக்காதது மட்டுமல்ல கருப்பு நடவடிக்கைகளையும் அது பாதிக்கவில்லை. அவை தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருந்தன. மோடியின் இன்றைய நடவடிக்கையைப் பொருத்த மட்டில் அது கருப்பு நடவ்டிக்கைகளில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பதைப் பாத்தோம். ஆனால் முந்தைய நடவடிக்கைகளைப் போல அல்லாது இப்போது சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
  8. நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கு “பணப் பட்டுவடா இல்லாத பொருளாதாரத்தை” (cashless economy) உருவாக்கப் போவதாகச் சொன்னார். அதாவது இன்று பொருளாதார நடவடிக்கைகள் எல்லாம் நேரடியாக பணம் கைமாறுவது என்கிற அடிப்படையில் உள்ளது. ஒரு 5 சத பண மாற்றமே நேரடியாகப் பணம் கைமாறாத வடிவில் நிகழ்கிறது. நேரடியாகப் பணம் கைமாறாத நிலையில் பொருளாதாரப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தால் கணக்கில் காட்டப்படாத கருப்பு நடவடிக்கைகளை முடக்கலாம் என்பதுதான் ஜேட்லி முன்வைத்த கருத்தின் உட்பொருள்.. நோட்டுகளைச் செல்லாததாக்கும் இன்றைய இந்த நடவடிக்கை அந்தத் திசையில் ஒரு செயல்பாடு என இதற்கு ஆதரவாகப் பேசுவோர் கூறுகின்றனர். இதில் இரண்டு அம்சங்கள் கவனத்துக்குரியவை. 1. வெளிநாட்டு வங்கிகளின் ஊடாக நடக்கும் கருப்பு நடவடிக்கைகளை இப்படி இந்திய ரூபாய் நோட்டுக்களைச் செல்லாமலாக்குவதன் மூலம் தடுக்க முடியாது. 2. மற்றபடி இந்தியாவை இப்படித் தடலடியாக பணப் பரிவர்த்தனை இல்லா பொருளாதாரமாக (cashless economy) ஆக்குவது என்பதெல்லாம் வெறும் மேற்தட்டுக் கனவு. வங்கிக் கணக்கு தொடங்குவது, கிரெடிட் கார்டு பெறுவது, கணினியை தினசரி வாழ்வின் ஓர் அங்கமாக்குவது, ‘ஏ.டி.எம்’ ஐப் பயன்படுத்துவது என்பதெல்லாம் இன்றளவும் இந்தியாவில் சாதாரண மனிதருக்கு எட்டாக் கனியாக உள்ள நிலையை நாம் மறந்துவிடக் கூடாது.
  9. கடைசியாக, இந்த பயங்கரவாதம், கள்ள நோட்டுக்கள், ரூபாய் நோட்டுக்களைச் செல்லாததாக்குதல் ஆகியவை இன்றைய சொல்லாடலில் எவ்வாறு இணைக்கப்படுகின்றன என்பதைப் பார்ப்போம். எல்லை தாண்டி உற்பத்தி செய்யப்படும் இந்தக் கள்ள நோட்டுகள் பயங்கரவாதச் செயல்களுக்குப் பயன்படுகிறதாம். உயர் தொழில் நுட்பத்துடன் இனி அச்சிடப்படும் புதிய நோட்டுகளை இப்படித் தயாரித்துவிட முடியாதாம். இதெல்லாம் உண்மை என்றே வைத்துக் கொள்வோம்.ஈதுதான் ஒரே வழி என்றால், தற்போது உள்ள நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்திவிட்டு இனி அச்சிடப்படும் நோட்டுகள் எல்லவற்றையும் புதிய முறையில் அச்சிடுவதுதானே,. படிப்படியாகச் சில ஆண்டுகளில் இன்றைய நோட்டுகள் வழக்கிழந்து விடும். சாதாரண மக்களும் துன்புறுத்தப்பட மாட்டார்கள்

பேரா. பிரபாத் பட்நாயக்கின் கருத்துக்கள்தான் இவை. எனினும் இது அவரது கட்டுரையின் நேரடி மொழியாக்கம் இல்லை. கட்டுரையை முடிக்கும்போது மோடியின் இச்செயலுக்கு இணையாக நவீன இந்திய வரலாற்றில் ஏதும் நடந்ததில்லை என்கிறார். ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் கூட சாதாரண மக்களிடம் இருந்த நோட்டுகளை இப்படி அதிரடியாகச் செல்லாதது என அறிவித்து அவர்களைத் துன்பத்திற்கு ஆளாக்கியதில்லை என்கிறார்.

உண்மைதான். பெட்ரோல் நிலையம், பேருந்து முன்பதிவு நிலையங்கள் ஆகியவற்றில் செல்லாததாக்கப்பட்ட நோட்டுகள் பெற்றுக் கொள்ளப்படும் என மோடி அரசு அறிவித்துள்ளதெல்லாம் பச்சை ஏமாற்று என்பதை நாம் அனுபவபூர்வமாக அறிககிறோம். அதற்கான எந்த ஏற்பாடும் இல்லாமல் இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இப்போதுள்ள நிலையில் எங்கு போனாலும், “நாங்கள் வாங்கிக் கொள்ளத் தயார். ஆனால் சில்லறை இல்லை. வேண்டுமானால் ஆயிரம் ரூபாய்க்கும் பெட்ரோல் போட்டுக் கொள்ளுங்கள்..” என்கிறார்கள்.

இப்படியாக 1000 / 500 ரூ நோட்டுகளைச் செல்லாது என அறிவிக்கும் திட்டம் ஒன்று மோடி அரசு வசம் உள்ளதென்கிற செய்தி அப்படி ஒன்றும் இரகசியமாக வைக்கப்படவில்லை. சில வாரங்கள் முன் நாளிதழ்களிலேயே அப்படிப் பட்ட கருத்துகள் வெளியாயின. இது எப்படி நிகழ்ந்தது, இதன் பின்னணி, நோக்கம் முதலியனவும் விளங்கவில்லை.

இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். மோடி அரசு ஆட்சிக்கு வந்தது முதல் அரசின் இருப்பை ஒரு பெருஞ்சுமையாக மக்கள் மீது சுமத்தி வருவதுதான் அது. அரசு சர்வ வல்லமையுடையது; அதன் முன் மக்கள் எந்த அதிகாரமும் அற்ற தூசிகள் என்கிற கருத்தை மக்கள் மனதில் பதிய வைப்பதில் அது குறியாய் உள்ளது. ஆதார் அட்டையை அனைத்துத் துறைகளிலும் கட்டாயமாகத் தொடர்ந்து ஆக்கிவருகின்றனர். சமையல் எரிவாயுக் கலன்களுக்குக் கொடுத்து வந்த சொற்ப மானியத் தொகையை ஆதார அட்டையுடன் இணைத்த அரசு இப்போது எளிய மக்களிடம் உள்ள அந்த ஒரு சில 500 / 1000 ரூ நோட்டுக்களையும் செல்ல வைக்க வேண்டுமானால் ஆதார அட்டை  அல்லது ‘பேன் கார்டு’ வேண்டும் என்கிறது. மாணவர்களைத் தரம் பிரிப்பது, உயர் கல்வி நிறுவனங்களில் கார்பொரேட் ஊடுருவலுக்கு வித்திடுவது, பொது சிவில் சட்டம் என்கிற பெயரில் தனி நபர் அடையாளங்களைக் கேள்விக்குள்ளாக்குவது, போர்ச் சூழலை உருவாக்கி அரசின்  மீதான மக்களின் விமர்சன உரிமைகளை மறுப்பது…. எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அரசு எந்த அளவு வலிமை குறைந்ததாக உள்ளதோ அந்த அளவு மக்கள் வலிமை மிக்ககவர்களாகிறார்கள். ஆனால் அரசுகள் என்றைக்கும் தங்களின் வலிமையையும் அதிகாரக் குவியலையும் இழக்கத் தயாராக இருப்பதில்லை. அதன் உச்ச வடிவத்தைத்தான் பாசிசம் என்கிறோம்.

இன்று இந்த 500 / 1000 ரூ நோட்டுகளின் மதிப்பு இழப்பு நடவடிக்கையின் நோக்கமும் மக்களின் முன் அரசின் வலிமையை இன்னொரு முறை நிகழ்த்திக் காட்டுவதுதான். மற்றபடி கருப்புப் பணம், எல்லை தாண்டிய கள்ள நோட்டு உற்பத்தி என்பதெல்லாம் அவர்களின் இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வழிமுறைகளில் ஒன்றுதான். இந்தியாவின் மீது  மேற்கொள்ளப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளைப் பொருத்த மட்டில் உள் நாட்டுப் பயங்கரவாதம் என்பது ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவு. பெரும்பாலும் அவை அந்நிய மண்ணில் வேர்கொண்டு இங்கே ஊடுருவுவதுதான். அதற்கு நம் அரசுகள் காட்டும் ஆதாரமே பயங்கரவாதத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களில் உள்ள அந்நிய உற்பத்தி அடையாளங்கள்தான். அப்படியான வெளிநாட்டு ஆயுதங்களை வாங்க இந்தியக் கள்ள நோட்டுகள் எப்படிப் பயன்படும்? ஒரு வேளை கள்ள நோட்டுகளை உற்பத்தி செய்து இந்தியாவில் புழங்க வைப்பதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தைப் பலவீனப்படுத்துவதுதான் எதிரிகளின் நோக்கம் எனில் அப்படி ஏதும் இதுவரை நிருப்பிக்கத் தக்க ஆதாரங்கள் கிடைத்துள்ளனவா?

