2014 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கைகள் 12

[கட்சி அறிக்கைகளின் சுருக்கங்கள். முக்கிய பிரச்சினைகளில் அறிக்கைகள் என்ன சொல்கின்றன எனத் தொகுக்கப்பட்டுள்ளன. முகநூலில் வெளியிடப்பட்டு, சுட்டிக்காட்டப்பட்ட திருத்தங்கள் பரிசீலித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவில் இங்கே தரப்பட்டுள்ளன]

1. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

காங்கிரஸ், பா.ஜ.க ஆட்சிகளின் தாராளமய, கார்பொரேட் ஆதரவுக் கொள்கைகளால் சிறு தொழில், விவசாயம் முதலியன அழிந்து நாடு சீரழிந்துள்ளது. கல்வி, மருத்துவம் வணிகமயமாகி மக்களுக்கு எட்டாதவையாகி உள்ளன. ஊழல். காங்கிரஸ் அரசு தமிழகத்திற்குச் செய்த துரோகங்களைக் கண்டிக்காது துணை நின்ற தி.மு.கவும், சிறுபான்மையினரை வேட்டையாடிய பா.ஜ.கவும் ஒரு மாற்றுப்பாதை காட்ட முடியாது, இன்றைய தேவை ஒரு மாற்றுக் கட்சியின் ஆட்சியல்ல; ஒரு மாற்றுக் கொள்கை கொண்ட ஆட்சி. அந்த மாற்று இடதுசாரிகளிடமே உள்ளது.

விவசாயம் : நதி நீர் இணைப்பு; விவசாய வளர்ச்சி நடவடிக்கைகளில் அரசு முதலீடு அதிகரிப்பு; இடு பொருள் விலை குறைப்பு; அரசே நேரடி கொள்முதல்; பயிர் காப்பீட்டுத் திட்ட அமுலாக்கம்; சிறு விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன்; லாபமளில்லும் வகையில் விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்; சுவாமிநாதன் ஆணையப் பரிந்துரைகளை நிரைவேற்றுதல்;

தொழில் / பொருளாதாரம் : சிறு, குறு நடுத்தரத் தொழில்களுக்குப் பாதுகாப்பு; நவதாராளவாதக் கொள்கையை முழுமையாக மறு பரிசீலனை செய்தல்; பொதுச் சொத்துக்களையும் பொதுத்துறை நிறுவனங்களையும் பாதுகாத்தல்;பொதுத்துறை – தனியார் துறை கூட்டுக்கு முற்றுப்புள்ளி; கார்பொரேட் கடன்களைத் திருப்பிப் பெற நடவடிக்கிகள்;

வணிகம் : சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு எதிர்ப்பு;

அயலுறவு : ஏகாதிபத்தியங்களுக்குப் பணியாத சுதந்திரமான அயலுறவுக் கொள்கை; அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவைப் பேணுதல்; ப்ரிக்ஸ், ஷங்காய் கார்பொரேஷன் முதலான பிராந்திய அளவு கூட்டமைப்புகளில் ஈடுபாட்டுடன் செயல்படுதல்;

ஊழல் : லோக் ஆயுதா சட்டத்தை வலிமையாக்கல்; லோக் ஆயுக்தா தமிழகத்திலும் உருவாக்கப்படும்; கருப்புப் பண மீட்பு நடவடிக்கை; தகவல் உரிமைச் சட்டத்தை நீர்க்கச் செய்யும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு;

கல்வி, மருத்துவம் : கல்வி நிறுவனங்களில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்; ஒப்பந்தமுறை ஒழிக்கப்படும்; மொத்த வருமானத்தில் 5 சதம் மருத்துவத்துறைக்கு ஒதுக்குதல்; கிராமப்புற சேவைக்கு முக்கியத்துவம்; ஐந்தாண்டுகளில் கல்லாமையை ஒழித்தல்; மாணவர்களுக்கு அனைத்து ஜனநாயக உரிமைகளியும் வழங்குதல்; பகுத்தறிவு, அறிவியல் கண்ணோட்டம், மதச்சார்பின்மை ஆகிய மதிப்பீடுகளை மாணவர்களிடம் ஏற்படுத்தும் அளவிற்கு பாடத் திட்டத்தை மாற்றி அமைத்தல்;

சமூக நீதி : தனியார் துறை மற்றும் உயர் தொழில் நுட்ப நிறுவனங்களில் இட ஒதுக்கீடு; எல்லாப் பிரிவுகளிலும் பாதிக்கப்பட்டோருக்கு உள் ஒதுக்கீடுகள் வழங்கப்படும;.

சிறுபான்மையினர் : சச்சார் குழு மற்றும் ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையை முழுமையாக அமுலாக்கல்; மதம் மாறியவர்களுக்கும் ஒதுக்கீடு; மதவன்முறையை ஒடுக்குவதற்கான கடுமையான சட்டம் இயற்றல்; குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமல் நீண்ட நாட்களாகச் சிறையிலிருக்கும் இளைஞர்களை விடுதலை செய்தல்; குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்படட தீவிரவாதக் குர்றம் சாட்டப்பட்ட எல்லோருக்கும் இழப்பீடும் அரசு வேலையுமளித்தல்; அப்பாவி இளைஞர்களைப் பொய்க் குற்றம் சாட்டிக் கைத்துசெய்த அதிகாரிகளையும், போலி என்கவுன்டரில் கொலை செய்தவர்களையும் தண்டித்தல்; UAPA சட்டம் உட்பட அனித்து கருப்புச் சட்டங்களியும் நீக்குதல்; உருது மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு அம்மொழியில் கல்வி கற்க வாய்ப்பளித்தல்; பணித் தேர்வுகளில் மத வேறுபாடில்லாமல் செய்தல்; வக்ஃப் சொத்துக்கள் மீட்பு; சிறுபான்மையோருக்கான ஆணையத்திற்கு சட்ட உறுதி (Statutory Status) அளித்தல்;

பெண்கள் : நாடாளுமன்றம்/ சட்டமன்றம் 33 சத ஒதுக்கீடு;

நலத் திட்டங்கள் : பசுமை வீடுகட்டும் திட்டத்தின் மூலம் எல்லோருக்கும் வீடு; கோவில் நிலத்தில் குடியிருப்போருக்குப் பட்டா வழங்கப்படும்; வருமானவரி கட்டுவோர் தவிர பிற முதியவர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கல்; அனைத்துக் குடும்பங்களுக்கும் மாதம் 35 கிலோ அரிசியை கிலோ 2 ரூ விலையில் அளித்தல்;

ஈழம் : இலங்கை வாழ் தமிழர்களுக்கு முழு மனித, அரசியல் உரிமைகள் வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்வுரிமை மற்றும் வேலை உறுதி அளிக்கும் சட்டம் இயற்றல்;

தொழிலாளர்: தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, ஒப்பந்தத் தொழிலாளர் முறை ஒழிப்பு,

மீனவர் : மீனவர்கள் உரிமைகளைப் பாதுகாக்க துணிச்சலுடன் நடவடிக்கை எடுக்கப்படும்;

தேர்தல் சீர்திருத்தம்: பகுதி பட்டியல் முறையுடன் கூடிய விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம்;

தமிழ் / தமிழகம் : பயிற்று மொழி, வழக்காடு மொழி. வழிபாட்டு மொழி ஆக்கப்படும்:

சேது சமுத்திரத் திட்டம் : நிறைவேற்றப்பட வேண்டும்;

பிற; 1979ம் ஆண்டு மாநிலங்களுக்கிடையே புலம் பெயர் தொழிலாளிகள் சட்டத்தில் திருத்தம் செய்து புலம் பெயர் ஹொழிலாளிகளைப் பாதுகாத்தல்; காஷ்மீர், மணிப்பூர் மற்றும் இதர வடகிழக்கு மாநிலங்களில் AFPSA சட்டத்தை நீக்குதல்; காவல்துறை ஆணைய அறிக்கையை நிறைவேற்றல்; காவல்துறையை ஒரு ஒடுக்குமுறை நிறுவனம் என்கிற நிலையிலிருந்து ஒரு மக்கள் சேவை அமைப்பாக மாற்றுதல்; தேசிய நீதித்துறை ஆணையம் ஒன்றை அமைத்தல்;

கூட்டணி : இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம்;

2. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ அரசால் தொழிலாளிகள், விவசாயிகள், ஏழை எளியோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வரலாறு காணாத விலைவாசி ஏற்றம், ஊழல் நிறைந்த மோசமான இந்த ஆட்சியில் பெரு நிறுவனங்களே சலுகைகள் அனுபவித்துள்ளன; கனிவளங்கள் கொள்ளை போயுள்ளன. அயலுறவுக் கொள்கையில் முழுமையான அமெரிக்க ஆதரவு; வகுப்புக் கலவரம், முஸ்லிம்கள் ஈடுபடும் தீவிரவாதம் தவிர இந்துத்துவ தீவிரவாத நடவடிக்கைகளும் பெருகியுள்ளன. பழங்குடிகள் தலித்கள் தாக்கப்படுகின்றனர். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் கிறிஸ்தவர் மற்றும் இதர சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன. நவீன மதச்சார்பின்மைக்குப் பொருந்தாத பிளவுவாத சக்தியாக உள்ள பா.ஜ.க பொருளாதாரக் கொள்கையில் காங்கிரஸ் அரசின் கொள்கையையே கொண்டுள்ளது. எனவே காங்கிரசை நிராகரிப்பீர். பா.ஜ.கவைத் தோற்கடிப்பீர். மாற்றுக் கொள்கைகளை முன்வவைக்கும் மார்க்சிஸ்ட் மற்றும் இடதுசாரிக் கட்சிகளை ஆதரிப்பீர்.

விவசாயம் : விவசாய உற்பத்தி, ஆராய்ச்சி ஆகியவற்றுக்கான அரசு முதலீட்டை அதிகரிப்பது; விதை, உரம், மின்சாரம், டீசல் போன்ற இடுபொருட்களுக்கான மானியங்களை வலுப்படுத்துவது. குடும்பத்தினரின் உழைப்பு உள்ளிட்ட உற்பத்திச் செலவுக்கு மேல் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் மேல் வருவாய் வரும் வகையில் விளை பொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவது. பயிர் காப்பீட்டுத் திடம்; நீர்வளங்களைத் தனியார் மயமாக்கலைத் தடுத்தல்;

தொழில் / பொருளாதாரம் : பணக்காரர்கள் மற்றும் பெரும் நிறுவனங்களின் மீதான வரியை உயர்த்துவது; வரி ஏய்ப்பவர்கள், கறுப்புப் பணம், கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்கான முயற்சி ஆகியவற்றிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது; ஆடம்பரப் பொருட்களின் மீது அதிகமான வரிகளை விதிப்பது, நிதிமூலதனம் நாட்டிற்கு உள்ளே வருவதையும், வெளியே போவதையும் கட்டுப்படுத்தும் நடைமுறைகளை மீண்டும் கொண்டு வருவது. கருபுப் பணத்தை வெளிக் கொணர்தல்; பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதையும் பொதுத்துறையின் பங்குகளை விற்பதையும் முற்றிலுமாக நிறுத்துவது; விரிவான மாற்றுப் பொருளாதார மற்றும் நிதி ஆதாரங்களைப் பெருக்குதல் மற்றும் நிதி ஒழுங்கமைப்புத் திட்டங்கள்;

வணிகம் : உலக வர்த்தக அமைப்பின் தோஹா சுற்றுப் – பேச்சுவார்த்தையில் இந்தியா மற்றும் இதர வளரும் நாடுகளின் நலன்களை பாதுகாப்பது; உலக வர்த்தக அமைப்பின் சார்பில் ‘பாலி’யில் நடைபெற்ற கூட்டத்தின் முடிவுகள் நாடாளுமன்றத்தால் மறுபரிசீலனை செய்யப்படுதல்.

அயலுறவு : பன்முனை அதிகாரத்தை வளர்த்தெடுக்கின்ற, சுயேச்சையானதொரு அணிசேரா வெளியுறவுக் கொள்கை. பிரிக்ஸ் மற்றும் இப்ஸா அணிகளை வலுப்படுத்துவது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் முழு உறுப்பினராக இணைவது; அமெரிக்கா, நேட்டோ அகியவற்றால் திணிக்கப்படும் ஆட்சி மாற்றங்களையும், தலையீடுகளையும் எதிர்ப்பது. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையத் தொடர்வது; அணு ஆயுதப் பரவல் தடுப்பு;

ஊழல் : ஊழல்களை குறிப்பாக மேல்மட்ட ஊழல்களைத் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்குமான முயற்சிகளை மேற்கொள்ளவும், ஊழலை அம்பலப்படுத்துவோரை பாதுகாக்கவும், மத்திய புலனாய்வு அமைப்புகளைச் சுதந்திரமானதாக ஆக்க நடவடிக்கைகள்;

கல்வி, மருத்துவம் : கல்வி மற்றும் மருத்துவத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவிகிதமாக இருக்க வேண்டும்; பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அனுமதி வழங்கத் தவறும் தனியார் பள்ளிகள், மேல்தட்டு கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது; ஆசிரியர்கள், பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவது; இலவசமாகவும் கட்டாயமாகவும் துவக்க நிலைக் கல்வியை வழங்கும் வகையில் கல்வி பெறும் உரிமைக்கான சட்டம் அமலாக்கப்படுவது; அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மாணவர் சங்கத் தேர்தல்களை முறையாக நடத்துதல்; பொதுச் சுகாதார அமைப்பை வலுப்படுத்துதல்: நான்காண்டு பட்டப் படிப்பை ரத்து செய்தல்;

சமூக நீதி : தனியார் துறையில் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்கு ஒதுக்கீடு; உயர் தொழில் நுட்ப நிறுவனங்களில் இட ஒதுக்கீடு; தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் தொகைக்கு ஈடான வகையில் சிறப்பு அம்சத் திட்டங்களுக்கான மத்திய சட்டம் இயற்றுதல்; தீண்டாமைக் குற்றங்களுக்கு உறுதியான தண்டனை வழங்குதல்;

சிறுபான்மையினர் : ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையின் பரிந்துரைகளை அமல்படுத்துவது, உடனடி நடவடிக்கையாக முஸ்லிம் பிரிவினரில் பெரும்பான்மையாக உள்ள இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்கள் அனைவரையும் மாநில வாரியான ஒதுக்கீட்டு விவரங்களுடன், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான ஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்த்துக் கொள்வது. சச்சார் குழு பரிந்துரைகளை அமுல்படுத்தத் துணைத் திட்டம்; மேம்படுத்தப்பட்ட அதிகாரங்களுடன் சிறுபான்மையோர் ஆணையத்தைச் சட்டபூர்வமாக்குவது; பயங்கரவாதக் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்ட அப்பாவிகளுக்கு இழைப்பீடும், பொய் வழக்குப் போட்ட அதிகாரிகளுக்குத் தண்டனையும் வழங்குதல்; மதக் கலவரத் தடுப்புச் சட்டம் இயற்றல்;

பெண்கள் : நாடாளுமன்றம் / சட்டமன்றம் 33 சத ஒதுக்கீடு; வன்முறைகளை முடிவுக்குக் கொணர்தல்; திருத்தப்பட்ட வன்முறை தடுப்புச் சட்டத்தில் வர்மா ஆணையப் பரிந்துறையை உள்ளடக்குதல்;

நலத் திட்டங்கள் : வேலை வாய்ப்பை உறுதி செய்யும் சட்டம் இயற்றல்; ஐ.நா.சிறப்பு மாநாட்டின் முடிவுகளுக்கு இணங்க மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான மசோதா மற்றும் இதர சட்டங்கள் நிறைவேற்றுவது மற்றும் திருத்தியமைப்பது, மாற்றுத்திறன் குறித்த தேசிய கொள்கையை மறு பரிசீலனை செய்து திருத்தம் மேற்கொள்வது. முதியோர் ஓய்வூதியத்தை மாதம் ரூ 4000 க்குக் குறையாமல் உயர்த்துதல்;

ஈழம் : ஒன்றுபட்ட இலங்கையில் அதிகாரப் பகிர்வு; மனித உரிமை மீறலுக்கான சுயேச்சையான விசாரணை;

தொழிலாளர், : மாதம் ரூ.10,000 க்கு குறையாத வகையில் சட்டபூர்வமான குறைந்தபட்ச ஊதியத்தை உறுதிப்படுத்துவது, பல்வேறு மாநிலங்களுக்கும் இடம் பெயரும் தொழிலாளிகள் குறித்த சட்டம் உட்பட அனைத்து தொழிலாளர் நலச் சட்டங்களையும் கண்டிப்பாக அமல்படுத்துவதை உறுதி செய்வது; புதிய ஓய்வூதியத் திட்டம் ஒழிப்பு; ஒப்பந்த முறை ஒழிப்பு: ஒப்பந்தத் தொழிலாளருக்கு சம ஊதியம்;

மீனவர் : மீன்பிடி தொழிலாளர்களுக்கான சிறப்பு நல வாரியம், வெளிநாட்டு மீன்பிடிப் படகுகளுக்குத் தடை; கடன் தள்ளுபடி;

தமிழ் / தமிழகம்: ————————————————————

தேர்தல் சீர்திருத்தம்: பகுதி பட்டியல் முறையுடன் கூடிய விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம்; ¨ அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு பொருள் வடிவில் அரசின் நிதியுதவி; பெரு நிறுவனங்கள் கட்சிகளுக்கு நிதி உதவி செய்தலைத் தடை செய்தல்;

பிற: இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தைத் திருத்தி அமைத்தல்; உளவுத் துறைக் கட்டமைப்பச் சீரமைத்தல்; வெளி நாட்டு இறக்குமதி இல்லாத அணு உலைகளுக்கு ஆதரவு; வட கிழக்கு மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்து பிற மாநிலங்களில் வாழ்வோரின் பாதுகாப்பிற்காக இன வெறி எதிர்ப்புச் சட்டம் இயற்றுவது; கவுரக் கொலைகளுக்கு எதிரான கடும் சட்டம் இயற்றல்; UAPA சட்டத்தில் கொடுமையான பிரிவுகளை நீக்குதல்; AFPSA சட்டத்தை முழுமையாக நீக்கி அதனிடத்தில் மாற்றுச் சட்டம் ஒன்றைக் கொணர்தல்;

கூட்டணி : இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம்;

3. திராவிட முன்னேற்றக் கழகம்

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மற்றும் முற்போக்கு ஜனநாயகக் கூட்டணி அரசு இரண்டிலும் பங்குபெற்றபோது பல மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றக் காரணமாக் இருந்துள்ளோம். உலக வர்த்தக ஒப்பந்தந்தத்தின் தோஹா கூட்டத்தில் இந்திய வேளாண்மையை பாதுகாத்தல், பொதுத்துறை நிறுவனங்களை ‘நவத்னா’ எனத் தரம் பிரித்துப் பாதுகாத்தல் ஆகியவை எங்கள் சாதனைகள். தமிழ் செம்மொழிப் பிரகடனம், சேது சமுத்திரத் திட்டம் முதலியவற்றையும் சாதித்தோம். “மத நல்லிணக்க வரலாறு படைப்போம்; மதச் சார்பற்ற ஆட்சி அமைப்போம்” நேமையான ஆட்சியையும் வெளிப்படையான நிர்வாகத்தையும் அளிக்க உறுதி கூறுகிறோம்.

விவசாயம் : நதி நீர் இணைப்பு, நதிகள் தேசிய மயம் முதலியவை முன்னெடுக்கப்படும்; அரசு முதலீடு அதிகரிப்பு; இடு பொருள் விலை குறைப்பு; அரசே நேரடி கொள்முதல்; விளை பொருட்களுக்குக் குறைந்தபட்ச அதரவு விலை; மாநில அரசுகள் இலவச மின்சாரம் வழங்க உள்ள தடைகளை நீக்குதல்; வளர்ந்த நாடுகள் WTO விதிகளை மீறித் தம் நாட்டு விவசாயிகளைப் பாதுகாப்பதைத் தடுத்து நிறுத்துதல்; இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்துதல்; விவசாயிகளுக்கு நெல் அறுவடை எந்திரங்களை வழங்குதல்; விவசாயக் கடன் ரத்து, நெல், கொப்பரைத் தேங்காய், கரும்பு ஆகியவற்றிற்குக் குறந்தபட்ச ஆதரவு விலையை அவ்வப்போது உயர்த்துதல்;

தொழில் : கைத்தறி நெசவுத் தொழிலைப் பாதுகாத்தல்; சிறு தொழில் முன்னுரிமைப் பட்டியல் உருவாக்குதல்; தமிழகத்திலுள்ள பொதுத் துறை நிறுவனங்களை மூடவோ தனியார் மயமோ ஆகாமல் பாதுகாத்தல்; விலைவாசிக் கட்டுப்பாடு: வறுமை ஒழிப்பு, தனி நபர் வருமான வரி உச்சவரம்பு, மூத்த குடிமக்களுக்கு வருமான வரி விதிவிலக்கு; உப்பளத் தொழிலாளர்கள் வேலைப் பாதுகாப்பு;

வணிகம் : சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு எதிர்ப்பு;

அயலுறவு : ஏகாதிபத்தியங்களுக்குப் பணியாத சுதந்திரமான அயலுறவுக் கொள்கை; அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவைப் பேணுதல்;

ஊழல் : ————————————————-

கல்வி, மருத்துவம் : மொத்த உள் உற்பத்தியில் 3 சதம் மக்கள் நல் வாழ்வுத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படுதல்; நல் வாழ்வுக்கான ‘வருமுன் காப்போம்’ திட்டத்தை தேசிய அளவில் விரிவு படுத்தல்;உள் நாட்டு மருத்துவத்தில் உயர் ஆராய்ச்சி; கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொணர்தல், கல்விக்கான நிநிதி ஒதுக்கீட்டை மொத்த உள் உற்பத்தியில் 6 சதம் ஆக்குதல்;

சமூக நீதி : வேலை வாய்ப்பில் தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு அளித்தல்; சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கீடு செய்தல்; மத்திய அரசுப் பணிகளில் மண்டல் பரிந்துரைகளைப் பின்னடைவுடன் நிறைவேற்றல்; எஸ்,சி / எஸ்.டி மாணவர்களுக்கு மருத்துவ. பொறியியல் படிப்புகளை முற்றிலும் இலவசமாக்கல்; அருந்ததியர் முதலான பிரிவினருக்கு தேசிய அளவில் உள் ஒதுக்கீடு அளித்தல்; அடுத்த 5 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்டோர் அனைவருக்கும் வீட்டு வசதி அளித்தல்; தேசிய அளவில் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு;

சிறுபான்மையினர் : சச்சார் குழு பரிந்துரைப்படி சிறுபான்மையோர் நலனுக்கான சிறப்பு உட்கூறு திட்டம் உருவாக்குதல்; தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு முதலான உரிமைகளை அளித்தல்; ரங்கநாத் மிஸ்ரா ஆணைய அறிக்கையை ஏற்று முஸ்லிம்களிலும் இதுபோன்ற ஒதுக்கீட்டை அளித்தல்; சிறுபான்மையினருக்கான 15 அம்சத் திட்ட ஒதுக்கீட்டிற்கான நிதியை 19 சதமாக உயர்த்துதல்; சட்ட விரோத நடவடிக்கைச் சட்டத்தில் (UAPA) 2012ம் ஆண்டு கொண்டுவந்த திருத்தங்களை நீக்குதல்; பொது சிவில் சட்டம் இயற்றும் முயற்சியை எதிர்த்தல்;

பெண்கள் : நாடாளுமன்றம் / சட்டமன்றம் 33 சத ஒதுக்கீடு; 10 லட்சம் மகளிருக்கு மக்கள் நலப் பணியாளர் வேலை;

நலத் திட்டங்கள் : மாற்றுத் திறனாளிகளுக்கான 3 சத இட ஒதுக்கீட்டை முறியாகக் கடை பிடித்தல்; அரவானிகளை மூன்றாம் பாலினமாக ஏற்றல்; அரவானிகளுக்குத் தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைத் தேசிய அளவில் கிடைக்கச் செய்தல்; முதியோர் நலனுக்கான புதிய கொள்கை உருவாக்கல்; 10 இலட்சம் பேருக்கு சாலைப் பணியாளர் வேலை; மாற்றுத் திறனாளிகளுக்குத் தனி ரயில் பெட்டிகள்; வீடற்றோருக்குக் காப்பிடங்கள் அமைத்தல்;

ஈழம் : கச்சத்தீவை மீட்பது; இலங்கை அரசு மீது நம்பகமான மனித உரிமை விசாரணைக்கு சர்வதேச அளவில் அழுத்தம் அளித்தல்; ஈழத் தமிழர்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்விற்காகத் தமிழர்கள் மத்தியில்பொது வாக்கெடுப்பு, அதுவரை 13வது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துதல், மீள்குடியேற்றம் ஆகியவற்றை நோக்கி செயல்படுதல்;.

தொழிலாளர்: மத்திய அரசின் தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் அவர்களுக்குப் பயன்படும் வகையில் மாற்றியமைக்கப்படுதல்; அமைப்பு சாராத் தொழிலாளர் பாதுகாப்புத் திட்டங்கள்; அனைத்திந்திய தொழிற்சங்கங்களின் 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றல்; தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்;

மீனவர் : மீனவர்களைப் பழங்குடிகள் பட்டியலில் இணத்தல்; தேசிய மீனவர் நல ஆணையம் ஒன்றை உருவாக்குதல்; மீனவர்களுக்கான தேசிய சேமிப்புத் திட்டம் என்பது மீனவர்: மாநில அரசு: மத்திய அரசு = 1:1:1 என முன்பிருந்ததைப் போன்று சம விகிதாசாரம் கொண்டதாக மாற்றி அமைக்கப்பட வேண்டும்; இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைத் தீர்க்க இருநாட்டு அரசுகளும் மீனவர்களுடன் பேசித் தீர்வு காண வேண்டும்:: இரு நாட்டுக் கடற்கரைப் பகுதிகளிலும் சிக்கல் தீர்க்கும் மையங்கள் ஏற்படுத்தப் படுதல் வேண்டும்; கடற்கரை அருகில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைப்பது உட்பட பல மீனவர் நலத் திட்டங்களை முன்வைத்துச் செயல்படுத்தப் படும்; மீனவர்களைப் பாதுகாக்க “கடற்கரை வாழ் மக்கள் இயற்கைப் பாதுகாப்புச் சட்டம்” உருவாக்கப்படும்.

தேர்தல் சீர்திருத்தம்: ______________________________________________

தமிழ் / தமிழகம்: மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சி மொழி, உயர்நீதி மன்றத்தில் வழக்காடு மொழி ஆக்கப்படும்: திருநெல்வேலி மாவட்டம் குலசேகரப் பட்டினத்திலும் குளச்சலிலும் துறைமுகங்கள் அமைத்தல்; மதுரவாயில் பறக்கும் சாலைத் திட்டத்தை நடைமுறைப் படுத்துதல்; இரண்டாவது விண்கல ஏவுதளம் மற்றும் மகேந்திரகிரியில் வான்வெளி திரவ உந்து விசைத் தொழில்நுட்பம் அமைத்தல்; பொன்மலையில் புதிய சரக்கு ரயில் பெட்டித் தொழிற்சாலை; ராயபுரத்தில் புதிய ரயில் முனையம்; அனைத்து மீட்டர் காஜையும் அகல ரயில் பாதை ஆக்குதல்; திருப்பெரும்புதூரில் விமானத் தொழில்நுட்பப பல்கலைக் கழகம்; கொள்ளிடம், பாம்பன் ஆகிய இடங்களில் புதிய பாலங்களை அமைத்தல்; காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்கு முறைக் குழு ஆகியவற்றை ஒரு குறிப்பீட்ட கால வரையறைக்குள் அமைத்தல்; பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் நிறைவேற்றல்;

சேது சமுத்திரத் திட்டம்: நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளல்;

பிற: வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்களுக்கு உரிய சட்ட உதவிகளை செய்ய தூதரகங்களில் தனிப் பிரிவை அமைத்தல்; தூக்குத் தண்டனை ஒழிப்பு; மீதேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தைக் கைவிட நடவடிக்கைகள்; பெரு நகர ரயில் திட்டங்கள்; புதுச்சேரிக்கு முழு மாநில நிலை அளித்தல்;

கூட்டணி : தி.மு.க, ம.ம.க, வி.சி.க, புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்;

ஆதரவு அமைப்புகள் : திராவிடர் கழகம், திராவிட இயக்க தமிழர் பேரவை, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், உழவர் உழைப்பாளர் கட்சி, தமிழ் மாநில தேசிய லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக் கட்சி, இந்திய சமூகநீதி இயக்கம், எம்ம்.ஜி.ஆர்.கழகம், சிறுபான்மை சமூக புரட்சி இயக்கம், வல்லரசு பார்வர்டு பிளாக், தமிழக விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி

4. அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

மூன்றாம் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் புரட்சித் தலைவியின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இதனால் தமிழகம் பல முன்னேற்றங்களைக் கண்டு வருகிறது. காங்கிரஸ் அரசு மற்றும் தி.மு.க தமிழகத்திற்குப் பல்வேறு துரோகங்களை இழைத்து வருகின்றன. காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை அரசிதழில் வெளிடாமல் இருந்தது, மாநில அதிகாரங்களைப் பறிக்கும் வகுப்புவாத வன்முறைத் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற முயல்வது. 2 ஜி ஊழல். மத்தியத் தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு மின்சாரம் தர மறுப்பது முதலியன சில எடுத்துக்காட்டுகள். காங்கிரஸ். தி.மு.க இவற்றின் தவறான கொள்கைகளால் இன்று விலைவாசி உயர்ந்துள்ளது. இலங்கை இராணுவத்திற்குப் பயிற்சி அளிப்பது, இலங்கை அரசு தமிழர்களை அழிக்க உதவி செய்தது, தமிழகத்தை மின் பற்றாக்குறை மாநிலமாக்கியது எல்லாவற்றிற்கும் இவர்களே காரணம். தமிழகத்திற்குரிய பங்கைப் பெற மத்தியில் அ.தி.மு.க பங்கு பெறும் ஆட்சி அமைக்கப்பட வேண்டும். ஒரு செயல்படும் மத்திய அரசு உருவாக்கப்பட வேண்டும்,

விவசாயம் : நதி நீர் இணைப்பு, நதிகள் தேசிய மயம் முதலியவை முன்னெடுக்கப்படும்; பயிர்க் கடன்களளை உரிய காலத்தில் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியை ரத்து செய்தல்; தமிழக அரசின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தை தேசிய அளவில் விரிவாக்கல்;

தொழில் / பொருளாதாரம் : தற்போதுள்ள உணவுப் பாதுகாப்புச் சட்டம் எல்லோருக்கும் பயனளிக்கும் வகையில் இல்லாததால் அனைவருக்கும் பொது விநியோகத் திட்டம் கொணரல்; பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயப்படுதல், பங்குகளை தனியாருக்கு விற்றல் நிறுத்தப்பட நடவடிக்கை; பெட்ரோல் டீசல், எரிவாயு ஆகியவற்றின் விலை ஆண்டு முழுவதும் ஒரே சீராக இருக்க உறுதி செய்தல்; விலை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணை உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து திரும்பப் பெறல்; வெளி நாட்டு வங்கிகளில் தேங்கிக் கிடக்கும் கருப்புப் பணத்தை மீட்டெடுப்பது; தொழில் வளர்ச்சிக்கான தமிழ்நாடு அரசின் தொலைநோக்குத் திட்டம் 2023 ஐ தேசிய அளவில் விரிவு படுத்தல்; தனி நபர் வருமான வரி விலக்கு வரம்பை ரூ 5 லட்சமாக உயர்த்துதல்; மத்திய அரசு, மாநிலங்களுக்கு தன் விருப்புரிமையில் அளிக்கும் மாநியத்தின் அளவைக் குறைத்து நிதிக் குழுவின் மூலம் வழங்கப்படும் மாநிய அளவை அதிகரித்தல்; அந்நிய நேரடி முதலீடு (FDI) குறுகிய காலமாக இல்லாமல் நீண்ட கால முதலீடாக இருக்க வழிவகை செய்தல்; குறு, சிறு நடுத்தரத் தொழில்களுக்கான தமிழக அரசு அளிக்கும் பாதுகாப்புகளை தேசிய அளவில் விரிவாக்கல்;

வணிகம் : தேசிய அளவில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு எதிர்ப்பு; இறக்குமதியைக் குறைத்து எற்றுமதியை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கைகள்; ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்க வழி செய்தல், ஊக வணிகத்தை முடிவுக்குக் கொணர்தல்;

அயலுறவு : மாநில நலன்களை உள்ளடக்கிய வெளியுறவுக் கொளகை; ஐ.நா.அவை பாதுகாப்புக் குழுவில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் பெறுதல்; எல்லைகளில் சீன, பாகிஸ்தான் இலங்கைப் படைகளின் அச்சுறுத்தல்கள் உள்ளன; இந்தியப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அண்டை நாடுகளுடன் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்தல்;

ஊழல் : ஊழலற்ற மத்திய அரசை உருவாக்குதல்;

கல்வி, மருத்துவம் : ———————————————————————————————–

சமூக நீதி : இட ஒதுக்கீட்டைத் தொடர்ந்து நிலை நாட்டப் பாடுபடுதல்;

சிறுபான்மையினர் : மதச் சார்பின்மையை நிலை நாட்டவும் மேம்படுத்தவும் பாடுபடல்; மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கீடு; தமிழக அரசு வழங்கும் ரூ 3 கோடி வக்ஃப் நிறுவன மானியம், ஜெருசலேம் செல்ல மானியம் முதலியன் தேசிய அளவில் விரிவுபடுத்தப்படல்;

பெண்கள் : தாலிக்குத் தங்கம் வழங்கல், மகப்பேறு உதவித் தொகை, பெண் குழந்தைகளின் பெயரில் 50,000ரூ வைப்பீடு செய்தல்; மகளிர் காவல் நிலையங்கள், பாலியல் வன்முறைக்கு எதிரான 13 அம்சத் திட்டம் முதலான தமிழக அளவில் செயல்படுத்தப்படும் திட்டங்களை தேசிய அளவில் விரிவு படுத்துதல்; 33 சத மகளிர் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்ற நடவடிக்கைகள்;

நலத் திட்டங்கள் : மத்திய அரசால் வழங்கப்படும் முதியோர் ஓய்வூதியத்தை அதிகரித்தல்; மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வயது வரம்பின்றி அளித்தல்; மாற்றுத் திறனாளிகளுக்கான 3 சத இட ஒதுக்கீட்டை முறையாகக் கடை பிடித்தல்; வருமான வரிச் சலுகையை இரட்டிப்பாக்குதல்; மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்புப் படி ரூ 1500 தமிழகத்தில் வழங்கப்படுகிறது. இதைத் தேசிய அளவில் விரிவாக்கல்: இயற்கை வளங்கள் எல்லோருக்கும் சமமாகக் கிடைக்கும் வகையில் புதிய கொள்கை உருவாக்குதல்; அடுத்த ஐந்தாண்டுகளில் 10 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்;

ஈழம் : இனப் படுகொலை செய்தவர்களுக்குத் தண்டனை வழங்கவும், தனி ஈழம் பெற தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தவும் ஐ.நா.சபையை வற்புறுத்த உறுதி; கச்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நிறுத்த ஒரே வழி. அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல்;

தொழிலாளர்:; அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு அனைத்து மாநில்ங்களிலும் வாரியங்கள் அமைத்தல்; பாதுகாப்புத் திட்டங்கள்; ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை மத்திய அரசு ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்துவது ,அதைத் தமிழக அரசு ஊழியர்களுக்கு விரிவு படுத்துதல்;

மீனவர் : மீனவர்கள் இலங்கைப் படையினரால் தாக்கப்படுவதை நிறுத்த இலங்கை அரசை வற்புறுத்தல்; இரு நாட்டு மீனவர்களிடையே பேச்சு வார்த்தை; மீன்பிடித் துறைமுகங்கள நவீனமயமாக்கல்; ஆழ்கடல் மீன்பிடிப்பை மத்திய அரசு மானியத்துடன் ஊக்குவித்தல்; தேசிய மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தை சீரமைத்தல்;

தேர்தல் சீர்திருத்தம்: ______________________________________________

தமிழ் / தமிழகம்: அரசியல் சட்டத்தின் எட்டாவது பட்டியலில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்கல்; சென்னை உயர் நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குதல்; தமிழகத்திற்கு மாதம் 65,240 கி.லி மண்ணெண்ணை வழங்க மத்திய அரசை வற்புறுத்தல், பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு மின்சாரம் கொண்டு வருவதற்கு ஏற்ப மின் வழித் தடங்களை வலுவாக்குதல்; தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்ததிற்கு DAS அனுமதி பெறல்; காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளல்;

சேது சமுத்திரத் திட்டம்:________________________________________

பிற: _______________________________

கூட்டணி : அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, இந்திய குடியரசு கட்சி, கொங்குநாடு இளைஞர் பேரவை,

ஆதரவு அமைப்புகள்: புரட்சி பாரதம்,மூவேந்தர் முன்னணி கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், இந்திய தேசிய லீக், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழ் மாநில முஸ்லீம் லீக், தமிழ்நாடு தவ்ஹீத் ஐமாஅத்(இவ் அமைப்பு பின்னர் தன் ஆதரவை விலக்கிக் கொண்டது).

5. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

காவிரி, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு, ஈழப் பிரச்சினை ஆகியவற்றில் தமிகத்திற்குத் இந்திய அரசு துரோகம் இழைத்துள்ளது. 2 ஜி, ஆதர்ஷ் முதலான பல்வேறு ஊழல்கள், தவறான பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. உலக அரங்கில் ஒருகாலத்தில் அணிசேரா நாடுகளுக்குத் தலைமை தாங்கும் நிலையிலிருந்த நிலை மாறி இன்று அமெரிக்காவின் ஏவலரசாக மாறியுள்ளது. இநிலைக்குக் காரணமான காங்கிரஸ் கூட்டணி அரசை மாற்றி பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை மோடியியின் தலைமையில் உருவாக்க இக்கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பீர்.

விவசாயம் : நதி நீர் இணைப்பு, நதிகள் தேசிய மயம் முதலியவற்றை நோக்கிச் செயல்படுதல்; காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்கு முறைக் குழு ஆகியவற்றை உருவாக்குதல்; முல்லைப் பெரியாறு அணையை உடைத்துக்கட்டுவது தொடர்பாகக் கேரள அரசின் சட்டம் இயற்றும் முயற்சி வெற்றி பெற்றால் இந்தியா சிதறுறும்; அமராவதி, பாலாறு, பவானி, பெண்ணையாறு, நெய்யாறு, முதலான நதிகளில் தமிழகத்திற்கு உரிய பங்குபெறும் வகையில் இதற்குத் தடையாக அண்டை மாநிலங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடித்தல்; பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தை நிறைவேற்றல்; வேளாண்மைத் துறையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல உரிய திட்டங்களை நிறைவேற்றுவது; வேளாண்மைத் துறைக்குத் தனி நிதி நிலை அறிக்கை; மரபு அணு மாற்றுப் பயிர்களுக்குத் தடை; தமிழக விவசாயத்தி அழிக்கும் மீதேன் எரிவாயுத் திட்டத்தை நிறுத்துதல்; தேசியத் தண்ணீர்க் கொள்கையை உருவாக்குதல்; விவசாயிகளின் கடன் தள்ளுபடி மற்றும் குறைந்த வட்டியில் கடன்; பயிர் காப்பீடு;

தொழில் / பொருளாதாரம் : காங்கிரஸ் அரசின் சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம், நிலம் கையகப் படுத்துதல் சட்டம் ஆகியவற்றை மறு பரிசீலனை செய்தல்; சிறு மற்றும் குறுந் தொழில்கள் பாதுகாப்பு; கைதறிக்கு ஒதுக்கப்பட்ட 22 ரகங்களின் ஒதுக்கீட்டை நீடித்தல்; பட்டு நெசவு தொழிலுக்கான சரிகை விலை உயர்வைக் கட்டுப்படுத்தல்; வறுமையில் வாடுவோருக்கான பொது விநியோக முறையை வலுப்படுத்த மாநியங்களை அதிகரித்தல்; நகர்ப்புற வறுமையை நீக்க புதிய திட்டம்; கறுப்புப் பணம் மீட்பு;

வணிகம் : இணையதள வணிகத்திற்குத் தடை; சில்லறை வணிகத்தில் அயல்நாட்டு முதலீட்டிற்குத் தடை;

அயலுறவு : அமெரிக்க ஆதரவு நிலையில் மாற்றம் ஏற்படுத்துதல்; சீனா, பாகிஸ்தான் நாடுகள் எல்லையில் ஊடுருவல் நடத்துகின்றன. இலங்கையில் சீனா வகிக்கும் செல்வாக்கு இந்தியாவுக்குச் சவால். இந்தியாவின் வல்லமையை நிலை நாட்டும் வகையில் அயலுறவுக் கொள்கையில் உறுதியான மாற்றங்கள்;

ஊழல் : _________________________________

கல்வி, மருத்துவம் : கட்டாய இலவசக் கல்வியை நடைமுறைப்படுத்துதல்; உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்துதல்; இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் பலவற்றையும் (IIS முதலியன) தமிழகத்திலும் அமைத்தல்;மருத்துவத்திற்கான ஒதுக்கீட்டை 6 சதமாக்குதல்; பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் ‘கிளினிகல் பரிசோதனைகளை’ கண்காணித்தல்; குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்தல்; அயல் நாட்டுப் பல்கலைக் கழகங்களில் தமிழ் மொழி இருக்கைகளை உருவாக்குதல்; கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொணர்தல்:

சமூக நீதி : இட ஒதுக்கீட்டை எல்லாத் துறைகளிலும் அமுலாக்க உள்ள நீதிமன்றத் தடைகளை உரிய சட்டங்களின் மூலம் நிக்குதல், தனியார்துறையில் இட ஒதுக்கீடு ஆகியவற்றிற்குப் பாடுபடல்; பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான சட்ட உரிமைகளைப் பாதுகாத்தல்; மண்டல் பரிந்துரையில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சத ஒதுக்கீட்டை அதிகரித்தல்; வளர்ச்சித் திட்டங்களின் பெயரால் பழங்குடி மக்கள் இடம் பெயர்க்கப்படுதலைத் தடுத்தல்;

சிறுபான்மையினர் : சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுக்காக்கும் வகையில், எல்லா மதங்களும் சமமாக நடத்தப்படும் வகையில், திராவிட இயக்க வழிமுறைகளைத் தொடர்தல்; பொது சிவில் சட்டம் கூடாது; சச்சார் குழு பரிந்துரைகள் மற்றும் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாடுத் திட்டங்களை முறையாக நிறைவேற்றல்; தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவருக்கு இதர தாழ்த்தப்பட்டோருக்கான சலுகைகளை வழங்குதல்;

பெண்கள் : 33 சத மகளிர் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்ற நடவடிக்கைகள்; பாலியல் வன்முறைகளைத் தடுப்பதில் கவனம் செலுத்துதல்; பணி இடங்களில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள ‘விசாகா’ நடைமுறைகளை தொழில் நிறுவனங்களில் நடைமுறைப்படுத்த வழி வகுத்தல்; குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றல்;

நலத் திட்டங்கள் : எல்லாவகை மாற்றுத் திறனாளிகளுக்கும் ரூ 1500 மாத உதவித் தொகை அளித்தல்; சைகை மொழியை அங்கீகரித்தல், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு;

ஈழம் : கச்சத் தீவு மீட்பு; தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு; தமிழ் ஈழம் மலரப் பொது வாக்கெடுப்பு; விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம்;

தொழிலாளர்; தொழிலாளர் உடரிமைகளைப் பாதுகாகக் குரல் கொடுத்தல்; ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழித்தல் மற்றும் அவர்களை நிரந்தரப்படுத்துதல் ஐ.டி தொழில்துறையில் இருப்போர் நவீன கொத்தடிமைகளாக இருத்தலை எதிர்த்தல்; பன்னாட்டு நிறுவனங்களில் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாத்தல் வைப்பு நிதி வட்டியை 12 சதம் ஆக்குதல்; புதிய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்; கொத்தடிமை முறையை ஒழித்தல்; அரசு ஊழியர் வருமான வரி மொத்த வருமானத்தில் 3 சதம் எனக் குறைத்தல்; ஏழாவது ஊதிய ஆணையப் பரிந்துரைகளை நிறைவேற்றல்;

மீனவர் : கடலோர மேலாண்மைச் சட்டத்தை (2008) நீக்குதல்; பன்னாட்டு மீன்பிடி நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்தல்; கடல்சார் பழங்குடி மக்களாக அறிவித்தல்: பெண்களை மீன் தொழிலாளிகளாக அறிவித்து ஓய்வூதியம் முதலான பயன்களைப் பெற வழி வகுத்தல்; சிறிய மீன்பிடித் துறைமுகங்களை உருவாக்குவது

தேர்தல் சீர்திருத்தம்: விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையைக் கொணர்தல்;

தமிழ் / தமிழகம்: வழக்காடு மொழியாகத் தமிழ்; எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சிமொழியாக ஆக்குதல்; ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டம், தமிழக புதிய ரயில் திட்டங்கள்; தென்னக ரயில்வே திட்டம் ஆகியவற்றை உருவாக்குதல்; அயல் நாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தமிழ் கற்க வழி செய்தல்; தமிழர் அதிகம் வாழும் நாடுகளில் தூதுவர்களாகத் தமிழர்களை நியமித்தல்; அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கான் அமணடல் அலுவலகத்தைச் சென்னையில் அமைத்தல்; கொடுமணல் அகழ்வாய்விடத்தைப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்துப் பாதுகாத்தல்; விமான நிலையங்களை மேம்படுத்தல்;

சேது சமுத்திரத் திட்டம்: சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மீனவர் கவலை ஆகியவற்றை ஆய்வு செய்த, உரிய மாற்றுப் பாதையில் திட்டத்தை நிறைவேற்றுதல்;

பிற: தூக்குத் தண்டனை ரத்து; கூடங்குளத்தில் மேலும் அணு உலைகளைத் தடுப்பது; இயங்கி வரும் அணு உலைகளை மூடுவது; கேரளத்திலிருந்து கர்நாடகத்திற்கு த் தமிழகம் வழியாக எரிவாயுத் திட்டம் கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்தல்;பூரண மது விலக்கு;சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை; நீதிபதிகள் தேர்வாணையம் அமைத்தல்; புதுசேரிக்குத் தனி மாநிலத் தகுதி; ‘இந்திய ஒன்றியம்’ என்கிற பெயரை ‘இந்திய ஐக்கிய நாடுகள்’ என மாற்றுதல்;

கூட்டணி : பாரதிய ஜனதா கட்சி. தேசிய முற்போக்கு திராவிட கழகம். பாட்டாளி மக்கள் கட்சி’மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி,இந்திய ஜனநாயக கட்சி ;

ஆதரவு அமைப்புகள்: அனைத்து இந்திய முஸ்லீம் முன்னேற்ற கழகம், தமிழ்நாடு அனைத்து பிள்ளைமார் மகா சபை, தென்னாடு மக்கள் திராவிடக் கழகம், பீப்பிள் பார்ட்டி ஆப் இந்தியா (மத சார்பற்றது), மக்கள் தமிழகம், அகில இந்திய கிறிஸ்தவ கட்சி, சத்யாகிரகா இயக்கம்’, அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் (வல்லரசு), மக்கள் புரட்சி பார்வர்ட் பிளாக் கட்சி, அம்பேத்கர் தேசிய மக்கள் கட்சி, அகில இந்திய கைவினையாளர்கள் முன்னேற்ற கழகம், ஆரியை வைசியர் முன்னேற்றக் கழகம் முதலியன.

 

6. இந்திய தேசிய காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி இந்திய ஒற்றுமை மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டாட்சிக்கு மிகப் பெரிய பங்களிப்புகளைச் செய்துள்ளது. வளர்ச்சி என்பதை கல்வி, உணவு, வேலை, தகவல் அறிதல், நிலம் கையகப் படுத்தல்களின்போது உரிய இழப்பீடு பெறுதல் முதலான “உரிமைகளை உள்ளடக்கிய வளர்ச்சி” என்கிற நிலையை நோக்கி நகர்த்தியது காங்கிரஸ். அதிகாரத்தைப் பரவலாக்கி, மக்களை நோக்கிக் கொண்டு செல்லப்படுகிற ஆளுகையை அது எதிர்நோக்குகிறது. 2004 மற்றும் 2009 தேர்தல்களில் மக்கள் எங்களுக்கு அளித்த வெற்றியின் அடிப்படையில் கிராமப்புற மற்றும் அடித்தள மக்களின் மேம்பாட்டை நாங்கள் சாதித்துள்ளோம். இந்தப் பத்தாண்டு காலத்தில் பா.ஜ.க ஆட்சியில் 5.9 சதமாக இருந்த வளர்ச்சி வீதத்தை 7.5 ஆக உயர்த்தினோம். வறுமை ஒழிப்பு வீதம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. உணவு உற்பத்தி 213 லிருந்து 263 மி.டன் ஆக உயர்ந்துள்ளது. மின் உற்பத்தி இரட்டிப்பாகியுள்ளது. மொபைல் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 3.36 கோடியிலிருந்து 95 கோடியாக அதிகரித்துள்ளது. பன்னாட்டு வணிகம் 132 லிருந்து 800 மி. டாலராக அதிகரித்துள்ளது. கல்விக்கு செலவிடப்படும் தொகை 7 மடங்கு அதிகரித்துள்ளது. புதிய தொழில் தொடங்குவதை எளிதாக்குதல், தொழில் முனைவை ஊக்கப்படுத்துதல், கார்பொரேட் சமூகப் பொறுப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய 2013ம் ஆண்டு கம்பெனிகள் சட்டத்தை நிறைவேற்றினோம். மனிதர்கள் மலம் கழுவித் தூய்மை செய்யும் பணியை ஒழிக்கச் சட்டம் இயற்றினோம். புதிய அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்களை முன்னெடுக்கும் 15 அம்சத் திட்டத்தை நிறைவேற்ற எங்களுக்கு இன்னொரு முறை வாய்ப்பளிப்பீர்.

விவசாயம் : பாசனம், விவசாய விளைபொருட்களைச் சேமித்துப் பாதுகாக்க நவீன வசதி ஆகியவற்றில் அதிக முதலீடு செய்து விவசாய வளர்ச்சி மற்றும் விவசாய அடிப்படையிலான தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் உலக முன்னோடியாகத் தொடர்தல்; கடந்த பத்தாண்டுகளில் நெல், கோதுமை ஆகியவற்றின் குறைந்தபட்ச ஆதரவு விலையை இரட்டிப்பாக்கியுள்ளோம்; பிற தானியங்களின் விலையை மும்மடங்காக்கியுள்ளோம். இவ்விலை அதிகரிப்பு தொடரும்; சிறு விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகள் குழுமங்களுக்கு ரூ 5 லட்சம் வரை சலுகைக் கடன்கள் அளிக்கப்படும்;

தொழில் / பொருளாதாரம் : மூன்றாண்டுகளில் 8 சதப் பொருளாதார வளர்ச்சியை எட்டுதல்; முதலீடுகளுக்குச் சாதகமான சூழலை உருவாக்குதல்; உலகப் பொருளாதாரச் சூழல் நெருக்கடி அளித்த போதிலும் பணவீக்கத்திற்கு எதிரான உறுதியான நடவடிக்கைகளைத் தொடர்தல்; உள்நாட்டு, வெளிநாட்டு வணிகப் போட்டிக்குரிய வகையில் திறந்த பொருளாதாரம்; உற்பத்தித் துறையில் 10 சத வளர்ச்சி; சேவைத் துறை மற்றும் பொருட்கள் மீதான வரிவிதிப்பு மற்றும் புதிய நேரடி வரி விதிப்புச் சட்டங்களை உருவாக்குதல்; அடுத்த பத்தாண்டுகளில் மின்சாரம்,, போக்குவரத்து மற்றும் இதர அகக் கட்டுமான வளர்ச்சிக்கு ஒரு ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்தல்; அகக் கட்டுமான வளர்ச்சியில் தனியார் மற்றும் பொதுத்துறை ஒத்துழைப்பை ஊக்குவித்தல்; அந்நிய முதலீடு. குறிப்பாக வேலை வாய்ப்புகள் உள்ள துறைகளில் ஊக்குவிப்பு; இந்தியப் பொருளாதாரத்தை உலகப் பொருளாதாரத்துடன் நெருக்கமாகப் பிணைத்தல்; கருப்புப் பணத்தை வெளிக் கொணரும் காத்திரமான முயற்சிகளைத் தொடர்தல்; இதற்கென ஒரு சிறப்புத் தூதுவரை நியமித்தல்; முக்கியமான அம்சங்களில் தகுதியானவர்களுக்கு மட்டுமே மான்யம் வழங்குதலைக் கட்டுப்படுத்துதல்; 2022 க்குள் மொத்த உள் உற்பத்தியில் தொழிற்துறையின் பங்கு (manufacture) 25 சதம் ஆக்கப்படும்; வட கிழக்கு மாநிலங்களின் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தல் தொடரும்;

வணிகம் : பன்முக வணிக அமைப்புகளை வலுப்படுத்துவதன் மூலம் முதலீடுகள் பெருகுதல் உறுதி செய்யப்படும்; பொருள் மற்றும் பணித்துறை வணிகம் தற்போது 1 ட்ரில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது; 5 ஆண்டுகளில் இது இரட்டிப்பாக்கப்படும்;

அயலுறவு : ஆசிய நாடுகளுடன் அமைதியும் உறுதியும் பரஸ்பர நலனும் பயக்கும் உறவைப் பேணுதல்; ஐ.நா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கான ஆதரவைத் திரட்டுதல்; உலக அளவிலான பயங்கரவாத்தை உறுதியுடனும் பிற நாடுகளுடன் உளவுப் பகிர்வு முதலான ஒத்துழைப்புகளுடனும் எதிர்கொள்ளல்; நமது அணிசேராப் பாரம்பரியத்தையும் சோஷலிச நாடுகளுக்கும், ஆப்ரிக்க மற்றும் பலஸ்தீனிய நாட்டுப் போராட்டங்களுக்கும் ஆதரவளிப்பதைத் தொடர்தல்; சீனாவுடன் வர்த்தக பொருளாதார உறவைப் பேணிக் கொண்டே எல்லைப் பிரச்சினை தொடர்பான அகரித்து வரும் வேறுபாடுகளைப் பேசிச் சரி செய்ய முயற்சித்தல்;, ‘சார்க்’ அமைப்பை வலுப்படுத்துதல்;

ஊழல் : எதிர்க் கட்சிகளால் நிறைவேற்றவிடாமல் தடுக்கப்பட்ட லஞ்ச ஒழிப்பு மசோதாவை நிறைவேற்றுதல்; ஊழல் ஒழிப்பு மற்றும் பொறுப்பேற்பு (accountability) தொடர்பான நிலுவையில் உள்ள ‘நீதித்துறைப் பொறுப்பேற்பு மசோதா’ உட்பட பல்வேறு மசோதாக்களின் நிறைவேற்றத்தை உறுதி செய்தல்;

கல்வி, மருத்துவம் : குறை வருமானம் உல்ள குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்புகளை அதிகரித்தல்; உயர் கல்வி அமைப்பை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்குத் திறந்து விடல் மூலம் நம் மாணவர்கள் சிறந்த கல்வி பெறும் வாய்ப்பை அதிகரித்தல்; எல்லோருக்கும் கல்வி (சர்வ சிக்‌ஷ அபியான்) என்பதிலிருந்து தரமான ‘ஸ்ரேஷ சிக்‌ஷ அபியானை’ நோக்கிக் கவனம் குவித்தல்; ஒவ்வொரு பிளாக்கிலும் நலிந்த பிரிவினருக்கான நவோதயா கல்வி நிறுவனம் அமைத்தல்; கல்வி உரிமை, எல்லோருக்கும் கல்வி ஆகிவற்றைச் சிரத்தையாக நடைமுறைப்படுத்துதல்; மொத்த உள் உற்பத்தியில் 3 சதம் மருத்துவத்திற்காக ஒதுக்குதல்; இலவச மருந்து உட்பட தரமான மருத்துவம் அளித்தல்;

சமூக நீதி : பட்டியல் பிரிவினருக்கான சிறப்புத் துணைத்திட்டங்கள் வகுப்பதற்கான மத்திய அரசுச் சட்டம் நிறைவேற்றல்; 2013 ம் ஆண்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றல்; பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டின் பலன்களை முறையாகப் பெற்றிராத மிகப் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் நிலை குறித்து ஆராய ஆணையம் ஒன்றை நியமித்தல்; பட்டியல் பிரிவில் உள்ள வேலை இல்லாப் பட்டதாரிகளுக்கு திறன் வளர்ச்சி உதவித் தொகையாக 10,000 ரூ வவுச்சர் அளித்தல்; குறந்தபட்சத் தகுதி உள்ள அனைத்துப் பட்டியல் பிரிவு மாணவர்களுக்கும் ராஜிவ் காந்தி ஆய்வு உதவித் தொகை அளித்தல்; தகுதியுடைய பட்டியல் பிரிவு மாணவர்கள் 1000 பேருக்கு ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடு சென்று பயில உதவித் தொகை அளிக்கப்படும்; சிறிய/நடுத்தர பட்டியல் பிரிவு தொழில் முனைவர்களிடமிருந்து பொருள்களை வாங்க மொத்தக் கொள்முதலில் 4 சதத்தை ஒதுக்குதல்;

சிறுபான்மையினர் : மதக் கலவரத் தடுப்பு மசோதாவை விரைந்து சட்டமாக்க முயற்சிகள் மேற்கொள்ளல்; சிறுபான்மையினரில் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு ஒதுக்கீடுகள் வழங்குதல் தொடர்பான தடைகளை நீக்கி முன்னெடுத்தல்; சச்சார் குழு பரிந்துரையின் ஒவ்வொரு அம்சத்தையும் நிறைவேற்றுதல்;

பெண்கள் : 33 சத மகளிர் ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற உறுதி; மகளிர் பாதுகாப்பு, சுயமரியாதை, கண்ணியம், ஆகியவற்றைப் பாதுகாப்பதை நோக்கி கவனம் குவித்தல்; சுய உததிக் குழுக்கள் மூலம் ஒரு இலட்ச ரூ குறைந்த வட்டிக் கடன் அளித்தல்; குழந்தைகள் பாதுகாப்பிற்கான சட்ட அமைவுகளை வலுவாக்குதல்; அங்கன்வாடி ஊழியர் நிலையை உயர்த்துதல்; பஞ்சாயத்துகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 30 சதம் பெண்கள் நலத்திற்குச் செலவிடல்;

நலத் திட்டங்கள் : ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள உரிமைச் சட்டங்களோடு, மருத்துவம், ஓய்வூதியம், வேலை உறுதி, வீடு, சமூகப் பாதுகாப்பு, தொழில் முனைவு, பணி இடங்களில் கண்ணியம் காப்பாற்றப்படுதல், ‘ஆதார்’ அடையாளம்’ ஆகியவற்றுக்கான உரிமைச் சட்டங்களும் நிறைவேற்றல். 10 கோடி இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து அடுத்த 5 ஆண்டுகளுக்குள் வேலை அளித்தல்; ஐந்தாண்டுகளுக்குள் ஒவ்வொருவருக்க்கும் ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்குதல்; ;

ஈழம் : இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் மற்றும் இதர சிறுபான்மையினரின் கண்ணியமான மறுவாழ்விற்கு இந்தியா செய்து வந்த உதவிகளைத் தொடர்தல்; விடுதலைப் புலிகளுடனான இறுதி நேரப் போரில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த நம்பத்தகுந்த, குறிப்பிட்ட கால கெடுவில் செயல்படக் கூடிய விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க இலங்கை அரசுக்குப் பிற நாடுகளுடன் இணைந்து அழுத்தம் அளிக்கப்படும்;

தொழிலாளர்; சர்வதேசத் தரங்களை நோக்கி நமது தொழிலாளர் நிலையை உயர்த்தும் அதே நேரத்தில், போட்டிப் பொருளாதாரத்திற்குரிய வகையில் தொழிலாளர் சட்டங்களை நெகிழ்ச்சியாக ஆக்குதல்; குறந்த பட்சக் கூலிச் சட்டம், ஓய்வூதியம், தொழிலிட பாதுகாப்பு, மருத்துவம் ஆகியவற்றை நிறைவேற்றுதல்; தொழிலாளர்களின் கூட்டு பேர வலிமையை வளர்த்தல்;

மீனவர் : ___________________________________________________

தேர்தல் சீர்திருத்தம்: திறன்மிக்க தேர்தல் சீர்திருத்தத் திருத்தங்களுக்கான சட்ட நிறைவேற்றத்திற்கான கருத்தொருமிப்பை உருவாக்குதல்;

தமிழ் / தமிழகம்: —————————————————————————-

சேது சமுத்திரத் திட்டம்: ————————————————————-

பிற: எல்லா நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் 18 மாதங்களுக்குள் ‘’பிராட் பேன்ட் இணைப்பைச் சாத்தியமாக்கல், திட்டமிட்ட நகர்ப்புற விரிவாக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்தல், படைகளை நவீனப் படுத்துதல்; உறுதியான கரங்கொண்டு இடதுசாரி தீவிரவாதத்தை எதிர்கொள்வது தொடரும்; அதற்குரிய வகையில் பாதுகாப்புப் படைகள் வலுப்படுத்தப்படும்; படைகள் நவீனப்படுத்தப்படுவது தொடரும்; காவல்துறை நவீனமயமாக்கல் மற்றும் சீர்திருத்தங்கள்;

கூட்டணி : ——————————————————————–

ஆதரவு அமைப்புகள்: சமூக சமத்துவப் படை, நாடாளும் மக்கள் கட்சி,

7. பாரதீய ஜனதா கட்சி

சுதந்திரமடைந்து ஆண்டுகள் எழுபதாயினும், உலகின் பழம்பெரும் நாகரீகங்களில் ஒன்றானா இந்தியாவின் உள்ளார்ந்த வீரியம் மீட்டெடுக்கப்படவில்லை. இதன் விளைவாக நாடு இப்போது ஒரு பன்முக நெருக்கடியச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. வளர்ந்து வரும் ஏற்றத் தாழ்வுகள், சமூக மற்றும் மத அடிப்படையிலான பிளவுகள், பயங்கரவாதம் ஆகியவற்றின் விளைவாக இது ஒரு முடமான சமூகமாக உருப்பெற்றுள்ளதோடு நாளுக்கு நாள் நிலை மோசமாகிக் கொண்டே உள்ளது. முதுகெலும்பற்ற பலவீனமான ஐ.மு.கூ அரசு நிலைமையை மேலும் குழப்பியுள்ளது. வெளிப்படைத் தன்மை இன்மை, அதிகாரக் குவியல், ஊழல் முதலியன பெருகியுள்ளன. 90களில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘தாராளமயம்’ முழுமையாக நிறைவேற்றப் படவில்லை. ஆறாண்டு கால தே.ஜ.கூ அரசு நாட்டை ஒரு பொருளாதார ‘சூப்பர் பவர்’ என்கிற நிலையை நோக்கி இட்டுச் சென்றது. 2004ல் ஐ.மு.கூ அரசு ஏற்பட்டது. நிலைமை சீர்கேடடையத் தொடங்கியது. இந்த நிலையிலிருந்து மீள நமக்கு உடனடித் தேவை ஒரு செயல்திறனுள்ள அரசியல் கட்சியும் தலைமையும். விவேகாநந்தர் சொன்னதுபோல “எல்லா ஆற்றலும் உன்னிடம் உள்ளது. உன்னால் முடியும். முதலில் அதை நீ நம்பு”. ஶ்ரீ மா ஒருமுறை சொன்னதுபோல மானுடத்தின் இன்றைய நலிவுகளிலிருந்து அதை மீட்டெடுக்கும் வல்லமை இந்தியாவுக்கு உண்டு, 122 கோடி மக்களின் கனவை பா.ஜ.க நனவாக்கும். “ஏக் பாரத், ஸ்ரேஷ்ட பாரத்”, “சப்கா சாத், சப்கா விகாஸ்” முதலான முழக்கங்களை முன் வைக்கும் பா.ஜ.கவிற்கு ஆதரவளிப்பீர்.

விவசாயம் : தேசிய அளவில் ஒற்றை விவசாயச் சந்தையை உருவாக்கல்; அவ்வப் பகுதி மக்களின் உணவுப் பழக்கங்களுக்கு ஏற்ப விவசாய விளை பொருட்களை ஆதரித்தல்; விவசாயம் மற்றும் அதனுடன் இணைந்த தொழில்கள் என்கிற பாரம்பரியமான துறைகளை வளர்த்து நவீன சந்தையுடன் இணைத்தல்; விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சியில் பொது முதலீட்டை ஊக்குவித்தல்; 50 சத லாபம் வரும் வகையில் விவசாயத்தை ஆக்குதல்; 60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள்; ‘இந்திய இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை உர நிறுவனம்’ அமைத்தல்; கிராமப்புறக் கடன் வசதிகளைப் பெருக்குதல்; மரபணு மாற்ற உணவுகளைப் போதிய மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் அனுமதி அளிக்காதிருத்தல்; சாத்தியங்களைப் பொறுத்து நதி நீர் இணைப்பு;

தொழில் / பொருளாதாரம் : கருப்புச் சந்தை, பதுக்கல் ஆகியவற்றை ஒழிக்க சிறப்பு நீதிமன்றங்கள் உட்படக் கடும் நடவடிக்கைள், விலைவாசியைக் கட்டுப்படுத்த சிறப்பு நிதி உருவாக்கல் முதலான செயல்பாடுகளின் மூலம் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும்; ஐ.மு.கூ ஆட்சியில் உள் உற்பத்தி 4.8 சதமாகக் குறைந்துள்ளது; வேலை வாய்ப்பு அதிகமுள்ள உற்பத்தித் துறையை வளர்த்தல், மற்றும் நீண்ட காலத் திட்டங்கள், நிதித்துறை ஒழுக்கம், வங்கிச் சீர்திருத்தம், வரி விதிப்புச் சீர்திருத்தம் ஆகியவற்றின் ஊடாக இந்நிலையை மாற்றுதல்; சுற்றுலாத் துறையை விரிவு படுத்தல்; சிவப்பு நாடா முறை போன்றவற்றை நீக்கி இந்தியாவில் தொழில் தொடங்கலை எளிதாக்குதல்; உலகத் தரமான முதலீட்டுப் பிரதேசங்களை உருவாக்குதல்; உற்பத்தித் துறைக்கு முன்னுரிமை; ஆராய்ச்சிகளுக்கான நிதி ஒதுக்கீடை அதிகரித்தல்; கூட்டுறவுத் துறை, கைவினைத் தொழில் ஆகியவற்றை ஊக்குவித்தல்; பணித் துறையின் தரத்தையும் திறனையும் மேம்படுத்தல்;

வணிகம் : ‘மல்டி ப்ரான்ட்’ சிறு வணிகம் தவிர வேலை வாய்ப்பூள்ள பிற துறைகள் அனைத்திலும் அந்நிய நேரடி மூலதனம் ஊக்குவிக்கப்படும்; எனினும் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் பாதுகாக்ககப்படும்

அயலுறவு : அண்டை நாடுகளுடன் நட்பு. ஆனால் தேவையானால் கடும் நடவடிக்கைகளுக்குத் தயங்காமை; சார்க், ஏசியன் முதலான பிராந்திய அமைப்புகளை வலுப்படுத்துதல்; தேசிய நலன்களை முன்வைத்து பரஸ்பர நலன்களுடன் நாடுகளுக்கிடையே உறவைப் பேணுதல்;

ஊழல் : மக்கள் மத்தியில் ஊழல் பற்றிய பிரக்ஞை உருவாக்குதல்; உயர் தொழில் நுட்பங்களுடன் கூடிய e ஆளுகை; கொள்கை அடிப்படையிலான ஆளுகை: அரசு நடைமுறைகள், வரி விதிப்பு ஆகியவற்றை எளிமைப்படுத்துதல்; கருப்புப் பணம் உருவாவதற்கான வழிமுறைகளை அடைத்தல்; வெளிநாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தை மீட்க தனிப் படை அமைத்தல்;

கல்வி, மருத்துவம் : வறுமையிலிருந்து மேலெழுந்த நவ மத்தியதர மக்கள் பயனடையும் வகையில் அவர்களுக்குக் கல்விவசதிகள், உதவித்தொகை, மருத்துவக் காப்பீடு ஆகியவற்றை அளித்தல்; ‘இளம் தலைவர்கள்’ மற்றும் ‘வளர்ச்சிக்கான தலைவர்கள்’ திட்டங்களை உருவாக்குதல்; பரம்பரிய மற்றும் நவீன விளையாட்டுக்களை ஊக்குவித்தல்; நவீன கல்வி வளர்ச்சியைச் சகல மட்டங்களிலும் சாத்தியமாக்கல். ஆசிரியப் பணி இடங்களை நிரப்புதல்; தொழில் சார் கல்வியை ஊக்குவித்தல்; திறன் வரைபடம், தேசியப் பல்திறன் திட்டம் முதலியவற்றைச் செயல்படுத்தல்; மென் திறன்கள் ஊக்குவிப்பு; மொபைல் போன்களின் உதவியோடு e மருத்துவ சேவை, பாரம்பரிய மருத்துவ முறை யோகா முதலிவற்றை ஊக்குவித்தல்; பள்ளி மருத்துவம், கிராமப்புற மருத்துவம் ஆகியவற்றிற்கு முன்னுரிமை; உடற் பருமன், சர்க்கரை நோய், புற்று நோய் முதலான மருத்துவ ஆய்வுகளில் அதிக முதலீடு;

சமூக நீதி : ‘சமாஜிக் நியாய்’ மற்றும் ‘சமாஜிக் சம்ராசட்டா’ (சமூக நீதி / சமூக ஒற்றுமை) ஆகியவை கடைபிடிக்கப்படும்; பழங்குடிகள் முன்னேற்றத்திற்காக ‘வனபந்து சம்ரக்‌ஷ்ண யோஜனா’ உருவாக்கப்படும்; தீண்டமை மற்றும் மனிதர்கள் மலம் சுமந்து கழுவுதல் முதலியவற்றை ஒழித்தலில் பா,ஜ,க உறுதியான கொள்கையைக் கொண்டுள்ளது; நலிந்தோருக்கான நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை முறையாகச் செலவிடல்; பழங்குடிகளின் பண்பாட்டைப் பாதுகாத்தல்; அவர்களின் வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்துதல்;

சிறுபான்மையினர் : வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நம்புபவர்கள் நாங்கள்; சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் சிறுபான்மையினரில் பெரும்பகுதி, குறிப்பாக முஸ்லிம்கள் ஏழ்மையில் இருப்பது வருந்தத்தக்கது; வளர்ச்சியின் பலன்கள் எல்லோருக்கும் கிடைப்பதில் உறுதியாக இருப்போம்; வேறுபாடின்றி கல்வி, வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படுதல் பெண் கல்விக்கு முக்கியத்துவம்; முஸ்லிம் கல்வி அமைப்புகளை நவீனப்படுத்தி வலிமைப்படுத்துதல்; குறிப்பாக தேசிய மதரசா நவீனப்படுத்துதல் திட்டத்தை தொடங்குதல்; வக்ஃப் வாரியங்களை வலிமைப்படுத்துதல்; வக்ஃப் சொத்து ஆக்ரமிப்புகளைத் தடுத்தல்; உருது மொழி மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலங்களைப் பாதுகாத்தல்; பாதுகாப்பும் அமைதியும் நிறைந்த சூழலை ஏற்படுத்துதல்;

பெண்கள் : எல்லா மட்டங்களிலும் பெண்கள் நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை; 33 சத மகளிர் ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற உறுதி; ‘பேடி பசோவ், பேடி பதாவ்’ என்கிற பெண்குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கல்விக்கான தேசிய அளவுப் பிரச்சாரம்; சத்துணவு, பேறு கால நலம் ஆகியவற்றை முதன்மைப் படுத்திய பெண்கள் நலத்திட்டம்; வன்புணர்ச்சிக்கு உள்ளான பெண்களின் மறுவாழ்வுக்காக ஒதுக்கப்பட்டு செலவிடப்படாத நிதியை முறையாகச் செலவிடல்;

நலத் திட்டங்கள் : எங்கள் அரசு ஏழை மற்றும் விளிம்பு நிலை மக்களின் அரசு; 100 பின் தங்கிய மாவட்டங்களை அடையாளங் கண்டு அவற்றை பிற மாவட்டங்களின் அளவிற்கு மேம்படுத்தல்; வறுமை ஒழிப்புத் திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்துதல்; குறைந்த விலை வீடுகட்டும் திட்டம் ஒன்றை உருவாக்குதல்; உணவு உரிமை என்பது வெறுமனே காகிதத்தில் இல்லாமல் அதை எதார்த்தமாக்குதல்; பொது விநியோகத் திட்டத்தை மேம்படுத்துதல்; கிராமப்புற மற்றும் நகர வளர்ச்சிக்கு முக்கியத்துவம்; 100 நகரங்களைத் தேர்வு செய்து நவீன தொழில்நுட்பங்கள் மிக்க நகரங்களாக வளர்த்தெடுத்தல்; துணை நகரங்களை உருவாக்குதல்; பொது இடங்களில் ‘வைஃபி’ வசதி செய்தல்; மூத்த குடிமக்களுக்கு வரி மற்றும் வட்டிச் சலுகைகளை அளித்தல்; ‘மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைச் சட்டம்’ நிறைவேற்றல்; வரிச்சலுகை; வீட்டிலிருந்தே படிக்கும் e கல்வி வாய்ப்பு. எல்லோருக்கும் சிறப்பு அடையாள அட்டை வழங்கல்; எல்லா வீடுகளுக்கும் குடி நீர்;

