National Confederation of Human Rights Organizations (NCHRO)
Head Office: #4, Upper Ground Floor, Masjid Lane, Hospital Road, Jungpura, Bhogal,
New Delhi – 110014. Tel: 011-40391642 Mob: 97183-51204, 86063-37319
Email: nchromail@gmail.com, www.nchro.org
———————————————————————————————————————
ஓகி புயல் அழிவுகள்: கள ஆய்வு அறிக்கை
ஜனவரி 03, 2018
நாகர்கோவில்
சென்ற நவம்பர் 29-30 இரவில் கன்னியா குமரி மாவட்டத்தில் மிகப் பெரிய அளவில் உயிர், பயிர் மற்றும் தொழில் அழிவுகளை ஏற்படுத்திய ஓகி புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் அந்தப் பாதிப்புகளின் சுமையிலிருந்து அம்மக்களுக்கு உடனடி ஆறுதல் அளிக்கக் கூடிய வகையில் ஆற்ற வேண்டிய கடமைகள், அளிக்க வேண்டிய நிவாரணங்கள் ஆகியன குறித்து ஆய்வு செய்து மத்திய மாநில அரசுகளின் முன்னும், மக்கள் முன்னும் அறிக்கை ஒன்றை முன்வைக்கும் நோக்குடன் ‘தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு’ (National Confederation of Human Rights Organisations – NCHRO) சார்பாக ஒரு உண்மை அறியும் குழு கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டது.
- பேரா. அ.மார்க்ஸ், தேசியத் தலைவர், NCHRO, Cell: 094441 20582
- கோ.சுகுமாரன், தேசிய செயற்குழு உறுப்பினர், NCHRO, Cell: 098940 54640,
- எஸ்.அஹமத் நவரி, தமிழக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர், NCHRO, Cell: 099446 55252
- ஈ.சந்திரமோகன், அமைப்பாளர், சமூக நீதிக்கான ஜனநாயகப் பேரவை, கன்னியாகுமரி மாவட்டம், Cell: 095669 40970
- .எஸ்.அன்சார், குமரி மாவட்டச் செயலாளர், SDPI கட்சி, Cell: 097895 10550
- எஸ், சையது இஷ்ஹாக், குமரி மாவட்டச் செயலாளர், PFI, Cell- 075981 59592
- ஏ.ரெவி, செயலாளர், விவசாயத் தொழிலாளர் சங்கம், தடிக்காரன்கோணம், Cell: 094866 63224
- கடிகை ஆன்டனி, சமம் குடிமக்கள் இயக்கம், நாகர்கோவில், Cell: 098405 90892
- அஹமட் ரிஸ்வான், பத்திரிகையாளர், சென்னைப் பல்கலைக் கழகம், Cell: 095245 83834
- எஸ்.பி.சர்தார் அராஃபத், வழக்குரைஞர், திருநெல்வேலி, Cell: 097894 04940
இக்குழு சென்ற டிசம்பர் 14, 15 தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தது. குளச்சல் வட்டத்தில் உள்ள கடலோரக் கிராமங்களான தூத்தூர், சின்னத்துறை, பூத்துறை, இறையுமன்துறை, இரவிப்புத்தன் துறை, வள்ளவிளை, மார்த்தாண்டந்துறை, நீரோடிக் காலனி முதலான மீனவக் கிராமங்களுக்கும், நாகர்கோவில், தக்கலை, கருங்கல் மற்றும் தோவாளை வட்டத்தில் உள்ள சிறமடம், உவார்ட்ஸ்புரம், அழகியபாண்டிபுரம், தோமையாபுரம், கீரிப்பாறை, வெள்ளாம்பி முதலான விவசாய மற்றும் பழங்குடிப் பகுதிகளில் வாழை, ரப்பர், கமுகு, தேக்கு மரச்சீனி, மிளகு முதலான விவசாயம் சார்ந்த விளைபொருட்கள் பயிற்செய்கை செய்யப்படும் கிராமங்களுக்கும் நேரடியாகச் சென்று மக்களைச் சந்தித்தோம். கடலோர கிராமங்கள், விவசாயகிராமங்கள், பழங்குடியிருப்புகள் ஆகிய மூன்று தரப்பு நிலப்பகுதிகளில் மக்களுக்கும், அவர்களின் தொழில்களுக்கும் விவசாயிகளுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முடிந்தவரை பார்வையிட்டோம்.
கடலோரப் பகுதிகளைப் பொருத்தமட்டில், நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஓகிப் புயலில் தங்களது விசைப்படகுகள் கவிழ்ந்து சுமார் 24 மணி நேரம் கடலில் கிடந்து தப்பி வந்த சிலரது வாக்கு மூலங்களைக் கேட்க முடிந்தது. புயலின்போது கடலில் இருந்து அதற்குப் பின் சுமார் இரண்டு வாரங்கள் ஆனபின்னும் இன்னும் வராமல் உள்ள நிலையில் தற்போது அவர்களின் கதி என்ன என அறியாத அவர்களின் உறவினர்கள் சுமார் முப்பதுக்கும் பேற்பட்டோரைச் சந்தித்து அவர்களின் வாக்குமூலங்களையும் பதிந்து கொண்டோம். இந்த மக்களின் மதத் தலைவர்களாக மட்டுமின்றி அவர்களின் சமுதாய நலன்களிலும் அக்கறையுடன் செயல்படுபவர்களாக உள்ள அருட் தந்தை சர்ச்சில் அடிகளார், தூத்தூர் பங்குத் தந்தை பெபின்சன், நீரோடி ஆலயப் பங்குத் தந்தை ஷைனிஷ் போஸ்கோ ஆகியோரிடமும் விரிவாகப் பேசித் தகவல்களைத் தொகுத்துக் கொண்டோம். சின்னத்துறையைச் சேந்த சமூக ஆர்வலர் ஜஸ்டின் ஆன்டனி மிக விரிவாகா அப்பகுதி மீனவர்களின் பிரச்சினைகளைத் தொகுத்துத் தந்தார், பேராசிரியர் கான்ஸ்டான்டின் வரீதையா மிகவும் நுணுக்கமாக மீனவர்களின் பிரச்சினைகளை விளக்கினார். பழங்குடி மக்களின் பிரச்சினைகளில் ஆழ்ந்த ஆர்வம் உள்ள கவிஞர் என்.டி.ராஜ்குமார் அவர்களின் பிரச்சி னைக்ளைத் தொகுத்துத் தந்தார். ஓகிப் புயலில் சிக்கித் தப்பித்து வந்தவரான எழுத்தாளரும் மீனவருமான கடிகை அருள்ராஜ், பல்கலைக் கழகம் ஒன்றில் ஆய்வு செய்துவரும் நீரோடி சேவியர் ஆகியோர் விரிவான தகவல்களைத் தந்தனர்.
இரண்டாம் நாள் நாங்கள் தோவாளை வட்டம், பேச்சிப்பாறை முதலான மேற்குறிப்பிட்டப் பகுதிகளுக்குச் சென்று விவசாய அழிவுகளைப் பார்வையிட்டோம். அப்பகுதியில் வாழ்பவரும் பல ஆண்டுகளாக அவர்களின் பிரச்சினைகளைப் பேசி வருபவருமான சந்திரமோகன் அவர்கள் எங்கள் குழுவிலேயே இருந்ததால் அவரும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள புயல் அழிவுகளின் பல்வேறு பரிமாணங்களையும் விளக்கினார். தவிரவும் விவசாயிகளின் பிரதிநிதியாக நின்று அவர்களின் பிரச்சினைகளைப் பேசி வரும் குமரி மாவட்டப் பாசனத்துறைத் தலைவர் வின்ஸ் ஆன்டோ அவர்கள் மிக விரிவாக எங்களுடன் பேசி விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை விளக்கி, அவற்றின் அடிப்படையில் தாங்கள் வைக்கும் கோரிக்கைகளையும் கூறினார். தவிரவும் பத்மநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் அவர்கள் இங்கு இன்று ஒட்டுமொத்தமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், இழப்பீடுகளை மதிப்பிடுவதில் உள்ள சிக்கல்கள், உருவாகிவரும் கவலைக்குரிய மதவாத அரசியல் ஆகியவற்றை உரிய தரவுகளுடன் விளக்கினார். மலைவாழ் பழங்குடி மக்களைப் பொருத்த மட்டில் கீரிப்பாறை சாலையில் உள்ள வெள்ளாம்பி குடியிருப்பில் ஆதிவாசிகள் நல உரிமைச் சங்கத்தின் முன்னோடியும் முன்னாள் கவுன்சில் தலைவருமான ராமன் காணி மற்றும் எங்கள் குழுவில் இருந்த விவசாய தொழிலாளர் சங்கத் தலைவர் தடிக்காரக் கோணம் ரெவி ஆகியோர் ஓகி புயல் பழங்குடி மக்களையும் விவசாயத் தொழிலாளர்களையும் எவ்வாறெல்லாம் பாதித்துள்ளது என்பதை விளக்கினர்.
கிட்டத்தட்ட கன்யாகுமரி மாவட்டம் முழுமையும் இன்று பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலும் பாதிப்புகள் உண்டென்ற போதிலும் எம் குழு. கன்னியாகுமரி மாவட்டத்தோடு ஆய்வை வரையறுத்துக் கொண்டது. இம்மாவட்டத்தில் உள்ள 1) மீனவர்கள், 2) விவசாயிகள், 3) மலைவாழ் காணிப் பழங்குடியினர் ஆகிய மூன்று தரப்பினரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளபோதிலும், இம்மூன்று தரப்பினரின் பாதிப்புகளும் முற்றிலும் வெவ்வேறானவை. மீனவர்களுக்கு படகுகள் முதலானவை அழிந்து ஏற்பட்டுள்ள தொழில் சார்ந்த பேரிழப்புகள் தவிர, ஈடு செய்ய இயலாத அளவிற்குப் பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு உயிரிழப்புகள் மிகக் குறைவு என்ற போதிலும் மிகப் பெரிய அளவு விவசாயச் சொத்திழப்புகள் ஏற்பட்டுள்ளன. பழங்குடி மக்கள் என்றென்றும் பின்தங்கி இருப்பவர்கள். இன்று மரங்கள் வீழ்ந்து அவர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளததோடு அன்றாட வேலை வாய்ப்புகளையும் இழந்துள்ளனர்..
இப்படி இந்த மாவட்டம் முழுமையும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மூன்று தரப்பு மக்கள் அனைவரையும் சந்திப்பதும், அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆராய்வதும் ஒரு உண்மை அறியும் குழுவால் இரண்டு நாட்களுக்குள் முடித்துவிடக் கூடிய பணி அல்ல. எனினும் இது தொடர்பாக இதுவரை வெளி வந்துள்ள பல்வேறு ஊடகச் செய்திகளையும் விரிவாக ஆராய்ந்து ஒப்பிட்டு உண்மைகளை உறுதி செய்து கொண்டோம். இது தொடர்பாக இம்மக்கள் மத்தியில் பணி செய்து வருபவர்களையும் தவறாமல் சந்தித்துத் தகவல்களையும் திரட்டிக் கொண்டோம்.
மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ஆர் சவான் அவர்களை நீரோடி கிராமத்தில் அவர் மக்கள் குறை கேட்க வந்தபோது சந்தித்து எத்தகைய நிவாரண வேலைகள் நடைபெறுகின்றன என்பவற்றையும், எதிர்காலத் திட்டங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டோம்.
1.மீனவர்களின் உயிரிழப்பு மற்றும் மூலதன இழப்புகள்
கடலோர மாவட்டமான கன்னியாகுமரியச் சூறையாடிய மீது ஒகி புயலால் மிக அதிக பாதிப்புகளை அனுபவித்துள்ளவர்கள் மீனவர்கள்தான். இவர்கள் பெரிய அளவில் உயிரிழப்புக்கு ஆளாகியுள்ளனர். படகுகள், வலைகள், கருவிகள் எனப் பெரிய அளவில் மூலதன இழப்பாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமல்ல ஏராளமான மீனவர்களின் நிலை இன்றளவும் உறுதியாகத் தெரியாத நிலையில் அவர்களின் துயரமும் கவலையும் முடிவற்ற ஒன்றாக மாறியுள்ள நிலை இன்னும் கொடுமையான ஒன்று.
கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கியமான மீனவக் கிராமங்களாவன: நீரோடிக் காலனி, மார்த்தாண்டத் துறை, வள்ளவிளை, இரவிப் புத்தன் துறை, சின்னத்துறை, தூத்தூர், பூத்துறை, மிடாலம், இனயம் புத்தன் துறை . இறய்மன் துறை முதலியன. இந்தக் கிராமங்கள் அனைத்தும் பெரிய அளவில் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் வசிப்பவை, எனினும் ஓகிப் புயலில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் அனைவருமே கிறிஸ்தவர்கள்தான் எனச் சொல்லிவிட முடியாது. கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களிலிருந்து சென்று இப்பகுதியில் தொழில் செய்து கொண்டிருந்த மீனவர்களும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்; இன்னும் திரும்பி வராமலும் உள்ளனர். அதேபோல உள்ளூரில் படித்தும் வேலை இல்லாமல் உள்ள பிற மத இளைஞர்களும் தற்போது மீனவர்களுடன் மீன் பிடிக்கச் செல்கின்றனர்.
தவிரவும் ஆழ் கடல் மீன் பிடிப்[புக்குச் செல்லும் விசைப் படகுகளில் வட இந்திய (immigrant) தொழிலாளிகளும் உதவியாளர்களாக இப் படகுகளில் செல்கின்றனர். எனினும் பெரும்பான்மையானவர்கள் கிறிஸ்தவ மீனவர்களே. ஊர் தோறும் கிறிஸ்தவ ஆலயங்களே பொது மையங்களாகக் அமைந்துள்ளன. பாதிரிமார்கள் மதக் கடமைகளை ஆற்றுபவர்களாக மட்டுமின்றி அம் மக்களின் சமூகத் தலைவர்களாகவும் உள்ளனர்.
நாங்கள் மூன்று பாதிரிமார்களைச் சந்தித்தோம். நாங்கள் சென்ற போது (டிசம்பர் 14, மதியம் சுமார் 12 மணி) சின்னத்துறை கிராமத்தில் நிறுத்தப்பட்டோம். இந்தக் கிராமத்திலுள்ள மாதா கோவில் முன்புறம் அமைந்துள்ள மிக விசாலமான திடலில்தான் அன்று இப்பகுதிக்கு வருகை புரிந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களைச் சந்தித்தார். பெருந்திரளாக மக்கள் கூடியிருந்ததோடு காவல்துறையும் குவிக்கப்பட்டு இருந்ததால் நாங்கள் மேலே செல்ல இயலாமல் அங்கேயே சுமார் ஒரு மணி நேரம் தாமதிக்க நேரிட்டது.
அந்த இடைவெளியில் அப்போது அங்கிருந்த அருட் தந்தை சர்ச்சில் அவர்களைச் சந்தித்துப் பேசினோம். தன்னிடமிருந்த துண்டுச் சீட்டை எடுத்து தற்போது காணாமற் போயுள்ள மீனவர்களின் கிராமவாரியான எண்ணிக்கை, தப்பிப் பிழைத்து வந்துள்ளவர்கள், கண்ணால் பார்த்த சாட்சியத்தின் அடிப்படையில் உறுதியாக இறந்தவர்கள், கண்ணால் பார்த்து உறுதி செய்ய முடியாவிட்டாலும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் உறுதியாக இறந்திருக்கக் கூடியவர்கள் என்பதை எல்லாம் ஊர் வாரியாகப் படித்துக் காட்டினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எட்டு ஊர்கள் திருவனந்தபுரம் மறை மாவட்டத்தில் உள்ளன. தூத்தூர் பங்குகுரு பெபின்சன் அவர்களை அன்று மாலை சந்தித்தபோது அவர் இந்த எட்டு கிராமங்களில், மொத்தமாகக் காணாமல் போனவர்கள், உறுதியாக இறந்தவர்கள் என அறியப்பட்டவர்கள் ஆகியோரின் எண்ணிக்கைகளோடு இழந்த படகுகள் முதலானவற்றின் எண்ணிக்கைகளையும் சொன்னார்.