இன்றைய ஆட்சியாளர்கள் ‘அந்நியர்’ எனும் சொல்லை வெறும் foreigner எனும் சொல்லின் மொழி பெயர்ப்பாகப் பயன்படுத்துவதில்லை. மாறக ‘அந்நியர்’ எனும் சொல்லின் ஊடாகச் சில அடையாளங்களை அவர்கள் கற்பித்து வந்துள்ளனர். இன்றைய அரசின் ஒவ்வொறு சிறு நடவடிக்கையிலும் அதன் ‘வெறுப்பு அரசியல்’ நோக்கம் வெளிப்படுவதை மறந்துவிட முடியாது. 500 / 1000 ரூ நோட்டுகள்  செல்லாததாக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையிலும் கூட அது இணைக்கப் படுவதைத்தான் இந்த “எல்லை தாண்டிய கள்ள நோட்டு ஊடுருவல்’ பற்றிய சொல்லாடல் காட்டுகிறது.

 

 

 

பொது சிவில் சட்டம் எனும் பெயரில் பிளவு அரசியல்

போபாலில் எட்டு முஸ்லிம் இளைஞர்கள் மோதல் என்ற பெயரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக  இருக்கட்டும், முஸ்லிம் பெண்கள் முத்தலாக் கொடுமையால அவதியுறுவதாக நரேந்திரமோடி நீலிக் கண்ணீர் வடிப்பதாக இருக்கட்டும் இதை யாரும் நம்புவதில்லை. ஆனாலும் இன்று அவர்கள் உருவாக்கியுள்ள பிளவு அரசியலின் துணையோடு இவற்றைப் பெரிய எதிர்ப்புகளின்றி வெற்றிகரமாகச் செய்துகொண்டு உள்ளனர்.

மாட்டுக்கறி வைத்திருந்தார் எனக் கொல்லப்பட்ட முகமது அக்லக்கின் மனைவி, தன் கணவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈசான் ஜாஃப்ரி கண்ணெதிரே கண்டதுண்டமாக வெட்டி எரிக்கப்பட்டதற்கு நீதி வேண்டி 15 ஆண்டுகளாக நீதிமன்றங்களுக்கு அலைந்து கொண்டிருக்கும் ஸாகிய ஜாஃப்ரி, என்கவுன்டர்கள் என்று சொல்லப்பட்டுக் கொல்லப்பட்ட கல்லூரி மாணவி இர்ஷத் ஜெஹான் மற்றும் ஷொராபுதீனின் மனைவி கவுசர் பீவி என்கிற இந்த முஸ்லிம் பெண்கள் மீதெல்லாம் இரக்கம் தோன்றாத மோடி முத்தலாக்கால் பாதிக்கப்படும் பெண்களுக்காகக் கண்ணீர் சிந்துகிறாராம். இதற்கான ஒரே தீர்வு பொதுசிவில் சட்டமாம்.

முதலில் ‘பொது சிவில் சட்டம்’ எனச் சொல்வதே தவறு. இங்கே கிரிமினல் சட்டங்களும், சிவில்சட்டத்தில் திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், சொத்துரிமை முதலான தனிநபர் சட்டங்கள் தவிர பிற அனைத்து சிவில்சட்டங்களும் எல்லா மதத்தினருக்கும் பொதுவாகத்தான் உள்ளன. பொது சிவில் சட்டம் என்கிற பெயரில் இவர்கள் சொல்ல வருவது எல்லா மதத்தினருக்குமான ‘பொது தனிநபர் சட்டம்’ என்பதுதான்.

இன்னும் சரியாகக் கவனித்தால் இவர்கள் சொல்ல வருவது  ‘பொது தனிநபர் சட்டம்’ கூட அல்ல. இந்துத் தனிநபர் சட்டத்தைப் பிற மதங்களின் மீது திணிப்பதுதான். அதன் மூலம் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் தனித்துவங்களையும் அடையாளங்களையும் அழிப்பதுதான் இவர்களின் நோக்கம்.. சிறுபான்மையினர் இன்று கலவரப் பட்டிருப்பதன் பின்னணியும் இதுதான்.

பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக இவர்கள் சொல்வது இது நமது அரசியல் சட்டத்தின் 44 வது பிரிவில் உள்ளது என்பதுதான். இந்தியா ஒரு மிகப் பெரிய நாடு. சரியாகச் சொல்வதானால் மதம், மொழி, இனம் எனப் பலதிறப்பட்ட மக்கள் சமூகங்கள் வாழும்ஒரு துணைக் கண்டம் இது. இதற்குள் எல்லாவற்றிலும் கருத்தொற்றுமை சாத்தியம் இல்லை என்பதாலதான் நமது அரசியல் சட்டம் ‘அடிப்படை உரிமைகள்’ எனவும், ‘வழிகாட்டு நெறிமுறைகள்’ எனவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சில நாடுகளில்தான் இந்த ஏற்பாடு. வழிகாட்டு நெறிமுறைகளாகச் சொல்லப்பட்டவை காலப்போக்கில் அரசியல் சட்ட அடிப்படைகள் ஆக்கப்பட வேண்டும் என்பது பொருள்.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் பொது தனிநபர் சட்டம் மட்டுமின்றி வேறு பலவும் உள்ளன, அடித்தள மக்களுக்கு சட்ட மற்றும் நாடாளுமன்றங்களில்  வழங்கப்பட்டுள்ள இட ஒதுகீட்டை முடிவுக்குக் கொண்டுவருதல் (334ம் பிரிவு), ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தியை ஆட்சி மொழி ஆக்குதல் (343) என்பதெல்லாமும் வழிகாட்டு நெறிமுறைகள்தான். இதை எல்லாம் இன்று நடைமுறையில் சாத்தியமும் இல்லை, நியாயமும் இல்லை.

தவிரவும் இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவின் பன்மைத் தன்மையின் அடிப்படையில் இங்கே நூற்றுக்கனகான தனிநபர்ச் சட்டங்கள் உள்ளன. வடகிழக்கு மாநிலப் பழங்குடிகள் மத்தியில் ஒரே பெண்ணைப் பல ஆண்கள் திருமணம் செய்து கொள்ளும் நிலை இருப்பதால் அங்கு மட்டும் அது தனிநபர் உரிமைகளில் ஒன்றாக்கப் பட்டுள்ளது. .

ஏதோ இன்று முஸ்லிம் சட்டத்தில் மட்டும்தான் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது, இந்துச் சட்டத்தில் எல்லாம் சரியாக்கப்பட்டுவிட்டன  என்பதில்லை. இன்றும் கூட ஒரு இந்துக் கணவன் தன் மனைவி அவனது பெற்றோருடன் இருக்க மறுக்கிறாள் எனச் சொல்லி அவளை விவாகரத்து செய்ய முடியும். கூட்டுக் குடும்ப அமைப்பு சிதைந்து போன பின்னும் கூட இந்துக் குடும்பம் என்றாலே கூட்டுக் குடும்பம் என நம் அரசியல் சட்டம் ஏற்றுக் கொள்வதன் விளைவு இது. கூட்டுக் குடும்பம் என்கிற பெயரில் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 80 சதம் உள்ள இந்துக்கள் வரிச் சலுகை பெறுவதால் ஆண்டுக்குப் பல லட்சம் கோடி இழப்பு நாட்டுக்கு ஏற்படுகிறது.

சொல்லப்போனால் பொதுத் தனிநபர் சட்டத்தை வழிகாட்டு நெறிமுறைகளில் வைத்ததே தவறு. பொது தனிநபர் சட்டம் மத்திய அரசுக்கு உட்பட்டது மட்டுமல்ல. மாநில அரசாங்கச் சட்டங்களும் உண்டு. அம்பேத்கரைப் பொறுத்த மட்டில் அவர் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதங்களைக் காட்டிலும் இந்து மதத்தில் பெண்கள் மற்றும் அடித்தள மக்கள் மீதான வன்முறைகளும் ஒதுக்கல்களும் அதிகம் என்பதால் அதை முதலில் சரி செய்தாக வேண்டும் என்பதையே முக்கிய கரிசனமாகக் கொண்டிருந்தார்.  ஆனால் அன்றைய சூழலில் அதற்கு ஆதரவில்லை. அதனால்தான் பொது சிவில் சட்டம் என்பதை வழிகாட்டு நெறிமுறையில் பொதிந்து அப்போதைக்கு அது ஒத்திவைக்கப்பட்டது.  அடுத்தடுத்த ஆண்டுகளில் அம்பேத்கர் இந்துச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தபோது அவருக்கு ஆதரவில்லை. மனம் நொந்து அவர் பதவி விலகினார். பின்னாளில் நேரு இந்துச் சட்டத் தொகுதியைத் தனித்தனியாகப் பிரித்துச் சட்டமாக்கினாலும் அவற்றில் பல சமரசங்களும் இடம் பெற்றன.

