சென்னை கிரிக்கெட் கிளப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு நீதிபதி அரி பரந்தாமனும் இரு மூத்த வழக்குரைஞர்களும் வேட்டி அணிந்து சென்றதற்காக அனுமதி மறுக்கப்பட்ட செய்தி நேற்று சட்டமன்றம் வரைக்கும் வந்துள்ளது.
இந்தப் பிரச்சினையை சரியாக விளங்கிக் கொள்ள நாம் இரண்டு உண்மைகளைக் கணக்கில் கொள்ளவேண்டும்.
1. இத்தகைய கிளப்புகள் மேல்தட்டு வர்க்கங்களுக்கானவை. ஒய்வு பெற்ற மற்றும் பதவியில் உள்ள அதிகார வர்க்கம், இராணுவ உயர் அதிகாரிகள், கார்ப்பொரேட் வர்க்கம், பெரும் பணக்காரர்கள் தான் இவற்றில் உறுப்பினர்கள். இந்த கிளப்புகளில் வேட்டிக்கு மட்டுமல்ல பைஜாமா, குர்தா, காலர் இல்லாத டீ சர்ட்டுகள், செருப்பு ஆகியவற்றுக்கும் அனுமதி இல்லை.
2. இது சென்னை கிளப்பில் மட்டுமல்ல இந்தியாவெங்கிலும் உள்ள மேல் தட்டு வர்க்க கிளப்புகள் எல்லாவற்றிலும் உள்ள நடைமுறைதான், 2002ம் ஆண்டில் பெங்களூரு தேசிய சட்டப் பல்கலைக் கழக இயக்குநர் மோகன் கோபால் இப்படி வேட்டி செருப்பு அணிந்து வந்த காரணத்திற்காக பெங்களூரு கிளப்பில் அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையாகியது. அப்போதைய முதல்வர் எஸ்..என். கிருஷ்ணாவே இதில் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது. மீண்டும் சில ஆண்டுகளுக்குப் பின் சத்யஜித்ரேயின் மருமகன் அசோக் சட்டர்ஜிக்கும் இதே காரணத்திற்காக அங்கு அநுமதி மறுக்கப்பட்டது. அவர் இதைக் கண்டித்துத் தன் உறுப்பினர் நிலையை விலக்கிக் கொண்டார்
ஆக இது அடிப்படையில் ஒரு மேல் தட்டு வர்க்க மனோபாவம். காலனீய எச்ச சொச்சம். மேல் தட்டினர் தம்மை அடித்தட்டு மக்களின் அடையாளங்களிலிருந்து பிரித்துக் காட்டிக் கொள்ளும் ஒரு திமிர் நடவடிக்கை என்றே கொள்ள வேண்டும்.
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இது போன்ற ஆடை விதிகளும் பண்பாட்டுத் தடைகளும் பல மட்டங்களில் சமூகத்தில் செயல்படுவதைக் காணலாம். அரசு நிறுவனங்களிலும் கூட இவை உண்டு. சென்ற ஆண்டில் ஆதார அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுத்துக் கொள்ள வந்த துப்பட்டா அணியும் வழக்கமில்லாத பெண்கள் வெளியே அனுப்பப்பட்டார்கள். படத்தில் முகம் தெளிவாக இருக்க வேண்டும் என்பது தவிர ஆதார அட்டை ஆணைய விதி முறைகள் வேறெதையும் சொல்லாத போதும் இப்படி நடந்தது.
