மதுரை குண்டு வெடிப்பு வழக்குகளும் காவல்துறையும் : உண்மை அறியும் குழு அறிக்கை

“தீவிரவாதிகளின் ‘ஹிட்லிஸ்டில்’ மதுரை முக்கிய இடத்தில் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துக் கொண்டே இருக்கிறது” என்பது அக்டோபர் 22, 2013 அன்றைய தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளி வந்துள்ள செய்தி. இப்படித் தமிழகத்திலேயே மதுரை முஸ்லிம் தீவிரவாதத்தின் மையமாக உள்ளது என்றொரு கருத்தைப் பொதுப் புத்தியில் பதிப்பதில் தமிழக் காவல்துறை வெற்றி பெற்றுள்ளது. 2011 லிருந்து இன்று (2016) வரை மதுரை மாவட்டம் மற்றும் சுற்று வட்டாரங்களில் மட்டும் காவல்துறையினர் 17 வெடிகுண்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். அனைத்தும் டாஸ்மாக் கடைகள் பேருந்துகள், பொதுக்கூட்ட மேடைகள் முதலான மக்கள் கூடும் இடங்களில் வைக்கப்பட்டு வெடித்த மட்டும் வெடிக்காத குண்டுகள். இவற்றில் இரண்டு பார்சல் குண்டுகள்.

இப்படியான வெடிகுண்டுத் தாக்குதல்கள் உள்ளிட்ட பயங்கரவாத நடவடிக்கைகளால் அப்பாவிப் பொதுமக்கள் பெரிய அளவில் கொல்லப்படுவது என்பது உலகையே அச்சத்தில் உறைய வைத்துள்ள நேரத்தில் இப்படி மதுரை மாவட்டப் போலீஸ் 17 வெடிகுண்டு வழக்குகளைப் புலன் விசாரித்து வருவது என்பது இங்கு பொது மக்கள் மத்தியில் பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னொரு பக்கம் இந்த தீவிரவாதத் தாக்குதல் முயற்சிகள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் செய்யப்படுவதாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் பெரிய அளவில் அந்தச் சமூகத்தையே “சந்தேகத்திற்குரிய சமூகமாகவும்”, “பயங்கரவாதச் சமூகமாகவும்” பார்க்கக் கூடிய நிலைக்கும் இட்டுச் செல்கிறது.

எப்படி இருந்த போதிலும் இப்படியான பயங்கரவாதத் தாக்குதல்கள் கவனமாகப் புலன் விசாரித்துக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் பிரச்சினை என்னவெனில் ஆண்டுகள் ஐந்தாகியும் பெரிய அளவில் யாரும் இதில் கைது செய்ய்ப்படவில்லை. கைது செய்யப்பட்ட சுமார் பத்து பேர்களில் ஒன்பது பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மற்றவரும் இரண்டொரு நாளில் பிணையில் வெளிவருவார் எனச் சொல்லப்படுகிறது. தவிரவும் பயங்கரமான குண்டு வெடிப்பு நிகழ்ச்சிகளாக இவை காவல்துறையாலும் ஊடகங்களாலும் பிரமாதப் படுத்தப்பட்டாலும் இந்தப் 17 பயங்கரவாததாக்குதல் முயற்சிகளிலும் யாரும் ஒரு சிறிய அளவில் கூட பாதிக்கப்படவில்லை; சொத்திழப்புகளும் இல்லை.

இந்த வழக்கு விசாரணைகளில் குறைந்த பட்சம் மூன்று புலன் விசாரணை அமைப்புகள் ஈடுபடுத்தப்பட்டபோதும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் ஏன் இந்த மெத்தனம்? குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் தறுவாயில் இதை முறியடிக்கும் நோக்கில் ஆய்வாளர் மாடசாமி எனும் புலன் விசாரணை அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என ஒரு குற்றச்சாட்டை மதுரை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் வைத்துள்ள ஒரு செய்தியும் பத்திரிகைகளில் பெரிதாய் வந்தது. வேறொரு புலன் விசாரணைக் குழுவில் உள்ள ஒருதலைமைக் காவலர் தீவிரவாதி ஒருவருடன் தொடர்பில் உள்ளார் எனவும் அவரிடமிருந்து பணம் பெற்றுள்ளார் எனவும் ஆதாரத்துடன் அதே கண்காணிப்பாளர் முன்வைத்துள்ள இன்னொரு புகார் பற்றிய செய்தியும் பத்திரிகைகளில் வந்தது.

இது குறித்தெல்லாம் காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனத் தெரியவில்லை. ஆனால் வெடிகுண்டுகள் “வைக்கப்படுவதும்”, முஸ்லிம்கள் வழக்குகளில் சிக்க வைக்கப்படுவதும் தொடர்கின்றன. இது தொடர்பான வழக்கு விவரங்களை எல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது எங்களுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. பல்வேறு புலன் விசாரணை முகமைகள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் இடையில் மிகப் பெரிய வேறுபாடுகள் உள்ளன. ஒரே குற்றம் குறித்து இரண்டு முகமைகளும் வெவ்வேறு நபட்கள் மீது குற்றச்சாட்டுகளை வைக்கின்றன. இதெல்லாம் காவல்துறையினருக்கு இடையே யார் விரைவாகப் பதவி உயர்வு பெறுவது, பணப் பரிசுகளைப் பெறுவது என நடக்கும் போட்டி என நாம் வாளாவிருந்துவிட முடியாது. ஏனெனில் இந்தப் போட்டிகளுக்கிடையில் பல அப்பாவிகள் பாதிக்கப் படுகின்றனர். ஒரு சமூகத்தையே பயங்கரவாதிகளாக மற்றவர்கள் பார்க்கும் நிலை ஏற்படுகிறது.

இந்த நிலை சமூக ஒற்றுமைக்கும் அடிப்படை நீதிவழங்கு நெறிமுறைகளுக்கும் எதிரானது என்கிற வகையில் இது குறித்து ஆய்வு செய்து உண்மைகளையும், ஐயங்களையும் பொது வெளியில் வைப்பதற்கென கீழ்க்கண்ட சமூக ஆர்வலர்கள் அடங்கிய ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.

உறுப்பினர்கள்

1. பேரா.அ.மார்க்ஸ், தலைவர், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), சென்னை

2. ரஜினி, மூத்த வழக்குரைஞர், உயர்நீதிமன்றக் கிளை, மதுரை

3. வழக்குரைஞர் என்.எம்.ஷாஜஹான், மாநிலச் செயலர், NCHRO, மதுரை

4. வழக்குரைஞர், ஏ.ராஜா, உயர்நீதிமன்றக் கிளை, மதுரை

5. வழக்குரைஞர் எம். முஹம்மது அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர், NCHRO, சென்னை

6. வழக்குரைஞர் எஸ்.ஏ.எஸ்.அல்லாவுதீன்,உயர்நீதிமன்றக் கிளை, மதுரை

இக்குழுவினர் இந்தப் 17 வெடிகுண்டு வழக்கு விவரங்களையும் முழுமையாக ஆராய்ந்தபின் சென்ற ஆக 5, 2016 அன்று மதுரை நகர காவல்துறை ஆணையர் ஷைலேஷ் குமார் யாதவ் ஐ.பி.எஸ், உளவுத்துறை உதவி ஆணையர் முத்து சங்கரலிங்கம், ஏ.டி.எஸ்.பி மாரிராஜன் ஆகிய காவல்துறை அதிகாரிகளையும் குற்ற வழக்குகளில் தொடர்பு படுத்தப்பட்டுள்ள மதுரை புதுராமநாதபுரம் சாலை முகமது முபாரக் எனப்படும் உமர் ஃபாரூக்(35) த/பெ மீரான் கனி, தற்போது கைது செய்யப்படுச் சிறையில் இருக்கும் நெல்பேட்டையில் செல்போன் கடை உரிமையாளர் அபூபக்கர் சித்திக்கின் தாய் ஜரீனா பேகம் க/பெ பீர் முகம்மது, நெல்பேட்டை பாண்டலி எனப்படும் முகமது அலி (39) த.பெ முகமது சுல்தான், நெல்பேட்டையில் பீடா கடை வைத்துள்ள சகோதரர்கள் ஃபரீத்கான் மற்றும் மன்சூர் கான் த/பெ அப்துல் ரீதிஃப் கான், நெல்பேட்டை வழக்குரைஞர் உ.முகமது அலி ஜின்னா த.பெ உமர் பாய், நெல்பேட்டை வழக்குரைஞர் சௌகத் அலி, காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனின் புகார்க்கடிதம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ரிட் மனு தாக்கல் செய்துள்ள வழக்குரைஞரும் SDPI கட்சியின் மதுரை மாவட்ட வழக்குரைஞர் அணித் தலைவருமான சையது அப்துல் காதர் த.பெ அப்துல் ரஷீது ஆகியோரையும் சந்தித்து விரிவாகப் பேசினர். மீண்டும் இவர்களில் சிலரைப் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் ஐயங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டனர். மேலூரில் பள்ளிவாசல் முன்பு வாசனைத் திரவியங்கள் விற்கும் அப்பாஸ் மைதீன் த/பெ ஷேக்தாவூத், மேலூரில் தற்போது ஒரு வெல்டிங் பட்டறையில் வேலை செய்துவரும் முபாரக் த.பெ ஷேக் என்கிற மீரா மைதீன், ஆட்டோ ஓட்டுநர் யாசின் த.பெ காதர் மைதீன் மற்றும் பிரியாணி மைதீன் த.பெ பக்ருதீன் ஆகியோரை நேரில் சந்திக்காவிட்டாலும் தொலை பேசியில் அவர்களுடன் விரிவாகப் பேச முடிந்தது. இந்த வழக்குகள் சிலவற்றை தற்போது விசாரித்து வரும் ஆய்வாளர் சீனிவாசன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம்.

17 வெடிகுண்டு வழக்குகளின் சுருக்கமான விவரங்கள்

1. 30.04.11 – மதுரை மாட்டுத்தாவணி அருகில் ‘டாஸ்மாக்’ பாரில் குண்டு வெடிப்பு (கே.புதூர் காவல்நிலையக் குற்ற எண் 788/2011). பள்ளிவாசலுக்கு அருகில் டாஸ்மாக் இருந்ததால் குண்டு வைக்கப்பட்டது எனச் சொல்லப்பட்டது.

2. 30.09.2011 – கே.புதூர் பஸ் டெப்போவில் நின்றிருந்த அரசு பேருந்தில் வெடிக்காத குண்டு ஒன்று காணப்பட்டது (கே.புதூர் கா.நி.கு.எண் 1302/2011).

3. 07-12,2011 – திருவாதவூர் அருகே சித்தரடிகள் குளத்தில் குண்டு வெடிப்பு (மே.லூர் கா.நி.கு.எண் 757/2011) – பாபர் மசூதி தகர்ப்புக்கு எதிர்வினை எனக் காரணம் சொல்லப்பட்டது).

4. 01.05.2012 – மதுரை அண்ணா நகர் ஶ்ரீராமர் கோவில் கம்பி கேட் அருகில் சைகிள் குண்டு வெடிப்பு. (அண்ணா நகர் கா.நி.கு.எண் 404/2012) –பா.ஜ.க வின் தாமரை சங்கமம் நிகழ்ச்சிக்கு அத்வானி வருகையை எதிர்த்து எனச் சொல்லப்பட்டது).

5. 03.08.2012 – உமர் ஃபாரூக் என்பவர் கடைக்கு ஒரு பார்சல் குண்டு வந்தது (தெற்குவாசல் கா.நி.கு.எண் 736/2012) –சௌராஷ்டிர மாநாட்டுக்கு மோடி வருவதாகக் கேள்விப்பட்டு வைத்ததாகச் சொல்லப்பட்டது). இருவர் கைது.

6. 29.09.2012 – தேனி டாஸ்மாக் கடை அருகில் ஒரு வெடிகுண்டு (தேனி கா.நி.கு.எண் 692/2012) – இமாம்அலி நினைவாக எனச் சொல்லப்பட்டது.

7. 01.11.2012 – திருப்பரங்குன்றம் தர்ஹா அருகில் ஒரு வெடிக்காத குண்டு (திருப்பரங்குன்றம் கா.நி.கு.எண் 362/2012)

8. 20.11.2013 வழக்குரைஞர் அக்பர் அலி காரில் குண்டு வெடிப்பு (விளக்குத்தூண் கா.நி.கு.எண் 120/2014).

9. 09.02.2014 – தினமணி தியேட்டர் அருகில் அ.தி.மு.க சாதனை விளக்கப் பொதுக்கூட்ட மேடை பின்புறம் குண்டு வெடிப்பு (தெப்பக்குளம் கா.நி.கு.எண் 88/2014).

10. 05.02.2014 – ராஜலிங்கம் வெங்காயக் கடை அருகில் ஒரு குண்டு கண்டெடுப்பு (விளக்குத்தூண் கா.நி.கு.எண் 120/2014)

11. 14.03.2014 – நெல்பேட்டை ஜமாத் செயலர் காஜா மைதீன் பைக்கில் குண்டு வெடிப்பு (விளக்குத்தூண் கா.நி.கு.எண் 196/2014).

12. 02.01.2015 – சிவகங்கை டாஸ்மார்க் பாரில் குண்டு வெடிப்பு (சிவகங்கை கா.நி.கு.எண் 02/2016) – பள்ளிவாசலுக்கு அருகில் டாஸ்மாக் இருந்ததால் எனச் சொல்லப்பட்டது.

13. 01.03.2015 – வில்லாபுரம் சம்சுதீன் என்பவரது வீட்டில் கத்தி மற்றும் குண்டு செய்வதற்குத் தேவையான பொருட்கள் சோதனையில் கண்டெடுக்கப் பட்டது (அவனியாபுரம் கா.நி.கு.எண் 262/2015 u/s 25(1)(a) of arms act r/w 201, 153 (A), 187, 120(B), 341 IPC).

14. 21.03.2015 – சிவகங்கை மாவட்டம் பிரான்மலையில் குண்டு வைக்க மூலப் பொருட்கள் வைத்திருந்ததாக Q பிரிவு போலீஸ் வழக்கு குற்ற எண் 01/2015. 11 பேர் குற்றம்சாட்டப்பட்டனர். மூன்று வழக்குரைஞர்கள் உட்பட. இமாம் அலியைக் காட்டிக் கொடுத்தவர்களைப் பழிவாங்க உருவாக்கப்பட்ட ‘அல் முத்தஹீம் ஃபோர்ஸ்’ அமைப்பினர் செய்தது எனக் குற்றச்சாட்டு.

15. 29.09.2015 – ஆரப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இரண்டு பஸ்களில் குண்டு வெடிப்பு (கரிமேடு கா.நி.கு.எண் 859/2015). ஏழுபேர் குற்றம்சாட்டப்பட்டு ஐவர் பிணையில் உள்ளனர் இருவர் தலைமறைவு.

16. நெல்பேட்டை கல்பாலம் குண்டு வெடிப்பு – (விளக்குத்தூண் கா.நி.கு.எண் 769/21016).

17. .நெல்பேட்டை அம்சவல்லி ஓட்டல் அருகில் ஃபரீத்கான் என்பவர் பீடா கடையில் பார்சல் குண்டு (விளக்குத்தூண் கா.நி.கு.எண் 900/2016).

மேலே உள்ள குண்டு வெடிப்பு வழக்குகள் எதிலும் யாரும் பாதிக்கப்படவில்லை. இந்த ‘வெடிகுண்டுகள்’ யாவும் பட்டாசுவகைக் குண்டுகள் எனவும் low intensity explosion எனவும் தான் காவல்துறையினரால் குறிப்பிடப்படுகிறது.

இந்த வழக்குகள் பலவற்றின் குற்றப்புலனாய்வு அதிகாரியான ஏ.டி.எஸ்.பி மாரிராஜன் எங்களிடம் இக்குண்டுகள் பற்றிச் சொன்னது:

“இந்த explosives எல்லாம் சும்மா சின்ன பட்டாசு வெடிங்கதான். உங்க பக்கத்தில இதை வச்சு வெடிச்சா பக்கத்துல இருக்கிற பேப்பர், துணி இதுதான் லேசா நெருப்பு பத்தி அணையும். வேற எந்த ஆபத்தும் இருக்காது. இந்தக் குண்டுகள் ஒவ்வொண்ணுக்கும் ஆகிற மொத்தத் தயாரிப்புச் செலவே ஒரு 150 ரூபாய்தான் இருக்கும்”

பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் மதுரை காவல்துறை ஆணையரும் இவை சாதாரண பட்டாசுக் குண்டுகள்தான் என ஏற்றுக் கொண்டார்.
இந்த 17 வழக்குகளில் இதுவரை திருவாதவூர் பஸ் குண்டு கண்டெடுக்கப்பட்ட வழக்கு, அ.தி.மு.க பிரச்சாரக் கூட்ட மேடைக்குப் பின் குண்டு வெடித்த வழக்கு, கவுன்சிலார் ராஜலிங்கம் அலுவலகம் அருகில் குண்டு கண்டெடுக்கப்பட்ட வழக்கு, பிரான் மலை குண்டு தயாரிப்பு மூலப் பொருட்கள் வைக்கப்படிருந்தது என்கிற வழக்கு ஆகிய நான்கில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2011 முதல் 2014 வரையுள்ள அனைத்து வழக்குகள் மற்றும் கல்பாலம் வழக்கு ஆகியவற்றை சி.பி.சி.ஐ.டி காவல் பிரிவின் சிறப்புப் புலனாய்வுத் துறை (SIT) விசாரித்து வருகிறது. ஆரப்பாளையம் பஸ் குண்டு வழக்கு, சமீபத்திய நெல்பேட்டை பீடா கடை பார்சல் குண்டு வழக்கு ஆகிய இரண்டும் நகர காவல்துறையால் புலன் விசாரிக்கப்படுகிறது.

இந்தப் 17 வழக்குகளில் முதல் வழக்கு பதிவாகி ஐந்தாண்டுகள் ஓடிவிட்டன. நம் தமிழகக் காவல்துறை தன்னை ஸ்காட்லன்ட் யார்டுடன் ஒப்பிட்டுக் கொள்ளத் தயங்குவதில்லை. சுவாதி வழக்கில் ஒரு வார காலத்தில் குற்றவாளியைக் கண்டு பிடித்த பெருமையும் அதற்குண்டு. ஆனால் இந்த ஐந்து ஆண்டுகளில் இந்த 17 வழக்குகளில் நான்கில் மட்டுந்தான் அதனால் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய முடிந்துள்ளது. நாட்டையே அச்சுறுத்தும் பயங்கரவாதம் தொடர்பான இவ்வழக்குகளில் இத்தனை மெத்தனம் ஏன்?

இத்தனை வழக்குகளிலும் சுமார் 22 பேர்கள்தான் இதுவரை குற்றம் சாட்டப்பட்டு, அதிலும் 10 பேர்கள்தான் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிலும் 9 பேர் இன்று பிணையில் வெளி வந்துள்ளனர்.

தமிழகக் காவல்துறையினர் வெடிகுண்டு வழக்குகளிலும் கூட இத்தனை இரக்கத்துடன் செயல்படக்கூடியவர்களாக இருக்கிறார்களே என வியப்பதா? இல்லை இவ்வளவுதான் இவர்களின் திறமை என நகைப்பதா? இல்லை இதற்கெல்லாம் பின் ஏதோ கரணங்கள் உள்ளன என சந்தேகப்படுவதா?

இதற்கு விடை காண இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்ட முறைகளையும் அதனூடாக இன்று மேலெழுந்துள்ள சில பிரச்சினைகளையும் ஆராய வேண்டும்..

காவல்துறை மீது காவல்துறையே வைக்கும் குற்றச்சாட்டு

வெடித்ததெல்லாம் பட்டாசுக் குண்டுகள்தான் என்ற போதிலும் பெரும்பாலான முதல் தகவல் அறிக்கைகளில் குற்றவாளிகள் யார் எனப் பெயரிடப்படாத போதும், இந்த வழக்கு விசாரணைகளில் மதுரை முஸ்லிம்கள், குறிப்பாக நெல்பேட்டை வாழ் ஏழை எளிய முஸ்லிம் இளைஞர்கள் மிகக் கொடுமையாகத் துன்புறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டனர். ஏ.டி.எஸ்.பி மயில்வாகனன் மற்றும் ஆய்வாளர் மாடசாமி ஆகியோர் தலைமையில் உருவாக்கப்பட்ட தனிப்படை (Special Team) சுமார் 500 முஸ்லிம் இளைஞர்களைக் கடும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தி விசாரித்தது. நெல்பேட்டை வாழ் பெண்களும் கூட பெண் போலீஸ் அதிகாரிகள் முன்னிலை இல்லாமல் விசாரிக்கப்பட்டனர். சுமார் ஓராண்டுக்கு முன் நெல்பேட்டை மக்கள் மத்தியில் இது தொடர்பாக விசாரித்த எங்கள் குழு முன் இப்படிப் பலரும் வந்து தாங்கள் அப்பாவிகள் எனவும், தங்களைத் துன்புறுத்துவதாகவும் பதிவு செய்தனர்.

இவர்களின் விசாரணை முறை எத்தனை அநீதியானது, இவர்களது விசாரணையில் எப்படி முஸ்லிம் வெறுப்பு அடிநாதமாக உள்ளது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டைச் சொல்லலாம். 2011ல் இந்த மயில்வாகனன் – மாடசாமி ‘டீம்’ பரமக்குடி பா.ஜ.க பிரமுகர் முருகன் என்பவர் கொலையைப் புலனாய்வு செய்தது. பரமக்குடி – இடைக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த மதார் சிக்கந்தர் என்பவர் திருச்சி சிறையில் காவலராக இருந்தார். இவரையும் இந்தப் பகுதியைச் சேர்ந்த இத்ரிஸ் என்பவரையும் இந்தக் கொலை வழக்கில் தொடர்பு படுத்த மாடசாமி குழு முடிவெடுத்துக் களத்தில் இறங்கியது. இவர்கள் மதாரையும் இத்ரிசையும் கடத்திச் சென்று திருச்சியில் ஒரு விடுதியில் தங்க வைத்துச் சித்திரவதை செய்தனர். இதே நேரத்தில் இந்த ஊரைச் சேர்ந்த சுந்தரவேலு, பாண்டி என்னும் இரு இளைஞர்கள் வேறொரு வழக்கில் பிணை கிடைத்து திருச்சி நீதிமன்றத்தில் கையெழுத்திட ஆணையிடப்பட்டனர். கையெழுத்திடவந்த இந்த இளைஞர்கள் இருவரையும் மாட்சாமி டீம் கடத்திச் சென்று அவர்களை என்கவுன்டர் செய்வதாக மிரட்டியது. இறுதியில் அந்த மிரட்டலுக்கான காரணத்டை வெளிப்படுத்தினர். அவர்கள் இருவரும் கையெழுத்துப் போடுவதற்காக திருச்சியில் இருந்த போது அவர்கள் ஊர்க்காரரான மதாரின் அறையில் தங்கி இருந்ததாகவும் அப்போது அவர்களுக்குத் தெரிந்த இத்ரிஸ் அங்கு வந்ததாகவும் மதாரும் இத்ரிசும் சேர்ந்து முருகனைக் கொல்லச் சதித் திட்டம் செய்ததைத் தாங்கள் கண்டதாகவும் சாட்சி சொல்ல அவர்களை மாடசாமி டீம் மிரட்டியது.

திருச்சியில் உள்ள குரு லாட்ஜில் தங்கவைத்து அவர்கள் இவ்வாறு மிரட்டப்பட்டனர். அடுத்த நாள் நீதிமன்றத்தில் கையெழுத்திட அவர்கள் வந்தபோதும் கூடவே வந்த மாடசாமி டீம் வாசலில் காத்திருந்தது. அப்போது இந்த இளைஞர்கள் இருவரும் ஓடி அங்கு இருந்த வழக்குரைஞர் கென்னடியிடம் நடந்தவற்றைச் சொன்னார்கள். அவர் உடனடியாக மாஜிஸ்ட்ரேட் முன் (Judicial Magistrate Court No 2, Thiruchirappalli)அழைத்துச் சென்று அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். நீதிபதி ராஜாராம் அவர்கள் மாடசாமி மற்றும் அவரது குழுவில் இருந்த 16 காவலர்கள் மீதும் கொலை செய்வதாக மிரட்டியது, பொய்சாட்சிகளை உருவாக்கியது, மனித உரிமைகளை மீறியது ஆகிய அடிப்படைகளில் விசாரணை நடத்த வேண்டும் என CBCID காவல் பிரிவுக்கு ஆணையிட்டார் (ஆக 1, 2011). இந்த ஒரு சான்று போதும் மயில்வாகனன் – மாடசாமி குழு எவ்வளவு முஸ்லிம் வெறுப்புடன் விசாரணைகளை மேற்கொண்டனர் என்பதற்கு.

இந்தக் குழு மீது CBCID விசாரணை தொடங்கிய பின்னும் தொடர்ந்து அந்தக் குழு மதுரை வெடிகுண்டு வழக்கு விசாரணைகளைச் செய்ய அனுமதிக்கப்பட்டது. தனது அதிகாரிகள் விசாரணை என்கிற பெயரில் மேற்கொள்ளும் கொடும் மனித உரிமை மீறல்களைக் காவல்துறை தண்டித்ததாக வரலாறே இல்லை என்பதற்கு இது மேலும் ஒரு சாட்சி.

இந்தப் பின்னணியில்தான் அப்போது மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த வி.பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ் காவல்துறைத் தலைவருக்கு (DGP) எழுதிய இரு கடிதங்கள் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தன.

23.08.2013 அன்று எழுதப்பட்ட முதல் கடிதத்தில் மயில்வாகனன் – மாடசாமி டீம் தனது நேரடி வழிகாட்டலில் மிகச் சிறப்பாக மதுரை வெடிகுண்டு வழக்குகளைப் புலனாய்வு செய்து வருகிறது எனவும், ஆனால் குற்றவாளிகளைச் சரியாக அடையாளம் கண்டு கைது செய்ய இருந்த நிலையில் அவர் திருநெல்வேலிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் எனவும் இந்த இடமாற்ற ஆணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கோரி இருந்தார்.

29.03.2013 அன்று டி.ஜி,பி க்கு பாலகிருஷ்ணன் எழுதிய இரண்டாவது கடிதத்தில் மதுரை வெடிகுண்டு வழக்குகளை விசாரித்து வந்த பல்வேறு புலனாய்வு மற்றும் உளவுப் பிரிவுகளான மதுரை SID, மதுரை SIT, மதுரை நகர SIC ஆகியவற்றுக்கும் முஸ்லிம் அடிப்படைவாதிகளாகவும் காவல்துறையின் தகவலாளிகளாகவும் (informants) செயல்படும் இஸ்மத், வகாப் ஆகியோருக்கும் இடையே நிலவும் ஆபத்து நிறைந்த இரகசிய உறவுகள் குறித்த தன் கவலைகளைப் பகிர்ந்திருந்தார். அப்படியான ஒரு ‘தீவிரவாதியிடம்’ இருந்து 25,000 ரூபாயை உளவுப் பிரிவைச் சேர்ந்த விஜய பெருமாள் எனும் தலைமைக் காவலர் பெற்றுக் கொண்டதை ஆதாரத்துடன் வெளிப்படுத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இருந்தார். அதோடு காவல்துறையைச் சேர்ந்த விஜய பெருமாளும் இந்த முஸ்லிம் ‘தீவிரவாதிகளும்’ சேர்ந்து பரமக்குடியில் சிலரை மிரட்டிப் பணம் பெற்றுள்ளதாகவும் குற்றம் சாட்டிய பாலகிருஷ்ணன் விஜய பெருமாளின் நடவடிக்கைகள் மதுரை மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் வெடிகுண்டுகள் வைப்பதற்கும் பயன்பட்டுள்ளது என்கிறார்.

இன்றுவரை விஜயபெருமாள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை. மாடசாமியின் இடமாற்றமும் ரத்தாக வில்லை.
கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் முறையீடு செய்தும் தன் இடமாற்றம் ரத்தாகாததைக் கண்ட மாடசாமி நேரடியாக ஊடகங்களிடம் பேசத் தொடங்கினார். ‘தி இந்து’ நாளிதழிலும் (அக் 23, 26, 2013), ஜூனியர் விகடனிலும் (நவ 03, 2013) அவரது கருத்துக்கள் வெளியாயின. அவற்றில் மதுரைக் குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான மூன்று பேர்களைத் தான் கண்டுபிடித்து விட்டதாகவும் ஆனால் காவல்துறையின் CBCID பிரிவின் Special Investigation Division ஐச் சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் மாரிராஜன் என்கிற இரு ADSP கள் தடுத்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
காவல்துறைப் பிரிவுகளுக்கிடையே இருந்த இந்த முரண்கள் அம்பலத்துக்கு வந்ததில் ஒன்று தெளிவாகியது. இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் காவல்துறைக்கும் தொடர்புண்டு அல்லது யார் அதைச்செய்திருப்பார் என்பது அவர்களுக்குத் தெரியும் என்பதுதான் அது. உண்மைகள் வெளிவந்தால் காவல்துறைக்கே பிரச்சினைகள் வரும் என்பதாலேயே ஐந்து ஆண்டுகள் ஆகியும் இந்தப் புலன் விசாரணைகள் இறுதியை எட்டவில்லை.

