இரண்டு மாதங்களுக்கு முன்னால் குடந்தையில் ஒரு பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய மாநாடு. தொடக்க நிகழ்ச்சியில் பேச அழைக்கப்பட்டிருந்தேன். அழைப்பிதழைப் பார்த்தவுடன் அதிர்ச்சி. என்னோடு அந்த அமர்வில் பேச இருந்தவர்களில் ஒருவர் இந்துத்துவ மேடைகளில் பேசித் திரிபவரும், அவர்களால் “நெய்தல் நெருப்பு” (!) என்றெல்லாம் காவடி தூக்கப்படுபவருமான ஜோ டி குருஸ். அவரோடு மேடையைப் பகிர்ந்து கொள்வதை நினைத்தால் கொடுமையாக இருந்தது. போகாமல் இருந்து விடலாமா என்று கூட நினைத்தேன். ஆனாலும் என்னை அழைத்திருந்த பெரியவர் கவிக்கோ போன்றோரை நினைத்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.
மேடையில் அந்த நபர் குருஸ் உட்கார்ந்திருந்த பக்கம் கூட நான் திரும்பவில்லை. எனக்கு முன்பாக அவர் பேச அழைக்கப்பட்டார். அங்கு திரளாகக் கூடி இருந்த முஸ்லிம்களைப் பார்த்து “சாச்சாமார்களே, சாச்சிமார்களே..” என விளித்து அவர் பேசத் தொடங்கினார். அவர்கள் ஊரில் முஸ்லிம்களை அப்படித்தான் உறவு முறை சொல்லிக் கூப்பிடுவார்களாம். அதிகம் பேசவில்லை. ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துவிட்டு அமர்ந்தார்.
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ஒரு நாள், ஒரு ஷிப்பிங் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த அவர் ஒரு சூட் கேஸ் நிறைய பணத்தைச் சுமந்து கொண்டு மும்பையில் ஒரு தெரு வழியே சென்று கொண்டிருந்தாராம். அவர் போய்த்தான் ஊழியர்களுக்கு ஊதியம் பிரித்து அளிக்கப்பட இருந்ததாம். அப்போது முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் அந்தப் பகுதியில் அவர்களைத் தாக்கிக் கொல்ல ஆயுதங்களுடன் வந்த இந்துத்துவ சிவசேனைக் கும்பல் ஒன்று குரூசை நோக்கி ஓடி வந்ததாம். மொழி தெரியாத இவர் அஞ்சி ஓடி ஒரு பெரிய சாக்கடைக் குழிக்குள் வீழ்ந்து எழ முடியாமல் கிடந்துள்ளார். அந்த வீதியில்முஸ்லிம் ஆண்கள் யாரும் இல்லை. கலவரக்காரர்களைக் கண்டு பயந்தோடி இருப்பார்கள் போல. அநேகமாக குரூஸ் விவரித்த அந்தக் கலவரம் பாபர் மசூதி இடிப்பை ஒட்டி மும்பையில் நடந்த வன்முறையாக இருக்கலாம்.
வன்முறையாளர்கள் அடுத்த இலக்கைத் தேடிப் போனபின் அங்கிருந்தமுஸ்லிம் பெண்கள் குரூசைத் தூக்கிக் காப்பாற்றியுள்ளனர். தண்ணீர்ப் பற்றாக்குறை மிக்கஅப்பகுதியில் எல்லோர் வீட்டிலிருந்தும் குடங்களில் தண்ணீரைக் கொண்டுவந்து ஊற்றி அவர்மீது படிந்திருந்த மலத்தை எல்லாம் கழுவி இருகிறார்கள். அன்று இரவு அவருக்குப் பாதுகாப்பும் அளித்து காலையில் அவர் கொண்டு வந்திருந்த பணப் பெட்டியையும் கொடுத்துப் பத்திரமாக அனுப்பியுள்ளனர் அந்த முஸ்லிம் சாச்சிமார்கள்.
