(ஆகஸ்ட் 2013 ல் எல்லையில் ஐந்து இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டபோது எழுதியது)
ஒரு போர் தேவை என்கிற குரல்தான் இப்போது உரத்து ஒலிக்கிறது. அப்படியான ஒரு கருத்தை உருவாக்குவதற்குத்தான் நமது ஊடகங்களும் துணை நிற்கின்றன. தொலைக்காட்சி விவாதகங்களிலும் இத்தகைய குரல்களுக்குத்தான் அதிக இடம் அளிக்கப்படுகின்றன. இது தேர்தல் நேரம் வேறு. பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.கவைப் பொருத்தமட்டில் பாகிஸ்தானையும் சீனாவையும் உடனடி எதிரிகளாகக் கட்டமைப்பது என்பது அதன் அரசியல் நிகழ்ச்சி நிரலில் ஒன்று. அதிலும் முஸ்லிம் நாடான பாகிஸ்தானுடன் ஒரு யுத்தத்தை நடத்திப் பணிய வைப்பதென்பது அதன் உள்நாட்டு அரசியல் நோக்கத்திற்கு உகந்த ஒன்று என்பதை விளக்க வேண்டியதில்லை.
ஆளும் கட்சியான காங்கிரசைப் பொருத்தமட்டில், அதற்கு ஊழல், பொருளாதார நெருக்கடி, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி என ஏகப்பட்ட பிரச்சினைகள். இந்தச் சூழ்நிலையில், இத்தகைய போர் வெறிப் பேச்சுக்கள் அதற்கும் கூட இவற்றிலிருந்து கவனத்தைத் திருப்ப உதவியாக இருக்கிறது. இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி பாகிஸ்தானைக் கடுமையாக எச்சரித்துள்ளார். எங்களின் பொறுமையைத் தவறாக எடை போட்டுவிடாதீர்கள் எனக் கூவியுள்ளவர், எல்லையோர அத்துமீறல்களுக்கு உடனடியாக எதிர்வினைகள் புரிய இராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்திய இராணுவத் தளபதி விக்ரம் சிங், பிரதமரைச் சந்தித்து எல்லைப் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அமெரிக்காவில் நடக்க உள்ள ஐ.நா பொது அவைக் கூட்டத்தின்போது மன்மோகனும் நவாஸ் ஷெரீஃபும் சந்தித்துப் பேச உள்ள ‘சம்மிட்’ நடைபெறுமா என்பது இப்போது கேள்விக் குறியாக இருக்கிறது.
ஆகஸ்ட் 6 அன்று இந்திய வீரர்கள் ஐவர் கொல்லப்பட்டதற்குப் பின் இந்த எல்லையோர மோதல்களில் பாகிஸ்தான் வீரர்கள், ஒரு கேப்டன் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளனர். இதை ஒட்டி நேற்று பாகிஸ்தானிலுள்ள இந்தியத் தூதுவரை அழைத்து, அதன் அயலுறவுச் செயலர் இந்தக் கொலைகளைக் கண்டித்துள்ளார். பாக் தேசிய அசெம்பிளியில் கண்டனத் தீர்மானமும் இயற்றப்பட்டுள்ளது. எனினும் ஆக்கபூர்வமான முறையில் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை என்பதும் தீர்மானத்தில் ஓரங்கமாக உள்ளது.
மன்மோகன் அரசின் நிலைபாடு என்பதுங்கூட பாக் அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது என்பதாகவே இதுவரை இருந்தபோதிலும் இன்றுள்ள அரசியல் சூழலில் இதை அவர்கள் வெளிப்படையாகப் பேச இயலாதுள்ளது. இந்திய வீரர்கள் ஐவர் எல்லையில் கொல்லப்பட்ட அன்று பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி, “பாக் ‘இராணுவ உடையில்’ வந்த சுமார் 20 பேர்கள் சுட்டதில் 5 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டார்கள்” என்று அறிவித்தது பா.ஜ.கவினால் மட்டுமின்றி இந்திய ஊடகங்கள் பலவற்றாலும் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தாக்கிக் கொன்றவர்கள் பாக் இராணுவ வீரர்கள்தான் என அடுத்த நாள் அழுத்தம் திருத்தமாக அவர் அவசர அவசரமாக அறிவிக்க வேண்டியதாயிற்று.
உண்மையில் அவர் முதலில் வெளியிட்ட அறிக்கைதான் எதார்த்தமானது மட்டுமல்ல, ராஜதந்திர ரீதியில் சரியானதுங்கூட. பாக் அரசியலைப் புரிந்தவர்களுக்குத் தெரியும், பாக் இராணுவம், இந்திய இராணுவத்தைப் போல அமைச்சரவைக்கு முழுமையாகக் கட்டுப்பட்ட ஒன்று அல்ல. இந்தத் தாக்குதல் பாக் இராணுவ வீரர்களாலேயே நடத்தப்பட்டிருந்தாலுங் கூட அது நவாஸ் ஷெரீஃப் அரசின் ஒப்புதலுடன் நடந்ததாகக் கொள்ள இயலாது. பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அண்டை நாடுகளுடன் நல்லுறவை விரும்புகிற செய்தி எல்லோரும் அறிந்த உண்மை. ஆனால் பாக் இராணுவத்திற்கு அந்த எண்ணம் கிடையாது. எனவே ஷெரீஃபின் திட்டத்தை முறியடிக்க இராணுவம் தன்னிச்சையாகச் செய்திருக்கலாம் என்கிற வாய்ப்பும் உண்டு. பாக் அரசியலில் இதெல்லாம் சகஜம். ஆனால் பாக் இராணுவமே கூட இன்று இந்தியாவுடன் ஒரு தீவிரமான போரை விரும்புகிறதா என உறுதியாகச் சொல்லிவிட இயலாது. ஏனெனில் பாக் மண்ணை வேராகக் கொண்டு உருவாகியுள்ள பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவிற்கு மட்டுமல்ல, பாக்கின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்குமே பெரிய சவாலாக உள்ளது. பழங்குடிப் பகுதியில் ‘டெஹ்ரீக்-ஏ-தாலிபான் –ஏ- பாகிஸ்தான்’ அமைப்புடன் பாக் நடத்தும் போரில் அது மிகப் பெரிய இழப்புகளைச் சந்தித்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாக் இராணுவத்திற்கு தோல்விதான்.
பாக் இராணுவத்திற்குள்ளேயே தீவிரவாதிகளுக்கு ஆதரவும் உள்ளது. தீவிர இயக்கங்களின் நோக்கங்களின் மீது ஒரு பகுதியினருக்கு மரியாதையும் உள்ளது. எனவே இராணுவத் தலைமையின் ஒப்புதல் இல்லாமல் இராணுவத்தின் அப்பகுதியினரின் சாகசங்களில் ஒன்றாகவும் இது நடந்திருக்கலாம், அல்லது பாக் இராணுவத்தின் மறைமுகமான ஆதரவுடன் தீவிரவாதிகளும் இதைச் செய்திருக்கலாம்.
இத்தனை சாத்தியக் கூறுகளும் உள்ள நிலையில் அந்தோணியின் தொடக்க அறிவிப்பு எத்தனை எதார்த்தமான ஒன்று என்பதை யாரும் புரிந்து கொள்ள இயலும். நவாஸ் ஷெரீஃப் அரசின் முழுமையான ஒப்புதலுடன் பாக் இராணுவம் இந்தத் தாக்குதலை நடத்தி இருந்தால் பேச்சுவார்த்தையை முறித்துக் கொள்வது உட்பட பாக் அரசுடன் நேரடி மோதல் என்கிற ஒரு அணுகல் முறையை மேற்கொள்வது ஒருவேளை சரியாக இருந்திருக்கலாம். ஆனால் அத்தகைய சாத்தியம் இல்லை என்பதுதான் பாக் அரசியலை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுள்ள எல்லோருடைய கருத்தும். ஐந்து இந்திய வீரர்கள் கொல்லப்பட்டது வெளியானவுடன் ஷெரீஃப் அதிர்ச்சியும் வருத்தமும் தெரிவித்த செய்தி பத்திரிக்கைகளை வந்தது. பிரதமரான பிறகு நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சியில் அவர் விடுத்த செய்தியிலுங் கூட இந்தப் பிரச்சினையின் அடிப்படையில் இந்தியாவுடனான உறவுகளை முறித்துக்கொள்ளும் அளவிற்கான பேச்சுக்களைத் தவிர்க்குமாறு அவர் கூறியதும் கவனிக்கத் தக்கது.
இந்தியாவுடன் ஷெரீஃப் முயற்சிக்கும் சுமுகமான உறவை முறிக்கும் நோக்குடன்தான் பாக் இராணுவம் இந்தத் தாக்குதலை மேற்கொண்டது என்றால், இதை ஒட்டி நாம் பேச்சு வார்த்தையை முறித்துக் கொள்வது என முடிவெடுப்பது பாக் இராணுவத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதாகிவிடும் என்பதை நாம் மறந்துவிடலாகாது. பதிலாக எல்லை ஓரத்தில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் அதே நேரத்தில் பாக் அரசுடன் பேச்சு வார்த்தையைத் தொடர்வதுமே பாக் இராணுவத்தின் நோக்கத்தை முறியடித்து அதைத் தனிமைப் படுத்த உதவும். இந்தியாவுடன் சுமுக உறவைப் பேண வேண்டும் என எண்ணுகிறவர்களே பாகிஸ்தானில் அதிகம் உள்ளனர் என்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
பாக் இராணுவத்தின் ஒரு பிரிவு தன்னிச்சையாகவோ, இல்லை பாக் இராணுவத்தின் உதவியுடன் தீவிரவாதிகளோ இந்தத் தாக்குதலை நடத்தி இருந்தாலும் கூட உடனடி மோதல் என்பது நிச்சயம் இந்தியாவிற்குச் சாதகமாக இருக்காது. எல்லையில் நடைபெறும் போர் தீவிரவாதிகள் எளிதில் இந்திய எல்லைக்குள் ஊடுருவுவதற்கே உதவும்.
தவிரவும், இராணுவ ரீதியில் எல்லா அம்சங்களிலும் நாம் பாக்கை விட வலிமையாக உள்ளோம் என்கிற நிலை பாக் அணு குண்டு வெடித்த அன்றோடு முடிவுற்று விட்டது. இன்று இரண்டுமே அணு வல்லமை உள்ள நாடுகள். 2001- 02 காலகட்டத்தில் இந்தியப் பாராளுமன்றத்தின் மீதான தாக்குதலை ஒட்டி ‘ஆப்ரேஷன் பராக்கிரம்’ என்ற பெயரில் இந்தியா தாக்குதலை நடத்தியபோது இந்தியத் தரப்பில் 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் அதே நேரத்தில் இந்தியா மீதான பயங்கரவாதத் தாக்குதல்கள் குறையவும் இல்லை. கிஷ்ட்வார் (2001), ரகுநாத் ஆலயம் (2002), நந்திமார்க் (2003) முதலான தாக்குதல்களை எல்லாம் நாம் முறியடித்துவிட இயலவில்லை. வாஜ்பேயி – முஷாரஃப் பேச்சுவார்த்தையை ஒட்டி 2003க்குப் பின் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்தத்திற்குப் பின்புதான் எல்லையில் இவ்வாறு அவ்வப்போது தாக்குதலில் இரு தரப்பிலும் வீரர்கள் கொல்லப்படுவது குறைந்தது.
2000த்தில் இது போன்ற எல்லையோரத் தாக்குதல்களில் இந்தியத் தரப்பில் 114 வீரர்களும் 36 சிவிலியன்களும் கொல்லப்பட்டனர். 2001ல் இது 37 வீரர்கள் 17 சிவிலியன்களாக இருந்தது. 2002ல் கொல்லப்பட்ட இந்திய வீரர்கள் 81, சிவிலியன்கள் 74. 2003ல் இது 29 வீரர்கள் 38 சிவிலியன்கள். போர் நிறுத்தத்திகுப் பின் இந்த எண்ணிக்கை சுழியாகியது.
எல்லைப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகள் ஏற்படாதவரை இதுபோன்று எல்லையில் படைகள் ஒன்றையொன்று சுட்டுக் கொள்வது என்பது நடந்து கொண்டுதான் இருக்கும். உண்மையில் “எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை” ஒடுக்குவதற்காக எல்லை ஓரங்களில் சுடுவது என்பதை இந்தியாவே தொடங்கியது என்பதையும் நாம் கவனிக்கத் தவறலாகாது,
இன்று பாகிஸ்தானுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் எனப் படு தீவிரமாகப் பா.ஜ.க பேசி வந்தபோதும் அது ஆட்சியில் இருந்தபோது இந்த விஷயத்தில் ஓரளவு பொறுப்பாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். 2001 பாராளுமன்றத் தாக்குதலை ஒட்டி பாக் மீது போர் தொடுக்க வேண்டும் என்கிற கருத்துக்களை முறியடிக்கத் தான் எத்தகைய முயற்சிகளெல்லாம் செய்ய வேண்டி இருந்தது என்பது குறித்து அன்றைய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் தனது நூலில் குறிப்பிடுகிறார். அதேபோல இந்திய பாக் உறவில் வாஜ்பேயி – முஷாரஃப் பேச்சுவார்த்தையும், அதன் விளைவான போர்நிறுத்தமும் இந்திய பாக் உறவில் ஒரு மைல் கல் எனலாம்.
சென்ற ஆகஸ்ட் 4 அன்று பாக் உடனான பேசுவார்த்தையை உடனே நிறுத்த வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு மற்றும் அயலுறவுத் துறை சார்ந்த சுமார் நாற்பது உயரதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். தேர்தலுக்குப் பின் ஒருவேளை பா.ஜ.க தலைமையில் கூட்டணி அரசு அமைந்தால் அதில் தமக்கு ஒரு பதவி என்பதைக் காட்டிலும் வேறு எந்த நல்ல நோக்கத்தையும் இந்த அறிக்கை கொண்டிருக்கவில்லை.
அதே நேரத்தில் ஆகஸ்ட் 12 அன்று “அமைதிக்கான இந்திய பாகிஸ்தான் படைவீரர்களின் முன்முயற்சி” (Indo Pak Soldiers Peace Initiative) என்கிற அமைப்பின் இந்தியக் கிளை வெளியிட்ட அறிக்கை இதற்கு முற்றிலும் மாறாக இருந்தது. ஐந்து இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதை வன்மையாகக் கண்டித்த இவர்கள், மோதல் என்பது பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது, பேச்சுவார்த்தைகள் ஒன்றே இன்றைய தேவை எனக் குரல் எழுப்பினர். “இரு நாடுகளிலும் உள்ள மக்கள் அதிகாரம் பெறுவதற்கும், வளம் பெறுவதற்கும் அமைதி ஒன்றே வழி” என அந்த அறிக்கையில் முன்னாள் படை வீரர்கள் முழங்கினர்,
மக்கள் நலனை முன்நிறுத்துபவர்கள் பேச்சு வார்த்தைக்கு முன்னுரிமை அளிப்பதும், சொந்த மற்றும் அரசியல் நலன் சார்ந்து பேசுவோர் பேச்சு வார்த்தைகள் கூடது எனச் சொல்வதும் புரிந்து கொள்ளக் கூடியதுதான்.
சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியின் நாட்டியத் துறை சார்பாக நடத்தப்பட்ட பரத நாட்டியம் தொடர்பான ஒரு சர்ச்சையை பத்திரிக்கையாளர் கவின்மலரின் பக்கத்தில் பார்த்தேன். Devadasi System and Bharatha Natyam என்கிற தலைப்பில் அக் கல்லூரியின் நாட்டியத் துறையில் ஒரு உரை நிகழ இருப்பதாக வந்த அறிவிப்பைப் பார்த்துவிட்டு முதலில் பேரா. சரஸ்வதி தொலை பேசியிலும் பின்னர் சரஸ்வதி, பெண்ணியச் சிந்தனையாளர் ஓவியா, வழக்குரைஞர் அஜிதா, கவின்மலர் ஆகியோர் நேரிலும் சென்று கல்லூரி முதல்வரிடம் பேசியுள்ளனர். “தேவதாசி முறை ஒழிக்கப்பட்டுவிட்டது. இந்நிகழ்வு அதை மீண்டும் மாணவர்களிடையே நியாயப்படுத்துவதாக அமைந்துவிடுமோ என்கிற அச்சத்தை” அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அவ் உரை ரத்து செய்யப்பட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.
