[உலகின் பல்வேறு பகுதிகளிலும் எவ்வாறு இஸ்லாமோ ஃபோபியா (Islamophobia) என்பது ஒரு அரசியல் சக்தியாகச் செயல்படுகிறது, சமூக – கலாச்சார தளங்களில் செயல்படுகிறது, அதை எவ்வாறு எதிர் கொள்வது என உலகின் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் பலரிடமும் பேசித் தொகுக்கப்பட்டது. இஸ்லாமோ ஃபோபியா என்பது எவ்வாறு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு மற்றும் தவறான முன்கணிப்புகளுக்குக் காரணமாகிறது; குறிப்பாக இஸ்லாமும் முஸ்லிம்களும் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெறும்போது இப்படியான முஸ்லிம் வெறுப்பு எவ்வாறு அதிகமாகிறது என்பதை அவர்கள் ரத்தினச் சுருக்கமாக விவரிக்கின்றனர்.]
டாக்டர்சல்மான்சய்யித், லீட்ஸ்பல்கலைக்கழகம், பிரிட்டன்: எங்கேனும் சோதனைச் சாவடிக்களைப் பார்த்தாலே நம் கையிலுள்ள போத்தல்களைக் கவிழ்த்து அவற்றிலுள்ள குளிர்பானங்களைக் கீழே ஊற்றிக் காட்டுவதற்கும், விமான நிலையங்களுக்குப் போனாலே நமது ஷூக்களைக் கழற்றிக் காட்டவும் கற்றுக்கொண்டு விட்டோம். யார் வேண்டுமானாலும் நம்முடைய மின்னஞ்சல்களைப் படிக்கமுடியும் என்கிற எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளவும் நாம் தயாராகிவிட்டோம். இஸ்லாமோ ஃபோபியா என்பது சிவில் உரிமைகளைக் குறுக்கிக் கொண்டே போகிறது.
இஸ்லாமோபோபியா என்பது ஒரு தவறான பெயர்சூட்டல். அது உண்மையில் முஸ்லிம்களைப்பற்றிப் பேசுவதல்ல. முஸ்லிம்களைப் பேசுவதன் ஊடாக அரசிடம் அதிகாரத்தைக் குவிப்பது, அடக்கி ஆள்வது, ஒடுக்கு முறைகளை அவிழ்த்து விடுவது ஆகியனவே அதன் உண்மையான நோக்கம்
டாக்டர்சஹர்அஸீஸ், ருட்கர்ஸ்பல்கலைக்கழகம், அமெரிக்கா: இஸ்லாமோ ஃபோபியா என்பது மதவெறி, இனவெறுப்பு ஆகியவற்றின் இன்றைய தன்மை, அமைப்புக் கூறு முதலானவை பற்றி விளக்குவதற்கும் பேசுவதற்குமான ஒரு கருவி.
டாக்டர்ஹதீம்பாசியான், பர்க்லிபல்கலைக்கழகம், அமெரிக்கா: முஸ்லிம் என்பவர் பகுத்தறிவு குறைந்தவர், நவீன காலத்திற்கு முந்திய ஆசாமி, தேங்கிப் போனவர், வளர்ச்சியுடன் மேற்செல்லத் தெரியாதவர், நவீனத்துவத்திற்குத் தகுதியற்றவர் என்றெல்லாம் சொல்வதுதான் இஸ்லாமோ ஃபோபியா.
சல்மான்: முஸ்லிம்களை இன்னோரு கிரகத்தில் உள்ளவர்களாகச் சித்திரிக்கும் வேலை அது
சஹர்: இஸ்லாமை அச்சத்துக்குரியதாகவும், முஸ்லிம்களை அச்சுறுத்துபவர்களாகவும் முன்னிறுத்தி வந்த வரலாறு மற்றும் அரசியல் காரணிகளில் அது வேர்கொண்டுள்ளது.
சல்மான்: கொள்கை, சட்டம், பண்பாடு எனப் பல மட்டங்களில் சாதிக்கப்பட்டுள்ள உலகளாவிய சிவில் உரிமை முன்னேற்றங்களைப் பின்னோக்கித் தள்ளும் முக்கிய வழிமுறைகளில் ஒன்றாக அது இன்று உள்ளது.
டாக்டர்சமிஅல்அரியான், இஸ்தான்புல்சபாஹடின்சைம்பல்கலைக்கழகம்: ஏராளமான இஸ்லாமோ ஃபோபியா வலைப்பின்னல்கள் செயல்படுகின்றன. அவை செய்வது எல்லாம் இஸ்லாம் பற்றிய ஒரு (கொடூரமான) பிம்பத்தைக் கட்டமைப்பதுதான்.
சஹர்: ‘கலாச்சாரங்களுக்கு இடையேயான மோதல்’ (clash of civilization) மற்றும் கீழைத்தேயவாதம் (orientalism) முதலான கதையாடல்களில் அது வேர் கொண்டுள்ளது.
சல்மான்: இஸ்லாமோ ஃபோபியா முன்னே சென்றால் அதன் பின்னே தொடர்வது உலகளவில் மீண்டும் வெள்ளை மேலாத்திக்கதை நிறுவும் பேராசை.
ஹதீம்: எல்லாவற்றிலும் நவீனமாகவும், பகுத்தறிவுடனும், முற்போக்காகவும், இருப்பதற்கான ஒரே வழி ஐரோப்பியச் சொல்லாடல் முறையை அப்படியே பின்பற்றிச் செயல்படுவதுதான் என்பதே இஸ்லாமோ ஃபோபியாவின் ஒரே புரிதல்.
சல்மான்: தீவிர வலதுசாரிக் கட்சிகள் மட்டுந்தான் இப்படி என்பதல்ல.
நஸீயா: மையநீரோட்டமாகக் கருதப்படுபவர்களின் வேலையும் இஸ்லாம் என்றால் என்ன, முஸ்லிம்கள் என்ன செய்கிறார்கள், மேற்குலகிற்கு அவர்கள் எப்படித் தோற்றமளிக்கிறார்கள் என ‘விளக்குவது’ தான்.
டாக்டர்மொகமட்மொரான்டி, டெஹ்ரான்பல்கலைக்கழகம், ஈரான்: முஸ்லிம்கள் அவர்களைப்பற்றித் தாழ்வு மனப்பான்மையுடன் சிந்திப்பதற்கு அது தூண்டுகிறது. அவர்களிடம் தன்னம்பிக்கை இழப்பை ஏற்படுத்துகிறது.
ஹதீம்: எப்படி முஸ்லிமாக இருப்பது, அதாவது உங்களின் சொந்த உடலுக்குள்ளேயே நீங்கள் அந்நியனாக இருப்பது என அது அவர்களுக்குச் சொல்லித் தருகிறது.
மொஹமட்: பல முஸ்லிம்கள் இவ்வாறு “கீழைத் தேசத்தவர்களாக ஆக்கப்பாட்ட” கீழைத் தேசத்தவர்களாகி வாழ்கின்றனர்.
சல்மான்: இஸ்லாமோ ஃபோபியா என்பதை வெறுமனே முஸ்லிம்களையும் முஸ்லிம் சிறுபான்மையினரையும் மட்டுமே பாதிக்கும் ஒன்றாகக் கருதக் கூடாது.
சஹர்: ஆமாம் அவர்கள் இந்தியராகவும், இந்துவாகவும் இருந்தால் கூட, , அவர்களையும் இப்படியான முஸ்லிம்களாகவே பார்ப்பது, அல்லது பாகிஸ்தானியாகப் பார்ப்பதற்கு இது வித்திடுகிறது.. இஸ்லாமுடன் ஒருவருக்கு இருக்கும் தொடர்பு மட்டுமே, அல்லது தொடர்பு உள்ளதாக இவர்கள் நினைப்பது மட்டுமே போதும் அவரது விசுவாசத்தைச் சந்தேகிப்பதற்கு. அமெரிக்காவில் பிறந்தவர்களாகவும், அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களாக இருந்தாலும் கூட இவர்களின் அந்த நினைப்பு ஒன்றே போதும் அவர்களை வன்முறையாளர்களாகக் கருதுவதற்கு.
சல்மான்: இன ஒதுக்கல் கால ‘ஜிம் குரோ’ கொலைக் கணக்கைப் போல முஸ்லிம்கள் அல்லது முஸ்லிம்களாகக் கருத்தப்பவர்களின் கொலைக் கணக்குகளும் இங்கு உண்டு.
நஸியா: அமெரிக்கப் பேரரை ஆதரிப்பவர்களுக்கு ‘நல்ல முஸ்லிம்’ என்கிற பெருமை உண்டு. அப்படியான முஸ்லிம்களைப் பேரரசு மகிழ்ச்சியாகத் தன் கைப்பிடிக்குள் வைத்துக் கொள்ளும்.
சல்மான்: பன்மைக் கலாசாரம் தோற்றுவிட்டது என அவர்கள் சொல்வதன் பொருள் என்ன? வெள்ளையர்களின் சிறப்புரிமைகளைக் கேள்விமுறை இல்லாமல் நிலைநிறுத்துவது அவர்களுக்குக் கடினமாகிவிட்டது என்பதுதான்.
நஸியா: கிஸிர் கானுடைய மகன் ஈராக் மீது அமெரிக்கா நடத்திய போரில் இறந்து போனார். டொனால்ட் ட்ரம்பின் இஸ்லாமோ ஃபோபியாவை நோக்கி அவர் இப்படி ஒரு சவாலை விட்டார். தன் சட்டைப் பையிலிருந்து அமெரிக்க அரசியல் சட்டத்தை உருவி எடுத்த அவர் சொன்னார்: “டொனால்ட் ட்ரம்ப்! நீ எஎப்போதாவது இதை வாசித்ததுண்டா?”
மொஹம்மட்: நமது மனங்கள் பெரிய அளவில் காலனியமயப்படுத்தப் பட்டுள்ளன. நமக்கு அது தெரியாதபோதும் அதுவே உண்மை. இதன் பொருள் மேலைக் கல்வி மோசம் என்பதல்ல. ஆனால் நாம் ஒன்றைப் புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். வேறு பல கருத்துக்களும் மதிப்பீடுகளும் (values) வெளியில் உண்டு என்பதுதான்.
நஸியா: அமெரிக்க இஸ்லாமோ ஃபோபியா என்பது அதன் பேரரசு உருவாக்கத் திட்டங்களில் (project) ஒன்று. அதன் முதலாளிய முறையுடன் தொடர்புடையது அது. இந்த உண்மைகளை இலக்காக்காக்கிச் செயல்படாத வரையில் இஸ்லாத்தை எவ்வளவுதான் அவர்களிடம் விளக்கிப் பேசிக் கொண்டிருந்தும் பயனில்லை.
மொஹம்மட்: முஸ்லிம்களாகிய நம்மிடம் முஸ்லிம்கள் என்கிற வகையில் உயர் மதிப்பீடுகள் உண்டு. சமூகம் மேன்மையுறுவதற்கு அவற்றால் பங்களிக்க இயலும்.
ஹதீம்: எந்த மானுடரும் தங்களைத் தாங்களே மனிதாயப் படுத்திக் கொள்ளும் நடைமுறையில் இறங்கக் கூடாது. ஏனெனில் அவர்கள் மனிதர்களாக வாழ்வதாலேயே மனிதாயம் மிக்கவர்களாக ஆகி விடுகின்றனர்.
நன்றி: TRTWORLD – இந்த வெப் சைட்டில் இருந்து தமிழாக்கியுள்ளேன்.
(2001ம் ஆண்டில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டவர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ், இப்போது ஐ,நா வையின் பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்றின் தலைவராக உள்ளார். இந்தக் கட்டுரையில் அவர் முன்வைக்கும் கருத்துக்களை அவர் 2000க்கு முந்திய ஆண்டுகளில் இதே தீவிரத்துடன் அவர் வலியுறுத்தி இருந்தாரேயானால் அவருக்கு நோபல் வழங்கப்பட்டிருக்குமா என்பது கூட ஐயமே. 2008 ல் உலகம் சந்தித்த பொருளாதார நெருக்கடி திறந்த சிந்தனையுடைய அறிஞர் பெருமக்களை முதலாளியப் பொருளாதாரம், நவ தாராளவாதம் ஆகியன குறித்த மறு சிந்தனைகளுக்கு ஆளாக்கியுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட சந்தை என்பது மார்க்சியத்தின் பங்களிப்புகளில் ஒன்று. நேருகால இந்தியப் பொருளாதாரமும் அதை ஒரு குறிப்பிட்ட அளவு ஏற்றுக் கொண்டது. திட்டமிட்ட பொருளாதாரத்தைச் செயல்படுத்த ‘திட்ட ஆணையம்’ ஒன்றும் உருவாக்கப்பட்டது. மன்மோகன்சிங் காலத்திலேயே அது பலவீனப்படுத்தப்பட்டது. நரேந்திரமோடியின் காலத்தில் அது முற்றாக அழிக்கப்பட்டது.
2008 ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி “சுதந்திரச் சந்தை” என்கிற முதலாளிய அணுகல்முறையைக் கேள்விக்குள்ளாக்கியது. ஆனாலும் உலக முதலாளியம் அதை ஏற்கவில்லை. ஸ்டிக்லிட்ஸ் போன்ற அறிஞர் பெருமக்கள் வெளிப்படையான மனநிலையுடன் இதை எதிர்கொண்ட பின்னணியில், இன்று அவர்கள் மீண்டும் திட்டமிட்ட பொருளாதாரத்தை நோக்கிய திருப்பத்தைப் பரிந்துரைத்து உலகை எச்சரிக்கை செய்கின்றனர்,. அவசியம் படித்துச் சிந்திக்க வேண்டிய கட்டுரை இது. இது மட்டுமல்ல. என் கண்ணில் பட்ட வரைக்கும் நான்கைந்து கட்டுரைகள் சமீப காலத்தில் இந்தத் தொனியில் எழுதப்பட்டுள்ளன. கொரோனோவின் பின்னணியில் உருவான ஒரு எளிய நன்மை என்றே இதை நாம் கொள்ள வேண்டும். கொரோனா மற்றும் பருவநிலை மாற்றம் முதலானவை இன்று கடந்த நாற்பதாண்டுகால நவ தாராள அணுகல் முறை, உலகமயம் ஆகியன குறித்த பல கேள்விளை உலகின் முன் வைத்துள்ளன. பொருளாதாரம் தொடர்பாக மார்க்சியம் முன்வைத்த கருத்துக்கள் பலவும் இன்று மீள்வாசிப்புக்கு உள்ளாகியுள்ளன.– அ.மார்க்ஸ்)
1.சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பியக் கூட்டமைப்பின் வீழ்ச்சியோடு ‘பனிப்போர்க்காலம்’ (Cold War) முடிவுக்கு வந்தது என்பார்கள். அப்போதுதான் எல்லோராலும் கொண்டாடப் பட்ட ஃபகுயாமாவின் “வரலாறு முடிவுக்கு வந்ததா?” (Francis Fukuyama , The end of history?) எனும் நூல் வெளிவந்தது. கம்யூனிசத்தின் வீழ்ச்சியின் ஊடாக ‘தாராள ஜனநாயகம்’ (Liberal Democracy) மற்றும் ‘சந்தைப் பொருளாதாரம்’ (Market Economy) ஆகியவற்றிற்கு இருந்த கடைசித் தடையும் அகன்றுவிட்டது என்பது இதன் பொருள். பொதுவான ஏற்பு அந்நூலுக்கு இருந்தது. முதலாளிய ஆதரவாளர்கள் அதைக் கொண்டாடினர்.
2.விதிகளின் அடிப்படையில் இயங்கும் தாராளவாத உலக ஒழுங்கிலிருந்து நாம் ஒரு பின்னடைவைச் சந்தித்துக் கொண்டுள்ளோம். இன்று உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வாழ்கிற நாடுகள் எதேச்சாதிகார வாய்வீச்சு வீரர்களால் ஆளப்படுகின்றன. ஃபகுயாமாவின் கருத்துக்கள் காலாவதி ஆனதாகவும், அபத்தமானதாகவும் இன்று ஆகிவிட்டன. ஆனாலும் கடந்த 40 ஆண்டுகளாக இங்கு கோலோச்சும் நவதாராளவாத பொருளாதாரக் கொள்கைகள் இன்று இன்னும் தீவிரமாகத் திணிக்கப்படுகின்றன.
3.கட்டுப்பாடற்ற சந்தைகள்தான் எல்லோருக்குமான பொருளாதார வளத்தை அளிப்பதற்கான உறுதியான ஒரே வழி என்கிற நவதாராளவாத நம்பிக்கை இன்று கேள்விக்குள்ளாகி இருக்கிறது. மூச்சுத் திணறி உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளது. ஒரே நேரத்தில் நவதாராளவாதத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை சிதைவது என்பது ஏதோ எதேச்சையாக நடக்கும் ஒன்றல்ல. நவதாராளவாதம் என்பது கடந்த நாற்பது ஆண்டுகளில் ஜனநாயக வேர்களை அறுத்துள்ளது,
4.நவதாராளவாதத்தால் (NeoLiberalism) முன்வைக்கப்படும் உலகமயம் என்பது தனிநபர்களையும், மொத்தச் சமூகத்தையும் தமது சொந்தத் தலைவிதியைக் கட்டுப்படுத்த இயலாதவர்களாக ஆக்குகிறது. ஹார்வர்ட் பல்கலைக் கழகப் பேராசிரியர் டானி ரொட்ரிக் தனது நூலிலும், (Dani Rodrik, Straight talk on Trade) நான் எனது சமீபத்திய நூல்களான “உலகமயமும் அதன் அதிருப்திகளும்- ஒரு மறு பரிசீலனை) Globalization and Its Discontents Revisited) மற்றும் (மக்கள், அதிகாரம் மற்றும் லாபங்கள் (People, Power, and Profits) ஆகியவற்றிலும் இதை விரிவாக விளக்கியுள்ளோம்.
5.மூலதனச் சந்தையைத் திறந்து கட்டுப்பாடுகள் இன்றி தாராளமயமாக்குதல் (capital- market liberalisation) என்பது மிகக் கொடூரமானது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்புள்ள ஒரு வேட்பாளர் ‘வால் ஸ்ட்ரீட்’டின் ஆதரவை இழந்தாரானால் அந்த நாட்டிலிருந்து தங்கள் பணத்தை வங்கிகள் எடுத்துவிடும். வளர்ந்துவரும் அதன் பொருளாதாரம் பாதிக்கப்படும். அதன்மூலம் உருவாகும் பெரும் பொருளாதார நெருக்கடி நிலையா, இல்லை உங்களின் ஆதரவுக்குரிய வேட்பாளரின் வெற்றியா எது வேண்டும் எனும் கேள்வி அம் மக்கள் முன் வைக்கப்படும். இதன் பொருள் குடிமக்களைக் காட்டிலும் வால் ஸ்ட்ரீட் அதிக சக்தி உடையது என்பதுதான்.