நாங்கள் சென்ற போது புயல் அழிவுகள் நடந்து சுமார் 14 நாட்கள் ஆகியிருந்தன என்பதால் அதற்குள் இது குறித்துப் பெருமளவு உண்மைக்கு நெருக்கமான தகவல்களை அவர்களால் திரட்ட முடிந்திருந்தது, அவ்வப்போது ஒரு சிலர் மீட்கப்பட்டு வரும்போது எண்ணிக்கைகள் மாறுவதும் நிச்சயமாக இறந்தவர்களின் எண்ணிக்கை கூடுவதும் அவற்றில் தவிர்க்க இயலாததாக உள்ளது. எனினும் அவர்கள் குறிப்பிடும் எண்ணிக்கைகள் எந்த விதமான மிகைகப்படுத்தல்களும் இன்றி அந்தக் கணத்தில் அவர்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டிருந்ததையும் எங்களால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
தவிரவும் ஒவ்வொரு மீனவக் குடியிருப்பிலும் அந்தந்தக் குடியிருப்பிலிருந்து இன்று “மாயமாகிப் போனவர்களின்” பட்டியல் புகைப் படங்களுடன் ஊர்ப் பொது இடத்தில், பெரும்பாலும் மாதாகோவில்களின் முன்பாக வைக்கப்பட்டுள்ளன. அவையும் பாதிரிமார்கள் தந்த எண்ணிக்கையும் ஒன்றாகவே உள்ளன.
1.1 ஓகிப் புயல் அழித்த உயிர்களின் எண்ணிக்கை
இறந்தவர்களாகக் கருதப்படுபவர்கள் மற்றும் காணாமற் போயிருப்பவர்கள் குறித்து நாங்கள் சேகரித்த இரு தகவல்கள் இங்கே முன்வைக்கப்படுகின்றன. அவற்றைக் காணுமுன் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்:
- புயலில் காணாமற்போய் இன்னும் தகவல் கிடைக்காதவர்களை “மாயமாகிப் போனவர்கள்” என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
- இறந்தவர்கள் உடல் கொண்டுவரப்படவில்லை. ஏற்கனவே பலநாட்கள் தண்ணீரில் ஊறிக் கிடந்ததோடு மீன்கள், நண்டுகள் முதலானவற்றால் கடிக்கப்பட்டுச் சிதைந்திருந்த உடலங்களைக் கொணர்தல் சாத்தியமில்லை. தவிரவும் நீந்திவரும்போது ஒவ்வொருவராக இறக்கின்றனர். அப்போது மற்றவர்களுக்கு அவர்களை அப்படியே விட்டுவிட்டுத் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வது தவிர வேறு வழி இருக்கவில்லை. இப்படி இறக்கும்போது கண்ணால் கண்ட சாட்சிகள், இறந்தவர்களின் உடல்களிலிருந்து கண்டெடுத்துக் கொண்டுவரப்பட்ட செல்போன்கள் மற்றும் அடையாள அட்டைகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இறந்தவர்களின் எண்ணிக்கை உறுதி செய்யப்படுகிறது.
3. நாங்கள் இப்பகுதிக்குச் சென்று மீனவர்களைச் சந்தித்தது டிசம்பர் 14 அன்று. நேரடியாக மீனவர் கிராமங்களில் சந்தித்த மக்களிடமிருந்து திரட்டிய தகவல்கள் தவிர அருட் தந்தை சர்ச்சில் மற்றும் தூத்தூர் பங்குத் தந்தை பெபின்சன் ஆகியோரிடமிருந்து பெற்ற விவரங்கள் மற்றும் இங்கு பணி செய்யும் சமூக அமைப்புகள் சேகரித்துள்ள விவரங்கள் எல்லாவற்றையும் சேகரித்து ஒப்பிட்டு எங்களால் இயன்றவரை சரியான தரவுகளைக் கணக்கிட்டுக் கொண்டோம். இந்தத் தரவுகள் அடுத்த இரண்டு வாரங்களில் மாறியுள்ளன. தினந்தோறும் மாறிக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. நாங்கள் அங்கு சென்றபோது (டிச 14, 2017) வள்ளவிளையில் மாயமானோரின் எண்ணிக்கை 240 என்றார்கள். ததையூஸ் என்பவரின் விசைப் படகில் சென்றிருந்த 10 பேர் அதில் அடக்கம், நாங்கள் வந்தபின் சென்ற 19 ந்தேதி அன்று, காணாதவர்களைத் தேடிச் சென்ற மீனவர்களால் அவர்கள் கண்டுபிடித்துக் காப்பாற்றப்பட்டுள்ளனர். தேடிச் சென்ற மீனவர்கள், அவர்களுக்கு முதல் உதவி அளித்து, அவர்களின் படகையும் சீர்படுத்தி, பெட்ரோல் நிரப்பி அனுப்பி வைத்துள்ளனர். இனி கண்டுபிடிக்க யாரும் இல்லை, கடலில் யாரும் தத்தளித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை எனக் கடற்படை மற்றும் கரையோரக் காவற்படைகளால் கைவிடப்பட்டவர்கள் இவர்கள். எந்த நவீன வசதிகளும் தொழில் நுட்பங்களும் இல்லாத மீனவர்களின் சுய முயற்சியால் இப்போது இவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். அடுத்த சில நாட்களில் அதே ஊரைச் சேர்ந்த மேலும் 47 மீனவர்கள் இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர்.
நாங்கள் சென்ற அன்று வள்ளவிளையில் மாயமானோரின் எண்ணிக்கை 240 ஆக இருந்தது. இப்போது (டிசம்பர் 25) அது 33 ஆகக் குறைந்துள்ளது. இப்படி எல்லாத் தரவுகளும்தொடர்ந்து மாறிக் கொண்டிருந்தன.
- காணாமற் போயிருப்பவர்களில் மீனவர்கள் தவிர கடலில் இறங்கும் மீனவர்களுக்கு உதவியாக அழைத்துச் செல்லப்பட்ட வட இந்திய immigrant தொழிலாளிகளும் சிலர் இன்று மாயமாகியுள்ளனர்.
- அரசும், இப்பகுதி மக்களும், அக்கறையுள்ள சமூக ஆர்வலர்களும் கடலுக்குச் சென்றிருந்த மீனவர்கள் உயிருடன் இருந்தால் எப்படியும் கிறிஸ்துமசுக்கு முதல் நாள் கரைக்குத் திரும்பிவிடுவர் என கிறிஸ்துமசை ஒரு எல்லைக் கோடாக வைத்துள்ளதை ஒட்டி, எங்கள் குழுவும் டிசம்பர் 25 ஐ ஒரு எல்லைக் கோடாக வைத்துக் காத்திருந்து அன்று கிடைத்துள்ள உறுதி செய்யப்பட்ட இரு எண்ணிக்கைகள் இங்கே தரப்படுகின்றன.
இந்தத் அடிப்படையில் மேலே குறிப்பிட்டுள்ள அந்த மீனவக் கிராமங்களிலிருந்து இன்று ஓகி புயலில் இறந்துள்ள மற்றும் “மாயமாகிப் போயுள்ள” வர்களின் எண்ணிக்கை வருமாறு:
தூத்தூர் பங்குத் தந்தை பெபின்சன் அவர்கள் திருவனந்தபுரம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த தூத்தூர் வட்டத்தில் இறந்தவர்கள் மாயமாகி இருப்பவர்கள் குறித்துச் சேகரித்துள்ள தரவு (டிசம்பர் 25, 2017)
மீனவர் குடியிருப்பு இறந்தோர் மாயமானோர்
- நீரோடி 37 –
- மார்த்தாண்டத் துறை 05 02
- வள்ளவிளை 03 33
- இரவிப்புத்தன் துறை 06 –
- சின்னத்துறை 40 –
- தூத்தூர் 11 –
- பூத்துறை 05 05
- இறையுமன் துறை 02 13
மொத்தத்தில் இந்த எட்டு மீனவர் குடி இருப்புகளில் உறுதியான சாட்சியங்களின் அடிப்படையில் இறந்தவர்களாகத் தீர்மானிக்கப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 109. இதுவரை திரும்பி வராது மாயமானவர்களாகக் கணக்கிடப்பட்டுள்ள மீனவர்களின் எண்ணிக்கை 48.
இது தவிர ஓகி புயலில் இப்பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் படகுகளில் மூழ்கிப் போனவை 14. காணாமல் போனவை13. காணாமற் போன தங்கல் வள்ளங்கள் 29. மூழ்கியவை 3, மூழ்கிய சிறிய தங்கல் வள்ளங்கள் 60, கட்டுமரங்கள் 4 இறந்தவர்கள், மாயமானவர்கள், மூழ்கிப் போன மற்றும் காணாமற் போன படகுகள் குறித்த மேற்கண்ட இந்த எண்ணிக்கைகள் அனைத்தும் தூத்தூர் மறை வட்டத்தைச் சேர்ந்த எட்டு கிராமங்களில் ஏற்பட்ட அழிவுகளை மட்டும் உள்ளடக்குகிறது என்பது நினைவிற்குரியது. கன்னியாகுமரி மாவட்டம் முழுமையும் ஏற்பட்டுள்ள அழிவுகள் இதனினும் அதிகம்.
சின்னத்துறை பங்குத் தந்தை சர்ச்சில் அவர்கள் ஓகி புயலில் கன்னியாகுமரி மாவட்டம் முழுமையிலும் இறந்த மற்றும் மாயமாகிப் போயுள்ளோர் குறித்துத் தொகுத்துள்ள தரவு
நீரோடி 37
மார்த்தாண்டத் துறை 07
வள்ளவிளை 33
இரவிப்புத்தன்துறை 06
சின்னதுறை 40
தூத்தூர் 12
பூத்துறை 26
இறையுமன் துறை 02
மொத்தம் 142
____________________________________________________________________________________
முள்ளூர் துறை 02
ராமன் துறை 03
இனையம் புத்தன் துறை 01
மேல் மிடாலம் 04
கடியாபட்னம் 01
முட்டம் 01
கொளச்சல் 06
மேல் மணக்குடி 03
_________________________________
ஆக மொத்தம் 163
இது தவிர மீனவர்களுடன் சென்று கடலில் மாண்ட அசாம் மாநிலத்தைச் சேந்தோர் 5 பேர்கள். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தோர் 3 பேர்கள். ஆக மொத்தத்தில் உயிரிழந்த இந்திக்காரர்கள்’ 8 பேர்
இது தவிர இந்த ஓகிப் புயலில் மீனவர் அல்லாத விவசாயப் பகுதிகளில் இறந்தோர் எண்ணிக்கை:
கலிங்கராஜ பட்டினம் 01
\நித்திரவிளை 02
புதுக்கடை 01
தோவாளை 01
திட்டுவிளை 01
____________________________________
மொத்தம் 06
______________________________________.
இது தவிர மேற்குறித்த கன்னியாகுமரி மீனவர்களுடன் சேர்ந்து சென்றிருந்த நாகப்பட்டினம் மாவட்டத்தினர் 22 பேர்களும், கடலூர் மாவட்டத்தினர் 16 பேர்களும், இராமநாதபுரம் மாவட்டத்தினர் 4 பேரும் ஓகிப் புயலில் இறந்துள்ளனர்.
இந்தக் கணக்குப்படி எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால் ஓகிப் புயலில் இறந்தோரில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 182+6 = 188. வடமாநிலத்தைச் சேர்ந்தோர் 8. பிற மாவட்டங்களில் இருந்து இங்கு வந்து இவர்களோடு மீன்பிடித்துக் கொண்டிருந்து இறந்தோர் 42. மொத்தமாக கூகிப் புயலில் கன்னியாகுமரிக் கடற்கரையிலிருந்து மீன்பிடிக்கச் சென்று இறந்தவர்கள் 196+42 = 238.
24 ம் தேதிவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கு இது. திரும்பிவராத எல்லோரையும் சேர்த்து இந்த எண்ணிக்கை கணக்கிடப் பட்டுள்ளது.
சென்ற டிசம்பர் 28 அன்று சென்னையில் இராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அதிகாரபூர்வமாக வெளியிட்ட அறிவிப்பின்படி கூகிப் புயலில் மாயமானோர் எண்ணிக்கை:
இதுவரை டிசம்பர் 20 வரை தமிழகத்தைச் சேர்ந்த 453 பேர், கேரளத்தைச் சேர்ந்த 362, லட்சத்தீவு மற்றும் மினிக்காய் தீவுகளைச் சேர்ந்த 30 பேர் என ஆக மொத்தம் 845 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 15 ந் தேதி நிலவரப்படி இன்னும் 661 பேர் மாயமாகியுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்தோர் 400 பேர். கேரளாவைச் சேர்ந்தோர் 261 பேர். (தினத்தந்தி, டிசம்பர் 29, 2017)
மாயமானவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும் பொறுப்பு மாநில மீன்வளத்துறையுடையது எனவும் அவர் கூறியுள்ளார்.
மீட்கப்படவர்கள் பற்றிச் சொல்கையில் கப்பற்படை, கடலோரக் காவல் படை மற்றும் விமானப் படையினர்தான் இதைச் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பெரிய அளவில் கடலில் தத்தளித்தவர்களை மீனவர்களே காப்பாற்றிக் கொண்டு வந்துள்ளனர். பலர் மிகுந்த சிரமங்களுக்கிடையில் தாங்களே மீண்டு வந்துள்ளனர். இது குறித்து அமைச்சர் ஒன்றும் கூறாதது கவனிக்கத் தக்கது.
2.மீனவ மக்களின் துயரங்களும் அரசின் அலட்சியமும்
டிச 14 காலை 11 மணி முதல் இரவு எட்டு மணிவரை நாங்கள் குளச்சல் கடற்கரையோர மீனவர்கள் கிராமங்களிலேயே இருந்து பலரையும் சந்தித்தோம். குறிப்பாகக் கணவன் நிலை அறியாது தவிக்கும் பெண்கள், பிள்ளைகள் நிலை அறியாது தவிக்கும் தாய்மார்கள் சகோதரர்கள் என நாங்கள் சந்தித்த பலருள் மேரி செலின், மெடில்டா மேரிஹெலன், அஜிதா நிர்மலா, மரிய புஷ்பம், வியாகுல அடிமை, ஜோதி எனப் பலரும் அடக்கம். ததையூஸ் என்பவரின் படகில் சென்ற 10 பேர் நாங்கள் வந்தபின் காப்பாற்றச் சென்ற மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளனர் என்கிற செய்தி வந்துள்ளது. இவர்களில் சிலர் கடலுக்குப் புறப்பட்ட தேதி நவம்பர் 22. இன்னும் சிலர் அக்டோபர் 22ம் தேதி அதாவது புயலுக்குச் சுமார் 40 நாட்களுக்கு முன் கடலுக்குப் புறப்பட்டவர்கள்.