தொலைபேசியில் கூறியதை ஒட்டி ‘Evolution of Bharathanatiyam’ என்பதாக உரைத் தலைப்பு மாற்றப்பட்டுவிட்டதாகவும், ‘’இது கலை சார்ந்த நிகழ்வாக இருக்கும். சொர்ணமால்யாதான் பேசுகிறார்’’ என்றும் கல்லூரி தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
நிகழ்வின்போது இவர்களும் சென்று உரையைக் கேட்டுள்ளனர். உரைத் தலைப்பு அதுவாக இருந்தபோதிலும் சொர்ணமாலாவின் பவர் பாயின்ட் ஸ்லைட் தலைப்பு ‘Devadasis – Wives of God’ என்பதாகாக இருந்துள்ளது. மாலா என்ன பேசினார் என்பது முழுமையாகத் தெரியவில்லை. கவின்மலரின் பதிவிலிருந்து அவர் தேவதாசி முறையைப் போற்றிப் பேசினார் என்றும் தேவதாசியரால் வளர்க்கப்பட்ட ‘சதிரில்’ இருந்தே பரதம் தோன்றியதாகவும் அவர் பேசியதாகத் தெரிகிறது. தேவதாசி சாதி உருவானது, முத்து லட்சுமி ரெட்டி போன்றோர் அதை ஒழித்தது முதலியன குறித்தும் அவர் சில தவறான கருத்துக்களை முன் வைத்ததாகவும் அதற்கு ஓவியா முதலானோர் அங்கேயே எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் அறிகிறேன்.
தேவதாசிமுறை ஒழிப்பு, அதில் முதுலட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிர்தம் ஆகியோரின் பங்கு, சத்தியமூர்த்தியின் சட்டமன்றப் பேச்சுக்கள் ஆகியவை குறித்துத் தமிழில் அதிகம் எழுதியுள்ளவர்களில் நானும் ஒருவன்.
தேவதாசி முறை குறித்து நாம் சிலவற்றை நுணுக்கமாகப் புரிந்து கொள்வது அவசியம்:
1.பரத்தமை, பொதுமகளிர், வரைவின் மகளிர், பிற்காலத்திய தேவதாசியர் ஆகியோருக்கிடையே உள்ள நுணுக்கமான வேறுபாடுகள் முக்கியம். சோழர் காலத்தில் கோவில்கள் என்கிற நிறுவனம் அரசதிகாரத்தின் பிரிக்க இயலாத ஓரங்கமாக மாறியபோது தேவதாசிமுறை கோவில் நிர்வாகத்தின் பகுதியாக நிறுவனமயப்படுத்தபட்டது. தளிச்சேரிப் பெண்டுகள் முதலான பெயர்களில் தேவதாசியர் அழைக்கப்பட்டனர். ராஜராஜ சோழன் தஞ்சையில் கட்டிய பெருவுடையார் கோவிலுக்கென நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஓலை அனுப்பிக் கட்டாயமாக 400 பெண்களைக் கொணர்ந்து அவர்களைத் தேவதாசியராக்கிய வரலாற்றை நாம் அறிவோம்.
2.இவர்கள் பல்வேறு சாதிகளிலிருந்து வந்தபோதும் பின்னாளில் இவர்களே ஒரு சாதியாயினர். தமிழகச் சாதிகள் பலவும் காலப்போக்கில் இப்படியெல்லாம் உருவானவைதானே. பிற மொழிக் கலப்பு உட்பட எல்லாச் சாதிகளிலும் ஏற்பட்ட மாற்றங்கள் இதிலும் நிகழ்ந்தன. ‘சின்னமேளம்’, ‘பெரியமேளம்’ முதலான பிரிவுகளும் உருவாயின. முதலியார், பிள்ளை முதலான பட்டப் பெயர்களையும் இவர்களும் பயன்படுத்திக் கொண்டனர். பின்னாளில் இவர்கள் அனைவரும் நவீன அரசுப் பதிவுகளில் இசை வேளாளராகக் குறிக்கப்பட்டனர்.
3.மத்திய காலத்தில் ஏற்பட்ட வேலைப் பிரிவினைகளின் ஊடாக சிலப்பதிகாரக் காலம் தொடங்கி வளர்ந்து வந்த தமிழின் வளமான இசை மற்றும் நாட்டியப் பாரம்பரியத்திற்கு உரியவர்களாக இவர்கள் ஆயினர். காலங்காலமாக இவற்றைக் கையளித்துக் காப்பாற்றிய பெருமை இவர்களுக்குண்டு. தஞ்சை நால்வர், பாலசரஸ்வதி தேவி, வீணை தனம்மாள், எம்.எஸ்.சுப்புலட்சுமி எ னப் பலரையும் சொல்லலாம்.
4.பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட நமது சமூகத்தில், கல்வி கற்கும் வாய்ப்புப் பெற்றவர்களாகவும் தேவரடியார்களே இருந்தனர். அச்சுக் கோர்ப்பு முறையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய சீகன்பால்கு அக்காலக் கல்வி முறையின் பாடத்திட்டங்கள் குறித்துச் சேகரித்துள்ள தகவல்கள் இதற்குச் சான்று (சீகன்பால்கு குறித்த எனது நூலில் இதைக் காணலாம்). முத்துப்பழனி, புட்டலக்ஷ்மி நாகரத்தினம்மாள் முதலியோர் சில எடுத்துக்காட்டுகள்.
5.இத்தனைக்கும் மத்தியில் தேவதாசிப் பெண்களின் வாழ்க்கை மிக அவலமான ஒன்று.
கட்டாயமாகப் பொட்டுக்கட்டப்பட்டு கோவில் சேவகத்திற்கு விடப்படும் இவர்களுக்குக் குடும்ப வாழ்க்கை மறுக்கப்பட்டது. குடும்ப வாழ்க்கை மறுக்கப்பட்டால் என்ன வந்துவிடப் போகிறது என இதை ஒதுக்க இயலாது. ஏனெனில் இது அவர்களின் சுதந்திரமான தேர்வு அல்ல. கட்டயமாகத் திணிக்கப்பட்ட ஒன்று. இவர்கள் கோவிற் பூசகர்கள், நிர்வாகிகள், ஊர்ப் பெரியமனிதர்கள் ஆகியோரின இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான பண்டங்களாகப் பயன்படுத்தப்பட்டதோடன்றி, இவர்களின் முதுமைக் காலம் ம்கவும் அவலத்துக்குரிய ஒன்றாக அமைந்தது.
காலங்காலமாக இப்படிப் பாலியல் சுரண்டல்களுக்க்கு ஆட்பட்டு வந்த இச் சமூகம் சென்ற நூற்றாண்டில் இப் பொட்டுக்கட்டும் அவலத்திலிருந்து விடுபட்ட வரலாற்றையும், அதில் முத்துலட்சுமி, ராமாமிர்தம் ஆகியோரின் பங்கையும், திராவிட இயக்கம் இதில் முன் நின்றதையும், சத்தியமூர்த்தி முதலானோர் இந்தியப் பாரம்பரியம் என்கிற வகையில் தெவதாசி முறையை ஆதரித்துப் பேசிய வரலாற்றையும், காக்க முயன்று தோற்ற கதையையும் நாம் அறிவோம். என் கட்டுரைகள் பலவற்றில் இதை விரிவாகப் பேசியுள்ளேன். ஆங்கிலத்தில் ஆனந்தி முதலானோர் இதை விரிவாக எழுதியுள்ளனர். திராவிட இயக்கம் தவிர காந்தியடிகளும் முத்துலட்சுமி ரெட்டிக்கு ஆதரவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகச் சுற்றுப்பயணம் ஒன்றில் அவர் அத்தனை கூட்டங்களிலும் தேவதாசிமுறை ஒழிப்பை ஆதரித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது (பார்க்க: எனது ‘காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்’ நூல்).
இங்கொன்றைக் குறிப்பிடுவது முக்கியம். சென்ற நூற்றாண்டில் நம் தமிழ் இசையும், தேவதாசியரால் காபாற்றப்பட்டு வந்த தமிழ்நாட்டிய மரபும் (‘சதிர்’) இங்கே ‘கர்நாடக சங்கீதமாகவும்’, ‘பரத நாட்டியமாகவும்’ உருமாற்றப்பட்டது. இதில் பார்ப்பனர்களின் கைவரிசையை விளக்க வேண்டியதில்லை. பத்மா சுப்பிரமணியம் போன்றோர் இதில் பெரும் பங்கு வகித்தனர். தேவதாசி மரபில் வந்த கலை என்கிற உண்மை இவர்களுக்கு இழுக்காக இருக்கும் என்பதால், தேவதாசியரின் பங்கு இவர்களால் மூடி மறைக்கப்பட்டது. சதிர் பரதமாகியது.
எனவே இந்தக் கலையின் தமிழ் வேர்களையும், இதக் காப்பாற்றி வந்ததில் தேவதாசியரின் மரபையும் நாம் அழுத்திச் சொல்ல வேண்டியுள்ளது. அப்படிச் சொல்வது யாராக இருந்தபோதிலும் அதை நாம் வரவேற்க வேண்டியவர்களாகவே இருக்கிறோம்.
அதே நேரத்தில் தேவதாசிமுறையை உன்னதப்படுத்தி, அதை ஒழித்துக் கட்டிய திராவிட இயக்கத்தின் பங்கைக் கொச்சைப்படுத்திப் பேசும் யாரையும் நாம் கண்டிக்கத் தவறவும் கூடாது. அந்த வகையில் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி நாட்டியத் துறையில் நடைபெற்ற சொர்ணமாலாவின் கருத்துக்களை நேரில் சென்று கவனித்து மறுத்துரைத்த ஒவியா முதலானோரின் பங்கு பாராட்டுக்குரியது.
அதே நேரத்தில் இதற்கான கல்வித் துறையில் ‘Devadasi system and Bharathanatiyam’ , ‘Evolution of Bharathanatiyam’, ‘Devadasis – Wives of God’ போன்ற தலைப்புகளில் கருத்தரங்குகளே நடத்தக் கூடாது எனக் கூற இயலுமா? தேவதாசி முறை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதால் அது குறித்து ஆய்வுகளே கூடாது எனச் சொல்ல இயலுமா? ‘தமிழகத்தில் தேவரடியார் மரபு’ என்கிற நூலை முனைவர் நர்மதா எழுதியுள்ளார். அது அவரது முனைவர் பட்ட ஆய்வு. அந்நூல் குறித்த விமர்சனத்தை நான் ‘தீராநதி’ யில் எழுதியுள்ளேன். இன்றைய ‘பரத நாட்டியத்தில்’ தேவரடியார் மரபு குறித்த அடுத்த நூற் தயாரிப்பில் அவர் இப்போது உள்ளார். டி.எம்.சுந்தரம் என்பவர் ஒரு நூல் எழுதியுள்ளார். லக்ஷ்மி விஸ்வநாதன் Women of Pride: The Devadasi Heritage என்றொரு நூலை எழுதியுள்ளார். இன்னும் பல ஆய்வுகள் இருக்கக் கூடும். சத்யஜித்ரே, பாலசரஸ்வதி குறித்து ஒரு அற்புதமான ஆவணப் படம் (‘பாலா’) எடுத்தார்.
இது குறித்து நான் ஓவியா அவர்களிடம் பேசியபோது அவர் இரு நியாயங்களை முன்வைத்தார். 1.இப்படியான ஒரு தலைப்புக்குள் ஒளிந்து கொண்டு தேவதாசி முறையை நியாயப்படுத்திவிடக் கூடாது. 2.ஒரு தனியார் அரங்கில் இப்படிப் பேசினால் கூட அதை அனுமதிக்கலாம். ஒரு கல்வி நிலையத்தில் இப்படிப் பேசுவதை எப்படி அனுமதிப்பது.
உண்மைதான். எனினும் கல்வி நிறுவனங்களில் கல்விச் சுதந்திரம் (academic freedom) என்பது முக்கியம். அவர்கள் என்ன பேசப் போகிறார்கள், ஆய்வில் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதை நாம் முன் கூட்டி ஊகித்து அந்த அடிப்படையில் எதிர்ப்புக் காட்ட இயலாது. எழுதப்பட்ட ஒரு பாடத்தில் உள்ள தவறுகளை நாம் சுட்டிக் காட்ட இயலும். ஆனால் எழுதப்பட இருக்கும் ஒரு ஆய்வில் ஆலது பேசப்பட உள்ள ஒரு உரையில் நீ தவறாகத்தான் பேசுவாய் என்கிற முன் அனுமானத்தில் நாம் அதில் தலையிடுவது கல்விச் சுதந்திரத்தில் தலையிடுவதாகவே அமையும். அப்படி எழுதப்படும், பேசப்படும் பட்சத்தில் அத்ற்கான எதிர்வினைகளை ஆற்ற நமக்கு இப்போது எத்தனையோ வழிமுறைகள் உண்டு.
இறுதியாக ஒன்றைச் சொல்லி ஆக வேண்டியுள்ளது. இன்று தேவதாசி முறையைச் சொர்ணமாலா போன்ற பார்ப்பனர் மட்டும் போற்றவில்லை. மணியரசனின் ‘தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி’ போன்ற தமிழ்த் தேசிய அமைப்புகளும் போற்றிப் புகழ்கின்றன. அவர்கள் ராஜராஜ சோழன் போன்றோரை தமிழ் வீரத் திரு உருக்களாகப் பார்க்கின்றனர். பெருமிதத்திற்குரிய சோழர் காலத்தை கம்யூனிஸ்டுகள் நில உடைமை என்றும், பெரியாரியர்கள் பார்ப்பனீயம் என்றும் இதுகாறும் கீழ்மைப்படுத்தி விட்டனரே என வெளிப்படையாக ஓலமிடுகின்றனர். ராஜராஜன் பட்டமேறிய ஆயிரமாண்டு நாளை கருணாநிதி பெரு விமரிசையாகக் கொண்டாடியபோது தமிழகத்தில் மிகப் பெரிய எதிர்ப்புகள் நிகழ்ந்தன. ஆனால் சமீபத்தில் தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் ஆயிரமாவது குடமுழுக்கை கருணாநிதி அரசு கொண்டாடியபோது, ‘தமிழர் கண்னோட்டம்’ இதழ் சிறப்பு மலர் வெளியிட்டது. அதில் ராஜராஜ சோழன் அறிமுகப்படுத்திய தேவரடியார் முறை பெருமைக்குரிய ஒன்று எனவும், அது பெண்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு எனவும் பொருள்பட்ட கட்டுரை வெளியிடப்பட்டது. அப்போது ஏன் எந்த எதிர்ப்பையும் யாரும் காட்டவில்லை?
கொடூரமான வலியை மனித உடல்கள் மீது காயங்கள் அல்லது நிரந்தர ஊனங்கள் ஏற்படாமலோ அல்லது அத்தகைய நிலைகளுக்குக் காரணமாகுமாறோ ஏற்படுத்துவதைச் சித்திரவதை என்கிறோம். பல நேரங்களில் இது உடல் ரீதியான வன்முறையாக அமையாமலோ இல்லை உடல் ரீதியான வன்முறையுடன் கூடியோ மனம் மற்றும் உளவியல் ரீதியான வன்முறைகளாகவும் நிகழும். அரசு, குழுக்கள், சில நேரங்களில் தனி நபர்கள் ஆகியோரால் பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் மீது தம் அதிகாரத்தை நிலை நாட்டுவதற்கு அவர்களின் உடல்களே இவ்வாறு ஒரு கருவியாகவும் களமாகவும் பயன்படுத்தப்பட்ட்டு வருகின்றன.