இரண்டு அம்சங்களை இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1.இப்படிச் செய்ததன் மூலம் ‘பொது சிவில் சட்டம்’ இயற்றுதல் என்கிற அரசியல் சட்ட நோக்கத்திலிருந்து விலகி ‘இந்துத் தனிநபர் சட்டம்’ மட்டும் திருத்தப்பட்டது. இதன் மூலம் ஒரு வகையில், பொது சிவில் சட்டம் அல்லது பொது தனிநபர் சட்டத்தைச் சாத்தியப் படுத்துவது சிக்கல் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது.

  1. இந்துத் தனிநபர்சட்டம் திருத்தப்பட்டதால் பெண்களுக்கோ, அடித்தள மக்களுக்கோ எந்தப் பெரிய பலனும் ஏற்பட்டுவிடவில்லை. எடுத்துக்காட்டாக இன்று இந்துக்கள் மத்தியில் பலதாரமணம் சட்டபூர்வமாக் ஒழிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அளவில் உள்ள புள்ளி விவரங்களின்படி பலதார மணத்தைப் பொறுத்த மட்டில் முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் மத்தியில் பெரிய வித்தியாசங்கள் இல்லை. இந்துக்களாயின் முதல் தாரம் தவிர மற்ற தாரங்கள் concubine, keep, mistress, வைப்பாட்டி என்றே அழைக்கப்படுகின்றனர். நீதிமன்றமும் அதே சொற்களையே பயன்படுத்துகிறது. அவர்களுக்கு சொத்து, ஜீவனாம்சம் என மனைவிக்குச் சமமான பாதுகாப்புகளும் கிடையாது. முஸ்லிம் ஆண்கள் நான்குதாரங்கள் வரை திருமணம் செய்து கொள்ள அனுமதி இருந்தாலும் எல்லோரும் அப்படிச் செய்வதில்லை என்பது ஒரு பக்கம். அப்படியே ஒருவர் திருமணம் செய்துகொண்டாலும் அவரது மனைவியர் எல்லோரும் சட்டபூர்வமாக அனைத்து உரிமைகளையும் பெற்றவர்கள் ஆகின்றனர். அதோடு முஸ்லிம் பெண்களுக்குக் கணவன் வீட்டார் வழங்கும் ‘மகர்’ எனும் பாதுகாப்பும் உண்டு.

இந்துச் சமூகத்திற்குள் விதவைகள் முதலானோரின் நிலையில் இன்று வரவேற்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றால் அவை சட்டத் திருத்தங்களின் மூலமாக ஏற்பட்டவையல்ல. மாறாக சமூகத்திற்குள்ளிருந்தும், புற உலகில் ஏற்பட்டுள்ள பௌதீக மாற்றங்களின் ஊடாகவும்தான் இது நிகழ்ந்துள்ளது.

இத்தகைய மாற்றங்கள் இப்போது முஸ்லிம்கள் மத்தியிலும் ஏற்பட்டுக் கொண்டுதான் உள்ளன. இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இன்று முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து  மோடியும் மற்றவர்களும் சொல்வதென்ன? 1. முஸ்லிம் பெண்களை அவர்களின் கணவர்கள் மும்முறை ‘தலாக்’ எனச் சொல்லி எளிதில் விவாகரத்து செய்துவிடுகின்றனர். 2. விவாகரத்து செய்யப்பட்டவர்களுக்கான ஜீவனாம்சம் ‘இத்தா’ எனப்படும் அடுத்த மூன்று மாதவிடாய்க் காலத்திற்கு (menstrual cycles) மட்டுமே அளிக்கப்படுகிறது. 3, மணவிலக்கு பெற்றுப் பிரிந்த தம்பதியர் மீண்டும் சேந்து வாழ வேண்டுமானால் அந்தப் பெண் வேறு ஒருவரைத் திருமணம் செய்து விவாகரத்து பெற வேண்டும்.

இவை பெண்களுக்கு எதிரானவை என்பதில் ஐயனில்லை.  முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் இவை ஏற்றுக் கொள்ளப்பட்டவைதான். ஆனால் நடைமுறையில் இவை இன்று நீதிமன்றத் தலையீட்டின் மூலம் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஷா பானு வழக்குத் தீர்ப்பு (1895 SCR (3) 844) , ராஜிவ் காந்தி இயற்றிய முஸ்லிம் பெண்கள் சட்டம் (The Muslim Women (Protection of Rights on Divorce) Act, 1986) ஆகியவற்றுக்குப் பின்னும் கூட இந்திய உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றங்களும் முத்தலாக், இத்தா காலத்திற்கு மட்டுமே ஜீவனாம்சம் முதலியவற்றை ஏற்பதில்லை. டானியல் லத்திஃபி வழக்கில் (Writ Petition (civil) 868 of 1986 ) வழங்கப்பட்ட தீர்ப்பில் (2011) இத்தா காலத்திற்கு மட்டுமின்றி விவாகரத்து செய்யப்பட்ட மனைவி உயிருடன் இருக்கும் வரை அல்லது வேறு ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளும் வரை அவருக்கு ஜீவனாம்சம் அளிக்க வேண்டும் எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  Shamim Ara v State of UP வழக்கு (2002) மற்றும் Dagdu Pathan v Rohimbi Pathaan (2002) ஆகிய வழக்குகளில் தொடர்ந்து மும்முறை தலாக் சொல்வது, சாட்சிகளின்றி தலாக் சொல்வது, போதிய இடைநிலையாளர்களை வைத்து சமரச முயற்சிகள் செய்வது ஆகிய நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாத விவாகரத்துகள் செல்லாது எனத் தீர்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன (விவரங்களுக்குப் பார்க்க: amarx.in/ முத்தலாக் சொல்லிவிட்டால் முஸ்லிம் பெண்களின் கதி அவ்வளவுதானா?

 

இந்தத் தீர்ப்புகளுக்குப் பின் இன்று எந்த ஒரு முஸ்லிம் பெண்ணும் இந்த உரிமைகளைக் கோரி நீதிமன்றங்களை அணுகினால் அவர்களுக்கு நீதிவழங்கப்படுகிறது. மேற்குறித்த நிபந்தனைகள் மீறப்பட்ட தலாக்குகள் ரத்து செய்யப்படுகின்றன. புதிய சட்டத் திருத்தங்கள் செய்யாவிட்டாலும் இவை இன்று நீதிமன்றங்கள் மூலம் உருவாக்கப்பட்ட சட்டக் கொள்கைகளாக (judicially evolved principles) ஏற்புப் பெற்றுவிட்டன. எப்படி ‘அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை’ என்பது இன்று சட்ட ஏற்பு பெற்றுள்ளதோ அப்படி.

சரி, இதை முஸ்லிம் சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளதா எனக் கேள்வி எழுவது இயல்பு. இந்தப் பிரச்சினை இப்போது உருவான பின்னணியைப் பார்ப்போம். சில மாதங்கள் முன் ஷயாரா பானு எனும் முஸ்லிம் பெண் தனக்குச் சொல்லப்பட்ட தலாக் செல்லாது எனவும், தான் கணவர் வீட்டில் இருந்தபோது வன்முறைக்குள்ளாக்கப் பட்டதாகவும் வழக்குத் தொடர்ந்தார். இவரது வழக்குரைஞரான பாலாஜி சீனிவாசன் எனும் ஒரு பா.ஜ.க அனுதாபி ஊடக கவனம் பெறும் பொருட்டு இந்த வழக்கைத் திசை திருப்பினார். தலாக்கை ரத்து செய்தல், ஜீவனாம்சம், குடும்ப வன்முறைக்குத் தண்டனை என்கிற வேண்டுதல்களை நீதிமன்றம் முன் வைக்காமல் ‘பொது சிவில் சட்டம் இயற்ற வேண்டும்’ என்கிற வேண்டுதலை வைத்தார். உடனடியாக ‘அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (AIMPLB)’ இதில் தலையிட வேண்டியதாயிற்று. தேன் கூட்டைக் கலைத்தது போல இன்று இதை முஸ்லிம்களைத் தாக்கும் ஆயுதமாக இந்துத்துவம் கையில் எடுத்துள்ளது. நரேந்திர மோடிவரைக்கும் தங்களின் ‘முஸ்லிம் அன்பை’க் காட்ட ஒரு வாய்ப்பாகி விட்டது.