நீரோடி, சின்னத்துறை, வள்ளவிளை, பூத்துறை ஆகிய மீனவர் குடியிருப்புகளில்தான் அதிகம் பேர்களின் இறப்பு உறுதியாகியுள்ளது. நீரோடியைச் சேர்ந்த செய்ன்ட் ஆன்டனி எனும் விசைப்படகு (TN 15MM 5705) 13 மீனவர்களைச் சுமந்து கொண்டு அக்டோபர் 23 அன்று கடலில் இறங்கியது. படகின் சொந்தக்காரர் சுதர்சன். சுதர்சனின் மனைவி மேரி ப்ரைதா (23). ஒருவர் கூட இன்று திரும்பவில்லை. கடலில் மிதந்த ஒரு உடல் காலியான எண்ணை கேன்களில் பிணைந்து கிடந்து ஒரு பையுடன் கண்டெடுக்கப்பட்டது அந்தப் படகில் சென்றவர்களில் எட்டு பேர்களின் செல் போன்களும் இரண்டு அடையாள அட்டைகளும் அதில் இருந்தன. இப்படி நிறையப் பேர்களின் துயரக் கதைகளைக் கேட்டோம். எல்லோரும் சொன்னதை மிகச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம்:
“காப்பாத்துற பிள்ளைகளையும் இழந்து போட்களையும் இழந்து ஒண்ணுமில்லாமல் நிற்கிறோம். எங்க வயித்துக்கு மீன் பிடிக்கிறது மட்டுமில்லை. இந்த நாட்டின் 60 சத கடல் எல்லையையும் நாங்கதான் பாதுகாக்கிறோம். எங்களைத் தாண்டி கடல் வழியா ஒரு ஈ காக்கை கூட நுழைய முடியாது. பயங்கரவாதி அஜ்மல் கசாப் கூட ஒரு மீனவனைக் கொன்னுட்டுதான் இந்த நாட்டுக்குள்ள புக முடிஞ்சுது. நேவி என்ன செய்யுது? நாங்க உலகத் தரமான மீனவங்க. சூறை மீனையும் சுறா மீனையும் பிடிக்கிறதுல எங்களைக் காட்டிலும் திறமையானவுங்க யாரும் இல்லை. 300 நாடிகல் மைலைக் கடந்து போயி வலையையும் தூண்டிலையும் வீசி மீன் பிடிக்கிறவங்க நாங்க. ஒரு தடவை புறப்பட்டுப் போனால் ஒரு வாரம், பத்து நாளு, சில சமயம் ஒரு மாசங் கூட ஆகும். அதுக்குத் தகுந்தாப்போல தயாரிப்புகளோட போறோம். எட்டு லட்ச ரூபா வரைக்கும் அதுக்கு இன்வெஸ்ட் பண்ணித்தான் கடல்ல இறங்குறோம். அதுக்குத் தகுந்த மாதிரி மீன் கிடைக்கலன்னா தங்குற நாளை extend பண்ணுவோம். அவ்வளவு நாள் தங்குற மாதிரி தயாரிப்போட, சமைக்கிறதுக்கு ஆளோட போவோம். கிடைக்கிறதுல டீசல் முதலான செலவுகள் போக, ஒரு பங்கு சொந்தக்காரருக்கு, ஒரு பங்கு ஊழியர்களுக்குன்னு பிரிச்சுக்குவோம். எங்களுக்கு இந்த அரசாங்கம் என்ன பண்ணுச்சு? 300 நாட்டிகல் மைல் தாண்டி லட்சத் தீவு வரைக்கும் போற எங்களுக்கு சேட்டலைட் போன் தரணும். இந்த ஓகி புயல் அழிவை தேசியப் பேரிடர்னு அறிவிக்கணும். புயல் பற்றி முன்னெச்சரிக்கை பதினைந்து நாட்களுக்கு முன்னாடியே அறிவிக்கணும். குளச்சல்லையாவது தேங்காப்பட்டினத்துலயாவது ஒரு ஹெலிபாட் தளம் அமைக்கணும். அதுல எப்பவும் இரண்டு ஹெலிகாப்டர்கள் தயாரா இருக்கணும்”
இப்படித் தொகுத்துக் கூறிய நீரோடி சேவியர் லூயிஸ் துபாயில் உள்ளார். இந்த ஆண்டு கிறிஸ்மஸ்சுக்காக வந்தவர் இப்படியான சோகத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
“இந்த மீனவர் கிராமங்கள்ல இருக்கிற எல்லோரும் அவங்க எங்கே இருந்தாலும், கடலில் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் கிறிஸ்த்மஸ்சுக்கு இங்கே வந்துடுவோம். இந்த வருசமும் கிறிஸ்த்மஸ்தான் எங்களுக்கு எல்லை. அன்னைக்கு வரைக்கும் பாத்துட்டு, அன்னைக்கும் வரலேன்னா வராதவங்களை இறந்தவங்களா கருதி எங்களுக்கு அரசாங்கம் அறிவிச்ச்சுள்ள இழப்பீடைத் தரணும். வேணும்னா கிறிஸ்மஸ்சுங்கிறதை ஜனவரின்னு வச்சு டிசம்பர் 31 ஐ எல்லையா வச்சு இறந்தவங்களை அறிவிக்கணும்”
டிசம்பர் 31 ஐ எல்லையா வைத்து இறந்தவர்களைக் கணக்கிட வேண்டும் என்பது இப்போது ஒரு பொதுக் கோரிக்கையாக அங்கு உருப்பெற்றுள்ளது.
இந்தத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய அமைச்சருமான பொன் இராதாகிருஷ்ணன் வந்து தங்களைச் சந்திக்கவில்லை என்கிற உணர்வை எல்லோரும் வெளீப்படுத்துகின்றனர்.
2.1எச்சரிக்கை செய்யப்படாததே எல்லா அழிவிற்கும் காரணம்
ஆழ்கடல் மீன்பிடிப்புக்குப் போனவர்களைப் பொருத்தமட்டில் புயலுக்கு ஒரு வாரத்திற்கும் முன்னர் முதல் ஒரு மாதம் முன்னர் வரை கடலுக்குச் சென்றவர்கள் அடக்கம், ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டுள்ளவர்கள் 300 கடல் மைலுக்கும் அப்பால் வரை சென்றிருப்பர். அவர்களுக்குப் பாதுகாப்பாகத் திரும்பி வரும் அளவிற்கு முன்னதாக எச்சரிக்கை அளிக்கப்பட வேண்டும். அந்த எச்சரிக்கை அவர்களுக்கு எட்டவும் வேண்டும். இரு கடல் மைல் என்பது 1.852 கிமீ அல்லது 1.1508 மைல் தூரத்திற்குச் சமம் என்பது குறிப்பிடத் தக்கது.
ஆழ்கடல் அளவிற்குச் செல்லாமல் ஒப்பீட்டளவில் கரைக்கு அருகாக இருந்து மீன்பிடிப்பவர்கள் பெரும்பாலும் நவம்பர் 29 அன்றுதான் மீன்பிடிக்கக் கடலில் இறங்கியுள்ளனர். அப்போது குறைந்த காற்றழுத்த மன்டலம் உருவாகியுள்ளது எனவும் அது வலுப்பெறுவதற்கு வாய்ப்புள்ளது எனவும் மட்டுமே வானிலை மையத்திலிருந்து அறிவிக்கப்பட்டது. மற்றபடி புயல் அறிவிப்பு மற்றும் எச்சரிக்கை ஏதும் தரப்படவில்லை. பொதுவாக இப்படியான எச்சரிக்கை வரும்போது மீனவர்கள் இதைப் பொருட்படுத்துவது இல்லை. உறுதியாகப் புயல் வரும் என அறிவித்து கடலுக்குள் இறங்க வேண்டாம் என எச்சரிக்கும்போதே மீனவர்கள் அதை ஏற்று கடலுக்குள் இறங்குவதைத் தவிர்ப்பது வழக்கம். வெறும் காற்றழுத்த மண்டலத் தாழ்வு என்பதை எல்லாம் அவர்கள் பெரிதாகச் சட்டை செய்வதில்லை. ஆனால் இம்முறை நவம்பர் 30 அன்று காலை விடிகிற நேரத்தில்தான் தாங்கள் புயல் எச்சரிக்கையைக் கேட்க நேர்ந்தது எனத் தப்பிவந்த ஒருவர் கூறுவது Kumari Tamil என்னும் தளத்தில் பதிவாகியுள்ளது. நாங்கள் பேசிய மீனவர்களும் அவ்வாறே கூறினர். புயல் எச்சரிக்கை செய்யப்பட்டபோது அவர்கள் ஆழ்கடலுக்குள் இருந்துள்ளனர்.
இந்தத் தாமதம் பற்றிக் கூற வரும்போது வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன், “பேரிடர் தொடர்பான தகவல்களை நேரடியாக மீனவர்களுக்கு நாங்கள் அறிவிப்பதில்லை. ஓகிப் புயல் விஷயத்தில் குறுகிய கால அவகாசமே எங்களுக்கு இருந்தது. புயல் சின்னம் தொடர்பாக எங்களுக்கு இரண்டு நாள் முன்னம்தான் தெரியவரும்” – எனச் சொல்லியுள்ளார் (தினத்தந்தி, பக்.5, டிசம்பர் 17, 2017).
மொத்தத்தில் சரியான நேரத்தில் ஓகி புயல் குறித்த எச்சரிக்கை குமரி மாவட்ட மீனவர்களுக்கு அளிக்கப்படவில்லை என்பது உறுதியாகிறது. ‘ஓகி’ என இப் புயலுக்குப் பேர் சூட்டிப் பேசுவது என்பதெல்லாம் எல்லாம் முடிந்த பின்பே நடந்தேறியுள்ளது.
வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன் புயல் குறித்த எச்சரிக்கையை இரண்டு நாள் முன்னர்தான் செய்ய முடியும் என்கிறார். எனினும் tropical cyclone ensemble forecast முறையில் நான்கு நாட்கள் முன்னதாகவே புயல் அடிக்கப் போவதைக் கண்டறிய முடியும். அது எந்தத் திசையில் நகரும், எங்கு பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது முதலியவற்றையும் கணிக்க இயலும். 7,517 கி.மீ (4,671 மைல்) நீளமுள்ள ஏராளமான மீன் வளம் மிக்க கடற்கரையை உடைய இந்தியத் துணைக் கண்டத்தில் இப்படித் துல்லியமாக புயல் வருவதை ஊகிப்பது எச்சரிக்கை அளிப்பது ஆகியவற்றில் உள்ள தொழில்நுட்பக் குறைபாடுகளும் மெத்தனங்களும் கடுமையாகக் கண்டிக்கத் தக்கன.
மீனவர்களை அரசு ஒரு பொருட்டாகக் கருதுவது இல்லை. நமது மீனவர்கள் பல நூறு நாடிகல் மைல்கள் தாண்டி மீன்பிடிப்பவர்கள். நமது மக்களின் உணவுத் தேவையைக் கணிசமாக பூர்த்தி செய்பவர்கள். எல்லை தாண்டினார்கள் எனும் குற்றச்சாட்டில் சுற்றியுள்ள பல நாடுகளில் நம் மீனவர்கள் சிறைப்பட்டுக் கிடக்கின்றனர். ஆனாலும் இன்று வரை மீனவர்கள் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக தனி அமைச்சகம் ஒன்றை மத்திய அரசு உருவாக்கவில்லை என்பதையும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மீனவர் பிரச்சினைகளில் அக்கறை உள்ளவரும் பேராசிரியரும் எழுத்தாளருமான வறீதையா கான்ஸ்டான்ன்டின் கூறும்போது, “உலகின் மிகத் திறமையான மீனவர்களைக் கொண்ட பகுதி இந்தத் தூத்தூர் மண்டலம். சுமார் 900 கடல் மைல் தொலைவு வரை கடலில் சென்று மீன் பிடிக்கும் பாரம்பரிய உரிமைகளும் இவர்களுக்கு உண்டு. சுறா மீன்களையும் சூறை மீன்களையும் வாரி அள்ளுவதில் வல்லவர்கள் இவர்கள். இவர்களது செயல்பாட்டால் சூழல் அழிவு ஏற்படுகிறது என எந்தப் புகாரும் இதுவரை கிடையாது. அதே நேரத்தில் 193 ‘பன்னாட்டு ஆலை (industrial) மீன்பிடிப்புக் கப்பல்களுக்கு’ அனுமதி அளிக்கப்பட்டு அவை பல ஆண்டுகளாக எந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு அக்கறையும் இல்லாமல் அள்ளிச் செல்கின்றன நம் மீன் வளத்தை” என்றார்.
2.2 நிரந்தரத் தீர்வுக்கு வழி என்ன?
சின்னத்துறையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜஸ்டின் ஆன்டனி சந்தித்தோம். ஐ.நா அமைப்புகளுடன் இணைந்து அங்கு நிவாரணப் பணிகளைச் செய்து வருபவர்.. விரிவாக அப்பகுதி மீனவர்களின் பிரச்சினைகளை விளக்கிய அவர் இறுதியாக மீனவர்களின் பாதுகாப்பை நோக்கி முன்வைத்த கோரிக்கைகள்:
1.புயலுக்கு முன் அரசு அறிவிப்புகள் மீனவர்களைச் சென்றடைய வேண்டும். கரையில் இருப்பவர்களுக்கு மட்டுமின்றை ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் அந்த எச்சரிக்கை கிடைக்க வழி செய்ய வேண்டும். 2. மீனவர்களுக்கு இரு வழித் தொடர்புடன் கூடிய சேட்டலைட் போன்கள் கொடுக்கப்பட வேண்டும். கரையிலுள்ள குறிப்பான பேரிடர் பாதுகாப்பு மையம் ஒன்றுடன் மட்டுமே தொடர்பு கொள்ளுமாறு அந்தக் கருவி அமைக்கப்படும்போது எல்லைப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் எழாது. 3.வானிலை ஆய்வு மையப்பணிகள் திருப்திகரமாக இல்லை. அவை திறம்படச் செயல்படுபவையாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். 4. வானிலை ஆய்வு மையம், தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றின் கிளைகளும், கடலில் தத்தளிக்கும் மீனவர்களைக் காப்பாற்றும் வசதிகளுடன் கூடிய ஹெலிபாட் தளம் ஒன்றும் இக் கடற்கரை ஓரத்தில் அமைக்கப்பட வேண்டும். 4. மத்திய அரசில் மீனவர் நலன்களுக்கான தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். 5. அறிவிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை ஓகிப் புயலில் மறைந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடியாக வழங்க வேண்டும். கண்ணால் பார்த்த சாட்சியங்களின் அடிப்படையில் இறந்தவர்கள் யார் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். 6. டிசம்பர் 31 (2017) ஐ எல்லையாக வைத்து அதுவரை திரும்பாத மீனவர்கள் அனைவரையும் இறந்தவர்களாகக் கணக்கில் கொண்டு அவர்கள் குடும்பத்திற்கு முழு இழப்பீட்டுத் தொகையையும் வழங்கும் வகையில் உடனடியாக அரசு சட்டத் திருத்தம் செய்ய வேண்டும். 7. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அனைத்திற்கும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு, அவர்களின் கல்வித் தகுதிக்குத் தகுந்த நிரந்தர அரசுப் பணி அளிக்க வேண்டும். 8. மாயமான மீனவர்களின் குடும்பத்திற்கு அரசுக் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும். இவை தவிர மிகவும் பின்தங்கிய வாழ்க்கையை வாழ்பவர்களான இப்பகுதி மக்கள் பயன்படும் வகையில் இலவசக் கல்வி, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஆகியவை வழங்கபட வேண்டும்.
2.3 ஒரு மீனவக் குடும்பத்தின் கதை
அப்பகுதி மீனவ மக்களின் நிலையைப் புரிந்து கொள்வதற்கு உதவியாக சின்னத்துறை கோவில் வளாகத்திற்கு அருகில் உள்ள ஆன்டனி என்பவரது குடும்பத்தின் கதையை ஜஸ்டின் ஆன்டனி சொன்னார். சென்ற அக்டோபர் 11 (2017) அன்று கேரளத்தில் காசர்கோடு அருகில் பேய்ப்பூர் எனும் பகுதியில் கடலில் ஆன்டனியின் குழு மீன் பிடித்துக் கொண்டிருந்தது. நடுக்கடலில் தமது விசைப்படகில் அக்குழுவினர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத கப்பல் ஒன்று மோதி அவர்களின் படகு மூழ்கியது. படகில் இருந்த ஆறு பேர்களில் இருவர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். ஆன்டனி சடலமாக மீட்கப்பட்டார். மற்ற மூவரது உடலும் கிடைக்கவில்லை. அவர்களில் இருவர் கேரளத்தைச் சேர்ந்த கடலோடிகள். இன்னொருவர் ஆன்டனியின் மாமனார். மோதிய கப்பலைக் கண்டுபிடித்து இந்தக் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் உட்படப் பலரிடமும் பலமுறை முறையிட்ட போதும் ஒன்றும் நடக்கவில்லை. இதற்கிடையில் இப்போது ஓகிப் புயலில் அதே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் மாயமாகியுள்ளனர். ஒருவர் ஆன்டனியின் மைத்துனர். மற்றவர் அவரது சகலை. இன்று அந்தக் குடும்பத்தில் ஆண்கள் யாரும் இல்லை. ஒரே சொத்தான விசைப்படகும் அழிந்து விட்டது. இன்று இந்தக் கிராமங்களில் ஆண்களே இல்லாத குடும்பங்கள் ஏராளமாக உள்ளன.
