தேசம் என்கிற கற்பிதத்தின் வன்முறை : அது இன்று வங்கதேச இந்துக்கள் மீது

“தேசம் ஒரு கற்பிதம். அது இயற்கையான ஒன்றல்ல: அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு” என்கிற கருத்தை நான் முதல் முதலாகத் தமிழுக்குக் கொண்டு வந்தபோது, அப்பா எத்தனை எதிர்ப்புகள்! இன்னும் அந்த எதிர்ப்புகளின் மத்தியில்தான் வாழ்ந்து கொண்டுள்ளேன்.. எனினும் அதற்குப் பிந்திய கால் நூற்றாண்டு கால அனுபவத்தில் என்னுடைய இந்தக் கருத்தில் எள்ளளவும் மாற்றம் செய்துகொள்வதற்கு எனக்கு எந்தத் தேவையும் ஏற்பட்டுவிடவில்லை.

எத்தகைய அரசியல் முன்னெடுக்கப்படுகிறதோ அந்த நோக்கிலிருந்து தேசத்தின் அடிப்படை அடையாளம் கட்டமைக்கப்படுகிறது. அது மொழி, இனம், மதம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் எதுவும் இயற்கையானதல்ல என்பதுதான். Yes, it is constructed, not natural. அது மாத்திரமல்ல, அந்த அடிப்படையில் தேசம் வரையறுக்கப்படும்போது, அந்த வரையறையால் அனைத்து மக்களாலும் கையடக்கப்படுவதில்லை. It is not a remainder less grasp. ஏதேனும் ஒரு பிரிவினர் அவ் வரையறையின் “மிச்சங்களாக” எஞ்சியே விடுகின்றனர். கட்டமைக்கப்படும் தேசம் அவர்களின் மீதான வன்முறையாகி விடுகிறது.

பாகிஸ்தான் என்றொரு தேசம் சென்ற நூற்றாண்டின் இடைப்பகுதியில் இவ்வாறு கட்டமைக்கப்பட்டபோது இப்படியான அடையாளமாக “மதம்” அதன் அடிப்படையாகியது. ஆனாலும் இந்த அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட பாகிஸ்தானை “இஸ்லாம்” என்கிற மதத் அடையாளத்தால் இறுக்கிப் பிடித்து நிறுத்திவிட இயலவில்லை. வங்க தேச மக்கள் அதைத் தன் மீதான வன்முறையாகவே உணர்ந்தனர்.

விளைவு, 1973ல் பாகிஸ்தானாகவும் வங்க தேசமாகவும் உடைந்தது.

எனினும் இஸ்லாமை தேசத்தின் அடையாளமாகக் கற்பிதம் செய்த இஸ்லாமியவாதிகளால் இதை ஏற்க இயலவில்லை. முஜிபுர் ரஹ்மானின் தலைமையில் எழுந்த விடுதலைப் போரில் ஜமாத் ஏ இஸ்லாமி பாகிஸ்தானின் படையுடன் இணைந்து செயல்பட்டது. வங்க விடுதலையை ஆதரித்த அறிஜீவிகள் கொல்லப்படுவதற்கும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதற்கும் அது துணை போகியது. இவர்கள் மீது போர்க்குற்ற விசாரணைனை இப்போது நடைபெறுகிறது. போர்க் குற்றங்கள் புரிந்த ஜமாத் ஏ இஸ்லாமிகளுக்கு ஆயுள் தண்டனை போதாது என இன்ற வங்க தேச முஸ்லிம் இளைஞர்கள் போராடுகின்றனர் (ஷபாகா இயக்கம்).

முன்னதாக, வங்க மொழியினராக இருந்தபோதிலும் மேற்கு வங்கத்தினரும் கிழக்கு வங்கத்தினரும் மதத்தால் வேறுபட்டதை அடையாளமாகக் கொண்டு வங்க தேசத்தை பிரிட்டிஷ் அரசு கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரித்தது (1905). மே. வங்கத்தில் வாழ்ந்த 25 சதம் முஸ்லிம்களும், கிழக்கு வங்கத்தில் இருந்த 8.5 சதம் இந்துக்களும் சிருபான்மை ஆயினர்.

தேசங்கள் என்பன ஒரு மிகச் சமீபத்திய கற்பனை. மூதாதையரின் நாடு என்கிற உணர்வு அதனிலும் பழையது. வாழ்வோடும், வாழ்நிலை உத்தரவாதங்களில் ஒன்றான நிலத்தோடும் இரத்த உறவு கொண்டது அது. ஆனால் ஜமாத் ஏ இஸ்லாமியைப் பொருத்த மட்டில் ஒரு சராசரி கிழக்கு பாகிஸ்தானி அல்லது வங்கதேசத்தவரின் (normative citizen) அடையாளம் என்பது oru “முஸ்லிம் வங்க மொழி ஆண்” அல்லது “வங்க மொழி முஸ்லிம் ஆண்” என்பதுதான். அங்கிருந்த 8.5 சத இந்துக்களும் அவர்களைப் பொருத்தமட்டில் வங்கதேசிகளல்ல இந்தியாவில் உள்ள இந்துத்துவவாதிகள் எப்படி ஒரு சராசரி இந்திய அடையாளத்தை “இந்து ஆண்” என்கிற வடிவில் வரையறுத்து உணர்கின்றனரோ அப்படி.

இன்று ஷேக் ஹசீனா அரசு தன் பலவீனங்கள், ஊழல்கள் ஆகியவற்றிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள போர்க் குற்ற விசாரணை என்பதையும் அதற்கான மக்கள் ஆதரவையும் பயன்படுத்திக் கொள்கிறது. பொருளாதார ரீதியிலும், இயக்கக் காட்டுப்பாடு என்கிற அடிப்படையிலும் மிக வலுவான ஜமாத் ஏ இஸ்லாமி இயக்கம் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிரான போராட்டங்களை (எ.கா ஹெஃபாஜெட் இயக்கம்) முன்னெடுக்கிறது.

இன்னொரு பக்கம் ஜமாத் ஏ இஸ்லாமியின் எதிர்வினை 2001 லும், பின்னர் இன்றைய அரசியல் சூழலிலும் வங்கதேச இந்துச்சிறுபான்மையினர் மீது திரும்பியுள்ளது ஏனெனில் இவர்கள் “சராசரி வங்க தேச அடையாளத்தை”ச் சுமந்தவர்களல்ல. பெரிய அளவில் அவர்கள் தாக்கப்பட்டும், அவர்கள் சொத்துக்கள் அழிக்கப்பட்டும், பெண்கள் வான்முறைக்குள்ளாகப்பட்டும் உள்ளனர்

ஒன்றைச் சொல்ல வேண்டும் இந்துச் சிறுபான்மையினர் மீதான் இவ்வன்முறைக்குக் காரணமாக வெறும் ஜமாத் ஏ இச்லாமி மற்றும் அதன் கூட்டணிக் கட்சியாகிய கலிடா சியாவின் வங்க தேசியக் கட்சியை மட்டும் சொல்லி நிறுத்தி விட இயலாது. ஓரளவு மதச்சார்பற்ற அடையாளத்திற்குரிய ஹஸீனாவின் அவாமி லீகிற்குள்ளும் கூட இந்துக்களை அந்நாட்டிற்கு உரியவர்களாகப் பார்க்காத நிலை ஏற்படுள்ளது.

குஜராத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்ட கதை அல்லது நரேந்திர மோடியின் இந்து ராஷ்டிரம்

அகமதாபாத்திலிருந்து செயல்படும் ‘நவ்சர்ஜன்’ எனும் தொண்டு நிறுவனம், ‘நீதிக்கும் மனித உரிமைகளுக்குமான ராபர்ட் எஃப் கென்னடி மையம்’ உடன் இணைந்து “தீண்டாமையைப் புரிந்துகொள்ளல்” என்றொரு ஆய்வை குஜராத்தில் மேற்கொண்டது. சுமார் 1600 கிராமங்களை முறைப்படி ஆய்வு செய்து அது அளித்த அறிக்கை ஏராளமான தரவுகள் மற்றும் பகுப்பாய்வுகளுடன் 2009ல் வெளி வந்தது.

இந்த அறிக்கை அளிக்கும் முடிவைச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம் : இன்னும் குஜராத் கிராமங்களில் 98 சதம் தலித்கள் தீண்டாமைக் கொடுமையை அநுபவிக்கின்றனர் என்பதுதான். ஆலய நுழைவு மறுக்கப்படுதல், பள்ளிகளில் தலித் குழந்தைகள் மீது தீண்டாமை கடைபிடிக்கப்படுதல், தேநீர்க் கடைகளில் இரட்டை கிளாஸ் முறை முதலியன நடைமுறையில் உள்ளதை விரிவான ஆதாரங்களுடன் நவ்சர்ஜன் வெளியிட்டிருந்தது.

இது குறித்து உள்ளூர் மற்றும் தேசிய நாளிதழ்கள் விரிவாக செய்திகள் வெளியிட்டிருந்தன. ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் தொடர்ந்து மூன்று நாட்கள் வந்த செய்தித் தலைப்புகள் வருமாறு:

1. “குஜராத்தில் தலித்கள் கோவில்களுக்குள் நுழைய முடியாது,” – டிசம்பர் 7, 2009
2. “அதிரும் குஜராத்?” (Vibrant Gujarat) : 98 சத தலித்கள் மத்தியில் இரட்டை கிளாஸ் முறை” – டிசம்பர் 8, 2009. 3. “தலித் குழந்தைகள் மதிய உணவுத் திட்டத்தில் படுகிறஅவமானங்கள்” -டிச 9, 2009. டைம்ஸ் ஆப் இந்தியா அப்படி ஒன்றும் பா.ஜ.க எதிர்ப்பு நாளிதழல்ல என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்தி மொழியிலும் இவ் அறிக்கை வெளியிடப்பட்டது. ‘அதிரும் குஜராத்’ தின் லட்சணம் இதுதானா என்கிற கேள்வியும் பரவலாக எழும்பியது.