இந்தப் பிரச்சினையில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சத்திற்கு வருவோம். எதிர்பார்த்தது போலவே ஆணாதிக்க மதிப்பீடுகள் நிறைந்த முஸ்லிம் சட்ட வாரியம் இதை எதிர்த்தது. அதன் மனுவில் காணப்பட்ட சில வாசகங்கள் பெண்களால் கடுமையாக கண்டிக்கப்பட்டன. எனினும் முஸ்லிம் சட்ட வாரியம் முன்வைத்த வேண்டுதலில் இரண்டு அம்சங்கள் வரவேற்கத்தன. 1. சற்று முன் குறிப்பிட்ட டானியல் லத்தீஃபி வழக்கைச் சுட்டிக்காட்டி  உயிருள்ளவரை ஜீவனாம்சம் வழங்குதல் முதலியவற்றை சட்டவாரியமும் ஏற்றுக் கொண்டது. 2.அந்தப் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட வன்முறையைப் பொருத்த மட்டில் சில ஆண்டுகள் முன் இயற்றப்பட்ட எல்லா மதங்களுக்கும் பொதுவான ‘குடும்ப வன்முறைச் சட்ட’த்தைப் பயன்படுத்தி உரிய நிவாரணம் பெறலாம் என்பதையும் ஒத்துக் கொண்டுள்ளது.

ஆக, நீதிமன்றங்கள் முஸ்லிம் தனிநபர்ச் சட்டங்களில் இப்போது ஏற்படுத்தியுள்ள திருத்தங்களை ஓரளவுக்குச் சட்ட வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதையே இந்திய மக்களின் பொதுவான கருத்தாக நாம் கருத இடமுண்டு.

தனிநபர் சட்டங்கள் என்பன ஒரு வகையில் சிறுபான்மைச் சமூகங்களின் அடையாளங்களில் ஒன்றாகிவிடுகின்றன. மேலும் மேலும் பாதகமான அரசியல் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுத் தாங்கள் இந்தியச் சமூகத்திற்குள் இரண்டாம் நிலையினராக முத்திரை குத்தப்படும் நிலையை மனதில் கொண்டு இன்று முஸ்லிம்கள் கொண்டுள்ள கவலையையும், எதிர்வினையையும் நாம் மதிப்பிட வேண்டும்.

ஒட்டு மொத்தமாக இந்தப் பிரச்சினையை ஆராயும்போது நாம் வரக்கூடிய முடிவுகளை இப்படிச் சுருக்கலாம்.

  1. பல்வேறுபட்ட சமூகங்கள் அருகருகே வசிக்கும் இந்தியா போன்ற நாட்டில் ‘பொது சிவில் சட்டம்’, அல்லது ‘பொது தனிநபர் சட்டம்’ என்பன சாத்தியமில்லை. அதே நேரத்தில் ஒவ்வொரு மதத்திற்குமான தனி நபர்ச் சட்டப் பிரிவுகள் திருத்தங்களே செய்யப்படக் கூடாதவை என்பதல்ல. அவை திருத்தங்களுக்கு உட்பட்டவையே.
  2. தனிநபர்ச் சட்டங்களுக்கும் அரசியல் சட்டம் வரையறுக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் இடையில் உள்ள முரண்களும், இடைவெளிகளும் காலப் போக்கில் களையப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. முஸ்லிம்களுக்குள்ளேயும் முற்போக்கு சக்திகளால் இவை முன்னெடுக்கபடுகின்றன. ‘பாரதீய முஸ்லிம் மகிள அந்தோளன் (BMMA)’ எனும் அமைப்பு இது தொடர்பாக 50,000 க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்களிடம் கையொப்பங்கள் பெற்றுள்ளது. பல முஸ்லிம் ஆண்களும் அதில் கையொப்[பமிட்டுள்ளனர். இர்ஃபான் ஹபீப், ஜாவேத் ஆனந்த், ஃபைஸான் முஸ்தபா முதலான முஸ்லிம் அறிவுஜீவிகளும் இதை முன்னெடுக்கின்றனர். இது வரவேற்கப்பட வேண்டும்.
  3. இது மிகவும் உணர்வுபூர்வமான பிரச்சினை. உள்ளுக்குள் எழும் சீர்திருத்தக் கருத்துக்கள் காலப்போக்கில் வளர்ச்சி பெறும்வரை காத்திருக்கத்தான் வேண்டும். உரிய ஜனநாயகபூர்வமான விவாதங்கள், கருத்தொருமிப்பு ஆகியவற்றிற்கு இடமில்லாமல் அவசரமாகத் தலையிட்டு சட்டம் இயற்றுவதை ஏற்க முடியாது. இதை அரசியலாக்கி மக்களைப் பிளவு படுத்தும் இந்துத்துவ அரசியல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று..

 

பெரியார் ஈ.வெ.ராவும் இஸ்லாமும்

(சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கட்டுரை)

இந்துத்துவச் சொல்லாடல்களுக்கும்  நடைமுறைகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியவர்கள் என பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களுக்கு இணையாக இந்திய வரலாற்றில் யாரையாவது சொல்ல முடியுமானால் அது புத்தரும் அம்பேத்கரும் மட்டுமே. இவர்களில் புத்தரையும் அம்பேத்கரையும் கூட இன்று இந்துத்துவ சக்திகள் எதையாவது சொல்லித் தம்முள் வாங்குவதற்குச் சதி செய்து கொண்டிருக்கும் சூழலில் இறுதிவரை இந்துத்துவ சக்திகளால் தொடமுடியாத நெருப்புத்துண்டமாக விளங்கக்கூடியவராகப் பெரியார் ஒருவரே உள்ளார். இந்நிலையில் இன்று இந்துத்துவ எதிர்ப்பில் அக்கறையற்ற சக்திகள் இன்னொரு வகையில் பெரியார் மீது பழி தீர்க்க முயற்சிக்கின்றனர். பெரியார் முஸ்லிம்களுக்கு எதிராக இருந்தார் என்ற பொய்யான அவதூறைக் கட்டவிழ்த்து விடுவதுதான் அது. ஆனால் பெரியாரின் சுமார் ஐம்பது ஆண்டுகால அரசியல் வாழ்வையும் அவரது பேச்சுக்களையும் கூர்ந்து கவனிப்போருக்கு இப்படிச் சொல்வது எத்தனை பெரிய அபத்தம் என்பது விளங்கும். இது தொடர்பான அவரது சில கொள்கைகளையும் செயற்பாடுகளையும் மட்டும் பார்ப்போம்.

 

பெரியாரது அரசியல் வாழ்வின் தொடக்கப்புள்ளியாக வைக்கம் போராட்டத்தைக் கருதலாம். இது குறித்து பெரியாரே எழுதியுள்ள கட்டுரை அவரது சிந்தனைத் தொகுப்புகளில் உள்ளது. ஈழவர், புலையர் முதலான தீண்டத்தகாத  மற்றும் சூத்திரச் சமூகத்தினர் பொதுச்சாலையில் நடக்கக்கூடாது என்பதை எதிர்த்து அப் போராட்டம் நடைபெற்றது(1925).

போராட்டத்தின் உச்சகட்டத்தில் திருவிதாங்கூர் ராணி காந்தியாரோடு பேச்சு நடத்தினார். சாலையைத் திறந்துவிடத்தயார் எனவும் அதற்காக கோயிலுக்குள் நுழைய வேண்டும் என்று சொல்லக்கூடாது என்றும் ராணி விதித்த நிபந்தனையைக் காந்தி ஏற்றுக்கொள்ள போராட்டம் முடிவுக்கு வருகிறது.

பெரியார் இதை ஒப்புக் கொள்ளவில்லை. கோயிலுக்குள் நுழைவது என்கிற பிரச்சாரத்தைத் தொடர்கிறார். பெரியார் சொல்கிறார்.

“அடுத்து எர்ணாகுளத்தில் ஒரு மாநாடு என் தலைமையில் கூட்டப்பட்டது. அதில் சாதி ஒழிப்புக்காக சாதி இல்லாத மதமாகிய இஸ்லாம் மதத்துடன் இந்துக்கள் சேர்ந்து விடுவது என்று தீர்மானம் நிறைவேற்றக் கொண்டு வரப்பட்டது. இது செல்வாக்குக்குட்பட்டவர்கள் கிறிஸ்துவ மதத்தில் சேர்வது என்று தீர்மானம் கொண்டு வந்தார்கள். மாஜி மந்திரி ஐயப்பன் அவர்கள் இஸ்லாம் மதத்திற்கு போய்ச் சேருவது என்பதைத் திருத்தி போட வேண்டும் என்று சொல்லி ஏக மனதாக நிறைவேற்ற செய்தார். இஸ்லாத்தில் சேருவது என்ற தீர்மானம் வந்த அன்றைக்கே ஐம்பது பேர்கள் முஸ்லிம்களாகிவிட்டார்கள். பிறகு வெளியிலும் பலர் மதம் மாறிவிட்டார்கள், இது ஒரு பெரிய கலக்கு கலக்கிவிட்டது.”(விடுதலை 9.1.1959)

விசயம் அத்தோடு நிற்கவில்லை. இஸ்லாமாக மாறிய புலையர்களுக்கும் நாயர்களுக்கும் பலமான மோதல் ஏற்பட்டது. ஒருவர் செத்தும் போனார். இன்னும் பலர் இஸ்லாமாவது என்ற நிலை ஏற்பட்டவுடன் அன்றைய திவான் சி.பி.ராமசாமி ஐயரின் ஆலோசனையின்படி கோயில் கதவுகள் திறக்கப்பட்டன.

