(டாக்டர் ஜீவானந்தம் அவர்களின் மௌலானா குறித்த நூல் முன்னுரையாக எழுதப்பட்டது.)
ஒரு காந்தியச் சிந்தனையாளராகவும், சுற்றுச் சூழல். இயற்கை வேளாண்மை முதலான துறைகளில் ஆர்வம் மிக்கவராகவும், தமிழக அளவில் அறியப் பெற்றவர் டாக்டர் வெ. ஜீவானந்தம் அவர்கள். மருத்துவம் என்பது ஏழை எளிய மக்களுக்கு எட்டாத ஒன்றாக மாறிவரும் கார்பொரேட் மருந்துவச் சூழலில் டாக்டர் ஜீவானந்தம் அவர்களின் முயற்சியில் ஈரோடில் உருவாக்கப்பட்டுள்ள “ஈரோட் ட்ரஸ்ட் ஹாஸ்பிடல்’ சிறந்த மருத்துவத்தை ஏழை எளிய மக்களுக்கு மிகக் குறைந்த செலவில் அளிக்கிறது. அந்த வகையில் அது தமிழகத்திற்கே ஒரு முன்னோடியாக அமைகிறது.
இத்தனை சேவைகளுக்கும் மத்தியில் டாக்டர் அவர்கள் சிறந்த நூற்களை தமிழில் ஆக்கித் தரும் பணியையும் மேற்கொண்டுள்ளார். ஆலன் ஆக்சல்ராடின் ‘வெற்றிபெற காந்தியவழி’, பேர்ல் எஸ்.பக்கின் ‘தாய் மண்’, மாதவ் காட்கிலின் ‘அறிவியல், ஜனநாயகம், இயற்கைச் சூழல் பாதுகாப்பு’. காகா கலேல்கரின் ‘ருஷ்யாவில் குமரப்பா’ ஆகிய நூல்கள் அவரால் மொழியக்கப்பட்டுள்ளன. காஞ்சா அய்லய்யாவின் ‘எருமைத் தேசியம்’ எனும் புகழ் பெற்ற நூலை எழுத்தாளர் கவின்மலரும் அவரும் இணைந்து மொழிபெயர்த்துள்ளனர். இவை தவிர ‘ விடுதலைப்புலி திப்பு சுல்தான்’ எனும் குறு நூல் அவரது ஆக்கமாக வந்துள்ளது. இப்போது உங்கள் கைகளில் உள்ள மவுலானா வஹிதுதின் கானின் ‘இஸ்லாமில் அகிம்சையும் அமைதியும்’ எனும் நூல் அவரது சமீபத்திய மொழியாக்கம்.
இந்தக் குறு நூலின் மூல ஆசிரியரான மவுலானா வஹிதுதீன் கான் அவர்கள் இந்திய அளவில் பெரிதும் அறியப்பட்ட ஒரு மூத்த (வயது 94) இஸ்லாமிய அறிஞர். 200 க்கும் மேற்பட்ட இது போன்ற நூல்களின் ஆசிரியர், இந்த நூற்களில் 60க்கும் மேற்பட்டவை அவரது மகள் டாக்டர் ஃபரிதா கனம் அவர்களால் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
இந்திய அளவிலும், பன்னாட்டளவிலும் பல பல விருதுகளையும் வஹிதுதுன் கான் பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது. 2000 ஆண்டில் வாஜ்பேயீ தலைமையில் அமைந்த பா.ஜ.க அரசு வகிதுதீன் கானுக்கு இந்திய அரசு வழங்கும் மிகப் பெரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம பூஷன்’ விருதை வழங்கிக் கொண்டாடியது. 2009 ல் சமூக ஒற்றுமைக்கான ‘தேசிய சத்பவனா’ விருது வழங்கப்பட்டது. 2015ல் ‘சய்யிதினா இமாம் அல் ஹாசன் இப்ன் அலி’ விருது வஹிதுதீன் அவர்களுக்கு அபுதாபியில் வழங்கப்பட்டபோது பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை ட்விட்டரில் பதிவு செய்தார். அன்றே அவர் செய்த பிறிதொரு ட்விட்டர் பதிவில், “மவுலானா அவர்களின் அறிவு, அமைதியையும் சமாதானத்தையும் நோக்கிய அவரது செயல்பாடு ஆகியன அவரை உலக அளவிலான மதிக்கத்தக்க அறிஞராக ஆக்கியுள்ளன” என மனதாரப் பாராட்டியதும் குறிப்பிடத் தக்கது. இதுபோல இன்னும் பல விருதுகளுக்கும் சொந்தக்காரர் மவுலானா வஹிதுதின் கான் என்பது குறிப்பிடத் தக்கது.