2.4 ஏழாண்டுகள் முன் வீசிய புயலின் நிவாரணமே இன்னும் கிடைக்கவில்லை
மார்த்தாண்டத் துறையில் சுனில் (48) த/பெ லூபர் என்பவர் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் 4 அன்று இதேபோல வீசிய Phyan என்னும் புயல் பற்றிச் சொன்னார். தெற்கிலங்கையிலிருந்து குஜராத் வரை அது பாதிப்பை ஏற்படுத்தியது. இப்போது பாதிக்கப்பட்டுள்ள குளச்சல் கடற்கரைப் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்கள் அந்தப் புயலில் இறந்தனர். ஒருவர் உடல் மட்டும் கிடைத்தது. ஏழு பேர் மாயமாயினர். இன்னும் திரும்பி வராத ஏழு பேர்களில் ஒருவர் சுனிலின் அண்ணன். வழக்கம்போல ஆட்களின் இழப்பு ஒரு பக்கம் என்றால் வலைகளும் ஏராளமான படகுகளும் அழிந்தன. அவர்களின் 4 இலட்ச ரூபாய் பெறுமானம் உள்ள வலையும் அழிந்ததாம். இறந்தவர்களுக்கு எந்த இழப்பீடும் இதுவரை இல்லை. ஏழு ஆண்டுகளுக்குப் பின்னரும் திரும்பி வராதவங்களை இறந்ததாகக் கருதி அதற்குப் பின் இழப்பீடு தருவதாக இதுவரை சொல்லி வந்துள்ளனர். இப்போது ஏழு ஆண்டுகள் முடிந்தும் எந்த இழப்பீடுகளும் வழங்கவில்லை என்றார் அவர்.
2.5 உயிர்கள் மட்டுமல்ல மூலதனங்களும் அழிந்துள்ளன
அடுத்து நாங்கள் சந்தித்தது தூத்தூர் ஆலயப் பங்குத் தந்தை பெபின்சன். ஓகிப் புயலில் அழிந்துபோன வள்ளங்கள் குறித்து அன்றைய தேதி வரை கிடைத்துள்ள விவரங்களைத் தந்தார்.
உயிரிழப்புகள் தவிர பெரிய அளவில் அவர்களது மூலதனங்கள், படகுகள், வலைகள், தூண்டில் முதலான கருவிகள் எல்லாம் அழிந்துள்ளன. பல வீடுகள் இன்று ஆண்கள் இல்லாத வீடுகள் ஆகிவிட்டன. உயிர் பிழைத்து வந்தவர்களும் இந்த மூலதனங்களை இழந்துதான் வந்துள்ளனர். விசைப் படகுகளில் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்குச் செல்பவர்கள் நீண்ட நாடகள் தங்கிப் பிடிப்பதற்கு ஏற்ப சுமார் எட்டு இலட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள தேவையான பொருள்களைக் கொண்டு செல்கின்றனர். அவையும் அழிந்துள்ளன. கடந்த 15 நாட்களாக அவர்கள் மீண்டும் கடலில் இறங்கவும் அனுமதிக்கப்படவில்லை. அன்று கடலில் அழிந்த படகுகளில் சிலவற்றில் படகின் உரிமையாளர்களும் சென்றுள்ளனர். சிலவற்றில் உரிமையாளர்கள் செல்லவில்லை. ஆனால் அவர்கள் படகுகள் அழிந்துள்ளன. அந்த உரிமையாளர்களுக்கும் இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். தப்பிப் பிழைத்துத் திரும்பிக் கரை வந்தடைந்த படகுகளும் பலவாறு சேதம் அடைந்துள்ளன. எல்லாம் பழுதுபார்க்கப்பட வேண்டும்.
குமரி மாவட்டத்தில் மணக்குடி, தென் தாமரைக்குளம், வடக்கு தாமரைக்குளம் புதுக்கிராமம் ஆகிய பகுதிகளில் ஏறக்குறைய 1000 ஹெக்டேர் பரப்பில் உப்பளங்கள் உண்டு எனவும் அவற்றில் ஆண்டுதோறும் 1000 டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது எனவும் இயற்கை விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால்மோகன் கூறுகிறார். இவ்வாறு சேமிக்கப்பட்டிருந்த உப்பு புயல் வெள்ளத்தில் கரைந்தோடியுள்ளது. இப்படியான பல்வேறு இழப்புகளும் உரிய வகையில் மதிப்பிடப்பட்டு இழப்பீடுகள் வழங்கப்படுவது அவசியம்.
2.6 சேமிப்பதில் ஈடுபாடு காட்டாத மீனவர் சமூகம்
மீனவர்கள் தாம் சம்பாதிப்பதை சேர்த்து வைப்பது, சேமிப்பது முதலான வழக்கங்கள் இல்லாதவர்கள் என்பது அவர்களைப் பற்றி எழுதும் எல்லோரும் பதிவு செய்கிற ஒன்று இவர்கள் சம்பாதிக்கும் காசை உடனடியாகச் செலவு செய்பவர்கள் என்பது. சம்பாதிப்பதை சொத்துக்களிலோ, தொழில்கள் மற்றும் வணிகத்திலோ முதலீடு செய்வதில் இவர்களுக்கு ஆர்வம் கிடையாது என்றார் இப்பகுதியைச் சேர்ந்தவரும். குமரி மாவட்டத்தைத் தமிழகத்தோடு இணைக்கும் போராட்டத்தில் பங்குபெற்றுச் சிறை சென்றவருமான கொடிக்கால் ஷேக் அப்துல்லா அவர்கள் தற்போது வளைகுடா நாடுகளுக்குச் சென்று வரும் சிலரும் கூட சம்பாதித்து வரும் காசை வீடுகள் கட்டுவது தவிர வேறு எதிலும் முதலீடு செய்து சம்பாதிக்கும் எண்ணமோ பயிற்சியோ இல்லாதவர்கள் என்றார் அவர். இதோ எட்டிப்பார்த்தால் அள்ள அள்ளக் குறையாத மீன்வளத்தை அள்ளித் தரும் கடலன்னை இருக்க நாளை குறித்த அச்சம் ஏன் என வாழ்பவர்கள் அவர்கள்.
இம்மக்களுக்கு எல்லாமும் இவர்கள் நம்பும் கிறிஸ்தவமும் பாதிரிமார்களும்தான். இன்று இந்தப் பேரழிவின் பாதிப்பை நாம் அறிய வேண்டி இம்மக்களிடம் சென்றால் அவர்கள் தங்களின் இழப்புகள், காணாமற்போன உறவுகள் குறித்து கண்ணீர் மல்க அழத்தான் செய்வார்களே ஒழிய அதற்கு மேல் நாம் ஏதேனும் தெரிந்துகொள்ள வேண்டுமானால் பாதிரிமார்களைத்தான் அணுக வேண்டும். எங்கள் பயணத்தில் நாங்கள் சந்தித்த மூன்று பாதிரிமார்களும் விரிவாகப் பிரச்சினைகளை விளக்கினர். ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்த விவரங்களை மிகத் துல்லியமாகவும், உண்மைத் தன்மையுடனும் மிகைப் படுத்தாமலும் கூறினர்.
பாதிரிமார்கள் இங்கு வெறும் மதக் கடமைகளை நிறைவேற்றுபவர்களாக மட்டுமின்றி சமூகம் சார்ந்த பிரச்சினைகளில் அம் மக்களுக்கு வழிகாட்டிகளாகவும் பொறுப்பாளர்களாகவும் உள்ளனர். தமிழகத்தில் முஸ்லிம்களைக் காட்டிலும் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கையில் சற்று அதிகமாக இருந்தபோதிலும் முஸ்லிம்கள் அளவிற்கு கிறிஸ்தவர்கள் ஒரு அரசியல் சக்தியாகப் பரிணமிக்க இயலாமற் போனமைக்கு இதுவும் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஆழமாக வேர்கொண்டுள்ள சாதி வேறுபாடுகளுமே காரணம். குமரி மீனவர்களின் இன்றைய இந்த இக்கட்டான சூழலில் பாதிரிமார்களின் பங்கை வைத்து இங்கு அச் சமூகத்திற்கு எதிராக ஒரு அரசியல் மேற்கொள்ளப்படுகிற நிலையில் இதைப் புரிந்து கொள்வது அவசியம்.
2.7 மீனவர்களோடு கடலில் செல்லும் வட இந்தியத் தொழிலாளிகள்
மீனவர்களோடு சேர்ந்து இம்முறை வடமாநிலத்திலிருந்து இங்கு புலம்பெயர்ந்து வந்து தொழில் புரியும் “இந்திக்கார்களும்” எட்டு பேர்கள் இறந்துள்ளனர். கடலுக்குச் செல்லும் ஒவ்வொரு விசைப்படகிலும் செல்கிற மொத்த ஊழியர்கள் சுமார் 12 பேர் என்றால் அதில் இரண்டு முதல் நாலு பேர்கள் இந்திக்காரர்கள் என்றார் கடியாபட்டினத்தைச் சேர்ந்த மீனவரும் “கடல் நீர் நடுவே” என்கிற மீனவர் வாழ்வை அடிப்படையாகக் கொண்ட புதினம் ஒன்றை எழுதியுள்ளவருமான கடிகை அருள்ராஜ். அவரும் ஓகிப் புயலில் தப்பி உயிர் பிழைத்துக் கொல்லத்தில் கரை ஏறியவர். அன்று தன்னுடைய படகில் 12 பேர் இருந்ததாகவும் அதில் நால்வர் இந்திக்காரர்கள் என்றும் அவர் கூறினார். இந்த வடமாநிலத் தொழிலாளிகளுக்கு பிற மீனவர்களைப் போலவே சமமாக ஊதியம் தரப்படும் என்றார். அவர்களும் இவர்களோடு சேர்ந்து எல்லா வேலைகளும் செய்வர். எனினும் அவர்கள் நிரந்தரமாக ஒரே படகில் வேலை செய்வதில்லை. கரையில் நின்று கொண்டிருப்பவர்களை தேவையான அளவிற்கு அவ்வப்போது ஒவ்வொரு பயணத்திலும் அழைத்துச் செல்வோம் என்றார் அருள் ராஜ். அவர்கள் அடையாள அட்டை, ஆதார் அட்டை எல்லாம் வைத்திருப்பார்கள். ஆனால் யாரிடமும் அவர்கள் நிரந்தரமாக வேலை செய்யாததால் அவர்களின் மொத்த எண்ணிக்கை தெரியாது. ஆனால் தூத்தூர் வட்டத்தில் உள்ள அந்த எட்டு மீனவக் கிராமங்களிலும் உள்ள மொத்த வள்ளங்களைக் கணக்கிட்டால், ஒரு வள்ளத்திற்கு சராசரியாக இரண்டு அல்லது மூன்று என வைத்து ஒருவாறாக மொத்தம் எவ்வளவு பேர் இருந்திருக்கலாம் எனக் கணக்கிடலாம் என்றார். தற்போது அவர்கள் எல்லோரும் பயந்து கொண்டு ஊருக்குச் சென்றுவிட்டதால் போதிய ஆள் கிடைக்காததும் புயலுக்குப் பின் இன்று தொழில் முடங்கிக் கிடப்பதற்கு ஒரு காரணம் என்றார். கடிகை அருள்ராஜ் சொல்வதைப் பார்க்கும்போது மொத்தம் கடலுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கையில் நான்கு அல்லது ஐந்தில் ஒரு பங்கு இந்த வடமாநிலத் தொழிலாளிகள் என ஊகிக்க முடிகிறது. ஆக அவர்களின் இழப்பும் கணிசமானதுதான்.
3.ஓகிப் புயலில் சீரழிந்த விவசாயம்
அடுத்த நாள் (டிச 15) விவசாயிகளுக்கு இழப்பீடுகள் வழங்குவது தொடர்பாகக் கடை அடைப்பு அறிவிக்கப்பட்டிருந்தது. பா.ஜ.க முன் கை எடுத்து அறிவித்திருந்த இந்தக் கடை எடுப்பில் விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பங்குபெற்றிருந்தனர். தி.மு.கவும் இந்தக் கடை அடைப்பிற்கு ஆதரவு அளித்திருந்தது. புயல் அழிவில் மீனவர்கள் பிரச்சினைக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது எனவும் விவசாயிகள் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனவும் இங்கு அரசியல் பிரச்சாரம், ஆங்காங்கு எதிர்ப்புகள், மறியல்கள் முதலியவற்றைச் செய்து கொண்டிருந்த பா.ஜ.க மற்றும் ஆதரவு அமைப்புகள் அதன் உச்ச கட்டமாக இந்தக் கடை அடைப்பை நடத்தின. விவசாயிகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருப்பதை முன்னிட்டுப் பிற கட்சிகலும் ஆதரவளித்தன.
முந்தின நாள் மீனவர் பகுதிகளைப் பார்வையிட்ட நாங்கள் அது முடிந்தவுடன் பத்மநாதபுரம் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மனோ.தங்கராஜ் அவர்களைச் சந்தித்து விரிவாக உரையாடிவிட்டு இரவு 9.30 மணி வாக்கில் புறப்பட்டபோது, ‘பார்த்துப் போங்கள். பஸ்களின் கண்ணாடிகளை எல்லாம் கல் வீசி உடைகிறார்கள் எனச் செய்தி வருகிறது” என எச்சரித்து அனுப்பினார். நாங்கள் வரும் வழியில் அவ்வாறு சில அரசு பேருந்துகளும், ஒரு தனியார் பள்ளிப் பேருந்தும் கண்ணாடி உடைக்கப்பட்டு நின்று கொண்டிருந்தன. பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தது.
என்வே அடுத்த நாள் காலை நாங்கள் சற்று நேரம் காத்திருந்து, பெரிய அளவில் பிரச்சினைகள் இல்லை என உறுதி செய்து கொண்ட பின்னரே பகல் சுமார் சுமார் 11.30 மணி வாக்கில் புறப்பட்டோம். தோவாளைத் தாலுகாவில் உள்ள கிராமங்கள் சிலவற்றைப் பார்த்துவிட்டு அப்படியே கீரிப்பாறை அருகில் உள்ள காணி பழங்குடியினர் குடியிருப்புகளுக்கும் செல்வது எங்கள் திட்டம். கிராமப் புறங்களில் சில கடைகள் சாத்தப்பட்டும், சில கடைகள் திறந்தும் இருந்தன. நாங்கள் திட்டவிளை – நெடுமங்காடு (கேரளம்) சாலையில் உள்ள தெரிசனகோப்பு, சிறமடம், உவார்ட்ஸ்புரம், தோமையாபுரம், அழகியபாண்டிபுரம், தடிக்காரக் கோணம், கீரிப்பாறை முதலான ஊர்களுக்குள் சென்று வாழை, ரப்பர் தோட்டங்கள், தேக்கு மரங்கள், தென்னை முதலான தோப்புகளும் விவசாயங்களும் பாழ்பட்டுக் கிடப்பதைக் கண்டோம். அதே போல நெல், மரச்சீனிச் சாகுபடி ஆகியனவும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்தோம்.
பெரிய அளவில் வாழைத் தோப்புகள். ஓடிந்து விழுந்து இந்த இடைப்பட்ட இரு வாரங்களில் காய்ந்து கிடந்தன. எல்லாம் கிட்டத் தட்ட குலை தள்ளும் பருவம். அதே போல ரப்பர் மரங்களும் சாய்ந்து கிடந்தன. அவற்றில் பலவும் பாலூறும் பருவம். அவற்றை அப்புறப்படுத்தும் வேலையும் ஆங்காங்கு நடந்து கொண்டிருந்தன. மீண்டும் அங்கு செடிகளை நட்டு வளர்த்தால் பலன் கிடைக்கத் தொடங்குவதற்கு இன்னும் சுமார் எட்டாண்டு காலம் காத்திருக்க வேண்டும். அந்த வகையில் எட்டாண்டு கால உழைப்பு அங்கு வீணாகி இருந்தது.