தீண்டத்தகாதவர்களின் விடுதலைக்கான வழிகளில் முதன்மையானது மதமாற்றமே, அதிலும் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதே என்பதில் பெரியார் உறுதியாக இருந்தார். எங்காவது தீண்டத்தகாதவர்களுக்கு நன்மைகள் ஏற்பட்டிருக்கிறது என்றால் அது மதமாற்றம் என்கிற அச்சுறுத்தலின் விளைவாகத்தான் நடந்துள்ளது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

உலகத்திலேயே மிகப்பெரிய கொடுமை தீண்டாமைதான் என்று சொன்னதோடு நிற்காமல்,“இந்த வியாதி மிகப் பெரியது. இது புற்று தொழுநோய் போன்றது. வெகு நாளைய நோய்” என்றும்,  இந்த நோயிலிருந்து விடுதலை பெற ஒரே வழி இந்து மதத்தை விட்டு வெளியேறுவதுதான் எனத்திரும்பத் திரும்பவும் சொன்னார். வெளியேறுவது என்று சொன்னதோடும் நிறுத்திவிடவில்லை.

“(இந்த நோய்க்கு) ஒரே மருந்துதான். அது இஸ்லாம்தான்! இதைத்தவிர வேறு மருந்து இல்லை. இது இல்லாவிட்டால் வேதனைப்பட வேண்டியதுதான். நோய் தீர்ந்து எழுந்து நடக்க இன்றைய நிலையில் இஸ்லாம்  என்னும் மருந்துதான். இதுதான் நாடு கொடுக்கும். வீரம் கொடுக்கும். நிமிர்ந்து நடக்கச் செய்யும் மருந்தாகும்.” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் (‘இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து’ என்னும் பெயரில் குடியரசு பதிப்பகத்தால் இந்த உரை சிறு நூலாக 1947ல் வெளியிடப்பட்டது.)

 

தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக மத மாற்றத்தை முன் மொழிந்த இன்னொரு பெருந்தலைவரான அம்பேத்கரின் முயற்சிக்கு அகில இந்திய அளவில் பெருந்துணையாக நின்றவரும் பெரியாரே. தொடக்கத்தில் முஸ்லிம் மதத்திற்கு மாறுவது என்கிற நிலைப்பாட்டையும் அம்பேத்கர் சிந்தித்தார். 1930ல் முஸ்லிமாக மாறுவது என அம்பேத்கர் சொன்னபோது,

“எவ்வளவோ பெரிய பெரிய ஆட்களெல்லாம் அதை கண்டித்தார்கள். மாளவியா, விஜயராகவாச்சாரியார் போன்றவர்களெல்லாம், ‘அம்பேத்கர் அவர்களே உங்களுடைய முடிவை மீண்டும் பரிசீலனை செய்யுங்கள்’ என்பதாகத் தந்தி கொடுத்தார்கள் அப்போது தோழர் அம்பேத்கர் அவர்களுக்கு நானும் ஒரு தந்தி கொடுத்தேன். என்னவென்றால், நீங்கள் ஒண்டியாகப் போகக்கூடாது. குறைந்தது ஒரு லட்சம் பேரோடு மதம் மாற வேண்டும். அப்போது தான் முஸ்லிம் மதிப்பான்… ஒரு லட்சம் பேரோடு தாங்கள் அங்கு போகும்  போது நானும் ஒரு பத்து இருபதாயிரும் பேர்கள் தருகிறேன் என்பதாகத் தந்தி கொடுத்தேன்.” (ஆனைமுத்து தொகுப்பு, பக். 1033)

இப்படியாக அவரை இஸ்லாமுக்கு மாற ஊக்குவித்தவர் பெரியார்.

அம்பேத்கர் இறுதியில் பௌத்தத்திற்கு மாறியபோது கூட இஸ்லாமுக்கு மாறுவதே சரியாக இருக்கும் என்ற கருத்து பெரியாருக்கு இருந்தது. இது குறித்து,

“அம்பேத்கர் பௌத்தத்தில் சேருகிறேன் என்று சொன்னவுடன் எப்போதும் போல பலர் எதிர்த்தார்கள். ஆனாலும் இஸ்லாம் ஆவது என்றால் பயப்படுகிற அளவுக்கு பௌத்தர் ஆகிவிடுவது என்று சொல்லுவதற்கு இந்து மதத்தார்கள் (பார்ப்பனர்கள்) பயப்படமாட்டார்கள். ஏனென்றால் பௌத்தத்தை இந்து மதத்தோடு ஏறக்குறைய கலர வைத்து விட்டார்கள்.”

என்று அவர் குறிப்பிடுவதிலிருந்து (சென்னை சொற்பொழிவு 13.5.1952) இது விளங்கும்.

ஏதோ இஸ்லாமுக்கு மதம் மாறுவது என்கிற அளவோடு பெரியாரின் முஸ்லிம் ஆதரவு நின்று விடவில்லை. முஸ்லிம் அரசியலுக்கும் அவர் ஆதரவாக நின்றார். விடுதலைக்கு முந்தைய முஸ்லிம் அரசியலில் இரண்டு கூறுகள் முக்கியமானவை:

  1. முஸ்லிம்களுக்கானத் தனி நாடு -பாகிஸ்தான் பிரிவு
  2. முஸ்லிம்களுக்குத் தனி வகுப்பு வாரி ஒதுக்கீடு.

இந்த இரண்டு கோரிக்கைகளையும் பெரியார் ஆதரித்தார். முஸ்லிம் இந்தியா என்ற கோரிக்கை பற்றி பேச வருமபோது,
“ஜனாப் ஜின்னா இந்தப் பிரிவினைக்கு கூறும் காரணங்கள் மறுக்க முடியாதன. அவரது கோரிக்கை நியாயமானதே. காந்தியார் சதா காலமும் பச்சையாகவே தாம் விரும்பும் சுயராஜ்ஜியம் ராம ராஜ்ஜியம் தானென்றும், தமது வாழ்க்கையின் இலட்சியமே இந்து மதத்தைப் புனருத்தாரணம் செய்வது தானென்றும் கூறிக் கொண்டிருக்க, தோழர் சாவர்கார் போன்ற  இந்து மகாசபைத் தலைவர்கள் ‘இந்துஸ்தானம் இந்துக்களுக்கே’ என்ற போர் முழக்கம் செய்து கொண்டுமிருக்கக் கண்ட பிறகும் முஸ்லிம்கள் கைகட்டி வாய்பொத்தி இருப்பார்கள்  என்று யார்தான் எதிர்பார்க்க முடியும்?

இந்து முஸ்லிம் பிரச்சனை தீர்க்கப்பட முடியாதோ என்று திகைக்குமளவில் இருக்கிறது. இதனைத் தீர்த்துக் கொள்ள ஜனாப் ஜின்னாவின் திட்டமே அறிவு ததும்புவது. நான் ஜனாப் ஜின்னாவின் கோரிக்கையை ஆதரிப்பதோடு,மற்றொரு முக்கியமான அம்சத்தையும் வற்புறுத்த விரும்புகிறேன். முஸ்லிம்கள் ‘முஸ்லிம் நாடு’ என இந்தியாவில் தனி நாடு பிரித்துக் கொள்ள முடியும். ஆனால் இந்துக்கள் முடியாது. ஏனெனில் இந்துக்கள் என்று கூறப்படும் தொகுப்பில் பலப்பல வர்க்கத்தார் உள்ளனர்”.

எனப் பெரியார் இக்கோரிக்கையை முழுக்க முழுக்க ஆதரித்தார். (குடியரசு அறிக்கை-31.3.1940).

இந்தியாவுக்கு ‘இந்துஸ்தானம்’ எனப்பெயர் வைப்பதைக்  காட்டிலும், ‘திராவிடக் கொள்கையை உடைய பாகிஸ்தான்’ என்று பெயர் வைக்கலாம் எனக் கூட அவர் ஒரு முறை குறிப்பிட்டார்.

முஸ்லிம்களுக்கு உரிய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பது இன்றளவும் நியாயமான ஒரு கோரிக்கை. பெரியார் அன்று சொன்னார்:

“இந்திய அரசாங்கத்தில், இந்திய ஜனங்களில் நான்கில் ஒரு பங்குக்கு மேற்பட்ட பெரிய சமூகத்தாராகிய முகம்மதிய சமூகத்தாரர்களுக்குப் பங்கு உண்டா இல்லையா?

அவர்கள் ஏழரைக் கோடிப் பேரும் இனிமேல் இந்தியாவை விட்டுப்போக முடியுமா? அவர்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டுமானால் இராஜ்ய விஷயத்திலும் மத விஷயத்திலும் நமக்குச் சரியான அந்தஸ்து பெற்றுத்தானே ஆக வேண்டும்? வகுப்பு பிரதிநிதித்துவம் இல்லாவிட்டால் அவர்களுக்குச் சம உரிமைகிடைத்துவிடுமா?” (குடிஅரசு, தலையங்கம் 14.2.1926)

தேர்தலில் மட்டுமின்றி அரசுப் பணிகளிலும் முஸ்லிம்களுக்கு உரிய பங்களிக்கப்படவேண்டும் என்பதே பெரியாரின் கருத்தாக இருந்தது.