6.வளர்ந்துவரும் நாடு என்பதாக அன்றி ஒரு வளர்ச்சி அடைந்த பணக்கார நாடாக இருந்தாலும் கூட சாதாரண மக்கள் தாங்கள் விரும்பும் கொள்கைதான் கடைபிடிக்கப்பட வேண்டும் என அரசைக் கோர முடியாது. சமூகப் பாதுகாப்பு, ஊதிய உயர்வு, வரிச் சீரமைப்பு, கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார அமைப்பு என எதையும் நீங்கள் கோர இயலாது. “நாடு சந்தைப் போட்டியைச் சமாளிக்க இயலாமல் பலவீனமாகிவிடும். வேலை வாய்ப்புகள் சுருங்கும். நீங்கள்தான் இதன் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்” – என நீங்கள் எச்சரிக்கப்படுவீர்கள்.
7.பணக்கார நாடாக இருந்தாலும் சரி, ஏழை நாடானாலும் சரி எதுவானாலும் அங்குள்ள மேட்டிமைச் சக்திகள் (elites), “நவதாராளவாதக் கொள்கைகளால் விரைவான பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அதனால் வரும் பயன்கள் எல்லோரையும் வந்தடையும். ஏழைகள் உட்பட எல்லோரும் பயனடைவர். இந்த நிலை ஏற்பட வேண்டுமானால் தொழிலாளிகள் குறைந்த ஊதியத்தில் திருப்தி அடைய வேண்டும். அது மட்டுமல்ல எல்லோருமே முக்கிய அரசு நலத் திட்டங்கள் குறைக்கப்படுவதை சகித்துக் கொள்ள வேண்டும்”- என வாக்குறுதிகள் அளிப்பார்கள்.
8.தங்களின் வாக்குறுதிகள் விஞ்ஞானபூர்வமாக வகுக்கப்பட்டன எனவும் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில்தான் எல்லாம் மேற்கொள்ளப் படுகின்றன எனவும் அவர்கள் சொல்லிக் கொள்வார்கள். (இத்தகைய நவதாராளவாதக் கொள்கையைப் பின்பற்றி) அப்படி 40 ஆண்டுகள் இன்று ஓடி விட்டன. இதோ நம் முன் எல்லாவற்றுக்கும் தரவுகள் உள்ளன. வளர்ச்சி வேகம் குறைந்துதான் உள்ளதே ஒழிய அதிகரிக்கவில்லை. அடைந்துள்ள வளர்ச்சியின் பயன்களும் மேலே உள்ள ஒரு சிலரைத்தான் எட்டியுள்ளன. ஊதிய உயர்வுகள் இன்றி தேக்கம் ஏற்பட்டுள்ளது. பங்குச் சந்தைகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. வருமானமும் வளர்ச்சியும் மேல்நோக்கித்தான் நகர்கின்றனவே ஒழிய கீழே உள்ளவர்களுக்குக் கசியவில்லை.
9.போட்டியைச் சமாளிப்பது எனக் காரணம் சொல்லி ஊதிய உயர்வு இல்லை எனக் கட்டுப்படுத்துவதும், அரசுத் திட்டங்களைக் குறைத்துக் கொள்வதும் எவ்வாறு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு வழி வகுக்கும்? சாதாரண மக்கள் தாங்கள் விலைக்கு விற்கப்பட்டவர்களாகவும், வஞ்சிக்கப் பட்டவர்களாகவுமே உணர்வர்.
10.இந்த மாபெரும் ஏமாற்றத்தின் அரசியல் பின்விளைவுகளை நாம் இப்போது அனுபவித்துக் கொண்டுள்ளோம். மேட்டிமைச் சக்திகளின் நம்பிக்கத் துரோகம், நவ தாராளவாதத்தின் அடிப்படையாக உள்ள இவர்களின் “பொருளாதார அறிவியல்’’, இவற்றைச் சாத்தியமாக்கிய ஊழல் மிக்க அரசியல் அமைப்பு ஆகியவற்றின் வஞ்சகத்தை அனுபவித்துக் கொண்டுள்ளோம்.
11.எதார்த்தம் என்னவெனில் “நவதாராளவாதம்” (Neo Liberalism) என நாம் சொன்னாலும் தாராளவாதத்திற்கும் (liberal) அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அது ஒருவகையான அறிவுத்துறைச் சனாதனத்தையே திணித்தது. அதன் பாதுகாவலர்கள் எந்நாளும் மாற்றுக் கருத்தைச் சகித்துக் கொண்டதில்லை. பொருளாதாரம் தொடர்பான பழமைவாத-சனாதனச் சிந்தனைகளுக்கு எதிரான மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட பொருளியல் அறிஞர்களின் கருத்துக்கள் புறந்தள்ளப்பட்டன. அப்படியான அறிஞர்கள் ஏதாவது முக்கியமற்ற துறைகளுக்கு மாற்றப்பட்டார்கள். கார்ல் பாப்பர் போன்ற தத்துவவியலாளர்கள் முன்வைத்த ‘திறந்த சமூகம்’ (open society) என்கிற கருத்தாக்கத்திற்கும் இவர்களின் நவதாராளவாதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஜார்ஜ் சோரோஸ் சுட்டிக் காட்டியதைப் போல கார்ல் பாப்பர் நமது சமூகம் சிக்கலானது என்பதையும், தொடர்ந்து பரிணாமம் அடைந்து கொண்டே வருவது என்பதையும் சொன்னபோது இவர்கள் அதை கணக்கில் கொண்டதே இல்லை. இப்படியான சமூகங்களில் நாம் எந்தளவிற்கு அதிகமாகக் கற்றுக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு அந்த அமைப்பின் இயக்கத்தில் மாற்றத்தை விளைவிக்க முடியும்.
12.நவதாராளவாதிகளின் இத்தகைய சகிப்பின்மை ‘பேரளவுப் பொருளியல்’ (macroeconomics) துறைகளிலேயே அதிகம் வெளிப்பட்டது. அதில் அப்போது நடைமுறையில் இருந்த மாதிரிகள் (models) 2008 இல் நாம் சந்தித்தது போன்ற நெருக்கடிகளை எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் அது நேர்ந்தபோது அதை ஏதோ 500 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் வெள்ளம் என்பது போல அரிதான, முன் ஊகிக்க முடியாத ஒரு அசாதாரணமான விளைவு என்றே அவர்கள் எதிர்கொண்டனர்.
13.இப்போதும் கூட நவதாராளவாதக் கோட்பாடுகளை வலியுறுத்துபவர்கள் வெளி பாதிப்புகளால் பாதிக்கப்படாத, சுயமாக ஒழுங்குபடுத்திக் கொள்ளும் சந்தைகள் என்கிற தங்களின் நம்பிக்கையை விட்டுவிடத் தயாராக இல்லை. கட்டுப்பாடற்ற தாராளவாதம்தான் இந்த நெருக்கடிகளுக்குக் காரணம் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. பழைய கிரேக்ககாலத் தாலமி அரசப் பாரம்பரியத்தினர் போல எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராயாமல் அவற்றைத் தமக்குத் தெரிந்த நம்பிக்கைகளின் ஊடாக விளங்கிக் கொள்ள முயல்பவர்களாகவே அவர்கள் இருந்தனர்.
14.ஒழுங்குபடுத்தப்படாத சந்தைகள் பயனளிக்காது என்பதை 2008 பொருளாதார நெருக்கடியாலும் கூட நாம் உணராமற் போயிருந்த போதும், இப்போது காலநிலை மாற்றத்தால் (climate change) உருவாகப் போகிற நெருக்கடி உறுதியாக நம்மை உணர வைக்கும். நவதாராளவாதம் நமது சகாப்தத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும் என்பது உறுதி. நமது நவதாராளவாதிகள் அறிவியலின் இந்த உண்மையை ஏற்றுக்கொண்டு, எதார்த்தத்தை எதிர்கொள்ளாமல் இப்போது காட்டிக் கொண்டுள்ள“பொறுமையை” தொடர்வார்களே யானால், அதனால் உருவாகும் பிரச்சினைகள் மேலும் நம்மை அழிவுக்கு இட்டுச் செல்வது உறுதி.
15.இந்த நம் உலகையும், நம் காலப் பண்பாட்டையும் காப்பாற்றுவதற்கு நம் முன்னுள்ள ஒரே வழி வரலாற்றின் மீள்பிறப்பிற்கு வழி செய்வதுதான். அறிவொளிக்கால சிந்தனையை நாம் இன்னும் வீறுபடுத்துவதுதான்.. சுதந்திரம், அறிவின் ஆற்றல், ஜனநாயக மதிப்பீடுகள் ஆகியவற்றிற்கு நாம் மீண்டும் நம்மை அர்ப்பணித்துக் கொள்வதுதான்.
-Joseph E Stigliz, The End of Neoliberals, and the Rebirth of History, 26, Nov, @019
இணைப்பு
(“கொரொனா கற்றுத் தந்துள்ள நான்கு பாடங்கள்” என பினோய் ஜோஸ்.பி எழுதியுள்ள “Covid 19: Is this the end of neo-liberalism எனும் கட்டுரையின் (The Hindu – Business Line ,March 29, 2020) இறுதியிlல் முன்வைக்கும் இக் கருத்துக்கள் இத்துடன் இணைத்துப் பார்க்கத் தக்கன)
1.பெரிய அளவில் பொதுமக்களுக்கு சரியான மருத்துவ நலம் அளிக்கும் திறன் தனியார் மருத்துவ சேவைகளுக்கும், தனியார் மூலதனத்திற்கும் கிடையாது என்பது இன்று இந்த உலகளாவிய கொரோனா தாக்குதல் மூலம் நிறுவப்பட்டுள்ளது.
2.ஒரு மூலையில் உள்ள ஏதோ ஒரு நாட்டில் போதிய மருத்துவ அகக் கட்டுமானம் இல்லை என்றாலோ, ஏழ்மை மற்றும் தூய்மையின்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அது தனது பிரச்சினை இல்லை என தொழில் நிறுவனங்கள் கவலையின்றி இருந்துவிட இயலாது. சீனாவில் உள்ள ஒரு வைரஸ் அடுத்த நாட்டிலுள்ள தொழிற்சாலைகளையும் (plants), அடிப்படைத் தேவைகள் வந்துசேறும் சங்கிலித் தொடரின் (supply chain) அடுத்தடுத்த கண்ணிகளையும் உடனடியாகத் தாக்கிச் செயலிழக்கச் செய்யும் அளவிற்கு இன்று உலகம் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது. எந்த நாட்டில் நாம் வணிகம் அல்லது உற்பத்தி செய்தபோதும் அந்த நாடுகளும் தரமான அடிப்படை மருத்துவ வசதிகள், மருத்துவ சோதனை வசதிகள் எல்லாம் கொண்டவையாக இருக்க வேண்டும். ஆக உலகமயம் என்பது வெறும் லாபம் ஈட்டுவதற்கான வழிம்முறை மட்டுமல்ல; அனைத்துப் பொறுப்புகளும், உரிய சேவைகளும் கூடவே உலகமயமாவது கட்டாயமாகிறது.
3.இன்னும்கூட சோஷலிசக் கட்டுமானங்கள் உள்ள நாடுகள்தான் இப்படியான அவசர நிலைகளைச் சமாளிக்கும் திறன் கொண்டவையாக உள்ளன என்பது இன்று நிறுவப்பட்டுள்ளது. சாத்தியங்களையும் மருத்துவத் திறன்களையும் ஒருங்கிணைத்து (channelizing massive resources) இப்படியான கொள்ளை நோய்களைச் (pandemics) சமாளிக்கும் திறன் அவைகளுக்குத்தான் உள்ளன. முதலாளிய அமைப்புகள் இந்த அம்சத்தில் சோஷலிச அமைப்புகளுக்கு இணையாக இல்லை என்பது இன்று நிறுவப்பட்டுள்ளது.
4.எல்லாவற்றையும்விட முக்கியமான அம்சம் என்னவெனில் பொதுப் பிரச்சினைகளுக்குப் (public problems) பொதுத் தீர்வுகள்தான் (public solutions) வழிகாணமுடியும் என்பது இன்று நிறுவப்பட்டுள்ளது. அரசுக் கட்டுப்பாடு இல்லாத தனியார் நிறுவனங்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு முதலாளிய அரசு (a crony capitalist state) பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்க இயலாது என்பது இன்று உறுதியாகியுள்ளது. உலகமயம் (globalisation) குலைந்துள்ள இன்றைய நிலையில் எதிர்காலம் என்பது உலக வளங்கள் (resources) இன்னும் சிறந்த முறையில் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டு (egalitarian distribution), பொதுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட (public Control) சமத்துவ அமைப்பைக் கோருகிறது.
சமூக வளங்கள் மற்றும் தேவைகள் மீது இன்னும் அதிகமான அரசுக் கட்டுப்பாடுகள் மற்றும் அவற்றைச் சமமாகப் பகிர்ந்தளித்தல், தனியார் மூலதனத்தின் வரைமுறையற்ற வளர்ச்சியைக் கட்டுக்குள் வைத்தல் முதலியன நவதாராளவாதம் மற்றும் முதலாளியத்தின் ரசிகர்களை எரிச்சலூட்டும் என்பது உண்மையே. ஆனால் இன்று நாம் சந்தித்த அனுபவங்கள் நமக்கு வேறுபல சாத்தியங்கள் எதையும் விட்டு வைக்கவில்லை. இன்று கொரோனாவைச் சமாளிக்க ஸ்பெயின் அரசு அந்த நாட்டிலுள்ள தனியார் மருத்துவமனைகளை எல்லாம் நாட்டுடைமை ஆக்கிய்யுள்ளது இந்தத் திசையில் உலகத்திற்கு ஒரு வழிகாட்டியாக அமையும்.
(“ஒரு மிகப்பெரிய அறவீழ்ச்சியின் காலம் இது” -சுமார் ஆறு மாதங்கள் முன் 2018 நவம்பர் வாக்கில் பதிவு செய்யப்பட்ட நேர்காணல்)
1 நிறப்பிரிகையில் காலத்தில் நீங்கள் பேசிய பல விஷயங்கள் இன்று பேசு பொருளாகி இருக்கிறது. (அ). மாற்றுக்கல்வி (ஆ). மாற்றுப்பாலினம் (இ). தன்பால் ஈர்ப்பு முதலியன. இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
உண்மை நிறப்பிரிகை முன்வைத்த பல கருத்துக்கள் இன்று பேசு பொருளாகியுள்ளன.. உங்களைப் போன்றவர்கள் அதை ஏற்றுக் கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில் நாங்கள் இவற்றைப் பேசியபோது, ஏதோ முக்கிய அரசியல் பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திருப்பும் உள் நோக்கத்துடன் அதை முன்வைப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டோம். ‘மணிக்கொடி’ காலம் முதல் தமிழகத்தில் சிறு பத்திரிகைகளுக்கு ஒரு நீண்ட பாரம்பரியம் உண்டு. பல புதிய மேலைச் சிந்தனைகளை எல்லாம் தமிழில் அறிமுகப்படுத்திய பெருமையும் அவற்றுக்கு ஊண்டு. ஆனாலும் ஒரு சில பிரச்சினைகளை அவை கண்டுகொண்டதில்லை. மாற்றுப் பாலினத்தவர்கள் குறித்தும் தந்தை பெரியாரின் பங்களிப்புகள் குறித்தும் அவை பெரிதாக எதுவும் எழுதியதே இல்லை. முதல் முதலில் புதுச்சேரி தோழர் நண்பர் அருணன்தான் கூவாகத்திற்கு நேரடியாகச் சென்று மூன்றாம் பாலினத்தவரின் வருடாந்தர ஒன்றுகூடல் குறித்த கள ஆய்வுக் கட்டுரை ஒன்றை வடித்துத் தந்தார். பெரியார் குறித்த எங்களின் கூட்டு விவாதமும் அதற்கான முன்னுரைப்பாக நண்பர் ராஜன்குறை வடித்துத் தந்த விவாதக் கட்டுரையும், “ஓ ! பெரியாரை இப்படியும் பார்க்க இயலுமா?” என்கிற வியப்பை அன்று தமிழ் கூறும் நல்லுலகில் ஏற்படுத்தியது. பாவ்லோ ஃப்ரேயரின் மாற்றுக் கல்வி குறித்த என் கட்டுரை நிறப்பிரிகையில் வெளி வந்தபோது ஏராளமான ஊர்களில் அது குறித்து உரையாற்ற அழைகப்பட்டேன். மாற்றுக் கல்வி மட்டுமல்ல, மாற்று அரங்கு குறித்த அகஸ்டோ போவால் போன்றோரின் முயற்சிகள் குறித்தும் ஒரு முழு நாள் கருத்தரங்கையும் நிறப்பிரிகை புதுச்சேரியில் நடத்தியது. தலித் இலக்கியம், தலித் அரசியல் குறித்த தொடக்க ஆய்வுகளையும், கலந்துரையாடல் களையும் நிறப்பிரிகைதான் ஏற்பாடு செய்தது. கூட்டறிக்கையாக வெளியிடவும் செய்தது. சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சியைக் காய்தல் உவத்தல் இன்றி மிக்க கரிசனத்துடனும், துணிச்சலுடனும் தமிழ்க் களத்தில் பேசியதும் எழுதியதும் நாங்கள்தான். பெண்ணியம், குடும்ப அமைப்பின் வன்முறை ஆகியன குறித்து நாங்கள் பேசியவையும் தமிழகத்தில் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தின. அது உண்மையில் ஒரு சிந்தனை விகற்சிகளின் பொற்காலமாகத்தான் இருந்தது.
2.தலித் அரசியலின் தொடக்க காலத்தில் அதாவது 1993 ஆம் ஆண்டு ”தலித் அரசியல் அறிக்கை” எழுதுமளவுக்கு இருந்துள்ளீர்கள் அது குறித்து..?