குழுக்கள், தனிநபர்கள் ஆகியோரும் இத்தகு கொடுமைகட்குக் காரணமானாலும் கூட அரசும் அரசு நிறுவனங்களான காவல்துறை, உளவுத் துறை முதலானவையுமே இதில் முன் நிற்கின்றன. தண்டித்தல், பழிவாங்கல், அரசியல் காரணங்கள், அச்சுறுத்தல், புலன் விசாரணை, வற்புறுத்தல், மூன்றாம் நபர் ஒருவரை அச்சுறுத்திப் பணிய வைத்தல் ஆகியன சித்திரவதைகளின் காரணங்களாக அமைகின்றன. சில நேரங்களில் சிலரது குரூர மகிழ்ச்சிக்காகவும் (sadistic pleasure) சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
உலகெங்கிலும், வரலாறு முழுமையும் சித்திரவதைகள் என்பன அரசுகளின் பிரிக்க இயலாத ஓரங்கமாக அமைந்தபோதும் இவ்வாறு கொடுஞ் சித்திரவதைகள், அதனூடான காவல் நிலைய மரணங்கள் ஆகியவற்றில் இந்திய அரசு முன் நிற்கிறது. 1993 – 2009 காலகட்டத்தில் மாத்திரம் 2,318 காவல் நிலையச் சாவுகளும், 716 போலி மோதல் கொலைகளும் நடந்துள்ளன என தேசிய மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ளது. இது ஆணையத்தின் முன் வந்துள்ள புகார்களின் அடிப்பட்டியிலான தரவு. காவல் நிலையச் சாவுகளில் 90 சதம் “தற்கொலைகள்” என்பதாக அறிவிக்கப்படுவதையும், பிடித்துக் கொண்டு சென்று கொன்று விட்டு மோதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கபடுவதையும் கணக்கில் கொண்டால், ஆணையம் அறிவித்துள்ள புள்ளி விவரங்களைக் காட்டிலும் எத்தனை ஆயிரம் மடங்கு காவல் நிலையச் சாவுகளும் போலி மோதல் கொலைகளும் நடந்துள்ளன என்பதை ஒருவர் ஊகிக்க முடியும். தவிரவும் ஆணையம் தந்துள்ள தரவு சித்திரவதைகளின் மூலமாக ஏற்பட்ட மரணங்கள் மட்டுமே. இப்படி மரணங்கள் ஏற்படாமல் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் பல இலட்சம் மடங்கு அதிகம். நான்கு நாட்களுக்கு முன் கோவையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய நீதியரசர் ஹேமந்த் குமார் நாள்தோறும் 3 முதல் 4 காவல் நிலையச் சாவுகள் நடப்பதாகவும், இதில் வருந்தத்தக்க நிலை என்னவெனில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இது குறித்துப் புகாரளிக்க அஞ்சுவதுதான் என்றும் கூறியுள்ளார், காவல்துறையினர் காலனிய கால மனநிலையுடனேயே செயல்படுவதாகவும், தாங்கள் மக்கள் ஊழியர்கள் என்பதை மறந்து மக்களின் எஜமானர்கள் என்கிற உணர்வுடனேயே செயல்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சாதாரணமாகத் தினந்தோறும் நடக்கிற இக்காவல் நிலையச் சித்திரவதைகள், உள்நாட்டுப் பிரச்சினைகள், ஏதிர்ப்புகள் நடைபெறுமிடங்களில் பல மடங்கு அதிகமாக நடை பெறுகின்றன. புலனாய்வு முறைகளில் அநுமதிக்கப்பட்ட ஒன்றாகவும் விசாரணை செய்யப்படுபவர்களிடமிருந்து விரும்பிய உண்மைகளை வரவழைக்கும் வழிமுறைகளில் ஒன்றாகவும் நமது புனாய்வு நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையாகச் சித்திரவதைகள் உள்ளன என்கிற வருந்தத்தக்க உண்மையை நாம் மனங்கொள்ள வேண்டும்
“சித்திரவதைகள்மற்றும்மனிதாபிமானமற்ற,, குரூரமான, கண்ணியக்குறைவானநடைமுறைகள்மற்றும்தண்டனைவடிவங்களுக்குஎதிரானஐ..நாஉடன்பாடு” {UN Convention against Torture and other Cruel, Inhuman or Degrading Treatment or Punishment (UNCAT)} 1984ம் ஆண்டு இயற்றப்பட்டது. எனினும் பதிமூன்றாண்டுகளுக்குப் பின்பே (1997ல்) ‘உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகிய இந்தியா இதில் கையெழுத்திட்டது.
எனினும் இன்றுவரை இந்திய அரசு இதற்குச் சட்ட ஒப்பேற்பு (ratification) வழங்கவில்லை. அதன் முதற்படியாகிய உள்நாட்டுச் சட்டத்தையும் (enabling legislation) இயற்றவில்லை. ஆனால் 153 நாடுகள் இதற்கு ஒப்பேற்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நாடுகளில் சித்திரவதைக்க்குள்ளானவர்கள், ஆதற்குக் காரணமானவர்கள் மீது வழக்குத் தொடர்ந்து தண்டனை பெற்றுக் கொடுக்கலாம். இழப்பீடு பெறலாம்.
பன்னாட்டு மற்றும் உள்நாட்டு அழுத்தங்களின் விளைவாகச் சென்ற 2008ல் இவ்வாறு ஒப்பேற்பு அளிப்பதற்கு முதற்படியாக சித்திரவதைத் தடுப்புச் சட்ட வரைவு ஒன்றை உருவாக்குவ்து என முடிவு செய்யப்ப்பட்டு அது 2010ல் முன்வைக்கப்பட்டது.
இந்தியத் தண்டனை சட்டத்தின் 333ம் பிரிவு “கொடுங் காயம்” (grevious injury) ஏற்பட்டுத்துவதைக் குற்றமாக்குகிறது. இது சித்திரவதை வழக்குகளுக்கும் பொருந்தும் என்ற போதிலும், இது குறிப்பிட்ட வடிவிலான உடற் காயங்களை ஏற்படுத்தும் சூழல்களுக்கு மட்டுமே பொருந்தும். பொதுவான சித்திரவதை முறைகள் இதன் கீழ் வரா. தவிரவும் சித்திரவதைக்குக் காரணமானவர் அரசுப் பணியாளரா இல்லையா என்பதும் இச் சட்டப் பிரிவில் ஒரு பொருட்டாக இருப்பதில்லை.
எனினும் ஐ.நா உடன்பாடு இதைத் தெளிவாக வரையறுக்கிறது. “அரசு ஊழியர்கள் (public servants) அல்லது அவர்களால் பணியமர்த்தப்படுவோர், (சித்திரவதைக்குள்ளாக்கப் படும்) ஒரு நபர் அல்லது ஒரு மூன்றாவது நபரை, ஏதேனும் ஒரு தகவலைப் பெறுவதற்காகவோ இல்லை ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதற்காகவோ, இல்லை தண்டிக்கும் நோக்கத்துடனோ உள மற்றும் உடல் ரீதியான கடும் வலியை ஏற்படுத்தும் செயல்களைச்” சித்திரவதை என ஐ.நா உடன்பாடு வரையறுக்கிறது. சித்திரவதைக்குள்ளாக்கப்படும் நபர்கள் ஏதேனும் குற்றம் இழைத்தவராகச் சந்தேகிக்கப்படுவோர், (சாதி,மதம், இனம் என ஏதோ ஒரு வகையில்) வேறுபடுத்தப்படுவோர்) என்கிறவாறும் ஐ.நா உடன்பாட்டில் அடையாளப்படுத்தப் படுகின்றனர்.
ஆனால் இந்திய அரசு முன் வைத்த சித்திரவதைகள் தடுப்புச் சட்ட வரைவோ இந்த அடிப்படை அம்சங்கள் பலவற்றை நீர்க்கச் செய்து இச்சட்டத்தின் நோக்கத்தையே கேலிக் கூத்தாக்கியது. இச்சட்ட வரைவின் 3ம் பிரிவு, சித்திரவதை என்பதை உள்நோக்கத்துடன் “கொடும் உடல் காயம்”, அல்லது, “உயிராபத்து மற்றும் உடல் உறுப்பு, உடல் நலத்திற்கு ஆபத்து” விளவிக்கும் செயல் என வரையறுக்கிறது. இதன் மூலம் உள ரீதியான சித்திரவதைகள், கடும் அச்சுறுத்தல்கள், உறக்கமில்லாமல் துன்புற்றுத்துவது, உடற்காயமின்றி லாடம் கட்டி அடித்து உள் காயங்களை ஏற்படுத்துவது, பாலியல் சீண்டல்கள், மிளகாய்ப்பொடி முதலானவற்றை உடலின் மென்மையான பாகங்களில் தேய்ப்பது, பிறப்புறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சுவது முதலான இந்தியக் காவல்துறையினருக்கு மிகவும் பிடித்தமான சித்திரவதைகள் பலவும் “சித்திரவதை” என்கிற வரையறைக்குள் வராமல் போகிற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. “உடல் நலத்திற்கு ஆபத்து விளைவித்தல்” என்கிற வாசகம் கூடப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாது எனச் சட்ட நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். “ஆபத்து” என்பது பெரிய அளவிலான நிரந்தர ஊனத்தைக் குறிக்கும் வாய்ப்புடையதாகிவிடுகிறது. சித்திரவதை என்பதில் வலி, துயரம், அவமானம், அச்சம் முதலியனவே முதன்மைப்படுத்தப் படுதல் வேண்டும்.
சட்ட வரைவின் 4ம் பிரிவு, சித்திரவதை என்பது “ஏதேனும் ஒரு குற்றத்தை நிறுவுவதற்கான வாக்குமூலம் ஒன்றைப் பெறும் நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்” என்பதோடு கூடுதலாக ஏதேனும் ஒரு வகையில் (சாதி, மதம், இனம் போன்று) அவர் வேறுபடுத்தப்பட்டவராகவும் இருக்க வேண்டும்” என்கிறது. எனவே ஒரு விசாரணை அதிகாரி பணம் பறிப்பதற்காகவோ இல்லை பழி வாங்குவதற்காகவோ இல்லை அச்சுறுத்துவதற்காகவோ, இல்லை பாலியல் சகாயங்களைப் பெறுவதற்காகவோ சித்திரவதை செய்தால் அது குற்றமாகக் கருதப்படமாட்டாது. ஏதேனும் குற்ற வாக்குமூலங்களைப் பெறுவதற்காகச் செய்யப்பட்டால் மட்டுமே அது குற்றமாகக் கருதப்படும். தவிரவும் ஐ.நா பிரகடன வாசகங்களில் உள்ளது போல சாதி மத இன வேறுபாடுகளின் அடிப்படையில் சித்திரவதை மேற்கொள்ளக்கூடாது என்பதுதான் சரியாக இருக்குமே ஒழிய சித்திரவதைக்கான நிரூபணங்களில் ஒன்றாகச் சாதி மத வேறுபாடுகள் இருக்கக் கூடாது.
இந்தியச் சட்ட வரைவின் 5ம் பிரிவு, சித்திரவதைக்கான புகார்கள் ஆறு மாதங்களுக்குள் செய்யப்பட்டால்தான் நீதி மன்றங்கள் அவற்றை விசாரிக்க வேண்டும் என்கிறது. சித்திரவதைக்குள்ளாகிறவர்களில் கிட்டத்தட்ட 80 சதத்திர்கும் மேற்பட்டோர் ஏழை எளியோர்: ஒடுக்கப்பட்டவர்கள். இந்தத் துன்பத்திலிருந்து அவர்கள் மீண்டு, ஆதரவு தேடி, வழக்குக்குத் தேவையான பணம் சேர்த்து, அச்சம் நீங்கி நீதிமன்றத்தை அணுக ஆறு மாதங்களுக்கு மேலான காலமும் ஆகலாம். அவர்களுக்கெல்லாம் நீதி மறுக்கப்பட இந்தியச் சட்ட வரைவு துணை புரிகிறது.
இந்தியச் சட்ட வரைவின் 6ம் பிரிவு இன்னும் கொடூரமானது. அரசின் முன் அனுமதியின்றி சித்திரவதை புரிந்த அதிகாரிகளை நீதிமன்றம் விசாரிக்கக் கூடாதாம்.
ஆக இந்தியச் சட்ட வரைவை ‘சித்திரவதைக்கு எதிரான சட்டம்” என்பதைக் காட்டிலும் “சித்திரவதைகளுக்கான பாதுகாப்புச் சட்டம்” அல்லது, “சித்திரவதைகளுக்கான தண்டனை விலக்குச் சட்டம்” என்பதே பொருத்தமாக இருக்கும்.
கடும் எதிர்ப்புகள் வந்ததை ஒட்டி அரசு இச் சட்ட வரைவை மாநிலங்கள் அவைக்குக் கொண்டு செல்லாமல் நிறுத்தி வைத்துள்ளது. இதில் காங்கிரஸ், பா.ஜ.க என வேறுபாடுகள் ஏதும் இல்லை. இடதுசாரிக் கட்சிகளும் இவற்றைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அவர்களும் தங்களை அரசின் ஓரங்கமாகத் தானே கருதிக் கொள்கின்றனர்.
சித்திரவதைகளால் பெரிதும் பாதிக்கப்படுவோர் தலித்கள், முஸ்லிம்கள், பழங்குடியினர், பொருளாதார ரீதியாக அடி நிலையில் இருப்போர், இவர்கள் சார்ந்த பெண்கள் ஆகியோரே. இவர்களுக்காக நிற்போரே இப்பிரச்சினையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
முதற்கட்டமாக மேலே குறிப்பிட்ட ஓட்டைகள் இல்லாத வலிமையான சித்திரவதை எதிர்ப்புச் சட்டம் ஒன்றை இந்திய அரசு இயற்ற வேண்டும்.. அதனடிப்படையில் ஐ.நா உடன்பாட்டிற்கு சட்ட ஒப்பேற்பு அளிக்க வேண்டும்.
சித்திரவதை செய்வது, போலி மோதல்களைச் செய்து கொன்று குவிப்பது, காவல் நிலையக் கொலைகள், காவல் நிலையப் பாலியல் வன்முறைகள் அகியவற்றில் தமிழ்நாடு வேறெந்த மாநிலத்திற்கும் சளைத்ததல்ல. இது குறித்த விரிவான புள்ளி விவரங்கள் நம்மிடம் உண்டு. இவற்றைத் தொகுத்து மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். உண்மைகளைக் கண்டுபிடிக்க சித்திரவதை தவிர்க்க இயலாத ஒரு கருவி என்கிற பொதுப் புத்தியில் பதிந்துள்ள கருத்தை எதிர்த்தும் நாம் போராட வேண்டும். புலனாய்வு அறிவியல், தடைய அறிவியல் என்பன பெரிதும் வளர்ந்துள்ள நிலையில் அடிப்படை மனித நாகரீகத்திற்குப் பொருத்தமற்ற இந்தக் கொடிய சித்திரவதைகளுக்கு எந்த நியாயமும் கிடையாது என்பதை நாம் மக்கள் மத்தியில் விளக்க வேண்டும்.
நீதிமன்றங்கள் இவ்வாறான சித்திரவதைகள் குறித்த செய்திகள் ஊடகங்களில் இடம்பெறும்போது அவற்றைத் தன்னிச்சையாகக் கவனத்தில் எடுத்து (suo moto) நடவடிக்கை எடுக்க வேண்டும்.
[பா.ஜ.க பிரமுகர் ஒருவர் கொலையில் இரு அப்பாவி முஸ்லிம்களைச் சிக்க வைக்க போலீஸ் பொய் சாட்சிகளை உருவாக்க முயற்சித்துப் பிடிபட்ட கதை]
இரண்டு நாட்களுக்கு முன் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் நண்பர் மனோகரன் அவசரமாகத் தொலைபேசியில் அழைத்தார். பரமக்குடி பகுதியைச் சேர்ந்தவரும் தற்போது சென்னை பெரும்பாக்கத்தில் வசித்து வருபவருமான இத்ரிஸ் என்பவரை பா.ஜ.க தலைவர் முருகனின் கொலை சம்பந்தமாக விசாரிக்க அழைத்துச் சென்றதாகவும் கடந்த இரண்டு மூன்று நாட்களாக அவரிடமிருந்து சரியான தகவல் இல்லை எனவும் அவரது உறவினர்கள் தன்னிடம் வந்து சொல்லிக் கொண்டிருப்பதாகவும் இது குறித்து நாம் ஏதேனும் செய்ய வேண்டும் எனவும் கூறினா ர். இத்ரிசின் ஊரைச் சேர்ந்தவரும், திருச்சியில் சிறைக் காவலராக உள்ளவருமான மதார் சிக்கந்தர் என்பவர் பெயரைச் சொல்லி இத்ரிஸ் அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் இருவர் குறித்தும் சரியான தகவல் இல்லையென்றும் மனோகரன் குறிப்பிட்டார்.
“சரி, நீங்கள் இது பற்றி ஹேபியாஸ் கார்பஸ் (ஆட் கொணர்வு மனு) ஏதாவது போட முடியுமான்னு பாருங்க. மேலப்பாளயத்திலேயும் கடுமையா பிரச்சினைகள் இருக்குன்னு ஏதாவது செய்திகள் வந்துட்டே இருக்கு. அடுத்த வாரத்தில எல்லாத்தையும் சேர்த்து ஏதாவது ஃபேக்ட் ஃபைன்டிங் பண்ணலாமான்னு பார்ப்போம். முடிந்தால் நம்ம அறிக்கையை டி.ஜி.பிய நேர்ல பார்த்து குடுக்க முயற்சிப்போம்” என்று சொன்னேன்.
