2011 – போராட்டங்களின் ஆண்டு

“2001 செப்டம்பர் 11க்குப் பின் உலகம் மாறிவிட்டது” என அன்றைய அமெரிக்க அதிபர் புஷ் முழக்கமிட்டதையும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட படைஎடுப்புகள், அழித்தொழிக்கப்பட்ட இயக்கங்கள் ஆகியவற்றின் வரலாற்றையும் நாம் அறிவோம். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்கிற பெயரில் தான் என்ன வேண்டுமானாலும் செய்துவிட இயலும் என்பதுதான் புஷ்சுடைய முழக்கத்தின் உட்பொருள்.

ஆனால் ஈராக். ஆப்கானிஸ்தான் முதலான நாடுகளில் பேரழிவுகளை ஏற்படுத்தியது, பாக் எல்லையோரங்களில் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி ஏராளமான சிவிலியன்களைக் கொன்றது என்பது தவிர அமெரிக்கா எதிர்பார்த்தபடி எல்லாம் நடக்கவில்லை. ஈரான், சிரியா, உக்ரேன் ஆகிய பிரச்சினைகளில் விரும்பியபடி ஆட்சி மாற்றங்களை (regime changes) அரங்கேற்ற இயலவில்லை. சொல்லப்போனால் அல்குவேதா போன்ற பயங்கரவாத இயக்கங்களையோ அல்லது அப்பகுதிகளில் நடைபெற்ருக் கொண்டிருக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களையோ அதனால் கட்டுப்படுத்த இயலவில்லை. ‘இஸ்லாமிய அரசு’ ஒன்று பிரகடனப்படுத்தக் கூடிய அளவுக்கு இன்று அங்கு நிலைமை உள்ளது. ஈரானை நெறுக்குவது என்பதற்குப் பதிலாக அதனுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. உக்ரேனிலும் ருஷ்யாவை அதிரடி நடவடிக்கைகள் மூலம் எதிர்கொள்ள அவற்றிற்குத் திராணி இல்லை.

இன்னொரு பக்கம் அமெரிக்கா சென்ற பத்தாண்டுகளில் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகள் உலக அரங்கில் மட்டுமின்றி உள் நாட்டிலும் அதைப் பலவீனப் படுத்தியுள்ளது. இன்னொன்றையும் நாம் இங்கு கவனம் கொள்ல வேண்டி உள்ளது. இந்த நெருக்கடியை ஏதோ அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் மட்டும் எதிர்கொண்டிருக்கவில்லை. உலகமயத்தின் மூலம் உலகம் ஏதோ ஒரு கிராமமாக உருப்பெற்றுள்ளதாகச் சொன்னார்களே அந்தக் ‘கிராமம்’ முழுவதிலும் இன்று அந்த நெருக்கடி எதிர்கொள்ளப் படுகிறது. கடன் சுமை, வேலை இன்மை, விலைவாசி ஏற்றம், நினைத்துப் பார்க்க இயலாத அளவிற்குப் பொருளாதார வேறுபாடுகள், இரக்கமற்ற கார்பொரேட் கொள்ளைகள், கார்பொரேட்களின் எடுபிடிகளாக அரசுகள் மாறி வரும் அவலம், எதிர்காலத்தில் இவை எல்லாம் மாறலாம் என்கிற நம்பிக்கை பொய்த்து, பதிலாக எதிர்காலமே சாத்தியமில்லாமல் போய்விடுமோ என்கிற அச்சத்தை உருவாக்கியுள்ள பருவ நிலை மாற்றங்கள் மற்றும் சூழல் அழிவுகள் முதலியன இன்றைய இளைஞர்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதன் விளைவுதான் உலகமெங்கும், ஆம் “உலகமெங்கும்” 2011ல் ஏற்பட்ட கொந்தளிப்புகள். 2010 டிசம்பரில் துனீசியாவில் வெடித்தது அது. 2011ல் அது எகிப்தில் தொடர்ந்து உலகெங்கிலும் தீயாய்ப் பரவியது. அரபு எழுச்சி மற்றும் அமெரிக்க வால்ஸ்ட்ரீட் அமர்வுப் போராட்டம் ஆகியன ஊடகங்களால் கவனப்படுத்தப்பட்ட அளவிற்கு மற்றவை நம் கவனத்திற்குக் கொண்டுவரப்படவில்லை.

துனீசியாவின் பென் அலி ஜனவரி (2011) மத்தியிலும், தாஹ்ரீர் சதுக்கத்தில் போராட்டம் தொடங்கிய 18ம் நாள் எகிப்தின் முபாரக்கும் வீழ்ந்த பின் அது வட ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பரவியது. பஹ்ரெய்ன், ஏமன் பிறகு லிபியா, சிரியா என எல்லா நாடுகளிலும் எதிர்ப்புகள் கிளம்பின. சில நாடுகளில் அரசுகள் வீழ்ந்தன. சில நாடுகளில் அரசுகள் சலுகைகளை வழங்கின. எண்ணை வள நாடுகள் குடிமக்களின் வங்கிக் கணக்கில் காசைச் செலுத்தின..

அடுத்த முக்கிய எழுச்சி மே 15 (2011)ல் ஸ்பெயினில் வெளிப்பட்டது. தம்மைக் “கொதித்தெழுந்தவர்கள்” என அழைத்துக் கொண்ட மக்கள்திரள்கள் (multitudes) மாட்ரிடிலும் பார்சிலோனாவிலும் நகர் மையங்களில் உள்ள சதுக்கங்களைக் கைப்பற்றி அமர்ந்தன. சோஷலிஸ்ட் கட்சியின் ரோட்ரிக்ஸ் ஸபாடேரோவின் அரசை எதிர்த்து “உண்மையான ஜனநாயகம்” என்கிற முழக்கத்தை அவர்கள் வைத்தனர். வங்கி ஊழல்கள், வேலையின்மை, வீடுகளின்மை, கட்டாய வெளியேற்றங்கள் ஆகியவற்றை எதிர்த்து மில்லியன் கணக்கில் மாட்ரிட் நகரின் ப்யூர்டா டி சோல் சதுக்கத்தில் குவிந்த ஸ்பானியர்களுக்கு இன்னும் ஏராளமானவர்கள் வெளியிலிருந்து ஆதரவளித்தனர். மக்கள் மன்றங்களில் (assemblies) விவாதங்களின் ஊடாகப் பொதுக் கருத்துக்கள் உருவாக்கப்பட்டன. ஜூனில் ஏதன்ஸ் நகரின் சின்டாக்மா சதுக்கத்தில் மக்கள் அமர்ந்தனர். கிரேக்க அரசின் சிக்கன நடவடிக்கைகளை அவர்கள் எதிர்த்தனர். அடுத்த சிலநாட்களில் டெல் அவிவின் ரோத்ஷீல்ட் பூலிவாரில் சமூகநீதி மற்றும் மக்கள் நல நடவடிக்கைகள் என்கிற முழக்கத்துடன் இஸ்ரேலியர்கள் திரண்டனர். ஆகஸ்ட் தொடக்கத்தில் ஆப்ரிக்க பித்தானியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதை ஒட்டி ரோட்டன்ஹாமில் தோன்றிய கலவரம் பின் இங்கிலாந்தின் வெறு சில பகுதிகளிலும் பரவியது.

இந்தப் பின்னணியிலும், இவற்றின் தொடர்ச்சியாகவும்தான் மே 17 அன்று வால்ஸ்ட்ரீடில் ஸுகோடி பூங்காவில் திரண்ட அமெரிக்கர்களில் அமர்வுப் போராட்டத்தைக் காண வேண்டும். இது குறித்து மிக விரிவாக நான் இதே பக்கங்களில் எழுதியுள்ளேன். இதற்குள் விரிவாகச் செல்லாமல் இந்தப் போராட்டங்களின் பொதுவான சில பண்புகள் அவை எதிர்கொள்ளப்பட்ட விதம், அவற்றின் இன்றைய நிலை ஆகியவை குறித்துச் சிலவற்றைப் பார்ப்போம். இந்தப் போராட்டங்களில் மேலும் சிலவற்றைச் (எ.கா: போர்த்துக்கலின் ஜெரகா ஆ ரஸ்கா, மெக்சிகோவின் சோய் 32 இயக்கம், இஸ்தான்புல் தக்ஸீம் பூங்கா அமர்வு) சுருக்கம் கருதி நான் இங்கே குறிப்பிடவில்லை. அக்டோபர் 15 வாக்கில் 82 நாடுகளில் கிட்டத்தட்ட 951 முக்கிய உலக நகரங்கள் இப்போராட்டங்களை எதிர்கொண்டன.

இந்தப் போராட்டங்களின் வடிவம், போராட்டக்காரர்களுக்கிடையே நிலவிய உறவின் தன்மை, போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்ட விதம், அவர்களின் மொழி, இலக்கு ஆகியவற்றில் உள்ள ஒற்றுமைகளைப் பேசுமுன் ஒன்றைத் தெளிவு படுத்திக் கொள்வது அவசியம். அவை ஒவ்வொன்றும் ஆங்காங்குள்ள உள்ளூர்த் தன்மைகளுக்குத் தம்மைத் தகவமைத்து வெளிப்பட்டன என்பதுதான் அது. அரபுலகைப் பொருத்தமட்டில் நீண்ட காலக் கொடுங்கோல் ஆட்சியாளர்களை வீழ்த்துவது அவர்களின் நோக்கம் என்று அவை வெளிப்பட்டபோதிலும் வால்ஸ்ட்ரீட் அமர்வு நிதி மூலதன அமைப்பின் கொடுங்கோன்மையை வீழ்த்துவது என வெளிப்பட்டபோதிலும் பொதுவில் அவை இன்று மக்களின் வாழ்வில் ஏற்படுத்திய எதிர்மறைத் தாக்கங்களிலிருந்து விடுபடுவது என்கிற பொது நோக்கைக் கொண்டிருந்தன. ஆக, போராட்டங்களின் தனித்தன்மைகள், உள்ளூர் பிரச்சினைகளைத் தாண்டி உலகளாவிய பொது நோக்கங்களை அவை கொண்டிருந்தன. உலகப் பொருளாதார அமைப்பு ஏற்படுத்தியுள்ள கடும் ஏற்றத்தாழ்வுகளையும் ஜனநாயக நிறுவனங்கள் இவற்றால் சிதைக்கப்படுவதையும் அவை எதிர்த்து நின்றன. ” (எல்லாவற்றையும் சுருட்டிக் கொள்ளூம்) ஒரு சதத்தினருக்கு எதிராக (எல்லாவற்றையும் இழந்த) நாங்கள் 99 சதம்” என கூடி இருந்தவர்கள் முழங்கினர். “உண்மையான ஜனநாயகம்” கோரினர்.

நகரத்தின் மையமான வெளி ஒன்றைக் கைப்பற்றி வெளியேறாமல் அமர்வது (occupation) என்பது உலகளாவிய இந்தப் போராட்டங்களின் பொதுத்தன்மைகளில் ஒன்று. பதினைந்தாண்டுகளுக்கு முன் உலகமயச் செயற்பாடுகளை எதித்த போராட்டங்கள் ஒரு வகையில் ஒரு ‘நாடோடித் தன்மையை’ப் பெற்றிருந்தது. உலக மய நிறுவனங்கள் கூடும் இடங்களுக்குச் சென்று அங்கு ஆர்பாட்டங்களை நிகழ்த்துவது என்பது இன்று மாறி, இத்தகைய நாடோடித் தன்மைக்குப் பதிலாக ஓரிடத்தில் இருந்து போராடும் ‘அமர்வுத் தன்மையை’ (sedentary) இன்றைய போராட்டங்கள் எடுத்தன. குறிப்பான தலைமை உருவாவதை இவை பிரக்ஞைபூர்வமாகத் தவிர்த்தன. மிஷேல் ஹார்ட், அந்தோனியோ நெக்ரி, ஸ்லாவோக் சிஸெக், காலே லாஸ்ன், மிகா வைட் முதலானவர்கள் போராட்டத்தை ஆதரித்து முழங்கினாலும், முன்னெடுத்துச் சென்றாலும் அவர்களும் கூட இங்கே தலைமை தாங்க அநுமதிக்கப்படவில்லை. அரசாங்கம் மற்றும் ஊடகங்களின் முதல் கேள்வியே யார் தலைவர் என்பதுதான். அந்தக் கேள்விக்கு அவர்களுக்குக் கடைசிவரை பதில் கிடைத்ததில்லை. ஒரு மையப்படுத்தப்பட்ட அதிகாரம் என்பதைச் சுட்டும் ஆணிவேர் என எதையும் அடையாளப் படுத்த இயலாத, ஆணி வேரே இல்லாத “புல் வடிவ” (rhizomatic movement) அமைப்பைக் கொண்டதாக இவை அமைந்தன.

பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்குப் பதிலாக, எல்லோரும் பங்கேற்று கருத்தொருமிப்பின் அடிப்படையில் முடிவு எடுக்கும் “மக்கள் திரள் அவை” (multitude form) என்கிற வடிவை அவை எடுத்தன. 19 மற்றும் 20ம் நூற்றாண்டின் போராட்டக் கலாச்சாரத்தில் இவை பெரிய மாறுதல்களை உருவாக்கின. வன்முறை சாராத அதே நேரத்தில் தீவிரமான இப்போராட்டங்கள் அரசதிகாரத்தைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொள்ளவில்லை. அரசதிகாரத்தின் மூலமாக அடைவது என்பதைத் தாண்டிய சமூக நீதி என்கிற ஒரு புதிய பார்வையை இவை முன்வைத்தன. நவ தாராளவாதப் பொருளாதார எதிர்ப்பு, உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்டல் என்பதைத் தாண்டிய எந்த மையமான கருத்தியலையுங் கூட இந்த அமர்வுப் போராட்டங்கள் கொண்டிருக்கவில்லை.