மேற்கூறிய செயற்பாடுகளின் தொடர்ச்சியாகத்தான் நீங்கள் அதையும் காண வேண்டும். பல்வேறு மாற்றுக்களையும் சிந்தித்துக் கொண்டும், முன்வைத்துக் கொண்டும் இருந்த நாங்கள் அந்த வகையில், சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சியின் பின்னணியில் முன்வைத்த கருத்தாக்கம் தான் தலித் அரசியல். உருவாகி வந்து கொண்டிருந்த தலித் அரசியலுக்கு ஒரு கோட்பாட்டு வரையரையை உருவாக்க வேண்டும் என்கிற கருத்தாக்கத்தை முவைத்து எங்களத் தூண்டியது தோழர் கல்யாணி (பேரா.கல்விமணி) தான். நான், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பில் இப்போது பொதுச் செயலாளராக உள்ள ரவிக்குமார், கல்யாணி மற்றும் நண்பர்கள் கூடி ஒரு கேள்விப் பட்டியலைத் தயாரித்தோம். பின் அதை விவாதித்து ஒரு நகலறிக்கையாக உருவாக்கி அதைத் தமிழக அளவில் உள்ள இந்தப் புதிய அரசியலில் ஆர்வம் உள்ள பலருக்கும் அனுப்பினோம். தஞ்சையில் ஒரு திருமண மண்டபத்தில் விவாதம் ஒன்றை ஒரு நாள் முழுக்க நடத்தி ஜனநாயக முறையில் அதில் திருத்தங்கள் செய்து, இறுதி வடிவு கொடுத்து வெளியிட்டோம். விடுதலைச் சிறுத்தைகள் உட்பட தமிழகத்தின் முக்கிய தலித் அமைப்புகள் அனைத்தும் பிரதிநிதிகளை அனுப்பி இருந்தன. முதலில் 2000 பிரதிகள் அச்சிட்டோம். இதுவரை நான்கு பதிப்புகளுக்கு மேல் அது வெளிவந்துள்ளது. கோவையில் மறைந்த தோழர் விடியல் சிவா ஒரு விரிவான ஒரு நாள் விவாதம் ஒன்றை அந்த அறிக்கையின் மீது ஏற்பாடு செய்தார். மறைந்த கருணா மனோகரன், ஆதித் தமிழர் பேரவைத் தலைவர் அதியமான், கோவை ஞானி முதலானோர் அதில் கலந்து கொண்டு கருத்துரைத்தனர்.
3- தலித் அரசியலின் தொடக்க காலத்திற்கும் தற்போதுள்ள சூழலுக்குமா நிலைமை குறித்து உதாரணமாக (அ). பெரியார் ஒரு தலித் விரோதி என தலித் அறிவிஜீவிகளால் முத்திரை குத்தப்பட்டது (ஆ). கம்யூனிஸ்டுகள் தலித்துகளுகளுக்கு எதிரானவர்கள் என பிரச்சாரம் செய்வது (இ). தென் தமிழகத்தில் இருக்கும் ஆதி திராவிடர்- தேவேந்திர குலவேளாளர்கள் முரண்பாடு (ஈ). தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் இருக்கும் பறையர்- அருந்ததியர் முரண்பாடு இது குறித்து உங்கள் நினைவுகள்…
நாங்கள் வெளியிட்ட அந்த தலித் அறிக்கை ஒரு குறிப்பிட்ட அளவு கான்ஷிராம் அவர்களின் ‘பகுஜன்’ எனும் கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. பகுஜன் எனும் சொல்லாக்கத்தை உருவாக்கியவர் புத்த பகவன்.. “பகுஜன் ஹிதய, பகுஜன் சுகய” என்பது புத்த தேவன் வாக்கு. புத்தர் முன்வைத்தது சிறுபான்மையாக ஒதுங்குகிற அரசியல் அல்ல. ஒடுக்கப்பட்ட பெரும்பான்மையாகத் திரள்வது. ஏனெனில் ஒடுக்கப்பட்டவர்களே நாட்டில் பெரும்பான்மையினர். ‘பகுஜன்’ என்பது அதிக அளவிலான ‘வெகு மக்கள்’ என்பதைக் குறிப்பது. கான்ஷிராம் என்ன தலித் உட்பிரிவைச் சேர்ந்தவர் என்பது இன்றுவரை யாருக்கும் சரிவரத் தெரியாது. தலித் உட்சாதி வேறுபாடுகளைத் தாண்டி அவர் மக்களைத் திரட்டினார். தலித் உட்சாதி ஒற்றுமைக்கு அவர் முன்னுரிமை அளித்தார். வடநாட்டு சாதி அமைப்பு இங்குள்ளதைக் காட்டிலும் வெறுபட்டது. அங்கு சத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் குறிப்பிட்ட அளவு உள்ளனர். தமிழகத்தில் சத்திரியர்களே கிடையாது. வைசியர்களும் இங்கு பெரிய அளவில் இல்லை. அதே போல வடக்கில் பார்ப்பனர்கள் 10 சதம் வரை உள்ளனர்.இங்கே இரண்டரை சதம்தான். இந்தப் பின்னணியில் கான்ஷிராம் ‘பகுஜன்’ எனும் கருத்தாக்கத்தை முன்வைத்து, உட்சாதி வேறுபாடுகளுக்கு அப்பாலான தலித் பிரிவுகள் மற்றும் மிகவும் அடித்தள நிலையில் உள்ள மிகப் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரைத் திரட்டினார். ஆனால் இங்கோ தலித் உட்சாதிகளை மட்டுமாவது ஒன்றாகத் திரட்டுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. ‘புதிய தமிழகம்’ அமைப்பின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி நாங்கள் தலித்களே இல்லை என்றார், ரவிகுமார் போன்ற தலித் தலைவர்கள் பிற தலித்களுடன் ஒற்றுமை பேணுவதைக் காட்டிலும் பார்ப்பனர்களுடன் ஒற்றுமை பேணுவதரற்கு முக்கியத்துவம் அளித்தனர். பார்ப்பனீய எதிர்ப்பு என்பது இங்கு தலித் அரசியலின் முக்கிய கண்ணியாக அமையவே இல்லை. அதற்குப் பதிலாக பெரியாரும் இங்கே முக்கிய எதிரியாகக் கட்டமைக்கப்பட்டார். திராவிடக் கருத்தியலே தலித் அரசியலின் முக்கிய எதிரியாகச் சுட்டிக்காட்டப்படும் நிலையும் ஏற்பட்டது. தலித் அரசியலுக்கு ஏற்பட்ட பெருஞ்சரிவு அன்றுதான் தொடங்கியது. இன்றுவரை அது சரி செய்யப்படவே இல்லை. பெரியாரைக் கடுமையாகவும், அநீதியாகவும் விமர்சித்து வி.சி.கவின் பொதுச் செயலாளரான ரவிகுமார் எழுதிய தொடர் கட்டுரையை திருமா அவர்கள் தங்களின் அதிகாரபூர்வமான ‘தாய் மண்’’ இதழில் வெளியிட்டதை எல்லாம் என்ன சொல்வது. நாளெல்லாம் இப்படியான அரசியலைச் செய்துவிட்டு தேர்தல் நேரத்தில் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும்போது அந்தக் கூட்டணியும் உண்மையாக அமைவதில்லை. அதே போல இங்கே தலித் அமைப்புகள் உருவாகும் முன்பு பெரும்பாலும் விவசாயத் தொழிலாளிகளாக இருந்த தலித்களை கம்யூனிஸ்டுகள்தான் இயக்கமாக்கி வைத்திருந்தனர். வரலாற்றுச் சிறப்புமிக்க விவாசாயப் போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்தனர். அவர்களது நடைமுறைகளில் பல விமர்சனத்துக்குரிய குறைபாடுகள் இருந்தபோதும் தலித் மக்கள் மீதான பல்வேறு வகைச் சுரண்டல்களையும் ஒதுக்கல்களையும் எதிர்கொண்டதில் கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. ஆனால் தலித் அமைப்புகள் உருவானபோது அவர்களுக்கான அணிகளை அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்தே உருவி எடுக்க வேண்டியதாயிற்று. அந்த வகையில் கம்யூனிஸ்டுகள் அவ்வப் பகுதிகளில் இங்கே எதிர்த்தரப்பில் நிறுத்தப்பட்டனர். இந்த நிலையைக் கம்யூனிஸ்டுகளும் சரியாகக் கையாளவில்லை. விளைவு? இன்று கிழக்குக் கடற்கரையோரம் பெரிய அளவில் ஆர்.எஸ்.எஸ் நிலை கொண்டுள்ளது.
தேவேந்திரகுல வேளாளர் – ஆதி திராவிடர் முரண்பாடு என்பது தீரும் என நம்புவதற்கு இடமே இல்லை. தேவேந்திரகுல வேளாளர்கள் மத்தியில் அப்படியொரு சாதி உயர்வுக் கருத்து எல்லா மட்டங்களிலும் உருவாக்கப் பட்டுள்ளது. அவர்கள் தீண்டாமை என்கிற கருத்தாக்கத்தை எதிர்க்கவில்லை. அவர்களின் எழுத்துக்கள், பிரகடனங்கள் எல்லாவற்றையும் பார்க்கும்போது அவர்கள் சொல்வதெல்லாம் தங்கள் மீது தீண்டாமை கூடாது என்பது மட்டும்தான். வாஜ்பேயீ ஆட்சியின்போது முற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு இட இதுக்கீடு அளிப்பது பற்றிப் பேசப்பட்டது. அப்போது நாங்கள் சுய மரியாதை இயக்கம் என்கிற பெயரில் செயல்பட்டுக் கொண்டிருந்தோம். அதன் சார்பாக அந்த முயற்சியைக் கண்டித்து நாங்கள் ஒரு பொது மாநாட்டைச் சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் கூட்டியபோது அதில் கலந்து கொள்ள கிருஷ்ணசாமி மறுத்தார். தங்கள் மீது தீண்டாமை எல்லாம் கிடையாது என்றார்.
அருந்ததியர் – ஆதி திராவிடர் ஒற்றுமைக்கான நிபந்தனை என்பது அருந்ததியர் உள் ஒதுக்கீட்டிற்கான நியாயத்தை தயக்கம் இன்றி ஏற்பதில்தான் உள்ளது. வி.சி.க அமைப்பு தெளிவாகவும் வெளிப்படையாகவும் அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை ஆதரிக்க வேண்டும்.
4. இட ஒதுக்கீடு தேவையில்லை எனச் சொல்லும் கிருஷ்ணசாமியின் குரல் குறித்து.
அவர் அப்படித்தான் பத்தாண்டுகளாகச் சொல்லி வருகிறார். இன்று அச்சமூகத்தில் பலரும் அதைச் சொல்கிற நிலை ஏற்பட்டுள்ளது. அதுவே அச்சமூகத்தின் மேல் நிலையில் உள்ளவர்களின் பொதுக் கருத்தாகவும் உள்ளது. ஆனால் கிறிஸ்துதாஸ் காந்தி போன்ற அச் சமூகத்தின் மேம்பாட்டில் அக்கறை கொண்ட வேறு சிலர் அப்படிச் செய்தால் அது அச்சமூகத்திற்கு இழப்பு என்கிறார்கள். கிறிஸ்தவர்களுக்கு அளிக்கப்பட்ட 3 சத ஒதுக்கீட்டை வேண்டாம் என அவர்களில் சில பாதிரிமார்கள் முதலமைச்சரைச் சந்தித்துப் பேசி அதை ரத்து செய்தார்கள். எந்த ஆய்வும் இல்லாமல் அப்படிச் செய்யப்பட்டதால் கிறிஸ்தவச் சமூகத்திற்கு அது நன்மையா தீமையா என்பதே தெரியவில்லை. எனவே தேவேந்திரகுலவேளாளர் சமூகத்தில் முறையான கருத்துக் கணிப்பு செய்து இதை முடிவு செய்ய வேண்டும் என்பதே என் கருத்து.
5.அருந்ததியர்கள் தெலுங்கர்கள் எனத் தமிழ்த் தேசியர்கள் சொல்லுகிறார்களே….
அவர்களைத் தமிழ்த் தேசியர்கள் எனச் சொல்வது அபத்தம். பெங்களூரு குணா வழி வந்த அவர்கள் தமிழ் பாசிஸ்டுகள். அவர்கள் கணக்குப்படி திமுக தலைவர் கருணாநிதி உட்பட எல்லோரும் தெலுங்கர்கள்தான். தெலுங்கு மொழியை தமிழ் நட்டில் உள்ளவர்கள் யாரும் வீடுகளில் இப்போது பேசுவதில்லை. அப்படிப் பேசினாலும் கூட 300 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே வாழுகிற தெலுங்கு பேசுவோரை நாடு கடத்தவா முடியும். அல்லது அஸ்ஸாமில் இன வெறியர்கள் சொல்வது போல அவர்களை “ஐயத்துக்குரிய வாக்காளர்கள்” (D voters)“ பட்டியலில் வைத்து விட முடியுமா? காலம் காலமாக இங்கே மிகவும் கீழான பணிகளுக்கும் கடுஞ் சுரண்ட்டலுக்கும் ஆட்பட்டுள்ள அருந்ததிய சமூக மக்களைத் தெலுங்கர்கள் என முத்திரை குத்தி அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது எனச் சொல்வதைப் போல மனிதாபிமானமற்ற பாசிச வெறித்தனம் ஏதும் இருக்க இயலாது.
6. கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூன்று சாதிகள் இன்று ஒரே சமூகமாக இணைந்ததுபோல ஏன் ஆதிதிராவிடர், தேவேந்திரர், அருந்ததியர் ஆகியோர் ஒரே சமூகமாக இணைய முடியவில்லை என்பது குறித்து…
கள்ளர், மறவர், அகமுடையார் என்போர் பார்ப்பனீயச் சமூக அமைப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களான போதிலும் இன்றைய சாதீயக் கட்டமைப்பில் தலித்களுடன் ஒப்பிடும்போது ஆதிக்க சாதிகள். அவர்கள் தலித் மக்கள் மீது தீண்டாமையையும் சாதி ஒடுக்குமுறைகளையும் கடை பிடிப்பவர்கள். அவர்கள் ஏற்கனவே ஒருங்கிணைந்து விட்டனர். ஆனால் ஆதிதிராவிடர், தேவேந்திரர், அருந்ததியர் ஒன்றிணைந்து தீண்டாமைக் கொடுமைகளை எதிர்க்க வேண்டிய நிலை உருவாகாதது மிகவும் வருந்தத் தக்க ஒன்று. அந்த ஒருங்கிணைவு சமீப காலத்தில் சாத்தியமில்லை. தலித் அரசியல் என்றெல்லாம் நாம் அவற்றை மேன்மைப் படுத்தினாலும் ஏதோ ஒரு வகையில் அவையும் இங்கு ஒரு உட் சாதி அரசியலாகவே தேங்கிப் போனது வேதனை.
7.அம்பேத்கர் தன்னுடைய சமகாலத்தில் வாழ்ந்த சமூக சிந்தளையாளர்களோடு கொண்ட உறவு குறித்து.. (அ). அயோத்திதாசப் பண்டிதர் (ஆ). காந்தி (இ. ரெட்டைமலை சீனிவாசன் (ஈ). பெரியார்
அம்பேத்கருக்கும் அயோத்திதாசருக்கும் இடையில் மிக நெருங்கிய நட்பு ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. அம்பேத்கர் மிகவும் நவீனமான சிந்தனைப் போக்கு உடையவர். பௌத்தத்தை அம்பேத்கருக்கு முன்பே அயோத்திதாசர் ஏற்றுக் கொண்டபோதும் அவரை அம்பேத்கர் அளவு நவீன சிந்தனையாளர் எனக் கூற முடியாது. எடுத்துக்காட்டாக அயோத்திதாசர் அருந்ததியர் மீதான தீண்டாமையை நியாயப்படுத்தியதைப் போல அம்பேத்கரிடம் எதையும் காண முடியாது. அம்பேத்கர் காந்தி உறவைப் பொருத்த மட்டில் அவர்கள் காலத்தில் நெருக்கமான உறவு அவர்களுக்கிடையில் சாத்தியமில்லாமலேயே இருந்தது. பூனா ஒப்பந்தம் அவர்களுக்கிடையில் நட்புக்கான பெருந் தடையாக இருந்தது. ஆனால் அந்தப் பிரச்சினையைக் கூர்ந்து அவதானித்தால், பேராசிரியர் அருணன் தன் குறுநூலில் கூறியிருப்பதுபோல அன்றைய சூழலில் தலித்களுக்கு இப்போதுள்ள இட ஒதுக்கீட்டைச் சாத்தியப்படுத்துவதற்கே பொது ஒப்புதல் இல்லாமல் இருந்ததை அறிய முடியும். இங்குள்ள பெரும்பான்மை மக்களிடம் அதற்கு ஒப்புதல் பெறுவதற்கே காந்தி பெரும் போராட்டம் நடத்த வேண்டியதாக இருந்தது. சிறையில் காந்தி இருந்த உண்ணாவிரதம் டாக்டர் அம்பேத்கருக்கு எதிராக நடத்தப்பட்டது எனச் சொல்வதைக் காட்டிலும் இட ஒதுக்கீடு என்கிற கோட்பாட்டையே எதிர்த்த காங்கிரசுக்கு எதிராகவும் காந்தி நடத்திய போராட்டம் அது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். காந்தி, அம்பேத்கர் இருவரும் இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் ஒரு வேளை சில அம்சங்களில் அவர்கள் இணைந்தும் கூடச் செயல்பட்டிருக்கக் கூடும். முதல் மனைவியின் மரணத்திற்குப் பின் தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டபோது காந்தியின் உதவியாளரிடம் அழைப்பிதழைத் தந்த அம்பேத்கர், “காந்தி இருந்திருந்தால் இந்தத் திருமணத்தில் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்” எனச் சொன்னதாக ஒரு பதிவு உண்டு. ரெட்டைமலை சீனிவாசனுடன் அம்பேத்கர் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட போதும் அவர்களுக்கிடையில் அப்போது மிக நெருக்கமான உறவு இருந்ததாகத் தெரியவில்லை. தமிழக தலித் தலைவர்களில் சிவராஜுடன் அண்ணலுக்கு நெருக்கமான உறவிருந்தது. எம்.சி.ராஜாவுக்கும் அம்பேத்கருக்கும் இடையில் அப்படியான உறவு இல்லை. பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் இடையில் நிறைந்த கருத்தொற்றுமையும் நெருக்கமான உறவும் இருந்தது. மதமாற்றம் உட்பட அம்பேத்கரின் அனைத்து முயற்சிகளிலும் தந்தை பெரியார் அவருக்குத் துணையாகவே இருந்தார்.
8- திராவிட இயக்கங்கள் செய்தது செய்யத்தவறியது குறித்து….
பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தொடர்ச்சியாக அவர்கள் ஆட்சியில் இருந்துள்ளனர். இந்த அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலத்தில் எந்த நாட்டிலும் வளர்ச்சிகள் ஏற்பட்டிருக்குந்தானே. அதையெல்லாம் பெரிய சாதனை எனச் சொல்லிவிட முடியாது. சமீபத்தில் கருணாநிதி மறைந்தபோது அவருடைய ஆதரவாளர்கள் மட்டுமல்லாமல் விமர்சிப்பவர்களும், நான் உட்பட, அவரது ‘சாதனைப் பட்டியலை’ப் பதிவு செய்தோம். அவர் இந்த ஐம்பது ஆண்டுகளில் 30 ஆண்டுகளுக்கு மேல் அதிகாரத்தில் இருந்துள்ளார், ஏதாவது செய்திருப்பார்தானே. எனினும் அதை எல்லம் பார்க்காமல் அவர் எதைச் செய்தார் என்பதைப் பொருத்த மட்டில் பலவற்றை நாம் பாராட்டவே செய்கிறோம். எனினும் அவர் உருவாக்கிய ஊழல் மிக்க குடும்ப அரசியல் அவரது சாதனைகளைப் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது.
திராவிடக் கட்சிகளின் சாதனை என்றால் இந்தியாவிலேயே அதிக சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளதைச் சொல்லலாம். இந்த அடிப்படையில் மனித வளக் குறியீட்டில் மேலாக உள்ள ஒரு சில மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. மாநில சுயாட்சி என்பதை வலியுறறுத்திய அம்சத்திலும் அதற்கொரு முக்கிய பங்குண்டு. பார்ப்பனரல்லாத பின்தங்கிய சமூகங்களை அதிகாரப் படுத்தியதிலும் அவர்கள் முன்னோடியாக இருந்துள்ளனர். ஆனால் அதுவே தலித்கள் மீதான ஆதிக்கம் தொடரவும் காரணமாகியது. குடிசை மாற்று வாரியம் அமைத்தது, இந்தி எதிர்ப்பு ஆகியவற்ரையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.ஆனால் அதற்கான பழியை அவர்கள் மீது மட்டுமே சுமத்துவது அபத்தம். அவர்கள் செய்யத் தவறியவை என்பதைப் பொருத்த மட்டில் காவிரி நீர் உட்பட மாநில உரிமைகள் பலவற்றையும் தமிழகம் கோட்டை விட்டுள்ளதைச் சொல்லலாம். எக்காரணம் கொண்டும் பதவியை இழக்க அவர்கள் தயாராக இல்லை. அப்புறம் அவர்களின் படு மோசமான வாரிசு அரசியல். ஈழப் பிரச்சினை அதன் உச்சத்தில் இருந்தபோது கருணாநிதி தன் பிளைகளுக்கு அமைச்சரவையில் இடம் கேட்டு டெல்லிக்குப் பறக்கவில்லையா?
9 இடதுசாரிகள் உலக அளவில் பின்னடைவைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள் அல்லது தோற்கடிக்கப்பட்டுக் கொண்டு இருப்பதாகச் சொல்கிறீர்கள் இது குறித்து மிகவும் விவரித்துச் சொல்லுங்கள்.
இதென்ன, இது எல்லோர் கண்ணிலும் அன்றாடம் காட்சிப் பொருளாக இருப்பதுதானே. ருஷ்யா கிழக்கு ஐரோப்பிய நாடுகள் எல்லாம் கம்யூனிஸ்ட்கட்சி ஆட்சியைத் தூக்கி எறிந்துவிட்டு முதலாளித்துவப் பாதைக்குத் திரும்பிவிட்டன. சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியிலேயே முதலாளித்துவ நடைமுறைகள் செயலாக்கப்படுகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தோல்வியைச் சந்திக்கின்றன. இவற்றையெல்லாம் நான் மிக்க கவலையோடும் கரிசனத்தோடும்தான் இங்கு சொல்கிறேன். அது மட்டுமல்ல. இதைவிட ஆபத்தான விடயம் என்னவெனில் புதிய தலைமுறை இளைஞர்கள் முழுக்க முழுக்க முதலாளித்துவ மதிப்பீடுகளுக்குப் பலியாகியுள்ளதுதான் இன்னும் பெரிய கொடுமை. இது குறித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் மத்தியில் ஆழமான ஆய்வுகள் இந்தியாவில் போதுமான அளவுக்குக் கிடையாது. கம்யூனிசத்தின் இந்த வீழ்ச்சி பல உயரிய மானுட மதிப்பீடுகளை நாசம் செய்துள்ளது. இன மத வெறுப்புகளும், வெறுப்பு அரசியல்களும் இன்று மேலுக்கு வந்துள்ளன. இந்தியாவை எடுத்துக் கொண்டோமானால் இன்று நூற்றுக் கணக்கான இந்துத்துவ அமைப்புகள் பல்வேறு மட்டங்களில் செய்யும் பணிகளில் பத்தில் ஒரு மடங்கு கூட நாம் செய்வதில்லை. அவர்கள் மிகவும் தொலைதூரத் திட்டமிடலுடன் காய்களை நகர்த்துகின்றனர். அவற்றுக்கு ஈடு கொடுக்கும் அளவிற்குச் செயலபட முடியாமல் நாம் சோர்ந்து கிடக்கிறோம். பொருளியல் அடிப்படையில் இன்று சோவியத்துக்குப் பிந்திய உலகம் கார்பொரேட்களின் பொற்காலமாக ஆகியுள்ளது. இனி நிரந்தர வேலை, சமூகப் பாதுகாப்பு, ஓய்வூதியம் இலவசக் கல்வி, பொது மருத்துவம் என்பதெல்லாம் சாத்தியமே இல்லை என்பது உறுதியாகிவிட்டது. ஒரு மிகப் பெரிய அறவீழ்ச்சி இன்று ஏற்பட்டுள்ளது. இனி வர்க்கப் போராட்டங்களுக்குக் காலமில்லை, இனி கலாச்சாரங்களுக்கு இடையேயான மோதல்தான் சாத்தியம் எனக் கூறி இன்று உலகில் மிக ஆபத்தாக உருவாகியுள்ள ‘இஸ்லாமோபோபியா’ வை மறைமுகமாக கார்பொரேட் சிந்தனையாளர்கள் ஆதரிக்கின்றனர்.
10.சர்வதேச அளவில் முஸ்லிம்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்கள். என்பதும் உங்கள் அவதானிப்பு அது குறித்தும் மிக விரிவாக… சொல்லலாம்.
இதுவும் அன்றாடக் காட்சிகளாக நாம் கண்டு கொண்டிருப்பவைதான். உலகின் மிக முக்கியமான ஜனநாயக நாடு எனச் சொல்லப்படும் அமெரிக்காவில் உருவாகியுள்ள இந்த “இஸ்லாமோபோபியா” – எனும் இந்த இஸ்லாமிய வெறுப்பு ஒரு தொழிலாகவே மாறி உள்ளது எனப் பல நூல்கள் ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளன. நாடன் லீன் என்பவர் எழுதியுள்ள “இஸ்லாமிய வெறுப்புத் தொழில்” எனும் நூல் தமிழில் பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். முஸ்லிம்கள் கொல்லப்படுதல் – Lynching என்பது ஏதோ மாட்டுக் கறி வைத்திருப்பதாகச் சொல்லப்படும் இந்திய முஸ்லிம்கள் மீது மட்டும் மேற்கொள்ளப்படும் கொலைவெறித் தாக்குதல் அல்ல. அமெரிக்காவிலும் ஐரோப்பவிலும் கூட இப்படி நடந்து கொண்டுதான் உள்ளன. தாடி வைத்திருப்பது, பெண்கள் ஹிஜாப் அணிவது, பெரிய அளவில் தொழுகைத் தலங்களைக் கட்டுவது முதலியன இன்று மேலை நாடுகளில் கடும் எதிர்ப்புக்கும் தாக்குதல்களுக்கும் உள்ளாகின்றன. இப்படியான சூழல் பெருகும்போது முஸ்லிம்கள் இயல்பாகவே ஒரு வகையான “பதுங்கு குழி” மனப்பான்மைக்குள் தள்ளப்படுகிறார்கள். அதாவது அவர்களின் அடையாளங்களையே அவர்கள் தமக்கு ஒரு பாதுகாப்பாகக் கருதி அதற்குள் ஒடுங்குகின்றனர். நீங்கள் நன்றாகக் கவனித்துப் பார்த்தீர்களானால் முஸ்லிம்கள் மீதான இப்படியான தாக்குதல்கள் அதிகமான பின்புதான். அவர்களிடம் அதிக அளவில் தாடி வைத்துக் கொள்வது, தவறாது தொழுகைக்குச் செல்வது முதலிய வழமைகள் அதிகமாகியுள்ளன என்பதை விளங்கிக் கொள்ள முடியும்..ளாப்படி அவர்கள் தம் அடையாளங்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் இயல்பான முயற்சிகளையே இன்று அவர்களுக்கு எதிராகத் திருப்புகின்றனர் இஸ்லாமோபோபியா வெறியர்கள். ஆக இது ஒரு முடிவற்ற தொடர்ச்சியாகத் தொடரும் நிலை ஏற்படுகிறது.
இங்கு நான் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். முஸ்லிம்களின் இன்றைய நிலை குறித்த புரிதல் இடதுசாரி அமைப்பினரிடம் மிகக் குறைவாகவே உள்ளது. இடதுசாரி அரசியலிலும், பாசிச எதிர்ப்பிலும் அக்கறையுள்ளவன் என்கிற வகையில் இதை நான் கூர்ந்து கவனித்து வருகிறேன். முஸ்லிம்கள் இன்று தலித் அமைப்புகள், தமிழ் அமைப்புகள் ஆகியவற்றை நம்புகிற அளவிற்கு இடதுசாரி அமைப்புகளை நம்புவதில்லை. இதை கம்யூனிஸ்டுகள் மீதான குறையாக மட்டும் நான் கருதவில்லை. முஸ்லிம்களுக்கும் இடதுசாரிச் சிந்தனைகள் மீது ஒரு ஆழமான வெறுப்பு இருக்கவே செய்கிறது. என்னதான் இருந்தாலும் அது ஒரு வணிகச் சமூகம். அவர்களுக்கு இயல்பில் பொது உடைமை எனும் கருத்தில் ஈர்ப்பு இருப்பதில்லை. அவர்களிடம் பேசும்போதெல்லாம் இதை நான் சுட்டிக் காட்டத் தயங்குவதில்லை.
இது குறித்து இரு தரப்பும் பொறுப்போடு சிந்திக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள். குறிப்பாக இன்று இந்தியாவில் உருவாகியுள்ள இந்துத்துவ பாசிசத்தைப் பொருத்த மட்டில் அதற்கு முஸ்லிம்கள் எந்த அளவுக்கு எதிரியோ அதுபோல கம்யூனிஸ்டுகளும் எதிரிதான். இந்நிலையில் முஸ்லிம்களும் கம்யூனிஸ்டுகளும் இணைந்து நின்று பொது எதிரியை எதிர்கொள்வது அவசியம். அது இன்று குறைவக உள்ளது.
11- காந்தியார்.. ?
காந்தியார் பற்றி நான் என்ன புதிதாகச் சொல்லிவிடப் போகிறேன்?எத்தனையோ உலகப் பெரியார்கள், அறிஞர்கள், சிந்தனையாளர்கள் சொன்னவற்றைத்தான் நான் திருப்பிச் சொல்லிக் கொண்டுள்ளேன். கடந்த பத்தாண்டுகளில் நான் அவரைப் பற்றி நிறையவே எழுதிவிட்டேன். என் அப்பா ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு நாடுகடத்தப்பட்ட ஒரு கம்யூனிஸ்ட். அவர் கடைசி வரை கதர் ஆடைதான் உடுத்துவார். எனக்கு அவர் வாங்கிக் கொடுத்த நூற்களில் “மார்க்ஸ் – எங்கல்ஸ் நினைவுக் குறிப்புகள்” நூலும் இருந்தது; “சத்திய சோதனை”யும் இருந்தது. நேரு இறந்த அன்று அப்பா ‘சுதேசமித்திரன்’ நாளிதழ் நெஞ்சில் கவிழ்ந்திருக்க கண்ணீருடன் அவரது சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்த காட்சியை என்னால் மறக்க இயலாது. காந்தியை இ.எம்.எஸ், ஹிரேன் முகர்ஜி.. இப்படி எத்தனையோ கம்யூனிஸ்டுகள் வியந்துள்ளனர். கம்யூனிஸ்டுகள் காந்தியை வெறுப்பதற்கு ஏதுமில்லை. என் பிரியத்துக்குரிய ஜெயகாந்தன் காந்தி குறித்த ரோமன் ரோலந்தின் நூலை மொழியாக்கவில்லையா? காந்தியைப் படியுங்கள். மேன்மையுறுவீர்கள்.
(அடையாளம் பதிப்பகத்தின் நாதன் லீன் எழுதிய ‘இஸ்லாமிய வெறுப்புத் தொழில்’ நூலுக்கு எழுதிய முன்னுரை, , ஜனவரி 21, 2018)
அமெரிக்காவில் செழித்து வளரும் இஸ்லாமிய வெறுப்புத் தொழிலில் முன்னணியில் உள்ள மிக முக்கியமான நபர்களில் ஒருவர் ராபர்ட் ஸ்பென்சர். இந்த வேலையில் அவர் படு ‘பிசி’. ‘Truth About Muhammed’ என்பதைப் போல நபிகளையும், இஸ்லாமையும் பற்றிய அவதூறுகள் நிரம்பிய நூற்களை எழுதுதல், “அமெரிக்காவை இஸ்லாமிய மயமாக்குவதை நிறுத்து’ (Stop Islamisation of America) முதலான இயக்கங்களை மிதக்க விடுதல், இஸ்லாமிய வெறுப்பு ‘ப்ளாக்’ ஒன்றில் வெறுப்பைக் கொட்டி எழுதித் தள்ளுதல், பல்கலைக் கழகக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு இப்படியான கருத்துக்களை முன்வைத்தல், ஏராளமான வெறுப்புப் பிரச்சாரக் கூட்டங்களில் முழங்குதல் என ஓய்வறியாமல் இயங்குபவர்.
2010 அக்டோபரில் The Tennessian எனும் புலனாய்வு இதழ் மேற்கொண்ட ஆய்வொன்று இவர் பற்றி, “இஸ்லாம் குறித்த வெறுப்பையும் அச்சத்தையும் ஊட்டிக் காசு சம்பாதிக்கும் பலரில் ஒருவர்” எனக் குறிப்பிட்டது. அமெரிக்க வரி வசூல் துறையின் (Internal Revenue Service) ஆவணங்களை 2008 முதல் அந்த இதழ் ஆய்வு செய்து ஓரு குறிப்பிட்ட ஆண்டில் இப்படியான வெறுப்புப் பேச்சுக்களின் மூலம் டேவிட் ஹாரோவிட்ஸ்சின் Freedom Centre எனும் அமைப்பிலிருந்து ஸ்பென்சர் பெற்ற ஊதியம் 132,537 டாலர் என்பதையும், இவரது நிகழ்ச்சிகளின் வழியாக டேவிட் ஹாரோவிட்சுக்கு அந்த ஆண்டில் கிடைத்த வருமானம் 400,000 டாலர் என்பதையும் வெளிக்கொணர்ந்தது. டேவிட் ஹாரோவிட்ஸ் அமெரிக்காவின் இன்னொரு பெரிய இஸ்லாமிய வெறுப்புத் தொழில் முதலாளி. இங்கே குறிப்பிட்டுள்ளது ஒரு நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் மட்டும் ஸ்பென்சரும் அந்த நிறுவனமும் சம்பாதித்த தொகை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்..
இவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகள் எப்படியானவை என்பதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டைப் பாருங்கள்.
ஸ்பென்சர் குறித்து நான் தகவல்களைத் தேடிக் கொண்டிருந்தபோது அவரது அட்டகாசமான உரை ஒன்றின் Live வீடியோ பதிவு கிடைத்தது. மேலே சொன்ன டேவிட் ஹாரோவிட்சின் Freedom Center சார்பில் 2017 நவம்பர் 16-19 தேதிகளில், Florida Palm Beach ல் உள்ள Breakers Hotel ல் நடந்த நிகழ்ச்சி அது.
“எல்லோருக்கும் நன்றி” – என உரையைத் தொடங்கும் ஸ்பென்சர் தனது சமீபத்திய “அனுபவம்” என்று ஒரு “கதை”யைச் சொல்கிறார்: “சில நாள் முன்னர் நான் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குப் போயிருந்தேன். கூட்ட நெருக்கடியில் தன் அம்மாவை விட்டுப் பிரிந்து வந்திருந்த ஒரு சிறுவன் மேனேஜர் அறையில் நின்றிருந்தான். மேனேஜர் அவனை விசாரித்துக் கொண்டிருந்தார்.
“உன் பெயர் என்ன?”.
“முஹம்மது”
“ம்.. உன் அம்மாவைக் காணோமா?”
“ஆமாம்”
“உன் அம்மா பாக்குறதுக்கு எப்படி இருப்பாங்கன்னு சொல்ல முடியுமா?”
“இல்லை எனக்கு அதைப் பற்றி ஒரு கருத்தும் கிடையாது (No, I don’t have any idea)”
இந்த இடத்தில் ஒரு புன்னகையோடு ஸ்பென்சர் சொல்லுகிறார்: “இதுதான் Clash of Civilization”.
கொல்லென்று அரங்கில் ஒரே சிரிப்பு. அவ்வளவுதான். ஸ்பென்சர் தன் பேச்சைத் தொடர்கிறார்.
Clash of civilization என்பது சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பின் சாமுவேல் ஹட்டிங்டன் எழுதிய நூலின் தலைப்பு. பனிப்போர்க் காலம் முடிந்துவிட்டது. “இனி உலக அளவில் முரண்பாடுகள் மோதல்கள் எல்லாம் ‘முதலாளித்துவம் X கம்யூனிசம்’ என்பது போன்ற பழைய வடிவங்களில் நடக்கப் போவது இல்லை. இனி மோதல் என்பது நாகரீகங்களுக்கு இடையேதான்” – என்பதுதான் அந்த நூல் சொல்லும் சேதி. ஒரு பேரரசாக (Empire) தனக்குக் கீழ் உள்ள நாடுகளைத் தன் அதிகாரத்தின் கீழ் தொடர வைப்பதற்கு இப்போது முதலாளியக் கருத்தியலாளர்கள் கண்டுபிடித்ததுதான் இந்த “நாகரிகங்களின் மோதல்”. பச்சையாகச் சொல்வதானால் இனி நமக்கு எதிரி இஸ்லாம்தான். இஸ்லாமிய பயங்கரவாதம்தான் என்கிறது அந்நூல்.