இந்த அறிக்கைகளை எல்லாம் சுட்டிக்காட்டி SDPI கட்சியின் மாவட்ட வழக்குரைஞர் அணிச் செயலாளர் அப்துல் காதர் ஒரு ரிட் மனுவை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்தார் (W.P –MD- No. 4711 of 2014). தமிழ்நாடு காவல்துறை விசாரித்தால் உண்மைகள் வெளிவராது எனவும் மதுரை வெடிகுண்டு விசாரணை முழுமையையும் CBI க்கு மாற்றுமாறும் அவர் அந்த மனுவில் கோரியுள்ளார்.
மதுரை காவல்துறை மேற்கொண்டுள்ள சமாளிப்பு நடவடிக்கைகளும் அதன் மூலம் வெளிப்படும் முரண்களும்
இந்த வெடிகுண்டு வழக்குகள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக CBI விசாரணைக்கு மாற்றப்படும் வாய்ப்புள்ளது என்பதை அறிந்த மதுரை காவல்துறையினர் விரைந்து இந்த வழக்கு விசாரணைகளில் சில் மாற்றங்களைச் செய்தனர். இதன் முதற் கட்டமாக ஒரு புதிய ஆணையை வெளியிட்டனர் (மாநகர் சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையர் செயல்முறை ஆணை C.No.66/ Camp/ DC/ L&O/ M.C. 2015 dated 25.01.2015). இதன்படி மதுரை மாநகர் எல்லைக்குட்பட்ட வெடிகுண்டு வழக்கு விசாரணைகளை விசாரிக்க அண்ணா நகர் காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் என்பவர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் கடந்த “மார்ச் 01, 2015 அன்று தனக்குக் கிடைத்த இரகசிய தகவல்” ஒன்றின் அடிப்படையில் அண்ணா நகர் இராமர் கோவில் சைக்கிள் குண்டு வெடிப்பு வழகில் (குற்ற எண் 404/2012) தொடர்புடைய சம்சுதீன் என்பவரைக் கைது செய்துள்ளதாக அறிவித்தார். அந்த சம்சுதீன் மீது அவனியாபுரம் காவல் நிலையத்தில் புதிய வழக்கொன்றைப் (262/2015) பதிவு செய்து, அவரது “ஒப்புதல் வாக்குமூலம்” நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி மதுரையைச் சுற்றி நடந்த குண்டு வெடிப்புகள் பலவற்றை இந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் கண்டுள்ள நபர்கள்தான் செய்தனர் எனக் கூறப்பட்டது. இத்தகைய ஒப்புதல் வாக்குமூலங்கள் பலவும் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வாக்குமூலம் அளிப்பவரிடம் படித்துக் கூடக் காட்டாமல் கையொப்பம் பெறப்படுபவை என்பது குறிப்பிடத் தக்கது.
மதுரை காவல்துறை இந்த வழக்குகளின் விசாரணையில் ஏற்படுத்தும் இடியாப்பச் சிக்கல் இத்தோடு முடியவில்லை. சிவகுமாரின் இந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே இந்த குண்டு வெடிப்புகள் குறித்து மார்ச் 21, 2015 அன்று மதுரை Q பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை இன்னொரு வழக்கைப் பதிவு செய்தது. இந்தப் புதிய வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் நாம் தொடக்கத்தில் குறிப்பிட்ட 2011 முதல் 2015 வரையிலான அனைத்து வெடிகுண்டு வழக்குகளையும் கொண்டுவந்தனர். இந்த வழக்குகள் அனைத்திலும் 1908 ம் ஆண்டு Explosive Substances Act பிரிவுகள் 3,4,5 மற்றும் 120 (B) and 34 of IPC ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றங்கள் சுமத்தப்பட்டன. இதில் 11 பேர்கள் பெயர் குறிப்பிட்டும் மற்றும் சிலர் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்த வழக்குகள் அனைத்திற்கும் ஏற்கனவே அந்தந்தக் காவல் நிலையங்களில் தனித்தனியே வழக்குகள் பதியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

இந்தப் பழைய முதல் தகவல் அறிக்கைகளுக்கும் இன்றைய அறிக்கைக்கும் இடையில் பல முரண்கள் உள்ளன. இந்த முரண்கள் அவை அனைத்தும் அப்பட்டமாக ஜோடிக்கப்பட்ட பொய் வழக்குகள் என்பதைக் காட்டுகின்றன். எமது வழக்குரைஞர் குழு சுட்டிக்காட்டியுள்ள அப்படியான முரண்களில் சில இங்கே:

1. 2011 மாட்டுத்தாவணி டாஸ்மாக் குண்டு வெடிப்பு வழக்கு: ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான விசாரணையில் குண்டு வைத்தது உமர் ஃபாரூக் எனப் பதிவாகியுள்ளது. இன்றைய Q பிரிவு முன்வைக்கும் வாக்குமூலத்தின்படி அதைச் செய்தது ஹாரூன் எனச் சொல்லப் படுகிறது.

2. 2011 கே. புதூர் அரசு டிப்போ பேருந்து குண்டு வழக்கு: பழைய வாக்குமூலப்படி குண்டு வைத்தது இஸ்மத்; Q பிரிவு விசாரணையின்படி இது ஹாரூன்.

3. 2012 இராமர் கோவில் சைக்கிள் குண்டு வழக்கு: சிவகுமார் விசாரணையில் இதைச் செய்தது பிலால் மாலிக், தௌபீக் ஆகியோர், ஹாரூன். Q பிரிவு விசாரணையில் தவ்பீக் பெயர் மட்டும் உள்ளது.

4. 2013 நவம்பர் சுங்கம் பள்ளிவாசல் அக்பர் அலி கார் குண்டு வழக்கு: சிவகுமார் விசாரணையின்படி இதைச் செய்தது ஹாருனுன் அசாருதீனும். Q பிரிவு விசாரணையில் இது மைதீன் பீர் ஆக மாறுகிறது.

5. 2014 சுங்கம் பள்ளிவாசல் காஜா மைதீனின் இரு சக்கர வாகனத்தில் குண்டு வெடித்த வழக்கு: சிவகுமார் விசாரணையின்படி அது உமர் ஃபாரூக்; Q பிரிவு விசாரணையின்படி அது மைதீன் பீர்.

6. 2012 ஆகஸ்டில் உமர் ஃபாரூக் கடைக்கு வந்த பார்சல் குண்டு வழக்கு: சம்பவம் நடந்த உடன் பதியப்பட்ட தெற்குவாசல் காவல் நிலைய மு.த.அ யின் அடிப்படையில் 96 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு குற்றவாளி அசாருதீன்தான் என அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் இன்றைய Q பிரிவு விசாரணையின்படி பார்சல் குண்டைக் கொண்டு வந்தது தவ்பீக்.

விசாரணையில் இப்படி ஏற்படுத்திய அதிரடித் திருத்தங்கள் இத்தோடு முடியவில்லை. அடுத்து மேலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினார்கள். திடீரென இந்த வழக்குகள் C.B.C.I.D யின் S.I.D வசம் ஒப்படைக்கப்பட்டுன. C.B.C.I.D யின் ADSP மாரிராஜன் கடந்த 24.03.2015 அன்று இதை மறு வழக்காக மீள்பதிவு (Re – Register) செய்தார். அதன்பின் இந்த வழக்குகளின் விசாரணை அதிகாரிகளாக சீனிவாசன், முருகவேல், மணிவண்ணன், சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டாலும் நடைமுறையில் இந்த வழக்குகள் அனைத்தையும் இப்போது மாரிராஜனே விசாரித்து வருகிறார். நாங்கள் சந்தித்த அனைவரும் இதை உறுதி செய்தனர்.

இந்தப் புதிய திருப்பங்களின் ஊடாக இவர்கள் உருவாக்கிய ஒரு புதிய வழக்கு அதிர்ச்சியை அளைக்கக் கூடியது. மார்ச் 21, 2015 அன்று மேலூரில் அப்போது கூரியர் ஏஜன்சி ஒன்றை வைத்திருந்த அப்பாஸ்மைதீன் (43) என்பவரை Q பிரிவு போலீசார் பெரும் படையுடன் வந்து இழுத்துச் சென்று ஒரு நாள் முழுவதும் அவரைக் கடுமையாக அச்சுறுத்தி இறுதியில் பிரான் மலைக்குக் கொண்டு சென்றனர். அங்கிருந்த ஏராளமான காவல்துறையினர் முன் அவரை நிறுத்தி, அடித்து, அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு வாளியைக் கை நீட்டிக் காட்டச் சொல்லி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கீழே காத்திருந்த பத்திரிகையாளர்களுக்கும் அந்த வாளி குண்டுக்குக் காரணமானவர் அப்பாஸ் மைதீன் தான் எனச் சொல்லப்பட்டது. பின் அவரிடம் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஒரு வாக்குமூலத்தில் கையொப்பமும் பெறப்பட்டது. பின் மீண்டும் மார்ச் 31, 2015 அன்று அவரை ADSP மாரிராஜன் ‘கஸ்டடி’ எடுத்து இன்னொரு வாக்குமூலத்தில் கையொப்பம் வாங்கினார். ஒரே நபர், ஒரே வழக்கு குறித்துத் “தந்துள்ள” இரு வாக்கு மூலங்களிலும் பல வேறுபாடுகள் உள்ளன. Q பிரிவு முன் வைத்துள்ள வாக்குமூலத்தில், “2011 ம் ஆண்டு ஹாரூன் மூலம் ஒரு வெடிகுண்டு வைத்தோம். அது வெடித்தது” என அப்பாஸ் மைதீன் கூறுவதாக உள்ளது. பத்து நாட்களுக்குப் பின் ADSP மாரிராஜன் பதிவு செய்துள்ள வாக்குமூலத்தில், “பேக் கடை செய்யதுவும், ஹாருனும் வெடிகுண்டை மதுக்கடை முன் வைத்து வெடிக்கச் செய்வது எனத் தீர்மானம் செய்யப்பட்டது. உமர்ஃபாரூக் வெடிகுண்டு செய்து தருவதாகக் கூறினார். அப்போது செல்வகனி, தலைவர் சீனி, வக்கீல் பயாஸ், வக்கீல் சௌகத் அலி, ஆட்டோ யாசின் ஆகியோர் தங்களிடம் இருந்த பணம் 5000 த்தை வெடிமருந்துப் பொருள் வாங்குவதற்கு உமர் ஃபாரூக்கிடம் கொடுத்தனர். இரண்டு மூன்று நாட்கள் கழித்து மீண்டும் நாங்கள் செருப்புகடை செய்யது கடைக்கு வந்தோம். அப்போது உமர் ஃபாரூக் கையில் ஒரு பேக் கொண்டு வந்திருந்தார். அதிலிருந்து பேட்டரி, வெடிமருந்து மற்றும் டைமருடன் கூடிய ஒரு டப்பாவை வெளியில் எடுத்தார். பேக் கடை செய்யதுவிடமும் ஹாருனிடமும் அதை எப்படி வெடிக்கச் செய்வது என்று சொல்லிக் கொடுத்தார். பின்னர் வெடிகுண்டை எடுத்து சென்று மதுக்கடை பார் முன்பு வைக்கச்சொல்லி பேக் கடை செய்யதுவிடமும் ஹாருனிடமும் சொல்லிவிட்டு நாங்கள் அங்கிருந்து கிளம்பி விட்டோம். அன்று இரவு மாட்டுத்தாவணி எதிரே உள்ள மதுக்கடையில் வெடிகுண்டு வெடித்தது” என விரிவாக உள்ளது.

நாங்கள் நெல்பேட்டையில் சந்தித்த பலரும் “உன்னை 13 வழக்குகளிலும் சிக்க வைத்து விடுகிறேன்” என மாரிராஜன் உள்ளிட்ட காவல்துறையினர் மிரட்டி வருவதாகக் கூறினர். யாரை எல்லாம் காவல்துறை குறி வைத்துள்ளதோ அவர்களை எல்லாம் இப்படிக் காவல்துறையாலேயே தயாரிக்கப்பட்ட இந்த அப்பாஸ் மைதீனின் வாக்குமூலத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

நாங்கள் சந்தித்தவர்கள் சொன்னவை

முகமது முபாரக் எனப்படும் உமர் ஃபாரூக் (35), புது ராமநாதபுரம் : “தற்போது 13 வழக்குகள்ல என்னைச் சேர்த்துள்ளதாக நேற்று கூட ஆய்வாளர் சீனிவாசன் சொன்னார். இப்டி பொய் வழக்கு போடுறீங்களே, நீங்க நல்லா இருப்பீங்களா, என் பெண்டாட்டி பிள்ளைங்க மாதிரி உங்க பெண்டாட்டி புள்ளைங்க கஷ்டப்பட மாட்டாங்களான்னு கேட்டேன். ‘என்ன சபிச்சிராதப்பா. நான் என்ன பண்றது. எனக்கு எல்லாம் தெரியும். என்ன செய்யிறது Q பிராஞ்ச் ஏற்கனவே உன்னை இந்த வழக்குகள்ல சேர்த்துருக்கதால ஒண்ணுமே பண்ண முடியல. நீ 13 வழக்குலயும் AB (முன் ஜாமீன்) வாங்கிடு’ என்றார். நான் இமாம் அலிக்கு அடைக்கலம் கொடுத்தது அப்படி இப்படின்னு 2004 முதல் 2007 வரை மூணரை வருஷம் ஜெயில்ல இருந்தேன். ஹை கோர்ட்ல எல்லா வழக்கிலயும் விடுதலை ஆனேன். இப்ப மீன் வியாபாரமும் ரியல் எஸ்டேட்டும் பண்றேன். விஜய பெருமாள் என்கிற ஏட்டு என்னிடம் வந்து ஒரு ரியல் எஸ்டேட் டீல்ல அவருக்கு வேண்டிய ஒரு மூணாவது நபருக்குச் சலுகை பண்ணச் சொன்னார். என்னால முடியல. இப்ப என்னைப் பழி வாங்குறாங்க. இமாம் அலி வழக்குபோது நான் தலைமறைவா இருந்தப்போ போலீஸ் தொல்லை தாங்காம எங்க அப்பா மீரான் கனி மனித உரிமை செல்பாட்டாளரான ஹென்றி டிபேனிடம் உதவி கேட்டதுக்காக வங்கிக் கொள்ளை வழக்கு ஒண்ணுல அவரையும் என் அக்கா மாப்பிளையையும் பொய் வழக்கு போட்டு உள்ள தள்ளினாங்க. அதிலேயும் அவங்களை நீதிமன்றம் விடுதலை பண்ணிச்சு”
பாண்டு அலி என்கிற முகமது அலி (39), த.பெ முகமது சுல்தான் நெல்பேட்டை: “என்னையும் 13 வழக்குகள்ல சேர்த்திருக்காங்க. அந்த வழக்குகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. இந்த வழக்குகள் எதுலயும் நான் இதுவரை கைது செய்யப்படல. உமர் ஃபாரூக் என்னோட மைத்துனர். இமாம் அலி தொடர்பான வழக்குல 10 வருஷம் ஜெயில்ல இருந்துருக்கேன். அதுக்குப் பிறகு நான் எந்த தீவிர நடவடிக்கையிலயும் இல்ல. ADSP மாரிராஜன் என்கிட்ட நல்லா பேசுவாரு. தேனி வெடிகுண்டு வெடிப்புக்கு முதல் நாள் நெல்பேட்டை பக்கம் வந்தாரு. நான் தேசிய லீக் கட்சியில இருந்து செயல்படுறேன். அவங்க 2012, செப் 29 அன்னிக்கு கம்பத்தில இமாம் அலி நினைவுநாள்னு அறிவிச்சிருந்தாங்க. அதுக்குப் போகலியான்னு மாரிராஜன் என்னைக் கேட்டாரு. ‘அவசியம் போப்பா. கட்சியில் பொறுப்புல இருக்கிறவங்க நிகழ்ச்சிகள புறக்கணிக்கக் கூடாதுல்ல’ என்றார். அதுல ஏதோ சூது இருக்குன்னு எனக்குத் தெரிஞ்சு போச்சு. அதே மாதிரி அன்னிக்கு தேனியில குண்டு வெடிச்சுது…”
வழக்குரைஞர் சவுக்கத் அலி (36), த.பெ அப்துல் அஜீஸ், நெல்பேட்டை: “நான் ஹைகோர்ட்ல வழக்குரைஞரா இருக்கேன். என்னையும் 13 வழக்கில சேர்த்திருக்காங்க. ஒரு வழக்கில named accused. மற்ற வழக்குகள்ல confession ல கொண்டு வந்திருக்காங்க. நான் இதுக்கு முன்னாடி எந்த வழக்குலையும் சம்பந்தப்பட்டதோ விசாரிக்கப்பட்டதோ இல்லை. உமர் ஃபாரூக்கிற்கு நான் வழக்குரைஞர். அவரோட ரியல் எஸ்டேட் பார்ட்னர். அதனால என்னைப் பழி வாங்குறாங்க”

ஜரீனா பேகம் க/பெ பீர் முகம்மது, நெல்பேட்டை (ராமர் கோவில் குண்டு வழக்கில் இரண்டு வாரங்களுக்கு முன் கைதாகிச் சிறையில் உள்ள அபூபக்கர் சித்திக்கின் அம்மா): “என் மகன் எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டான். அரசியலுக்கும் அவனுக்கும் சம்பந்தமில்ல. அவன் ஒரு செல்போன் கடை வச்சிருக்கான். அதுல ஏதாவது திருட்டுபோன் பிரச்சினையில ரெண்டொரு தடவை கூப்பிட்டு விசாரிச்சுருக்காங்க. மத்தபடி இந்த குண்டு வழக்குகள் எதுலையும் அவனை விசாரிச்சது இல்ல. பெருநாள் முடிஞ்சு டூர் போய்ட்டு வந்தான். இப்டி அவனைப் புடிச்சுட்டுப் போயி ராமர் கோவில் வழக்குல சேர்த்துட்டாங்க…”

ஜரீனா பேகம் அழுதுகொண்டே இதைச் சொன்னபோது அங்கிருந்தவர்கள் அதோடு இன்னொரு சம்பவத்தைச் சொன்னார்கள். ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் ஒரு குழு வந்து சித்திக்கைக் கைது செய்தபோது அவரது கடையில் வேலை செய்யும் சையது முகமது அதை வீடியோ எடுத்துள்ளார். உடனே அவர் செல்போனை சீனிவாசன் டீம் பிடுங்கிச் சென்றுள்ளது. அதைத் திரும்பப் பெறக் காவல் நிலையம் சென்றபோது சையது முகமதுவை ஒரு நாள் முழுக்க ஸ்டேஷனிலேயே காக்க வைத்து விசாரித்துள்ளனர். விசாரணை முடிந்து வந்த சையது மிகவும் மனம் சோர்ந்து காணப்பட்டுப் பின் தற்கொலை செய்து கொண்டார். காவல்துறையின் மிரட்டல் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதி மக்கள் கூறினர். சையதுவின் உடல் அடக்கம் செய்யப்படும்போது தேவை இல்லாமல் ஆய்வாளர் சீனிவாசன் அந்த இடத்தில் ரொம்ப நேரம் சுற்றிச் சுற்றி வந்தார் எனவும் கூறுகின்றனர்.

வழக்குரைஞர் முகமது அலி ஜின்னா த.பெ கே.ஏ. உமர் பாய், நெல்பேட்டை: “என்னையும் 13 வழக்குகளில் சேர்த்துள்ளனர். எனது 17 வயதில் போலீசை அடித்ததாக என் மீது ஒரு வழக்கு. அதன் பின் 2005 வரை ஏழு வழக்குகள் போட்டார்கள். அதில் ஆறு வழக்குகளில் நான் விடுதலை செய்யப்பட்டுள்ளேன். மற்ற ஒரு வழக்கும் ரத்தாகி விட்டது. தமிழ்வீரன் எனும் ஒரு இந்துமுன்னணித் தலைவரைக் கொலை செய்ய முயன்றேன் என ஒரு வழக்குத் தொடர்ந்து குண்டர் சட்டமும் போட்டார்கள். அந்தத் தமிழ்வீரனே அது பொய் வழக்கு என நீதிமன்றத்தில் வாதாடி எனக்கு விடுதலை வாங்கித் தந்தார். இந்த ஆண்டு பிப்ரவரி 25 ந்தேதி ஒரு 30 போலீஸ்காரகள் வந்து என் வீட்டில் ‘சர்ச் வாரன்ட்’ காட்டித் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். என்னை மரியாதைக் குறைவாகப் பேசவும் செய்தார்கள். கடைசியில் ஒன்றும் கிடைக்கவில்லை என எழுதிக் கொடுத்துவிட்டுப் போனார்கள். இமாம் அலியைக் காட்டிக் கொடுத்தவர்களைப் பழி வாங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் ‘அல் முத்தகீம் ஃபோர்ஸ்’ என்கிற தீவிர அமைப்பிற்கு நான் தலைவன் என அபாண்டமாகப் பழி சுமத்துகிரார்கள். அது அப்பட்டமான பொய். நான் கவுரவமாக வக்கீல் தொழில் நடத்துகிறேன். நான் எந்த வழக்கில் வக்கீலாக ஆஜர் ஆனேனோ அதே வழக்கிலும் என்னைக் குற்றவாளியாகச் சேர்த்தார்கள். குற்றம் சுமத்தப்பட்டவர்களோடு ஒரு வழக்குரைஞர் என்கிற முறையில் பழகுவதே தவறா? நான் மன நிம்மதி இன்றித் தவிக்கிறேன்,….”
அம்சவல்லி ஓட்டல் அருகில் பீடா கடை வைத்துள்ள ஃபரீத்கான் அவரது சகோதரர் மன்சூர்கான் இருவரையும் நாங்கள் சந்தித்தபோது அவர்கள், தங்கள் கடையில் சில நாட்களுக்கு முன் யாரோ ஒருவர் இரவு 11 மணி வாக்கில் வந்து 10 இனிப்பு பீடா ஆர்டர் செய்துவிட்டு, “தயாரித்து வையுங்கள். வருகிறேன்” எனச் சொல்லி ஒரு பையையும் கொடுத்து விட்டுச் சென்றதாகவும் பின் வரவே இல்லை என்பதால் அடுத்த நாள் அந்தப் பையைத் திறந்து பார்த்தபோது அது வெடிகுண்டு போலத் தெரிந்ததால் காவல்துறைக்குச் சொன்னதாகவும், அவர்கள் வந்து சோதனையிட்டு அதை எடுத்துச் சென்றதாகவும் கூறினர்.

ஆட்டோ யாசின் த.பெ காதர் மைதீன், நெல்பேட்டை மீன்மார்கெட் அருகில்: ”எந்த வழக்குன்னு தெரியல. ஆனா வழக்கில சேர்த்துருக்காங்களாம். வக்கீல் சொன்னாரு. இதுக்கு முன்னாடி எந்த வழக்கும் என்மீது கிடையாது. 2013ல் மயில்வாகனன், மாடசாமி டீம் நிறைய நெல்பேட்டைப் பையன்கள அழைச்சிட்டுப் போயி அடிச்சு சித்திரவதை பண்ணினாங்க. என்னையும் எந்தத் தப்பும் பண்ணாமலேயே ADSP ஆபீசில் வச்சு அடிச்சாங்க. நான் வெளியே வந்து அமானுல்லா என்கிற வழக்குரைஞர் மூலமா இன்ஸ்பெக்டர் மாடசாமி மேல ஒரு பிரைவேட் கம்ப்ளெயின்ட் கொடுத்தேன். அந்த கோவத்துல இப்ப என் மேல பொய் வழக்கு போடுறாங்க. எனக்கு இந்த ஆட்டோ தொழில் தவிர வேற வருமானம் இல்ல..”
பிரியாணி மைதீன் த.பெ பக்ருதீன், நெல்பேட்டை: “கல்யாண ஆர்டர்க்கு பிரியாணி செஞ்சு கொடுப்பது என் தொழில். 2002ல் இமாம் அலி வழக்கில என்னை சேர்த்திருந்தாங்க. அதுல எனக்கு 2 வருஷம் தண்டனை. அதுக்கு அப்புறம் எட்டு வழக்கு போட்டாங்க. ஒரு கொலை கேஸ் உட்பட. எல்லாத்துலையும் நான் விடுதலை ஆயிட்டேன். இப்ப பிரியாணி தொழில்தான் செய்றேன். அன்னிக்கு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வந்து என்னை வழக்கில் சேர்த்துள்ளதா சொன்னாரு. எந்த வழக்குன்னு தெரியல.

அப்பாஸ் மைதீன் (43) த.பெ ஷேக் தாவூது, மேலூர்: “நான் ரொம்ப சாதாரண குடும்பம். எனக்கு இரண்டு மனைவி. முதல் மனைவிக்குக் குழந்தை இல்ல. இரண்டாவது மனைவிக்கு நாலு பிள்ளைகள். ஒரு கூரியர் ஏஜன்சி எடுத்திருந்தேன். எனக்கு எந்த அரசியல் தொடர்பும் கிடையாது. மார்ச் 21, 2015 அன்னிக்கு யாரோ வந்து நூறு தேங்கா கூரியர் அனுப்பனும்னு கூப்பிட்டாங்க. கீழே இறங்கிப் போனா ஒரு வேன்ல ஏற்றிக் கொண்டு போய்ட்டாங்க. இரவு வரை என்னை என்னென்னவோ கேட்டாங்க. யார் யாரோ வந்து ஏதேதோ விசாரிச்சாங்க. ஒண்ணும் எனக்குப் புரியல. பயந்து போனேன். சாயந்திரம் என்னை பிரான் மலைக்கு அழைச்சிட்டுப் போனாங்க. அங்கே நிறைய பத்திரிகையாளருங்க இருந்தாங்க. மேலே கொண்டுபோனாங்க. ஏராளமாக அங்கே போலீஸ் அதிகாரிங்க இருந்தாங்க. அங்கே தூரத்தில ஒரு வாளியில என்னமோ இருந்துச்சு.. அதைக் கையை நீட்டி காமிக்கச் சொன்னாங்க. “ஏன்” ன்னேன். “என்னடா எதிர்த்தா பேசுறேன்னு அடிச்சாங்க. நான் கையை நீட்டினேன் போட்டோ பிடிச்சுட்டாங்க. அந்த வாளியில என்ன இருந்துச்சுன்னு கூட எனக்கு முழுசா தெரியாது. அப்ப அங்கே எங்க ஊரு முபாரக்கையும் கொண்டு வந்து அடிச்சு அதே மாதிரி கையை நீட்டச் சொல்லி போட்டோ எடுத்தாங்க. சார், அவன் என்னைவிட ரொம்ப அப்பாவி, என் சொந்தக்காரந்தான். ஆனாலும் அவன் கிட்ட நான் அதிகமாப் பேசுனது கூடக் கிடையாது. எங்க இரண்டு பேருக்கும் எந்த இயக்கத் தொடர்பும் கிடையாது. நானாவது தாடி வச்சிருக்கேன். தொழுகைக்குப் போவேன். இஸ்லாமிய ஒழுக்கங்களைக் கடை பிடிப்பேன். அவன் அதையும் செய்யுறது கிடையாது. அப்புறம் எங்களை தனித்தனியா கொண்டு போயி அடுத்த நாள் Q பிராஞ் போலீஸ் எதையோ கொண்டு வந்து என் கிட்ட கையெழுத்து வாங்கினாங்க. படிச்சு கூட காட்டல. பத்து நாளைக்கப்புறம் கஸ்டடியில் எடுத்து மாரிராஜன் டீம் மறுபடியும் ஒரு வாக்கு மூலத்தை அவங்களாவே எழுதி கையெழுத்து வாங்கினாங்க. சார். இது ரொம்ப அநியாயம். என் பழைய தொழில் போச்சு. இப்ப ஒரு செருப்புக் கடையில் வேலை செய்றேன். எனக்கு இது தாங்க முடியாத அனுபவம். என்னை ஏன் இதற்குத் தேர்ந்தெடுத்தாங்கன்னு என்னால புரிஞ்சுக்கவே முடியல. படுத்தா தூக்கம் வரமாட்டேங்குது சார்…”

அடுத்து அப்பாஸ் மைதீனுடன் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள முபாரக்கிடம் (வயது 24, த.பெ ஷேக் என்கிற மீரான் மைதீன், மேலூர்) பேசினோம். சின்னப் பையன் என்பதும் மிகவும் பயந்துபோயுள்ளான் என்பதும் குரலிலேயே தெரிந்தது. அப்பாஸ் சொன்ன அதே கதையை அவனும் திருப்பிச் சொன்னான். இந்தச் சின்ன வயதில் அந்தக் கோடூரமான அனுபவத்தை அவன் சந்தித்தபோது குணாளன் என்பவரது செருப்புக் கடையில் வேலை செய்து கொண்டு இருந்திருக்கிறான். ஆறு மாதம் கழித்து பிணையில் அவன் வெளியே வந்தபோது யாரும் அவனுக்கு வேலை கொடுக்கத் தயாராக இல்லை. கடந்த ஆறு மாதமாக ஏதோ ஒரு வெல்டிங் பட்டறையில் வேலை செய்கிறான். தினம் 170 ரூ ஊதியமாம். அதை வைத்துத்தான் குடும்பம் நடக்கிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. இதை எழுதும்போது ஏதோ ஒரு தகவலை உறுதி செய்ய போனில் தொடர்பு கொண்டோம். அவன் அம்மா பேசினார்கள். வேலைக்குப் போவிட்டானாம். “ஐயா, நாங்க எல்லாம் ஏழைங்க அய்யா, எங்களுக்கு யாரும் ஆதரவு இல்லைங்க அய்யா. இது ரொம்ப அநியாயம் அய்யா. அவன் ரொம்பச் சின்னப் பையன் அய்யா.. அவனுக்கு யாரும் இப்ப வேலை கூடக் குடுக்க மாட்டெங்குறாங்க அய்யா..” என அந்த அம்மா புலம்பி அழுதார்.

அதிகாரிகள் சந்திப்பு

சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் ADSP மாரி ராஜனை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். மிக்க பொறுமையாகவும் விரிவாகவும் அவர் எங்களுடன் பேசினார். இந்த வெடிகுண்டுகள் அனைத்தும் மிகச் சாதாரணமான பட்டாசுக் குண்டுகள் என அவர் சொல்லியதை வேறோர் இடத்தில் பதிவு செய்துள்ளோம். இந்த வெடிகுண்டு வழக்கு விசாரணையைப் பற்றி அவரிடம் கேட்டபோது, “நான் இப்ப அதிலேருந்து விலகிட்டேன். இந்த வழக்குகளை நாங்க விசாரிக்கக் கூடாதுன்னு ரிட் மனு ஒன்னு போட்ருக்காங்க அதனால நான் அந்த விசாரணையில இப்ப ஈடுபடுவதில்லை” என்றார். கைது செய்யப்படுகிறவர்கள் பலரும் அப்பாவிகள் எனக் கேள்விப்படுகிறோமே என நாங்கள் கேட்டபோது அவர் அதை மறுக்கவில்லை. “அப்பாவிகளும் இருக்கலாம். முஸ்லிம்களுக்குள் பல உட் பிரிவுகள் இருக்கு. இவங்களுக்குள்ளேயே போட்டி பகைமைகள் இருக்கு. ஒருவர் மேல ஒருவர் புகார் கொடுத்துக்கிறாங்க. அதனாலதான் இப்படிக் கைதுகள் நடக்குது. அப்புறம் இந்த முஸ்லீம்கள்கிட்ட இருக்கிற ஒரு கெட்ட பழக்கம் இவங்க எல்லாம் போலீசுடன் நெருக்கமா இருக்கிறதை ஒரு பெருமையா நினைக்கிறாங்க. அதனாலயும் சில பிரச்சினைகள் ஏற்படுது….”
“ஆய்வாளர் மாடசாமி என்பவர் உங்கள் மீதெல்லாம் கொடுத்துள்ள புகார் விசாரிக்கப்பட்டதா, ஏட்டு விஜயபெருமாள் ஒரு தீவிரவாதியிடமிருந்து பணம் வாங்கியதாகக் குற்றச்சாட்டு உள்ளதே அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?” எனக் கேட்டோம். “மாடசாமியிடம் விளக்கம் கேட்டு இருக்காங்க. அது குறித்து மேலதிகாரிங்களைத்தான் கேட்கணும் .விஜயபெருமாளிடம் விளக்கம் கேட்டதுக்கு அவர் தனக்கு அந்த நபர் கொடுக்க வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளார்னு பதில் சொல்லி இருக்கார்” என்றார்.

நாங்கள் புறப்படும்போது, “ஆண்டவன் செயலால் உண்மைக் குற்றவாளிகள் கன்டுபிடிக்கப்பட்டால் அப்பாவிகளை விடுதலை செய்வதில் தடையில்லை. என் மீதுள்ள ரிட் வழக்குகள் திரும்பப் பெறப்பட்டால் நானே இந்த வழக்குகளை விசாரித்து நல்லபடியாய் முடித்து வைப்பேன்” என்றார்.