முஸ்லிம்களை ‘அந்நியர்களாக’ முத்திரை குத்தும் சதிக்கு எதிராக அவர்களைத் திராவிடர்கள் என அணைத்துக் கொள்ளும் போக்கையும் பெரியாரிடம் காணமுடியும். பெரியாரைப் பொருத்தமட்டில் பார்ப்பனர்களே அந்நியர்கள் (பார்க்க: ஆனைமுத்து, தொகுப்பு, பக்.32. 55.)

இஸ்லாம் மீது பெரியாருக்கு இருந்த பற்றுக்கான காரணங்களையும் அவர் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறார். சுருக்கம் கருதி மேற்கோள்களைத் தவிர்த்து அவர் கூறுகிற காரணங்களை மட்டும் சுட்டிக் காட்டுகிறேன்.

1.இஸ்லாம் மதத்தில் பல கடவுள் வணக்கம் கிடையாது. மூட நம்பிக்கைகள் கிடையாது. விக்கிர ஆராதனைகள் கிடையாது (ஆனைமுத்து தொகுப்பு பக்.301,302).

2.சமத்துவமும் சகோதரத்துவமும் நிறைந்த ஒரே மதமாக இஸ்லாம் மட்டுமே உள்ளது. தீண்டத்தகாதவர் என்றோ வேதத்தை படிக்கக் கூடாதவர் என்றோ ஆலயத்திற்குள் அல்லது பொது இடங்களுக்குள் நுழைய முடியாதவர் என்றோ இங்கு யாரும் தடுக்கப்படுவது இல்லை(ஆனைமுத்து தொகுப்பு பக்.32.33).

இஸ்லாம் என்றால் ஏதேனும் ‘லுங்கி’ கட்டிக் கொள்வது அல்லது தாடி வைத்துக் கொள்வது என்று நினைக்க வேண்டாம். “இஸ்லாம் என்பது சாந்தி, பணிவு, பக்தி என்ற பொருள்படும் அரபுச் சொல். இஸ்லாம் என்பது சகோதரத்தன்மை என்பது. இவ்வளவு தான்” என்று சொன்னபெரியார்,

“நம்மிலும் பல பெரியார்கள் ஒன்றே குலம் ஒருவனே  தேவன் என்பது போலெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் அவைகள் என்றும் ஏட்டளவிலே இருக்கின்றனவே தவிர நடப்பில் இல்லை. ஆனால் முஸ்லிம் சமுதாயத்திலே நடப்பிலே ஒரே ஆண்டவன் வழிபாடும் மக்களுக்குள் பிறவியில் பேதமற்ற நிலைமையும் இருந்து வருகின்றன”

என்பதைக் சுட்டிக் காட்டினார்.

நபிகள் நாயகத்திற்கு விழா எடுத்த ஒரே முஸ்லிம் அல்லாத இந்திய அரசியல் தலைவர் பெரியார் ஒருவராகத்தான் இருக்கமுடியும். ‘நான்தான் கடைசி நபி’ என நாயகம் சொன்னதைப் பெரியார் விதந்தோதுகிறார்.

“இன்றைய வரையிலே அவருக்குப்பின்னால் இந்தத் துறைகளில் அவர் சொன்ன கொள்கை கருத்துக்களை விட மேலானதாகச் சொல்லுவதற்கு எவரும் தோன்றவில்லை” என முத்தாய்ப்பு வைக்கிறார் (சென்னை சொற்பொழிவு, 20.12.1953).

“திரு. முகம்மது  நபியைப் பற்றி யார் எப்படி நினைத்துக் கொண்டாலும் நான் அவரை ஒரு மனிதர் என்றும், மனிதரைப் போலவே தாயும் தகப்பனும் கூடி கருத்தரித்து பிறந்தவர் என்றும் கருதித்தான் அவரால் செய்யப்பட்டதாகச் சொல்லும் விஷயங்களில் அனேகத்தை நான் புகழ்கிறேன். அதற்காகவே அவரையும் நான் பாராட்டுகிறேன்.அப்படிச் சொல்லப் படுபவைகளே அந்த மார்க்கத்திற்கு ஒரு பெருமை என்றும்  நினைக்கிறேன்…. ஆனால் மற்ற மதத்துக்காரர்களோ தங்கள் மதத் தலைவரை ஒரு மனிதர் என்றலே கோபித்துக் கொள்கிறார்கள். கழுதை, நாய், குதிரை இவற்றினுடைய வயிற்றிலிருந்து பிறந்தவர் என்றாலும் ஏற்றுக் கொள்கிறார்கள்”

என்றெல்லாம் சொல்லிச் செல்வது குறிப்பிடத்தக்கது (சாத்தான்குளம், 28.7.1931).

அப்படியானால் இஸ்லாமையும் முஸ்லிம் அரசியலையும் பெரியார் எங்குமே விமர்சிக்கவில்லையா? விமர்சிக்கிறார். அந்த விமர்சனங்களின் அடிப்படையில் தான் இன்று சில விஷமிகள் பெரியாரை இஸ்லாமுக்கு எதிராக நிறுத்த முயற்சிக்கின்றனர். இந்தியாவிற்கு வந்த இஸ்லாமில் கலந்து போன சில மூட நம்பிக்கைகளை, இந்து பழக்க வழக்கங்களையே அவர் கண்டிக்கிறார்.

“ஆனால் நான் இஸ்லாம் மதக் கொள்கைகள் முழுவதையும் ஒப்புக் கொண்டதாகவோ எல்லாம் சுயமரியாதைக் கொள்கைகள் என்பதாகவோ யாரும் தீர்மானித்து விடாதீர்கள். அதிலும் பல விரோதமன கொள்கைகளைப் பார்க்கிறேன். இந்து மதத்தில் எதை எதை குருட்டு நம்பிக்கை, மூடப்பழக்கம், பாமரத்தன்மை என்கிறமோ அவை போன்ற சில நடவடிக்கைகள் இஸ்லாம் மதத்திலும் சிலர் செய்கிறார்கள்” (சாத்தான்குளம், 28.7.1931).

என்று சொல்கிற பெரியார் அத்தகைய மூட நம்பிக்கைகளாகச் சமாதி வணக்கங்கள், பஞ்சா அடித்தல், சந்தனக்கூடு, தீமிதி, கூண்டு உற்சவம், கொடிவணக்கம், அல்லாசாமி பண்டிகை முதலியவற்றைப் பட்டியலிடுகிறார். இத்தகைய பழக்க வழக்கங்கள் இஸ்லாமியருக்குரியவையல்ல என இன்று பல இஸ்லாமிய மத அறிஞர்களே குறிப்பிடுவது இங்கு சிந்திக்கத்தக்கது. இறுதியாக,

“இவற்றையும் மார்க்கக் கொள்கைகளோடு சேர்த்துக் கொண்டிருக்கிறவர்களையும் சேர்த்து வைத்துக் கொண்டு இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்கம் என்று எப்படி சொல்ல இயலும்? கோபிப்பதில் பயனில்லை. மற்ற மதங்களை விட இஸ்லாம் மதம் மேலானது என்பது என் அபிப்ராயம். ஆனால் அதில் இனிச் சிறிது கூடச் சீர்திருத்தம் வேண்டியதில்லை என்பவர்களுடன் முரண்பட்டவன்” (களக்காடு, 23.12.1950).

என்கிறார். பகுத்தறிவுக்குட்பட்ட நவீன மதமாக இஸ்லாம் திகழ்வதில் தவறேதும் வந்துவிடலாகாது என்கிற அக்கறையோடு இந்த விமர்சனங்கள் அமைந்துள்ளன என்பது முக்கியம்.

அதே போல் முஸ்லிம் அரசியலை பெரியார் விமர்சிப்பது என்பது கூட 1948க்குப் பின்புதான். பிரிவினைக்குப் பிறகு இங்குள்ள முஸ்லிம் அமைப்புகள் முழுக்க முழுக்க காங்கிரஸ் ஆதரவு நிலை எடுத்த போதும், 1962க்குப் பின்பு ராஜாஜி தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்க முடிவெடுத்த போதும் தான் பெரியார் முஸ்லிம் அரசியலை விமர்சித்தார். பெரியார் வெறும் சமூக சீர்த்திருத்தவாதியல்ல. ஐம்பது ஆண்டு காலம் இந்த மண்ணில் தீவிரமாக அரசியல் போராட்டம் நடத்திய போராளி. பார்ப்பன எதிர்ப்பு என்பது அவரது அரசியலின் ஆணி வேராக இருந்தது. அதற்கு முஸ்லிம் மற்றும் தலித் அரசியல் துணையாக இருக்கும் என நம்பினார். அப்படி இல்லை என அவர் கருதியபோது அவரது அரசியல் நோக்கிலிருந்து அந்தப்போக்குகளை விமர்சித்தார். எனினும் அதற்காக இதுவரை தாம் முன்வைத்த அவரது கருத்துகள் எதையும் அவர் மாற்றிக் கொண்டதில்லை. கடைசி வரை இஸ்லாமிய ஆதரவிலேயே அவர் நின்றார்.
“நாத்திகம் எனது முக்கிய கொள்கை அல்ல. இஸ்லாமியர்கள் சுயமரியாதை இயக்கத்தில் சேருங்கள்” எனப் பெரியார் அறைகூவல் விடுத்ததையும் ஜின்னா அவர்கள் தென்னக முஸ்லிம்கள் சுயமரியாதை இயக்கத்திலேயே இருக்கலாம் எனச் சொன்னதையும் நாம் மறந்து விடலாகாது.