இந்தப் பின்னணியில் உருவாக்கப்பட்டதுதான் இந்த இஸ்லாமிய வெறுப்புத் தொழில் (Islmophobia Industry). மேலே உள்ள ஸ்பென்சரின் பேச்சைக் கூர்மையாகக் கவனியுங்கள். “முகம்மது” என்கிற பெயரின் ஊடாக அந்தச் சிறுவன் ஒரு முஸ்லிம் என பார்வையாளர்கள் முன் அடையாளம் காட்டப்படுகிறான். நமது பண்பாட்டில் அம்மாவைப் பற்றிச் சொல்லச் சொன்னால நமது குழந்தைகள் அம்மா அப்படி இருப்பார்கள், இப்படி உடுத்தி இருப்பார்கள் என்றெல்லாம் சொல்லும். அதற்குத் தன் அம்மாவைப் பற்றி ஒரு கருத்து இருக்கும். “நமது பண்பாட்டில்” மட்டுமல்ல எந்தப் பண்பாட்டிலும் குழந்தைகள் அப்படிச் சொல்லும். ஆனால் ஒரு முஸ்லிம் குழந்தையால் அப்படிச் சொல்ல முடியாது என்கிறார் ஸ்பென்சர். ஒரு முஸ்லிம் குழந்தை அத்தகைய பண்புடன் உருவானதோ, வளர்க்கப்பட்டதோ அல்ல என்றெல்லாம் இந்தக் கதை மூலம் அவர் சொல்லி விடுகிறார். அது மட்டுமல்ல. ஒரு முஸ்லிம் குழந்தையால் என்ன அடையாளத்தைத்தான் சொல்லிவிட முடியும்? கருப்பு ஹிஜாப் அணிந்திருப்பாள் என்பதைத் தவிர என்றும் கேட்பவர்கள் பொருள் கொள்ள முடியும்.
இன்னொன்றையும் கவனியுங்கள். இது தாயைப் பிரிந்து வந்த “ஒரு” முஸ்லிம் குழந்தையின் கதை மட்டுமல்ல. எல்லா முஸ்லிம்களுமே அப்படித்தாரன். பெற்ற தாய் குறித்துக்கூட “எந்தக் கருத்தும்” இல்லாதவர்கள் அவர்கள் என்பதும் அதில் உட்பொதிந்து உள்ளது..
கதையின் முடிவில் “முஸ்லிம்கள் வேறு, நாம் வேறு”,. இருவரும் எந்தப் புள்ளியிலும் சந்திக்கவே இயலாத இரு வேறுபட்ட பண்பாட்டுக்குரியவர்கள். இந்த இரு துருவங்களுக்கும் இடையில் உரையாடல் சாத்தியமே இல்லை என்கிற எண்ணம் பார்வையாளர்கள் மனத்தில் பதிக்கப்படுகிறது. ஒரு கேலியில் தொடங்கி வெறுப்பில் முடிகிறது ஸ்பென்சர் அவிழ்க்கும் கதை.
இஸ்லாமிய வெறுப்பு வெளிப்படும் விதங்களில் மேலே சொன்னது ஒரு வகை. முஸ்லிம்களைக் “கேலி” “கிண்டல்” (derison) செய்வது என்கிற வகையில் இதை அடக்கலாம். முஸ்லிம்களின் பேச்சு, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைக் கேலிக்குரியதாகுவதன் ஊடாக அவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபட்ட பண்புடையவர்களாய்ச் சித்திரிக்கும் போக்கு இது. அவர்கள் மீது வெறுப்பை (hatred) விதைப்பது, அவர்கள் பற்றி அச்சத்தை (fear) ஊட்டுவது என்பன இஸ்லாமிய வெறுப்புத் தொழிலின் இதர இரண்டு வடிவங்கள்.
இது டேவிட் ஹாரோவிட்ஸ் போன்றோருக்குப் பெரிய வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய தொழிலாகவும் உள்ளதைப் பார்த்தோம். ஜூன் 2016ல் பெர்க்லியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகமும் ‘அமெரிக்க – இஸ்லாமிய உறவுகளுக்கான கழகமும்’ (Council on American-Islamic Relations -CAIR) இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டன. “2008 – 2013 காலகட்டத்தில் மட்டும் இப்படியான பல்வேறு அமைப்புகள் இந்தத் தொழிலில் செய்த முதலீடு 200 மில்லியன் டாலர். இது தன்னளவில் முழுமையான ஒரு தொழிலாக உள்ளது. கோடிக் கணக்கான டாலர் லாபத்தை இப்படி அவர்கள் ஈட்டுகின்றனர். தம்மை இஸ்லாமியர் மற்றும் இஸ்லாம் தொடர்பான பிரச்சினைகளில் பெரிய அறிஞர்கள் போல அவர்கள் காட்டிக் கொள்கிறார்கள். அப்படி அல்ல என்பதுதான் உண்மை. இப்படியான 74 அமைப்புகளை நாங்கள் எங்கள் ஆய்வில் அடையாளம் கண்டோம்” – என்கிறது அந்த அறிக்கை.
2.
‘அஸ்லான் மீடியா’ எனும் ஊடக நிறுவனத்தின் தலைமை ஆசிரியராக உள்ள நதன் லீன் 2012 ல் எழுதிய இந்நூல் பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுப் பெரிய அளவில் வரவேற்பிற்குள்ளான ஒன்று. இந்நூலின் செம்மைப் படுத்தப்பட்ட இரண்டாம் பதிப்பிலிருந்து (2017) இது மொழியாக்கப்பட்டுள்ளது. இஸ்லாம், மேற்கு நாடுகள், இரண்டுக்குமான உறவு ஆகியன குறித்துத் தொடர்ந்து எழுதிவருபவர் நதன் லீன். Understanding Islam and the West எனும் அவரது இன்னொரு நூல் விரைவில் வெளிவர உள்ளது. இந்நூலில் அவர் இப்போது அமெரிக்காவிலும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் இஸ்லாமிய வெறுப்பு எப்படி மிகப் பெரிய தொழிலாகவும் ஆபத்தாகவும் வளர்ந்துள்ளது என்பதை விரிவான ஆதாரங்களுடன் நிறுவுகிறார். இந்நூலின் தொடக்கத்தில் முஸ்லிம் என்பதற்காகவே ஒரு டாக்சி ஓட்டுநர் முன்பின் தெரியாத ஒரு நபரால் எந்தக் காரணமும் இன்றிக் கத்தியால் குத்தப்படும் ஒரு சம்பவம் உள்ளது. வாசிக்கும் யாரும் இதை அவ்வளவு எளிதாகப் புரிந்து கொள்ள முடியுமா எனத் தெரியவில்லை. இப்படியுமா நடக்கும் என்றுதான் யோசிக்கத் தோன்றும். ஆனால் அப்படித்தான் நடக்கிறது. “இஸ்லாமிய ஆபத்து” குறித்து ஊட்டப்படும் அச்சமும் வெறுப்பும்தான் இத்தகைய சம்பவங்களின் பின்னணியாக அமைகின்றன.
முன்னதாக Know Nothing, இப்போது Tea Party, American Protective Organisation முதலான அமைப்புகள், ட்ரம்ப், ந்யூட் கிங்ரிச், புஷ் போன்ற அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள், அரசு நிறுவனங்கள் எனப் பல மட்டங்களில் இந்த வெறுப்பு ஒவ்வொரு நிமிடமும் பொது வெளியில் விதைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
“முஸ்லிம் பயங்கரவாதம்” என்கிற சொல்லாடலைத் தாண்டி இப்போது “இஸ்லாம்” என்பதே அடிப்படையில் ஆபத்தானது, எல்லா முஸ்லிம்களுமே பயங்கரவாதத்தை மனதளவில் ஏந்தி இருப்பவர்கள்தான், திருக்குர் ஆன் என்பது வன்முறையை ஒரு வழிமுறையாகப் பரிந்துரைக்கும் நூல், நபிகள் நாயகம் பயங்கரவாதத்தின் முன்னோடி என்கிற கருத்தாக்கங்கள் பல மட்டங்களில் மக்களிடம் கொண்டு செல்லப்படுகின்றன. அமெரிக்க இராணுவப் பயிற்சியகங்களில் (US Military Academy), “மிதவாத இஸ்லாம் (Moderate Islam) என எதுவும் இல்லை” என மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கப் படுகின்றது. “அல்குவேடா ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டுவிட்டது. அதை மறந்து விடுங்கள். இப்போது நாம் இஸ்லாமிய நம்பிக்கையின் மீதே (Islamic Faith itself) கவனம் செலுத்த வேண்டும்” என அவர்களுக்குச் சொல்லித் தரப்படுகிறது.
எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களிடத்திலும் கூட இந்தப் போக்கை அடையாளம் காண முடியும். கிறிஸ்டோபர் ஹிட்சன்ஸ் ஒரு புகழ்பெற்ற நாத்திகப் பிரசாரகர். “புதிய நாத்திகர்கள்” என அழைக்கப்படுவோரில் ஒருவர். இஸ்லாமிய எதிர்ப்புப் படைகள் உலகெங்கும் நிறுத்தப்படுவது குறித்து அவர், “அந்தப் படையினர் வீசும் க்ளஸ்டர் குண்டுகளிலிருந்து தெறிக்கும் எஃகுச் சில்லுகள் அவர்களின் (அதாவது முஸ்லிம்களின்) உடல்களை மட்டுமல்ல அவர்களின் இதயங்களில் சுமந்துள்ளார்களே அந்தக் குர் ஆனையும் துளைத்துச் செல்லட்டும்” எனப் புளகித்துச் சொல்வதை அவருடைய God is not Great எனும் நூலில் காணலாம். இப்படியான முற்போக்குகள் தம் இன வெறுப்பை வெளிப்படையாகக் காட்டமாட்டார்கள். சொல்லப்போனால் வெறுப்புத் தொழிலில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று கூடக் காட்டிக் கொள்வார்கள். ஆனால் இனவாதம், மதவாதம், ஆணாதிக்கம் ஆகியவற்றைக் கண்டிப்பது என்கிற சாக்கில் முஸ்லிம்கள் மீதுத் தம் பங்கு இன வெறுப்பைச் சந்தர்ப்பம் வாய்க்கும்போது கொட்டுவார்கள்.
நாங்கள் X அவர்கள் என்கிற எதிர்வு இன்று மிக நுணுக்கமாக எல்லா மட்டங்களிலும் முன்வைக்கப்படுகிறது. ‘நாங்கள்’ என்பது அமெரிக்கர்கள், வெள்ளையர்கள், யூதர்கள், மேற்கத்தியப் பண்பாட்டை ஏற்போர். ‘அவர்கள்’ என்பது இன்றைய நிலையில் முஸ்லிம்களையே குறிக்கிறது. “வஞ்சக ஜிஹாத்” (stealthy jihad), “ஊர்ந்துவரும் ஷரியா” (creeping sharia) என்பன போன்ற வெறுப்புச் சுமையுடன் கூடிய சொற் பாவனைகளை முஸ்லிம்கள் குறித்த அவர்களின் எழுத்துக்களில் நிறையக் காண முடியும்.
‘முஸ்லிம்கள்’, ‘இஸ்லாம்’ என்பவற்றின் ஊடாக அவர்கள் இந்தப் பரந்துபட்ட உலகின் பல்வேறு பகுதிகளிலும் எண்ணற்ற பண்பாட்டு வேறுபாடுகள், மொழிகள், உணவுப் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றுடன் வாழும் முஸ்லிம்கள் எல்லோரையும் ஒரே மாதிரியான, ஆபத்தான அச்சுப் பதிவுகளாகக் (stereotype) கற்பிக்கின்றனர்.
தீவுக்கூட்டமாக உள்ள தென்கிழக்கு ஆசியா, இந்தியத் துணைக் கண்டம், உயர் நிலப் பகுதியான ஆப்கானிஸ்தான், யூரேசிய ஸ்தெப்பிகள், டைக்ரிஸ் மற்றும் யூப்ரேட்ஸ் நீரிடைப் பகுதிகள், பாலைவன அரேபியத் தீபகற்பம், துருக்கி, கிழக்கு ஐரோப்பாவின் அல்பேனியா, போஸ்னியா, மத்திய ஆசிய டர்கிக் நாடுகள் எனப் பல்வேறு தட்ப வெப்பப் பகுதிகள், பண்பாடுகளின் ஊடாகப் பரவியுள்ள உலகு தழுவிய ஒரு மதத்தைப் பின்பற்றும் பல்லின மக்களை ‘முஸ்லிம்’ என ஒரே அச்சுப்பதிவாகக் குவித்து நோக்க இப்படியான வெறுப்புப் பார்வை ஒன்றால் மட்டுமே இயலும். இதன் மூலம் ஏதேனும் ஒரு பண்பாட்டுக்குரிய வழமையை ஒட்டு மொத்த முஸ்லிம்களின் பண்பாகவே அடையாளப்படுத்த முடிகிறது. எடுத்துக்காட்டாக ஒன்றைச் சொன்னால் எளிதில் விளங்கும். “இருக்கும்’’ எனும் தமிழ்ச் சொல்லை “இரிக்கும்” என ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்கள் பாவிக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அந்தப் பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் வாழ்ந்தால் ஒட்டு மொத்தமாக முஸ்லிம் மக்களையே அந்தச் சொல்லிக் கொண்டு கிண்டல் செய்வதைத் தமிழில் ஒரு முஸ்லிம் நாவலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார் பிர்தௌஸ் ராஜகுமாரன் எழுதியுள்ள ‘ரணங்கள்’ எனும் நாவலில் தான் பள்ளி மாணவனாக இருந்தபோது பிற மாணவர்கள் அப்படி அழைத்துக் கேலி செய்தது தன்னை எந்த அளவு பாதித்தது என்பதைச் சொல்லுவார். முஸ்லிம்கள் எல்லோருமே இப்படித்தான் என்பதாக சில நகைச்சுவைகளும் இங்கு உண்டு. “பாலிருக்கும் பழமிருக்கும்” என்கிற திரைப் பாடலை ஒரு முஸ்லிம் பாடினால் அது எப்படி இருக்கும் எனக் கேட்டு, விடையாக “பாலிரிக்கிம், பழமிரிக்கிம்’ எனப் பாடுவார்கள் என நான் பள்ளியில் படித்த காலத்தில் மாணவர்கள் கேலி செய்வது நினைவுக்கு வருகிறது. இப்படி நிறையச் சொல்லலாம்.
இப்படி இஸ்லாமை ஒற்றை அடையாளமாக்கி ‘இஸ்லாமிய மூர்க்கம்’ (Islamic Rage) என்றெல்லாம் சித்திரிப்பது கேட்பவர்களுக்கு அச்சத்தை ஊட்டி வெறுப்பை உருவாக்குவதற்கு ஒரு எடுத்துக்காட்டு. பேருந்தில் பக்கத்தில் வந்து உட்காரும் எந்த ஒரு முஸ்லிமையும் ஒரு பயங்கரவாதியாகக் கருதித் துணுக்குறச் செய்யும் உத்தி இது.
இப்படியான வெறுப்பூட்டல்கள் அவர்களுக்கு வேறு பல அரசியல் பயன்களையும் ஈட்டித் தருகிறது.. மேலாதிக்க நோக்குடன் ஆஃப்கானிஸ்தான், ஈராக் முதலான நாடுகளின் மீது அவர்கள் மேற்கொண்ட படைஎடுப்புகள், ஈரான் முதலான நாடுகளின் மீது அவர்கள் விதித்த தடைகள், எல்லை மீறி அவர்கள் புகுந்து மேற்கொள்ளும் “துல்லியத் தாக்குதல்கள்” (surgical strikes) ஆகிய எல்லாவற்றையும் அவர்கள் இப்படி நியாயப்படுத்திக் கொள்கின்றனர். இப்படியான நடவடிக்கைகளால் அவர்கள் உலகளவில் சம்பாதிக்கும் கெட்ட பெயர்களையும் முஸ்லிம்கள் பற்றிப் பரப்பப்படும் இத்தகைய வெறுப்புக் கருத்துக்களால் கழுவித் தூய்மைப் படுத்திக் கொள்கிறார்கள். இவர்கள் மேற்கொள்ளும் இத்தகைய போர்கள் வேறு வகைகளிலும் அவர்களுக்குப் பயனீட்டித் தருகின்றன. லாபம் ஈட்டும் போர் தொடர்பான தொழில்கள் (war industry) செழிக்கவும், நிதிநிலை அறிக்கைகளில் இராணுவத்துறைக்கு பிற நலத்துறைகளைக் காட்டிலும் அதிக நிதி ஒதுக்கீடு செய்து ஊழலுக்கு வழி வகுக்கவும் பயன்படுகின்றன. ‘தேசபக்திச் சட்டம்’ (Patriotic Act) போன்ற உள்நாட்டு அடக்குமுறைச் சட்டங்களை இயற்றவும், மக்களின் சிவில் உரிமைகளைக் கட்டுப்படுத்தவும், பேச்சுரிமையைக் குறைக்கவும், கல்வி நிலையங்களில் தலையிட்டு கல்விச் சுதந்திரத்தை (academic freedom) அழிக்கவும், எல்லாவிதமான மாற்றுக் கருத்துக்களையும் ஒடுக்கவும் முஸ்லிம் வெறுப்பு இவர்களுக்குப் பயன்படுகிறது. இப்படி ஒரு வெறுப்பு மொழியினூடாக பொதுச் சிந்தனை, பேச்சு, பார்வை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது என்பது அரசியல், அடக்கு முறை, பொருளீட்டல் என்கிற பொருளாயதப் பலன்களைக் குவிப்பதாகவும் ஆகிறது.
இன்னொன்றையும் நாம் புரிந்துகொள்ள வேண்டு, இப்படியான அடக்குமுறைச் சட்டங்கள் அவர்களுக்கு முஸ்லிம்களை ஒடுக்குவதற்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்தச் சமுதாயத்தையும் மிரட்டி வைக்கவும் அவர்களுக்குப் பயன்படுகிறது.
இன்னொரு பக்கம் தங்களின் ஒரு சார்புக் கொள்கைகளுக்கு மக்களிடம் ஆதரவு தேடுவது என்பதற்கு அப்பால் மக்களின் பார்வைகளையே திருத்தித் தங்களுக்கு இயைபாக்கவும் வெறுப்புத் தொழில் அவர்களுக்குப் பயன்படுகிறது.
3.