அடுத்து நாங்கள் உளவுத் துறை உதவி ஆணையர் முத்துராமலிங்கம் அவர்களைச் சந்தித்தோம். “ஆரப்பாளையம் பஸ் குண்டு வழக்கு, பீடா கடை பார்சல் குண்டு வழக்கு இந்த இரண்டையும்தான் நகர காவல்துறை (city police) விசாரிக்குது. மற்றதெல்லாம் Q பிராஞ், CBCID இவங்க கிட்ட கொடுத்தாச்சு. இந்த இரண்டையும் கூட அவங்க கிட்ட மாத்தலாம்னு இருக்கோம். மற்ற வழக்குகளைப் பற்றித் தெரியணும்னா அந்த வழக்குகளை இப்போ விசாரிக்கிற ஆய்வாளர் சீனிவாசனைத்தான் நீங்க கேட்கணும்” எனச் சொல்லி அவரது தொடர்பு எண்ணையும் எங்களுக்குத் தந்தார்.
அடுத்து நாங்கள் நகர காவல் ஆணையர் ஷைலேந்திர குமார் யாதவ் அவர்களைச் சந்தித்தோம். பொய் வழக்குகள் பற்றிய எங்களின் புகார்களைச் சொன்ன போது, “ஆரப்பாளையம் பஸ் குண்டு வழக்கைத்தான் நாங்க விசாரிக்கிறோம். அது நேரடியா என் கண்காணிப்பில் விசாரிக்கப்படுது. அது பொய் வழக்கு இல்ல. குற்றம்சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒத்துக் கொண்டு தெளிவாக வாக்குமூலம் கொடுத்திருக்காங்க. மற்ற வழக்குகள் பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு நான் பதில் சொல்ல முடியாது” என முடித்துக் கொண்டார். பல்வேறு புலன் விசாரணை முகமைகளுக்கு இடையில் உள்ள போட்டிகளால் அப்பாவிகள் பலர் பாதிக்கப்படுவது பற்றி நாங்கள் கேட்கத் துவங்கியபோது, “ஒரு குற்ற விசாரணை என்பது போலீசின் புலன் விசாரணையோடு முடிந்து விடுவதில்லை. அதற்குப் பின் நீதிமன்றம் இருக்கிறது. குறுக்கு விசாரணைகள் இருக்கின்றன, வக்கீல்களின் வாதங்கள் இருக்கிறது. அவற்றின் மூலம் உண்மைகளைக் கொண்டுவரலாமே” என்றார்.

தற்போது இந்த வெடிகுண்டு வழக்குகளை விசாரித்து வரும் ஆய்வாளர் சீனிவாசன் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டபோது தான் விசாரிக்கும் வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளதாகவும், உயர் அதிகாரிகளைக் கேட்காமல் தான் ஏதும் பேச இயலாது எனவும் குறிப்பிட்டார். அப்பாவிகள் பலர் வழக்கில் சிக்கவைக்கப் பட்டுள்ளார்களே என்றபோது அதைப் பற்றியெல்லாம் விசாரணையில் உள்ளதால் ஒன்றும் சொல்வதற்கில்லை எனவும் எதற்கும் நேரில் வாருங்கள் எனவும் கூறினார்.

எமது பார்வைகள்

இந்திய அளவில் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுவதும். பிணையில் வெளிவர இயலாமல் அவர்கள் நீண்ட வருடங்கள் சிறைகளில் வாடி, தங்களின் இளமையைத் தொலைத்து இறுதியில் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்படுவதும் இன்று கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. இப்படிப் பாதிக்கப்படுவது பெரும்பாலும் ஏன் முஸ்லிம்களாகவே உள்ளனர்? அவர்களைக் கைது செய்வது எளிது. அவர்கள் மீது சுமத்தப்படும் குற்றங்களை நிறுவுவதற்கு அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. அவர்கள் மீது குற்றத்தைச் சுமத்தினாலே போதும். அதுவே அந்தக் குற்றங்களின் நிரூபணங்களாகவும் ஆகிவிடுகின்றன. இந்த நிலை மிகவும் கவலைக்குரிய ஒன்று.

இதன் பொருள் குண்டு வைப்பவர்கள் மீது கடுமை காட்டக் கூடாது என்பதல்ல. அதே நேரத்தில் எக்காரணம் கொண்டும் குற்றமற்ற அப்பாவிகள் தண்டிக்கப்படக் கூடாது என்பதுதான். இப்படிச் சொல்வது வெறும் அற அடிப்படையான கூற்று மட்டுமல்ல. ஒரு ஜனநாயக அமைப்பு உறுதியாக நிலைப்பதற்கான அடிப்படியான நிபந்தனை இது. இந்த அமைப்பில் நமக்கு நீதி கிடைக்காது என்கிற எண்ணம் எந்தத் தரப்புக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது. அப்படி உருவாகும் அவநம்பிக்கை (despair) அமைப்பின் மீது மட்டுமல்ல, சகமனிதர்கள் மீதும் வெறுப்பை விதைக்கிறது. இந்த வெறுப்பு அவரை வன்முறையாளராக்குகிறது. “அவநம்பிக்கை ஒரு குடிமகனை வன்முறையாளனாக்குகிறது. வேட்டையாடப்படுபவன் வேட்டை ஆடுபவனாக மாறுகிறான். அவநம்பிக்கை ஒரு கொடூரமான கொலை ஆயுயதம்” (Despair can turn you from citizen to perpetrator. From the hunted to the hunter. Despair can be a deadly weapon) என ஷோமா சவுத்ரியை மேற்கோள் காட்டி நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜு சொல்வது கவனத்துக்குரியது.

பெருகிவரும் தீவிரவாதச் சூழலில் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்குப் பின் என்னதான் வழி? விஞ்ஞானபூர்வமான புலனாய்வு என்பதுதான் ஒரே வழி. கிரிமினல் குற்றப் புலனாய்வு என்பது ஒரு அறிவியல். இன்று அது பெரிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. தீவிரமாக முயன்றால் உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிப்பது கடினமல்ல. ஆனால் மதுரையில் என்ன நடக்கிறது? முறையான புலனாய்வு நடை பெறுவதே இல்லை. நாங்கள் விசாரித்தவர்களில் ஒருவர் சொன்னது போல பெரும்பாலான நேரங்களில் அவர்கள் செல் போனை நோண்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பதுதான் அவர்களின் வேலையாக உள்ளது. இது ஏன்?

இந்தக் கேள்விக்குப் பதில் காண்பதற்கு முதற்படியாக நாம் இதுவரை கண்டவற்றைத் தொகுத்துக் கொள்வோம்?

1. இந்த 17 குண்டுவெடிப்புகளும் பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தக் கூடியவை அல்ல. வெறும் பட்டாசு வெடிக் குண்டுகள்.

2. ஐந்து ஆண்டுகள் ஆகியும் வெறும் ஐந்து வழக்குகளில்தான் குற்றப் பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

3. வழக்கு விசாரணையில் ஏகப்பட்ட குழப்பங்களும் முரண்களும் உள்ளன. ஒரு புலனாய்வு முகமை குற்றவாளியை நெருங்கும் நேரத்தில் இன்னொரு புலனாய்வு முகமை அதைத் தடுப்பதாக ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்திக் கொள்கிறார்கள்.

4. ADSP மாரிராஜன், ADSP கார்த்திகேயன், தலைமைக் காவலர்கள் மாரியப்பன், விஜய பெருமாள் ஆகியோருக்கும் நகர காவல்துறைக்கும் இடையில் முரண் உள்ளது.

5. மேற் குறிப்பிட்ட இந்த நால்வர் குழு தீவிரவாதிகள் எனக் குற்றம் சாட்டப் பட்டவர்கள் சிலருடன் நெருக்கமாக இருக்கிறார்கள். விஜய பெருமாள் எனும் தலைமைக் காவலர் அப்படி ஒருவரிடம் பணம் பெற்றுள்ளது இன்று உறுதியாகியுள்ளது.

6. இன்று வழக்கு பதியப்பட்டவர்களில் அப்பாவிகளும் உள்ளனர் என்பதை வெளிப்படையாக ஒரு அதிகாரி ஒத்துக் கொள்கிறார்.

7. வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட முஸ்லிம்களைப் பொருத்த மட்டில் அ) இமாம் அலி காலகட்ட வழக்குகளில் தண்டிக்கப்பட்டுப் பின் இப்போது குடும்ப வாழ்க்கை, தொழில் என வாழ்ந்து கொண்டிருப்போர் ஆ) ரியல் எஸ்டேட் தொடர்பான தொழில்களில் இருப்போர் இ) காவல்துறையுடன் நேரடியாக முரண்பட்டோர் ஈ)மேலே சொன்ன இவர்களுக்கு நெருக்கமாக இருக்கும் நண்பர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் ஆகியோர் தவிர உ) முற்றிலும் எந்த அரசியலிலும் தொடர்பில்லாத அப்பாவிகள் என அவர்களை அடையாளம் காண முடிகிறது.

8. முன்னதாக வழக்குகளில் சம்பந்தப்பட்டுச் சிறை சென்றவர்கள் ஆயினும் அவர்களில் பலருக்கும் இப்போது அவர்கள் மீது சுமத்தப்பட்ட வழக்குகளில் தொடர்பு இல்லை. பெரும்பாலும் அவை பொய் வழக்குகள்.

9. அல்முத்தகீம் ஃபோர்ஸ் எனும் அமைப்பைக் காரணம் காட்டி உ.முகமது அலி ஜின்னா போன்ற வழக்குரைஞர்கள் சிக்கலுக்குள்ளாக்கப்பட்ட போதிலும் அப்படி ஒரு அமைப்பு செயல்படுவதற்கான சான்றுகள் இல்லை. ஒருமுறை தமுமுக பிரமுகர் ஒருவரது லெட்டெர் பேடில் SIT தலைமைக் காவலர் மாரியப்பன் என்பவரே ‘அல்முத்தஹீம் ஃபோர்ஸ்’ குறித்து ஒரு புகார் டைப் செய்து வந்து தந்து அனுப்பச் சொன்னர் என நாங்கள் சந்தித்த முகமது அலி கூறினார்.

10. வழக்குகளில் தண்டிக்கப்பட்டு வெளி வந்து திருமணம் தொழில் என யாரும் திருந்தி வாழ காவல்துறை அனுமதிப்பதில்லை. அவர்கள் தொடர்ந்து காவல்துறையால் உளவு சொல்வதற்கும் பிற சட்ட விரோத காரியங்களுக்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

11. ரியல் எஸ்டேட் முதலான சிக்கலான தொழிலில் ஈடுபடுவோர்கள் காவல்துறையினரால் எளிதில் பயன்படுத்தக் கூடியவர்களாகவும் பழிவாங்கப்படக் கூடியவர்களாகவும் ஆகிறார்கள்.

12. SIT முதலிய சிறப்புப் படைகளைத் தக்க வைத்துப் பலன் பெறுவதற்கும், பதவி உயர்வு, பணப் பரிசுகள் முதலியவற்றைப் பெறுவதற்கும் காவல் துறையில் சிலருக்குத் தொடர்ந்து இந்த மாதிரியான குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தேவைப்படுகின்றன.

13. இந்தத் “தீவிரவாதிகள்” என முத்திரை குத்தப்படுபவர்களில் ஒருவரான முகமது அலியுடன் அண்ணன் தம்பி உறவுமுறையுடன் செல்போனில் ADSP மாரிராஜன் ‘சாட்’ செய்துள்ளதைக் கண்டோம். ஆனால் அதே அண்ணன் தம்பிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களுக்கு அழைத்து வரப்படும்போது ஏராளமான ஆயுதக் காவலர்கள் புடை சூழ அவர்களைக் கொண்டு வந்து மக்கள் மத்தியில் இவர்கள் பீதி ஊட்டுவதைக் காணலாம்.

14. வழக்கு விசாரணை தவறாகச் செய்யப்பட்டாலும் நீதிமன்றத்தில் நீதி கிடைக்குமே என கண்காணிப்பாளர் ஷைலேஷ் யாதவ் அவர்கள் சொன்ன பதில் மிகவும் பொறுப்பற்ற ஒன்று. வழக்கு என போடப்பட்டுச் சிக்க வைக்கப்பட்டால் இத்தகைய வழக்குகளில் பிணையில் வெளிவருவது எளிதல்ல. இதனால் அவர்களின் எதிர்காலமும் குடும்ப வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. அவர்களின் பிள்ளைகள் குற்றவாளிகளின் பிள்ளைகளாகக் காணப்படும் கொடுமையும் நிகழ்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சமூகமே இத்தகைய வழக்குகள் மூலம் சந்தேகத்துக்குரிய ஒரு சமூகமாகக் கட்டமைக்கப்படுகிறது.

15. இந்தக் காவல்துறை அதிகாரிகள் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டிக் கொண்டாலும், முரண்பட்டுக் கொண்டாலும் ஒரு அம்சத்தில் மிகவும் ஒற்றுமையாகச் செயல்படுகின்றனர். நெல்பேட்டை போன்ற பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய முஸ்லிம் சமூகத்தை ஒட்டுமொத்தமாக ஒரு தீவிரவாதச் சமூகமாகக் கட்டமைப்பது என்கிற அம்சம்தான் அது. காவல்துறையினர் மத்தியில் உயர்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை சமூக ஒற்றுமை மற்றும் மதச்சார்பின்மை குறித்த உணர்வூட்டும் பயிற்சித் திட்டம் (sensitization programme) ஒன்றை நிறைவேற்றுவது அவசியமாகிறது. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு தலித் பிரச்சினைகளிலும், பெண்ணுரிமை சார்ந்த பிரச்சினைகளிலும் தமிழகத்தில் இத்தகைய பயிற்சிமுகாம்கள் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டது குறிப்பிடத் தக்கது.

எமது முடிவுகளும் கோரிக்கைகளும்

1. இந்த வெடிகுண்டு வழக்குகள் 17 லும் இங்குள்ள பல்வேறு விசாரணை முகமைகளாலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பெரும்பான்மையோருக்கு இந்தக் குற்றங்களில் தொடர்பு இல்லை.

2. இமாம் அலி காலத்திலிருந்து மதுரை முஸ்லிம் தீவிரவாதத்தின் மையமாக உள்ளது என தமிழகக் காவல்துறை மக்கள் மத்தியில் ஒரு பீதியை உருவாக்கிப் பரப்பும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. போலீஸ் பக்ருதீன் போன்றவர்கள் கைது செய்யப்பட்ட பின்னும் இன்னும் அங்கு ஆபத்து உள்ளது என ஒரு புனைவை உருவாக்குவது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் இதுவரை மயில்வாகனன் – மாடசாமி டீம் இப்பகுதி இளைஞர்களைச் செய்த கடும் சித்திரவதைகள் எல்லாம் நியாயமானவைதான் என்கிற எண்ணத்தை ஏற்படுத்துவது ஆகியன இந்தப் பொய்வழக்குகளின் நோக்கங்களாக் உள்ளன. இதன் மூலம் ஒரு சமூகப் பிரிவின் மீது மக்கள் மத்தியில் வெறுப்பும் கோபமும் ஏற்படுவது பற்றியும், இது சமூக ஒற்றுமையைக் குலைப்பது பற்றியும் காவல்துறை இம்மியும் கவலைப்படுவதில்லை. ADSP மாரிராஜன், கார்த்திகேயன், மயில்வாகனன் ஆய்வாளர் மாடசாமி, காவலர்கள் விஜயபெருமாள், மாரியப்பன் போன்றோரின் சார்பு நிலை மற்றும் பொய் வழக்குகள் மூலம் மக்களுக்கு எண்ணற்ற துயரங்களை. உருவாக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றை இக்குழு கவலையோடு சுட்டிக் காட்டுகிறது.

3. காவல்துறை மற்றும் உளவுத்துறையுடன் முஸ்லிம்கள் கொண்டுள்ள வெளிப்படையான மற்றும் இரகசியமான தொடர்புகள் இறுதியில் அவர்களுக்கும் அவர்களின் சமுதாயத்திற்கும் உலை வைப்பதாகவே உள்ளது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என இக்குழு அவர்களைக் கேட்டுக் கொள்கிறது.

4. தீவிரவாதச் செயலில் ஈடுபட்டவர்கள் திருந்தி வாழ காவல்துறையினர் அனுமதிக்காத நிலை மிகவும் அநீதியானது. இதை வன்மையாக இக்குழு கண்டிக்கிறது.

5. உண்மையான குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க முடியாமல் உள்குத்து வேலைகள் நடப்பது அதிகாரபூர்வமாக கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனால் அம்பலப்பட்டுத்தப்பட்ட பின்னும் அதன் அடிப்படையில் ரிட்மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும் உடனடியாக வழக்குகளைத் திசை திருப்பிக் கொண்டு போகும் நோக்கில் காவல் துறையின் ஒரு பிரிவினராலேயே மேற்கொள்ளப்பட்ட முற்றிலும் பொய்யான ஒரு நடவடிக்கைதான் பிரான் மலை வெடிகுண்டு வழக்கு. முற்றிலும் அப்பாவியான அப்பாஸ் மைதீன், முபாரக் என்கிற இரு நபர்கள் இதில் பலியாக்கப்பட்டுள்ளனர். வழக்கைத் திசை திருப்பும் நோக்குடன் ADSP மாரி ராஜனே அவர்களின் வாக்குமூலம் என ஒன்றைத் தயாரித்து அவரை மிரட்டிக் கையொப்பம் பெற்றுள்ளார். அவரால் குறி வைக்கப்பட்ட நெல்பேட்டை இளைஞர்கள் பலரும் இன்று குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இது குறித்து ADSP மாரிராஜன் உள்ளிட்ட குழுவினர் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

6. கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் கொடுத்துள்ள இரண்டு குற்றச்சாட்டுகளையும் பதவியில் உள்ள ஒரு நீதிபதியைக் கொண்டு விசாரிக்க வேண்டும்.

7. இந்தப் 17 வழக்குகளையும் தமிழகக் காவல்துறை விசாரித்தால் நீதி கிடைக்காது என்பதால் இந்த வழக்கு விசாரணை முழுமையையும் உடனடியாக மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (CBI) மாற்ற வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் விசுவநாதன் கொலையின் பின்னணி

தருமபுரி,    ஜூன் 6, 2016

உறுப்பினர்கள் 

பேரா. அ.மார்க்ஸ், தலைவர், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (Chair Person, National Confederation of Human Rights Organisations- NCHRO),சென்னை,

அரங்க குணசேகரன், தலைவர், தமிழக மக்கள் முன்னணி, ஓட்டங்காடு,

வழக்குரைஞர் அரிபாபு, குடியுரிமைப் பாதுகாப்பு நடுவம் (CPCLC), சேலம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகி லக்‌ஷ்மண் ராஜ் (மறைவு)  – தனம்மாள் தம்பதிக்குஇரண்டு ஆண் மகன்கள், நான்கு பெண்கள் என ஆறு பிள்ளைகள். ஆண்மக்கள் இருவரும் சுமார் மூன்றாண்டு இடைவெளிகளில் கொடூரமாகக்கொல்லப்படுகிறார்கள். முன்னதாக மார்ச் 18, 2013 அன்று கொல்லப்பட்ட பாஸ்கரன் சி.பி ஐ (எம் எல்) கட்சியில் பொறுப்பில் இருந்தவர். சென்றமே 18 அன்று கொல்லப்பட்ட விசுவநாதன் (58) ஒரு சி.பி.ஐ (எம்.எல்) கட்சி அநுதாபி. அக் கட்சியின் தொழிற்சங்க அமைப்பிலும் மாவட்டப் பொறுப்பில் இருந்தவர்.

இந்தக் கொலைகளைச் செய்ததாகச் சிலர் ஒத்துக் கொண்டு கைது செய்யப்பட்டுள்ள போதும் உண்மையில் இவற்றிற்குப் பின்னணியாக இருக்கும் சக்திகள் குறித்த ஐயமும், இங்குள்ள கனிமக் கொள்ளை மாஃபியாவுக்கும் இந்த இரு கொலைகள் மற்றும் இதர சிலக் கொலைகளுடன் தொடர்பிருக்கலாம் என்கிற ஐயமும் இங்கு சமூக உணர்வுள்ள சிலரால் முன்வைக்கப்பட்டு வருவதை அறிந்த மேற்குறிப்பிட்ட இக் குழு உறுப்பினர்களாகிய நாங்கள் இது குறித்த உண்மைகளை அறியும் முகமாகக் கடந்த ஜூன் 4,5,6 தேதிகளில் தர்மபுரி நகரம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம், ராய்க்கோட்டை, தேன்கனிக்கோட்டை முதலான பகுதிகளுக்குச் சென்று விசுவநாதனின் அன்னை தனம்மாள், அக்கா உஷாராணி, அக்கா மகன் ஆனந்தகுமார், விசுவநாதன் கொலை குறித்த புகாரை கெலமங்கலம் காவல் நிலையத்தில் தந்துள்ள இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவரும், விசுவநாதனின் நண்பருமான மோகன் ஆகியோரைச் சந்தித்து விரிவாகப் பேசி விவரங்களைத் தொகுத்துக் கொண்டோம்.

இப்பகுதியில் நடைபெறும் கனிமவளக் கொள்ளை குறித்துத் தொடர்ந்து கவனத்தை ஈர்த்டு வருபவரும், இந்தக் கொலைக்கும் அதற்கும் உள்ள தொடர்பு குறித்துப் புகார் அளித்துள்ளவருமான சமூக ஆர்வலர் அரூர் வேடியப்பன் ஒரு நாள் முழுவதும் எங்களுடன் இருந்து பல தகவல்களைச் சொன்னார். கூலிப் படையினரால் தாக்கப்பட்டுப் படு காயங்களுடன் தப்பி வாழ்ந்து வருபவர்களும் முன்னாள் சி.பி.ஐ கட்சி உறுப்பினர்களுமான தாசரப்பள்ளி நாகராஜ ரெட்டி, திம்மாரெட்டி ஆகியோரையும் வேடியப்பன் தந்த தகவல்களின் அடிப்படையில் சந்தித்தோம்.

கெலமங்கலம் காவல் நிலையத்தில் நிலைய அதிகாரியாக உள்ள ஆனந்தனைச் சந்தித்து வழக்கு விவரங்களை அறிந்தோம். தேன்கனிக்கோட்டை காவல் உதவிக் கண்காணிப்பாளர் சௌந்தர்ராஜனுடன் தொலை பேசி தகவல்களைப் பெற்றுக் கொண்டோம். விசுவநாதன் கொலை குறித்த விசாரனை அதிகாரியான ஷண்முகசுந்தரம் விடுப்பில் உள்ளார். பலமுறை முயன்றும் அவர் தொலைபேசியை எடுக்கவில்லை.

மாலையில் இப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும் பொறுப்பில் உள்ள தருமபுரி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் திரு. பண்டி கங்காதர் அவர்களுடன் மிக விரிவாகப் பேசினோம்.

இப்பிரச்சினையுடன் நெருக்கமாகத் தொடர்புடையவராகச் சந்தேகிக்கப்படும் முன்னாள் சி.பி.ஐ கட்சி சட்டமன்ற உறுப்பினர் தளி இராமச்சந்திரனைச் சந்திக்க முயன்றும் இயலவில்லை. பலமுறை தொலை பேசியில் தொடர்பு கொண்டும் அவர் தொடர்பு கொள்ள மறுத்துவிட்டார். சி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் திரு.முத்தரசன் அவர்களுடன் தொலைபேசியில் பேசினோம்.

கொலைச் சம்பவங்கள்

தற்போது கொல்லப்பட்டுள்ள விசுவநாதனின் தம்பி பாஸ்கரன் என்கிற குணசீலன் 2013 மார்ச் 18 முதல் காணாமற்போனார். இது குறித்து அவரது மனைவி ராஜம்மா கொடுத்த புகாரின் அடிப்படையில் (தனிக் காவல் நிலையக் குற்ற எண் 40/2013) அமைக்கப்பட்ட சிறப்புக்காவல்படை அடுத்த ஒரு வாரத்தில் கோலார் மாவட்டம் மாலூர் என்னுமிடத்தில் கொன்று எரிக்கப்பட்ட அவரது உடலைக்கண்டுபிடித்தது. இது தொடர்பாக கொத்தபள்ளி ராமச்சந்திரன் என்பவர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு வழக்கு நடந்துகொண்டு உள்ளது.

பாஸ்கரின் அண்ணன் விசுவநாதன் திருமணம் செய்து கொள்ளவில்லை. 58 வயதை எட்டிய அவர் இப்போது  கிரானைட் வேலைக்கும் போவதில்லை. கெலமங்கலம் கடைத் தெருவில், காவல் நிலையத்திற்கு நேரெதிராக உள்ள ‘சின்னசாமி டீகடை காம்ப்ளெக்சில்’ உள்ள அறையில் தங்கிக் கொண்டு அருகில் உள்ள அக்கா உஷாராணியின் வீட்டில் சாப்பிட்டு வந்தார். அம்மா தனம்மாளுக்கு வரும் சுதந்திரப் போராட்ட தியாகிகள் பென்ஷன் அவரது இதர செலவுகளுக்கு உதவியது.

சென்ற மே 18 அன்று காலையில் சாப்பிட்டுவிட்டுச் சென்ற விசுவநாதனை மதியம் 21/2 மணி வாக்கில் கடைத் தெருவில் பார்த்துள்ளார் அக்கா உஷாராணி. இரவும் அவர் சாப்பிட வரவில்லை. காலையில் கடைத்தெருவுக்குச் சென்றபோது விசுவநாதன் கழுத்தறுபட்டுச் செத்துக் கிடப்பதாகக் கேள்விப்பட்டு அவரது அறைக்குச் சென்று பார்த்தபோது அது உண்மை என அறிந்தார்.

இதற்கிடையில் விசுவநாதன் இறந்து கிடப்பது குறித்த புகாரை அவரது நண்பரும் அவரது கட்சியைச் சேர்ந்தவருமான கெலமங்கலம் மோகன் காவல்நிலையத்தில் தந்துள்ளார். அவருக்கு எப்படித் தகவல் கிடைத்தது என நாங்கள் கேட்டபோது, இரவு எட்டு மணி வாக்கில் அவ்வூரைச் சேர்ந்த ஜாகிர் என்பவர் மோகனுக்கு போன் செய்து தான் விசுவநாதனைக் கொன்றுவிட்டதாகச் சொன்னாராம். அதனால் காலையில் காவல் நிலையம் சென்று புகார் அளித்தாராம். ஏன் இரவே புகார் அளிக்கவில்லை எனக் கேட்டபோது தன்னையும் கொல்லப்போவதாக ஜாகிர் சொன்னதால் பயந்து கொண்டு அவர் வெளியே செல்லவில்லை என்றார். எனினும் அவர் போன் மூலம் காவல்துறைக்கும், விசுவநாதனின் குடும்பத்துக்கும் தகவல் சொல்லியிருக்கலாம். ஏன் சொல்லவில்லை என்பது தெரியவில்லை.

“உங்கள் போனில் ஜாகிர் உங்களை அழைத்துப் பேசியது பதிவாகி இருக்குமே, காவல் நிலையத்தில் சொன்னீர்களா?” எனக் கேட்டபோது, “சொன்னேன். என் போனை வாங்கிச் சோதனை செய்துப் பின் திருப்பித் தந்துவிட்டனர்” என்றார். காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தனும் இதை ஏற்றுக் கொண்டார். கொல்லப்பட்ட விசுவநாதனின் செல்போன் ஒன்றையும் ஜாகிர் எடுத்துச் சென்று ஒரு பழக்கடை பாயிடம் விற்றதாகவும் அதையும் வழக்குச் சொத்தாகக் கைப்பற்றி வைத்துள்ளதாகவும் ஆனந்தன் சொன்னார்.

ஜாகிர், பிரகாஷ், முனிராஜ் எனும் மூவர் இப்போது தாங்கள்தான் விசுவநாதனைக் கொன்றதாக ஒத்துக்கொண்டு கைதாகியுள்ளனர். இவர்கள் மீது இ.த.ச 302, 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது (கெலமங்கலம் காவல் நிலையம் மு.த.எ.எண் 177 / 2016).

ஐயங்கள் 

கொல்லப்பட்ட இந்தச் சகோதரர்களில் முன்னதாகக் கொல்லப்பட்ட பாஸ்கரன் மீது, அவர் கொல்லப்படும்போது  இரண்டு வழக்குகள் இருந்தன.  ஒன்று முன்னாள் தளி ஒன்றியத் தலைவர் வெங்கடேஷ் என்பவரைக் கொன்ற (2012) வழக்கு. இந்த வெங்கடேஷ் அப்போதைய சட்டமன்ற உறுப்பினரான தளி ராமச்சந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவர். மற்றது தளி ராமச்சந்திரனின் மாமனார் லகுமையா என்பவரைத் தாக்கிய (1997) வழக்கு. பாஸ்கரனின் கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட கொத்தபள்ளி ராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையில் அந்தக் கொலை எம்.எல்.ஏ தளி ராமச்சந்திரன் அனுப்பிய கூலிப் படையால் செய்யப்பட்டது தெரிய வந்தது. தனது கிரானைட் கொள்ளைக்கு எதிராகச் செயல்பட்டு வந்த பெரியார் திராவிடர் கழகத் தலைவர் பழனி என்கிற பழனிச்சாமியின் கொலைக் குற்றம் தொடர்பாகக் குண்டர் சட்டத்தில் தளி இராமச்சந்திரன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். எனினும் உள்ளிருந்தபடியே தளி இராமச்சந்திரன் தன் கூலிபடையின் மூலம் இதைச் செய்தார். எனவே இராமச்சந்திரனையும் வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என பாஸ்கரனின் சகோதரர் விசுவநாதன், 22.06.2015 அன்று அதிகாரிகளைச் சந்தித்து அழுத்தம் கொடுத்தார்.. அவ்வாறே பின்னர் தளி இராமச்சந்திரன், அவரது மாமனார் லகுமையா ஆகியோர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டனர். (PRC. No. 9 / 15)

இந்நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் (2016) சி.பி.ஐ கட்சி இது தொடர்பான எதிர்ப்புகளை எல்லாம் பொருட்படுத்தாது அவருக்கு மீண்டும் இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது. இதைக் கண்டித்து சென்னையில் சமூக ஆர்வலர்கள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலும் விசுவநாதன் முன்னின்றார். எனினும் சிபி.ஐ கட்சி இந்த எதிர்ப்புகளை எல்லாம் பொருட்படுத்தாது அவரையே இத் தொகுதி வேட்பாளராக நிறுத்தியது. இராமச்சந்திரனும் பெரிய அளவில் பணம் செலவழித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஓட்டுக்கு 1000 முதல் 1500 வரை இவர் பணம் செலவிட்டதாக எங்களிடம் ஒருவர் கூறினார்.

விசுவநாதன் சும்மா இருக்கவில்லை. சென்ற ஏப்ரல் 15, 2016 அன்று அரசுக்கும் உயர் காவல் அதிகாரிகளுக்கும் மனு ஒன்றை அனுப்பினார். இந்தக் குற்றங்களுக்காகவும், மற்றொரு ஆள் மாறாட்ட வழக்கிலும் ராமச்சந்திரனைக் கைது செய்ய வெண்டும் என இம்மனுவில் அவர் கோரி இருந்தார்.

இந்தவகைகளில் மிகவும் பெயர் கெட்டிருந்த தளி இராமச்சந்திரன் தேர்தலில் தோல்வி அடைவது உறுதியாயிற்று. வாக்குப் பதிவு நடந்த தன்மையைக் கண்டபோது தான் மே19 அன்று நடைபெறும் வாக்கு எண்ண்ணிக்கையில் வெற்றிபெற வாய்ப்பில்லை என்பதை அவர் உணர்ந்தார். அவர் ஆத்திரமெல்லாம் விசுவநாதன் பக்கம் திரும்பியது. இந்தப் பின்னணியிலேயே  தேர்தல் நடந்து முடிந்த அடுத்த இரண்டாம் நாள் (மே18) விசுவநாதனின் கொலை நிகழ்ந்துள்ளது என்பதை விசுவநாதனின் அம்மா, அக்கா இருவரும் வலியுறுத்திக் கூறினர். தனது வயதான காலத்தில் இரண்டு பிள்ளைகளையும் அடுத்தடுத்து இழந்து தவிக்கும் தனம்மாளைப் பார்க்கும்போது மனம் நெகிழ்ந்தது.