இஸ்லாமையும், முஸ்லிம்களையும், முஸ்லிம் அரசியலையும் இத்தனை அப்பட்டமாக ஆதரித்த ஒரு முஸ்லிம் அல்லாத தலைவரை இந்திய அரசியலில் பார்க்க இயலாது. அதனால்தான் இந்துத்துவம் பெரியாரை மட்டும் அண்ட முடியாமல் விலகி நிற்கிறது.

குறிப்புகள்
1.அப்படியானால் ஏன் பெரியார் மதம் மாறவில்லை எனக்கேள்வி எழுவது இயற்கை. அம்பேத்கரிடம் இதற்கான பதிலைப் பெரியார் கூறியுள்ளார்.

“அம்பேத்கர் அவர்கள் என்னைப் பார்த்து என்ன இராமசாமி நாம் இப்படி பேசிக் கொண்டே இருந்தால் என்ன பலன் ஏற்பட முடியும்? வாருங்கள். நாம் இரண்டு பேரும் புத்த மதத்தில் சேர்ந்துவிடுவோம் என்றார். நான் சொன்னேன். ’ரொம்ப சரி, இப்போது முதலில் நீங்கள்  சேருங்கள், நான் இப்போது சேருவது என்பது அவ்வளவு ஏற்றதல்ல. ஏனென்றால் தமிழ்நாட்டில் நான் இப்போது சாதி ஒழிப்பைப் பற்றித் தீர்மானமாகப்  பிரச்சாரம் செய்து வருகிறேன். இந்தியக் கடவுள்கள் எனப்படும் விநாயகர், இராமர் சிலைகளை உடைத்தும், படங்களை எரித்தும்  இந்து மதத்திலுள்ள பல விஷயங்களைப் பற்றியும் மக்களிடம் எடுத்துச் சொல்லி இப்போது பிரச்சாரம் செய்வதுபோல் அப்புறம் நான் செய்ய முடியாது. ஒரு இந்துவாக இருந்து கொண்டு இப்படிப் பேசுவதனால் என்னை யாரும் நீ அதைச் சொல்லக் கூடாது’ என்று தடுக்க உரிமை கிடையாது. ஆனால் நான்,இன்னொரு மதக்காரனாக இருந்தால் அப்படிப்பட்ட வசதி எனக்கு இருக்க முடியாது” (டெல்லி பகார் கஞ்ச், 15.12.1959).

என்று தான் வெளியே நிற்க வேண்டியதன் நியாயத்தைப் பெரியார் விளக்குகிறார்.

  1. தனது சுய மரியாதைக் கொள்கைக்கு மிகவும் நெருக்கமாக உள்ளதாக இஸ்லாத்தைப் பெரியார் கருதினார்.

இறைத்தூதர்’ என்கிற இஸ்லாமியக் கருத்தாக்கத்தைப் பெரியார் ஏற்றுக்கொண்டது பற்றி முன்பே குறிப்பிட்டுள்ளேன். அதற்கான அவரது விளக்கமும் கூட நடைமுறை சார்ந்ததாகவும் சுயமரியாதைக்குப் பொருத்தமானதாகவுமே இருந்தது.

“மேலும், முகமதிய மதம் மிக்க சுயமரியாதை உணர்ச்சி உடையது என்றும் சொல்லுவோம். எப்படி என்றால், அது இனி உலகத்திற்குக் கடவுள் அவதாரங்ளோ, நபிமார்களோ, தீர்க்கதரிசிகளோ வரக்கூடும் என்பதை ஒருக்காலும் ஒப்புக் கொள்வதில்லை. மனிதனை மனிதன் வணங்குவதையோ அவன் காலில் விழுவதையோ அது சிறிதும் சம்மதிப்பதில்லை”(குடி அரசு’ ஆக. 25, 1929).

என இடைத்தரகர்கள், மகான்கள் ஆகியோர்  இஸ்லாத்தில் சாத்தியமில்லாமல் ஆக்கப்பட்டதை அவர் அடையாளம் கண்டார்.

இந்து மதத்தைப் போலன்றி இஸ்லாம் காலச் சூழலுக்கு ஏற்ப சீர்திருத்தத்திற்கு சாத்தியமுள்ளது என்றும் பெரியார் நம்பினார். அன்றைய துருக்கி (கமால் பாஷா), ஆப்கானிஸ்தான், எகிப்து ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களை அவர் அடிக்கடி சுட்டிக் காட்டுவது குறிப்பிடத்தக்கது. (‘குடி அரசு’ ஆக. 23, 1931; ஆக.2, 1931; நவம்பர் 17, 1935).

“இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமென்றும், பகுத்தறிவின் பரீட்சைக்கு விட்டு அதன்படி நடக்கத் தயார் என்றும் முஸ்லிம்கள் இன்று தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள். அந்தப்படிச் சொல்ல மற்ற மதக்காரர்களுக்கு ஏன் தைரியமில்லை? ஏனெனில், திரு. முகம்மது நபி கொள்கைகள் ஆனதனாலும், அநேக விஷயங்களில் அது பகுத்தறிவுக்கு நிற்கத்தக்க யோக்கியதையுடையதாய் இருக்கின்றது” (‘குடி அரசு’ ஆக. 23, 1931).

“அவர் (முகமது நபிகள்-அ.மா) சொன்னவற்றிலேயே இது மிகவும் முக்கியமாய் கவனத்தில் வைக்க வேண்டிய காரியமாகும். என்ன அவர் சொல்லுகிறார்? நான் என்ன சொல்லியிருந்தாலும் அவற்றில் உனக்குச்  சம்மதமிருந்தால் நீ உன் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்’ என்பதாகச் சொல்லியிருக்கிறார்”  (டிசம்பர் 20, 1953, சென்னை).

என்பன பெரியாரின் கூற்றுகள். பஞ்சா கொண்டாட்டம், அல்லாசாமி பண்டிகை, சமாதி வணக்கம் முதலான  ‘மூடநம்பிக்கைகளை’ அவர் இந்த நோக்கிலேயே வெறுத்தார்.

“ஆகவே முஸ்லிம் பகுத்தறிவுக்கு விரோதமாய் ஏதாவது இருந்தால், அது தங்களது கட்டளை அல்ல என்று தள்ளிவிடவும், அவற்றை நீக்கிவிடவும், பகுத்தறிவுக்காரரையெல்லாம் தங்கள் சகோதரர்கள் என்றும், இஸ்லாம் என்று சொல்லவும் தயாராக இருக்க வேண்டும்… உலகமெல்லாம் ஒரே மார்க்கமாவதற்கு பகுத்தறிவு மார்க்கமாவதற்கு முஸ்லிம்கள் பாடுபடவேண்டும். அவர்களுக்கே அதிக சவுகரியமிருக்கிறது. ஆதலால் அதுவே நபி அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாகும்” (‘குடிஅரசு’, ஆகஸ்டு 23, 1931).

என்பதே அவரது நபிகளின் பிறந்தநாள் செய்தியாக இருந்தது. மதங்கள் பகுத்தறிவுக்கு விரோதமானவையாக இருந்தபோதிலும் மதங்களை ஏதேனும் பகுத்தறிவு மயமாக்க  முடியுமெனில் முஸ்லிம்களுக்கே’ அதிக சவுகரியமிருக்கிறது’ எனவும் அவர் நம்பினார்.

பிரத்யட்சத்தில் முஸ்லிம் மதத்தின் சிறப்புக்கள் என்கிறபோது சாதியையும் தீண்டாமையையும் ஒழித்து சகோதரத்துவத்தை நிலை நாட்டும் அதன் சிறப்பை அவர் பலப்பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறார். அது சண்டாளர்களையும் ரட்சிக்கும் மதம்; வீரத்தையும் ஆண்மையையும் (ஒடுக்கப்பட்ட மக்களுக்கு-அ.மா) அளிக்கும் மதம் (‘குடிஅரசு’ ஆக.25, 1929). “ஒரு மனிதன் தான் மாலை 5 மணிக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக்கொண்டதாய்ச் சொல்லி, 5,30 மணிக்குத் ‘தீண்டாதவன் என்கின்ற இழிவிலிருந்து மீண்டு, தெருவில் நடக்க உரிமை பெற்று” மனிதனாக முடியும் என (‘குடிஅரசு’, ஆக.2, 1931) ரொம்பவும் romantic ஆகச் சிலாகித்தார். முஸ்லிம் மதத்தில் பெண்களுக்கு உரிமை இல்லை என்பதே நம்மில் பலருடைய எண்ணம். ஆனால் பெரியாரோ, பெண்களுக்குக் கோஷா அணிவிக்கும் முறையில் தனக்கு உடன்பாடில்லை எனச் சொன்னபோதும்,

“முகமதிய மதத்தில் பெண்களுக்கு உரிமை இருக்கின்றது.அதாவது பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு, விதவை விவாகம் உண்டு, கணவனும் மனைவியும் ஒத்துக் கொள்ளாவிட்டால் விலகிக் கொள்ள சுதந்திரம் உண்டு” (குடிஅரசு, ஆக. 25, 1929)எனச் சுட்டிக்காட்டினார்.