இதைச் சொல்லிவிட்டு அவர் இறங்கியபோது, என்ன இருந்தாலும் ஒருஎழுத்தாளன், கல்லுக்குள்ளும் ஈரமிருக்கும். இந்துத்துவ மேடைகளில் தோன்றுவதாலேயே இவரை இந்துத்துவவாதி எனக் கொள்ள வேண்டியதில்லை என நினைத்துக் கொண்டேன். அவர் மேடையை விட்டு இறங்கும்போது ஒரு புன்முறுவலையும் பகிர்ந்து கொண்டேன். இன்று இந்த நபர் ஏன் மோடியைப் பிரதமராக்க வேண்டும் என எழுதியுள்ள கட்டுரையைப் படித்தபோதுதான் அன்று சாச்சிமார்கள் இவர் மீது ஊற்றிய தண்ணீர் அவரது புறஉடல்மீதிருந்த அசிங்கங்களை மட்டுமே கழுவியுள்ளது என நினைத்துக் கொண்டேன்.
மோடி அடித்தளத்திலிருந்து வளர்ந்தவராம். வளர்ச்சியின் நாயகராம். தீர்க்கதரிசியாம். “A revolutionary, bold and committed visionary …”… அடப் பாவி.. அரவிந்தன் நீலகண்டன் போன்ற ஆர்.எஸ்.எஸ் காரர்கள் இனி உம்மை “நெய்தலின் நெருப்பு” என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், “சிங்கம்,புலி, கரடி…” என்றெல்லாமும் கொண்டாடலாம்.
கன்னட முது பெரும் எழுத்தாளர், நவ்யா இயக்கத்தைத் தோற்றுவித்தவர், ஞானபீட விருது மட்டுமின்றி பத்ம பூஷன் விருதையும் பெற்றவர், கேரளத்திலுள்ள மகாத்மாகாந்தி பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருந்த யு.ஆர், அனந்தமூர்த்தி அவர்கள்,”மோடி பிரதமரானால் நான் இந்த நாட்டில் வாழ மாட்டேன்” என அறிவித்துள்ளார்.அவர், கிரிஷ் கர்னாட் மற்றும் பல கன்னட எழுத்தாளர்கள் மோடிக்கு எதிராக இன்று பிரச்சாரம்செய்து கொண்டுள்ளனர்.
ஒரு 150 அறிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், மோடியின் தலைமையில் வரும் பாசிசக் கும்பலுக்கு வாக்களிக்காதீர்கள் என வெளியிட்ட அறிக்கையை இரண்டு நாட்களுக்கு முன் நான் இங்கு பகிர்ந்ததைப் பார்த்திருப்பீர்கள்.
இந்திய வரலாற்றில் வேறெப்போதும் இப்படி ஒருஅரசியல்வாதிக்கு எதிராக எழுத்தாளர்கள், கலைஞர்கள் களம் இறங்கியது கிடையாது. இன்று ஏன் இந்த மாற்றம்? மோடி என்கிற நபர் ஒரு வெறும் அரசியல்வாதி அல்ல. மோடி எனும் உருவில் இந்திய பாசிசம் இன்று முழுமை அடைகிறது. பெரு முதலாளியமும் பாசிசமும் பிரிக்க இயலாதவை என்பதுமுசோலினி அளித்த வாக்குமூலம். இது நாள் வரை இந்துத்துவம் எத்தனையோ கொலைகளையும் வன்முறைகளையும் விதைத்திருந்தபோதும், வெறுப்பைக் கட்டமைத்தபோதும் அப்போதெல்லாம் பெரு முதலாளியம் அத்துடன் ஊடு பாவாய்க் கலந்ததில்லை. சற்று விலகியே இருந்திருக்கிறது. இன்று அந்த இணைவு ஏற்பட்டுள்ளது. மோடி என்னும் வடிவில் அது நிகழ்துள்ளது. எழுத்தாள நெஞ்சங்கள் வெறுப்பை வெறுப்பவை. எனவேதான் இந்த எதிர்ப்பு.
இரண்டாயிரம் பேர் கொல்லப்பட்டு, ஆண்டுகள் பன்னிரண்டாகியும் இன்னும் 50,000க்கும் மேற்பட்டோர் தம் வீடுகளுக்குத் திரும்ப இயலாத நிலை இருந்தும்ஒரு அடையாளமாகவேனும் வருத்தம் தெரிவிக்காத ஒரு நெஞ்சையும், இத்தனைக்குப் பின்னும் முஸ்லிம்கள்அளித்த விருந்தொன்றில் வழங்கப்பட்ட அந்த முஸ்லிம் குல்லாயை அணிய மறுத்த மனத்தையும் மோடியைத் தவிர நீங்கள் வேறு யாரிடம் காண முடியும்?