தமிழக அரசு பள்ளிகளில் பெண் ஆசிரியைகள் அவர்களுக்குச் சவுகரியமான உடையான சுடிதார் அணிய அனுமதிக்கப்படுவதில்லை. உயர் நீதிமன்ற வழக்குரைஞர் மனோகரனின் மனைவியும் ஆசிரியையுமான தோழர் செல்வி இதை எதிர்த்தபோது அவர்மீது நிர்வாக நடவடிக்கை எடுக்கும் நிலை ஏற்பட்டது, தான் நீண்ட தூரம் இரு சக்கர வாகனத்தில் வருவதாகவும், அதற்குச் சுடிதாரே சவுகரியமான ஆடையாக உள்ளது என அவர் சொன்ன காரணம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
கிராமங்களில் இன்னும் கூட தாழ்த்தப்ப்பட்ட மக்கள் செருப்பு அணியக் கூடாது, இரு சக்கர வாகனங்களில் செல்லக்கூடாது. வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு செல்லக் கூடாது என்றெல்லாம் எழுதப்படாத விதிகள் செய்ல்பட்டுக் கொண்டுதான் உள்ளன. நான்காண்டுகளுக்கு முன் மதுரையை அடுத்த வில்லூரில் இப்படியான ஒரு பிரச்சினை துப்பாக்கிச் சூடு வரை சென்றது. சென்னை கிளப்பில் நீதிபதி ஒருவர் வேட்டி அணிந்து நுழைய அநுமதி மறுக்கப்பட்டதற்காக தமிழ்ப் பண்பாடு அவமதிக்கப்பட்டதாகக் கொதிக்கிற பலரும் அதே அளவிற்கு இந்தப் பிரச்சினைகளைக் கண்டு கொண்டதில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சில மாதங்களுக்கு முன் ஷாப்பிங் மால்களில் கைலி அணிந்து செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுவது குறித்து சர்ச்சை உருவானது நினைவிருக்கலாம். கைலி என்பதை முஸ்லிம்களுக்கான அடையாளம் எனக் கருதுவதும் இதன் பின்னணியில் உள்ளது. இத்தனைக்கும் ஒரு வகையில் கைலி அல்லது சாரம் என்பது ஒரு வகையில் ஒரு தென் மற்றும் தென் கிழக்காசிய ஆடை. தமிழர்களின் ஆடை. தந்தை பெரியார் பொதுக் கூட்டங்களுக்குக் கைலி அணிந்தே சென்றார்.
ஷர்ஜா, துபை போன்ற முஸ்லிம் நாடுகளில் நம் தமிழ் முஸ்லிம்கள் கைலி அணிந்து பொது இடங்களில் செல்வதற்குத் தடை உள்ளது குறிப்பிடத் தக்கது. அரபு நாடுகளில் அவர்கள் அணியும் நீண்ட அங்கிகளின் உள்ளே இப்படியான ஒரு மூடப்பட்ட கைலி வடிவ உள் ஆடை அணிகின்றனர். நம் தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் கைலி அணிந்து செல்வதை அந்நாட்டினர் ஏதோ உள் ஆடையுடன் இவர்கள் பொது இடங்களுக்கு வருவதாகக் கருதுவதன் விளைவு இது.
ஆடை என்பது நமது சவுகரியத்திற்காக உள்ளது. பண்பாடு என்பதற்கு ஒரு தொடர்ச்சியும் உண்டு அதேபோல அதில் கலப்பிற்கும் இடம் உண்டு. பேன்ட், சர்ட், சுடிதார் என்பதெல்லாம் இப்போது ஏதேனும் ஒரு நாடு அல்லது இனத்துடன் தொடர்பு படுத்திப் பார்க்கக்கூடிய உடைகள் அல்ல. இன்றைய கலகட்டத்திற்குரிய உடைகளாக அவை தமிழர்கள் உள்ளிட்ட மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டன, வேட்டியாக இருக்கட்டும், சுடிதாராக இருக்கட்டும் இவற்றை கண்ணியமற்ற உடைகள் என்பதாகக் காண்கிற நிலை வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.