ஒரு பொறுப்புள்ள அரசு என்ன செய்திருக்க வேண்டும்? இந்த அறிக்கையை அப்படியே ஏற்காவிட்டாலும் ஒரு குழுவை அமைத்து மேலும் ஆய்வு செய்து இந்தக் குறைபாடுகளை ஏற்றுத் தீர்க்க முயற்சித்திருக்க வேண்டும்.

ஆனால் மோடி என்ன செய்தார் தெரியுமா?

அப்படியான நிலை இல்லை என ஒரு முடிவைச் சொல்லுமாறு அவர் ஒரு குழுவை அமைத்தார். ‘சுற்றுச் சூழல் திட்டமிடல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக் கழக மையம்’ (CEPT) எனும் நிறுவனத்தின் பேரா. ஆர்.பார்த்தசாரதி என்பவரின் தலைமையில் அப்பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் குழுவை நியமித்து, “சம வாய்ப்புகளில் சாதி வேறுபாட்டின் தாக்கம் : குஜராத் குறித்த ஓர் ஆய்வு” என்கிற பெயரில் ஒரு அறிக்கையை அளிக்கச் செய்தது.

இந்த ஆய்வு எத்தனை அபத்தமானது என்பதை டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் மூத்த பத்திரிக்கையாளர் ராஜீவ் ஷா தனது ‘True lies’ எனும் ப்ளாக்கில் அம்பலப் படுத்தியுள்ளார்.

“குஜராத்தில் சாதி வேறுபாடு எதார்த்ததில் இல்லை. அது பார்க்கிறவர்களின் பார்வையில்தான் உள்ளது” -(caste discrimination is a matter of perceptions) என்பதுதான் இந்த அறிக்கை சுருக்கமாகச் சொல்லும் செய்தி.

1589 கிராமங்களை ஆய்வு செய்து நவ்சர்ஜன் அளித்த 300 பக்க அறிக்கையை “முறையாக அரிசீலனை செய்வதற்குப் பதிலாக. குஜராத்தில் நிலவும் கொடிய தீண்டாமையை நியாயப்படுத்தும் செயலையே” மோடியின் பார்த்தசாரதி அறிக்கை செய்துள்ளது என்கிறார் ராஜிவ் ஷா. வெறும் ஐந்து கிராமங்களுக்கு மட்டுமே சென்று, அங்கு மேற்கொள்ளும் அரசு நலத் திட்டங்களைக் கூறி தீண்டாமைக் கொடுமை எல்லாம் இங்கில்லை என அறிவித்தது இந்த அறிக்கை.

“தலித்கள் மட்டும் (கிராமத் திருவிழாக்களின்போது அவர்களே பாத்திரங்களைக் கொண்டு வந்து சோற்றை வாங்கிச் செல்லச் சொல்வதும், அவர்களைக் கடைசியாகச் சாப்பிடச் சொல்வதையும் ஏன் தீண்டாமை எனப் பார்க்க வேண்டும். சாதி இந்துக்களுடன் சண்டை வேண்டாம் என்பதற்காக தலித் பெரியவர்களே இளைஞர்களிடம் நவராத்திரி முதலான கிராமத் திருவிழாக்களுக்குப் போக வேண்டாம் எனச் சொல்கிறபோது அவர்கள் திருவிழாக்களில் பங்கேற்கக் கூடாது எனச் சொல்வதில் அர்த்தமென்ன? அதை இளைஞர்களும் கேட்டுக் கொள்கிறார்கள். அப்படியும் போகிற தலித் இளைஞர்கள் அந்தத் திருவிழாவில் பங்கேற்காதபோதும் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்களே” – என்கிற ரீதியில் தீண்டாமை ஒதுக்கல்களை நியாயப்படுத்தி குஜராத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டதாக அறிவித்து, “பார்க்கிற பார்வையில்தான் தீண்டாமை இருக்கிறது. தீண்டாமை என்று இதையெல்லாம் சொன்னால் அப்புறம் எல்லாம் தீண்டாமைதான்” என்கிற ரீதியில் முடித்துக் கொண்டது பார்த்தசாரதி அறிக்கை.

பார்த்தசாரதி அறிக்கை தவிர அப்போதைய சமூகநீதித் துறை அமைச்சர் ஃபகிர்பாய் வகேலா தலைமையில் ஒரு அரசியல் சட்டக் ககுழுவையும் அமைத்து மோடி அரசு தனக்குத் தானே க்ளீன் சிட்’டும் கொடுத்துக் கொண்டது. தங்கள் கிராமத்தில் தீண்டாமை இல்லை என தலித்களிடம் வாக்குமூலம் அளிக்கச் சொல்லி எழுதி வாங்குமாறு அரசு அதிகாரிகள் பணிக்கப்பட்டனர். அந்தக் காகிதங்களை விரித்துக் காட்டி, “பாருங்கள் குஜராத் அதிருது… தீண்டாமையை நாங்க ஒழிச்சிட்டோம்” எனப் புன்னகைக்கிறார் நர மோடி.

குஜராத் அரசின் இந்த அணுகல்முறையை புகழ் பெற்ற சமூகவியல் அறிஞர் கன்ஷியாம் ஷா கண்டித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

குஜராத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்ட புராணம் இதுதான்.

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இதுதான் நிலைமை என்ற போதிலும் குஜராத் குறித்த இந்தச் செய்திகளில் நாம் சிலவற்றைக் கவனம் கொள்ள வேண்டியுள்ளது. அவை:

1. 98 சத தலித்கள் தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்பது மிக அதிகம். இங்குள்ள சில அமைப்புகள் ஏதோ திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்தான் இந்த நிலை என்பதாகப் பேசி வருவது எத்தனை அபத்தம் என்பதற்கு இது ஒரு சான்று

2. தலித்களின் நிலை இவ்வாறு இருப்பதற்கு ஏதோ குஜராத் அரசின் செயல்பாட்டுக்.குறைவு அல்லது திறமையின்மை மட்டும் காரணமல்ல. குஜராத் அரசின், குறிப்பாக நரேந்திர மோடியின் சாதி மற்றும் தீண்டாமை குறித்த வருணாசிரம அணுகல் முறையும் இதன் அடிப்படையாக உள்ளது என்பதற்கு ஒரு சான்று வருமாறு:

குஜராத் மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மத்தியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நரேந்திர மோடி ஆற்றிய உரைகளைத் தொகுத்து 2007ல் ஒரு நூலாக வெளியிடப்பட்டது குஜராத் அரசு.. நூற் தலைப்பு : ‘கர்ம் யோக்’, அதாவது கர்ம யோகம். ‘குஜராத் மாநில பெட்ரோலிய கார்ப்பொரேஷன்’ எனும் பொதுத்துறை நிறுவனம் இந்நூலின் 5000 பிரதிகளை அச்சிடும் செலவை ஏற்றுக் கொண்டது.

அந்த நூலில் கண்டுள்ள அவரது பேச்சுக்களில் ‘சாம்பிளுக்கு’ ஒன்று :

தலையில் மலம் சுமந்து அகற்றும் சஃபாய் கர்ம்தார் (துப்புரவுத் தொழிலாளர்) குறித்து மோடி இப்படிச் சொல்கிறார்:

“அவர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக இந்தத் தொழிலைச் செய்கிறார்கள் என நான் நினைக்கவில்லை. அப்படி இருந்தால் தலைமுறை தலைமுறையாக அவர்கள் இந்த மாதிரித் தொழிலைச் செய்து வருவார்களா? ஏதோ ஒரு காலகட்டத்தில், அவர்களின் இந்தப் பணி (1) ஒட்டு மொத்தச் சமூகம் மற்றும் இறைவனின் மகிழ்ச்சிக்காகாகச் செய்யப்படுகிறது என்பதையும் (2) கடவுளால் அவர்களுக்கு அருளப்பட்ட இந்தப் பணியை அவர்கள் செய்தே ஆக வேண்டும் என்பதையும் (3) இந்தத் துப்புரவுப் பணி ஒரு ஆன்மீக அனுபவமாகக் காலம் காலமாகத் தொடரப்பட வேண்டும் என்பதையும் ஒரு புத்தொளி அனுபவமாக அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். தலைமுறை தலைமுறையாக அவர்கள் இந்த அனுபவத்தை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். இவர்களின் முன்னோர்கள் வேறு வேலைகளுக்கு வாய்ப்பில்லாமல் இந்தப் பணியைத் தேர்வு செய்தார்கள் என நம்ப இயலவில்லை” (கர்ம்யோக், பக். 48,49).

தமிழகம் உட்பட நாடெங்கிலும் இதற்குக் கடுமையாக எதிர்ப்புகள் எழுந்தவுடன் சுதாரித்துக் கொண்ட நரேந்திர மோட, அந்த 5000 நூற்பிரதிகளையும் வெளியில் விடாமல் அமுக்கிக் கொண்டார்.

ஆனால் மோடி தன் இந்தக் கொடூரமான ஆபாசக் கருத்துக்களை எந்நாளும் அமுக்கிக் கொண்டதில்லை என்பது இரண்டாண்டுகளுக்குப் பின் அவர் 9000 சஃபாய் கரம்சாரிகள் கூடியிருந்த ஒரு மாநாட்டில் பேசும்போது வெளிப்பட்டது. “மலம் அள்ளும் இந்தத் தொழில் பூசை செய்யும் தொழிலுக்குச் சமம்” என அம்மாநாட்டில் நர மோடி பேசினார்.

“பூஜை புனஸ்காரங்களுக்கு முன் கோவில் குருக்கள்கள் ஆலயத்தைத் தூய்மை செய்கின்றனர். நீங்களும் ஆலயப் பூசாரிப் பார்ப்பனர்களும் ஒரே தொழிலைத்தான் செய்கின்றீர்கள்..”

எப்படி இருக்கிறது கதை?