இன்று உலகெங்கிலும் இஸ்லாமிய வெறுப்பு (Islamophobia) பெரிய அளவில் எழுந்துள்ளது. இந்த முன்னுரையை நான் தட்டச்சு செய்து கொண்டுள்ளபோது நியூசிலாந்தில் தொழுகையில் இருந்த 49 முஸ்லிம்களை ஒரு மத வெறியன் சுட்டுக் கொன்றுள்ளான். மேலும் 20 பேர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளனர். இந்தியாவில் இஸ்லாமிய வெறுப்பையே மூல முதலாகக் கொண்டு அரசியல் செய்து வரும் பாரதீய ஜனதா கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்துள்ளது. பசுவின் பெயரால் முஸ்லிம்கள் கொல்லப்படுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது. இப்படியான சூழலில் முஸ்லிம்களுக்கு மவுலானா வஹிதுதீன் கான் அவர்கள் சொல்லும் அறிவுரை ஒன்றுதான். அதைத்தான் அவர் அவர் திரும்பத் திரும்பத் தன் பல்வேறு ஆக்கங்களின் ஊடாகவும் வலியுறுத்திக் கொண்டுள்ளார். அது வேறொன்றும் இல்லை. முரண்பாடுகளைத் தவிர்ப்பதிலும், சமாதானத்தை நோக்கிய முயற்சிகளிலும் முஸ்லிம்கள்தான் முன்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அது.
எப்படி முன்கை எடுக்க வேண்டும்? ஆபத்துகள் வரும்போது எந்த எதிர்வினையும் காட்டாமல் எப்படி ஆமை தன் ஓட்டுக்குள் பதுங்குவது போலவும், பூச்சிகள் பந்துபோல் தம்மைச் சுருட்டிக் கொள்வதைப் போலவும் முஸ்லிம்களும் எந்த எதிர்வினையும் காட்டாமல் தம்மைச் சுருட்டிக் கொள்ள வேண்டும் என்கிறார் மவுலானா. அதுவே மோதல்கள் முடிய இயற்கை காட்டும் பாதை என்கிறார். ஆத்திர மூட்டினால் பொறுத்துக் கொண்டும், அத்துமீறினால் சகித்துக் கொண்டும் இருப்பதொன்றே சமாதானத்துக்கான வழி என்பதுதான் மவுலானா முஸ்லிம்களுகுக் காட்டும் ஒரே வழி. சிறிய கேட்டை ஏற்றுக் கொள்வதே பெரிய கேட்டைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி என்பதே மவுலானா மொழியும் தத்துவம். எது சிறிய கேடு? எது பெரிய கேடு? அவரைப் பொருத்த மட்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்டத்து, அடுத்து மதுரா அது இது என அவர்கள் பட்டியல் போடுவதெலாம் சிறிய கேடுகள். அப்படியான தாக்குதல்களை எல்லாம் முஸ்லிம்கள் சகித்துக் கொள்ள வேண்டும். விட்டுக் கொடுத்துவிட வேண்டும். குஜராத்தில் நரேந்திர மோடியின் கண்முன் சுமார் ஆயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டது எல்லாம் “எங்கோ ஒரு மூலையில்” நடக்கும் வன்முறைகள். இதற்கெல்லாம் பெரிதாக அலட்டக் கூடாது’. முஸ்லிம்கள் விட்டுக் கொடுக்க வேண்டும்..
நபிகள் நாயகமே அப்படித்தான் இருந்தார் எனக் கூறும் மௌலானா வஹிதுதீன் கான் அவர்கள், அப்படியான விட்டுக் கொடுத்தலுக்கு எடுத்துக்காட்டாக இஸ்லாமிய வரலாற்றின் முக்கிய தருணங்களில் ஒன்றான ஹுதைபியா உடன்படிக்கையைக் குறிப்பிடுகிறார், இன்னொரு பக்கம் சகிப்புத்தன்மையின் எடுத்துக்காட்டாக மகாத்மா காந்தியைச் சுட்டிக் காட்டுகிறார். பாபர் மசூதி முதலான பிரச்சினைகளில் விட்டுக் கொடுப்பதுதான் முஸ்லிம்களுக்கு அவர் காட்டும் ஒரே வழி. ஒற்றை வழி.