பாஸ்கரைப் போலவே விசுவநாதனும் தளி.இராமச்சந்திரனின் தூண்டுதலால் அவரது கூலிப்படை மூலம் கொல்லப்பட்டதாகவே அந்தக் குடும்பம் நம்புகிறது. அதற்குச் சான்றாக அவர்கள் இன்னொன்றையும் கூறினர். தாங்கள்தான் கொன்றதாகச் சொல்லி இன்று கைதாகியுள்ள ஜாகிர், பிரகாஷ், முனிராஜ் ஆகிய மூவருக்கும் விசுவநாதனுடன் எந்தப் பகையும் இல்லை. கொல்வதற்கான நோக்கம் எதுவும் அடிப்படையில் அவர்களிடம் கிடையாது. தவிரவும் ஜாகிர் என்பவன் கெலமங்கலம் ஒன்றியத் தலைவரின் கணவரும் தளி இராமச்சந்திரனுக்கு நெருக்கமானவருமான கலீலின் உறவினரும் கூட..

சரி, இந்த ஐயங்களை முன்வைத்து நீங்கள் ஏதும் காவல் நிலையத்தில் புகார் அளித்தீர்களா என நாங்கள் கேட்டபோது, “ஆம். தளி ராமச்சந்திரன்தான் கொலையின் பின்னணியில் உள்ளார் எனத் தெளிவாக எழுதிப் புகார் அளித்துள்ளோம்” என தனம்மாள் கூறினார்.

ஆனால் இது குறித்து நாங்கள் கெலமங்கலம் காவல் நிலையத்தில் கேட்டபோது அப்படி ஏதும் புகார் விசுவநாதன் குடும்பத் தரப்பிலிருந்து தங்களிடம் கொடுக்கப்படவில்லை என காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தன் உறுதிபட மறுத்தார்.

தளி இராமச்சந்திரனின் பின்னணி 

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், வரகானப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த திம்மே கவுடுவின் மகன் தளி இராமச்சந்திரனின் குடும்பம்  ஒரு சிறிய வெற்றிலை பாக்குக் கடை வைத்திருந்த ஒன்று. இன்று இராமச்சந்திரன் இந்தப் பகுதியில் ஒரு மிகப் பெரிய செல்வந்தர். சி.பி.அய் கட்சிப் பிரமுகர். இருமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். ஒரு இருபதாண்டுகளில் அவர் இந்த அளவு சொத்துக்களுக்கு அதிபதியானதன் பின்னணியில் அவரது இரு தொழில்கள் உள்ளன. ஒன்று தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் அவர் செய்கிற ‘ரியல் எஸ்டேட்’ தொழில். மற்றது அவரது கிரேனைட் கனிம விற்பனைத் தொழில்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முறையாக அனுமதி பெற்று நடந்து வருகிற கிரேனைட் கற்கள் வெட்டி விற்பனை செய்யும் நிறுவனங்கள் சுமார் 75 வரை உள்ளன என்றால் கிட்டத்தட்ட அதில் மூன்றில் ஒரு பங்கு அவருடையது. ‘டி.இராமச்சந்திரன் கிரானைட் அன்ட் கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி’ எனும் சொந்தப் பெயரிலும் பினாமி பெயர்களிலும் கெலமங்கலம், சாப்பரானபள்ளி, நாகமங்கலம் முதலான பகுதிகளில் இந்தத் தொழிலைச் செய்யும் அவர், அனுமதி அளித்துள்ள பரப்பளவைக் காட்டிலும் பல மடங்கு பரப்பில் கரும் சலவைக் கற்களை வெட்டி  விற்றுத்தான் இப்படி வரலாறு காணாத வகையில் தன் சொத்துக்களைப் பெருக்கியுள்ளார் என்கின்றனர் இப்பகுதியில் கனிம வளக் கொள்ளைக்கு எதிராக இயக்கம் நடத்துகிற சமூக ஆர்வலர்கள். இது குறித்த புகார்களின் அடிப்படையில் ஆகஸ்டு 8, 2012ல் ‘’புவியியல் மற்றும் சுரங்கத் துறை” மாவட்ட நிர்வாகம் அவரிடமும் அவரது பினாமிகளிடமும் ஏன் உங்களுக்கு அபராதம் விதிக்கக் கூடாட்து என விளக்கம் கேட்டு அனுப்பிய மடல்களை (Show Cause Notice) இக்குழுவினர் பரிசீலித்த்னர். அவரது நிறுவனம் தவிர அவரது பினாமிகள் என கனிமக் கொள்ளையை எதிர்த்துப் போராடும் சமூக ஆர்வலர்களால் குற்றம்சாட்டப்படும் அப்துல் கரீம், சந்தோஷ், யுனைடெட் குவாரீஸ், ஜெயேந்திர குமார் பவன் பாய் படேல் ஆகியோருக்கு இவ்வாறு விதிக்கப்பட்ட அபராத மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத் தக்கது.

இராமச்சந்திரனின் ரியல் எஸ்டேட் தொழில் என்பது அப்பாவி ஏழை விவசாயிகளை மிரட்டி அடிமாட்டு விலைக்கு நிலத்தை வாங்கி பெரும் தொழில் நிறுவனங்களுக்கு விற்பது என்கிற அடிப்படையில் அமைகிறது. தங்கள் நிலத்தைப் பறி கொடுத்து வாழ்விழந்த மக்கள் இன்று அருகில் உள்ள பெங்களூரு போன்ற நகரங்களில் கூலிவேலை செய்து வாழ்கின்றனர். எடுத்துகாட்டாக 2007 முதல் ஓசூர் பகுதியில் தொழிற்சாலைகளை அமைக்கவும் ரியல் எஸ்டேட் தொழில் செய்யவும் வந்த GMR குழுமத்திற்கு மட்டும் 350 ஏக்கர் நிலங்கள் தளி இராமச்சந்திரன் வழியாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கென  இராமச்சந்திரனும் அவரது சகோதரர் வரதராஜனும் தேன்கனிக் கோட்டை, ஓசூர், உத்தனபள்ளி, கெலமங்கலம், இராயக்கோட்டை முதலான பகுதிகளில் ஏழை எளிய விவசாயிகளை மிரட்டி 3500 ஏக்கர் வரை நிலங்களை வாங்கிக் குவித்துள்ளதாக 01-03- 2016 அன்று லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் பழனி எனும் பழனிச்சாமி கொலை (ஜூலை 5, 2012) நிமித்தம் இராமச்சந்திரன் கைது செய்யப்பட்டுக் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை ஒட்டி இப்படிக் கைப்பற்றப் பட்டதில் எஞ்சியுள்ள நிலம் மாற்றீடு செய்யப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அப்புகாரில் கூறப்பட்டுள்ளது.

இப்படியான சட்ட விரோதத் தொழிலை எதிர்ப்பவர்களை அவர் ஒழித்துக் கட்டத் தயங்குவதில்லை. இது தொடர்பாகவும் அவர் மீது ஏராளமான புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக 20.04.2016 அன்று உள்துறைச் செயலகத்தும் தலைமை மற்றும் மாவட்டக் காவல்துறை அதிகாரிகளுக்கும் கொல்லப்பட்ட பழனிசாமியின் மகன் பாலேபுரம் வாஞ்சிநாதன் அளித்துள்ள புகாரைச் சொல்லலாம்.

இதை எல்லாம் சமாலிக்க பக்க பலமாக இராமச்சந்திரனுக்கு அரசியல் செல்வாக்கு தேவைப்படுகிறது. அதை இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (CPI) நிறைவேற்றித் தருகிறது.  எந்தத் தயக்கமும் இல்லாமல், மக்களின் இந்தப் புகார்களைப் பற்றி எல்லாம் எந்தக் கவலையும் படாமல் இதை அது செய்கிறது.

2006 வரை ராமச்சந்திரனும் அவரது மாமனார் லகுமையாவும் சி.பி.எம் கட்சியில் இருந்தனர். 2006 சட்டமன்றத் தேர்தலில் தளி தொகுதியில் நிற்க சி.பி.எம் கட்சியில் இராமச்சந்திரன் இடம் கேட்டார். ஆனால் அத்தொகுதி கூட்டணிக் கட்சியான சி.பி.ஐக்கு ஒதுக்கப்பட்டது. சி.பி.ஐ கட்சியின் மாவட்டச் செயலாளரான தாசரப்பள்ளி பி.நாகராஜ ரெட்டி என்பவருக்கு அத் தொகுதி ஒதுக்கப்பட்டது. கட்சிக் கட்டுப்பாட்டை மீறி சுயேச்சையாகப் போட்டியிட்ட இராமச்சந்திரன் தன் பண பலத்தால் வெற்றியும் பெற்றார். அடுத்த சில மாதங்களில் அவர்  சி.பி.ஐ கட்சியில் இணைந்தார். தனது வேட்பாளரைத் தோற்கடித்தவர் என்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல் அக்கட்சி அவரை வரவேற்று ஏற்றுக் கொண்டது. இதைக் கண்டித்து நாகராஜ ரெட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன் ஆதரவாளர்களுடன் கட்சியை விட்டு விலகினார். இதனால் ஆத்திரமடைந்த இராமச்சந்திரன் தன்னை இருமுறை கொல்லும் முயற்சியில் கூலிப் படை மொண்டு தாக்கினார் எனவும் அதனால் தன் உடலில் ஒரு பகுதி செயலிழந்துள்ளது என்றும் நாகராஜ ரெட்டி எங்கள் குழுவிடம் கூறினார். நாகராஜின் ஆதரவாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர். சிபிஐ கட்சியின் முன்னாள் பகுதித் தலைவர் திம்மா ரெட்டி என்பவர் தனது ஒரு கால் இந்தத் தாக்குதலால் அகற்றப்பட்டுள்ளதென எங்களிடம் காட்டினார்.

இராமச்சந்திரன் மீண்டும் 2011 சட்டமன்றத் தேர்தலில் சிபிஐ கட்சி வேட்பாளராக நின்று வெற்றிபெற்றார். தனக்கு எதிராகச் செயல்பட்டவரும் தனது கிரானைட் கொள்ளை முதலியவற்றை அம்பலப்படுத்தியவருமான த.பெ.தி.க தலைவர் பழனியை, அவரது மகன் வாஞ்சிநாதன் முன் அவர் கொடூரமாகத் தலையை வெட்டிக் கொலை செய்த வழக்கில் குண்டர் சட்டத்திலடைக்கப்பட்டதைச் சற்று முன் குறிப்பிட்டேன். இந்தக் கொலை தமிழக அளவில் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியது. சமூக ஆர்வலர் தியாகு அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட உண்மை அறியும் குழு இக்கொலைக்கு இராமச்சந்திரனே காரணம் எனக் குற்றம் சாட்டியது. சிறையில் இருந்தபோதே விசுவநாதனின் தம்பி பாஸ்கர் கொல்லப்பட்டதையும் முன்பே பதிவு செய்துள்ளோம். சட்ட மன்ற உறுப்பினராக இருந்தபோதே ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்ற பெருமையும் (History Sheeter உத்தனபள்ளி காவல் நிலையம், 16/2014) அவருக்கு உண்டு. இத்தனைக்குப் பின்னும் எந்தச் சஞ்சலமும் இல்லாமல்  சி.பி.ஐ கட்சி இராமச்சந்திரனுக்கு 2016 சட்டமன்றத் தேர்தலிலும் அத் தொகுதியை ஒதுக்கியது. எனினும் மக்கள் இந்தத் தடவை இராமச்சந்திரனுக்கு மட்டுமல்லாது சி.பி.ஐ கட்சிக்கும் நல்ல பாடம் புகட்டினர்.

இந்தப் பின்னணியில்தான் சென்ற மே 18 அன்று விசுவநாதனின் கொலை நடந்துள்ளது. தனது சகோதரன் பாஸ்கர் கொல்லப்பட்டதை ஒட்டி தொடர்ந்து இப்பகுதியில் விசுவநாதன் இராமச்சந்திரனின் குற்றங்களை அம்பலப்படுத்திக் கொண்டிருந்தது இந்தத் தோல்வியில் ஒரு பங்கு வகித்துள்ளது.

இந்த வகையில் எங்கள் குழு விசுவநாதனின் கொலையில் இராமச்சந்திரனுக்குப் பங்குள்ளது என விசுவநாதனின் தாயும் சகோதரியும் குற்றஞ்சாட்டுவதில் முழு நியாயங்களும் உள்ளதாகக் கருதுகிறது.

இராமச்சந்திரனின் குற்ற வரலாறு கிட்டத்தட்ட 25 ஆண்டு காலத் தொடர்ச்சி உடையது. 1992 ல் நாகமங்கலந்தை என்.சி.இராமன் என்பவர் கொலை வழக்கில் சாட்சியாக இருந்த அவரது தம்பி சந்திரசேகர்  மிரட்டல்களை மீறி சாட்சி சொன்னதற்காக ஆக 15, 1995ல் கொல்லப்பட்டார் (ஓசூர் கா.நி, 614/95). இதில் தளி இராமச்சந்திரனும் குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் தளி இராமச்சந்திரனுக்குப் பதிலாக வரானப்பள்ளியைச் சேர்ந்த அதே பெயருடைய மாரப்பா மகன் இராமச்சந்திரன் என்பவரை சரணடைய வைத்து அவர் தப்பித்துக் கொண்டார். இந்த ஆள் மாறாட்டம் பின்னர் அம்பலப்படுத்தப்பட்டபின் தளி இராமச்சந்திரனும் அவருக்கு இவ்வகையில் உதவிய காவல்துறை அதிகாரியும் எதிரிகளாகச் சேர்க்கப்பட்டு குற்றப்பத்திரிகை திருத்தப்பட்டு இப்போது வழக்கு நடந்துகொண்டுள்ளது.

இப்படி அவர் மீது கொலை, ஆள் மாறாட்டம், தாக்குதல் முதலாக ஏராளமான வழக்குகள் இன்று உள்ளன. அவர் மீதுள்ள வழக்கு விவரங்கள் தொடர்பாக சென்ற மார்ச் 11 அன்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் (C.No.5 / DCRB / RTI / KGI / 2016, Dt. 11.03.2016.) இந்த அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஓசூர், பேரிகை, தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், உத்தனபள்ளி முதலான காவல் நிலையங்களில் உள்ள குற்றங்கள் மட்டும் இவை. இராயக்கோட்டை காவல் நிலையத்தில் உள்ள குற்றங்களைச் சொல்ல காவல்துறை மறுத்துள்ளது.

தளி இராமச்சந்திரன் மீதுள்ள சில முக்கிய குற்றங்கள் மட்டும்: ஓசூர் 246/2012, பேரிகை 18/2012, தேன்கனிக்கோட்டை 261/2012, தளி 84/2012, கெலமங்கலம் 201/2012, உத்தனப்பள்ளி 34/2012, 143/2012/, 165/2012, 166/2012,

கோரிக்கைகள்

1. கெலமங்கலம் விசுவநாதன் கொலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தளி இராமச்சந்திரனுக்கு முக்கிய பங்குண்டு என விசுவநாதனின் குடும்பத்தார் வைக்கும் குற்றச்சாட்டில் முழு நியாயங்களும் உண்டு என இக்குழு நம்புகிறது. எனவே இது தொடர்பான விசாரணை இந்தக் கோணத்தில் நடத்தப்பட வேண்டும் என எங்கள் குழு மாவட்டக் காவல்துறையை வற்புறுத்துகிறது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள மூவரும் கொல்லப்பட்ட விசுவநாதனுடன் எந்தத் தனிப்பட்ட பகையும், அவரைக் கொல்வதற்கான நோக்கமும் இல்லாதவர்கள். புகார் கொடுத்துள்ள மோகனின் செல்பேசிக்கு வந்ததாகச் சொல்லப்படும் செல்போன் உரையாடல்கள், விசுவநாதனின் செல்போன் உரையாடல்கள், இந்த கைது செய்யப்பட்டுள்ள மூவரின் செல்போன் உரையாடல்கள் முதலியன செல் போன் service providers களிடமிருந்து பெறப்பட்டு புலனாய்வு செய்யப்படுதல் வேண்டும். தளி இராமச்சந்திரன் மீது உள்ள குற்றச்சாட்டுகளில் உள்ள பிற குற்றச் செயல்களின் தன்மைக்கும் இந்தக் குற்றச் செயலுக்கும் உள்ள ஒப்புமைகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

2. தளி இராமச்சந்திரன் மீதுள்ள குற்றச் சாட்டுகள் எல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு விரைவு தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்கப்பட வெண்டும் என அரசை இக்குழு கோருகிறது.

3. இப்பகுதியில் நடைபெறும் கனிமக் கொள்ளை, அதனால் விளையும் சுற்றுச் சூழல் தீங்குகள் முதலியன குறித்து மதுரை மாவட்டத்தில் செய்தது போன்று, ஒரு நேர்மையான அதிகாரியின் கீழ் விசாரணை ஒன்றை உடனடியாக நியமிக்க வேண்டும் இந்த விசாரணை தளி இராமச்சந்திரனின் பினாமி அமைப்புகள், அனுமதிக்கப்பட்ட பரப்பைக் காட்டிலும் அதிகமாகக் கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டாது ஆகியவற்றை சிறப்பு கவனம் எடுத்து விசாரிக்க வேண்டும்.

4. இப்பகுதியில் கடந்த பத்தாண்டுகளில் விவசாயிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலங்கள் குறித்து ஒரு சிறப்பு விசாரணை அதிகாரியை நியமித்து உடனடியாக விசாரிக்க வேண்டும். முறை கேடாக மிரட்டிப் பெறப்பட்ட நிலங்கள் இப்போது யார் கைவசம் இருந்தாலும் அது உரியவர்களுக்குத் திருப்பித் தரப்பட வேண்டும்.

5. ஒருபக்கம் கனிமக் கொள்ளையையும் நிலப்பறிப்பையும் எதிர்த்து அரசியல் செய்து கொண்டு இன்னொரு பக்கம் இதே குற்றங்களுக்காகத் தமிழக அளவில் உள்ள முற்போக்கு அறிவுஜீவிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளவரும், கொலைகள் உட்படப் பல்வேறு கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளவருமான தளி இராமச்சந்திரனைப் பதவிகள் கொடுத்து ஆதரித்து வரும் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநிலக் குழுவை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது தொடர்பாக நேற்று நாங்கள் இக்கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் அவர்களிடம் கருத்துக் கேட்டபோது ஒன்றும் சொல்வதற்கில்லை எனவும் எங்கள் அறிக்கையை அனுப்புமாறும் கேட்டுக் கொண்டார். எங்கள் அறிக்கையின் அடிப்படையில் உரிய ஆய்வுகளைச் செய்து தளி இராமச்சந்திரனைக் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்பதோடு இதுகாறும் அவரைப் பாதுகாத்து வந்ததற்காக சி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநிலக் குழு மக்களிடம் மன்னிப்புக் கோரவும் வேண்டும். இடதுசாரிக் கட்சிகளின் நலிவைக் கண்டு கவலை கொண்டவர்கள் என்கிற வகையில் நாங்கள் மிக மதிக்கும் இக் கட்சித் தலைமையிடம் இந்த வேண்டுகோளை முன்வைக்கிறோம்.

6. நேற்று மாலை நாங்கள் தருமபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. பண்டி கங்காதர் அவர்களைச் சந்தித்துப் பேசினோம்.விசுவநாதன் கொலை தொடர்பாக மோகன் என்பவர் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையிலேயே கெலமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கொலையின் முகாந்திரம் குறித்த எந்தத் தகவலும் இல்லை. ஆனால் விசுவநாதனின் தாயார் தான் இந்தப் பின்னணியை எல்லாம் விளக்கி ஒரு புகார் கொடுத்ததாகச் சொல்கிறார். காவல் நிலையத்தில் விசாரித்தபோது அப்படி ஏதும் கொடுக்கப்படவில்லை என்கிறார்கள். இது எங்களுக்கு ஐயத்தைத் தருகிறது. இது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் எனக் கோரினோம். அவர் உடனடியாக எங்கள் கண் முன் வாக்கி டாக்கி மற்றும் தொலைபேசியில் நாங்களும்கேட்கும் வண்ணமாக உரிய அதிகாரிகளிடம் பேசி, உடனடியாக கொல்லப்பட்டவரின் வீட்டுக்குச் சென்று அந்தஅம்மாவிடம் மீண்டும் ஒரு புகாரை பெற்று வந்து பதியுமாறு உத்தரவிட்டார்.

அந்த வழக்கு விசாரணை செய்யப்பட வேண்டிய கோணம்குறித்தும் சிலவற்றைச் சொன்னோம். “எல்லாவற்றையும் ஒரு மனுவாக எழுதிக் கொடுங்கள். உரிய அதிகாரிகள் தவறு செய்திருந்தால்அவர்களை மாற்றி புதிய அதிகாரிகளிடம் விசாரணையை ஒப்புவிக்கிறேன். நீங்கள் சொல்லும் கோணத்த்தில் நியாயம் இருக்கிறதுஎனில்அதையும் விசாரிப்போம். நானே பொறுப்பேற்று அந்த விசாரணையை என் நேரடிக் கண்காணிப்பில் செய்கிறேன். நீங்கள் எழுத்து மூலம் கொடுத்தால், ஒரு வேளை எங்கள் விசாரணையில் உங்களுக்குத் திருப்தி இல்லை என்றால் நீங்கள் நீதிமன்றத்தை நாடவும்உதவியாக இருக்கும்” என்றார். அந்த இளம் அதிகாரியை எங்கள் குழு மனதாரப் பாராட்டுகிறது.

 

மனித உரிமைப் போராளியின் அடிப்படைத் தேவை நம்பகத்தன்மை

தமிழக NCHRO கிளை வெளியிட்டுள்ள அறிக்கைகளின் தொகுப்பிற்கு எழுதப்பட்ட முன்னுரை

இந்திய அளவில் மனித உரிமை மீறல்களை வெளிக் கொணர்வது தவிர, தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நின்று நீதி கிடைக்கப் போராடுவது, நிவாரணப் பணிகளை மேற்கொள்வது ஆகியவற்றில் முன்னணியில் நின்று செயல்படும் அமைப்புகளில் ஒன்று தேசிய மனித உரிமை அமைப்புகளுக்கான கூட்டமைப்பு. (National Confederation of Human Rights Organisations- NCHRO). கேரளத்தில் மனித உரிமைப் பணிகளில் முன்னோடியாக இருந்து செயல்பட்ட மறைந்த போராளி முகுந்தன் சி.மேனன் அவர்களால் கேரள மாநிலத்திற்குள் ‘மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு’ என்கிற பெயரில் இயங்கிக் கொண்டிருந்த இந்த அமைப்பு இப்போது தேசிய அளவில் விரிவாக்கப்பட்டுச் செயல்பட்டுக் கொண்டுவருகிறது. கேரளம் மட்டுமின்றி தற்போது தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரம், கர்நாடகம் முதலான மாநிலங்களில் வலுவான அமைப்புகளைக் கொண்டுள்ளது. மகாராஷ்டிரம், டெல்லி முதலிய மாநிலங்களிலும் கிளைகள் உள்ளன. டெல்லியில் தலைமை அலுவலகம் உள்ளது. வரும் பிப்ரவரி 20 அன்று கோவா மாநிலத்தில் அமைப்பு தொடங்கப்படுகிறது.

இந்திய அளவில் சிறப்பாக மனித உரிமைக் களத்தில் செயல்பட்டு வரும் முன்னோடிகளில் ஒருவருக்கு ஆண்டு தோறும் முகுந்தன் சி மேனன் பெயரில் சிறந்த மனித உரிமைப் போராளி எனும் விருதையும் NCHRO அளித்து வருகிறது. இந்த ஆண்டு அவ் விருதைப் பெறுபவர் பேரா. ராம் புனியானி அவர்கள். இரண்டாண்டுகளுக்கு முன்பு அவ்விருது தமிழகத்தைச் சேர்ந்த அணு உலை எதிர்ப்புப் போராளி .உதயகுமாருக்கு அளிக்கப்பட்டது.

‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA)’ மூலம் இந்தியா முழுமையும் போராடும் இயக்கங்கங்கள் மற்றும் தனி நபர்கள் மீது கடும் தாக்குதல் தொடுக்கப்படுவதையும் ஏராளமானோர் கைது செய்யப்படுவதையும் எதிர்த்துத் தொடர்ந்து இந்தத் தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு போராடி வருகிறது. ஆண்டுதோறும் சித்திரவதை எதிர்ப்பு நாளில் (ஜனவரி 26) சாத்தியமான பகுதிகள் எல்லாவற்றிலும் சுவரொட்டிப் பிரச்சாரம், அறைக் கூட்டங்கள் முதலானவற்றின் ஊடாக பரப்புரைகளையும் மேற்கொண்டு வருகிறது. நாடெங்கிலும் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை உடனுக்குடன் கண்டிப்பதோடு டாக்டர் பினாயக் சென், கோபாட் காந்தி, சாய்பாபா, ஜிதேன் யும்நாம்,, எம்.என்.ராவுண்னி போன்ற மனித உரிமைப் பொராளிகள் மற்றும் இயக்கவாதிகள் கைது செய்யப்பட்டபோது கண்டித்தும், அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்காகத் தொடர்ந்து பிரச்சாரமும் செய்து வருகிறது.

இவை தவிர பெரிய அளவு மனித உரிமை மீறல்கள், பொய்க் கைதுகள், போலி என்கவுன்டர்கள், காவல் நிலையக் கொலைகள் நடக்கும்போது உடனடியாக தேசிய அளவிலும், மாநிலங்கள் அளவிலும் உண்மை அறியும் குழுக்களை அமைத்து உண்மைகளை வெளிக் கொணர்கிறது. அசாம், புனே (மகாராஷ்டிரம்), முசாஃபர்நகர் (உ.பி), மாராட் (கேரளம்), அலேர் (தெலங்கானா) முதலான பகுதிகளில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை தேசிய அளவிலான குழுக்களை அமைத்து வெளிக் கொணர்ந்ததில் NCHRO வின் பங்கு முக்கியமானது. இது தவிர மாநில அளவிலும் பல்வேறு சகோதர அமைப்புகளுடன் சேர்ந்து இத்தகைய பணிகளைச் செய்து வருவதற்கு எடுத்துக்காட்டுகளாக செஷாசலம் காட்டில் 20 தமிழர்கள் போலி மோதலில் கொல்லப்பட்ட நிகழ்வு, வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டையில் கழிவு நீர்த் தொட்டி வெடித்து ஒன்பது வட மாநிலத் தொழிலாளிகள் உட்பட பத்து பேர்கள் கொல்லப்பட்டது, திருநாள்கொண்ட சேரியில் தலித் பிணங்கள் பொது வீதியில் தூக்கிச் செல்லப்படுவது மறுக்கப்பட்ட பிரச்சினை முதலானவற்றில் NCHRO வின் பங்களிப்புகளைச் சொல்லலாம்.

உண்மைகளை அறிந்து  வெளிக்கொணர்வது என்பதோடு நில்லாமல் தொடர்ந்து அப்பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் வாக்குமூலங்களைப் பெற்று, வழக்குகள் பதிவு செய்து தொடர் பணிகளைச் செய்வதில் NCHRO வின் வழக்குரைஞர் குழுவின் பங்கு மிகவும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய ஒன்று. அசாம் மற்றும் முசாபர் நகர் மத வன்முறைகளை ஒட்டி இவ்வழக்குரைஞர்களின் குழு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் அங்கு தங்கி இப்பணியைச் செய்தனர்.  இப்போது முசாஃபர் நகர் வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக 50 வழக்குகளை NCHRO நடத்திக்கொண்டு இருக்கிறது. இவற்றில் இப்போது ஐந்து வழக்குகள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் உள்ளன. அதேபோல அசாம் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள சார்பாக NCHRO ‘வெளிநாட்டார் தீர்ப்பாயத்தில்’ நடத்திக் கொண்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 88. சுமார் 45 பேர்களுக்கு அவர்கள் உள்நாட்டவர்கள்தான் என்பதை NCHRO வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் உறுதி செய்துள்ளனர். மத்தியப்பிரதேசத்தில் யாசின் என்கிற 12 வயதுச் சிறுமி காவல் நிலையத்தில் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு, அக்ரம் ஷா என்பவர் காவல் நிலையத்தில் அடித்து முடமாக்கப்பட்ட வழக்கு ஆகியவற்றையும் NCHRO தான் நடத்திக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு இழப்பீடுகளையும் பெற்றுத் தந்துள்ளது.

தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி பட்டணம் காவல்நிலையத்தில் சையத் அலி என்கிற அப்பாவி முஸ்லிம் இளைஞர் காவல்துறை துணை ஆய்வாளரால் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் NCHRO உண்மைகளை வெளிக்கொணர்ந்ததன் விளைவாக அந்த ஆய்வாளர் இன்று சிறையில் உள்ளார். அதேபோல கடையநல்லூரைச் சேர்ந்த மசூத் எனும் முஸ்லிம் இளைஞர் காவல்துறையால கொல்லப்பட்ட வழக்கில் மூன்று காவல் கண்காணிப்பாளர் உட்பட 12 காவல்துறை அதிகாரிகள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இருவர் இறந்துள்ளனர். ஒரு உயர் அதிகாரி  தன்னை வழக்கிலிருந்து நீக்குமாறு செய்த முறையீட்டை நீதிமன்றம ரத்து செய்துள்ளது. மசூதின் மனைவி ஹஸனம்மாளுக்கு 8.56 இலட்சம் இழப்பீட்டையும் NCHRO தான் பெற்றுத் தந்துள்ளது.

பானைச் சோற்றுப் பதமாகச் சில வழக்குகளை மட்டுயமே இங்கு குறிப்பிட்டுள்ளேன். இந்த அளவிற்குத் தொடர்ந்து வழக்குகளி நடத்திக் கொண்டுள்ள மனித உரிமை அமைப்பு எதுவும் இந்தியாவில் இல்லை எனலாம். தமிழகத்திப் பொருத்தமட்டில் முகமது யூசுஃப், அப்துல்காதர், ஷாஜகான் முதலான அர்ப்பணிப்பு மிக்க இளம் வழக்குரைஞர்கள், ப.பா.மோகன், லஜபதி ராய், ஜின்னா முதலான புகழ்பெற்ற மூத்த வழக்குரைஞர்களும் NCHRO வில் பொறுப்புக்களை ஏற்று செயல்படுவது குறிப்பிடத் தக்கது.

NCHRO வின் பணிகளையும், முக்கிய அறிக்கைகளையும் http://www.nchro.org/ எனும் இணைய தளத்தில் நீங்கள் காணலாம்.

2.