இது தொடர்பாக மேலதிக விவரங்களைத் திரட்ட நண்பர்களைத் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டுள்ளபோதே சற்று முன் திருச்சி வழக்குரைஞர்கள் கென்னடி மற்றும் கமருதீன் அனுப்பியிருந்த செய்தி அதிர்ச்சியை அளித்தது. இந்த நாட்டில் முஸ்லிம்களாகப் பிறந்தால் எத்தனை வேதனைகளைச் சந்திக்க வேண்டி உள்ளது என்பது இது போன்ற போலீசின் அத்து மீறல்களளையும், விசாரணை என்னும் பெயரில் நடத்துகிற சட்ட மீறல் மற்றும் அப்பட்டமான பொய் வழக்குகளையும் தொடர்ச்சியாய்ப் பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கே அதிர்ச்சி அளிக்கக் கூடியதாய் இருக்கிறது. நடந்தது இதுதான்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இடைக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இத்ரீசும் மதார் சிக்கந்தரும். இத்ரீஸ் பெரும்பாக்கத்திற்கு (சென்னை) இடம் பெயர்ந்ந்து ஏதோ தொழில் செய்துகொண்டுள்ளார். மதாருக்கு சிறைக்காவலர் வேலை கிடைத்து திருச்சி சிறையில் பணியமர்த்தப்பட்டுள்ளார். அவர் பணியில் அமர்ந்த நாள் தொடங்கியே காவல்துறையினராலும் உளவுத் துறையினராலும் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு உதவி செய்கிறாயா எனப் பலமுறை மிரட்டப்பட்டும் விசாரிக்கப்பட்டும் இருந்துள்ளார். முஸ்லிம்கள் யாரேனும் இத்தகைய பணிகளில் நியமிக்கப்படும்போது இப்படி ’விசாரிக்கப்படுவதும்’ கண்காணிக்கப்படுவதும் வழக்கமாம். இது தொடர்பாக வழக்குரைஞர்களின் ஆலோசனையின் பேரில் மதார் உயர் அதிகாரிகளிடம் புகாரளித்தது இவரை இவ்வாறு ‘விசாரித்து’ வந்தவர்களுக்கு உவப்பளிக்கவில்லை. சென்ற மாதத்தில் பலநாட்கள் அவரிடம் ஏதோ விசாரணை என தொலை பேசியில் மிரட்டியுள்ளனர். இறுதியில் ஜூலை 30 அன்று அவரைக் கட்டாயமாக ஒரு போலீஸ் வேனில் ஏற்றி மிரட்டி செல்போனில் யார் யாருடனோ பேசச் சொல்லித் துன்புறுத்தியுள்ளனர். இது நடந்துகொண்டுள்ள போதே மதார் அழைப்பதாகச் சொல்லி இத்ரீசைக் கொண்டு சென்ற விசாரணைப் படையினர் அவரைக் கடுமையாகச் சித்திரவதைகள் செய்து முருகனைக் கொன்றது தான்தான் என ஒத்துக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். முருகன் கொலையை விசாரித்து வரும் ஏ.டி.ஜி.பி மயில்வாகனனின் படையைச் சேர்ந்த இன்ஸ்பெச்டர் மாடசாமி மற்றும் 15 காவலர்கள் கொண்ட படைதான் இந்தக் கொடுமைகளைச் செய்துள்ளது. முழு விவரங்களியும் நீங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள புகார்க் கடிதங்களின் நகல் மற்றும் ஸ்கான் செய்யப்பட்ட பிரதிகளை வாசித்தால் விளங்கும்.
இப்போது இந்தக் கொடூர நாடகத்தின் மூன்றாம் காட்சி தொடங்குகிறது. இதே ஊரைச் சேர்ந்த எஸ்.பாண்டி, என்.சுந்தரவேல் இருவரும் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளி வந்தவர்கள். மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் உத்தரவின் பேரில் திருச்சி நடுவர் நீதிமன்றம் 2ல் கடந்த 15ம் தேதி முதல் தினம் கையொப்பமிட்டு வருகின்றனர். இவர்கள் சென்ற 30 அன்று கையொப்பமிட்டு வெளியே வரும்போது மேற்படி காவல் படையினர் இவர்களைக் கட்டாயமாக இரண்டு டெம்போ வான்களில் தனித்தனியாக ஏற்றி (எண் TN 59 G 0930; TN 59 G 0915), கண்களைக் கட்டிக் கொண்டு சென்றுள்ளனர். அடையாளந் தெரியாத ஓரிடத்தில் இறக்கி, தாங்கள் என்கவுன்டர் வெள்ளத்துரை ‘டீம்’ எனவும், அவர்களை என்கவுன்டர் செய்யப்போவதாகவும் மிரட்டியுள்ளனர். எனினும் முருகன் கொலை வழக்கில் தாங்கள் சொல்வதுபோலச் சாட்சி சொன்னால் விட்டு விடுவதாகக் கூறியுள்ளனர். அதாவது, திருச்சியில் தங்கள் ஊரைச் சேர்ந்த மதார் சிக்கந்தரின் அறையில் தங்கி தினந்தோறும் நீதிமன்றத்திற்குச் சென்று கையொப்பமிட்டுக் கொண்டிருந்ததாகவும், அப்போது அங்கு இத்ரிஸ் முதலானோர் முருகனைக் கொலை செய்வது குறித்துத் திட்டமிட்டுக் கொண்டிருந்ததற்குத் தாங்கள் நேரடி சாட்சி எனச் சொல்ல வேண்டும் என அவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். உயிருக்குப் பயந்து அவர்கள் அப்படியே செய்வதாகக் கூறியுள்ளனர்.
பிறகு அவர்களைக் கொண்டு சென்று திருச்சியில் உள்ள குரு லாட்ஜில் அடைத்து வைத்துள்ளனர். மீண்டும் அடுத்த நாள் அவர்கள் அவ்வாறே அழைத்துச் சென்று மிரட்டப்பட்டபோது சங்கிலியால் கட்டப்பட்ட இத்ரிசை இவர்களின் கண்முன்னால் சித்திரவதை செய்துள்ளனர். இரும்புத் தடியால் அடிப்பது, கொரடால் நகங்களைப் பிடுங்குவது. கால்களை எதிரெதிர்த் திசையில் இழுப்பது உட்படச் சித்திரவதைகள் நடந்தேறியுள்ளன. இந்த நேரத்தில் அங்கே அவர்கள் ஊரைச் சேர்ந்தவரும் திருச்சி சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டுள்ள சரவணபவன் என்பவரும் இவ்வாறு கொண்டுவரப்பட்டு இருந்துள்ளார். ஒரு சிவப்பு நிற அப்பாச்சி டூ வீலரில் வந்து இத்ரிஸ் முருகனைக் கொலை செய்ததைத் தான் பார்த்ததாக அவர் சாட்சி சொல்ல வேண்டும் என மிரட்டப்பட்டுள்ளார். அவர் அதை மறுத்துள்ளார். அடுத்த நாள் பூட்டி வைக்கப்பட்ட ஓட்டல் அறையிலிருந்து இவர்களைக் கொண்டுவந்த மாடசாமி குழுவினர் நீதிமன்ற வளாகத்தில் வந்து அமர்ந்துகொண்டு உள்ளே சென்று கையொப்பமிட்டு வருமாறு கூறியுள்ளனர். உள்ளே வந்த பாண்டியும் சுந்தரவேலனும் அங்கிருந்த வழக்குரைஞர் கென்னடி மற்றும் அவருடன் செயல்படும் இளம் வழக்குரைஞர் கமருதீன் ஆகியோரிடம் தங்களின் பரிதாபக் கதையை முறையிட்டுள்ளனர். எனது பக்கங்களைப் பின்பற்றி வருவோர்க்கு இவ் வழக்குரைஞர்களை நினைவிருக்கலாம்.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகப் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரி வழக்கில் கடும் மிரட்டல்களுக்கு மத்தியில் ஆஜராகி என்.எஸ்.ஏ முதலிய சட்டப் பிரயோகங்களை உடைத்து அவரைப் பிணையில் வெளிக் கொணர்ந்தவர்கள்தான் கென்னடியும் கமருதீனும். அவர்கள் உடனடியாக பாண்டியையும் சுந்தரவேலனையும் நீதித் துறை நடுவர் திரு எம்.ராஜேந்திரன் முன் ஆஜர்படுத்தினர். அவர்களின் முறையீட்டைக் கேட்ட நீதியரசர் ராஜேந்திரன்,
1) உயிராபத்து உள்ளிட்ட கிரிமினல் மிரட்டல்கள்
2) பொய் சாட்சியங்களை உருவாக்க மோசடி செய்தல்
3) அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இன்ஸ்பெக்டர் மாடசாமி என்கிற பெயரில் வந்த போலீஸ் கிரிமினல் கும்பலை விசாரிக்க திருச்சி சி.பி.சி.ஐ.டி காவல்துறைக்கு ஆணையிட்டுள்ளார்.
(“இந்த் நாட்டிலேயே அமைப்பாக்கப்பட்ட மிகப் பெரிய கிரிமினல் கும்பல் காவல்துறைதான்” என்கிற கருத்தைக் கூறியது அலகாபாத் நீதிமன்றம்.) திருச்சி நீதித்துறை நடுவர் ராஜேந்திரனின் இந்த வரவேற்கத்தக்க ஆணை ஏ.டி.ஜி.பி மயில்வாகனனின் தலைமையில் இயங்கும் புலனாய்வுப் படையினது மட்டுமல்ல, தமிழகக் காவல்துறையின் கொடூர முகத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளது (பார்க்க இணைப்பு). பொய் சாட்சியம் சொல்வதெற்கென அழைத்துச் செல்லப்பட்ட காவல்துறை வாகன எண்கள், இவர்கள் அடைத்து வைக்கப்பட்ட விடுதிகளின் பெயர்கள், அறை எண்கள் எல்லாமும் இணைப்புகளில் உள்ளன. நான் மிகச் சுருக்கமாக இங்கே இவற்றைப் பதிவு செய்துள்ளேன். தயவுசெய்து நண்பர்கள் முழுமையாக இந்தப் புகார்க் கடிதங்களை வாசிக்க வேண்டுகிறேன். அப்போதுதான் நமது காவல்துறையின் லட்சணம் புரியும்.
இதுபோன்ற கொடூரங்களை வெளிக் கொணர்வதற்காக எங்களைத் தேசத் துரோகிகள் எனச் சொல்லும் அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ் காரர்களான ஜெயமோகன் போன்றோரின் லட்சணங்களும் புரியும். கொலை செய்யப்பட்ட முருகனது கடை ஒன்றிலிருந்த சிசி டிவியில் (கண்காணிப்புக் காமரா) இத்ரிஸ் முதலானோர் எதிரே இருந்த சாலையில் நடந்து சென்ற பதிவு ஒன்று உள்ளதாம். அந்த அடிப்படையில்தான் இந்த விசாரணையாம். அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் அந்த ஊர் வீதிகளின் வழியே செல்லாமல் வேறெப்படிச் செல்வார்கள். அப்படியே காவல் துறைக்குச் சந்தேகமிருந்தால் முறைப்படி விசாரித்து, உண்மையான சாட்சியங்கள் ஏதேனும் கிடைத்தால் அதன் பின்பே குற்றம் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். இப்படிப் பொய் சாட்சியங்களை உருவாக்கி விரைவாக வழக்கை ‘முடித்து’ மயில்வாகனன்களும் மாடசாமிகளும் அவார்டுகளும் பதவி உயர்வுகளும் பெற இத்ரீஸ்களும் மதார் சிக்கந்தர்களும் தங்கள் வாழ்வை இழக்க வேண்டியுள்ளது. இன்று கைது செய்யப்பட்டுச் சிறையில் கிடக்கும் பெரும்பாலான முஸ்லிம் இளைஞர்கள் இப்படியாக ‘விசாரிக்கப்பட்டு’க் குற்றம் “உறுதி செய்யப்பட்டவர்கள்”தான். கென்னடி, கமருதீன், நீதியரசர் ராஜேந்திரன் முதலானோரின் தலையீடுகள் மூலம் நீதி கிடைத்தவர்களின் எண்ணிக்கை வெகு வெகு சொற்பம். இப்படி ஒரு சமூகம் இந்த நாட்டின் காவல்துறை மற்றும் புலனாய்வுகளில் நம்பிக்கை இழப்பது எங்கு கொண்டுபோய்விடும்?
இணைப்பு 1:
பதிவு அஞ்சல் மற்றும் இமெயில் வழியாக
திருச்சி, 31.07.2013.
அனுப்புதல்:
கா.மதார் சிக்கந்தர்,
இரண்டாம் நிலை சிறைக் காவலர்,
மத்தியச் சிறை,
திருச்சி-20.
பெறுதல்,
1. உயர்திரு. சிறைத்துறை துணைத்தலைவர் அவர்கள்,
திருச்சி சரகம்,(digprisontry@dataone.in)
திருச்சி.
2. உயர் திரு. சிறைக் கண்காணிப்பாளர் அவர்கள்,
மத்தியச் சிறை,(supdtcjl@bsnl.in)
திருச்சிராப்பள்ளி 620 020.
ஐயா,
நான் திருச்சி மத்திய சிறையில் இரண்டாம் நிலை காவலராக கடந்த 23.02.2011 முதல் பணிபுரிந்து வருகிறேன். சிறை வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறேன். எனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், இடைக்காட்டூர் ஆகும். எனது குடும்பத்தினர் தற்சமயம் பரமக்குடியில் வசித்து வருகின்றனர். நான் மதுரை வக்பு வாரிய கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து பட்டம் பெற்றேன். எனக்கு சிறு வயது முதலே காவல் துறையில் பணிபுரிய வேண்டுன்றே ஆசை அதிகம். அதனால் 2011ம் ஆண்டு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்று சிறைக்காவலராக கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். என்னுடைய பணியை நான் நல்ல முறையில் செய்துவந்ததினால் என் மீது இன்று வரையில் எந்த குறையும் கிடையாது.
நான் படிக்கும் காலத்திலிருந்து இன்று வரையில் எந்தவிதமான அரசியல் இயக்கங்களிலும் பங்கு கொண்டதும் கிடையாது. சுமார் 8 மாதங்களுக்கு முன்பு திருச்சி மத்திய சிறையில் பணியில் இருந்தபோது சிறை கேண்டீன் கேட் பாரா பணியில் இருந்த தமிழ்நாடு சிறப்புக்காவல் படையை சேர்ந்த காவலர் ஒருவரிடம் தற்செயலாக பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த பெரம்பலூர் டவுன் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமுருகன் (Central I.G. Zone Team ஐ சேர்ந்தவர்) என்பவர் என்னிடம் வந்து “என்னடா துலக்கப் பயலுங்களா, என்ன திட்டம் போடுறீங்க? நாட்டை கெடுக்க திட்டம் போடுறீங்களா? குண்டு வைக்க திட்டம் போடுறீங்களா?” என்றும் இன்னும் பலவிதமான தகாத வார்த்தைகளாலும் திட்டினார். அவர் என்னை திட்டிய பிறகுதான் நான் பேசிகொண்டிருந்த சிறப்புக்காவல் படையை சேர்ந்த காவலர் முஸ்லீம் என்றே எனக்கு தெரியும். பலபேர் முன்னிலையில் என்னை திட்டியதால் எனக்கு அவமானமாகி விட்டது. அதனால் அமைதியாக வந்துவிட்டேன். உடனே நான் இது குறித்து எனது மேலதிகாரி சிறை அதிகாரி திரு.செந்தாமரைக் கண்ணன் அவர்களிடம் வாய் மூலமாக தகவல் தெரிவித்தேன். சிறை அதிகாரி அவர்கள் மேற்படி திருமுருகன் என்பவரை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பிவிட்டார்.
மேலும் என்னிடம் “பலபேர் இதுபோலதான் தேவையில்லாமல் பேசி வம்பிழுப்பார்கள். உன் வேலையை மட்டும் பார்” எனக் கூறி என்னையும் அனுப்பிவிட்டார். இந்த சம்பவத்திற்கு பின்னர் சிறையில் கண்காணிப்பு பணியில் இருந்த ஐ.ஜி டீம் போலீசாரும், உளவுத்துறையை சேர்ந்தவர்களும் என்னிடம் மிகுந்த காழ்புணர்ச்சியோடு நடந்து கொண்டனர். இந்நிலையில் கடந்த மே மாதம் பரமக்குடி டவுன் காவல் நிலைய ஆய்வாளர் ரத்தினக்குமார் என்பவர் என்னை விசாரணை என்ற பெயரில் பல முறை பரமக்குடி காவல் நிலையத்திற்கு வருமாறு தொலைபேசி மூலம் அழைத்தார். நான் முறையாக என்னை சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தால் வருகிறேன் என்று கூறினேன். ஆனால் அவ்வாறு அழைக்காமல் தொலைப்பேசியில் மட்டும் பேசி டார்ச்சர் செய்து வந்தார். இது குறித்து எனது அண்ணன் பைசல் ரஷீத் என்பவருக்கு தகவல் தெரிவித்தேன். அவர் முதுகுளத்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் என்பவரை நேரில் சந்தித்து வாய்மொழியாக புகார் அளித்தார். மேலும் பரமக்குடி காவல் ஆய்வாளர் ரத்தினக்குமார் அவர்களையும் சந்தித்து விபரம் கேட்ட போது பரமகுடியில் நடந்த கொலை சம்பவத்தில் இறந்து போனவரின் உறவினர் கடையை கடந்து நான் நடந்து சென்றதாகவும், அந்தக் கடையின் வாசலில் உள்ள CCTV யில் எனது உருவம் பதிவாகி உள்ளதாகவும், அதனால் என்னை விசாரிக்க வேண்டுமெனவும் கூறி உள்ளார். ஆனால் அது குறித்து மேலும் சரிவர விபரங்கள் ஏதும் அவர் தெரிவிக்கவில்லை. அதன் பின் அது குறித்து என்னை மீண்டும் தொடர்புகொள்ளவில்லை.