இத்தகைய நடைமுறைகள் ஒரு உண்மையான ஜனநாயகத்தையும், பன்மைத்துவத்தையும் இந்த அமர்வுப் போராட்டங்களுக்கு அளித்தன. சற்றே மாறு பட்ட கருத்துடைய பல்வேறு சிறு இயக்கங்கள் இணந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யவும் இவை வழி வகுத்தன. மொத்தத்தில் சுதந்திரம், ஜனநாயகம், பொது நிலைபாடுகளுடனான நமது உறவு ஆகியவற்றிற்குப் புதிய அர்த்தங்களை இப்போராட்டங்கள் உருவாக்கி அவற்றைப் பொதுப் புத்தியின் (common sense) ஓரங்கமாகவும் ஆக்கின.

அமர்வுப் போராட்டங்களின் இன்றைய இலை என்ன?

அரசாங்கங்கள் இவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை. மேலை நாட்டுச் சட்டங்களில் மக்கள் இப்படிக் கூடிப் போராடுவதற்கு இடமுண்டு. இதற்கான அனுமதி முதலியன பெறுவதில் சிக்கல் இருக்கக் கூடாது எனவும் அவை கூறுகின்றன. ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு அறிக்கையாளரின் அறிக்கை பொது அவைகளுக்கான அனுமதி அளிப்பதே விதியாகவும், அனுமதி மறுப்பது விதி விலக்காகவும் இருக்க வேண்டும் எனவும் தெளிவாகக் கூறுகிறது.

எனினும் அமர்வுப் போராட்டங்கள் தொடங்கிய சில வாரங்களில் பல நாடுகள் பல்வேறு வடிவங்களில் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்தன. ஸ்பெயின் அரசு போராட்ட எதிர்ப்புச் சட்டம் ஒன்றையே நிறைவேற்றியது. போராட்டக்காரர்களின் மீது ஏராளமான வழக்குகள் தொடுக்கப்பட்டன. கைதுகள் மேற்கொள்ளப்பட்டன. கெடு விதித்து வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ரப்பர் குண்டுகளால் சுடுதல், மிளகுத் தூளைப் பீய்ச்சி அடித்தல் முதலான வடிவங்களில் அமர்வுப் போராளிகள் விரட்டப்பட்டனர்.

அமர்வுப் போராளிகள் ஆங்காங்கு சட்ட உதவிக் குழுக்களை அமைத்து வழக்கு தொடரப்பட்டவர்களுக்கு உதவினர். சட்ட ரீதியாகத் தமக்குள்ள உரிமைகள் குறித்த துண்டறிக்கைகளை வெளியிட்டனர். இந்த வழக்குகள் பலவற்றில் இறுதி வெற்றி அமர்வுப் போராளிகளுக்குக் கிடைத்த போதும் நீண்ட கால நீதிமன்ற நடவடிக்கைகளே ஒரு வகையில் அவர்கள் மீதான தண்டனையாக அமைந்தன. ஒரு கட்டத்தில் வால் ஸ்ட்ரீட் அமர்வாளர்களில் மட்டும் சுமார் 800 பேர்களுக்கு மேல் வழக்குகளைச் சந்திக்க வேண்டிய நிலை இருந்தது. ப்ரூக்லின் பாலத்தைக் கடந்த 700 பேர் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டனர். செசிலி மேக்மிலன் உட்படச் சிலர் காவல் வன்முறையையும் சிறிது காலச் சிறைத் தண்டனைகளையும் அனுபவிக்க நேர்ந்தது.

வால் ஸ்ட்ரீட் அமர்வுப் போராளிகள் டிசம்பர் 15 அன்று முழுமையாக ஸுகோட்டி பூங்காவிலிருந்து வெளியேற்றப்படனர், மீண்டும் வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றும் அவர்களின் முயற்சிகள் தோல்வியுற்றன. கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலுமே ஆண்டு இறுதிக்குள் அமர்வுப் போராளிகள் வெளியேற்றப்பட்டனர்.

அமைதி வழியில் போராடிய இவர்களை ‘பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டுப் படை’யைக் கொண்டு அமெரிக்க உளவுத் துறையும் (FBI), உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையும் (DHS) கண்காணித்ததை கார்டியன் இதழில் நோமி வொல்ஃப் அம்பலப்படுத்தினார். மிகப் பெரிய அளவு கண்காணிப்பு மட்டுமல்ல, பெரிய அளவில் போராட்டக்காரர்கள் மத்தியில் ஊடுருவல்களும் மேற்கொள்ளப்பட்டதை நியூயார்க் டைம்ஸ் இதழ் சென்ற மாதத்தில் (மே 2014) வெளிப்படுத்தியது. அமெரிக்க அரசின் பாதுகாப்புத் திட்டத் துறை Minerva Research Initiative என்கிற பெயரில் இப்படியான இயக்கங்களின் உருவாக்கம் முதலியவற்றை ஆய்வு செய்யப் பல மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது சமீபத்தில் வெளியாகியுள்ளது.

அரசின் கெடுபிடிகள் தவிர பல நடைமுறைச் சிக்கல்களையும் அமர்வுப் போராளிகள் எதிர் கொண்டனர்.

சிக்கல் 1: நூற்றுக் கணக்கானோர் மத்தியில் கருத்தொற்றுமை என்கிற வடிவம் சாத்தியமான போதிலும் பல லட்சக்கணக்கானோர் மத்தியில் விவாதாங்களின் ஊடாக கருத்தொற்றுமை ஏற்படுத்துவது நடைமுறையில் சாத்தியமாகவில்லை. பல்வேறு சிறு குழுக்களும் தத்தமது விருப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்கிற நிலை எடுத்தனர். சிலர் அதில் பிடிவாதமாக இருந்தபோது பிரச்சினைகள் ஏற்பட்டன. தலைவர்களே வேண்டாம் என்கிற நிலைக்கு மாறாக ஒரு சிலர் குட்டித் தலைவர்களாகத் தோற்றம் காட்டினர்.

சிக்கல் 2: 22,000 சதுர அடியில் ஒரு அரை நிரந்தரக் குடியிருப்பைச் செயல்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. போராட்டத்தில் நேரடியாகக் கலந்து கொள்ள இயலாதவர்கள் வெளியிலிருந்து செய்த நிதி உதவிகள் இருந்தபோதும் அதைக் கொண்டு உணவு, மருத்துவம் முதலான பல்வேறு அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றுவதில் பிரச்சினைகள் எழுந்தன.

சிக்கல் 3: போதைப் பொருள் பழக்கம் உடையவர்கள், மன நோயாளிகள் முதலானோரையும் தனியே கவனிக்க வேண்டி இருந்தது. நெருங்கி வந்த மழைக்காலமும் அமர்வுப் போராளிகளுக்கு ஒரு சவாலாக இருந்தது.

“அடிப்படையான ஒரு தத்துவம், மையமான ஒரு வழிநடத்தும் அமைப்பு ஆகியன இல்லாததன் விளைவாக அமர்வுப் போராட்டங்கள் பொதுத்தன்மைகளை ஒரு குவியத்தை நோக்கிக் குவிப்பதில் சிரத்தை காட்டவில்லை. எனவே எதிர்ப்பு என்பதைத் தாண்டி அவை அடுத்த அடியை எடுத்து வைக்க இயலவில்லை. தூலமான நீண்ட கால இயக்கம் ஒன்றைக் கட்டுவதற்குப் பதிலாக ஒரு இறுக்கமற்ற வலைப்பின்னலாகவே அவர்கள் அமைந்து போயினர்” என்கிற விமர்சனத்தை மார்க்சீயப் பின்னணியில் நின்று விமர்சிப்பவர்கள் முன்வைக்கின்றனர்.

கோரான் தெர்பார்ன் போன்ற மார்க்சீய ஆய்வாளர்கள் அமர்வுப் போராட்டங்களை நகர் சார்ந்தவை எனவும் ஆனால் பிரச்சினைகளோ தேசிய அளவிலானவை, எனவே இவர்களால் பிரசினைகளைத் தீர்க்க இயலாது என்கின்றனர். முகநூல், ட்விட்டர் மூலமாக மக்களைத் திரட்டுவதில் உள்ள ஒரு பலவீனத்தைச் சுட்டிக் காட்டுகிறார் துருக்கிய அமெரிக்க சமூகவியலாளர் செய்னப் துஃபெகி. சமூக ஊடகங்கள் மூலம் மக்களைத் திரட்டுவது எளிது மட்டுமல்ல அதிக உழைப்பு மற்றும் செலவு ஆகியவற்றையும் கோராத ஒன்று. தணிக்கை அச்சமும் அதில் கிடையாது. ஆனால் மக்களை நேரடியாக அணுகி, தணிக்கை முதலானவற்றை எதிர்கொண்டு மக்களைத் திரட்டும்போது மேற்கொள்ளப்படும் உழைப்பு அதற்குரிய பலனைத் தரும். அவ்வாறு திரட்டப்படும் மக்கள் அடக்குமுறைகளை எதிர்கொள்பவர்களகவும் போராட்டங்களைத் தொடர்ந்து எடுத்துச் செல்லக் கூடியவர்களாகவும் இருப்பர் என்கிறார்.

இந்த விமர்சனங்களில் உள்ள நியாயங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவை என்பதில் யாருக்கும் கருத்து மாறுபாடுகள் இருக்க இயலாது. ஆனால் இந்த விமர்சனங்கள் அனைத்தும் அனார்க்கிசவாதிகளுக்கு எதிராக இடதுசாரிகளும் வலதுசாரிகளும் தொடர்ந்து வைத்துக் கொண்டுள்ளவைதான். இவற்றிற்கு மாற்றாக இறுக்கமான அமைப்பு, நெகிழ்ச்சிக்கு இடங்கொடுக்காத தத்துவம் ஆகியவற்றுடன் களம் இறங்கிய இயக்கங்கள் பலவும், ஒரு வேளை அவர்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினாலுங் கூட மக்களுக்கு மிக அடிப்படையான ஜனநாயகத்தை வழங்க இயலாதவர்களாகவே இருந்ததுதான் உலக வரலாறு என்பதையும் நாம் மறந்து விட இயலாது.

அமர்வு இயக்கங்களின் கார்பொரேட் எதிர்ப்பு, நவதாராளவாதக் கொள்கைகளின் மீதான தாக்குதல், ஜனநாயக வேட்கை ஆகியவற்றின் அடிப்படையில் ரொம்பவும் romanticize செய்து பார்த்த இடதுசாரிப் பொருளியலாளர்களும் உள்ளனர். Empire எனும் புகழ் பெற்ற நூலின் ஆசிரியர்களான மிஷெல் ஹார்ட்டும் அந்தோனியோ நெக்ரியும் அவர்களில் முக்கியமானவர்கள். சாம்ஸ்கி, சிஸெக் முதலானோரும் அமர்வு இயக்கங்களை வாழ்த்தி வரவேற்றனர்.

அமர்வு இயக்கங்களில் சிலர் கொல்லப்பட்டு இருக்கலாம். சிலர் சிறை ஏகி இருக்கலாம். சிலர் அடக்குமுறைகளால் சோர்வுற்று இருக்கலாம். சிலர் அமர்விடங்களிலிருந்து கலைக்கப்பட்ட பின் பழைய வாழ்க்கைக்குத் திரும்பி இருக்கலாம். ஆனால் இந்த 99 சத மக்களின் வேட்கைகளை முன்னெடுத்து அமர்ந்த இவர்கள் உருவாக்கிய கார்பொரேட் எதிர்ப்பு, ஜனநாயக வேட்கை ஆகியவற்றைக் கண்டு மீதமுள்ள ஒரு சதத்தினர் கொண்ட அச்சம் அவ்வளவு எளிதாக விலகிவிடப் போவதில்லை.

அமர்வுப் போராளிகள் எழுப்பிய கோபமும் கொந்தளிப்பும் இன்று பல்வேறு தல அளவிலான அநீதிகளுக்கெதிரான போராட்டங்களாக ஆங்காங்கு வெடித்துக் கொண்டுதான் உள்ளன. மிசௌரியின் Take Back St Louis போராட்டம், கல்விக் கடனுக்கெதிரான அமெரிக்க மாணவர் போராட்டம், எகிப்தின் மாற்றுத் திறனாளிகள் போராட்டம் முதலியன அமர்வுப் போராட்டங்களின் தொடர்ச்சிதான். அமர்வுப் போராட்டங்களின் ஊடாகத் தான் கொடுங்கோல் ஆட்சியாளர்கள் சிலர் கீழிறக்கப்பட்டனர்.

சமீப காலங்களில் ஆயுதம் தாங்கிய, தாங்காத மரபு வழிப் போராட்டங்கள் பலவும் மிகக் கொடூரமாக அழித்தொழிக்கப்பட்டுள்ளதை நாம் மறந்துவிடலாகாது. அவற்றினூடாக போராடியவர்கள் மட்டுமின்றி யாருக்காகப் போராடினார்களோ அம்மக்களும் கடுமையான இழப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். அந்தப் பகுதிகளில் மீண்டும் பல காலங்களுக்கு இயக்கங்கள் தலை எடுக்க இயலாத நிலை உள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றோடு ஒப்பிடுகையில் அமர்வுப் போராட்டங்களில் போராடியவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் புறக்கணிக்கத் தக்க அளவிற்கு மிக மிகக் குறைவு. மக்களைப் பொருத்த மட்டில் அவர்களுக்கு இழப்புகளே இல்லை.