வக்கீல்கள் கருப்புக் கோட், அதற்கு மேல் நீண்ட கருப்பு அங்கி ஆகியவற்றைக் கட்டாயம் அணிந்துதான் நீதிமன்றங்களுக்கு வரவேண்டும் என்பது போன்ற ஆடை விதிமுறைகளும் கூட ஒழிக்கப்பட வேண்டியவைதான். இது தொடர்பான 1961ம் ஆண்டு வழக்குரைஞர்கள் சட்டத்தின் 49ம் பிரிவு திருத்தி அமைக்கப்பட வேண்டும். ஒரு ‘வெஸ்ட்’, வெள்ளைச் சட்டை, அப்புறம் ஒரு கருப்பு கோட், பிறகு ஒரு கருப்பு அங்கி இதெல்லாம் எதற்கு? நமது நாட்டு தட்ப வெப்ப நிலைக்கு இது தேவையா? இது காலனீய எச்ச சொச்சம் இல்லையா? இங்கிலாந்திலேயே 2008ல் இது தொடர்பான சீர்திருத்தங்கள் வந்து விட்டன. ஆட்டுக்குத் தாடி போல வழக்குரைஞர்களுக்குக் கருப்புக் கோட்டு என்கிற ‘எக்ஸ்ட்ரா’ தொங்கல் ஏன்?.
நான் தஞ்சை சரபோஜி கல்லூரியில் படித்தபோதூ அங்கு பேராசிரியர்கள் அனைவரும் டை, கோட்,சூட்டுடன்தான் வகுப்புக்குள் நுழைய வேண்டும். அதே கல்லூரியில் நான் 14 ஆண்டு காலம் பேராசிரியராக இருந்தேன். வெறும் பேன்ட் சர்ட் தவிர டை, கோட் சகிதம் வகுப்புக்குச் சென்றதாக வரலாறே கிடையாது. காலம் மாறுகிறது இதை எல்லோரும் உணர வேண்டும்.
சமுகத்தில் நிலவும் எல்லாவிதமான ஆடை விதிகளும் ஒழிக்கப்பட வேண்டும். அவரவர்களுக்கு விருப்பப்பட்டதை அவரவர்கள் அணிந்து வரட்டும். பண்பாடுகளை அளக்கப் பொது அளவுகோல்கள் கிடையாது.
###################
அதேபோல ஏதோ ஒரு உடையை அல்லது உணவை ஒரு பண்பாட்டின் அடையாளமாகச் சொல்வதும் அபத்தம். வேட்டி, புடவை, ரவிக்கை மட்டுமா தமிழ்ப் பண்பாடு? லுங்கி அணிபவர்கள் உள்ளனர், பேன்ட், சுடிதாரே இன்று பெருவழக்காகி வருகிறது. வீட்டில் சவுகரியமான ஆடையாக ஆண்கள் கைலி அணியும் வழமை உள்ளது. இன்று அதுவும் மாறி அரைக்கால் சட்டை, குறிப்பாக உயர் சாதியினர் மத்தியில் அதிகம் புழங்கப் படுகிறது. அவ்வளவு ஏன் கோவணம் கூடத் தமிழர் உடைதான்.
காந்தி இந்த நாட்டு விவசாயிகளின் ஆடை என வேட்டி, துண்டைத் தேர்வு செய்து கொண்டார். மேற் சட்டை போடாத மேனியுடன் திரிந்தார். அண்ணல் அம்பேத்கர் கோட், சூட் ஆகியவற்றைத் தன் ஆடை முறையாகத் தேர்வு செய்தார், யோசித்துப் பார்த்தால் இருவரும் ஒரே திசை நோக்கிச் சென்றார்கள் என்றே சொல்ல வேண்டும். காந்தி மேற்சாதியினர் மத்தியில் இதுதான் நம் உடை என்றார், எளிய மக்களின் ஆடையை நோக்கி அவர்களைத் திரும்பச் சொன்னார். அம்பேத்கர் அடித்தள மக்களை மேல் நோக்கி உணரத் தூண்டினார். ஆக இருவரும் ஒரே திசை நோக்கித்தான் பயணித்துள்ளனர்.