இதற்கிடையில் கடந்த 19.07.2013 அன்று எனது செல்போனுக்கு (8973774922) மாலை 5.30 மணியளவில் 8760182068 என்ற எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர் என்னிடம் “மானாமதுரை புரபஷ்னல் கூரியர் அலுவலகத்திலிருந்து பேசுவதாகவும், எனக்கு ஒரு பார்சல் வந்துள்ளதாகவும், அதனை பெற்றுக்கொள்ள வருமாறு தெரிவித்தார். ஆனால் அவர் தெரிவித்த தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருந்தது. உடணே அந்த பார்சலை வாங்க சொல்லி எனது அண்ணன் பைசல் ரஷீத் அவர்களுக்கு தகவல் தெரிவித்தேன். அவரும் தொடர்பு கொண்டு கேட்டபோதும் சரிவர பதிலளிக்கவில்லை. அதற்கு பிறகு என்னுடன் பணிபுரியும் என்னுடன் குடியிருப்பில் இருக்கும் எனது ஊரை சேர்ந்த மணிமாறன் என்பவரிடம் பேசியபோதுதான் எனக்கு பேசிய அதே எண்ணிலிருந்து அவருக்கு பேசிய ஒருவர் தான் SBCID யை சேர்ந்த S.I. என்றும் ஒரு ரகசிய விசாரணை என்றும் கூறி பேசியுள்ளார். இதை தெரிந்துகொண்டு பிறகு நான் மேற்படி எண்ணிற்கு மீண்டும் பேசிய போது அதில் பேசியவர் தான் மதுரை Ad.S.P. மயில்வாகணன் தலைமையில் செயல்படும் சிறப்புப் பிரிவை சேர்ந்தவர் என்று கூறினார்.
ஆனால் எனக்கு எந்த பதிலையும் சரிவர தெரிவிக்கவிலை. இந்நிலையில் நேற்று (30.07.2013) மாலை 6.20 மணியளவில் நான் பணி முடிந்து வந்து எனது குடியிருப்பில் இருந்தபோது, சாதாரண உடையில் வந்த இருவர் தாங்கள் மதுரை Ad.S.P. மயில்வாகணன் தலைமையில் செயல்படும் சிறப்புப் பிரிவை சேர்ந்தவர்கள் என்றும் என்னை விசாரணைக்காக அவர்களோடு வருமாறு அழைத்தனர். நான் அவர்களோடு செல்ல மறுத்தபோது நீ ஒரு அரசு ஊழியர், நீ எங்களோடு வரவில்லை என்றால் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டி, எனது செல்போனையும் பறித்துகொண்டு, என்னை வலுக்கட்டாயமாக அவர்களோடு அழைத்துச் சென்றனர். கொட்டப்பட்டு ஆனந்தா பேக்கரி அருகே நிறுத்தி வைத்திருந்த TN 59 G 0930 என்ற காவல்துறை வாகனத்தில் என்னை ஏற்றிக்கொண்டு, மதுரை புறவழிச்சாலை மணிகண்டம் அருகே கொண்டுசென்று TN 59 G 0915 என்ற வாகனத்துக்கு என்னை மாற்றினார்கள். அந்த இரு வாகனத்திலும் இருந்த சுமார் 15 நபர்கள் தங்களை மதுரை Ad.S.P. மயில்வாகணன் தலைமையில் செயல்படும் சிறப்புப் பிரிவை சேர்ந்தவர்கள் என்று கூறினார்கள். அனைவரும் சாதாரண உடையிலேயே இருந்தார்கள். அவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து அதில் ஒருவர் இன்ஸ்பெக்டர் மாடசாமி என்றும், இன்னும் இருவர் S.I மோகன், மற்றும் சரவணன் என்றும் எனக்கு தெரியவந்தது.
இதற்கிடையில் எனது அறையில் தங்கி திருச்சி சட்டக்கல்லூரியில் படித்துவரும் எனது ஊரை சேர்ந்த சரவணபவ என்பவர் மூலம் தகவல் தெரிந்துகொண்ட எனது அண்ணன் பைசல் ரஷீத் என்னை தொடர்புகொண்டு எங்கே இருகிறாய் என்று கேட்கவும் உடணே என்னை மீண்டும் எங்கள் குடியிருப்பருகே அழைத்து வந்து எனது அண்ணனிடம் நான் வீட்டில்தான் இருக்கிறேன். எந்த பிரச்சனையும் இல்லை என்று மிரட்டி பேச வைத்தனர். அதேபோல எங்க ஊரை சேர்ந்த மணிமாறன் மற்றும் சரவணபவ இருவரையும் எனது செல்போன் மூலம் அழைத்து என்னை மிரட்டி பேசவைத்தது போலவே அவர்களையும் எனது அண்ணனிடம் எந்த பிரச்சனையும் இல்லை என பேச வைத்தனர். அதற்கு பிறகு என்னையும் சரவணபவையும் மட்டும் அழைத்துக்கொண்டு அவர்களது டெம்போ டிராவலர் வாகனத்தில் சுமார் 10மணியளவில் சென்னைக்கு அழைத்துச் சென்றனர். போகும் வழியில் என்னை துப்பாக்கி முனையில் மிரட்டி எனது செல்போன் மூலம் பலருக்கும் பேசவைத்தனர். பதட்டத்தில் எனக்கு யாரிடம் பேசினேன் என்னபேசினேன் என்று நினைவில்லை.
இடையிடையே எனது அண்ணன் தொடர்பு கொண்டாலும் என்னையும், மேற்படி சரவணபவயும் மிரட்டி திருச்சியிலேயே இருப்பது போல அவரிடம் பேசவைத்தனர். அதற்குப்பிறகு சென்னை பெரும்பாக்கத்தில் செல்போன் கடை நடத்திவரும் எங்கள் ஊரை சேர்ந்த இத்ரீஸ் என்பவரை விசாரிக்க வேண்டுமெனக் கூறி என்னை பேசச் சொல்லி அவரை பெரும்பாக்கம் பஸ்டாப் அருகே வரவழைத்து, அவரையும் எங்களோடு வண்டியில் ஏற்றிக்கொண்டனர். இத்ரீசை வண்டியில் ஏற்றியவுடன் அவனது கண்ணை கட்டிவிட்டனர். அப்போது 31.07.2013 அதிகாலை மணி சுமார் 4.30 இருக்கும். அதன் பின்னர் எங்கள் மூவரையும் துப்பாக்கி முனையில் விசாரணை என்ற பெயரில் ஏதேதோ சம்பந்தம் இல்லாமல் கேட்டனர். அதன் பிறகு காலை 10.30 மணியளவில் திருச்சிக்கு எங்களை கொண்டு வந்தனர். என்னை மட்டும் தனியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள குரு ஹோட்டலில் ஒரு அறையில் அடைத்து வைத்தனர்.
இத்ரீஸ் மற்றும் சரவணபவ இருவரையும் எங்கே அழைத்து சென்றனர் என்று தெரியவிலை. என்னை சுமார் 12.40 மணிக்கு மீண்டும் வண்டியில் ஏற்றிச்சென்று திருச்சி மத்திய சிறை அருகே இறக்கிவிட்டு விட்டு பணிக்கு செல்லுமாறும், மீண்டும் மாலை 7.00 மணிக்கு வரவேண்டும் என்றும், அவ்வாறு வந்தால்தான் மற்ற இருவரையும் விடுவோம் என்றும் இதை யாரிடமாவது கூறினால் இருவரின் உயிருக்குத்தான் ஆபத்து என்றும் என்னை மிரட்டிவிட்டு சென்றுவிட்டனர். நானும் சரியாக 1.00 மணிக்கு பணியில் சேர்ந்து மாலை 6.00 மணி வரையில் லையன் கேட் பணியில் இருந்தேன். கடுமையான மிரட்டலாலும், பயத்தாலும் என்னால் உடணடியாக எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. அதற்குள் எனது அண்ணனும் என்னைத் தேடி திருச்சி சிறைக்கு வந்து சேர்ந்தார்.
பணி முடிந்து நான் எனது அண்ணனை அழைத்துக்கொண்டு தங்களிடம் வாய்மொழியாக புகார் அளித்தேன். என்னை விசாரணை என்ற பெயரில் பிடித்து வைத்திருந்தபோது எனது செல்போனில் முஸ்லீம் பெயரில் உள்ள பலருக்கும் என்னை மிரட்டி போன் செய்யவைத்து ஏதேதோ பேச வைத்தனர். என்னை சம்பந்தமில்லாமல் ஏதேதோ விசாரணை செய்தனர். இடையில் பல முறை பலரும் துலுக்கப்பயலே நீயெல்லாம் ஏன் டிபார்ட்மெண்ட்டில் சேர்ந்தே? உன்னை என்ன செய்கிறோம் பார் என்றும் பலவாராக மிரட்டினார்கள். சில வெற்று பேப்பர்களிலும் மிரட்டி கையெழுத்து வாங்கிக்கொண்டார்கள். துப்பாக்கி முனையில் என்னை பலமுறை மிரட்டியதோடு மட்டுமல்லாமல், நான் சார்ந்த மதத்தையும் பலவாறாக இழிவாக பேசினார்கள். தற்சமயம் வரையில் இத்ரீஸ் மற்றும் சரவணபவ இருவரும் என்னவானார்கள் என்று தெரியவில்லை. நான் ஒரு அரசு ஊழியர்.அப்பாவி. என் மீது பணியில் சேர்வதற்கு முன்பும், பணியில் சேர்ந்த பின்பும் எந்த குற்ற வழக்கும் கிடையாது. நான் எந்த காலத்திலும் எந்த விதமான அரசியல் இயக்கங்களிலும் தொடர்பில் இருந்ததில்லை. நான் முஸ்லீம் என்ற காரணத்தினால் மட்டும் காவல்துறையால் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகியுள்ளேன்.
நான் முஸ்லீம் என்பதால் மட்டும் போலீசாரால் பலவிதமான பாகுபாடுகளுக்கும், தொல்லைகளுக்கும் உள்ளாகி வருகிறேன். என்னை தேவையில்லாமல் கடத்திச் சென்று, பல இடங்களுக்கு அழைத்துச் சென்று அழைகழித்து, அடைத்து வைத்து மிரட்டியதோடு இல்லாமல், எனது நண்பர்கள் இருவரையும் பணயமாகப் பிடித்துவைத்துக் கொண்டு என்னை தற்போதுவரையில் மிரட்டி வருகின்றனர். ஆகவே ஐயா அவர்கள் என்னை கடத்திச்சென்று, அடைத்து வைத்து, துன்புறுத்தி எனது நண்பர்களையும் கடத்தி வைத்துக் கொண்டு மிரட்டிவருபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எனது நண்பர்களை மீட்டுத்தரும்படியும், நான் அமைதியாக வாழவும், பணி செய்யவும் உதவும்படியும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள, கா.மதார் சிக்கந்தர்.
இந்தியாவின் முக்கிய வலதுசாரி மதவாத அமைப்பான ‘ஆர்.எஸ்.எஸ்’ எனப்படும் “ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்” விவேகாநந்தரின் 150ம் ஆண்டை (2013) இந்தியா முழுவதும் பெரிய அளவில் கொண்டாடியது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் உருவாக்கி இயக்கப்படும் பல நிறுவனங்களில் ஒன்றான ‘விவேகாநந்த கேந்திரா’ இதில் முன்னணியில் இருந்தது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பை இன்றைய வடிவத்திலும் நோக்கிலும் கட்டமைத்த குருஜி கோல்வால்கரால் விவேகாநந்த கேந்திராவை அமைக்கத் தேர்வு செய்யப்பட்ட ஏக்நாத் ரானடே விவேகாநந்தரின் உரைகளை “இந்து தேசத்திற்கான ஒரு எழுச்சி அறைகூவல்” என்கிற பெயரில் தொகுத்தவர். அது மட்டுமல்ல ஆர் எஸ்.எஸ் அமைப்பு காந்தி கொலையை ஒட்டிச் சிறிது காலம் தடை செய்யப்பட்டிருந்தபோது அந்த அமைப்பைத் தலைமறைவாகவே இருந்து வழி நடத்தியவருங் கூட. இந்த அமைப்பு பல மட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வேலை செய்கிறது. அந்தமான் முதலான பகுதிகளில் உள்ள கிறிஸ்தவப் பழங்குடியினர் மத்தியில் “சேவைகள்” செய்து அதன் ஊடாகக் “கர் வாபசி” நிகழ்வுகளை நடத்திப் பெரிய அளவில் மத மாற்றம் செய்வது உட்பட, கன்னியாகுமரியில் விவேகாநந்தர் நினைவிடத்தை அமைத்த அந்த அமைப்பு செய்யும் வேலைகள் குறித்து இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.
இங்கே நாம் கவனம் கொள்ள வேண்டிய அம்சம் விவேகாநந்தரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இப்படி முன்னிறுத்துவதன் பின்னணி என்ன என்பதுதான். பரவலாக இங்கு விவேகாநந்தர் பற்றி உருவாக்கப்பட்டுள்ள பிம்பம் என்பது அவர், 1. ‘சநாதன தர்மத்தின்’ (இந்து மதம்) பெருமையை உலகறியச் செய்தவர் 2. இந்து மதத்தின் சாதிமுறை, பார்ப்பன மேலாண்மை ஆகியவற்றைக் கண்டித்து இந்து மதச் சீர்திருத்தத்தை வலியுறுத்தியவர் 3. இஸ்லாம், கிறிஸ்தவம் முதலான பிற மதங்களைச் சமமாக ஏற்று உள்ளடக்கும் தாராளப் பார்வை கொண்டவர் என்பவைதான்.
இத்தகைய சமத்துவப் பண்புகள் கொண்டிருந்த விவேகாநந்தரை, சநாதன இந்து மதத்தில் எந்த மாற்றங்களும் இன்றிப் பாதுகாத்தல், எந்த வகையிலும் முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை உள்ளடக்காமல் அந்நிய மதங்களாகவே அணுகும் இறுக்கமான பார்வை, இந்தியாவை ‘இந்து ராஷ்டிரமாக’ ஆக்குவதற்கு வன்முறை உட்பட அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்துதல் முதலான நோக்கங்களுடன் செயல்படும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எவ்வாறு முன்நிறுத்துகிறது என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மட்டுமல்ல நரேந்திர மோடியும் கூடச் சமீபத்தில் விவேகாநந்தரின் கருத்துக்களைப் பரப்ப வேண்டும் எனத் தன் ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதும் கவனத்துக்குரியது.
ஆனால் நம்மில் பெரும்பாலோர் இந்த முரண்பாடு குறித்துச் சிந்திப்பதில்லை. “நம்மில்” என ஏன் சொல்கிறேன் என்றால் அச்சுதானந்தன் உள்ளிட்ட இடதுசாரித் தலைவர்கள், திராவிட இயக்கத்தில் சிலர், இந்துத்துவத்திற்கு எதிராக நிறைய எழுதியுள்ள கே.என்.பணிக்கர் போன்ற புகழ்மிக்க வரலாற்றாசிரியர்கள், ஏன் பல கிறிஸ்தவ,முஸ்லிம் நண்பர்கள் உட்பட விவேகாநந்தரை இப்படி ஒரு தாராளவாதியாகவே கருதுகின்றனர்.
