பா.ஜ.க அரசின் முதல் பட்ஜெட் முந்தைய காங்கிரஸ் அரசின் தொடர்ச்சியாகவே உள்ளது என்பதை அவர்களாலேயே கூட மறைக்க இயலவில்லை. ஆட்சிக்கு வந்த 45 நாட்களுக்குள் வேறென்ன செய்துவிட முடியும் என்று சமாதானம் மட்டுமே சொல்ல முடிந்துள்ளது நிதி அமைச்சர் அருண்ஜேட்லியால். ஆனால் மிகப் பெரிய சவடால்கள் மற்றும் வாக்குறுதிகளுடன் தேர்தல் பிரச்சாரத்தைச் செய்தற்கும், “மக்கள் மிகப் பெரிய மாற்றத்தை எதிர்நோக்கி வாக்களித்துள்ளனர்” என ஜேட்லி தன் பட்ஜெட் உரையைத் தொடங்கியதற்கும் எந்தப் பொருளும் இல்லை என அவர்களின் முதல் பட்ஜெட் உணர்த்தி விட்டது.
காங்கிரஸ் அரசு தொடங்கி வைத்த கார்பொரேட் மயமாக்குதல், மிக முக்கியமான (strategically important) துறைகளிலும் கூட அந்நிய முதலீட்டை அநுமதித்தல் என்கிற நிலைகளில் எந்த மாற்றமும் இல்லை என்பதோடு இன்சூரன்ஸ் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் அதை இரட்டிப்பும் ஆக்கியுள்ளது பா.ஜ.க பட்ஜெட். அந்த வகையில் செய்யப்பட்டுள்ள சில முக்கிய அறிவிப்புகளாவன:.
# பாதுகாப்பு மற்றும் இன்சூரன்ஸ் துறைகளில் வெளிநாட்டு நேரடி முதல் இரட்டிப்பு. இந்த ஆண்டு முதல் 49 சத FDI.
# பொதுத் துறைகள் தனியார் மயம். இந்த ஆண்டு முதலீட்டி நீக்க இலக்கு 58,425 கோடிகள்.
# உற்பத்தித் துறை மற்றும் e வணிகத்திலும் அந்நிய முதலீடு.
# இந்திய உணவுக் கார்பொரேஷன், பொது வினியோக அமைப்பு முதலானவற்றை ஊக வணிகர்களுக்குச் சாதகமாக மறு சீரமைப்புச் செய்தல்.
# இரண்டாவது பசுமைப் புரட்சி என்கிற பெயரில் விவசாயத்தை கார்பொரேட் மயமாக்குதல்,
# துறைமுகங்கள், விமான நிலையங்கள், அதி வேகச் சாலைகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், 16 மெட்ரோக்கள், 100 ஸ்மார்ட் நகரங்கள் என எல்லாவற்றையும் ‘தனியார் – பொதுத்துறை கூட்டு என்கிற பெயரில் தனியார் மயப்படுத்தல்.
கார்பொரேட் வரி விலக்கு 5 லட்சம் வரை அமையும் வாய்ப்புள்ளது. காங்கிரஸ் அரசு சமர்ப்பித்த இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிதிப் பற்றாக்குறை இலக்கான (fiscal deficit target) 4.1 சதம் என்பது இங்கும் தொடர்கிறது. சென்ற நிதி ஆண்டின் ரெவின்யூ செலவு அதிகரிப்பு 1,56,000 கோடி. இந்த நிதி ஆண்டு ரெவின்யூ செலவு அதிகரிப்பாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது 1,50,514 கோடி. இதிலும் பெரிய மாற்றங்களை அவர்களால் செய்ய இயலவில்லை.