குஜராத் முழுவதும் இந்துத்துவ அமைப்புகள் “நீங்கள் இந்து ராஷ்டிரத்தின் (இந்தப்) பகுதிக்குள் நுழைகிறீர்கள்” என ஆயிரக் கணக்கில் சட்ட விரோதமான பலகைகளை நட்டுள்ளனர். இந்த இந்து ராஷ்டிரத்தின் இன்றைய நிலையைப் பார்க்கும்போது அன்று அண்ணல் அம்பேத்கர் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது, அண்னல் சொன்னார்:

“இந்து ராஷ்டிரம் என்பது நடைமுறைக்கு வந்தால் அது இந்த நாட்டுக்குப் பெருங் கொடுமையாக (greatest menace) அமையும். இந்துக்கள் என்ன சொன்ன போதிலும், இந்துயிசம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றிற்குக் கேடாக அமையும் (Hinduism is a danger to independence, equality and brotherhood) என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அது இவ்வாறு ஜனநாயகத்தின் எதிரியாக உள்ளது. இந்து ராஷ்டிரம் எதார்த்தமாவதைத் தடுக்க நாம் எல்லா முயற்சிகளிலும் இறங்க வேண்டும்” (பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை, பக்.358).

காந்தியும் காஞ்சியும் – [இந்து நாளிதழுக்கு மறுப்பு]

இந்து நாளிதழுடன் “ஆனந்த சுதந்திரம்” என்றொரு ‘விளம்பரதாரர் சிறப்பு இணைப்பு’ வழங்கப்பட்டுள்ளது. “காஞ்சி மகானும் காந்தி மகானும்’ என்பது கட்டுரைத் தலைப்பு. கா.சு வேலாயுதன் என்றொரு நபர் எழுதியுள்ளார்.

“இந்தியாவின் ஆன்ம சக்திகளான இரு பெரும் மகான்களிடையே நடந்த சந்திப்பு அது. ஒருவர் சுதேசி உணர்வும் சுதந்திரமும் தழைக்கத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். இன்னொருவர் சனாதன தர்மத்தையும் சுதர்மத்தையும் காப்பாற்ற வாழ்வையே தவமாக்கியவர்” – என்று தொடங்குகிறது கட்டுரை.

தென்னாட்டுச் சுற்றுப் பயணத்தில் இருந்த காந்தி பாலக்காட்டுக்கு அருகிலுள்ள நெல்லிச்சேரி என்னுமிடத்தில் சங்கராச்சாரி தங்கி இருந்ததை அறிந்து அவரைச் சந்ந்திக்க விருப்பம் தெரிவித்தாராம். ‘பெரியவரும்’ அவரை வரச் சொன்னாராம். ஒரு மணி நேரம் பேசினார்களாம். என்ன பேசினார்கள் என்று யாருக்கும் தெரியாதாம். ஆனால் அந்த சந்திப்பை இருவருமே மிக முக்கியமானதாகக் கருதினார்களாம். சுமார் 20 ஆண்டுகள் கழித்து சங்கராச்சாரி அனுப்பிய ஒரு செய்தியில் காந்தி அவரிடம் சுவாமி சிரத்தானந்தர் கொலை செய்யப்பட்டது குறித்து மனம் நொய்ந்து பேசினதாகவும், இன்னும் இதுபோன்ற படு கொலைகள் நடக்கும் என்பது குறித்து அச்சம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளாராம்..

இருபதாண்டுகள் குறித்து இப்படி உரிய ஆதாரங்கள் ஏதுமின்றி சங்கராச்சாரி கூறியுள்ளது இந்தச் சந்திப்பு குறித்த உண்மைகளை அறிந்தவர்களுக்கு வியப்பளிக்கிறது. அடுத்த இரு பத்தாண்டுகளில் கொல்லப்பட்டது காந்திதானே ஒழிய, இந்து சாமியார்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. நிற்க.

இப்போது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுக் குற்றவாளிக் கூண்டில் நிற்கும் ஜெயேந்திர சங்கராச்சாரியை விட ரொம்பவும் யோக்கியமான சங்கராச்சாரி எனவும், நிறையக் கற்றுத் தேர்ந்தவர் என்றும் “மகா பெரியவாள்” சந்திரசேகரேந்திரன் குறித்து நமது ஊடகங்கள் ‘இமேஜ் பில்ட் அப்’ பண்ணுவது வழக்கம். ‘தெய்வத்தின் குரல்’ எனும் அவரது உரைத் தொகுப்பு தமிழகத்தில் பல்லாயிரக் கணக்கான பிரதிகள் விற்பனையாகியுள்ளன.

காந்தியைப் பொருத்த மட்டில் அவர் எந்தச் சாமியார் பின்னாலும் போனவர் இல்லை. எந்த மடங்களையும் அவர் புனிதமாகக் கருதித் தரிசனைக்குச் சென்று வந்தவரில்லை. ஏன் எந்தக் கோவில்கள். புனித ஷேத்திரங்கள் ஆகியவற்றுக்கும் போய் வருவதையோ. யாகங்கள் வேள்விகள் புரிவதையோ, எடைக்கு எடை துலாபாரம் வழங்குவதையோ போன்ற அசட்டுத்தனகள் செய்வதை வழக்கமாகக் கொண்டவர் இல்லை.

அவர் நடத்திய பிரார்த்தனைக் கூட்டங்கள் சர்வ சமய ஒன்றுகூடல்களாகவே இருந்தன. இந்துக்கள், முஸ்லிம்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் எனப் பல சமயத்தாரும் ஒன்று கூடி, எல்லோரது கடவுளரையும், எல்லோரும் போற்றிப் புகழ்ந்தவையாகத்தான் அந்தப் பிரார்த்தனைக் கூட்டங்கள் அமைந்தன.

ஏற்றுக் கொண்டதில்லை. ராமன் அயோத்தியில் பிறந்தான் என்கிற நம்பிக்கை எதையும் அவர் முன்வைத்ததில்லை. ராமாயணத்தை வரலாறாக அவர் ஏற்றுக் கொண்டதில்லை. அவரைப் பொருத்த மட்டில் ராமன் என்பவன் ஒரு ‘லட்சிய மானுடன்’, ‘ராம ராஜ்யம்’ என்பது ஒரு லட்சிய அரசு அவ்வளவே.

சரி, இப்போது காந்தி, சங்கராச்சாரியைச் சந்தித்த கதைக்கு வருவோம். சந்திப்பு நடந்தது உண்மை. எத்தகைய பின்னணியில் அந்தச் சந்திப்பு நடந்தது எனக் காண்போம்.

இந்தியாவெங்கும் தீண்டமை ஒழிப்பு குறித்து காந்தி பேசத் தொடங்கியிருந்த காலம் அது. பின்னாளில் அது அரிஜன ஆலயப் பிரவேசமாக உருமாறியது. பெருந்திரளில் ஆதிக்க சாதியினரும் தலித்களும் இணைந்து ஆலையப் பிரவேசங்கள் நடந்தன. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் காங்கிரஸ் தலைவர் வைத்தியனாத அய்யரின் தலைமையில் இதுகாறும் ஆலய நுழைவு மறுக்கப்பட்டவர்கள் ஆலயத்தில் நுழைந்த வரலாற்றையும் அதற்குச் சனாதன சமுக்கங்களிலிருந்து பெரிய அளவு எதிர்ப்பு வந்த வரலாற்றையும் நாம் அறிவோம்.

இன்னொரு பக்கம், பால்ய மணத்திற்கு எதிராக ஹர விலாஸ சாரதரும், தேவதாசி முறைக்கு எதிராக முத்து லட்சுமி ரெட்டியும் மசோதாக்கள் கொண்டு வந்ததும் சனாதனிகளின் மூக்குகளிலும் கண்களிலும் கரும் புகையை வரவழைத்திருந்தன. போதாக் குறைக்கு காந்தி இவற்றை ஆதரித்தார். சத்தியமூர்த்தி போன்ற தனது கட்சிக்காரர்களுக்கும், சட்ட மன்றத்தில் அவர்கள் வைத்த நிலைபாட்டிற்கும் எதிராக காந்தி தமிழ்நாட்டில் முத்து லட்சுமி நடத்திய கூட்டமொன்றில் (1927, செப்டம்பர் 9) கலந்து கொண்டதுடன், அந்தப் பயணம் முழுவதும் தேவதாசி ஒழிப்பை அவர் ஆதரித்துப் பேசினார்.

அடுத்த முறை காந்தி தமிழகம் வந்தபோது தமிழகம் முழுவதும் சனாதனிகள் அவருக்கு எதிர்ப்புக் காட்டினர், சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் வெளியிடப்பட்டன. ஆலயக் கதவுகள் மூடப்பட்டன. “தீண்டாதார் ஆலயப் பிரவேச நிக்ரகம்” என்கிற நூல் காந்தியைத் தரக்குறைவாக ஏசி வெளியிடப்பட்டது. இந்நூலின் முழு வடிவம், துண்டறிக்கை வாசகங்கள் முதலியவற்றிற்கு எனது “காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்” நூலைக் (எதிர் வெளியீடு, பொள்லாச்சி, 2007) காண்க.

இந்த இடைப்பட்ட காலத்தில்தான் காந்தி – சங்கராச்சாரி சந்திப்பு நடந்தது. இந்து நாளிதழ் சொல்வது போல காந்தி ஒன்றும் சங்கராச்சாரியை விரும்பிச் சந்திக்கவில்லை. சங்கராச்சாரியைச் சந்திப்பதற்கு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இது குறித்து நான் முன் குறிப்பிட்டநூலில் எழுதியிருக்கும் வாசகங்கள்:

“மகாமேதை, ஒழுக்கசீலர், நேர்மையாளர் என்றெல்லாம் கூறப்படும் (லேட்) ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஶ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி என்கிற சங்கராச்சாரியை காந்தி 1927 அக்டோபர் 15 அன்று பாலக்காட்டுக்கு அருகில் உள்ள நல்லிச்சேரி சரஸ்வதி கோவிலில் சந்திக்க நேர்ந்தது. அப்படியான ஒரு சந்திப்பைப் பார்ப்பனர்கள் திட்டமிட்டு ஏற்பாடு செய்திருந்தனர். சங்கராச்சாரி (இந்தி தெரிந்திருந்தும்) சமஸ்கிருதத்தில் பேச, காந்தி (சமஸ்கிருதம் தெரிந்திருந்தும்) இந்தியில் பேசினார். கடவுள் நம்பிக்கையை வற்புறுத்தி இயங்கும் காந்தியைப் பாராட்டிய சங்கராச்சாரி, ‘எனினும் ஹரிஜன ஆலயப் பிரவேச விஷயத்தில் சாத்திரங்களளையும், பழைய பழக்க வழங்களையும் நம்பியிருப்பவர்கள் நம் நாட்டில் பெரும்பாலோர் இருக்கிறார்களென்றும், அவர்களுடைய மனம் நோகும்படி செய்யும் எந்த மாறுதலும் இம்சைக்கு ஒப்பாகுமென்ற்றே தாம் முடிவுக்கு வரவேண்டியிருக்கிறதென்றும் கூறினார். இதைச் சொல்வதற்காகவே அச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறது.