ஈழம் :________________________________________

தொழிலாளர்; அமைப்பு சாராத் தொழிலாளருக்கு அடையாள அட்டைகளை வழங்கி கல்வி, மருத்துவ வசதிகளை அளித்தல்; தொழிலாளர் வங்கி அமைத்தல்; எல்லா வகைத் தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியத் திட்டம், மருத்துவக் காப்பீடு முதலியவற்றை உருவாக்குதல், தொழிலாளர் சட்டங்களை மாறியுள்ள சூழலுக்கு ஏற்ப திருத்தி அமைக்கும் முயற்சி தொடங்குதல்;

மீனவர் : மீன் விவசாயம் ஊக்குவிப்பு; மீனவர் நலத் திட்டங்கள்;

தேர்தல் சீர்திருத்தம்: குற்றவாளிகள் பங்கு பெறாத வகையில் தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ளல்; நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் இரண்டையும் ஒன்றாக நடத்துதல்; தேர்தல் செலவு எல்லையை மறு பரிசீலனை செய்தல்;

தமிழ் / தமிழகம்: —————————————————————————-

சேது சமுத்திரத் திட்டம்: சேது என்பது நம் கலாச்சாரப் பாரம்பரியம். தவிரவும் ஏராளமான தோரியம் அங்கிருப்பதால் அது ஒரு பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியும் கூட. இதையெல்லாம் கணக்கில் கொண்டு இது குறித்து முடிவு செய்யப்படும்;

பிற: இளைஞர்களைச் சுய வேலை வாய்ப்பை நோக்கி ஊக்குவித்தல்; பொது ஊழியர்கள் மத்தியில் ‘கார்த்தவ்ய பாவனா’ வை உருவாக்குதல்; திறந்த, வெளிப்படையான, அதிகாரப் பரவலுடன் கூடிய ஆளுகை; நிர்வாகம், நீதித்துறை மற்றும் காவல்துறைச் சீர்திருத்தங்கள்; தேசிய நீதித் துறை ஆணையம், ‘லோக் அதாலத்’கள் ஆகியவற்றை உருவாக்குதல்; காவல்துறையை நவீனப்படுத்தி உலகத் தரத்திற்கு உயர்த்துதல்; பிராந்திய உணர்வுகளை மதித்து அதற்குரிய வகையில் மாநிலங்களின் வளர்ச்சியை ஏற்படுத்தல்; வட கிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து அவற்றை ஒருங்கிணைத்தல்; காஷ்மீர் இந்த தேசத்தின் பிரிக்க இயலாத அங்கம்; பண்டிட்களை முழுக் கண்ணியத்துடனும் பாதுகாப்புகளுடனும் மீள் குடியேற்றுதல்; பாக் ஆக்ரமிப்பு காஷ்மீர் அகதிகள் பிரச்சினையைத் தீர்த்தல்; 370 வது பிரிவு குறித்த நிலைபாட்டை உறுதியாகக் கடைபிடித்தல். ஐ.மு.கூ அரசால் கைவிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புப் பொறியமைவை மறு உருவாக்கல்; மாநில அரசுகளுக்கு உள் நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான எல்லா வசதிகளையும் அளித்தல்; படைகளில் அதிகாரிகள் மட்டத்தில் பணி இடங்களை நிரப்புதல்; மாஓயிச வன்முறையை எதிர்கொள்ள தேசிய அளவில் திட்டம் உருவாக்கல்; கல்லூரிகளில் என்.சி.சி பயிற்சி; போர் நினைவுச்சின்னம் ஒன்றை அமைத்தல்; படைகளை நவீனப்படுத்துத்ல்; எல்லை நிர்வாகத்தை மேம்படுத்தல்; சட்ட விரோதமாக நுழைபவர்கள் மீது தண்டனை நடவடிக்கைகள்;

சிறப்பு அம்சங்கள்; வாஜ்பாயி அரசு அணு குண்டு வெடிப்பு சோதனை நடத்தியதனூடாக நமக்குக் கிடைத்த இராணுவ பலத்தை ஐ.மு.கூ அரசு ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது; இந்தியாவின் அணு ஆயுதக் கொள்கை நவீனப்படுத்தப்படும்; அணு உலையில் நமது உள்நாட்டு தோரியம் தொழில்நுட்பம் வளர்க்கப்படும். அரசியல் சட்ட எல்லைக்குள் நின்று அயோத்தியில் ராமர் கோவில் எழுப்புவதற்கான எல்லா சாத்தியங்களையும் ஆராய்வோம்; முக்தி தாயினியாகவும் ஜீவன் தாயினியாகவும் உள்ள கங்கை நீரின் தூய்மை காப்பாற்றப்படுவது இந்தியாவிற்கு நன்மை பயக்கும்; மக்கள் பங்கேற்புடன் நதிகளைத் தூய்மை செய்யும் பணி நாடெங்கிலும் மேற்கொள்ளப்படும்; பசுப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்; பாரம்பரிய வரலாற்றுத் தலங்கள் பாதுகாக்கப்படுதல்; புனிதப் பயணங்கள் மேற்கொள்ளப்படும் தலங்களில் வசதிகள் செய்தல்; இந்திய மொழிகள் வளர்க்கப்படும்; பொது சிவில்சட்டம் உருவாகாதவரை ஆண் -பெண் சமத்துவம் சாத்தியமில்லை என்பதால், நமது பாரம்பரியத்திற்கு உகந்த வகையிலும், நவீன காலத்திற்கு ஏற்றவாறும் பொ.சி.ச ஒன்றை நிறைவேற்றும் உறுதிப்பாட்டை பா.ஜ.க மீண்டும் உறுதி செய்கிறது. அமிர்தமய் பாரத்தை நோக்கி ஒவ்வொரு அடியையும் முன்னெடுப்போம்; ஏக் பாரத் ! ஸ்ரேஷ்ட பாரத் !!

கூட்டணி : பார்க்க ம.தி.மு.க அறிக்கைச் சுருக்கம்.

ஆதரவு அமைப்புகள்: பார்க்க ம.தி.மு.க அறிக்கைச் சுருக்கம்.

8. ஆம் ஆத்மி கட்சி

அறுபத்து நான்காண்டுகள் ஆயினும் சுயராஜ்யம் ஒரு கனவாகவே உள்ளது. ஜனநாயகம் என்பது ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் ஒரு களைப்பு நிறைந்த வழமையாகிவிட்டது. ஆட்சியாளர்களாலும் இடையில் நிற்கும் அதிகாரவர்க்த்தாலும் அலட்சியப் படுத்தப்படுவதாகவும் அவமானப் படுத்தப்படுவதாகவும் ஆகிவிட்டது. மக்களின் குறைகளை அறிந்து ஒலிக்க வேண்டிய அரசியல் கட்சிகளோ வெறும் ஓட்டு சேகரிக்கும் எந்திரங்களாகிவிட்டன. சுயராஜ்யம் என்பது மக்களே தம் விதியைத் தாமே நிர்ணயித்துக் கொள்வது; அதிகரப் பொறியமைவை மக்களே நேரடியாக இயக்குஅது, ஆட்சியாளர்களைத் தம் செயல்களுக்குப் பொறுப்புடையவர்களாக்குவது. பிரிட்டிஷ்காரர்களுக்குப் பதிலாக நம்மவர்களே இந்நாட்டைக் கொள்ளையடிப்பதற்காகத்தான் மகாத்மா காந்தி உள்ளிட்ட நம் விடுதலைப் போர்த் தியாகிகள் தம் உயிரைத் தத்தம் செய்தார்களா? ஊழ்ல், வகுப்புவாதம், ஊழல் முதலாளியம் என்கிற முப்பெரும் ஆபத்துகளை நாடு எதிர்நோக்கியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி அரசியலதிகாரத்தை சாதாரண மனிதர்களின் கையில் மீட்டுத் தருவதற்கு உறுதி பூண்கிறது. ஆம் ஆத்மி கட்சி இன்னொரு சாதாரண அரசியல் கட்சி அல்ல. அது ராம் லீலா திடலிலும். ஜந்தர் மந்தரிலும் நடந்த போராட்டங்களின் ஊடாக உதித்த கட்சி. அது சுயராஜ்யத்தை விரும்பும் கட்சி, உங்களின் பிரச்சினைகளை நீங்களே தீர்த்துக் கொள்ளும் வண்ணம் அதிகாரத்தை உங்களிடமே திருப்பி அளிக்க விரும்பும் கட்சி.

விவசாயம் : கிராமங்களில் வாழ்வோர் நகர்ப்புற வசதிகள் அனைத்தையும் பெறுவதை உறுதி செய்தல்; பொருளாதார நலிவின் காரணமாகக் கிராமப்புறங்களிலிருந்து புலம் பெயர்தலுக்கு எதிராக கிராமப்புறப் பாரம்பரியத் தொழில்கள் மற்றும் விவசாய வளர்ச்சியை எளிதான கடன் வசதி முதலானவற்றின் மூலம் மேம்படுத்தல்; விவசாயம் தொடர்பான சுவாமிநாதன் ஆணைய அறிக்கையை நடைமுறைப்படுத்துதல்; விவசாய விளை பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை 50 சத லாபம் கிடைக்குமாறு நிர்ணயித்தல்; மேலும் 25 பயிர்களுக்கு இவ்வாற்று குறைந்த பட்ச ஆதரவு விலையை நிர்ணயித்தல்; கடன் மற்றும் காப்பீட்டு வசதிகள் மூலம் விவசாயிகளின் தற்கொலைகளை முடிவுக்குக் கொணர்தல்; கிராமப்புற மருத்துவ வசதிகளை மேம்படுத்தல்; குளிர் பதன வசதி, சேமிப்பு வசதி முதலியவற்றை மேம்படுத்தி இழப்புகளைத் தடுத்தல:;

தொழில் / பொருளாதாரம் : வெளி நாட்டில் தேங்கிக் கிடக்கும் கருப்புப் பணத்தை வெளிக் கொணர்தல்; காரணமானவர்களைத் தண்டித்தல்; எளிய படிப்படியாக அதிகரிக்கும் வரி விதிப்பை கொணர்தல்; மொத்த உள் உற்பத்திக்கும் வரி விதிப்பிற்குமான வீதத்தை அதிகரித்தல்; நவீன தொழில்நுட்பம் மற்றும் e ஆளுகையின் பயன்பாட்டை அதிகரித்தல்; தொழில் நடத்துவது அரசின் தொழிலல்ல என ஆம் ஆத்மி நம்புகிறது. தொழிற்துறை வளர்வதற்கும், வேலை வாய்ப்பு பெருகுவதற்கும் தனியார் துறையின் பங்கேற்பு அவசியம்; ஊழல் அற்ற சூழல், திறன்மிக்க அகக்கட்டுமானம் முதலானவற்றை அளிப்பதன் மூலம் யோக்கியமான தொழிற்துறை வளர்வதற்கு அரசு உதவ வேண்டும்; தூய திறந்த ஆளுகை இதை உறுதி செய்யும்;

வணிகம் : ——————————————————————–

அயலுறவு : எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு இம்மியும் பொறுமை காட்டாமை; இருநாட்டு மற்றும் பன்னாட்டு ஒத்துழைப்புகளின் மூலம் பயங்கரவாதிகளைப் பிடிப்பதும் பயங்கரவாத்ததைக் கட்டுப்படுத்தலும். சீனாவின் எல்லை ஊடுருவல்களை எதிர்கொள்ளத் தக்க அளவில் நம் திறனைக் கட்டமைக்கும் அதே நேரத்தில் இரு நாடுகளுக்கிடையேயான கலாச்சார வணிகத் தொடர்புகளை மேம்படுத்தல்; அண்டை நாடுகளுடன் விரோதப் போக்குகளை க் குறைத்து உதவி, ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் நல்லுறவைப் பேணுதல்; அமெரிக்காவுடன் அர்த்தமுள்ள உறவைப் பேணும் அதே நேரத்தில் அதற்கு இணையாக ‘ப்ரிக்ஸ்’ முதலான கூட்டமைப்புகளையும் தொடர்தலின் மூலம் ஒரு பல்துருவ உலகிற்கு வழி கோளல்; ஐ.நா போன்ற உண்மையான உலகளாவிய நிறுவனங்களை வலுப்படுத்தும் அதே நேரத்தில் அய்.எம்.எஃப் போன்ற நிறுவனங்களை ஜனநாயகப் படுத்தும் கோரிக்கைகளை வைத்தல்; முதல் உலக நாடுகளின் முயற்சிகளை வீழ்த்தி, வளரும் நாடுகளின் கிராமப்புற விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் உலக வர்த்தக அமைப்பில் செயல்படுதல்;

ஊழல் : பிரதமர் தொடங்கி பொதுப்பணிகளில் உள்ளவர்கள் மற்றும் அதிகாரிகள் ஆண்டுதோறும் சொத்துக் கணக்கை வெளியிடுதல், ஊழல்புரிந்தோர் உடனடியாகப் பதவி நீக்கம், சிறைத் தண்டனை, சொத்து பற்றிமுதல் முதலியன. ஊழல் குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்ட கால கெடுவில் விசாரித்துத் தணடனை வழங்கல், ஊழலை வெளிக்கொணர்வோருக்குப் பாதுகாப்பு முதலானவற்றை உள்ளடக்கிய ‘ஜன் லோக் பால்’ சட்டம் நிறைவேற்றுவது முதல் குறிக்கோள்;

கல்வி, மருத்துவம் : பணம் செலவழிக்க இயலாதவர்கள் உட்பட அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்தல்; உரிய நிதி ஒதுக்கீட்டுகளின் வழியாக பொதுக்க் கல்வி முறையை வலுப்படுத்துதல்; பெண்கள், முதல் தலைமுறையினர் மற்றும் சமூக ரீதியில் பின்தங்கியோர் எல்லோருக்கும் சிறப்புச் சலுகைகளையும் கவனிப்புகளையும் வழங்கி அவர்களும் தரமான கல்வி பெற வாய்ப்பளித்தல்; தல அளவில் பொருத்தமான பாடத்திட்டங்களை உருவாக்குதல்; இவற்றில் கிராம சபைகளுக்குப் பங்களித்தல். ஏராளமான தொழிற் பயிற்சிப் பள்ளிகளை (ஐ.டி.ஐ) உருவாக்குதல்; பள்ளி அளவில் தொழில் பயிற்சியையும் பொதுக் கல்வியையும் இணைத்தல், உலகத் தரமான உயர் கல்வி நிறுவனங்களை (ஐ.ஐ.டி எய்ம்ஸ் போல) உருவாக்கி திறமையுடைய எல்லோருக்கும் வாய்ப்பளித்தல்; டெல்லிப் பல்கலைக் கழகத்தில் ஜனநாயக விரோதமாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ள நான்காண்டு பட்டப் படிப்பை ரத்து செய்தல்; பள்ளிக் கல்வியில் விளையாட்டுகளுக்கு முக்கிய இடமளித்தல்; கல்வி உரிமைச் சட்டத்தின் வழியில், பணக்காரர், ஏழை எனும் வித்தியாசமின்றி எல்லோருக்கும் மருத்துவ நல உரிமைச் சட்டத்தையும் கொணர்தல்; பொது மற்றும் தனியார் மருத்துவ சேவைகளை அரசுக்குப் பொறுப்பாக்கல்; தனியார் துறைக்கு அரசு அளிக்கும் மாநியங்களின் பலன்கள் ஆம் ஆத்மிகளின் கையில் போய்ச் சேருவதை உறுதியாக்கல்; மாற்று மருத்துவங்களுக்கு உரிய இடமளித்தல்;

சமூக நீதி : நடைமுறையிலுள்ள இட ஒதுக்கீடுக் கொளகையை ஆம் ஆத்மி ஏற்கிறது; அதை உறுதியாகச் செயல்படுத்த விழைகிறது; இட ஒதுக்கீட்டினால் பயன்பெற்ற பிரிவினருக்குள்ளும் பின் தங்கிய நிலையில் இருப்போருக்கு முன்னுரிமை அளித்தல்; வனிக மற்றும் தொழில் முயற்சிகளுக்கு அரசு ஆதரவு; சாதி மற்றும் தீண்டாமைக்கு எதிரான விரிவான பொதுக் கல்வி அளித்தல்; ஒப்பந்தப் பணியில் உள்ள துப்புரவுத் தொழிலாளிகளை நிரந்தரமாக்கல்; அவர்களை இன்றைய நிலையிலிருந்து மீட்க அவர்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்துதல்; சாக்கடைக் குழிகளில் இறங்கி வேலை செய்வோருக்கு தீயணைப்புப் படையில் உள்ளவர்களைப் போல முகமூடி, இன்சூரன்ஸ் பாதுகாப்பு முதலியவற்றை அளித்தல்; அறிவிக்கை நீக்கப்பட்ட சாதியாரையும் (denotified tribes) நாடோடி இனத்தவரையும் பட்டியல் சாதியினருக்கு இணையாக அறிவித்து அரசியல் சட்டத்தில் உறுதி செய்யப்படும்; வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பட்டியல் பிரிவினருக்கன எல்லா உரிமைகளும் இவர்களுக்கும் வழங்கப்படுதல்;

சிறுபான்மையினர் : பா.ஜ.க விற்கு எதிரான அச்சத்தில் முஸ்லிம்கள் வேறு வழியின்றி இதுவரை காங்கிரசுக்கு வாக்களித்து வந்தனர். காங்கிரஸ் அவர்களின் நலன்களைப் புறக்கணித்தது. கலவரங்கள் தொடர்தல், அப்பாவிகள் கைது செய்யப்படுதல், இட ஒதுக்கீடு என்கிற வாக்குறுதிகள், தரங் குறைந்த கல்வி நிறுவனங்கள், ஊழல்கள் நிறைந்த வக்ஃப் நிர்வாகம் என்பதாக அவர்களின் நிலை அமைந்துள்ளது. அச்சத்தில் உள்ள இச்சமூகத்திர்கு சம உரிமைகளையும் பாதுகாப்பையும் அளித்து மத வன்முறைகளுக்கு முடிவு கட்ட ஆம் ஆத்மி கட்சி உறுதி பூண்கிறது; காவல்துறை அத்துமீறல்கள் மற்றும் முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிரான பொய்வழக்குகள் போடுதல் ஆகியவற்றை முடிவுக்குக் கொணர்தல்; பொய்வழக்கு போட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை: பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து முடித்தல்; தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனச் சேர்க்கைகளில் முஸ்லிம்கள் ஒதுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்தல்; அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்துதல்; தலித்களுக்கானா இட ஒதுக்கீடு மத அடிப்படையில் இன்று உள்ளது. அது தவறு என ஆம் ஆத்மி கட்சி நம்புகிறது; முஸ்லிம்களில் பெரும்பாலோர் அமைப்பு சாராத் தொழிலாளிகளாக உள்ளனர்; இத்துறையில் உள்ள முஸ்லிம்கள் உள்ளிட்ட எல்லோருக்கும் பொருளாதாரப் பாதுகாப்பை அளித்தல்; வக்ஃப் நிர்வாகத்தைச் சீர் செய்து அதன் பலன்கள் முஸ்லிம்களுக்குச் சென்றடைய வைத்தல்;

பெண்கள் : 33 சத இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவு; பாலியல் வேற்றுமைகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பொதுக்கல்வி பரப்பல்; இதற்கு எஸ்.எம்.எஸ் தொலைக் காட்சி உள்ளிட்ட எல்லா சாதனங்களையும் பயன்படுத்தல்; கருவிலுள்ள சிசுக்களின் பாலியல் சோதனைகளுக்கு இம்மியும் இடமளிக்காமை; பெண்களுக்குப் பாதுகாப்பான நல்ல வேலைவாய்ப்புகளை உறுதி செய்தல்; எல்லா அரசு நிறுவனங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் செயல் திட்டங்களை உருவாக்குதல்; பெண்களின் பாதுகாப்பிற்கான 24 மணி நேரப் பாதுகாப்புகளை உருவாக்குதல்;

நலத் திட்டங்கள் : பழங்குடிகளுக்கான வன உரிமைச் சட்டத்தைச் சிறப்புறச் செயல்படுத்துதல்; கிராம சபைகளின் மூலம் அவர்களை அதிகாரப்படுத்துதல்; கிராம சபைகளின் ஒப்புதலின்றி வன நிலங்கள் மற்றும் தாதுப் பொருட்கள் கையகப் படுத்தப்படுவது முடிவுக்குக் கொண்டு வரப்படுதல்; பழங்குடி மக்களின் கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை உறுதி செய்தல்; மாற்றுத் திறனாளிகளுக்கான தற்போதுள்ள 3 சத இட ஒதுக்கீட்டைச் சரியாகச் செயல்படுத்துதல்; கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் சிறப்புத் திட்டங்கள்; அகக்ககட்டுமானங்கள் அனைத்தும் மாற்றுத் திறனாளிகளுக்குத் தடை இல்லாத வகையில் அமைக்கப்படுதல்; மாற்றுத் திரனாளிகளுக்கான எல்லா நிறுவனங்களிலும் அவர்கள் போதிய அளவில் இடம் பெறுமாறு செய்தல்;

ஈழம் :________________________________________

தொழிலாளர்; மருத்துவர், ஆசிரியர், ஓட்டுனர் முதலான ஆண்டு முழுவதும் தேவைப்படும் பணிகளில் ஒப்பந்தமுறையை அனுமதிக்கமாட்டோம்; அப்படி உள்ளவர்கள் நிரந்தரமாக்கப்படுவர்; ஆனால் சில காலமே தேவைப்படும் பணிகளில் ஒப்பந்த முறை தவிர்க்க இயலாது; அப்படியான ஒப்பந்தப்பணிகளில் அவர்களுக்கும் நிரந்தர ஊழியர்களுக்கும் இடையிலான ஊதியம், பணி நிலைமைகள் உட்பட எல்லா வேறுபாடுகளும் ஒழிக்கப்படும்; அமைப்புசாராத் தொழிலாளிகளுக்கு கூலி, பணி நேரம் முதலானவை குறித்த நெறிமுறைகள் உருவாக்கப்படும்; இவர்கள் மீதான காவல்துறைத் தொந்தரவுகள் ஒழிக்கப்படும்; ஓய்வூதியம் முதலான குறைந்த பட்ச சமூகப் பாதுகாப்புகள் உறுதி செய்யப்படும்;

மீனவர் : ________________________________________________

தேர்தல் சீர்திருத்தம்: தற்போதுள்ள தேர்தல் முறையுடன் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையையும் இணைத்தல்; போட்டியிடும் வயதை 25 லிருந்து 21 ஆகக் குறைத்தல்; 9வேட்பாளர்களை) ‘மறுக்கும் உரிமை’, (தேர்ந்தெடுக்கப்பட்டோரை) ‘திருப்பி அழைக்கும் உரிமை’ ஆகியவற்ரைக் கொணர்தல்; தேர்தல் ஆணையரை அரசு நியமிக்காமல் பல உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அரசியல் சட்டக் குழு நியமித்தல், தேர்தல் ஆணையத்திற்கு அதிக அதிகாரம்; அரசியல் கட்சிகளுக்குக் கருப்புப் பணம் செல்லுதலைக் கட்டுப்படுத்தும் பொறியமைவுகளை வலிமையாக்குதல்தரசியல் கடிகளைத் தகவல் உரிமைச் சட்டம் மற்றும் சி.ஏ.ஜி யின் தணிக்கை ஆகியவற்றுக்கு உட்படுத்தல்;

தமிழ் / தமிழகம்: —————————————————————————-

சேது சமுத்திரத் திட்டம்: ___________________________________________

பிற: ‘அஃப்சா’ சட்டத்தை ஒரு குறிப்பிட்ட காலகெடுவுக்கு உட்பட்டதாகவும், மனிதாய முகங் கொண்டதாகவும் மாற்றுதல்; பெண்களுக்கு எதிரான இராணுவ வன்முறைகள் தண்டனைக்கு அப்பாற்பட்டதாக உள்ளதை முடிவுக்குக் கொணர்தல்; காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பது தவிர எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எந்த வகையிலும் பொறுமை காட்டாமை; காஷ்மீர்ப் பிரசினையில் இராணுவ நடவடிக்கைகளைக் குறுகிய காலத் திட்டமாகவும், அதிகாரப் பரவல் என்கிற வகையில் காஷ்மீருக்கு அதிகாரங்களை அளித்து அந்த அடிப்படையில் அமைதிக்கு வழி வகுத்தலை நீண்டகாலத் திட்டமாகவும் கொள்ளல்; மாஓயிஸ்ட் பிரச்சினையைப் பொருத்தமட்டில் பாதுகாப்புப் படைகளை நவீனப்படுத்துதல் ஒரு பக்கமாகவும், பேச்சு வார்த்தைகள், வளர்ச்சி நடவடிக்கைகள் என்பன இன்னொரு பக்கமாகவும் அமைதல்;

முப்படைகளையும் ஒருங்கிணைத்து வளர்த்தல்; பாதுகாப்பு தொடர்பான முடிவுகள் எடுப்பதில் இராணுவ அதிகாரிகளுக்கு உரிய பங்களித்தல்; ஆயுத பேரங்களை வெளிப்படையாக ஆக்குதல்; ஆயுதங்களின் உள் நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல்;

கால்நடைப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வகையில் ‘இந்திய கால்நடை நல வாரியம்’; அதிகாரப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும்; விளையாட்டில் ஊழல்களுக்கும் ஊழல் பேர்வழிகளுக்கும் இடமில்லாமல் செய்தல்; 2011க்குப் பின் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் யாவும் புதிய ‘நிலம் கையகப்படுத்தப்படும் சட்ட’த்தின் கீழ் கொண்டு வரப்படும்; இச்சட்டத்தில் ‘பொதுப் பயன்பாட்டிற்காக” எனும் சொல் இறுக்கமாக வரையறுக்கப்படும்; கிராம சபைகளின் ஒப்புதலின்றி நிலம் கையகப்படுத்தல் இயலாது;

சிறப்பு அம்சங்கள்; ஊழலுக்குக் காரணமான சிக்கலான அரசு நடைமுறைகளை எளிமைப்படுத்தி அதிகாரங்களைக் கிராம சபைகள் மற்றும் மொகல்லா சபைகளுக்குக் கொண்டு செல்லும் ‘சுயராஜ்யச் சட்டத்தை’ நிறைவேற்றல்; தம் பகுதியின் வளர்ச்சித் திட்டங்களைச் சுதந்திரமாக நிறைவேற்ற ஏதுவாக சுதந்திரமாகச் செலவிடக் கூடிய நிதியை ஒவ்வொரு கிராம/ மொகல்லா சபைகளுக்கும் அளித்தல்; அப்பகுதியில் மேற்கொள்ளப்படும் அரசுப் பணிகளுக்கான நிதி வினியோகத்தை மொகல்லா அவைகள் அனுமதித்தால் மட்டுமே அளித்தல்; பிறப்பு, இறப்பு, சாதி மற்றும் வருமானச் சான்றிதழ்களை அவ்வவ் கிராம அவைகளே அளித்தல்; மதுபானக் கடைகளை திறக்கிற அல்லது மூடுகிற அதிகாரத்தை கிராம அவைகளுக்கு அளித்தல்; இந்த முடிவெடுக்கும்போது குறைந்த பட்சம் 50 சதப் பெண் உறுப்பினர்கள் அந்த அவையில் இருத்தல் அவசியம்; உள்ளூர்ப் பள்ளிகள் மற்றும் சுகாதார நிலையங்களைக் கண்காணிக்கும் உரிமைகள் கிராம சபைகளுக்கு உண்டு; உதவித் தொகைகள் முதலான அரசுத் திட்டங்களின் பயனாளிகளைத் தேர்வு செய்யும் உரிமையும் கிராம சபைகளுக்கே உண்டு; இத்தகைய முடிவுகளை கிராம சபைகள் எடுக்கும்போது ஒவ்வொரு விளிம்பு நிலைப் பிரிவினரும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பங்கு பெறுதலைக் கட்டாயமாக்குதல்; சில குறிப்பிட்ட துறைகளில் சட்டங்களை இயற்றும் போது கிராம அவைகளின் ஒப்புதல்களைக் காலப்போக்கில் கட்டாயமாக்குதல்;

சிறிய வழக்குகளை விரைவாக விசாரித்துத் தீர்க்கும் வகையில் ‘கிராம நியாயாலயங்களை’ உருவாக்குதல்; நீதிபதிகள் நியமனத்திற்கான ஆணையம் மற்றும் நீதித்துறைக்கான ஜன் லோக் பால் முதலியன உருவாக்கல்; எல்லா மட்டங்களிலும் விரைவு நீதிமன்றங்கள்; ஐந்தாண்டுகளில் நீதி மன்றங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கல்;

காவல்துறை சீர்திருத்தங்களை அமுலாக்கல்; காவல் நிலையங்களை கிராம அவைகளுக்குப் பொறுப்பாக்கல்; சட்ட ஒழுங்குப் பராமரிப்பையும், புலன் விசாரணையையும் தனித்தனித் துறைகளாக்குதல்; போலீஸ் காவல் என்பதை ஒழித்து, நீதித்துறைக் காவலை மட்டுமே அனுமதித்தல்; காவல்துறை நடவடிக்கைகளை வெளிப்படையாக்கும் முகமாக காவல் நிலைய நடவடிக்கைகள் அனைத்தையும் வீடியோ பதிவு செய்தல்; காவலர்களின் வேலை நேரத்தை 8 மணியாகக் குறைத்து அவர்களின் நலன்களை மேம்படுத்தல்; வி,ஐ.பி பாதுகாப்பிற்கு அதிக அளவில் போலீஸ் பாதுகாப்பு அளிப்பதைக் குறைத்தல்;

கூட்டணி :

ஆதரவு அமைப்புகள்:

9. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

இந்தத் தேர்தல் மதவாத சக்திகளுக்கும் மதச்சார்பற்ற சக்திகளுக்கும் இடையிலான போராட்டக் களமாக மாறியுள்ளது. மதச்சார்பர்ற சக்திகள் ஒற்றுமை இல்லாமல் பிரிந்து கிடக்கின்றனர். இந்த ஆபத்தான சூழலில் மதச்சார்பின்மையைக் காப்பாற்றுவதும் சமூக நீதியைப் பாதுகாத்து விரிவுபடுத்துவதும் நம் கடமை ஆகிறது இக்கடமையை உணர்ந்து 9.வி,சி,க, தி.மு,க தலைமையிலான சனநாயக முற்போக்குக் கூட்டணியில் இணைந்து இத் தேர்தலைச் சந்திக்கிறது. மதச் சார்பின்மையைப் பாதுகாப்பது சமூக நீதிக் கருத்தோடு பிணைந்துள்ளது. மதவாத சக்திகள் ஆட்சியைக் கைப்பற்றினால் மதச்சார்பின்மையை மட்டுமின்றி சமூக நீதியையும் சவக்குழிக்கு அனுப்பி விடுவார்கள். 1999 தேர்தலில் வாஜ்பாயி தலைமையில் போட்டியிட்ட பா.ஜ.க, சில இந்துத்துவக் கோரிக்கைகளைக் கிடப்பில் போடுவதாக அறிவித்தது. 2002 மத வன்முறையை ஊக்கப்படுத்தியவர் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மோடியை முன்நிறுத்தி இன்றைய தேர்தலைப் பா.ஜ.க சந்திப்பதற்குப் பின்னணியாக வன்முறை அமைப்பு எனப் பலமுறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உள்ளது. இவ்வாறு இந்தத் தேர்தல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வகுப்புவாதத்திற்கும் சனநாயகத்திற்குமான போட்டியாக அமைந்துள்ளது. புரட்சியாளர் அம்பேத்கர், அயோத்திதாச பண்டிதர், தந்தை பெரியார் ஆகியோர் வகுத்துத் தந்த பாதையில் அரசியல் பயணத்தைத் தொடரும் வி.சி.க கொள்கை வழி நின்று இத் தேர்தலை எதிர்கொள்கிறது. மதச்சார்பின்மை, சமூகநீதி, தமிழர் நலன்கள் ஆகியவற்றை முன்நிறுத்தி வி.சி.க இத்தேர்தலைச் சந்திக்கிறது.

விவசாயம் : விவசாயத் துறைக்குப் புத்துயிர் அளித்தல்; சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காகச் சாகுபடி நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை நிறுத்துதல்; உலகமயம் மற்றும் தனியார் மயம் ஆகியவற்றின் விளைவாக மண்ணும் . சுற்றுச் சூழலும் பாழ்படுவதற்கு எதிர்ப்பாக பிற முற்போக்கு சக்திகளுடன் இணைந்து போராடுதல்; பாரம்பரிய விதை வகைகளையும் கால்நடைகளையும் காப்பாற்றுதல்;

தொழில் / பொருளாதாரம் : வல்லரசுச் சார்புள்ள பொருளாதாரக் கொள்கையைக் கைவிட்டு தற்சார்புள்ள பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றல்;

வணிகம் : ———————————————————————————-

அயலுறவு : அண்டை நாடுகளுடன் நட்புறவைப் பேணுதல்; அமெரிக்க ஆதரவு நிலையைக் கைவிட்டு தன்னாளுமையுள்ள அயலுறவுக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும்

ஊழல் : ________________________________________________________

கல்வி, மருத்துவம் : கல்வி தொடர்பான பல்வேறு குழுக்களின் பரிந்துறைகளையும் கவனத்தில் கொண்டு இன்றைய காலத்திற்குகந்த வகையில் கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளல்; கல்வியை மாநிலப்பட்டியலுக்குக் கொணர்தல்; கல்விக்கென அந்தந்த மாநிலங்களில் வசூலிக்கப்படும் கூடுதல் வரியை அந்தந்த மாநிலங்களிலேயே செலவிடல்; தேசிய அளவில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஒன்றை அமைத்து அதை பொதுத்துறை காப்பீட்டு நிருவனங்கள் மூலம் செயல்படுத்துதல்; அனைவருக்கும் கழிப்பறை வசதி செய்தல்;

சமூக நீதி : தலித் மக்களுக்கு அனைத்துத் துறைகளிலும் இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தும் வகையில் புதிய சட்டம் ஒன்றை இயற்றல்; தனியார் துறையில் இட ஒதுக்கீடு அளித்தல்; மாநிலங்கள் அவையிலும், சட்ட மேலவைகளிலும் தலித்களுக்கு இட ஒதுக்கீடு கோரல்; நீதித் துறையில் இட ஒதுக்கீடு, மதம்மாறிய தலித்களுக்கும் இட ஒதுக்கீடு அளைக்க அரசியல் சட்டத்தில் திருத்தம் கோரல், தலித் கிறிஸ்தவர்களைப் பட்டியல் பிரிவில் இணைத்தல்; ஒப்பந்தப்பணிகளிலும் இட ஒதுக்கீடு வழங்கல்; இழி தொழில்களை முற்றாக ஒழிப்பது, சாதிப்பெயர்கள் மற்றும் அடையாளங்களைத் தரிப்பது ஆகியவற்றைத் தடை செய்ய வற்புறுத்துவது; அனைத்து ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கும் பொதுச் சொத்தில் பங்கு; பட்டியல் ஆதியினருக்கான நலத் திட்டங்களை நிறைவேற்ரும் அமைப்புகள் வங்கிகளை நம்பியிராமல் சுய நிதி அதிகாரம் உடையவையாக மாற்றப்படுதல்; அடிப்படை வசதிகளற்ற தொகுப்பு வீடுகளுக்குப் பதிலாக ரூ 2 லட்சம் பெறுமானமுள்ள அடிப்படை வசதிகள் உள்ள பாதுகாப்பான வீடுகளைக் கட்டித் தருதல்; வீடற்றவர்கள் இல்லை என்கிற நிலையை உருவாக்குதல்; விவசாயக் கூலிகளாக அடிமைப்பட்டுக் கிடக்கும் பட்டியல் பிரிவினர் பயன்பெறும் வகையில் புதிய நிலப்பகிர்வுச் சட்டம் கொணர்ர்தல்; தரிசு மற்றும் உபரி நிலங்களை கூலிகளாக உள்ள பட்டியல் பிரிவினர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்குத் தலா 5 ஏக்கர் எனப் பிரித்தளித்தல்; பஞ்சமி நிலத்தை மீட்பது; ஒடுக்கப்பட்ட பிரிவு மாணவர் அனைவருக்கும் தொழிற் கல்வியை இலவசமாக்கல்; தனியார் கல்லூரியில் பயில்வோருக்கு வட்டியில்லாக் கடன் அளித்தல்; மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயரும் தலித்கள் இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்துவதில் உள்ள தடைகளைக் களைதல்; பழங்குடியினர் சாதிச்சான்றுகள் பெறுவதில் உள்ள தடைகளை நீக்குதல்; மலைவாழ் பழங்குடியினர் தம் வாழிடங்களிலிருந்து அகற்றப்படுதலை எதிர்த்தல்;

சிறுபான்மையினர் : இராமர் கோவில், பொது சிவில் சட்டம் ஆகியவற்றை பா.ஜ.க கையில் எடுத்துள்ள நிலையில் சிறுபான்மையோரின் பாதுகாப்பு இன்று கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் அவர்களின் உரிமையைப் பாதுகாப்பதற்கான சச்சார் குழு, ரங்கநாத் மிஸ்ரா குழு ஆகியவற்றின் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்ற வற்புறுத்தல். இராணுவம், துணை இராணுவம், காவல்துறை, உளவுத்துறை ஆகியவற்றில் சிறுபான்மையினரின் மக்கள்தொகைக்கு ஏற்ப அவர்கள் இடம் பெறுவதற்குப் பாடுபடல்; கல்வித் திட்டங்களில் சிறுபான்மையினர் மக்கள் தொகைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு மற்ரும் சிறப்புக்கூறுத் திட்டங்கள் மூலம் அவர்களின் கல்வி நிலையை, குறிப்பாகப் பெண்களின் கல்வி நிலையை மேம்படுத்துதல்; வகுப்புவாத வன்முறைத் தடுப்பு மசோதாவுக்குச் சட்ட வடிவம் கொடுத்தல்;

பெண்கள் : கல்வி, வேலைவாய்ப்புகளில் மட்டுமின்றி நாடாளுமன்றம், சட்டமன்றங்களிலும் 50 சத ஒதுக்கீடு அளித்தல்; மகளிர் சுய உதவிக் குழுக்களிடமே கிராமப்புற பொருளாதார மேலாண்மையைக் கையாளும் உரிமையை அளித்தல்; கருவிலுள்ள சிசுக்களுக்குப் பாலியல் பரிசோதனை செய்வதைக் கடும் தண்டனைக்குரியதாக்குதல்; வாடகைத் தாய்மார் முறையைத் தடை செய்தல்; குழந்தைத் திருமண முறையை ஒழிக்கும் வகையில் கடும் சட்டத் திருத்தம் கொணர்தல்; கோவில்களில் அனைத்துச் சாதியினரும் மட்டுமல்ல பெண்களும் அர்ச்சகராவதற்குரிய சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளல்;

நலத் திட்டங்கள் : உயர் கல்வி பயில இயலாத இளைஞர்களுகுத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்தல்; தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் குடும்பத்திற்கு 100 நாள் வேலை என்பதை ஒரு நபருக்கு ஆண்டுக்கு 150 நாள் என உயர்த்துதல்; அரவானியருக்குத் தமிழகத்தில் கிடைக்கும் உரிமைகள் பிற மாநிலங்களிலும் கிடைக்க வழி செய்தல்;

ஈழம் : கச்சத் தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து கச்சத்தீவை மீட்பது; ஈழத் தமிழர்களின் நல்வாழ்வுக்குத் தமிழ் ஈழமே தீர்வு; புலம் பெயர்ந்ட தமிழர்கள் அகதிகள் முகாம்களில் வாடுகின்றனர். திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளாகவே அவர்கள் நடத்தப்படுகின்றனர். இந்நிலையை மாற்ற அகதிகளுக்கன ஐ.நா உடன்பாட்டில் இந்தியா கையெழுத்திட வேண்டும்;.