கோஷா முறை பற்றி விமர்சனங்கள் இருந்த போதும் அதுவும் கூட படிப்படியாக விலகி வருவதையும் துருக்கி, ஆப்கானிஸ்தான் நாடுகளில் முஸ்லிம் பெண்கள் வேலைக்கும், வெளிநாடுகளுக்கும் செல்வதையும், ஹைதராபாத் நிஜாம் தம் புத்ரிகளுடன் தாராளமாய் பொது அரங்கில் உலா வருவதையும் அதே உரையில் அவர் கவனம் ஈர்த்தார்.

 

வருமானத்தில் ஒரு பகுதியைக் கட்டாயமாக ஏழைகளுக்குச் செலவிடுவது (சக்காத்), விக்ரக ஆராதனையை மறுப்பது, சத்தான உணவு வகைகளைச் சாப்பிடுகிற வகையில் மற்ற மதங்களைவிட மிக்க நாகரீகம் கொண்டதாக இருப்பது ஆகியன இஸ்லாத்தில் அவர் வரவேற்ற இதர அம்சங்கள் (பெ.சி.4.196-202,4.3-14).

ஹஜ் யாத்திரையையும் கூட அவர் ஆதரிக்கவே செய்தார். அதற்கான அவரது விளக்கம்  பகுத்தறிவு சார்ந்ததாக மட்டுமின்றி அறம் சார்ந்ததாகவும் இருந்தது. இதுகுறித்து.
“மவுல்வி அப்துல் அமீது சாயபு பாகவி அவர்களைக் கேட்டேன். முஸ்லிம்கள் மக்காவுக்குப் போவதில், செல்வத்திலும் சரீர திடத்திலும் தகுதியுள்ளவர்கள் தான் போகவேண்டுமென்று இருக்கின்றதே தவிர, எல்லோரும் போய்த் தீரவேண்டுமென்று இல்லையென்றும், அந்த இடம் முகம்மது நபி அவர்கள் பிரத்தியட்சத்தில் பிறந்த இடம் என்பதற்காக அங்கு போவது என்பது தவிர வேறு அற்புதமில்லை என்றும், அறிவு வளர்ச்சிக்கும், மற்ற மக்கள் நடை, உடை, நாகரீகம் பார்த்து வரவும் பயன்படும்படியான ஒரு யாத்திரை என்றும், கொலை, களவு, கொள்ளை நடத்தின பாபம் தீர்ந்துவிடும் என்று சொல்வது தப்பு என்றும் அந்த மாதிரி எண்ணத்துடன் யாரும் சொல்வதில்லை என்றும் சொன்னார்” (குடிஅரசு, ஆக. 9, 1931).

என்று விளக்கினார். புனித ஹஜ் என்பது நபிகள் பிறந்த தலத்திற்குச் சென்று வருதல் என்பதிலும் வேறான பல அர்த்தங்களை உடையது என்கிற அளவிற்குப் பெரியார் இஸ்லாம் குறித்து அறிந்திராத போதிலும் ‘பிரத்தியட்சம்’சார்ந்த ஒரு விளக்கத்தை அதற்கு அளித்தார். பிறமதங்களில் யாத்திரை என்பது பாவங்களை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்படுவது. எல்லாப் பாவங்களையும் செய்துவிட்டுப் புண்ணிய தீர்த்தமாடினால் பாவங்கள் நீங்கிவிடும் என்பது இந்து மத நம்பிக்கை. ஒழுக்கமான வாழ்வொன்றின் மூலமாகவே நல்ல கதி அடைதல் என்கிற புரிதல் உள்ள இஸ்லாத்தில் யாத்திரைக்கு அந்தப் பொருள் இல்லை என்பதைப் பெரியாரால் அடையாளம் காண முடிந்தது.

இவை யாவும் ஏதோ முஸ்லிம்களின் ஆதரவைப் பெறுவதற்காகச் சொல்லப்பட்டவை அன்று. ஏனெனில் இதே காலகட்டங்களில் முஸ்லிம் சமூகம் மற்றும் இஸ்லாம் குறித்த தனது விமர்சனத்தைப் பெரியார் அவ்வப்போது முன் வைக்காதிருந்ததில்லை. “இஸ்லாம் மதக் கொள்கைகள் முழுவதையும் ஒப்புக்கொண்டதாகவோ அவைகள் எல்லாம் சுயமரியாதைக் கொள்கைகள் என்பதாகவோ யாரும் தீர்மானித்துவிடாதீர்கள்” என்கிற எச்சரிக்கையை அவர் செய்யத் தயங்கியதில்லை(குடிஅரசு, ஆக.2, 1931). மதங்கள் சமூக அமைதியைக் கெடுப்பதைப் பற்றிச் சொல்ல வருகையில், 1926 தொடங்கி 1931வரை ஆண்டு வாரியாக ‘இந்து மூர்க்கர்கள்’ பலாத்காரமாகக் கற்பழித்த பெண்களின் எண்ணிக்கையைச் சொல்லும் அதே நேரத்தில் ‘முஸ்லிம் மூர்க்கர்கள்’ செய்ததையும் அவர் பட்டியலிட்டார் (பகுத்தறிவு, 1934, செப்டம்பர் 9. பார்க்க: ஆனைமுத்து, பக்.1420). கிறித்துவ மதத்தைப் போலவே இஸ்லாமும்கூட நடைமுறையில் ஒரு பார்ப்பனீய மதமாகவே உள்ளது என்றும் ஓரிடத்தில் குறிப்பிட்டார். முல்லாக்கள் புரோகிதர்கள் போலச் செயற்படுவதை அவர் விமர்சித்தார்.

விருதுநகர் மாநாட்டில் மத ஒழிப்புத் தீர்மானத்தை இயற்றியதோடு அதை விளக்கி,

“அன்றியும், இந்த நாட்டின் இன்றைய சுதந்திர ஆட்சிக்கு, சகோதரத்திற்கு சினேக தத்துவத்திற்கு மதங்களே இடை யூறாய் இருந்து கொண்டு உட்பகையையும் சாந்தியற்ற தன்மையையும் உண்டாக்கி வருவதை நாம் நேரிலேயே தினமும் பார்த்தும் கேட்டும் வருகின்றதோ மாதலால் விருதுநகர் மாமநாட்டில், ‘மக்களுக்குள் எவ்வித மத உணர்ச்சியும் இருக்கக்கூடாது என்று தீர்மானிக்க வேண்டியதாயிற்று”

எனத் தலையங்கம் வெளிவந்த (குடிஅரசு அக். 23, 1931) அதே இதழில்தான் கோயமுத்தூரில் நடைபெற்ற மிலாது நபி விழாவில் அவர் ஆற்றிய உரையும் வெளிவந்தது. உலகமெல்லாம் ஒரே மார்க்கமாக வேண்டும் என அங்கு பேசிய பெரியார் மத ஒழிப்பு குறித்த தனது பார்வையை ரத்தினச் சுருக்கமாக,

“’மதங்கள் ஒழிந்த பிறகுதான் உலக சமாதானமும், ஒற்றுமையும், சாந்தியும் ஏற்பட முடியும், என்பது அநேக அறிஞர்களது அபிப்ராயமானாலும் அதற்கு விரோதமாக ஏதாவது ஒரு மதம் இருக்கும்போதே ‘உலக சமாதானம் ஏற்பட்டுவிட்டது.’ சாந்தி ஏற்பட்டு விட்டது என்று சொல்லப்படுமானால் அது இஸ்லாம் கொள்கைகளாகத் தான் இருக்கக்கூடும் என்று கருதுகின்றேன். ஏனெனில் அத சமூக ஒற்றுமை, சமூக சமத்துவம் ஆகிய காரியங்களில் மற்றெல்லோரைக் காட்டிலும் அதிகமான கவலை எடுத்து வருகின்றது” (குடிஅரசு, ஆக.23,1931).என்றார். ‘மதங்கள் ஒழிய வேண்டும்’ என்பதையும் ‘மதமாற்றம்’ என்பதையும் இணையாகவே அவர் சொல்லி வந்தததன் பொருள் இதுவே.

 

மதம் பற்றிய சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் பற்றிச் சொல்ல வரும்போது அதில் ஆஸ்திகர்களும்  இருக்கலாம் என்று சொல்லும் பெரியார், ‘இந்து மதத்தை விட்டுவிடுங்கள். மதமில்லாமலும் நாஸ்திகர்களாகவும் தான் இருக்க வேண்டுமென்பதில்லை என்பார். வேறு ‘சிறிதாவது அதைவிட மேலானதும், சீர்திருத்தமானதும், மூடநம்பிக்கைகள் குறைவானதுமான மதத்தை’ அனுசரிக்கலாம் என்பார் (குடிஅரசு, நவம்பர் 17,1935).

அப்படியான மதமாக அவர் முகமதிய மதத்தையே திரும்பத் திரும்ப அடையாளம் காட்டினார் என்பதில் யாருக்கும் அய்யமிருக்க இயலாது.