இதற்கு ஆர்.எஸ்.எஸ் தரப்பிலிருந்தே உரிய பதில் சொல்லப்பட்டுள்ளது. ஒரு முறை கே.என். பணிக்கர் விவேகாநந்தரைத் தாராளவாதி எனவும், அவரை ஆர்.எஸ்.எஸ் சுவீகரிப்பது அபத்தம் எனவும் ஆங்கில இந்து நாளிதழில் எழுதினார் (April 10, 2013, Vivekananda’s Legacy of Universalism). அதற்கு ஆர்.எஸ்.எஸ் தரப்பிலிருந்து எழுதப்பட்ட பதிலின் சுருக்கம் இதோ: “விவேகாநந்தரால் உருவாக்கப்பட்ட ராமகிருஷ்ணா மிஷனிலிருந்து வெளி வந்த ஒருவர்தான் ஆர்.எஸ்.எஸ்சின் புகழ் பெற்ற “சர் சங் சலக்” (தலைவர்) ஆக இருந்தவர் (கோல்வால்கரைத்தான் அவர்கள் குறிக்கின்றனர்). அந்த ஆர்..எஸ்.எஸ் அமைப்பையா விவேகநந்தரின் 150வது பிறந்த நாளைக் கொண்டாடக் கூடாது என்கிறாய்?” என்று கூறி விவேகாநந்தரின் உரைகளிலிருந்து அவர்கள் காட்டிய சில மேற்கோள்கள் வருமாறு:
1.(சிகாகோவில் பேசியது) மதங்கள் எல்லாவற்றிற்கும் தாயான இந்து மதத்தின் சார்பாக நின்று நான் பேசுகிறேன்….. எனது நோக்கம் எங்கள் நாட்டை புத்தெழுச்சி கொள்ளச் செய்வது மட்டுமல்ல, இந்து இனம் இந்த உலகையே வெல்ல வேண்டும் என்பதுதான்.
2.முஸ்லிம்கள் தமது இறைத் தூதராக நம்பும் முகம்மது ஒரு வகையான மனப் பிரம்மைக்கு (hallucination) ஆட்பட் டிருந்தார். வானவர் கப்ரியேல் மூலமாகத் தனக்கு இறைவாக்குகள் வந்தடைந்ததாக காட்டிக் கொண்டார். ஒரு இந்து யோகியைப்போல யோக நிலையினூடாகப் பெற்ற பேறல்ல இது. மாறாக இது தட்டுத் தடுமாறி வீழ்ந்த ஒரு விபத்து. சுய அறிவோடு சில தந்திரமான மூட நம்பிக்கைகளும் (quaint superstition) இணைந்த நிலை. இந்து யோகிகள் அல்லாதோர் தங்களை இத்தகைய சில மனப் பிரம்மைகளுக்கு (hallucinations) ஆட்படுத்தியும் கொள்வர். வானவர் கப்ரியேல் (ஜிப்ரீல்) ஒரு குகையில் வந்து தன்னைச் சந்தித்து. ‘ஹரக்’ எனும் குதிரையில் சுவர்கத்திற்கு (சுவனம்) அழைத்துச் சென்றதாக முகம்மது கூறிக் கொண்டார். ஆனால் இதற்கெல்லாம் அப்பால் அவர் சில அற்புதமான உண்மைகளையும் சொன்னார். நீங்கள் குரானை வாசித்தீர்களானால் இந்த அற்புதமான உண்மைகள் மூட நம்பிக்கைக்ளோடு கலந்து கிடப்பதைக் காணலாம். இதை எப்படி நீங்கள் விளக்குவீர்கள்?
3. அவர் ஒரு பயிற்சி பெற்ற யோகி அல்ல. அவர் என்ன செய்கிறார் என்பதன் பின்புலத்தை (reason) அவர் அறிந்திருக்கவில்லை. நல்ல முகம்மது என்ன செய்தார் என்பதையும், (கெட்ட முகம்மதின்) வெறித்தனத்தால் (fanaticism) எத்தகைய தீமை இந்த உலகிற்கு விளைந்தது என்பதையும் யோசித்துப் பாருங்கள். முகம்மதின் போதனைகளின் விளைவாகக் கொல்லப்பட்ட கோடிக் கணக்கான மக்கள், பிள்ளைகளை இழந்த தாய்மார்கள், அனாதைகளாகிய குழந்தைகள், அழிக்கப்பட்ட நாடுகள், கொல்லப்பட்ட கோடானுகோடி மக்கள்….(எவ்வளவு பேர்?)…. (இந்து யோகிகள் அல்லாத) மற்றவர்களின் பெருமை மிகு போதனைகள் எந்த அளவிற்கு இந்த உலகிற்கு உதவினவோ அதே அளவு பாதிப்புகளையும் இந்த வெறித்தனங்களும் மூடநம்பிக்கைகளும் உலகத்திற்கு ஏற்படுத்தின.
4. (இஸ்லாம் போன்ற அருள் வெளிப்பாடுகள்) முழு இறை உண்மையைச் சொன்னவையல்ல. அவை முழுமையானவையும் அல்ல. அவை குறுகிய மனநிலை. ஒன்றின் பகுதி மட்டுமே. ஒரு பகுதி தன்னை முழுமை என உரிமை கோருவது, எல்லைக்குட்பட்ட ஒன்று எல்லையற்றதாக உரிமை கோருவது எல்லாம் தவறிழைக்கக் கூடிய மனித மூளைகளிலிருந்து பிறந்த குறு மதப் பிரிவுகள் (sects) மட்டுமே. இவை இறைவனின் எல்லையற்ற உண்மையை முழுமையாக அறிந்தவை எனக் திமிராக (arrogant) உரிமை கோருவதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். இதன் விளளைவான கொடூரங்களை (arrogance) யோசித்துப் பாருங்கள்…. ஆனால் இவை அனைத்தும் எப்போதும் தோற்றே போயின என்பதை காணத் தவறாதீர்கள்”.
4.இப்படி உரிமை கோருவதில் முகமதியர்கள் ஆகச் சிறந்தவர்கள்; அவர்களின ஒவ்வொரு படி முன்னேற்றமும் வாளின் உதவியுடனேயே மேற்கொள்ளப்பட்டன. ஒரு கையில் குரான்; ஒரு கையில் வாள்: குரானை ஏற்றுக் கொள்; இல்லாவிட்டால் செத்துப்போ; வேறு மூன்றாவது வழி உனக்குக் கிடையாது எனச் சொல்லி அவர்கள் எத்தனை வெற்றிகளைப் பெற்றார்கள்? ஆனால் இறுதியில் அவர்கள் தோற்றே போனார்கள்.
5. (இந்து மதத்திலிருந்து பிறமதத்திற்கு மாறியவர்களை (“வக்கிரமானவர்கள்”) மீண்டும் ‘கர் வாபசி’ செய்து இந்து மதத்திற்குக் கொண்டு வருதல் பற்றிக் கேட்டபோது விவேகானந்தர் சொன்னது) நிச்சயமாக அவர்களைக் கொண்டு வர முடியும். கொண்டு வர வேண்டும்….. அப்படிச் செய்யாவிட்டால் நமது எண்ணிக்கை குறையும். …இப்படி இந்து அடையாளத்திலிருந்து (pale) வெளியே செல்லும் ஒவ்வொரு மனிதனும் நம் எண்ணிக்கையில் ஒன்றைக் குறைப்பவன் மட்டுமல்ல. நம் எதிரிகளின் எண்ணிக்கையில் ஒன்றைக் கூட்டுபவனும் கூட. அதோடு, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களுக்கு வக்கிரமானவர்களில் பெரும்பாலோர் வாளால் இப்படி மாற்றப்பட்டோர், அல்லது அவர்களின் வழி வந்தோர். இவ்வாறு அவர்கள் வக்கிரமானதற்கு (இந்து மதத்தின்) ஏதோ சில குறைபாடுகள்தான் காரணம் எனச் சொல்வது அப்பட்டமான ஒரு அநீதி (அழுத்தம் நம்முடையது).
இவை அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் தரப்பிலிருந்து மேற்கோள்காட்டப்பட்ட விவேகானந்த உரைகள். இவற்றிலிருந்து விவேகாநந்தரின் கருத்துக்களை இப்படித் தொகுத்துக் கொள்ளலாம்.
அ. இந்து மதம் மட்டுமே முழு இறை உண்மையையும் அறிந்த முழுமையான மதம், இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற பிற முழுமையானவை அல்ல அவை வெறும் குறு மதப் பிரிவுகளே. அவை தம்மை முழுமையான மதங்களாகக் கருதிக் கொண்டதன் விளைவு மிகப் பெரிய அழிவுகள். ஆ. நபிகள் நாயகத்திற்கு இறைவாக்குகள் வானவர்கள் மூலம் வந்திறங்கின என்பது பொய். அது ஒரு வெறும் பிரம்மை. இ. இஸ்லாம் வாளோடு வந்து மதம் மாற்றிய மதம். இந்து மதத்திலுள்ள (சாதி வேறுபாடு, தீண்டாமை போன்ற) குறைபாடுகளால்தான் இவர்கள் மதம் மாறினார்கள் என்பது பொய். .ஈ. இந்து மத்திலிருந்து ஒருவர் மதம்மாறும்போது ஒரு இந்து எண்ணிக்கையில் குறைகிறார் என்பதல்ல. இந்து மதத்தின் எதிரிகளின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரிக்கிறது. உ. எனவே இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்குச் சென்றோரை மீண்டும் இந்து மதத்திற்குக் கொண்டு வருதல் அவசியம்.
இத்தகைய கருத்துக்களைக் கொண்டிருந்தவரை எப்படி எல்லா மதங்களையும் சமமாக நேசித்த தாராளவாதி எனச் சொல்லுவது?
இவை எல்லாம் விவேகாநந்தரின் எண்ணற்ற உரைகளிலிருந்து இந்துத்துவவாதிகள் தமக்குச் சாதகமானவற்றைப் பொறுக்கி எடுத்தவை. ஆனால் விவேகாநந்தர் உண்மையில் அப்படி அல்ல என ஒருவர் கருதலாம். ஆனால் விவேகாநந்தரிடம் அடிப்படையாக இழையோடும் கருத்து இத்தகையதே என்பதை வேறு ஏராளமான மேற்கோள்களோடு இது குறித்து விரிவாக ஆய்வு செய்த பேராசிரியர்கள் சுமித் சர்கார், ஜோதிர்மய் சர்மா ஆகியோர் நிறுவியுள்ளனர். ஒரு சிறிய அறிமுகக் கட்டுரையில் அவ்வளவையும் சொல்லி விட இயலாது.
இரண்டு
விவேகாநந்தரை வாசிப்போர் எத்தகைய மனநிலையை அடைவர், வாசிப்போர் மீது அவரது கருத்துக்கள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதற்கு அசீமானந்தரின் கூற்றுக்கள் சான்று. ராமகிருஷ்ண பரமஹம்சரின் சமய சமத்துவக்கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு ராமகிருஷ்ணா மடத்தில் சேர்ந்த அசீமானந்தர் இப்போது மலேகான் குண்டு வெடிப்பு உட்படப் பல இந்துத்துவப் பயங்கரவாத நடவடிக்கைகளில் பங்குபெற்று சிறையில் இருப்பவர். தன் மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்களை ஏற்றுக் கொண்டவர் அவர் என்பது குறிப்பிடத் தக்கது.
அதற்குமுன் இன்னொன்றையும் இங்கு குறிப்பிட வேண்டும். ராமகிருஷ்ண பரமஹம்சர் “யதோ மத் ததோ பத்” (இறைவனை அடைய நம்பிக்கைகள் பல, வழிகளும் பல) என்கிற பன்மைத்துவத்தைப் போதித்தவர். விவேகாநந்தர் இராமகிருஷ்ணரின் தலையாய் சீடர். இராமகிருஷ்ணரின் வாரிசாகத் தன்னை அறிவித்துக்கொண்டவர். சாகுமுன் தனது அனைத்து ஆற்றல்களையும் தமக்கு ஒரு அற்புத அனுபவத்தின் ஊடாகத் தந்து சென்றவர் எனச் சொல்லிக் கொண்டவர். அப்படிப்பட்ட விவேகானந்தர் எப்படிப் பிற மதங்களைச் சமமாக ஏற்காதவராக இருக்க முடியும் என்பது விவேகானந்தரை தாராளவாதி என நம்புவோர் முன் வைக்கும் ஒரு கேள்வி.
இராமகிருஷ்ணர் அப்படியான சர்வ சமய சமத்துவக் கருத்துக்களைத் தூக்கிப் பிடித்தவர் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அவர் இந்து என்கிற அடையாளத்தை வற்புறுத்தியவரும் அல்லர். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் தனது புகழ் பெற்ற சீடர் விவேகாநந்தரைப் போல இந்து மதத்தையும் இந்திய நாட்டையும் பிணைத்து ஒரு இந்து ராஷ்டிரக் கோட்பாட்டிற்கு அடித்தளம் அமைத்தவரும் அல்லர். அதனால்தான் சீடரைத் தன் நெறியாளராக ஏற்றுக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குருவைக் கண்டு கொள்வதில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
ராமகிருஷ்ணரின் சமய சமத்துவக் கருத்துக்களை அவரது சீடர் எப்படியேல்லாம் வளைத்துத் தன் நோக்கத்திற்காகப் பயன்படுத்தினார் என்பதைப் பார்க்கு முன் மீண்டும் அசீமானந்தரின் அனுபவத்திற்குத் திரும்புவோம். தான் எப்படி இந்த வன்முறைப்பாதைக்குத் திரும்பினார் என்பதை இதழாளர் லீனா கீதா ரகுநாத்திடம் அவர் (Caravan, The Beleiver) கூறியுள்ளதிலிருந்து ஒரு பகுதியை மட்டும் இங்கே காண்போம். அசீமானந்தரின் பூர்வ பெயர் நவ குமார் சர்கார். பட்டப்படிபு முடித்திருந்த நவ குமார் இராமகிருஷ்ணரின் சமய சமத்துவக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு இராமகிருஷ்ணா மடத்தில் சேர்கிறார். அங்கே அவரைச் சந்தித்த விஜய் ஆத்யா என்கிற ஆர்.எஸ்.எஸ் ஊழியர் நமது பாதை என ஆர்.எஸ்.எஸ்சை அடையாளம் காட்டுகிறார். அதுதான் விவேகாநந்தர் காட்டிய பாதை என்கிறார். அது எப்படி என நவகுமார் வினவியபோது அவரிடம் ஏக்நாத் ரானடே தொகுத்த விவேகாநந்தரின், “இந்து தேசத்திற்கான எழுச்சி அறைகூவல்” என்கிற நூலை வாசிக்கத் தருகிறார். இனி அசீமானந்தரின் கூற்று.
“ராமகிருஷ்ணா மிஷனின் கொள்கை எல்லா மதமும் சமம்கிறதுதான். அங்கே கிறிஸ்மஸ், ஈத் பெருநாள் எல்லாம் கொண்டாடுவாங்க. நானுந்தான். ஆனா இது விவேகாநந்தர் காட்டிய வழி இல்லைன்னு ஆத்யா சொன்னபோது என்னால நம்ப முடியல. அவர் தந்த ரானடே தொகுத்த விவேகாநந்தர் உரைகளைத் தீவிரமாகப் படிச்சேன்”
அப்போது நவகுமார் சர்காரை அசீமானந்தராக மாற்றிய அந்த வரிகள் கண்ணில் படுகின்றன.
“இந்து மதத்திலிருந்து ஒருவன் மதம் மாறினால், இந்து மதத்தில் இருப்பவர்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைந்தது எனப் பொருளல்ல: மாறாக இந்து மதத்தின் எதிரிகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடியது என்று பொருள் என்று விவேகாநந்தர் சொன்னதைப் படிச்ச போது அது எனக்குப் பெரிய அதிர்ச்சியா இருந்தது. தொடர்ந்த நாட்களில் நிறையச் சிந்திச்சேன், விவேகாநந்தரைப் புரிந்து கொள்ள என்னோட சிற்றறிவுக்குச் சக்தி இல்லங்கிறதைப் தெரிஞ்சுகிட்டேன். அவர் சொல்லிருக்கிறார், நாம அதை வாழ்க்கையில பின்பற்றுவோம்னு முடிவு செஞ்சேன்.”
மூன்று
இந்து மதத்திலுள்ள குறைபாடுகள் எதையும் விவேகாநந்தர் விமர்சித்தாரா என்பது குறித்து இனி பார்க்கலாம்.
இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவைத்தை மட்டுமல்ல விவேகாநந்தர் இந்தியாவில் பிறந்த இதர சமையங்களையோ இல்லை இந்து மதம் சார்ந்த உட்பிரிவுகளையோ அவர் எந்நாளும் ஆதரித்ததில்லை. சநாதன இத்து மதம் ஒன்றே இந்தப் பிரபஞ்சத்தின் உண்மையான தாய் மதம் என்பதே அவரது கருத்தாக இருந்தது. சாதிமுறை உட்பட சநாதன இந்து மதத்தின் எந்த நம்பிக்கைகளையும் நிறுவனங்களையும் அவர் இந்து மதத்தின் குறைபாடுகளாகவோ நீக்கப்பட வேண்டியவையாகவோ விமர்சித்ததில்லை. பலரும் நம்புவதைப்போல சாதி அமைப்பை அவர் இந்து மதத்தின் கேடு எனக் கருதியவர் இல்லை. பல்வேறு பிளவுகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் ஒட்டி இணைத்து இந்து மதத்தை முழுமையாக்கப் பயன்பட்ட ஒரு பசையாகவே அவர் சாதி அமைப்பை ஏற்றுக் கொண்டார்.
விவேகாநந்தரின் எழுத்துக்கள் மற்றும் உரைகள் குறித்து ஒன்றைச் சொல்ல வேண்டும். அவை பல நேரங்களில் தெளிவற்றவையாகவும் சிக்கலானவையாகவும் இருக்கும் அந்தச் சிக்கல் அவர் பேச எடுத்துக்கொண்டபொருளின் சிக்கற் தன்மையினால் (complexity) உருவானதல்ல. மாறாக அவர் வெளிப்படையாகப் பேச விரும்பாத சிலவற்றை, சற்றே நசுக்கி, நசுக்கிப் பேச நேர்ந்ததின் விளைவு அது.
19ம் நூற்றாண்டில் இந்துவாக இருப்பதன் பொருள், அதாவது “இந்துத்தன்மை” (Hinduism) என்பதற்கு அளிக்கப்பட்ட பல்வேறு வரையறைகளில் மிகவும் தீவிரமான சமூக மற்றும் அரசியல் விளைவுகளை ஏற்படுத்துவதற்குக் காரணமாக இருந்த ஒன்று விவேகாநந்தரின் வரையறை. மிகவும் நவீனமானதாக இன்று நம்பப்படும் அவரது வரையறை இந்து மதத்தின் கட்டுப்பெட்டித்தனமான, களையப்பட வேண்டிய பல அம்சங்களைப் புதிய மொழியில் நியாயப்படுத்தின. எவை எல்லாம் இந்து மதத்தின் கொடு அம்சங்களாகச் சமூக மாற்றத்தை முன்வைத்து இயங்கியோரால் அடையாளம் காட்டப்பட்டனவோ அவை எதுவும் இந்து மதம் பிற உலக மதங்கள் எல்லாவற்றிற்கும் “தாய் மதமாக” இருப்பதற்குத் தடையாக இல்லை என அவரை வாசிப்பவர்களை நம்ப வைப்பதாகவும் இருந்தன.
இராமகிருஷ்ணரைத் தனது குருவாக மட்டுன்றி கிருஷ்ணனின் அவதாரமாகவும், தனது தெய்வீக ஆற்றல்கள் அனைத்தையும் இறப்பதற்கு முன் ஒரு அற்புத நிகழ்வொன்றின் மூலம் தனக்கு ஈந்து சென்றவராகவும் முன்னிறுத்தியவர் விவேகாநந்தர், இராமகிருஷ்ணர் இது போன்ற சித்துக்களை நம்பாதவர் மட்டுமல்ல, ஏற்காதவருங்கூட என்பது ஒருபுறம் இருக்க இந்து அடையாளம் குறித்த தன்னுடைய கட்டமைப்பிற்கு ஏற்ப தனது குருவை விவேகாநந்தர் கட்டமைத்த விதம் சுவாரசியமானது. இராமகிருஷ்ணரின் போதனைகளாக இன்று நமக்குக் கிடைப்பது மகேந்திரநாத் குப்தா என்பவர் இராமகிருஷ்ணரின் இறுதி நான்காண்டுகளில் அவரைச் சந்தித்துத் தொகுத்த அவரது உரையாடல்கள்தான். அவற்றையும் அவரது வாழ்க்கை வரலாறுகளையும் படிக்கும்போது இராமகிருஷ்ணர் எல்லோரையும் எல்லா நம்பிக்கைகளையும் சமமாக நேசிக்கும் விரிந்த இதய விசாலம் உடையவர் என்பது தவிர, பக்திப் பாரம்பரியத்தில் வந்த அவர் ஒருவிதப் பித்து நிலையில் (religious ecstacy) வாழ்ந்தவர் என்பது விளங்கும். ஆனால் விவேகநந்தரோ தன் குருவைப் பல மதங்களையும் ஆய்ந்து அவற்றின் சிறந்த அமசங்களைத் தொகுத்துக் கொண்ட ஒரு தத்துவ ஞாநியைப்போல முன்வைப்பார்.
இராமகிருஷ்ணர் எந்நாளும் இந்து மதத்தைப் பிற மதங்களைக் காட்டிலும் உயர்ந்தது எனச் சொன்னதில்லை. குறிப்பாக இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களை அவர் எதிர் நிலையில் நிறுத்தியதில்லை. இந்து மதத்தை அவர் பெருமிதத்தோடு நினைவு கூர்வது ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் மட்டுந்தான். அதுவும் கூட மார்வாரி இனத்தவரின் ஒரு பக்திக் கொண்டாட்டத்தைக் கண்டு அவர் பரவசமடந்த தருணத்தில்தான், ஆகா இதுவன்றோ இந்து மதம் என்கிற ரீதியில் அவர் அதைச் சொன்னார்.
“ஒரு நபர் ஏற்றுக்கொண்ட மதத்தில் தவறுகள் உள்ளதென்றால் அவர் நேர்மையாக இருக்கும் பட்சத்தில் கடவுளே அதைத் திருத்துவார். மற்ற மதங்களில் தவறுகள் இருக்கிறதென்றால் அவற்றைத் திருத்துவது நம் வேலை அல்ல. கடவுள் அதைப் பார்த்துக் கொள்வார்” என்று சொன்னவர் இராமகிருஷ்ணர். அது மட்டுமல்ல, தன் மதமே சிறந்தது எனச் சொல்வதையும் அதன் மூலம் அடையும் வெற்றிப் பெருமிதத்தையும் அவர் கடுமையாகக் கண்டிப்பார். வெற்றி பெறுவது பெரிய விசயமல்ல. வென்றவர்கள் தோற்பதும் தோற்றவர்கள் வெல்வதும் சகஜம் என்பார். மதங்களுக்கிடையே ஏற்றத் தாழ்வுகளை அவர் ஏற்றுக் கொண்டதில்லை. ஆனால் சீடர் விவேகாநந்தரோ இந்து மதம் ஒன்றே முழுமையான மதம் எனவும் பிற அனைத்தும் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களில் (phases) உள்ளவை என்றும் சொன்னவர். அது மட்டுமல்ல இராமகிருஷ்ணரின் கருத்தும் அதுதான் எனச் சொல்லத் துணிந்தவரும் கூட.
1896ல் விவேகாநந்தர் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் இராமகிருஷ்ணர் குறித்து இரண்டு சொற்பொழிவுகளை ஆற்றுகிறார். இராமகிருஷ்ணரை வாசித்துவிட்டு இராமகிருஷ்ணர் குறித்த விவேகாநந்தரின் உரையை வாசித்தால்தாறியப்பட்ட இராமகிருஷ்ணருக்கும் விவேகாநந்தரின் இராமகிருஷ்ணருக்கும் உள்ள வேறுபாடுகள் விளங்கும். மேற்கத்திய பொருள் முதல் அணுகல்களையும் இஸ்லாத்தின் வாள்வீச்சையும் வென்ற மதம் சநாதன இந்து மதம் என்கிற இராமகிருஷ்ணருக்குச் சற்றும் பொருந்தாத ஒரு திரையில் அவரை வரைந்து காட்டுவார் அவரது சீடர். இராமகிருஷ்ணர் இஸ்லாம், கிறிஸ்தவம் என ஒவ்வொரு மதமாக கற்றுத் தேர்ந்து ஆய்வு செய்து அவற்றில் புதிதாக ஒன்றுமில்லை என அறிந்தாராம்.
இராமகிருஷ்ணர் யாருடைய நம்பிக்கையையும் தாக்க வேண்டாம், “மிகவும் உள்ளடக்கும் தன்மையே இல்லாத” இஸ்லாமிய நம்பிக்கையையும் கூடத் தாக்க வேண்டாம் என்றாராம். மற்ற நம்பிக்கைகளைத் தாக்காமலேயே அவற்றை மேலுயர்த்த வேண்டும் என்றாராம். ஆக, மற்ற நம்பிக்கைகளை மேலுயர்த்தப்பட வேண்டியவை என இராமகிருஷ்ணர் கருதினார் என்றாகிறது. விவேகநந்தரைப் போற்றுபவர்கள் இப்படி இராமகிருஷ்ணர் எங்கே சொன்னார் எனத் தேடிப்பார்த்தால் ஏமாற்றமடைவர்.. சனாதனமதத்தை என்றென்றைக்கும் அழியாத மதம் என இராமகிருஷ்ணரை முன்னிறுத்திப் பேசும் அவரது சீடர், “இந்த மதத்தைப் போதிக்க உகந்த மண் இந்திய மண், உகந்த மக்கள் இந்துக்கள்” என்று கூறியதன் ஊடாக, “இந்தியா”, “இந்திய மண்” “இந்து” ஆகியவற்றை ஒன்றாக நிறுத்தி இந்துத்துவ அரசியலுக்குக் கால்கோள் இட்டார் என்பது நினைவிற்குரியது. “தேசம்” என்கிற கருத்தாக்கத்தை முன்னிறுத்தாத, சொல்லப்போனால் வெறுத்த இராமகிருஷ்ணரின் பெயரால் இதைச் செய்வதற்கு விவேகாநந்தர் இம்மியும் தயங்கவில்லை.
நான்கு பார்ப்பனர்களை விமர்சித்தார், “அழுகிப் போன சாதிமுறையை ஒழிக்கவேண்டும்” எனச் சொன்னார் என்றெல்லாம் விவேகாநந்தர் குறித்துக் கட்டமைக்கப்பட்ட பிம்பமும் இப்படித்தான். பார்ப்பனர்கள் அதிகார ஆசை கொண்டவர்கள் எனச் சொல்லும் விவேகாநந்தர்தான் இதை அவர்களின் ஒரே ஒரு பலவீனம் எனவும் மற்றபடி அவர்கள் நல்லவர்கள், ஒழுக்கமானவர்கள், சொத்து சேர்க்காதவர்கள் எனவும் சொல்கிறார். “புத்தர் முதல் ராம் மோகன் ராய் வரை” இந்தச் சமூகத்தைச் சீர்திருத்த வந்த எல்லோரும் “மதம், சாதி ஆகிய இரு நிறுவனங்களையும் முற்றாக வீழ்த்த நினைத்தார்கள், தோற்றார்கள்” என்கிறார். ஆக சாதியை முழுமையாக வீழ்த்த வேண்டியதில்லை, வீழ்த்தவும் முடியாது என்றாகிறது.
“மத ஆசாரியார்கள் (priests) என்ன சொன்ன போதிலும் சாதி என்பது ஒரு கெட்டி தட்டிப்போன நிறுவனம். அது தன் சேவையை முடித்து விட்டது. இப்போது அது தன் அழுகல் நாற்றத்தால் இந்தியாவை நிறப்பியுள்ளது. மக்களுக்கு அவர்கள் இழந்துபோன சமூகத் தனித்துவத்தை (social individuality) மீட்டளிப்பதன் முலமே அதை நீக்க முடியும்” – என்கிற விவேகாநந்தரின் வாசகங்களை வைத்துத்தான் அவர் பெரிய சாதி எதிர்ப்பாளர் என்கிற பிம்பம் இங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகங்கள் தெளிவாக சாதி ஒழிப்பை வற்புறுத்தி ஏதும் சொல்லவில்லை என்பது தவிர இதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைத் தொடர்ந்து வாசித்தால் அதிர்ச்சி அளிக்கும்.
விவேகாநந்தர் பேசுகிறார்: “சமஸ்கிருதத்தில் ‘ஜாதி’ என அழைக்கப்படும் உயிர்கள்தான் (species) படைப்பின் அடிப்படைத் தத்துவம். எல்லா வேதங்களும் சொல்வது., ‘நான் ஏகன்; நான் அநேகன் ஆனேன்’ என்பதைத்தான்.. படைப்புக்கு முன் உள்ளது ஒருமை; படைப்பு என்பது பன்மை. இந்தப் பன்மைத்துவம் முடிவுக்கு வரும்போது படைப்பு அழியும். எந்த உயிர்களும் ஊக்கத்துடனும் செயல்திறனுடனும் இருந்தால் அது பன்மைத்துவத்தை வெளிப்படுத்தும். இது முடிவுக்கு வரும்போது அது சாகிறது. ஆக, ஒரு தனிநபர் தனது இயல்பை, அவனது பிரகிருதியை, அவனது ஜாதியை வெளிப்படுத்தும் சுதந்திரம்தான் ஜாதி என்பதன் மூலக் கருத்து. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அப்படித்தான் இருந்து வந்தது. சமீபத்திய நூல்களிலும் கூட சம பந்தி போஜனம் மறுக்கப்படவில்லை. நம் தொல் பழ நூல்களிலும் கூடசாதிகளுக்கிடையே திருமணம் மறுக்கப்படவில்லை. பின் ஏன் இந்தியா வீழ்ந்தது? ஜாதி குறித்த இந்தக் கருத்தை விட்டொழித்ததால்தான்..” என்ன சொல்கிறார் விவேகாநந்தர்? சாதியை அதாவது ஒருவரது இயல்பை வெளிப்படுத்துவதுதான் சுதந்திரமாம். ஒருவருக்கு மலம் அள்ளுவது இயல்பாக இருக்கலாம். இன்னொருவருக்கு மந்திரம் சொல்வது இயல்பாக இருக்கலாம். அதை அவர்கள் வெளிப்படுத்தும் சுதந்திரம் அழியும்போது சமூகத் தனித்துவம் பாழாகிறது. இன்று அப்படித்தான் ஆகிவிட்டது. இந்தியாவின் அழிவிற்கு அதுவே காரணம்.
இனி மீண்டும் விவேகாநந்தர்: “இப்போதுள்ள ஜாதி என்பது உண்மையான ‘ஜாதி’ அல்ல. மாறாக அதன் முன்னேற்றத்திற்கான தடை. இன்றுள்ள அமைப்பு ஜாதியுடைய சுதந்திரச் செயல்பாட்டைத் தடுத்துவிட்டது. எந்த ஒரு கெட்டிதட்டிப்போன வழமை அல்லது உரிமை அல்லது பரம்பரைத் தன்மையான வகுப்பு (class) என்பதும் உண்மையில் ஜாதியின் வீச்சைத் தடுக்கிறது. எந்த ஒரு தேசமும் எப்போதெல்லாம் இந்தப் பன்மை நிலையை (variety) இழக்கிறதோ அப்போது அது சாக நேர்கிறது. என் நாட்டு மக்களே நான் உங்களுக்குச் சொல்வது இதுதான். நீங்கள் ஜாதியை அழித்ததால்தான் இந்தியா வீழ்ந்தது, எந்த ஒரு உறைந்த பிரபுத்துவம்(frozen aristocracy) அல்லது முன்னுரிமை பெற்ற வர்க்கம் (privileged class) என்பதெல்லாமும் ஜாதியின் மீதான தாக்குதல்தானே ஒழிய அதுவே ஜாதி அல்ல. . ஜாதி அதன் வீச்சைப் பெறட்டும். ஜாதிக்குத் தடையாக உள்ள அனைத்தும் உடைந்து சிதறட்டும். நாம் மேலெழுவோம்…”
இதுதான் விவேகாநந்தர் சாதி மீது வைக்கும் “விமர்சனம்”. அவரது “விமர்சனத்திற்காக” அவர் தேர்ந்து கொண்ட மொழி எத்தனை சிடுக்குகள் நிறைந்ததாக உள்ளது என்பதையும் கவனியுங்கள். ஜாதி என்பது ஒருவரது இயல்பின் அடியாக உருவாவது. அந்த இயல்பை அவர் நிறைவேற்றி வரும்வரை அது அற்புதமான ஒன்றுதான். வருணம், பரம்பரை என்கிற வடிவில் கெட்டிதட்டிப் போக விடாமல் ஜாதி என்பது சமூகத்தில் சுதந்திரமாக நிலவ விட வேண்டும். புத்தர் முதலானோர் சாதியை முற்றாக ஒழித்துவிடுவது என்று கூறியது அபத்தம் என விவேகாநந்தர் கூறியதன் பொருள் விளங்குகிறது.