தொழிலாளர்; ______________________________________

மீனவர் :சிங்கள கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர் பிரச்சினையை சர்வ தேச நீதி மன்றத்திற்குக் கொண்டு சென்று உரிய இழப்பீடுகளைப் பெற்றுத் தருதல்;;

தேர்தல் சீர்திருத்தம் : _____________________________________________

தமிழ் / தமிழகம்: மாநில அரசுகளைக் கலைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கும் 356 ம் பிரிவு நீக்கம்; வெளியுறவு, பாதுகாப்பு முதலான துறைகளைத் தவிர பிற அதிகாரங்களை மாநில அரசுகளுக்கே வழங்கல்; நிதி ஒதுக்கீடுகளில் மாநில உரிமைகளைப் பாதுகாத்தல்; தமிழகம் இழந்த பகுதிகளை மீட்கும் வகையில் மாநில எல்லைகளை மறுவரையறை செய்தல்; அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்குரிய நதிநீர் உரிமைகளைப் பெறுதல்; இராணுவங்களில் தேசிய இன அடிப்படையில் தமிழகத்திற்குரிய அளவில் பங்களித்தல்; அனைத்து மாநில மொழிகளையும் ஆட்சி மொழிகளாக்குதல்; உயர்நீதிமன்ற வழக்காடு மொழிகளாகவும் ஆக்குதல்; இந்திய அரசு மற்றும் தனியார்துறை வேலைகளுக்கான தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்துதல்; வெளிநாடு வாழ் இந்தியத் தமிழர்களின் நலம் பேணுவதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் தனியே அமைச்சகம் உருவாக்கப்படுதல்;

சேது சமுத்திரத் திட்டம்: மத வெறிக் காரணங்களை முன்னிட்டு இத் திட்ட நிறைவேற்றம் தடுக்கப்பட்டிருப்பது வேதனைக்குரியது; சுற்றுச் சூழலுக்குத் தீங்கு நேரா வண்ணம் இத்திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றப் பாடுபடல்;

பிற: ________________________________________________________

சிறப்பு அம்சங்கள்; ______________________________________________

கூட்டணி : தி.மு.க. ம.ம.க. புதிய தமிழகம்,

ஆதரவு அமைப்புகள்:

10. பாட்டாளி மக்கள் கட்சி

2014 நாடாளுமன்றத் தேர்தல் மிக முக்கியமானது; அ.தி.மு.க, தி.மு.க அல்லாத மாற்று அணி வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது; பா.ம.க அங்கம் வகிக்கும் தே.ஜ.கூட்டணி வெற்றி பெறுவதன் மூலம் திரு.நரேந்திரமோடி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்; இதன் மூலம் இந்திய மக்களும் தமிழ்நாட்டு மக்களும் மிக் சிறந்த நலன்களும் அடைவார்கள். எல்லோரும் எல்லா அடிப்படைத் தேவைகளும் பூர்த்திசெய்யப்பட்டு வளமாக வாழும் நிலை ஏற்படும் என பா.ம.க நம்புகிறது. பா.ம. கவையும் கூட்டணிக் கட்சிகளையும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்குமாறு தமிழக மக்களை பா.ம.க கேட்டுக் கொள்கிறது.

விவசாயம் : இந்திய ஆறுகள் தேசியமயமாக்கப் படுதலை வற்புறுத்தல்;விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளிகளுக்கும் நேரடி ஊதியம் வழங்கல், விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்தல் ஆகியவற்றிற்கான திட்டங்களை ஆராய்ந்து செயல்படுத்த ‘உழவர் வருவாய்க் குழு’ ஒன்றை அமைத்தல்; 50 சத லாபம் கிடைக்குமாறு விளைபொருட்களுக்கான விலையை நிர்ணயம் செய்தல்; வேளாண்மை சார்ந்தோருக்கு ஓய்வூதியம் மற்றும் காப்பீடு வழங்கள்; முதலான கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் செய்யப்படும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்; மரபணு மாற்றப் பயிர்களுக்கு அனுமதி மறுத்தல்; மரபணுப் பயிர் விளைப்புச் சோதனைக்கு அளிக்கப்பட்ட அனுமதிகளை ரத்து செய்ய வலியுறுத்தல்; மரபணு மாற்றம் இல்லாத பயிர்களுக்கு முத்திரை இடும் முறையைக் கொணர்தல்; நிலம், நீர், காற்று, மாசுபடாமல் காப்பாற்றப்படுவதற்கேற்ற வகையில் வளர்ச்சித் திட்டங்களுக்கும் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கும் இடையில் சமநிலை உருவாக்குதல்;

தொழில் / பொருளாதாரம் : சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அதிக எண்ண்னிக்கையில் உருவாக்கப்படுதல்; அரசும் தொழில்துறையும் ஒன்றிணைந்து வேலைவாய்ப்புகளை அத்ஹிகரிக்கும் வகையில் தொழிற் திட்டங்களை உருவாக்குதல்; பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கல் கூடாது; நலிவடந்த பொதுத்டுறை நிறுவனங்களைச் சீரமைத்தல்; இந்தியத் தொழில் துறையின் போட்டித் திறனை உயர்த்துதல்;

வணிகம் : சில்லரை வணிகத்தில் நேரடி அந்திய மூதலீட்டை எதிர்ப்போம்;

அயலுறவு : ——————————————————————————-

ஊழல் : ஓட்டு விற்பனை என்பது அரசியலை பிடித்த புற்று நோய். வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுக்கும் இழிசெயல் ‘அனைத்து ஊழல்களின் தாய்’ என்ற அழைக்கப்படுகிறது. கருப்புப் பணத்தையும், பெரும் ஊழல்களையும், இயற்கை வளக் கொள்ளையையும் ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கட்சிகள் ஊக்குவிக்கின்றன. இதை அகற்ற பாடுபடுவோம்;

கல்வி, மருத்துவம் : பள்ளிக் கல்வியை முழுக்க முழுக்க அரசுத் துறையினதாக ஆக்குதல்; தமிழகத்தில் சமச்சீர் கல்வி எனப்படும் பொதுப்பள்ளி முறையை முழுவீச்சில், முழு அளவில் செயல்படுத்தப்பட பா.ம.க. பாடுபடும்: பள்ளிக்கல்வி முழுவதும் தமிழ்மொழி மூலமாகப் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவோம்; ஆங்கிலம் இரண்டாவது மொழியாக சிறந்த முறையில் கற்பிக்கப்பட வேண்டும். அனைத்து மாணவர்களும் ஆங்கிலத்தை முழுமையாகக் கற்க உறுதி செய்வதுடன் மொழிச் சிறுபான்மையினர் அவரவர் தாய்மொழியை மூன்றாவது மொழியாகக் கற்றுக் கொள்ளவும் வழிவகை செய்ய பாடுபடுவோம்; மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில் சேர்வதற்காக நுழைவுத் தேர்வுகள் நடத்த முயற்சிக்கப்பட்டால், அதனை பா.ம.க. எதிர்க்கும். எந்த ஒரு வடிவத்திலும் நுழைவுத் தேர்வை அனுமதிக்கமாட்டோம்; அனைவருக்கும் முழுமையான நலவாழ்வு வசதிகளை ஏற்படுத்தித் தருதல்; மது மற்றும் புகையிலை ஒழிப்பு திட்டத்தை அமல் படுத்துவோம்; உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ள வழிகாட்டுதலின்படி இந்தியாவை ‘புகையிலையில்லா நாடாக’ மாற்ற பாடுபடுவோம். மொத்த தேசிய உற்பத்தியில் 3 முதல் 5 சதம் வரை நல்வாழ்வுக்காகச் செலவிடல்; கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொணர்தல்; தொற்றாத நோய்கள் தடுப்புத் திட்டத்தைச் செயல்படுத்துதல்;

சமூக நீதி : தனியார் பள்ளிகளிலும் இட ஒதுக்கீடு; சமூக நீதியும், சமத்துவமும் நிலைக்க சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்; இடஒதுக்கீடு விகிதாசாரத்தை மாநிலங்களின் நிலைமைக்கேற்ப ஒவ்வொரு மாநிலமும் தானே முடிவு செய்து கொள்ள தேவையான அரசியல் சட்ட திருத்தம் செய்ய வேண்டும்; பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற கருத்தை பா.ம.க. அடியோடு எதிர்க்கும்; அமைப்பு சார்ந்த தனியார் துறைகளில் சாதிவாரி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்;கல்வி, வேலை, தொழில் தொடங்க உதவி, அரசின் ஒப்பந்தங்களில் பங்கு உள்ளிட்ட அனைத்திலும் ஒவ்வொரு சாதியினருக்கும் மக்கள் தொகை அளவுக்கு ஏற்ப ஒதுக்கீடு வழங்க வேண்டும்;பின்தங்கியவர்களில் முன்னேறியவர்கள் என்ற கருத்தை நீக்க வேண்டும்; சாதி மேம்பாட்டுக் குறியீடு எனும் அளவீட்டு முறையை ஏற்படுத்துதல்; IIT, AIMS போன்ற நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கான தடைகளை நீக்குதல்; பட்டியல் பிரிவினருக்கான சிறப்புக் கூறுத் திட்டம் முழுமையாகச் செயல்படுவதை உறுதி செய்தல்;

சிறுபான்மையினர் : இந்தியாவின் பன்முகத் தனமையைப் பாதுகாத்தல்; மதம், இனம்,மொழி என எந்த அடிப்படையிலும் யாரும் பாதிக்கப்படாதிருத்தலை உறுதி செய்தல்; பல மதங்களையும் மாறுபட்ட பழக்க வ ழக்கங்களையும் கொண்ட இந்திய நாட்டில் எல்லோருக்கும் ஒரே விதமான பொது சிவில் சட்டம் தேவையில்லை என்பது பா.ம.க.வின் நிலைப்பாடாகும். ஒவ்வொரு பிரிவும் தத்தமது மத நம்பிக்கைகளை பின்பற்றும் வகையில் மாறுபட்ட சிவில் சட்டங்களை பின்பற்றுவது உலகின் பல நாடுகளில் நடைமுறையில் உள்ள ஒரு அடிப்படை உரிமைதான். இந்த உரிமை காக்கப்பட பாடுபடும்; மொழிச் சிறுபான்மையினர் அவரவர் தாய்மொழியை மூன்றாவது மொழியாகக் கற்றுக் கொள்ளவும் வழிவகை செய்ய பாடுபடுவோம்;

பெண்கள் : பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அடியோடு ஒழித்து அவர்களின் பாததுகாப்பை உறுதி செய்தல்; பள்ளி கல்லூரி எல்லும் மாணவியர் ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றப்படுவதிலிருந்து பாதுகாத்தல்;

நலத் திட்டங்கள் : வீடற்ற அனைவருக்கும் வீடு அளிப்பதற்கான திட்டத்தை சிறப்புடன் நிறைவேற்றி அனைவருக்கும் உறைவிடம் என்ற கொள்கை நிறைவேற்ற துணை நிற்கும்: தனிநபர்களுக்கு ஆண்டுக்கு 6 லட்ச ரூபாய் வரையிலான வருவாய்க்கு வருமானவரி விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும். மகளிருக்கு 20 விழுக்காடும், மூத்தக் குடிமக்களுக்கு 25 விழுக்காடும் கூடுதல் வருமானவரி விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கும்; தனி நபர்களின் சேமிப்பு மீது ரூ.2 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தும்; ஆயுள் காப்பீடு சேவை வரி ரத்து செய்யப்படும்; மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்ட நாட்களை அதிகரித்தல்; ஐ.நா மாற்றுத் திறனாளிகளுகான உடன்படிக்கை விதிகள் இந்தியாவில் முழுமையாக நிறைவேற்றப் பாடுபடல்; கட்டமைப்பு மேம்பாடு, பாதுகாக்கப்பட்ட குடி நீர், திறந்த வெளிக் கழிப்பிடங்களை நீக்குதல் முதலியன;

ஈழம் : இலங்கையில் பூர்வீமாக தமிழர்கள் வாழும் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ‘தமிழீழம்’ அமைய வேண்டும். தமிழீழம் அமைய இந்திய அரசு துணை நிற்க வேண்டும்; இலங்கை மீதான ஐ.நா விசாரணைக்குழு இந்தியாவில் செயல்பட அனுமதி அளித்தல்; விசாரணைக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்; கச்சத்தீவை மீட்க வ்

தொழிலாளர்; திறமை மிக்க தொழிலாளிகளை உருவாக்கும் வகையில் பயிற்சித் திட்டங்களை உருவாகுதல்; அமைப்பு சாராத் தொழிலாளரின் ஊதியஹத்தை அதிகமாக்குதல், கடன்வசதி அளித்தல், சிறு, குறு தொழில்கள் தொடங்குதலை எளிதாக்குதல் முதலியன; தொழிலாளர் நலன் பெறும் வகையில் அனைத்துத் தொழிலாளர் நலச் சட்டங்களையும் சீரமைத்தல்; ஓய்வூதிய நலன்கள் முதலியவற்றை உள்ளடக்குதல்; தமிழர்கள் அதிக அளவில் பணியாறும் வெளி நாட்டுத் தூதரகங்களில் தமிழ் அதிகாரிகளை நியமித்தல்; புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல்;

மீனவர் : ————————————————————————————

தேர்தல் சீர்திருத்தம்: விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறைக்கு ஆதரவு; வெளிநாட்டில் வேலை செய்வோர் தூதரகங்களில் வாக்களிக்க வசதி செய்தல்: வாக்குகள் விற்கப்படுதலை முடிவுக்குக் கொணர்தல்;

தமிழ் / தமிழகம்: உயர் நீதி மன்றம் மற்றும் போட்டித் தேர்வுகளில் தமிழ்; இந்திய அரசியல் சட்டத்தின் 8–வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள தமிழ் மொழி உள்ளிட்ட 22 மொழிகளையும் இந்திய அரசு, ஆட்சிமொழிகள் ஆக்கிட வேண்டும். அதற்கான அரசியல் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பாடுபடுவோம்; விவசாயத்தை அழிக்கும் மீத்தேன், எரிவாயு குழாய் திட்டங்கள் ரத்து செய்யப்படும்: அதேபோல ‘கெயில் இந்தியா’ திட்டத்தை ரத்து செய்தல்; அணு உலை அறவே தேவையில்லை என்பதே பா.ம.க.வின் நிலைப்பாடு. கூடங்குளம் மற்றும் கல்பாக்கத்தில் அணு உலைகளை முற்றிலுமாக மூடவும், இனி புதிதாக அணு உலைகள் தொடங்குவதை முற்றிலுமாக கைவிடவும், இந்தியாவும் தமிழ்நாடும் அணுசக்தி இல்லாத நாடாக விளங்கவும் பா.ம.க. குரல் கொடுக்கும்; தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள மின் திட்டங்களை விரைந்து முடிக்க வலியுறுத்துவோம். பொதுத்துறை மூலமாக புதிய மின் திட்டங்களைத் தொடங்கவும், தேசிய மின் கட்டமைப்பில் இருந்து தமிழ்நாட்டுக்கு மின்சாரம் கொண்டுவரும் வழித் தடத்தை தேவையான அளவில் உருவாக்கவும் பாடுவோம்; கிழக்குக் கடற்கரை மாவட்டங்களில் உருவாக்கப்படும் தனியார் அனல் மின் திட்டங்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்து நிறுத்த பாடுபடல்; தற்போது தமிழகத்தில் நிலுவையிலுல்ள தொடர் வண்டித் திட்டங்கள அனைத்தையும் நிறைவேற்றுதல்; மின் திட்டங்களை விரைந்து முடித்தல்; மத்திய அரசு தமிழக அரசுடன் சுமுகமான உஅவைப் பேண வேண்டும்; அண்டை மாநிலங்கள் வழியாக வரும் நதி நீர் உரிமைகளைப் பாதுகாத்தல்; காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவை உடனடியாக நியமிக்க வற்புறுத்தல்; புதுச்சேரிக்குத் தனி மாநிலத் தகுதி அளித்தல்;

சேது சமுத்திரத் திட்டம்: ——————————————————————-

சிறப்பு அம்சங்கள்; வன்கொடுமைச் சட்டத்தின் மூலம் நிரபராதிகள் அதிகம் பாதிக்கப்படுவதால் அதில் திருத்தம் கொண்டு வருவோம்; தேசியப் பாதுகாப்புச் சட்டம், குண்டர் சட்டம் முதலிய தடுப்புக் காவல் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தலை அடியோடு ஒழிக்கப் பாடுபடுவோம்.குடும்ப அமைப்பைக் காக்கும் வகையிலும், வளரிளம் பருவத்தினரின் எதிர்கால நலன் காக்கவும் 21 வயதுக்கு கீழானவர்களின் திருமணத்துக்கு இருதரப்பு பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வழி செய்வோம்; புதிய மாற்றங்களுக்கு ஏற்பப் புதிய அரசியல் சட்டம் உருவாக்குதல்; சிறிய மாநிலங்கள் அமைக்கப்படுவதற்கு ஆதரவு;;

பிற: அணு உலை அறவே தேவையில்லை என்பதே பா.ம.க.வின் நிலைப்பாடு. கூடங்குளம் மற்றும் கல்பாக்கத்தில் அணு உலைகளை முற்றிலுமாக மூடவும், இனி புதிதாக அணு உலைகள் தொடங்குவதை முற்றிலுமாக கைவிடவும், இந்தியாவும் தமிழ்நாடும் அணுசக்தி இல்லாத நாடாக விளங்கவும் பா.ம.க. குரல் கொடுக்கும்; மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில் நுழைவுத் தேர்வுகளை அனுமதிக்கமாட்டோம்;

சுதந்திரமான நீதிபதிகள் தேர்வாணையத்தை உருவாக்குதல்; புதிய மாற்றங்களுக்கு ஏற்பப் புதிய அரசியல் சட்டம் உருவாக்குதல்;

கூட்டணி : பார்க்க ம.தி.மு.க அறிக்கைச் சுருக்கம்.

ஆதரவு அமைப்புகள்: பார்க்க ம.தி.மு.க அறிக்கைச் சுருக்கம்.

11. சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா

இந்தியா தன்னை வடிவமைத்த தலைவர்களின் கனவான ஜனநாயகம் மற்றும் சோஷலிசப் பாதையிலிருந்து விலகி மக்கள் விரோத தாராளமயக் கொள்கையில் சரணடைந்துள்ளது. இது கடுமையான பொருளாதார ஏற்றத் தாழ்வு, வறுமை பட்டினி ஆகியவற்றிற்குக் காரணமாகியுள்ளது. அயலுறவுக் கொள்கையில் இந்தியா இப்போது அமெரிக்கா மற்றும் சியோனிச பயங்கரவாத நாடாகிய இஸ்ரேல் ஆகியவற்றின் பக்கம் சாய்ந்துள்ளது. ஊழல் உச்சம் முதல் அடிமட்டம் வரை வேர்விட்டுள்ளது. வளர்ந்து வரும் பாசிச பயங்கரவாதமும் போலி என்கவுன்டர் கொலைகளும் சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. பல துறைகளில் சிறுபான்மையினர் தலித்களைக் காட்டிலும் பின்தங்கியுள்ளனர். இன்னொரு பக்கம் தலித்களும் பழங்குடி மக்களும் புறக்கணிக்கப்படுதல் தொடர்கிறது. இந்தப் பின்னணியில் 2009ல் உருவான எஸ்டிபிஐ கட்சி மக்களை பசியிலிருந்தும் பாசிச மற்றும் அரச பயங்கரவாதம் குறித்த பயத்திலிருந்தும் விடுதலை செய்து சிறுபான்மையினர், தலித் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட மக்களை ஆற்றல் படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. எல்லோருக்கும் சம உரிமை கிடைக்கவும், தேர்தல் முறையை மாற்றவும், சமூகத்தை ஜனநாயகப்படுத்தி உண்மையான பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை உருவாக்கவும் உறுதி பூண்டுள்ள எஸ்டிபிஐ கட்சியை ஆதரிப்பீர்.

விவசாயம் : விவசாய மானியங்கள் மற்றும் வட்டியில்லாக் கடன்களைத் தொடர்தல்; விளைபொருட்களுக்குக் குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம்; இங்கு உற்பத்தியாகும் பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்குத் தடை; விவசாயத்திற்கெனத் தனி நிதிநிலை அறிக்கை; நில உச்சவரம்பு மற்றும் குத்தகை நிலங்கள் தொடர்பான நிர்வாகச் சீர்திருத்தங்கள்;

தொழில் / பொருளாதாரம் : பெரு நிறுவனம், பன்னாட்டு நிறுவனம் மற்றும் நிதி நிறுவனங்களின் பிடியிலிருந்து இந்தியப் பொருளாதாரத்தை மீட்பது; சிறப்புப் பொருளாதார மண்டலங்களை முடிவுக்குக் கொண்டு வருவது; உள் கட்டமைப்பு வளர்ச்சிகளில் தனியார் துறையின் பங்கைக் குறைத்தல்; அரசு நிலங்களைக் கையகப்படுத்துவதில் வரையறை; இரு தரப்பிலும் சம்மதமில்லாமல் மக்களை அவர்கள் நிலத்திலிருந்து வெளியேற்றுவதற்குத் தடை; வட்டியில்லாத, சுற்றுச்சூழல் கெடாத புதிய பொருளாதாரத்தை உருவாக்குதல், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்துதலில் தலைகீழ் மாற்றங்கள்: சிறு மற்றும் பாரம்பரியக் கைவினைத் தொழில்களுக்குப் பாதுகாப்பு; சிறு மின் உற்பத்தித் திட்டங்கள் மற்றும் மாற்று மின் உற்பத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை;

வணிகம் : பதுக்கலைத் தடுத்து விலைவாசியைக் கட்டுப்படுத்தல்; அத்தியாவசியப் பொருட்களின் விலை நிர்ணயம் ஒழுங்கு படுத்தப்படல்; எண்ணை நிறுவனங்களுகு வழங்கப்பட்டுள்ள பெட்ரோலியம் பொருட்களுக்கான விலை நிர்ணய உரிமையைத் திரும்பப் பெற்று அரசே விலை நிர்ணயம் செய்தல்;

அயலுறவு : அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பிற்குப் புத்துயிர்ப்பு; அண்டை நாடுகளுடன் நட்புறவை வலுப்படுத்தல்; தேசிய விடுதலை மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களுக்கு ஆதரவு; இந்தியாவை நிலைகுலைய வைக்கும் சக்திகளை விரட்டும் வகையில் அயலுறவுக் கொள்கையை வகுப்பது;

ஊழல் : கடும் சட்டங்களின் மூலம் ஊழ்ல்களை ஒழித்தல். தேசிய அளவில் மட்டுமின்றி மாநில அளவிலும் லோக்பால் கொணர்தல்; பெருநிறுவனங்கள் அரசுடன் இணைந்து மேற்கொள்ளும் ஊழல்களையும் லோக்பால் சட்ட வரம்பிற்குள் கொண்டு வருதல்;

கல்வி, மருத்துவம் : அரசு கல்வி நிறுவனங்களைப் பாதுகாக்கும் நோக்கில் கல்வி உரிமைச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்தல்; அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் தரம் உயர்த்தல்; அரசுப் பள்ளிகளின் தரம் காக்கும் நோக்கில் அவற்றின் மீது சமூகக் கண்காணிப்பிற்கு வழி வகுத்தல்; 6 முதல் 14 வயதுவரை உள்ள குழந்தைகள் பள்ளி செல்வதை உறுதிப் படுத்துதல்; பாடத் திட்டங்களை வகுப்புவாத மயப் படுத்தலிலிருந்து விடுவித்தல்; ஆரம்ப சுகாதார மையங்களின் மூலமாக அனைத்துக் கிராமங்களிலும் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தல்; தனியார் மருத்துவ மனைகளின் சுரண்டலைக் கட்டுப்படுத்தல்; அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வின் மீது கட்டுப்பாடு; அனைவருக்கும் கழிப்பறை வசதி;

சமூக நீதி : தனியார் துறையில் பட்டியல் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளித்தல்; இராணுவம், உளவுத்துறை, காவல்துறை, நீதித்துறை உட்பட அனைத்திலும் தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு மக்கள்தொகை வீதப்படி இட ஒதுக்கீடு அளித்தல்; இட ஒதுக்கீடு தொடர்பான சட்டங்களை நீதிமன்றத் தலையீட்டிலிருந்து பாதுகாத்தல்; கிரீமி லேயர் முறையை நீக்குதல்; அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் சமவாய்ப்பு ஆணையத்தை உருவாக்குதல்; பஞ்சமி நில மீட்பு;

சிறுபான்மையினர் : மதக் கலவரத் தடுப்பு மசோதாவை இன்னும் சிறப்பான முறையில் பலனளிக்கும் வகையில் திருத்திச் சட்டமாக்குதல்; உருது மொழிப் பள்ளிகளை ஊக்குவித்தல்; காவல்துறையில் சிறுபான்மைச் சமூகத்தினரின் பங்களிப்பை உறுதி செய்தல்; பட்டியல் பிரிவினருக்கான சிறப்பு நியமன முறையை எல்லாச் சமூகப் பிரிவினருக்கும் விரிவாக்கல்; சிறுபான்மைச் சமூகங்களுக்கு 15 சதம், அதில் 10 சதம் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்திருக்கும் ரங்கநாத் மிஸ்ரா ஆணையப் பரிந்துரை மற்றும் பிற்பட்டோருக்கான 27 சத ஒதுக்கீட்டில் 8.4 சத ஒதுக்கீட்டை அளிக்கும் மிஸ்ரா ஆணைய அறிக்கை ஆகியவற்றை நிறைவேற்றல்; மதம் மாறிய பட்டியல் பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை மறுக்கும் குடியரசுத் தலைவரின் ஆணையில் திருத்தம் கொணர்தல்; அரசு ஆதரவுடன் இயங்கும் தனியார் நிறுவனங்களில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளித்தல்; சச்சார் மற்றும் மிஸ்ரா குழு அறிக்கைகளை நடைமுறைப்படுத்தல்; பல்துறை மேம்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது சிறுபான்மையோர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களைத் தேர்வு செய்வதற்குப் பதிலாக தொகுதிகளைத் தேர்வு செய்தல்; ஆக்ரமிக்கப்பட்ட வக்ஃப் சொத்துக்களை மீட்பது மற்றும் எதிர்கால ஆக்ரமிப்புகளைத் தடுப்பது; ஹஜ் சேவையில் தனியார் பங்களிப்பைக் குறைத்து, அரசு பங்களிப்பில் குறைந்த செலவில் அதிகம் பேர் பயன் பெற வாய்ப்பளிப்பது; இதுபோன்ற சேவையைப் பிற சிறுபான்மை மதத்தினருக்கும் அளிப்பது; உருது மற்றும் இதர சிறுபான்மையினர் மொழியை ஊக்குவித்தல்; அலிகர் போல இதர சிறுபான்மையோர் கல்வி நிலையங்களுக்கும் சிறுபான்மை நிலை வழங்குதல்;

பெண்கள் : நாடாளுமன்றம்/ சட்டமன்றம் ஆகியவற்றில் பட்டியல் பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இனப் பெண்களுக்குப் பயன்படும் வகையில் ஒதுக்கீடு; பெண்கள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை அமல் செய்தல்; ஜே.எஸ் வர்மா ஆணையப் பரிந்துரைகளை நிறைவேற்றல்; பெண் கல்வி மற்றும் வேலை வாய்ப்பை ஊக்குவித்தலும் அதிகரித்தலும்; குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்தல்;

நலத் திட்டங்கள் : புதிய தேசியத் தண்ணீர்க் கொள்கையை உருவாக்குதல்; வறுமைக்கோட்டிற்குப் புதிய வரையறை செய்து அதனடிப்படையில் பொது விநியோக முறையைச் சிறப்புடன் நிறைவேற்றல்; நகர்ப்புறச் சேரி மக்களுக்குக் காலியாகக் கிடக்கும் உபரி நிலங்களைப் பிரித்தளித்தல்; மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கு விடுதியுடன் கூடிய கல்வி நிறுவனங்களை அமைத்தல்;

ஈழம் : ஈழப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் வகையில் பொது வாக்கெடுப்பு மற்றும் இனப் படுகொலை தொடர்பான பன்னாட்டு விசாரணை; கச்சத்தீவை மீட்பது;

தொழிலாளர்: ______________________________________________

மீனவர் : இலங்கை இராணுவத் தாக்குதலுக்கு முடிவு கட்டுதல்; பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குதல்;

தேர்தல் சீர்திருத்தம்: விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் ஏற்படுத்துதல்; வெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்தல்களில் வாக்களிக்க வசதிகள் செய்தல்;

தமிழ் / தமிழகம் : உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கல்; மணற் கொள்ளையைத் தடுக்கக் கடும் சட்டம் இயற்றல்; தாமிரபரணி நதியைப் பாதுகாத்தல்; வட சென்னையை மேம்படுத்தல் மற்றும் அங்கு மூன்றாம் முனையம் அமைத்தல்; தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களை நிறைவேற்றல்; காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு முதலான நதி நீர்ப்பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமைகளுக்காகப் போராடுதல்; தமிழகத்தைப் பாதிக்கும் அணு உலைத் திட்டங்கள், கெயில் குழாய்ப் பதிப்பு, காவிரி டெல்டாப் பகுதிகளில் மீதேன் வாயு எடுத்தல் முதலான திட்டங்களை எதிர்த்தல்;

சேது சமுத்திரத் திட்டம் : __________________________________________

பிற: அணு மின் திட்டங்களுக்குப் பதிலாக மாற்று மின் திட்டம்; சிறு மாநிலங்களுக்கு ஆதரவு; மாநில மறு சீரமைப்பு ஆணையம் ஒன்றை உருவாக்குதல்; மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கி கூட்டாட்சியை வலிமைப்படுத்தும் வகையில் மத்திய மாநில உறவுகளை ஆராய்தல்; வழக்குகளை விரைவாக முடித்தல்; இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாத வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறல்; பூரண மது ஒழிப்பு; 10 ஆண்டுகள் சிறை முடித்த அனைத்து சிறைவாசிகளையும் விடுதலை செய்தல்; UAPA மற்றும் AFPSA சட்டங்களைத் திரும்பப் பெறுதல்; தேசத் துரோகக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்படுதலை ஒழித்தல்;

சிறப்பு அம்சங்கள் : தமிழக அரசின் கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டத்தை நீக்குதல்; தமிழக அரசு முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ள 3.5 சத இட ஒதுக்கீட்டை 7 சதமாக்குதல்; உளவு நிறுவனங்களில் சகல பிரிவினருக்கும் வாய்ப்பளித்தல். உளவுப் பிரிவினரின் மதச்சார்புப் போக்கையும் ஆளும் கட்சியின் விருப்புக்குத் தகுந்தபடி ஆடும் தன்மையையும் மாற்றி அமைத்தல்; 1992க்குப் பின் நடைபெற்ற குண்டு வெடிப்புகள் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பான சுதந்திரமான விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தல்; தீவிரவாதக் குர்றங்களுக்காகக் கைதுசெய்யப்பட்டுப் பின் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்படுவோருக்கு இழைப்பீடு மற்றும் அரசு வேலைகள் அளித்தல்; பொய் வழக்குகளுக்குக் காரணமான அதிகாரிகளின் வேலை பறிப்பு, காவல் நிலையச் சித்திரவதைகள் மற்றும் மரணங்களுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கைகள்; போலி என்கவுண்டர்களைச் செய்தவர்கள் வேலை பறிக்கப்படுதலும் சிறப்புக் காவல் குழுக்களைக் கலைத்தலும்; தீவிரவாதக் குற்றங்களை விசாரிக்கக் குறிப்பிட்ட கால கெடுவுடன் கூடிய விரைவு நீதிமன்றங்களை அமைத்தல்; வழிபாட்டுத் தலங்களைப் பொருத்தமட்டில் ஆகஸ்ட் 15, 1947 அன்று இருந்த நிலையைத் தொடர்தல்; வெளிநாடு வாழ் இந்தியர்களின் பிரச்சினைகளில் இந்தியத் தூதரகங்கள் விரைந்து செயல்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளல்; வெளி நாட்டில் பணி புரிந்து திரும்புகிறவர்களுக்குச் சுய வேலை வாய்ப்புத் திட்டங்களை உருவாக்குதல்;

கூட்டணி :___________________________________________________

12. மனிதநேய மக்கள் கட்சி

(தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் அமைப்பான ம.ம.க இம்முறை தி.மு.க கூட்டணியில் மயிலாடுதுறைத் தொகுதியில் ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது. இத்தொகுதியில் தாங்கள் வென்றால் என்னென்ன செய்வார்கள் என்கிற அடிப்படையில் அமைந்துள்ள இத் தேர்தல் அறிக்கையின் சுருக்கம் வருமாறு)

சிறப்பு அம்சங்கள் : 2009ல் தொடங்கப்பட்ட ம.ம.க சாதி, மத வேறுபாடுகளின்றி அனைத்து மக்களுக்காகவும் செயல்படும் கட்சி. தமிழகம் மற்றும் தமிழர் நலனை மையமாகக் கொண்டு செயல்படும் இக்கட்சியின் வேட்பாளரை வெற்றி பெற வைத்தீர்களானால் அவர் அனைத்து மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் தொகுதியிலேயே தங்கிச் செயல்படுவார். நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி முழுமையாக அதற்கே செலவிடப்படும்.