“தனது கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்ல என்றைக்கும் தயங்காதா காந்தி, சுமார் ஒரு மணி நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தார். சங்கராச்சாரியாரின் கருத்துக்களை மனதில் கொண்டு, முடிந்தவரை அவற்றை நிறைவேற்ற முயற்சிப்பதாகச் சொல்லி விடைபெற்றார். தொடர்ந்து காந்தியின் செயற்பாடுகளைக் கவனிக்கும் யாருக்கும் சந்திரசேகரரின் மேற்படி கருத்துக்களை காந்தி மயிரளவும் மதிக்கவில்லை என்பது விளங்கும்.”

காந்தியைத் தான் தங்கியிருந்த குடிசைப் பகுதியில் ஒரு மாட்டுத் தொழுவத்திற்கு அருகில் சந்தித்ததாகவும், காந்தி அமர சங்கராச்சாரி தன் பீடத்தையே தரத் தயாராக இருந்ததாகவும் இந்துக் கட்டுரை கதை அளக்கிறது. சங்கராச்சாரி தங்கியிருந்தது நல்லிச்சேரி சரஸ்வதி கோவில். காந்தி பிரப்பால் தாழ்ந்த வருணத்தைச் சேர்ந்தவர் (வைசியர்) என்பதால் மாட்டுத் தொழுவத்திற்கு அருகில் அவரை அமர வைத்துப் பேசியதே உண்மை.

மகா ஒழுக்கசீலரான” சந்திரசேகரேந்திரரின் காஞ்சிபீடம் அத்தோடு நிற்கவில்லை. வேறுபல முயற்சிகளையும் செய்தது. அவற்றில் ஒன்று, அன்றைய புதிய தொழில்நுட்பமான அச்சுத் தொழில்நுட்பத்தை வர்ணாசிரமத்தைக் காப்பாற்றும் ஆயுதமாகப் பயன்படுத்துவது. இந்த நோக்கத்துடன் காஞ்சி பீடத்தின், அதாவது மகா ஒழுக்க சீலரான சந்திரசேகரரின் ஆசியுடனும், நிதி உதவியுடனும் ‘ஆரியதர்மம்’ என்றொரு இதழ் தொடங்கப்பட்டது. 1927 டிசம்பரில் நடைபெறவுள்ள காஙகிரஸ் மாநாட்டுக்கு இணையாக வர்ணாசிரம மாநாட்டைக் கூட்டவும் முடிவு செய்யப்பட்டது.

1927 ஐப்பசி மாதம் 25ந்தேதிய ‘ஆர்யதர்மம்’ இதழில், “ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தைப் பற்றியவரை யான் நன்கறிவேன், இச் சென்னையில் ஒரு கிளை மடம் ஸ்தாபித்து,,,,புனிதமான ‘ஆர்யதர்மம்’ என்கிற இப்பத்திரிக்கையையும் நடத்துகிறது” என ஆசிரிய உரையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வாசகங்களின்படி வருணாசிரமத்தைக் காப்பாற்ற உருவெடுத்த ‘ஆர்யதர்மம்’ என்கிற அந்த இதழ் சந்திரசேகர சங்கராச்சாரியின் நிதி உதவியுடன் தொடங்கப்பட்டது என்பது விளங்குகிறது.

வருணாசிரம ஆதரவு மஹாநாடெல்லாம் இன்று தேவையா, அப்படி மாநாடு நடத்துவதெல்லாம் நமது மரபா எனச் சிலர் கேட்டபோது,

“பண்டைக் காலத்தில் யக்ஞம், உத்ஸவம், விவாஹம் முதலியவைகள் அப்போது மஹாநாட்டின் வேலையை முடித்துவைத்தது. காலத்திற்கேற்றவாறு, அதுவும் காந்தி தென்னாடு வந்த பிறகு அத்யாவசியமாக இதைக் கூட்டியே ஆகவேண்டுமென்று பலரும் நினைக்கின்றனர்.”

என்ப் புலம்புவதிலிருந்து சந்திரசேகர சங்கராச்சாரி, காந்திக்கு எதிராகவே நிதி உதவி செய்து இந்த ‘ஆரதர்மம்’ என்கிற வருணாசிரம ஆதரவு இதழை நடத்தினார் என்பது விளங்குகிறது. காந்தியின் தென்னாட்டு வருகை வருணாசிரமத்திற்கு எதிராக இருந்ததாகக் கருதி அவர்கள் அசுர்றதும் புரிகிறது.

காந்தியை வருணசங்காரம் செய்ய வந்தவராக இந்த இதழ் முன்னிறுத்தியது. இது குறித்த விவரங்களை அறிய எனது நூலையும், தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள ‘ஆர்யதர்மம்’ இதழ்களையும் வாசிக்க வேண்டுகிறேன்.

இந்த இதழின் புத்தகம்11, ஸஞ்சிகை 30ல் வெளிவந்துள்ள, ஒரு கூற்று:

“தீண்டாதவர்கள் நிரபராதிகள். நம்மைப்போலவே மனிதர்களே. அப்படியிருக்க ஏன் தள்ள வேண்டும் என்கிறார் (காந்தி). ஆகா தீண்டத்தகாதவர்களும் நம்மைப் போலவே மனிதர்கள்தானாம். இதைச் சங்கராச்சாரியார் தெரிந்துகொள்லவில்லை. இந்த அதி சூஷ்மத்தைக் கந்திதான் தெரிந்துகொண்டார். அதனால்தான் அவர்களை எட்டிப் போவென்று சொல்லலாகாதாம். சங்கராசாரியாரவர்கள் இவ்வொன்றையும் தெரிந்து கொள்ளாததால்தான் விலகிப் போவென்றார் போலும்”

காந்தியை அவர்கள் எந்த அம்சத்தில் சங்கராச்சாரியிடமிருந்து வேறுபடுத்தினர் என்பது இக்கூற்றிலிருந்து நமக்கு விளங்குகிறது.

இத்தனைக்குப் பிறகும் காந்தி ஆலயப் பிரவேசத்தை வெற்றிகரமாக நடத்தினார். சனாதனிகள் வெறிகொண்டனர். அடுத்தமுறை காந்தி தமிழகம் வந்தபோது கடுமையான எதிர்ப்புகள் வந்தன. அப்போது காந்திக்கு எதிராக வெளியிடப்பட்ட சுவரொட்டி வாசகங்கள் பலவற்றையும் எனது நூலில் காணலம். ஒன்று மட்டும் இங்கே:

“வராதே காந்தீ! ஓடிப்போ காந்தீ!! பேசாதே காந்தீ!!!

வேதத்தை அறியாமலே கொண்ட வெறியை வேதத்தை / விளக்கியே தீர்க்க வரும் வேதப் பிரானொத்த ஜகத்குரு / சங்கராச்சாரியைக் காண விரும்பாத காந்தீ, ஓடிப்போ! / இங்கிலீஷ் படித்த கர்வமும் பட்டினி கிடக்கும் கெட்ட பிடிவாதமும் தவிர வேறொரு சரக்குமில்லாத காந்தி ஓடிப்போ! / ராஜ துரோஹியாகவே வாழ் நாளை வீண்படுத்திய பழக்கத்தினால் தர்மத்தை மதியாமல் தெய்வத் துரோஹியாய்த் தலைப்பட்ட காந்தி ஓடிப்போ!”

மேற்படி துண்டறிக்கையை வெளியிட்டவர் திருவரங்கம் பெரியகோவில் பத்திராதிபரான பார்த்தசாரதி அய்யங்கார், தேதி 09.02.1954.

இது 1934ல் வெளியிடப்பட்டது, 1930களில் காந்தியின் முன்னெடுப்பில் ஆலயப் பிரவேசங்கள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் 1920களின் பிற்பகுதியிலிருந்தே காந்தி தீண்டாமைக்கு எதிராகப் பேசவும் செயல்படவும் தொடங்கினார். இதற்கு இடைப்பட்ட காலத்தில்தான் காந்தி – சந்திரசேகர சங்கராச்சாரி ஆகியோரின் சந்திப்பு நடைபெற்றது.

திருவரங்கக் கோவில் பத்திராதிபர் பார்த்தசாரதி அய்யங்கார் வெளியிட்ட துண்டறிக்கையிலிருந்த, “சங்கராச்சாரியைக் காண விரும்பாத காந்தீ, ஓடிப்போ!” என்கிற வாசகத்திலிருந்தது, காந்தி சங்கராச்சாரியைச் சந்திக்க ஆர்வம் காட்டவில்லை என்பதும் உறுதியாகிறது.

உண்மைகள் இப்படியிருக்க சங்கராச்சாரியைச் சந்திக்க காந்தி ஆர்வம் கொண்டார் என்பதும், அதை அறிந்த சங்கராச்சாரி பெரியமனது பண்ணி அதற்கு இசைந்தார் என்றும் இந்து நாளிதழ் கட்டுரை வெளியிடுவதன் பொருளென்ன?