நிறைய தேக்கு மரங்கள் மட்டுமின்றி காட்டு மரங்களும் விழுந்து சாலையை அடைத்துக் கிடந்து பின் அவை வெட்டப்பட்டு மறுபடியும் சாலைப் போக்குவரத்துகள் நடந்து கொண்டிருந்தன. மரச்சீனித் தோட்டங்களும் பாழ்ப்பட்டிருந்ததை அறிந்தோம்.
எங்களுடன் குழுவில் பங்குபெற்று வந்திருந்த தோழர் சந்திரமோகன் (த/பெ சி.பி.இளங்கோ) அவர்களும் ஏ.ரெவி அவர்களும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள். சந்திரமோகன் ‘சமூக நீதிக்கான ஜனநாயகப் பேரவை’ எனும் இயக்கத்தின் அமைப்பளர். ரெவி ‘விவசாயத் தொழிலாளர் சங்கத்தின்’ செயலாளர். இவர்கள் அப்பகுதிக் காணி பழங்குடியினர் மத்தியிலும் அவர்களின் உரிமைகளுக்காகச் செயல்படுவோர்.
3.1 குத்தகை விவசாயிகளுக்கும் இழப்பீடு தர வேண்டும்
“மீனவர்களின் இழப்பையும், விவசாயிகளின் இழப்பையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். இரண்டும் வெவ்வேறு வகையானவை. இங்கே ஒவ்வொரு பயிரையும் வேறுபடுத்தி மதிப்பிட்டு இழப்புகளுக்கு முழு ஈட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும். இந்த விவசாயிகளில் நூற்றுக்குத் தொண்ணூறு சதம் குத்தகை விவசாயிகள். அவர்களே மூலதனம் இட்டு உழைத்துப் பயிராக்கி உள்ளனர். எனவே இழப்பில் அவர்களின் பங்கு அதிகம். அதற்குரிய வகையில் அளிக்கப்படும் இழப்பீடு அவர்களுக்கு உரிய அளவில் போய்ச் சேர வேண்டும். அளிக்கப்படும் இழப்பீடு முழுவதும் ஜமீனுக்குப் போய்விடக் கூடாது. வரி கட்டிய ரசீது முதலியன ஜமீன்களிடமே இருக்கும் என்பதால் முழு இழப்பையும் அவர்களே எடுத்துக் கொள்ள அனுமதிக்கக் கூடாது. அதேபோல கோவில் நிலங்களும் இங்கு ஏராளமாக உள்ளன. திருவாவடுதுறை ஆதீனத்திற்குக் கூட இங்கு நிலம் உள்ளது. ரப்பர் எஸ்டேட்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த இழப்புகள் பெருந் தனக்காரர்களுடையது. ரப்பர் வாரியமும் அவர்களுக்கு இழப்பீடு தரும் வாய்ப்புள்ளது. ஆனால் நெல், வாழை, மரச்சீனிப் பயிர்கள் ஏழை விவசாயிகளுடையது. இயற்கை அழிவுகளும் கூட எல்லோரையும் ஒரே மாதிரி பாதிப்பதில்லை. ஜமீன்கள், குத்தகைதாரர்களுக்கு அப்பால் நிலமற்ற விவசாயத் தொழிலாளிகளும் உள்ளனர். அவர்களுக்கு மழை வெள்ளத்தின் விளைவாக இப்போது வேலையும் இல்லை. கூலியும் இல்லை. இவர்களது இழப்புகளை அரசு எவ்வாறு ஈடு செய்யப் போகிறது? புயல் 30 ந்தேதி அடிச்சது. இரண்டு வாரம் ஆகியும் பழங்குடிப் பகுதிகளுக்கு மின்சாரம் போகவில்லை. நெல்லை மாவட்ட வெல்ஃபேர் ட்ரஸ்டிலிருந்து உடனடித் தேவைகளுக்காக ‘நிவாரண பாக்கெட்’கள் கொடுத்தார்கள். ஆனால் ‘கரன்ட்’ இல்லாமல் இப்போது அவர்களால் செல்போன்களைக் கூட சார்ஜ் செய்ய முடியாமல் கிடக்கிறார்கள். இதுமாதிரி மோசமான அரசாங்கத்தைப் பார்த்ததே இல்லை. விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். நிவாரண வேலைக்குப் பக்கத்து மாவட்டத்திலிருந்து வந்தவர்கள் உட்பட சிலர் இறந்துள்ளனர். அவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.” என்றார் சந்திரமோகன்.
3.2 ஒவ்வொரு பயிருக்கும் எவ்வளவு இழப்பீடுகள்
அன்று மாலை தக்கலையில் குமரி மாவட்டப் பாசனத் துறைத் தலைவர் வின்சென்ட் ஆன்டோ அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து விரிவாகப் பேசினோம். முதல் நாள் விவாசாயிகள் சார்பாக நடந்த கடை அடைப்புப் போராட்டத்திலும் கலந்து கொண்டவர் அவர். மிகவும் விரிவாக ஓகிப் புயலினால் குமரி மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பையும், ஒவ்வொரு வகைப் பயிருக்கும் எவ்வளவு இழப்பீடு அளிக்கப்பட வேண்டும் என்பதையும் பட்டியலிட்டார். அது:
“மரங்களுக்கான இழப்பீடுகளைப் பொறுத்த மட்டில் 2013ல் நால்வழி நெடுஞ்சாலைத் திட்டத்திற்காக இம் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தப் பட்டபோது வெட்டப்பட்ட மரங்களுக்கு தேசிய நெடுஞ்சாலைத் துறை (National Highways Authority of India- NHAI) விவசாயிகளுக்கு எவ்வளவு இழப்பீடு தந்ததோ அதே அளவு இழப்பீடு இந்தப் புயல் அழிவுக்கும் தர வேண்டும் என்கிறோம். இப்போது 8000 ஏக்கரில் இருந்த 20 இலட்சம் ரப்பர் மரங்கள் அழிந்துள்ளன. இதில் 4 இலட்சம் மரங்கள் ரப்பர் போர்டு மற்றும் வனத்துறைக்குச் சொந்தமானவை. NHAI தந்ததுபோல மரத்திற்கு 10,000 ரூபாயிலிருந்து 15,000 ரூ வரை ஒவ்வொரு மரத்துக்கும் மதிப்பிட்டு அளிக்கணும். அரசு ஏக்கருக்கு 40,000 ரூ தான் தருவதாகச் சொல்லியுள்ளது. ஒரு ஏக்கரில் 250 மரம் இருக்கும். அதாவது ஒரு மரத்துக்கு 1600 ரூ தான் சொல்லி இருக்காங்க.அது போதாது.
தென்னை மரங்கள் 25,000 மரங்கள் அழிஞ்சிருக்கு. ஆனால் அரசு 22,000 மரங்கள்தான்னு சொல்றாங்க. ஒரு மரத்துக்கு ரூ 5,000 த்திலிருந்து 7,000 ரூ வரைக்கும் இழப்பீடு தரணும்.
வாழை மரங்கள் 12,000 ஏக்கர்ல 80 இலட்சம் மரங்கள் அழிஞ்சிருக்கு. குமரி மாவட்டத்தில் மட்டி, செவ்வாழை போன்ற உயர் ரக வாழைகள் பயிரிடுகிறோம். இது விளைஞ்சிருந்துதுன்னா ஒரு ஏக்கருக்கு 12 லட்சம் ரூ வரை கிடைத்திருக்கும். இப்ப நாங்க ஒரு ஏக்கருக்கு 4 லட்சம் ரூ மட்டும் கேட்குறோம். அரசு 48,000 ரூ விலிருந்து 63,000 ரூ வரைக்கும்னு அறிவிச்சிருக்காங்க.
நெல்லைப் பொருத்த மட்டில் 5,000 ஏக்கர் பயிர் அழிஞ்சிருக்கு. அரசு 3,000 ஏக்கர்னு மதிப்பிடுது. ஏக்கருக்கு 25,000 ரூ இழப்பீடு கேட்கிறோம். அரசு இன்னும் அறிவிக்கல.
மரச்சீனி கிழங்கு 3,000 ஏக்கர் பாழாகி இருக்கு.ஏகருக்கு 60,000 ரூ கேட்கிறோம். ஏன்னா குத்தகைதாரருக்கே விவசாயி 25,000 ரூ கொடுக்க வேண்டி இருக்கு.
கமுகு (பாக்கு) 25,000 மரம் அழிஞ்சுருக்கு. ஒரு மரத்துக்கு 1000 ரூ கேட்கிறோம்.
தேக்கு 25,000 த்திலிருந்து 30,000 மரங்கள் அழிஞ்சிருக்கு. தேக்கு, பலா, மா மற்றும் பழ மரங்கள் எல்லாவற்றிற்கும் NH 47 நால் வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட போது NHAI அளித்த (Award No:.5/2013, RoC No 14.3.2010, Dated 17.12.2013)) அதே தொகையைத் தர வேண்டும்.”
3.3 இறந்தவர்களுக்கு 20 இலட்சம் இழப்பீடு
தொடர்ந்து வின்ஸ் ஆன்டோ கூறியது:
“இது தவிர மின்சார கம்பங்களை ரிப்பேர் பண்ணும்போதும், மரம் வெட்டும்போதும் சிலர் இறந்துள்ளனர், வேதனை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு. இப்படி இதுவரை 9 பேர்கள் இறந்த தகவல் கிடைச்சிருக்கு. மொத்தம் 25 பேர் வரைக்கும் இப்படி இறந்திருக்கலாம்னு சொல்றாங்க. கேரளாவில் தந்துள்ளது போல ஒவ்வொரு இறப்பிற்கும் 20 இலட்சம் ரூ இழப்பீடு தரணும். எல்லாவிதமான விவசாய கடன்களும் விவசாய நகைக் கடன்களும் ரத்து செய்யப்படணும். சுமார் 300 முதல் 400 குளங்கள், கால்வாய்கள், ஆறுகள் உடைப்பெடுத்துள்ளன அவற்றைச் சரி செய்ய பொதுப்பணித்துறைக்கு 100 கோடி ரூ ஒதுக்க வேண்டும்.
3.4 ஊர்களுக்குள் மழை வெள்ளம் வருவதைத் தடுக்க நிரந்தரத் தீர்வு
பொதுவாகக் குமரி மாவட்டத்தில் மழை வெள்ளம் ஊருக்குள் வருவது கிடையாது. இப்போது சுசீந்திரம் போன்ற இடங்கள் மூழ்கும் நிலை ஏற்பட்டதுக்கு நால்வழிச் சாலைகள் அமைக்கப்பட்டதுதான் காரணம் களியக்காவிளை – கன்னியாகுமரி சாலையில் மட்டும் 267 இடங்களில் நால்வழிச்சாலையில் கால்வாய்கள் வருகின்றன. அவற்றை உரிய வகையில் culvert கள் அமைத்து நீர் வழிவதற்கு வழி செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் சிறிய குழாய்கள் அமைத்து நீரை வடியவிட்டுள்ளதால் பெரு மழைகளில் வெள்ளம் வருகிறது. அவையும் சரி செய்யப்பட வேண்டும்”
என விரிவாக வின்ஸ் ஆன்டன் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளையும் நிவாரணங்களையும் பட்டியலிட்டார்.
“3.5 அரசின் முழுத் தோல்வி” : சட்டமன்ற உறுப்பினர் மனோ.தங்கராஜ்
முதல் நாள் நாங்கள் மீனவர் கிராமங்களுக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது பத்மநாதபுரம் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மனோ. தங்கராஜ் அவர்களை கருங்கல் கிராமத்தில் இருந்த அவரது வீட்டில் சந்தித்து நிவாரணப் பணிகள் குறித்து விரிவாகப் பேசினோம். அவர் குறிப்பிட்ட முக்கிய விடயங்கள்.
“புயல் எச்சரிக்கை அறிவிப்பு என்பதிலும், உடனடியாகக் கடலில் தத்தளித்தவர்களைக் காப்பாற்றும் முயற்சியிலும் அரசு முழுத் தோல்வி அடைந்துள்ளது. மீட்பு முயற்சிகளில் ஒருங்கிணைப்பு இல்லை. போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் செய்வதிலும் தோல்விதான். ஒரு பேரிடர் ஏற்படும்போது அதை எதிர் கொள்வது, பாதிப்புகள் பெரிதாக இல்லாமல் தணிப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பது ஆகியவற்றில் தமிழ்நாட்டில் எந்தத் தயாரிப்பும் இல்லை.என் தொகுதியில் மட்டும் 1000 வீடுகள் புயலில் வீழ்ந்துள்ளன. மொத்தம் மாவட்டத்தில் 5000 வீடுகளுக்கு மேல் சேதம் அடைந்துள்ளன. நிவாரணப் பணிகள், இழப்பீடு நிர்ணயிப்பது என்பவற்றில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. நிர்வாகம் சில உறுதியான கொள்கை முடிவுகள் எடுக்க வேண்டும். அதுவும் இல்லை. எடுத்துக்காட்டாக ஒன்று சொல்கிறேன். ஒரு வீட்டிலுள்ள மரம் முறிந்து அடுத்தவர் வீட்டின் மீது விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது. இப்போது அந்த மரத்தை வெட்டி அகற்றுவது யார் பொறுப்பு? ஒரு மரத்தை வெட்டி அகற்றுவதற்கு இப்போது ஆயிரக் கணக்கில் கூலி கொடுக்க வேண்டி உள்ளது. அதேபோல விவசாய பாதிப்பிலும் எல்லாவற்றையும் எவ்வளவு ஏக்கர் பாதிப்பு என்கிற ரீதியில் மட்டும் இழப்பீட்டைக் கணக்கிட முடியாது. ஒரு சில பாதிப்புகளில் அப்போதுதாதான் நடப்பட்ட மரங்களாக இருக்கலாம். இன்னொரு இடத்தில் வளர்ந்து பயன் தரத் தொடங்கிய மரமாக இருக்கலாம். இரண்டுக்கும் எண்ணிக்கை அல்லது ஏக்கர் கணக்கின் அடிப்படையில் ஒரே மதிப்பீட்டைச் செய்ய முடியுமா? அதேபோலத்தான் வீடுகளின் சேதங்களையும் தகுந்தாற்போல மதிப்பிட வேண்டும். மாவட்ட நிர்வாகமும் திறமையாகச் செயல்படவில்லை. ஒரு கட்டத்தில் சென்ற 8 ம்தேதி நாங்கள் உள்ளிருப்புப் போராட்டம் ஒன்றைக் கூட நடத்த வேண்டியதாகி விட்டது. மிகப் பெரிய பேரழிவை இந்த மாவட்டம் சந்தித்துள்ளது தேசியப் பேரிடராக இதை அறிவிக்க வேண்டும் என்பது மக்கள் கோரிக்கை. ஆனால் பார்வையிட வந்த மத்திய பாதகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனோ அதெல்லாம் அறிவிக்க முடியாது என கறாராகச் சொல்லி விட்டுப் போகிறார். மொத்தத்தில் குமரி மாவட்ட விவசாயிகள், மீனவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய மாநில அரசுகள் செவிசாய்க்கவில்லை. அரசு தன் கடமையை நிறைவேற்றத் தவறும்போது மக்கள்: போராடுவது ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு நடைமுறை. போராட்டம் நடத்தும்போது அதில் வந்து குழப்பம் விளைவிப்பது என்பதையெல்லாம் ஏற்க முடியாது.”
- காணி பழங்குடியினருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள்
குமரி மாவட்டத்தில் மலைகளிலும் அடிவாரங்களிலும் காணி பழங்குடியினரின் குடியிருப்புகள் (settlements) 48 உள்ளன. இவற்றில் சுமார் 4,000 குடும்பங்கள் உள்ளன. பொன்மனைப்பட்டி பஞ்சாயத்தில் வில்லுசாரி, ப்ராவிளை, கீரப்பாறை, வெங்காலமேடு, காயல்கரை, கருவாவெட்டி, அம்புடும் சுனை முதலிய குடியிருப்புகள் உள்ளன; பேச்சிப்பாறை பஞ்சாயத்தில் வலியமலை, ஆலம்பாறை, படுபாறை, சிரங்குன்று, சோரப்புளி, ஆண்டிப்பொத்தை, தோணிகுழி, இஞ்சிலாமடக்கு, எட்டங்குன்று, வளையந்தூக்கி, கோட்டாமலை, மாறாமலை, சட்டாங்குப்பாறை, பச்சைமலை, நலம்பொத்தை, கணப்பாறை, தின்னமோடு, விளாமலை, மாங்காமலை, கொடுத்துறை, மணலிக்காடு, முடவன் பொத்தைமுதலிய குடியிருப்புகள் உள்ளன; தடிக்காரக்கோணம் பஞ்சாயத்தில் வெள்ளாம்பி எனும் குடியிருப்பும், சுருளோடு பஞ்சாயத்தில் கூவைக்காடும் உள்ளன. கீரிப்பாறை, பேச்சிப்பாறை, பட்டுகாணி, ஆறுகாணி, புலி இறங்கி, அகத்தியர் மலை, பெருஞ்சாணி ஆகிய குடியிருப்புகளும் உள்ளன.
மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள இவர்களில் சிலருக்கு அவர்களின் குடியிருப்புகளுக்கு அருகில் ரப்பர், கமுகு, புளி, பலா, தென்னை போன்ற மரங்கள் சொந்தமாக உண்டு, மரங்கள் என்றால் எஸ்டேட்கள் அல்ல. மிகச் சில அளவில் இருக்கும். இவற்றுக்கு இடையே ஊடு பயிராக நல்ல மிளகுச் சாகுபடியும் சிறிய அளவில் இருக்கும். அடிவாரக் கிராமமான வெள்ளாம்பிக்கு நாங்கள் சென்றபோது அங்கு நாங்கள் சந்தித்த சாஸ்தா என்பவரின் மகன் கிருஷ்ணன் தான் ஒரு ஏக்கர் நிலத்தில் செவ்வாழை பயிரிட்டிருந்ததாகவும் அது முழுவதும் இப்போது அழிந்து விட்டது எனவும் சொன்னார். குலை தள்ளிய வாழை மரங்கள் விழுந்து கிடக்கும் படத்தையும் காட்டினார். ஏதேனும் நிவாரணம் கிடைத்துள்ளதா எனக் கேட்டபோது ஒன்றும் இல்லை என அங்குள்ள மக்கள் கூறினர்.
அக்குடியிருப்பின் தலைவரும், முன்னாள் கவுன்சிலரும், ஆதிவாசிகள் நல உரிமைச் சங்கத்தின் முன்னோடியுமான ராமன் காணி தங்களின் முதல் பிரச்சினை புயலில் விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்துவதுதான் என்றார். பாதைகளின் குறுக்கில் எல்லாம் நீண்ட மரங்கள் விழுந்து கிடந்தன. வனத்துறை அனுமதி இல்லாமல் அவர்கள் வெட்டிப் பாதையைச் சீரமைக்க முடியாது, அனுமதி இல்லாமல் வெட்டினாலோ கொண்டு சென்றாலோ அவர்கள் மீது வழக்கு தொடரப்படும். வனத்துறையினரும் வந்து அவற்றை வெட்டி அப்புறப்படுத்துவதில் அக்கறை காட்டுவதில்லை. அதே நேரத்தில் நாங்கள் வந்த பாலமர் சாலையில் விழுந்திருந்த மரங்கள் எல்லாம் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு போக்கு வரத்து உடனடியாகச் சரி செய்யப்பட்டிருந்தது. இயற்கைப் பேரிடர் பாதிப்புகளும் கூட எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்பதற்கு இது இன்னும் ஒரு எடுத்துக்காட்டு. பதினைந்து நாட்களுக்குப் பிறகு நேற்றுத்தான் மின்சாரம் வந்தது என்றார் இராமன் காணி. இதுவரை அரசு அறிவித்த 5,000 ரூ மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்று லிட்டர் மண் எண்ணை ரேஷனும் கொடுக்கப்பட்டதாம், மற்றபடி சேவா பாரதி அமைப்பினர் வந்து ஒரு பாய், போர்வை, சர்க்கரை, பருப்பு முதலியவற்றைத் தந்து சென்றனராம்.
இந்தப் புயலை ஒட்டி அவர்கள் சந்தித்துள்ள கூடுதல் பாதிப்புகள் மட்டுமே இங்கே குறிப்பிடப்படுகிறது. மற்றபடி அவர்களது நிரந்தரமான பிரச்சினைகள் ஏராளம். தற்போது சூழலியல் பாதுகாப்பு என்கிற பெயரில் வனப்பகுதிகளை மூன்று கி.மீ அளவு விரிவாக்கத் திட்டம் ஒன்று உள்ளது, அது நடைமுறைப் படுத்தப்பட்டால் அடிவாரங்களில் வசிப்பவர்களின் நில உரிமைகள் பறிபோகும். நாங்கள் இருந்த கொஞ்ச நேரத்தில் அவர்கள் அந்தக் கவலையையும் வெளிப்படுத்தினர். ஓரளவு படித்துள்ளவர்களுக்கு வேலையும் இல்லை என்றனர். புயலை முன்னிட்டு கூலி வேலை செய்பவர்களுக்கு வேலை வாய்ப்பும் இல்லாமல் உள்ளது. பழங்குடி மக்கள் பிரச்சினையில் ஆழ்ந்த அக்கறை உள்ள கவிஞர் என்.டி.ராஜ்குமாரை நாங்கள் தொடர்பு கொண்டு பேசியபோது அம்மக்கள் பயிர்கள் அழிந்ததோடு வேலை வாய்ப்பும் இல்லாத நிலையில் உள்ளனர் எனவும், தங்களுக்குக் குடும்பம் ஒன்றிற்கு பால் கறக்கக்கூடிய ஒரு கறவை மாடு கொடுத்தால் உடனடியாகப் பயனுடையதாக இருக்கும் என்கிற கருத்தை அவர்கள் வெளிப்படுத்துவதாகவும் கூறினார்.
இழப்பீடு தொடர்பாக அவர்களது தற்போதைய கோரிக்கை என்ன எனக் கேட்டபோது எங்களுடன் வந்த விவசாயிகள் சங்கச் செயலாளர் ரெவி, “ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் 10,000 என இரண்டு மாதத்திற்குத் தர வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளதாகச் சொன்னார்..
- மாவட்ட ஆட்சியரைச் சந்தித்தபோது
மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ஆர்.சவான் அவர்களை நாங்கள் நீரோடி மீனவர் கிராமத்தில் சந்தித்தோம். உறவினர்களைக் காணாமல் தவிக்கும் மக்கள் அவரிடம் மனு கொடுத்துவிட்டுச் சென்றபின் நாங்கள் அவரிடம் சில நிமிடங்கள் பேசியபோது. “ஏன் உரிய காலத்தில் புயல் அறிவிப்பு கொடுக்கப்படவில்லை?” எனக் கேட்ட போது சரியான நேரத்தில் கொடுத்துள்ளோமே என்றார். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது என்று மட்டுமே எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. அதுவும் 29 ந்தேதிதான் கொடுக்கப்பட்டது எனவும் புயல் அடித்துக் கொண்டிருக்கும்போதுதான் புயல் பற்றிய அறிவிப்பையே தாங்கள் கேட்க முடிந்ததாகவும் மக்கள் சொல்கிறார்களே என்றபோது அந்த அளவிற்குத்தான் சொல்ல முடியும் என்றார் அவர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி துரிதமாக நடக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டுவதைச் சொன்னபோது, “அது இங்கே ஒரு பிரச்சினையே (issue) இல்லை. கேரளாவில்தான் அது ஒரு பிரச்சினையாக எழுப்பப்படுகிறது” என்று பதிலளித்தார். கேரளத்தில் உள்ள அளவிற்கு நிவாரணம், தேடுதல் முதலான பணிகள் இங்கு செய்யப்படவில்லை என்பதுதான் பொதுக் குற்றச்சாட்டாக இருக்கும்போது ஆட்சியர் அங்குதான் இந்தப் பிரச்சினை உள்ளது எனச் சொன்னது வியப்பை அளித்தது. கண்ணால் பார்த்த சாட்சியங்களின் அடிப்படையில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் மரணமடந்துள்ளது உறுதியாகியுள்ளது. இன்னும் முன்னூறுக்கும் மேற்பட்டோரின் கதி தெரியவில்லை. ஏழு வருடங்கள் வரை திரும்பி வராமல் இருந்தால்தான் அவர்களை இறந்தவர்களாகக் கருதி இழப்பீடு தர முடியும் என்கிற விதி தளர்த்தப்படுமா? எனக் கேட்டபோது உறுதியாக அதைத் தளர்த்தி இழப்பீடு தருவதுதான் அரசு முடிவாக உள்ளது என்றார்.
- இந்த இக்கட்டின் ஊடாகவும் அங்கு வெளிப்படும் அச்சத்துக்குரிய மதவாதம்
கன்னியாகுமரி மாவட்டம் மதவாத சக்திகளின் சோதனைச் சாலையாக உள்ள ஒன்று என்பது உலகறிந்த விடயம். தமிழகத்தின் மிகப்பெரிய சமீப கால மதக் கலவரம் அரங்கேறிய மண்டைக்காடு இங்குதான் உள்ளது. தமிழகத்திலேயே மிக அதிகமான அளவு சிறுபான்மையினர் வசிக்கும் மாவட்டமும் இதுதான். அதேபோல பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ் முதலான அமைப்புகள் வலுவாக உள்ளதும் இங்குதான். பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டு நிலையங்கள் ஆகியவற்றின் ஊடாகப் பெரும்பான்மை மதங்களில் ஒன்றாக உள்ள கிறிஸ்தவம் இங்கு கல்வித்துறையில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாகவும் உள்ளது.
மதம் மட்டுமல்லாமல் இந்தியத் துணைக்கண்டம் முழுமைக்குமான கேடாக விளங்கும் சாதியப் பிளவுகளும் எங்கும்போல இங்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. சாதிகளுக்குள் மதங்களும் செயல்பட்டுப் பிளவுகள் உருவாகின்றன. எடுத்துக்காட்டாக இங்கு முக்கிய சாதிகளில் ஒன்றாக உள்ள நாடார்களுள் கிறிஸ்தவ நாடார்கள், இந்து நாடார்கள் எனப் பிளவுகள் உண்டு. அதேபோல மதங்களுக்குள் சாதிப் பிரிவினைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. எடுத்துக்காட்டாக கிறிஸ்தவ மதத்திற்குள் நாடார்கள், மீனவர்கள் என்கிற வேறுபாடும் உண்டு. வழிபாட்டு நிலையிலேயே அந்தப் பிரிவுகள் உண்டு என்பதைக் கவிஞர் என்.டி.ராஜகுமார் நினைவூட்டினார். கடலோர மீனவர்கள் மத்தியில் சவேரியார் வழிபாடும், கரைகளில் வசிக்கும் நாடார்கள் மத்தியில் அந்தோணியார் வழிபாடும் முக்கியமாக உள்ளன என்றார் ராஜ்குமார். மீனவர்கள் முழுக்க முழுக்க கடல் சார்ந்து வாழ்பவர்கள், நாடார்கள் வணிகம், விவசாயம் ஆகியவற்றைச் சார்ந்து வாழ்கின்றனர்.
கிறிஸ்தவ மீனவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர்கள் சமூகப் பிரச்சினைகளிலும் கூட முழுக்க முழுக்க கிறிஸ்தவ நிறுவனங்களையும், பாதிரிமார்களையும் சார்ந்துள்ளனர் என்பதை முன்பே குறிப்பிட்டோம். இப்படி மத நிறுவனங்களையும், பாதிரிமார்களையும் சார்ந்திருப்பது அவர்களுக்கு பலமாக இருப்பது போலவே அவர்களது பலவீனமாகவும் அதுவே அமைந்து விடுகிறது. நெருக்கடி நேரங்களில் மிக எளிதாக அரசு பாதிரியார்களின் ஊடாக அந்தச் சமூகத்தையே கையாண்டுவிட முடிகிறது. கூடங்குளம் போராட்டத்திலும் இதை நாம் கண்டோம். அணு உலைகளுக்கு எதிரான மீனவர்களின் போராட்டத்தை ஒடுக்க அரசு கிறிஸ்தவ நிறுவனகளின் மீதான தாக்குதலைத் தொடுத்ததையும், இடிந்த கரை மாதா கோவிலிலிருந்து போராட்டக்காரர்களை அகற்ற இந்த அழுத்தம் பயன்படுத்தப்பட்டதையும் அறிவோம்.
6.1 இக்கட்டான நேரத்தில் மக்களைப் பிளவுபடுத்தும் மதவாத சக்திகள்
இப்படியான சூழலைப் பயன்படுத்தி இந்த நெருக்கடி நேரத்திலும் மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்துவதில் மதவாத சக்திகள் முன்னிற்பது மிகவும் கவலைக்குரிய ஒன்றாக உள்ளது.
புயல் அறிவிப்பில் அரசு முற்றிலும் தோல்வியுற்றதோடு மட்டுமின்றி, புயலுக்குப் பின் கடலில் தத்தளிக்கும் மீனவர்களைக் கரைக்குக் கொண்டுவந்து காப்பாற்றுவதிலும் படு தோல்வி அடைந்த நிலையில் மீனவர்கள் உடனடி மனிதாபிமான நிவாரணங்களுக்காகவும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கப்பற் படை மூலமாகக் கடலில் தத்தளிப்பவர்களைக் காப்பாற்ற வேண்டியும் வீதியில் இறங்கிப் போராட வேண்டியதாயிற்று. ஒப்பீட்டளவில் கேரள அரசு விரைவாக நிவாரணம் அளிப்பதிலும் தேடுதல் பணிகளிலும் முன்னணியில் இருப்பதாக அவர்கள் உணர்ந்தனர். அதோடு இறந்த மீனவர்களுக்கு 20 இலட்ச ரூபாய் இழப்பீடு எனக் கேரள அரசுதான் முதலில் அறிவித்தது. இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து சென்ற டிசம்பர் 8 ந் தேதி அன்று பாதிரியார்களும் மீனவர்களும் சின்னத்துறையில் இருந்து மார்த்தாண்டத்தை அடுத்த குழித்துறை நோக்கி நடைப் பயணம் தொடங்கினர். நித்திரவிளை, நடைகாவு, புதுக்கடை வழியாக குழித்துறை சென்று அங்கு ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அப்பகுதி வழியாக செல்லவேண்டிய குருவாயூர் எக்ஸ்பிரஸ் உட்பட அனைத்து ரயில்களும் தடுத்து நிறுத்தப்பட்டன. மீனவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடுத்த தமிழக முதல்வர் உறுதியளித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததை ஒட்டி 12 மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்ற மீனவர்களின் ரயில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது (மாலை மலர், டிச 08, 2017).