திருத்தலங்கள் மற்றும் சுற்றுலா தொடர்பான கோரிக்கைகள்: தரங்கம்பாடியை இப்பகுதி வழிபாட்டுத் தலங்களுடன் இணைக்கும் வகையில் இரயில் பாதை அமைத்தல்; திருப்பதி, பெங்களூர் செல்லும் தூரத்தைக் குறைக்கும் வகையில் கும்பகோணம் விருதாசலம் ரயில்பாதை அமைத்தல்; தஞ்சாவூர் – கும்பகோணம் –விக்ரவாண்டி சாலையை நால் வழிச்சாலையாக உயர்த்துதல்; கொள்ளிடம் உபரி நீர் மற்றும் இப்பகுதி மழை நீர் வீணாக வங்கக் கடலில் கலக்காமல் ஆங்காங்கு தடுப்பணைகள் கட்டுதல்; புதிய கீழணைப்பாலம் கட்டுதல்;

இப்பகுதியில் உள்ள நவக்கிரகக் கோவில்களுக்கு வரும் புனிதப் பயணிகளுக்கு உரிய வசதிகளைச் செய்தல்; இப்பகுதியில் உள்ள கோவில் தலங்கள் மற்றும் பூம்புகார் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை உலகத்தரமானதாக உயர்த்துதல்;

கும்பகோணம் மகாமக விழாவைத் தேசியத் திருவிழாவாக அறிவித்தல்; மகாமகத்திற்கு வரும் புனிதப்பயணிகள் தங்க குறைந்த செல்வில் வசதிகள் செய்தல்;

மருத்துவம்: மயிலாடுதுறை மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாகத் தரம் உயர்த்துதல் மற்றும் இதர ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதலியவற்றை நவீன வசதியுடயவை ஆக்குதல்; ஜிப்மர் போன்ற மத்திய அரசு மருத்துவ மனை ஒன்றை மயிலாடுதுறையில் ஏற்படுத்துதல்;

தொழில்: பட்டு நெசவுக்கு மத்திய அரசின் முழு வரிவிலக்கு பெறுதல்; நலிவுற்ற விவசாயிகளுக்கான மத்திய அரசுத் திட்டத்தைக் கூட்டுறவுத் துறைக்கு மட்டுமின்றிப் பிற துறைகளுக்கும் விரிவு படுத்துதல்; ஜவுளிப் பூங்கா ஒன்றை இப்பகுதியில் அமைத்தல்; நவீன அரிசி ஆலைகள் போன்ற விவசாயம் சார்ந்த தொழில்களை ஏற்படுத்தி வேலை வாய்ப்பைப் பெருக்குதல். இப்பகுதி மாணவ மாணவிகள் அரசு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பணி புரியும் அளவிற்கு இலவசப் பயிற்சிகளை அளித்தல்; பித்தளைக் குத்து விளக்கு தயாரிப்பு, பிரம்புப் பொருட்கள் உற்பத்தி போன்ற இப்பகுதிச் சிறு தொழில்களை ஊக்குவித்தல்;

விவசாயம் : இப்பகுதியில் மீதேன் எரிவாயு எடுத்தலுக்கு எதிர்ப்பு; கரும்பு கொள்முதல் செய்யப்பட்ட மூன்று மாதத்திற்குள்மத்திய, மாநில அரசுகள் நிர்ணயிக்கும் இரு விலைகளையும் சேர்த்து விவசாயிகளுக்கு வழங்கிட வழி வகுத்தல்; விவசாய விளைபொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்தல்; ஒருங்கிணைந்த டெல்டா பகுதியில் விவசாய விளைபொருட்களுக்கான சந்தைகளை ஏற்படுத்துதல் மற்றும் அவற்றின் மதிப்பு கூட்டப்படும் வகையில் தொழிற்சாலைகளை அமைத்தல்; இப்பகுதியில் நிலங்களில் உப்புத் தன்மை அடைவதாலும், இப் பகுதியில் 9 அனல் மின் நிலையங்கள் வருவதாலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல்;

மீனவர்: மீனவர்களைப் பழங்குடியினர் என அறிவித்தல்; தனி அமைச்சகம், தேசிய மீனவர் நல ஆணையம் உருவாக்குதல்; சீர்காழி பழையாறில் மீன் பதனக் கூடம் அமைத்தல்; இலங்கை, இந்திய மீனவர்களுக்கிடையேயான பிரச்சினைகளைத் தீர்க்க இரு நாட்டுக் கடற்கரைகளிலும் சிக்கல் தீர்க்கும் நடுவம் அமைத்தல்; மீனவர் தேசிய சேமிப்புத் திட்டத்தைப் பழைய நிலைக்கு மாற்றுதல்; கடற்கரை மேலாண்மைச் சட்டத்தின் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரங்கள் பாழ்படுவதைத் தடுத்தல்; பூம்புகார் துறைமுகத் திட்டத்தை நிறைவேற்றல்;

சமூக நீதி: அனைத்திந்திய அளவில் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்குத் தனி இட ஒதுக்கீடு; 27 சத இட ஒதுக்கீட்டின்படி பிற்படுத்தப்பட்டோருக்கான நிரப்பப்படாத ஒதுக்கீட்டைப் பின்னடைவுப்படி நிறப்புதல்; பட்டியல் பிரிவினர் மருத்துவ, பொறியியல் படிப்புகளைத் தடையின்றித் தொடரும் வகையில் அனைத்துக் கல்விக் கட்டணங்களையும் மத்திய அரசு ஏற்றுக் கொள்ளுதல்; தாழ்த்தப்பட்டோருக்கான வீடுகளைத் தரமாகக் கட்டிக் கொடுத்தல்; தற்போது இதற்கென அரசு வழங்கும் நிதியை ஒரு லட்சத்திலிருந்து 3 லட்சமாக உயர்த்துதல்;

சிறுபான்மையினர்: ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைப்படி சிறுபான்மையினருக்கான தனி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துதல்; மிஸ்ரா ஆணையப் பரிந்துரைப்படி கிறிஸ்தவ தலித்களுக்கான சலுகைகளைத் தொடர்தல்;

கூட்டணி : பார்க்க: தி.மு.க

மரணதண்டனைக் குறிப்புகள்

1. இந்திய அரசுக்கு ஏன் இந்தக் கொலைவெறி?

சற்று முன் வீரப்பனின் கூட்டாளிகளும் 1993ல் கண்ணிவெடி வைத்து 22 அதிரடிப் படை வீரர்களைக் கொன்றதற்காக மரண தண்டனை வழங்கப்பட்டவர்களுமான சைமன், ஞானப் பிரகாசம், பிலவேந்திரன், மாதையன் ஆகிய நால்வரது தண்டனை நிறைவேற்றத்தைத் தடை செய்து இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது நிரந்தரத் தடை இல்லை என்றபோதிலும் அஜ்மல் கசாப், அஃப்சல் குரு இருவரையும் மூன்று மாதத்திற்குள் அடுத்தடுத்துத் தூக்கிலிட்டுக் கொன்றதைப் போல இவர்களையும் கொல்ல இருந்த உடனடிச் சூழல் தற்போது விலகியுள்ளது.

இந்த நால்வரது கருணை மனுக்களையும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்ற வாரம் ஏற்க மறுத்ததை ஒட்டி அவர்கள் உடனடியாகத் தூக்கிலிடப்படக் கூடிய நிலை உருவானது. சென்ற ஞாயிறன்று அவர்கள் தூக்கிலிடப்படலாம் என்கிற நிலையில் மனித உரிமை ஆர்வலர்கள் இவர்கள் நால்வரின் சார்பாக உச்ச நீதிமன்றத்தை நாடி இந்தத் தடையைப் பெற்றுள்ளனர்.

இந்தியச் சட்டங்களின்படி உச்ச நீதிமன்றம் ஒருவருக்கு மரண தண்டனையை உறுதி செய்தால் அவருக்குக் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளிக்க உரிமையுண்டு. ஆரசியல் சட்டத்தின் 72ம் பிரிவின்படி அவருக்கு மன்னிப்பு அளித்துத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க அவருக்கு அதிகரமுண்டு. எனினும் அவர் இதைத் தன்னிச்சையாகச் செய்துவிட இயலாது. அரசிடம், அதாவது உள்துறை அமைச்சகத்திடம் கருத்தைக் கேட்டு அந்த அடிப்படையில் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும்.

உள்துறை அமைச்சகம் கருணை மனுவை நிராகரிக்கப் பரிந்துரை செய்த போதிலும் குடியரசுத் தலைவர் அப்படிச் செய்யாமல் காலந்தாழ்த்தலாம். முந்தைய தலைவர் பிரதீபா பட்டீல் 35 பேர்களின் மரண தண்டனைகளை ஆயுள்தண்டனைகளாகக் குறைத்து ஆணையிட்டார். அதற்கும் முந்தைய தலைவர் அப்துல் கலாமின் பதவிக் காலத்தில் தனஞ்சய் சட்டர்ஜி என்பவருக்கு மட்டும் தன்டனை நிறைவேற்றப்பட்டது (2004).

குடியரசுத் தலைவராக ஆவதற்கு முதல் நால் வரையிலும் விசுவாசமான காங்கிரஸ்காரராகத் தீவிர அரசியல் செய்து வந்த பிரணாப் பதவியேற்ற மூன்று மாதத்திற்குள் ஆறு பேர்களின் கருணை மனுக்களை நிராகரித்துச் ‘சாதனை’ புரிந்துள்ளார். அவர்களில் இருவாரது தண்டனைகள் இரகசியமாக நிறைவேற்றப்பட்டும் விட்டன.

நீதிமன்றங்களால் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட பின் நீண்ட காலம் ஒருவர் தூக்கிலிடப் படாமல் இருந்து இறுதியில் கருணை மனு நிராகரிக்கப்பட்டு அவர் தூக்கிலிடப்படக் கூடிய நிலை ஏற்பட்டால், இது தொடர்பாக இடைக்காலத்தில் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஏற்படக்கூடிய அச்சம்,கவலை, துயரம், மன அழுத்தம் (agony of suspense) ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவர் மீண்டும் தனது தண்டனை நிறைவேற்றத்திற்கு எதிராக உச்ச நீதி மன்றத்தை நாடலாம் எனக் குறைந்த பட்சம் நான்கு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் கருத்துரைத்துள்ளது.

சென்ற ஏப்ரலில் (2012) தேவேந்திரபால்சிங் புல்லார், நரேந்திரநாத் தாஸ் என்கிற இருவர் இவ்வாறு 11 ஆண்டுகளுக்குப் பின் தூக்கிலிடப்பட இருந்த நிலையில் நீதிமன்றம் மேற்சொன்ன அடிப்படையில் அதற்கு இடைக்காலத் தடை விதித்து வழக்கை விசாரணக்கு எடுத்துக் கொண்டது. அதேபோல ராஜிவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கும் சென்ற ஆண்டில் தண்டனை நிறைவேற்றத்திற்குத் தேதி நிச்சயிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் மிகப் பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டதையும் அதை ஒட்டி சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடை பெறப்பட்டதையும் அறிவோம். இவ்வழக்கும் முன் குறிப்பிட்ட புல்லார் வழக்குடன் இணைத்து விசாரிக்கப் பட்டு வருகிறது. தற்போது வீரப்பன் கூட்டாளிகளின் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு புல்லார் வழக்குத் தீர்ப்பு வந்தவுடன் அதனடிப்படையில் இதுவும் தீர்மானிக்கப்படும் என அறிவித்துள்ளது..

புல்லார் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம் இந்திய அளவில் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டு நீண்டகாலமாகக் காத்திருப்பவர்களின் பட்டியலை அரசிடம் கோரிப் பெற்றுக்கொண்டது. காத்திருக்கும் எல்லோரது வழக்குகளையும் இதன்மூலம் அதன் ஆய்வுக்குட்பட்டதாகியது. இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு உதவி செய்ய (amicus curiae) அந்தியாருஜினா என்கிற மூத்த வழக்குரைஞரையும் நியமித்தது. அவர் அஃப்சல் குரு உள்ளிட்ட அனைவரது வழக்கு விவரங்களையும் தந்துள்ள நிலையில் விசாரணை சென்ற ஏப்ரல்19 (2012) அன்று முடிவுற்றது. தீர்ப்பு அளிக்கப்படுவதற்கு முன்னதாக அவசர அவசரமாக ஒரு திருடனைப்போல டில்லி திகார் சிறைக்குள் நுழைந்த இந்திய அரசு சென்ற 9 ந்தேதி அன்று காலை எட்டரை மணிக்கு அஃப்சல்குருவின் மனைவி, பதின்வயது மகன் உள்ளிட்ட யாருக்கும் தெரியாமல் சுருக்கிட்டு அவரது உயிரைப் பறித்துக் கொண்டது.

நீதிமன்றத்தின் பார்வையில் வழக்கு இருப்பது ஒரு பக்கம்; தூக்கிலிடப்படுவதற்கு முன்னம் ஒரே ஒருமுறை மனைவி, பிள்ளைகள் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களைச் சந்திக்க வாய்ப்பளிக்கும் உலக அள்வில் கடைபிடிக்கப்படும் அடிப்படை மனித நாகரீகமும் மறுக்கப்பட்டது இன்னொருபுறம்; இவை இன்று இந்திய அளவில் மரண தண்டனை குறித்த மிகப் பெரிய விவாதத்தையும் இந்திய அரசின் மீதான கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

சென்ற 2001 டிசம்பர் 13 அன்று இந்தியப் பாராளுமன்றத்தை ஜெய்ஷ் ஏ முகம்மத் என்கிற தீவிரவாதிகள் தாக்கினர், தாக்குதலில் ஈடுபட்ட ஐவரும், ஒன்பது படைவீரர்களும் அப்போது கொல்லப்பட்டனர். இது தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர்தான் அஃப்சல். டெல்லிப் பல்கலைக் கழகப் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர்.கீலானி, அஃப்சலின் நெருங்கிய உறவினர் ஷௌகத் குரு, அவரது மனைவி அஃப்சான் ஆகியோரும் இது தொடர்பாகக் கைது செய்யப்பட்டனர்.

கடும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட இவர்களில் கீலானி, அஃப்சான் ஆகியோர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். தகவல் மறைப்பு என்பதற்காகப் பத்தாண்டு காலச் சிறைவாசத்திற்குப் பின் ஷௌகத் இரண்டாண்டுகளுக்கு முன் விடுதலை ஆனார். 2005 ஆகஸ்ட் 4 அன்று அஃப்சலுக்கு மட்டும் மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதி மன்றம்.

காஷ்மீர்த் தீவிரவாதியாக இருந்து இந்தியப் படையிடம் சரணடைந்தவர் அஃப்சல். சரணடந்தவர்களை அவ்வளவு எளிதாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப இந்தியப் படையினர் அனுமதிப்பதில்லை. அடிக்கடி அதிரடிப்படை அலுவலகத்துக்கு அழைக்கப்படுவார்கள். உளவு வெலைக்கு நிர்ப்பந்திக்கப்படுவார்கள். கைது செய்து வைத்துக் குடும்பத்தாரிடம் காசு வாங்கிக்கொண்டு விடுவிப்பார்கள். ஒரு சிறிய மருந்து விற்பனை நிறுவனத்தைத் தொடங்கி அமைதியான குடும்ப வாழ்க்கைக்குத் திரும்ப முனைந்த அஃப்சலுக்கும் இவ்வளவும் நடந்தது. அதிரடிப்படை அலுவலகத்தில்தான் பாராளுமன்றத் தாக்குதலில் பங்கேற்றுக் கொல்லப்பட்ட முகம்மதும், இன்னும் கைது செய்யப்படாத தாரிக்கும் அஃப்சலுக்கு அறிமுகமானார்கள். இந்த அறிமுகமே இன்று அஃப்சலின் உய்யிர் பறிப்ப்புக்குக் காரணமாகியது.

இன்று அஃப்சலை இந்தத் தாக்குதலுடன் தொடர்புபடுத்தக்கூடிய நேரடி சாட்சிகள் ஒன்று குற்றம் நிரூபிக்கபடாமல் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் (கீலானி, அஃப்சான்) அல்லது கொல்லப்பட்டுள்ளனர் (முகம்மது) அல்லது தலைமறைவாகியுள்ளனர் (தாரிக்). அஃப்சலே அஃப்சலுக்கு எதிரான சாட்சியாக நிறுத்தப்பட்டார். சித்திரவதைகளினூடாகப் பெற்ற வாக்குமூலம் அவருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது. நீதிமன்றங்களில் அவருக்கு வாதிட முறையான வழக்குரைஞர்கள் இல்லை. விசாரணை நீதிமன்றத்தில் அவருக்காக நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் அவரிடம் மிகவும் வெறுப்புடன் நடந்து கொண்டார். உயர் நீதிமன்றத்தில் அவருக்காக வாதிடுவதாக வந்தவர் அஃப்சலைத் தூகிலிடாமல் விஷ ஊசி செலுத்திக் கொல்லலாம் என நீதிமன்றம் முன் தெரிவித்தார். அப்படி எந்த விருப்பையும் அஃப்சல் அவரிடம் தெரிவித்ததில்லை.

விசாரணைத் தரப்பு முன்வைத்த வாதங்களிலும் பல ஒட்டைகள் இருந்தன. அஃப்சல் பயன்படுத்திய ‘சிம்’ கார்டு ஒன்று முக்கிய ஆதாரமாக அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டது. அந்த சிம் அவருக்கு விற்கப்படுவதற்கு முன்பாகவே பயன்படுத்தப்பட்டிருந்தது. அஃப்சல் தாக்குதலில் தொடர்புகொண்டிருந்தார் என்பது டெல்லி விசாரணையில் ‘கண்டுபிடிக்கப்பட்டு’, அவரைக் கைது செய்ய ஆணை அனுப்பப்படுமுன்னரே அவர் காஷ்மீரில் கைது செய்யப்பட்டிருந்தார். இப்படி நிறையச் சொல்லலாம். இது குறித்து தீர்ப்பு வந்தபோது நிறைய எழுதியுள்ளேன்.

இப்படி சந்தேகத்திற்கிடமின்றி அஃப்சல்மீதான குற்றம் நிறுவப்படாமலேயே அவருக்கு மரண தண்டனை விதித்தது நீதிமன்றம். “(அஃப்சலுக்கு) மரணதண்டனை அளிப்பதன் மூலமே சமூகத்தின் கூட்டு மனச்சாட்சி திருப்தியுறும்” என நீதிபதி தீர்ப்பில் கூறியது கடும் விமர்சனத்திற்குள்ளாகியது. சட்டம், சாட்சியம், ஆதாரம் மற்றும் முந்தைய தீர்ப்புகளின் வழி நின்று மட்டுமே நீதி வழங்க இயலும். சமூகத்தின் மனச்சாட்சி, அரசியல் கோரிக்கைகள், மத நம்பிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையிலெல்லாம் தீர்ப்பு வழங்கிவிட இயலாது. ஆனால் இந்திய நீதிமன்றங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இப்படியெல்லாம் சொல்லித்தான் தீர்ப்புகள் வழங்குகின்றன. தவிரவும் சமூகத்தின் கூட்டு மனச்சாட்சி அஃப்சல் கொல்லப்படத்தான் வேண்டும் எனக் கூறுகிறது என்பதை நீதிபதி எந்த அளவுகோலை வைத்து அளந்தார்?

“தண்டனை நிறைவேற்றம் குறித்து மக்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தால் காரியம் நடக்காது” என இரகசியத் தூக்கிற்குக் காரணம் சொல்கிறார் உள்துறை அமைச்சர் ஷிண்டே. விதிப்படி ஏன் நெருங்கிய உறவினர்களுக்குத் தெரிவிக்கவில்லை எனக் கேட்டால், “விரைவுத் தபாலில் செய்தி அனுப்பினோம். அவர்களுக்குக் கிடைக்கவில்லை” எனச் சொல்லிப் புன்னகைக்கிறார். உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் இப்படி மக்களையும், எதிர்க் கருத்துக்களையும், ஆர்பாட்டங்களையும் கண்டஞ்சுவதை என்னென்பது? தூக்கிலிட்ட கையோடு காஷ்மீர் முழுதும் ஊரடங்குச் சட்டம், தொலைக்காட்சிகளுக்கு சென்சார், எஸ்.எம்.எஸ் சேவை முடக்கம் என நடவடிக்கைகள் தொடர்ந்தன, அஃப்சலின் வீட்டிற்குத் துக்கம் விசாரிக்கச் செல்லவும் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

தனி நபர்கள் யாரேனும் இப்படி விதிமுறைகளை மீறுவதைக்கூட சகித்துக்கொள்ளலாம். ஆனால் ஒரு அரசு, ஒரு மக்கட் தொகுதி என்பன ஏற்றுக்கொண்ட விதிகளையும் நெறிமுறைகளையும் மீறாதிருப்பது அவசியம். ஏனெனில் அப்போதுதான் அது மக்கட் தொகுதியின் சராசரி விருப்பை சரியாக நிறைவேற்றுவதாக அமையும்.

மரண தண்டனைக்கு மன்னிப்பு அளிப்பது என்பது நீதிமன்றத்தின் உரிமை அல்ல. இஸ்லாமிய நாடுகளில் மன்னிப்பு அளிக்கும் உரிமை குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருக்கும். ஜனநாயக அரசுகளில் அரசே மன்னிப்பு அளிக்கும் அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொள்கிறது. தனிப்பட்ட நாபர்களின் பொறுப்பில் விடாமல் அரசு அதை மேற்கொள்வது என்பது மன்னிப்பில் பழிவாங்கலுக்கு இடமிருக்கக் கூடாது என்கிற அடிப்படியில் அமைகிறது. அதேபோல மன்னிப்பு என்பதில் குற்றத்தின் தன்மை, அளவு ஆகியவை முக்கிய பங்கு வகிப்பதில்லை. தண்டனை அளிக்கப்பட்டவரின் குடும்பம், எதிர்காலம், நன்னடத்தை, ஒட்டு மொத்தமான சமூக நலன் ஆகியவற்றிற்கு மன்னிப்பளிப்பதில் முக்கிய பங்குண்டு.

வெறும் சட்ட விதிகளுக்கு அப்பால் கருணை, அன்பு, மனிதாயம் ஆகியவற்றின் அடிப்படையில் மன்னிப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே மன்னிபு வழங்கு அதிகாரம் நீதித் துறையிடமிருந்து விலக்கப்படுகிறது..

ஆனால் இந்திய அரசோ மன்னிப்பை அரசியலாக்குகிறது. இன்று இரகசியமாகத் தூக்கிலிடப்பட்டவர்கள் இருவரும் முஸ்லிம்கள். பிரதான எதிர்க்கட்சியான வலதுசாரி இந்துத்துவ பாரதீய ஜனதா கட்சி அஃப்சலை உடனடியாகத் தூக்கிலிட வேண்டுமெனத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது.. முஸ்லிம் ஓட்டுகளுக்காகாத் தேசப் பாதுகாப்பை அரசு கைவிட்டு விடுகிறது என்று அது அரச்சைக் குற்றம் சாட்டி வந்தது. இந்தக் குற்றச் சாட்டினடியாகப் பெரும்பான்மைச் சமூகத்தின் வாக்குகளை இழக்க விரும்பாத இந்திய அரசு இப்படி இரகசியத் தூக்குகளை நிகழ்த்திக் கோண்டுள்ளது. பா.ஜ.கவைப் பொருத்த மட்டில் அதற்கு நீதி என்றால் மரண தண்டனைதான். இத்தகைய பிரச்சினைகளில் மரண தண்டனைக்குக் குறைவான எதையும் அது தண்டனையாகக் கருதுவதில்லை. நீதியையும் பழிவாங்கலையும் அது பிரித்துப் பார்ப்பதில்லை. அஃப்சலின் மரணத்தை அக்கட்சியினர் லட்டு தின்று கொண்டாடும் காட்சிகள் அன்றைய ஊடகங்களில் இடம் பெற்றன.

இன்று இந்திய அரசும் பா.ஜ.க வழி நின்று நீதியையும் பழிவாங்கலையும் ஒன்றாக்கியுள்ளது. குறுகிய அரசியல் நலன்களுக்காக அப்படிச் செய்துள்ளது. அப்படிச் செய்ததன் மூலம் இன்று காஷ்மீர் மக்களிடமிருந்து அது மேலும் அந்நியமாகியுள்ளது. பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் தீவிரவாத அமைப்புக்கள் இந்தியாவைப் பழி வாங்கப்போவதாக அறிவித்துள்ளன. இதற்கு எதிர்வினையாகப் பாக்கில் மரண தண்டனையை எதிர் நோக்கி இருக்கும் இந்தியரான சரபத் சிங்கை அது தூக்கிலிடலாம். அஃப்சல் பாகிஸ்தானை ஆதரித்தவரல்ல. தீவிரவாதத்தில் வெறுப்புற்று இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியவர். இந்திய அரசு தனது குறுகிய அரசியல் நலன்களுக்காக இவை எதையும் கவனத்தில் கொள்ளாமல் அடிப்படை நெறிகளிலிருந்து பிறழ்ந்துள்ளது.

சமூகம் நாகரீகத்தில் மேம்படுவது அதன் தண்டனைக் கலாச்சாரதில் (penal culture) வெளிப்படும். தண்டனைகள் மேலும் மேலும் மனிதாயப் படுவதே சமூகம் நாகரீகமடைந்து வருவதன் அடையாளம். இப்படிக் குடும்பத்தவர்களுக்கும் அறிவிக்காமல் தூக்கிலிட்டு உயிரைப் பறிப்பது இதற்கு எதிர்மாறானது.

2 – உச்ச நீதிமன்றம் தான் தவறாக மரண தண்டனை வழங்கிவிட்டதாகச் சொல்வதன் பொருள் என்ன?

இரண்டு நாட்கள் முன்னதாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் நால்வருக்குத் தனது தலைமையில் அமர்ந்த உச்ச நீதிமன்ற அமர்வு மரண தண்டனை அளித்ததில் தவறு நிகழ்ந்துள்ளது என நீதியசர் கே.டி.தாமஸ் கூறினார். முன்னதாகச் சென்ற ஜூலை 25 (2012) அன்று புகழ்பெற்ற முன்னாள் நீதிபதிகள் 14 பேர் அப்போதுதான் பதவி ஏற்றிருந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியச் சந்தித்து நமது நீதி வழங்கு வரலாற்றில் இதுவரை காணாத வகையில் மனு ஒன்றை அளித்தனர். ஆறு வழக்குகளில் மரணதண்டனை அளிக்கப்பட்டு, இந்தியாவின் பல்வேறு சிறைகளிலும் அடைபட்டுக் கிடக்கும் 13 பேர்களின் மரண தண்டனைகளை, குடியரசுத் தலைவருக்கு அரசியல்சட்டத்தின் 72ம் பிரிவின்படி அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு அம்மனுவில் வேண்டப்பட்டிருந்தது.

ஒன்றைச் சொல்ல வேண்டும். மரண தண்டனை ஒழிப்பு என்கிற அடிப்படையிலிருந்து அவர்கள் இதைக் கோரவில்லை. அவர்களில் சிலர் மரண தண்டனை ஒழிப்பில் அக்கறை உள்ளவர்களாக இருக்கலாம். ஆனால் இந்தக் கோரிக்கை அந்த அடிப்படையிலிருந்து எழவில்லை, மாறாக அவர்கள் சுட்டிக் காட்டியுள்ள இந்த மரண தண்டனைகள் அனைத்தும் தற்போதைய நீதி வழங்கு நெறிமுறைகளுக்கு மாறாகவும் தவறாகவும் அளிக்கப்பட்டுள்ளது என்கிற அடிப்படையிலேயே அவர்கள் இதைக் கோரினர். ஓய்வு பெற்ற இந்நீதிபதிகள் தன்னிச்சையாக இதைக் கூறவில்லை. உச்ச நீதிமன்றம் தனது சமீபத்திய மூன்று வழக்குகளில் தீர்ப்பளிக்கும்போது முன்னதாக அது ஏழு வழக்குகளில் அளித்துள்ள மரண தண்டனைகள் “தவறுதல் அல்லது அறியாமையின்” (per incurium) கரணமாக அளிக்கப்பட்டவை என ஏற்றுக் கொண்டுள்ளது.

சந்தோஷ் குமார் பாரியார் ( 6SCC 498 /2009), திலிப் திவாரி (1 SCC 775 /2010), ராஜேஷ் குமார் (13 SCC 706 /2011) ஆகிய சமீபத்திய மூன்று வழக்குகளில்தான் உச்ச நீதிமன்றம் இந்தத் தவறை ஒத்துக் கொண்டது. மரண தண்டனை வழங்குவதில் தற்போதைய மிக அடிப்படையான கட்டுப்டுத்தும் நெறியான (binding dictum), “அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்க வேண்டும்” எனும் நிபந்தனைக்கு மாறானவையாக மேற்குறித்த ஏழு வழக்குகளின் தீர்ப்புகளும் அமைந்து விட்டன என்று உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளதன் அடிப்படையிலேயே பதினான்கு நீதிபதிகளும் இந்த மனுவைக் குடியரசுத் தலைவரிடம் அளித்தனர்.

“மரண தண்டனை வேண்டுமா, கூடாதா என்கிற அகன்ற விவாதத்திற்குள் நாங்கள் செல்லவில்லை. மரண தண்டனை என்பதை மிக்க நேர்மையுடனும், நடுநிலையுடனும் நீதியுடனும் மனச்சாட்சியின் உறுத்தலுடனுந்தான் கையாள வேண்டும். தவறாகத் தண்டனை வழங்கப்பட்ட ஒருவரைத் தூக்கிலிடுவது நமது குற்ற நீதி வழங்கு முறையின் நம்பகத் தன்மையையும், இத்தகைய தண்டனை நிறைவேற்றுகிற அரசு அதிகாரத்தையும் எதிர்காலத்தில் கேள்விக்குள்ளாக்கி விடும்” என அவர்கள் அம் மனுவில் எச்சரித்திருந்தனர்.

குற்ற நீதி வழங்குமுறையில் மாற்றங்கள்

மேலே செல்லுமுன் குற்ற நீதி வழங்குமுறை குறித்து ஒரு சொல். ‘குற்றம்’ என்பதையும், அதற்குரிய ‘தண்டடனை’யையும் நமது சட்டங்கள் வரையறுக்கின்றன. நீதிமன்றங்கள் இவ்ற்றின் வழி நின்று நீதி வழங்க வேண்டும். ஆம், நீதிமன்றங்கள் என்பன நீதி வழங்கும் நிறுவனங்கள்தானே ஒழிய அவை பலரும் நினைப்பதுபோல தண்டனை வழங்கும் நிறுவனங்கள் அல்ல. இது குறித்துப் பின்னர் சற்று விரிவாகப் பார்ப்போம்.

சட்ட நூற்களின் அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்புகளை வழங்குகின்றன என்பதில் இரு அம்சங்கள் கவனத்திற்குரியன. சட்டங்கள் என்பன நிரந்தரமானவை அல்ல. சமூக வளர்ச்சிப் போக்கில் சட்டங்கள் மாறுகின்றன. மனித சமூகம் மேலும் மேலும் மனிதாயப் படுகிறது. அதன் அனுபவங்கள் விசாலிக்கின்றன. ஒரு காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டங்கள் முற்றிலும் வேறுபட்ட இன்னொரு சூழலில் பொருந்தா. அனுபவங்களின் ஊடாகச் சட்டங்களின் வரையறைகளிலும், அணுகுமுறைகளிலும் மாற்றங்கள் செய்வதும் தண்டனைகளை மேலும் மேலும் மனிதாயப்படுத்துவதும் தேவையாகின்றன. இது குறித்தும் பின்னர் விரிவாகக் காண்போம்.

ஒரு எடுத்துக்காட்டு: பாலியல் வன்புணர்ச்சி தொடர்பான சட்டங்கள் 1886ல் பிரிட்டிஷ் ஆட்சியில் உருவாக்கப்பட்டன. அதில் பல குறைபாடுகள், குறிப்பாகப் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நீதி கிடைப்பதற்கு வாய்ப்பில்லாத வகையில் இருந்தன. குற்றம் புரிந்த ஆண் தப்பிப்பதற்கு ஏதுவான ஒரு ஆணாதிக்க மனநிலையில் உருவான அச்சட்டம் சமூக வளர்ச்சிப் போக்கிலும், சமூகத்திலும், பெண்கள் மத்தியிலும் உருவாகும் விழிப்புணர்வின் விளைவாகவும் இன்று பல மாற்றங்களுக்கு உள்ளாகி வர்மா ஆணைய அறிக்கை வரை வளர்ந்துள்ளது. 1973ல் மதுரா என்கிற பழங்குடிப் பெண் வன்புணர்சி செய்யப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து பெண்ணிய அமைப்புகள் போராடின. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைக்காத அளவிற்கு இது தொடர்பான நம் சட்டங்கள் எவ்வளவு ஆணாதிக்கத் தன்மையுடன் உள்ளன என்பது குறித்து தேசிய அளவில் விவாதமொன்று உருவாவதற்கு இது வழி வகுத்தது. 1980ல் மும்பையில் ஒரு மிகப் பெரிய மாநாடு ஒன்று நடத்தப்பட்டு விரிவான நெறிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டன.

இவ்வாறு ஒரு பிரச்சினை குறித்துத் தீவிரமாகச் சிந்திப்பவர்கள் உருவாக்கும் நெறிமுறைகள் அனைத்தையும் ஏற்கும் அளவிற்குச் சமூகம் இணையாகப் பக்குவப்பட்டு விடுவதில்லை. எனினும் இவ்வாறு உருவாகி மேலெழும் நெறிமுறைகளிலிருந்து சமூகம் முற்றிலும் ஒதுங்கிக் கொள்ளவும் இயலாது. சமூக மதிப்பீடுகள் மாற்றமடைகின்றன. இந்த முரண்பாடுகளின் ஊடாகத்தான் சமூக வளர்ச்சி நடை பெறுகிறது. மும்பை மாநாடு உருவாக்கிய நெறிகள் அனைத்தும் சட்டமாக்கப்பட இயலவில்லை ஆயினும் 1983ல் இந்த அடிப்படையில் வன்புணர்ச்சி தொடர்பான சட்டத்தில் பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன.

“வன்புணர்ச்சி”, “ஒப்புதல் (consensual sex)” ஆகியவற்றின் வறையறைகள், விசாரணை முறை (in camera proceedings), குறைந்தபட்ச மற்றும் அதிகபட்சத் தண்டனைகளை அதிகரித்தல் என்றெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சட்டத்தில் மாற்றங்கள் உருவாயின.. கணவனாக இருந்தபோதிலும் பிரிந்துள்ள மனைவியின் மீது மேற்கொள்ளும் விருப்பத்திற்கு மீறிய பாலியல் அத்துமீறலை வன்புணர்ச்சியாகவே கருதுதல் முதலியனவுவம் இன்று சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. எனினும் கணவனாக இருந்த போதிலும் மனைவியின் ஒப்புதலின்றி மேற்கொள்ளப்படும் புணர்ச்ச்சியை வன்புணர்ச்சியாகவே கருத வேண்டும் என்பது இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எதிர்காலத்தில் அதுவும் கூட மாறலாம்.

இப்படிச் சட்டங்கள் காலப் போக்கில் மாறுவது என்பது ஒன்று. மற்றது சட்ட நூல்களில் கூறப்பட்டதற்கு அப்பால் சமூக வளர்ச்சிப் போக்கு மற்றும் பன்னாட்டு நீதி வழங்கு நெறிமுறை வளர்ச்சி ஆகியவற்றின் ஊடாக இருக்கும் சட்டங்களுக்கு நீதிமன்றங்கள் புதிய விளக்கங்களை அளித்துப் புதிய நெறிமுறைகளை உருவாக்குவது என்பது மற்றொன்று. உச்ச நீதிமன்றத்தின் விரிந்த ஒரு அமர்வு இவ்வாறு ஒரு புதிய விளக்கத்தை அளிக்கும்போது, பின் அது போன்ற வழக்குகளில் இந்த விளக்கம் ஒரு கட்டுப்படுத்தும் நிபந்தனையாக (binding dictum) ஆகிவிடுகிறது, இத்தைய புதிய விளக்கத்தின் அடிப்படைக் கோட்பாடு (ratio decidendi) மீற இயலாத வழிகாட்டு நெறி அல்லது ‘வரைநெறி’ (ratio)) ஆகிவிடுகிறது, ஒரு விரிந்த நீதிமன்ற அமர்வு (எ.கா: ஐந்து நீதிபதிகள் கொண்ட ஒரு அமர்வு) உருவாக்கிய ஒரு அடிப்படை நெறியை, அதைவிடக் குறுகிய ஒரு அமர்வு (எ.கா: மூன்று நீதிபதிகள் கொண்ட ஒரு அமர்வு) மாற்றி அமைத்து விட இயலாது.