காந்திக்கு எதிராகப் பண உதவி செய்து, இப்படியான ஒரு பத்திரிக்கையை நடத்திய நபர் சந்திரசேகரேந்திர சங்கராச்சாரி. அவரைக் காந்தி சந்திக்க விருப்பு தெரிவித்துச் சென்று சந்தித்தார் என்பது எத்தனை அபத்தம்.

காந்தியை இறுதியில் கொன்று தீர்த்தவர்கள் பார்ப்பனர்கள் என்பதையும் நாம் மறந்துவிடலாகாது. கோட்சே துப்பாக்கிக் குண்டால் சுட்டுத் தீர்த்த செயலைத்தான் சந்திரசேகர சங்கராச்சரியின் ஆர்யதர்மமும் தன் எழுத்துக்களால் செய்தது.

இல்லையா?

காந்தி விரிவாகத் தன் இயக்கங்களைப் பதிவு செய்தவர். அவரது பதிவுகள் 90க்கும் மேற்பட்டப் பெருந் தொகுப்புகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. சங்கராச்சாரியுடனான இச் சந்திப்பிற்குக் காந்தி தனது பதிவுகளில் பெரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘இந்து’ ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள இந்த இணைப்பு, இந்து நிர்வாகம் வெளிட உள்ள தமிழ் நாளிதழின் முன்னோடி என்றே கருத வேண்டியுள்ளது. சில நாட்களுக்கு முன் இந்து நாளிதழில் தமிழ் முஸ்லிம் இயக்கங்களுக்கு எதிராக வெளிவந்த ஆர்.வெங்கடாசலபதி எடுத்துள்ள பேட்டியும், இந்தக் கட்டுரையும், வர உள்ள தமிழ் ‘இந்து’ நாளிதழ் எத்தகைய போக்குடன் அமையும் என்பதற்குக் கட்டியம் கூறுகின்றன எனக் கொள்ளலாமா?

ஆங்கில இந்து நாளிதழின் சிரப்புக்களில் ஒன்று அது கடைபிடித்து வரும் மதச் சார்பின்மை. தமிழ் இந்து நாளிதழ் அந்தப் பண்பைக் கைவிடப் போகிறதா?

அ.மாதவையாவின் கிளாரிந்தா

குடந்தையில் என் அறையிலிருந்த ஒரு எட்டடுக்குத் திறந்த புத்தக அலமாரி சில நாட்களுக்கு முன் கவிழ்ந்துவிட்டது. நல்ல வேளையாக நான் அருகில் இல்லை. அந்த அலமாரியைச் சுவற்றில் துளையிட்டு இறுக்கி, இன்று புத்தகங்களை அடுக்கத் தொடங்கினேன் எல்லாம் பழைய தமிழ் நூல்கள். பிற ஆங்கில நூற்கள் பலவும் சென்னையில் எனது வீட்டிலும், மகள் வீட்டிலுமாகப் பிரிந்து கிடக்கின்றன, ஒரு இருபதாண்டு எகனாமிக் அன்ட் பொலிடிகல் வீக்லி, மார்க்ஸ் – ஏங்கல்ஸ் தொகுப்பு நூல்கள், ஏராளமான சோவியத் மார்க்சீய நூல்கள் எல்லாம் குடந்தையில் கண்ணாடிக் கதவுகளுடன் கூடிய லாஃப்ட்-களில் உள்ளன.

அடுக்கும்போதுதான், ஆகா, என்னென்ன மாதிரியான நூல்களெல்லாம் நம்மிடம் உள்ளன என ஒரு கணம் வியந்து போனேன். கென்னெத் கால்ப்ரெய்த்தின் ‘சமாதானத்தின் புதிய பரிமாணங்கள்’, மு.அருணாசலத்தின், ‘குமரியும் காசியும்’, சரத்சந்திரரின், ‘அசலா’, ஹெப்சிபா ஜேசுதாசனின், ‘மானீ’, ப்ளெஹனோவின், ‘கலையும் சமுதாய வாழ்க்கையும்’, சுப்பிரமணிய சிவாவின், ‘நளின சுந்தரி’, டபிள்யூ. ஜி. ஆர்ச்சரின் ஆய்வுரையுடன் கூடிய ‘வித்யாபதியின் காதற் பாடல்கள்’, காமராசரின் 60ம் ஆண்டு சிறப்பு மலர், பார்த்தசாரதி எழுதிய தி.மு.க வரலாறு, தமிழ் முதல் நாவலாசிரியர்களில் ஒருவரான அ.மாதவைய்யாவின் ‘கிளாரிந்தா’……

கிளாரிந்தா கையில் அகப்பட்டவுடன் புத்தகங்களை அடுக்குவதை நிறுத்திவிட்டு, அதைப் புரட்டத் தொடங்கினேன். சுமார் 20 ஆண்டுகள் முன்பு படித்துக் கிறங்கிய நாவலது. மறைந்த ஆங்கிலப் பேராசிரியை சரோஜினி பாக்கியமுத்து அவர்கள் அதை அற்புதமாகத் தமிழில் ஆக்கியிருப்பார். ஆம், முதல் நாவல்களில் ஒன்றாகிய ‘பத்மாவதி சரித்திரம்’ எழுதிய மாதவையர், கிளாரிந்தாவை ஆங்கிலத்தில்தான் எழுதினார். இதன் முதற் பதிப்பு 1915ல் வெளியிடப்பட்டது. ‘சில்வர் டங்’ சீனிவாச சாஸ்திரியாருக்கு அந்நூலை மாதவையர் அர்ப்பணித்திருந்தார்.

1970களில் காத்திரமான தமிழ் இலக்கியப் பணிகளைச் செய்து கொண்டிருந்த ‘கிறிஸ்தவ இலக்கிய சங்கம்’ (CLS), 1976ல் இந்தத் தமிழ் மொழி பெயர்ப்பைக் கொண்டு வந்தது. என்னிடமுள்ள அந்த முதற் பதிப்பின் அப்போதைய விலை பத்து ரூபாய். மாதவையரின் மகனும், முன்னாள், சென்னை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதியுமான மா.அனந்த நாராயணன் அவர்கள் அடக்கமான சிறு முன்னுரை ஒன்றை எழுதியுள்ளார்.

தஞ்சை மன்னன் பிரதாபசிம்மனின் அவையில் அவரது குரு ஸ்தானத்தில் இருந்த மராட்டியப் பார்ப்பனரான பண்டித ராவின் பேத்தி கிளாவரிந்தபாய் என்கிற உண்மையான வரலாற்றுப் பாத்திரம்தான் இந்த நாவலின் நாயகி. பிறந்த அன்றே பெற்றோரை இழந்து, தாத்தாவால் வளர்க்கப்பட்டு, முதிய பார்ப்பனர் ஒருவருக்குப் பால்ய மணம் செய்து கொடுக்கப்பட்டவர் கிளாவரிந்தா. இருபது வயதில் விதவையான அப்பெண்ணை, சொத்துக்காகக் கட்டாயப்படுத்தி உடன்கட்டை ஏற்றுகிறார்கள் (சுமார் கி.பி 1770). அநேகமாகத் தஞ்சையில் நடைபெற்ற கடைசி உடன்கட்டையாக அது இருக்கலாம்.

செய்தி அறிந்த ஆங்கில தளபதி லிட்டில்டன் அவளைச் சிதையிலிருந்து காப்பாற்றித் தூக்கி வந்து சிகிச்சை அளிக்கிறார். பின்னாளில் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறி, அவரையே திருமணம் செய்து கொண்டு திருநெல்வேலி வந்து சமயத் தொண்டு புரிந்து மரித்த (1860) அவரது வரலாற்றை ஒரு அற்புதமான காதற் காவியமாக்கியுள்ளார் மாதவையர்.

இந்நாவலை நான் முதலில் படித்த போது, தஞ்சையில் லிட்டில்டனின் மாநம்புச் சாவடி இருப்பிடம் எங்கிருந்தது, கிளாவரிந்தாவை எந்த இடத்தில் உடன்கட்டை ஏற்றி இருப்பார்கள், வல்லத்தில் எங்கே ஸ்வார்ட்ஸ் பாதிரியாரை இத்தம்பதியர் சந்தித்திருப்பர் எனத் தேடி சைக்கிளில் அலைந்தது நினைவுக்கு வந்தது. தஞ்சை வரலாற்றாய்வாளர் குடவாயில் பால சுப்பிரமணியத்தையும் ஒருமுறை சந்தித்து இது குறித்து விசாரித்தபோது அவர் இதில் இம்மியும் ஆர்வம் காட்டவில்லை.

பாளையங்கோட்டையில் கிளாரிந்தா, தலித் மக்களுக்கென வெட்டிய கிணறு (பாப்பாத்தியம்மா கிணறு), அவர் கட்டிய தேவாலயம் முதலியன இன்னும் உள்ளன எனக் கேள்விப்பட்டு அவற்றைப் பார்க்க வேண்டுமென நான் கொண்ட ஆவல் 2005ல்தான் நிறைவேறியது. பாக்கியமுத்து அப்போது இறந்திருந்தார். ஈழத்து தலித் எழுத்து முன்னோடி கே.டேனியல், பேரா.சிவத்தம்பி, க.கைலாசபதி ஆகியோரை எல்லாம் தமிழகத்திற்கு அழைத்து நவீன இலக்கியக் கருத்தரங்குகளை நடத்தி, கட்டுரைகளை நூல்களாகவும் (எ.கா: ‘தமிழ் இலக்கியத்தில் வறுமையும் சாதியும்’) வெளியிட்டவர் அவர். சரோஜினி பாக்கியமுத்து அவர்கள் என்னை அன்புடன் வரவேற்று தமிழ் விவிலிய மொழிபெயர்ப்புகள் குறித்த அவரது ஆய்வான, ‘விவிலியமும் தமிழும்’ நூலில், அ.மார்க்ஸுக்கு மிக்க அன்புடன் எனக் கையொப்பமிட்டுத் தந்த நாள் 21.5. 2005.