அமர்வுப் போராளிகள் எதிர்பார்த்ததைப்போல பெரிய அளவில் பொருளாதாரக் கொள்கைகள் மாறவில்லை ஆயினும் வங்கிகளிம், கார்பொரேட்களும் முன்னைப்போலத் தங்கள் விருப்பப்படி செயல்படுவதில் சில தயக்கங்கள் ஏற்பட்டுள்ளன அமெரிக்க வங்கிகள் கடன் அட்டைகள் (debit cards) மீது சுமத்த இருந்த கூடுதல் கட்டணத்தை விலக்கிக் கொண்டது ஒரு சான்று.

அமர்வுப் போராட்டங்களை மதிப்பிடும்போது இவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இளம் பெண்ணைத் தொடர்ந்த மோடி

நரேந்திர மோடி தன் மனைவியை விலக்கி வைத்திருப்பது, அல்லது ஒரு இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருக்க முயல்வது முதலான அவரது தனிப்பட்ட வாழ்வைப் பற்றிப் பேசுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. ஒவ்வொருவருக்கும் ஒரு அந்தரங்கம் உண்டு. அதில் மற்றவர்கள் பிரவேசிக்கத் தேவையில்லை என்பது உண்மையே, ஆனால், ஒருவர் இன்னொரு இளம் பெண்னின் அந்தரங்கத்தில், அவரறியாமல் சட்ட விரோதமாகத் தலையிடுவது என்பதை யாரும் கண்டிக்காமலிருக்க இயலாது. அதுவும் அந்த நபர் ஒரு மாநில முதலமைச்சராகவும், பிரதமர் பதவிக்கான வேட்பாளராகவும் இருந்து, தனது அதிகாரத்தின் கீழ் உள்ள அரசு எந்திரத்தை இதற்காகப் பயன்படுத்தியுள்ளதை அறியும்போது ஜனநாயக ஆளுகையில் நம்பிக்கை உடைய யாரும் அதைப் பார்த்துக் கொண்டிருக்க இயலாது. அந்த வகையில் மோடியும், அவருக்கு ஆக மிக நெருக்கமாகவும் அவரது உள்துறை துணை அமைச்சராகவும் இருந்த அமித் ஷாவும் 2009ல் ஒரு இளம் பெண்ணைப் பின் தொடர்ந்து (Stalking) அவர் யார் யாரைச் சந்திக்கிறார், யாருடன் என்ன பேசுகிறார், ஹோட்டலில் யாருடன் தங்கி இருந்தார், விமானத்தில் யாருடன் சென்றார் என்றெல்லாம் அந்தப் பெண் தங்கியிருந்த அறை முதல் ஷாப்பிங் போன மால், ஏறிப்போன விமானம் வரை பின் தொடர்ந்த செய்தி முக்கியமாகிறது.

அதைச் சொல்வதற்கு முன்,

நிகழ்வு 1: ‘ஓபன்’ வார இதழ் பத்திரிக்கையாளர் ஹைமா தேஷ்பாண்டே மோடியின் மனைவியைத் தேடிச் சென்ற கதை:

சுமார் ஆறு மாதங்களுக்கு முன் குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள ராஜோசோனா கிராமத்திற்குச் சென்றார் ஹைமா. அங்குள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்புப் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரியும் ஒரு 57 வயதுப் பெண்ணை நேர்காண்பது அவரது பயணத்தின் நோக்கம். பள்ளி நேரம் போக டாய்லெட், குளியலறை எந்த வசதியுமில்லாத ஒரு பத்தடிக்குப் பத்தடி ‘வீட்டில்’ வசிக்கும் அப் பெண்ணின் பெயர் யசோதாபென் சிமன்லால் மோடி. குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியின் தள்ளி வைக்கப்பட்ட மனைவி.

அன்று காலை அந்த அரசுப் பள்ளிக்குத் தன்னைக் காண வந்த ஹைமாவைப் பார்த்து எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளப் பொங்கும் ஆர்வத்துடனும், இதழ் விரிந்த புன்னகையுடனும் ஓடிவந்த யசோதாவின் தோற்றத்தை இப்படி விவரிக்கிறார் ஹைமா. “சற்றுப் பொருந்தாத ஜாக்கெட், எளிய பிரின்டட் புடவை, சற்றே வளைந்த முதுகு, சுருக்கங்கள் விழுந்த முகம், வேலை செய்து கரடு தட்டிப்போன கரங்கள், அழுக்கேறியுள்ள வெடிப்புகள் நிறைந்த பாதங்களில் ரப்பர் செருப்புகள்…”

சுமார் 39 ஆண்டுகளுக்கு முன் வெறும் ஏழாம் வகுப்பு படித்திருந்த 18 வயது யசோதாவிற்கும், அப்போது அரசியல் ஏணியில் இவ்வளவு உயரம் ஏறியிராத நரேந்திர மோடிக்கும் அக்னி சாட்சியாகப் பெரியோர்களின் ஆசியுடன் திருமணம் நடந்துள்ளது. எவ்வளவு நாட்கள் சேர்ந்திருந்தார்களோ தெரியவில்லை. அரசியலில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்த மோடிக்கு இந்தப் படிக்காத கிராமத்துப் பெண்ணைப் பிடிக்கவில்லைளொரு சில நாட்களிலேயே தந்தை வீட்டுக்கு அனுப்பப்பட்ட யசோதா அதன்பின் விட்ட படிப்பைத் தொடர்ந்து, ஆரம்பப் பள்ளி ஆசிரியைப் பயிற்சியையும் முடித்து, ஒரு சில அரசுப் பள்ளிகளில் பணியாற்றி, 92ம் ஆண்டு முதல் ராஜோசோனா வில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறார். அநேகமாக சென்ற மாதத்தோடு அவர் ஓய்வும் பெற்றிருப்பார்.

அது முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கிராமம். மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர். பள்ளியில் பயிலும் முஸ்லிம் சிறார்களின் முன்னேற்றத்தில் அவர் காட்டும் அக்கறையை அனைவரும் பாராட்டுகின்றனர். ஒரு வேளை கணவரின் பாவங்களுக்கான பிராயச்சித்தமாக இருக்குமோ?

யசோதாவின் ஒரே ஆசை, எதிர்பார்ப்பு எல்லாம் என்றாவது ஒரு நாள் அகமதாபாத்திலுள்ள முதலமைச்சர் அலுவலகம் அல்லது வீட்டிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வரும் என்பதுதான். பாவம் யசோதா, மோடியின் தொலை பேசி வேறொரு பெண்ணைப் பின் தொடரக் கட்டளை இட்டுக் கொண்டிருப்பதை அறியார்.

“என் கதையச் சொல்கிறேன்” என ஓடி வந்த யசோதாவை பள்ளித் தலைமை ஆசிரியர் பிரவீண்குமார் வியாசின் இரும்புக் குரல் தடுத்து நிறுத்தியது. “பள்ளி நேரத்தில் பேசக் கூடாது. வகுப்புக்குப் போ” என அவர் ஆணையிட்டார்.

“இடைவேளையின் போது கொஞ்ச நேரம் பேசுறேன்” என யசோதா கெஞ்சியதற்கு வியாஸ் மசியவில்லை. பத்திரிக்கையாளர்கள் யாருடனும் யசோதா பேசக் கூடாது என்பது மேலிடத்து ஆணை.

பரிதாபமாகத் திரும்பிச் சென்ற யசோதா சற்று நேரத்தில் ஓடி வந்தார். “மன்னியுங்கள், என் கணவருக்கு எதிராக நான் எதுவும் சொல்லமாட்டேன். அவர் பெரிய அதிகாரத்தில் உள்ளவர். என் பிழைப்புக்கு ஒரே ஆதாரம் இந்த வேலைதான். இதுக்கும் எதுவும் ஆபத்து வந்துவிடக் கூடாது” எனச் சொல்லித் திரும்பிப் பாராது நடந்தார்.

இடையில் பிரவீண்குமார் யார் யாருடனோ தொலை பேசினார். பின் யசோதாவின் வகுப்பறைக்கு ஓடினார். ஹைமா மீண்டும் யசோதாவைச் சந்தித்துப் பேச முயற்சித்தபோது அவர் வீறிட்டார். நான் உங்களோடு பேச விரும்பவில்லை எனச் சொல்லி நகர்ந்தபோது ஒரு கணம் நின்று அப்புறம் பேசலாம் எனச் சைகை செய்தவாறே அகன்றார்.

சற்று நேரத்தில் ஏகப்பட்ட வாகனங்கள் பள்ளியை நோக்கி வந்தன. வண்டிகளைப் பள்ளி வளாகத்திற்குள் நிறுத்திவிட்டுடு இறங்கியவர்கள் தலைமை ஆசிரியரின் அறையை நோட்டம் விட்டவாறு சிறிது நேரம் நின்று விட்டுக் கலைந்தனர்.

மாலையில் பள்ளி விட்டதுதான் தாமதம். தலையைக் குனிந்தவாறே ஓடி வந்த யசோதா அங்கு நின்றிருந்த ஆட்டோ ஒன்றில் ஏறி 20 கி.மீ தூரத்தில் இருந்த தன் சகோதரனின் வீட்டிற்கு ஓடினார்.

சற்று நேரத்தில் ஒரு இளைஞன் அங்கு வந்தான். திகைத்து நின்ற ஹைமாவிடம் தன் பெயர் பிரகாஷ் என்றும் ‘ராம் சேது’ என்கிற அரசு இதழ் ஒன்றின் நிருபர் எனவும் அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரை விரைவாக அந்த கிராமத்தை விட்டு வெளியேறுமாறு எச்சரித்துவிட்டுச் சென்றான்.

கிராமத்து மக்கள் சொன்னவற்றில் ஒன்று: யசோதாவின் ஒரே பொழுது போக்கு ஜோசியம் பார்ப்பது. எல்லா ஆரூடக்காரர்களிடமும் அவர் கேட்கும் கேள்வி அகமதாபாத்திலிருந்து அழைப்பு வருமா என்பதுதான். ஜோசியர்கள் “நிச்சயம் வரும்” என்று நம்பிக்கை ஊட்டிக் கொண்டே இருக்கின்றனராம்.

நிகழ்வு 2 : 2009 சாகேப் ஒலிநாடாக்கள் கட்டவிழ்க்கும் அரசதிகாரம் ஒரு இளம் பெண்ணைத் தொடர்ந்த கதை :

இஸ்ரத் ஜெஹான் போலி மோதல் கொலையில் கைது செய்யப்பட்டுச் சிறையில் இருந்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் நால்வரில் ஒருவரான ஜி.எல்.சிங்கால் தற்போது மத்திய புலனாய்வு நிறுவனமான சி.பி.ஐயிடம் ஒரு 4 ஜி.பி அளவுள்ள பென் டிரைவில் 2009ம் ஆண்டில் தனக்கும் அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் இடையில் நடந்த இரு நூறுக்கும் மேற்பட்ட தொலைபேசி உரையாடல்களின் பதிவுகளைச் சமர்ப்பித்துள்ளார். இது தொடர்பாகப் பிற அதிகாரிகளிடன் பேசியவற்றையும் சேர்த்தால் மொத்தம் 267 உரையாடல்கள். இதன் விவரங்களைப் புலனாய்வு இதழாளர்களான குலைல் டாட் காமின் அசிஷ் கேதனும் கோப்ராபோஸ்ட் டாட் காமின் ராஜா சவுத்ரியும் இப்போது வெளியிட்டுள்ளனர்.

இந்த ஒலி நாடாக்கள் முழுவதிலும் அமித் ஷா, தனது ‘சாகேப்’பிற்காக ஒரு இளம் பெண்ணைச் சட்ட விரோதமாக எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து, அவர் யாரைச் சந்திக்கிறார், யாருடன் ஓட்டலில் தங்குகிறார், விமானத்தில் யாருடன் பயணம் செய்கிறார் என்பன போன்ற அனைத்து அந்தரங்க விவரங்களையும் காவல்துறை அதிகாரம் மற்றும் நவீன உளவுத் தொழில்நுட்பம் அனைத்தையும் பயன்படுத்திச் சேகரித்து உடனுக்குடன் தன்னிடம் தெரிவிக்குமாறு உயர் போலீஸ் அதிகாரியான சிங்காலை வற்புறுத்துவது பதிவாகியுள்ளது. சட்ட விரோதமான இந்தச் செயல்பாடு எந்தவிதமான அதிகாரபூர்வமான ஆணையும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டுள்ளது சிறப்புக் காவல்படைக் கண்காணிப்பாளர் சிங்காலும் அவ்வாறே பணிந்து செயல்பட்டுள்ளார், குறிப்பாக அந்தப் பெண்ணுடன் இருக்கும் ஆண்கள் யார் என்பதும், அதிலும் குறிப்பாக ஒட்டலில் தங்கும்போது அப் பெண்ணுடன் எந்த ஆண் இருந்தார் என அறியத் துடிப்பதும் யாருக்காக இந்த உளவும் பின்தொடர்தல்களும் நடத்தப்பட்டதோ அந்த சாகேப் எந்த அளவு பாலியல் வக்கிரம் பிடித்த நபராக இருக்கவேண்டும் என்பதை யூகிக்க வைக்கிறது.