மத்திய தர வர்க்கத்தைத் தன் ஆதரவு வங்கியாகக் கொண்டு இயங்கும் பா.ஜ.க அவர்களுக்கும் ஒன்றும் பெரிதாகச் செய்யவில்லை. பெரிய அளவு வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என்பது பொய்யாகிவிட்டது. ரூ 2 லட்சத்திலிருந்து 2.5 லட்சம் என வெறும் 59.000 ரூ அதிகரிப்பைக் கண்டு அவர்கள் ஏமார்ந்துள்ளனர். பா.ஜ.கவின் கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று 100 ‘ஸ்மார்ட்’ நகரங்களை உருவாக்குவது. ஆனால் அதற்கென செய்யப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு வெறும் 7060 கோடிகள் தான். கல்வி, மருத்துவம் முதலான செலவினங்களிலும் பெரிய அளவு அதிகரிப்பில்லை. நலத் திட்டங்கள் பலவும் அப்படியே அதிக மாற்றமின்றித் தொடர்கின்றன. பெயர்கள் மட்டும் இந்துத்துவத் தலைவர்களின் பெயர்களாக மார்றப்பட்டுள்ளன,
இடம் பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்கள் நலத் திட்டத்திற்கு 500 கோடி ரூபாய், வல்லபாய் படேல் சிலை நிறுவ 200 கோடி ரூபாய், கங்கையைச் சுத்தப்படுத்த 2037 கோடி என்கிற அம்சங்களில் மட்டுந்தான் பா.ஜ.க பட்ஜெட் காங்கிரசிடமிருந்து வேறுபடுகிறது.
ஏற்கனவே பெரிய அளவில் ரயில் மற்றும் சரக்குக் கட்டணங்கள் மாற்றப்பட்டு எளிய மக்களின் தோள்களில் பெருஞ்சுமை ஏற்றப்பட்டுவிட்டது. 58 ஆயிரம் கோடிவரை பொதுத் துறை நிறுவனங்களின் சொத்துக்களையும் விற்று நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க முயற்சிக்கிறது பா.ஜ.க அரசு. ஈழப் பிரச்சினை தொடங்கி, கச்சத்தீவு, அயல் உறவுகள், பொருளாதார அணுகல் முறைகள் எதிலும் முந்தைய காங்கிரஸ் அரசுக்கும் பா.ஜ.கவுக்கும் வித்தியாசம் இருக்கப் போவதில்லை என்பதற்கு இன்னும் ஒரு நிரூபணமாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.
பா.ஜ.க பட்ஜெட் பற்றிப் பலரும் கருத்துச் சொல்லியுள்ளனர். இதில் ரொம்ப சூப்பராகவும், மிகச் சரியாகவும் கருத்துச் சொல்லியுள்ளது சோனியா அம்மையார்தான்.
“எங்களை அப்படியே காப்பி அடித்துள்ளனர்” என்பதுதான் அது.
குறிப்பு : இந்த ஆண்டு பட்ஜெட் வெளியிடப்பட்ட அன்று எழுதியது இக்குறிப்பில், கார்பொரேட்களுக்கு இந்த நிதி ஆண்டில் அளிக்கப்படும் வரி பாக்கி ரத்து ரூ 5 இலட்சம் கோடிக்கு மேல் எனக் குறிப்பிட்டுள்ளேன்.
இது குறித்து விரிவாகப் பின் சாய்நாத் எழுதிய குறிப்பு ஒன்றிலிருந்து:
துல்லியமாகச் சொல்வதானால் இந்த அறிக்கையில் கார்பொரேட்களுக்கு எழுதப்பட்ட ‘மொய்’ 5.32 லட்சம் கோடி என்கிறார். 2005 – 06 ம் ஆண்டிலிருந்து இவ்வாறு எழுதப்பட்ட மொய் 36.5 ட்ரில்லியன் கோடி. அப்படீன்னா 36.5 லட்சம் கோடி. அப்டீன்னா ரூபாய் 36500000000000 !
இந்த ஆண்டு கார்பொரேட்களுக்கு எழுதப்பட்ட இந்த ‘மொய்’ மட்டும் எழுதப்படாமல் இருந்திருந்தால் மகாத்மா காந்தி கிராமப் புற வேலைத் திட்டத்தை இன்னும் 30 ஆண்டுகளுக்குச் செயல்படுத்தலாம். இன்னும் நாலரை ஆண்டுகளுக்கு ரேஷன் பொருட்களை விநியோகித்திருக்கலாம்…