இது குறித்து பா.ஜ.க வின் தேசியச் செயலாளர் எச்.ராஜா புதுச்சேரியில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கன்னியாகுமரியில் குறிப்பிட்ட மதத் தலைவர்கள் மீனவர் போராட்டம் என்கிற பெயரில் ஊர்வலம் நடத்துகின்றனர். இது போராட்டமல்ல, மதப் போர். சாதி மோதல் வந்தால்தான் மதமாற்றம் செய்யமுடியும் என்பதாகவே செயல்படுகின்றனர்” எனக் கூறியது பத்திரிகைகளைல் வந்தது (புன்னகை.காம், 12.12.2017). அர்ஜுன் சம்பத், “நிவாரணம் வழங்குவதில் அரசு பாரபட்சம் காட்டுகிறது.மத்திய மானில அமைச்சர்கள் குமரி மீனவர்களின் பிரதிநிதியாக கிறிஸ்தவ ஆயர்களைக் கருதுகின்றனர். விவசாயிகள் மற்றும் பிற சமூகப் பிரதிநிதிகளை மக்களாக அரசு கருதவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 20 லட்சம் ரூ தர வேண்டும் என ஆயர் கேட்டதை அரசு தருகிறது. கரையோர மக்களுக்கு ரூ 500, மீனவர்களுக்கு 5000 ரூ வழங்குகிறார்கள். வீடு கால்நடை, விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் இல்லை. மண்டைக்காடு கலவரத்தின் போது 13 இந்துக்களைக் காணவில்லை. இதுவரை அவர்களுக்கு நிவாரணமோ, குடும்பத்துக்கு வேலை வாய்ப்போ வழங்கவில்லை”. எனப் பேசியுள்ளார் (தினமணி, டிச 14, 2017).
shreetv.tv என்னும் இணைய தளத்தில் ‘மீனவர் போராட்டம்- பின்னணியும் சதியும்’ என்கிற தலைப்பில் பாதிரிமார்கள் மீதும், கிறிஸ்தவ மதம் மீதும் ஓகி புயல் அழிவுகளை முன்வைத்துக் கடும் வெறுப்புப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. “இது மீனவர் போராட்டம் இல்லை.. இது முழுக்க முழுக்க மத அரசியலை முன் வைத்து நடத்தும் போராட்டம். மீனவர்களைப் பிணையாக வைத்துப் பிழைப்பு நடத்தும் இந்தப் பிணந் தின்னிக் கழுகுகள் நடத்தும் போராட்டம்” என்றெல்லாம் கடுமையாக சின்னத்துறை மற்றும் பூந்துறையைச் சேர்ந்த பாதிரியார்கள் இருவரது பெயர்களைக் குறிப்பிட்டு அவதூறு பேசப்படுகிறது. Vedic Science Research எனும் இணைய தளத்தில் டிசம்பர் 15 2017 அன்று. “குமரி மீனவர் போராட்டம் – உண்மை நிலை- தி ஹிந்து தமிழில் வெளிவந்துள்ள பேட்டி” எனும் தலைப்பில் இதேபோல கிறிஸ்தவ மிஷனரிகள் மீது குற்றம்சாட்டி ஒர் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
குமரி மாவட்டம் இன்று வரலாறு காணாத பேரிழப்பைச் சந்தித்துள்ளது. இதில் மீனவர்களைப் போலவே விவசாயிகளும் மிகப் பெரிய அளவு பொருளிழப்பைச் சந்தித்துள்ளனர். விவசாயிகளுக்கான பொருள் இழப்பைத் துல்லியமாகக் கணக்கிட்டு முழு இழப்பையும் ஈடு செய்யவேண்டும் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க இயலாது. மீனவர்களோ விவசாயிகளோ யார் இறந்திருந்தாலும் ஒரே அளவு இழப்பு தரப்பட வேண்டும் என்பதிலும் ஐயமில்லை.
மீனவர்களைப் பொருத்த மட்டில் அவர்களுடைய உயிரிழப்பு மிக அதிகம். அது மாத்திரமல்ல இன்று வரை அம்மக்களில் பலர் கடலுக்குச் சென்ற தங்களின் உறவினர்கள் உயிருடன் உள்ளார்களா இல்லையா என்பதே தெரியாமல் தவித்த தவிப்பும் அதன் பின்னுள்ள துயரமும் ஈடு செய்யவே முடியாத ஒன்று. இதில் அரசு மிகப்பெரிய பிழைகளைச் செய்துள்ளது அவர்களது கப்பற் படை, கடலோரப் பாதுகாப்புப் படை எல்லாம் கைவிட்ட நிலையில் எந்த நுண்மையான கருவிகளும் இல்லாமல் தாமே கடலில் இறங்கித் தம் உறவினர்களைக் காப்பாற்ற வேண்டிய நிலைக்கு அவர்கள் இன்று தள்ளப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் தம் பிரச்சினைகளைப் பேசுவதற்கும் பாதிரிமார்களையே நம்பி இருக்க வேண்டுமா என்கிற விவாதம் அவர்கள் தங்களுக்குள் நடத்திக் கொள்ள வேண்டிய ஒன்று. பாதிரிமார்களும் அம் மக்களில் ஒருவர்தான். அவர்கள் மீனவர் பிரச்சினைகளைப் பேசவே கூடாது என எப்படிச் சொல்ல முடியும். மதத் தலைவர்கள் அச் சமூகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தி அரசியல் பேசுவது இந்து, முஸ்லிம் என எல்லா மதங்களிலும் தற்போது நடைமுறையில் உள்ள ஒன்றுதான்.
இக்கட்டான இந்த நேரத்தில் இப்படியான ஒரு பிளவை ஏற்படுத்துவதும், மீனவர் Xவிவசாயிகள்; இந்துக்கள் X கிறிஸ்தவர்கள் என்றும் சாதி அடிப்படையிலும் பகையைத் தூண்டுவதும் மிகவும் கவலைக்குரியதும் கண்டிக்கத் தக்கதாகவும் உள்ளது.
நாங்கள் எங்கள் ஆய்வைத் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னர் (டிசம்பர் 13) அன்று தக்கலையில் தி.மு.க, காங்கிரஸ் முதலான எதிர்க் கட்சிகள் இணைந்து குமரி மாவட்டத்தைப் பேரிடர் பாதிப்பிற்குள்ளான ஒரு மாவட்டமாக அறிவிக்க வேண்டும் எனத் தக்கலையில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது, மத்திய அரசை விமர்சிக்கக் கூடாது எனக் கூறி அந்தப் போராட்டத்தினர் மீது தக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது, அதே நாளில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு சார்பாக புயல் நிவாரணம் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட தொல்.திருமாவளவன் அவர்கள், திரு.பாலபிரஜாபதி அடிகளாருடன் சாமித்தோப்புக்குச் சென்று கொண்டிருந்தபோது கருப்புக் கொடி ஆர்பாட்டம் என்கிற பெயரில் ஒரு மதவாத அமைப்பினர் வன்முறை விளைவித்தது முதலான செய்திகளும் கவலை அளிக்கின்றன. திருமாவளவன் மீதான தாக்குதல் முயற்சியை ஒட்டி 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிகிறோம். எல்லோரும் ஒன்றாக இணைந்து ஒரு இக்கட்டான சூழலைச் சமாளிக்க வேண்டிய நேரத்தில் இப்படியான வன்முறைகளும் பிளவு முயற்சிகளும் கவலை அளிக்க்கின்றன.
சட்டமன்ற உறுப்பினர் திரு. மனோ தங்கராஜ் அவர்களைச் சந்தித்தபோது அவரும் இப்படி மத அடிப்படையில் மேற்கொள்ளப்படும் பிளவு முயற்சிகளையும் அதனூடாக மீனவர்களையும் விவசாயிகளையும் எதிர் எதிராக நிறுத்தும் போக்கையும் கவலையோடு சுட்டிக்காட்டினார். தான் அப்போது இது தொடர்பான ஒரு கண்டன அறிக்கையை எழுதிக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.
- இதுவரை வழங்கப்பட்டுள்ள இழப்பீடுகள்
மீனவர்களுக்கு தொடக்கத்தில் 2,500 ரூ தரப்பட்டது.சென்ற 12 ம் தேதி முதலமைச்சர் பழனிச்சாமி இங்கு வந்தபோது மேலும் 2,500 ரூ இழப்பீடு அறிவித்தார். இதுதவிர அவர்கள் தற்போது வேலைக்குப் போகாமல் இருப்பதைக் கணக்கில் கொண்டு ஆண்டுதோறும் மீன்பிடித் தடைக் காலத்தில் அளிக்கப்படும் பஞ்சப்படியான 5,000 ரூபாயும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆக ஒவ்வொரு மீனவக் குடும்பத்திற்கும் பஞ்சப்படி போக 5000 ரூ இழப்பீட்டுத் தொகை அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் நேரடியாக வங்கியில் செலுத்தப்பட்டுள்ளதால் பலர் அதை எடுக்கச் சிரமப்படுவதையும் அறிந்தோம். எடுத்துக்காட்டாக வங்கிக் கணக்கு ஆண்கள் பெயரில் இருக்கும்போது, அந்த ஆண்கள் இல்லாத குடும்பங்கள் அவசரத்திற்கு அதைப் பயன்படுத்த முடியாமல் போய்விடுகிறது.
விவாசாயிகளைப் பொருத்த மட்டில் இப்படி குறிப்பிட்ட தொகை என அறிவிக்கப்படவில்லை. இப்போதைக்கு, கோழிகள், ஆடுகளின் இழப்புக்கும் வீடுகளில் ஏற்பட்டுள்ள இடிபாடுகள் தொடர்பாகக் கொஞ்சம் பேருக்கும் இழப்பீடுகள் தரப்பட்டுள்ளது என்றும் அதிகபட்சமாக இது 5,000 ரூபாயைத் தாண்டாது எனவும் மாவட்ட பாசனத்துறைத் தலைவர் வின்ஸ் ஆன்டோ குறிப்பிட்டார்.
இறந்தவர்களுக்கான இழப்பீடு முதலில் நான்கு இலட்ச ரூபாய் என அறிவிக்கப்பட்டுப் பின் அது கேரளாவை ஒட்டி 20 இலட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இப்போதைக்கு இறந்து உடல் கிடைத்தவர்களின் எண்ணிக்கை எட்டு மட்டுமே. அவர்களுக்கு அந்த இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது. தப்பி வந்தவர்கள் நேரடி சாட்சியத்தின் அடிப்படையில் சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். ஆனால் சாட்சியத்தின் அடிப்படையில் அவர்களுக்கும் இந்த இழப்பீட்டை அளிக்க விதிகளில் இடமில்லை. இன்னும் சுமார் 50 பேர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. நேரில் பார்த்த சாட்சிகளின் அடிப்படையிலும், மாயமாய்ப் போனவர்கள் என்கிற அடிப்படையிலும் இறப்பு உறுதியான பின்னும் அப்படி இறந்தவர்களின் குடும்பத்தினர் ஏழாண்டு காலம் காத்திருந்த பின்தான் அவர்களை இறந்தவர்களாக ஏற்றுக் கொண்டு அரசு உரிய இழப்பீட்டைத் தர வேண்டும் என்பது விதி. அந்த விதி தளர்த்தப்படும் என்பதாக இப்போது தமிழக அரசு கூறியுள்ளது
மக்களைப் பொருத்தமட்டில் வரும் டிசம்பர் 31 க்குள் உயிருடன் இருப்பார்களாயின் அவர்கள் வந்து விடுவர். எனவே அதற்குப் பின் இப்படி வராத அனைவரது குடும்பத்திற்கும் இந்த முழு இழப்பீடும் அளிக்கப்படும் என நம்புகின்றனர். எனினும் அரசு எப்படி இந்த விதிகளைத் தளர்த்தப்போகிறது, எப்போது அந்தப் பயன் அந்தக் குடும்பங்களுக்குப் போய்ச் சேரும் என்பது தெரியவில்லை.
இந்த இழப்பீடு மீனவர்களுக்கு மட்டுமின்றி ஓகிப் புயலில் இறந்த அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது இப்போது விவசாய மக்களின் கோரிக்கையாக எழுந்துள்ளது. .இப்போதைக்கு இறந்த மின்சார வாரிய ஊழியர்களுக்கு அந்தத் துறை விதிகளின்படி வழக்கமாக அளிக்கப்படும் இழப்பீடுகள் மட்டும் அளிக்கப்பட்டுள்ளன.
சென்ற டிசம்ப12 அன்று இப்பகுதியைப் பார்வையிட வந்த முதலமைச்சர் பழனிச்சாமி மேலே கூறியவை தவிர,
- i) இறந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை
- ii) பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு
iii) உலக வங்கி உதவியுடன் நவீன் கருவிகள் பெற்றி பேரிடர்களைச் சமாளித்தல்
- iv) கன்னியாகுமரி மற்றும் குளச்சலில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க மத்திய அரசை வற்புறுத்தல் ஆகிய வாக்குறுதிகளைத் தந்துள்ளார்.
- எமது பார்வைகளும் கோரிக்கைகளும்
8.1. ஓகிப் புயல் குறித்த எச்சரிக்கையை உரிய வகையில் உரிய காலத்தில் அளிப்பதிலும், புயலுக்குப் பிந்திய உயிர் காப்பு நடவடிக்கைகளிலும் மத்திய மாநில அரசுகள் படு தோல்வி அடைந்துள்ளதை அவை ஏற்க வேண்டும். அரசின் கடலோரக் காவற்படை, கப்பற்படை முதலியன இனி தங்களால் யாரையும் காப்பாற்ற முடியாது எனக் கைவிட்டபின் உயர் தொழில்நுட்பங்கள் எதுவும் கைவசம் இல்லாத மீனவர்கள் சென்று கடலில் குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடந்த குறைந்தபட்சம் 57 மீனவர்களைக் காப்பாற்றி, முதலுதவி அளித்துக் கரை சேர்த்துள்ளனர். அரசின் “காப்பாற்று” முயற்சிகளின் மீது மட்டுமின்றி, மீனவர்கள் பிரச்சினையில் அரசுக்குள்ள “அக்கறை” யின் மீதே இன்று பெரிய அளவில் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது.. இப்படியான சூழலில் மத்திய அமைச்சராக மட்டுமின்றி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள திரு.பொன் இராதாகிருஷ்ணன், முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்துக் குறைகள் கேட்காததை இக்குழு வருத்தத்தோடு சுட்டிக் காட்டுகிறது.
8.2. புயல் எச்சரிக்கையைச் சரியான தருணத்தில் அளிக்க இயலாமல் போனது, புயலுக்குப் பின் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை உரிய தருணத்தில் காப்பாற்ற இயலாமற் போனது, சக மீனவர்களால் காப்பாற்றப்படவர்களைக் கூட பயிற்சி பெற்ற படையினர் காப்பாற்ற முடியாமற் போனது ஆகியவற்றிற்கான காரணங்களைக் கண்டறிந்து, எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் ஏற்படாத வண்ணம் உரிய பரிந்துரைகளை அளிப்பதற்காக ஒரு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என இக்குழு கோருகிறது. தக்க வல்லுனர்கள் இக்குழுவில் இணைக்கப்படுதல் மட்டுமின்றி, இத்தறை சார்ந்த அயல் நாட்டு வல்லுனர்களின் கருத்துக்களைக் கோரிப் பெற்று அந்த ஆய்வை இவ்வாறு நியமிக்கப்படும் விசாரணை ஆணையம் மேற்கொள்ள வேண்டும்.
8.3. ஓகிப் புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட பேரழிவை ‘தேசியப் பேரிடர்’ என அறிவிக்க வேண்டும் என்பது பா.ஜ.க தவிர கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளாலும், அனைத்து தரப்பு மக்களாலும் முன்வைக்கப்பட்ட ஒரு கோரிக்கை. உரிய வல்லுனர்களைக் கொண்டு ஆய்வுகள் எதையும் செய்வதற்கு முன்னதாகவே எந்த ஆய்வுமின்றி மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு. நிர்மலா சீதாராமன் “தேசியப் பேரிடர் என இதை அறிவிக்க முடியாது” என அறிவித்ததை இக்குழு வன்மையாகக கண்டிக்கிறது.
8.4 ஓகிப் புயல் பேரழிவின் விளைவாக இன்று மிகக் குறைந்தபட்சமாகக் கணக்கிட்டபோதும் சுமார் 182 மீனவர்கள் இன்று இறந்தும் “காணாமற்போயும்” உள்ளனர். மீனவர்கள் அல்லாதவர்கள் குறைந்தபட்சம் 6 பேர்கள் இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை கூடுதலாக இருக்கலாம். மீனவக் குடும்பங்கள் பலவற்றில் இன்று கடலில் இறங்கிச் சம்பாதிப்பதற்கு ஆண்கள் இல்லை. விவசாயப் பகுதிகளில் இன்று அனைத்து வகைப் பயிர்களும் தோட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் கடும் வேலையின்மை அங்கும் ஏற்பட்டுள்ளது. எனினும் இந்தப் பகுதிகளில் நிவாரணப் பணிகள் போதுமானதாகவும், துரிதமாகவும் இல்லை என்பதை இக்குழு வருத்தத்துடன் சுட்டிக் காட்டுகிறது.