‘சாகேப்’ இதைத் தெரிந்து கொள்ள அவசரம் காட்டுவதைத் தெளிவுபடுத்தும் இந்த உரையாடல்கள், தனக்கு மிகவும் விசுவாசமான அமித்ஷாவையும்கூட அவர் முழுமையாக நம்பி விடாமல் வேறொரு பின்தொடர் அமைப்பின் மூலமாகவும் அந்தப் பெண்ணின் அந்தரங்கத் தகவல்களைச் சேகரித்துக் கொண்டிருப்பதையும் வெளிப்படுத்திவிடுகின்றன. ஈந்த ஒலிப் பதிவுகளில் ஒன்றில் ஆகஸ்ட் 9, 2009 அன்று அமித் ஷா மிகுந்த பரபரப்போடு சிங்காலைக் கூப்பிடுகிறார், “இப்பதான் நான் சாகேப்போட பேசினேன். அவங்க இன்னைக்கு இரண்டு தடவை வெளியே போன விஷயம் அவருக்கு யார் மூலமோ தெரிஞ்சிருக்கு. நம்ம ஆளுங்க சரியா வேல செய்யலேன்னு நினைக்கிறேன். இன்னும் அவங்க அங்கதான் இருக்காங்க. அவங்க ஷாப்பிங் போயிருக்காங்க, அவளைப் பாக்க வந்த அந்தப் பயலோடா போயிருக்காங்க” என அமித் ஷா பதறுகிறார்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் அமித் ஷா அந்தப் பெண்னுடன் திரியும் அந்தப் பயலை, “நம்ம வன்சாராவை விட அதிக காலம் ஜெயில்ல இருக்க மாதிரி பண்ணனும்” எனச் சிங்காலிடம் கருவுகிறார். வன்சாரா, இஷ்ரத் ஜெஹான் படுகொலையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் இன்னொரு ஐ.பி.எஸ் அதிகாரி.

குஜராத்தின் உயர் மட்ட அதிகாரத்தில் இருந்த அமித் ஷாவால் ‘சாகேப்’ என மிக்க மரியாதையுடன் அழைக்கப்பட்ட நபர் வேறு யாருமல்ல குஜராத்தில் அமித் ஷாவைக் காட்டிலும் அதிகாரமிக்கவராக இருந்த அந்த ஒரே நபர்தான் என்பதும் உரையாடலினூடாக ஊகிக்கக் கூடியதாக அமைந்துள்ளது.

யார் அந்த இளம் பெண்?

அஷிஷ் கேதனும் ராஜா சவுத்ரியும் அந்தப் பெண்ணின் பெயர் தெரிய வேண்டாம் என அவர்களது பதிவில் அவருக்கு ‘மாதுரி’ என்றொரு புனைபெயரைச் சூட்டினர். ஆனால் இன்று அப்பெண்ணின் முழுப் பெயரும் விவரங்களும் வெளிவந்துவிட்டன. அந்தப் பெண்ணின் தந்தையே அவர் பெயர் வெளிவருவதற்குக் காரணமாகிவிட்டார். இணையத் தளங்களில் அவர் பெயர் வெளிப்படையாகப் பதிவாகியுள்ளது. எனினும் நாம் அவரின் கண்ணியம் கருதி இக்கட்டுரை முழுவதும் மாதுரி என்ற பெயரையே பயன்படுத்துவோம். அவர் பெங்களூரைச் சேர்ந்த ஒரு லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்ட். 2003 – 06 காலகட்டத்தில் கட்ச் மாவட்டத்தில் ஒரு மலைப் பூங்கா அமைக்கப் பொறுப்பேற்றவர். 2005ல் அந்தப் பூங்காவைத் திறந்து வைக்க மோடி வந்தபோது அவருக்கு அறிமுகமாகிறார் மாதுரி. உரையாடல்களில் அந்தப் பெண்ணின் பெயர் உச்சரிக்கப்படுவதால் யார் இவ்வாறு பிந்தொடரப்பட்டார் என்பது உறுதியாகத் தெரிகிறது.

உரையாடல்களில் சிலவற்றை வாசித்தால் எல்லாம் விளங்கும், அதற்கு முன்…

நிகழ்வு 3 : மாதுரி மோடிக்கு நெருக்கமானதும் ஒரு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பலியானதுமான கதை :

சிங்காலை ஏவி அந்தப் பெண் மட்டும் பின் தொடரப்படவில்லை. இன்னொரு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும் அதே நேரத்தில் பின் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுள்ளார். அவர் பின்னர் பவநகர் முனிசிபல் கமிஷனராக இருந்த பிரதீப் ஷர்மா. மாதுரி மோடிக்கு அறிமுகமான காலத்தில் அவர் கட்ச் மாவட்ட ஆட்சியர். பின் அவர் ஊழல் குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டு தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுச் சிறையிலும் அடைக்கப்பட்டார்.

பணி நீக்கம் செய்யப்பட்ட பிரதீப் ஷர்மா கடந்த மே 2011ல் உச்ச நீதிமன்றம் முன் சமர்ப்பித்த மனுவில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த மனுவை அவர் சமர்ப்பித்தபோது மாதுரியும் தானும் ஒரே நேரத்தில் பின்தொடர்ந்து கண்காணிக்கப்பட்டதும், அது தொடர்பான உரையாடல்கள் பின்னால் வெளிப்படப் போவதும் அவருக்குத் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஷர்மா தன் மனுவில் சொல்வது:

“2003 – 06 காலகட்டத்தில் கட்ச் மாவட்ட ஆட்சியர் என்கிற வகையில் நான் (மனுதாரர் என மனுவில் குறிப்பிடப்படுகிறது) பூஜ் நகரத்தை அழகுபடுத்துவது மற்றும் கட்ச் மாவட்டத்தை மேம்படுத்துவது தொடர்பாகப் பல திட்டங்களைச் செயல்படுத்தி வந்தேன். 2005ல் மலைத் தோட்டம் ஒன்றை அமைப்பதற்காக ஒரு இடத்தைத் தேர்வு செய்து அதற்கென கலை விற்பனராக பெங்களூரைச் சேர்ந்த மாதுரி (மனுவில் உள்ள பெயர் மாற்றப்பட்டுள்ளது. எந்தப் பெண் பின் தொடரப்பட்டாரோ அந்தப் பெண்னின் பெயர்தான் அது. எனினும் நாம் புனை பெயரையே பயன்படுத்துவோம்) தேர்வு செய்யப்பட்டார். பூங்கா அமைக்கும் பணி முடிந்து 2005ல் அதைத் திறந்து வைப்பதற்காக ஶ்ரீ நரேந்திரமோடி அங்கு வந்தபோது மாதுரி அவருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அதற்குப்பின் மாதுரி தான் பெங்களூர் திரும்ப இருப்பதைக் கூறியதோடு தனக்கும் முதலமைச்சருக்கும் இடையில் உள்ள பரஸ்பர தொடர்புகளையும் என்னிடம் பகிர்ந்து கொண்டார். ஒரு முறை அரசு விழா ஒன்றில் மாதுரியும் ஶ்ரீ மோடியும் மிக நெருக்கமாக இருந்ததைப் பார்க்கவும் அவர்கள் உரையாடலைக் கேட்கவும் நேர்ந்தபோது அவர்களுக்கிடையே இருந்த நெருக்கமான உறவு குறித்த உண்மை எனக்கு உறுதியாயிற்று. தொடர்ந்து மாதுரி என்னிடம், தான் ஶ்ரீ மோடியச் சந்திக்கச் செல்லும்போது அவர் எவ்வாறு, மூத்த அதிகாரிகளுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கூட்டங்களைக் கூட இடையில் நிறுத்திவிட்டு வெளிவந்துத் தன்னுடன் அந்தரங்கமாகப் பேசுவார் என்பதையும் கூறினார்.”

தான் பழிவாங்கப்பட்டதற்குக் காரணம் மோடிக்கும் மாதுரிக்கும் இருந்த அந்தரங்க உறவைத் தான் அறிய நேர்ந்ததே எனக் கூறும் பிரதீப் ஷர்மா, அவரறிந்த அந்த அந்தரங்கங்கள் சிலவற்றையும் தொடர்ந்து மனுவில் பதிவு செய்கிறார். மார்ச் 2006 இரண்டாம் வாரத்தில் ஒரு நாள் மாலை 5 மணி அளவில் தான் அகமதாபாத் வந்து இறங்கியுள்ளதாகவும் பூஜுக்கு வர இருப்பதாகவும் தெரிவித்த மாதுரி, அடுத்த இரண்டு நாள்வரை தன்னுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாதிருந்ததாகக் குறிப்பிடுகிறார் பிரதீப். பின் தொடர்பு கொண்டபோது கடந்த இரு நாட்களும் தான் ஶ்ரீ மோடியுடன் இருந்ததாகவும், அது ஹோலிப் பண்டிகை நாளானதால் பலரும் அவரைப் பார்க்க வந்தனர் எனவும், அவ்வப்போது வெளியே சென்று அவர்களைச் சந்த்தித்து மோடி திரும்பி வந்ததாகவும் மாதுரி தன்னிடம் கூறியதாகவும் பிரதீப் பதிவு செய்கிறார். நடுவில் சற்று உடல் நலமில்லாமல் போன மாதுரி மருத்துவர் யாரையாவது அழைக்க இயலுமா எனக் கேட்டபோது நாம் இருக்கும் நிலையில் அது சாத்தியமில்லை என மோடி மறுத்ததாகவும் தெரிகிறது.

9909923400 என்கிற எண்ணிலிருந்து மோடி மாதுரிக்கு அனுப்பிய குறுஞ்செய்தி ஒன்று குறித்தும் பிரதீப் தன் மனுவில் கூறியுள்ளார். தொடர்ந்து பிரதீப் சொல்வதை சுருக்கம் கருதி மட்டுமின்றி அப் பெண்ணின் கண்ணியம் கருதியும் தவிர்க்கிறேன்.

பின்னிகழ்வுகள் :

1.விஷயம் இப்படி அம்பலப்பட்டவுடன் ‘மாதுரி’யின் தந்தை பிரான்லால் சோனி அனுப்பிய கடிதம் ஒன்று பா.ஜ.க தரப்பில் சுற்றுக்கு விடப்பட்டது. அது எந்த வகையிலும் மோடியைக் காப்பாற்றவில்லை. மாறாக அமித் ஷா தன் உரையாடல்களில் குறிப்பிடும் ‘சாகேப்’ மோடிதான் என்பதை அது உறுதி செய்தது. பிரான்லாலின் கடித வாசகங்களில் சில:

“அவள் (மாதுரி) அடிக்கடி அகால நேரங்களில் பயணம் செய்ய நேரிட்டது. ஒரு தந்தை என்கிற முறையில் நான் அதற்காகக் கவலைப் பட்டேன். இதனால் எங்கள் குடும்பத்துடன் நீண்ட நாள் உறவில் உள்ள குஜராத் முதல்வர் ஶ்ரீ நரேந்திர மோடியிடம் அவளைக் கவனித்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டேன்.”

அதாவது தாங்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலேயே மோடி மாதுரியின் ஒவ்வொரு நடமாட்டத்தையும் இவ்வாறு கண்காணித்தாராம்.

ஆனால் உரையாடல்களைக் கவனித்தால் வெறும் பாதுகாப்புக் கருதி மட்டும் மாதுரி கண்காணிக்கப் படவில்லை என்பதோடு, அவர் அறியாமலேயே அவர் கண்காணிக்கப்பட்டுள்ளார் என்பதும் உறுதிப்படுகிறது.

தவிரவும், இதை உண்மை என்றே கருதினாலும் கூட, தனது குடும்ப நண்பரின் வேண்டுகோளுக்காக ஒரு முதலமைச்சர் எவ்வாறு அரசு எந்திரத்தை இவ்வாறு பயன்படுத்த இயலும்?

2. பிரான்லால் இரண்டு நாள் முன்னதாக (நவம்பர் 19) இன்னொரு கடிதத்தை வெளியிட்டுள்ளார், அதில் தனது மகள் அறிந்தே அவர் கண்காணிக்கப்பட்டார் என்றுள்ளது. இது முழுப் பூசணியைச் சோற்றில் மறைக்கும் வேலை என்பதைப் பதிவு செய்யப்பட்ட உரையாடல்கள் உறுதி செய்கின்றன.

3. இந்தியாவின் மிக முக்கியமான பெண்கள் இயக்கங்களும் முற்போக்கு இயக்கங்களும் இணந்து நவம்பர் 18 அன்று டெல்லியில் இது குறித்த மத்திய புலனாய்வுத் துறை விசாரணை வேண்டுமென ஆர்பாட்டம் நடத்தின.

ஆக, பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பிலிருந்தே அந்தப் பெண்ணின் அடையாளம் வெளிப்படுத்தப்பட்டுவிட்டது, அவர் பின் தொடரப்பட்டதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. நரேந்திர மோடிதான் இதற்கான ஆணையை இட்டார் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. பா.ஜ.க இக்கடிதங்களை வெளியிட்டதிலிருந்து அக்கட்சியும் இவற்றை ஏற்றுக் கொள்வது தெரிகிறது.

காவற் படைக் கண்காணிப்பாளர் ஜி.எஸ்.சிங்கால் ஐ.பி.எஸ் மற்றும் மூத்த அதிகாரி பிரதீப் ஷர்மா ஐ.ஏ.எஸ் ஆகியோரின் வாக்கு மூலங்கள் மற்றும் சிங்கால் புலனாய்வுத்துறையின் முன் சமர்ப்பித்துள்ள ஒலிப்பதிவுகள் ஆகியன அப்பெண்ணுக்கும் ‘சாகேப்’புக்குமான உறவு ஒப்புதல் அடிப்படையில் இருந்தபோதிலும் அந்தப் பெண்ணுக்கு வேறு ஆடவருடன் தொடர்புள்ளதா என அறிய அவர் அறியாமலேயே அரசு எந்திரத்தின் மூலம் அவர் கண்காணிக்கப்பட்டதையும், பின்தொடரப்படந்தையும் உறுதி செய்கின்றன.

