சிறுவயது முதலே இடதுசாரி அரசியலின்பால் ஈர்க்கப்பட்டதற்கு என் தந்தையே காரணம். ‘ராமதாஸ்’ எனும் பெயரில் மலேசியக் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவியவர்களில் ஒருவராக இருந்து, நாடுகடத்தப்பட்ட என் தந்தை அந்தோணிசாமி ஒரு கம்யூனிஸ்டாக சாதி, மதம், சொத்து என எதையும் உடைமை ஆக்கிக் கொள்ளாமல் வாழ்ந்து மறைந்தவர்.
ஆனந்த விகடனில் அப்போது வெளிவந்துகொண்டிருந்த ஜெயகாந்தனின் எழுத்துகள் ஊடாக எனக்கு இலக்கிய ஆர்வத்தை விதைத்தவர் அவர். ருஷ்ய இலக்கியங்களையும் சரத் சந்திரர் முதலான இந்திய மொழிபெயர்ப்புகளையும் அறிமுகப்படுத்தியவர் அவர்.
குடும்பச்சுமைகளும் வறுமையும் வாட்டிய இளமைக்காலத்தில் ஒரு மூத்த சகோதரனாக எனது கடமைகளை எல்லாம் முடித்த பிறகு அரசியல், இலக்கியம் என்பதை கிட்டத்தட்ட முழுநேரமாக்கிக் கொண்டேன். நக்சல்பாரி இயக்கத்தின் மீதான ஒடுக்குமுறைகளும் நெருக்கடிநிலை காலத்தின் ஜனநாயக அத்துமீறல்களும் தான் என்னைத் தீவிர அரசியலின் பக்கம் ஈர்த்தன. கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரின் அறிமுகம் தமிழின் வளமான இலக்கியப் பார்வைகளின் மீது எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது.
கல்லூரிப் பேராசிரியர் என்ற வகையில் அரசுக் கல்லூரி ஆசிரியர் இயக்கத்திலும் தீவிரமாகச் செயல்பட்டு வந்தேன். கல்லூரி ஆசிரியர் போராட்டச் செயல்பாடுகளுக்காக ஓராண்டு ஊதிய உயர்வு வெட்டு, பத்து ஆண்டுகளில் ஆறு கல்லூரிகளுக்கு இடமாற்றம் ஆகியவற்றை எதிர்கொண்ட அனுபவங்களும் மறக்க இயலாதவை.
1990இல் நிறப்பிரிகை தொடங்கப்பட்டது. எந்த ஒன்றின் மீதுமான எமது விமர்சனப் பார்வைகள் இலக்கியச் சூழலில் கவனம் பெற்றன. பாபர் மசூதி இடிப்பு அதையொட்டிய இந்துத்துவ எழுச்சி ஆகியவை மதச்சார்பின்மையின் பக்கம் எனது கவனத்தை ஈர்த்தன. இக்காலகட்டத்தில் எனது மனித உரிமைப் பணிகளும் தொடங்கியது. கோ.சுகுமாரன், ரஜினி ஆகியோருடன் இணைந்து மனித உரிமைப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினேன். அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி ஏற்பட்ட தலித் எழுச்சியினூடாய் தலித் அரசியலிலும் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.
2000 இல் மாநிலக் கல்லூரிக்கு பணிமாறிய பிறகு சென்னையை மையமாகக் கொண்டு இயங்கத் தொடங்கினேன். எழுத்து, களப்பணி, இலக்கியக் கூட்டங்கள் என வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.