மரண தண்டனை தொடர்பான அப்படியான ஒரு அடிப்படை வரைநெறியை (ratio) உருவாக்கிய ஒரு தீர்ப்புதான் அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்க இயலும் என்கிற பச்சன்சிங் வழக்குத் தீர்ப்பு. சமூகம் மேலும் மேலும் மனிதாயப்பட்டு வருவதற்கேற்ப நமது தண்டனைக் கலாச்சாரமும் மனிதாயப்பட வேன்டும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

பச்சன் சிங் தீர்ப்பின் பின்னணியும் முக்கியத்துவமும்

‘பச்சன்சிங் எதிர் பஞ்சாப் அரசு’ (SCC 2 684 /1982) அரசு’ என்கிற புகழ்பெற்ற வழக்கில் நீதியரசர் பகவதி அவர்களளுள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சட்ட அமர்வு உருவாக்கிய மரண தண்டனை தொடர்பான அடிப்படை நெறி உருவாக்கப்படும் வரை கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனை என்பதே இயல்பான தண்டனையாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

பிரிட்டிஷ் ஆட்சியில் 1898ம் ஆண்டு உருவாக்கப்பட்ட குற்ற நடைமுறைச் சட்டத்தின் 367 (5) வது பிரிவின்படி, மரண தண்டனைக்குரிய குற்றமொன்றில் ஒரு நீதிமன்றம் மரண தண்டனை அல்லாமல் குறைந்த (அதாவது சிறை) தண்டனை அளித்தால் அது அதற்கான விளக்கத்தை அலிக்க வேண்டும். அதாவது மரண தண்டனை என்பது விதி. ஆயுள் தண்டனை என்பது விதி விலக்கு. 1950ல் உருவான நமது அரசியல் சட்டமும் இதை ஏற்றுக் கொண்டது 1956வரை இது நீடித்தது.

எனினும் 1898ம் ஆண்டு குற்ற நடைமுறைச் சட்டம் 1973 வரை நீடித்தது. 41வது சட்ட ஆணையப் பரிந்துரைகளின் (41st Law Commission) அடிப்படையில் 1973ல் இதில் இரு முக்கிய, வரவேற்கத்தக்க திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. புதிய சட்டத்தின் 235 (2) பிரிவின்படி தண்டனை வழங்குமுன் நீதிமன்றம் குற்றம் சுமத்தப்பட்டவரிடம் தண்டனை குறித்து அவரது கருத்தைக் கேட்க வேண்டும். 354 (3) பிரிவின்படி மரண தண்டனை வழங்கப்படும் வழக்குகளில் அதற்கான “சிறப்புக் காரணங்களை” நீதிமன்றம் குறிப்பிட வேண்டும். இந்த இரு முக்கிய பிரிவுகளே “அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்கிற வரைநெறி உருவாவதற்கு இட்டுச் சென்றது. அதன் வழியாக ஆயுள் தண்டனை என்பது விதியாகவும், மரண தண்டனை என்பது விதிவிலக்காகவும் மாறியது.

1973ம் ஆண்டு குற்ற நடைமுறைச் சட்டம் செயலுக்கு வருவதற்கு முன்னதாக அதே ஆண்டில், ஜக்மோகன்சிங் வழக்கில் உச்சநீதிமன்றம் மரண தண்டனை நீக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை நிராகரித்துத் தீர்ப்பு வழங்கியது, 35வது சட்ட ஆணையப் பரிந்துரையில் (1967) ‘இந்தியா போன்ற (சமூகப் பொருளாதார) வேறுபாடுகள் நிறைந்த நாடுகளில் மரண தண்டனையை நீக்க இயலாது’ எனக் கூறப்பட்டிருந்ததன் அடிப்படையில் இப்படித் தீர்ப்பளிக்கப்பட்டது.

நீதியரசர் பகவதி தலைமையில் அமைந்த அமர்வு (1982), 1973ம் ஆண்டுச் சட்டத் திருத்தங்களைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து அது அளித்த விளக்கம் இரு முக்கிய அம்சங்களைக் கொண்டிருந்தது.

(அ) மரண தண்டனை அளிப்பதற்குச் சிறப்புக் காரணங்களைக் கூற வேண்டும் எனச் சொல்ல வரும்போது, குற்றத்தின் சூழலை மட்டுமின்றிக் குற்றவாளியின் சூழலையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை அது வலியுறுத்தியது. “தண்டனையின் அளவை நிர்ணயிக்கும்போதோ, அல்லது கொலைக் குற்றம் உட்பட (இ.த.ச 302) வெவ்வேறு குற்றங்களுக்கான தண்டனைகளைத் தேர்வு செய்யும்போதோ நீதிமன்றம் அந்தக் குறிப்பிட்டக் குற்றத்தின் தன்மையில் மட்டுமின்றி, குற்றவாளியின் சூழலிலும் உரிய கவனம் செலுத்த வேண்டும்” என்கிற கூற்றில் (i) குற்றத்தின் தன்மை, அளவு, நோக்கம், பாதிக்கப்பட்டவரின் தகுதி முதலானவற்றோடு (ii) குற்றவாளி யார், அவரது நிலை, பின்புலம், குடும்பம், வயது உட்பட அவரது சூழல்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் எனப் பொருளாகிறது. குற்றவாளியின் சூழல் என்பதில் அவரது மன அமைப்பு, சாதி முதலான சமூகக் காரணிகள் அவர் மீது செலுத்திய பிடிப்பு முதலியனவும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.

(ஆ) மரண தண்டனை வழங்கப்படுகிற நபரின் இருப்பு சமூகத்திற்கு மிகப் பெரிய ஊறாகவும் (menace), அவர் திருத்தப்படவே முடியாத நபராகவும் இருக்க வேண்டும் என்பது பச்சன் சிங் வழக்கு அளிக்கும் அடுத்த முக்கிய நிபந்தனை. இந்த நிபந்தனை உண்மையில் தண்டனையின் அளவைத் “தணிக்கும் ஒரு காரணி” (mitigating factor). அதாவது, ஒருவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட வேண்டுமானால் அவர் இப்படியாகத் திருத்தப்பட முடியாத, சமூகத்தின் நிரந்தரத் தொல்லையாக இருக்க வேண்டும்.

ஒரு எடுத்துக்காட்டு: சமீபத்தில் நடைபெற்ற டில்லி பாலியல் வன்கொடுமைக் குற்றம் மிகக் கொடூரமானது என்பதை அறிவோம். அதில் பங்கு பெற்ற ஒரு 16 வயதுப் பையன் மிகக் கொடூரமாக நடந்து கொண்டதும் தெரியும்.. ஆனால் குற்றத்தின் இந்தத் தன்மைகள் மட்டுமே அவனுக்கு மரண தண்டனை அளிக்கப் போதா. அவன் ஒரு சிறுவன்: இன்னும் திருந்தக் கூடிய வாய்ப்பு உள்ளவன்; சிறு வயதிலேயே ஏழ்மை காரணமாக வீட்டை விட்டு வெளியேற நேர்ந்தவன்; இதனூடாகத் தன் சிறு பிராயத்தை, கல்வி வாய்ப்பை எல்லாம் தொலைத்தவன். இவை அவனை மரண தண்டனையிலிருந்து விலக்கி வைக்கக் கூடிய தணிக்கும் காரணிகளாகச் செயல்படும். தண்டனையின் நோக்கம் பழிவாங்கலோ (revenge), ஈடு செய்தலோ (retribution) அல்ல. குற்றத்தை உணர்ந்து திருந்தி வாழவைத்தலே அதன் முதன்மையான நோக்கம் என்பதை நாம் மறதுவிடலாகாது.

இந்தப் பதின்மூவருக்கும் தவறாக மரணதண்டனை அளித்தது எப்படி?

பச்சன்சிங் வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சட்ட அமர்வு ஒன்று இத்தகைய அடிப்படை நெறி ஒன்றை உருவாக்கிப் பதினாலு ஆண்டுகளுக்குப் பின் வேறொரு வழக்கில் இந் நெறிமுறை மீறப்பட்டது. ராவ்ஜி என்கிற ராம்சந்திரா என்னும் வழக்கில் (2 SCC 175 /1996) இரு நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு ஒன்று, “குற்ற விசாரணை ஒன்றில் பொருத்தமான தண்டனை அளிப்பதற்குக் கவனத்தில் கொள்ள வேண்டியது அக் குற்றத்தின் தன்மை, அளவு ஆகியவைதானே தவிர குற்றவாளியின் சூழல், தன்மை அல்ல” என பச்சன் சிங் வழக்கில் உருவான அடிப்படை நெறிமுறைக்கு மாறான நெறி ஒன்றை வரையறுத்தது.

ராவ்ஜி வழக்கில் உருவாக்கப்பட்ட இந் நெறிவரையின் அடிப்படையில் குறைந்தபட்சம் ஆறு வழக்குகளில் குற்றத்தின் தன்மையை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு, பச்சன்சிங் நெறிவரையில் கூறப்பட்ட குர்றவாளியின் சூழல், தன்மை ஆகியன கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் ஏழு பேருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ள உண்மையை உச்ச நீதிமன்றம் பதிமூன்றாண்டுகளுக்குப் பின் சந்தோஷ் குமார் பாரியார் என்னும் வழக்கில் (2009) கண்டுபிடித்தது. “அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்கிற நிபந்தனை, “ஆயுள்தண்டனைதான் விதி, மரண தண்டனை ஒரு விதிவிலக்குதான்” என்பதை நிறுவியுள்ளது. விதிவிலக்குகளை மிக அரிதாகவே பயன்படுத்த வேண்டும் என்பது ஒரு நிறுவப்படட் சட்ட நடைமுறை. எனவே அரிதினும் அரிதான வழக்கு என்னும் நிபந்தனை நீதிமன்றத்தின் மீது ஒரு அசாதாரணமான சுமையை ஏற்றுகிறது. தனது விருப்பாக அது மரணதண்டனையை தேர்வு செய்தால், அரிதினும் அரிது என்னும் நிபந்தனையில் பொதிந்துள்ள விதிவிலக்குகளைத் திருப்தி செய்ய அது முற்றிலும் புறவயமாக உண்மைகளை மதிப்பிட வேண்டும்” எனக் கூறிய உச்ச நீதிமன்றத்தின் பாரியார் அமர்வு, ராவ்ஜி வழக்கைப் பின்பற்றிக் கடந்த ஒன்பதாண்டுகளில் குறந்த பட்சம் ஆறு வழக்குகளில் தவறுதலாகத் (per incurium) தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது எனத் திட்டவட்டமாக அறிவித்தது. இந்த ஆறு வழக்குகளில் ஏழு பேர் இப்படித் தவறுதலாக மரணதண்டனை விதிக்கப்பட்டனர்.

சந்தோஷ் குமார் பாரியார் பணத்திற்காக ஒரு சிறுவனைக் கடத்திச் சென்று கொன்றான். எத்தகைய கொடூரமான குற்றமானாலும் குற்றவாளியின் சூழலைக் கணக்கில் கொள்ள வேன்டும் எனக் கூறிய உச்ச நீதிமன்றம் அவனது மரண தண்டனைய ஆயுள் தண்டனையாகக் குறைத்து ஆணையிட்டது. பாரியாரின் சூழலிலிருந்த தண்டனைகளைக் குறைக்கும் காரணிகள், அவனது வழக்கை அரிதினும் அரிது அல்ல என முடிவு செய்யப் போதுமானது என நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது. குற்றவாளி ஒரு பின்தங்கிய சமூகப் பொருளாதாரப் பின்னணியிலிருந்து வந்தவன் என்கிற உண்மை குற்றத்தின் தன்மையை நீர்க்கச் செய்யாது என்ற போதிலும், அந்தப் பின்னணியை ஒரு தணிக்கும் சூழலாகக் (mitigating circumstance) கொள்ளலாம் எனவும், அவன் திருந்துவதற்கு உள்ள வாய்ப்பு கணக்கில் கொள்ளப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியது. திருந்தி மறுவாழ்வு வாழ பாரியாருக்கு சாத்தியமே இல்லை என வழக்கு தொடுத்திருப்போர் (prosecution) நிறுவுதல் என்பது அவருக்கு மரண தண்டனை வழங்குவதற்கு முன்நிபந்தனையாக உள்ளது என பச்சன்சிங்கை மேற்கோள்காட்டி நீதிமன்றம் இறுதியுரைத்தது.

பாரியார் வழக்கு விசாரணையில் இருந்தபோதே, தீர்ப்பு வருவதற்குச் சற்று முன்னதாக அங்குஷ் மாருதி ஷிண்டே என்னும் வழக்கில் (6 SCC 667 /2009) ஆறு பேர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையும் பச்சன்சிங் நெறிவரைக்கு எதிரானது என்கிற வகையில் இதையும் சேர்த்து மொத்தம் (7+6=13) பதிமூன்று பேர்களது மரணதண்டனைகள், அவை தவறாக வழங்கப்பட்டவை என்கிற அடிப்படையில் குறைக்கப்பட வேண்டும் எனப் பதினான்கு நீதிபதிகள் கையொப்பமிட்ட மனு குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்ட பின்னணி இதுவே. இரண்டு நாட்களுக்கு முந்திய நீதியரசர் கே.டி.தாமசின் கருத்தையும் கணக்கிலெடுத்துக் கொண்டால் அவரது அமர்வால் தவறாக மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி ஆகியோரையும் சேர்த்துக் குறைந்தபட்சம் பதினேழு பேர்களுக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டுகளில் தவறாக மரண தண்டனைகளை வழங்கியுள்ளது எனலாம். ஒப்புதல் வாக்குமூலத்தின் அடியாகப் பெறப்பட்ட எண்ணிக்கை இது. ஒப்புக்கொள்ளப் படாத தவறுகளியும் சேர்த்துக் கொண்டால் இந்த எண்ணிக்கை இன்னும் பெரிய அளவில் அதிகமாகலாம்.

நல்லவேளையாக இவர்களின் தண்டனைகள் இதுவரை நிறைவேற்றப் படாததால் இன்று அவர்கள் தூக்குக் கயிற்றில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பிச் சரி செய்ய இயலாத இத் தண்டனைகள் ஒருவேளை நிறைவேற்றப்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்?

குறிப்பு 1. மனுவில் கையொப்பமிட்ட 14 நீதியரசர்கள்: பி.பி.சாவந்த், ஏ.பி.ஷா, பிலால் நஸ்கி, பி.கே.மிஸ்ரா, ஹோஸ்பெட் சுரேஷ், பனசந்த் ஜெயின், பிரபா ஶ்ரீதேவன், சிவசுப்பிரமணியம், பி.சி,ஜெயின், எஸ்.என்.பார்கவா, பி.ஜி.கோல்சே படீல், ரன்விர் சஹாய் வர்மா, பி.ஏ.கான், பி.எச்.மார்லபள்ளி.

இதுவும் இதர முக்கிய தகவல்களும் வி.வெங்கடேசனின் கட்டுரை மற்றும் நீதியரசர் ஏ.கே.கங்கூலி அவர்களின் பேட்டி ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டன (Frontline, Sept 7, 2012).

குறிப்பு 2 பாரியார் அமர்வு ‘சைபண்ணா எதிர் கர்நாடக அரசு’ (2005 என்கிற இன்னொரு வழக்கையும் சுட்டிக் காட்டியது. ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த சைபண்ணா பரோலில் சென்று தன் மனைவியையும் மகளையும் கொலை செய்கிறார். ஆயுள் தண்டனை அனுபவிப்பவர் கொலை செய்தால் அவருக்குக் கட்டயமாக மரண தண்டனை அளிக்க வேண்டும் என்கிற விதிப்படி (இ.த.ச 303) உச்சநீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.

ஆனால் முன்னதாக ‘மிது எதிர் பஞ்சாப் அரசு’ (1983) என்னும் வழக்கில் உச்ச நீதிமன்றம் இ.த.ச 303 பிரிவை ரத்து செய்திருந்தது. ஏனெனில் முன் குறிப்பிட்ட 1973ம் ஆண்டு குற்ற நடைமுறைச் சட்டத்தின்படி குற்றவாளியிடம் தண்டனை குறித்து நீதிமன்றம் கேட்க வேண்டும்; ஏன் மரண தண்டனை தேர்வு செய்யப்படுகிறது என்பதற்குச் சிறப்புக் காரணங்கள் சொல்ல வேண்டும். பச்சன்சிங் வழக்கினூடாக உருவாக்கப்பட்ட நெறிவரையின்படி அரிதினும் அரிதான வழக்கு என நிறுவ வேண்டும். ஆயுள் தண்டனையிலுள்ளவர்களுக்கு இப்படியான சூழலில் மரண தண்டனை கட்டாயம் என்றால் இப்படி அவரிடம் தண்டனை குறித்துக் கேட்பது, மரண தண்டனை வழங்குவதற்குச் சிறப்புக் காரணங்கள் சொல்வது, அரிதினும் அரிது என நிறுவுவது முதலியன தேவையற்றதாகிவிடுகின்றன. இந்த முரணின் அடிப்படையில் 303வது பிரிவு ரத்து செய்யப்பட்டது.

சைபண்ணா வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கினால் ஒரே நேரத்தில் ஒருவர் எவ்வாறு இரு ஆயுள் தண்டனைகளை அனுபவிக்க இயலும் என்கிற கேள்வியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக நீதிமன்றம் 303வது பிரிவின்படி அவருக்கு மரணதண்டனை அளித்தது. பாரியார் வழக்கில் இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட நீதிமன்றம் சைபண்ணா வழக்கில் தான் அளித்த மரண தண்டனை, மிது மற்றும் பச்சன்சிங் தீர்ப்புகளுக்கு முரணாக உள்ளதால் தவறு என ஏற்றுக் கொண்டது.

எனினும் சென்ற ஜனவரி 4 அன்று சைபண்ணாவின் கருணை மனுவை பிரணாப் முகர்ஜி நிராகரித்தார். மீண்டும் ஒரு முறை உள்துறை அமைச்சகம் நிராகரிக்க வேண்டும்ம் எனப் பரிந்துரைத்ததன் அடிப்ப்படையில் அவர் இதை மேற்கொண்டார். உச்ச நீதிமன்றம் இதைத் தவறு எனச் சொன்னால் என்ன, 14 முன்னாள் நீதியரசர்கள் கருணை அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டால் என்ன, தான் ஒரு ‘இரும்பு அரசு’ எனக் காட்டிக் கொள்கிறது இந்திய அரசு. பிரதீபா படீலைப் போலன்றி அரசுக்குத் தாளம் போடுகிறார் பிரணாப்

அரிதினும் அரிது என்பது முற்றிலும் புறவயக் காரணிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றதா? அரிதினும் அரிது என்கிற விலக்கின் பயன் எல்லோருக்கும் சமமாகக் கிடைக்கும் வாய்ப்புள்ளதா?.. (அடுத்த பதிவில்)

3 : ‘அரிதினும் அரிது’ முறையாகத் தீர்மானிக்கப் படுகிறதா?

குற்ற விசாரணை மற்றும் நீதி வழங்கு நிறுவனங்கள் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மற்றும் தண்டிக்க்ப்பட்டவர்கள் மீது காட்டும் வெறுப்பு அலட்சியம் முதலியன, அவர்கள் இழைத்த அல்லது இழைத்ததாகக் கருதப்படுகிற குற்றங்களின் மீது அவர்கள் கொண்டுள்ள வெறுப்பு அல்லது ஆத்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவானது என்பதைக் காட்டிலும் குற்றத்தைச் செய்தவர்கள் மீது அவர்கள் கொண்டுள்ள வெறுப்பின் அடிப்படையில்தான் உருவாகிறது என்னும் பொருளில் மறைந்த மனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் அவர்கள் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுவார். தண்டனை வழங்கப்பட்டவர்கள், குறிப்பாக மரணதண்டனை வழங்கப்பட்டவர்கள், பொதுவில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகிறவர்கள் பெரும்பாலோர், ஏன் கிட்டத்தட்ட தொண்ணூறு சத்திற்கு மேற்பட்டோர் அடித்தள சாதி, வர்க்கம் மற்றும் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதும், விசாரணை செய்பவர்கள் மற்றும் நீதி வழங்குபவர்கள் பெரும்பான்மையும் இதற்கு நேர் மாறாக இருப்பதும்தான் இதற்குக் காரணங்கள்.

தண்டிக்கப்பட்டுச் சிறைகளில் வதியும் கைதிகள், கைதிகளுக்கான பிரிட்டிஷ் காலச் சட்டங்கள் வழங்குகிற அடிப்படை உரிமைகள் மற்றும் குறைந்தபட்ச வசதிகளும் அளிக்கப்படாமல் மிகக் கேவலமாகவும் கொடுமையாகவும் நடத்தப்படுவதற்கும் இத்தகைய கண்ணோட்டங்களே பின்புலமாக உள்ளன. இவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்துள்ள தண்டனைகள் போதாது, இன்னும் கடுமையாக நடத்தப்படவேண்டும் என்கிற மனநிலை பொதுவாகச் சமூகத்தில் நிலவுகிறது. ஊடகங்களும் அதையே பிரதிபலிக்கின்றன. அஃப்சல் குரு மரண தண்டனை நிறைவேற்றப் பிரச்சினையில் ‘தினமணி’, ‘தினமலர்’, ‘தினத்தந்தி’, ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’ உள்ளிட்ட பெரும்பான்மையான நாளிதழ்கள் (இந்து தவிர) குறைந்த பட்ச ஊடக அறமுமின்றி வெறுப்பைக் கக்கியது இதற்கொரு சமீபத்திய சான்று.

நீதிவழங்கும் பொறுப்பில் அமர்ந்துள்ளவர்கள், அந்தப் பொறுப்பில் அமர்ந்துள்ளதாலேயே, தமது வாழ்நிலையினூடாகவும், தமது விரிந்த படிப்பு மற்றும் தொடர்ந்த பயிற்சியினூடாக விசாலித்த இதயத்தினூடாகவும் உருவாகியுள்ள அகவயக் கண்ணோட்டங்களின் தாக்கங்களிலிருந்து விடுபடுவதில்லை. புகழ்பெற்ற வழக்குரைஞரும் எழுத்தாளருமான ஏ.ஜி.நூரானி ஒருமுறை சொன்னதுபோல ‘குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டவருக்கு நீதி கிடைப்பதற்கு வேறெல்லாவற்றையும் விட அன்று தீர்ப்பை எழுதும் வாய்ப்புப் பெற்று அந்த நாற்காலியில் அமர நேர்ந்த நீதிபதியின் நல்ல மனதைத் தவிர வேறு உத்தரவாதமில்லை’.

இந்திய நீதிமன்றங்களால் மரண தண்டனை வழங்கப்பட்டவர்களின் வழக்குகளை எல்லாம் ஆராய்ந்தால் ஒரே மாதிரியான குற்றத்தைச் செய்த, அல்லது ஒரே குற்றத்தில் ஒரே அளவு பங்குபெற்ற இரண்டு அல்லது மூன்று குற்றவாளிகளுக்கு (அல்லது குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு) எப்படி வெவ்வேறு நீதிமன்ற அமர்வுகள் வெவ்வேறு தீர்ப்புகளை எழுதி, எப்படி ஒருவர் தூக்கில் தொங்குவதற்கும், ஒருவர் தண்டனைக் குறைப்பிற்கும், ஒருவர் விடுதலையாகி வீட்டுக்குச் செல்லவும் நேர்ந்தது என்பதை அறிந்து அதிர்ச்சி அடையலாம். ஒருவர் தூக்கில் தொங்க நேர்வது என்பது ‘திடீரென தலையில் இடி விழுவது போல ஒரு எதிர்பாராத கொடூரம்’ என அமெரிக்க நீதியரசர் பாட்டர் ஸ்டூவர்ட் ஒருமுறை கூறியதைச் சுட்டிக் காட்டுவார் மும்பை வழக்குரைஞரும் இது குறித்து விரிவாக ஆய்வு செய்பவருமான யுக் மொஹித் சவுத்ரி. நான்கு பேர் வீதியில் மழையில் நனைந்து கொண்டு செல்லும்போது திடீரென ஒருவர் தலையில் இடி விழுந்து அவர் மட்டும் மரணமடைய நேர்வது போலத்தான் மரண தண்டனைகளும் உலகெங்கிலும் விதிக்கப்பட்டு விடுகின்றன. அதை எதிர் பார்க்கவும் முடியாது, தடுத்துக் கொள்ளவும் முட்டியாது. அதனால்தான் மரணதண்டனை விதிப்பை ஒரு ‘திருவுளச் சீட்டுக் குலுக்கலுடன்’ (lethal lottery) ஒப்பிடுவார்கள்.

மொஹித் சவுத்ரி சொல்லும் சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம். முதலில் ஹர்பன்ஸ் சிங் வழக்கு (1982). ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரைக் கொன்ற வழக்கில், இந்தக் குற்றச் செயலில் சம அளவில் பங்கு பெற்ற ஜீடாசிங், கஷ்மீரா சிங், ஹர்பன்ஸ் சிங் என்கிற மூவரது மரண தண்டனையை அலகாபாத் உயர்நீதிமன்றம் சென்ற அக்டோபர் 1975ல் உறுதி செய்தது. மூவரும் தனித்தனியாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். (i) ஜீடாசிங்கின் மேல்முறையீட்டை ஒய்.வி.சந்திரசூட், வி.ஆர்.கிருஷ்ணய்யர், என்.எல்.உன்ட்வாலியா ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது. ஜீடாசிங் தூக்கிலிடப்பட்டார். (ii) கஷ்மீராசிங்கின் மரணதண்டனையை எம் ஃபசல் அலி மற்றும் பி.என்.பகவதி என்னும் இரு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. (iii) ஹர்பன்ஸ் சிங்கின் மேல்முறையீடு மற்றொரு உச்ச நீதி மன்ற அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டு அவரும் ஜீடாசிங்குடன் தூக்கு மேடை ஏற இருந்த தருணத்தில் அவர் மறு முறையீடு செய்தார், இம்முறை அவரது தண்டனை நிறைவேற்றத்தை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம் குடியரசுத் தலைவரது மன்னிப்பிற்குப் பரிந்துரைத்தது. அவ்வாறே மன்னிப்பும் வழங்கப்பட்டது.

அதேபோல தர்மேந்திரசிங் (2002) என்பவரும் ஹேராஜ் ராம் (2003) என்பவரும் தங்களின் மனைவியரின் நடத்தைகளில் சந்தேகம் கொண்டு அவர்களையும், பிறந்த குழந்தைகளையும் கொன்றனர். இந்த இரு தனித்தனி வழக்குகளில் முன்னவருக்கு மரண தண்டனையும் பின்னவருக்கு ஆயுள் தண்டனையும் அளிக்கப்பட்டது. மூன்று குழந்தைகLளைப் பலி கொடுத்து ஏதோ ஒரு பூசை செய்த தாமு (2000) என்பவருக்கு மரண தண்டனையை ஆயுளாகக் குறைத்த உச்ச நீதிமன்றம் ஒரு குழந்தையைப் பலி கொடுத்த சுஷில் முர்முவுக்கு (2004) மரண தண்டனையை உறுதி செய்தது. தாமுவை மரணதண்டனையிலிருந்து விடுவித்தபோது சொன்ன காரணம், “அறியாமை மற்றும் மூட நம்பிக்கையின் விளைவாக“ அவர் இப்படிச் செய்து விட்டார் என்பது. இதே காரணம் அளவில் இதைவிடக் குறைந்த குற்றம் செய்த முர்முவுக்கும் பொருந்தும்தானே.

பச்சன்சிங் வழக்கில் “மரண தண்டனைகள் தன்னிச்சையாகாவும் மனம்போன போக்கிலும்” (arbitrarily and freakishly) அளிக்கப்படுவதாக நீதியரசர் பகவதி குறிப்பிட்டதற்கு இவற்றைவிட வேறு என்ன சான்றுகள் இருக்க முடியும்? முந்தைய கட்டுரையில் குறிப்பிட்ட சந்தோஷ்குமார் பாரியார் வழக்கில் உச்சநீதிமன்றம் “அரிதினும் அரிது” என்பதைக் கண்டறிவதற்கு சீரான அணுகல் நெறி எதையும் இதுவரை கண்டறியவில்லை என்பதை ஏற்றுக் கொண்டது நினைவிற்குரியது.

மொஹிட் சவுத்ரி மூன்று உச்ச மூன்று நீதிபதிகள் பங்கு பெற்ற உச்ச நீதிமன்ற அமர்வுகள் எவ்வாறு மரண தண்டனைகளைக் கையாண்டன எனச் செய்துள்ள ஒப்பாய்வு மிக முக்கியமான ஒன்று. நீதிபதி அர்ஜித் பசாயத் பங்குபெற்ற அமர்வுகளின் முன் வந்த 12 மரண தண்டனைகள் உறுதி செய்யப்பட்டன. இருவரது ஆயுள் தண்டனைகள் மரண தண்டனையாக உயர்த்தப்பட்டன. கீழ் நீதிமன்றங்களில் விடுவிக்கப்பட்ட இருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. ஆக நீதிபதி பசாயத் முன் வந்த 22 வழக்குகளில் 16 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. மரண தண்டனை விதிக்கப்பட்ட யாரையும் அவர் விடுதலை செய்யவும் இல்லை. அது மட்டுமல்ல ஐந்து வழக்குகளில் அவர் வழங்கிய 11 மரண தண்டனைகள் தற்போது “அறியாமை மற்றும் தவறுதலாக” (per incurium) வழங்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தால் கண்டறியப்பட்டுள்ளது.

நீதியரசர் எஸ்.பி.சின்ஹா அவர்களின் முன் 17 வழக்குகள் வந்தன. அவர் ஒரு வழக்கில் கூட மரண தண்டனையை உறுதி செய்யவில்லை. யாருடைய ஆயுள் தண்டனையையும் மரண தண்டனையாக உயர்த்தவில்லை. விடுவிக்கப்பட்ட யாருக்கும் மரண தண்டனை வழங்கவுமில்லை. கீழ் நீதிமன்றங்களில் மரண தண்டனை வழங்கப்பட்ட மூவரை அவர் விடுதலை செய்தார்.

நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனின் முன் வந்த 13 வழக்குகளில் 6 பேருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. அவரும் ஆயுள் தண்டனை எதையும் மரண தண்டனையாக்கவோ, விடுதலை செய்யப்பட்டவருக்கு மரண தண்டனை வழங்கவோ இல்லை. மரண தண்டனை வழங்கப்பட்ட ஒருவரை அவர் விடுதலை செய்தார்.

ஆக, நீதிபதி பசாயத் வழங்கிய மரணதண்டனை வீதம் 73 சதம். நீதிபதி பாலகிருஷ்ணன் 46 சதம். நீதிபதி சின்ஹாவின் மரண தண்டனை வீதம் சுழி. உச்ச நீதிமன்றம் உறுதி செய்யும் மரண தண்டனைகளின் சராசரி வீதம் 19 சதம் என்பதை இவர்களின் வீதங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான் இவர்கள் ஒவ்வொருவரின் அகநிலை உருவாக்கத்தையும் புரிந்து கொள்ள முடியும்.

உச்ச நீதிமன்றத்தில் 14 அமர்வுகள் (benches) உள்ளன. இதில் எந்த அமர்வுக்குத் தன் முறையீடு அனுப்பப்படும் எனத் தீர்மானிக்கும் உரிமை தனது மரண தண்டனை குறித்து மேல்முறையீடு செய்ய வந்தவருக்குக் கிடையாது. ஒரு வேளை அது நீதியரசர் சின்ஹாவின் அமர்வு முன் வந்தால் அவரது மரண தண்டனை குறைக்கப்படுவதற்கான வாய்ப்பு நீதிபதி பசாயத்துடன் ஒப்பிடும்போது, கிட்டத்தட்ட நூறு சதமாக இருக்கும். நீதிபதி பாலகிருஷ்ணன் முன் வந்தால் அது சுமார் 50சதமாக இருக்கும். உச்ச நீதிமன்றச் சராசரியுடன் ஒப்பிடும்போது நீதிபதி பசாயத்தின் முன் ஒருவரது மேல் முறையீடு வராமல் வேறு எந்த ஒரு அமர்வின் முன்னாவது விசாரணைக்கு வரக்கூடிய அதிர்ஷ்டம் வாய்க்குமேயானால் அவர் மரண தண்டனையிலிருந்து தப்புவதற்கு நான்கு மடங்கு வாய்ப்பு அதிகமாகிறது. நீதிபதி பசாயத் முன் ஒருவரது முறையீடு வருமேயானால் இந்தப் பிறவியில் குற்றம் மட்டுமல்ல முற்பிறவியில் ஏதேனும் பாவமும் செய்திருக்க வேண்டும் என அவர் சமாதானம் செய்து கொள்ள வேண்டியதுதான். வேறென்ன சொல்ல முடியும்?

புறநிலை எதார்த்தங்கள், முந்தைய வரை நெறிகள், சான்றுகள் எல்லாவற்றையும் காட்டிலும் தீர்ப்பை எழுதும் நீதிபதிகளின் அகநிலைக் கண்ணோட்டங்கள், மனநிலை ஆகியவற்றைச் சார்ந்தே மரணதண்டனைக் கைதிகளின் விதி உள்ளது. சுவாமி சிரத்தானந்தா வழக்கிலும் பச்சன்சிங் வழக்கிலும் உச்ச நீதிமன்றமும் இதை ஏற்றுக் கொண்டுள்ளது. ஒருவேளை மரணதண்டன அளிப்பது தொடர்பான அனைத்து விதிகள் நெறிகள் ஆகியவற்றை ஒரு கணினியில் உள்ளீடு செய்து தீர்ப்பை எழுதும் பொறுப்பை அதனிடம் கையளித்தால் இன்றுள்ளதைவிட நீதியான தீர்ப்புகளைப் பெறமுடியும் போல. இயந்திரங்களைக் காட்டிலும் மனித மனங்கள், அதிலும் நீதி வழங்கும் மனங்கள் இப்படி இறுகிப் போகிற கொடுமையை என்ன சொல்வது?

ஒரே மாதிரியான சூழலில் குற்றங்களுக்குக் காரணமான, அல்லது ஒரே குற்றத்தில் சம அளவு பங்குபெற்ற வெவ்வேறு குற்றவாளிகளுக்கு வெவ்வேறு விதமாகத் தண்டனை வழங்குவது குடிமக்களுக்குச் சமப் பாதுகாப்பை வழங்கும் அரசியல் சட்டத்தின் 14வது பிரிவிற்கும், குடிமக்களின் உயிருக்கு உத்தரவாதமளிக்கும் 21 வது பிரிவிற்கும் எதிரானது என்பதை அரசியல் சட்டத்தின் காவலர்களான நமது உச்சநீதிமன்றமும் குடியரசுத் தலைவரும் கண்டுகொள்வதில்லை.

தன்னிச்சையாகவும், அகவயமான நிலைபாடுகளாலும் மனம்போன போக்கில் (arbitrary) மரணதண்டனைகள் வழங்கப்படுகின்றன என்பதைத் தவிர டாக்டர் பாலகோபால் சொன்னது போல சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையிலும் (discriminatory) மரணதண்டனைகள் வழங்கப்படுகின்றன. உச்ச நீதிமன்றம் இதையும் ஏற்றுக்கொண்டுள்ளது. ராஜேந்திர பிரசாத் வழக்கில் (1979) நீதியரசர் கிருஷ்ணய்யர், மரணதண்டனை விதிப்பதில் வர்க்க மற்றும் நிற வேறுபாடுகளும் கூட (class and colour bias) ஒரு பங்கு வகிக்கின்றன போலும் என்றார். நிறம் என்பது நமது சூழலில் சாதியை அர்த்தப்படுத்துவதாகவே கொள்ள வேண்டும். பச்சன்சிங் வழக்கில் இதை மீண்டும் ஒலித்த நீதியரசர் பகவதி, “ஏழைகளும் அடித்தள மக்களுமே (poor and downtrodden) இந்தக் கொடுந்தண்டனைக்கு அதிகம் பலியாகின்றனர்” என்று கூறி மரண தண்டனை விதிப்புகளில் சமூக ஏற்றத்தாழ்வுகளின் பங்கைச் சுட்டிக் காட்டினார்.