ஒரு ஜனநாயக அரசில் தனிநபரே ஆக உயர்ந்த அதிகாரம் படைத்தவராகக் கருதப்படுகிறார், அரசின் அதிகாரம் அவரிடமிருந்தே பெறப்படுகிறது. எக்காரணம் கொண்டும் ஒரு அரசுக்குத் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரது அந்தரங்கத்தைப் பின்தொடர உரிமை இல்லை. பெண்களை இவ்வாறு பின்தொடர்வது (Stalking) டெல்லி பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு கடுங் குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் பின்தொடர்வு பற்றிய ஒரு நடுநிலையான புலன் விசாரணை இன்று உடனடித் தேவையாகிறது

இணைப்பு : பதிவு செய்யப்பட்டுள்ள 267 உரையாடல்களில் ஓரிரண்டு மட்டும். (ஆங்கிலத்தில் உள்ள உரையாடல் தமிழுக்குத் தக்கவாறு பொருள் மாறாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது)

1.அமித் ஷா : சிங்கால், நான் அமித் பேசுறேன்.. கவனமா வாட்ச் பண்ணுங்க.

ஜி.எஸ்.சிங்கால்: சார், ஹோடல் பார்கிங் ஏரியாவில் ஒருத்தன், வெளியில் ஒருத்தன்,, அப்புறம் இன்னொருத்தனையும் வாட்ச் பண்ண போட்டிருக்கேன்..

அமித்: இன்னும் உள்ளதான் இருக்காங்களா.. ?

சிங்கால் : இது வரைக்கும் வெளியில வரல.. அதுனால உள்ளதான் இருக்கணும்…

அமித் : இன்னிக்கு லன்ச்சுக்கு அவங்க ஒரு ஓட்டலுக்குப் போறாங்க…

சிங்கால் : சரி.. சரி..

அமித் : அப்படீன்னு சாகேப்புக்கு ஒரு போன் வந்திருக்கு…

சிங்கால் : ஓகே.. ஒகே…

அமித் : அவ ஒருத்தனோட போவா கவனிங்க..

சிங்கால் : சார்..

அமித் : அவளைப் பார்க்க வருவானே அவன்தான்..

சிங்கால் : ஓகே.. ஒகே…

அமித் : விஷயம் என்னன்னா சாகேபுக்கு எல்லாத் தகவலும் வந்துட்டு இருக்கு. நாம எதாவது கவனிக்க விட்டுட்டோம்னா தெரிஞ்சு போயிடும்.

சிங்கால் :ஆமா.. ஆமா..

அமித் : அதனால நீ தயவு செய்து…

சிங்கால் : சார், நானே நேர்ல போயி எல்லா ஏற்பாட்டையும் கவனிச்சுகிறேன்..

அமித் : ஆமா, நீயே அங்கே ஒருதடவை போய் பாக்கிறதுதான் நல்லது..

சிங்கால்: சார், நான் இங்க பக்கத்துலதான் இருக்கேன். பத்து நிமிசத்துல அங்கே போய்டுவேன்.

2. அமித் : சிங்கால், ஏதாவது புதுத் தகவல்…?

சிங்கால் : சார், அவ ஓட்டல விட்டு வெளியே வந்துட்டா. பிரகலாத் நகரை நோக்கிப் போயிட்டு இருக்கா..

அமித் : பவநகர் எஸ்.பி யோட உனக்கு எப்படி உறவு..

சிங்கால் : ஒ! நல்ல உறவுதான் சார்..

அமித் : கமிஷனர் அவ வீட்டில இருக்கானா இல்ல இங்க வந்துட்டு இருக்கானான்னு செக் பண்ணு.

சிங்கால் : ஒகே சார்..

அமித் : முனிசிபல் கமிஷனரை (பிரதீப் ஷர்மாவை) சொன்னேன்..

அமித் : ஓகே சார்..

3. சிங்கால் ; சார், நமஸ்தே சார்…

அமித்: ராத்திரி என்ன நடந்துது?

சிங்கால்: சார், அவ நேத்து ராத்திரி 12.30., ஒரு மணி வரைக்கும் அவனோட கார்லதான் இருந்தா. அவ ஓட்டலுக்கு வர்ரப்ப ஒரு மணி. பவநகர்ல இருந்து தகவல் வர ராத்திரி ரொம்ப லேட் ஆயிட்டு. உங்களைத் தொல்லை பண்ண விரும்பல. அவர் பவநகர்லதான் இருந்தார்.

அமித் : அவன் மேலையும் ஒரு கண்ணை வச்சுக்குங்க..

சிங்கால் : எட்டு மணியில இருந்து என் ஆட்கள் அந்த வேலையிலதான் இருக்காங்க. நம்ம தெரிஞ்சுக்கிறணும்கிறதுக்காக லொகேஷன சொல்லச் சொல்லி இருக்கேன்.

அமித் : அவ ஓட்டல் லோகல் நம்பரை எடு..

சிங்கால்: சரி சார். இன்னிக்கு 11 மணி வரைக்கும்தான் அவ ஓட்டல் ரிசர்வேஷன் இருக்கு.. 11 மணி..

அமித் : புரியுது.. புரியுது..

4. அமித் : சிங்கால்..

சிங்கால் : எஸ் சார்..

அமித் : மும்பை ஃப்ளைட்ல யாரையாவது அனுப்ப முடியுமா?

சிங்கால் : ம்ம்ம்..

அமித்: ஏதோ நடக்குதுன்னு சாகேபுக்கு உறுதியா. தகவல் வந்திருக்கு. நாம யாராவது ஒருத்தரை அந்த ஃப்ளைட்ல அனுப்புறது நல்லது..

சிங்கால் : சரி, சார்.. நல்லது சார்.. நான் யாரையாவது அனுப்பிடறேன் சார்..

அமித் : கொஞ்சம் பணத்தைக் கொடுத்து அவனை (அதே) ஃப்ளைட்ல ஏத்தி விடு. அப்புறம் அவ ஏர்போர்ட்ல (பப்ளிக் பூத்ல இருந்து) எஸ்.டி.டி., பி..சி.ஒ போன் கால் எதுவும் பேசுனா அந்த நம்பரைக் கண்டுபிடி..

சிங்கால் : சரி சார்.. ரைட் சார்…

இப்போது சொல்லுங்கள். இதெல்லாம் அந்தப் பெண்ணின் பாதுகாப்பிற்காக, அவள் சம்மதத்துடன், அவள் அறிந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளா?

ஒரே நேரத்தில் அந்தப் பெண் மட்டுமின்றி பவநகர் முனிசிபல் கமிஷனர் பிரதீப் ஷர்மாவையும் உளவு பார்த்ததையும், அவர்கள் இருவருக்கும் இடையிலும், அதேபோல அந்தப் பெண்ணுக்கும் இன்னொரு இளைஞனுக்கும் இடையில் இருந்த அல்லது இருந்ததாக சாகேப்பினால் சந்தேகிக்கப்பட்டுந்தான் இந்தப் பின்தொடரல்கள் நடைபெற்றுள்ளமைக்கு வேறென்ன சான்றுகள் வேண்டும்?

அமித் ஷா மூலமாக மட்டுமின்றி தானும் தனியே அந்தப் பெண்ணைக் கண்காணித்த சாகேபின் வக்கிரத்தை என்ன சொல்வது?

குஜராத் போலீசைப் பற்றியும் மோடியின் நிர்வாகத் திறமை பற்றியும் என்ன சொல்வது.. சீச் சீ, நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்றா?

தேவயானி விவகாரம் : இந்திய அமெரிக்க உறவில் விரிசலா?

இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்க ஊடகங்களிலும் இன்று பரபரப்பாகப் பேசப்படும் செய்தி அமெரிக்காவிற்கான இந்தியத் துணைத் தூதர் தேவயானி விவகாரம்தான். கடந்த பத்தாண்டுகளாகக் கிட்டத்தட்ட அமெரிக்காவின் எடுபிடி போலச் செயல்பட்ட இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் சரமாரியாக எதிர் நடவடிக்கை எடுத்திருப்பது எல்லோரையும் வியக்க வைத்துள்ளது. உலக நாடுகள் பலவற்றையும் அமெரிக்கா உளவு பார்த்த கதை சில மாதங்களுக்கு முன் ஸ்னோடென் மூலம் வெளிப்பட்ட போது கூட இந்திய அரசு அடக்கியே வாசித்தது. அய்ரோப்பிய யூனியன் நாடுகள் எல்லாம் அமெரிக்காவைக் கண்டித்தபோதும் இந்தியா இதனை “உளவெல்லாம் இல்லை சும்மா கம்ப்யூட்டர் ஆய்வுதான் (computer analysis)” என்று சொன்னபோது உலகமே நகைத்தது. இத்தனைக்கும் உளவுத் தகவல்கள் அதிகம் சேகரிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா ஒன்று.

ஆனால் இன்று இந்தியாவெங்கிலுமுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரது அடையாள அட்டைகள் பறிக்கப்பட்டுள்ளன. விமான நிலைய அனுமதிச் சீட்டுகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. மது வகைகள் உட்பட தேவையான சில பொருட்களை இறக்குமதி செய்துகொள்ளும் சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்கத் தூதரகங்களில் பணி புரியும் இந்திய ஊழியர்களின் ஊதிய விவரங்களும் கோரப்பட்டுள்ளன, டில்லியிலுல்ள தூதரகத்தின் முன் போடப்பட்டிருந்த பாதுகாப்புத் தடுப்புகளும் கூட அகற்றப்பட்டுள்ளன.

“உலகளாவிய பங்காளிகள்” (global partners) எனக் கூறிக் கொண்டு அமெரிக்காவுடன் கைகோர்த்துத் திரிந்த மன்மோகன் அரசுக்கு இப்போது திடீரென ஏனிந்த ஆவேசம்? அமெரிக்கப் போர்க்கப்பலான நிமிட்சின் வருகைடீந்திய அரசின் இறையாண்மையையும் கூட விட்டுக் கொடுத்து இயற்றப்பட்ட 123 ஒப்பந்தம், நேரு காலத்திய அணிசேராக் கொள்கையிலிருந்து விலகி அயலுறவுக் கொள்கையில் அமெரிக்கச் சார்பு எடுத்தது ஆகியவற்றிற்கு எழுந்த எதிர்ப்புகளை எல்லாம் கண்டு கொள்ளாமல் அமெரிக்காவை ஆதரித்து வந்த காங்கிரஸ் அரசின் இன்றைய நடவடிக்கைகள் எல்லோருக்கும் வியப்புத்தான். தேர்தல் நெருங்குவது ஒரு காரணமாக இருக்கலாம். பா.ஜ.கவும் முழுமையாக இந்தப் பிரச்சினையில் அரசை ஆதரிக்கிறது.

துணைத் தூதர் தேவயானி கோப்ரகடேக்கு நேர்ந்த அவமானம் எல்லோரையும் எரிச்சல்பட வைத்துள்ளது உண்மை. இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட வேலைக்காரப் பெண்ணுக்கு உரிய ஊதியம் வழங்காமல் அதிகம் வேலை வாங்கியதாக அப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையிலும், அபெண்ணுக்கு விசா பெறுவதற்காகப் பொய் ஆவணங்கள் சமர்ப்பித்தற்காகவும் தேவயானி பொது இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டது, விலங்கிட்டு அழைத்து வரப்பட்டது, ஆடைகளைக் களைந்து சோதனையிடப்பட்டது ஆகியன அனைவருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளன.

‘தூதரக உறவுகளுக்கான வியன்னா உடன்பாடு (1961)’ தூதரக அதிகாரிகளுக்கு சட்ட நடவடிக்கைகளிலிருந்து சில காப்புரிமைகளை (diplomatic immunity) வழங்கியுள்ளது. எனினும் இந்தக் காப்புரிமைக்கு எல்லைகள் உண்டு. காப்புரிமை உள்ளது என்பதற்காக ஒரு தூதரக அதிகாரி உள் நாட்டுச் சட்டங்களை மீற இயலாது. தவிரவும் இந்தக் காப்புரிமை தூதரகப் பணிகள் தொடர்பான சட்ட மீறல்களுக்கு மட்டுமே உண்டு. இவற்றைச் சொல்லித்தான் இன்று அமெரிக்கா தன் செயலை நியாயப்படுத்துகிறது.

ஆனால் மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளை வலுவான நாடுகள் அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. தூதரக அதிகாரிகளுக்கு முழுமையான காப்புரிமைகள் உள்ளதாகவே அவை எடுத்துக் கொள்கின்றன. கடுங் குற்றச்சாட்டுகளில் கூட அவை தம் ஊழியர்களின் காப்புரிமையை விட்டுக் கொடுப்பதில்லை.

2004 டிசம்பரில் ருமேனிய நாட்டின் புசாரெஸ்ட் நகரில் அமெரிக்கத் தூதரகத்தில் பணி புரிந்த வான் கோதம் என்கிற கடற்படை வீரன் குடித்துவிட்டுக் காரோட்டிச் சென்றதோடு சாலை விதிகளை மீறிச் சென்று மோதியதில் அந்ந்நாட்டு இசைக் கலைஞர் ஒருவர் கொல்லப்பட்டார், மூச்சுப் பரிசோதனையில் சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் இரத்தப் பரிசோதனைக்கு உடன்படாததோடு ஜெர்மனிக்கு ஓடவும் செய்தான் வான் கோதம். அமெரிக்கா தூதரகக் காப்புரிமையை விட்டுக் கொடுக்க மறுத்தது. அவனை ருமேனியாவுக்கு அனுப்பாமல் தானே இராணுவ விசாரணை ஒன்றை நடத்தி தண்டனை அளித்தது.