மாலை 3 மணிக்க்குப் புரட்டத் தொடங்கினேன். சரசரவென 212 பக்கங்கள் ஓடிவிட்டன. குறைந்த பட்சம் நான்கு முறையேனும் கலங்கிய கண்கள் எழுத்துக்களை மறைத்தன. விரிவாக எழுத வேண்டும் பின்னொருமுறை…

இன்னும் கொஞ்சம் மாதவையா….

மாதவையாவின் பிற நாவல்களையும் படித்துவிடலாம் என இன்று ‘சத்தியானந்தனை’த் தேடி எடுத்துவிட்டேன். ‘பத்மாவதி சரித்திரத்தை’ வாசு தருகிறேன் எனச் சொலியுள்ளார். ஆங்கிலத்தில் அவர் எழுதிய நாவல்களுக்கும், தமிழில் அவர் எழுதியவற்றிற்கும் ஒப்பீட்டு ரீதியில் ஏதும் வேறுபாடுகள் உள்ளனவா எனப் பார்க்கலாம் எனத் தோன்றியது.

சத்தியானந்தன் நாவலும் ஒரு வகையில் கிளாரிந்தாவைப் போல ஒரு வரலாற்று நாவல்தான். கிளாரிந்தாவைப்போல சத்தியானந்தனை வரலாற்றில் அடையாளப்படுத்திவிட இயாலாதபோதும், சத்தியானந்தன் என ஒருவர் அப்போது அந்தக் காலத்தில் அங்கு வாழ்ந்திருக்கவில்லை எனச் சொல்ல முடியாது என்றார் இத் துறையில் விரிந்த அறிவு பெற்ற பேரா.ஆ.சிவசுப்பிரமணியன். எப்படியோ வெறும் வாழ்க்கைச் சரிதமாக இல்லாமல் ஒரு புனைவாகப் படைப்பதன் மூலம் கிடைக்கும் சுதந்திரத்தை இழக்க ஒரு சிறந்த கலைஞனான மாதவையாவுக்கு மனமில்லை என்பதுதான் கிளாரிந்தாவையும் சத்தியநாதனையும் பார்க்கும்போது நமக்குப் படுகிறது. வரலாறு வெளியிலுள்ள ஏதோ ஒரு ‘உண்மையை’ச் சார்ந்திருப்பது. புனைவு தன் உண்மைகளையும் நியாயப்பாடுகளையும் தானே உருவாக்கிகொள்வது. வெளியிலிருந்து மிரட்டும் “உண்மை”யின் தொந்தரவு இல்லாமல் சத்தியானந்தன் என்கிற பார்ப்பன சமூகத்திலிருந்து சீர்திருத்தக் கிறிஸ்தவத்திற்கு மாறிய ஒருவரின் கதையைப் படைக்க மாதவையர் மனம் கொண்டார் போலும்.

இந்நூலுக்கு மாதவையாவின் தம்பி மகனும் இன்னொரு முக்கிய தமிழ் எழுத்தாளருமான பெ.நா.அப்புசாமி ஏழு பக்கங்களில் ஒரு முன்னுரை எழுதியுள்ளார். மாதவையா தன் எழுத்துக்களில் “கிறிஸ்தவ மதத்தையும் அம்மதத்தைச் சார்ந்த சில பெரியவர்களையும் புகழ்ந்திருப்பதால் அவர் தம்முடைய மதத்தின் மீது பற்றற்றவர் என்றும் கிறிஸ்தவ மதத்தின் மீது பற்றுமிக்கவர்” என்றும் ஒரு சிலரிடத்தில் நிலவும் கருத்தை மறுக்கத் தன் முன்னுரையை முழுமையாகப் பயன்படுத்தியுள்ளார். நவதிருப்பதிகளில் ஒன்றென மதிக்கப்படும் பெருங்குளம் என்னும் வைணவத் திருத் தலத்தில் பிறந்தவர் மாதவையர், வடம கௌசிக கோத்திரம். வடமொழி பயிலவில்லை. ஆங்கிலமும் தமிழும் அத்துபடி.. மத நம்பிக்கை மிக்க ஒரு குடும்பம். குடும்ப மரபுப்படி தனது முதலிரண்டு மகன்களுக்கும் பெருங்குளத் தெய்வமான அநந்த நாராயணன், யக்ஞ நாராயணன் என்கிற பெயர்களையே சூட்டியுள்ளார். மூன்றாவது மகன் ஒருவர் பிறந்தபோது அவரது பெயர் கிருஷ்ணன். மகள்களின் பெயர்கள் அம்பா, லஷ்மி. ராமாயணத்தை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

கிளாரிந்தாவுக்குச் சுருக்கமாகவும் செறிவாகவும் ஒரு முன்னுரை எழுதியுள்ள மாதவையாவின் மூத்த மகன் அனந்த நாராயணனும் தன் தந்தையின் ‘மதக் கோட்பாடு’ குறித்து, ”அவர் ஒருநாளும் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி ஞானஸ்நானம் பெறவேண்டும் என்கிற ஆசை கொண்டவரல்ல” என்பதை அழுத்திச் சொல்கிறார். எனினும் இருவருமே பைபிளில் அவருகிருந்த புலமையையும், குறிப்பாக மத்தேயுவின் நற்செய்தியில் அவருக்கிருந்த ஈடுபாட்டையும் சொல்லத் தவறவில்லை. அவர்கள் சொல்லாவிட்டாலும் ஏதும் பிரச்சினை இல்லை. அவரது நாவல்களைப் படிக்கும் யாருக்கும் அது விளங்கும். கிறிஸ்தவத்தின்மீது, குறிப்பாகச் சீர்திருத்தக் கிறிஸ்தவத்தின் மீது அவருக்கு ஒரு பற்றும் இருந்தது. கிறிஸ்தவ மதத்தின் மையச் சரடுகளை அவர் சரியாகப் பற்றி இருந்ததும், ஒப்பியல் நோக்கில் அதை மதிப்பிடக் கூடியவராக இருந்ததும் கூட விளங்கும்.

சத்தியானந்தன் மதம் மாறியதை அறிந்து அவர் அம்மா ஆண்டாள் இப்படிச் சொல்வார்: “எங்கள் சமயத்தின்படி மனிதன் இறைவனை எந்த நாமத்தில், ரூபத்தில் வணங்கினாலும், அந்தக் கேசவன் அதை ஏத்துண்டுடறாரென்று நம்பறோம். அதனாலே சத்தியானந்தன்.. எந்தத் தெய்வத்தை வணங்கறான் என்பது எனக்கு முக்கியம் அல்ல. அவன் நேர்மையானவனா, நல்லவனா, கருணையுள்ளவனா வாழணும்கிறதே நான் விரும்பறது. அப்படி வாழ்ந்தால் அவன் வணங்குகிற அந்தத் தெய்வம், அது சிவனோ, விஷ்ணுவோ, அல்லாவோ, புத்தரோ, கிறிஸ்துவோ எதுவாக இருந்தாலும் அது அவனைக் கைவிடாது.”

இதுதான் மாதவையாவின் கொள்கையாகவும் இருந்தது. எனினும் அவர் நுண்மையான விமர்சனங்களை, மதமாற்ற நடவடிக்கைகள் உட்படஎல்லாவற்றின் மீதும் வைக்கவும் தவறவில்லை.

நீதியரசர் அனந்தநாராயணன், எழுத்தாளர் அப்புசாமி இருவரும் சொல்கிற தன்னிலை விளக்கம், அதாவது மாதவையா தன் நம்பிக்கைகள் மீது உறுதியாகத்தான் இருந்தார் என்பது அவர் மீது நமக்குள்ள மரியாதையைக் கூட்டத்தான் செய்கிறது; குறைக்கவில்லை. தன் நம்பிக்கைகளில் அவர் உறுதியாக இருந்தபோதும் பிற நம்பிக்கைகளை அவர், அவற்றின் சிறப்புக்களை ஏற்று அங்கீகரித்ததும் மற்றமையின் irreducible singularity யை அவர் ஏற்றதைத்தான் காட்டுகிறது.

சொல்ல மறந்து போனேன். மாதவையாவின் மரணமும் மிகக் கம்பீரமாகத்தான் நிகழ்ந்திருக்கிறது. அது 1925 அக்டோபர் 22. சென்னைப் பல்களைக்கழக செனட் அவையில் தமிழின் சிறப்புக்களை வியந்து பேசி அமர்ந்தவுடன் மூளை நரம்புகள் வெடித்து அங்கேயே உயிர் பிரிந்திருக்கிறது, அப்போது அவருக்கு வயது 53.

காந்தியடிகளும் மதசார்பின்மையும்

(மதவெறிக்குப் பலியான மருத்துவர் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் பிலிப், டிமோதி என்கிற அவரது இரு குழந்தைகளின் நினைவாக நடைபெற்ற அறக்கட்டளைச் சொற்பொழிவில் ஆற்றிய உரை)

இங்கே ஆற்றுவதற்கு வாய்ப்பளித்தமைக்கு கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்களும், அறக்கட்டளை நிறுவனர்களுக்கும் நன்றி.

இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு. இங்கு இந்த நாட்டின் பொதுச் சட்டங்களுக்குக் கட்டுப்படும் யாரும் அவரவர் விருப்பப்படி, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்காத வகையில் எந்த ஒரு மதத்தையும் கடைபிடிப்பதற்கும் பரப்புவதற்கும் உரிமை உண்டு என்கிற நிலை இருந்தபோதும், மதத்தைப் பரப்புகிறார்கள் என்கிற காரணத்தைச் சொல்லி, ஒடிஷா மாநிலத்தில் அடித்தள மக்கள் மத்தியில் தொழுநோய்க்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த தியாக மனப்பான்மை உடைய ஒரு மருத்துவரும், அவரது சிறு குழந்தைகள் இருவரும் எரித்துக் கொல்லப்பட்டது சுதந்திர இந்திய வரலாற்றில் ஏற்பட்ட ஒரு களங்கம். தாங்கள் மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபடவில்லை, மருத்துவ சேவைதான் ஆற்றி வந்தோம் என, கொல்லபட்ட மருத்துவர் ஸ்டெய்ன்சின் மனைவி கிளாடிஸ் அவர்கள் கூறியபோதும், இது குறித்து அமைக்கப்பட்ட விசாரணை ஆணையமும், உச்ச நீதிமன்றமும் இந்தக் கொலைகளுக்கு மதமாற்றமும் ஒரு காரணமாக இருந்தது என்கிற மதவெறிப் பிரச்சாரத்தை ஏற்றுக் கொண்டது வேதனைக்குரியது.

உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்துள்ள நிலையில் கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு மதச் சார்பர்ற ஜனநாயகக் குடியரசாக நமது நாடு ஓரளவு வெற்றிகரமாக இயங்கி வருவதற்கு நமது அரசியல் சட்டம் அடிப்படையாக உள்ளது. நமது அரசியல் சட்டத்தின் 25,26,27 வது பிரிவுகள் இந்த நாட்டின் குடிமக்கள் தாங்கள் விரும்பும் மதத்தை பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்காத வகையில் கடைபிடிப்பது, வெளிப்படுத்துவது, பரப்புவது ஆகியவற்றை அடிப்படை உரிமைகளாக்கியுள்ளது.

பல்வேறுபட்ட மதத்தினரும் வாழ்கிற ஒரு நாடு என்கிற வகையில் இத்தகைய ஒரு அரசியல் அமைப்பை உருவாக்கியதில் மகாத்மா காந்திக்கு முக்கிய பங்குண்டு. அவரது கருத்துக்களும், அரசியலும் மட்டுமின்றி அவரது வாழ்வும் மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

மதச்சார்பின்மை என்பது எல்லா மதங்களையும் மறுப்பது அல்ல. அதற்கு பெயர் நாத்திகம் அல்லது இறை மறுப்புக் கோட்பாடு, மாறாக மதச்சார்பின்மை என்பதில் எதேனும் ஒரு மதத்தைத் தீவிரமாகக் கடைபிடிப்பதற்குத் தடை இல்லை. அதேபோலப் பிற மதங்களைத் தீவிரமாகக் கடைபிடிக்க மற்றவர்களுக்கும் உரிமை உண்டு என்பதையும், இந்த மத விஷயங்களில் அரசு எவ்விதத்திலும் தலையிடக் கூடாது என்பதையும் நாம் ஏற்பதுதான் மதச்சார்பின்மை.

காந்தியடிகளுக்கு முன் SECULARISM (மதச்சார்பின்மை) என்பது தத்துவ வரலாற்றில் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு கருத்தாக்கம். தத்துவ வரலாற்றில் இடைக்காலம் அல்லது மத்திய காலத்தை “தத்துவம் மதத்திற்கு அடிமையான காலம்” என்பார்கள். அரசு, கல்வி, மருத்துவம், இலக்கியம், தத்துவம் எல்லாமே மதத்திற்குக் கட்டுபட்டிருந்த காலகட்டம் அது. 15ம் நூற்றாண்டு வாக்கில் நியூட்டன், கலீலியோ, தெகார்த்தே போன்ற அறிவியலாளர்கள் பகுத்தறிவின் அடிப்படையில் உலகை விளக்கத் தலைப்பட்டனர். மறுமலர்ச்சிக் காலம் எனச் சொல்லப்படும் இக்காலகட்டத்தில் அரசு, மருத்துவம், இலக்கியம், தத்துவம் என்பதெல்லாம் மதத்திலிருந்து பிரிக்கப்பட்டன. இவ்வாறு மதத்தையும் தத்துவத்தையும் தனித்தனியே பிரிப்பதைத்தான் Secular என்கிற சொல்லின் மூலம் குறிப்பிட்டு வந்தனர்.

இவ்வாறு தத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு கருத்தாக்கத்தை அரசியலுக்குப் பிரயோகித்தவர் காந்தி. பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெறக்கூடிய நிலை ஏற்பட்டபோது எதிர்கால இந்தியா எல்லா மதங்களுக்கும் பொதுவான ஒரு அரசாக இருக்க வேண்டும் என்கிற நிலையை காந்தி எடுத்தார். உருவாகும் புதிய குடியரசை மதத்திலிருந்து பிரித்துவிடவேண்டும் என்றார். ஆனால் இன்னொரு சாரர் இந்தியா, இங்குள்ள பெரும்பான்மை மதமாகிய இந்துமதத்தைச் சார்ந்த அரசாக அமைய வேண்டும் என்றனர். புதிய இந்தியா, ‘இந்து ராஷ்டிரமாக’ அமைய வேண்டும் என்றனர்.

ஆனாலும் மக்கள் மத்தியில் பெருஞ் செல்வாக்குடன் “தேசத் தந்தையாக” ஏற்றம் பெற்றிருந்த காந்தியின் கருத்தே வெற்றி பெற்றது. ஆனால் அதற்கு அவர் மிகப் பெரிய விலை கொடுக்க நேரந்தது. இந்து ராஷ்டிரம் வேண்டியவர்கள் அவரைக் கொன்றார்கள். பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்ததால்தான் காந்தியைக் கொன்றதாக கோட்சே வாக்குமூலம் அளித்தபோதும் உண்மை அதுவல்ல. பாகிஸ்தான் என்கிற பேச்சு இல்லாதபோதே 1930 தொடங்கி குறைந்த பட்சம் ஐந்து முறை அவர் மீது கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. காந்தி வரையறுத்த தேசியத்திற்கும், அவரைக் கொலை செய்தவர்கள் வரையறுத்த தேசியத்திற்கும் இருந்த வேறுபாடே இந்தக் கொலை முயற்சிகளின் பின்புலமாக இருந்தது.

காந்தி வரையறுத்த தேசியத்தில் இந்தியா என்பது இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், இன்னும் பல மொழியினர், சாதியினர் எல்லோரும் ஏற்றத்தாழ்வுகள் இன்றி சம உரிமைகளுடன் வாழ உரிமை பெற்றிருந்தனர். இப்படி எல்லோரையும் உள்ளடக்கி நின்றதால் அவரது தேசியம் “உள்ளடக்கும் தேசியம்” (inclusive nationalism) என வகைப்படுத்தப்படுகிறது. அதாவது இந்தியப் புவி இயல் எல்லைக்குள் வாழ்கிற எல்லோரும் சம உரிமை பெற்ற இதியர்கள். இதை “புவிசார் தேசியம்” (territorial nationalism) என்பார்கள்.ஆனால் காந்திக்கு எதிர்நிலையில் நின்றவர்கள் இந்துக்கள் அல்லாதவர்களை “விலக்கிய” ஒரு தேசியத்தை (exclusive nationalism) முன்வைத்தனர். இந்தியப் புவி இயல் எல்லைக்குள் வாழ்ந்த போதிலும் இந்துக்கள் அல்லாதவர்கள் இரண்டாம் நிலையினராக. சம உரிமைகள் இல்லாதவர்களாக வரையறுக்கப்பட்டனர். இதனை அவர்கள் “கலாச்சார தேசியம்” (cultural nationalism) என அழைத்துக் கொண்டனர்.

காந்தி தனது மதச்சார்பின்மை என்கிற கோட்பாட்டை மக்கள் மத்தியில் பரவலாக்கி மக்களின் ஒப்புதலை அதற்குப் பெற்றார். தங்கள் விருப்பம் சாத்தியமில்லமற் போனதைக் கண்டவர்கள் அவரைக் கொன்றார்கள். அவர்கள் பிற மதத்தாரைப் பொறாதவர்கள். சிறுபான்மை மக்களின் உறிமைகளை மதிக்காதவர்கள்.காந்தி பிற மதங்களை மதித்த போதிலும் தன்னை ஒரு இந்து என அழைத்துக் கொள்வதில் பெருமை கொண்டிருந்தார். சுட்டு வீழ்த்தப்படும்போதும் “ஹேராம்” என்று கூறித்தான் மண்ணில் வீழ்ந்தார், அந்த வகையில் மதச் சார்பின்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தன அவரது வாழ்வும் அரசியலும்.

நமது முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயி இங்குள்ள பிற மதத்தினரை உள்வாங்கி உட்செரிக்க வேண்டும் (aasimilate) என்பார். அதாவது மற்றவர்கள் தங்கள் வித்தியாசங்களை, அடையாளங்களைத் துறந்து பெரும்பான்மையினருடன் அய்க்கியமானால்தான் அவர்களைக் குடிமக்களாக ஏற்க முடியும் என்கிறார். ஆனால் காந்தியோ.

“சமய உறவுகளில் ‘சகிப்புத்தன்மை’ (tolerance) என்கிற சொல் எனக்குப் பிடித்ததல்ல. “சமரசம்’ (compromise) என்கிற சொல்லிலும் ஒருவரின் மதத்தைவிட மற்றவரின் மதம் தாழ்வானது என்கிற பொருள் வந்துவிடுகிறது. மாறாக நமது சமயத்தின்பால் நமக்குள்ள நன்மதிப்பை மற்ற மதங்களின்மீதும் காட்ட வேண்டும் என்று என் அஹிம்சைக் கோட்பாடு வற்புறுத்துகிறது. இந்த நோக்கில் நம் சமயத்திலுல்ள குறைபாடுகளையும் நாம் ஏற்க வேண்டும். எல்லா மதங்களும் சமமானவை என ஏற்பது சமயங்களுக்கிடையே வித்தியாசங்களை நீக்குவது அல்ல.” என்பார். மற்றவர்களுடைய வித்தியாசங்களையும், கலாச்சாரங்களையும், நம்பிக்கைகளையும் ஏற்று அவர்களோடு சமமாக வாழ்வதும் இப்படிக் குடிமக்களின் சம உரிமையை ஏற்உ, மத விஷயங்களிலிருந்து அரசு ஒதுங்கிக் கொள்வதுந்தான் காந்தி அடிகள் முன்வைத்த மதச்சார்பின்மை.