மரணதண்டனை விதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் ஏழைகளாக உள்ளதைச் சுட்டிக்காட்டும் மொஹித் சவுத்ரி, ”ஜனவரி 1, 2000 முதல் டிசம்பர் 31, 2009 வரை கடந்த ஒன்பது ஆண்டுகளில் 30 வழக்குகளில் உச்ச நீதிமன்றம் மரண தண்டனைகளை வழங்கியுள்ளது. இவர்களில் 14 பேருக்கு இலவசச் சட்ட உதவிகளின் மூலமே வழக்குகள் நடத்தப்பட்டன. கீழ் நீதிமன்ரங்களில் மேலும் பலரது வழக்குகள் இலவசச் சட்ட உதவிகளின் மூலமே நடத்தப்பட்டன.” என்கிறார். இந்தப் 14 பேரில் 12 பேருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனைகள் தவறானவை என உச்ச நீதிமன்றம் தற்போது ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தப் பன்னிரண்டு பேரில் ராவ்ஜி ஏற்கனவே தூக்கிலிடப் பட்டுவிட்டார். இவரது வழக்கும் இலவசச் சட்ட உதவியின் மூலமே நடத்தப்பட்டது. இலவசச் சட்ட உதவியில், அமர்த்தப்படும் வழக்குரைஞர்களுக்குப் போதிய ஊதியம் வழங்குவதில்லை. பெரும்பாலும் இளைஞர்கள், போதிய அனுபவம் இல்லாதவர்களே இலவசச் சட்ட உதவி பெறுபவர்களுக்கு வழக்குரைஞர்களாக நியமிக்கப் படுகின்றனர். இவர்களில் பலர் அக்கறையோடு வழக்கை நடத்துவதில்லை என்பதோடு, சில நேரங்களில் அவர்களே தமது கட்சிக்காரர்களை வெறுப்போடு அணுகுவதும் உண்டு, அஃப்சல் குருவுக்கு நியமிக்கப்பட்ட வழக்குரைஞர்கள் இப்படி அவரிடம் வெறுப்புடன் நடந்து கொன்டது குறித்து முன்பே குறிப்பிட்டுள்ளேன். அஜ்மல் கசாப் வழக்கு சர்வதேச கவனம் பெற்றதால் அவருக்குத் தகுதியான வழக்குரைஞர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களும் பொறுப்புடன் செயல்பட்டனர். எனினும் அவர்களின் முக்கிய வேண்டுகோள்கள் பலவற்றையும் நீதிமன்றங்கள் நிராகரித்தன. உலகெங்கிலும் இப்படிப்பட்ட நிலைதான். அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ரூத் கின்ஸ்பெர்க், “மரணதண்டனை உறுதி செய்யப்படுவதற்காக உச்ச நீதிமன்றத்திற்கு வரும் வழக்குகள் எதிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பாக விசாரணை நீதிமன்றங்களில் முறையாக வழக்கு நடத்தப்பட்டதில்லை” எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

இங்கு மரணதண்டனையை நீக்க முடியாது என 35வது சட்ட ஆணையம் உறுதிபடக் கூறியதற்கு ஆதாரமாக இந்தியாவின் விரிந்த பரப்பு, பலதரப்பட்ட மக்கள், அவர்களுக்கிடையேயான கல்வி முதலான அம்சங்களில் உள்ள வேறுபாடுகள் ஆகியவற்றைச் சுட்டிக் காட்டியது, இந்தக் கருத்துரையின் அடிப்படையிலேயே உச்ச நீதிமன்றமும் ஜக்மோகன்சிங் (1973), பச்சன்சிங் (1982), சசி நாயர் (1992)ஆகிய வழக்குகளில் மரண தண்டனையைச் சட்டத்திலிருந்து நீக்க முடியாது எனக் கூறியது. ஆனால், எந்தக் காரணங்களுக்காக மரணதண்டனையை நீக்க இயலாது என்று சட்ட ஆணையம் சொன்னதோ அந்தக் காரணங்களுக்காகவே மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டியாதாக இருகிறது என்பதுதான் மேலே உள்ள அனுபவங்கள் உணர்த்தும் உண்மை.

ஒரு நாகரிகச் சமூகத்தில் தண்டனைகளின் நோக்கம் என்ன? அந்த நோக்கத்தை மரணதண்டனை நிறைவேற்றுகிறதா? அடுத்த பதிவில்….

4. குற்றம், சமூகம், சட்டம், தண்டனை, மரணதண்டனை

காந்தியிடமிருந்து தொடங்குவதுதான் பொருத்தமாக இருக்கும். மரண தண்டனை பற்றிக் கேட்டபோது அவர் இப்படிச் சொன்னார்: “வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கூட தண்டனை என்ற பெயரில் சிறையில் அடைப்பதை நான் விரும்பவில்லை. கொள்ளைக்காரர்களும் ஏன் கொலையாளிகளும் கூட தண்டிக்கப்படுவதை என் அகிம்சை அணுகல்முறை ஏற்கவில்லை. மரணதண்டனை என்பதை எந்த வகையிலும் என் மனச்சாட்சி ஏற்கவில்லை.” சுருங்கச் சொல்வதானால் மரண தண்டனை என்ன, எந்தத் தண்டனையுமே கூடாது என்பதுதான் தண்டனை குறித்த காந்தியின் கருத்தாக இருந்தது எனலாம். யாரையும் தண்டிப்பதற்கான தகுதி நமக்கு, அதாவது நமது சமூகத்திற்கு இல்லை என அவர் கருதுவதாகத் தெரிகிறது.

காந்தியின் பல கொள்கைகள் இன்றைய நடைமுறைக்கு ஒவ்வாதவை. தண்டனைகளே கூடாது என்றால் எப்படி? அதனால்தான் அவரது கொள்கைகளை இன்று யாருமே பொருட்படுத்துவது இல்லை. அவர் உயிருடன் இருந்தபோது அவர் கட்சிக்காரர்களே அவரது பேச்சைக் கேட்டதில்லை. அவர் இறந்த பின் அவரது ‘வாரிசு’களாகக் கருதப்பட்டவர்கள் புதிய இந்தியாவை நிர்மாணிப்பதில் உதாசீனப் படுத்தியது முதலில் அவரது கொள்கைகளைத்தான். நாம் உட்பட யார் அந்த இடத்தில் இருந்திருந்தாலும் அப்படித்தான் செய்திருப்போம்.

ஏன்? இன்றைய சமூக நடைமுறைகளுக்கு அவை பொருந்தாது என்பதுதான்.

ஆனால் இந்தப் பிரச்சினையை இப்படி உடனடி நடைமுறை சார்ந்து பார்க்காமல் தர்க்க பூர்வமாகப் பார்த்தால் என்ன ஆகும்? “இன்றைய நடைமுறைக்கு ஒன்று பொருந்தாது” என்கிற எடுகோளை எடுத்துக் கொள்வோம். அப்படியானால் “இன்றைய நடைமுறையை”ச் சரி என ஏற்றுக் கோள்கிறோமா? நமது நோக்கம் இன்றைய நடைமுறைகளை, இன்றைய சமூக அமைப்பை ஏற்றுக் கொள்வதுதானா? நிச்சயமாக இல்லை. இன்றைய நடைமுறையும் அமைப்பும் மாற்றப்பட வேண்டியவை என்கிறபோது, இன்றைய நடைமுறைக்கும் அமைப்பி.ற்கும் பொருந்தாது என்பதற்காக ஏதொன்றையும் கைவிடுவது என்பது எப்படிச் சரியாக இருக்கும்?

இந்த எளிதில் விடை கூற இயலாத கேள்வியை நாம் அடிக்கடி எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நடைமுறையில் இருப்பவர்கள் இப்படியான பிரச்சினைகளை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.

குற்றம், சட்டம், தண்டனை ஆகியவற்றிலும் நாம் இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. சட்டங்கள் இல்லாவிட்டால் சமூக ஒழுங்கு சிதையும். வலுவானவர்களிடமிருந்து எளியவர்களைக் காக்க சட்டங்கள் தேவை என்பதுதான் சட்ட ஒழுங்கு நிறுவனங்கள் முன்வைக்கும் நியாயம். ஆனால் சமூக மாற்றம் என்கிற நோக்கில் இயங்குபவர்கள் இதை ஏற்க மாட்டார்கள். சட்டங்களின் நோக்கம் என அவர்கள் நேரெதிரான ஒரு கருத்தை முன் வைப்பார்கள். அவர்களின் கருத்துப்படி சட்டங்கள் என்பன எளியவர்களிடமிருந்து வலியவர்களைக் காப்பாற்றுவதற்காக, அவர்களாலேயே உருவாக்கப்பட்டவை. உண்மைதான். சொத்துரிமை என்கிற சட்டத்தை எடுத்துக் கொள்வோமே. ஏராளமான நிலங்களையும், மூலதனத்தையும் வைத்துக் கொண்டு சுரண்டிக் கொழுப்பவர்களைச் சுரண்டப்படுகிறவர்களிடமிருந்து பாதுகாப்பதுதான் சொத்துரிமை குறித்த சட்டங்களின் நோக்கம்.

சரி, சட்டங்களே வேண்டாம் என ஒதுக்கினால் என்ன ஆகும்? அது எளியவர்களை இன்னும் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளாதா? நூறு ஏக்கர் நிலமுள்ள ஒருவன் அருகிலுள்ள இரண்டு ஏக்கர் நிலமுடைய ஒருவனது நிலத்தை ஆக்ரமித்துக் கொள்வதையும், ஒரு கார்பொரேட் நிறுவனம் தனது தேவைகளுக்காக விவசாயிகளின் நிலங்களை எடுத்துக் கொள்வதையும் சொத்துரிமை என்கிற சட்டம் இல்லாத சூழல் எளிதாக்கிவிடாதா? இன்னொரு எடுத்துக்காட்டு இந்த நிலையை மேலும் எளிதாகப் புரிந்து கொள்ள உதவும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்பது தலித் மக்களை அதிகாரத்திலும் எண்ணிக்கையிலும் பெரும்பான்மையாக உள்ள உயர் சாதியினரிடமிருந்து தலித் மற்றும் பழங்குடியினரைப் பாதுகாக்க நமக்குத் தேவையாக இருக்கிறது. இதை வேண்டாம் எனச் சொல்லிவிட இயலுமா?

இதுபோன்ற சிலவற்றைச் சுட்டிக்காட்டித்தான் சட்டங்கள் எல்லாமே எளியவர்களை வலியவர்களிடமிருந்து பாதுகாப்பதற்காகவே உள்ளன என்கிற கருத்து மிக எளிதாகப் பொதுப்புத்தியில் பதிக்கப்படுகின்றது. இந்த இடத்தில் நாம் என்ன பார்வையைக் கொண்டிருக்க முடியும்? எவ்வளவுதான் சட்டங்கள் ஊறுமிக்கவையாக இருந்தபோதிலும், வலியவர்களைப் பாதுகாப்பதே அவற்றின் நோக்கமாக இருந்தபோதும், சட்டங்கள் இல்லாத நிலை எளியவர்களைப் பொருத்தமட்டில் இன்னும் மோசமானதாக இருக்கும். எனவே சட்டங்களை நாம் ஏற்றுக் கொள்ளும் அதே நேரத்தில், அவற்றின் சமூக உள்ளடக்கங்கள் மற்றும் அவற்றின் அடிப்படையிலான சட்ட நடைமுறைகள் ஆகியவை குறித்த கடும் விமர்சனச் செயற்பாடுகளை நாம் எந்நாளும் கைவிட்டுவிட முடியாது.

அதேபோல ஒரு சமூக அமைப்பிற்குள் சட்டம் வன்மையாகச் செயல்பட வேண்டுமானால் அது அச் சமூகம் முழுமைக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். ஆனால் சட்டங்கள், குற்ற வரையறைகள் என்பன பல்வேறு வேறுபாடுகள் நிறந்த ஒரு சமூக முழுமைக்கும் ஒரேபோல இருக்க இயலாது. ஒரு சமூகப் பிரிவினரது அற மதிப்பீட்டில் குற்றமாகக் கருதப்படுவது இன்னொரு சமூகப் பிரிவினரில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம். எனினும் ஒரே சீரான சட்டத்தொகுதியும் நமக்குத் தேவைப்படுகிறது. எனவே இந்தச் சீரான சட்டத் தொகுதி எல்லோருக்கும் நியாயம் செய்வது இல்லை, அப்படி இல்லாதவரைக்கும் அது குறைபாடுடைய சட்டத் தொகுப்புதான் என்கிற புரிதலும் குற்ற உணர்ச்சியும் சட்டத்தைக் கையாள்பவர்களுக்கு இருக்க வேண்டும். ஆனால் ரொம்பவும் சிந்திக்கிற, நீதி வழங்கு அனுபவமிக்க மனங்களிடமும் கூட அந்தப் புரிதல் இருக்கது என்பதுதான் பிரச்சினை. இச்சூழலில் நமது பணி அத்தகைய குற்ற உணர்வைத் திரும்பத் திரும்பச் சமூகத்தின் முன் வைத்துக் கொண்டே இருப்பதுதான்.

சட்டம் உருவாக்கும் தடைகளும் தண்டனைகளும் மட்டுமல்ல அது வழங்கும் தடையற்ற உரிமைகளும் கூட ஒரு ஏற்றத்தாழ்வான சமூகங்களில் வலியவர்களால் எளியவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது என்பதையும் நாம் மறந்துவிட இயலாது. பேச்சுரிமை, கருத்துரிமை என்பதெல்லாம்கூட இப்படி வலியவர்களால் எளியவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும். ஆக சட்டங்கள் எப்போதும் முழுமையற்றவை, குறைபாடுடையவை என்கிற உணர்வுடன் அவற்றைக் கையாளும்போதுதான் குற்ற விசாரணை நடைமுறையும் அது சார்ந்த நீதி மற்றும் தண்டனை வழங்கலும் மனிதாயப்படும்.

சில நேரங்களில் இது போன்ற தொடர்ச்சியான விமர்சனங்கள் விவாதங்கள், முன்னோடி முயற்சிகளின் ஊடாகவும் விளைவாகவும் சட்டங்கள் மேலும் மனிதாயப் படுதலை நோக்கி நகரும்; அதாவது திருத்தப்படும். சிலநேரங்களில் இத்தகைய மாற்றங்கள் நீதியியல் அடிப்படையிலான கொள்கை உருவாக்கங்களுக்கு (judicially evolved principles) இட்டுச் செல்லும். முன்னதற்கு எடுத்துக்காட்டாக நமது குற்ற நடைமுறைச்சட்டத்தில் 1973ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களைச் சொன்னால், இரண்டாவதற்கு எடுத்துக்காட்டாக பச்சன் சிங் வழக்குத் தீர்ப்பைச் சொல்லலாம்.

எனவே “சட்ட வழமை” (legal order) என்பது சமூக வளர்ச்சியினூடாக வளர்சியுற்று வருகிறது. ஆனால் அது தன்னிச்சையாக வளர்ச்சி பெறுவதில்லை. “சமூக அற ஒழுங்கின்” (normative order) எதிரொளிப்பாகவே அது நடைபெறுகிறது. நடைமுறையில் குறைபாடுகள் இருந்தபோதும் சமூக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்மாதிரியான விழுமியங்களையே ‘சமூக அற ஒழுங்கு’ அல்லது ‘சமூக விழுமியத் தொகுதி’ என்கிறோம். சட்ட வழமைக்குப் பின்னால் இந்த சமூக அற வழமைத் தொகுதி உள்ளது. காலப்போக்கில் சமூக விழுமியங்கள் மேலுயர்கின்றன, மனிதாயமடைகின்றன, ஜனநாயகப்படுகின்றன. அதற்குத் தக சட்ட வழமையும் தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டியதாகிறது.

ஒன்றை மனங்கொள்ளவேண்டும். இவ்வாறு சமூகத்தில் வளர்ந்து வரும் அற ஒழுங்கு அல்லது விழுமியத் தொகுப்பு என்பது பெரும்பான்மை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விழுமியங்களின் தொகுப்பு அல்ல. பெரும்பான்மையான மக்களின் நடைமுறையில் உள்ளதைக் காட்டிலும் இன்னும் ஒரு உயர் தளத்தில் அற ஒழுங்கு (Normative Order) உருப்பெறுகிறது. எடுத்துக்காட்டாக ஒன்று. சாதி மற்றும் தீண்டாமை வேறுபாடு என்பது சமூகத்தில் பெரும்பான்மையாக உள்ள ஒரு வழமை. இங்குள்ள ஒரு பெரும்பான்மை மதத்தால் கோட்பாட்டு ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. ஆனால் நமது சமூக அற ஒழுங்கில் (Normative Order) அதற்கு இடம் கிடையாது; அது ஏற்கத் தகாத ஒன்று. இந்த அடிப்படை நமது சட்ட வழமையிலும் ஏற்கப்பட்டு தீண்டாமை மற்றும் சாதி வேறுபாடு ஒரு குற்றம் ஆக்கப்பட்டுள்ளது. இப்படி நிறையச் சொல்லலாம். இந்தச் சட்ட ஒழுங்கின் வலிமையும் நியாயப்பாடும் சமூக அற ஒழுங்கின் அடிப்படையிலேயே பெறப்படுகிறது. சட்ட விதிக்கு வேறென்ன மகத்துவம் இருக்க இயலும். அச்சில் எழுதப்பட்ட சட்ட விதியை மீறினால் என்ன கேடு வந்துவிடப் போகிறது? உண்மையில் குற்றச் செயல் என்பது சட்டத்தை மீறுவதல்ல. சமூக ஒழுங்கைச் சிதைப்பதாலேயே ஒன்றைக் குற்றம் என்கிறோம். அது சமூக விழுமியத் தொகுதியில் ஒரு கிழிசலை ஏற்படுத்துகிறது.

மேலே செல்வதற்கு முன் ஒன்றைக் கவனத்தில் எடுத்துக் கொள்வது நல்லது. இந்தச் சமூக அற ஒழுங்கு என்பது சராசரியாகச் சமூகத்தில் நடைமுறையில் உள்ள மதிப்பீடுகளைக் காட்டிலும் இன்னொரு உயர்ந்த தளத்தில் இயங்கினாலும் இதுவும் கூட முழுமையானதோ குறைபாடற்றதோ அல்ல. (1) மிக்க ஏற்றத் தாழ்வுகளும் குறைபாடுகளும் உள்ள ஒரு சமூகம், (2) அதனினும் மேம்பட்ட விழுமிய வளர்ச்சி பெற்றிருந்த போதிலும் குறைபாடுகள் நிறைந்த ஒரு சமூக அற ஒழுங்கு, (3) இதனடியாக வெளிப்படுகிற ஒரு சட்ட வழமை ஆகியவற்றினூடே இங்கு குற்ற விசாரணை நடைமுறையும் தண்டனை வழங்கலும் செயல்படுகின்றன.

ஆக ஒரு குற்றச் செயல் என்பது இந்த ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக அற ஒழுங்கு வரையறுத்துள்ள எல்லையை மீறுவது என்பதாகிறது. இந்தக் குற்ற நடவடிக்கையின் மூலம் யாரோ ஒருவர் அல்லது சிலர் பாதிக்கப்படுவது என்பதைக்காட்டிலும் இதன் மூலம் சமூக அற ஒழுங்கில் ஏற்படும் கிழிசலே கவலைக்குரிய.து உடனடியாகச் சரிசெய்யப்பட வேன்டியது. எந்தக் குற்றமும் அது திருடு, வன்புணர்ச்சி அல்லது கொலை எதுவாக இருந்தாலும் அது முதலில் சமூகத்திற்கு எதிரானது; இரண்டாவதாகத்தான் அது பாதிக்கப்பட்டவருக்கு எதிரானது என்பதை உலக அளவில் இன்றைய சட்டவியலும் ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்தக் கருத்தில் சில குறைபாடுகள் இருக்கலாம். சமூகத்தின் பிரதிநிதி என்பதாக அறிவித்துக் கொண்டு நீதி தேடும் முகமையாக அரசு இடைபுக இது வழிவகுக்கிறது என்பது இக் குறைபாடுகளில் ஒன்று. வன்முறையே வடிவமாக உள்ள ஒரு அரசு குற்றச் செயலால் பாதிக்கப்பட்டவர்களின் அப்பாவித்தனத்தின் பின் ஒளிந்துகொண்டு மேலும் ஒரு வன்முறையைச் செய்ய இது வழிவகுக்கிறது. எனினும் இது பழிக்குப் பழி, இன்னொரு கொலை என்பதாகவெல்லாம் அமையாமல் நடந்த குற்றச் செயலின் மூலம் கிழிந்த அல்லது பாதிக்கப்பட்ட சமூக அற ஒழுங்கைச் சரிசெய்தல் என்பதை நோக்கி நீதி வழங்கலின் தளத்தை விரிவுபடுத்துகிறது.

ஒரு சிவில் குற்றத்திற்கும் (எ.கா : மோசடி) கிரிமினல் குற்றத்திற்கும் நீதி வழங்கலில் ஒரு முக்கிய வேறுபாடுண்டு. சிவில் குற்றங்களில் நீதி வழங்கல் என்பது பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்வது. கிரிமினல் குற்றங்களில் நீதி வழங்கல் என்பது சமூகத்திற்கு ஏற்பட்ட ஊறைச் சரிசெய்வது. கிரிமினல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்துவிடவும் முடியாது.

இந்த இடத்தில் பொது நீதிவழங்கல் (public justice) என்பதற்கும் பழிவாங்கு நீதி (retributive justice) என்பதற்கும் உள்ள வேறுபாடு கருதத் தக்கது. பொது நீதி வழங்கலில் பழி வாங்கலுக்கு இடமில்லை. குற்றச் செயலுக்குக் குற்றம் புரிகிறவன் மட்டுமே பொறுப்பல்ல; சமூகத்திற்கும் அதில் சம அளவு அல்லது சொல்லப்போனால் கூடுதல் பொறுப்பிருக்கிறது என்பதையும், அதேபோல குற்றச் செயலின் பாதிப்பு என்பது அதனால் பாதிக்கப்பட்டவனுக்கு மட்டுமின்றி சமூகத்திற்கே அதிக பாதிப்பு நிகழ்ந்துள்ளது என்பதையும் பொது நீதிவழங்கல் ஏற்றுக் கொள்கிறது. எனவே அது குற்றச் செயலுக்குத் தனிமனிதனை மட்டும் பொறுப்பாக்குவதில்லை. எனவே அது அந்தத் தனி மனிதனுக்குத் தண்டனை வழங்குவதை மட்டுமே நீதி வழங்கலாக நினைப்பதில்லை. பொது நீதி அமைப்பு என்பது சமூகத்தின் பிரதிநிதியாக நின்று சமூகத்தின் அற ஒழுங்கில் ஏற்பட்டுள்ள ஊறைச் சரி செய்வதில் முனைப்புக் காட்டுகிறது. தான் பிரதிநிதிதுவப்படுத்தும் சமூகம் முழுமையானதல்ல. அது குறைபாடுகள் நிறைந்தது என்பதை உணர்ந்து செயல்படுகிறது. தனது பக்கம் குறைபாட்டை வைத்துக் கொண்டு அது எவ்வாறு மரண தண்டனை போன்ற ஒரு கொடுந்தண்டனையை வழங்க இயலும்?

நீதி வழங்கு முறையின் குறைபாடு அல்லது போதாமை (imperfection) என்பதை மரண தண்டனை எதிர்ப்பாளர்கள் தமது முக்கிய வாதங்களில் ஒன்றாக முன் வைப்பர். எந்த நீதி வழங்கு முறையும் தவறுதலுக்கு அப்பாற்பட்டவை அல்ல, சட்டங்களுக்கு விளக்கமளிப்பது, தவறான சாட்சியங்களை ஏற்றுக் கொள்வது, தனிமனித விருப்பு வெறுப்புகளின் அடியாகச் செயல்படுவது ஆகியவற்றின் அடிப்படையில் தவறுதலாக மரண தண்டனை வழங்கப்பட்ட நிகழ்வுகளை இந்திய அநுபவங்களின் அடிப்படையிலும், உலக அளவு எடுத்துக்காட்டுகளின் மூலமும் நிறுவுவர். நாமும் சிலவற்றை முந்திய கட்டுரைகளில் பார்த்தோம். இந்த அடிப்படையில் திருப்பித் திருத்த இயலாத மரண தண்டனையை ஒருவருக்கு அளிப்பது என்ன நியாயம் என்கிற கேள்வியை அவர்கள் முன்வைப்பர். நாம் இங்கே பேசிக் கொண்டிருக்கும் சமூக அற ஒழுங்குக் குறைபாடு என்பது இதிலிருந்து முற்றிலும் வேறானது என்பதை விளக்கத் தேவையில்லை.

வாய்ப்பு மறுக்கப்படுதல், மனித கண்ணியம் இழிவுக்குள்ளாதல், நீதி, சுதந்திரம் முதலியன பொருளற்றுப் போதல் என ஒரு சமூக மனிதன் அச் சமூகத்திலிருந்தும் அதன் அற ஒழுங்கிலிருந்தும் அந்நியப்பட்டுப் போவதற்குப் பல காரணிகள் உண்டு. ஆல்பர்ட் காமூ சொல்வதுபோல எல்லா மனிதர்களும் அடிப்படையில் சமூக ஒழுங்குகளை மீறக் கூடியவர்களாகவே உள்ளனர் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அவர் positive law எனச் சொல்லும் கருத்தாக்கத்தை நாம் பரிசீலிக்க வேண்டும். காமூவைப் பொருத்த மட்டில் சமூக அற ஒழுங்கிற்குப் பொறுப்பாக ஒரு குடிமகனை வைத்திருக்கும் பொறுப்பு சமூகத்திற்கு இருக்கிறது. மனிதனைச் ‘சமூக மிருகம்’ (social animal) என்னும் ஸ்பினோசாவின் கருத்துக்கு இது எதிரானது. சமூகத்துடன் ஒத்திசைந்து வாழ்தலே நல்லது என மனிதனின் பகுத்தறிவு அவனுக்குச் சொல்கிறது. எனவே அவன் சமூகச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவன் ஆகிறான் என்பது ஸ்பினோசாவின் கருத்தினடியாக வந்தடையும் முடிவு. காமூவின் கருத்துப்படி மனிதன் சமூக மிருகமல்ல. சமூக விதிகளை மீறுவதே அவனது இயல்பு. எனவே அவ்வாறு மீறாமல் வைத்திருக்கும் பொறுப்பு சமூகத்திற்கு உள்ளது. சமூகம் தன்னைக் குறைபாடற்றதாகவும் நீதியாகவும் அமைத்துக் கொள்ளாதபோது அவன் அதன் விதிகளிலிருந்தும் அதன் அற ஒழுங்கிலிருந்தும் பிறழ்வானேயானால் தவறு யார் பக்கம் இருக்கிறது? மனிதர் மீது பகுத்தறிவு ஒரு கட்டுப்பாட்டைச் செலுத்துகிறது என்றே கொன்டாலும் சமூக அநீதிகள் அந்தக் கட்டுப்பாடுகளை வலுவிழக்கச் செய்யக் கூடியவையாக உள்ளன

ஆக, (1) சமூக அற ஒழுங்கில் உள்ள குறைபாடு, (2) சமூக அற ஒழுங்கிற்கும் எதார்த்தமாக உள்ள சமூக நிலைகளுக்கும் உள்ள முரண்பாடு, (3) குற்றவாளியின் குறை எனப் பல காரணிகள் குற்றச் செயலுக்குக் காரணமாகின்றன.

சமீபத்திய டெல்லி பாலியல் வன்முறையை எடுத்துக் கொள்வோம். ஐந்து ஆண்கள் ஒரு பெண்ணுடல் மீது செலுத்திய வன்கொடுமை அது. அதில் ஒரு சிறுவனின் பங்கு ரொம்பக் கொடூரமாக இருந்தது என்கிறார்கள். ஒரு சிறுவனுடைய உள்லத்தில் இத்தனைக் கொடூரம் குடிபுகுந்தது எங்ஙனம்? அந்தச் சிறுவன் சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடி வந்து நகரத்தில் வாழ நேரிட்டவன். அதன் மூலம் அவன் தனது சிறு பிராயத்தையும், குழந்தைமையையும், கல்வியையும் இழந்தவன். பள்ளி சென்று சக குழந்தைகளோடு வளர வேண்டிய சூழலில் பெரு நகரமொன்றில் அவனது வயதுக்கு மீறியவர்களோடு தனது சிறார் பருவத்தைக் கழிக்க நேர்ந்தவன். இத்தகையவன் இப்படி ஆனதன் பொறுப்பை அவன் தலை மீதே சுமத்துவது எப்படிச் சரியாகும்?

ஆனால் அதுதான் இப்போது நடக்கிறது. எப்படியும் அவனைத் தூக்கில் தொங்கவிட்டே ஆக வேண்டும் என்கிற திசையில் இன்று அரசு நகர்கிறது. 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு மரண தண்டனை கூடாது என்கிற சட்ட விதியையும் மாற்றி அவனுக்கு மரண தண்டனை வழங்க முயற்சிக்கப்படுகிறது. இதன்மூலம் சமூக அற ஒழுங்கையும் அடு வளர்ந்து வந்த திசையிலிருந்து பின்னோக்கி நகர்த்த முயற்சிக்கிறது.

டெல்லி பாலியல் கொடுமையில் இன்னும் பல்வேறு அம்சங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேன்டும். ஒரு பெண் இப்படித் தன் காதலனோடு முன்னிரவு வரை சுற்றித் திரியலாமா என்கிற ஆணாதிக்க மதிப்பீடுகளிலிருந்து, இன்றைய சூழலில் ஒரு பெண் தன்னை ஒரு ஆளுமை மிக்க சமூக உயிரியாக முன்நிறுத்திக் கொள்வதைக் கண்ட மரபு வழிப்பட்ட ஆண் மனது துணுக்குறுவதிலிருந்து, சமூக ரீதியாக இன்று பெரு நகரங்கள் பிளவுற்றுக் கிடக்கும் சூழல் உட்பட டெல்லி வன்முறையின் காரணிகள் பல உண்டு. அதில் ஒரு காரணி மட்டுமே குற்றவாளிகளில் குவிந்திருந்ததாகக் கருதப்படும் வக்கிரம். சமூகம் தன்னிடம் இத்தனை குறைபாடுகளை வைத்துக் கொண்டு கொடுந்தண்டனை ஒன்றை எப்படிக் குற்றவாளிகளுக்குத் தர இயலும்?

சமூகம் குறைபாடுடையதாக இருக்கும் வரை அதில் கொடுந் தண்டனைக்கு இடமில்லை.

5.மரண தண்டனை கொடுங் குற்றங்களுக்கு எதிரான அச்சுறுத்தும் கருவி என்பது சரிதானா?

மரண தண்டனையை நீதிமன்றங்களும் பிற நிறுவனங்களும் நியாயப் படுத்தும்போது முக்கியமாக இரண்டு அம்சங்களை முன்வைப்பர். ஒன்று, சமூகத்தின் அறச் சீற்றத்தைத் தணிக்க வேண்டி இந்தத் தணடனை அளிக்க வேண்டியதாயிற்று என்பது. மற்றது இப்படியான கொடுங்குற்றங்கள் சமூகத்தில் நிகழாமல் தடுப்பதற்கு ஒரு அச்சுறுத்தும் கருவியாக மரண தண்டனை தேவையாக இருக்கிறது என்பது.

இரண்டுமே குற்றச் செயல்களுக்குக் குற்றம் புரிந்த தனிமனிதனை மட்டுமே பொறுப்பாக்கி, சமூகத்தின் பொறுப்பைக் காட்சியிலிருந்து மறைக்கின்றன. ஊன்றிக் கவனித்தால் குற்றங்களுக்கு நீதி வழங்கல் என்பதைப் பழி வாங்கும் வாய்ப்பாக அணுகும் நோக்கிலேயே இப்படிச் சொல்லப்படுகிறது என்பதை உணரலாம். ராஜீவ் கொலையாக இருக்கட்டும், பாராளுமன்றத் தாக்குதலாக இருக்கட்டும் நிறைய அப்பாவிகளும் பாதுகாப்புப் படை வீரர்களும் கொல்லப்பட்ட கொடும் நிகழ்வுகள் அவை என்பதை யாரும் மறுக்க இயலாது. எதிர்காலத்தில் எந்த நியாயம் அல்லது அரசியலின் அடிப்படையிலும் இவ்வாறு அப்பாவிகள் கொல்லப்படுவதை நாம் ஏற்க இயலாது.

ஆனால் இந்த இரு நிகழ்வுகளிலுமே மரண தண்டனை வழங்கப்பட்டவர்கள் நேரடியாகக் குற்றத்தில் பங்குபெற்றவர்கள் அல்ல. குற்றச் செயலில் தெரிந்தோ தெரியாமலோ ஏதோ ஒரு வகையில் சிறு உதவிகள் புரிந்தவர்கள்தான் இவர்கள். நேரடியாகப் பங்குபெற்றவர்கள் ஒன்று கொல்லப்பட்டனர் அல்லது தற்கொலை செய்து கொண்டனர் அல்லது இன்னும் பிடிபடவில்லை. ஒருவேளை இவர்கள் எல்லோருமோ சிலரோ பிடிபட்டிருந்தால் நிச்சயம் அவர்களுக்குத்தான் மரணதண்டனை வழங்கப்பட்டிருக்கும். இப்போது மரண தண்டனை வழங்கப்பட்டவர்கள் அப்போது விடுதலை செய்யப்பட்டிருப்பர் அல்லது குறைந்த தண்டனை அளிக்கப்பட்டிருப்பர். ஆக குற்றத்தின் நேரடிப் பங்கேற்பாளர்கள் கிடைக்காததற்காக இப்படிக் கிடைத்தவர்களைப் ‘பதிலி’யாகத் தூக்குக் கொட்டடிக்கு அனுப்புவது எப்படி அற அடிப்படையிலோ சட்ட அடிப்படையிலோ நியாயமாகும்?

அரசும் நீதிமன்றங்களும் இப்படிப் ‘பதிலி’ மரண தண்டனைகளை நிறைவேற்றுவது என்பது பழிவாங்கலன்றி வேறென்ன? ஒரு முன்னாள் பிரதமரைக் கொன்றுவிட்டு, பாராளுமன்றத்தைத் தாக்கிவிட்டு யாரும் பதிலுக்குக் கொல்லப்படாமல் தப்புவதை ஒரு இறையாண்மை மிக்க அரசும் அதன் நீதி வழங்கும் நிறுவனமும் எப்படி அனுமதிக்க இயலும்? குற்றத்தில் நேரடியாகப் பங்கேற்றவர்கள் கொல்லப்பட்டபோதும் சட்டத்தின் அடிப்படையைக் காட்டியும், உரிய சடங்குகளை நிகழ்த்தியும் நாங்கள் பதிலுக்கு ஒருவரையேனும் கொன்றாக வேன்டும் என்பதுதானே இந்த மரணதண்டனைகளின் நியாயம்.

‘பழிவாங்கல்’ (revenge) அல்லது ‘பதிலுக்குப் பதில்’ (retribution) என்பது போன்ற பண்பாட்டு வளர்ச்சி பெறாத காலத்து மொழியில் இன்றைய ஜனநாயகக் குடியரசு பேசலாகாது என்பதனாலேயே ‘அச்சுறுத்தல்” (deterrance), ‘அறச் சீற்றம்’ (moral outrage) முதலான மொழிகளில் தஞ்சம் புகுகின்றனர். இதன்மூலம் தனிநபர் பழிவாங்கலுக்கும் (private vengeance) பொது நீதிக்கும் (public justice) இடையிலான வேறுபாட்டை அழிக்கின்றனர். தனிநபர் பழிவாங்கல் என்பது குற்றத்திற்குக் குற்றவாளியை மட்டுமே பொறுப்பாக்கிச் சமூகப் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும். அது வழங்கும் ‘நீதி’ என்பது குற்றச் செயலால் பாதிக்கப்பட்டவர் (victim)) அல்லது அவரது சந்ததியினருக்கு மட்டுமே ‘நீதி’ வழங்கும். ஆனால் பொது நீதி என்பதோ பாதிக்கப்பட்டவர், குற்றமிழைத்தவர் என குற்றச் செயலின் இரு முனைகளில் உள்ளவர்களுக்குமே நீதி வழங்கும். ஆம், இந்தக் குறைபாடுகள் நிரம்பிய சமூகத்தின் உறுப்பினரானவும் விளைபொருளாகவும் உள்ள குற்றவாளி தண்டனை வழங்கப்பட வேண்டியவராக மட்டுமின்றி நீதி வழங்கப்பட வேண்டியவராகவும் உள்ளார்.

எதார்த்தத்தில் ‘அச்சுறுத்தல்’

மரணதண்டனை என்பது எதார்த்தத்தில் ஒரு அச்சுறுத்தலாக இல்லை என்பதற்கு உலக அளவிலிருந்தும் இந்திய எடுத்துக்காட்டுகளிலிருந்தும் ஏராளமான ஆதாரங்களை மரண தண்டனை எதிர்ப்பாளர்கள் முன்வைக்கின்றனர். முன்னாளைய திருவாங்கூர் கொச்சின் சமஸ்தானத்தை அடிப்படையாகக் கொண்டு மோகன் குமாரமங்கலம் செய்துள்ள ஒரு ஆய்வை பச்சன் சிங் வழக்கில் நீதியரசர் பகவதி எடுத்துக்காட்டுவார். இங்கு 1945க்கும் 1950க்கும் இடைப்பட்ட காலத்தில் மரணதண்டனை வழங்குதல் தடுக்கப்பட்டிருந்தது. இந்த ஐந்தாண்டு காலத்தில் இப்பகுதியில் 962 கொலைக் குற்றங்கள். நிகழ்ந்தன. அடுத்த ஐந்தாண்டுகள் (1951- 1956) இந்தத் தடை நீக்கப்பட்டு கொலைக் குற்றங்களுக்கு மீண்டும் மரண தண்டனைகள் வழங்கப்பட்டன. இப்போது கொலக் குற்றங்களின் எண்ணிக்கை 967ஆக அதிகரித்திருந்ததே தவிரக் குறையவில்லை.