இந்தியா பல ஜாதிகளை மட்டுமல்ல, மொழிகளை, இனங்களைக் கொண்ட ஒரு நாடு. ஆனாலும் இந்தியா என்பது இந்த வேற்றுமைகளை எல்லாம் கடந்து ஒரு ஒருமையாக நின்று உலகிற்கு வழிகாட்டும் என்பதாக விவேகாநந்தர் முன்வைக்கும் சிந்தனைகள் பலவும் இன்றைய ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க ஆகியவற்றின் திட்டங்கள், இலட்சியங்கள் ஆகியவற்றுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சமஸ்கிருதத்தை “ஒரு மகத்தான புனித மொழி” எனச் சொல்லும் விவேகாநந்தர், பிற மொழிகள் அனைத்தையும் “(அதனுடைய) வெளிப்பாடுகள் (manifestations)” என்கிறார். பிற மதங்களை தாய் மதமான இந்து மதத்தை நோக்கிய வளர்ச்சியின் இடை நிலைகள் (phases) என அவர் முன்வைத்ததின் இன்னொரு பக்கம்தான் தமிழ் உள்ளிட்ட பிற இந்திய மொழிகளை சமஸ்கிருதத்தின் வெளிப்பாடுகள் என அவர் கூறுவதும் என்பதை நான் கவனிக்கத் தவறலாகாது. “ஆரியர்” என்கிற இன அடையாளம், “சமஸ்கிருதம்” என்கிற மொழி அடையாளம், “இந்து மதம்” என்கிற மத அடையாளம் ஆகியவற்றின் ஊடாக அவர் இந்தியாவை வரையறுக்கிறார்.
“சமஸ்கிருதம் என்பது (இந்தியாவின்) மொழியியல் தீர்வாக அமைவதைப் போல, ‘ஆரிய’ என்பது இனவியல் தீர்வாக அமைகிறது. சமூக அரசியல் பிரச்சினைகளுக்கும், கலாச்சாரம், வளர்ச்சி ஆகியவை பல்வேறு மட்டங்களில் ஏற்றத் தாழ்வுடன் இருப்பதற்கும் பிராமணத்துவமே தீர்வாக உள்ளது” என்பது விவேவேகாநந்தர் நம் நாட்டுப் பிரச்சினைகளுக்கு முன்வைக்கும் இறுதித் தீர்வு.
இந்தியாவிற்கு இத்தகைய மகத்தான கலாச்சாரத்தைத் தந்ததற்காக ஆரியர்களை மனதாரப் பாராட்டும் விவேகாநந்தர், இந்தக் கலாசாரம் சாதி அமைப்பின் ஊடாகக் கையளிக்கப்பட்டது என நன்றி ததும்புகிறார்.
“அது (அதாவது ஆரியக் கலாசாரத்தின் கொடையான சாதி அமைப்பு) முழு இந்தியாவையும் பொருள் அல்லது வாளால் (wealth or sword) வழி நடத்தப்படாமல் ஆன்மீகத்தால் தூய்மை செய்து கட்டுப்படுத்தப்பட்ட அறிவுத் திறனின் வழிகாட்டலில் வைத்தது. இந்தியாவின் தலைமை ஜாதியாக உள்ளவர்கள் உயர்ந்த ஆரியர்கள்- அதாவது பிராமணர்கள்” என்கிற விவேகாநந்தரின் கூற்றை நாம் மிகக் கவனமாக ஆராய வேண்டும். ‘பொருளால்” வழிநடத்தப்படுவது என்பது கிறிஸ்தவதையும். வாளால் வழி நடத்தப்படுவது என்பது இஸ்லாமையும். ஆன்மீகம் தழுவிய அறிவுத் திறன் மிக்க பார்ப்பனர்களால் வழி நடத்தப்படுவது என்பது இந்து மதத்தையும் இங்கே குறியீடு செய்கின்றன.. இப்படிப் பார்ப்பனர்களால் வழிநடத்தப்படும் இந்து மதம் ஆரியர்களின் கொடை என்பது விவேகாநந்தர் வைக்கும் முத்தாய்ப்பு.
பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகிய வருணங்களைப் பிறவி அல்லது கர்ம பலன் என்கிற வடிவில் வரையறுத்துப் பெயர் சூட்டப்பட்ட (designated) சாதிகளாகத் தான் கருதவில்லை என விவேகாநந்தர் சில இடங்களில் கூறுகிறார். அதாவது அப்படிப் பிறவி அடிப்படையில் வரையறுக்கப்படாத யாரும் இந்த நிலைகளை அடையலாம் என்கிற பொருளில் அவர் இதைச் சொல்கிறார். வாளின் மூலம் அதிகாரம் பெற்ற யாரும் சத்திரியராகலாம்; கல்வியின் ஊடாக யாரும் பிராமணர் ஆகலாம்; சொத்தின் மூலம் யார் ஒருவரும் வைசியர் ஆகலாம் என்பது விவேகாநந்தரின் துணிபு. அப்படி மேல் நிலையை அடைந்தோர் அந்த உயர் நிலையின் பெருமைகளைக் தக்க வைப்பவர்களாக இருக்க வேண்டும்.
இங்கே நமக்கொரு அய்யம் எழுகிறது. அப்படியானால் ஒரு சூத்திரர் கல்வியின் மூலம் பிராமணர் ஆக இயலுமா? அது முடியாது என்பதுதான் விவேகாநந்தரின் கருத்தாக உள்ளது. சூத்திரர்களைப் பொருத்தமட்டில் அவர்கள் இப்படி மேல் நிலை அடைய வேண்டுமானால், “நீங்கள் உங்களின் சாதி முழுமையையும் முதலில் மேல் நிலைக்குக் கொண்டு வரவேண்டும். பிறகு உங்களின் மேல் நோக்கிய வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்திவிட இயலாது. எனவே அடித்தளச் சாதியினரைப் பொருத்த மட்டில் அவர்கள் உயர் சாதி நிலையை அடைய வேண்டுமானால் யாரொருவரும் அதைத் தம் சொந்த முயற்சியில் சாதித்துவிட இயலாது. அவர்கள் ஒட்டு மொத்தமாய் அதற்கு ஆசைப்பட வேண்டும். அந்தச் சமூகம் முழுமையுமே அதற்குத் தம்மைத் தகுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான விதி முறைகளை “இந்திய மூதாதைகளான ஆரிய பிராமணர்கள்” உருவாக்கியுள்ளனர் என்கிறார். இதை எல்லாம் செய்யாமல் வெறுமனே சாதி அமைப்பையும் பார்ப்பனீயத்தையும் திட்டிக் கொண்டு இருந்தால் போதாது என்கிறார்.
“”உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் நான் சாதிகளைப் பார்த்துள்ளேன். ஆனால் எங்கும் அவற்றின் திட்டங்களும் நோக்கங்களும் இந்தியாவில் உள்ள அளவிற்கு உன்னதமானவைகளாக இல்லை. ஜாதி என்பது இப்படித் தவிர்க்க இயாலாதது என ஆகிற போது தூய்மை, பண்பாடு, தியாகம் ஆகியவற்றால் அடையாளப் படுத்தப் படும் ஜாதியையே நான் ஏற்றுக் கொள்வேன். டாலர்களால் அடையாளப்படுத்தப்படும் ஜாதியை அல்ல, எனவே (இந்தச் சாதி அமைப்பின் மீது) கண்டன வார்த்தைகளைக் கொட்டாதீர்கள். வாய்களை மூடிக் கொள்ளுங்கள். இதயங்களைத் திறவுங்கள்.”
இதுதான் விவேகாநந்தர் நமக்குச் சொல்லும் சேதி விவேகாநந்தரைத் தூக்கிப் பிடிப்போர் அவரின் ஊடாக நமக்குச் சொல்லும் சேதியும் கூட.
ஒரு பின்னிணைப்பு: மகாத்மா காந்தியும் விவேகாநந்தரும்
முக நூலில் விவேகாநந்தர் குறித்து நான் சில குறிப்புகளைப் பகிர்ந்தபோது எதிர் கொண்ட எதிர்வினைகளில் ஒன்று, “காந்தியும் இதைத் தானே சொன்னார். அவரது செயல்பாடுகளை வியக்கும் நீங்கள் ஏன் விவேகாநந்தரை மட்டும் விமர்சிக்கிறீர்கள்?” என்பது. காந்தி எந்நாளும் இந்து மதமே முழுமையான மதம் மற்றவை அந்த நிலையை எட்ட முயற்சிப்பவை எனச் சொன்னதில்லை. அவரது பிரார்த்தனைக் கூட்டங்கள்தான் சர்வ சமய ஒற்றுமையின் அடையாளங்களாக இருந்தன. அங்கே இந்துக்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் என அனைவரும் தினந்தோறும், ஆம் ஒவ்வொரு பிரார்த்தனைக் கூட்டங்களிலும் ஒன்றாகக் கடவுள்களைப் பாடினர். தீண்டாமைக்கு எதிராகக் காந்தியும் பேசினார், விவேகாநந்தரும் பேசினார்.
உண்மைதான். ஆனால் காந்திதான் தீண்டத் தகாதவர்களை இந்துக் கோவில்களுக்குள் அழைத்துச் சென்றவர். ஆலய நுழைவுப் போராட்டங்களை வெற்றிகரமாக நடத்தியவர்.இதனால் அவரை “வருண சங்காரம் செய்ய வந்தவர்” என அன்றைய சங்கராச்சாரியாரின் பண உதவியுடன் நடத்தப்பட்ட ‘ஆர்ய தர்மம்’ எனும் இதழ் தூற்றியது. காந்தியின் வருகையை ஒட்டி தமிழகக் கோவில்கள் சாத்தப்பட்டன. விவேகாநந்தர் சாதி, தீண்டாமை முதலானவற்றிற்கு எதிராக எந்த முயற்சிகளையும் மேற்கொண்டதில்லை. இந்து மத நிறுவனங்களின் எதிர்ப்புகள் எதையும் அவர் சந்திக்க நேர்ந்ததும் இல்லை.
மகாத்மா காந்தியயைப் பற்றிய எதிர்மறையான பிம்பமும், விவேகாநந்தர் பற்றிய உயர் மதிப்பீடும் ஒரே அடிப்படையிலிருந்துதான் எழுகின்றுன. ஆழ்ந்த ஆய்வுகள் இன்றி, வெறும் கேள்வி ஞானத்தின் அடிப்படையில் பொதுப் புத்தியில் பதிக்கப்பட்டவைதான் இந்த இரு பிம்பங்களுமே. இதைப் புரிந்து கொள்ள வெறும் மேற்கோள்கள் பயன்படாது. ஒட்டுமொத்தமான கருத்துக்கள் மற்றும் அதன் அடிப்படியிலான செயல்பாடுகள் ஆகியவை குறித்த மதிப்பீடு முக்கியம்.
“ஒரு மதத்தை விரோதித்துக் கொண்டுதான் அந்த மதத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டுமா? மதத்துடன் இணைந்து அதைச் செய்ய இயலாதா என்பது இன்னொரு கேள்வி. இதற்குப் பெயர்தான் கொக்கு தலையில் வெண்ணை வைத்துப் பிடிப்பது என்பது. ஒரு மதத்தின் அடிப்படைகளை அசைத்துச் சீர்திருத்தம் செய்யும் முயற்சியை நிச்சயம் அந்த மதம் எதிர்க்கத்தான் செய்யும். மகாத்மா காந்தியை விடவா இந்து மதத்தை அணைத்துச் சென்றவர் உலகில் இருக்க முடியும். ஆனால் அவரை அந்த இந்து மத அடிப்படைவாதிகள்தான் சுட்டுக் கொன்றனர். ஏன்? அவர் என்ன கோவிலை உடைத்தாரா? மதமாற்றம் செய்தாரா? சாகும்போதும் ‘ஹே ராம்’ எனச் சொல்லித்தானே வீழ்ந்தார். அவர் ‘இந்துராஷ்டிரம்’ அமைவதற்கு எதிராக இருந்தார். தீண்டத் தகாதவர் என இந்து மதம் யாரை ஒதுக்கி வைத்ததோ அவர்களை அழைத்துச் சென்று ஆலயப் பிரவேசம் நடத்தினார். அதுதான் இந்து மத அடிப்படைவாதிகளுக்கு எரிச்சல்.சங்கரசாரிக்கும் காந்திக்கும் நடந்த உரையாடலைக் கொஞ்சம் தயவு செய்து படித்துப் பாருங்கள். விவேகாநந்தருக்கும் இந்து மதத்திற்கும் அப்படி ஏதும் உரசல் நிகழ்ந்ததா? விவேகாநந்தர் அப்படி மதத்தை அரவணைத்துச் சென்று எங்காவது அவர் வெறுப்பதாகச் சொன்ன சாதீயத்திற்கும், தீண்டாமைக்கும் எதிராகப் பெரிய அளவில் சமபந்தி போஜனங்களையோ, ஆலயப் பிரவேசங்களையோ நடத்தினாரா? அவர் இந்து மத விழிப்பைப் பற்றிப் பேசியதை எல்லாம், அதேபோல இந்தியாவின் எழுச்சியைப் பற்றிப் பேசியதை எல்லாம் தொகுத்துப் பாருங்கள். அப்போது விளங்கும் அவர் இராண்டையும் பிரித்துப் பார்க்கவில்லை என.
“விவேகாநந்தரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர்கள் செய்வதற்கெல்லாம் அவர் பொறுப்பாகமுடியுமா?” என்பது இன்னொரு கேள்வி. நான் சொல்வது அவரது கருத்துக்கள் வெறும் ஆன்மீகம் சார்ந்ததோ, இந்துமதப் பெருமையைப் பேசுவதாகவோ மட்டும் இல்லை, அது எப்படி political hinduism த்திற்கு கால்கோள் இடுவதாக இருந்தது என்பதைத்தான் சுட்டிக் காட்டியுள்ளேன். இந்திய எழுச்சியை அவர் இந்து மதத்தின் எழுச்சியுடன் இணைக்கிறார். இரண்டையும் பிரிக்க இயலாததாக்குகிறார். மோடியும் ஆர்.எஸ்.எஸ்சும் விவேகாநந்தரை உயர்த்திப் பிடிப்பதும், இராமகிருஷ்ணரை ஓரங் கட்டுவதும், காந்தியைப் பகையாக நினைப்பதும் தற்செயலானதல்ல; மிகவும் தர்க்கபூர்வமான விளைவு (logical end) .
“காந்தி ஒரு அரசியல்வாதி. அவர் தீண்டாமையை எதிர்த்து நடத்திய இயக்கங்கள் போல விவேகாநந்தரும் செய்வார் என எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?” என்பது அடுத்த கேள்வி. அவர் ஒன்றும் சாதி, மத சீர்திருத்தங்களை இலக்காக்கிச் செயல்பட்டுக் கொண்டிருந்தவர் அல்ல. பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து மிகப் பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தவர். இதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை என அவர் ஒதுங்கவில்லை. இது அவரது ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலுக்கு மக்களைத் திரட்டும் பணியைக் கூடப் பாதிக்கலாம் என்ற போதிலும் அவர் தயங்கவில்லை. “விவேகாநந்தர் கோவில் வழிபாட்டில் எல்லாம் ஆர்வங்காட்டாதவர், அதனால் இதையெல்லாம் செய்யவில்லை” என்பதெல்லாம் அபத்தம். காந்தி மட்டும் என்ன கோவில் வழிபாட்டில் ஆர்வங் காட்டினவரா? அவர் கோவில்களுக்குச் செல்வதை எல்லாம் வழக்கமாகக் கொண்டவர் அல்ல. அம்பேத்கர், பெரியார் எல்லாம் ஆலய நுழைவுப் போராட்டத்தை நடத்தினார்களே அவர்களெல்லாம் என்ன கோவில் வழிபாட்டில் ஈடுபாடுடையவர்களா? விவேகாநந்தர் ஒன்றும் வெறும் ஆன்மீகப் பிராச்சாரம் செய்து கொண்டிருந்த ஒரு சாமியார் இல்லை. இராமகிருஷ்ணரின் பெயரால், முற்றிலும் அவருக்குப் பொருந்தாத ஒரு வலுவான அமைப்பை நிறுவியவர் அவர். இராமகிருஷ்ணர் தன்னிடம் சொல்லிச் சென்றதாக அவர் பின்னாளில் சொல்லித் தன்னை நியாயப்படுத்திக் கொண்டதற்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை. இராமகிருஷ்ணர் குறித்து ஊன்றிப் படித்தவர்களுக்குத் தெரியும் விவேகாநந்தர் இராமகிருஷ்ணரின் கருத்தாகக் கூறிய பலவும் இராமகிருஷ்ணருக்குப் பொருந்தாதவை என்பது.