2001 ஜனவரியில் கனடா நாட்டின் ஒட்டாவா நகரில் ஆந்த்ரே கினைசேவ் என்கிற ருஷியத் தூதரக அதிகாரி காரோட்டிச் சென்று பாதசாரிகள் மீது மோதியதில் ஒருவர் அங்கேயே இறந்து போனார். இன்னொருவர் படுகாயம் அடைந்தார். ருஷ்யாவும் காப்புரிமையை ரத்து செய்யாததோடு அந்த அதிகாரியைக் கனடாவுக்கு அனுப்பவும் மறுத்தது. தங்கள் நாட்டுச் சட்டப்படி விசாரித்துத் தண்டனை வழங்கியது.

ஆனால் சிறிய நாடுகள் இப்படியான நிகழ்வுகளில் தம் அதிகாரிகளின் காப்புரிமையை விட்டுக் கொடுத்தன. 1997 ஜனவரியில் ஒரு சம்பவம். அமெரிக்காவிற்கான ஜார்ஜிய நாட்டுத் துணைத் தூதர் குயோர்கொ மகாரட்சே இப்படிக் குடித்து விட்டுக் காரோட்டி மோதியதில் நால்வர் காயமடந்து ஒரு பெண் கொல்லப்பட்டார், ஜார்ஜியா தன் துணைத் தூதரின் காப்புரிமையை விட்டுக் கொடுத்தது. அமெரிக்க அரசு தன் நாட்டுச் சட்டப்படி அவரை விசாரித்துத் தண்டனை வழங்கியது.

அமெரிக்கா இன்னும் தான் உலக மேலாண்மை வகிப்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்கத் தூதர்கள் ஏதோ தங்கள் காலனிகளைக் கண்காணிக்க வந்த அதிகாரிகள் போலவே அந்தந்த நாடுகளில் நடந்துகொள்கின்றனர். பிப்ரவரி 2007ல் அப்போதைய அயலுறவு அமைச்சரான பிரணாப் முகர்ஜி ஈரானுக்குச் சென்றார். அமெரிக்காவுடன் இந்தியா 123 ஒப்பந்தம் செய்திருந்த நேரம் அது. அப்போதைய அமெரிக்கத் தூதர் டேவிட் மல்ஃபோர்ட்பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி, “ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது புதிய சட்டங்களின்பால் இந்திய அரசு கவனம் கொள்ள வேண்டும்” என்றார். அந்தச் சந்திப்பின் போது அவர் “ரொம்பத் திமிராக” நடந்து கொண்டார் என நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதியது (பிப்ரவரி 2, 2007).

சில மாதங்களுக்குப் பின் இங்கு வந்த அமெரிக்க ஆற்றல் துறைச் செயலர் ஈரானுடனான உறவு குறித்து இந்தியாவை எச்சரித்தார். “எல்லாவிதமான அயலுறவு மரபுகளையும் அவர் மீறியதோடு, ஏதோ இந்தியாவுடன் சண்டைக்கு வந்ததுபோல” அவர் பேசியதாக நாளிதழ்கள் எழுதின (இந்து, மார்ச் 27, 2007).

இன்று காலம் வேகமாக மாறி வருகிறது. அமெரிக்காவின் உலக மேலாண்மை இன்று பலவீனமாகி உள்ளது. இந்தியா போன்ற நாடுகளின் பேர ஆற்றல் அதிகரித்து வருகிறது. அய்.நா அவையின் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகிற கனவுடன் அது செயல்பட்டு வருகிறது. தனது பரம்பரியமான அணி சேராக் கொள்கையிலிருந்து விலகி மேட்டிமைக் குழுக்களில் (elite clubs) இடம் பெயர்வதில் வெற்றி அடைந்துள்ளது.

இந்த நிலையின் ஒரு வெளிப்பாடாகவே இன்றைய மோதலை நாம் காண வேண்டியுள்ளது. ஆனால் இந்த மோதல் எந்தப் பெரிய உறவு விரிசலுக்கும் இட்டுச் செல்லப் போவதில்லை. அது நல்லதல்ல என இருவருக்குமே தெரியும். இந்தியாவின் கணடனத்தைக் கவனத்தில் கொண்டு கைது நிகழ்வை ஆராய்வதாக அமெரிக்கத் தரப்பில் சற்றுமுன் கூறப்பட்டுள்ளது.

ஒன்றைச் சொல்லியாக வேண்டும். இந்தப் பிரச்சினையில் இந்தியா, அமெரிக்கா என்கிற இரு தரப்பையும் தாண்டி இன்னொரு மூன்றாவது தரப்பும் உள்ளது அது அந்தப் பெயர் தெரியாத வேலைக்காரப் பெண். தேவயானி மட்டுமல்ல இவளும் ஒரு இந்தியக் குடிமகள்தான். தூதரக அதிகாரிகளுக்கு ஏகப்பட்ட சலுகைகள், ஊதியம் மற்றும் வசதிகள் அளிக்கப்படுகின்றன. ஒரு ஏழை வேலைக்காரப் பெண்ணை, குறைந்தபட்ச ஊதியமும் கொடுக்காமல் கொடுமையாக வேலை வாங்கியது உண்மையானால் அது அவ்வளவு எளிதாக விட்டுவிடக் கூடியதல்ல. அமெரிக்கா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது மட்டுமல்ல தேவயானி உரிய முறையில் சட்டத்தின் முன் நிறுத்தப்படவும் வேண்டும்.

பன்னாட்டுச் சட்டங்கள் இது குறித்து என்ன சொல்கின்றன?

சட்டத்துறை ஆய்வு மாணவர்கள் இருவர் எழுதிய முக்கிய கட்டுரை இது. தேவயானி பிரச்சினையில் நாம் கவனம் கொள்ள வேண்டிய அம்சங்கள்: 1) தூதர்களுக்கு உள்நாட்டுச் சட்டங்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் 1961ம் ஆண்டு வியன்னா உடன்பாடு தூதர்களுக்கு மட்டுமே இந்தப் பாதுகாப்பை வழங்குகிறது. துணைத் தூதர் தேவயானி தூதராலயப் பணியுல் உள்ளவர் மட்டுமே. அவருக்கு 1961ம் ஆண்டு அளிக்கும் பாதுகாப்பு செல்லுபடியாகாது.

2) தூதரகப் பணியாளர்களுக்கு இத்தகைய பாதுகாப்பை 1963ம் ஆண்டு வியன்னா உடன்பாடு அளிக்கிறது. ஆனால் இது 1961ம் ஆண்டு உடன்பாடு அளிக்கும் பாதுகாப்பைப்போல முழுமையானது அல்ல. கடும் குற்றங்கள் சுமத்தப்பட்டிருந்தாலோ அல்லது உரிய நீதிமன்ற ஆணை இருந்தாலோ அவரைக் கைது செய்யலாம். தவிரவும் தூதரகப் பணிகளுக்கு மட்டுமே இந்தப் பாதுகாப்பு உண்டு.

3) தேவயானியின்மீதான குற்றச்சாட்டிற்கு அமெரிக்கச் சட்டப்படி 5ஆண்டு வரை தண்டனை உண்டு. அதாவது இது கடுங் குற்றவகையைச் சேர்ந்தது. அதோடு தேவயானி, நியூயார்க்கின் தென் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் டேரா ஃப்ரீமன் அளித்துள்ள ‘வாரன்ட்’டின் படியே கைது செய்யப்பட்டுள்ளார்.

4) ஆக, தேவயானியின் கைதைப் பொருத்தமட்டில் அது பன்னாட்டுச் சட்டத்தின்படி சரியானதே. எனினும் 63ம் ஆண்டு உடன்பாட்டின்படி அவரது பதவிக்குரியவகையில் விசாரணையின்போது அவர் கண்ணியமாக நடத்தப்பட்டிருக்க வேண்டும். அப்படி அவர் நடத்தப்படவில்லை என்பது மட்டுமே இதில் சட்ட மீறல்.

5) தூதர்களுக்கான 63ம் ஆண்டு உடன்பாடு அளிக்கும் முழுப் பாதுகாப்பையும் தேவயானி பெறுவதற்காகவே இன்று அவரை இந்திய அரசு நியூயார்க்கில் உள்ள ஐ.நா அவையின் தூதரக முகவராகப் பணி உயர்வு அளித்துள்ளது. இது பன்னாட்டுச் சட்டங்கள் அளிக்கும் பாதுகாப்பைத் தவறாகப் பயன்படுத்துவது (abuse of international law) ஆகும். இது குறித்த ஐ.நா அவையின் 1946ம் ஆண்டுச் சட்டத்தின்படி ஐ.நா தூதர்களுக்கு அளிக்கப்படும் இந்தப் பாதுகாப்பு ஐ.நா அவைப் பணிகளைச் சுதந்திரமாகச் செய்வதற்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நபரின் சொந்தப் பலன்களுக்கு இதைப் பயன்படுத்தக் கூடாது. தேவயானிக்கு அளிக்கப்படும் இந்தப்பதவி உயர்வு அவரை அவர் செய்துள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிற, ஐ.நா அவையின் பணிக்குத் தொடர்பில்லாத ஒரு குற்றச்சாட்டிலிருந்து தப்புவிப்பதற்காகவே செய்யப்படுகிறது, இது சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் குற்றம்.

6) அமெரிக்க நடவடிக்கைக்காக இந்தியா எடுத்துள்ள எதிர் நடவடிக்கைகளில், அமெரிக்காவிலிருந்து வந்துள்ள தூதுக் குழுக்களைச் சந்திக்க மறுப்பது என்பதெல்லாம் அரசியக் சார்ந்த விஷய. ஆனால் தூதரகங்களுக்கு அளித்துள்ள பாதுகாப்புக்களை நீக்குவது முதலியன பன்னாட்டுச் சட்டங்களுக்கு எதிரானவை. வேண்டுமானால், அதுவும் ஒரு இறுதி நடவடிக்கையாக, தன் நாட்டுத் தூதரை நீக்கிக் கொள்வது, சிறப்புச் சலுகைகளை ரத்து செய்வது முதலான எதிர் நடவடிக்கைகளை எடுக்கலாம்.

7) இந்தியா இது தொடர்பாகப் பன்னாட்டு நீதிமன்றத்தை (ICJ) அணுக இயலாது. ஏனெனில் அமெரிக்கா, பன்னாட்டு நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்துத்துவவாதிகளின் அறிவியல் பாடம்: சோதனைக் குழாய்க் குழந்தைகளுக்கு இந்துத்துவ விளக்கம்

இந்துத்துவவாதிகள் வரலாற்றை எப்படிச் சொல்லித் தருவார்கள் என்கிற கதை நமக்குத் தெரிந்தத்தான். (பார்க்க: எனது ‘பாடநூல்களில் பாசிசம்’ என்கிற நூல். இதன் சில பகுதிகளை என் இணையப் பக்கத்திலும் காணலாம்) இந்துத்துவவாதிகளின் கையில் விஞ்ஞானப்பாடம் சிக்கினால் என்ன ஆகும் என்பதற்கு ஒரு சூப்பர் எடுத்துக்காட்டு இதோ.

கர்னாடக அரசு வெளியிட்டுள்ள 9ம் வகுப்பு விஞ்ஞானப் பாட நூலில் “பண்டைய இந்தியாவில் சோதனைக் குழாய்க் குழந்தைகள்” என்றொரு பாடம். 7500 ஆண்டுகளுக்கு முன்பே மகாபாரதத்தில் சோதனைக் குழாய்க் குழந்தைகள் பற்றிச் சொல்லியுள்ளதாம். துரோணர் அப்படிப் பிறந்தவர்தானாம், பக்கம் 209 ல் இது விலாவாரியாக விளக்கப்படுகிறது. தமிழில் : “…ஒருநாள் பரத்வாஜர் கங்கைக்குக் குளிக்கச் சென்றார். அங்கே கிரிதாச்சி என்ற அப்சரஸ் ஒருத்தியைக் கண்டார். காம வெறி மேலிட அவருக்கு விந்து பீறிட்டது. பரத்வாஜர் தன் விந்தை ஒரு மண் பானையில் ஏந்திக் கொண்டார். அதிலிருந்து பிறந்தவரே துரோணர்” (‘துரோண்’ என்றால் மண் பானை). இதற்கான விஞ்ஞான ஆதாரம் என்ன தெரியுமா, அவர் பெயர்தான்.

இது எப்டி இருக்கு..?

பதினான்கு வயதுப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் பாடம் இது. இந்த முண்டங்கள்தான் பள்ளிகளில் ‘செக்ஸ்’ பாடம் கூடாது, காதலர் தினம் கொண்டாடக் கூடாது என்றெல்லாம் முழக்குபவர்கள்.

அறிவியல் பாடத்திலேயே இத்தனை என்றால் மற்ற பாடங்களில் கேட்கவா வேண்டும். ஆறாம் வகுப்பு சமூகவியல் பாடத்தில் பக்கம் 54 முதல் 80 வரை சிறுபான்மையினருக்கும் தலித்களுக்கும் எச்சரிக்கை வழங்குவதாகவும், பிற்போக்குக் கருத்துக்களுக்கு வலு சேர்ப்பதாகவும் ‘பாடங்கள்’ உள்ளன. 11 வயதுப் பிள்ளைகள் படிக்கும் இப்பாட நூலில் “பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) தேவைதானா?’ என்றொரு குழு உரையாடல் வேறு (பக்.64).

ஆறாம் வகுப்பு சமூகவியல் பாடநூலில் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களை அறிமுகப்படுத்தும் பாடத்தின் தலைப்பு : “இந்தியாவும் புற உலகும்”. இவ்வாறு தலைப்பே இவ்விரு மதத்தினரையும் இந்தியாவிற்கு வெளியே உள்ளவர்களாகச் சித்திரிக்கின்றது எனக் கண்டித்துள்ளனர் இந்திய அளவில் மதிக்கத்தக்க குடிமக்களும் கல்வியாளர்களும். டெல்லியில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் 24 அறிஞர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ரொமிலா தப்பார், சோயா ஹஸன், கிருஷ்ணகுமார், சோம்னாத் சட்டர்ஜி (முன்னாள் சபாநாயகர்), கோபால கிருஷ்ண காந்தி, யு.ஆர். அனந்தமூர்த்தி, கிரிஷ் கர்னாட், நரேஷ் சந்திரா, ஜயதி கோஷ், நிவேதிதா மேனன், ரிது மேனன் முதலானோர் கையெழுத்திட்டவர்களில் சிலர்.