அமெரிக்க வரலாற்றைப் பார்த்தீர்களானால் இப்படிப் பிற சமூகங்களின் மீது வெறுப்பைக் கக்குவது அவர்களுக்குப் புதிதல்ல என்பது விளங்கும். உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இன்றைய அமெரிக்கா என்பது வெகு சமீபத்தில் ஐரோப்பிக் குடியேற்றங்களால் உருவாகிய நாடு. நீண்ட வரலாற்றுப் பின்னணியற்ற அந்நாட்டில் சுதந்திரம் அடைந்த காலந் தொட்டே (1776) பிற நாடுகள், பிற மக்கள், பிற மதங்கள், புதிய சிந்தனைகள் ஆகியவற்றின் மீது அதற்கு ஒரு ஐயமும் அச்சமும் இருந்து வருகிறது. தொடர்ந்து அது வெளியுலகில் மட்டுமின்று தன் நாட்டுக்குள்ளேயும் ஒரு ஆபத்தான எதிரியைத் தேடிக் கொண்டே இருந்தது எனலாம். அமெரிக்கர்கள் மத்தியில் உள்ளார்ந்து இருந்த இந்த உளவியல் சிக்கல் அவர்களின் அரசியலில் எவ்வாறு வெளிப்பட்டது என்பது குறித்த வரலாற்றறிஞர் ரிச்சர்ட் ஹாஃப்ஸ்டாடர் எழுதியுள்ள The Paranoid Style in American Politics எனும் கட்டுரை முக்கியமான ஒன்று.
1790 களில் அமெரிக்கர்களின் இந்த அச்சமும் வெறுப்பும் அறிவொளிக்கால இல்லுமினாட்டிகளுக்கு எதிராக இருந்தது. பவேரியன் இல்லுமினாட்டி என்பது மூடநம்பிக்கைகள், பொதுவாழ்வில் மதத்தின் தலையீடு முதலானவற்றை எதிர்த்து 1770 களில் உருவான ஒரு இரகசிய அமைப்பு. அது குறித்த அச்சமும் வெறுப்பும் அப்போது மிகப் பெரிய அளவில் அமெரிக்கர்கள் மத்தியில் வெளிப்பட்டன. 1850 களில் இல்லுமினாட்டிகள் குறித்த அச்சம் விலகி, பதிலாகக் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் இப்போது அமெரிக்கர்களின் வெறுப்புக்கு இலக்காயினர். கத்தோலிக்கர்களின் புலப்பெயர்வு குறித்து மிகப் பெரிய அச்சம் அபோது பரப்பப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்கர்களின் வெறுப்புக்கும் அச்சத்திற்கும் அப்போது உலகெங்கிலும் வளர்ந்து வந்த கம்யூனிசம் காரணமாகியது.
1940 களில் விஸ்கான்சின் செனட்டராக இருந்த ஜோசப் மெக் கார்த்தியின் காலத்தில் கம்யூனிஸ்டுகள் என்கிற ஐயத்திற்கு உள்ளான அனைவரும் பெரிய அளவில் துன்புறுத்தப்பட்டனர். கொல்லப்பட்டனர். எந்தவித ஆதாரமும் இல்லாமல் கைது செய்து, அவதூறு செய்து, தண்டனைக்கும் உள்ளாக்கப்படும் அவலத்தைக் குறிக்க ‘மெரக்கார்த்தியிசம்” (McCarthyism) என்றொரு சொல்லே உருவானது. Americans Battling Communism, (ABC) என்றொரு அமைப்பும் அப்போது கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகச் செயல்பட்டது.
21ம் நூற்றாண்டு விடிந்தபோது அமெரிக்கர்களின் வெறுப்பு அரசியலுக்கு முஸ்லிம்கள் இலக்காக்கப்பட்ட வரலாற்றை நாம் எல்லோரும் அறிவோம். முஸ்லிம்கள் மீது 1970கள் தொடங்கியே வெறுப்பு பரப்பப்ப்பட்டு வந்த போதும் அது சீறி வெளிப்படும் புள்ளியாக 9/11 அமைந்தது. அதை ஒட்டி அப்போது குடியரசுத் தலைவராக இருந்த ஜார்ஜ் புஷ் கக்கிய விஷச் சொற்கள் வெளிப்படையாக வெறுப்பைக் கக்கின.
“ஆப்கானிஸ்தானில் உள்ள தாயோழிகளை (mother fuckers) குண்டு வீசி அழிப்போம்’
“ஆப்கானிஸ்தான் மீது குண்டு வீசி அதைக் கற்காலத்துக்கு அனுப்புவோம்”
என்றெல்லாம் ஒரு மிக முன்னேறிய நாட்டின் தலைவர் சொற்களை உதிர்த்ததை உலகம் வேடிக்கை பார்த்தது. அக்கால கட்டத்தில் அமெரிக்கர்களின் மொழி நன்மை X தீமை (Good x Evil) என்கிற வடிவில் கட்டமைத்த இருமை எதிர்வுகளை இவ்வாறு வகைப்படுத்தலாம்:
நாம் X அவர்கள்
நாகரிகம் X காட்டுமிராண்டித்தனம்
ஜனநாயகம் X பயங்கரவாதம்
சட்டம் ஒழுங்கு X சட்டவிரோதம்
நீதி X அநீதி
கோழை X வீரம்
சகிப்புத்தன்மை X சகிப்பின்மை
இடப்புறம் உள்ள அனைத்தும் மேற்குலகையும், (West), வலப்புறம் உள்ளவை முஸ்லிம்களையும் இஸ்லாமையும் (Islam) குறிப்பன. இந்த இரண்டு எதிர்வுகளும் ஒன்றை ஒன்று சந்திக்க இயலாதவை, முற்றிலும் வேறுபட்டவை, சாராம்சமான பண்புகளைக் கொண்டவை என்பது இதன் உட்கிடக்கை. Evil என்கிற கிறிஸ்தவக் கருத்தாக்கம் இங்கே முஸ்லிம்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத் தக்கது. ”மீட்பரின்” (Messiah) வருகைக்குத் தயார் செய்ய இங்குள்ள யூதரல்லாதவர்கள் அனைவரையும் வெளியேற்றித் தூய்மைப் படுத்த வேண்டும் என்பது சியோனிச மதவாதம் முன்வைக்கும் ஒரு கருத்தாக்கம். அதை ஒட்டி முஸ்லிம்கள் அனைவரையும் வெளியேற்றுவதுதான் மேற்குலகின் மீட்சிக்கு (redemption) அவசிய நிபந்தனை என்கிற வடிவில் இந்த இஸ்லாம் குறித்த அச்சம் மதச் சிந்தனைகளின் ஊடாகவும் புனிதப்படுத்தப் பட்டது.
மொத்தத்தில் முஸ்லிம் = பயங்கரவாதி ; இஸ்லாம் = பயங்கரவாதம் என்கிற சமன்பாடு மேற்குலகம் முழுவதும் உறுதியாகப் படிந்தது.
தற்போதைய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டொனால்ட் ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போதே, “முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கு வருவது தடுக்கப்பட வேண்டும்” எனப் பேசியதையும், அவர் அதிகாரத்திற்கு வந்த கையோடு ஏழு முஸ்லிம் நாடுகள் மீது அத்தகைய தடை விதிக்கப்பட்டதையும் அறிவோம்.
இப்படியான அமெரிக்க மனநிலையை எப்படிப் புரிந்து கொள்வது?
கோட்பாட்டாளரும் தத்துவச் சிந்தனையாளருமான ஸ்லாவோஜ் சிசெக் 1975 ல் வெளிவந்த ஸ்பீல்பெர்கின் புகழ் பெற்ற Jaws எனும் திரைப்படம் குறித்து வைத்த விமர்சனத்தை இதற்குப் பொருத்திப் பார்க்கலாம். பீட்டர் பெஞ்ச்லியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் அது. ‘அமிட்டி’ தீவில் கடற்கரைக்கு வரும் மக்களைத் தாக்கிக் கொன்று சாப்பிடும் ஒரு சுறா மீன் பற்றிய கதை அது. ஆனால் சிஸெக் அது சுறா மீன் பற்றிய படம் அல்ல என்றார். சுறாமீன் அதில் ஒரு குறியீடுதான். உண்மையில் அது ‘பாசிசம்’ குறித்த ஒரு கதையாடல் என்பது அவர் முன்வைக்கும் கருத்து.
ஒவ்வொறு கோடையிலும் எண்ணற்ற ‘டூரிஸ்டுகள்’ அமிட்டி தீவில் வந்து குவிகின்றனர். அந்த வருகை அங்கு வாழும் மக்களுக்குப் பல்வேறு விதமான அச்சங்களையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. டூரிஸ்டுகளின் இந்தப் படைஎடுப்பு பெரிய அளவில் அத் தீவைக் குப்பையாக்குகிறது, பொது ஒழுங்கு குலைகிறது, குற்றச் செயல்பாடுகளுக்கு வழி வகுக்கிறது. மொத்தத்தில் அவர்களின் பாரம்பரியத் தீவு வாழ்க்கை சிதைகிறது. இந்த அச்சங்கள் அச் சமூகத்தில் கூட்டு மனத்தில் ஒரு அழுத்தத்திற்குக் காரணமாகிறது. இங்கே அந்தச் சுறாமீன் என்பது இத்தகைய பல்வேறு அச்சங்களையும் உள்ளடக்கும் ஒரு குடையாக அவர்கள் முன் அமைகிறது என்கிறார் சிஸெக்.
சரி மொத்தப் பிரச்சினைகளுக்கான அச்சங்களையும் இப்படி ஒரு புள்ளியில் குவிப்பதால் அவர்களுக்கு என்ன ஆறுதல் கிடைக்கிறது? இந்த ஒரு பூதத்தை ஒழித்துக் கட்டுவதன் மூலம் அந்தச் சமூகம் சந்திக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்கிற பொய்யான ஆறுதல்தான் அது.
ஹிட்லரின் ஜெர்மனியில் அன்று அந்தச் சமூகம் சந்தித்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் யூதர்கள் இலக்காக்கப்பட்டது அப்படித்தான். யூதர்கள்தான் அவர்களின் ஆட்கொல்லிச் சுறா. 9/11 க்குப் பிந்திய மேற்குலகிற்கு முஸ்லிம்கள்தான் அந்தச் சுறாமீன். அவர்களை ஒழித்தால், வெளியேற்றினால் தங்களின் அனைத்துப் பிரச்சினைகளும் தீரும் என்கிற உளவியல் சிக்கலில் பாதிக்கப்பட்டவர்களாக அவர்கள் இன்று உள்ளனர்.
அவர்கள் வெளிப்படுத்தும் வெறுப்பு உரையாடல்களைக் கூர்ந்து கவனித்தால் இதை எளிதாக விளங்கிக் கொள்ள முடியும். ஏழு முஸ்லிம் நாடுகளிலிருந்து முஸ்லிம்கள் வரத் தடைவிதித்ததற்கு ட்ரம்ப் என்ன காரணம் சொன்னார்? 9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதலைத்தான் சுட்டிக் காட்டினார். ஆனால் இரட்டைக் கோபுரத் தாக்குதலை நடத்தியவர்களில் யாரும் இந்த ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இல்லை. அது மட்டுமல்ல1975 முதல் 2015 வரையிலான இந்த நாற்பது ஆண்டுகளில் இந்த ஏழு நாடுகளிலிருந்து வந்தவர்கள் யாரும் ஒரு அமெரிக்கரையும் கொன்றதாக ஆதாரங்கள் இல்லை. ஆனால் அமெரிக்க உளவியல் அந்த நாடுகளின் மக்களை வெளியேற்றினால் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என நம்புகிறது. அமிட்டி தீவு மக்கள் அந்தச் சுறாவைக் கொன்றுவிட்டால் அவர்களின் பிரச்சினைகள் எல்லாம் ஒழிந்துவிடும் என நம்பியதைப் போல.
இப்படி ஏதோ ஒன்றைத் தங்களின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் எனக் கற்பித்துக் கொள்வதன் மூலம் அந்தப் பிரச்சினைகளுக்கு எல்லாம் தாங்கள் எவ்வாறு காரணமாக உள்ளோம் என்பதை அவர்கள் எளிதாக மறந்து விடவும் முடிகிறது.
4
அமெரிக்க மண்ணில் 1970 தொடங்கியே முஸ்லிம் வெறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. முஸ்லிம்கள் எல்லோரையும் ஒரே மாதிரியான அச்சுப் பதிவாகவும், பயங்கரவாதிகளாகவும், பயங்கரவாதத்துக்குத் துணை போகிறவர்களாகவும் சித்திரிக்கும் நிலை ஏற்பட்டது. 9/11 ஐ ஒட்டி இது ஒரு மிகப் பெரிய பரிணாம மாற்றத்தை எட்டிய வரலாற்றைத்தான் நாம் இப்போது பார்த்துக் கொண்டுள்ளோம்.
இது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியது?
முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் ஆங்காங்கு அதிகரித்தன. முன் குறிப்பிட்ட CLAIR அமைப்பைச் சேர்ந்த வில்ஃப்ரெடோ அம்ர் ரூயிஸ், கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்துடன் தாங்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வறிக்கையை வெளியிட்டுப் பேசும்போது (ஜூன் 2016), “ஃப்ளோரிடா மாநிலத்தில் மட்டும் சென்ற ஆண்டில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் 500 மடங்கு அதிகரித்துள்ள” என்றார். இவற்றில் முஸ்லிம்கள் மீதான நேரடியான தாக்குதல்கள் தவிர மசூதிகள், முஸ்லிம் சந்திப்பு மையங்கள் ஆகியவை தாக்கப்படுதல், முஸ்லிம் அமைப்புகளுக்கு வெடிகுண்டுத் தாக்குதல் மிரட்டல் விடுத்தல் ஆகியவையும் அடங்கும். அமெரிக்காவில் வாழும் பல்வேறு இனங்கள் மத்தியிலும் ஆய்வு மேற்கொண்டு வெளியிடப்பட்ட அந்த அறிக்கை முஸ்லிம்கள்தான் அதிக இனவெறுப்புக்கு ஆளாகின்றனர் என்கிறது. 18 சத முஸ்லிம்கள் தாங்கள் எப்போதும் (regularly) இன வெறுப்புக்கு ஆளாவதாகவும், 26 சதம் பேர் அவ்வப்போது இன வெறுப்பை அனுபவிப்பதாகவும், 16 சதம் பேர் எப்போதாவது இப்படியான அனுபவங்களைச் சந்தித்துள்ளதாகவும் கூறியுள்ளனர். Institute for Social Policy and Understanding (ISPU) எனும் அமைப்பின் இயக்குநர் மெய்ரா நகாஸ், “ஒவ்வொறு ஐந்து அமெரிக்க முஸ்லிம்களிலும் ஒருவர் தொடர்ந்து இஸ்லாமிய வெறுப்புச் செயல்களால் பாதிக்கப்பட்டுள்ளது ஒரு கருத்துக் கணிப்பில் அறிய வந்துள்ளது” எனக் கூறியதை அல் ஜசீரா தளத்தில் (2016 ஜூன் 24) காணலாம்.
கடந்த பத்தாண்டுகளில் இந்த முஸ்லிம் வெறுப்பு இன்னொரு பரிமாணத்தை எட்டியுள்ளது. முஸ்லிம் தொழுகைத் தலங்கள் (mosques) மற்றும் சமுதாய மையங்கள் (community centers) கட்டுவதற்கு எதிர்ப்புகள் மிகுகின்றன. இதன் அடுத்த கட்டமாக இப்போது, “முஸ்லிம்கள் தங்களின் ஷரியா சட்டத்தை அமெரிக்காவில் திணிக்கப் பார்க்கிறார்கள்” என்கிற கருத்து மிகப் பெரிய அளவில் பரப்பப் படுகிறது. கிட்டத் தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஷரியாவுக்கு எதிராகச் சட்டங்கள் இயற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. 2013 தொடங்கி முஸ்லிம்களின் மத நடவடிக்கைகளுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட புதிய சட்ட வரைவுகள் மற்றும் திருத்தங்களின் எண்ணிக்கை மட்டும் 81. பெரும்பாலும் இவற்றை முன்மொழிந்தது குடியரசுக் கட்சிதான்.
குடியரசுக் கட்சி செனட்டர் ஆலன் ஹேய்ஸ் பேசும்போது, “எங்களின் மதம், அரசியல், அமைதியான வாழ்க்கை எல்லாமே ஷரியா மற்றும் இஸ்லாமின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. எனது நாட்டின் மீதும் மதத்தின் மீதும் மேற்கொள்ளப்படும் இந்தப் படை எடுப்பிலிருந்து (invasion) என் சந்ததியைக் காப்பாற்ற வேண்டும். அவர்கள் செய்வது தேசத் துரோகம் (sedition). எங்கள் அரசையும் தேசத்தையும் (country) அவர்கள்: கவிழ்க்க (overthrow) முனைகிறார்கள்” என்று கூறியதை நீங்கள் இணையத் தளங்களில் காணலாம் (அல்ஜஸீரா, ஜூன் 24, 29016). இந்த வெறுப்புரையில் அவர் பயன்படுத்தியுள்ள சொற்களைக் கவனியுங்கள். இப்படி ஏராளமாகச் சொல்ல முடியும். சுருக்கம் கருதி நிறுத்திக் கொள்கிறேன்.
அமெரிக்கர்களை நாம் பண்பாட்டிலும் அறிவிலும் முன்னேறியவர்கள் என நினைப்பது எத்தனை அபத்தம். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் சுமார் ஒரு சதம்தான். ஐரோப்பாவில் அவர்கள் 6 சதம். இந்த ஒரு சதம் மக்கள் அமெரிக்காவின் பண்பாட்டையும் வரலாற்றையும் அழித்துவிடப் போகிறார்கள் என ஒரு அரசியல்வாதி பேசுகிறார். அதை ஏற்றுக் கொள்வதற்கும் அங்கு ஒரு மக்கள் கூட்டம் இருக்கிறது.