தமிழக எல்லைக்குள் நடந்த ஒரு எட்டு மனித உரிமை மீறல்களில்  NCHRO  அமைப்பு உண்மை அறியும் குழுக்களை அமைத்து வெளியிட்ட  அறிக்கைகளை நண்பர்கள் இங்கே தொகுத்துள்ளனர். இவை அனைத்தும் 2013 – 15 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டவை. இதில் நான்கு குழுக்களில் நான் பங்கு பெற்றுள்ளேன். இந்த நூலில் உள்ள அறிக்கைகளில் இரண்டு காவல் நிலையச் சாவுகள் தொடர்பானவை. ஒன்று போலி என்கவுன்டர் பற்றியது. ஒன்று இரு வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு இடையே நடைபெறும் மோதல் ஒன்று பற்றியது. மற்றவை முஸ்லிம்களுக்கு எதிராக காவல்துறையினர் நடத்திய தாக்குதல் மற்றும் பொய்க் கைதுகள் தொடர்பானவை. ஆக, தற்போது நடை பெறும் பெரும்பாலான மனித உரிமை மீறல்களில் மாதிரிக்கு ஒன்று இதில் உள்ளது.

பெரும்பாலான மனித உரிமை மீறல்கள் காவல்துறை அத்துமீறல்கள் என்கிற வடிவிலேயே உள்ளன என்பதற்கு இந்தத் தொகுப்பு மேலும் ஒரு சான்றாக அமைகிறது. காவல்துறை எது செய்தாலும், அது எத்தனை மனித உரிமை மீறல்களை மேற்கொண்டாலும் அதற்காக நடவடிக்கை எடுத்தால் காவல்துறையின் உறுதி குலையும் என்கிற ஒரு மிக மோசமான அணுகல் முறையை அரசுகள் மேற்கொண்டிருக்கும் வரை இந்த நிலை தொடரவே செய்யும்.

இந்த முன்னுரையை எழுத்திக் கொண்டிருக்கும்போது சற்று முன் தொலை பேசியில் ஒரு செய்தி. இந்த தொகுப்பில் உள்ள கான்சாபுரம் கிட்டப்பா என்கவுன்டர் கொலை குறித்த அறிக்கையில் நாங்கள் கேட்டுள்ளபடி அந்த போலி என்கவுன்டரில் பங்கு பெற்ற 12 காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய மாவட்ட விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள செய்திதான் அது. போலி என்கவுன்டர் வழக்குகளைக் கையாள்வது குறித்து நீதிமன்றங்கள், மனித உரிமை ஆணையம் முதலியன எத்தனையோ நெறிமுறைகளை வழங்கி இருந்த போதும் அவை அரசுகளால் கடைபிடிக்கப்படுவதில்லை.ஈதன் விளைவாக காவல்துறை எந்த அச்சமோ, நீதி, நேர்மை, அடிப்படை மனித இரக்கம் ஏதுமின்றி இப்படி ‘மோதல்’ என்கிற பெயரில் படுகொலைகளைச் செய்கிறது. தங்களுக்கு தண்டனை விலக்கு (immunity) உண்டு என்கிற திமிர் ஒவ்வொரு காவலர்களிடமும் உள்ளவரை இது தொடரவே செய்யும்.

இந்தக் கிட்டப்பா கொலை வழக்கைப் பொறுத்த மட்டில் அவர் மீது ஏகப்பட்ட வழ்க்குகள் உள்ளன என்பது உண்மைதான். ஆனால் அதற்காகக் காவல்துறையினர் அவரைச் சுட்டுக் கொன்றுவிட இயலாது. அப்படிக் கொன்றால் நாம் அதை அனுமதிக்கவும் முடியாது. ஆனாலும் கொன்றார்கள். கொலையின் பின்னணி இதுதான். திருநெல்வேலி மாவட்டத்தில் கொலைகள் , கலவரங்கள் மிகுதியாகி விட்டன எனப் பத்திரிகைகள் எழுதின. எனவே காவல்துறை தாங்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக மக்கள் முன் காட்டியாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பிணையில் வெளி வந்து, மாமியார் வீட்டில் இருந்து கொண்டு, திருந்தி வாழும் முடிவுடன் விவசாய வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த கிட்டப்பாவைப் பொய் சொலி அழைத்துச் சென்று, முஸ்லிம் ஒருவர் கட்டிக் கொண்டிருந்த வீட்டுக்குள் வைத்து அவரைக் கதறக் கதறச் சுட்டுக் கொன்றார்கள் (ஜூலை 13, 2015). மிக மிக மிக ஏழைக் குடும்பம். நாங்கள் விசாரிக்கச் சென்ற போது கிட்டப்பாவின் இரண்டு வயதுக் குழந்தை அப்போதுதான் மொட்டை அடிக்கப்பட்டு, என்னவென்று தெரியாமலேயே தந்தைக்குச் சிரார்த்தம் செய்து கொண்டிருந்தான்.

போலி என்கவுன்டர்கள் என்றால் சில சடங்குகள் அடுத்தடுத்து முறையாகக் கடைபிடிக்கப்படும். ஒரு இரண்டு மூன்று போலீஸ்காரர்களை அரசு மருத்துவமனையில் சேர்த்திருப்பார்கள். அவர்கள் ஒரு நான்கைந்து நாட்கள் அங்கு தங்கி விடுமுறையை சுகித்துக் கொண்டிருப்பார்கள். இங்கும் அப்படித்தான் நடந்தது. மருத்துவமனையில் இருந்த ஸ்டாஃப் நர்ஸ், அவர்களுக்கு ஒன்றும் இல்லை எனவும், மேலதிகாரிகளின் ஆணையினால்தான் அவர்களை டிஸ்சார்ஜ் செய்யாமல் வைத்திருப்பதாகவும் சொன்னார். இது போல எத்தனை நாடகங்களை நாங்கள் பார்த்துள்ளோம். மனைவி மக்களுடன் வார்டில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்த காவல்துறையினர் நாங்கள் யார் எனத் தெரிந்தவுடன் கழற்றி வைத்திருந்த ‘பேன்டேஜ்’ களை அவசர அவசரமாக எடுத்து மாட்டிக் கொண்ட காட்சியை ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் பார்த்துள்ளோம். அட்மிட் ஆகியுள்ள போலீஸ்காரர்கள் எங்கே எனக் கேட்டபோது அங்கிருந்த ஸ்டாஃப் நர்ஸ், மென்று விழுங்கிக் கொண்டு, அவங்க வீட்டுக்குப் போயிருக்காங்க , வந்திடுவாங்க எனப் பதிலளித்ததை இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கண்டுள்ளோம்.

ஆக மக்களின் உயிர்கள் மயிருக்குச் சமம் என்று காவல்துறை கருதுகிறது என்றால் அதற்கு ஆதாரமாகவும் பக்க பலமாகவும் இருப்பது அரசுதான்.

காவல் நிலையச் சாவுகளும் இப்படித்தான் நேர்கின்றன. கைது செய்வது, காவலில் வைத்து விசாரிப்பது முதலானவற்றிற்கும் உரிய நெறிமுறைகள் உள்ளன. அவை எங்கும் கடைபிடிக்கப்படுவதே இல்லை. கைது செய்து பல நாட்கள் வைத்து சித்திரவதை செய்து பின்னர்தான் நீதிமன்றத்திற்கே கொண்டு செல்லப்படுகிறார்கள். பெரும்பாலும் திருட்டு வழக்குகளிள் கைது செய்யப்படுபவர்களும், தீவிரவாதிகள் எனக் கைது செய்யப்படுகிறவர்களுந்தான் இப்படிக் கொல்லப்படுகின்றனர். திருடிய பொருளை எங்கே வைத்திருக்கிறாய் எனக் கேட்டு அடிப்பது, சித்திரவதை செய்வது என்பன கொலைகளில் முடிகின்றன. உண்மையிலேயே திருடி இராதவன் என்ன செய்வான்? இந்தத் தொகுப்பில் மிக அழகாகவும் எளிமையாகவும் எழுதப்பட்டுள்ள ஒரு அறிக்கை கானாத்தூர் ஹுமாயூன் என்பவர் காவல் நிலையத்தில் கொடூரமாகக் கொல்லப்பட்ட கதையைச் சொல்கிறது. வேலை செய்யப் போன இஅடத்தில் ஒரு கம்மலைத் திருடினார் எனும் குற்றச்சாட்டில் கொண்டுபோகப்பட்டவர் அவர். எஸ்.பி பட்டினம் காவல் நிலையச் சாவில் கொல்லப்பட்ட சையது முகமது வின் கொலைக்கு அந்தக் கொலையைச் செய்த காவல் துணை ஆய்வாளர் காளிதாசின் வக்கிர புத்தி காரணமாக இருந்துள்ளது. அந்தக் காளிதாஸ் சங்கப் பரிவார அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்தவர் என ஒரு தகவல் உண்டு. கொல்லப்பட்டவரோ ஒரு முஸ்லிம்.

இப்படிக் கொல்லப்படுபவர்கள், சித்திரவதை செய்யப்படுகிறவர்கள் என்ன குற்றச்சாட்டுகளுக்காகக் கொண்டு செல்லப்பட்டனர் என்பது ஒரு பக்கம், இன்னொரு பக்கம் அவர்கள் யாராக இருக்கிறார்கள் என்பதுதான்  அவர்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைகிறது. இப்படிக் கொல்லப்படுபவர்கள் பெரும்பாலும் தலித்கள், முஸ்லிம்கள், மிகப் பிற்படுத்தப்பட்டோர், ஏழை எளியவர்கள், பழங்குடி மக்கள் இப்படியாகவே இருப்பதை நாம் வேறு எப்படிப் புரிந்துகொள்வது? காவல் நிலையங்களுக்கு வெளியே இன்று கட்டமைக்கப்படும் வெறுப்பு அரசியல் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இயக்கவாதிகள் உளவுத் துறையுடன் வைத்துள்ள உறவுகளும் பெரும்பாலும் இயக்கவாதிகளுக்கு பாதிப்பில்தான் முடிகின்றன என்பதையும் இயக்கங்களில் உள்ளவர்கள் உணர வேண்டும். இப்படியான உறவுகள் முஸ்லிம் இயக்கங்கள் மத்தியில் அதிகம் உள்ளது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்காக என்ன விதமான போராட்டம் நடத்துவது, என்ன தேதியில் நடத்துவது என்பதையெல்லாம் உளவுத் துறையுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யும் பழக்கம் இந்த இயக்கங்களில் உண்டு. அது அவர்களுக்குத்தான் ஏதோ ஒரு கட்டத்தில் ஆபத்தாக முடியும் என்பதற்கு பாபுலர் ஃப்ரன்ட் ஊர்வலத்தின் மீது இராமநாதபுரத்தில் நடந்த கொடுந் தாக்குதல் ஒரு எடுத்துக்காட்டு.

ஊர்வலம் செல்லும் பாதை என எழுத்து மூலம் கொடுப்பது ஒன்று. ஆனால் வாய் மொழியாக உளவுத்துறை சொல்வது வேறொன்று. கேட்ட பாதையைக் கொடுக்க முடியாது என எழுத்து மூலம் சொல்லிவிட்டு, வாய்மொழியாக, “பாய், நீங்க கேட்ட பாதை வழியாவே போகலாம் கவலைப்படாதீங்க..” எனச் சொல்வது. எல்லாம் நல்லபடியாகவே நடந்தால் ஓகே. ஆனால் பிரச்சினை என வந்தால் வாக்குறுதி அளித்த உளவுத் துறை அதிகாரி செல் போனை நிறுத்திவிட்டு எங்காவது தூங்கப் போய் விடுவார். நம்பிய ஊர்வலத்தினர் இங்கே தடியடி படவேண்டியதுதான். அப்படித்தான் இராமநாதபுரம் ஊர்வலத்தில் நடந்தது. அதுவும் என்கவுன்டர் கொலைகளைச் செய்தே பதவி உயர்வு பெற்ற வெள்ளத்துரை போன்றோரிடம் தடியைக் கொடுத்தால் வேறென்ன நடக்கும்?

ஆனால் இந்த பாபுலர் ஃப்ரன்ட்டின் சுதந்திர தின ஊர்வலத்தின் மீது தமிழக அரசுகள் மேற்கொள்ளும் அடக்குமுறையை விட ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கும் செயல் வேறென்ன இருக்க இயலும்? சுதந்திர தினத்தன்று அந்த அமைப்பினர் சீருடை அணிந்து தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்துகின்றனர். முறையாக அனுமதி பெற்று நடக்கும் அந்த அணி வகுப்பு அல்லது ஊர்வலங்களுக்கு அனுமதி மறுப்பது அல்லது ஏதேனும் பிரச்சினைகளை உருவாக்குவது என்பதை காவல்துறை வழக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு பக்கம் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் வெளிப்படையாக ஆயுதப் பயிற்சி எடுக்கின்றன; மத வெறுப்பை விதைத்து திரிசூலங்களை விநியோகிக்கின்றவர்கள் தேசியக் கொடி மற்றும் நமது அரசியல் சட்டம் ஆகியவற்றை மதிப்பதுமில்லை. அவற்றிற்கு தாராளமாக அனுமதியும் பாதுகாப்புகளும் வழங்கும் நமது மத்திய மாநில அரசுகள் பாபுலர் ஃப்ரன்ட் அமைப்பு நடத்தும் சுதந்திர தின அணிவகுப்பைத் தடை செய்வதை எப்படிப் புரிந்து கொள்வது? நாம் நமது அரசியல் சட்டம் வழங்கியுள்ள மதச் சார்பின்மையை இழந்து கொண்டுள்ளோம் என்பது தவிர இதற்கு வேறென்ன பொருள்?

இராமநாதபுரத்தில் பாபுலர் ஃப்ரன்ட் அமைப்பிற்கு அவர்கள் கேட்ட பாதையில் அனுமதி வழங்காதபோதும், உளவுத்துறை அதிகாரிகள் கடைசி வரை அவர்களிடம் நீங்கள் கேட்ட வழியிலேயே அணிவகுப்பை நடத்தலாம் எனச் சொல்லியுள்ளனர். ஆனால் அணிவகுப்பு தொடங்கும்போது அந்த வழியில் போகக்கூடாது என அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுவரை அவர்களுக்கு அனுமதி உண்டு எனச் சொல்லி வந்த அந்த உளவுத்துறை அதிகாரி செல்போனை நிறுத்திவிட்டுப் போயே போய் விட்டார். விளைவு ஊர்வலத்தின் மீது கடுமையான தாக்குதல். போலி என்கவுன்டர் ‘புகழ்’ வெள்ளத்துரை வேறு இப்போது அங்கு உயர் அதிகாரி. கேட்கவா வேண்டும்.

உளவுத்துறை அதிகாரிகளில் நல்லவர்கள் என்ன கெட்டவர்கள் என்ன, அவர்கள் உளவுத் துறை அதிகாரிகள். அவ்வளவுதான். அவர்கள் அதிகாரத்தில் உள்ளவர்களின் விசுவாசிகள்.ஈந்த விசுவாசிகளின் வழிகாட்டல்களை ஏற்பது குறித்த எச்சரிக்கை இயக்கங்களுக்குத் தேவை என்பதுதான் இராமநாதபுரம் அனுபவம் நமக்குக் கற்றுத் தந்துள்ள அனுபவம்.

காவல்துறை அத்துமீறல்கள் என்பன பல வழிகளில் முஸ்லிம் மக்களைப் பாதிக்கிறது. ஏதேனும் ஒரு வன்முறை அல்லது தாக்குதலுடன் தொடர்புபடுத்தி உண்மையில் அந்தச் சம்பவத்தில் பங்கு பெறாதவர்களை எல்லாம் கைது செய்வது, உடனடியாக நீதிமன்றத்தில் நிறுத்தாமல் பலநாட்கள் சட்ட விரோதக் காவலில் வைத்துச் சித்திரவதை செய்வது, பொய்வழக்குப் போடுவது என்னும் நிலை தொடர்கிறது. கைது செய்யப்படுகிறவர்கள் எல்லோரும் அப்பாவிகள் என நாங்கள் சொல்லவில்லை. ஆனால் அப்பாவிகள் பலரும் கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் பின்னர் விடுதலை செய்யப்பட்டாலும் அவர்களது படிப்பு, வேலை வாய்ப்பு, திருமணச் சாத்தியங்கள் மொத்தத்தில் அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இப்படி அப்பாவிகளைக் கைது செய்து ஒரு சமூகத்தின் மத்தியில் இந்த நாட்டில் நமக்கு நீதி கிடைகாது என்கிற அவநம்பிக்கையை ஏற்படுத்துவது இந்த நாட்டுக்கு நல்லதல்ல.

இன்னொரு பக்கம் திருநெல்வேலியில் உள்ள மேலப்பாளையம், மதுரையில் உள்ள நெல்பேட்டை முதலான ஏழை எளிய முஸ்லிம்கள் வாழும் பகுதிகளை ஏதோ பயங்கரவாதிகளின் உற்பத்திசாலை என்பதைப்போல காவல்துறை அணுகுவதும் விளம்பரப்படுத்துவதும் மிக மிக வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. நெல்பேட்டையில் பாரம்பரியம் மிக்க அந்த மசூதிக்குள் தொழுபவர்களைப் படம் பிடிக்க ‘சிசிடிவி’ களைப் பொருத்தினார்கள். NCHRO வழக்குரைஞர்களின் எதிர்ப்புகளுக்குப் பின் மசூதிக்குள் பொருத்தப்பட்டிருந்த காமராக்கள் மட்டும் எடுக்கப்பட்டன. இது போன்ற பகுதிகளில் வாழும் இளைஞர்களைப் பிடித்துச் சென்று அவர்களின் செல்போன்களைப் பயன்படுத்து அதில் உள்ள தொடர்பு எண்கள் அனைத்திற்கும் போன் செய்து எல்லோரையும் வரவழைத்து அவர்களின் கைரேகைகளைப் பதிவு செய்வது, கிரிமினல்களைப்போல அவர்களைப் படம் எடுப்பது என profile களை உருவாக்குகின்றனர். நெல்பேட்டையில் மட்டும் 500 க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் இவ்வாறு profile செய்யப்பட்டுள்ளனர் என்றார் ஒருவர். அனாதரவாக உள்ளவர்களை மிரட்டி அவர்களைக் காவல்துறை உளவாளிகளாக (informers) இருக்கக் கட்டாயப்படுத்துவது என இப்பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் அத்துமீறல்களும் சட்ட விரோதமாக குடிமக்களின் அந்தரங்கங்களில் தலையிடல்களும் நடக்கின்றன. நெல்பேட்டையில் கணவனை இழந்து, சொந்தத் தொழில் செய்து தன் மூன்று குழந்தைகளைக் காப்பாற்றி வரும் ஒரு பெண்ணை NCHRO குழு சந்தித்தது. தன்னை ஒரு informer ஆக இருக்க மதுரை காவல்துறை எத்தனை கொடூரமாக மிரட்டிக் கொண்டிருக்கிறது என்பதை அவர் சொல்லிக் கேட்டபோது அதிர்ச்சி அடைந்தோம்.

இப்படி ஒரு சமூகத்தையும், ஒரு குறிப்பிட்ட சமூகம் வாழும் சில பகுதிகளையும் “சந்தேகத்திற்குரிய சமூகங்களாகவும்”. “சந்தேகத்திற்குரிய  பகுதிகளாகவும்” கட்டமைப்பது அடிப்படை மனித நெறிகளுக்கு அப்பாற்பட்டது என்பது மட்டுமல்ல சட்ட விரோதமானதும், தேச ஒற்றுமையை அழிப்பதும் கூட.

இதை எல்லாம் தட்டிக் கேட்கும் அளவிற்கு அரசியல் கட்சிகள் எதுவும் தார்மீக பலம் உள்ளவையாக இப்போது இல்லை. இன்னொரு பக்கம் அரசு ஆதரவுடன் வளர்ந்து வரும் வெறுப்பு அரசியல் இரையைப் பிடிக்க வரும் ஒரு பாம்பு போலத் ட்ய்ஹிறந்த வாயுடன் கொஞ்சம் கொஞ்சமாக நெளிந்து நெளிந்து இங்கே வந்து கொண்டுள்ளது. கிழக்குக் கடற்கரையோரங்களிலும், சிறுபான்மையர் செறிந்து வாழும் பிற பகுதிகளிலும் இந்த நிலையை யாரும் காண இயலும்.

3

உண்மை அறியும் குழு ஒன்றை அமைத்து அறிக்கை ஒன்றை எழுதி வெளியிடுவது என்பது அத்தனை எளிதான காரியமில்லை. அது ஒரு கவனம் மிக்க கடினமான பணி மட்டுமல்ல. மிகவும் அறம் சார்ந்த பணியும் கூட. இரு தரப்பு நியாயங்களையும் கேட்டு தீர்ப்பு எழுதும் ஒரு நீதிபதியின் பணியை விட இது கடுமையானது. ஒரு நீதிபதிக்கு முன் எல்லாத் தரவுகளும் ஆய்வுக்கு வைக்கப்பட்டிருக்கும், வழக்குரைஞர்களின் வாதமும் அவருக்கு உதவிகரமாக இருக்கும். தவிரவும் நீதிபதிக்கு அபரிமிதமான அதிகாரமும் கையில்  உண்டு. அவர் கேட்கும் தரவுகளை அரசு தந்தாக வேண்டும். ஆனால் ஒரு உண்மை அறியும் குழுவோ இவை எதுவும் இல்லாமல் வெறும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் நீண்ட வரலாறு உடைய ஒரு பிரச்சினையை ஆராய்ந்து உண்மைகளைச் சொல்லியாக வேண்டும்.

சில நேரங்கலில் ‘போஸ்ட்மார்டம் ரிபோர்ட்’ போன்ற தகவல்கள் கூட நாம் போகிற நேரத்தில் நமக்குக் கிடைக்காமல் இருக்கும். அல்லது தர இயலாது, வேண்டுமானால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வாங்கிக் கொள்ளுங்கள் என அதிகாரிகள் தட்டிக் கழிக்கக் கூடும். இத்தனைக்கும் மத்தியில்தான் நாம் அறிக்கையை எழுதியாக வேண்டும்.

இத்தகைய தருணங்களில் எல்லா உண்மைகளையும் நம்மால் சொல்லிவிட இயலாது. சொல்லவும் தேவை இல்லை. எந்த விடயங்களில் ஐயம் உள்ளதோ, எந்த விடயங்களில் உண்மைகள் உள்ளதாக நாம் நமக்குக் கிடைத்த வாக்குமூலங்களின் ஊடாகவும் சாட்சியங்களின் ஊடாகவும் அறிகிறோமோ அவற்றை கவனப்படுத்தி அவை புலனாய்வு செய்யப்பட வேண்டும் எனச் சொன்னால் அதுவே பெரிய விடயம். ஒரு நம்பகத்தன்மை மிக்க மனித உரிமை ஆர்வலர்களின் குழு இவ்வாறு ஐயங்களை முன் வைக்கிறது என்பது வெளியுலகிற்குத் தெரிய வைப்பதே நமக்குக் கிடைக்கிற முதல் கட்ட வெற்றியாக இருக்கும்.

“நம்பகத்தன்மை” என்று சொன்னேன். ஒரு உண்மை அறியும் குழுவின் மிகப் பெரிய பலம் மட்டுமல்ல, ஒரே பலமும் அதுதான். இவர்கள் உண்மையைச் சொல்லுவார்கள், தாங்கள் கொண்டுள்ள கருத்து நிலையின் அடிப்படையில் பொய்யான தகவல்களையோ, மிகைப்படுத்திய தகவல்களையோ சொல்லமாட்டார்கள் என்கிற நம்பிக்கையைச் சம்பாதிப்பது ஒரு மனித உரிமைப் போராளிக்கு மிக மிக முக்கியமான ஒன்று.

இதன் பொருள் நாம் “நடுநிலையாளர்களாக” இருக்க வேண்டும் என்பதல்ல. “நடுநிலையாளர்கள்” மட்டுந்தான் உண்மையைச் சொல்ல முடியும் என்பதும் அல்ல.

நாம் எப்படி நடுநிலையாளர்களாக இருக்க இயலும்? காவல்துறை தன்னிடமுள்ள அபரிமிதமான அதிகாரத்தை வைத்து ஒரு எளிய மனிதனைச் சட்ட விரோதமாகக் காவலில் வைத்துச் சித்திரவதை செய்து கொல்லும்போதும், ஒரு ஆதிக்க சாதிக் கும்பல் தலித் ஒருவரை எரித்துக் கொல்லும்போதும், ஒரு பெரும்பான்மைப் பிரிவு இன்னொரு சிறுபான்மையின் உரிமைகளையும் உயிரையும் பறிக்கும் போதும் எப்படி நாம் நடுநிலையாளர்களாக இருக்க முடியும்? நாம் பாதிக்கப்பட்டவர்களோடுதான் நிற்க இயலும்.

ஆனால் நாம் ஒன்றை மறந்து விடக் கூடாது. நடுநிலையாளர்கள் மட்டுந்தான் உண்மையைச் சொல்ல முடியும் என்பதல்ல.  சார்புடையவர்களும் உண்மையைச் சொல்ல இயலும். நாம் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சார்புடையவர்கள். உண்மையைப் பேசுவது நமக்கு இன்னும் எளிது. பாதிக்கப்பட்டவர்களின் பாதிப்புகளை உள்ளதை உள்ளபடிச் சொன்னாலே நமக்குப் போதும். அதுதான் நமக்குப் பலம். அந்தான் நம்மைக் காப்பாற்றும். “உண்மை வெல்லும்” என்பது வேறெதற்குச் சரியோ இல்லையோ ஒரு உண்மை அறியும் குழுவுக்கு அது வேத வாக்கியம்.

உண்மை அறியும் குழுவில் செல்பவர்க்கு இது ஒரு சவாலான பணி. பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் மட்டுமல்ல. பாதிப்புக்கு ஆளானவர்களும் கூடச் சொல்வது எல்லாம் உண்மை என நாம் அப்படியே ஏற்க வேண்டியதில்லை. அவற்றில் மிகைப்படுத்தப்படுவதற்கான சாத்தியங்கள் நிறையவே உண்டு. பொதுவாகவே மிகைப்படுத்தும் பண்பு மக்களுக்கு உண்டு சற்றுப் பெரிய ஒரு பாம்பைப் பார்த்து விட்டு வந்தால், “தொடைப் பெரிசு ஒரு பாம்பைப் பார்த்தேன்” என்பார்கள். சில நேரங்களில் வேண்டுமென்றே உண்மைகளை மறைப்பதும் உண்டு. அதே போல அதிகாரிகள் அல்லது ஆதிக்க நிலையில் உள்ளோர் சொல்கிறார்கள் என்பதற்காக எல்லாவற்றையும் முற்றாக நாம் மறுத்துவிட வேண்டியதும் இல்லை. உண்மை வெல்லும் என்பதுபோல “எல்லாவற்றையும் சந்தேகி” என்பதும் நமக்கு ஒரு வழிகாட்டு நெறிதான். ஆனால் சந்தேகத்தின் ஊடாக அங்கே தெரியும் உண்மையின் கீற்றுகளை நாம் முற்றாகப் புறந்தள்ளவும் வேண்டியதில்லை.

நாம் மனித உரிமை மீறல்களைக் கண்டு உணர்ச்சி வயப்படக் கூடியவர்கள். அந்த உணர்ச்சிவயம்தான் நம்மை இந்தப் பணிக்கு இட்டுச் சென்றுள்ளது. இந்த உணர்ச்சி வயத்தை நாம் நம் அறிக்கையில் வெளிப்படுத்தாமலும் இருக்க முடியாது. வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டியதும் இல்லை. ஒரு மிகப் பெரிய மனிதத் துயரம் நம் கண்முன் விரிந்து கிடக்கும்போது நாம் எப்படி உணர்ச்சிவயப்படாமல் இருக்க இயலும்? நாம் எப்படி அதிலிருந்து விலகி நின்று எதையும் பேச இயலும்? நாம் அந்தத் துயரத்தோடும் துயரர்களோடும் நம்மை அடையாளப்படுத்திக் கொண்டுதான் எழுத முடியும். நாம் பாதிக்கப்பட்டவர்களோடு நம்மை அடையாளப்படுத்திக் கொள்வதா இல்லை, உண்மைகளைக் கண்டறிவதற்காகவும் சொல்வதற்காகவும் நம்மை அவர்களிடமிருந்து தூரப்படுத்திக் கொள்வதா என்பதல்ல பிரச்சினை. எப்படி இந்த இரண்டு நிலைகளையும் ஒரு புள்ளியில் குவிப்பது என்பதுதான் ஒரு மனித உரிமை எழுத்தாளனின் முன் உள்ள சவால். மிகவும் புறவயமாக விலகி நின்று எழுதும்போது அது வரட்டுத்தனமாக மட்டுமல்ல அது அடிப்படை மனித நேய நெறிகளுக்கு எதிரானதாகவும் அமையும்; அதே நேரத்தில் வெறும் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து எழுதும்போது அது உண்மையற்றும் திரிக்கப்பட்டதாகவும் போய்விடக் கூடும்.

அதேபோல கோரிக்கைகளை வைக்கும்போது அவை உச்சபட்சமாக இருக்கும் அதே நேரத்தில் அவை காரிய சாத்தியமானதாகவும், நடைமுறையில் உள்ள எல்லைகளுக்கு உட்பட்டதாகவும் அந்த எல்லைகளைக் கடக்க முயல்வதாகவும் அமைதல் அவசியம்.

இந் நூலிலுள்ள அறிக்கைகள் அனைத்தும் இந்த வகையில் எழுதப்பட்டவை என நான் உரிமை கோரவில்லை. ஆனால் அதே நேரத்தில் இந்த லட்சியங்களுக்கு மிகவும் நெருக்கமாக முன்னேறிச் செல்வதுதான் எங்கள் நோக்கம். எந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினரது மனித உரிமை மீறல்களையும் பேசுவது என நாங்கள் எங்களை குறுக்கிக் கொள்ளவில்லை. எங்கள் அறிக்கைகளில் பலவும் தலித்கள் மற்றும் முஸ்லிம்களின் பாதிப்புகளைப் பேசுவதாக அமைவதென்பது இன்றைய சமூக எதார்த்தத்தின் பிரதிபலிப்புத்தான். அவர்களே அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அதற்காக் நாங்கள் கான்சாபுரம் கிட்டப்பாக்களின் பிரச்சினைகளை விட்டுவிடுவதுமில்லை.

இப்போதெல்லாம் ஊடகங்களில் பெரிதும் பேசப்படும் பிரச்சினைகளுக்கு மட்டும் ஏராளமான மனித உரிமை அறிக்கைகள் வெளிவருவது, அப்படிப் ‘பிரபலமாகாத’ பிரச்சினைகள் கண்டு கொள்ளப்படாமல் இருப்பது என்கிற ஒரு நிலை ஏற்பட்டு வருவதையும் கவனிக்கலாம். நாங்கள் இந்த அம்சத்திலும் எச்சரிக்கையாக இருக்க முயல்கிறோம்.

மனித உரிமைப் பணி என்பது அவ்வளவு புகழுக்குரிய பணி அல்ல. நிறைய உழைப்பையும் செலவையும் கோரும் பணி. நிறைய எதிர்ப்புகளைச் சம்பாதிக்கக் கூடிய பணியும் கூட. இந்தப் பணியில் ஈடுபாட்டுடன் தங்களை ஆட்படுத்திக் கொள்ளும் தோழர்களுக்கு என் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் சொல்லிக் கொள்கிறேன். பலநேரங்களில் சில நல்ல அதிகாரிகள் எங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைத்துள்ளார்கள். அதேபோல எங்கள் அறிக்கைகளை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளன. நீதிமன்றங்கள், மனித உரிமை ஆணையங்கள் முதலியனவும் எங்களின் அறிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளன. எல்லோருக்கும் நன்றிகள்.