அவரது இந்த வழிமுறைகளும் பரிந்துரைகளும் சர்ச்சைக்குரியன. காந்தி அடிகள் சகிப்புத்தன்மைக்கும் அஹிம்சைக்கும் எடுத்துக்காட்டகத் திகழ்ந்த அதே நேரத்தில், அவர் எந்த நேரத்திலும் தன் கொள்கையையோ, இறுதி இலட்சியத்தையோ, தம் மக்களின் கவுரவத்தையோ விட்டுக் கொடுத்ததில்லை. அவரது அஹிம்சை அல்லது சத்தியாக்கிரகப் போராட்டம் என்பதெல்லாம் மிகவும் செயலூக்கமுள்ள போர் வடிவங்களாக இருந்தன, சென்ற நூற்றாண்டில் அதிக அளவில் பெண்களைக் களத்தில் இறக்கியவர் எனவும், வரலாறு காணாத அளவில் போராளிகளைக் கொண்டு சிறைகளை நிரப்பியவர் எனவும் வரலாற்றில் அறியப்பட்டவர் மகாத்மா காந்தி என்பது நினைவிலிருத்தத் தக்கது.
முஹமது நபிகள் விட்டுக் கொடுக்க வேண்டிய நேரத்தில் விட்டுக் கொடுத்தார். மவுலானா அவர்கள் சொல்வது போல ஹுதைபியா உடன்படிக்கை அவரது விட்டுக் கொடுத்தலுக்கு ஒரு எடுத்துக்காட்டு. ஆனால் ஹுதைபியா மட்டுமே நபிகளின் வரலாறோ, இஸ்லாத்தின் வரலாறோ அல்ல. பத்ர் போரும் இஸ்லாத்தின் வரலாறுதான், நபிகளின் வழிகாட்டலில் நடந்த போர்தான். அதுவும் இஸ்லாத்தின் உன்னத இறை அனுபவங்களில் ஒன்றுதான்.
அது மட்டுமல்ல ஒரு கால கட்டத்தின் அனுபவங்களை இன்னொரு காலகட்டத்திற்கு அப்படியே பொறுத்திப் பார்க்கவும் இயலாது. எண்ணற்ற சூறைப் போர்கள் (கஸு) நபிகளின் ஆணையில் நடந்தேறின, அவற்றை வெறும் வழிப்பறிக் கொள்ளைகளாக இன்றைய மொழியில் சுருக்கி விட முடியாது. இடதுசாரி வரலாற்றறிஞர்கள் குறிப்பிடுவது போல செல்வக் குவியல்கள் ஒரே இடத்தில் அமையாமல் அதைப் பரவாலாக்கம் செய்யும் அக்கால வழிமுறைகளில் ஒன்று அது,
போரா சமாதானமா என்பது மட்டுமே நம்முன் உள்ள கேள்வி அல்ல. போர், சமாதானம் என்பவற்றுக்கு அப்பால் நீதி என்கிற ஒன்றும் உண்டு. மௌலானா வஹிதுதீன் அவர்களின் எழுத்துக்களில் காணக் கிடைக்காதது இந்த ‘நீதி’தான். போர் அல்லது சமாதானம் என்பவற்றோடு நீதி என்பது எல்லாவற்றைக் காட்டிலும் முக்கியம். நீதியற்ற சமாதானம் அடிமைத்தனத்தின் உச்சம். எல்லோருக்கும் நீதி கிடைக்க வேண்டும். அதற்கு என்ன வழி. காந்தி அஹிம்சை எனச் சொல்லி நீதியைக் கைவிடவில்லை என்பதையும் நாம் மனம் கொள்ள வேண்டும்.
பாபர் மசூதியை விட்டுக் கொடுத்துவிடுவோம் என்றே வைத்துக் கொள்வோம். அத்தோடு பிரச்சினை முடிந்து விடும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
பெருநாளன்று முஸ்லிம்களோடு அமர்ந்து, அவர்கள் அன்புடன் அளிக்கும் அந்தத் தொப்பியைச் சில நிமிடங்கள் அணிந்து அவர்களோடு கஞ்சி அருந்தும் ஒரு தேச வழமையைக் கூடத் தன் ஆட்சியில் ரத்து செய்த நரேந்திர மோடி மௌலானாவுக்கு எங்கோ அபுதாபியில் அளித்த விருதைக் கொண்டாடுகிறார் என்றால் அது என்ன என நாம் யோசிக்க வேண்டாமா? தமிழில் ஒரு பழமொழி உண்டே – சோழியன் குடுமி சும்மா ஆடுமா?
மவுலானா வஹிதுதீன் அவர்களின் இக் குறு நூலை வாசிக்கும்போது நம் மனதில் எழும் கேள்விகள் இவை. இப்படியான சிந்தனை உசுப்பலுக்கு வழி வகுத்துள்ள இம்மொழிபெயர்ப்பைச் செய்துள்ள மருத்துவர் ஜீவானந்தம் அவர்களுக்கும், இந்நூலை அழகுற வெளியிடும் பழம்பெரும் பதிப்பகமான நியூ செஞ்சுரி புக் ஹவுசுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்.
அ.மார்க்ஸ், சென்னை, மார்ச் 16, 2019.