அமெரிக்காவில் அமெரிக்கச் சட்டம்தான் இறுதியானது. இந்நிலையில் ஷரியா சட்டம் அமெரிக்கச் சட்டத்தை அழித்துவிடும் என்பதன் பொருளென்ன? இப்படியான ஒரு சூழல் இருப்பதாகச் சொல்லி இதற்கெதிராகச் சட்ட வரைவுகள் மொழியப்படுவதும் முஸ்லிம்கள் ஷரியாவைக் கைவிடவேண்டும் என முழக்கங்கள் உருவாவதும் எத்தனை அபத்தம். அமெரிக்காவில் Federal Arbitratin Act (1925) ஒன்று நடைமுறையில் உள்ளது. இதன்படி அமெரிக்கச் சட்டங்களின்படிச் செயல்படும் நீதிமன்றங்களுக்கு வெளியே “மத்தியஸ்த” முறையில் (arbitration) இரு தரப்பினர் தமக்குள்ளான விவகாரங்களைத் தீர்த்துக் கொள்வதற்கான உரிமை உண்டு என்பது உண்மைதான். ஆனால் இருதரப்பும் அதை ஏற்றுக் கொண்டால்தான் அது சாத்தியம். ஏதேனும் ஒரு தரப்பு அதை ஏற்றுக் கொள்ளாதபோது அமெரிக்கச் சட்டத்தின்படி நீதிமன்றத்தில்தான் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். பெரிய சிக்கல்கள் ஏதுமின்றி இது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
ஷரியா குறித்து அது கையை வெட்டுவது, பொது வெளியில் தலையைக் கொய்வது என்பது போன்ற சொல்லாடல்களை முன்வைத்து அவற்றை முஸ்லிம்கள் கைவிட வேண்டும் என்கிற கருத்தைப் பரப்புவதும் அபத்தம். ஷரியா என்பது தண்டனைச் சட்டமல்ல. இந்தியாவில் முஸ்லிம்கள் ஷரியாவைக் கடை பிடிக்கிறார்கள் எனில் அது இங்கு குற்றச் செயல்களை விசாரித்துத் தண்டனை வழங்குவது என்கிற வடிவில் அல்ல. ஷரியா என்பது அடிப்படையில் முஸ்லிம்களின் வாழ்க்கை முறைக்கான ஒரு வழிகாட்டி.. அது முற்றிலும் தனிநபர் சார்ந்த (personal), இறைவனுக்கும் அவனை விசுவசித்து வணங்குபவருக்குமான தனிப்பட்ட உறவு சார்ந்த ஒன்று. ஐந்து வேளை தொழுவது, ரமலான் நோன்பிருப்பது முதலான மதக் கடமைகளைச் சொல்வது அது. அமெரிக்காவிலோ இந்தியாவிலோ வாழ்கிற எந்த முஸ்லிமும் தங்களின் ஷரியா சட்டம் அமெரிக்க அல்லது இந்தியச் சட்டங்களை எல்லா அம்சங்களிலும் மீறிச் செயல்பட வேண்டும் என நினைக்கவில்லை. இந்நிலையில் ஒரு முஸ்லிமை நோக்கி நீ ஷரியாவைக் கைவிட வேண்டும் எனச் சொல்வது நீ முஸ்லிம் மதத்தையே கைவிடு எனச் சொல்வதுதான்.
முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி எல்லா மதங்களிலுமே இப்படியான மத வழிகாட்டல்கள் உண்டு. கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்குக் Canon Law, யூதர்களுக்கு Halakhah என்பனவெல்லாம் ஷரியாவுக்கு இணையாக அம்மதங்களில் வழங்கப்படும் சட்டங்கள்தான். “(மதத்தைக் கடைபிடிப்போர் நடக்க வேண்டிய பாதை” என்பதாகவே இவை பொருள் கொள்ளப்படுகின்றன.
2012ல் மன்ஹாட்டன், டென்னெஸ்சி, விஸ்கான்சின், கலிஃபோர்னியா, இல்லினாய்ஸ் முதலான இடங்களில் பள்ளிவாசல் கட்டுவதற்கு எதிரான தீவிர இயக்கங்கள் எழும்பின. பள்ளிவாயில்களை “பேய்வீடு” என்னும் பொருள்பட Monster Mosques என இவர்கள் முன்வைத்தனர். மன்ஹாட்டனில் ‘பார்க் 51 இஸ்லாமிய மையம்’ ஒன்றை முஸ்லிம்கள் அமைக்கத் தொடங்கியபோது அதற்குப் பெரிய அளவில் எதிர்ப்புகள் உருவாயின. வலதுசாரி இயக்கங்களான “டீ பார்டி” மற்றும் Grand Old Party (GOP) என அழைக்கப்படும் குடியரசுக்கட்சி ஆகியவை வெளிப்படையாக இம்முயற்சியை எதிர்த்துக் களம் இறங்கின. கட்டுவதற்கு முன்னதாகவே “Not Welcome” “, “No More Mosques in America” முதலான முழக்கங்களை அந்தப் பகுதிகளில் எழுதுவது, வளர்ப்பு நாய்களுடன் வந்து மசூதிகளுக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்துவது எனப் பல வடிவங்களில் எதிர்ப்புகள் காட்டப்பட்டன. வாகனங்களை நிறுத்த இடஞ்சலாக இருக்கின்றன என்பனபோன்ற (parking issues) அற்பப் பிரச்சினைகள் எல்லாம் ஊதிப் பெருக்கப் பட்டன. இதை ஒட்டி இந்த மாதிரியான இடங்களில்தான் இத்தகைய கட்டிடங்கள் கட்ட வேண்டும் என மாநில அரசுகள் அவசர ஆணைகளை (Zoning Ordinances) இட்டன.
பார்க் 51 க்கு எதிராகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தவர்களில் அமெரிக்காவின் புகழ்பெற்ற இஸ்லாமிய வெறுப்பாளி பமீலா கெல்லர் முக்கியமானவர். American Freedom Defense Initiative , Stop Islamization of America முதலான இஸ்லாமிய வெறுப்பு அமைப்புகளின் ஊடாகவும் அவரது PamelaGeller.com தளத்தின் ஊடாகவும் அவர் வெளிப்படுத்தும் மிக வன்முறையான வெறுப்புப் பேச்சுக்கள் மற்றும் கருத்துக்களை நீங்கள் இணையத்தில் ஏராளமாகக் காண முடியும். இவரது நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் Islamofacism முதலான கருத்தாக்கங்களும் சொல்லாட்சிகளும் பெரிய அளவில் இஸ்லாமிய வெறுப்புத் தொழில் முனைவர்களால் பயன்படுத்தப்படுகின்றன. பார்க் 51 இஸ்லாமிய மையம் கட்டும் முயற்சிக்கான எதிர்ப்பில், “the ground zero mega-mosque,” “monster mosque,” முதலான சொல்லாட்சிகளை உருவாக்கியும் “stab in the eye of America.” முதலான முழக்கங்களை முன்வைத்தும் வெறியூட்டியவர் இவர். ‘லவ் ஜிகாத்’ என்பன போன்ற உண்மைக்குப் புறம்பான கருத்தாக்கங்கள் எல்லாம் உருவாக்கப்பட்டு அவை முஸ்லிம்களுக்கு எதிராக இங்கு பயன்படுத்தப் படுவதையும், அதை ஊடகங்கள் முதல் நீதிமன்றங்கள் வரை ஏற்றுக் கொண்டுள்ளதையும் நாம் இத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இப்படியான விஷம் தோய்ந்த சொல்லாட்சிகளின் உருவாக்கம் எப்படி அப்பாவி மக்களைப் பாதிக்கிறது என்பதற்கு இன்று கேரளப் பெண் ஹாதியாவின் வாழ்க்கை ஒரு சான்று.
2011 ஆகஸ்டில் நார்வே நாட்டில் நடந்துகொண்டிருந்த இளைஞர் பயிற்சி முகாம் ஒன்றில் புகுந்து 77 பேர்களைச் சுட்டுக் கொன்று 200 பேர்களைக் காயமாக்கிய ஆந்த்ரே ப்ரெய்விக் தன் 1500 பக்க அறிக்கையில் பமீலா கெல்லரின் இணையத் தளத்தைக் குறிப்பிட்டுத் தான் அதனால்தான் எழுச்சி பெற்றதாகக் கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது. ப்ரெய்விக்கின் இந்தப் பயங்கரவாத நடவடிக்கையைக் கெல்லர் வெளிப்படையாகப் பாராட்டினாள். “நார்வேயை எதிர்காலத்தில் முஸ்லிம்களால் நிரப்ப இருந்த கட்சியின் வருங்காலத் தலைவர்களைத்தான் ப்ரெய்விக் சுட்டுத் தள்ளியுள்ளான்” எனச் சொன்ன கெல்லர், “(கொல்லப்பட்டவர்களின்) அந்த மூஞ்சிகளைப் பாருங்கள். தூய நார்வேஜிய முகங்கள் அல்ல அவை. மத்திய கிழக்குச் சாயல் கலந்த மூஞ்சிகள் அவை” என அப்பட்டமாக அந்தப் பயங்கரவாதத்தை கெல்லர் ஆதரித்து எழுதியதையும் நீங்கள் காணலாம்.
ஆக மத்திய கிழக்கு, அதாவது முஸ்லிம் சாயல் உள்ள யாரையும் சுட்டுத் தள்ளலாம்.
5.
இப்படியாக இஸ்லாமிய வெறுப்புத் தொழில் மிகத் தீவிரமாக மேலை நாடுகளில் நடந்துகொண்டுள்ளது. இங்கிருந்து சென்று வாழ்கிற இந்திய உயர்சாதியினர் அவற்றால் ஊக்கம் பெறுகின்றனர். அவர்களுடன் இணைந்து வேலை செய்கின்றனர்.
இஸ்லாமிய வெறுப்புத் தொழிலில் ரிச்சர்ட் டாவ்கின்ஸ், கிறிஸ்டோபர் ஹிட்சென்ஸ் போன்ற நவ நாத்திகர்கள், பமீலா கெல்லர் போன்ற பெண்கள், ஃபரீட் ஸகாரியா போன்ற முஸ்லிம்கள் எனப் பல தரப்பினரும் உண்டு. மதங்களை விமர்சிப்பது பெண்ணியச் சிந்தனைகளை ஆதரிப்பது முதலான வடிவங்களில் தம்மை மிகவும் முற்போக்காகக் காட்டிக் கொண்டு இப்படி இஸ்லாமிய வெறுப்பை முன்வைப்பவர்கள் இந்த முஸ்லிம் வெறுப்புத் தொழிலில் மிக எளிதாக முன்னுக்கு வருவதையும் நீங்கள் காணலாம். தாங்கள் அப்படி ஒன்றும் முஸ்லிம்களை ஒதுக்குகிறவர்கள் அல்ல, எங்கள் நிகழ்ச்சிகளிலும் ஊடகங்களிலும் அவர்களுக்கும் இடமுண்டு எனக் காட்டுவதற்குத் தொழில்முறை முஸ்லிம் வெறுப்பாளர்கள் இவர்களைப் பயன்படுத்திக் கொள்வதை உலகெங்கிலும் காண முடியும். இவர்களும் அந்த மேடைகளில் ஏறி நின்று வழக்கத்துக்கு அதிகமாகவே முஸ்லிம் வெறுப்பைக் கூவுவர். மூட நம்பிக்கைகளை எதிர்ப்பது, பெண்ணுரிமைகளைப் பேசுவது என்கிற போர்வையில் அவர்கள் அந்த மேடைகளில் நின்று கொண்டு வெறுப்புத் தொழிலுக்கு வலு சேர்ப்பர். இந்தியா, அமெரிக்கா முதலான நாடுகளில் ஊடகங்களும் முஸ்லிம்களுக்கு எதிராக உள்ள நிலையில் இப்படியானவர்களை ஊடகங்களும் பெரிய அளவில் கண்டு கொள்ளும். இஸ்லாமிய வெறுபின் ஊடாகக் கிடைக்கும் பொருட் பலன்கள் தவிர இப்படி எத்தனையோ பலன்கள் அவர்களுக்கு உண்டு.
முஸ்லிம்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்றோ, முஸ்லிம் மதம் குறைகளற்றது என்றோ இதன் பொருளல்ல. இன்று முஸ்லிம்களை இலக்காக்கி உலகளவில் வளர்ந்து வரும் இஸ்லாமிய வெறுப்புக்குத் தீனி போடுவதாக அந்த விமர்சனங்கள் அமைந்து விடக்கூடாது என்பதுதான். ஆனால் இப்படியானவர்களின் செயல்கள் அப்படித்தான் ஆகிவிடுகின்றன. இதை அவர்கள் அறியாமல் செய்கிறார்கள் என்பதல்ல. அறிந்தே செய்கிறார்கள். பலன் கருதிச் செய்கிறார்கள்.
இப்படியான ஒரு இக்கட்டான நேரத்திலும் சூழலிலும் இந்நூல் வெளிவருகிறது. இந்நூல் 2012ல் வெளிவந்தபோது எழுதப்பட்ட விமர்சனங்கள் அத்தனையிலும் “சரியான தருணத்தில்” வந்துள்ள நூல் என்கிற வாசகத்தைக் காண இயலும். தமிழிலும் அது மிகச் சரியான தருணத்தில் வெளிவருகிறது.
இஸ்லாமிய வெறுப்பு குறித்து இது மட்டுமல்ல, இன்னும் ஏராளமான நூல்கள், கட்டுரைகள் ஆய்வுகள் ஆகியனவும் வந்துள்ளன. Charis Allen, Islamophobea (2010); Deepak Kumar, Islamophobea and Politics of Empire (2012); Arun Kundnani, End of Tolerance: Racism in 21st Century (2007); Bikhu Parekh, A New Politics of Identity (2008); George Morgan & Scot Poynting, Global Islamophobea- Muslim and the Moral Panic in the World (2012); Stephen Sheehi, Islamophobea, The Ideological Campaign Against Muslims (2011) முதலியன சில முக்கியமான நூல்கள். இத்தனை நூல்கள் வந்துள்ளன என்பதே இது இன்றைய உலகில் எத்தனை முக்கியமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்பதற்குச் சான்று..
இஸ்லாமிய வெறுப்பு என்பது எப்படி இன்று ஒரு தொழிலாகவே உருப்பெற்றுள்ளது என்பதற்கு அழுத்தம் கொடுத்து எழுதப்பட்ட நூல் இது. எப்படி வரலாற்றில் நாஜிகளின் கீழ் யூதர்கள் பட்ட கொடுமைகளையே மூலதனமாக்கி இன்றைய யூதர்களும் இஸ்ரேலும் தங்களின் எல்லா அநீதிகளையும் நியாயப்படுத்துகிறார்கள் என்பதை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய நூல் ஒன்று (Halocaust Industry) 2010 ல் வெளிவந்தது. இதை எழுதிய Norman Finkelstein ஒரு யூதர். பேராசிரியர், செயல்பாட்டாளர். வார்ஸா நாஜி வதை முகாமில் அவரும் அவரது பெற்றோர்களும் துன்பங்களை அனுபவித்தவர்கள். இருந்த போதிலும் கண்முன் இன்று இஸ்ரேலும் யூதர்களும் அவர்களின் துயரங்களையே விற்பனைப் பண்டமாக்கி லாபகரமான தொழிலை நடத்துகின்றனர், பலஸ்தீனர்களைக் கொன்று குவிக்கின்றனர் என்பதைக் காணப் பொறாமல் அதைத் தோலுரித்து எழுதிய நூல்தான் அது. அதையே ஒரு முன்னோடியாகக் கொண்டு நதன் லீன் இந்தத் தலைப்பைத் தேர்வு செய்துள்ளார்.
இந்த நூல் அமெரிக்கப் பின்னணியில் எழுதப்பட்டதாக இருக்கலாம். ஆனால் இது முழுக்க முழுக்க இன்றைய நமது அனுபவங்களுக்கு மிகவும் நெருக்கமான நூல். இதில் நடமாடும் அத்தனை பாத்திரங்களையும், நிகழ்வுகளையும் நீங்கள் சற்று யோசித்துப் பார்த்தால் இங்கு இந்தியாவில், தமிழ்நாட்டில் அடையாளம் காண முடியும்.
சரியான தருணத்தில் சிறப்பாக இந்நூலைக் கொணரும் ‘அடையாளம்’ பதிப்பகத்திற்குப் பாராட்டுக்கள்.
இன்றைய முதலாளிய உலகு வெற்றிக் களிப்புடன் வலம் வருகிறது. சாமுவேல் ஹட்டிங்டன், ஃப்ரான்சிஸ் ஃபுகுயாமா, மில்டன் ஃப்ரைட்மன் முதலான சுதந்திரச் சந்தை மற்றும் உலகமய ஆதரவுக் கோட்பாட்டாளர்கள் இனி முதலாளியத்தை எதுவும் சாய்த்துவிட முடியாது என்கிற எள்ளலோடு எழுதிக் குவிக்கின்றனர். ‘அமெரிக்க நூற்றாண்டு’ தொடங்கிவிட்டது என்கின்றனர். புவி அரசியல், உலக மயம், உலகளாவிய வெகுமக்கள் பண்பாடு ஆகியவற்றுக்குத்தான் இனி காலம் எனக் கண் சிமிட்டுகின்றனர். இன்னொரு பக்கம் பாரம்பரிய இடதுசாரிகள் வெளியில் சற்று வீறாப்போடு காட்டிக் கொண்டபோதும் உள்ளுக்குள் பெரிதும் நம்பிக்கை இழந்து நிற்கின்றனர். மிகச் சில உற்சாகக் குரல்கள், அவையும் மிகப் பலவீனமாகவே இடது வெளியிலிருந்து மேலெழும்புகின்றன. அப்படி ஒலிப்பவையும் மாறியுள்ள நிலையை ஏற்றுக் கொள்ளவோ, அந்த அடிப்படையில் 1990 களுக்குப் பிந்திய உலகைப் புரிந்துகொள்ளவோ இயலாமல் சற்றே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன. உள்ளார்ந்த நம்பிக்கை இன்மையை மறைத்துக் கொண்டு பழைய பார்வைகளை மிகவும் அடங்கிய குரலில் ஒலிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்தான் மிஷேல் ஹார்ட் என்கிற ஃப்ரென்ச் இலக்கியக் கோட்பாட்டாளரும், அன்டோனியோ நெக்ரி என்கிற இத்தாலியத் தத்துவ இயலாளரும் இணைந்து எழுதிய “பேரரசு – EMPIRE” எனும் நூல் இன்றைய உலகைச் சற்றே மாறுபட்ட கோணத்தில் அணுகிப் புதிய நம்பிக்கை ஒன்றை முன் வைக்கிறது. கடந்த இருபதான்டு கால தொழிலாளர்கள் மற்றும் மக்கள் போராட்டங்கள் எல்லாம் தோல்வி அடைந்துவிட்டன என்கிற எண்ணம், அந்த அடிப்படையிலான வெற்றிக் களிப்பு அல்லது அந்த அடிப்படையிலான நம்பிக்கை இழப்பு இரண்டுமே அபத்தம் என்கின்றனர் ஹார்ட்டும் நெக்ரியும்.