மரணதண்டனை குறித்து ஜெயமோகன் கக்கி இருந்த விஷத்தைக் குறித்த என் பதிவைப் பார்த்த ஒரு நண்பர் கேட்டார்: “ஒரு விரிவான பதிலை நீங்க ஜெயமோகனுக்கு எழுதுங்கள் சார்.” என்னால் அது சாத்தியமில்லை எனச் சொன்னேன்.
ஜெயமோகனுக்கோ அல்லது ஜோ டி குருசுக்கோ என்னால்பதில் எழுத முடியாது. அவர்கள் எதையும் புதிதாகச் சொல்வதில்லை. எற்கனவே பலமுறை பதில்சொல்லப்பட்ட, விளக்கப்பட்ட பிரச்சினைகளைப் புதிது போலச் சொல்லும் பாசிச உத்தியைக் கடைபிடிப்பவர்கள் அவர்கள். குருசின் இந்தக் கட்டுரையைத் தான் (கீழே உள்ள பதிவில் உள்ளது) எடுத்துக் கொள்ளுங்களேன். என்ன அவர் புதிதாய்ச் சொல்லிவிட்டார்? மோடியை வளர்ச்சியின் நாயகர் என்பதற்கு இதுவரை London School of Economics பேராசிரியர்கள்முதல் நம் ஊர் பொருளாதாரவாதிகள், அரசியல்வாதிகள் எல்லோருந்தான் பதில் சொல்லி விட்டனர். முக நூலில்தான் எத்தனை கட்டுரைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள்? இதற்கு மேல் நான் என்னசொல்லிவிடப் போகிறேன்? இதற்கு பதில் சொல்ல ஆரம்பித்தால் அதை விட ஒரு காமெடி பீசாகிற வேலை வேறென்ன இருக்கஇயலும்?
ஜெயமோகனின் மரணதண்டனைக் கட்டுரையை எடுத்து, அதில் மரண தண்டனைக்கு ஆதரவாக முன்வைக்கப்படும் கேள்விகளைத் தொகுத்துப் பாருங்கள். அப்போது தெரியும். இது எதுவும் புதிதல்ல என்பது. இந்தக் கேள்விகளைக் கேட்பவன் ஒன்று படு முட்டாளாக இருக்கவேண்டும் அல்லது பாசிஸ்டாக இருக்க வேண்டும். மரணதண்டனை இருந்தால் குற்றங்கள் குறைந்து விடும், தீவிரவாதம் ஒழிந்துவிடும் எனச் சொல்கிற மண்டைகளுடன் யார் முட்டிக்கொள்ள முடியும்?
ஜெயமோகன், ஜோ டி குருஸ் இவர்களுக்கு முன்னுதாரணம் தமிழில் இல்லை. இவர்கள் ஒரு புதிய பரிணாமம் ஒரு நோயின் அறிகுறி. இவர்கள் இலக்கிய மோடிகள்.
3. செத்துப்போன ஆசிரியனும் உயிருடன் உள்ள பிரதியும்…
மோ டி குரூசின் அரசியல் கருத்துக்களுக்காக அவரது நாவலை வெளியிட மறுப்பது என்பதெல்லாம் போலித்தனமானது, அப்புறம் ஆசிரியன் செத்துப்போனான், பிரதி அந்தரத்தில் மிதக்கிறது என நீங்கள் சொன்னதெல்லாம் என்னாச்சு என்றொரு கேள்வியை ரொம்பவும் புத்திசாலித்தனமாகச் சிலர் முன் வைக்கின்றனர். விரிவாக இது குறித்துப் பேசுவதற்கு முன் ஒரு சில வார்த்தைகள் இங்கே…
ஆழ்ந்த தத்துவார்த்தமான விடயங்களை மிகை எளிமைப்படுத்திப் புரிந்து கொள்ளும் ஆபத்து தமிழகத்தில் அதிகம். ஆசிரியன் செத்துப்போனான், வாசகியின் எல்லையற்ற சுதந்திரம் என்பதெல்லாம் கூட இங்கு பலராலும் அப்படித்தான் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. உம்பர்டோ ஈகோவின் Interpretation and Over Interpretation என்கிற மிக முக்கியமான ஒரு நூலை மேற்கோள் காட்டி இது குறித்து நான் ஒரு கட்டுரையில் எழுதியுள்ளேன்.