அ.மார்க்ஸ்,

பிப் 09, 2016

தலைவர், மனித உரிமை அமைப்புகLiன் தேசியக் கூட்டமைப்பு (NCHRO)

சென்னை

 

விழுப்புரம் செந்தில் கை கால் துண்டிப்பு

விழுப்புரம் செந்தில் கை கால் துண்டிப்பு – உண்மை அறியும் குழு அறிக்கை

விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள அசோக்நகரில் வசித்து வந்த ஓட்டுனர் செந்தில் (வயது 28, த/பெ கணேசன்) என்பவரின் வலது காலும் கையும் துண்டிக்கப்பட்ட செய்தி இந்த மாதத் தொடக்கத்தில் தமிழக அளவில் பிரச்சினையாகியது. செந்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் உள்ள தோகைப்பாடி கிராமத்தில் வசிக்கும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த அங்கப்பன் மகளைத் (வயது 17) தான் காதலித்ததாகவும், அந்தக் காரணத்திற்காகவே சென்ற ஏப்ரல் 16 அன்று இரவு 8 மணி வாக்கில் தான் தலையில் தாக்கப்பட்டு கை கால்கள் துண்டிக்கப்பட்டு மாம்பழப்பட்டு ரயில்வே கேட் அருகில் உள்ள ரயில் பாதையை ஒட்டிய புதரில்  வீசப்பட்டதாகவும் சென்ற ஜூலை 3 அன்று மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் அவர் புகார் அளித்தவுடன் இப்பிரச்சினை பரபரப்பானது.

கடந்த சில ஆண்டுகளாக இப்படி சாதி மீறிய காதல்களுக்கு எதிராக இங்கு பா.ம.க முதலான கட்சிகள் வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்வதும், தலித்கள் தவிர்த்த இதர ஆதிக்க சாதிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்துவதும், சாதி அமைப்புகள் காதலர்களை, அதிலும் குறிப்பாக காதலிக்கும் ஆண் தலித்தாக இருக்கும் பட்சத்தில் அவர்களை வன்முறையாகப் பிரிப்பதற்கென கண்காணிப்பு அமைப்புகளை உருவாக்குவதும் சமூக அமைதியை நாடுவோர் மத்தியில் ஆழ்ந்த கவலையை உருவாக்கியுள்ளது. தருமபுரி இளவரசன், நாமக்கல் கோகுல்ராஜ் முதலானோர் இவ்வாறு பிரிக்கப்பட்டுப் பின் ரயில் பாதை அருகில் தலை துண்டிக்கப்பட்டுக் கிடந்த சம்பவங்கள் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ள பின்னணியில் விழுப்புரம் செந்தில் தானும் ஒரு தலித் என்பதாலும் ஒரு வன்னியர் பெண்ணைக் காதலித்ததாலும் இவ்வாறு கை, கால் துண்டிக்கப்பட்டு ரயில் பாதை ஓரத்தில் வீசப்பட்டதாகக் குற்றம் சாட்டியது எல்லோரது கவனத்தையும் ஈர்த்ததில் வியப்பில்லை.

ஆனால் அடுத்த சில நாட்களில் இப் பிரச்சினையில் ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரிக்க காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பீமராஜ் மேற்பார்வையில் விழுப்புரம் மேற்கு காவல்நிலைய ஆய்வாளர் .அண்ணாதுரை தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து செய்தி வெளியிடப்பட்ட அதே நேரத்தில் (ஜூலை 5), காவல்துறை தரப்பில் இன்னொரு அறிக்கையும் வெளியிடப்பட்டது. தோகைப்பாடி கிராமத்தில் செந்தில் குறிப்பிடும் பெயரில் ஒரு பெண்ணே இல்லை எனவும், செந்திலை அப்படி யாரும் காதலித்ததற்காக ஆதாரம் இல்லை எனவும், செந்தில் மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பதாகவும், அவர் பெயர் ‘போக்கிரிகள் பட்டியலில்’ இருப்பதாகவும் குறிப்பிட்ட காவல்துறையின் அறிக்கை செந்திலுக்கு ஏற்பட்டது ஒரு ரயில் விபத்துதான் என்கிற பொருளில் அமைந்திருந்தது. இது மீண்டும் தமிழக அளவில் கவனத்தை ஈர்த்தது.

ஒருபக்கம் இது சாதி வெறியர்கள் காதலர்களைப் பிரிப்பதற்காகச் செய்த திட்டமிட்ட வன்முறை எனவும், இன்னொரு பக்கம் செந்தில் தரப்பு சொல்வது பொய் எனவும் இரு கருத்துக்கள் இப்போது மேலெழுந்துள்ளன.

இந்நிலையில் இது குறித்த உண்மைகளை அறிய கீழ்க்கண்டவாறு ஓர் உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.

1. பேரா. அ. மார்க்ஸ், தலைவர்,  மனித உரிமைகளுக்கான  தேசியக் கூட்டமைப்பு (National Confederation of Human Rights Organisationas – NCHRO), சென்னை,

2. கோ. சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (Federation for Peoples Rights – FPR), புதுச்சேரி.

3. இரா. முருகப்பன், (இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் -SASY), திண்டிவனம்,

4. பி.வி.ரமேஷ், மக்கள் பாதுகாப்புக் கழகம், விழுப்புரம்,

5. இரா. பாபு, மனித உரிமை ஆர்வலர், கடலூர்,

6. முகிலன், மக்கள் சனநாயக குடியரசுக் கட்சி,

7. கு.கோ.சாக்ரடீசு, திராவிடர் விடுதலைக் கழகம், விழுப்புரம்.

8. வி.செந்தில், சமூக ஆர்வலர், திண்டிவனம்,

இக்குழுவினர் முழுமையாகவும் பிரிந்தும் சென்ற ஜூலை 7,10,11 ஆகிய தேதிகளில் விழுப்புரம் சென்று சகல தரப்பினரையும் சந்தித்தோம். சிகிச்சைக்குப் பின் தற்போது கே.கே.சாலை சுடுகாடு அருகில் ஒரு வாடகை வீட்டில் தங்கியுள்ள செந்திலை இருமுறை சந்தித்தோம். அவரது விதவைத் தாய் ஆதிமா, கை கால் துண்டிக்கப்பட்ட நிலையில் செந்திலை மருத்துவ மனைக்கு இட்டுச் சென்ற அவரது தம்பி ராஜசேகர், வேற்றுசாதிப் பெண்ணைக் காதலித்ததற்காக செந்திலின் கை கால் வெட்டப்பட்டது எனும் பொருளில் புகார்க் கடிதம் எழுதிக் கொடுத்த வழக்குரைஞர் பிரபு ஆகியோரிடமும் பேசினோம்.

செந்திலைக் காதலித்ததாகச் சொல்லப்படும் பெண், அவரது தந்தை அங்கப்பன், அம்மா நாகம்மாள் ஆகியோரையும் அவர்கள் வீட்டிற்கும் இரு முறை சென்று விரிவாகப் பேசினோம். சம்பவம் நடந்த அன்று தன்னை இரும்புக் கம்பியால் மண்டையில் அடித்து மயக்கமடையச் செய்து தன் கை கால் துண்டிக்கப்பட்டதற்குக் காரணமானவர் என செந்திலால் குற்றம் சாட்டப்படும் பால்காரர் சிவப்பிரகாசத்துடன் (பெண்ணின் மாமா) தொலை பேசியில் உரையாடினோம்.

சம்பவம் நடந்த அன்று கை கால் துண்டிக்கப்பட்டுக் கிடந்த செந்திலை முதன் முதலில் கண்ட இந்திரா நகரைச் சேர்ந்த பெயின்டர் அய்யப்பன், ஆம்புலன்சுக்கு (108) போன் செய்து வரவழைத்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன் ஆகியோரையும் சந்தித்து விரிவாகப் பேசினோம். செந்தில் ஓட்டுனராகப் பணி செய்த ‘ஆண்டவர் பஸ்’ லீஸ் உரிமையாளர் ரவியையும் விசாரித்தோம்.

சம்பவம் நடந்த இடத்திற்கு அருகிலுள்ள மாம்பழப்பட்டு ரயில்வே கேட்டில் பணியிலிருந்த கணபதியைச் சந்தித்து, சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த ‘டிராக் மேன்’ ரிதீஷ் அது தொடர்பாக அனுப்பிய தகவல் கடிதப் பிரதியைப் பெற்றுக் கொண்டோம். சம்பவ தினத்தன்று காட்பாடியிலிருந்து விழுப்புரம் செல்லும் அந்தப் பாசஞ்சர் ரயில் (எண்: 56885), சம்பவ இடத்தை 40 கி.மீ வேகத்தில் இரவு 08.40 மணி அளவில் கடந்தது என்பதையும் அவரிடமிருந்து அறிந்து கொண்டோம்.

இறுதியாக இது குறித்து விசாரித்து வரும் தனிப்படைத் தலைவர் ஆய்வாளர் அண்ணாதுரையிடம் எங்கள் குழுவினர் விரிவாகப் பேசினர்.

பத்திரிகையாளர்கள் சிலரும், தமிழ் வேங்கை, இளங்கோ முதலான அப்பகுதியில் இயக்கப் பணி புரிவோரும் தங்களுக்குத் தெரிந்த சில தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

சம்பவம் நடந்த மாம்பழப்பட்டு ரயில் கேட் அருகில் உள்ள இடத்திற்கு இரு முறை சென்று பார்வையிட்டோம். அப்பகுதி மக்கள் இயற்கை கடன்களைத் தீர்த்துக் கொள்ளும் பகுதியாகவும், குடிப்பவர்களுக்கு மது அருந்தும் இடமாகவும் அது உள்ளது. 

நடந்த சம்பவம் 

இது குறித்து முன்வைக்கப்படும் இரு எதிர் எதிரான கருத்துக்கள்:

1. செந்தில் தரப்பில் சொல்லப்படுவது:

செந்தில் அந்தப் பெண்ணை இரண்டாண்டுகளாகக் காதலிப்பதாகச் சொல்கிறார். அதாவது அந்தப் பெண்ணும் 10ம் வகுப்பு (அப்போது வயது 15) படிப்பதிலிருந்து தன்னைக் காதலிப்பதாகவும், தான் பொட்டு, அலங்காரப் பொருட்கள் முதலான சிறு சிறு பரிசுப் பொருட்களெல்லாம் வாங்கித் தந்துள்ளதாகவும். அந்தப் பெண்ணும் தினசரி பூ கொண்டு வந்து தான் ஓட்டும் மினி பஸ்சில் உள்ள சாமி படத்துக்குப் போட்டுச் செல்வாள் எனவும் சொல்கிறார். ஆனால் கடந்த 6 மாத காலமாக அந்த வீட்டாரின் வற்புறுத்தலால் தன்னிடம் அவள் பேசுவதில்லை என்றார். முன்னதாக பெண்ணின் வீட்டருகில் உள்ள கோவிலை ஒட்டி அவர்கள் சந்தித்துப் பேசுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். அப்பெண் தன்னை சந்திக்க மறுத்த கடைசி ஆறு மாதத்தில் தான் பல முறை அவர்கள் வீட்டுப் பக்கம் சென்றது உண்மைதான் எனவும் அதை ஒட்டி அப் பெண்ணின் தாய்மாமனுக்கும் தனக்கும் ஒரு தள்ளு முள்ளு வந்ததாகவும், அந்த அடிப்படையில் சுமார் மூன்று மாதங்களுக்கு முன் ஒரு முறை (மார்ச் 17, 2015) தாய் மாமன் கொடுத்த புகாரில் தான் 11 நாட்கள் ரிமான்ட் செய்யப்பட்டுப் பின் நிபந்தனை ஜாமீனில் தினசரி காவல் நிலையத்திற்குச் சென்று கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்ததையும் ஒத்துக் கொள்கிறார்.

நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த பின்னும் ஒரு முறை தன் மீது புகார் கொடுக்கப்பட்டுத் தானும் தன் அம்மாவும் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டோம் எனவும் அங்கு இனிமேல் எந்தத் தொந்தரவும் கொடுப்பதில்லை எனத் தான் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து வந்ததாகவும் சொல்கிறார். அச்சமயத்தில் அங்கிருந்த பெண்ணின் மாமன் சிவப்பிரகாசம். “உன்னைக் கை காலை வெட்டாமல் விடமாட்டேன்” என எச்சரித்ததாகவும் உடன் செந்திலின் தாய் அவர்கள் காலில் விழுந்து ‘இனி எதுவும் நடக்காது, அப்படிச் செய்துவிடாதீர்கள்’ எனக் கெஞ்சியதாகவும் தாய், மகன் இருவரும் கூறினர்.

அடுத்த நாள், அதாவது சம்பவம் நடந்த ஏப்ரல் 16, 2015 அன்று காலைமுதலே தான் குடிக்கவில்லை எனவும், மாலை 8 மணி அளவில் மாம்பழப்பட்டு எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ் அருகில் உள்ள இரட்டைத் தென்னை மரங்கள் அருகில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த அந்தப் பெண்ணின் மாமன் சிவப்பிரகாசம், “பறப் பயல் உனக்கு கவுண்டர் பொண்ணு கேக்குதா” எனச் சொல்லிக் கொண்டே ஒரு இரும்புத் தடியால் தலையில் ஓங்கி அடித்ததாகவும், தான் மயங்கி விழுந்து விட்டதாகவும் அதன் பின் சுமார் இரண்டு வாரம் கழித்துக் கண் விழித்தபோது தான் கால், கை துண்டிக்கப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் இருந்ததாகவும் செந்தில் கூறினார்.

தலையில் அடித்துப் பின் கை, கால் துண்டிக்கப்பட்டதைத் தான் தெரிந்திருந்தாலும் தானும் தாயும் புதுச்சேரியில் இருந்து (ஏப்ரல் 17 முதல் ஜூன் 31 வரை) வைத்தியம் பார்ப்பதிலேயே கவனம் செலுத்தியதால்தான் உடனடியாகப் போலீசில் புகார் கொடுக்கவில்லை என்றார் செந்தில். அவரது அம்மாவும் அதையே சொன்னார்.

ஏற்கனவே ‘பெண்கள் வதைத் தடுப்பு’ வழக்கொன்றில் தனக்கு இரண்டாண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு அது மேல் முறையீட்டில் உள்ளதென்பதை ஏற்றுக் கொள்ளும் செந்தில், “ஆனால் அது முழுவதும் ஒரு பொய் வழக்கு” என்றார்.

நாங்கள் விடை பெறும்போது, “என்னைக் காதலிக்கலன்னு அந்தப் பொண்ணு பொய் சொன்னாலும் அது பத்திக் கவலை இல்லை. அது யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு நல்லா இருக்கட்டும். ஆனா என்னை இந்தக் கதிக்கு ஆளாக்கினவங்களை மட்டும் சும்மா விடக் கூடாது” என்றார்.

2. இனி பெண் தரப்பில் சொல்வது:

இரண்டாண்டுகளாகத் தான் அந்தப் பையனைக் காதலிப்பதாகச் சொல்வது பச்சைப் பொய் என்று அந்தப் பெண் மறுத்தார். இல்லை நீங்கள் இருவரும் விரும்பிப் பழகியதாகச் சொல்லப்படுகிறதே என இரண்டாம் முறை நாங்கள் கேட்டபோது அந்தச் சிறு பெண் முகத்தில் கோபமும் அழுகையும் கொப்பளித்தது. இதுவும் ஒரு ஏழைக் குடும்பந்தான். அந்தப் பகுதியில் வன்னியர் குடும்பங்கள் 5 மட்டுமே உள்ளதாகச் சொன்னார்கள் . தலித்களும் வன்னியர்களும் சேர்ந்து வாழ்கிற பகுதி அது. தான் எப்போதும் அந்த மினி பஸ்சில் தான் பள்ளிக்குப் போய் வருவதாகவும் கடந்த ஆறு மாத காலமாக அந்தப் பையன் செந்தில் தன்னை ரொம்பத் தொல்லை செய்ததாகவும் அந்தப் பெண் கூறினார். விழுப்புரம் காந்தி சிலையிலிருந்து செந்தில் தன்னைப் பின் தொடர்ந்து ஒரு நாள் வந்ததாகவும், மற்றொரு நாள் பஸ்சிலேயே பின்னால் உட்கார்ந்து பேசிக் கொண்டு வந்ததாகவும், இறங்கும்போது, “செருப்பால் அடிப்பேன்” எனத் தான் சொல்லிவிட்டு இறங்கியதாகவும் கூறினாள். தனக்குப் பரிசுப் பொருள் எல்லாம் தந்ததாகச் சொல்வது பொய் எனச் சொன்னபோது அப் பெண்ணுக்கு மறுபடியும் கோபம் வந்தது.

பிரச்சினை இப்படியான பிறகு செந்தில் குடித்துவிட்டு அப் பெண்ணின் வீட்டு வாசலில் வந்து படுத்திருப்பது, வீட்டுக்குப் பின்னே உள்ள ரயில் பாதையில் வந்து உட்கார்ந்து கொள்வது என்பது தொடர்ந்துள்ளது. ஒரு முறை இது தொடர்பாக அப் பெண்ணின் மாமன் முறையுள்ள பால்காரர் சிவப்பிரகாசம் வழியில் கோபமாகப் பேச ஒரு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. தன் பால் வண்டியை செந்தில் தள்ளி உடைத்துவிட்டதாக சிவப்பிரகாசம் புகார் கொடுத்து செந்தில் கைது செய்யப்பட்டு 11 நாள் ரிமான்ட் செய்யப்பட்டுள்ளார். நிபந்தனை ஜாமீனில் வந்த பின்னும் செந்தில் இப்படிப் பிரச்சினை செய்யவே மீண்டும் போலீசில் புகார் கொடுத்ததாகவும், போலீஸ் கூப்பிட்டு விசாரித்தபோது இனி அப்படிச் செய்வதில்லை என செந்தில் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததாகவும், அவரது தாய் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டதாகவும் கூறினர்.

ஏப்ரல் 16ந் தேதியன்று மாலையில் மாம்பழப்பட்டு எக்ஸ்சேஞ்ஜ் அருகில் இரும்புக் கம்பியால் செந்திலை அடித்தது, அவரது கை, காலை வெட்டியது என்பதெல்லாம் முழுப்பொய் என சிவப்பிரகாசமும் அந்தப் பெண்ணின் பெற்றோரும் கூறினர்.

 எமது பார்வைகள்

  1. கடந்த ஆறு மாதகாலமாக இந்தப் பெண்ணை செந்தில் தொடர்ந்த நிலையில் செந்திலுக்கும் பெண்ணின் குடும்பத்தாருக்கும் பகை இருந்துள்ளது உண்மை. செந்தில் அப் பெண்ணிடம் அத்து மீறி நடந்து கொண்டதை மற்றவர்களும் உறுதிப் படுத்துகின்றனர். செந்தில் மீது இந்தப் புகார் வந்தவுடன் தான் விசாரித்து உறுதி செய்து செந்திலை வேலையை விட்டு நிறுத்திவிட்டதாக ஆண்டவர் பஸ்சை லீஸ் எடுத்து நடத்தும் ரவி கூறினார். மூன்றாண்டுகளாக செந்தில் தன்னிடம் வேலை செய்தாலும் மூன்றாண்டும் மினி பஸ் ஓட்டுனராக அவர் தொடர்ந்து இருந்ததில்லை என்றும், இடையில் அவர் அவ்வப்போது வேலையை விட்டு நிற்பது, அல்லது தங்கள் நிறுவன லாரிகளை ஓட்டுவது என இருந்தவர்தான் செந்தில் என்றார்.
  2. கடந்த ஆறுமாதத்தில் இரு தரப்பினருக்கும் இருந்த பிரச்சினைகள், வழக்குகள் ஆகியவற்றைப் பொருத்த மட்டில் இரு தரப்பினர் சொல்வதும் ஒன்றாகவே உள்ளன. வேறுபடும் புள்ளி ஒன்றுதான். அந்தப் பெண்ணுக்கும் செந்திலுக்கும் இடையில் விருப்பபூர்வமான காதல் இருந்தது என செந்தில் தரப்பில் சொல்லப்படுகிறது. பெண்ணும் அவளது பெற்றோரும் அதை முற்றாக மறுக்கின்றனர். அந்தப் பெண்ணுக்குத் தன் மகன் ஆயிரம், இரண்டாயிரம் எனச் செலவழித்ததாக பெண்ணின் தாய் குறிப்பிட்டார். செந்திலிடம் நாங்கள் கேட்டபோது பொட்டு, பூ, என சிறு சிறு பண்டங்கள் என்று வாங்கித் தந்ததாகத்தான் எங்களிடம் கூறினார். அந்தப் பெண்ணோ கோபத்தோடு அதை மறுத்தாள். இதில் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும், இந்த கல்லூரி நேர பஸ் பயணம் என்பது மாணவர்களுக்கு ஒரு கொண்டாட்டமான அனுபவம். ஓட்டுநர், நடத்துநர் என்பவர்களோடு மாணவர்களின் உறவு மிக அந்நியோன்யமாக இருக்கும். மாணவர்களின் பெயரைச் சொல்லி நடத்துநர் கூப்பிடுவார். என்ன ரெண்டு நாளா காணோம் எனக் கேட்பார். இந்த டிரஸ் நல்லாருக்கே என்பார். மாணவிகள் பஸ்சில் உள்ள சாமி படத்திற்குப் பூ கொண்டு வந்து போடுவார்கள். பஸ்சில் ஜாலியான பாடல்கள் அந்த நேரத்தில் ஒலிக்கப்படும். மாணவர்களே ஒரு பென் டிரைவைக் கொண்டு வந்து இந்தப் பாட்டைப் போடு என்பார்கள். ஆண்டு இறுதியில் ‘பஸ் டே’ கொண்டாட்டம் கோலாகலமாக இருக்கும். இப்படியான பின்னணியில் எத்தகைய நட்பு செந்திலுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே இருந்தது என்பதை எளிதாகச் சொல்ல இயலாது. இதில் தவறுதலாகப் புரிந்து கொள்ளப்படுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உண்டு. அதோடு அந்தப் பெண்ணின் வயது மிகவும் குறைவு என்பதும் கருதத் தக்கது.
  1. மருத்துவமனைச் சேர்க்கை, ரயில்வே ட்ராக் மேன் குறிப்பு என சம்பவத்திற்குப் பின் உள்ள அனைத்து ஆவணப் பதிவுகளும் இது ஒரு ரயில் விபத்து என்றே சொல்கின்றன. தாய்க்கும் மகனுக்கும் எப்படியாவது குணமாகித் திரும்புவதொன்றே கவலையாக இருந்ததால் டிஸ்சார்ஜ் ஆகி வரும் வரை புகார் கொடுப்பது பற்றிச் சிந்திக்க நேரமில்லை எனச் சொல்லப்படுகிறது. ஆனால் இப்படியான ஒரு மிகப்பெரிய தாக்குதல் நடந்து, இழப்பு ஏபட்டுள்ளபோது புகார் கொடுப்பதற்கும் அவர்கள் நேரம் செலவிட்டிருக்க முடியும். மகனருகில் தாய் இருக்க வேண்டிய அவசியம் இருந்த போதிலும் செந்திலின் தம்பி ராஜசேகர், மைத்துனர் ரஞ்சித் ஆகியோர் இதைச் செய்திருக்க இயலும். தவிரவும் கை கால் துண்டிப்புக்குப் பின் செந்தில் முழுமையாக நினைவற்று இருக்க வில்லை, அவர் சத்தம் போட்டுக் கொண்டும், புலம்பிக் கொண்டும் இருந்ததை கூட இருந்தவர்கள் சொல்லுகின்றனர்.
  1. செந்தில் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்தபின் இந்தச் செய்தி கேள்வ்விப்பட்டு புகார் எழுதித் தந்த வழக்குரைஞர், தான் செந்தில் சொன்னவற்றை முதலில் முழுக்க நம்பியதாகவும், போகப் போக அதில் பல முரண்கள் தென்பட்டதால் அவர் தொடர்பைத் துண்டித்துக் கொண்டதாகவும் கூறுகிறார். சிவப்பிரகாசம் இரும்புத் தடியால் தலையில் தாக்கி செந்திலை மயக்கமடையச் செய்தது என்பதில் உள்ள “இரும்புத்தடி” என்பதெல்லாம் புகாருக்காக சேர்க்கப்பட்டது என அவர் கூறினார்.
  1. இரவு எட்டு மணி அளவில் மாம்பழப்பட்டு எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ் பக்கம் உள்ள இரட்டைத் தென்னை மரம் அருகில்தான் தன்னை சிவப்பிரகாசம் இரும்புக் கம்பியால் தாக்கி மயக்கமடையச் செய்தார் என்கிறார் செந்தில். இந்த இடம் விழுப்புரம் – திருக்கோவிலூர் சாலையில் உள்ளது. அருகில் ரயில்வே கேட். ஆள் நடமாட்டம் உள்ள பகுதி அது. இங்கே ஒருவரை தலையில் அடித்து வீழ்த்திக் கடத்திச் சென்றதை யாரும் பாக்கவில்லை எனச் சொல்வது நம்பும்படியாக இல்லை. அவர் அடித்து வீழ்த்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட இடத்திலிருந்து கை கால் துண்டிக்கப்பட்டுக் கிடந்த இடம் குறைந்த பட்சம் 400 மீ தொலைவு இருக்கும். அவ்வளவு தொலைவில் உள்ள இடத்திற்கு மயக்கமடைந்து இருந்த செந்தில் எவ்வாறு கொண்டு செல்லப்பட்டார், யாரும் அதைப் பார்க்கவில்லையா என்கிற கேள்விகள் உள்ளன. தவிரவும் செந்தில் கை கால் துண்டிக்கப்பட்டு விழுந்து கிடந்த இடம் அப்பகுதி மக்கள் இயற்கைக் கடன்களைக் கழிக்கும் பகுதி. அதுதான் குடிப்பவர்கள் சந்தித்து மது அருந்தும் இடமும் கூட. அந்தப் பகுதியில் ஒருவரைக் கொண்டு வந்து ரயில் பாதையில் போடுவது அல்லது அங்கு கொண்டு வந்து வெட்டப்பட்ட பாகங்களையும் வெட்டப்பட்ட ஒருவரையும் தூக்கி எறிவது என்பதெல்லாம் நம்பற்குரியனவாக இல்லை.
  1. செந்தில் உடல் உறுப்புகள் துண்டாடப்பட்டுக் கிடப்பதைக் கண்டு ஆம்புலன்சுக்குப் போன் பண்ணிய ஆட்டோ டிரைவர் மணிகண்டனை நாங்கள் தேடிக் கண்டுபிடித்தோம். இயற்கைக் கடன்களைத் தீர்ப்பதற்காக ரயில் பாதை அருகே அப்போதுதான் அமர்ந்த அவரை இந்திரா நகரில் வசிக்கும் பெயின்டர் அய்யப்பனின் குரல் எழுப்பியிருக்கிறது. “இங்கே ஒரு ஆள் ரயிலில் அடிபட்டுக் கிடக்கிறான். யாராவது செல் போன் இருந்தால் குடுங்க.. “ என கத்திக் கொண்டு அய்யப்பன் ஓடி வந்துள்ளார். மணிகண்டன் போய்ப் பார்த்தபோது இரண்டு தண்டவாளங்களுக்கும் இடையில் வெட்டுண்ட உடற்பாகங்களின் சிதறல்களும் கொழுப்புகளும் கிடந்துள்ளன. மணிகண்டனின் செல்லிலிருந்து 108 ஆம்புலன்சுக்குப் போன் செய்யப்பட்டுள்ளது.. அய்யப்பன் தவிர வேறு யார் அப்போது அங்கிருந்தனர் என்ற போது சரத், தங்கதுரை ஆகியோர் இருந்ததாக மணிகண்டன் சொன்னார். மிகவும் சிரமப்பட்டு அய்யப்பனை அடுத்த நாள் எங்கள் குழு கண்டுபிடித்தது, “நான் செல் போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டு டாய்லட் போயிட்டு இருந்தேன். அப்ப ரயில் போச்சு. ரயில் கடந்தவுடன் யாரோ ‘அடிபட்டுட்டேன். காப்பாத்துங்கன்’னு சத்தம் போடுறது கேட்டது. ஓடிப் பார்த்தபோது தண்டவாளங்களுக்கு இடையில் செந்தில் அடிபட்டு உடல் பாகங்கள் சிதறிய நிலையில் கிடந்தார். அப்போது எதிரே வேல்முருகன் ஓடி வந்தார். ‘ரயில்ல அடிபட்டுக் கிடாக்கிறார். முதல்ல டிராக்மென் கிட்ட ஓடிச் சொல்லுங்க’ ன்னு அவர் சொன்னார். நான் ஓடிச் சொல்லிட்டு வர்றதுக்குள்ள செந்தில் தண்டவாளத்துக்கு வெளியில உருண்டு கிடந்தார்.” தான் முதலில் பார்த்தபோது செந்தில் கை, கால் துண்டிக்கப்பட்டு தண்டவாளங்களுக்கு இடையே கிடந்தார் என அவர் உறுதிபடச் சொன்னார். தண்டவாளங்களுக்கு இடையில் உடற் பிசிறுகள், கொழுப்புகள் கிடந்தன எனவும் கூறினார். காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த மருத்துவ உதவியாளரும் இதே போல “அந்த இடத்தில் உடல் கொழுப்புகள் சிதறிக் கிடந்தன எனவும் கை, கால்கள் நசுங்கிய நிலையில் சிதறிக் கிடந்தன“ எனவும் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அய்யப்பனின் கூற்று ஒத்துப் போகிறது.
  1. ஜிப்மர் மருத்துவமனை சேர்க்கைக் குறிப்பேட்டில், செந்தில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது அவரது உடல் காயங்களில் ரயில் கிறீஸ், எண்ணை முதலியவை காணப்பட்டன என மருத்துவர்கள் குறிப்பெழுதியுள்ளதாகவும், அது குறித்த மருத்துவ மனை அறிக்கையைத் தாங்கள் எதிர்பார்த்திருப்பதாகவும் இவ் வழக்கை விசாரிக்கும் ஆய்வாளர் அண்ணாதுரை குறிப்பிட்டார். ஜிப்மர் டாக்டர்களின் இக் குறிப்பை நாங்கள் பார்க்க இயலவில்லை.
  1. சம்பவம் நிகழ்ந்த அன்று ரயில்வே ட்ராக்மேன் அதிகாரிகளுக்கு அனுப்பிய குறிப்பில், “ஒரு 30 வயது மதிக்கத் தக்க ஆண் ரயிலில் அடிபட்டு கை கால் துண்டாகிக் கிடப்பதாக உள்ளூர் மக்கள் சொன்னதன் பேரில் தான் அங்கு சென்று பார்த்த பொழுது உள்ளூர் மக்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை சிகிச்சைக்கு அனுப்ப இருந்தனர்” என உள்ளது. விழுப்புரம் சந்திப்பில் உள்ள ரயில்வே காவல் நிலையத்திற்குச் சென்று விசாரித்தபோது அங்கு பணியில் இருந்த எஸ்.எஸ்,ஐ அசோகன், ரயிலில் அடிபட்டு யாரும் இறந்தால்தான் தாங்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வோம் எனவும். மற்றபடி இத்தகைய விபத்துகளை உள்ளூர் காவல்துறைதான் விசாரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
  1. செந்தில் குடும்பத்தாரிடம் புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர், “இது ரயிலில் அடிபட்டதால் ஏற்பட்ட விபத்து அல்ல. அரிவாளால் வெட்டப்பட்டுத் துண்டிக்கப்பட்டதால் ஏற்பட்ட காயங்கள்தான் இவை என ‘ஜிப்மர்’ மருத்துவமனையில் சான்றிதழ் வாங்கித் தருகிறேன் எனவும் அதைக் கொண்டு ஒரு நல்ல தொகையை இழப்பீடாகப் பெறலாம் எனவும் முதலில் செந்திலின் அண்ணனிடம் 10,000 ரூ பெற்றதாகவும், பின் அவரது அம்மாவிடம் மேலும் ரூ 2,000 பெற்றதாகவும் அறிந்தோம். இது குறித்து நாங்கள் செந்திலின் அம்மா ஆதிமாவிடம் விசாரித்தபோது முதலில் அவர் அப்படியெல்லாம் இல்லவே இல்லை என்றார். ஆனால் செந்திலிடம் அதைக் கேட்டபோது ஆம், அது உண்மைதான் என ஏற்றுக் கொண்டார். பின் மீண்டும் நாங்கள் செந்திலின் அம்மாவிடம் கேட்டபோது அவரும் அதை ஒத்துக் கொண்டார். அப்படி ஏமாற்றியிருப்பவர் பெயர் லோகநாதன் எனவும் அவர் புதுச்சேரியைச் சேர்ந்தவர் எனவும் ஐ.ஜே.கே கட்சியில் உள்ளார் எனவும் ஒருவர் கூறினார்.