ஆறாம் வகுப்புக் கன்னடப் பாடநூலில், “….அரேபியர்கள் சிந்து மாகாணத்தை வென்றார்கள், இந்த மண்ணில் இஸ்லாமியத்தைப் பரப்பினார்கள். சுல்தான்களின் நீண்ட ஆட்சி இந்தியாவில் இஸ்லாம் வேகமாகப் பரவுவதற்குக் காரணமாக இருந்தது….” எனக் கூறப்பட்டுள்ளது (பக்.5). இஸ்லாம் அதற்கு முன்னதாகவே இங்கு பரவியது என்றும், வணிகம் அதில் முக்கிய பங்கு வகித்தது எனவும் கையெழுத்திட்டுள்ள அறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இந்தியாவில் முஸ்லிம்கள் அதிகம் செறிந்திருந்த பகுதி மேற்கு பஞ்சாபும் (இன்றைய பாக்), கிழக்கு வங்கமும்தான் (இன்றைய வங்க தேசம்). இந்த இரண்டு பகுதிகளிலும் வலிமையான முஸ்லிம் அரசுகள் கோலோச்சியதே இல்லை என்பதை நான் எனது கட்டுரைகளில் சுட்டிக் காட்டியுள்ளேன். திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பள்ளிவாயில் ஒன்று உள்ளது இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்களா அதைக் கட்டினார்கள்?

அதே பாடத்தில் தேவையில்லாது சிலுவைப் போர்கள் ஏக விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சீர்திருத்தக் கிறிஸ்தவம் குறித்த 9 ம் வகுப்புப் பாடம் ஒன்றில் கத்தோலிக்க மதத்தின் ‘ஒழுக்கக் கேடுகள்’ விரிவாக அலசப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 6 மற்றும் 9 ம் வகுப்புகளுக்கான “மத மற்றும் சமூக சீர்திருத்த இயக்கங்கள்” எனும் பாடங்களிலும், 5 மற்றும் 8 ம் வகுப்புப் பாட நூல்களில் உள்ள “பவுத்தம் மற்றும் சமண மதங்களின் பிறப்பு” என்னும் பாடங்களிலும் இங்குள்ள சாதிமுறை, தீண்டாமை, சாதி ஆதிக்கம், மூட நம்பிக்கைகள் குறித்துப் போகிற போக்கில் ஓரிரு சொற்களே உள்ளன.

“பாரதமும் புறவுலகும்” என்கிற பாடத்தில் செங்கிஸ் கான், தைமூர் ஆகியோரின் கொடுங்கோன்மைகள் விவரிக்கப்படுகின்றன. இந்தியாவுக்கு வெளியில் எல்லாமும் கொடூரமானதாகவும் தீயதாகவும் உள்ளன என்கிற எதிர்மறைப் பிம்பம் இதன்மூலம் பிஞ்சு உள்ளங்களில் விதைக்கப்படுகின்றன என்கின்றனர் கையெழுத்திட்டுள்ள அறிஞர்கள். மன்னர்களின் படை எடுப்புக்கள் அனைத்துமே இப்படித்தான் நடந்துள்ளன. கொள்ளை, பெண்கள் மீதான பாலியல் வன்முறை என்பதாகத்தானே இங்கு உள்நாட்டுப் போர்களும் நடந்துள்ளன. அவ்வளவு ஏன் நம்முடைய ராஜராஜன் இலங்கையின் மீது படை எடுத்து அநுராதபுரத்தையும் பொலனறுவையையும் தீக்கிரையாக்கி அவற்றிற்கு ‘ஜனநாதமங்கலம்’ எனத் தன் பெயரைச் சூட்டவில்லையா?

பிற பாடங்களும் ரஜபுத்திரர், ராஷ்டிரகூடர்கள், சாளுக்கியர், ஒய்சளர், சோழர் முதலான மைய நீரோட்ட மாபெரும் பரம்பரையினரின் புகழ்பாடலாகத்தான் உள்ளனவே தவிர, வரலாற்றுருவாக்கத்தில் அடித்தள மக்களின் பங்கு முற்றாகப் புறக்கணிக்கப் பட்டுள்ளதையும் அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்,

பக்தி இயக்கம் குறித்து 6 ம் வகுப்பில் ஒரு பாடம். உண்மைகள் பெரிய அளவில் இதில் திரிக்கப்பட்டுள்ளன. “பக்தி இயக்கத்தவர்களில் பலர் (எ.கா பாபா புதன்) தாத்தத்ரேயரை” வழிபட்டனராம். இது தவறு என்பதை அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளோர் சுட்டிக் காட்டியுள்ளனர். “யோகா, வேதாந்தம் ஆகியவற்றின் செல்வாகிற்கு ஆட்பட்டிருந்தது சுஃபி இயக்கம், புதன் – அல் – தின் கிருஷ்ணரைப் புகழ்ந்து பாடினார்… இத்தகைய நடைமுறைகள் முஸ்லிம்களால் தடுக்கப்பட்டவை…” என்பதாக சுஃபி இயக்கத்தை ஏதோ இந்துப் பாரம்பரியத்தின் கிளை போல இந்தப் பாடம் மாணவர் நெஞ்சில் உண்மைகளைத் திரிக்கிறது. இப்படியான திரிபுகளின் ஊடாக ஒரு மகத்தான இயக்கத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்கின்றனர் அறிஞர் பெருமக்கள்.

வரலாற்றறிஞர்கள், இடதுசாரிகள், காந்தியர்கள், மதச்சார்பற்றோர் இணைந்து வெளியிட்டுள்ள இவ் அறிக்கை வரவேற்கப்பட வேண்டிய ஒன்று,

2000 -ங்களின் தொடக்கத்தில், பா.ஜ.க தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இவ்வாறு வரலாற்றுப் பாட நூல்களில் திருத்தங்கள் மேற்கொண்டபோதும் இத்தகையோரே முன்னணியில் நின்று அதை முறியடித்தனர். தமிழகத்தில் அந்த இயக்கத்தில் திராவிட இயக்கத்தவரும் பங்குபெற்றனர். முன்னாள் துணைவேந்தர்கள் சாதிக், ஜெகதீசன், வசந்தி தேவி மற்றும் சி.பி.ஐ. சி.பி.எம், பெரியார் திராவிடர் கழகக் கட்சிப் பிரதிநிதிகள் அதில் பங்குபெற்றனர். தமிழகத்தின் பல பகுதிகளில் கூட்டங்கள் நடத்தினோம். அப்போது சென்னையில் வெளியிடபட்ட நூல்தான் இக் கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டது. தி.க தலைவர் வீரமணி, பேரா. ஜவாஹிருல்லாஹ், எஸ்ரா சற்குணம் அடிகளார், பீட்டர் அல்போன்ஸ், கல்லூரிப் பேராசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

டெல்லியிலிருந்து வந்திருந்த வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் அர்ஜுன் தேவ், “தமிழ்நாட்டில் வந்து பார்க்கும்போது இது குறித்து ஒரு பிரக்ஞையை ஏற்படுத்துவதிலும்,கருத்துருவாக்கும் முயற்சியிலும் செய்யபட்டுள்ள பணிகள் வியப்பை ஏற்படுத்துகின்றன.” என மனதாரப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது (இந்துத்துவத்தின் இருள்வெளிகள், பக். 106).

Tail Piece : ஓகோ..! துரோணர் இப்டிப் பொறந்தவர்தானா? அவர்தாங்க, நம்ம ஏகலைவன் கட்டை விரலைக் ‘கட்’ பண்ணவரு…

அப்பாவும் ஒரு கிறிஸ்தவப் பாதிரியாரும்

பாப்பாநாட்டில் ’சர்ச்’ கிடையாது. பத்து கி.மீ. தொலைவில் உள்ள ஒரத்தநாட்டுக்குத்தான் போக வேண்டும். அப்பா சர்ச்சுக்குப் போவது கிடையாது, அம்மா போவதைத் தடுப்பதும் கிடையாது.

மன்னார்குடிக்கு அருகில் உள்ள ஆதிச்சபுரம்தான் அம்மாவின் ஊர். அம்மா வீட்டில் நான் பிறந்தபோது (1949) மன்னார்குடி பங்கு கோவிலுக்கு என்னைப் பெயர் சூட்டத் தூக்கிச் சென்றுள்ளனர். திரு முழுக்கு அளிக்கும் நேரத்தில் மார்க்ஸ் எனும் பெயரை அப்பா சொல்ல அந்தப் பங்குசாமியார் (பெயர் தெரியவில்லை) அந்தப் பெயரை எல்லாம் சூட்ட முடியாது எனச் சொல்லி விட்டார். அப்படியானால் நான் இவனை எந்த மத அடையாளமும் இல்லாமலேயே வளர்த்துவிட்டுப் போகிறேன் எனஅப்பா என்னைத் தூக்கி வந்துள்ளார்.

என் அம்மா வழி தாத்தா குடும்பம் ரொம்பவும் பக்தி நிறைந்தது. ஊர்க்காரர்கள் போய்ப் பேசி பிறகு ஏதோ சமாதனம் ஆகி இந்தப் பெயரைச் சூட்டியுள்ளனர்.

#######

மார்க்ஸ் எனப் பெயர் வைப்பதில் சிக்கல் எழுந்தது நான் விவரம் அறியாதபோது நடந்தது. விவரம் அறிந்தபின்னும் இப்படி ஒரு நிகழ்ச்சி. சுமாரான மதிப்பெண்களுடன் 11ம் வகுப்பு (அன்றைய SSLC) பாஸ் பண்ணி இருந்தேன் (1963). பி.யூ.சி இல் சேர மூன்று கல்லூரிகளுக்கு விண்ணப்பித்திருந்தேன். முதலில் திருச்சி செய்ன்ட் ஜோசப் கல்லூரியிலிருந்து சேர்க்கைக் கடிதம் வந்திருந்தது.

கல்வித்துறையில் அனுமதிபெற்று குறை வயதில் (under age) தேர்வு எழுதியவன் நான். வகுப்பிலேயே நான்தான் சின்னப் பையனாக இருப்பேன். ஜோசப் கல்லூரி முதல்வர் ஒரு பாதிரியார். புன்னகைத்தவாறே என் சான்றிதழ்களைப் புரட்டியவர் திடீரெனக் கடு கடு ஆனார். “நீ ரோமன் கத்தோலிக்கன்தானே?” எனச் சீறினார். ஆம் என்று தலை அசைத்தேன். “இது என்ன பெயர்? மார்க்ஸ்,லெனின் என்றெல்லாம் எந்தச் சாமியார் உனக்குப் பெயர் வைத்தார்?” என்றெல்லாம் கடு கடு தொடர்ந்தது. அப்பா எரிச்சலானார். அவருக்கு ஒன்றும் செயின்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ப்பதில் பெரிய ஆர்வமில்லை. அம்மாவின் பிடிவாதத்தில்தான் வந்திருந்தார்.

நான் இடம் கிடைக்காமல் போய்விடுமோ எனப் பயந்து போனேன். என் கண்கள் கெஞ்சின. அப்பா அமைதியாக நின்றிருந்தார். “போ, ரெக்டாரைப் பார்த்து அனுமதிக் கடிதம் வாங்கி வா. அப்புறம் பணம் கட்டலாம்,”

ரெக்டார் அலுவலகத்திற்குப் போனோம். மாலை 4 மணிக்குத்தான் பார்க்கலாம் என்றார்கள். அப்பா என்கையைப் பற்றிக் கொண்டார். “போகலாம் வா” என்றார். நான் தயங்கினேன்.”அட வாடா” என்று இழுத்துச் சென்றார்.

வீட்டிற்குவந்தால் தஞ்சாவூர் சரபோஜி கல்லூரியிலிருந்து சேர்க்கைக் கடிதம் வந்திருந்தது. இன்றுநினைத்தாலும் இனிக்கும் ஒரு நான்காண்டு கால கல்லூரி வாழ்க்கை எனக்கு வாய்த்தது.

இதுநடந்து அரை நூற்றாண்டு ஆகி விட்டது. இப்போதெல்லாம் கிறிஸ்தவப் பாதிரிமார்கள் அப்படி இருப்பதில்லை. 1970 களில் உருவான கிறிஸ்தவ விடுதலை இறையியல் அவர்களில் பெரிய மாற்றங்களை இன்று ஏற்படுத்தியுள்ளதும் அதற்கொரு முக்கிய காரணமாக இருக்கலாம்..

##########

அப்பாவைச் சந்திக்கப் பலரும் வருவார்கள். பெரும்பாலும் கம்யூனிஸ்டுகள், அவர்களில் பலர் மலேசியாவில் அப்பாவுடன் இயக்கத்தில் இருந்தவர்கள்; ஓரிருவர் அப்பாவைப் போலவே நாடு கடத்தப்பட்டவர்கள். இன்னும்சிலர் உள்ளூர் கம்யூனிஸ்டுகள். அப்புறம் நிறைய திராவிட இயக்கத்தவரும் அப்பாவுக்கு நண்பர்கள்.

வீட்டில் பெரிதாக சாமி படங்கள் , ஜெபம் சொல்லுதல் எல்லாம் கிடையாது. அம்மா கிறிஸ்துமஸ் முதலான தினங்களில் ஒரத்தநாடு சர்ச்சுக்குப் போவாங்க. அருகில் உள்ள வீரக் குறிச்சி அந்தோனியார் கோவிலுக்கும் அவ்வப்போது போய் வருவதுண்டு. நானும் தம்பி தங்கைகளும் கிறிஸ்துமஸ் போன்றநாட்களில் அம்மாவுடன் போய் வருவோம்.