மதச்சார்பின்மை குறித்த காந்தியின் கருத்துக்கள்– தமிழில்: அ.மார்க்ஸ்

1933 தொடங்கி காந்தியடிகள் தன் எழுத்துக்கள், உரைகள் மற்றும் உரையாடல்களில் மதச்சார்பின்மை குறித்தும் மதசார்பற்ற அரசு குறித்தும் அதிகம் பேசத் தொடங்கினார். காந்தியியல் ஆய்வாளரான அனில் நவ்ர்யா இவற்றைத் தொகுத்துள்ளார்.

1. தீண்டாமை ஒழிப்பு தொடர்பாக 1933ல் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியின் மத்திய சட்டமன்றம் ஒரு சட்ட வரைவை முன்வைத்தது. “மனித குலத்தின் அற உணர்வுக்கு ஒவ்வாத ஒரு வழமைக்கான (அதாவது தீண்டாமைக்கான)” ஒப்புதலை, “மதச்சார்பற்ற சட்ட” அணுகல்முறை ரத்து செய்வதைத் தான் வரவேற்பதாகக் காந்தி கூறினார். 1933 மே 6 அன்று, “ஒரு மதச்சார்பற்ற அரசின் சட்டம் (தீண்டாமைக்கு) ஒப்புதல் அளிக்க முடியாது என்பது மட்டுமல்ல, அளிக்கக் கூடவும் கூடாது” என்றார். தேவை இல்லாமல் அரசு இது போல மத விஷயங்களில் தலையிடக் கூடாது என இதற்கு தீண்டாமையை ஆதரிப்போரிடமிருந்து எதிர்ப்புகள் வந்தபோது, “(இது போன்ற) பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசு மதத்திலும் கூடத் தலையீடு செய்ய வேண்டி உள்ளது. தேவை இல்லாத தலையீட்டை மட்டுமே அரசு தவிர்க்க வேண்டும்” என்றார்.

2. 1935, ஜன, 27 அன்று மத்தியச் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் மத்தியில் பேசும்போது, “ஒட்டுமொத்தமான இந்துச் சமுதாயமே தீண்டாமை ஒழிப்பிற்கு எதிராக இருந்தபோதும், ஒரு மதச் சார்பற்ற சட்டமன்றம் இத்தகைய கண்ணோட்டத்தைச் சகித்துக் கொள்ளக்கூடாது என்றே நான் அறிவுரைப்பேன்” என்றார்.

3. 1942, ஜன, 20 அன்று, பாகிஸ்தான் பிரிவினைத் திட்டம் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தபோது காந்தி கூறியது: “நிதி வருமானம், சுகாதாரம், காவல்துறை, நீதித்துறை, பொது நிலையங்களைப் பயன்படுத்துதல் முதலானவற்றில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் என்ன கருத்து முரண்பாடு இருக்க முடியும்? மதப் பயன்பாடுகள், நம்பிக்கைகள், அவற்றைக் கடைபிடித்தல் ஆகியவற்றில் மட்டுமே வேறுபாடுகள் இருக்க முடியும். ஒரு மதச் சார்பர்ற அரசுக்கு அது குறித்துக் கவலை இல்லை”.

4. 1946 செப்டம்பரில் ஒரு கிறிஸ்தவ மதபோதகரிடம் காந்தி இவ்வாறு கூறினார்: “நான் ஒரு சர்வாதிகாரியாக இருந்தால் மதத்தை அரசிடமிருந்து பிரித்து விடுவேன். நான் மதத்தின் பெயரால் ஆணையிடுவேன். மதத்திற்காக உயிரையும் கொடுப்பேன். ஆனால் அது என் சொந்த விஷயம். அதற்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இருக்கக் கூடாது. அரசு மக்களின் பொது நலம், ஆரோக்கியம், அயல் உறவுகள், நாணயம் அச்சிடல் முதலானவற்றை மட்டுமே பார்த்துக்கொள்ளுமே ஒழிய, எக்காரணம் கொண்டும் அவர்களின் மத நம்பிக்கைகளில் தலையிடாது. அது (மத நம்பிக்கை) தனிப்பட்டவர்களின் பிரச்சினையாகவே இருக்கும்”

5. சுதந்திர தினத்திற்கு அடுத்த நாள், கொல்கத்தாவில் உள்ள ஸ்காடிஷ் சர்ச் கல்லூரியைச் சேர்ந்த ரெவரென்ட் கெல்லாஸிடம் உரையாடும்போது, “அரசு மதச்சார்பற்றதாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் எந்த அய்யமும் இல்லை. பொது நிதியிலிருந்து மதக் கல்வி பயிற்றுவிப்பதை அது எந்நாளும் அனுமதிக்காது. எந்த ஒரு குடிமகன் அல்லது குடிமகளும் நாட்டின் பொதுச் சட்டத்திற்குப் பணிந்து நடக்கும் வரை, எந்த ஒரு மத நம்பிக்கையையும் கடைபிடிக்க அவருக்கு உரிமை உண்டு. மதப் பிரச்சாரப் பணியில் எந்த (அரசு) தலையீடும் இருக்கக் கூடாது. ஆனால் அந்நிய ஆட்சியில் இருந்ததுபோல எந்த மத அமைப்பும் அரசுச் சலுகைகளைப் பெற இயலாது” என்றார்.

6. ஆக 17, 1947 அன்று காந்தி, நார்கேல்டங்காவில் பொதுமக்கள் மத்தியில் ஆற்றிய உரை: “(எதிர்கால இந்தியாவில்) மத வேறுபாடுகளின்றி எல்லோரும் சமமாக நடத்தப்படவேண்டும். அரசு முற்றிலும் மதச்சார்பற்றதாக இருக்கும். மத நிறுவனம் எதற்கும் அரசு ஆதரவு இருக்காது. சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமமாகக் கருதப்படுவர்.”

7. ஆக், 22, 1947, கொல்கத்தா தேசபந்து பூங்காவில் ஆற்றிய உரை: “மதம் என்பது தனிநபர் சார்ந்த விஷயம். அப்படி அது முறையாக நடைமுறைப்படுத்தபட்டால் அரசியலில் எந்தச் சிக்கலும் ஏற்படாது… அரசு அதிகாரிகளும், பொதுமக்களும் இந்தப் பொறுப்பை உணர்ந்து ஒரு மதச் சார்பற்ற அரசை உருவாக்க மனப்பூர்வமாகச் செயல்பட்டால், நாம் ஒரு புதிய இந்தியாவை உருவாக்க இயலும். அது உலகுக்கே வழிகாட்டியாக அமையும்.”

8. 1947 நவ 15 அன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, “எல்லாக் குடிமக்களும் சம உரிமை பெறும் மதச்சார்பற்ற ஜனநாயக அரசை”த் தன் குறிக்கோளாக அறிவித்துச் சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்த தீர்மானங்களை இயற்றியது. அன்றைய மாலைப் பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தி அதை வரவேற்று ஒவ்வொரு தீர்மானத்தையும் விளக்கி உரையாற்றினார்.

9. 1947 நவ 28: சோமநாதபுரம் கோவிலை அரசுச் செலவில் சீர்திருத்திக் குடமுழுக்குச் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தபோது அதைக் கடுமையாக எதிர்த்த காந்தி, குருநானக் பிறந்த நாள் உரையாற்றும்போது, “எல்லோருக்குமான அரசாக நாம் இதை உருவாக்கியுள்ளோம். இது ஒரு மதச்சார்பற்ற அரசு. அதாவது எந்த மதத்தையும் சாராத அரசு. அதாவது எந்த ஒரு குறிப்பிட்ட மத அரசும் அல்ல இது. எனவே மத அடிப்படையில் அது தன் நிதியைச் செலவிடாது” என்றார்.

10. கொல்லப்படுவதற்கு ஆறு நாட்கள் முன் (ஜன 24, 1948), “ஒரு மதச் சார்பற்ற அரசிற்கு ஆலோசனைகள் சொல்லி, வழிநடத்த சேவையும் அர்ப்பணிப்பும் மிக்க, ஆக்க பூர்வமான, நன்கு திரட்டப்பட்ட அமைப்பு ஒன்று தேவை. அமைச்சர்கள் அவர்களிடமிருந்து உற்சாகம் பெற்று வழிநடத்தப்பட வேண்டும்.” என்கிற பொருளில் எழுதினார்.

மேற்குறித்த காந்தியின் கருத்துக்கள் அனைத்தும், அவரது இறுதிக்காலத்தில், மதச்சார்பர்ற இந்தியா குறித்து அவர் முன்வைத்தவை. Secularism என்கிற ஒரு தத்துவ வகையினத்தை (philosophical category), ஒரு அரசியல் சொல்லாடலாக (political discourse) மாற்றியமைத்த காந்தியின் மதச்சார்பின்மை குறித்த கருத்துக்களை கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கொள்ளலாம்:

1. மதத்திலிருந்து அரசைப் பிரித்துவிட வேண்டும்.

2. மத நம்பிக்கை என்பது தனிநபர் சார்ந்த விஷயம். அதில் அரசுத் தலையீடு இருக்காது.

3. மதச்சார்பற்ற அரசியல் சட்டம் ஒன்றால் வழிநடத்தப்படும் மக்கள் பொதுச் சட்டத்தை மீறாத வகையில் தமது நம்பிக்கைகளைக் கடை பிடிக்கலாம். பிரச்சாரம் செய்யலாம்.

4. எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்கும் அரசின் ஆதரவோ, அரசு நிதியிலிருந்து உதவிகளோ இருக்காது.

5. மத விஷயங்களில் அரசு தலையிடாது என்ற போதிலும், தீண்டாமை முதலான அடிப்படை மானிட நெறிகளுக்குப் புறம்பான வழமைகளை ஒரு மதம் கடைபிடிக்கும்போது அதில் தலையிட்டு அதை முடிவுக்குக் கொண்டு வரும் உரிமை அரசுக்கு உண்டு.

6. ஒருவர் மதச் சார்பற்றதாக இருப்பது, அல்லது ஒரு மதச்சார்பற்ற அரசியல் சட்டத்தைக் கடைபிடிப்பது என்பது அவர் தனது மத நம்பிக்கையைத் தீவிரமாகக் கடைபிடிபதற்கு எதிரானதல்ல.