முடிவாக

1. செந்திலின் கை கால் துண்டிக்கப்பட்டது ரயில் விபத்தால் ஏற்பட்டதுதான் என எங்கள் குழு உறுதியாகக் கருதுகிறது. இதன் பின் வேறு எந்தச் சதித் திட்டமும் இல்லை.

2. சாதி மீறிய திருமணங்களுக்கு எதிராக இன்று பெரிய அளவில் சாதி அமைப்புகளும், பா.ம.க போன்ற அரசியல் கட்சிகளும் இயங்குவதாலும், அதன் விளைவாக இன்று இப்படியான காதல் திருமணங்களில் தலித் இளைஞர்கள் கொல்லப்படுவதாலும் இது போன்ற பிரச்சினைகளில் சாதி ஆதிக்க சக்திகள்தான் இதைச் செய்திருப்பார்களோ என்கிற அய்யம் யாருக்கும் ஏற்படுவது இயல்புதான். அந்த வகையில் இதிலும் சில ஐயங்களை தனி நபர்களும், சில இயக்கங்களும் முன்வைக்கின்றன. செந்திலுக்கு ஏற்பட்டது விபத்தல்ல, அது திட்டமிட்ட தாக்குதல் என அவர்கள் கூறுகின்றனர். நாங்கள் இதை ஏற்கவில்லை. எனினும் இது ஒரு உணர்வு நுட்பம் மிக்க ஒரு பிரச்சினையாக உள்ளதால், இது குறித்து ஒரு இரண்டாவது கருத்தைப் (second opinion) பெறுவதுபோல சி.பி.சி.ஐ.டி போன்ற வேறொரு புலனாய்வு நிறுவனத்திடம் இந்த வழக்கை மேல்விசாரணைக்கு ஒப்படைக்கலாம். அந்தப் பெண்ணின் பெயர் செந்திலின் புகாரில் தவறாக உச்சரிக்கப்பட்ட ஒரே காரணத்தினாலேயே அப்படி ஒரு பெண்ணே இல்லை என இந்த வழக்கை விசாரித்த மேற்கு காவல் நிலையம் அறிவித்தது வழக்கை மூட நினைத்தது மிகப் பெரிய தவறு. எனவே மறு விசாரணை ஒன்றுக்கு உத்தரவிடலாம் என்பதை எங்கள் குழு வற்புறுத்துகிறது.

3. இது போன்ற பிரச்சினைகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக நிற்போர் மிகவும் விழிப்புணர்வுடன் சாதீய வன்முறைகளைக் கண்காணிப்பது அவசியம் என்கிற அதே நேரத்தில், தீர விசாரித்துக் களத்தில் இறங்குவதும் அவசியம்.

4. செந்திலின் தற்போதைய நிலை மிகவும் பரிதாபமானது. அவரது விதவை அன்னை 21 ஆண்டுகளுக்கு முன் இதே போல ஒரு ரயில் விபத்தில் தன் கணவரைப் பறி கொடுத்தவர். இந்த முதிய வயதில் அவர் மகன் இந்நிலைக்கு ஆளாகியிருப்பது கொடுமை, முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து செந்திலுக்கு உரிய இழப்பீடும் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர வாகனம் ஒன்றும் அளிக்க வேண்டும்.

இளவரசன் நினைவு நாளை ஒட்டிய கைதுகள் மற்றும் காவல்துறை அத்துமீறல்கள்

சென்னை, ஜூலை 9 2014

இந்த உண்மை அறியும் குழுவில் பங்குபெற்றோர்:

1. அ.மார்க்ஸ், மனிதஉரிமைகளுக்கானமக்கள்கழகம் (Peoples UNion for Human RIghts), சென்னை,

2. வி.சீனிவாசன், சமூகமற்றும்சுற்றுச்சூழல்ஆர்வலர், சென்னை,

3. பேராஜி.கே.ராமசாமி, மக்கள்ஜனநாயகமுன்னணி (Peoples Democratic Front), பெங்களூரு,

4. பேரா. சிவலிங்கம், ஸ்வாபிமானதலித்சக்தி (Swabimana Dalit Sakthi), பெங்களூரு,

5. வழக்குரைஞர் ஏ.சையதுஅப்துல்காதர், மனிதஉரிமைஅமைப்புகளின்தேசியக்கூட்டமைப்பு (National Confederation of Human Rights), மதுரை,

6. வினோத், சேவ்டமில்ஸ்இயக்கம் (Save Tamils Movement)), பெங்களூரு,

7. ஷ்ரீலா மனோகர், சமூக ஆர்வலர்,சென்னை.

தருமபுரி மாவட்டம், நாய்க்கன் கொட்டாய் நத்தம் காலனியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் ஆயுதப் போராட்ட அமைப்புகளில் இணைந்துள்ளதாகவும், இளவரசன் நினைவு நாளன்று அப்பகுதி வன்னிய சாதியைச் சேர்ந்த சில முக்கியமானவர்களைக் கொல்லச் சதி செய்ததாகவும், தற்போது கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து பயங்கரமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் மிகப் பெரிய அளவில் ஊடகங்களில் சென்ற மாத இறுதியில் செய்திகள் வெளிவந்தன. அதை ஒட்டி அதே வாசகங்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்களின் கண்டன அறிக்கையும் வெளி வந்தது. நத்தம் காலனி தலித் மக்கள் அக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்ததோடு காவல்துறை அத்துமீறல்களால் தாங்கள் துன்புறுத்தப் படுவதாகவும் கூறினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, பகுஜன் சமாஜ் கட்சி, மா-லெ இயக்கங்கள் ஆகியனவும் இக் கைதுகளைக் கண்டித்திருந்தன.

இந்நிலையில் இது குறித்த உண்மைகளைக் கண்டறியும் நோக்குடன் எமது குழுவினர் சென்ற ஜூலை 5 மற்றும் 8 தேதிகளில் தருமபுரி வந்திருந்து நத்தம் காலனி மக்களையும் அதிகாரிகளையும் சந்தித்தோம்.

கைது செய்யப்பட்டுள்ள துரையின் மனைவி செல்வி (37), சங்கர், அசோக் ஆகியோரின் சகோதரி சுமதி (27), சந்தோஷின் தாய் சாலம்மா, சக்தியின் மனைவி தமிழ்செல்வி, கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் உள்ளோர், கைது நடவடிக்கைகளின்போது நேரில் இருந்த வி.சி.க பொறுப்பாளர் பழனிச்சாமி மற்றும் பல நத்தம் காலனி மக்கள் ஆகியோரைச் சந்தித்து வாக்குமூலங்களைப் பெற்றுக் கொண்டோம். ஆயுதப் பயிற்சி அளித்ததாகக் காவல்துறையால் குற்றம் சாட்டப்படும் ‘துடி’ அமைப்பின் பொதுச் செயலாளர் பாரதி பிரபு, அதன் காப்பாளரும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான கிறிஸ்துதாஸ் காந்தி, இளவரசன் நினைவு நாளன்று கைது செய்யப்பட்ட வழக்குரைஞர் ரஜினிகாந்த், அன்று இரவு தாக்கப்பட்ட அவரது வாகனத்துடன் மற்றொரு வாகனத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோரைத் தொடர்புகொண்டு அவர்களது விளக்கங்களையும் பெற்றுக் கொண்டோம்.

மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை ஆகியவற்றின் கருத்துக்களை அறிவதற்காக ஜூலை 5 அன்று முழுவதும் முயன்றும் ஆட்சியர் மற்றும் கண்காணிப்பாளரைச் சந்திக்க இயலவில்லை. ஒரு ஐந்து நிமிடச் சந்திப்புக்கு அனுமதி வேண்டிப் பலமுறை வேண்டியும் இருவரும் பதிலளிக்கவில்லை. வீடுகளுக்குச் சென்று அனுமதி கேட்ட போதும் சாத்தியமாகவில்லை. மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு வேலைச் சுமை இருக்கத்தான் செய்யும் என்பதை ஏற்று, எங்களுக்குச் சிரமமாயினும் மீண்டும் எல்லோரும் நேற்று தருமபுரி சென்று இருவரையும் சந்திக்க முயன்றோம். வழக்கமாக விரிவாகப் பேசக் கூடிய கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் அவர்கள் “இது தொடர்பாக நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. எனது புலனாய்வு அதிகாரியைச் சந்தியுங்கள்” என்பதோடு முடித்துக் கொண்டார். புலனாய்வு அதிகாரியான கிருஷ்ணஅபுரம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) காந்தி அவர்களிடம் தொடர்பு கொண்டபோது அவர், தான் கஸ்டடியில் உள்ள கைதிகளின் விசாரணையில் உள்ளதாகவும் தன்னை இப்போது சந்திக்க இயலாது எனவும் பதில் அளித்தார். நாளையேனும் சில நிமிடங்கள் பேச அனுமதி கோரி, மீண்டும் இன்று காலை நாங்கள் தொடர்பு கொண்டோம். “முதல்நாள் இரவே எல்லோரையும் கைது செய்துவிட்டு அடுத்த நாள் அவர்கள் கையில் பயங்கர ஆயுதங்களுடன் கொலை செய்யச் சென்றபோது பிடித்ததாகப் பொய் வழக்கு போட்டுள்ளீர்களே” என முதல் கேள்வியைக் கேட்டவுடனேயே, அதை மறுக்காமல், “இதெல்லாம் நேரிலதான் பேச முடியும். இப்ப எனக்கு ஆயிரம் வேலை இருக்கு. தாங்க்ஸ்” எனச் சொல்லி தொடர்பைத் துண்டித்தார்.

கைது செய்யப்பட்டுச் சிறையில் இருந்த சந்தோஷ், துரை, சக்தி ஆகியோரை ‘கஸ்டடி’ எடுக்கக் காவல்துறையினர் ஜூலை 5 அன்று தருமபுரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்தனர். அப்போது அவர்களைப் பார்க்க முடிந்தது எம் குழுவில் இருந்த வழக்குரைஞர் அப்துல் காதர் அவர்களிடம் உரையாடினார். நேற்று அவரும் சேலம் வழக்குரைஞர் அரிபாபுவும் சேலம் சிறையிலுள்ள அதியமான், அசோகன், மைகேல்ராஜ், திருப்பதி ஆகியோரைச் சந்தித்து அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து கொண்டனர். கைது செய்யப்பட்டோரின் வழக்குரைஞர்கள் தருமபுரி கபிலன், இராமமூர்த்தி ஆகியோரிடம் வழக்கு நிலை குறித்து விரிவாக விசாரித்தோம். நேற்று நத்தம் காலனிக்குச் சென்று மக்கள் எல்லோரையும் சந்தித்தோம்.

கைதுகள் குறித்துக் காவல்துறை சொல்வது

கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷின் வாக்குமூலத்தை முன்வைத்து தயாரிக்கப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் (எண் 122/2014, கிருஷ்ணாபுரம் காவல் நிலையம், நாள் 28.06.2014) கூறப்படுவது: 1.ஜூலை 28 அன்று காலை 5.00 மணி அளவில் நாய்க்கன் கொட்டாய் ஆரம்பப் பள்ளிக்கு அருகில் காவல்துறையினர் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த பொழுது ஒரு பல்சார் இரு சக்கர வாகனத்தில் வந்த சின்னப்பையன் மகன் சந்தோஷ் (22), சிவலிங்கம் மகன் அதியமான் (22), கோபால் மகன் சங்கர் (35) ஆகியோர் சந்தேகமான முறையில் தப்ப முயன்றனர். பிடித்து விசாரிக்கையில் பிடிபட்ட சந்தோஷ் தானாகவே முன்வந்து தாங்கள் அப்பகுதியைச் சேர்ந்த பா.ம.க தலைவரும் 2012 நத்தம் காலனித் தாக்குதலுக்கு முக்கிய காரனமானவராகத் தாங்கள் கருதுபவருமான மதியழகனைக் கொல்வதற்காக வீச்சரிவாள்களுடன் சென்றதை ஒத்துக் கொண்டு வாக்குமூலம் அளித்தார். 2. இளவரசன் நினைவு நாளன்று மதியழகனைக் கொலை செய்ய, சங்கர் சக்தி, துரை, அசோகன் எல்லோரும் சேர்ந்து சதித் .திட்டமிட்டு ஜூன் 28 காலை இரு குழுவாகப் பிரிந்து சென்றதாக ஒத்துக் கொண்டனர். இன்னொரு குழுவில் சங்கரின் சகோதரன் அசோக், ஊர்க்கவுண்டர் சக்தி, ஊர் முக்கியஸ்தர் துரை ஆகியோர் துப்பாக்கி வெடிகுண்டு சகிதம் கந்தன் குட்டை பக்கம் காத்திருந்தனர். பின்னர் இவர்களும் கைது செய்யப்பட்டனர். 3. இவர்களுக்கு இந்த ஆயுதங்கள் கிடைத்த பின்னணியாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்படுவது: 2012 தாக்குதலுக்குப் பின் நத்தம் காலனிக்குப் பலரும் வந்து ‘ஆறுதல்’ சொல்லிக் கொண்டிருந்தபோது தீவிரவாதிகளான காளிதாஸ், சந்திரா ஆகியோர் அங்கு வந்து, தீவிரவாத இயக்கங்களின் பின்னணியோடு ஆயுதப் பயிற்சி எடுப்பது மட்டுமே அவர்களுக்குப் பாதுகாப்பு எனக் கூறினர், 4. அந்த அடிப்படையில் ‘துடி’ அமைப்பின் மூலம் நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டாம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த 50 பேர்களுக்கு (27 பெயர்கள் அறிக்கையில் குறிப்பிடப் படுகின்றன.) 2013 தொடங்கி அரக்கோணம், சென்னை மெரினா பீச், கந்தன்குட்டை ஆகிய பகுதிகளில் பல்வேறு வகை ஆயுதப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 5. இறுதியில் காளிதாஸ் சந்திரா இருவரும் ஒரு நாள் இரவு நத்தம் காலனி வந்து இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், இரண்டு வீச்சரிவாள்கள்,மூன்று பைப் வெடிகுண்டுகள் ஆகிவற்றைத் தந்து சென்றனர். 6.ஆயுதப் பயிற்சி தொடங்கி வன்னிய சமுதாயத்தின் முக்கிய தலைவர்களைக் கொல்வது வரைக்குமான திட்டம் தீட்டப்பட்ட பின் இதற்கான செலவுகளுக்காக வீடு கொளுத்தப்பட்டதற்கு அரசு அளித்த இழப்பீட்டுத் தொகையிலிருந்து இம் முன்று தலித் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலிருந்தும் நிதி வசூலிக்கப்பட்டது.

இப்படியான குற்றச்சாட்டைக் கோவையாக முன்வைக்கும் முதல் தகவல்.அறிக்கை, ‘கைப்பற்றப்பட்ட’ மேற்படி ஆயுதங்கள், ‘துடி’ அமைப்பு தாங்கள் ஆயுதப் பயிற்சி எடுத்ததை ‘ஒத்துக் கொண்டு’ வெளியிட்ட ஒரு அறிக்கை முதலானவற்றைக் கைப்பற்றிய வழக்குச் சொத்துக்களாகக் காட்டுகிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் சொல்லப் படுவது

வாக்குமூலம் 1: கைது செய்யப்பட்ட சங்கர் மற்றும் அசோக்கின் சகோதரி சுமதி (27): எனது தம்பி அசோக் ஆசிரியர் பயிற்சி முடிச்சிட்டு மெடிகல் ரெப்ரசென்டேடிவா வேலை பார்க்கிறான். கைது செய்யப்பட்ட என் அண்ணன் அசோக் பி.எஸ்சி முடிச்சுட்டு வேலை தேடிட்டு இருக்கான் .27ந்தேதி மதியம் 2 மணிக்கு எஸ்.பி.சி.ஐ.டி சிங்காரம் மொபைல் போன்ல கூப்பிட்டு ஏதோ பேசணும்னு போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொன்னாரு. சங்கர் போனான். ராத்திரி 10 மணி வரைக்கும் ஒரு தகவலும் இல்ல. போனையும் எடுக்கல. மதியம் 12 மணிக்கே அதியமானையும், மாலை 6 மணிக்கு சந்தோஷையும் இப்பிடி அழைச்சுட்டுப் போயி அவங்களும் வீடு திரும்பல. அப்புறம் ராத்திரி 10 மணிக்கு மேல சிங்காரம் போன் பண்ணி ஊர் ஆட்கள் வந்து மூணு பேரையும் அழைச்சிட்டுப் போங்கன்னாங்க. 14 ஆம்பளைங்க 5 பொம்பளைங்க புறப்பட்டுப் போனோம். ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனா அலஞ்சு, கடைசியா B1 ஸ்டேஷனுக்குப் போனோம். அங்கே போனா 12 மணி வாக்கில ஊர்க் கவுண்டர் சக்தி, முக்கியஸ்தர் துரை, அசோக்கு இந்த மூணு பேரையும் புடிச்சு வச்சுக்கிட்டாங்க. எல்லாரையும் அடிச்சு ஜெயிலுக்குக் கொண்டு போய்ட்டாங்க.

வாக்குமூலம் 2: கைது செய்யப்பட்ட சங்கரின் தாயும் சின்னப்பையனின் மனைவியுமான சாலம்மா: 27ந்தேதி (ஜூன்) 12 மணிக்கு எஸ்.பி.சி.ஐ.டி சிங்காரமும் பூபாலன் போலீசும் வந்து துரை, சக்தி, அசோக் மூணு பேரு போன் நம்பரும் கேட்டாங்க. கொஞ்ச நேரத்தில எம் மவன் சந்தோஷை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொல்லி போன் வந்துது. எங்க குடும்ப கேஸ் ஒண்னு தொடர்பா விசாரணைன்னு சொன்னாங்க. நான் விளையாடப் போறேன், நீ போம்மான்னு அவன் சொன்னான். நான் போயிட்டு வந்தப்போ சந்தோஷைக் காணோம். நடு ராத்திரில போலீஸ் ஸ்டேஷன் போனப்பதான் அவனும் கைதாயிருக்கிறது தெரிஞ்சுது. கைது செஞ்ச எல்லாரையும் ரொம்ப அடிச்சிருந்தாங்க. சேலம் ஜெயில்ல அவங்கள நாங்க பாக்கப் போயிருந்தபோது அவங்களால நிக்க கூட முடியல.அவங்கள ஆஸ்பத்திரியில சேக்கணும்னு கேட்டுகிட்டோம். ஆனா அதுவும் நடக்கல.

வாக்குமூலம் 3: துரை என்னும் துரைக்கண்ணுவின் மனைவி. செல்வி: ஊர்ல மூணு பேர (சங்கர், அதியமான், சுரேஷ்) காணோம்னு ராத்திரி 10 மணிக்கு மேல குண்டல்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கெல்லாம் போய் அலைஞ்சிட்டு கடைசியா B1 போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனோம். என் கணவர் துரை ஊர் முக்கியஸ்தர். அவுரு, ஊர்க்கவுண்டர் சக்தி அப்புறம் அசோக் மட்டும் வாங்கன்னு சொல்லி அவங்களையும் கைது பண்ணிட்டாங்க. அது தெரியாம நாங்க வீட்டுக்குத் திரும்பினோம். காலையில (ஜூன் 28) 4 மணிக்கெல்லாம் நத்தம் காலனிய சுத்தி நூத்துக் கணக்கில போலீசு. என் கணவர் துரையை விலங்கு போட்டு இழுத்துட்டு வந்தாங்க. வீட்டுல மணல் கொட்டி வச்சிருந்தோம். “எடுடா, எடுடா” ன்னு போலீஸ் அவரைப் போட்டு அடிச்சாங்க. அவர் காயல்காரரு. ஆஸ்த்மா வியாதிக்காரரு. என்னாத்தங்க எடுக்கிறதுன்னு கேட்டேன். என் கண்ணு முன்னாடி அவர் கையை முதுகுக்குப் பின்னாடி வளைச்சு அடிச்சாங்க. அப்புறம் அவரை இளவரசன் சமாதிப் பக்கம் இழுத்துட்டுப் போனாங்க. எஸ்.பி அஸ்ரா கார்கும் இருந்தாரு. கொஞ்சம் போலீஸ் வந்து என்னிட்ட “கடப்பாறை, மண்வெட்டி குடுடி” ன்னாங்க. இங்க இல்ல அப்படீன்னேன். கவர்மன்ட் குடுத்தது இருக்குல்ல, அதைக் குடுடீன்னு வாங்கிட்டுப் போனாங்க. என் கணவர்ட்ட “இங்கதானடா ஆயுதங்களப் புதைச்சு வச்ச வச்ச, தோண்டி எடுடா”ன்னு சத்தம் போட்டாங்க. அப்புறம் அவங்களே லேசாத் தோண்டி, அவங்க கொண்டு வந்த துப்பாக்கிய அங்கே இருந்து எடுத்தமாதிரி காட்டினாங்க. என் 15 வயசு மகன் ஆனந்தை சமந்தாகுப்பம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைச்சுட்டுப் போயி “எங்கடா உங்க அப்பன் ஆயுதங்களப் புதைச்சு வச்சிருக்கான்?” னு மிரட்டுனாங்க. அவனைக் காலரைப் பிடிச்சுத் தூக்கி “உங்கொப்பனை என்கவுன்டர்ல போட்டுத் தள்ளிடுவோம்”னு பயமுறுத்துனாங்க. என் கணவர் துரை பொடாக் கைதியா இருந்தவருதான். ஆனா இப்பஎந்த அரசியல் பக்க்கமும் போறதுல்ல. யாரோடவும் தொடர்பு இல்ல. ரொம்ப உடம்பு சரி இல்ல மாஓயிஸ்டுகள் யாரும் இங்க வர்றதில்ல. 13 வருசத்துக்கு முன்னாடி வந்ததுதான். ‘துடி’ங்கிற அமைப்பைச் சேர்ந்தவங்க எங்க புள்ளைங்களப் பள்ளிக் கூடத்தில சேப்பாங்க. வேற எந்த அரசியலும் பேசுனதே இல்ல.

கைது செய்யப்பட்டு சேலம் சிறையிலுள்ள அதியமான் (22): ஆறாவது வரை படிச்சிருக்கேன். ஜூன் 27ந்தேதி எஸ்.பி.சி.ஐ.டி சிங்காரம் எங்க சவுன்ட் செட் பத்திப் பேசணும்னு அழைச்சாரு. முதல்ல தருமபுரி ஸ்டேஷனுக்கும் அப்புறம் கிருஷ்ணாபுரம் ஸ்டேஷனுக்கும் கொண்டு போனாங்க. அங்கே SP, ASP, DSP, Q Branch DSP, SBCID எல்லாம் இருந்தாங்க. என்னை ஜட்டியோட விட்டு அடிச்சாங்க. 2013 ஏப்ரல் 5,6 தேதிகள்ல நீர்ப்பெயல்ல ‘துடி’ அமைப்பு நடத்துன அரசாணை 92 பற்றிய விழிப்புணர்வு முகாம்ல பங்கேற்றேன். இந்த ரண்டு நாள்ல ஒரு தடவை மெரினா பீச்சுக்கு ‘ரிலாக்சேஷனுக்கு’ கூட்டிட்டுப் போனாங்க. வேற யாரையும் நான் சந்திச்சதில்ல. கொலை முயற்சி பண்ணோம்னு சொல்றதெல்லாம் பொய்.

கைது செய்யப்பட்டுச் சிறையிலுள்ள சங்கர் (35): பி.எஸ்சி வரை படிச்சிருக்கேன். பால் சொசைடி பொருள்கள விக்கிறேன். காச நோய்க்கு கவர்மன்ட் ஆஸ்பத்திரில தர்ற மருந்த சாப்பிடுறேன். 27ந்தேதி சிங்காரம் 144 தடை உத்தரவு பற்றிப் பேசணும்னு கூப்பிட்டாரு.முதல்ல B1 ஸ்டேஷனுக்கும் அப்புறம் கிருஷ்ணாபுராம் ஸ்டேஷனுக்கும் கொண்டு போனாங்க. ஜட்டி கூட இல்லாம அம்மணமா விட்டு என்னை அடிச்சாங்க. என்னமாதிரி ஆயுதப் பயிற்சி எடுத்தேன்னு கேட்டு கடுமையா அடிச்சாங்க. நான் எந்தப் பயிற்சிக்கும் போனதில்ல. துடி அமைப்போட கல்விப் பயிற்சிக்கும் போனதில்ல.

கைது செய்யப்பட்டுள்ள அசோகன் (22): M.A, B.Ed படிச்சிட்டு மெடிகல் ரெப் ஆக இருக்கேன். 28ந் தேதி காலை 12.30 மணிக்கு (27 நள்ளிரவு) எங்க ஊர் பையன்கள காணாம்னு போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரிக்கப் போனபோது துரை, சக்தி இவங்களோட என்னையும் பிடிச்சுட்டாங்க. ஜட்டியோட விட்டு அடிச்சாங்க. ஆயுதப் பயிற்சி பத்தித்தான் கேட்டாங்க. யாரெல்லாம் பயிற்சி எடுத்தாங்கன்னு கேட்டாங்க. நான் எதுக்கும் போனதில்ல. துடி கல்விப் பயிற்சிக்கும் கூடப் போனதில்ல.

கைதாகியுள்ள திருப்பதி (20) இரண்டாம் ஆண்டு பாலி டெக்னிக் மாணவன். குடிப்பட்டியிலுள்ள அத்தை வீட்டுக்குப் போயிருந்த போது ஜூன் 29 காலை 4 மணிக்கு கைது செய்துள்ளனர். ஜட்டியுடன் அடித்து மற்றவர்களைக் கேட்ட அதே கேள்விகளைக் கேட்டுள்ளனர். இவர் துடி கல்விப் பயிற்சிக்குச் சென்றுள்ளார். ‘துடி’ அமைப்பில் பொறுப்பு வகித்த மைகேல் ராஜ் (22) பி.ஏ முடித்து ஆசிரியப் பயிற்சியும் பெற்றுள்ளார், ஜூலை 4 காலை நாராயணபுரத்தில் வைத்துக் கைது செய்துள்ளனர். இவரையும் ஆடையின்றி அம்மணமாக நிற்க வைத்து அடித்துள்ளனர்.

இவர்கள் யாருமே காளிதாசையோ சந்திராவையோ சந்தித்ததில்லை என்கின்றனர். ஆயுதப் பயிற்சி குறித்து எல்லோரிடமும் எஸ்.பி அஸ்ரா கார்க் விசாரித்துள்ளார்.

சுருக்கம் கருதி மற்றவர்களின் வாக்கு மூலங்களை இங்கு தவிர்க்கிறோம். எல்லோரும் ஒன்றை உறுதியாகச் சொன்னார்கள். இங்கு ஆயுதப் போராட்டம் பற்றிப் பேசுகிறவர்கள் யாரும் வந்ததில்லை. ‘துடி’அமைப்பு கல்வி தொடர்பான பிரச்சினைகள், தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்லூரியில் சேரும்போது கல்விக் கட்டணம் எதுவும் கட்ட வேண்டியதில்லை என்கிற அரசாணை எண் 92 பற்றிப் பிரச்சாரம் செய்தல் தவிர வேறெதுவும் செய்ததில்லை. அவர்கள் முயற்சியில் தம் பகுதியைச் சேர்ந்த சில மாணவர்களுக்குப் பொறியியல் மற்றும் பட்டப் படிப்பு வாய்ப்புக் கிடைத்தது, அவ்வளவுதான் என்றனர்.

சமீபத்திய கைது நடவடிக்கைகள் : நடந்தது இதுதான்

நேரடி சாட்சிகள் பலரையும் விசாரித்து நாங்கள் அறித்த உண்மைகள்: 1. ஜூன் 27, மதியம் 12 மணி முதல் மாலை 6 மணிக்குள் அதியமான், சங்கர், சந்தோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டனர். தன்னை பத்து போலீஸ்காரர்கள் ரவுண்டு கட்டி அடித்து அவர்கள் சொன்னபடி வாக்குமூலம் எழுதிக் கையெழுத்திட வைத்தனர் என்று சந்தோஷ் எங்களிடம் கூறினார். இவர்களை அழைத்துச் செல்ல வாருங்கள் என வஞ்சகமாக B1 போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொல்லி அங்கே சக்தி, துரை, அசோக் ஆகியோரையும் கைது செய்து அவர்களையும் கடுமையாக அடித்து ஒரே மாதிரி வாக்குமூலங்கள் வாங்கப்பட்டன. பின்னர் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டிருந்த 27 பேர்களில் திருப்பதி என்கிற பாலிடெக்னிக் படிக்கும் மாணவனை குடிப்பட்டி என்னுமிடத்தில் கைது செய்தனர். ஜூலை 5 அன்று கொண்டாம் பட்டியைச் சேர்ந்த மைக்கேல் ராஜைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் துடி அமைப்பில் செயல்பட்டவர்.

ஆக இது வரைக் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் 8 பேர். முதல் தகவல் அறிக்கை எண் 122/2014; கிருஷ்ணாபுரம் காவல் நிலையம்;நாள் ஜூன் 28,2014. குற்றப் பிரிவுகள: இ.த்.ச பிரிவுகள் : 120 (பி),153 (ஏ), 153 (ஏ ஏ): இந்திய ஆயுதச் சட்டம் பிரிவுகள்: 25 (1) (ஏ) மற்றும் 27; 1908ம் ஆண்டு வெடி பொருட்கள் சட்டம் பிரிவுகள் 4 மற்றும் 5.

இவர்களில் முதல் அறுவரும் கைதானதற்கு அடுத்த நாள் பெங்களூரு சென்ற காவற் படையினர் நத்தம் காலனியச் சேர்ந்த நால்வரைப் பிடித்து விசாரித்துப் பின் விட்டுள்ளனர். தொடர்ந்து இப்பகுதிகளைச் சேர்ந்த தலித் இளைஞர்கள் பெங்களூரில் வேலை செய்யும் இடங்களில் கண்காணிப்பது தொடர்வதாகவும், இதனால் மாஓயிஸ்ட் பயம் ஊட்டப்பட்டு இப்பகுதி தலித் இளைஞர்கள் பெங்களூருவில் வேலை செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் எம்மிடம் கூறினர்.