யுக் மொஹித் சிங் முன்வைக்கும் இன்னொரு ஆய்வைக் காணலாம்.. பச்சன்சிங் தீர்ப்பு இந்திய மரண தண்டனை வரலாற்றில் ஒரு எல்லைக்கல் என்பதை அறிவோம். ‘அரிதினும் அரிது’ என்கிற நிபந்தனையின் அடிப்படையில் மரண தண்டன வழங்கல்களும், நிறைவேற்றங்களும் வரலாறு காணாத வகையில் குறைந்தன. கொலை வழக்கு என்றாலே மரண தண்டனை என்கிற நிலை மாறியது.

பச்சன் சிங் தீர்ப்பிற்கு முன்னதாக, 1974- 1978 காலகட்டத்தில், இந்தியாவில் 85,000 கொலைகள் நடந்தன. 25 பேர் தூக்கிலிடப்பட்டனர். அதாவது இலட்சம் கொலைகளுக்கு 34 தூக்குகள் நிறைவேற்றப்பட்டன. 1980க்குப் பின் 10,11,703 கொலைகளுக்காக 83 பேர் தூக்கிலிடப்பட்டனர். அதாவது, இலட்சம் கொலைகளுக்கு 8.2 பேர் (0.0082 சதம்) என்பதாகத் தூக்கிலிடப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்தது, பிந்திய காலங்களில் இன்னும் அதிகப் பேருக்குக் கருணை அளிக்கப்பட்டது. 1995க்குப் பின் தூக்கிலிடப்படுபவர்களின் வீதம் 0.0042 சதமாகவும், 1999க்குப் பின் இது 0.0002 சதமாகவும் மேலும் குறைந்தது. 2005க்குப் பின் நடைபெற்ற 2,30,293 கொலைகளில் ஒருவருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை. அதாவது நிறைவேற்று வீதம் சுழி (தனஞ்சய் சட்டர்ஜி, அஜ்மல், அஃப்சல் ஆகியோரின் தண்டனை நிறைவேற்றங்களுக்கு முன்னதான தரவு). இந்தத் தரவுகள் கிட்டத்தட்ட முற்றிலும் சரியானவை. பிற குற்றங்களைப் போல கொலைக் குற்றங்கள் அவ்வளவு எளிதாக மறைக்க இயலாதவை. குற்றங்கள் தொடர்பான இந்திய அளவிலான வருடாந்திரக் கணக்கெடுப்புகள் இவற்றைத் துல்லியமாகப் பதிவு செய்கின்றன.

ஆக, பச்சன் சிங் தீர்ப்பிற்குப் பின் மரண தண்டனை நிறைவேற்றல் மிகப் பெரிய அளவில் குறைந்துள்ளது. மரண தண்டனை கொலைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் என நம்புகிறவர்களின் வாதப்படி இந்நிலை கொலைக் குற்றங்கள் பெரிய அளவில் அதிகரிப்பதற்கு இட்டுச் சென்றிருக்க வேண்டும்.

ஆனால் உண்மை வேறுவிதமாக உள்ளது. மக்கள் தொகைக்கும் கொலைகளின் எண்ணிக்கைக்கும் உள்ள வீதம் குறித்த வருடாந்திரத் தரவுகள் வேறுவகையான முடிவுக்கு நம்மை இட்டுச் செல்கின்றன. 1952ல் ஒரு இலட்சம் மக்கள் தொகைக்கு 2.81 கொலைகள் நடந்தன. படிப்படியாக 1959ல் இது 3ஆக அதிகரித்தது. 1978 வரை இது 2.5க்கும் 3க்கும் இடையில் ஏற்ற இறக்கங்களுடன் இருந்தது. அடுத்து படிப்படியாக இது அதிகரித்து கொலை வீதம் 1992ல் 4.6ஐ எட்டியது. 1992 லிருந்து இது தொடர்ந்து குறையத் தொடங்கி 2007ல் 2.8ஆகக் குறைந்தது. அதற்குப் பின் 2012 வரை இது அதே அளவில் தொடர்கிறது.

மரண தண்டனையை நீக்கினால் கொலைக் குற்றங்கள் அதிகரிக்கும் என்கிற கருத்தை இந்தத் தரவுகள் தவிடுபொடியாக்குகின்றன. இப்படிக் கொலைகளின் வீதம் குறைந்ததற்குச் சமூகப் பொருளாதார வளர்ச்சிகள் காரணமாக இருக்கலாம் எனச்சொல்லவும் வழியில்லை. இந்தியாவைப் பொருத்தமட்டில் இந்த இடைக் காலத்தில் அப்படி ஒன்றும் சமூக வளர்ச்சிக் குறியெண்கள் மாறிவிடவில்லை. தனி நபர் வருமான வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, குழந்தை பிறப்பு இறப்பு வீதங்கள், மனித வளர்ச்சிக் குறியெண் ஆகிய சமூக வளர்ச்சிக் காரணிகள் எல்லாவற்றுடனும் ஒப்பிட்டு இவற்றுக்கும் கொலை வீதங்கள் குறைவதற்கும் எந்தப் பொருத்தமும் இல்லை என்பதை மொஹித் சவுத்ரி நிறுவி உள்ளார். இந்த வளர்ச்சி எண்கள் எல்லாம் அதிகரித்த போதும் கொலை வீதம் குறைந்தே உள்ளது.

ஒரே ஒரு சமூக வளர்ச்சிக் குறியெண் மட்டுமே இந்தவகையில் நம் கவனத்தை ஈர்க்கிறது. ஆண் பெண் பாலியல் வீதம், அதாவது 1000 ஆண்களின் எண்ணிக்கைக்கு எதனை பெண்கள் உள்ளனர் என்பது ஒரு முக்கியமான சமூக வளர்ச்சி எண். பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கைக்கு எந்த அளவிற்குச் சமமாக உள்ளதோ அந்த அளவிற்குச் சமூகம் வளர்ச்சியுற்றிருப்பதாகப் பொருள். இந்த ஆண் பெண் வீதம் அதிகரிக்கும்போது, அதாவது பெண்களின் எண்ணிக்கை ஆண்களுக்குச் சமமாக உயர உயரச் சமூகத்தில் கொலைகளின் வீதம் குறைகிறது. இது வரவேற்கத்தக்கதும் மகிழ்ச்சியளிக்கக்கூடியதும் தான்.

எந்த வகையிலும் மரண தண்டனை வீதத்திற்கும் கொலை வீதத்திற்கும் தொடர்பில்லை, மரணதண்டன வீதம் குறைவதனால் கொலைக்குற்றங்கள் பெருகுவதற்கான சான்றுகள் இல்லை என்பதே இந்தத் தரவுகளிலிருந்து நாம் வந்தடையும் முடிவு.

மரண தண்டனை அல்லது பொதுவில் தண்டனை ஒரு அச்சுறுத்தல் என்பது அற அடிப்படையில் சரியாகுமா?

அச்சுறுத்தல் என்கிற அடிப்படையில் தண்டனையை விளக்குவோர் மூன்று காரணங்களைச் சொல்வர். அவை (1) தண்டனை கிடைக்கும் என்கிற அச்சம் மக்களைக் குற்றச் செயல்களிலிருந்து தடுக்கும் (2) தண்டனை கிடைக்கும் என்கிற அச்சம் ஒரு குற்றவாளியை மீண்டும் குற்றம் புரிவதிலிருந்து தடுக்கும். (3) ஒரு குற்றவாளிக்குக் கொடுக்கப்படும் தண்டனை மற்றவர்களைக் குற்றச் செயல்களிலிருந்து தடுக்கும். கடுமையான குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்கிற கருத்து இந்த அடிப்படைகளிலிருந்துதான் உருவாகிறது.

இதில் முதலாவது காரணத்தை மட்டும் ஒரு குறிப்பிட்ட அளவிற்குச் சரி எனலாம். அதையும் கூட முழுமையாகச் சரி எனச் சொல்ல இயலாது என்பதைத் தொடர்ந்து நாம் பார்த்து வருகிறோம். இரண்டாவது காரணம் முற்றிலும் ஏற்புடையதல்ல. ஒரு குற்றவாளி மீண்டும் குற்றம் புரிவதைத் தண்டனை குறித்த அச்சம் தடுக்கும் எனில் அந்த மனிதனிடம் ஏதோ ஒரு மாறாத அம்சம் இருந்து குற்றச் செயலை நோக்கித் தூண்டுகிறது எனப் பொருளாகிறது. உளவியல் ரீதியில் வக்கிரமான ஒரு மன நோயாளிக்கு வேண்டுமானால் இது பொருத்தமாக இருக்குமே ஒழிய எல்லா மனிதர்களுக்கும் இது பொருந்தாது. அப்படியே இருந்தாலும் கூட அவனை மீண்டும் குற்றச் செயலிலிருந்து தடுப்பதற்கான வழி அவனுக்கு மீண்டும் தண்டனை கொடுப்பதல்ல. மாறாக அவனை நாம் ஏதோ ஒரு வகையில் சீர்திருத்த (reform), சிகிச்சையளிக்க வேண்டும். இந்தச் சீர்திருத்தம் என்பது ஏதோ ஒரு வகையில் அவனை ஓரிடத்தில் தடுத்து வைத்துத் திருத்துவது என்கிற அளவில் மட்டுமே அது தண்டனையாக இருக்க முடியும்.

தவிரவும் மீண்டும் ஒருவர் குற்றச் செயலில் ஈடுபடுவது என்பது அவரை மட்டும் பொருத்த விஷயமல்ல. அவரை அச் செயலை நோக்கித் தள்ளுகிற அவரது சூழலும் கவனத்திற்குரிய ஒன்று. அந்த வகையில் சீர்திருத்தம் என்பது குற்றவாளியை மட்டுமல்ல குற்றச் சூழலையும் சீர்திருத்துவதாக இருக்க வேண்டும். மொத்ததில் எந்தத் தண்டனையும் குற்றவாளியைச் சீர்திருத்துவதை நோக்கியே அமைய வேண்டும். சீர்திருத்ததில், தடுத்து வைத்தல் போன்ற தண்டனை அம்சம் தவிர்க்க இயலாது என்ற போதிலும், அந்தத் தண்டனை அவரை உள்நோக்கிச் சிந்திக்கவும் அதனடிப்படையில் தனது குற்றச் செயலுக்காக வருந்தவும் வைப்பதை நோக்கியே இருக்க வேண்டும். அச்சுறுத்தல் என்பது இந்த வகையில் தண்டனையின் நோக்கமாக இருக்க இயலாது. அதுவும் மரண தண்டனை என்பது இதற்கு எந்த வகையிலும் பொருத்தமாக இருக்காது. ஒருவரைத் தூக்கிலேற்றித் துள்ளத் துடிக்கக் கொல்லுவதன் மூலம் எப்படி அவரைத் தன் குற்றம் பற்றிச் சிந்திக்க வைத்துத் திருத்த இயலும்?

ஒருவருக்குக் கொடுக்கப்படும் தண்டனை மற்றவரை அச்சுறுத்தி அவரைக் குற்றச் செயலிலிருந்து தடுக்கும் என்கிற மூன்றாவது காரணியையும் முற்றிலும் ஏற்க இயலாது. சவூதி போன்ற நாடுகளில் பொது இடத்தில் தலையச் சீவி அதை எல்லோரும் கட்டாயமாகக் காண வேண்டும் என்பது கொடூரமானது மட்டுமல்ல. ஏற்புடையதுமல்ல. ஒருவர் குற்றம் செய்துவிடக் கூடாது என்பதற்காக இன்னொருவர் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பது என்ன நியாயம்? ஒரு குற்றச் செயலுக்குக் குற்றவாளி மட்டுமின்றி அவரது சூழலும் அதில் பங்குவகிக்கிறது என்கிற நிலையில், அவரைத் தண்டிப்பது மட்டுமே தீர்வாக்கப்படும்போது, தண்டிக்கப்படும் அவர், தனது சூழலின் குற்றத்திற்கும் பொறுப்பேற்றுத் தண்டனையச் சுமக்க வேண்டியவராகிறார். அத்தோடு இப்போது மற்றவர்கள் எதிர்காலத்தில் குற்றம் செய்துவிடக் கூடாது என்கிற பொறுப்பையும் ஏற்று அவருக்காகவும் தண்டனையைச் சுமக்க வேண்டியவராகிறார்.

தண்டனை என்பது ஒருவரைத் தன் குற்றச் செயல் குறித்து உள் நோக்கிச் சிந்திக்க வைத்துத் திருத்தும் முகமாகத்தான் இருக்க முடியுமே ஒழிய மற்றவர்களுக்கு உதாரணம் காட்டுவதற்காக் ஒருவரைத் தூக்கில் தொங்கவிடவோ சிறையில் அடைக்கவோ இயலாது.

6. மரணதண்டனை ஒரு சாவுக் குலுக்கல் சீட்டு

அஃப்சல்குருவை மனைவி மக்களுக்குக் கூடத் தெரியாமல் இரகசியமாகத் தூக்கிலிட்டுக் கொன்றதையும், வீரப்பனின் கூட்டாளிகளும் 1993ல் கண்ணிவெடி வைத்து 22 அதிரடிப் படை வீரர்களைக் கொன்றதற்காக மரண தண்டனை வழங்கப்பட்டவர்களுமான சைமன், ஞானப் பிரகாசம், பிலவேந்திரன், மாதையன் ஆகிய நால்வரது கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்ததையும் ஒட்டி மரண தண்டனை குறித்த விவாதம் மீண்டும் மேலுக்கு வந்துள்ளது.

எனினும் மனித உரிமைப் போராளிகளின் முயற்சியால் இன்று இந்த நால்வரின் தண்டனை நிறைவேற்றத்தைத் தடை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது நிரந்தரத் தடை இல்லை என்றபோதிலும் அஜ்மல் கசாப், அஃப்சல் குரு இருவரையும் மூன்று மாதத்திற்குள் அடுத்தடுத்துத் தூக்கிலிட்டுக் கொன்றதைப் போல இவர்களையும் கொல்ல இருந்த உடனடிச் சூழல் தற்போது விலகியுள்ளது.

உச்ச நீதிமன்றம் ஒருவருக்கு மரண தண்டனையை உறுதி செய்தபோதும். ஆரசியல் சட்டத்தின் 72ம் பிரிவின்படி அவருக்கு மன்னிப்பு அளித்து ஆயுள் தண்டனையாகக் குறைக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரமுண்டு. எனினும் அவர் இதைத் தன்னிச்சையாகச் செய்துவிட இயலாது. அரசிடம், அதாவது உள்துறை அமைச்சகத்திடம் கருத்தைக் கேட்டு அந்த அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும்.

உள்துறை அமைச்சகம் கருணை மனுவை நிராகரிக்கப் பரிந்துரை செய்த போதிலும் குடியரசுத் தலைவர் அப்படிச் செய்யாமல் காலந்தாழ்த்தலாம். முந்தைய தலைவர் பிரதீபா பட்டீல் அப்படிச் செய்தார். அவரது பதவிக் காலத்தில் 35 பேர்களின் மரண தண்டனைகள் ஆயுள்தண்டனைகளாகக் குறைக்கப்பட்டன.

குடியரசுத் தலைவராக ஆவதற்கு முதல் நால் வரையிலும் விசுவாசமான காங்கிரஸ்காரராகத் தீவிர அரசியல் செய்து வந்த பிரணாப் பதவியேற்ற மூன்று மாதத்திற்குள் ஆறு பேர்களின் கருணை மனுக்களை நிராகரித்துச் ‘சாதனை’ புரிந்துள்ளார். அவர்களில் இருவாரது தண்டனைகள் இரகசியமாக நிறைவேற்றப்பட்டும் விட்டன.

நீதிமன்றங்களால் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட பின் நீண்ட காலம் ஒருவர் தூக்கிலிடப் படாமல் இருந்து இறுதியில் கருணை மனு நிராகரிக்கப்பட்டு அவர் தூக்கிலிடப்படக் கூடிய நிலை ஏற்பட்டால், இது தொடர்பாக இடைக்காலத்தில் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஏற்படக்கூடிய அச்சம்,கவலை, துயரம், மன அழுத்தம் (agony of suspense) ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவர் மீண்டும் தனது தண்டனை நிறைவேற்றத்திற்கு எதிராக உச்ச நீதி மன்றத்தை நாடலாம் எனக் குறைந்த பட்சம் நான்கு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் கருத்துரைத்துள்ளது. இந்த அடிப்படையிலேயே இன்று ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனையை எதிர் நோக்கியுள்ள மூவர், வீரப்பன் கூட்டாளிகள் நால்வர், காளிஸ்தான் போராளி தேவேந்திரபால்சிங் முதலானோரின் தண்டனை நிறைவேற்றங்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றன. இந்த விசாரணையின்போது இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டு நீண்ட நாட்களாகக் காத்திருப்போரின் பட்டியலை உச்சநீதிமன்றம் தன் பார்வைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. அதில் அஃப்சல் குருவின் பெயரும் உள்ளது. எனினும் நள்ளிரவில் ஒரு திருடனைப்போல திஹார் சிறைக்குள் நுழைந்து அஃப்சலைத் தூக்கிலிட்டது இதிய அரசு.

நீதிமன்றத்தின் பார்வையில் வழக்கு இருப்பது ஒரு பக்கம்; தூக்கிலிடப்படுவதற்கு முன்னம் ஒரே ஒருமுறை மனைவி, பிள்ளைகள் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களைச் சந்திக்க வாய்ப்பளிக்கும் உலக அள்வில் கடைபிடிக்கப்படும் அடிப்படை மனித நாகரீகமும் மறுக்கப்பட்டது இன்னொருபுறம்; இவை இன்று இந்திய அரசின் மீது கடும் கண்டனத்திற்குக் காரணமாகியுள்ளன.

“தண்டனை நிறைவேற்றம் குறித்து மக்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தால் காரியம் நடக்காது” என இரகசியத் தூக்கிற்குக் காரணம் சொல்கிறார் உள்துறை அமைச்சர் ஷிண்டே. விதிப்படி ஏன் நெருங்கிய உறவினர்களுக்குத் தெரிவிக்கவில்லை எனக் கேட்டால், “விரைவுத் தபாலில் செய்தி அனுப்பினோம். அவர்களுக்குக் கிடைக்கவில்லை” எனச் சொல்லிப் புன்னகைக்கிறார். உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் இப்படி மக்களையும், எதிர்க் கருத்துக்களையும், ஆர்பாட்டங்களையும் கண்டஞ்சுவதை என்னென்பது? தூக்கிலிட்ட கையோடு காஷ்மீர் முழுதும் ஊரடங்குச் சட்டம், தொலைக்காட்சிகளுக்கு சென்சார், எஸ்.எம்.எஸ் சேவை முடக்கம் என நடவடிக்கைகள் தொடர்ந்தன, அஃப்சலின் வீட்டிற்குத் துக்கம் விசாரிக்கச் செல்லவும் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

தனி நபர்கள் யாரேனும் இப்படி விதிமுறைகளை மீறுவதைக்கூட சகித்துக்கொள்ளலாம். ஆனால் ஒரு அரசு, ஒரு மக்கட் தொகுதி என்பன ஏற்றுக்கொண்ட விதிகளையும் நெறிமுறைகளையும் மீறாதிருப்பது அவசியம். ஏனெனில் அப்போதுதான் அது மக்கட் தொகுதியின் சராசரி விருப்பை சரியாக நிறைவேற்றுவதாக அமையும்.

வெறும் சட்ட விதிகளுக்கு அப்பால் கருணை, அன்பு, மனிதாயம், சமூக விளைவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் மன்னிப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே மன்னிப்பு வழங்கு அதிகாரம் நீதித் துறையிடமிருந்து (Judiciary) விலக்கி நிர்வாகத்திடம் (Executive) அளிக்கப்பட்டுள்ளது…

ஆனால் இந்திய அரசோ மன்னிப்பை அரசியலாக்குகிறது. இன்று இரகசியமாகத் தூக்கிலிடப்பட்டவர்கள் இருவரும் முஸ்லிம்கள். பிரதான எதிர்க்கட்சியான வலதுசாரி இந்துத்துவ பாரதீய ஜனதா கட்சி அஃப்சலை உடனடியாகத் தூக்கிலிட வேண்டுமெனத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது.. முஸ்லிம் ஓட்டுகளுக்காகாத் தேசப் பாதுகாப்பை அரசு கைவிட்டு விடுகிறது என்று அது அரசைக் குற்றம் சாட்டி வந்தது. இந்தக் குற்றச் சாட்டினடியாகப் பெரும்பான்மைச் சமூகத்தின் வாக்குகளை இழக்க விரும்பாத இந்திய அரசு இப்படி இரகசியத் தூக்குகளை நிகழ்த்திக் கோண்டுள்ளது. பா.ஜ.கவைப் பொருத்த மட்டில் அதற்கு நீதி என்றால் மரண தண்டனைதான். இத்தகைய பிரச்சினைகளில் மரண தண்டனைக்குக் குறைவான எதையும் அது தண்டனையாகக் கருதுவதில்லை. நீதியையும் பழிவாங்கலையும் அது பிரித்துப் பார்ப்பதில்லை. அஃப்சலின் மரணத்தை அக்கட்சியினர் லட்டு தின்று கொண்டாடினர்.

இன்று இந்திய அரசும் பா.ஜ.க வழி நின்று நீதியையும் பழிவாங்கலையும் ஒன்றாக்கியுள்ளது. குறுகிய அரசியல் நலன்களுக்காக அப்படிச் செய்துள்ளது. அப்படிச் செய்ததன் மூலம் இன்று காஷ்மீர் மக்களிடமிருந்து அது மேலும் அந்நியமாகியுள்ளது.

சமூகம் நாகரீகத்தில் மேம்படுவது அதன் தண்டனைக் கலாச்சாரதில் (penal culture) வெளிப்படும். தண்டனைகள் மேலும் மேலும் மனிதாயப் படுவதே சமூகம் நாகரீகமடைந்து வருவதன் அடையாளம். இப்படிக் குடும்பத்தவர்களுக்கும் அறிவிக்காமல் தூக்கிலிட்டு உயிரைப் பறிப்பது இதற்கு எதிரானது.

இந்நிலையில் சென்ற வாரம் மரண தண்டனை எதிர்ப்பாளர்களின் நியாயங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் இன்னொரு செய்தி வந்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் நால்வருக்கு மரண தண்டனை அளித்ததில் தவறு நிகழ்ந்துள்ளது என அந்த மரண தண்டனைகளை வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வுக்குத் தலைமை ஏற்றிருந்த நீதியசர் கே.டி.தாமஸ் கூறினார். இதை அவர் தன்னிச்சையாகக் கூறவில்லை. அதற்கும் ஒரு பின்னணி இருந்தது.

சென்ற ஜூலை 25 (2012) அன்று புகழ்பெற்ற முன்னாள் நீதிபதிகள் 14 பேர் அப்போதுதான் பதவி ஏற்றிருந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து நமது நீதி வழங்கு வரலாற்றில் இதுவரை காணாத வகையில் மனு ஒன்றை அளித்தனர். ஆறு வழக்குகளில் மரணதண்டனை அளிக்கப்பட்டு, இந்தியாவின் பல்வேறு சிறைகளிலும் அடைபட்டுக் கிடக்கும் 13 பேர்களின் மரண தண்டனைகளை, குடியரசுத் தலைவருக்கு அரசியல்சட்டத்தின் 72ம் பிரிவின்படி அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு அம்மனுவில் வேண்டப்பட்டிருந்தது.

மரண தண்டனை ஒழிப்பு என்கிற அடிப்படையிலிருந்து அவர்கள் இதைக் கோரவில்லை. அவர்களில் சிலர் மரண தண்டனை ஒழிப்பில் அக்கறை உள்ளவர்களாக இருக்கலாம். ஆனால் இந்தக் கோரிக்கை அந்த அடிப்படையிலிருந்து எழவில்லை, மாறாக அவர்கள் சுட்டிக் காட்டியுள்ள இந்த மரண தண்டனைகள் அனைத்தும் தற்போதைய நீதி வழங்கு நெறிமுறைகளுக்கு மாறாகவும் தவறாகவும் அளிக்கப்பட்டுள்ளது என்கிற அடிப்படையிலேயே அவர்கள் இதைக் கோரினர்.

ஓய்வு பெற்ற இந்நீதிபதிகளின் இக்கோரிக்கையும் தன்னிச்சையாக முன்மொழியப்பட்ட.தல்ல.. உச்ச நீதிமன்றம் தனது சமீபத்திய மூன்று வழக்குகளில் தீர்ப்பளிக்கும்போது முன்னதாக அது ஏழு வழக்குகளில் அளித்துள்ள மரண தண்டனைகள் “தவறுதல் அல்லது அறியாமையின்” (per incurium) கரணமாக அளிக்கப்பட்டவை என ஏற்றுக் கொண்டுள்ளது. விரிவாக இது பற்றிப் பேச இங்கு இடமில்லை. சுருக்கமாகக் காண்போம்.

மனித சமூகம் நாகரீகத்தில் பண்படுவது அதன் தண்டனைக் கலாச்சாரத்தில் (penal culture) வெளிப்படும். மேலும் மேலும் தண்டனைகள் மனிதாயப் படுத்தப்படும். சட்டங்கள் அதற்கேற்ற முறையில் மாற்றியமைக்கப்படும். சில நேரங்களில் சட்டங்களுக்கு அப்பால், நீதிவழங்கு நெறிமுறைகளின் ஊடாகவும் புதிய தண்டனைக் கோட்பாடுகள் (judicially evolved principles) உருவாகும், நீதித் துறையில் அவ்வப்போது அபூர்வமாக வெளிப்படும் சில நல்ல உள்ளங்கள் இதற்குக் காரணமாகியுள்ளன.

பிரிட்டிஷ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட நமது குற்ற நடைமுறைச் சட்டத்தின் (CrPC) 367 (5)வது பிரிவின்படி கொலைக் குற்றம் ஐயத்திற்கு இடமின்றி நிறுவப்பட்டால் அவருக்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்பது கட்டாயம். அப்படியில்லாமல் அவருக்கு ஆயுள் தண்டனை போன்ற குறைந்த தண்டனை அளித்தால் அதற்குக் காரணம் சொல்ல வேண்டும். அதாவது மரண தண்டனை என்பது விதி. ஆயுள் தண்டனை என்பது விதிவிலக்கு.

1973ல் நமது குற்ற நடைமுறைச் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டபோது இது தலைகீழாக மாற்றப்பட்டது. கொலைக் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை விதியாகவும் மரண தண்டனை விலக்காகவும் மாற்றப்பட்டது. எனவே ஒரு நீதிமன்றம் ஒருவருக்கு மரண தண்டனை அளித்தால் அதற்குச் “சிறப்புக் காரணங்கள்” சொல்லி விளக்கமளித்தாக வேண்டும். தண்டனை அறிவிக்குமுன் அது குறித்துக் குற்றவாளியிடம் கருத்துக் கோரவேண்டும் என்கிற நெறியும் இப்போதுதான் உருவாக்கப்பட்டது. நமது தண்டனைக் கலாச்சாரம் ஒருபடி முன்னேறியதற்கு இது ஒரு சான்று..

1982ம் ஆண்டு நீதியரசர் பி.என்.பகவதி அவர்கள் புகழ்பெற்ற பச்சன்சிங் வழக்கில் இந்தத் திருத்தத்தைப் பயன்படுத்தி மரண தண்டனை வழங்குவதில் ஒரு புரட்சிகரமான வரை நெறியை (ratio dicidendi) உருவாக்கினார். “அரிதினும் அரிதான வழக்கில் மட்டுமே மரண தண்டனை அளிக்க முடியும்” என்கிற வரையறை இவ்வழக்கில்தான் உருவாக்கப்பட்டது. நீதியரசர் பகவதி அவர்கள் உருவாக்கிய வரை நெறி இரண்டு அம்சங்களைக் கொண்டிருந்தது,

‘அரிதினும் அரிது’ என்பதை நிறுவும்போது குற்றத்தின் சூழல் அளவு, தன்மை, கொடூரம் ஆகியவற்றை மட்டுமின்றி குற்றவாளியின் சூழல், வயது, சமூகப் பின்னணி, இப்படியானதற்கான காரணம் ஆகியவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பது ஒன்று. மற்றது மரணதண்டனை வழங்கப்பட்டவர் சமூகத்திற்கு ஒரு நிரந்தரத் தொல்லை (menace), திருத்தவே முடியாதவர் என நீதிமன்றம் நிறுவ வேண்டும் என்கிற கூடுதல் சுமையையும் எதிர்கால நீதிமன்ற அமர்வுகளின் மீது நீதியரசர் பகவதி சுமத்தினார். இது குற்றவாளியை மரண தண்டனையிலிருந்து விடுவிக்கும் ஒரு தண்டனைத் தணிப்புக் காரணியாக (mitigating factor) பிந்தைய வழக்குகளில் செயல்பட்டது. 1982க்குப் பின் மரண தண்டனை வழங்கலும், நிறைவேற்றலும் மிகப் பெரிய அளவில் குறைந்தன.

எந்த ஒரு குற்றச்செயலுக்கும் குற்றத்தைச் செய்த தனிமனிதன் மட்டுமே பொறுப்பாளி அல்ல. இந்த ஏற்றத்தாழ்வான, கொடூரமான, நீதியற்ற சமூகத்திற்கும் அதில் பெரும் பொறுப்பு உண்டு. தூக்குக் கொட்டிலுக்கு அனுப்பபப்படுகிற பெரும்பாலோர், ஏன் கிட்டத்தட்ட அவ்வளவு பேருமே அடித்தள சாதி, வர்க்கம், சிறுபான்மை மதம் ஆகிய பின்னணிகளில் வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடைபெற்ற டில்லி பாலியல் வன்கொடுமைக் குற்றத்தை எடுத்துக் கொள்வோம். இது மிகக் கொடூரமான ஒரு நிகழ்வு என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க இயலாது. அதில் பங்கு பெற்ற ஒரு 16 வயதுப் பையன் மிகக் கொடூரமாக நடந்து கொண்டதும் தெரியும்.. ஆனால் குற்றத்தின் இந்த அளவும், தன்மையும், சூழலும் மட்டுமே அவனுக்கு மரண தண்டனை அளிக்கப் போதா. அவன் ஒரு சிறுவன்: இன்னும் திருந்தக் கூடிய வாய்ப்பு உள்ளவன்; சிறு வயதிலேயே ஏழ்மை காரணமாக வீட்டை விட்டு வெளியேற நேர்ந்தவன்; இதனூடாகத் தன் சிறு பிராயத்தை, கல்வி வாய்ப்பை எல்லாம் தொலைத்தவன். இப்படியானதற்கு அவன் மட்டுமே பொறுப்பு அல்ல. இந்தச் சமூக அமைப்புக்கு இதில் முக்கிய பங்குண்டு. எனவே அவனது இந்தப் பின்னணியும் சூழலும் அவனை மரண தண்டனையிலிருந்து விலக்கி வைக்கக் கூடிய தணிக்கும் காரணிகளாகச் செயல்படவேண்டும். தண்டனையின் நோக்கம் பழிவாங்கலோ (revenge), குற்றத்திற்குக் குற்றம் என ஈடு செய்தலோ (retribution) அல்ல. குற்றத்தை உணர்ந்து திருந்தி வாழவைத்தலே அதன் முதன்மையான நோக்கம் என்பதை நாம் மறந்துவிடலாகாது.

ஆனால் இப்படியான ஒரு புரட்சிகரமான நெறிமாற்றம் ஒன்று பச்சன்சிங் வழக்கை அடுத்து உருப் பெற்றுள்ளதைக் கண்டுகொள்ளாமல் பதினாலு ஆண்டுக்ளுக்குப் பின் வேறொரு வழக்கில் இந் நெறிமுறை மீறப்பட்டது. ராவ்ஜி என்னும் வழக்கில் (2 SCC 175 /1996) இரு நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு ஒன்று மரண தண்டனை அளிப்பதற்குக் “கவனத்தில் கொள்ள வேண்டியது அக் குற்றத்தின் தன்மை, அளவு ஆகியவைதானே தவிர குற்றவாளியின் சூழல், தன்மை முதலியன அல்ல” என பச்சன் சிங் வழக்கில் உருவான அடிப்படை நெறிமுறைக்கு மாறான நெறி ஒன்றை வரையறுத்தது.

ராவ்ஜி வழக்கில் உருவாக்கப்பட்ட இந் நெறிவரையின் அடிப்படையில், குற்றத்தின் தன்மையை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு, பச்சன்சிங் நெறிவரையில் கூறப்பட்ட குற்றவாளியின் சூழல், தன்மை ஆகியன கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் குறைந்த பட்சம் ஐந்து வழக்குகளில் ஏழு பேருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ள உண்மையை உச்ச நீதிமன்றம் பதிமூன்றாண்டுகளுக்குப் பின் 2009ல் சந்தோஷ் குமார் பாரியார் என்னும் வழக்கில் கண்டுபிடித்தது. அதே நேரத்தில் இதேபோல இன்னொரு வழக்கில் ஆறு பேருக்குத் தவறாக மரண தண்டனை வழங்கப்பட்டது. இந்த அடிப்படையில்தான், எல்லாவற்றையும் சேர்த்து மொத்தம் 13 பேர்களுக்குத் தவறாக மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர்களுக்கு மன்னிப்பு அளித்து தண்டனையை குறைக்க வேண்டும் எனவும் இன்று கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது.

இப்போது நீதியரசர் கே.டி.தாமஸ் அளித்துள்ள ஒப்புதல் வாக்கு மூலத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் மொத்தம் 17 பேர்களுக்கு இதுவரை உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தண்டனை தவறானது என்றாகிறது. இதில் ராவ்ஜி என்பவருக்கு ஏற்கனவே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது.

பச்சன்சிங் அமர்வு 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சட்ட அமர்வு (constitutional bench). இதில் உருவாக்கப்பட்ட வரைநெறியை ராவ்ஜி அமர்வு போன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மீற இயலாது என்பது மட்டுமல்ல, இப்படி உருவாக்கப்பட்ட நெறிமுறையைப் பின் வரும் அமர்கள் ஏற்க வேண்டும் என்கிற அவசியமுமில்லை. இருந்தும் இந்த எட்டு வழக்குகளில் இப்படிப் 17 பேர்களுக்குத் தவறாகத் தண்டனை வழங்கப்பட்டதை எவ்வாறு புரிந்து கொள்வது?

இரண்டு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று, ராஜீவ் காந்தி வழக்கு போன்ற “பயங்கரவாதம், தேசப்பாதுகாப்பு” தொடர்பான வழக்குகளில் யாரையாவது தூக்கில் போட்டே ஆக வேண்டும் என்கிற நிலை. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ராஜிவ் கொலையில் நேரடியாகப் பங்குபெற்ற (perpetrators) பத்து பேர்கள் ஒன்று இறந்து போனார்கள் அல்லது தற்கொலை செய்து கொண்டார்கள். ஆனால் மரண தண்டனை வழங்கப்பட்ட அவ்வளவு பேரும் பேட்டரி வாங்கித் தந்தது போன்ற தெரிந்தும் தெரியாமலும் குற்றத்தில் உதவி புரிந்தவர்கள் (abettors) மட்டுமே. ஒருவேளை இந்தப் பத்து பேரும் அல்லது அவர்களில் ஒரு சிலரேனும் பிடிபட்டிருந்தால் இன்று பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி ஆகியோருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருக்குமா? அஃப்சலின் கதையும் இப்படித்தானே.

மற்றது நமது நீதியரசர்களின் உள்ளத்தில் பொதிந்துள்ள சாதி மற்றும் வர்க்கச் சார்பு நிலை. இதுவும் பச்சன்சிங் வழக்கில் நீதியரசர் பகவதி அவர்களால் சுட்டிக் காட்டப்பட்ட ஒன்றுதான். புகழ்பெற்ற மனித உரிமைப் போராளி டஅக்டர் பாலகோபால் ஒருமுறை கூறியது போல’ “நமது குற்ற விசாரணை மற்றும் தண்டனை வழங்கு நிறுவனங்கள் காட்டும் இத்தகைய ஆத்திரம், வெறுப்பு முதலியன உண்மையில் குற்றத்தின் மீது கொண்ட வெறுப்பின் விளைவு அல்ல. மாறாக அது குற்றவாளிகளின் மீது கொண்ட வெறுப்புத்தான்.”

உச்ச நீதிமன்றத்தில் 14 பெஞ்சுகள் உள்ளன. இதில் யாருடைய அமர்வுக்குத் தன் மேல்முறையீடு செல்லும் என மரண தண்டனை விதிக்கப்பட்டவன் அறியான். ஒருவேளை அது நீதியரசர்கள் பகவதி, எஸ்.என்.சின்ஹா முத்லானோர் பங்கு பெறும் அமர்வுக்குச் சென்றால் அவன் தண்டனை குறைக்கப்படுவது உறுதி. நீதிபதி அர்ஜித் பசாயத் போன்றோரின் அமர்வுக்குச் என்றால் மரண தண்டனை உறுதி செய்யப்படுவது நிச்சயம். அதனால்தான் இதை ஒரு “மரணக் குலுக்கல் சீட்டு” (lethal lottery) என்கிறோம்.