8.5. இறந்தவர்களுக்கான இழப்பீடுகளைப் பொருத்தமட்டில் தற்போது இறந்த ஒவ்வொருவர் குடும்பத்துக்கும் 20 இலட்ச ரூபாய்கள் என அரசு அறிவித்துள்ளது. இன்றைய மதிப்பீட்டில் இது மிகக் குறைந்த தொகை. இதை 25 இலட்சமாக உயர்த்த வேண்டும் என இக்குழு கோருகிறது. அறிவிக்கப்பட்ட தொகையைப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வங்கி அல்லது கருவூலத்தில் வைப்பாகச் செலுத்தினால் குடும்பத்தினரின் முக்கிய தேவைகளுக்கு அதைத் தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்க வேண்டும். உயிர் பிழைத்து வந்தவர்களிலும் சிலர் மிக மோசமான உடல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். சிலர் மீண்டும் வேலை எதுவும் செய்ய இயலாதவர்களாகி உள்ளனர். அபர்களுக்கும் அவர்களது பாதிப்பிற்குத் தக இழப்பீடு அளிக்க வேண்டும். பேரிடர் தாக்குதலால் மனம் கலங்கியுள்ளவர்களுக்கு உரிய மனநல சிக்கிச்சை அளிக்க உள்ளூர் அரசு மருத்துவ மனைகளில் வசதி செய்ய வேண்டும்.
8.6. இறந்த மற்றும் காணாமற்போன மீனவர்களைப் பொருத்த மட்டில் தமிழகம் முழுவதும் மொத்தத்தில் இதுவரை எட்டு உடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. தற்போது 37 உடல்கள் அடையாளம் தெரியாமல் கேரளத்தில் அழுகிக் கிடக்கின்றன. டி.என்.ஏ சோதனைகள் மூலமாக அவற்றின் அடையாளங்களையும் உடனடியாகக் கண்டுபிடிக்க வேண்டும். கடலில் இறந்த பலரையும் கூடச் சென்றவர்கள் வேறு வழியின்றி அங்கேயே விட்டுவிட்டு வந்துள்ளனர். உடல்கள் கிடைக்காதவர்களைப் பொருத்த மட்டில் தற்போதுள்ள விதிகளின்படி ஏழு வருடங்களுக்குப் பின்பே அவர்களின் இறப்பை உறுதி செய்து இழப்பீடு வழங்க முடியும். ஆனால் அடுத்த வேளை உணவுக்குச் சம்பாதிக்க ஆளில்லாத குடும்பங்களுக்கு இப்படித் தாமதமான இழப்பீட்டில் எந்தப் பயனும் இல்லை. இந்நிலையில் உடனடியாக இழப்பீட்டுத் தொகைகளை வழங்கும் வகையில் விதிகள் திருத்தப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருப்பதை இக் குழு வரவேற்கிறது. எனினும் எவ்வளவு காலத்திற்குள் இது சாத்தியம் என்பதை அரசு சொல்லவில்லை. சம்பாதிப்பவர்களை இழந்துள்ள இக் குடும்பங்கள் அடுத்த வேளை உணவிற்கும் வழியின்றி உள்ளதை உணர்ந்து அரசு இந்த இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
8.7. இறந்தோர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்ததை இக்குழு வரவேற்கிறது. இதுவும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என அரசை வற்புறுத்துகிறோம். ஏற்கனவே அரசு இவ்வாறு அறிவித்த போதுகளில் நிரந்தரப் பணிகள் இல்லாமல் சத்துணவு ஆயா முதலான பணிகள் அதுவும் நிரந்தரமில்லாத தற்காலிக ஒப்பந்தப் பணிகளே அவர்களுக்கு அளிக்கப்பட்டன. அவ்வாறின்றி இப்போது பணி அளிக்கப்படுபவர்களின் கல்வித் தகுதிக்குப் பொருத்தமான நிரந்தரமான அரசுப்பணிகள் அளிக்க வேண்டும்.
8.8. மீனவர் பகுதியில் தற்போது ஒரு கல்லூரி உள்ளது. கல்வி வளர்ச்சி மிக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர் பகுதியில் கடல் சார்ந்த தொழில்நுட்பங்களைப் பயுற்றுவிக்கத் தக்க ஒரு தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றை அரசு ஏற்படுத்த வேண்டும். இப்பகுதியில் படித்து முடித்துள்ளவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் சிறப்பு முன்னுரிமை அளித்து ஊக்குவித்தலும் அவசியம்.
8.9. இறந்தோர்களின் குடும்பங்கள் வாங்கியுள்ள கல்விக் கடன்கள், விவசாயக் கடன்கள், விவசாய நகைக் கடன்கள் மற்றும் இதர தொழிற்கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும்.
8.10. விவசாய நிலங்கள், சாகுபடிகள் பெரிய அளவில் அழிந்துள்ளன. இது குறித்த விவரங்கள் இந்த அறிக்கையில் (பகுதி 3) முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. விவசாய அழிவுகளைப் பொருத்தமட்டில் இழப்பீட்டுத் தொகையைக் கணக்கிடும்போது 2013 ல் NH 47 சாலை நால்வழிச் சாலையாக மாற்றப்படும்போது கையாண்ட அதே நடைமுறை இப்போதும் கையாளப்பட வேண்டும் எனவும், அப்போது கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இருந்த பயிர்கள் மரங்கள் முதலானவற்றிற்கு அளிக்கப்பட்ட அதே அளவு இழப்பீட்டுத் தொகை இப்போதும் அளிக்கப்பட வேண்டும் எனவும் அம்மக்கள் கோருகின்றனர். அது முற்றிலும் நியாயமானது என இக்குழு கருதுகிறது. அதோடு பயிர்களின் இழப்பை மதிப்பிடும்போது விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்தவற்றிற்கு உரிய அதிக விலை அளிக்கப்பட வேண்டும். இவற்றை எல்லாம் மதிப்பிடும் அதிகாரம் முழுமையாக அதிகாரிகளுக்கு மட்டும் இல்லாமல் விவசாயப் பிரதிநிதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் முதலானோர் அமைந்த குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் தமக்கு அளிக்கப்பட்ட இழப்பீடு குறைவாக உள்ளது என ஒருவர் கருதினால் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பும் இழப்புகள் ஏற்பட்டோருக்கு அளிக்கப்பட வேண்டும்.
8.11. விவசாய இழப்பீட்டுத் தொகைகள் முழுமையாக நிலச் சொந்தக்காரர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுவது என்றில்லாமல், குத்தகை விவசாயிகளுக்கு உரிய பங்களிக்கப்பட வேண்டும்.
8.12. காணி பழங்குடியினர் மத்தியிலும் இவ்வாறு பயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அவர்களுக்கும் இவ்வாறே மதிப்பிட்டு உடனடியாக இழப்பீடு அளிக்கப்பட வேண்டும்.
8.13. காணி பழங்குடியினர் மற்றும் புயல் அழிவினால் உடனடி வேலைவாய்ப்புகளை இழந்து நிற்கும் விவசாயத் தொழிலாளிகளுக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு மாதம் 5,000 ரூ இழப்பீடு வழங்கப்பட வேண்டும். பழங்குடியினர் வசிக்கும் வனப் பகுதிகளில் விழுந்து கிடந்து மக்களுக்குச் சிரமம் ஏற்பத்துதும் மரங்கள் உடனடியாக நீக்கப்படாமல் அலட்சியம் செய்யப்படுவதை இக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. வனத்துறை இது குறித்த உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குடும்பம் ஒன்றிற்கு ஒரு கறவை மாடு அளித்தால் உடனடிப் பயனுடையதாக இருக்கும் என்கிற கோரிக்கையை இன்று பழங்குடி மக்கள் வைக்கின்றனர். அரசு அது குறித்தும் சாதகமான முடிவை எடுக்க வேண்டும்.
8.14. மீனவர்களுக்கு உயிரிழப்புகள் மட்டுமின்றி அவர்களுக்கும் மூலதன இழப்புகள் ஏற்பட்டுள்ளன. அவர்களின் விசைப் படகுகள் மூழ்கியுள்ளன; தப்[பி வந்தவையும் சேதமடைந்துள்ளன, வலைகள், தூண்டில்கள் முதலான உபகரணங்களும் அழிந்துள்ளன. சில விசைப் படகுகளில் உரிமையாளர்கள் சென்றுள்ளனர். சிலவற்றில் செல்லவில்லை. விசைப் படகுகள் பதிவு செய்யப்பட்டவை. இவற்றின் விலைகள் மதிப்பிடப்பட்டு முழுமையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும். கட்டுமரங்கள் உட்பட அனைத்திற்கும் இழப்பீடுகள் முறையாக வழங்கப்பட வேண்டும். இழப்பீடுகளை மதிப்பீடு செய்வதில் மக்கள் பிரதிநிதிகளும் உள்ளடக்கப்பட வேண்டும். மேல்முறையீடுகளுக்கும் வழி இருக்க வேண்டும்.
8.15. மாவட்டம் முழுமையும் வீடுகள் சேதமடைந்துள்ளன. மரங்கள் விழுந்தும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இவையும் மதிப்பிடப்பட்டு இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.
8.16. இம்முறை மழை வெள்ளம் ஊருக்குள் புகுந்து சுசீந்திரம் முதலான இடங்களில் பெருஞ் சேதங்களை விளைவித்துள்ளன. நால்வழிச்சாலைகள் அமைக்கும்போது குறுக்கே செல்லும் கால்வாய்களில் உரிய வகையில் culvert கள் அமைத்து நீர் வடிய ஏற்பாடுகள் இன்மையே இதற்குக் காரணம். இவை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.
8.17. மீனவர்களை எச்சரிப்பதிலும், காப்பாற்றுவதிலும், இப்போது நிவாரணங்கள் வழங்குவதிலும் அரசுகள் மெத்தனம் காட்டுவது வன்மையாக கண்டிக்கத் தக்க ஒன்று. சுமார் 7,500 கி.மீ நீளமுள்ள கடற்கரை இங்குள்ளது. மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் மீன் வளம் முக்கிய பங்கு வகிக்கிறது. இருந்த போதிலும் இதுவரை ஆண்ட அரசுகள் எதுவும் மீன்வளத்துறைக்கான அமைச்சகம் ஒன்றை அமைக்க முயற்சி எடுக்காமை குறிப்பிடத் தக்கது. மீன்வளத்துறை அமைச்சகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என இக்குழு மத்திய அரசை வற்புறுத்துகிறது.
8.18. மீனவர்களைப் பழங்குடிகளாக அறிவிக்கவேண்டும் என்கிற பரிந்துரையை நிறைவேற்றாமல் காலம் கடத்துவது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. உடனடிஆக அப் பரிந்துரை நிறைவேற்றப்பட வேண்டும்.
8.19. புயல் உருவாக்கம், மற்றும் அது நகரும் திசை ஆகியவற்றைக் கூடியவரை முன் கூட்டியே கணிக்கும் தொழில்நுட்பங்களைப் பயனுக்குக் கொண்டுவருவதற்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். கணிக்கப்படும் எச்சரிக்கைகள் வழக்கமான அதிகாரவர்க்கச் சோம்பல்களின் ஊடாகத் தேங்காமல் உடனடியாக மக்களுக்குத் தெரிவிக்க ஆவன செய்ய வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் வானிலை மையக் கிளை ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
8.20. புயல் முதலான அழிவுகள் ஏற்படும்போது உடனடியாகச் சென்று கடலில் தத்தளிப்பவர்களைக் காப்பாற்றுவதற்கு ஏற்ப கன்னியாகுமரி மற்றும் குளச்சலில் ஹெலிபேட்கள் அமைக்கப்பட்டு எப்போதும் தயாரான நிலையில் ஹெலிகாப்டர்களும் நிறுத்தி வைக்கப்பட வேண்டும். தேசியப் பேரிடர் மேலாண்மை மீட்பு மையம், மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றின் கிளைகளும் இங்கு அமைக்கப்பட வேண்டும்.
8.21. ஆழ்கடலில் மீன்பிடிப்பவர்களுக்கு ஆபத்து ஏற்படும்போது அவர்கள் உடனடியாகக் கரையில் உள்ள இந்த மையங்களுடன் தொடர்பு கொண்டு ஆபத்தைத் தெரிவிக்குமாறு ‘சேடல்லைட்’ போன் வசதிகள் மீனவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட எண்களுடன் மட்டும் தொடர்பு கொள்ளுமாறு இருவழி இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டால் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு வழியில்லை.
8.22. இப்பகுதிக் கடல்கள் குறித்த சில அடிப்படையான அறிதல் கூட இல்லாதவர்களாக நம் கடலோரக் காவல்படை இருப்பது என்பது இன்று கடலில் தத்தளித்தவர்களைக் காப்பாற்ற இயலாமற் போனதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடலோரக் காவற் படைகளுக்கு ஆள் தேர்வு செய்யும்போது கடல்கள் குறித்த நடைமுறை அறிவு மிக்க மீனவ மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
8.23. ‘நீலப் புரட்சி’, ‘சாகர்மாலா திட்டம்’ ஆகியவற்றின் ஊடாக ஆறு பெரும் துறைமுகங்களை உருவாக்கி இணைப்பது, கடற்கரையோரப் பொருளாதார மண்டலங்களை (Coastal Economic Zones) உருவாக்கிக் கடல் வளத்தையும் கடற்கரைகளையும் பன்னாட்டுக் கொள்ளைகளுக்கு உட்படுத்துவது முதலான திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த அச்சத்திலிருந்து இம்மக்களை விடுவிப்[பது அரசின் பொறுப்பாக உள்ளது. இனயம் துறைமுகம் முதலான இத்தகைய முயற்சிகள் பெரிய அளவில் கரையோர மக்களை இடம்பெயர்க்கும் என்கிற அச்சமும் அவர்களிடம் உள்ளது. மீனவர் பாதுகாப்பில் அரசு காட்டும் அலட்சியம் என்பது இந்தத் திட்டங்களுக்கான எதிர்ப்புகளை முறியடிக்கும் உத்தியாக இருக்குமோ என்கிற கவலையும் அவர்களுக்கு உள்ளது. எதுவானாலும் அம் மக்களின் ஒப்புதல் இன்றி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என்கிற உத்தரவாதத்தை அரசு அளிப்பது இன்று அவசியமாகிறது.
8.24. வட மாநிலங்களில் இருந்து வந்து இங்குள்ள மீனவர்களுடன் கடலுக்குச் செல்லும் குழுவில் பங்குபெறும் மீனவர்கள் குறித்த விரிவான பதிவு ஒன்றை அரசு செய்ய வேண்டும். ஒவ்வொரு படகும் கடலில் இறங்கு முன் அதில் யார் யார் போகின்றார்கள் என்கிற பதிவு ஒன்றைச் செய்யும் முறை ஒன்றைக் கொண்டு வருதல் அவசியம். ஓகிப் புயலில் அழிவுக்குள்ளான படகுகளில் இவ்வாறு எத்தனை ‘இந்திக்காரர்கள்’ சென்றனர் எனக் கணக்கிடவும் இப்பிரச்சினையில் அக்கறை கொண்டு செயல்படும் பாதிரியார்கள் முன்கை எடுக்க வேண்டும். இம்முறை அப்படிச் சென்று கடலில் மரித்தவர்கள் எட்டு பேர்கள் எனத் தெரிகிறது. அவர்களின் முகவரியைக் கண்டறிந்து அவர்களின் குடும்பங்களுக்கும் முழு இழப்பீட்டுத் தொகை அளிக்க வேண்டும்.
8.25. இத்தனை துயருக்கும் மத்தியில் மதம் மற்றும் சாதி அடிப்படைகளில் மக்களைப் பிளவுறுத்தி எதிர் எதிராக நிறுத்தும் முயற்சிகளை மதவாத சக்திகள் மேற்கொண்டுள்ளன. இது மிகவும் கவலைக்குரிய ஒன்றாக உள்ளதை இக்குழு வருத்தத்துடன் சுட்டிக் காட்டுகிறது.. இத்தகைய வெறுப்புப் பிரச்சாரங்கள் இன்னொரு மதக் கலவரத்திற்கும் வித்திடலாம் என இக்குழு அஞ்சுகிறது. இதைக் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசை இக்குழு கேட்டுக் கொள்கிறது. சமூக ஒற்றுமையில் அக்கறையுள்ள அனைவரும் இத்தகைய பிளவு முயற்சிகளைக் கண்டிக்க வேண்டும் எனவும் இக்குழு வேண்டிக் கொள்கிறது.
“