சில ஆண்டுகளுக்கு முன் குற்றாலம் கவிதைப் பட்டறையில் ஒரு விவாதம் நடந்தது, பாரதியின்,
“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் / அதை ஆங்கொரு காட்டிடைப் பொந்தினில் வைத்தேன் / வெந்து தணிந்தது காடு / தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ…”
எனும் இந்தக் கவிதையை ஒரு அப்பட்டமான மாற்றுப் பால் Sexual Intercourse ஐச் சொல்லுவதாக வாசிக்க முடியும்தானே? – என்றொரு கேள்வி அங்கு எழுப்பப் பட்டது. அந்த விவாதம் பிறகு அங்கு எப்படிப் போனது என்கிற விஷயம் ஒரு பக்கம் இருக்கட்டும்.
உம்பர்டோ ஈகோவின் நூல் வேறு சில சிந்தனைப் புள்ளிகளை நம்மிடம் விதைக்கும். வாசகரின் வாசிப்பு உரிமை என்பது அப்படி ஒன்றும் எல்லையற்றதல்ல. Intention of the Text, Intention of the Author ஆகியவற்றிற்கும் வாசிப்பில் அல்லது விளக்க உரையில் ஒரு இடமுள்ளது.
“பாரத நாடு பழம் பெரும் நாடு / நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்…”
எனப் பாரதி பாடியதை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இன்று பயன்படுத்திக் கொள்வதை நாம் மறுக்க இயலாது. ஆனால் அந்தப் பாடலை அவ்வாறு புரிந்து கொள்வதில் உள்ள சிக்கலைச் சொல்வதற்கு யாருக்கும் உரிமை உண்டு. அங்குதான் ஈகோ வைக்கிற வாதங்கள் முக்கியமாகின்றன.
வாசகர் ஒரு எழுத்தை எப்படிப் புரிந்து கொள்கிறார் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அந்த வாசக சுதந்திரத்தை நாம் முழுமையாக ஏற்கிறோம். ஆனால் ஒரு text ல் ஆசிரியரின் Intention என்னவாக இருந்தது எனச் சொல்வதற்கு ஒருவருக்கு உரிமை உண்டு. ஆசிரியன்தான் செத்துப் போனானே என மட்டையடி அடிக்க இயலாது.
ஆசிரியனின் அரசியல் அவனது படைப்பில் இடம்பெற எல்லா சாத்தியங்களும் உண்டு.
மிக முக்கியமான நவீன கவிஞர்களில் ஒருவரான எஸ்ரா பவுன்ட், இரண்டாம் யுத்தக் காலத்தில் பாசிஸ்ட் முசோலினியின் அரசியலை ஆதரித்ததற்காக அமெரிக்க அரசால் சிறையில் அடைக்கப்பட்டவர்.
அவர் ஒரு மிகமுக்கியமான படைப்பாளி, கவிதை வெளிப்பாடிற்குப் புதிய பரிமாணங்களைச் சேர்த்தவராயினும் அவரது canto க்களில் அவரது அரசியல் பார்வை, யூத வெறுப்பு வெளிப்படத்தான் செய்தது.
இதன்பொருட்டு அவரது மகாகவித்துவத்தை மறுக்க இயலுமா என்கிற விவாதம் ஒரு பக்கம் இருக்கட்டும்; அவரது அரசியல் பார்வைக்கும் அவரது படைப்புகளுக்கும் ஒரு இயைபு இருந்ததை யாரும் முற்றாக மறுத்துவிட இயலாது.
மோ டி குரூசின் அரசியல் பார்வை வேறு, அவரது இலக்கியம் அப்பழுக்கறது என்கிற கருத்தைச் சொல்பவர்கள் சொல்லட்டும். ஆனால் அவரது அரசியல் பார்வை அவரது இலக்கியங்களிலும் வெளிப்படவே செய்கிறது எனச் சொல்வதற்கும் எல்லாவிதமான சாத்தியங்களும் உண்டு.
ஒரு மிக அகன்ற பிரச்சினையை ரொம்பவும் குறுக்கிப் பார்த்து, ரொம்பவும் personalise பண்ணி விளங்கிக் கொண்டவர் மோ டி குரூஸ். இது அவரது அரசியலில் மட்டுமல்ல. இலக்கியத்திலும் வெளிப்படவே செய்கிறது.