டெல்யூஸ், கட்டாரி எனும் இரண்டு ஃப்ரென்ச் தத்துவ இயலாளர்களின் முக்கிய நூலாகிய ‘ஆயிரம் மேடைகள்’ அல்லது ‘ஆயிரம் மேற்தளங்கள்’ எனும் பொருள்படும் Thousand Platues எனும் நூலின் வழியில் நின்று இன்றைய உலகை அவர்கள் அணுகுகின்றனர். வழக்கமான ‘பொருளாதாரம்’, ‘அரசியல்,’ ‘வரலாறு’ என்கிற வகைப்பாட்டுக்குள் இன்றைய உலகைப் புரிந்துகொள்வது என்பதற்குள் முடக்கிக் கொள்ளாமல் சட்டம், தத்துவம், உளவியல், அரசியல், பொருளாதாரம், புனைவு முதலான கல்வியியல் ஒழுங்குகளை (disciplinary boundaries) எல்லாம் கடந்து திமிறி இயங்கும் ஒரு எழுத்து முறையை ஹார்ட்டும் நெக்ரியும் கையாள்கின்றனர்.
அன்டோனியோ நெக்ரி 1970 களில் இத்தாலியில் எழுச்சியுற்றிருந்த “நகர்ப்புற கெரில்லா இயக்கம்” “செம்படை” (urban guerilla movement / Red Brigade) ஆகியவற்றில் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். இரண்டு கொலைகள், ஜனநாயக அரசைக் கவிழ்க்கச் சதி செய்தது ஆகிய குற்றங்களுக்காகத் தேடப்பட்டபோது ஃப்ரான்சுக்குத் தப்பியோடி வந்தவர் அவர். மித்தரென்ட் கொள்கையின் அடிப்படையில் ஃப்ரான்ஸ் அவருக்கு அடைக்கலம் அளித்தது. ஃபூக்கோ, தெரிதா, கடாரி முதலான உலகப் புகழ் பெற்ற தத்துவ இயலாளர்களுடன் பல்கலைக் கழகங்களில் பணியாற்றிய நெக்ரி 1997 ல் இத்தாலிய அரசுடன் பேச்சு வர்த்தை நடத்தித் தனக்கு விதிக்கப்பட்ட 30 ஆண்டுகள் தண்டனையைப் 13 ஆண்டுகளாகக் குறைத்துக் கொண்டார். பின் நாடு திரும்பி 13 ஆண்டுகள் கிராம்சி இருந்த அதே சிறையில் கழித்துப் பின் விடுதலையாகித் தற்போது இன்னொரு தத்துவ இயலாளரான ஜூடித் ரிவெல்லுடன் ஃப்ரான்சில் வாழ்கிறார். ஹார்ட்டும் பேராசிரியராக மட்டுமின்றி அரசியற் களத்திலும் செயல்படுபவர்.
ஹார்ட்டும் நெக்ரியும் முன்வைக்கும் இன்றைய உலகு குறித்த பார்வையை நாம் இப்படிச் சுருக்கமாகச் சொல்லலாம்:
உலக முதலாளிய வீச்சின் ஊடாக தேசிய அரசுகளின் (Nation States) அதிகார அமைப்புகள் சிதைந்து கொண்டிருப்பதை நாம் நடைமுறையில் காண்கிறோம். உலகமயம் என்பதை வெறுமனே சந்தைகளை அரசுக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கும் ஒரு செயற்பாடாக மட்டும் சுருக்கிப் பார்க்க இயலாது. உண்மையில் அரசுக் கட்டுப்பாடுகள் என்பன உதிர்ந்து அழிவதற்குப் பதிலாக அவை இன்னும் பெரிய அளவில் பெருகி ஒன்றோடொன்று பிணைந்து, தேசங்களைக் கடந்த ஒன்றாக இப்போது ஒழுங்கமைக்கப் படுகிறது. இதைத்தான் அவர்கள் பேரரசு (Empire) என்கின்றனர். இந்த ஒழுங்கமைப்பின் வடிவத்தை ஒரு “தலையற்ற முண்டம்” (acephalous) என்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். ‘பேரரசு’ என்கிற கருத்தாக்கம் இங்கே விளிம்புகளிலிருந்து மையத்தை நோக்கி கப்பம் குவிவது என்கிற வழக்கமான பொருளில் முன்வைக்கப்படவில்லை. மாறாக இது ஒரு ஃபூக்கோவியக் கருத்தாக்கத்தில் இங்கு பயன்படுத்தப்படுகிறது. பேரரசு என்பது இங்கு இறுக்கமான வடிவம் கொண்டிராமல் பரவலாக அமைந்துள்ள. அடையாளமற்ற ஒரு உலகு தழுவிய வலைப்பின்னல் என்பதைக் குறிக்கிறது. முந்தைய காலங்களைப் போல எந்த ஏகாதிபத்தியத்தின் காலனி இது என எந்த இரு தேச அரசுகளையும் அடையாளம் காட்ட முடியாத சுரண்டல் இது.
இறையாண்மை என்பது இப்போது தேச அரசுகளிலிருந்து நீக்கப்பட்டு உலகமயமாக்கப் படுகிறது. தேச அரசுகளின் காலத்தில் அதிகாரம் குவிந்திருந்த புள்ளியை அடையாளம் காட்டுவது போல இப்போது அப்படி ஒரு ஒற்றை அதிகார மையத்தை அடையாளம் காட்ட இயலாது என்பது இதன் பொருள். இதைத்தான் தலையற்ற முண்டமாக இன்றைய அதிகார அமைப்பு உள்ளது என்கிறோம். சதாமுக்குப் பிந்திய ஈராக்கில் சட்ட ஒழுங்கு அதிகாரம் பன்னாட்டுப் படைகளிடம் தரப்பட்டது நினைவிருக்கலாம். எனவே இன்றைய உலகில் யார் நம்மை ஆட்சி செய்கிறார், யாரால் நாம் கண்காணிக்கப்படுகிறோம், யாருடைய காவல்துறையும் உளவுத்துறையும் நம்மைக் கண்காணிக்கின்றன என்பதெல்லாம் அறுதியிட்டுச் சொல்ல முடியாத ஒன்றறாக அமைகின்றன.
இந்தப் புதிய ஒழுங்கைத்தான் ஹார்ட்டும் நெக்ரியும் “பேரரசு” என்கின்றனர். “ரோமப் பேரரசு’ உருவாக்கத்திலிருந்து அவர்கள் இந்தக் கருத்தாக்கத்தைத் தருவிக்கின்றனர். பல்வேறு நகரமைய ஆளுகைளை (polis) இணைத்து ரோமப் பேரரசு உருவானதோடு இன்றைய உலகமயச் சூழலை அவர்கள் பொருத்திப் பார்க்கின்றனர். சென்ற அத்தியாயத்தில் விளிம்புகளிலிருந்து மையங்களை நோக்கி தேச வளங்கள் உறிஞ்சப்படுகின்றன எனிம் இம்மானுவேல் வாலர்ஸ்டைனின் கோட்பாட்டைப் பார்த்தோம். அந்தப் பொருளிலும் ‘பேரரசு’ என்கிற கருத்தாக்கம் இங்கே முன்வைக்கப்படவில்லை. மாறாக இந்தத் தலையற்ற முண்டமாக உள்ள அதிகார அமைவின் உறுப்புகள்- அவற்றின் மக்கள் திரள்கள், தகவல்கள், சொத்துக்கள் முதலானவற்றின் தொடர்ச்சியான ஓட்டங்கள் அல்லது பாய்ச்சல்கள் என்பன அத்தனை எளிதாக எந்த ஒரு பெரு நகர ஒற்றைக் கட்டுப்பாட்டு மையங்களிலிருந்தும் கட்டுப்படுத்தப்பட இயலாதவை. ஆம், தகவல்களும் சொத்துக்களும் மட்டுமின்றி மனிதர்களும், ஊழியர்களும் இன்று தேசங் கடந்து பாய்ந்தோடில் கொண்டே இருக்கக் கூடிய நிலையில் உள்ளனர். இந்தப் ‘பாய்ச்சல்’ (flow) என்பது physical ஆக நிகழ்வதாகவும் இருக்கலாம். இல்லை நீங்கள் உங்கள் இடத்தில் இருக்கும்போதே ஒரு அடையாளமற்ற அதிகாரத்தால் நீங்கல் எங்கிருந்தோ கட்டுப்படுத்தப்படலாம், சுரண்டப்படலாம்.
பழைய தேச அரசுகளை (nation States) மையமாகக் கொண்ட உலகில் ஒரு ஆதிக்கம் செலுத்தும் மையமாக ஆளும் வர்க்கமும், ஆளுகைக்கு உட்படுத்தப்பட்ட மக்கள் திரளும் என்பதான எளிய வடிவில் இந்த ஆளுகை இப்போது இருப்பதில்லை; மாறாக இந்த அசமத்துவம் இப்போது உடைந்து, சிதைந்து மிகவும் சிக்கலான வடிவில் நிகழ்கிறது. ஒரு ஒட்டுமொத்தத்திற்குள் அடக்கிக் கணிக்க இயலாத தன்னிச்சையான கிரக சஞ்சாரங்களைப் போல, பேரரசுக்குள் இந்த ஏற்றத்தாழ்வுகளும் இயக்க நிலையில் உள்ளன. முழுமை என்பது இன்று இவ்வாறு கையகப்படுத்த இயலாத ஒன்றாகக் கரைந்து ஆவியாகியுள்ளது. நாம் இதுகாறும் அரசியல் அறிவியலில் விரித்துரைத்து வந்த, அரசு / சமூகம் ; போர் / அமைதி ; கட்டுப்பாடு / சுதந்திரம் ; மையம் / விளிம்பு – முதலான எதிர்வுகள் அனைத்தும் இன்று ஏற்பட்டுள்ள முழுமையின் சிதைவில் பொருளற்றதாகி விட்டன. இன்றைய இந்த அமைப்பை இதற்கு முந்திய தேசிய அரசுகளின் அடிப்படையிலான காலனியம் மற்றும் “விளிம்பு – மையம்” முதலான வடிவங்களில் புரிந்து கொள்ள முடியாது என்றால் பின் எப்படி இதை எளிமையாகப் புரிந்து கொள்வது?
பண்டைய நகர அரசுகளில் இருந்து ரோமப் பேரரசு உருவானது குறித்த வரலாற்றை விளக்க அன்றைய வரலாற்றை அப்போது எழுதிய பாலிபியஸ் எத்தகைய முறையியலைக் கையாண்டாரோ அது இப்போது நமக்குத் தேவைப்படுகிறது என்கின்றனர் ஹார்ட்டும் நெக்ரியும்.
1990 களுக்குப் பின் உருவாகியுள்ள இன்றையப் புதிய உலக ஒழுங்கை அவர்கள் வரைந்து காட்டும் முறையைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம். பண்டைய ரோமப் பேரரசுடன் இன்றைய நிலையை ஒப்பிட்டால் அமெரிக்காவின் அணு வல்லமை என்பது அரசின் ஆற்றலாகவும். G7 மற்றும் பன்னாட்டு கார்ப்பொரேட்கள் என்பன அதிகார வர்க்கமாகவும், இணையம் (internet) என்பது ரோம அரசில் அமைந்திருந்த ஜனநாயக நெறியாகவும் அமைகின்றன (Bomb / Money / Ether) என ஒரு மேலோட்டமான பார்வையில் இதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த ரோமப் பேரரசு எனும் அமைப்பு என்றென்றைக்குமாக நிலைத்திருக்கவில்லை. இன்றைய பேரரசும் ரோமப் பேரரசைப் போலவே அதன் அழிவைத் தனக்குள்ளேயே வைத்துள்ளது. பாலிபியஸ் ரோமப் பேரரசின் உருவாக்கத்தைச் சொன்னார் என்றால் கிப்பனும், மான்டேஸ்குவும் ரோமப் பேரரசின் வீழ்ச்சியைச் சொன்னார்கள். கிறிஸ்துவத்தின் எழுச்சி அன்றைய வரலாற்றில் ரோமப் பேரரசை வீழ்த்தியது. தொடர்ந்த பழங்குடி மக்களின் இடப்பெயர்வுகள் என்பன மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தின.
அன்று மதம் இந்த மாற்றத்திற்கான முகமையாக (agency) இருந்திருக்கலாம். முதலாளியமாக வரையறுக்கப்பட்ட காலத்தில் மாற்றத்திற்கான அந்த முகமை தொழிலாளி வர்க்கமாக இருந்தது. இன்று அப்படியான மாற்றம் ஒன்றை நிகழ்த்த வல்லதாகப் “பெருந்திரள் மக்கள்” (multitude) என்கிற கருத்தக்கத்தை ஹார்ட்டும் நெக்ரியும் முன்வைக்கின்றனர்.
இதைப் புரிந்து கொள்ள இன்றைய பேரரசை ஒரு பிரமிட் வடிவத்தில் கற்பனை செய்து கொள்வோம். அதன் உச்சத்தில் இப்போதைய ‘சூப்பர் பவர்’ ஆக உள்ள அமெரிக்கா, G8 நாடுகள், உலக வர்த்தக அமைப்பு (WTO) மற்றும் NATO, IMF ஆகியன உள்ளன என்போம். அடுத்த படிநிலையில் பன்னாட்டு கார்பொரேட் நிறுவனங்கள் மற்றும் இதர தேசிய அரசுகள் உள்ளன என்போம். இந்தப் பிரமிடின் அடித்தளமாக உலக நாடுகளின் பொது அவை (UN General Assembly), மத அமைப்புகள், ஊடகங்கள், தொண்டு நிறுவனங்கள் முதலானவை அமைகின்றன. இன்றைய அமைப்பில் “மக்களை” பிரதிநிதித்துவப் படுத்துவதாக இந்த கடைசிப் படிநிலை கொள்ளப்படுகிறது. இந்தப் பின்னணியிலிருந்துதான் இன்றைய புரட்சிகர சக்தியான ‘பெருந்திரள்’ உருவாகும் என்கின்றனர் ஹார்ட்ட்டும் நெக்ரியும்.
“சுதந்திரமான உற்பத்திச் செயற்பாடுகளின் உலகலாவிய வெளிப்பாடுதான்” இன்றைய மாற்றத்தை ஏற்படுத்தும் பெருந்திரளாக உருப்பெறுகிறது. இதை “பெருந்திரளாக” உருப்பெறவைக்கும் வேலையை ‘பேரரசே’ அதன் செயல்பாடுகளின் ஊடாக நிறைவேற்றி விடுகிறது. தன்னை அழிப்பதற்கான கருவியை அது தனக்குள்ளேயே வளர்த்து உருவாக்கிவிடுகிறது என்பது இதுதான்.
இன்றைய முதலாளிய உலகம் சேவைகள் (services) உடபட எல்லாவற்றையும் உலகமயமாக்கியுள்ளது,. தன் சேவைகளுக்குத் தொடர்ந்து எல்லை கடந்து இயங்கும் தொழிலாளிகளை அது உருவாக்குகிறது. தேச எல்லைகளற்ற உலகம் என்கிறபோது அவ்வாறே தேச எல்லைகளற்ற ஜனநாயகமும் தேவையாகிறது. வேறு சொற்களில் சொல்வதானால் சுரண்டலும் தேச எல்லைகளற்றதாக ஆகிறது. சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களும் அப்படி ஆகின்றன.
கார்ல் மார்க்ஸ் எதிர் கொண்டது 19ம் நூற்றாண்டு முதலாளியம். கரியாலும், பெட்ரோலாலும் இயங்கும் எந்திரங்களில் வேலை செய்கிற, மையப்படுத்தப்பட்ட, மேலிருந்து கீழாக படி நிலை வரிசையில் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளி வர்க்கம் அது. இன்று material labour என்பது இல்லாமல் போய்விட்டது. எல்லை கடந்து இருந்து கொண்டு சுரண்டும் முதலாளி. எல்லை கடந்து சென்று சுரண்டலுக்கு உள்ளாகும் தொழிலாளி என்றெல்லாம் சூழல் மாறியுள்ளது. தொழில்முறையிலும், தொழிலாளிகள் மத்தியிலும் ஒரு ‘நாடோடித் தன்மை’ (nomadism) உருவாகியுள்ளது. இந்த மாற்றங்கள் எல்லாம் தொழிலாளி வர்க்கம் என்பது உலகளாவிய ‘பெருந்திரளாக’ உருப் பெறும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. முன்னைவிட அகன்ற உலகளாவிய ஒன்றிணைவு இப்போது சாத்தியமாகி உள்ளது.
சுரண்டல் இன்று குறையவில்லை. அதிகமாகியுள்ளது. அதே நேரத்தில் நாடுகளிடையே ஒரு வகையில் முதலாளித்துவ அதிகாரம் பரவி இருக்கிறது. சுரண்டலில் வடக்கு / தெற்கு, முதல் உலகம் / மூன்றாம் உலகம் என்றெல்லாம் இப்போது பிரித்துப் பார்ப்பது சிரமம். முதல் உலகிற்குள் மூன்றாம் உலகும், மூன்றாம் உலகிற்குள் முதல் உலகையும் அடையாளம் காண முடிகிறது.
சுருக்கமாகச் சொல்வதானால் முதலாளியச் சுரண்டல், உபரி மதிப்பு உருவாக்கம் என்கிற வடிவங்கள் எதுவும் மாறவில்லை. மார்க்ஸ் இவை குறித்துச் சொன்னவை அனைத்தும் அதே போலவும், சொல்லப்போனால் இன்னும் கொடிய முறையிலும் தொடர்கின்றன. ஆனால் தொழில்முறை, தொழிலாளி தனது தன்னிலையை அமைத்துக் கொள்ளும் சூழல் முதலியன பெரிய அளவில் மாறியுள்ளன. இந்த மாற்றங்கள் என்பன, முதலாளி வர்க்கமும், முதலாளியச் சிந்தனையாளர்களும் எண்ணுவதையும் சொல்லுவதையும் போல, இனி போராட்டங்களுக்கும் புரட்சிகர மாற்றங்களுக்கும் சாத்தியங்கள் இல்லை என்பதைச் சுட்டவில்லை. அப்படிக் கருதுவது. பெருந்திரளை வெறும் நுகர்வோர்களாக (consumers) அணுகும் மூடத்தனம். இது அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வது.
மார்க்சியர்களும் ‘பெருந்திரளை’ அடையாளம் கண்டு, அதன் வல்லமையையும், அதன் இன்றைய பண்புகளையும், வடிவ மாற்றங்களையும் உரிய புரிதல்களுடன் அணுகுதல் அவசியம்.