தலித் மக்களைப் பொருத்தமட்டில் தமக்குக் காலங் காலமாக மறுக்கப்பட்ட இந்த “ராம்ராஜ் காட்டன் வேட்டிகள்” வெள்ளை சட்டை என்கிற ‘கவுரவ’ ஆடையை வெறுப்பாகவே நோக்கினர். இன்று வரை தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் ‘மினிஸ்டர் காட்டன், வேட்டி சட்டைதான் அடையாளம் என்பதற்கு தலித் அரசியல் தலைவர்கள் விலக்காக இருப்பதைக் காண வேண்டும். திருமாவளவனோ டாக்டர் கிருஷ்ண சாமியோ இந்தக் ‘கவுரவ’ ஆடையைச் சுமப்பதில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளம் அரசியல்வாதிகள் ஜீன்ஸ் பான்ட், மினிஸ்டர் காட்டன் சட்டை என்கிற ஆடை முறையைத் தேர்வு செய்வதையும் கவனிக்கலாம். தலித் இளைஞர்கள் ஜீன்ஸ் பான்ட் போடுவதைக் கண்டு மருத்துவர் இராமதாஸ் ‘டென்ஷன்’ ஆவதும் கவனத்திற்குரியது.
##################
கே.டானியலின் நாவல்களை நாங்கள் படித்துக் கொண்டும் பதிப்பித்துக் கொண்டும் இருந்த காலத்தில் அவற்றில் யாழ்ப்பாண வெள்ளாள முதலிமார்களைப் பற்றிச் சொல்ல வருகையில் ‘நேஷனலில் வந்தார்’ என்று குறிபிடுவார். ஏதோ ஒரு உடையைச் சொல்கிறார் என்பது புரியும். ஆனால் என்ன உடை எனத் தெரியாது. ஒருமுறை அவரிடமே கேட்டுவிட்டேன். அவர் விளக்கினார். கிட்டத்தட்ட மறைந்த ஈழத் தலைவர் அமிர்தலிங்கம் உடுத்துவாரே அதுபோல என்பதாக விளங்கிக் கொண்டேன்.
இதில் எனக்கு மிகவும் வியப்பான விடயம் என்னவெனில் இப்படியான உயர் சாதி, உயர் வர்க்கத்தினர் பெரிதும் உடுத்தும் ஆடை ‘நேஷனல்’ என அழைக்கப்பட்டதுதான். அவற்றிற்கே ‘தேசிய’ அந்தஸ்து கிடைக்கிறது. அப்படியானால் அங்குள்ள எளிய மக்களின் ஆடைகள்? அவர்கள் எப்போதுமே தேசிய வரையறையின் பிடியில் அகப்பாடாத ‘சொச்சங்கள்’ (remainders) தானே?
சுமார் பத்தாண்டுகளுக்கு முன் திரு. பழ. நெடுமாறன் அவர்கள் தமிழர்களுக்கான “தேசிய ஆடையை” அறிவித்தது நினைவிருக்கலாம். உலகத் தமிழர்களுக்கான தேசிய ஆடை எனவும் அதைக் கொள்ளலாம். அதுவும் இப்படியான தன்மைகளைக் கொண்டுதான் இருந்தது. தேசிய வரையறைகள் வேறெப்படி இருக்கும்? அவை உள்ளடக்குவதைப் போலவே வெளித்தள்ளுபவைகளும் இருக்குந்தானே.
அப்போது நாங்கள் சென்னையில் ‘சுயமரியாதை இயக்கம்’ எகிற பெயரில் தீவிரமாக இயங்கி வந்தோம். இந்தத் தேசிய ஆடை அறிவிப்பைக் கண்டித்து அந்த மாதம் முழுவதும் நான், அயன்புரம் ராஜேந்திரன் முதலான எல்லோரும் பொது நிகழ்ச்சிகளுக்குக் கைலியுடனேயே சென்று வந்தோம். புரசைவாக்கத்தில் நடைபெற்ற கலை இலக்கியப் பெருமன்ற விழா ஒன்றில் நாங்கள் அப்படிக் கலந்து கொண்டது தோழர்களுக்கு நினைவிருக்கலாம்.