பாப்பாநாடு எங்களின் பூர்வீகக் கிராமம் கிடையாது. அங்கு கிறிஸ்தவக் குடும்பங்களும் அதிகமில்லை.எனது பழக்கங்கள் யாவும் இந்து மற்றும் முஸ்லிம் நண்பர்களுடன்தான். கடவுள் பக்தி எனக்கு இருந்ததில்லை. கடவுள் வெறுப்பும் இருந்தது கிடையாது. கடவுள் இருந்தா நல்லது; இல்லாவிட்டால் அதைவிட நல்லது என்கிற ரீதியில் வளர்ந்தேன்.

#############

அப்பா மலேசியாவிலிருந்து தப்பி வந்தபின் அவரை நாடு கடத்தியதாக அன்றைய மலேசிய பிரிட்டிஷ் அரசு அறிவித்ததை நான் பலமுறை குறிப்பிட்டுள்ளேன். அப்பா இங்கு வந்தபின்தான் திருமணமாகி நான் பிறந்தது.

அப்பா வந்த சில மாதங்களுக்குப் பின் அப்பாவுடன் இயக்கத்தில் இருந்த சுப்பையாவை நாடு கடத்தினார்கள். அந்தக் கதையை நான் ஒரு மலேசிய இதழில் விரிவாக எழுதியுள்ளேன். இரண்டு தலைமுறைகளுக்கு முன் திண்டுக்கல் மணப்பாரைப் பகுதியிலிருந்து கூலியாய்ச் சென்ற தலித் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் சுப்பையா. அவர் தம்பி முத்துச்சாமி. சின்ன வயதில் தாயை இழந்தவர்கள். அவர்களின் அப்பா பழனியாண்டி நோய்வாய்ப்பட்டு இறந்த பின், அப்போது மலேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் மிகவும் செல்வாக்குடன் இருந்த அப்பாவின் வளர்ப்புப் பிள்ளைகள் ஆயினர். பிள்ளைகள் எனச் சொல்கிறேனே ஒழிய அப்பவுக்கும் சுப்பையா அண்ணனுக்கும் வயது வித்தியாசம் ஒரு பத்துஅல்லது பன்னிரண்டு இருக்கலாம். அவ்வளவுதான்.

சுப்பையா நாடு கடத்தப்பட்டு வந்த சிறிது காலத்தில் முத்துச்சாமியும் இங்கு வந்துவிட்டார். மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்தவர்கள். இந்த நாட்டில் அவர்களுக்கு யாரும் கிடையாது. அப்பாவே பெரும் வறுமையில் இருந்தபோதும் அவர்களையும் தன் குடும்பத்தோடு வைத்துக் கொண்டார்.

சுப்பையா அண்ணனுக்குத் திருமணம் செய்ய முயற்சித்தார் அப்பா. யாரும் பெண் கொடுக்கத் தயாராக இல்லை.எனக்கு அக்கா முறையுள்ள ஒருவர். பெயர் மேரி அந்தோணியம்மாள். யாரும் இல்லாதவர். ஒருஉறவினர் வீட்டுக்கு வந்திருந்தார், அப்பா சுப்பையாவை அழைத்துச் சென்று அவர் முன் நிறுத்தி, “பிடித்திருக்கிறதா?” என்று கேட்டார். அவர் சம்மதித்தவுடன் உள்ளூர் தி.மு.கதலைவர் துரைஅரசன் என்பவர் தலைமையில் அவர்களுக்குக் குத்தகைக்காடு எனும் கிராமத்தில்திருமணம் நடைபெற்றது. அப்போது எனக்கு வயது ஏழு அல்லது எட்டு இருக்கலாம். சுப்பைய்யாவை அண்ணன் என்றும் மேரியை அக்கா என்றும் அழைப்பேன். பின்னாளில் பள்ளிக்கூடம் சென்றபின் இந்த உறவு முறையைச் சுட்டிக்காட்டிக் கூடப் படிக்கும் பசங்கள் சிரிப்பார்கள்.

முத்தண்ணனுக்கு அவ்வளவு எளிதாகத் திருமணம் செய்துவிட இயலவில்லை. உறவுப் பெண் ஒருவர். பெயர் வியாகூல மேரி. ஏழைக் குடும்பம். எனினும் சாதி தெரியாத பையனுக்குப் பெண் கொடுக்க அவர்கள் தயாராக இல்லை. பல நாள் பேச்சு வார்த்தைகள் நடந்தன. முத்துச்சாமி பஞ்சாயத்து போர்டு கிளார்க். தபால் துறையில் ஈ.டி ஊழியர் வேறு. எல்லாவற்றையும் யோசித்து இறுதியில் பெண் வீட்டார் ஏற்றுக் கொண்டார்கள். கிறிஸ்தவராக மதம் மாற்றித் திருமணம்செய்ய வேண்டும் என்கிற நிபந்தனையை அப்பா ஏற்றுக் கொண்டார்.

லாரன்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு முத்தண்ணனுக்கு சர்ச்சில் முறைப்படி திருமணம் நடைபெற்றது.

அப்போது ஒரத்தநாடு பங்குத் தந்தையாக இருந்தவர் தான் ஃபாதர் சில்வேயிரா. கருணை கசியும் கண்கள், புன்னகை தவழும் முகம், மிக எளிமையான தோற்றம், தலையில் ஒரு சட்டித் தொப்பி ஆகியவற்றுடன் இன்னும் என் நினைவில் நிற்கிறார். நீண்ட வெள்ளை அங்கி தரிக்காமல் அவரை நான் பார்த்ததாக நினைவில்லை.

முத்துச்சாமி பற்றி அவர் விசாரித்தபொழுது அவருக்கு ஒரு அண்ணன் இருப்பது, அவருக்கு ஒரு கிறிஸ்தவப்பெண்ணை அப்பா திருமணம் செய்து வைத்திருப்பது எல்லாவற்றையும் விசாரித்துத் தெரிந்துகொண்டார்.

#########

ஒருநாள் ஃபாதர் சில்வேயிரா என் வீட்டிற்கு வந்தார். அப்பா அவருக்குத் தேநீர் கொடுத்து உபசரித்தார். அம்மாவுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். அவர் முன் முழந்தாள் இட்டுச் சிலுவை வாங்கிக்கொண்டார். என்னை அழைத்த பாதிரியார் முதுகில் தட்டிக் கொடுத்து வாழ்த்தினார், பின் மெதுவாகத்தான் வந்த நோக்கத்தை அவிழ்க்கத் தொடங்கினார்.

இப்படிஒரு கிறிஸ்தவப் பெண்ணை ஒரு இந்துப் பையனுக்குத் திருணம் செய்வித்து அவள் மீது கிறிஸ்துவின்மீது நம்பிக்கையற்ற ஒரு வாழ்க்கையைச் சுமத்தி இருப்பது நியாயமில்லை என்றார்.

“ஃபாதர், உங்களுக்குத் தெரியும். நானே சர்ச்சுக்கெல்லாம் போகாதவன். இந்த நம்பிக்கை எல்லாம் எனக்கே கிடையாது” – என அப்பா தொடங்கியவுடன்,

“எனக்கு அதெல்லாம் தெரியும். உங்கள் நம்பிக்கையைப் பற்றி நான் பேச வரவில்லை. நம்பிக்கை உள்ளஒரு பெண்ணை, அவளுக்கு யாருமில்லை என்பதற்காக இப்படிச் செய்திருப்பதைத்தான் கேட்க வந்தேன்.”

“அவர்களுடைய நம்பிக்கையில் நான் தலையிட விரும்பவில்லை. இப்ப என்ன செய்வது? அவங்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கு. அடுத்த குழந்தையும் பிறக்கப் போகுது. என்ன செய்ய முடியும்?”

“அதை நான் பாத்துக்கறேன். அவங்க ரண்டு பேர்கிட்டையும் நான் பேசுறேன். உங்க முன்னாடியே கேட்கிறேன்.அவங்க சம்மதிச்சா அவங்களுக்கு ஞானஸ்நானம் பண்னி மறுபடியும் சர்ச்சில் திருமணம் செஞ்சு வைக்கிறேன்” என்றார் ஃபாதர்.

எல்லாவற்றையும்கேட்டுக் கொண்டு உள்ளே சோடா சுற்றிக் கொண்டிருந்த அண்ணனை அப்பா அழைத்தார். தம்பி முத்துச்சாமி, லாரன்ஸ் முத்துச்சாமி ஆகி, கிறிஸ்தவ நாடார் சமூகத்தில் ஓர் அங்கமாகி உறவு முறைகளைப்பேணி வருவதைக் கவனித்து வந்த அண்ணன் சுப்பையா அருட் தந்தை சில்வேயிராவின் கருத்தை ஏற்றுக்கொண்டார்.

மலேசியக் காடொன்றில் ஒரு சீனப் பெண் போராளியுடன் மறைந்திருந்தபோது பிரிட்டிஷ் படைகளால் சுற்றிவளைக்கப்பட்டுப் பிடிபட்டவர் அண்ணன் சுப்பையா. அந்தப் பெண் துப்பாக்கிக் குண்டடி பட்டுவீழ்ந்தவுடன், “இந்தோ தொங்சி (இந்தியத் தோழனே), நீ ஓடிப்போ. பிழைத்துக் கொள். ஓடும்போது உன் துப்பாக்கியை சேற்றில் புதைத்துவிட்டு ஓட மறவாதே…” என அவள் சொல்லியதையும், அன்ணன் திரும்பித் திரும்பிச் சொல்வார். ஓடிப் பிடிபட்டதையும், பல மாதச் சித்திரவதைகளுக்குப் பின், பிடிபட்ட தருணத்தில் கையில் ஆயுதங்கள் ஏதும் இல்லை என்பதால் உயிர்ப் பிச்சை அளிக்கப்பட்டுத் தான் நாடுகடத்தப்பட்டதையும் அண்ணன் நிலவொளியில் மணல் மேட்டில் அமர்ந்து சொன்னதைப் பலமுறை கேட்டவன் நான்.

அதைத் திருப்பித் திருப்பிக் கேட்க எனக்கும் அலுக்காது. சொல்ல அவருக்கும் அலுக்காது.

பகுத்தறிவுச் சிந்தனைகள், மார்க்சீய நூல்கள் ஆகியவற்றில் எனக்கு ஈடுபாடுகளை ஏற்படுத்தியவர் அண்ணன் சுப்பையாதான், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களை உரத்த குரலில் பாடுவார். 12 கிமீ சைக்கிள் மிதித்து இரவு இரண்டாம் ஆட்டம் ‘இரும்புத்திரை’ திரைப்படத்திற்கு என்னை அவர் அழைத்துச் சென்றதும் திரும்பி வரும் வழி எல்லாம் “மனிதரை மனிதர் சரி நிகர் சமமாய் மதித்திடல் நம் கடமை…”, “கையில வாங்கினேன் பையில போடல, காசு போன இடம் தெரியல..” என உரத்த குரலில் அவர் பாடி வந்ததும் இன்னும் என் காதுகளில் ஒலிக்கின்றன. வீரக்குறிச்சிக்கும் கரம்பயத்திற்கும் இடையில் ஒரு சிறு காட்டாற்றுப் பாலம் இருக்கும். அதன் மீது அந்த நள்ளிரவில் அண்ணன் அனாயசமாகப் பாடிச் செல்ல, நான் சைக்கிள் கேரியரில்அண்ணனின் இடுப்பைப் பற்றிக் கொண்டு இதோ போய்க் கொண்டிருக்கிறேன்…..

##############

அண்ணனுக்கு அன்று மேல் எழுந்து கொண்டிருந்த தி.மு.க வையும் அண்ணா வையும் சுத்தமாகப் பிடிக்காது. எனக்கும் அவர் மூலமாக அந்த வெறுப்பு தொற்றிக் கொண்டது.

“இந்தத்திண்ணைத் தூங்கிப் பேர்வழிகளிடம் ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி….

கடவுள்இருப்பதும் இல்லை என்பதும் கவைக்கு உதவாத வெறும் பேச்சு….”

என்றெல்லாம் உரக்கப் பாடும் அண்ணன் சுப்பையா அன்று அந்த முடிவு எடுத்ததை நான் இப்போது புரிந்துகொள்கிறேன்.

############

ஒரத்தநாடு மாதா கோவிலில் எட்டுமாத கர்ப்பிணியான மேரி அந்தோணியம்மாளுக்கும், வின்சென்டாகப் பெயர் மாற்றித் திரு முழுக்கு அளிக்கப்பட்ட அண்ணன் சுப்பையாவுக்கும் மீண்டும் ஒருமுறை திருமணம்செய்வித்தார் ஃபாதர் சில்வேயிரா. ஸ்டெல்லா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுத் திருமுழுக்குஅளிக்கப்பட்ட அவர்களின் முதல் மகள் என் அம்மாவின் கைகளைப் பற்றிக்கொண்டு நின்றிருந்தாள். அம்மாவும் எனது தங்கைகளும் நானும் அருகில் நின்றிருந்தோம். வேறு யாருக்கும் அழைப்பில்லை.

“இறைவனால் இணைக்கப் பட்டவர்களை மனிதர்கள் பிரிக்காதிருப்பார்களாக..” என்று கூறி அருட் தந்தை சில்வேயிரா மணமக்கள் மீது புனித நீரைத் தெளித்தபோது தான் பிரியமுடன் நேசித்த தன் வளர்ப்பு மகனுக்கு ஆசி கூற அப்பா அங்கில்லை.