இப்படிப் பலரும் பொய் வழக்கில் கைது செய்யப்படுவதைக் கண்டித்து நத்தம் காலனி மக்கள் ஜூலை 4 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடி தங்கள் குடும்ப அட்டைகள், வாக்காளர் அட்டைகள் ஆகியவற்றை ஒப்படைப்பதாக அறிவித்தனர். இனி கைது ஏதும் நடக்காது, ஆனால் தேடப்படும் மற்றவர்களை ஒப்படையுங்கள் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். அதற்குப் பின்னும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘துடி’ அமைப்பின் பொதுச் செயலாளர் பாரதி பிரபு என்பவரை துணைக் கண்காணிப்பாளர் நீலகண்டன் என்பவர் தொலைபேசியில் விசாரித்துள்ளார். எல்லாவற்றையும் சொல்லி முடித்தபின் அந்த அதிகாரி அவரை காவல் நிலையத்திற்கு வரச் சொல்லியுள்ளார். காவல் நிலையத்திற்கு வருகிறவர்கள் கைது செய்யப்படும் நிலை இருப்பதால் பாரதி பிரபு செல்லவில்லை. உடன் அவரது சகோதரர்கள் கந்தவேலு, சண்முகம் சகோதரர் மகன் பாலகுமார் ஆகியோரை இழுத்துச் சென்று மிரட்டி பின் விட்டுள்ளனர். தற்போது பாரதிபிரபுவும் அவ் அமைப்பைச் சேர்ந்த மதன்ராஜ் என்பவரும் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக அறிகிறோம்.

‘துடி’ அமைப்பு : ஒரு குறிப்பு

துடி அமைப்பை ஒரு வன்முறை அமைப்பாகவும், ஆயுதப் பயிற்சி அளித்ததாகவும் பெரிய அளவில் ஒரு பயங்கரவாத அமைப்பு என்கிற ஒரு பிம்பத்தை தருமபுரி காவல்துறை இந்தக் கைதுகள் மூலம் கட்டமைத்துள்ளது. துடி அமைப்பையும் இடதுசாரி ஆயுதப் போராட்டக் கருத்தியலை நத்தம் இளைஞர்கள் மத்தியில் விதைத்தவராகக் காவல்துறையால் சொல்லப்படும் காளிதாஸ் மற்றும் சந்திரா ஆகியோரையும் ஒரே அமைப்பினர் போலச் சித்திரிக்கின்றனர்.. காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை விரிக்கும் கதையின் முதல் அங்கம் காளிதாஸ் – சந்திரா வருகை மற்றும் ஆயுதப் போராட்டம் குறித்த அவர்களின் ஊக்க உரையோடு முடிகிறது என்றால் இரண்டாம் அங்கம் துடி அமைப்பு ஆயுதப் பயிற்சி அளிப்பதோடு தொடங்குகிறது.

ஆனால் ‘துடி’ அமைப்பை அது தொடங்கிய 2002 முதல் நெருக்கமாகக் கவனித்து வருபவர்கள் நாங்கள். தலித் மாணவர்களின் கல்வி தவிர வேறு எதிலும் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. மிக்க மரியாதைக்குரிய ஒரு நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற கிருஸ்துதாஸ் காந்தி அவர்கள் தொடக்கம் முதல் இன்று வரை அதன் காப்பாளராக இருந்து வருகிறார். நேற்று காலை நாங்கள் அவரிடம் பேசினோம். இது குறித்து அவர் கூறியதாவது:

கிறிஸ்துதாஸ் காந்தி ஐ.ஏ.எஸ்; “எங்கள் அமைப்பு முழுக்க முழுக்க தலித் இளைஞர்கள் மார்க்சீயம், தமிழ்த் தேசியம் முதலான எந்தக் கருத்தியலின்பாலும் ஈர்க்கப்பட்டு வீணாகாமல், குறிப்பாக எக் காரணம் கொண்டும் ஆயுதப் போராட்டம் பக்கம் சாயாமல், கல்வியிலும் அம்பேத்கர் சிந்தனையிலும் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்கிற நோக்கில் உருவாக்கப்பட்டது. கடவுள் பிரச்சினை, காதல் திருமணம் தொடர்பான அரசியல் எதிலும் அம் மாணவர்களின் கவனம் திரும்பக் கூடாது என்பதே எங்கள் கவலை. அப்படியான ஒரு இயக்கத்தை ஆயுதப் பயிற்சி அளித்தது எனச் சொல்வதைப்போல ஒரு அபத்தம் வேறு எதுவுமே இல்லை” என ஆணித்தரமாகச் சொன்னர். காந்தி அவர்களின் இக்கருத்தில் உடன்பாடு இல்லாதவர்களுங் கூட அவர் சொன்னவை அவரளவில் உண்மையானவை என்பதை அறிவர்.

‘துடி’ அமைப்பின் பொதுச் செயலாளர் பாரதி பிரபு கூறியது: “நாங்கள் இந்திய அரசு,தமிழக அரசு ஆகியவற்றுடன் இணைந்து தலித் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி வந்தோம். எங்கள் செயல்பாடுகள் வெளிப்படையானவை. மத்திய அரசின் ‘இளைஞர்களின் வளர்ச்சிக்கான ராஜிவ் காந்தி நிறுவனத்தின்’ (RGIYD) நிதி உதவியுடன் நாங்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளோம். தமிழக அரசின் ‘ஆதி திராவிட நலத் துறை’யுடன் இணைந்து அரசாணை 92 குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்களைச் செய்துள்ளோம். மேல் மருவத்தூருக்கு அருகில் உள்ள நீர்ப்பெயல் கிராமத்தில் அருட் பணியாளர்கள் ஜெயசீலன், சுரேஷ் ஆகியோரின் உதவியோடு நாங்கள் நடத்திய கல்விப் பயிற்சியில் 70 மாணவிகளும், 50 பையன்களும் பங்கு பெற்றனர். இவர்களில் 12 பேருக்கு எஞினீரிங் படிப்பில் இடம் கிடைத்தது. இருவரை லயோலா கல்லூரியில் சேர்த்தோம். ரிலாக்சேஷன் மற்றும் psychological counciling”கிற்காக ஒரு முறை மெரீனா பீச்சுக்கு இவர்களை அழைத்துச் சென்றது உண்மை.

தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் ‘தமிழ்ப் பண்பாட்டில் பவுத்தம்’ என்கிற தலைப்பில் ஆய்வு செய்த பாரதி பிரபு தாங்கள் செய்த கல்விப் பணிகளை மிக விரிவாகச் சொன்னார். நத்தம் பகுதியிலும் அவர்கள் இப்படி தலித் மாணவர்கள் மத்தியில் கல்விப் பணி செய்து வந்ததை நாங்களும் கவனித்து வருகிறோம். சென்ற 2013 ஜூன் 8 அன்று கூட தருமபுரி பெரியார் மன்றத்தில் அரசாணை 92 குறித்த விழிப்புணர்வுக் கூடலை நடத்தியதை அறிவோம். வி.சி.க, மத்திய மாநில எஸ்.சி, எஸ்.டி ஊழியர் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து அவர்கள் இதைச் செய்தனர்.

இப்படி நிறையச் சொல்லலாம். துடி போன்ற ஒரு அமைப்பை ஆயுதப் போராட்டத்துடன் தொடர்பு படுத்டுவதைப் போல ஒரு அபத்தம் எதுவும் கிடையாது என எம் குழுவும் உறுதியாகக் கருதுகிறது.

இது தொடர்பாக எஸ்.பி அஸ்ராகார்க் அவர்களிடம் நாங்கள் பேசத் தொடங்கியவுடன், “அதில் கவனமாக இருக்குமாறு நான் என் புலனாய்வு அதிகாரியிடம் சொல்லியுள்ளேன்” என்றார்.

காவல்துறை அவிழ்க்கும் கதையில் உள்ள முரண்பாடுகளும் பொய்களும்

1. கைது செய்யப்பட்டுள்ள முதல் ஆறு பேர்களும் ஜூன் 27 மதியம் 12 மணிமுதல் நள்ளிரவு வரை கைது செய்யப்பட்டு சித்திரவதையும் செய்யப்பட்டுள்ளனர். அதற்கு ஊர் மக்கள் நேரடி சாட்சிகளாக உள்ளனர். B1 நிலையத்தில் ஊர் மக்களுக்கும் காவல் துறைக்கும் விவாதம் நடந்துள்ளது. இது தொடர்பான உரையாடல்கள் செல்போன்கள் மூலமாக ஊர் மக்களுக்கும் எச்.பி அஸ்ரா கார்க் மற்றும் சி.பி.சி.ஐ.டி சிங்காரம் ஆகியோருடக்கும் இடையில் நடந்துள்ளது. இப்படி காவல்துறை கஸ்டடியில் இருந்தவர்கள் ஜூன் 28 காலை 5 மணிக்கு கையில் ஆயுதங்களுடன் பா.ம.க மதியழகனைக் கொல்லச் சென்ற போது நாய்க்கன்கொட்டாய்க்கு அருகில் பைக்கிலும் கந்தன் குட்டைக்கு அருகிலும் கைது செய்யப்பட்டனர் என்பது முற்றிலும் பொய்.

2. நத்தம் கிராமத்தில் தலித்களிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது எனில் எப்போது அது கைப்பற்றப்பட்டது? ஏன் பத்திரிகையாளர்கள் அப்போது அழைக்கப்படவில்லை? இது தொடர்பாகப் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவர் கேள்வி எழுப்பியபோது இருட்டாக இருந்ததால் உங்களை அழைக்கவில்லை என்று எஸ்.பி பதிலளித்துள்ளார். இது ஒரு பதிலா? அப்படியானால் எந்த இரவு அது நடந்தது?

3. கடந்த பல மாதங்களாக அப் பகுதிக்கு தீவிரவாதிகள் வந்து செல்வதும் நத்தம் தலித் இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி எடுப்பதும் காவல் துறைக்குத் தெரியுமெனில் ஏன் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கவில்லை? ஏன் இளவரசன் நினைவு நாள் வரும் வரை காத்திருந்தனர்?

4. இளவரசன் சமாதிக்கு அருகில் கடந்த ஓராண்டாக சி.சி.டி.வி காமரா பொருத்தப்பட்டுள்ளது சமாதிக்கு வருபவர்களை மட்டுமின்றி ஊருக்குள் வந்து செல்பவர்களையும் அது படமெடுக்கும். ஆயுதப் பயிற்சி அளித்தவர்கள் வருகையை அது படம் எடுக்கவில்லையா? இளவரசன் சமாதி அருகில் ஆயுதத்தை துரை புதைத்து வைத்தார் என்றால் அதை சிசிடிவி படம் எடுக்கவில்லையா?

5. மெரீனாவிலிருந்து ஆறு கி.மீ தொலைவில் கடற்கரையில் ஒரு ஆயுதப் போராட்டக் குழு ஆயுதப் பயிற்சி எடுக்க முடியுமா? தருமபுரி காவல்துறை ஒரு வேளை மாநகரக் காவல்துறை மற்றும் இதர கண்காணிப்புத் துறைகளைக் கிண்டல் செய்கிறதா?

6. துடி அமைப்பு வெளியிட்டுள்ளதாக் ஒரு துண்டறிக்கையை காவல்துறையினர் காட்டுகின்றனர். தேதி,முகவரி இல்லா இந்தத் துண்டறிக்கை ஆயுதப் போராட்டம் பற்றிப் பேசுவதோடு நூறு பேர் ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளதாகவும் அறிவிக்கிறது. மக்கள் மத்தியில் வினியோகிக்கப்படும் ஒரு துண்டறிக்கையில் யாராவது தம் அமைப்பில் எத்தனை பேர் ஆயுதப் பயிற்சி எடுத்தனர் என்றெல்லாம் அச்சிடுவார்களா?

எமது பார்வைகள்

1. 2012ல் நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டாம்பட்டி கிராமங்களில் நடைபெற்ற வன்முறைகளுக்குப் பின் பல அமைப்பினரும் அங்கு அடிக்கடி சென்று வதுள்ளனர். நாங்கள் கூட மூன்று முறை அங்கு சென்று வந்துள்ளோம். கடும் போலீஸ் கண்காணிப்பு, உளவுத்துறை இருப்பு முதலியன அங்கு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் காவல்துறையால் கடுமையாகத் தேடப்படும் ஆயுதப் போராளிகள் யாரும் அங்கு வந்து செல்வதற்கு வாய்ப்பில்லை. அப்படி வந்திருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கலாம். எல்லாவற்றையும் விட்டுவிட்டு இளவரசன் முதலாம் ஆண்டு விழாவை ஒட்டி இந்தக் கைது செய்துள்ளதற்கு உள் நோக்கம் இருப்பதாகவே கருதுகிறோம். முதலாம் ஆண்டு கடுமையாக நடவடிக்கை எடுத்து ஒடுக்கிவிட்டால் பின் எப்போதும் இளவரசன் சமாதியை மையமாக வைத்து தலித் இளைஞர்கள் ஒருங்கிணையமாட்டர்கள் என்ப்பதற்காக அரசும் காவல்துறையும் மேற்கொண்டுள்ள சதியாகவே நாங்கள் இதைக்கருதுகிறோம். தாங்கள் காவல்துறை அனுமதி மறுப்பை மீறி நீதிமன்றத்தில் அனுமதி ஆணை பெறுவதற்கு முயற்சித்தது பிடிக்காமல்தான் எஸ்.பி அஸ்ரா கார்க் தம்மிடம் இப்படி மிக மோசமான முறையில் நடந்து கொண்டுள்ளார் என நாங்கள் சந்தித்த மக்கள் அனைவரும் கூறினர். அஸ்ரா கார்க் மீது தலித் மக்கள் மிக்க நம்பிக்கை வைத்திருந்ததை நாங்கள் அறிவோம். மதுரை வில்லூர் போன்ற இடங்களில் அவர் சாதிக் கலவரங்களைக் கையாண்டதை நாங்களும் கூடப் பாராட்டியுள்ளோம். ஆனால் இந்தப் பிரச்சினையில் அவர் இந்த நம்பிக்கைகளை முற்றாக இழந்துள்ளார். விரிவாக எங்களுடன் பேசக்கூடிய அவர் எங்களைத் தவிர்த்ததும் பேச மறுத்ததும் அவரிடம் எங்கள் கேள்விகளுக்குப் பதிலில்லை என்பதையே காட்டுகிறது. எனினும் இந்தக் கைதுகள் மற்றும் தீவிரவாதப் பிரச்சாரங்களை அஸ்ராகார்க் என்கிற ஒரு அதிகாரியின் ‘ஈகோ’ பிரச்சினையாக நாங்கள் பார்க்கவில்லை. இதற்குப் பின் அரசு மற்றும் காவல்துறை மேல்மட்ட அதிகாரம் ஆகியன உள்ளன என்றே கருதுகிறோம்.

2.கடுமையான சாதிப் பிளவு (polarisation) நடந்துள்ள ஒரு பகுதியில், இந்த அடிப்படையிலேயே ஆதிக்க சாதியினர் ஒரு தேர்தல் வெற்றியைச் சாதித்து, வெற்றிப் பெருமிதத்துடன் திரியும் சூழலில் இப்படி தலித் இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி எடுத்து முக்கிய ஆதிக்க சாதித் தலைவர்களையும், பா.ம.கவினரையும் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், கொலை செய்யப் பயங்கர ஆயுதங்களுடன் வந்தபோது தாங்கள் கைது செய்ததாகவும் அப்பட்டமான ஒரு பொய்யை ஊடகங்களின் துணையோடு தருமபுரி மாவட்டக் காவல்துறை பிரச்சாரம் செய்வதை நாங்கள் மிகவும் கவலையுடன் நோக்குகிறோம். குறிப்பாக முன்னதாகவே போலீசாரால் கைது செய்யப்பட்டுக் காவலில் இருந்தவர்கள் துப்பாக்கி, வெடிகுண்டுகள், வீச்சரிவாள்கள் அகிதம் ஒரு பா.ம.க தலைவரைக் கொல்லப் போனார்கள் என்பது நூற்று சதம் பொய். இது சாதிப் பகையை மேலும் வளர்க்கும். எதிர்பார்த்ததுபோலவே இதைப் பயன்படுத்தி பா.ம.க தலைவர்கள் இராமதாஸ் அன்புமணி ஆகியோர் உடனடியாக அறிக்கைகள் விட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அரசும் காவல்துறையும் உணர்ந்துதான் செய்கின்றனவா, இல்லை அவர்களின் நோக்கமே இப்படிச் சாதிப் பகையை மூட்டுவதுதானா? ஆதிக்க சாதியினரின் நினைவு நாட்களை அரசே கொண்டாடும் நிலையில் தலித் மக்களின் இதகைய முயற்சிகளை ஏன் இத்தனை கடுமையாக ஒடுக்க வேண்டும்? முதலமைச்சர் அவர்கள் இதைக் கவனத்தில் எடுக்க வேண்டும்.

3. தலித் மக்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டும் ‘துடி’ போன்ற ஒரு இயக்கத்தை ஒரு பயங்கரவாத அமைப்பாகச் சித்திரிப்பதன் பின்னணீயில் உள்ள மனநிலை கவனத்திற்குரியது. தலித் மக்கள் படிப்பது என்பதையே ஆயுதம் தூக்குவதாக அதிகார மனமும் சாதீயத் திமிரும் அணுகுவதைத்தான் இது காட்டுகிறது. இது ஒரு அப்பட்டமான தலித் விரோதப் போக்கு என்பதை அரசு உணர வேண்டும்.

4. உண்மை அறியும் குழுக்கள் என்பன ஒரு மூன்றாவது புலனாய்வு அமைப்பு. அதன் மூலம் பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளி வந்துள்ளன. அவற்றை ஊக்கப்படுத்த வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளை கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது. எங்களைப் போன்ற அமைப்புகள் உண்மைகள் எதையும் மறைப்பதோ திரிப்பதோ கிடையாது. காவல்துறையும் நிர்வாகமும் சரியாகச் செயல்படும்போது நாங்கள் பாராட்டுவதர்குத் தயங்குவதில்லை. உண்மை அறுயும் குழுக்களை பொறுப்புள்ள அதிகாரிகள் தவிர்ப்பது வருந்தத் தக்கது.

கோரிக்கைகள்

1. இன்று தொடுக்கப்பட்டுள்ள இந்த வழக்குகள் முற்றிலும் பொய்யானவை. போலீஸ் கஸ்டடியில் இருந்தவர்கள் ஆயுதங்களுடன் கொலை செய்யச் சென்றதாகச் சொல்வது அப்பட்டமான பொய். கைது செய்யப்பட்ட எட்டு பேர்களும் உடனடிய்யாக விடுதலை செய்யப்பட்டு, இது தொடர்பான கிருஷ்ணாபுரம் காவல் நிலையம் முதல் தகவல் அறிக்கை (122/2014) முழுமையாக அழிக்கப்பட வேண்டும். கைது செய்து சித்திரவதை செய்யப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்க வேண்டும்.

2. கொலை ஆயுதங்களுடன் சென்றதாகப் பொய் வழக்கு பதிவு செய்தது, சித்திரவதை செய்தது, இவற்றின் மூலம் சாதிப் பகை வளர்வதற்குக் காரணமாக இருந்தது முதலியன கடுங் குற்றங்கள். 27 ந்தேதிய போலீஸ் அதிகாரிகளின் செல் போன் உரையாடல்கள் இதில் முக்கிய தடயம். அதேபோல ‘துடி’ அமைப்பு வெளியிட்டதாகச் சொல்லப்படும் துண்டறிக்கை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உண்மை கண்டறியப் பட வேண்டும். நத்தம் முதலான கிராமங்களில் வந்துபோன பலரில் தீவிரவாதிகள் இருந்தது பற்றிய குற்றச்சாட்டில் உண்மை உள்ளதா என்பதும் விசாரிக்கப்பட வேண்டும். கைது நடவடிக்கைகள் இளவரசன் நினைவு நாளை ஒட்டி நடந்ததன் பின்னணியும் விசாரிக்கப்பட வேண்டும். இப்படியான பயங்கரவாத பீதி கிளப்பிவிடப்பட்டதன் நோக்கம் உட்பட எல்லாவற்றையும் உரிய முறையில் விசாரணை செய்ய பதவியில் உள்ள நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றைத் தமிழக அரசு நியமிக்க வேண்டும். குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

3. தருமபுரி மாவட்டத் தலைமை தலித் மக்களின் நம்பிக்கையை முற்றாக இழந்து நிற்கிறது. மாவட்டக் காவல்துறையில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் அங்கிருந்து இட மாற்றம் செய்யப்பட வேண்டும்.

4. இளவரசன் நினைவு நாள் அனுசரிப்பிற்கு மாவட்டக் காவல்துறை அனுமதி மறுத்ததும், மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு போட்டதும் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரு சிறிய இடைவெளி தவிர, தொடர்ந்து 144 தடை ஆணை இருப்பது ஏற்கத் தக்க ஒன்றல்ல. இதனால் தலித் மக்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். உடனடியாக தடை உத்தரவு நீக்கப்பட வேண்டும். நினைவு நாளன்று வரலாறு காணாத அளவில் காவலர்கள் நிறுத்தப்பட்டும் அன்று இரவு 9 மணிவாக்கில் சாதி வெறியர்கள் பகுஜன் சமாஜ் கட்சி பொறுப்பாளர் வழக்குரைஞர் ரஜினிகாந்தின் வாகனத்தைக் கொலை வெறியுடன் தாக்கியுள்ளனர். வாகன ஓட்டி அன்று வண்டியை வேகமாகச் செலுத்தித் தப்பித்து வந்திராவிட்டால் உள்ளே இருந்த வழக்குரைஞர் செங்கொடிக்கு உயிராபத்து ஏற்பட்டிருக்கும். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும்.

5. இப்பகுதியில் சாதி ஒற்றுமையையும் அமைதியையும் நிலைநாட்ட அப் பகுதியைச் சேர்ந்த மத/சாதிச் சார்பற்ற அரசியல்வாதிகள், தொழிற் சங்கத்தினர், வணிகர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் அடங்கிய ஒரு அமைதிக் குழுவை அரசு அமைக்க வேண்டும்.

இணைப்பு

தருமபுரி, ஜூலை18 2014

1. சென்ற ஜூலை 10, 2014 அன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு விவேகானந்தன் முன்னதாகக் கைதுசெய்யப்பட்ட சக்தி, சந்தோஷ் முத்லான ஆறு பேர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுப்புக் காவலில் வைக்க ஆணையிட்டுள்ளார் [எஸ்.சி.(தே.பா.ச) எண் 10/ 2014]..

இந்த ஆணையில் ஜூன் 28 அன்று போலீசாரால் கைது செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் சக்தி உள்ளிட்ட அறுவரும் 27 அன்று இரவு 11.30 மணிக்கு நத்தம் காலனியில் கூடி அடுத்த நாள் காலையில் மதியழகன் என்ன்பவரைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டியதாகச் சொல்லப்படுகிறது. இந்த நேரத்தில் அவர்களில் மூவர் (சந்தோஷ், சங்கர், அதியமான்) தருமபுரியில் போலீஸ் காவலில் இருந்தனர். மற்ற மூவர் (சக்தி, துரை, அசோக்) அவர்களைத் தேடி தருமபுரி காவல் நிலையத்திற்கு, கவல்துறை எஸ்..பி.சி.ஐ.டி சிங்காரம் அறிவுறுத்தியபடி, வந்து கொண்டிருந்தனர். பின்னிரவு 12 மணி வாக்கில் அவர்களும் கைது செய்யப்பட்டனர். எனவே இந்த நேரத்தில் அவர்கள் நத்தம் காலனியில் சதி செய்துள்ளனர் என்பது அப்பட்டமான பொய்.

28ந்தேதி காலை 5 மணிக்கு நாய்க்கன் கொட்டாயில் மூவரும், பிறகு அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தங்கன் குட்டையில் மூவரும் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டதாக ஆட்சியரின் ஆணையில் குறிப்பிடப் படுகிறது. இந்த நேரத்தில் அவர்கள் அறுவரும் போலீஸ் காவலில் இருந்துள்ளனர்.

தங்கள் வீடுகள் தாக்கப்பட்டதற்காக ஆத்திரமுற்று, அதற்குக் காரணமான சாதியினரைக் கொலை செய்ய வேண்டி. ஆயுதப் பயிற்சிக்காக, சமூகப் பணிகளை நோக்கமாகக் கொண்ட துடி அமைப்பில் சேர்ந்ததாகவும் அதன் தொடர்ச்சியாக நக்சல்பாரி இயக்கத்தில் சேர்ந்ததாகவும் மாவட்ட ஆட்சியரின் ஆணை கூறுகிறது. சமூகப் பணி செய்யும் துடி அமைப்பு எவ்வாறு ஆயுயதப் பயிற்சி அளிக்க முடியும் அந்த அமைப்பிற்கும் நக்சல்பாரி அமைப்பிற்கும் என்ன தொடர்பு, அல்லது அதையே ஒரு நக்சல்பாரி அமைப்பாக மாவட்ட ஆட்சியர் கருதுகிறாரா என்பவற்றிற்கு எந்த விளக்கமும் இல்லை.. கைது செய்யப்பட்டவர்களின் வாக்கு மூலங்கள் கடும் சித்திரவதையின் அடிப்படையில் வாங்கப்பட்டுள்ளது.

ஆக மாவட்ட ஆட்சியர் சிந்திக்காமல் (without applying his mind), காவல்துறையின் கூற்றை அப்படியே ஏற்றுத் தனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்புக் காவல் அதிகாரத்தைத், தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என இக்குழு கருதுகிறது. இதை அரசும் மத்திய உள்துறைச் செயலகமும் கணக்கில் கொண்டு இந்த ஆணைக்கு ஒப்புதல்வழங்கக் கூடாது என இக் குழு வேண்டிக் கொள்கிறது.

2. சென்ற ஜூலை 14ந் தேதிய சென்னை ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் ஒரு மேற்கு மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் தனது தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக மேலதிகாரிகளுக்குப் புகார் செய்துள்ளதாகவும், அது தொடர்பாக உளவுத் துறையினர், தாங்கள் அவரது தொலை பேசியை ஒட்டுக் கேட்கவில்லை, அவரது டிரைவரின் தொலைபேசியைத்தான் ஒட்டுக் கேட்டதாகக் கூறுவதாகவும் ஒரு செய்தி வந்தது. இந்த டிரைவர் அடிக்கடி காவல்துறை வாகனத்தை சேலத்திற்கு ஓட்டிச் சென்றது குறித்துப் புகார் வந்ததாகவும், அப்படி ஓட்டிச் சென்றது சுங்கச் சாவடி சி.சி.டி.வியில் பதிவாகி உள்ளதாக உளவுத் துறையினர் சொல்வதாகவும் அச் செய்தி கூறுகிறது.

இது தொடர்பாக ‘சவுக்கு’ எனும் ஒரு சமூக ஊடக வலைத் தளம் சில புகார்களை முன்வைக்கிறது. . காவல்துறையில் உள்ள குழு மோதல்கள் இதற்குப் பின்னணியாக உள்ளதெனவும், அந்த எஸ்.பி வேறு யாருமல்ல தருமபுரி மாவட்ட கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க்தான் எனவும் அது கூறுகிறது. தவிரவும் காவல்துறை வாகனம் தினந்தோறும் அஸ்ரா கார்கின் மைத்துனி கீர்த்தி ஶ்ரீ என்பவரை தருமபுரியிலிருந்து அவர் எம்,டி படிக்கும் சேலம் வினாயகா மிஷன் மருத்துவமனைக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்டதாகவும் அந்த ஊடகம் குறிப்பிடுகிறது. இந்த மருத்துவமனையின் கிட்னி ஊழ;லை விசாரித்த ஒரு அதிகாரி எவ்வாறு அதே மருத்துவமனைக் கல்லூரியில் தன் மைத்துனியை அதிகத் தொகை கொடுத்துப் பெறக்கூடிய ஒரு மேற்படிப்பில் சேர்த்தார் என்கிற அய்யத்தையும் அது முன் வைக்கிறது.

இவை உண்மையா இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்வது எங்களது நோக்கத்திற்கு உட்பட்டதல்ல. ஆனால் தன் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதாகப் புகார் கொடுத்த அதிகாரி அஸ்ரா கார்க்தான் எனில் அவருக்கும் காவல்துறை மேல்மட்டத்திற்கும் இடையே உள்ள பிளவுக்கும் இந்தக் கைதுகளுக்கும் ஒரு தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. இன்று இந்தக் கைது நடவடிக்கைகளை பெரிய அளவில் மேற்கொண்டு மீண்டும் நக்சல்பாரி இயக்கம் இப்பகுதியில் உயிரூட்டப் படுவதாகப் பீதியைக் கிளப்புவது அவருக்குப் பயன்படலாம்.. தான் தேசியப் பாதுகாப்பிற்கு ஊறு விளைவித்தவர்களைக் கைது செய்யும் முக்கிய பணியில் உள்ளபோது இப்படி மேலதிகாரிகளால் பழி வாங்கப் படுவதாக ஒரு கருத்தை உருவாக்க இந்த உற்சாகம் காட்டப்படுகிறதா என்கிற கேள்வியும் எழுகிறது.

எப்படி ஆயினும் இத்தகைய அய்யங்கள் உள்ள சூழலில் தமிழகக் காவல்துறை இவ்வழக்கைப் புலனாய்வு செய்தால் நீதி கிடைக்காது எனவும், மேலும் பல அப்பாவி தலித்கள் பழிவாங்கப்படுவதற்கும், இரு சமூகங்களுக்கும் இடையே உள்ள பகை அதிகரிக்கவுமே இது வழி வகுக்கும் எனவும் நாங்கள் உறுதியாகக் கருதுகிறோம்.

எங்களைப் பொறுத்த மட்டில் வன்முறை அரசியலையும், அதற்கென ஆயுதப் பயிற்சி மேற்கொள்வதையும் கண்டிக்கிறோம். அது குறித்துப் புலன் விசாரணை செய்ய காவல்துறைக்கு பொறுப்புள்ளதையும் ஏற்கிறோம். ஆனால் இந்தப் பொறுப்பு பழி வாங்கும் நோக்கில் யார் மீதும் பயன்படுத்தப்படக் கூடாது எனவும், அதைவிடவும் இது இரு சமூகங்களுக்கு இடையே உள்ள பகையை அதிகரிக்கப் பயன்படுத்தப் படக் கூடாது என்பதிலும் கவலை கொள்கிறோம்.

எனவே நாங்கள் கோருகிற நீதிபதி விசாரணையில் இந்த தொலைபேசி ஒட்டுக் கேட்டல் புகாரும் உள்ளடக்கப்பட்டு விசாரிக்க வேண்டும் எனக் கோருகிறோம். நக்சல்பாரித் தொடர்புகள் குறித்த விசாரணை தேவை எனில் வேறு புலனாய்வு முகமைகள் மூலமாக அது செய்யப்பட வேண்டும் என்கிறோம்.

ஜூலை 4 அன்று இப்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் கொலை செய்யும் நோக்குடன் ஆயுதங்களுடன் சென்ற கதை முற்றிலும் பொய் என்பதால் அவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். இது தொடர்பான முன் குறிப்பிட்ட முதல் தகவல் அறிக்கை முற்றிலுமாக ரத்து செய்யப்பட வேண்டும்.